Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஸிலுக்கும் கோட்டாவுக்கும் முதல்வர் விக்கி தகுந்த பதிலடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஸிலுக்கும் கோட்டாவுக்கும் முதல்வர் விக்கி தகுந்த பதிலடி

அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் நல்ல பதிலடி கொடுத்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் ஸி.வி.விக்னேஸ்வரன். 'எங்கள் செயற்றிட்டங்களை எங்களைச் செய்யவிடுங்கள், நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்!' என்று கோட்டாபயவுக்குத் தெரிவித்த முதலமைச்சர், பஸில் அவர்களுக்கு 'உங்களை விட எங்களால் செயற்றிட்டங்களை ஊழல் இன்றி, ஊறு இன்றி, உண்மையாக நடைமுறைப்படுத்த முடியும். அதனால் அவற்றை எங்களிடம் விட்டுவிடுங்கள்" - என்று கூறியிருக்கின்றார் முதலமைச்சர்.

 

cm0987656789.jpg

 

கோப்பாய்க் கோமகனின் நினைவு தினமும், தமிழரசுக்கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் இன்று மாலை நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையின் முழு விவரமும் வருமாறு:- கோப்பாய்க் கோமகனின் நினைவையும், கொண்ட எம் கட்சியின் தற்போதைய தலைவர்களின் வரவேற்பையும் ஒருமித்து வைப்பதில் பாரிய ஓர் பலமும் பண்பாடும் பிரதிபலிக்கின்றன. எந்த ஒரு இயக்கமோ, கட்சியோ, அதன் ஆரம்ப கர்த்தாக்களின் ஆத்ம அவாக்களை அடையாளம் கண்டு அனைவருக்கும் அதைக் கூறி அனுசரணை அவர்களிடம் இருந்து பெறுவதாலேயே நிலையான நிறுவனமாய் நிலைத்து நிற்க முடிகின்றது. எனவே கோப்பாய்க் கோமகனின் நினைவை நாம் எம் மனங்களில் நிலை நிறுத்தும் அதேவேளையில் அவர் வாழ்க்கையில் இருந்து எமது வாழ்விற்குகந்த வரவுகளை வெளிக்கொண்டுவர இது ஒரு வாய்ப்பாக அமைந்ததை இட்டு மகிழ்வெய்துவோமாக.

 

அரை நூற்றாண்டு காலமேனும் இவ்வுலகில் வாழாது விட்டாலும் சிறந்த அந்த மனிதரின் சாணக்கியத்தையும் சால்புகளையும் சிறப்பு அதிதியின் இந்தச் சிற்றுரையில் சிலை வடித்துக் கூறமுடியுமா என்றால் முடியாதுதான். தரையில் நடந்துவரத் தடுமாறித் தவித்த நான் இன்று காலை வரை வைத்தியசாலையில் வைத்தியம் பெற்று வந்த நான் இப்பொழுது உங்கள் முன் நிற்கின்றேன் என்றால் வன்னியசிங்கத்தின் வரலாற்றில் இருந்து சில வரவுகளைத் தருவிக்க நல்லதொரு சந்தர்ப்பம் இது என்று நான் நம்பியதாலேயே என்று கூறலாம். சுருக்கமாக என் கருத்துக்களை எடுத்தியம்பலாம் என்று எதிர்பார்க்கின்றேன். இலங்கைத் தமிழரசுக்கட்சியை நிறுவிய மூவரில் ஒருவரே ஐம்பத்து ஐந்து வருடங்களுக்குமுன் காலஞ்சென்ற ஆரம்ப கர்த்தா வன்னியசிங்கம் அவர்கள். தந்தை செல்வாவும், இ.மு.வி.நாகநாதனுமே மற்றைய இருவர். கட்சி, தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து முதன் முதலாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு 1952 ஆம் ஆண்டில் முகங்கொடுத்தபோது வடமாகாணத்தில் வெற்றி கண்ட உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்களே. கட்சியின் தலைவராய் மூன்று தவணைகள் தொடர்ந்து பணியாற்றியவர் அவர். தந்தை செல்வாவின் பேரன்பிற்கு உரியவராக விளங்கியவர்.

