Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01

[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 14:56 GMT ] [ புதினப் பணிமனை ]

மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம் பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்துவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி.

கடந்த மாதம் இடம் பெற்ற ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் அனைத்துலக நகர்வுகளின் மத்தியிலே குறிப்பாக அமெரிக்க இந்திய அரச நலன்களினதும் இதர எதிர்த்தரப்பு வல்லரசுகளின் நலன்களினதும் அரசியல் மேலாதிக்க போட்டிகளின் மத்தியில் தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு போராடும் நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இறுதியில் புலம் பெயர் தமிழர்களையும் ஈழத்தில் வாழும் தமிழர்களையும், சிறீலங்கா அரசிடம் நீதி வேண்டி நிற்க வேண்டிய நிலைக்கு இட்டு சென்றது அமெரிக்கா முன்மொழிந்த பிரகடனம். கொடுமைகளுக்கான நீதி என்ற பெயரில் உலக தமிழர்கள் அனைவரையும் சிறிய, சிறீலங்கா அரசினால் கொள்ளடக்கப்பட்டு விடுவதற்கான அடிப்படைகள் அந்த வரைவினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது சில தமிழ் ஆய்வாளர்களது குறிப்பாகும்.

இக்கூட்டத்தொடரினால் ஏற்பட்ட நன்மைகளின் பக்கம் பார்ப்பதானால் தமிழினத்தின் ஒரு படிக்கல் முயற்சியாக கருதப்படும் 'இனஅழிப்பு' என்ற பதத்தை நிறுவுவது என்ற முயற்சியில் இந்த கூட்டத்தொடர் சில வாய்ப்புகளை பெற்று கொடுத்திருக்கிறது.

அத்துடன் அரசுகளின் இராசதந்திரிகள் மத்தியில் அரசு-அற்ற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இராசதந்திர வரைமுறைகளை கற்று கொள்ளவும், அரசுகளின் இராசதந்திர கலாச்சாரத்தை புரிந்து கொள்ளவும் களம் அமைத்து கொடுத்திருக்கிறது.

தமிழர்களின் கொடுமைகளுக்கான தண்டனையை பெற்று கொடுப்பதற்கு அப்பால் தமிழர்கள் தமது சொந்த முயற்சிகளிலே ஒரே நோக்கத்தோடு கடமைகளை பகிர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டுமென்பதையும், இன்னும் நிறுவனமயப்படுத்தப்பட வேண்டிய தேவையையையும் இத்தகைய நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன.

இங்கே அனைத்துலக நாடுகளின் நிலைகள் குறித்தும் உலக ஒழுங்கு மாற்றத்திற்கேற்ப தமிழினத்தின் போராட்டம் புதிய பரிணாமத்தை பெறவேண்டியது குறித்தும் புரிந்து கொள்வதாக இக்கட்டுரைத்தொடர் அமைந்துள்ளது.

இந்த வகையிலே அனைத்துலக நாடுகளின் போக்குகள் குறித்தும் குறிப்பாக வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அமெரிக்க அணுகுமுறை, இந்திய அரசியல் மாற்றம் என்பன இனிவரும் காலங்களில் தமிழர் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் செய்ய வேண்டிய நகர்வுகள் குறித்தும் ஆய்வது சிறந்ததாக தெரிகிறது.

ஓவ்வொரு நான்கு வருடமும் 'பென்ரகன்' - அமெரிக்க இராணுவ தலைமையகம் - அமெரிக்கப் பாதுகாப்பு கொள்கையின் மைய அதிகார முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிடுவது வழமையாக உள்ளது. 2014ம் ஆண்டு மார்ச்மாதம் வெளிவந்த அறிக்கையில், அவாகளால் 2011 ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு நிதி முடக்கத்தின் பிரதி பலன்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு வரவுசெலவு அறிக்கைகள் இரண்டு வகையான செலவீனக்குறைப்பு திட்டங்களுக்குள் வரையறை செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக வரவுசெலவு திட்டத்தினூடான கட்டுப்பாடு. அதாவது 2011ம் ஆண்டிலிருந்து அடுத்த பத்தாண்டுகளுக்குள் 487 பில்லியன் டாலர் பணத்தை இராணுவ செலவீனத்திலிருந்து மீதப்படுத்தி கொள்வது. இரண்டாவாதக அமெரிக்க காங்கிரசின் இரண்டு கட்சிகளும் அமெரிக்கத்தலைவரும் உடன்பாட்டின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்து கொள்ளக்கூடிய அரசாங்க செலவீன பணத்திலிருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருடா வருடம் மீதப்படுத்தி கொள்வது.

இவ்வாறு செலவைக்குறைக்கும் திட்டங்களே நான்காண்டு அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்ட நிலை இருந்தாலும் இதன் பின்விளைவுகள் பாரிய அளவு பூகோள கையாள்கை நிகழ்ச்சிகளை தாக்காத வகையில் இருக்கும் என்பதில் நிட்ச்சயப்படுத்தப்பட்ட தன்மையை காணகூடியதாக உள்ளது. நேரடி இராணுவ நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தயங்கி உள்ள இந்த அறிக்கை அவ்வப்போது பல்வேறு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் எழக்கூடிய நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ள பரிந்துரை செய்கிறது. பலாத்கார இராணுவ அரசியல் பிரயோகிக்கப்பட வேண்டிய நிலையில் இன்னுமோர் பிராந்தியத்திலும் அத்தகைய நிலையை உருவாக்குவதை தவிர்த்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த செலவீனக்குறைப்பு ஆளணிக்குறைப்பிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவ வேலை வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அமெரிக்கத் தலைமை உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலேயே தற்பொழுது பெருமளவு தங்கி உள்ளது என்பதை இந்த அறிக்கை மிகத்தெளிவாக காட்டி நிற்கின்றது.

அமெரிக்கப் பொருளாதாரம் உலக நாடுகளின் கூட்டு பொருளாதார வளர்ச்சியிலேயே பெருமளவில் நம்பிக்கை கொண்டு உள்ளது. உலகில் தொழில்நுட்ப முடிவுப்பொருட்களின் தேவை அதிகரிப்பதானது, அமெரிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய தூண்டுவதன் மூலம், அமெரிக்க உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்க வைப்பதற்கு வியாபார ஒப்பந்த முனைப்புகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளுடன் தன்னை இணைத்து கொண்டு கூட்டு பொருளாதார வளர்ச்சி மூலம் அமெரிக்க தொழில்நுட்ப பொருட்களின் தேவையை உலக நாடுகள் மத்தியில் மேலும் உருவாக்குவது என்பது அதன் திட்டமாக இருக்கிறது.

உலக நாடுகளிடையே சமநிலைப்படுத்தப்பட கூடிய பொருளாதார வளர்ச்சியானது பொருளாதார இடைவெளியை நிரப்புவதாக கொள்ளப்படுகிறது. இடைவெளிகளற்ற பொருளாதார சமநிலையும் பொருளாதார ஒப்பந்தங்களுடாக பெறக்கூடிய செல்வாக்கும், குறிப்பிட்ட பிராந்தியங்களில் மேலைத்தேய கோட்பாடுகளை ஏற்று கொண்டு உள்ளக அரசியலை வரை முறை செய்து கொள்ளக்கூடிய அரசுகளை இனங்காண கூடியதாக இருக்கும். இதன் முலம் பாதுகாப்பு முன்முன்முயற்சிகளை நகர்த்தவும் பல்துறைசார் பொருளாதார வளர்ச்சிகளை உயர்த்தி கொள்ளவுமான முனைப்புகளுக்கு ஏற்கனவே 2010 பாதுகாப்பு அறிக்கைகளில் பரிந்துரைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அமெரிக்க ஆய்வாளர்களின் அறிக்கைகளின் சாராம்சங்களும் இன்று அமெரிக்கா தனது பலத்தையும் செல்வாக்கையும் உத்தரவாதப்படுத்தி கொள்ள வேண்டுமாயின் இன்றய உலகின்; தலைமை வகிக்கும் தன்மையை, புதுப்பித்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்று கூறி வருகின்றனர்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு என்பது அதன் தனித்துவமான தேசிய தாரதரங்களை முன்நகர்த்த கூடிய செய்திறனிலேயே தங்கி உள்ளது என்பதையே மையமாக கொண்டுள்ளது என்பது அவர்களின் பார்வை.

ஒருகாலத்தில் பிரித்தானியா தனது கடற்பலத்தை கொண்டு உலக நாடுகளை பயமுறுத்தி இராசதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வந்தது. Gunboat diplomacy என்று அழைக்க கூடிய இந்த இராசதந்திரம் சக்தி மிக்க நாடுகள் பாரிய கப்பல்களை சிறிய நாடுகளின் கடற்பரப்புகளில் நிறுத்தி தமக்குரிய சலுகைகளை பெற்றுகொண்டது.

20ம் நூற்றாண்டில் அமெரிக்கா, உலக கடற்பலத்தை பெற்று கொண்ட போது பல்வேறு சந்தர்ப்பங்களில் இதேபாணியில் பயமுறுத்தி காரியங்களை சாதிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இந்த போக்கு இன்றுவரை Power projection என்ற மறு பெயரில் தமது பலத்தை வியாபகப்படுத்தி காட்டும் தன்மை அனைத்துலக இராணுவ அரசியலில் இருந்து வருகிறது.

