Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழவனின் உயிர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழவனின் உயிர்

சயந்தன்

“பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..”

மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில் கதைகளை – ஏழு மலை, தாண்டி ஒரு குகைக்குள் கிளியின் உடலில் உயிரைப் பதுக்கி வைத்திருக்கும், மந்திரவாதிகளின் கதைகளை – வெள்ளை இறகுகள் முதுகில் முளைத்த கேட்ட வரம் தரும் தேவதைகளின் கதைகளை இப்பொழுது யாரும் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. “வாயைத் திற.. அல்லது ஆமிக்காரனிடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று நேற்றுப்பின்னேரம் ஓர் இளவயதுபெண் தன் சின்ன மகளை உருட்டி மிரட்டி சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள். பூதங்களும், பொக்கான்களும் ஆமிக்காரர்களுக்குப் பயந்து ஓடிவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

“அந்நாட்களில் இருளத்தொடங்க முன்னரே, ஊரடங்குச்சட்டம் தொடங்கிவிடும். காலை ஆறுமணியிலிருந்து பின்னேரம் ஆறுமணிவரைதான் சனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரமாயிருந்தது. பின்னர் வீடுகளுக்குள் முடங்கிவிடவேண்டும். ஒரு அவசரமென்றால் கூட அசைய முடியாது” கதையின் இரண்டாவது முடிச்சை இப்படிக் கோர்த்தவர் ஒரு மிடறு சாராயத்தை வார்த்து தண்ணீரைக் கலந்து குடித்தார். அப்பொழுது விசத்தைக் குடிப்பதுபோல, முகத்தைச் சுழித்து உதடுகளை அட்ட திக்குகளிலும் கோணினார்.

“இப்பொழுது நிற்பதைப்போலத்தான் அப்பொழுதும். வீதிக்கு வீதி ஆமிக்காரன் துப்பாக்கியோடு நிற்பான். ஆறுமணியாகிற நேரம், அவர்களைத்தாண்டி சைக்கிளில் போவதென்றால், குளிரில் பற்கள் சில்லிடுவதைப் போல முதுகு கூசும். எந்த நேரத்திலும் ஒரு துப்பாக்கிக் குண்டு, நெஞ்சைப் பிரித்துக்கொண்டு முன்னால் வரலாம். அப்படியொரு நாள் என் இரண்டு கண்ணாலும் பார்த்திருக்கிறேன். ஒரு மம்மல் கருக்கு நேரம், சந்தியிலே, சென்றிக்கூடு. உள்ளே துப்பாக்கியை நீட்டியபடி ஆமிக்காரன். நான் தலையைக்குனிந்து கொண்டு அவனைத்தாண்டி சைக்கிளை மிதிக்கின்றேன். கொஞ்ச நேரத்தில், உன்னொத்த வயதிருக்கும், இளம் பெடியன் ஒருவன் மோட்டர் சைக்கிளில் என்னைக் கடக்கிறான். டுப் என்றுதான் ஒரு சத்தம் கேட்டது. மோட்டர் சைக்கிள் உலாஞ்சிக்கொண்டுபோய் வேலிச் செத்தைக்குள்ளே செருகி விழுந்தது. அதற்கு முன்னமே பெடியன் விழுந்துவிட்டான். நிறைவெறியில் உடம்பு பஞ்சு மாதிரிப் போகுமே, அப்படித்தான் எனக்கு நெஞ்சுக்குள்ளே சொட்டுத் தண்ணீரும் இல்லை. ஆண்டவரே.. ” நடேசுக் கிழவரின் வார்த்தைகள் காட்சிகளாயிருந்தன. அவை என்னை தற தற என ஒரு மலை உச்சிக்கு இழுத்துச்சென்றன. அவர் சட்டென்று நிறுத்தியதும், ஆர்வ மிகுதி பீறிட்டது. “ஏன் அவனைச் சுட்டார்கள்” என்று கேட்டேன்.