 

இன்று எமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் தீர்க்க தரிசன ஆற்றல் உடையவராக அன்று திகழ்ந்தார் அவர். இராணுவ அச்சுறுத்தல்கள், பொலிஸ் தாக்குதல்கள் போன்றவற்றின் மத்தியில் கறுப்புக் கொடிப் போராட்டம் அஹிம்சை வழியில் மிகவும் கட்டுப்பாடாக நடந்தேறிய காலம் அது. அவ்வாறான போராட்டம் இந்நாட்டின் தமிழ் மக்களுக்கு உள்ள, உகந்த ஒரேயொரு உரிமைப் போராட்ட வழி என்றும் மாற்று வழி எதுவும் இல்லவே இல்லை என்றும் திரு.வன்னியசிங்கம் அவர்கள் தெளிவாக எம் மக்களுக்கு உணர்த்தியிருந்தார். அக்கால கட்டத்தில் வன்னியசிங்கத்திற்கும் அவரின் மூத்த மகள் ஹேமாவதிக்கும் இடையில் நடந்த ஒரு சம்பாஷணை அவரின் தீர்க்க தரிசனக் கருத்தை வெளியிடுவதாக அமைந்துள்ளது. மகள் தகப்பனாரிடம் கேட்டார் “………… சும்மா போனால் பொலிஸ்தான் பிடிக்கும். நாங்கள் ஏன் ஒரு அமைப்பைத் தொடங்கக் கூடாது, அவை அடிச்சால் திருப்பி அடிக்க?" அதற்குத் தகப்பனார் வன்னியசிங்கத்தின் பதில் இதுதான் - “அவர்கள் மிகப் பெரும்பான்மையினர். தவிர பொலிஸ், ஆமி எல்லாம் அவையின் கையில். இதுதான் சாட்டென்று எங்கடை இனத்தையே அழிக்கப் பார்பினம்”! அவர் அன்று கூறிய சொற்களின் முழுத் தாற்பரியத்தையும் ஆயுதப் போராட்டம் சுமந்து வந்துள்ள இன்றைய பேரழிவுச் சோகம் எமக்கு உணர்த்துகின்றது. எந்தப் போராட்டத்தையும் உணர்ச்சி வழியில் நடத்திச் செல்வது உசிதமில்லை. சாத்தியமா என்று யதார்த்தத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பது எமது தலைவர்கள் கடமையாகின்றது.

 

அந்த வகையில் திரு.வன்னியசிங்கம் ஒரு வரலாற்றுத் தலைவர். அன்று அவர் தம் மக்களுக்குக் கூறிய வார்த்தைகள் எல்லாக் காலத்திற்கும் பொருந்திய வார்த்தைகளாக அமைந்துள்ளன. எதிர்காலம் பற்றிய தீர்க்க தரிசனக் குறைபாடு எமது சமூகத்தில் இன்றும் உறைந்து போயுள்ளது என்று யாராவது கூறினால் நீங்கள் அதை ஏற்பீர்களோ தெரியாது. ஆனால் உண்மை அதுதான். பொறுமையின்மையும் வலோத்கார மனோ பாவமும் விஞ்சிய உணர்ச்சி மேலீடும் எம்மை அழிவு வழியில் இட்டுச் செல்வன என்பதை அன்று அந்தப் பெருமகனார் உணர்ந்திருந்தார். ஆனால் அவர் போராட்டம் வேண்டாமென்று வாளாதிருக்கவில்லை. குறுக்கு வழிகளில் அதிகாரம் உள்ளவர்களுடன் பேசி சுய ஆதாயம் பெறவில்லை. ஆன்மீக அடிப்படையில் அஹிம்சா முறையில் ஆட்சியாளர் மனங்களைத் தணிய வைத்து “நீங்களும் வாழுங்கள். எம்மையும் வாழவிடுங்கள்” என்ற தத்துவத்தை அவர்களிடையே பரப்பவே நடவடிக்கைகளில் இறங்கினார். இன்றைய கால கட்டத்திற்கு அவர் போன்ற ஒரு தலைவர் எம்மிடையே வளர வேண்டும். வாழ வேண்டும். தம்பி மாவை அத்தகைய தலைவராகத் தரமுயர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அவருக்கு ஒரு பக்கபலமாக எமக்கான சார்புச் சிந்தனைகள் வெளிநாடுகள் பலவற்றில் வேரோடி இன்று நிற்பதை நாங்கள் கவனிக்க வேண்டும். அவை அவர் பயணத்திற்கு அனுகூலமாக அமைவன.