அனைத்துலக அரசியலில் செயற்திறன் மிக்க அரசு ஒன்றின் பலத்தை காட்டும் முக்கியமான ஒரு தனிமமாக அந்த அரசின் பலம் காட்டும் வியாபகம் காணப்படுகிறது. அரசுகளின் தரை கடல் ஆகாய பலத்தின் வியாபகத்தை எடுத்துகாட்டும் இந்த தனிமம் வன்முறைப் பலத்தின் சொத்துகளாக பார்க்கப்படுகிறது. பாரிய பீரங்கிகள், காலாட்படைகள; பல் வகைப்பட்ட ஆகாயப்படை குழுக்கள், கடற்கலன்கள் இவை அனைத்தையும் நகர்த்துவதற்குரிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் நிலைகள் என அனைத்து பாதுகாப்பு ஆர்ப்பரிப்பு தன்மையும் அனைத்துலக உறவு அரசியலில் இன்றும் மிகமுக்கியமாக காணப்படுகிறது.

இருந்த போதிலும் வன்முறை பலம் காட்டும் வியாபகத்தின் முக்கியத்துவத்ததை தேவைக்கு தகுந்தாற்போல் முடக்கி வைக்க வேண்டிய நிலைக்கு தற்போதய உலக ஒழுங்கில் மென்முறை பலம் காட்டும் அரசியலின் வளர்ச்சி, அமெரிக்க உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவத்தில் முன்னுரிமை பெற வைத்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் அதாவது தொண்ணூறுகளின் கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பிற்பாடு சுதந்திரமான பண்டங்களின் நகர்வும் மூலதனப்பரிமாற்றமும் பிராந்தியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உள்ளன. புதிய பிராந்தியங்கள் உலக அரசியலில் புதிய ஒழுங்கை உருவாக்கி உள்ளன. தனிப்பட்ட நிறுவனங்களும், அரசு சார்பு நிறுவனங்களும் புதிய தொழில் நுட்ப வசதிகளால் புத்துயிர் பெற்று நிற்கின்றன. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் இதற்கு பல்வேறு வசதிகளை கொடுத்துள்ளது. பிராந்திய அரசுகள் ஒன்றுடன் ஒன்று பொருளாதார நிலையில் தங்கி உள்ள நிலையை எட்டி விட்டிருக்கின்றன.

இந்த நிலையில் அனைத்துலக அரசியல் நகர்வுகள்யாவும் மென்பலத்தை அடிப்படையாக கொண்டே நிகழ்கின்றது. மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம் பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்தப்படுவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றப்படுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன.

மென் பலத்தின் அதிகாரம் அதிக செல்வாக்கை செலுத்தும் நிலையில் பல சகாப்தங்களாக அனைத்துலக அரசியலில் தனது ஏகாதிபத்திய தலைமைத்துவத்தை நிலை நாட்டும் பொருட்டு பயமுறுத்தி காரியம் சாதிக்கும் அனைத்துலக அரசியலை நடாத்தி வந்த அமெரிக்க அரசு கூட இன்றய அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மென் பலத்தை கொண்டே தனது மேலாதிக்க போக்கை தக்க வைத்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையை வைத்து பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் கூட கடந்த முப்பதாண்டு காலங்களாக தீவிரவாதத்தையே தமது பிரதான உபாயமாக கையாண்டு பல வேளைகளில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றனர். இதன் விளைவாக இன்று தமிழர்களின் நேர்மையான அரசியல் கோரிக்கைகளையும் அந்த கோரிக்கைக்காக உழைக்கும் தமிழ் பிரதிநிதிகளையும் தீவிரவாதத்தின் ஆதரவாளர்களாக பலதரப்பினரும் சித்தரிக்க முற்படுகின்றனர்.

இந்திலையை மாற்றி அமைக்க தமிழர்களும் சில முன்னுதாரண நடவடிக்கைகளை செயலில் காட்ட வேண்டிய தேவை உள்ளது. அனைத்துலக அரசியலில் இராசதந்திர நடவடிக்கையில் இறங்கி உள்ள நடவடிக்கையாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக கூட இந் நடவடிக்கைகள் அமையலாம். தீவிரவாத போக்கு கொண்டவர்கள் தமிழர்கள் என்ற பேச்சை வாய்மூட வைப்பதற்கு இது நிச்சயமாக பயன்படும்.

உதாரணமாக ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஒரே நேரத்தில் பகிரங்கமாக பாதுகாப்பையும் சமாதானத்தையும் வேண்டி நிற்பதுடன் தமிழ் மக்கள் பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பதை பிரகடனப்படுத்துவதுடன். இந்தப்பிரகடனத்தை உலகின் அனைத்து நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கும் எட்டுவற்கான நடவடிக்கைகள் எடுப்பது ஒருமுறையாகலாம்.

தொடரும்…

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

http://www.puthinappalakai.com/view.php?20140402110256

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 02

[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 09:00 GMT ] [ புதினப் பணிமனை ]

இன்று பொது இராசதந்திரத்தில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆளுமை அரச பிரதிநிதிகளின் செயற்பாட்டை சிறுமைப்படுத்திவிடும் பொழுது அரச இராசதந்திரிகள் சமூக செயற்பாட்டாளர்களை இராசதந்திர தீவிரவாதிகள் எனும் புதிய பதம் கொண்டு அழைக்க முற்படுவதையும் காண கூடியதாக உள்ளது. 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி.

அரசியல் சுதந்திரமும், சமாதானமும், பாதுகாப்பும் தமது வாழ்வின் மிக இன்றியமையாத அங்கமென ஈழத்தமிழர்கள் தம்மெண்ணத்தில் கொண்டுள்ளனர். இலங்கைத்தீவில் சிறீலங்கா ஒரு அரசாக உருவகம் எடுத்து விடுவதற்கு முன்பிருந்தே இந்த எண்ணம் உருவகப்பட்டிருந்தது.

1970களின் பிற்பகுதியில் அன்றைய உலக ஒழுங்கின் போக்கிற்கு ஏற்ப சிறீலங்கா அரசு தனது ஆட்சி முறையையே மாற்றி அமைத்து வெளியுறவுக்கொள்கை மூலம், தனது பேரம் பேசும் மூலோபாய தந்திரமாக பிராந்திய வல்லரசுக்கு எதிராக பலம்மிக்க வல்லரசுகளின்பால் நின்றது. இன்று வரை தனது பேரம் பேசும் பலத்தை பிராந்திய வல்லரசக்கு எதிராகவே உபயோகிக்கிறது.

எத்தகைய நிலையை எடுத்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அரசகளின் மேலைத்தேய அரசியல்தத்துவமும் அதன் கலாச்சாரமும் சிறீலங்காவை பாதுகாத்து வருகிறன. கடந்த ஜெனீவாகூட்டத்தொடர் காலங்களிலும் இன்னமும் அனைத்துலக அரசியல் கட்டமைப்பு இனஅழிப்புக்கு உள்ளாகி கொண்டிருக்கும் தமிழினத்திற்கு பாடம் கற்பிக்கும் போக்கிலேயே உள்ளதாக தமிழ் மக்கள் சார்பில் அக்கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

நாடுகள் மீதான படை எடுப்புகளின் போதும் மேலைத்தேய நாடுகளின் இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களிலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பெரிதாக எடுத்து கொள்ளாது விடப்பட்டுள்ள அதேவேளை. மனித உரிமை விவகாரம் எனும் ஆயுதம் சிறிய அரசுகளை தமது தேவைக்கேற்ப இராசதந்திர அழுத்தத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தை கொண்டதாக மட்டுமே இருக்கிறது.

பாதிப்பிற்குள்ளான தேசியமான தமிழினம் ஒருபொருட்டாக எடுத்து கொள்ளப்படாது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதற்கு ஒர் உதாரணமாக தமிழ் தரப்பினர் பார்க்கின்றனர்.

இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அனைத்துலக மனித உரிமைகள் குறித்த சரத்துகள் 1948 டிசம்பரிலேயே ஐக்கிய நாடுகள் சபையால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், 1989ம் ஆண்டு சீனாவின் தியனமன் சதுக்கத்தில் இடம்பெற்ற சனநாயக ஆதரவு போராட்டங்களின் போதே முக்கியத்துவம் பெற்றது. அதாவது அப்போராட்டங:களை நசுக்கும் முகமாக இடம் பெற்ற சீன அரசின் படுகொலைகளில் இருந்தே மனித உரிமையை அரசகளுக்கு எதிராக பயன் படுத்தும் ஆயுதமாக மேலைநாடுகளால் கையாளப்படுவது குறித்து கீழைத்தேய அரசுகளுக்கு ஆதரவாக பேசக்கூடிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலக பொருளாதாரத்தில் தனது முக்கியத்துவத்தின் காரணமாக சீனா தனது படுகொலைகளை மறந்து விடப்பட கூடிய ஒருவிடயமாக ஆக்கிவிட்டுள்ளது. ஆனால் மனித உரிமை என்பது அதன் அடிப்படை ஒழுங்கு விதிகளின் ஊடாக பார்காது உலகில் வல்லரசுகளின் நலன்களினூடாக பார்க்கப்படும் நிலையானது, மனித உரிமை மீறல்களை தாராள இனஒடுக்குமுறை கொள்கைக்கு சாதகமாக பயன் படுத்திய அரசுகள் கூட அனைத்துலக அரங்கில் வல்லரசகளை எதிர்த்து நிற்கும் துணிச்சலை கொடுத்துள்ளது என்பது பல மனிதஉரிமை கோட்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.

