Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலியிடுவதற்கு' ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை

Featured Replies

சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன. பெற்றோரும் உற்றாரும் ஆதிக்கம் செய்யும் நிலையில் இருக்கும் போது நம் உடலை மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். அவல நிலையிலோ உள்ளத்தைக் "கொள்ளை' கொண்டு விடுகிறார்கள். சாதி, மதத்தை மறுத்து பல காதல் திருமணங்கள் சமூகத்தில் நடக்காமலில்லை. அவர்களும் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்காமலும் இல்லை. இருப்பினும் உணர்ச்சிபூர்வமான முடிவுக்கும், உணர்வுபூர்வமான தெரிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது.

காதல் திருமணங்கள் பலவற்றின் "புரட்சி' மணமேடையுடன் முடிவடைகிறது. ""கடன் வாங்காதே, சிக்கனமாக இரு, சேமித்துக் கொள், வீடு கட்டு, அளவோடு பெற்றுக் கொள், பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வை, இருந்தாலும் வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பியிராதே'' என்ற வகையில் வாழ்த்துரை வழங்கப்பட்ட மணமக்கள் சராசரிகளின் உலகத்தில் சங்கமமாகிறார்கள். புரட்சிகர மணவிழாவிலோ சரியாகச் சொன்னால் மணமேடையிலிருந்துதான் "புரட்சி' துவங்குகிறது.

""தன் வீடு, தன் பிள்ளை, தன் சுற்றம்'' என்ற இழிந்த வாழ்க்கை வாழமாட்டோம் என்றும், மக்கள் நலனுக்கும், சமூக விடுதலைக்கும் உளப்பூர்வமாகப் பாடுபடுவோம்'' என்றும் மணமக்கள் உறுதியேற்கிறார்கள்.

இந்த உறுதிமொழியை அமல்படுத்த முனையும்போது குடும்பத்தின் "அமைதி' கெடுகிறது அற்ப விசயங்கள் என்று இதுகாறும் கருதப்பட்டவையெல்லாம் அன்றாடத் தலைவலிகளாகின்றன.

கணவன் மனைவியிடையேயான "புதிய' வேலைப் பிரிவினை, மனைவி பொதுவாழ்வில் ஈடுபடுவதால் "இயல்பாகவே' பல சங்கடங்களுக்கு உள்ளாகும் கணவன், "இயல்பாகவே' பொதுவாழ்வில் ஈடுபடத் தயங்கும் மனைவி, அவ்வாறு ஈடுபட மறுப்பது அவள் உரிமையா, ஈடுபடுத்துவது தன் கடமையா என்று தடுமாறும் கணவன், இதற்கிடையில் மகிழ்ச்சியையும், புதிய தலைவலிகளையும் ஒரே நேரத்தில் கொண்டு வரும் குழந்தை, இந்த எதிர்நீச்சலின் வேதனையை தொடர்கதை படிக்கும் ஆர்வத்துடன் கவனிக்கும் அண்டை வீட்டுக்காரர்கள்! தெரிந்த தீர்வுகளை அமுல்படுத்துவதில் தயக்கம், தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளை எண்ணியோ ஆயாசம்! மொத்தத்தில், மகிழ்ச்சிக்காகத் தெரிவு செய்த மணவாழ்க்கை மகிழ்ச்சியையே காவு கேட்பது போலத் தோன்றுகிறது.

சாதி, மதம், ஆணாதிக்கம், சுயநலம், பிழைப்புவாதம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டுமென்பதைக் கொள்கையளவில் கூட ஏற்க மறுக்கும் நபர்களைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை. முற்போக்கான புதிய ஒழுக்க விழுமியங்களை சமூகம் முழுமைக்கும் பரப்ப வேண்டும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்களைப் பற்றித்தான் பேசுகிறோம். ஏனென்றால் தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் தம் சொந்த அனுபவத்திலிருந்தே நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.

""மகிழ்ச்சி என்றால் என்ன?'' என்ற கேள்விக்கு போராட்டம் என்று பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ்.