 

போராட்டங்கள் வெற்றிக்காக மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று எம்மக்கள் எண்ணுவதை நிறுத்த வேண்டும். போராட்டம் ஒன்று வெளிப்பார்வைக்குத் தோல்வியாகத் தென்பட்டாலும் அதன் பின்னணியில் எமக்குச் சார்பான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். 1956இல் தனிச் சிங்களச் சட்டத்தை இயற்றினார் பண்டாரநாயக்கா. தமிழர்தம் எதிர்ப்பின் நிமித்தமே அதே பண்டாரநாயக்கா 1958 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 3ம் திகதி தமிழ் மொழி (விசேட பாவனை) உரிமைகளைச் சட்டமாக்கினார். ஆகவே போராட்டங்களே எமது மனக்கிடக்கைகளையும் மனத்தாக்கங்களையும் மனக்கிலேசங்களையும் உலகத்திற்கு எடுத்தியம்புகின்றன. இன்னுமொரு உதாரணத்தை எடுத்தோமானால் எமது வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வரும் வரையில் தாம் அமைத்துக் கொடுத்த தெருக்கள், கட்டடங்கள் என்ற அடிப்படையில் வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் தங்களையே ஆதரிக்கின்றனர் என்ற எண்ணத்தில் அரசாங்கத்தினர் இருந்தனர். தேர்தல் முடிவுகள் அவர்களை நிலைகுலைய வைத்தன. எமது மனோ நிலையை அவர்களுக்குப் புரிய வைத்தது தேர்தல்.தேர்தல் கூட ஒரு போராட்ட யுக்தியாக அமைந்தது. எனினும் தடைகளை ஏற்படுத்தி எவ்வாறாவது எம் முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதே அரசாங்க நடவடிக்கைகளைத்தான் எமக்கு அவர்கள் தரும் வரப்பிரசாதங்களாகக் கருதி சமயத்திற்குச் சமயம் சகல சாராருக்கும் அது பற்றி எடுத்தியம்பி வருகின்றோம்.

இன்று இந்த நாட்டிற்கு வெளியில் எமது நிலை நன்றாக உணரப்பட்டு வருகின்றது.

 

திரு.வன்னியசிங்கம் கூறிய கூற்றை நாங்கள் இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம். “அவர்கள் பெரும்பான்மையினர்”, “எங்கடை இனத்தையே அழிக்கப் பார்ப்பினம்” என்று அவர் அன்று கூறிய இரு கூற்றுக்களின் உள் அர்த்தத்தைப் பார்த்தோமானால் பெரும் பான்மையினர் என்ற அடிப்படையில் உலகத்தைத் தம் பக்கம் ஈர்த்து எங்கள் இனத்தையே அழிக்கப் பார்ப்பார்கள் என்று அவர் கூறியதாகவும் அர்த்தங் கொள்ளலாம். போரின் இறுதிக் கட்டத்தின் போது நடந்ததென்ன? இலங்கையில் நடப்பது 'பயங்கரவாதம்' என்றார்கள். தமிழர்களுடன் நாங்கள் யுத்தம் புரியவில்லை ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் தான் யுத்தம் புரிகின்றோம். அவர்களை அழிக்க எமக்குதவுங்கள். தமிழர்கள் உரிமைகளை முற்றிலும் கொடுப்போம் என்றார்கள். உலக சமூகமே பெரும்பான்மையினர் கூறியதைச் செவி மடுத்தார்கள். போர் முடிந்தால் சமாதானம் ஏற்படும். தமிழ்ப் பேசும் மக்கள் இழந்த தமது உரித்துக்களைப் பெறுவார்கள் என்று காத்திருந்தது சர்வதேச உலகம். என்ன நடந்தது “எங்கடை இனத்தையே அழிக்கப் பார்ப்பினம்” என்ற அவரின் கூற்று தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

 

