Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தீவாகப் பரிணமிக்காத காலத்தே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவாகப் பரிணமிக்காத காலத்தே...

சு.கி. ஜெயகரன்

பனியுகங்களின் போதும், கற் காலத்தவர் வாழ்ந்த காலத்திலேயும், ஏழாயிரம் ஆண்டுகட்கு முன் வரையிலும், இலங்கை அன்று இந்தியத் தீபகற்பத்தின் தென் எல்லையாக இருந்தது. சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்த ஆதிமனிதயினத்தவர், அன்றிருந்த தென்னிந்திய - இலங்கை ஒன்றுபட்டிருந்த நிலப்பரப்பில் பரந்திருந்த சதுப்புநிலக்காடுகள், புல்வெளிகள், மணல்வெளிகள் எங்கும் திரிந்து, வேட்டையாடியும், உணவு தேடியும் அவ்வப்போது அங்கு தங்கியும் வாழ்ந்திருந்தனர். கடைசிப் பனியுகத்திற்குப்பின் கடல் மட்டம் உயர்ந்து, இலங்கை தலைநிலத்திலிருந்து அறுபட்டுத் தீவாக உருவாகியது. அதற்குப்பின், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, சிறுசிறு அலைகளாக, சிறுசிறு குழுக்களாக தரை வழியாக வந்து கொண்டிருந்த ஆதிமனிதக் குடியேற்றங்கள் நின்றுபோயின. அதற்குமுன் அங்கு சென்ற ஆதிக் குடியேறிகள் இன்றிருப்பதைவிட அகன்றிருந்த கடற்கரைகளை ஒட்டிய பகுதிகளில் குடியேறி வாழ்ந்திருந்தாலும், படிப்படியாக ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால், அவர்கள் வாழ்ந்த பகுதிகளைக் கடல் கொள்ள, ஆதி மனிதயினம் உள்நிலம் நோக்கியும், தீவின் நடுவிலிருந்த மலைக்காடுகள் வரையும் குடியேறி வாழ்ந்தனர்.

கடல் மட்ட மாற்றங்கள்

ஒரு கணிப்பின்படி கடந்த ஏழு இலட்சம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால், இலங்கை பதினேழுமுறை தீவாகத் துண்டாக்கப்பட்டது. இலங்கை ஒரு தீவாக கடைசியாக உருவாகியது வரை ஏற்பட்ட கடல் மட்ட மாற்றங்கள் பற்றிய ஆய்வுகள் தொல்மானிடவியல், புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அவை இலங்கையின் கடற்கரையின் அமைப்பையும், ஆதிமனிதக் குடியேற்றங்களையும் வெகுவாகப் பாதித்தன. கடல் மட்ட மாற்றம், ஏற்றமோ தாழ்வோ, அது கடற்கரையின் பரப்பு, படிவங்களின் கோப்பு, உருவாக்கம் போன்ற புவியியல் கூறுகளை நிர்ணயிக்கும், கடற்கரையை மட்டுமல்லாமல் உள்நிலத்தையும் ஓரளவு பாதிக்கும்.

இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகளில் பனியுகத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்ட கடல் மட்ட மாற்றங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள், ஜெயவர்த்தனே கலா சாலையின் நிலவியலாளர் ஜின தாஸ கட்டுப்பொதவால் (யிவீஸீணீபீணீsணீ ரிணீttuஜீஷீtலீணீ)நடத்தப்பட்டன. 19ஆயிரம் ஆண்டுகட்கு முன், இன்றிருப்பதைவிடத் தாழ்வாகயிருந்த கடல் மட்டம், எப்படிப் படிப்படியாக உயர்ந்து, அதனால் இலங்கைக் கடற்கரைகளில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன என்பது பற்றித் தம் ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அப்போதிருந்து இன்றுவரை உண்டான கடல் மட்ட மாற்றங்கள், அவற்றின் விளைவாக ஏற்பட்ட புவியியல் நிகழ்வுகளை நான்கு கட்டங்களாகப் பிரிக்கிறார்.

1) பனியுகத்தின் இறுதியில் இலங்கையைச் சுற்றியிருந்த கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 120மீ தாழ்வாக யிருந்தது. பின்னர் ஐந்தாயிரம் ஆண்டுகளில் படிப்படியாக 60மீ அளவு உயர்ந்தது. அப்போது கண்டச் சரிவில் பவளப்பாறைத் திட்டுகள் தவிர, சுண்ணாம்பு, மணல், களிமண்ணிலான இறுகாத படிவப் பாறைகள் உயர்ந்து கொண்டிருந்த கடல் மட்டத்தைப் பொருத்து உருவாகின.