கருத்தியல் துறையிலும், அரசியல் துறையிலுயம் அவர் நடத்திய போராட்டங்கள் ஒருபுறமிருக்கட்டும். குடும்ப வாழ்வில் அவர் சந்தித்த வறுமை, பட்டினி, உடல்நலக் கேடு, குழந்தையின் மரணம் போன்ற பல துன்பங்கள் "போராட்டம்' என்ற அந்தச் சொல்லுக்குள் உறைந்திருக்கின்றன. போராட்டமே வாழ்க்கை என்றெல்லாம் பேசினாலும், போராட்டம் என்ற சொல் மகிழ்ச்சியின் எதிர்ச்சொல்லாகவே நடைமுறையில் பொருள் கொள்ளப்படுகிறது. மகிழ்ச்சிக்குத் தேவையான இன்ப நுகர்ச்சி அல்லது பயன்பாடு அதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

விஞ்ஞானி டார்வினின் ஒரு அனுபவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. தனது ஆய்வுகளின் போது ஒரு புராதனப் பழங்குடி இனத்தைச் சந்தித்தார் டார்வின். வழக்கமாக மனித மாமிசம் தின்னாத அவர்கள் பஞ்ச காலத்தில் மட்டும் தங்கள் இனத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த கிழவிகளையே கொன்று தின்கிறார்கள்.

தாங்கள் தின்றது மட்டுமின்றி, தங்கள் வேட்டை நாய்களின் பசியைத் தீர்ப்பதற்காகவும் கிழவிகளைக் கொன்றார்கள். அதிர்ச்சியுற்ற டார்வின்""நாய்க்கு மனிதனைத் தீனியாக்குகிறீர்களே'' என்று கேட்டபோது அவர்கள் இரண்டே வரிகளில் பதில் சொன்னார்கள்: ""நாய்கள் வேட்டைக்குப் பயன்படும்; கிழவிகள் பயன்பட மாட்டார்கள்.'' தன்னைக் கொல்ல வரும் எதிரியாகவோ அல்லது தன்னால் கொன்று தின்னப்பட வேண்டிய உணவாகவோ சக மனிதனைக் கண்டு கொண்டிருந்த விலங்கு நிலையிலிருந்து, மனிதன் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது.

தனது பசி, தாகம், உறக்கம், வேட்கை ஆகியவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்றெண்ணிய காலம் அது. இதைத்தான் செய்யலாமென்ற ஒழுக்கம், மதிப்பீடுகள் போன்றவை தோன்றாத காலம்.

இன்று நாம் வெகுதூரம் வந்து விட்டோம். எனினும் நுகர்வும் பயன்பாடும் மட்டுமே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது என்ற "நுகர்வியல் பண்பாடு' தான் இன்று கோலோச்சுகிறது. உண்பதிலும், உடுத்துவதிலும், அழகியல் ரசனையிலும் இன்னபிற நடவடிக்கைகளிலும், பல அன்றாட மகிழ்ச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவைதான் அறுதியான மகிழ்ச்சிகளா?

பிற மக்களின் துன்பங்கள், ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை பற்றி அக்கறையில்லாமல், தனது மகிழ்ச்சி ஒன்றே இலட்சியமாக இருக்க எவ்வளவுதான் ஒரு மனிதன் முயன்றாலும், அவை அவனது வாழ்க்கைக்குள் தலைநுழைத்தே தீரும். எந்த வம்பும் வேண்டாமென்று எவ்வளவுதான் நடைபாதையில் ஒதுங்கி, ஒதுங்கிச் சென்றாலும், எங்கிருந்தோ பறந்துவரும் போராட்டக்காரர்களின் கல் ஒன்று தலையைப் பிளக்கும். ""சமுதாயத்தில் இருந்து கொண்டே அதிலிருந்து சுதந்திரமாக இருக்க முடியாது'' என்ற உண்மையை நேரடியாக மண்டையில் உறைக்க வைக்கும்.

உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருப்பது, அந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஏற்படும் துன்பங்களை அவை உடல்ரீதியானவையோ, உளரீதியானவையோ சந்திப்பது, இரண்டிலொரு முடிவு காண வேண்டிய தடுமாற்றம் அளிக்கும் தருணங்களில், நாம் கொண்டிருக்கும் கொள்கைக்கு நேர்மையாக நடந்து கொள்வது இவைதான் மகிழ்ச்சியின் தருணங்கள்.