உலகத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகள் யாவும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அபிவிருத்தி என்ற போர்வையில் அடக்கு முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் தான் எனக்குக் கடிதம் ஒன்று கிடைத்தது. 13.10.2014 அன்று யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் இணைந்த விசேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளதென்றும் அதற்கான பூர்வாங்கக் கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடத்தப்படும் என்றும் என்னை அதற்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது அரசாங்க அதிபரால். மேதகு ஜனாதிபதி திடீரென்று அப்படியானதொரு அபிவிருத்திக் கூட்டத்திற்கு முடிவெடுத்ததன் காரணம் என்ன? எமக்கு இரண்டு நாள் அவகாசத்தில் பூர்வாங்கக் கூட்டத்தைக் கூட எத்தனிப்பதன் உள்ளர்த்தம் என்ன? இவ்வாறான கூட்டங்கள் முன்னர் நடைபெற்றிருந்தால் - நடைபெற்றுள்ளதாகக் கேள்வி - வட மாகாண சபை வந்ததன் பின்னர் இச் சபையுடன் கலந்தாலோசித்தல்லவா வட மாகாண அபிவிருத்திக் கூட்டம் நடைபெற வேண்டும்? அவரின் கட்சியை எம் மக்கள் நிராகரித்து விட்டார்கள். அப்படி இருக்கையில் தான்தோன்றித்தனமாக அபிவிருத்திக் கூட்டம் ஒன்றினைத் தன் தலைமையின் கீழ் ஆயத்தஞ் செய்து வருவது எதற்காக? தாம் நடத்துங் கூட்டத்திற்கு எம்மைப் பார்வையாளர்களாக அழைப்பதின் மர்மம் என்ன? எந்த மொழியில் நடவடிக்கைகளை நடத்த இருக்கின்றார் ஜனாதிபதி? தான் கற்றிருக்குந் தவழ்த் தமிழிலா அல்லது தன் தாய் மொழியிலா? பல கேள்விகள் பதில் இல்லாமல் இருக்கின்றன.

 

எனினும் நான் என் செயலாளரை இன்று கூட்டத்திற்குச் சென்று வருமாறு கோரியிருந்தேன். ஆனால் இவையாவும் “அவர்கள் பெரும்பான்மையோர்; தவிர பொலிஸ் ஆமி எல்லாம் அவையின்ர கையிலே. இதுதான் சாட்டென்று எங்கடை இனத்தையே அழிக்கப் பார்ப்பினம்” என்ற கோப்பாய்க் கோமகனின் அக்காலக் கூற்றுக்குள் அடங்கவில்லையா? அபிவிருத்தி என்ற போர்வையில் இன அழிப்பு நடைபெற ஆல வட்டம் காட்டப்படுவதாகவே நான் உணர்கின்றேன். நடத்தப்படவிருக்கும் இக் கூட்டத்தின் தாற்பரியம் “நாடு முழுவதும் நமதே. எம் ஆணையின் கீழ்த்தான் நீங்கள் வாழ வேண்டும். உங்கள் தேர்தல் முடிவுகளைக் காட்டி போர் வெற்றியினால் எமக்குக் கிடைத்த உரித்தை நீங்கள் பறித்து விட முடியாது. நாம் பெரும்பான்மையினர். எதுவும் செய்வோம்” என்பதல்லவா? அதே நேரம் வெளியுலகத்திற்குப் “பார்த்தீர்களா! நாங்கள் வடக்கைப் பேணி வரும் பாங்கை?” என்று பகட்டாகக் கேட்டு வைக்கலாம்.கோப்பாய்க் கோமகனின் ஒரு கூற்று எப்பேர்ப்பட்ட மறைந்த அர்த்தங்களைத் தன் வசம் கொண்டுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

 