நடேசுக் கிழவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் பார்த்திராத ஒரு வினோத ஐந்தைப் பார்ப்பதுபோல கண்களை குறுக்கி என்னைப்பார்த்தார். உண்மையாகவே உனக்குத் தெரியாதா என்பதைப்போலான பார்வை. “இது என்ன புதினமான கேள்வி. சுட்டவனிடம் துப்பாக்கியிருந்தது. செத்தவனிடம் அது இல்லை. அவ்வளவும்தான்” என்றார். நான் அமைதியானேன். நடேசுக் கிழவர் சாராயப்போத்தலை கையில் தூக்கி கண்களுக்கு அருகாக வைத்துப்பார்த்தார். அது இப்பொழுதுதான் வற்றத் தொடங்கியிருந்தது. முழுவதுமாக கலக்கி இறைப்பார் என்று நினைத்தேன். அமர்ந்த இடத்தில் விரல்களால் ஒரு மோட்டார் சைக்கிளை மண்ணில் வரையத்தொடங்கினேன். அதன் ஒரு சக்கரத்தில் இரண்டு கண்களையும் மூக்கையும் வாயையும் விரல் தன்னியல்பாக வரைந்தபோது நடேசுக் கிழவர் முதற்சொன்ன குழந்தையின் நினைவு எழுந்தது. “பிறகு, அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று.”

“அது செத்துப்போயிற்று”

மீண்டும் அமைதியானேன். எழுந்து போகலாமென்று நினைத்தேன். நடேசுக் கிழவரின் முகத்தில் படிந்திருந்த உணர்வுகளை அறியமுடியவில்லை. சமயங்களில் அது ஏதோ உறைப்பான உணவைச் சாப்பிடுவது போலிருந்தது. அடுத்த நொடியே புளியம்பழத்தைப் பற்களுக்கிடையில் சூப்புவது போலானது. வேலியில் ஓடிய ஓணான் ஒன்றை அவரது கண்கள் பின்தொடர்ந்தன. அது இரண்டு கதியால் இடுக்குகளினால் ஓடி மறைந்தபிறகும் முடிவிடத்தில் அப்படியே நிலைத்திருந்தன. அவர் பெருமூச்சு விடுத்தார். “பாவம், கல்யாணம் கட்டி ஆறு வருடத்திற்குப் பிறகு பிறந்த குழந்தை அது. ஆறு மாதத்தில் பொசுக்கென்று போயிற்று”

“என்ன ஆயிற்று” என்று கேட்டேன். இம்முறையும் அது செத்துப்போயிற்று என்றாராயின் எழுந்து போய்விடுவதெனத் தீர்மானித்திருந்தேன்.

“அது யாருமில்லை. என் தங்கையின் குழந்தைதான். அச்சு அசல் என் ஆச்சியைப் பார்ப்பதுபோல அதே வட்டமுகம். சந்தேகமேயில்லை, ஆச்சிதான் தங்கையின் வயிற்றில் வந்து பிறந்தாள். தங்கச்சி எனக்குப் பதினைந்து வருடங்கள் இளையவள். அண்ணன் என்று இல்லாமல் ஒரு அப்பா போலத்தான் மரியாதை. புருஷன் வெளிநாடு போக, நான் அவளோடேயே தங்கிவிட்டேன். தனிக்கட்டையல்லவா. அவளுக்குக் கல்யாணம் முடித்து ஆறு வருடமாக கோயில் குளமெல்லாம் அலைந்து பெற்ற குழந்தை அது. அன்றைக்கு இரவு ஒரு மணியிருக்கும். குழந்தைக்கு வலிப்பு வந்தது. வெள்ளை வெள்ளையாய் வாயால் நுரை தள்ளியது. குடித்த பால்தான் என்று முதலில் நினைத்திருக்கிறாள். கொஞ்ச நேரத்திலேயே காலை இழுத்து இழுத்து குழந்தை உதறத்தொடங்கிவிட்டது. பார்த்துக்கொண்டு நிற்காமல் உடனேயே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகலாம் என்று கார்க்கார மணியத்திடம் ஓடினேன். ஊரில் அவனிடம்தான் கார் இருந்தது. மணியம் வருகிறேன் என்றான். ஆனால்.. ” என்று நிறுத்திய நடேசுக் கிழவர் அடுத்த குவளையை நிரப்பினார். இம்முறை அதிகம் தண்ணீர் கலக்கவில்லை.