அதேவேளை இரண்டு மையங்களை கொண்ட உலக ஒழுங்கு இருந்த காலப்பகுதியில் சிறிய நாடுகளும் வலு குறைந்த நாடுகளும் அனைத்துலக உறவு அரசியலில் தமது உரிமைகள் குறித்து அதிகளவு பேசிக்கொள்வதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்பது சிறிய நாடுகளின் புகாராக இருந்தது. வல்லரசுகள் தமது நலன்களை சிறிய நாடுகள் மீது மிரட்டல் பாணியான உறவுநிலை வைத்திருந்த காலமாக அக்காலப்பகுதி இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஈராக்கிய ஆப்கனிஸ்தானிய படையெடுப்புகளில் மேலைநாடுகள் எதிர்பார்த்த பலாபலன் கிடைக்காத அதே காலப்பகுதியில் சீன பொருளாதார வளர்ச்சி நீண்ட காலத்திற்கு மேலைத்தேயத்தை பாதிக்ககூடிய வளர்ச்சிநிலையை எட்டியது. கடந்த கட்டுரையில் பார்த்தது போல அமெரிக்க பொருளாதார மந்த நிலையும் புதிய தொலைத்தொடர்பு வளர்ச்சியும் இதனால் உற்பத்தி சந்தையில் புதிய வல்லரசகளின் வருகையும் பன்முகப்படுத்தப்பட்ட மைய உலக ஒழுங்குகளை உருவாக்கி உள்ளது.

சிறிய அரசகளிற்கு இத்தகைய தன்மை பதிய தெம்பை கொடுத்துள்ளது. இதன் மறுபுறத்தில் வல்லரசுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் நசக்கப்பட்ட தேசியங்களின் பிரதி நிதிகளாக தேற்றமளிக்க முனைகின்றன. தேசியங்களின் நலன்களில் எந்த ஆர்வமும் காட்டாத மேலைத்தேய வல்லரசகள் வெறும் அரசுகள் மீதான அழுத்த அரசியலையே நடாத்தி வருகின்றன.

தேசியங்களை பிரதி நித்துவப்படுத்தும் பாங்கில் வல்லரசுகள் செயற்படும் போது தமது சட்ட அங்கீகார நிலைமைகளை பெற்று கொள்ளும் சந்தர்ப்பத்தை தேசியங்கள் தவறவிட முடியாது. முக்கியமாக திண்ணிய மனதுடன் சதந்திரமான வாழ்வை நாடிநிற்கும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு குறிப்பாக இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

பொது இராசதந்திரம் என்பது அத்துறையின் பண்பாட்டுக்கமைய அரசுகள் சார்ந்தது என்றும் அரசகளின் வெளியுறவுக்கொள்கை உடன் தொடர்புடையதும் என்ற கருத்தே உள்ளது.. உலக மயமாக்கப்பட்ட அரசியல், பொது இராசதந்திரத்தில் புதிய தேசியம் சார்ந்த சமுக செயற்பாட்டாளர்களின் இராசதந்திரதுறை நோக்கிய நகர்வுக்கு உந்து சக்தியாக அமைந்து வருகிறது. உலக அரங்கில் சமுக செயற்பாட்டாளர்கள் தமது செல்வாக்கையும் சக்தியையும் இராசதந்திர வலை கட்டமைப்புகளை முன்னேற்றகரமாகவும் நம்பிக்கைக்கு உரிய முறையிலும் உருவாக்கி வருவது அரசுசார் இராசதந்திர நடவடிக்கைகளுக்கு தொந்தரவளிப்பதாக உள்ளது.

இதனை கடுதாசி இராசதந்திரமாக பார்க்கப்பட்டபோதும் அரச இராசதந்திர நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட அங்கீகாரத்தை பெற்று கொள்ளும் புதிய பரிமாணத்தை தேசியங்கள் இராசதந்திர துறையில் உருவாக்கி வருகிறன என்பது இத்துறைசார் ஆய்வாளர்களின் கருத்தாக அமைகிறது.

இன்று பொது இராசதந்திரத்தில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆளுமை அரச பிரதி நிதிகளின் செயற்பாட்டை சிறுமைப்படுத்திவிடும் பொழுது அரச இராசதந்திரிகள் சமூக செயற்பாட்டாளர்களை இராசதந்திர தீவிரவாதிகள் எனும் புதிய பதம் கொண்டு அழைக்க முற்படுவதையும் காண கூடியதாக உள்ளது.

ஆகவே சமூக செயற்பாட்டாளர்கள் மிக முக்கியமான இரண்டு விடயங்களை தமது கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர் ஒன்று சட்ட அங்கீகாரம் இரண்டாவது காத்திரமான கருத்தியல் மற்றங்களை ஏற்படுத்தகூடிய தன்மை, இந்த இரண்டு விடயங்களும் சமூக செயற்பாட்டு இராசதந்திரிகளை தமது சமூகம் சார்ந்தவர்களின் நியாயத்தை பாதுகாப்பதுடன் அனைத்துலகின் முன்னால் கொண்டு செல்லுதலுக்காகவும், அனைத்துலக கருத்துகள் கொள்கைகள் பார்வைகள் ஆகியவற்றை தமது சமூகத்தில் தெளிவுக்குள்ளாக்குதல் ஆகிய இரு தொழிற்பாடுகளுக்காகவும் தேவையானதாக ஆக்கியுள்ளது.

ஒரு பண்பாட்டு பிரதேசத்தை தமக்காககொண்டு ஒரே மொழியை தமதாக கொண்டுள்ள அரச அல்லாத தேசியங்களுக்கு பல்வேறு இடங்களில் பேரம் பேசும் பலம் அதிகமாக உள்ளதாக இத்துறை குறித்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேவேளை செயற்பாட்டாளர்களிடையே ஆன கருத்து முரண்பாடுகளும் தீர்மானங்களை நிறுவ முடியாத தன்மையும், நிரந்தர பிரதிநிதிகளால் கையாளப்படாத கொள்கை கருத்துகளாலும் பலவீனங்கள் உருவாகுவதாகவும் கருதப்படுகிறது.

இந்த வகையிலே ஒரு அரசு அல்லாத தேசியம் ஒரு பிராந்தியத்தை தனது பலத்தின் அடிப்படையில் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்யும் அரசுபோல் செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது ஏனெனில் தம்மையும் தாம் சார்ந்த மக்களையும் எதிரிகளின் ஆட்சிப்பலம், இராசதந்திர சூழ்ச்சி ஆகிவற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு சட்ட அங்கீகாரம் பெற்று கொள்ள விளையும் தேசிய செயற்பாட்டாளர்களிடம் தன்னிச்சையாக வந்து சேர்கிறது.

இப்பொழுது… சில இந்திய ஆய்வாளர்களின் கட்டுரைகளுக்கு இணங்க ஐக்கிய அமெரிக்கா சிறீலங்காவில் இராணுவ தள நிலைகளை உருவாக்கவதற்கு ஏற்ப இடம் ஒதுக்கி தரும்படியான வேண்டுகோளை விடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.. அமெரிக்காவின் 'ஆசியா நோக்கிய திருப்பம்' என்ற கொள்கைக்கு இணங்க அமெரிக்க கடற்படையில் அறுபது சதவிகிதமான பாதுகாப்பு சொத்துகளை 2020ம் ஆண்டளவில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொள்ள வைக்க தீர் மானித்திருப்பதாக பென்ரகன் அறிவுறுத்தி உள்ளது.

ஆமெரிக்காவின் இராணுவ தளபாட நிலைகளுக்கான வேண்டுகோள் வல்லரசுகளுடனான பேரம் பேசுதலிலேயே தனது பௌத்த சிங்கள அபிலாசைகளை தீர்த்துக்கொள்ளும் போக்குடைய சிறீலங்கா அரசும் பௌத்த சிங்கள இனவாதத்திலேயே அரசியல் செய்யும் அரச தலைவர்களும், தற்பொழுது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் புலம்பெயர் சமுதாயத்தின் மீது நிச்சயம் திருப்பிவிடமுனைவார்கள். அப்படியான நிலை ஏற்படுமிடத்து. புலம் பெயர் தமிழர்கள் எதிர்பார்த்த புலம் பெயர் மக்களுக்கான முள்ளிவாய்கால் வெகு தூரத்தில் இல்லை.

http://www.puthinappalakai.com/view.php?20140420110364

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கட்டுரைகளை கிருபன் வாசிச்சுப் போட்டுத் தான் இணைக்கிறனீங்களோ?...இதுகளை வாசிப்பது நேர விரயம் என்பது என் கருத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கட்டுரைகளை கிருபன் வாசிச்சுப் போட்டுத் தான் இணைக்கிறனீங்களோ?...இதுகளை வாசிப்பது நேர விரயம் என்பது என் கருத்து

இப்படியான கட்டுரைகளை எழுதுவதற்கு ஒருவருக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தகவலளைச் சரி பிழை பார்க்கவேண்டும், சொல்லும் செய்தியில் கவனம் இருக்கவேண்டும், அதனை சரியான தர்க்க நியாயங்களுடன் வைக்கவேண்டும். இவற்றை வாசிக்க நேரமில்லாதவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் என்னைப் போல ஒரு சிலராவது வாசிக்கின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.