அடுத்து திரு.வன்னியசிங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையை இங்கு குறிப்பிட வேண்டும். அன்றே அவர் எமது இன விருத்திக்கு இந்தியப் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை இனங் கண்டு கொண்டார். இதை அவர் முதன் முதலில் பகிரங்கமாக 1956 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நான்காவது தேசிய மகாநாட்டில் தலைமைப் பேருரையை நிகழ்த்திய போது கூறி வைத்தார். இன்று அவர் அன்று கூறியதின் தாற்பரியம் விளங்குகின்றது. இந்தியா எச்சரித்ததன் பயனாகவே வடமாகாணத் தேர்தல்கள் நடைபெற்றன. இந்தியா விரலுயர்த்தியதன் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதாக்கக் கொண்டு வர எத்தனித்த பிரேரணை கைவிடப்பட்டது. எம்முள் பலர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்று கூறுகின்றார்கள். ஒற்றையாட்சியின் கீழ் அச்சட்டம் எமக்கு எதுவுமே அளிக்காது என்கின்றார்கள். என்னையும் சேர்த்துத்தான் கூறுகின்றேன். அக் கூற்றுக்களை மறுப்பதற்கில்லை. ஆனால் 13வது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் முற்றாகக் கை வாங்கியிருந்தால் எங்கள் நிலை மிகவும் இக்கட்டான ஒரு கட்டத்திற்குப் போயிருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு இன்னும் வேண்டும் என்று கோருவதே இருப்பதையும் இல்லாதாக்கிவிட்டு இளிப்பதிலும் பார்க்கத் தந்திரோபாயமிக்கது என்பதை எம் மக்கள் உணர வேண்டும். இந்திய உள்ளீட்டால்த்தான் 13 ஆவது திருத்தச் சட்டமேனும் மிஞ்சி இருக்கின்றது என்பதை அவதானிக்க வேண்டும். பண்டா – செல்வா உடன்படிக்கை, டட்லி – செல்வா உடன்படிக்கை, மாவட்ட சபைகள் சட்டம் எல்லாமே காற்றோடு காற்றாகச் சென்று கருகி விட்டன. எமது மாகாண சபை தனித் தனியாக அல்லது சிறு மக்கட் கூட்டங்களுக்குப் பல நன்மைகள் செய்து வருகின்றோம். அரச அடிவருடிகளால் சில சமயங்களில் செய்ய முடியாத பலதையும் நாம் பெற்றுக் கொடுத்து வருகின்றோம். இது எமக்கிருக்கும் அதிகாரத்தின் நிமித்தமே என்பதை எம்மக்கள் மறக்கக் கூடாது. ஆனால் எமக்கிருக்கும் அதிகாரங்கள் மிகச் சொற்பமே, அவற்றையும் கட்டுப்படுத்த அவர்கள் பார்க்கின்றார்கள் என்பதை நாங்கள் மறக்காமல்தான் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்.

 

இங்கு திரு.வன்னியசிங்கம் வலியுறுத்திய மற்றொன்றை மறவாது நான் மக்களுக்கெடுத்துரைக்க வேண்டும். அது தான் தமிழ் மக்களின் ஒற்றுமை. இது பற்றி அவர் கூறிய ஒரு வாசகத்தை உங்களுடன் இத்தருணத்தில் பகிர்ந்து கொள்கின்றேன். 17.04.1956 அன்று திருகோணமலையில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாட்டில் ஆற்றிய தலைமைப் பேருரையில்- (அவர் கூறியதைக் கூறுகின்றேன்) - “தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றுபட்டால்தான் அவர்களுக்கு விமோசனம் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. ஓர் இலட்சியத்தை நாம் அடைய வேண்டும் என்னும் குறிக்கோளை வைத்தே இந்த ஒற்றுமை ஏற்பட வேண்டும். பலர் ஒரு கப்பலில் ஏறிக் கொள்ளலாம். எல்லோரும் கப்பலில் இருக்கின்றார்கள் என்ற அளவில் ஒருவித ஒற்றுமை இருக்கின்றது என்று கூறலாமா? கப்பலில் இருக்கும் மக்கள் கப்பலை வெவ்வேறு திக்குகளில் ஓட்ட முயற்சிக்க, வேறு சிலர் கப்பலில் துவாரங்கள் செய்ய ஆரம்பித்தால் கப்பலின் கதி என்னவாகும்? எல்லோரும் ஒரு துறைமுகத்தை நோக்கிக் கப்பலை ஓட்டுவதென்றும் அதுவரை கப்பலுக்கு வரும் இடையூறுகளில் இருந்து கப்பலைக் காப்பாற்றுவது என்றும் திடவுறுதியுடன் உழைத்தால் கப்பல் பாதுகாப்பாகத் துறைமுகஞ் சேரும். சமீபத்தில் ஆந்திர மாகாணம் ஏற்பட வேண்டும் என்ற இலட்சியத்திற்காக காங்கிரஸ்காரர், கம்னிஸ்ட் கட்சியினர், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியினர் இன்னும் இதர கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆந்திர மாகாணம் வேண்டும் என்று கிளர்ச்சி செய்தனர். அவர்களின் கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியாமல் ஆந்திர மாகாணம் அமைந்தாயிற்று. இந்த இலட்சியத்தை அடைந்ததும் திரும்பவும் கட்சிகளுள் தங்களில் யார் ஆதிக்கத்திற்கு வருவது என்ற போட்டியில் இறங்கியிருக்கின்றார்கள். ஆயினும் ஆந்திர மாகாணம் அமைத்தது அமைத்தது தான்.