“உனக்குத் தெரியுமா.. அக்காலத்தில், ஆஸ்பத்திரிக்குப் போவதென்றால் மூன்று சோதனைச் சாவடியைக் கடக்க வேண்டும். ஒவ்வொன்றிலும், அரைப்பனை உயரத்தில் மண் அணை இருந்தது. மண் குவிந்து சுனாமி மாதிரி வந்தால் எப்பிடியிருக்கும்.. ஆண்டவரே அப்படியிருக்கும்..”

வளவின் ஒரு மூலையில் அடியில் ஒன்றித்து மேலே ஆங்கில வி எழுத்துப் போல நீண்டு வளர்ந்திருந்த இரண்டு பனைகள் நின்றன. அதிலொன்றின் அரைப்பனை அளவு உயரத்தைக் கண்களால் அளந்தேன். ‘சற்று மிகைதான்’

“பெரிய ராணுவ முகாமிற்குப்போய் அனுமதி வாங்கிக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிறேன் என்று மணியம் சொன்னான். சரி காரை எடு. காரிலேயே போய் அனுமதியை வாங்கிய பிறகு குழந்தையைக் கொண்டு போகலாம் என்றேன். மணியம் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான். அண்ணையாணை, குறைநினைக்க வேண்டாம். எனக்கு மூன்று பிள்ளைகள். ஏதும் நடந்தால் அவர்கள் தனித்துப் போய்விடுவார்கள். ஊரடங்கு நேரத்தில், திரியும் எவரையும் கேட்டுக் கேள்வி இன்றி சுட்டுத் தள்ளுகிறார்கள். என்னால் வரமுடியாது என்று குந்திவிட்டான். என்னுடைய மனது அப்படியொருநாளும் அல்லற்பட்டதில்லை. நான் தானே தங்கச்சிக்கு எல்லாமும். என்னை நம்பித்தானே விட்டுவிட்டுப் போனான். நடக்கிறது நடக்கட்டும் என்று யோசித்தேன். நடந்தே போவதுதான் சரியென்றுபட்டது. ஆமியைக் கண்டால் சடாரென்று கையை உயர்த்த அதுதான் வசதியாயிருக்கும்.

kizavan.jpg

ஆனால் ஓடித்தான் போனேன். ஐம்பது வயதில் அப்படி ஓட மூச்சு முட்டியது. கொஞ்சத் தூரம் போனதும்தான் மூளைக்குள் மின்னியது. அடையாள அட்டைகளை எடுத்துவரவில்லை. திரும்பவும் வீட்டுக்கு ஓடினேன். அப்பொழுது குழந்தைக்கு வலிப்பு அடங்கியிருந்தது. ஆனால் திடீர் திடீரென்று கால்களை உதறுகின்றதாம். குழந்தையைச் சுற்றி ஒப்பாரி வைப்பதுபோல இருந்தார்கள். ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாமென்று குழந்தையைப் பார்த்தேன். அமைதியாய்க் கிடந்தது. திடீரென்று மூச்சை இழுத்து கால்களை உதறியது. நெஞ்சிலே சளி கூடு கட்டினாற்போல முட்டியிருக்க மூச்சு விடும்போது ஒரு சத்தம் வருமே.. அப்படியொரு சத்தம். பிஞ்சுக் குழந்தையை அந்தக்கோலத்தில் காணச் சகிக்கவில்லை. தங்கச்சி என் காலைப் பிடித்தாள். அண்ணன் உன்னை எனது ஐயாவைப்போல நினைத்துக் கேட்கின்றேன். குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போ என்று கதறுகிறாள். என் கண்ணெல்லாம் நீர். எனது அவசரத்திற்கு எனது ஊர்த்தெருவில் போக, எவரிடமெல்லாமோ அனுமதி கேட்கவேண்டியிருக்கிறது. மணியத்தோடு இப்பொழுது வருகிறேன் என்று சொல்லிவிட்டு அடையாள அட்டைகளை வாங்கிக்கொண்டு ஓடத்தொடங்கினேன். எவரின் உயிருக்கும் மரியாதை இருக்கவில்லை. அடையாள அட்டைகளுக்குத்தான் மரியாதை.