செய்தியின் தலைப்பை வைத்தே என்ன எழுதப்பட்டிருக்கும் என்று ஊகிப்பதைவிட வாசித்து சீர்தூக்கிப் பார்த்து அரசியல் அறிவை வளர்க்கவேண்டும். எழுதப்படுவதை ஏற்கவேண்டிய அவசியமில்லை. அவர்களின் கோணத்தைப் புரிந்துகொண்டாலே போதும்.

இவைகளை வாசிப்பது நேரவிரயம் என்றால் அதற்கு நான் ஒன்றும் சொல்லமுடியாது.என்னைப் பொறுத்தவரை சீரியல்களைப் பார்ப்பதும் நேரவிரயம், ஆனால் பலர் அதைத்தானே செய்கின்றார்கள்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 03

[ சனிக்கிழமை, 10 மே 2014, 08:15 GMT ] [ புதினப் பணிமனை ]

இந்தியாவை துரிதமாக வளர்ந்து வரும் வல்லரசாக மேலை நாடுகள் பார்ப்பதை இந்திய கொள்கை பகுப்பாளர்கள் விரும்பவில்லை. இது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக அவர்கள் பார்க்கின்றனர். 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி.

கடந்த கட்டுரைகளின் தொடர்ச்சியாக மேலைத்தேய நாடுகளின் இந்தியா மீதான மறைமுக தலையீட்டையும் இதிலே தமிழர்களின் நிலையையும் புரிந்து கொள்வது முக்கியமானதாகப்படுகிறது.

நடந்து கொண்டிருக்கும் இந்தியத்தேர்தல் உபகண்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தலாக அமைந்திருப்பதாக பல்வேறு ஆய்வாளர்களாலும் கணிக்கப்படுகிறது.

மேலை நாட்டு சிந்தனை அமைப்புகள் தமது கடந்த கால நிகழ்கால இந்திய உறவு நிலைகளை மீழ ஐந்தொகை போட்டு பார்க்கும் காலமாக இன்றைய காலப்பகுதிகள் அமைந்து வருகின்றன. ஆனால் இந்தியாவை துரிதமாக வளர்ந்து வரும் வல்லரசாக மேலை நாடுகள் பார்ப்பதை இந்திய கொள்கை பகுப்பாளர்கள் விரும்பவில்லை. இது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக அவர்கள் பார்க்கின்றனர்.

அதே வேளை சமகால பொருளாதார முதலீட்டு முக்கியத்துவமும், மாநில அளவிலான தேசிய இனங்களின் அரசியல் எழுச்சியும் புதுடில்லி மத்தியஅரசின் அதிகாரத்தில் நம்பிக்கை வலுவை குறைந்து விட்டது.

உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட நேரடி தொடர்பாக மாநிலங்களின் தலைமைகளை அணுகுவது இந்திய அரசியல் ஒருமைப்பாட்டை சிறிது சிறிதாக வலு குறைப்பதாக பார்க்கப்படுகிறது. பொருளாதார சுதந்திரம் பலமாக பெற்ற மாநில அரசுகளின் தலையீடு வெளியுறவு கொள்கை உட்பட பல்வேறு இடங்களில் பாய்வதாக கருதப்படுகிறது.

மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, நடைமுறை அரசியல் நிறைவேற்று அதிகார கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்குவதாக மத்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திகத்தலைப்பட்டு உள்ளனர். இந்து அடிப்படைவாதம் இன்று அனைத்துலக விவாதப் பொருளாகி உள்ளது. இந்துக்கள் மத்தியிலேயே அடிப்படைவாத பேச்சு ஒரு பிளவு படுத்தும் காரணியாக மட்டுமல்லாது பிராந்திய மட்டத்திலும் விளைவுகளை உருவாக்க வல்லது.

இதனால் நடந்து கொண்டிருக்கம் தேர்தல் தெற்காசிய அரசியல் போக்கில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தகூடிய அளவு தலைமைத்துவ மாற்றங்களும் அதற்கு ஏற்றாற் போல் கொள்கை மாற்றங்களும் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமளவில் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் மேலைத்தேய முதலீட்டாளர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய நுகர்வோர் சந்தைகளை தமதாக கொண்ட பிரித்தானிய நிறுவனமான Tesco அமெரிக்க நிறவனமான Wal-mart ஆகிய நிறுவனங்கள் இந்திய நுகர்வோர் வர்த்தகத்தினில் நுளைவதற்கு பெரும் ஆதங்கம் கொண்டுள்ளன.

அது மடடுமல்லாது இந்தியா மிகக்குறைந்த செலவிலான உற்பத்தி சந்தை வாய்புகளை கொண்டுள்ளது. உற்பத்தி சந்தையிலே வெளிநாட்டு நேரடி முதலீடுகளை உருவாக்குவதிலும் இந்தியாவை உலக போட்டி நிலையில் வைத்திருப்பதிலும் டெல்லியிலே காங்கிரஸ் அரசாங்கம் பல்வேற ஆர்வங்களை கொண்டிருந்தாலும் நடை முறை அளவிலே பெரும் சிக்கல்கொண்ட நிர்வாக சம்பிரதாயங்களை கொண்டுள்ளதாக முதலீட்டாளர்களின் குறை கூறிவருகின்றனர்.

இதனால் நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு சம்பிரதாய தடைகளையம் நீக்கும்படி மேலைத்தேய நிறுவனங்கள் ஊடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது.

1990 களில் கொண்டு வரப்பட்ட வர்த்தக தாராளமயமாக்கல் இந்திய பொருளாதாரத்தில் 40 சதவிகிதம் வேகப்படுத்தப்பட்ட நிலையை உருவாக்கியது. ஆகவே இந்திய பொருளாதார வளநிலையை சீனாவுக்கு சமாக கொண்டு வர வேண்டுமாயின் மேலும் தாராளமயமாக்கல் தேவையாக உள்ளது என்பது முதலீடாளர்களின் கருத்தாக படுகிறது.

ஆனால் இந்த ஒப்பிடும் போக்கு இந்து சமுத்திர பிராந்திய ஆய்வாளர்களின் பார்வையில் அமெரிக்காவை இந்திய உதவியுடன் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்ற கோணத்திலேயே அணுகப்படுவதாக தெரிகிறது.. சீன பொருளாதார வளர்ச்சியை காரணம் காட்டி அவசர அவசரமாக துரித வளர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு அனைத்துலக பொறுப்புகளை கொண்ட இந்தியாவை உருவாக்குவதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பெரிதாக விரும்பவில்லை என்றே கூறலாம்.

அதே நேரம் மறுபுறத்தில் இந்தியா ஒரு நாடாளுமண்ற சனநாயக நாடாக இருந்த போதிலும் இந்திய பொருளாதார, அரசியல் கொள்கைகள் டெல்லி அரச அலுவலர்கள் சிலரின் வசதிக்கு தகுந்த வகையிலும், அரசியல் தலைவர்களின ஆதாயங்களின் போக்கிற்கு ஏற்பவும், ஊழல் வருமான வசதிக்கு தகுந்த வகையிலும் தான் வகுக்கப்படுகிறது என்பது இன்னுமோர் உண்மை.

மாற்றத்தை எதிர்பார்த்து நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் வெற்றி பெறும் வருங்கால புதுடெல்லி நிர்வாகம், நேரடி முதலீட்டை இலகுவாக நடைமுறை படுத்தும் என்ற வகையில் தான் மேலைநாடுகளில் பொருளியல் பத்திரிகைகளின் கண்ணோட்டங்கள் எதிர்பார்கின்றன. ஆகவே வரவிருக்கும் அரசியல் மாற்றம் இந்தியாவை சிதைக்க வல்லது என ஒருசாராரும் இந்தியாவை வளர்க்க வல்லது என இன்னும் ஒரு தரப்பினரும் ஆய்வுகளில் விவாதிக்கின்றனர்.

அதீத பொருளாதார முன்னேற்றங்களைப் போலவே இந்திய மத்திய மாநில அரசியல் நிலைமைகளும் கடந்த தேர்தல் கள நிலையிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது. காங்கிரஸ் அரசாங்கம் உள்நாட்டிலே ஊழல் அரசாக மாற்றம் பெற்று விட்டதாக ஏறத்தாள அனைத்து ஊடகங்களும் நேரடியாகவோ மறைமுகமாவோ கூறி வருகின்றன.

மாநில அரசாங்கங்களின் பலம் தத்தமது மாநிலங்களின் உள்ளுர் நிலைமைக்கு ஏற்ப புது டில்லி நிர்வாகத்திற்கு கட்டுப்படாத நிலையை எட்டி விட்டுள்ளது. - இதர மாநிலங்கள் குறித்து அவ்வப்போது கருத்தில் கொள்ளும் அதேவேளை தமிழ்நாட்டை முதன்மையாக எடுத்து கொள்வோம்.-

தமிழ் நாட்டை பொறுத்தவரையில் காங்கிரஸ் அரசாங்கம் பல பத்தாண்டுகளாக சிறீலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து விட்டது என்பது தான் மக்களின் எண்ணம் என்பதை திட்டவட்டமாக அனைத்து ஊடகங்களும் கூறுகின்றன.