 

இந்த நல்ல உதாரணத்தை இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களும் பின்பற்றுவார்களா?” என்று கேட்டார். இன்று எமது மாகாண சபையில் ஒருவித ஒற்றுமையை முடிந்த வரையில் கட்டிக் காத்து வருகின்றோம். அதற்கு எமது சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களுக்கே நாம் நன்றி கூற வேண்டும். ஆனால் சபைக்கு வெளியில் நடப்பவற்றில் நாம் ஒற்றுமையை எதிர் பார்க்க முடியாது. எனினும் முக்கியமான ஒரு விடயத்தில் எம் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முன்னேறலாம் என்று எனக்குப்படுகின்றது. அது தான் இராணுவ உள்ளீடல். பல வழிகளிலும் இராணுவம் வடமாகாணத்தில் நிலை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தனது நிலை கொண்ட தன்மையை நிரந்தரமாக்கவும் முனைந்து வருகின்றது. இதற்கு முற்றுப் புள்ளி போடாவிடில் முடிவில் புற்றீசல்கள் போல் புறமிருந்து புறத்தார் வந்தமர நாம் எமது மாகாணத்தினுள் சிறுபான்மையோர் ஆக்கப்பட்டு விடுவோம். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஓர் இனம் தனது தனித்துவத்தைப் பாதுகாத்து கலாச்சாரப் பாரம்பரியங்களோடு தொடர்ந்து வாழ்வதற்கு அதற்குப் பாரம்பரிய நிலம் தேவை. நிலத்தில் வாழ்வதற்குப் பாரம்பரிய உறவுகள் தேவை. அவ்வாறான எமது வட கிழக்கு மாகாணங்களில் எங்கள் நிலத்தை எவரேனும் பிடுங்கி விட்டால் எமது அடையாளமே தேய்ந்து கரைந்து போகும். இன்று மட்டுமல்ல திரு.வன்னியசிங்கம் அவர்கள் இருந்த காலத்திலும் பாரம்பரிய தமிழ்ப் பேசும் மக்கள் வாழ் நிலப்பகுதியில் திட்டமிட்டு பெரும்பான்மையின குடியேற்றங்களை நிறுவி மண்ணை அபகரித்ததுடன் எமது அரசியற் பலத்தைக் குறைக்கவும் அக்கால அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தச் சதி முயற்சியை எதிர்க்கும் விடயத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏனைய தமிழ்க் கட்சி உறுப்பினர்களையும் விட திரு.வன்னியசிங்கம் அவர்கள் தீவிர கவனமும் கரிசனையுஞ் செலுத்தினார். எனினும் அன்று தொடக்கம் இன்று வரையில் இது தொடர் கதையாகவே இருந்து வந்துள்ளது. அந்தத் தொடர் கதையில் பொறுப்புள்ள, பலமான புதிய கதாபாத்திரந் தான் இராணுவம். இதை எம்மவர் யாவரும் கருத்திற்கு எடுக்க வேண்டும்.

 