தனது பலவீனங்கள், அற்ப ஆசைகள், பழக்கங்கள், சுயநலம் ஆகியவற்றுக்கும் தான் கொண்டிருக்கும் லட்சியம் கோருகின்ற மதிப்பீடுகளுக்குமிடையே முரண்பாடு வரும் சந்தர்ப்பங்களில் அவற்றை வென்று வெளிக்கிளம்பும் ஆற்றலில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. ""மகிழ்ச்சி என்பது போராட்டம்'' என்று கூறுவதன் பொருள் இதுதான்.

ஆனால் சமூகப் பணிகளில் மனமுவந்து ஈடுபடுவதற்கு "மகிழ்ச்சியான' குடும்பம் ஒரு முன் நிபந்தனை என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் மகிழ்ச்சி குறித்த உங்கள் கண்ணோட்டமும் குடும்ப உறுப்பினர்களின் கண்ணோட்டமும் ஒத்துப் போகாதவரை குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது அல்லது உங்களிடம் மகிழ்ச்சி இருக்காது. எதைப்பற்றியும் கவலைப்படாத எப்போதும் மகிழ்ச்சி ததும்பும் குடும்பம் ஹார்லிக்ஸ் குடும்பம் மட்டும்தான். இத்தகைய குடும்பங்களை உருவாக்குவது நமது நோக்கமல்ல என்பதுடன், இத்தகைய "மகிழ்ச்சியை' ஒழித்துக் கட்டுவதுதான் நம் நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்தி விடுவோம்.

சமூக மாற்றத்தையும் புரட்சியையும் நேசிக்கும் ஒரு நபர், சமூக உணர்வற்றும் சமூக விரோதமாகவும் சிந்திக்கும் குடும்ப உறுப்பினர்களை எங்ஙனம் நேசிக்க இயலும்? இலட்சியப் பிடிப்பின் அடிப்படையில் உணர்வுபூர்வமாகத் தெரிவு செய்து கொள்ளும் உறவுகளைக் காட்டிலும் இத்தகைய இரத்த உறவுகள் மேன்மையாகி விடுவதில்லை. அவை தங்கள் கீழ்மையை அவ்வப்போது நிரூபிக்காமலும் இருப்பதில்லை.

நிலாவைக் காட்டித் தன் பிள்ளைக்குச் சோறூ×ட்டும் தாய்மை, பசியுடனும் ஏக்கத்துடனும், அதைப் பார்க்கும் தெருப் பிள்ளையைக் கண்டு முகம் திருப்பிக் கொள்கிறதே, அந்த இரக்கமின்மையின் அருவெறுப்பைக் கொண்டாடவா முடியும்?

ஆளும் வர்க்கங்களை முறியடிக்க ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் போது, அவர்களது பண்பாட்டை கண்ணீர்கூடச் சிந்தாமல் முறியடித்து விட முடியுமா என்ன? சரி. கண்ணீர் சிந்தலாம்; இரத்தமும் சிந்தலாம்; ஆனால் எத்தனைக் காலம்? ""என்றோ நடக்கக் கூடிய ஒரு புரட்சிக்காக இன்றைய இளமையையும், வாழ்க்கையையும் பலிகொடுக்கிறோமே என்று உங்கள் தோழர்கள் கருதுவதில்லையா?'' என்று ஒரு நிருபர் என்னிடம் கேட்டார். இது அந்த நிருபரின் கேள்வி மட்டுமல்ல் கொள்கையில் உடன்பாடும் அதை நடைமுறைப்படுத்துவதில் "சில சிக்கல்களும்' உடைய பலரின் கேள்வியும் இதுதான். "ரயில் வரும்போது தொத்திக் கொள்ளலாம்' என்பதைப் போல "புரட்சி வரும்போது கூட்டத்தோடு சேர்ந்து விடலாம்' என்று கணக்குப் போட்டு அதுவரை ஒதுங்கியிருக்கும் மதியூகிகளின் மனதிலிருக்கும் கேள்வியும் இதுதான். புரட்சியும், சமூக மாற்றமும் என்று நடக்கும் என்ற தேதி உத்தேசமாகவாவது தெரிந்துவிட்டால், அந்தத் தேதிக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்று துன்பங்களைச் சந்திக்கத் தயாராகலாம் என்பது அவர்கள் கணக்கு. தேர்வுக்குப் பின் வரவிருக்கும் விடுமுறைக் காலத்தின் இன்பத்தை எண்ணியபடியே, கண்விழித்துப் படிக்கும் மாணவனைப் போன்றது இவர்களது சிந்தனை.