2) இன்றைக்குமுன் 14 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ஆண்டுகள் வரையில் உள்ள காலகட்டத்தில் கடல் மட்டம் 38மீ உயர்ந்தது. இந்த உயர்வால் கண்டச்சரிவில் இருந்த ஆற்றுப்படுகைகள், பள்ளத்தாக்குகள், கழிமுகங்கள் கடலில் மூழ்கின.

3) பத்தாயிரத்திலிருந்து ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் கடல் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்றுள்ள மட்டத்தைவிட 2மீ குறைவாகயிருந்தது. அதனால் கரையை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய படிவங்கள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள், கழிமுகங்கள் அதிலிருந்த சதுப்பு நில அலையாத்திக் காடுகள் கடலுக்குள் மூழ்கின. தலைநிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, இலங்கை ஒரு தீவாகப் பரிணமித்தது.

4) ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் மேலும் உயர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்தது. அன்று வெம்மையடைந்து கொண்டிருந்த உலகில், கடல் நீர் சூடாகி, அதன் கன அளவு அதிகரித்ததாலும், துருவப்பகுதிகளில் இருந்த பனிப்பரப்புகளின் எல்லைகள் உருகியதாலும், ஓயாமல் பெய்த கனமழையாலும், கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 1.5மீ வரை மூன்று முறை உயர்ந்து தாழ்ந்தது. அதன் விளைவாகக் கடலோரங்களில், காயல்கள், புழைகள், மணற்திட்டுகள் பல உருவாகின. தென்னிந்தியா - இலங்கையின் கடற்கரைகள் இன்றுள்ள நிலையை அடைந்தன.

இலங்கையில் தொல்லியல் ஆய்வுகள்

இலங்கையில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1911இல் செலிக்மான்ஸ், 1913இல் ஹார்ட்லி போன்ற ஆய்வாளர்கள் கற்காலக் கருவிகள் சிலவற்றைக் கண்டுபிடித்து அவைபற்றி முதலில் எழுதினர். 1939 துவக்கம் புவியியலாளர் பி.இ.பி. தெரணியகலாவின் தலைமையில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது பழங்கற்கால மனிதர் இலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல கிடைத்தன. பண்டளை, பட்டிராஜ விளை ஆகிய இடங்களில் 125-75 ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கடற்கரையொட்டிய மணற்படிவங்களில் காணப்படும் கற்காலக் கருவிகள் ஆங்காங்கே ஆதி மனிதக் குடியேற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்பதற்கான ஆதாரங்கள் என்பதை தெரணியகலா (1992) சுட்டிக் காட்டுகிறார். கற்கருவிகள் அங்கு கிடைத்தாலும், அவற்றைச் செய்த ஆதிமனிதர்களின் எலும்புகள் அங்கு கிட்டவில்லை. அங்கிருந்த பருவநிலைகளால் எலும்புகள் அங்குள்ள படிவங்களில் பாதுகாக்கப்படவில்லை. தலைநிலத்திலிருந்து இலங்கைக்கு ஆதிமனிதர்கள் மழைபொழிந்த விதத்தையும் பொழிந்த இடத்தையும் பொறுத்துக் குடியேறினர். கணிசமான மழைபெய்து, வனங்கள் துளிர்த்து, புல்வெளிகள் பசுமையடைந்து, அப்பகுதிகளுக்குக் காட்டுயிர்கள் போக, அந்த விலங்குகளை வேட்டையாட ஆதிமனிதர் அங்கு சென்றனர். மழை அதிகமாகப் பெற்ற ஈரமான சமவெளிகளிலும், மீன், கிளிஞ்சல், சிப்பிகள் ஆகியவற்றை இரையாக்க கடற்கரையோரங்களிலும் அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன. இலங்கையில் கித்துல்கலாவில் உள்ள பெலிலெனாகுகை, ரத்தினபுரிக்கருகில் உள்ள வௌவால்குகை குருவிட்டைக்கருகில் உள்ள பட்டதொம்பை ஆகிய இடங்களில், நாற்பதுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ரத்தினபுரிப் பண்பாட்டுக் காலத்திய இலங்கை

குருவிட்டைக்கருகே கரங்கொடையில் ரத்தினக்கற்களுக்காக ஐம்பதுகளில் தோண்டப்பட்ட குழிகளில் ஆதிமனிதயினம் ஒன்று பயன்படுத்திய, படிகங்களை உடைத்துச் செய்யப்பட்ட கிழிப்பான்கள், சுரண்டிகள், கைக்கொத்திகள் போன்ற பழங்கற்காலக் கருவிகள் காணப்பட்டன. (படம் 2) அக்கருவிகள் செய்யப்பட்ட முறையை வைத்து, அவற்றை உருவாக்கியவர்கள் அடைந்த பண்பாட்டு நிலையை ரத்தினபுரிப் பண்பாடு என மானிடவியலாளர் குறிப்பிடுகின்றனர். இதை உருவாக்கிய ஆதிமனிதயினமே இதுவரை இலங்கையில் அறியப்பட்ட மூத்தயினமாகும். கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள், தொல்லுயிரெச்சங்களை வைத்து அந்தப் பண்பாடு நிலவிய மத்திய ப்ளைஸ்டோஸீன் காலகட்டத்தை, மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.