நள்ளிரவு, இரண்டு மணியிருக்கும். மார்கழி மாதத்துப் பல்லு நடுங்குகிற குளிர் வீசிக்கொண்டிருந்தது. ஆள் அசுமாத்தம் கண்டு நாய்கள் குரைக்கத்தொடங்கியிருந்தன. எனக்குக் கெடிக்கலக்கம். வைரவரே உம்முடைய வாகனத்தின் வாயைக் கட்டி அருளும் என்று முணுமுணுத்துக்கொண்டே ஓடினேன்.

சனங்களின் வீடுகளுக்கு வெளிச்சமில்லை. ராணுவ முகாம் மட்டும் நான்கு பக்கத்தாலும் வெளிச்சம் பாய்ச்சி விளையாட்டு மைதானம் போலக்கிடந்தது. சோதனைக் கூண்டிலொருவன் தடுத்தான். துப்பாக்கியை என் நெஞ்சுக்கு நேரே நீட்டிக்கொண்டு எங்கே போகிறாய் என்று கேட்டான். பெரிய ஐயாவைப் பார்க்க வேண்டும் என்றேன். அதெல்லாம் முடியாது. நீ விடிந்ததும் வா என்றான். அவனுக்கென்ன ஒரு பதினெட்டு வயது இருக்குமா.. நான் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டேன். ஐயா தயவு காட்டுங்கள். தவ்வல் குழந்தை வலிப்பு வந்து வாயால் நுரை கக்குகிறது. ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும். அனுமதி எடுக்க வந்தேன் என்றேன். அவன் உள்ளே பேசினான். பிறகு உள்ளே போ என்றான். அவனை திரும்பவும் ஒரு தடவை கும்பிட்டுவிட்டு ஓடினேன்.

உள்ளே ஒரு சத்தம் சந்தடி இல்லை. நான் மூச்சுவிடுவது கொடிய மிருகமொன்றின் மூச்சுப்போல எனக்குக் கேட்டது. அந்தப்பெரிய முகாமில் நான் தனியே நின்றிருந்தேன். யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய இறைச்சிக் கடை என்று அந்த முகாமைச் சொல்வார்கள். அந்தனை மோசமான சித்திரவதைகள் அங்கு நடந்திருந்தன.

சற்று நேரத்தில் பெரியவன் வந்தான். மூக்குமுட்டக் குடித்திருந்தான். இரண்டு கண்ணுக்குள்ளும் நெருப்பு எரிவதைப்போல சிவந்து கிடந்தன. நான் அழாத குறையாக ஒப்புவித்தேன். குழந்தைக்கு எத்தனை வயதென்று கேட்டான். ஆறு மாதம் தான் ஐயா என்று கெஞ்சுவதைப்போலச் சொன்னேன். மிகச்சாதாரணமாக, இன்னமும் நான்கு மணிநேரத்தில் விடிந்துவிடும். பிறகு கொண்டு செல்லுங்கள் என்றான். அவனின் காலில் விழுந்து கதறத்தொடங்கினேன். அவன் காலை உதறினான். நான் விடவில்லை. அவன் எழும்பு என்றான். அடையாள அட்டைகள் இரண்டையும் வாங்கி வைத்துக்கொண்டான். பிறகு ஒரு தாளில் சிங்களத்தில் எதையோ எழுதி கையெழுத்திட்டான். அடையாள அட்டைகள் இரண்டும் முகாமில் இருக்குமென்றும் காலையில் வந்து வாங்கும்படியும் சொன்னான். எனக்குத் தயக்கமாக இருந்தது. அடையாள அட்டை இல்லாமல் அத்தனை சோதனைச் சாவடியையும் எப்படித் தாண்டுவது.. பரவாயில்லை, கடிதம் இருக்கிறதுதானே. மெத்தப்பெரிய உபகாரம் ஐயா என்று சொல்லிவிட்டு திரும்பினேன். பெரியவன் என் வலது தோளை அழுத்தி நிறுத்தினான். இப்பொழுது மணி இரண்டே முக்கால், காலை ஆறுமணிக்குள் இந்தப் பகுதிகளில் புலிகள் ஏதாவது குண்டு எறிந்தாலோ, அல்லது சுட்டாலோ, நீயும் உனது குடும்பமும் கூட்டாகத் தற்கொலை செய்து கொள்ளுங்கள். எங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள் என்று அவன் சொன்னான். என் கால்கள் நடுங்கின.