போராட்டம் என்பது துன்பம் அது முடிந்தபின் இன்பம் என்ற கண்ணோட்டத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. அப்படியானால் நிச்சயமில்லாத எதிர்கால மகிழ்ச்சிக்காக, உயிர்த் துடிப்புள்ள நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை இழக்க வேண்டுமா? யாரோ சில அதிர்ஷ்டசாலிகள் (அதாவது நம்முடைய சந்ததியினர்) நோகாமல் வாழ்வதற்காக நாம் துன்புற வேண்டுமா? இது அவர்களுடைய அடுத்த கேள்வி. "நம்முடைய சந்ததிக்காக' என்றால் கேள்வி எழுப்புபவர்கள் "தம்முடைய சந்ததிக்காக' என்று வரும்போது கேள்வி எழுப்புவதில்லை.

தன்பிள்ளைக்காகப் பட்டினி கிடப்பதை ஒரு தாய் துன்பமாகக் கருதுவதில்லை தன் மகனைப் படிக்க வைப்பதற்காக அதிகப்படியான நேரம் உழைக்க தந்தை சுணங்குவதில்லை. அவையெல்லாம் இயல்பானவை. துன்பமான இன்பங்கள்.

சமூகத்திற்காக எனும்பொழுது ஒவ்வொரு இழப்பும் துன்பம் தருகிறது. நிகழ்காலம் எதிர்காலம் என்ற தத்துவ விசாரமெல்லாம் வருகிறது. "பலியிடுவதற்கு' ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையும், இழப்பதற்கு ஒரு "உயிர்த்துடிப்புள்ள' நிகழ்காலமும் கிடைக்கப்பெறாத பெரும்பான்மை மக்களின் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கும்போதுதான் இந்த அற்பத்தனத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

அந்தப் பெரும்பான்மை மக்களுக்கு, தங்கள் உழைப்பின் பயனைப் பறிகொடுத்த மக்களுக்கு. உழைப்பே இல்லாமல் "பயன்' அளிக்கும் பரலோகத்தை வாக்குறுதியாகத் தருகிறது மதம். உழைப்பு கிடையாது; நாள் முழுவதும் ஓய்வு. மது, மங்கை, களியாட்டம், உல்லாசம்.... இன்னபிற, சுருங்கக் கூறின், உழைப்பின் பயனைத் திருடும் ஆளும் வர்க்கங்கள் பூவுலகில் எதை அனுபவிக்கிறார்களோ, அந்தச் சிற்றின்பங்கள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கு பரலோகத்தில் உத்தரவாதம் செய்யப்படுகிறது பேரின்பம் என்ற பெயரில். எனினும், பரலோகத்தை உடனடி லாட்டரி முறியடித்து விட்டது.

கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் சொர்க்கம், கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ள பரலோகத்தை ஒழித்துக் கட்டியதில் வியப்பில்லை.

ஆனால் கம்யூனிசம் உழைப்பின்றி உல்லாசம் தரும் பரலோகமுமல்ல தேதி சொல்லி குலுக்கல் நடத்தும் பம்பர் பரிசுச் சீட்டும் அல்ல. உழைப்பின் பயனை உறுதி செய்வது பொதுவுடைமை; உழைப்பை துன்பமாகவும், ஓய்வை இன்பமாகவும் கருதும் நிலையை மாற்றி உழைப்பையே இன்பமாக்கும் வாழ்க்கை நெறிதான் பொதுவுடைமை.