si.jpg

ரத்தினபுரிப் பண்பாட்டை உருவாக்கிய ஆதிமனிதயினம் எது என்பது பற்றிய தெளிவு ஆரம்பத்தில் இல்லை. கரங்கொடையில் தோண்டப்பட்ட குழி ஒன்றில் 3.5மீ ஆழக்குழியில், புருவம் நெற்றிப்பகுதி சேர்ந்த ஆதிமனிதக் கபாலத்தின் உடைந்த மேற்பகுதியொன்று 1954இல் எடுக்கப்பட்டது. இருவருடங்களுக்குப் பின் ரத்தினபுரிக்கருகே பாலஹபூவாவில் ரத்தினகற்களுக்காகத் தோண்டப்பட்ட குழியில் கற்கருவிகளுடன் ஆதிமனித இனத்தின் மேல்தாடை கோரைப்பல் ஒன்றும் கிடைத்தது. காலநிர்ணயம் செய்யப்படாத, இனங்காணப்படாத ஆதிமனித மண்டையோட்டின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து, 1957இல் தெரணியகலா அந்தயினத்தை ஹோமோ சின்ஹலேயஸ் (Homo sinhaleyus) எனப் பெயரிட்டார். அந்த மண்டையோடு தற்கால மனித மண்டையோட்டைவிடச் சிறியது என வர்ணிக்கும் அவர், அந்தயினத்தின் எலும்புகள் வருங்காலத்தில் மேலும் கண்டுபிடிக்கப்பட்டால், அது நியாண்டர்தாலினத்தவர் என அறியப்படலாம் என்ற அவரது ஊகம் தவறானது என்பதை அண்மைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் சுட்டிக் காட்டலாம். முதலாவதாக நியாண்டர்தால் மண்டையோடு, தற்கால மனித மண்டையோட்டைவிடப் பெரியது. இரண்டாவது நியாண்டர்தாலினம் ஐரோப்பாவில் குடியேறிப் பரிணமித்தயினம் ஆகும். ‘ரத்தினபுரி ஆதிமனிதன்’ என்று குறிப்பிடாமல் தன்னின உயர்வுவாதமாக, ‘சிங்கள ஆதிமனிதன்’ எனக் குறிப்பிட்டதாக நினைக்கத் தோன்றுகிறது. அப்பகுதியில் இதுவரை கிடைத்த தொல்லுயிரெச்சங்கள், கற்கருவிகள் ‘ரத்தினபுரி மனிதன்’ மத்திய ப்ளைஸ்டோஸீன் காலத்தில் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. இந்தியாவில் அக்கால கட்டத்தில் வாழ்ந்த நர்மதை மனிதனுடன் ரத்தினபுரி மனிதனை ஒப்பிடச் சாத்தியக்கூறுகள் உள்ளன. 1983இல் இந்தியப் புவியியலாளர் அருண் சோனாக்கியா, மத்தியப் பிரதேசத்தில், நர்மதை ஆற்றின் கரையில் ஹத்னோரா எனுமிடத்தில் கண்டெடுத்த உடைந்த ஒரு மண்டையோட்டின் மேற்பகுதியை, அது ஹோமோ எரக்டஸ் ஆதிமனிதயினத்துடையது என்று இனங்கண்டு அதற்கு ‘நர்மதை மனிதன்’ என்று பெயர் சூட்டினார். அதுவே இந்தியாவில் கிடைத்த முதல் ஹோமோ எரக்டஸ். ரத்தினபுரிப் படிவங்கள், படிந்திருந்த தொல்லுயிரெச்சங்கள், கற்கருவிகள், அதில் கிடைத்த உடைந்த மண்டையோட்டின் பகுதியின் அம்சங்கள், ரத்தினபுரி மனிதன் ஹோமோ எரக்டஸ் இனத்தைச் சார்ந்தவன் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடும் ஆகும். ஆப்பிரிக்காவில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எரக்டஸ், 10 லட்சம் ஆண்டுகளுக்குமுன் ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் குடியேறி வாழ்ந்தயினம். அந்தயினம் குடியேறிய பகுதிகளில் ஆசிய, ஐரோப்பிய ஹோமோ எரக்டஸ் என சில மாற்றங்களுடன் பரிணமித்தன. இன்றைய ஆய்வுகள் தற்கால மனிதயினம் அதன் வழி வந்த இனமல்ல என்பதைக் காட்டுகின்றன.