இம்முறை தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான ஆளும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தத்தமது அறிக்கைகளில் ஈழத்தமிழர்களின் கொள்கை குறித்த மத்திய அரசின் கொள்கைகளில் அதிருப்தி கொண்டுள்ளதான நிலையை திட்டவட்டமாக வெளிக்காட்ட வேண்டிய தன்மை உருவாகி இருக்கிறது. இதனால் காங்கிரசுடன் கூட்டு வைத்து கொள்ளவும் எந்த தமிழ்நாட்டு கட்சிகளும் முன்வரவில்லை.

எதிரும் புதிருமாக இருக்ககூடிய பிரதான கட்சிகள் ஈழத்தமிழர்கள் குறித்த விடயத்தை முக்கியமான அம்சமாக கருதுகின்றன. இதனை சனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப பார்ப்போமானால் நாடாளுமன்ற சனநாயக நாடு ஒன்றில் வாக்காளர்களின் விருப்பத்தினையே அரசியல்வாதிகள் பிரதிபலிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இதற்கேற்ப, தமிழ்நாட்டிலே இடம்பெற்ற ஒவ்வொரு அரசியல் பபை்புரை கூட்டத்திலும் ஈழத்தமிழர்கள் குறித்த தமது கரிசனையை வெளிப்படுத்தும் தன்மையை காண கூடியதாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் கூடிய ஆளுமை பெற்று வளர்ந்த வருவதை எடுத்து காட்டுவதாக உள்ளது. வெறும் போராட்டங்களாயும் மேடை பேச்சு வார்த்தை சாலங்களாயும் இருந்த வந்த ஈழத்தமிழர் விவகாரம் இந்திய கொள்கை மாற்றங்களின் தேவையை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் வளர்ந்திருப்பது புதிய மாற்றம் தான்.

ஆனால் மேலாதிக்க கர்வமும் சிந்தனை மாற்றங்களிற்கு இடமளிக்காத போக்கும் கொண்ட அதிகார வர்க்கதனிமங்கள் நிலைமையை திசை மாற்றி விட முயல்வது கூட வெளிகொண்டு வரபட்டுள்ளது. இதற்கு ஏற்ப சமபந்தப்பட்ட பல்வேறு விவாதங்களை திசை மாற்ற காரணிகளாக பயன் படுத்த முயலப்பட்டுள்ளது.

இவற்றில் சில ஊடகங்கள் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை மையமாக கொண்டு அதிலே இறுதியாக இந்தியா வாக்களிக்காத நிலையை மையமாக வைத்து காட்ட முனைகின்றன. சில ஊடகங்கள் சிறீலங்கா இந்திய தேசியபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலைக்கு போவதை தடுத்து நிறுத்த வேண்டியநிலையை மையமாக வைக்க முனைகின்றன. மேலும் சில 13வது திருத்தசட்டத்தை சிறீலங்கா அரசு வலு விழக்க செய்வது குறித்த விவாதங்களை மையப்பொருளாக வைக்கின்றன. சில ஊடகங்கள் அரசியல் வாதிகளின் சட்ட முறை சாத்தியப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவெற்று வார்த்தைகளை காட்டி நிற்கின்றன.

இந்திய அரசியலில் தற்போதய நிலையில் தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களும் அபிலாசைகளும், வாக்குகளை பெறுவதிலேயும் பதவிகளை பெறுவதிலேயும் குறியாக கொண்ட அரசியல்வாதிகளின் எண்ணங்களும் அபிலாசைகளுக்கும இருவேறு இலக்குகளாகவே தெரிகிறன.

இது, தமிழ்நாட்டிலே மக்கள் எதை வேண்டிநிற்கின்றார்கள் என்பதையும் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியல்வாதிகள் எதை வேண்டி நிற்கிறார்கள் என்பதையும் பார்க்கும் பொழுது புலப்படும்.

சனநாயக அரசியல் எனும் பொழுது தனிப்பட்ட நலன்களும் கடமைப்பாடுமே அடிப்படைகளாக கருதப்படுகிறது. வாக்காளர்களின் தேவைக்கு ஏற்ப கடமைப்பாட்டுடன் செயலாற்றாத எந்த அரசியல்வாதியும் தனிப்பட்ட பதவிகளை தக்கவைத்து கொள்ள முடியாது. இதற்கு காங்கிரஸ் அரசாங்கம் நல்ல உதாரணமாக உள்ளது.

தமிழ்நாடு இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. தேசிய கட்சிகள் என்று கூறப்படும் காங்கிரசும், பாரதீய சனதாகட்சியும் பிராந்திய வாக்காளர்களால் புறம் தள்ளப்பட்ட நிலையில் மாநிலகட்சிகள் மட்டுமே தற்போது போட்டியில் உள்ளன. ஆக மாநில கட்சிகள் மத்தியிலே நாடாளுமன்றத்திலே தமது வாக்காளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்காவிட்டால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அடிபட நேரிடலாம்.

அதேவேளை மிகவும் சிக்கல் மிகுந்த எதிரெதிரான ஆதிக்கம் செலுத்தும் காரணிகளை கொண்ட இந்திய வெளியுறவு கொள்கையும், மேலைத்தேய தலையீடுகளும் இதனூடாக ஈழதமிழர்களது போராட்டமும், இவற்றை தொடர்ந்து வரும் கட்டுரைகளில் காணலாம்.

http://www.puthinappalakai.com/view.php?20140510110493

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 04

[ வியாழக்கிழமை, 29 மே 2014, 07:08 GMT ] [ புதினப் பணிமனை ]

இந்த பின்புல நிலையிலிருந்து பார்க்கும் போது மோடி அவர்களை இந்திய மக்கள் தெரிவு செய்தார்களா அல்லது மேலைதேய நலன்களை நகர்த்த மேலை நாடுகளால் தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுவது நியாயமானது தான். 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி.

தற்போதைய இந்திய அரசியல் நிலையும் மேலைத்தேய இராசதந்திர நகர்வுகளும் எவ்வாறு இணைந்து பயணிக்கின்றன என்பதை காண்பது இந்த கட்டுரை தொடர்களின் முக்கிய விடயமாகும். இதன் அடிப்படையில் ஈழதமிழ் மக்கள் அரசியலை அளவிட்டு கொள்வதற்கு ஏற்ற வகையில் உள்ள தரவுகளை காணவேண்டிய தேவை உள்ளது.

இந்தியதேர்தல் முடிவு பெற்று பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மோடி அவர்கள் தெரிவு செய்யப்படுவார் என்பதிலே உலகம் தெளிவாய் இருந்து ஆனால் எதிர்பார்த்ததை விட பலம் மிக்க அரசாங்கம் ஒன்று அவர்கைகளுக்கு போயுள்ளதை கண்டு உலக நாடுகள் அதிர்ந்து போயுள்ளன என்பது தான் உன்மை. இதனால் இந்தியா தொடர்பான கொள்கைகளில் அனைத்துலகநாடுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக எண்ணுகின்றன.

தற்போதைய நிலையில் பெரும்பாலான மேலைத்தேய ஆய்வாளர்கள் பிரதமர் மோடி அவர்களின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த விபரங்களிலும் அவரது வாழ்க்கை அனுபவங்களிலும் அவரது ஆர்வங்களையும் குறித்த ஆய்வுகளிலே கூடுதல் கவனம் செலுத்துகின்றன. அரசியல் வலு கொண்ட ஒரு தனிமனிதனின் அனுபவமும் பட்டறிவும் சிந்தனையும் எவ்வாறன கொள்கை மாற்றங்களை ஏற்படுதத வல்லது என்பதை இந்த இந்த ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

தீவிர இந்து தத்துவத்தின் அடிப்படைகளுடன் சமூக பொருளாதார வளர்ச்சியையும் ஒருமுனையில் கொண்டு செல்ல கூடிய கொள்கை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் உலகம் தயாரகிறது. இதை இன்னொரு வகையில் சொல்வதானால் சந்தனப்பொட்டும் குங்குமப்பொட்டும் வைத்த வெள்ளையர்களை இனிமேல் இந்திய வீதிகளில் அதிகம் காணலாம். மோடி அவர்களின் ஆட்சி இந்தியாவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்த உள்ளதாக பல்வேறு ஆய்வாளர்களின் பார்வையாகவும் உள்ளது. இந்து அடிப்படை வாதமும் முதலீடுகளின் வரவும் மேலோங்கவுள்ள அதேவேளை எதிலே அதிக ஆர்வமோ அதுவே விதியை நிர்ணயிப்பதாகவும் மாறலாம் என்பதுவும் பொதுவான கருத்தாகும்.

குஜாரத்தில் பாரிய சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திய முதலமைச்சர் மோடி இந்த மாற்றங்களை அகில இந்தியா பூராகவும் ஏற்படுத்துவார் என்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கணிப்பாக பார்க்கப்படுகிறது. அனைத்துலக நிறுவனங்களின் பலஆயிரம் கோடிரூபா ஒப்பந்தங்களின் மூலம் இன்று குஜாரத்தை இந்தியாவின் ஒர் உதாரண மாநிலமாக மாற்றி இருக்கிறார். ஆதற்கு ஏற்றாற்போல் இந்தியாவை தற்போது பிரதமர்; மோடி கைப்பற்றி இருக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களின் வெற்றிக்குப் பின்னால் பல்வேறு காரணிகளை காணகூடியதாக உள்ளது. இதிலே அவருடைய அரசியல் தந்திரங்களும் தமக்கே உரித்தான தனிப்பாணியில் எதையும் சாதிக்கும் திறமையும் மிக முக்கியமானதாகும். இதிலே சாமான்ய மக்களின் உயர்வை மையமாக கொண்டு மோடி அவர்கள் இடும் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆதரவாக அமைந்திருப்பதாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது.