மணியம் வீட்டுக்கு ஓடினேன். மணியத்தின் காரில் வீட்டிற்குப் போனோம். குழந்தை இப்பொழுதும் மூச்சுவிடச் சிரமப்பட்டது. தாயையும் குழந்தையையும் ஏற்றினோம். முக்கால் மணிநேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போய்விடலாம் என்றான் மணியம். பத்தாவது நிமிடத்தில் முதலாவது சோதனைச்சாவடி குறுக்கிட்டது.

வீதிக்குக் குறுக்காக, ரெயில்வே கடவை போல துலாவை இறக்கியிருந்தார்கள். ஒரு சிப்பாய் அதிக தூரத்தில் நின்று டோர்ச் விளக்கைப் பாய்ச்சினான். ஒளியாலேயே இறங்கு என்பதுபோல சைகை காட்டினான். நானும் மணியமும் இறங்கிப்போனோம். ராணுவப்பெரியவன் தந்த அனுமதித் துண்டைக்காட்டினேன். அவன் அடையாள அட்டைகளை எடு என்றான். ஆண்டவரே, என் தொண்டையில் தண்ணீர் வற்றிப்போனது. குரல் வரவில்லை. ஆமிப்பெரியவர் அதை வாங்கி வைத்திருக்கிறார் என்றேன். சற்றும் யோசிக்கவில்லை அவன். அடையாள அட்டைகள் இல்லாமல் போக முடியாது. திரும்பிப் போய்விடுங்கள் என்றான். என் கண்ணில் பொல பொலவென்று கண்ணீர் வழியத்தொடங்கியது. அவனுக்கொரு இருபது வயது இருக்குமா… அவனையும் கையெடுத்துக் கும்பிட்டேன். ஐயா காருக்குள் ஒரு தடவை வந்து பாருங்கள். தவ்வல் குழந்தை மூச்சிழுக்க முடியாமல் கிடக்கிறது. தாய்க்காரி அழுது ஓய்ந்துபோனாள். ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனால்தான் எதையாவது செய்யலாம் என்று தளுதளுத்தேன்.

அவன் காருக்கு அருகாக வந்து நின்று உள்ளே வெளிச்சம் பாய்ச்சினான். அவள் அவசரத்திற்கு இரவு உடுப்போடு வந்தவள். குறுகிப்போய் இருந்தாள். அவன் கதவைத் திறந்து அவளிடமும் அடையாள அட்டையை வாங்கிப்பார்த்தான். துலாவைத் துாக்கிவிட்டான்.

மூன்றாவது சாவடியையும் தாண்டினோம். தங்கச்சி பின்னாலிருந்து கத்தினாள். குழந்தையில் துடிப்பில்லை. கண்மட்டும் விழித்திருந்தது. கையில் தூக்கி தோளில் சாய்க்க, அது தலையைத் தொங்கப்போட்டது. நான் ஆயிரத்தெட்டுத் தெய்வங்களையும் அழைத்தேன். ஒன்றுக்கும் யோசிக்காதே. அது நித்திரையாகி இருக்கும். இதோ ஆஸ்பத்திரி அருகிற்தான். இன்னொரு பத்து நிமிசம்.. என்றேன்.

மணியம் வாசலில் நிறுத்தினான். தெய்வங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அவசரபிரிவிற்கு ஓடினேன். டொக்டர் குழந்தையின் நெஞ்சில் கை வைத்துப்பார்த்தார். கை நாடியைப் பிடித்துப்பார்த்தார். என்னிடம் எதுவும் சொல்லாமலேயே குழந்தையின் கண்களை மூடினார். என் தோள்களை ஆறுதலாகப் பற்றிக்கொண்டு பிள்ளை இறந்து நிறைய நேரமாகிவிட்டது என்றார். கண்ணுக்கு முன்னாலே பூமி பிளந்து போலிருந்தது. எத்தனை மணிக்கு வலிப்பு வந்தது என்றார். இரவு ஒரு மணியிருக்கும் என்றேன். நேரத்தைப்பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.