இலங்கையில் ஆதிமனிதயெலும்பு கிடைத்த ரத்தினபுரிப் படிவங்களில் படிந்திருந்த பல விலங்குகளின் தொல்லெச்சங்களில் அன்று அங்கு வாழ்ந்து அழிந்த நீர்யானை, காண்டாமிருகம், சிங்கம் ஆகியவற்றின் எலும்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் நீர்யானை, ஆப்பிரிக்காவிலும், இந்தியாவில் கிர்காடுகளிலும் வாழும் சிங்கம், ஆப்பிரிக்காவிலும் ஆசியாவில் இந்தியா, நேபாளம் ஜாவாவில் வாழும் காண்டாமிருகம், ஆகிய விலங்குகள் தென்னிந்திய - இலங்கை தீபகற்பகத்தின் தென் எல்லை வரை அன்று வாழ்ந்தன என்பதை இலங்கையில் எடுக்கப்பட்ட அவற்றின் தொல்லெச்சங்கள் காட்டுகின்றன.

நான் எழுபதுகளில் களப்பணி செய்தபோது, திருநெல்வேலி மாவட்டத்தில், சாத்தான்குளம் அருகே காரமணி ஆற்றின் கரையில் 8கி.மீ ஆழத்திலிருந்து எடுத்த காண்டாமிருகத்தின் மண்டையோடு இதற்கு முக்கியமான ஓர் ஆதாரம். அது பதிந்திருந்த படிவம் தோராயமாக 80ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பனியுகமான ப்ளைஸ்டோஸீன் காலப்படிவங்கள் என்று அறியப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்கு முன் இந்தியாவில் காண்டாமிருகத்தின் எலும்புகள் சிவாலிக் படிவங்களிலும், நர்மதையாற்றுப் படுகையிலும் கர்நூல் குகைப்படிவங்களிலும் கிடைத்திருந்தாலும் தமிழகத்தில் இதுவே முதல் கண்டுபிடிப்பு. இந்த மண்டையோடு சென்னை அருங்காட்சியத்தில் உள்ளது. (படம் 3). இது தமிழ்நாடு - இலங்கை இணைந்திருந்த நிலப்பரப்பில் காண்டாமிருகங்கள் வாழ்ந்தன என்பதற்கான ஆதார மாகும். இதைப்போலவே திருநெல்வேலி மாவட்டம் ஆயனிடுப்பில் விலங்கியலாளர் ஈஸ்டர்ஸன் அகழ்ந் தெடுத்த ஆதியானையினமான ஹிப்ஸ் எலிஃபாஸ் (பிஹ்ஜீs மீறீமீஜீலீணீs)ன் மண்டையோடு மற்றொரு ஆதாரம். அதேயினம் அதே காலத்தில் இலங்கையிலும் வாழ்ந்தது என்பது அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகள் காட்டுகின்றன. அங்கு எடுக்கப்பட்ட ஹிப்ஸ் எலிஃபாஸ் மண்டையோட்டின் மத்தகத்தில் பெரிய புடைப்பு ஒன்று காணப்பட்டது. மண்டையோட்டையும் எலும்புகளையும் வைத்து தெரணியகலா உருவகித்து வரைந்த படம் கீழே காணப்படுகிறது (படம் 1: ஹிப்ஸ் எலிஃபாஸ், தெரணியகலாவின் சித்தரிப்பு). ரத்தினபுரி மனிதன் இலங்கையிலும், நர்மதை மனிதன் இந்தியாவிலும் சமகாலத்தில் வாழ்ந்தனர் என்பது அக்கால கட்டத்தில் இருபகுதிகளிலும் வாழ்ந்த விலங்குகளின் தொல்லுயிரெச்சங்களால் உறுதிப்படுகிறது. முக்கியமாக, ஸ்டிகோடான் (Stegodon) என்ற நேரான தந்தங்களைக் கொண்டிருந்த யானையினம், நீர்யானை மற்றும் இன்றும் காணப்படும் காட்டுமாடு, மான், பன்றி போன்ற விலங்குகளின் எலும்புகள். இன்று ஆப்பிரிக்காவில் மட்டுமே வாழும் நீர் யானை அன்று நர்மதைப் பள்ளத்தாக்கிலிருந்து இலங்கை வரை வாழ்ந்தது என்பதும் தெரியவருகிறது.