முதலமைச்சராக அவர் குஜாரத் மாநிலத்தை கட்டி அமைத்த போது முதலீட்டாளர்கள் மத்தியிலே உருவாக்கி கொண்ட செல்வாக்கும் அந்த செல்வாக்கை உருவாக்கி கொள்வதிலே உறுதுணையாக நின்ற பொதுசன உறவு நிவனங்களும் பாரிய பிரச்சார யுத்திகளை கையாண்ட முறையும் மோடி அவர்களின் வெற்றியின் மிக முக்கிய அங்கங்களாகும்.

பொருளாதார முன்னேற்றத்திலும் அம்முன்னேற்றத்திற்கு தேவையான கருத்தாதரவை திரட்டுவதிலும், முதலீட்டாளர்களின் வரவேற்பை பெறத்தக்க கொள்கைகளை நடைமுறை படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்திவந்ததன் காரணமாக இன்று உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்கள் இந்தியா முழுவதும் கவனம் செலுத்துபவர்களாக உள்ளனர்.

ஜப்பானிய நிறுவனங்களும், அமெரிக்க நிறுவனங்களும் பல நூறு பில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த கட்டுமானங்களை ஆரம்பித்துள்ளன. இந்த முதலீடுகளுக்கொல்லாம் வழி ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு மேலிட தொடர்புகள் மூலமும் தேவைகளை பெற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவர் மோடி. சிறந்த நிர்வாகியாக இருக்கம் அவர் மிக சிறந்த ஆலோசகர்களின் உதவிகளை பெற்று கொண்டாலும் சொந்த எண்ணங்களின் அடிப்படையில் நிதானமாக கடந்த காலங்களில் பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு தீர்மானங்களை எடுத்திருக்கிறார் என்பது வெளிப்படையாக உள்ளது.

அடிமட்ட சேவையாளன் பதவியிலிருந்து, பல பத்தாண்டுகள் பாரதீய ஜனதா கட்சியில் பரப்புரையாளராக சேவையாற்றிய நரேந்திர மோடி அவர்கள். கருத்தாதரவிலும் கொள்கைப் பரப்புரையிலும் வலுவான நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். தனது கொள்கைகளையும், கருத்தையும். புரப்புரை செய்வதற்கும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இஸ்லாமியர்களுக்கும் இந்துகளுக்கும் எதிராக இடம் பெற்ற கலகங்களில் உருவாகிய களங்கங்களை போக்கும் முகமாக அனைத்துலக பரப்புரை நிறுவன துணைகள் முக்கியமானவையாக இருப்பதாக தெரிகிறது.

இவருக்கு துணையாக இருக்க கூடிய அமெரிக்க பொதுமக்கள் உறவு நிறுவனமாகிய APCO உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பரப்புரை செயற்பாட்டு மையமாகும், இந்நிறுவனத்தின் கீழே பல நிறுவனங்கள் பங்காளிகளாக சேவைசெய்கின்றன. ஊலகின் பல அரசியல் தலைவர்களதும் முன்னணி வங்கிகளினதும் பெயர்களில் எற்பட்ட களங்கங்களை இந்நிறுவனம் சீர் செய்து கொடுத்திருக்கிறது. Vibrant Gujarat என்ற பெயரில் குஜாரத்தை எழுச்சி ஊட்டும் திட்டம் கொண்ட மகாநாடு மிக வெற்றி பெறுவதற்கு APCO நிறுவனம் பெரும் பணியை ஆற்றி உள்ளது முக்கியமானதாகும்.

ஆற்றல் மிகுந்த இந்த நிறுவனத்தில் பல அமெரிக்க செனட்டர்களும் வங்கி அதிபதிகளும் மேற்குலகின் முன்னைநாள் அரசியல் தலைவர்களும் பணியாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் இருப்பது குறிப்பிடதத்தக்கதாகும். அதீத வலதுசாரி போக்குடைய இராசதந்திரிகளின் ஆலோசனை நிறுவனங்களும் APCOவுக்கு ஆலோசனை வழங்குகின்றன.

மோடி அவர்களின் செல்வாக்கு இந்தியாவில் மட்டுமல்லாது மேற்குலக முதலீட்டு நிறவனங்கள் மத்தியிலும் பிரபல்யமாவதற்கு இதை விட வேறுகாரணி தேவையில்லை. இந்த பின்புல நிலையிலிருந்து பார்க்கும் போது மோடி அவர்களை இந்திய மக்கள் தெரிவு செய்தார்களா அல்லது மேலைதேய நலன்களை நகர்த்த மேலை நாடுகளால் தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுவது நியாயமானது தான்.

பிரதமர் மோடி அவர்களின் வெளியுறவுக் கொள்கை குறித்து பல்வேறு ஊடகங்களும் பேட்டிகளையும் கட்டுரைகளையும், தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. மோடியவர்களின் வெளியுறவு கொள்கை வர்த்தக இராசதந்திரங்களை மையமாக கொண்டதாகவே பலரும் எதிர்பார்க்கின்றார்கள். இருந்த போதிலும் உள்நாட்டிலே அதிக வலுவுள்ள அரசாக அமைந்திருப்பதால், பல்வேறு விடயங்களையும் தன்னிச்சையாக தீர்மானிக்க கூடிய வலு அவரது அரசாங்கத்திற்கு உள்ளது.

மாநில கட்சிகளில் அதிக சக்தி வாய்ந்ததாக தமிழ் நாட்டின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமே உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மனோநிலைக்கு ஏற்பவே அதிமுக செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இரண்டு வருடங்களில் வரவிருக்கும் மாநில தேர்தல்களில் தமது செல்வாக்கை இழந்து விட கூடாது என்ற தேவையும் அதன் தலைவர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு உள்ளது. மோடி அவர்களுடன் சுமூக உறவை பேணி கொள்வதிலேயே அதிமுக கூடுதல் மாநில ஒதுக்கீடுகளை பெற்று கொள்ள முடியும். சிறீலங்கா தொடர்பான வெளியுறவு கொள்கைகளில் இந்த உறவு ஈழதமிழ் மக்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கே தமிழ் மக்கள் தரப்பு கொள்கை நகர்வுகள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவையில் உள்ளது. மோடி அவர்களின் முதலாளித்துவ கொள்கைகளும். அனைத்துலக முதலாளித்துவ அரங்கும் இனைந்து இந்தியாவை ஒரு தன்னம்பிக்கை கொண்ட தேசமாக கட்டி அமைக்க முனைந்து நிற்கின்றன. மோடி அவர்களின் ஜப்பானிய முதலீட்டு தொடர்பு பல்வேறு இந்திய ஜப்பானிய கூட்டுகளை உருவாக்க உள்ளது. இது சீனாவை மேலாதிக்கம் செலுத்தும் வகையில் பார்க்கப்படுமானால் ஆசிய பிராந்தியத்தில் வல்லரசுகளின் போட்டியை துரிதப்படுத்துவதாக அமைகிறது.

தமிழ் மக்கள் சார்பாக இந்திய கொள்கை நகர்வகள் குறித்து சிந்திக்கும் பொழுது தெற்காசியாவின் பாதுகாப்பில் தாமும்; “ஓரு” அங்கமாக தமிழர்கள் கருத வேண்டிய கட்டம் வந்துள்ளது. இதனால் போராட்ட அரசியலிலிருந்து தமிழ்மக்கள் கையாழும் அரசியல் இராசதந்திரம் நோக்கி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை விரைவில் ஏற்படும்.

இதில் குறிப்பாக ராஜபக்ச அரசாங்க நகர்வுகளை கையாழ்வது முக்கியமாக தெரிகிறது. ஆரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் வீரியமும் தமிழ் மக்களின் கருத்தாதரவு முயற்சிகளில் இனிவரும் காலங்களில் தேவையாக உள்ளது, அத்துடன் மோடி அவர்களின் கொள்கைப்பிடிக்குள் இடம் பெற வேண்டுமாயின அதிமுக அரசுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டிய தேவை ஈழதமிழ் மக்களுக்கும் உள்ளது. வலிமை கொண்ட அரசுடன் தோழமை கொண்டு செயலாற்வது தேவைகளை அடைந்து கொள்ள சிறந்த யுக்தியாக கருதப்படலாம்.

தொடர்ந்து சிறீ லங்கா நகர்வுகள் குறித்து பார்க்கலாம்.

http://www.puthinappalakai.com/view.php?20140529110610

லோகன் பரமசாமி இங்கிலாந்தில் அசைலம் அடித்து விட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு இன்னொரு முள்ளிவாய்க்கால் என்று காமடி பண்ணுகிறார். இவர் ஒரு அரசியல் துறை மாணவரா? ஒரே ஒரு சந்தேகம். இங்கிலாந்திலும் இந்தியா போல காசு கொடுத்து பட்டம் வாங்கும் டுபாக்கூர் பல்கலைக்கழகங்கள் இருக்கிறதா?   :D  :D  :D  :lol:  :lol:  :lol:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பின்புல நிலையிலிருந்து பார்க்கும் போது மோடி அவர்களை இந்திய மக்கள் தெரிவு செய்தார்களா அல்லது மேலைதேய நலன்களை நகர்த்த மேலை நாடுகளால் தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுவது நியாயமானது தான். 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி.