அந்த அதிகாலையில் தாயின் ஓலம் ஆஸ்பத்திரியை உலுக்கியது. இந்தப் பாழாய்ப்போன மண்ணில் நீ ஏன் வந்து பிறந்தாய் என்று அவள் கதறினாள். ஆஸ்பத்திரிக்கு உன்னைக் கொண்டுபோக முடியாத பாவி ஆனேனே. என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா என்று நெஞ்சில் அடித்து அழுதாள். அழத்திராணியற்றவளாக மயங்கிச் சரிந்தாள்.

குழந்தையின் உடலை காரிலேயே கொண்டு வந்தோம். வரும்வழியில் பெரிய முகாமிற்குச் சென்று அடையாள அட்டைகளை வாங்கினேன். ஆமிப்பெரியவன் ஏதோ நினைப்பு வந்தவனாக குழந்தை எப்படியிருக்கிறது என்று கேட்டான். அது செத்துப்போய்விட்டது என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பச்சை உடம்பு. நீண்ட நேரத்திற்கு வைத்திருக்க முடியாது. அன்றைக்கே செத்தவீட்டைச் செய்து முடித்தோம். ஊரடங்கு தொடங்க முன்னரே கொண்டுசென்று புதைத்தோம். அடுத்தநாள் புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனேன்.

அமைதியான நடேசுக் கிழவர் மீதி வார்த்தைகளை வானத்தைப் பார்த்தபடி சொன்னார். “அப்பொழுதுதான் குழியைக் கிளறியிருந்ததைக் கண்டேன். நாயோ நரியோ கிளறியிருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆறமுடியாத கவலை. ஆனால், நாயும் நரியும் அத்தனை ஆழத்திற்கு குழியைக் கிளறியிருக்குமென்று நான் நினைக்கவில்லை. என்ன நடந்ததென்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவன் ஒருவன்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்..”

நடேசுக் கிழவர் முடித்தபோது, அவர் நிறை வெறிக்கு வந்திருந்தார். வார்த்தைகள் ஒன்றோடொன்று பிணைந்து புசத்தின. போத்தலைக் கவிழ்த்து அதன் கடைசித் துளியை நாவில் ஊற்றினார். எனக்கு அந்த முகம்தெரியாத குழந்தையின் நினைப்பாகவே இருந்தது. நான் இதுமாதிரி கதைகளைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். செய்வினை சூனியம் முதலான மந்திர தந்திரங்களைச் செய்பவர்கள் குழந்தைகளின் உடல்களைத் தேடி அலைவார்களாம். அதனால் சிறு குழந்தைகளைப் புதைத்த சுடலைகளில் இரவுகளில் காவலுக்கு நிற்பார்களாம் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். ஆனால் அதெல்லாம் 50 வருடங்களுக்கு முன்னர்.. அக்காலங்களில் பேய் சர்வசாதாரணமாக உலவுமென்பாள். அப்படியொரு பேய் தன் கழுத்தை வெட்டியது என்று ஒரு தழும்பைக் காட்டுவாள். தாடையின் கீழாக நீண்ட தழும்பு அது. இப்பொழுதும் உண்டு. ஒருவகையான ஹிஸ்டீரியா நோய் உங்களுக்கு இருந்திருக்கிறது. நீங்களே வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால், அவளுக்குப் புரிவதில்லை.

ஒரு பூனை சத்தமிடுவதைப்போல, நடேசுக் கிழவர் விசும்புகிற ஒலி கேட்டது. வெறி முற்றியவர்கள் இப்படி விசும்பி அழுவது வழமைதான். போதையில்தான் எந்தப் பாசாங்கும் புறப்பூச்சுக்களும் இல்லாமல் உணர்வுகள் பீறிடுகின்றன. “ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்” என்று மீண்டுமொருதடவை நடேசுக் கிழவர் சொன்னார். பிறகு மெதுவாக “அவன் என்னையும் பார்த்துக்கொண்டிருந்தான்” என்றார். ஒரு மின்னல் வெட்டியதைப்போல தலையைத் திருப்பி அவரைக் கூர்ந்து பார்த்தேன். முகத்தைத் தாழ்த்திக்கொண்டார். அவரது கண்களில், அவரிட்ட முடிச்சுக்களில் ஒன்று அவிழ்ந்ததைப் போலிருந்தது. சட்டென்று நடேசுக் கிழவர் என் கைகளை அழுத்திப் பற்றினார். “எனக்கு அறுபது வயதாகிவிட்டது. முன்னரைப் போலில்லை. பொசுக்கென்று போகவும் கூடும். சாகிற நாளில் ஒரு பாரமும் இல்லாமற் போய்ச்சேர வேண்டும். எனக்கொரு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திருந்தால் அவனுக்கு உன்னுடைய வயதுதான் இருந்திருக்கும். நீயும் மகனைப்போலத்தான். இதைக் கேள். பத்துவருடங்களாக கிளறிய குழியிற்குள் புதைத்த உண்மையைக் கேள்..”