‘பலாங்கொடை மனிதன்’:

இலங்கையில் தற்கால மனிதயினத்தின் ஆரம்பம்

இலங்கையில் நாற்பதுகள் துவக்கம் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் தற்கால மனிதயினம் எனத் திட்டவட்டமாக இனங்கொள்ளப்படுமாறு மண்டையோடு, எலும்புகள் கடற்கரையொட்டிய மணற்படிவங்களில் காணப்படவில்லை. ஆனால் அன்று கணிசமாக மழைபெற்ற ஈரமான சமவெளிகளில் 37 ஆயிரம் ஆண்டுகட்குமுன் தற்கால மனிதயினம் (Homosapien) வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. அவை தெற்கு ஆசிய, தொல்மானிடக் கண்டுபிடிப்புகளில் மூத்தவை. தற்கால மனிதயினத்தின் எலும்புகள், மண்டையோடுகள் இலங்கையில் கித்துக்கல்லாவுக்கருகில் உள்ள பெலிலெனா குகை, ரத்தினபுரிக்கருகில் உள்ள வௌவால் குகை, பலாங்கொடை மாவட்டத்தில் உள்ள பெல்லான் பண்டி பலஸ்ஸா, உடுப்பியான் குகை, பட்ட தொம்மை, ஃபாகியான் குகைப்படிவங்களில் காணப்பட்டன. அங்கு பல கால கட்டங்களில் வாழ்த்தவர்கள் செய்த கருவிகள், மணிகள் போன்றவை பலாங்கொடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்தப் பண்பாட்டை பலாங்கொடைப் பண்பாடு எனவும், அதை உருவாக்கிய ஆதி மனிதயினத்தை ஹோமோ செபியன் பலாங்கொடன்ஸிஸ் (Homo sapien balangodensis). சுருக்கமாக ‘பலாங்கொடை மனிதன்’ என்று மானிடவியலாளர் குறிப்பிடுகின்றனர். ஃபாகியான் குகையில் 1960லிருந்து 80வரை மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதிமனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது அறியப்பட்டுள்ளது. அண்மையில் 2012ஆம் ஆண்டு, 30ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி மனிதயெலும்புக்கூடு ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டது. ஃபாகியான் குகை போலவே பெலிலேனா குகையில் 30லிருந்து 4ஆயிரம் ஆண்டுகட்கு முன்புவரை வாழ்ந்தவர்களின் எலும்புகளும், அலுலேனா குகையில் 11ஆயிரம் ஆண்டுகட்கு முன்பும், பெல்லான்பண்டியில் 7ஆயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்தவர்களின் எலும்புகளும் ஸ்ரீபாத மலையடிவாரத்தில் உள்ள பட்டதொம்பையில் 16ஆயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர்களின் எலும்புகளும் கிடைத்துள்ளன. மேற்கூறிய கண்டு பிடிப்புகளின் காலக்கணிப்பு முதன்மையாக, மனிதயெலும்புகள் படிந்திருந்த மண்ணில் காணப்பட்ட எரிந்தவிறகுகளின்மீது நடத்தப்பட்ட கரிமம் 14 (Carbon 14) முறையாலும், இரண்டாவதாக, கற்கருவிகள், சட்டிகள் மீது செய்யப்பட்ட தெர்மோலுமினஸென்ஸ் முறையாலும் அறியப்பட்டன.