இந்த வரிகளை வாசித்தவுடன் நிறுத்திவிட்டேன்.. :D

இந்த வரிகளை வாசித்தவுடன் நிறுத்திவிட்டேன்.. :D

மோடி வந்த நாளில் இருந்து இப்படிப்பட்ட எழுத்தாளர் overtime எல்லாம் செய்யீனம்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 05

[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 09:15 GMT ] [ புதினப் பணிமனை ]

புதிய பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தையும் மடக்கி விடுவதில் பௌத்த சிங்கள் தனிமங்கள் மிக கவனமாக செயற்படுகின்றன, உதாரணமாக கொழும்பு பத்திரிகைகள் உள்நாட்டு மனக்கசப்பை குவியம் செய்து காட்டுவதில் மிகத்திறமையாக செயற்பட்டு வருகின்றன. 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி.

மோடி அவர்கள் இந்திய தேர்தலில் வெற்றி பெற்ற செய்தி கேட்ட நிமிடம் தொட்டு சிறீலங்கா அரச தலைமை இடைவிடாது இந்திய அரசின் முகமாற்றத்தை தனக்கு இசைவான வகையில் சரி செய்து கொள்ள எவ்வாறு முயற்சிக்கின்றது என்பதை இக்கட்டுரை அலச முயல்கின்றது.

தெற்காசிய நாடுகள் அனைத்திலும் உள்ளக வெளியக கொள்கைகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய மோடி அவர்களின் வருகை, சிறீலங்காவிலும் சற்று அதிகமாகவே விளைவுகளை உருவாக்கி இருந்தது. முதலாவதாக வாழ்த்து தெரிவித்த முதல் அயல்நாட்டு தலைவர் என்ற பெயரை எடுத்து விட வேண்டும் என்று தலைவர் மகிந்த ராஜபக்ச மூன்றரை மணிநேரம் தவம் இருத்தும் பிழைத்துப் போனது. கடந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங் கூட்டு தலைமையில் புது டெல்லி மிக அருகில் இருப்பது போன்ற பிரம்மை ஒன்றை சிறீலங்கா கொண்டிருந்தது, ஆனால் பிரதமர் மோடியின் வருகையுடன் தொலைதூரம் சென்று விடுமோ என்ற ஏக்கமே இந்த அதீத ஆர்வத்தை உள்ளாக்கியது.

தமிழ் நாட்டிலே இருந்து வாழ்த்துகள் செல்வதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வாழ்த்துகள் செல்ல வேண்டிய அவசியத்தை மகிந்தவின் ஊழியர்களும், சகபாடிகளும் நன்கு உணர்ந்நதிருந்தனர். தமிழ் நாட்டில்; குறிப்பாக மோடி அவர்களுடன் சேர்ந்து போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும் அதன் தலைவர் வை கோபாலசாமியும் வெற்றி பெறாத சூழல் மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும், மிக அவதானமாக அரசியல் நிலைமையை உற்று நோக்கி இருந்தனர். தமிழ் தரப்புகள் நிலைமையை சுதாகரித்து கொள்வதற்கு முதல் நரேந்திர மோடியிடம் நற்பெயரை எடுத்து விட வேண்டும் என்பதிலே சிறீலங்கா தலைவர் மிக ஆர்வமாக இருந்தார்.

பிஜேபி மிக பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்க இருப்பதால் தமிழ் நாட்டு கட்சிகளின் தயவை பெறவேண்டிய தேவை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்நிலை தமிழ் நாட்டு கட்சிகளின் முக்கியத்துவத்தை மத்தியில் உள்ள அரசாங்கம் வேண்டி நிற்காது. புது டில்லியில் உயர் தலைவர்களை சந்திக்கும் போது மன எரிச்சலை உருவாக்கும் தமிழ் மக்கள் பிரச்சனையை ஒட்டு மொத்தமாக புறந்தள்ளி விட்டு இருதரப்பு உடன் படிக்கைகள் மூலம் இந்தியாவை கையாளும் திட்டங்கள் மகிந்தவின் ஆலோசகர்களால் வகுக்கப்பட்டது.

மோடி அவர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியின் மகிழ்ச்சியை விமர்சிப்பதுடன் கடந்த காங்கிரஸ் அரசாங்கம் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட சம்பூர், மகாவலி ஆற்று கழிமுக விவசாய நிலத்தில் அமைக்கப்பட இருக்கும் அனல் மின்நிலயம், மேலும் ஐம்பதினாயிரம் வீட்டு திட்ட நிலுவைகளின் தொடர்ச்சி என்பன போன்ற விடயங்கள் குறித்து புதிய பிரதமரை காண்பதற்காக கிடைக்கப் பெற்ற இருபது நிமிடங்களையும் கையாள்வது என்ற திட்டத்துடன் அதிபர் மகிந்த குழு சிறப்பு விமானத்தில் சென்றிருந்தது.

இவை எல்லாவற்றையும் மீறி மோடி அவர்கள் நிலைமையை தன்பக்கம் எடுத்து கொண்டு விட்டாலும் விசயம் வெளியே தெரியாத அனைத்தையும் மூடி மறைத்து விடுவது என்ற பயனத்திட்டமும் உள்ளே இருந்தது.

இதர இனங்களின் உரிமை விவகாரத்தில் தமிழர்களுக்கும் அரசில் பங்குகள் கொடுத்துள்ளோம் என்று காட்டி மோடியவர்களின் வாயை அடைக்கும் படியாக கூட்டி சென்ற மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குனராசா, பயணத்தில் கூடவே வந்த சிலந்தி கொட்டியது போல ஏன்டிரிவி என்ற தொலைகாட்சியில் அளித்த பேட்டியின் போது மோடி அவர்கள் 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக அமல் செய்ய வேண்டும் என வேண்டி கொண்டதாகவும் இதற்கு அதிபர் காணி பொலீஸ் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதாகவும் உடன்பட்டதாகவும் கூறிவிட்டார்.

புறப்படுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே சீன மக்கள் விடுதலை இராணுவ அதி உயர் அதிகாரிகளின் வரவேற்பில் பங்கு பற்றி விட்டு புது டில்லிக்கு வந்த அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக 13ஆம் திருத்த சட்ட அமுலாக்கம் என்ற வாள் போடப்பட்டது. 13ஆம் திருத்தம் யானைப்பசிக்கு சோளப்பொரி என தமிழர்களால் விமர்சிக்கப்பட்டு வரும் ஒரு விடயமாகும் ஆனால் மோடி அவர்களின் உள்ளங்கவரும் நோக்கிலே சென்ற பயணம் உத்தரவாதங்களை கொடுத்து வெளியே வர வேண்டிய நிலை அதிபர் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுவிட்டது.

மாநகர சபை முதல்வர் திருமதி பற்குணராசா கூறிய அதிபர் ராஜபக்ச பிரதமர் மோடி அவர்களால் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார் என்ற விடயத்தை இந்தியாவின் தலையீட்டினால் சிறீலங்காவின் சுமூக நிலை குலைகிறது என்ற பார்வையை சிங்களமும் பௌத்தமும் உருவாக்கியது. ஒரு தேசத்தின் உள்நாட்டு விவகாரத்தில் இன்னொருதேசம் தலையிடுவது அந்த தேசத்தின் ஒருமைப்பாடு சார்ந்ததாக பார்க்கப்படுவதுண்டு.

தேசிய ஒருமைப்பாடை வளர்ப்பதாக இருந்தால் அது உயிர்கள் அனைத்தையும் அழிக்கும் இரசாயன ஆயுதபிரயோகமானாலும் ஏற்று கொள்ளலாம். அது குற்றமில்லை. ஆனால் தேசத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் எந்த ஒரு நாட்டு தலைமையும் ஒரு சொல்லு சொன்னாலே அது பாரிய குற்றமாகும். இந்த வகையான யுக்தியை பல இடங்களில் சிங்கள பௌத்தம் இந்திய வல்லரசை கையாள உபயோகித்திருக்கிறது.

புது டில்லிக்கான அவசர பயனத்தின் திட்டமிடலில் கூட்டிச் செல்வோர் பட்டியலில் வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் பெயரே முதலிலே திட்டமிடபட்டிருந்தது. ஆனால் இந்த அழைப்பை மறுத்து வடமாகாண முதல்வர் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிசுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த பயனத்தில் தாம் பங்கு பற்றுவதானது மத்திய சிறீலங்கா அரசுக்கும் புறநில வடமாகாணத்திற்கும் இருக்கும் வேறுபாட்டை திரிபுபடுத்தப்படகூடிய நிலை இருப்பதால் தம்மால் பங்கு பற்ற முடியாது" என் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இங்கே இன்னுமோர் விடயத்தை புரிந்து கொள்வது நல்லது இந்திய அரசியல் சட்ட வரை முறைகளுக்கு ஏற்ப மத்தியில் நாடாளுமன்ற தெரிவுகளும் செயற்பாடுகளும் எவ்வளவு சனநாயக பண்பை கொண்டதோ அதே போல மாநிலங்களில் சட்டசபைகளும் அவற்றின் செயற்பாடுகளும் இந்திய அரசியல் பண்பாட்டுக்கு ஏற்ற வகையில் சனநாயக விழுமியங்களை கொண்டது.