நான் ஓரளவிற்கு ஊகித்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரது குரலும் அது வெளிப்பட்ட தொனியும் அவரில் நெருக்கமான இரக்கத்தை ஏற்படுத்தின. அவரின் பிடிலியிருந்து கைகளை விடுவிக்காமல் அமைதியானேன். ஆனால் ஒரு குழந்தையைக் குழியிலிருந்து ஏன் தோண்டியெடுக்க வேண்டும்..

நடேசுக் கிழவரின் வார்த்தைகள் கோர்வையற்றிருந்தன. “அன்றைக்கு இரவு பதினொரு மணியிரக்கலாம். எல்லோரும் தூங்கிவிட்டார்கள். வெளியே அவ்வளவு வெக்கை இல்லை. ஆனால் எனக்கு வியர்த்துக் கொட்டியது. டோர்ச் லைற்றை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். நிலவு என்னோடேயே கூட வந்தது. சுடலைக்கு நடந்து போவதென்றால் அரைமணி நேரமாகும். குடுகுடு என்று நடக்கத்தொடங்கினேன். நடுச்சாமாத்தில் சுடலைக்குப் போவதைப் பற்றி யோசிக்கவேயில்லை. பேய்களைச் சமாளித்துவிடலாம். ஆமிக்காரர்கள் வந்தாலும் என்றுதான் பதற்றமாயிருந்தது. காற்றில் ஏறிப் பறந்ததைப்போல போய்ச்சேர்ந்தேன். மூச்சு வாங்கியது. களைப்பாறத் தோன்றவில்லை. தடித்த மரக்கட்டை ஒன்றை எடுத்து சற சற என்று குழியைத் தோண்டத்தொடங்கினேன். கூரான கட்டை குழந்தையைக் குத்திவிடுமென்று நினைத்தபோது என் கண்களைக் குத்தியதைப் போலவே வலித்தது. அதனைத் தூர எறிந்தேன். முழந்தாளிட்டு கைகளால் மண்ணை வறுகத்தொடங்கினேன். கடற்கரை மணலைப்போல சொர சொரவென்று கிளறினேன். குழந்தையின் குளிர்ந்த முகத்தில் விரல்கள் வருடின. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. கைகளை உதறியெடுத்தேன். டோர்ச் லைற்றை வாயில் வைத்துக் கொண்டேன். வெளிச்சத்தில் முகம் தெரிந்தது. நிறையக் கறுத்திருந்தது. “செத்த பிறகும் நிம்மதியாய்த் தூங்கவிடாத பாவி நான்” என்று நினைத்தபோது கண்ணீர் பொங்கி வழிந்தது. நிறைய நேரம் தாமதிக்க முடியாது. குழந்தையின் கழுத்தில் மண்ணை விலக்கினேன். அது கிடந்தது. என்னுடைய பணப் பேர்ஸ்.

பின்னேரம், குழந்தையை குழியில் கிடத்தி, சொந்தக்காரர்கள் எல்லாரும் மண் தூவினார்கள். நான் நன்றாகக் குடித்துவிட்டுத்தான் சுடலைக்கே போயிருந்தேன். ஆற முடியாத துன்பத்தில் என்னால் குடிக்காமல் இருக்கமுடியாது. சேட்டுப் பொக்கற்றில் பேர்ஸ் இருந்தது. குனிந்து மண்ணைத் தூவியபோது விழுந்திருக்க வேண்டும். கவனிக்கவில்லை. ஆனால் வீட்டுக்கு வந்து தலைமுழுகியபோதுதான் பொறிதட்டியது. யாருக்கும் சொல்லவில்லை. இரவு எல்லோரும் தூங்கியபிறகு புறப்படுவதென்று தீர்மானித்திருந்தேன்.