பலாங்கொடைப் பண்பாடு மேலும் இருபிரிவுகளாக, கீழ்மட்டமான பெல்லான் பண்டிப் பண்பாடு எனவும் மேல்மட்டமான உடுப்பியான் குகைப் பண்பாடு எனவும் பிரிக்கப்பட்டன. கையில் பிடிக்க வாட்டமான கூழாங்கற்களைச் சுத்திபோல உபயோகித்து வெண்கற்களி(quartz, chert)லிருந்து பிறைபோல உடைக்கப்பட்ட, கூரான கற்சிதறல்களைச் செய்த அந்த இனம் வேட்டையாடி உணவு சேகரித்த இனம். பெல்லான் பண்டி பண்பாட்டினர் இறந்தவர்களைத் தாம் தங்கியிருந்த பகுதிக்கருகிலேயே புதைத்தனர். அப் பகுதியிலே உள்ள உடுப்பியான் குகைப்படிவங்களில் காணப்பட்ட கையகலக் கொத்திகள், உளிகள் போன்ற கற்கருவிகள் மணல்பாவிய பாறைகளின்மீது உரசித் தேய்த்து வழுவழுவாக்கப்பட்டவை, புதிய கற்காலத்தைச் சார்ந்தவை. கருப்பு, சிவப்பு, களிமண்ணால் செய்து சுட்ட, உடைந்த சட்டிகளும் காணப்பட்டன. பெல்லான் பண்டிப் பண்பாட்டைவிடப் பண்பட்டது உடுப்பியான் குகைப்பண்பாடு. இந்தப் பண்பாட்டை உருவாக்கியவர் குழிகள் தோண்டவும், அம்புமுனைகளாகப் பாவிக்கவும் மான்கொம்புகளை உடைத்துப் பயன்படுத்தியுள்ளனர். எலும்புகளின் அகன்ற பகுதிகளை உரசித் தட்டையாக்கிக் கரண்டிபோலவும் உபயோகித்தனர். யானை, எருமை போன்ற பெரிய விலங்குகளையும் கொன்ற பலாங்கொடை மனிதர்கள் திறமையான வேட்டைக்காரர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் வாழ்ந்தயிடங்களில் சிதறிக்கிடக்கும் எலும்புகள் ஆதாரம். மேலும் குகைப் படிவங்களில் காணப்படும் மான், பன்றி, மலை அணில், குரங்கு போன்ற விலங்குகளையும் அவர்கள் கொன்று தின்றனர் என்பது தெரியவருகிறது. எலும்புச் சிதறல்களுக்கிடையே உடைக்கப்பட்ட மனிதயெலும்புகள் பல கிடைத்துள்ளன. எலும்புகளிலிருந்த தசைகளைக் கற்கருவிகளால் சுரண்டியெடுத்ததால் உண்டான சிராய்ப்புகள் காணப்படுவதால், பலாங்கொடை மனிதயினம் அவ்வப்போது தன்னினத்தவரின் இறைச்சியையும் உண்டிருக்கலாம் என்கிறார் தெரணியகலா. தன்னினத்தவரை உண்பது என்பது உணவுகிடைக்காத பஞ்சகாலத்திலோ அல்லது இறந்தவர்களைப் புதைக்குமுன் செய்த சடங்காகவோ இருந்திருக்கலாம். பாப்புவா நியூகினியில் நூறாண்டுகளுக்கு முன்வரை மக்கள் தன்னினம் உண்டனர் என்பதை மனங்கொள்ள வேண்டும். பெல்லான் பண்டிப் பலஸ்ஸாவில் உடைந்த சட்டியின் சிதறல்கள், நத்தைக் கூடுகள், கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் குவியல் குவியல்களாக எலும்புகள் புதையுண்ட நிலையில் காணப்பட்டன. ராவ ணெல்லா, ஃபாகியான் குகையில் அகழ்ந்தடுக்கப்பட்ட பலாங்கொடை ஆதிமனிதயெலும்புகள் சிலவற்றில் சிவப்பு நிறக்களிமண் (ஸிமீபீ ஷீநீலீக்ஷீமீ) பூசப்பட்டிருந்தது. அவற்றைப் பார்க்கும்போது, இறந்தவர்களை எலும்புக்கூடுகளாகப் புதைத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

siR.jpg

பலாங்கொடை மனித மண்டையோட்டைத் தற்கால மனித மண்டையோட்டுடன் ஒப்பிடுகையில், அந்த ஆதிமனித மண்டையோடு, பெருத்த புருவப் புடைப்பு, அகன்ற கண்கள், சப்பையான மூக்கு, சற்றே சிறுத்த நாசித்துவாரம், பெருத்த கடைவாய்ப் பற்கள் கொண்ட அகன்ற தாடையுடன் கூடிய, சற்றே நீண்ட (Dolico Cephalic) மண்டையோடு ஆகும். தொல்மானிடவியலாளர் அதில் ஆஸ்திரேலிய அபாரிஜினி மண்டையோட்டின் பல கூறுகளையும், நீக்ராய்டு இனத்தவர் மண்டையோட்டின் சில கூறுகளையும் காண்கின்றனர். பலாங்கொடை மனிதரின் மேல்கையெலும்பு, தொடையெலும்பு ஆகியவற்றின் நீளம் விகிதத்தை வைத்து அந்தயின ஆண் 1.8 மீ பெண் 1.65 மீ சராசரி உயரம் கொண்டவர்கள் என்ற தெரணியகலாவின் கணிப்பு விவாதத்திற்குரியது. ஏனெனில் இனங்களைப் பொறுத்து உடல் உறுப்பு விகிதங்கள் மாறும்; மேலும் அவர்களது வழித்தோன்றல்களான வேடர் இனத்தவர் அவ்வளவு உயரமானவர்கள் அல்ல. மேற்கூறிய கணிப்பால் பலாங்கொடை மனிதயினம் ஏதோ ஒரு இராட்சதயினம் போன்று பின்னர் எழுதியவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தியத் துணைக்கண்டத்து வழியான ஆதி மனிதக் குடியேற்றம்