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அறிந்து. தமிழ்நாட்டு மக்களும் தமிழ் மாணவர்களும் நடாத்திய போராட்டங்கள் காரணமாக எழுந்த இந்த மனஎழுச்சியை சனநாயக கோட்பாடுகளுக்கு ஏற்ப தமது வாக்குகளாக மாற்றும் பொருட்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கடந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையையும் தேவையை உணர்ந்து செயற்பட்டனர்.

மேலும் தனது அரசியல் எல்லைக்குட்பட்ட சட்ட அங்கீகாரமும் ஆளும் உரிமையும் கொண்ட தமிழ்நாடு சட்ட மன்றத்தில்; அதன் முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரினால் முன் மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான,

தமிழ் மக்கள் இலங்கைதீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான இனஅழிப்பிற்குள் உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் தொடர்ந்து கொழும்பு அரசுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றனரா அல்லது பிரிந்து செல்ல விரும்புகின்றனரா என்பதை பொது வாக்கெடுப்புக்க விட வேண்டும் மற்றும் கச்சதீவு விவகாரம் போன்றன தென்னிந்திய அரசியலிலே மிகவும் வலிமை வாய்ந்ததாகவும் உள்ளன.

சிறீலங்கா அரசு தனது உள்ளக அரசியலில் புதிய இந்திய அரசாங்கம் கொந்தளிப்பை ஏற்படுத்த முனைகிறது என்று கூறினால். அதேசிறீலங்கா அரசு தமிழ் மக்களை இராணுவ ஆகிகிரமிப்பின ;கீழ் வைத்திருப்பது தென்னிந்திய இந்திய உள்விவகாரங்களில் தலையிடுவதாக அமைகிறது.

இந்நிலை தமிழ்நாட்டு புறநில அரசு மத்திய டெல்லி அரசுடன் பிளவு நிலையை ஏற்படுத்த வல்லதாகிறது. என்ற வாதம் ஒருபுறமிருக்க. வடமாகாண சபையும் தமிழ்நாடு சட்டசபையும் ஒரு கோட்டில் நிற்கின்றன என்பது முக்கியமானதாகும்.

கடந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் படுதோல்வி சிறீலங்காவின் சீன மிரட்டல் அரசியலுக்கு பணிந்து போனதன் பின் விளைவாக ஏற்பட்டது என்பது முக்கியமானது. பாரிய இந்திய வல்லரசை நிர்வகித்து வந்த காங்கிரஸ் அரசாங்கம் சின்னங்சிறிய நாடொன்றின் அரசியல் நகர்வால் சோரம் போனது மிகவும் வெட்கப்படத்தக்க விடயமாகும்.

ஆனால் இம்முறையும் புதிய பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தையும் மடக்கி விடுவதில் பௌத்த சிங்கள் தனிமங்கள் மிக கவனமாக செயற்படுகின்றன, உதாரணமாக கொழும்பு பத்திரிகைகள் உள்நாட்டு மனக்கசப்பை குவியம் செய்து காட்டுவதில் மிகத்திறமையாக செயற்பட்டு வருகின்றன.

அது மட்டுமல்லாது தலைவர்களின் அரசியல் அதிகார அடிப்படைகளின் பண்பை மறைமுகமாக சொல்வதன் முலம் மோடி அவர்கள் வல்லரசின் அதிபதியாக இருந்தாலும் சாரதாரண நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்பட கூடிய ஒரு பிரதம மந்திரியே. ஆனால் சிறீலங்கா அதிபரின் பலம் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வேளியேயும் மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை அவ்வப்போது வெளிவரும் செய்திகளும் கட்டுரைகளும் அவரவர் அதிகாரவரம்புகளை கூறாமல் கூறுகின்றன.

பிரதமர் மோடி 13வது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி வேண்டிக்கொண்டதை இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீது அதிகாரம் பிரயோகிக்கிறார் என்று கூறும் பொழுது அதில் பல்வேறு அர்தங்கள் உள்ளடக்கி உள்ளது.

இவ்வாறாக ஒருவகை மிரட்டல் இராசதந்திரத்தையும சிங்கள் பௌத்தம் காட்டி வரும் அதேவேளை இக்கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருக்கும் பொழுது இஸ்லாமியர்கள் மீது பேரினவாதம் தனது கொடூரத்தனத்தை காட்டி கொண்டிருப்பது செய்திகள் ஊடாக கற்று கொள்ளகூடியதாக உள்ளது.

இன அழிப்பை ஏற்கனவே செய்து தனது பெயரை களங்கப்படுத்தி கொண்ட சிறீலங்கா ஏன் இச்செய்திகளை தணிக்கை செய்யாது விட்டிருக்கிறது. மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் உலகெங்கும் குறிப்பாக மேற்குலகில் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்பது பேரினவாத சக்திகளின் நோக்காக இருக்கலாமா என்ற நோக்கில் பார்த்தோமானால், புதிய இந்திய அரசாங்கத்திடம் நற்பெயரை பெற்று கொள்ள பல்வேறு முயற்சிகளை சிறீலங்கா அரசுமுனைப்பில் கொண்டிருந்தது. இதில் சுமூகமாக தீர்த்து கொள்கூடிய பல வகைகள் உள்ளன.

ஒன்று சிங்கள இனத்திடம் உன்மையை கூறி அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ எல்லோரும் முன் வர வேண்டும் என அறிவித்து எதிர் கட்சிகளையும் கூட்டு சேர்த்து இதர தேசிய இனங்களை உரிய உரிமைகளுடன் வாழ விடுவது.

இரண்டாவது உள்நாட்டு தேசிய இனங்களை ஒட்டு மெத்தமாக புறக்கணித்து விட்டு சீன தொடர்பை கைவிட்டு இந்திய மேலைதேய உறவை வளர்த்து கொள்வது.

மூன்றாவதாக சீன இந்திய வல்லரசகள் இரண்டையும் சமநிலையில் வெளிப்படையான உறவுகளை வைத்து கொள்வதுடன் தெற்காசிய சமாதான நிலையை வலுப்படுத்துவதான முயற்சிகளில் இறங்கவது.

ஆனால் இராணுவதீர்வின் மூலம ஒருமுறை வெற்றிகண்டு அதையே தனது வாக்கு வங்கியாக எப்பொழுதும் காப்பாற்றி வரும் சிங்கள பேரினவாத மனோநிலை மேற்குலகும் மோடி அவர்களும் மன நிறைவை பெறுவர் என்ற வகையிலும் மேலும் வாக்காளர்களை கவர்வதற்காக பேரினவாதாததை தூணடுவதன் மூலம் இஸ்லாமியர்கள் மீது வன்முறையை தூண்டி விட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

ஏற்கனவே தமிழ்நாட்டு விடயத்தில் கூறியது போல மக்களுக்கு எது மன நிறைவை தருகிறதோ அதனையே அரசியல்வாதிகள் ஒப்புவிப்பர். ஆனால் இங்கே ஒட்டு மெர்த்த பெரும்பான்மை இனவாதமனோநிலையை தூண்டுவதன் மூலம் தன்னைத்தானே அழிக்கும் நிலைக்கு சிங்களம் சென்று கொண்டிருக்கிறது.

விரைவில் தெற்காசிய நாடுகளுக்கான பயண வரிசையில் புதிய பிரதமர் மோடி அவர்கள் சிறீலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது ஏற்கனவே குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது மோடி அவர்கள் காணாதிருந்தார் என்ற குற்றச்சாட்டு கடந்த இந்திய தேர்தலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விடயமாகும்.

தொலைக்காட்சி நிருபர்களும் பத்திரிகையாளர்களும் குஜராத் கலவரம் குறித்த பேச்சு எடுத்தாலே மோடி அவர்கள் மிக கோபம் கொண்டு பேசுவர்,

மேலும் கடந்த கட்டுரையில் பார்த்தது போல மேலைத்தேயத்திலே குறிப்பாக அமெரிக்காவில் ஆலோசனை நிறுவனங்களாகவும் செனட்டர்களாகவம் மோடி அவர்களுக்கு பக்கபலமாய் இருப்பவர்களில் பலரும் யூத இனத்தை சார்ந்தவர்களேயாவார். இவர்கள் மோடி அவர்களுடன் இனைந்திருப்பதற்கு காரணம் மோடி அவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு வாதப்போக்கினால் என்பது பல்வேறு மேற்குலக பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

மோடி அவர்கள் சிறீலங்காவுக்கு வருகை தரும் போது எங்களுக்கும் உங்களுக்கும் நிறைய நெருக்கம் உள்ளது என்று காட்ட ஒருசில இஸ்லாமியரை கொன்று விடலாம் என வன்முறைப்பாதையிலே தமது நம்பிக்கையை பௌத்த சிங்களம் எடுத்து காட்டுகின்றதா?

தொடரும்…

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

http://www.puthinappalakai.com/view.php?20140627110771

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.