எனவே, இன்று போராட்டம், நாளை ஓய்வு என்ற இன்பக் கனவு அபத்தமானது. வெட்டியெடுத்துத் துண்டாக நிறுத்தப்பட்ட நிகழ்காலம் என்று ஒன்று இல்லை. கடந்த காலம் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் நெஞ்சில் வாழும்வரை அது இறந்தகாலமாகி விடுவதில்லை; எதிர்காலம் குறித்த சிந்தனைகள் தலையில் தோன்றும்வரை அது வெறும் கனவாகி விடுவதில்லை. இவையிரண்டையும் சுமந்து முன்செல்லும் வாழ்க்கைதான் நிகழ்காலம். இதை விளங்கிக் கொண்ட முன்னணியாளர்கள் தங்கள் இலட்சியத்திற்காகக் கொடுக்க வேண்டியிருக்கும் "விலை'தான் துன்பம், தியாகம். இது நோக்கமற்ற ஒழுக்கவாதமல்ல. இது தான் வாழ்க்கை. இத்தகைய இடைவிடாத போராட்டங்களினூடாகத்தான் மனித குலம் தனது வாழ்க்கையையும், மதிப்பீடுகளையும், பண்பாட்டையும் செழுமைப்படுத்திக் கொள்கிறது உன்னதமாக்கிக் கொள்கிறது.

அடுத்த கணமும் எதிர்காலம்தான்; அடுத்த நூற்றாண்டும் எதிர்காலம்தான். எனவே எதிர்காலத்திற்கெதிராக நிகழ்காலத்தை நிறுத்துபவர்கள், புரியும்படி சொன்னால், கடைந்தெடுத்த சுயநலவாதிகள் அல்லது ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள். போராட்டமே மகிழ்ச்சி என்று புரிந்து கொண்டாலும், தங்கள் வாழ்க்கையை அவ்வாறு தகவமைத்துக் கொள்ள முடியாததால் வருந்துபவர்கள் இருக்கிறார்கள்; குற்றவுணர்வுக்கு ஆட்படுபவர்கள் இருக்கிறார்கள். ""தன்னால் முடியாததால் யாராலும் முடியாது'' என்று பிரகடனம்செய்யும் "தத்துவஞானி' களும் இருக்கிறார்கள்.

அறிவும், புலமையும் கொண்ட என்னாலேயே கேளிக்கைகளைக் கைவிட முடியாதபோது, குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையிலிருந்து விடுபட முடியாதபோது, பொது வாழ்வில் குடும்பத்தை ஈடுபடுத்த முடியாதபோது, மற்றவர்களால் எப்படி முடியும் என்று மடக்குகிறார்கள். அத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் "வாய்ப்புக் கிடைக்காததால் யோக்கியர்கள்' அல்லது இரட்டைவேடம் போடுவோர் என்று தூற்றுகிறார்கள்.

முரணற்ற வாழ்க்கை வாழ முயற்சி செய்வோரை வறட்டுவாதிகள் என்றோ, ஒழுக்க விதிகளுக்கு அஞ்சி நடக்கும் முட்டாள்கள் என்றோ ஏளனம் செய்கிறார்கள். போராட்ட வாழ்க்கையில் யாரேனும் தடுமாறுவதாகவோ, தடுக்கி விழுந்துவிட்டதாகவோ தகவல் கிடைத்தால் இவர்கள் உடனே அங்கு தோன்றிவிடுகிறார்கள்; ""பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன் '' என்று ஆறுதல் சொல்கிறார்கள். ""அப்பவே சொன்னேனே கேட்டியா'' என்று கடிந்து கொள்கிறார்கள். போராட்ட வாழ்க்கையில் சோர்வுற்றவர்களையும், சலிப்புற்றவர்களையும், தள்ளாடுபவர்களையும், சறுக்கி விழுந்தவர்களையும், புறமுதுகு காட்டியவர்களையும் காணும்போதெல்லாம் தங்கள் "கட்சி' வென்று வருவதை எண்ணிக் குதூகலிக்கிறார்கள். அதேநேரத்தில் ரசியாவிலும், சீனாவிலும் சோசலிசம் தோற்றுப்போனது குறித்தும், இந்தியப் புரட்சி முன்னேறாதது குறித்தும் பெரிதும் வருந்துபவர்களும் இவர்கள்தான் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் கவலை தோய்ந்த அந்தக் கண்களுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் குதூகலத்தை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

கடந்த காலத்தின் ஒழுக்க நெறிகளையும், காலாவதியாகிப் போன மதிப்பீடுகளையும் சேர்த்துச் சுமந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் புதிய விழுமியங்களுக்காகப் போராடுவதும் அதையே வாழ்க்கையாகக் கொள்வதும் வேடிக்கையல்ல. கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள நம்பிக்கைகளை ""மலர்ச் சாடியில் நட்ட இலவம் பஞ்சு மரம்'' என்று கேலி செய்யும் அறிவுத்துறையினர் புரட்சிக்கு ஏற்படும் இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் கண்டு ஆர்ப்பரித்து அகமகிழ்வதைச் சுட்டிக் காட்டுகிறார், லெனின்:

""இயற்கையிலும் சமூக வாழ்விலும் இப்படித்தான். புதியதன் இளங்குருத்துக்களின் வலுவின்மையைக் கேலி செய்தலும், அறிவுத்துறையினரின் கீழ்த்தரமான ஐயுறவு மனப்பான்மையும்... சோசலிசத்துக்கெதிராய் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதே ஆகும். புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம். இவற்றுள் நிலைத்து வாழ்ந்தவற்றை வாழ்க்கை தெரிந்தெடுத்துக் கொள்ளும். மேக நோயை ஒழித்துக் கட்டும் பொருட்டு 605 மருந்துத் தயாரிப்புகளை சோதித்துப் பார்த்து குறிப்பிட்ட தேவைகளுக்கு உகந்தபடி 606வது தயாரிப்பை உருவாக்கும் பொறுமை ஒரு ஜப்பானிய விஞ்ஞானிக்கு இருந்ததென்றால், இதனினும் கடினமான ஒரு பணிக்கு, முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவது என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புவோர்... ஆயிரக்கணக்கில் புதிய போராட்ட முறைகளையும், வழிகளையும், ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கும் விடாமுயற்சி உடையோராய் இருக்க வேண்டும் அல்லவா?''

இருக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளில் மகிழ்ச்சியும் காண வேண்டும். தான் கொண்டிருக்கும் சமூகப்பொறுப்புணர்வின் அளவுக்கே ஒரு மனிதன் சுதந்திரமானவனாக இருக்கவியலும். சமூகப் பொறுப்பின்மையை (சுயநலத்தை) சுதந்திரமாகவும், பொறுப்புணர்வை கட்டுப்பாடாகவும் (சுதந்திரமின்மை) பார்க்கும் தலைகீழ்ப் பார்வைக்கு இது பிடிபடாத புதிராகத்தானிருக்கும். கம்யூனிச ஒழுக்க நெறிகளும், அதனடிப்படையிலான விதிமுறைகளும் மகிழ்ச்சியாக வாழும் உரிமைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளாகத் தான் இத்தகைய பேர்வழிகளுக்குத் தோன்றும். எனினும் புரட்சியின் ஒழுக்க நெறிகளும், விழுமியங்களும் விதிமுறைகளால் வார்த்தெடுக்கப்படுபவை அல்ல.

அவை ஒரே மனிதனுக்குள் உறைந்து கிடப்பவையும் அல்ல.

மாறாக, அவை வர்க்கப் போராட்டமெனும் உலைக்களத்தில் உருவாக்கப்படுபவை, சுதந்திரமான மனிதர்களின் தனித்தன்மையினால் வளர்த்தெடுக்கப்படுபவை.

போராட்டமே மகிழ்ச்சி என்று வாழும் போராளிகள் ஒவ்வொருவரும் ஒரு கலைஞனைப் போல வாழ்க்கையின் புதிய பரிமாணங்களை, புதிய அழகுகளைப் படைத்துக் காட்டுகிறார்கள். தூக்குமேடையில் உயிர் துறந்த போராளிகள் ஏராளம். பகத்சிங்கும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தான். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்படுவதற்குமுன் அவனுடைய கடைசி ஆசையைக் கேட்டபோது, ""என் கண்களை மறைத்திருக்கும் கருப்புத் துணியை அவிழ்த்து விடு என் தாய் மண்ணைப் பார்த்தபடி நான் மறைகிறேன்'' என்றான்.அது மரணத்திற்கு முன் அவன் தந்த படைப்பு அவன் சொன்ன கவிதை.

நல்லதொரு விசயத்த தந்திருக்கிறியள். உள்ள வையுங்களன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நவம்,

நல்லதொரு ஆக்கம், பாராட்டுக்கள். என்நன்று தான் உப்பிடி பந்தி பந்தியா எளுதினீங்களொ! ஒரு சொல்லுத்தேடவே எனக்கு அலுத்துப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.