இலங்கை, இந்தியா ஒன்றிணைந்த நிலப்பரப்பின் தென் எல்லையில் ஆதியில் குடியேறிய பலாங்கொடை மனிதர்களின் வழித்தோன்றல்களான வேடர்கள் தீவின் வடக்கு, கிழக்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள காட்டு மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். இந்த இனத்தவரில் சிலர் கடற்கரையோரப் பகுதியில் வேளாண்மை செய்தும் வாழ்கின்றனர். “வேடர் இனத்தின் மூன்று பிரிவுகளில் ஒன்றான வன்னியர்கள், தமிழ் பேசுவோர். பன்றி, சேவல் போன்றவற்றைக் குலக்குறியீடுகளாகக் கொண்ட இவர்களின் முன்னோர்கள், ஆரியக் குடியேற்றங்களுக்கு முன்னால் வந்தேறியவர்களின் வழித்தோன்றல்கள்” என்பதை மானிடவியலாளர் ருடால்ஃப் வீர்ச்சோ சுட்டிக்காட்டுகிறார். இலங்கை, தென்னிந்திய திணைக்குடியினர்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமை பற்றி வீர்ச்சோ சுட்டிக் காட்டியுள்ளார். இன்று தமிழ்நாடு, கேரளாவின் மலைக் காடுகளில் வாழும் இருளர், காடர், குறும்பர் போன்ற திணைக்குடியினர் பலரும், இலங்கை வேடர்கள் பலரும் ஆதிக்குடியேறிகளின் வழித்தோன்றல்கள் ஆவர். இந்தியா-இலங்கையின் ஆதிக்குடியேறிகள் எங்கிருந்து வந்தனர் என்பது ஒரு சுவையான ஆய்வு.

suki-jayakaran-article-photo.jpg

இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் உருவான மனிதயினம் ஒரு இலட்சம் ஆண்டுகட்கு முன்னர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி உலகெங்கிலும் பரவினர் என்பதை அண்மைக்கால மரபணு ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வுகளின் படி ஆப்பிரிக்கத் தாயிடம் உருவான மனிதயினத்தின் மூதாதையர்கள் அந்த மரபணுக்களையேந்தி இந்தியத் துணைக்கண்டம் தவிர தாய்லாந்து, இந்தோனேஷியா பாப்புவா நியூகினி, ஆஸ்திரேலியா வரை சென்றனர். அப்போது கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 100மீக்கு மேல் தாழயிருந்தது. கண்டச்சரிவுகளையொட்டிய கடற்கரைகள் அகன்றிருந்தன. இந்தோனேசியாவுக்கருகில் உள்ள சாகுல் மட்டம் நிலப்பரப்பாக இருந்தது; பாப்புவா நியுகினியும், ஆஸ்திரேலியாவும் நிலப்பரப்பால் இணைந்திருந்தன. அதுபோலவே இலங்கை இந்தியாவுடன் இணைந்திருந்தது. இன்று இந்திய எல்லைக்குட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் ஆப்பிரிக்கயினத்தின் அம்சங்களைக் கொண்ட திணைக்குடியினர், இனக்கலப்பின்றி வாழும் ஆதிக்குடியேறிகளின் வழித்தோன்றல்கள் ஆவர். மியான்மாருக்குத் தெற்கே வங்கக் கடலில் 700 கி.மீ. நீளத்திற்கு 250கி.மீ. அகலத்திற்கு இடையேயுள்ள பகுதியில் சிதறிக் கிடக்கும் 319 தீவுகளில் 50க்கும் குறைவான தீவுகளில் மனிதர்கள் வாழ்கின்றனர். அத்தீவுகளில் வாழும் ஆறுவகைத் திணைக்குடியினரில் கிரேட் அந்தமானிஸ், ஒங்கே, ஜாரவா அவர்களின் வழிவந்த சென்டினல் தீவுக்காரர்கள் என மொத்தமாக ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் ஆப்பிரிக்க (நீக்ராய்டு) அம்சங்களைக் கொண்டவர்கள். அவர்களில் சிலரின் மரபணுக்களை, இந்தியாவில் வாழும் பழங்குடியினர் மரபணுக்களுடன் ஹைதராபாத் திசு மூலக்கூறு மையம் ஒப்பாய்வு செய்தது. 2004இல் வெளிவந்த அந்த ஆய்வுகள் தலைநிலத்திலும், தீவுகளிலும் வாழும் திணைக்குடியினர்களின் மரபணுக்களின் ஒற்றுமையையும், ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியத் துணைக்கண்டத்தில் ஐம்பதாயிரம் ஆண்டுகட்குமுன் குடியேறிய இனத்தாரின் வழித்தோன்றல்கள் அவர்கள் என்பதையும் காட்டின. இவர்களுடன் நீக்ராய்ட் இனஅம்சங்கள் கொண்ட மலேஷியா, பிலிப்பைன்ஸில் வாழும் திணைக்குடியினரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தோனேஷியாவுக்கருகில் தைமூர் வழியாக குறுகிய கடலைக் கடந்து பாப்புவா நியூகினி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஆதிக்குடியேற்றம் ஏற்பட்டது. ஏறத்தாழ 40 ஆயிரம் ஆண்டுகட்கு முன் மன்னார் வளைகுடா, நிலப்பரப்பாக இருந்த காலத்தில் இலங்கை, இந்தியத் தீபகற்பத்தின் தென் எல்லையாக இருந்தபோது அங்கு சதுப்பு நிலங்கள், ஏரிகள் கொண்ட சோலைகளும், ஆறுகள் ஊடாகப் பாய்ந்த வனங்களும், அதிக மழையற்ற பகுதிகளில் புதர்வெளிகளும் இருந்தன என்பது அங்கு வாழ்ந்த விலங்குகளின் தொல்லுயிரெச்சங்களாலும், இருந்த தாவரங்கள் பற்றிப் படிவங்களில் படிந்துள்ள மகரந்தத் துகள்களிலும் அறியப்படுகிறது. தென்னிந்தியத் தீபகற்பத்தின் தென் எல்லையாக இலங்கை இருந்து, பின்னர் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வால் தலைநிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டுத் தீவாக உருவான காலம் வரை நடந்து கொண்டிருந்த விலங்குகளின், ஆதிமனிதர்களின் குடியேற்றங்கள், தாவரங்களின் வியாபித்தல், இன்றைய இலங்கைத் தீவின் பல்லுயிரியத்தை (Biodiversity) நிர்ணயித்தன. ஆதிமனிதக் கூட்டங்களும், விலங்கு மந்தைகளும் இலங்கையில் குடியேறியது, இந்தியத் துணைக்கண்டத்தின் பிறபகுதிகளிலும், மேலும் கிழக்காக ஏற்பட்ட ஆதிக்குடியேற்றங்கள் போலவே நடந்தேறியன. ஆய்வாளர் நிமல் பெரேராவின் கணிப்பின்படி, தற்கால மனிதயினமான ஹோமோ செபியன்கள் இலங்கையில் நாற்பது ஆயிரம் ஆண்டுகட்கு முன் குடியேறினர். வடக்கிலிருந்த தலைநிலத்திலிருந்து தெற்காகத் தென்னிலங்கை வரை சென்ற கற்காலத்தவர் அவ்வப்போது ஓரளவு தெற்கிலிருந்து வடக்காக வந்திருக்கவும் வாய்ப்புகள் இருந்திருக்க வேண்டும். இலங்கைத் தீவாக உருவாகியபோது ஆதிமனிதயினம் அனைத்துப் பகுதிகளிலும் குடியேறிவாழ்ந்தனர்.