நடுங்கும் விரல்களால் பேர்ஸை எடுத்தேன். படிந்திருந்த மண்ணை ஊதித் தட்டிவிட்டு பத்திரப்படுத்திக் கொண்டேன். சுடலை வீதியில் ட்ரக் ஒன்றின் வெளிச்சம் தொலைவில் தெரிந்தது. டோர்ச் லைற்றை அணைத்து குழியிற்குள்ளேயே உடலை மறைத்தேன். அப்பொழுது குழந்தை என் நெஞ்சோடு கிடந்தது. இராணுவ ட்ரக் தாண்டிப்போனது. அவரச அவசரமாக எழுந்து கால்களால் மண்ணைத் தள்ளி மூடினேன். வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன். குழியைச் சரியாக மூடவில்லை. இரவிரவாக நித்திரையில்லை. நரியோ, மரநாயோ குதறிவிடும் என்று பயமாயிருந்தது. விடிந்ததும் முதல் வேலையாக பூ போடுகிற சாட்டில் ஓடினேன். ஆண்டவரே, அப்படியொன்றும் நடக்கவில்லை. மண்ணை இறுக்கினேன். மண்டியிட்டு குழந்தையிடம் மனசார வேண்டினேன். “ஆச்சி.. என்னைப் பெற்ற ஆச்சி… என்னை மன்னித்துவிடு.. இந்தப் பாவியை மன்னித்துவிடு..”

சட்டென்று கையிலிருந்து வெற்றுப்போத்தலை நடேசுக் கிழவர் கல்லில் குத்தினார். அது சிதறி உடைந்தது. “நான் பாவி நான் பாவி” என்று பலமுறை முணுமுணுத்தார்.

நான் உணர்ச்சிகள் எதனையும் முகத்திற் காட்டாமல் இறுகியிருந்தேன். அவர் மீது படிந்திருந்த இரக்கத்தைத் துடைத்து அழித்தேன். வெறும் பணத்திற்காக இப்படியொரு காரியத்தைச் செய்தார் என்ற போது வெறுப்பாயிருந்தது. “பேர்சுக்குள்ளே எவ்வளவு காசு இருந்தது.. ஒரு ஐநூறு..? அல்லது ஆயிரம்..“ எள்ளலோடு கேட்டேன்.

“ஐந்து சதமும் இருக்கவில்லை மகன். ஆனால் அதற்குள்தான் என்னுடைய இரண்டு அடையாள அட்டைகளும் இருந்தன. ஒன்று அரசாங்கம் தந்தது. மற்றையது ஆமிக்காரர் தந்தது..”

முழுப்போதையில் நடேசுக் கிழவர் வார்த்தைகள் அற்றுப்போகமுன்னர் கடைசியாகச் சொன்னார். “ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் மந்திரவாதியொருவனின் உயிர் இருந்ததுபோல, என்னுடைய உயிர் உடலுக்கு வெளியே அந்த இரண்டு அட்டைகளிலும் இருந்தன.”

-அந்திமழை டிசம்பர் 2013 இதழில் வெளியானது

ஓவியம் மருது

http://sayanthan.com/index.php/2014/04/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நன்றாக எழுதியிருக்கிறார் சயந்தன். பகிர்வுக்கு நன்றி கிருபன்.

 

  • 2 weeks later...

இராணுவத்தினரின் நெருக்குவாரம் நிறைந்த, மிகவும் கொடுமையான காலகட்டத்தினை  நடேசுக் கிழவரின் மூலம் கண்ணுக்கு முன்னால் மீண்டும் கொண்டு வந்து காட்டி விட்டார் சயந்தன்.  மிகவும் இயல்பான நடை.

 

சயந்தன் ஒவ்வொரு படிகளாகத் தாண்டி கொண்டு இருக்கின்றார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை... நன்றிகள்.. கிருபன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.