அவர்களது வழித்தோன்றல்கள் ஒட்டன் (Horton) சமவெளிகள் வரை குடியேறி காட்டுமாடுகளைக் இரையாக்கியும், காட்டுப் பயிர்களை உண்டும் வாழ்ந்தனர். சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து காட்டுமாடு, பன்றிகளை வளர்ப்பு விலங்குகளாக்கி, புதர்களை எரித்து, வேளாண்மை செய்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

துணைநூற்பட்டியல்

1. Bridget & Raymond Allchin, The birth of Indian civilization (India and Pakistan before 500 BC), Penguin1968

2. Deraniyagala. P.E.P., The Pleistocene of Ceylon, Ceylon National Museum, Natural History Series, 1958

3. Deraniyagala, Siran U.,Pre and Proto-historic settlements in Sri Lanka, UISPP Congress Proceedings, 14th Sep. 1996

4. Jayakaran, S.C., Fossil Rhinoceros from Tamilnadu, Current Science, Vol.49, 1980

5. Virchow, R., The Veddas of Ceylon and their relation to neighbouring tribes, Journal of the Royal Asiatic Society(Ceylon Branch), 9, 349-495, 1886

6. கிருஷ்ணராசா. செ, இலங்கை வரலாறு பாகம்-1 (68-76), பிறைநிலா வெளியீடு, 1999.

படங்களுக்கு விளக்கங்கள்

படம் 1. ஹிப்ஸ்எலிஃபாஸ் ஆதியானை. தெரணியகலாவின் சித்தரிப்பு

படம் 2. ரத்தினபுரி பண்பாட்டுக்காலத்தைச் சேர்ந்த படிகங்களால் செய்யப்பட்ட கற்கருவிகள்

படம் 3. பெல்லான் பண்டிபலஸ்ஸா - உடைந்த மண்சட்டிகளுடன் உண்டு எறிந்த கிழிஞ்சல்கள், நத்தைகள் குவியல்களுடன் புதையுண்ட மனித எலும்புகள்

படம் 4. சாத்தான்குளத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட காண்டாமிருகத்தின் மண்டையோடு

http://www.kalachuvadu.com/issue-173/page06.asp

  • கருத்துக்கள உறவுகள்
இனங்காணப்படாத ஆதிமனித மண்டையோட்டின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து, 1957இல் தெரணியகலா அந்தயினத்தை ஹோமோ சின்ஹலேயஸ் (Homo sinhaleyus) எனப் பெயரிட்டார்
உவர் என்ன சொல்ல வாரர் என்றால் சிறிலன்கா சிங்களவனுக்கு சொந்தமானது என்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.