இன்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதாவது தமிழர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் நிலம் வாங்கலாம், குடியிருக்கலாம் ஆனால் சிங்களவர் வடகிழக்கில் குடியிருக்கக்கூடாது என்று கூறுவது என்ன நியாயம் என்று கேட்கின்றார்கள். இதைத் தமிழர்கள் சிலரும் - முக்கியமாகக் கொழும்பில் வாழ் தமிழர்கள் சிலரும் - கேட்கின்றார்கள். இதற்குப் பதிலை மிகச் சுருக்கமாகக் கூறுகின்றேன். வன்னியசிங்கம் அவர்கள் போராட்டம் நடத்திய காலத்தில் இருந்த இலங்கை அல்ல இன்றிருப்பது. 1958 இல் தொடங்கிய பல கலவரங்களின் போது தெற்கில் வாழ்ந்து வந்த தமிழர்கள் மிகப் பெருவாரியாக அங்கிருந்து அடித்துத் துரத்தப் பட்டு விட்டார்கள். அங்கிருந்த அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து விட்டார்கள் அங்குள்ளவர்கள். இவ்வாறிருக்க இன்று இராணுவத்தை வடக்கு, கிழக்கில் நிலை நிறுத்தியுள்ளார்கள். இந்தச் சூழலில்த்தான் மேற்படி கேள்வி கேட்கப்படுகிறது. அதாவது தெற்கிலிருந்து தமிழர்களை விரட்டி அடித்து விட்டோம், வடக்கு, கிழக்கில் இருந்து அவர்களை விரட்டி அடிக்கச் சிங்களவர் பெருவாரியாக வந்து இங்கு குடியிருந்தால் என்ன என்று கேட்காமல் தமது கேள்வியை நியாயமான கோரிக்கைபோல் கேட்கின்றார்கள். ஆனால் இக் கேள்வியைக் கேட்போர் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். எம்மவர்கள் தெற்கில் நிலம் வாங்கியது அவர்கள் பணத்தில். எம்மவர்கள் தெற்கில் கடைகள் திறந்தது அவர்கள் ஊதியத்தில். எமது மக்கள் கொழும்பிலும் இதர இடங்களிலும் கல்வியில் சிறந்து விளங்கியது அவர்கள் படிப்பாலும் அவர்கள் விடாமுயற்சியாலும், உழைப்பாலும், கெட்டித்தனத்தாலும். எவரும் எம்மை அங்கு கொண்டு போய் நிறுத்தவில்லை. குடியிருத்தவில்லை. வடகிழக்கில் வேற்றார் வாழ்ந்தால் என்ன என்று தெற்கிலிருந்து கேட்போர் எம்மை அரசாங்கம் காவவேண்டும், குடியிருத்த வேண்டும், இராணுவம் இரட்சிக்க வேண்டும் என்ற மனோ நிலையில் நின்று கேள்வி கேட்பவர்கள். அநுராதபுரத்துடன் சேர்ந்திருந்த மணலாற்றைச் சுற்றிய சில இடங்களை முல்லைத்தீவுடன் சட்டப்படி இணைக்காமலே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியம் அங்கு கொண்டு வந்து குடியிருத்தப்பட்டிருக்கும் மக்களுக்காகச் செலவழிக்கப் படுகிறது. அவர்கள் தாங்களாகத் தம் பணத்தில் வந்தவர்கள் அல்லர். கொண்டுவரப்பட்டவர்கள். குடியேற்றப்பட்டவர்கள். அவர்களை எவ்வாறு தெற்கு சென்ற எமது தமிழ்ப் பேசும் மக்களுடன் ஒப்பிடலாம்?

 

இதைவிட, ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் திரு.கோத்தபாய ராஜபக்‌ஷ அவர்கள் என்னைத் தாக்கி ஒரு செய்தி விட்டிருக்கின்றார். எம்முடன் வடமாகாண முதலமைச்சர் முரண்படுகின்றமையினால் வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அரசாங்கத்தின் செயற்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நகர சபைகள், மாகாணசபைகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். இதனையே ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அவரின் சகோதரர் இங்கு வந்து கூறிவிட்டுச் சென்றார். அதாவது வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் தனது அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறிச் சென்றார்.

 

அவர்களிடையே போட்டி, பொறாமை இருக்கின்றதோ அதை நான் அறியேன். ஆனால் நான் இருவரிடமும் கேட்கும் கேள்வி இதுதான். செயற்திட்டங்களுக்குப் பணம் ஹம்பாந்தோட்டையில் இருந்து வரவில்லை, அல்லது அமெரிக்காவில் இருந்து சகோதரர் இருவரும் இங்கு வந்த போது எடுத்து வரவில்லை. அவை வெளிநாட்டுப் பணம். ஐக்கிய நாடுகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் இருந்து கடன்களைப் பெற்றுள்ளோம். பல்வேறு நாடுகளிடம் இருந்து கொடைகளையும் பெறுகின்றோம். வடக்கு,கிழக்கு மாகாணங்கள் போரினால் பாதிக்கப்பட்டமையை உணர்ந்து, கருத்தில் எடுத்து அவர்கள் எமக்குப் பணம் தந்துள்ளார்கள் அல்லது கடன் தந்துள்ளார்கள். அதைச் செலவு செய்வதும் செயற்திட்;டங்களை நிறைவேற்றுவதும் எம் நாட்டு நிறுவனங்களும் எமது மாகாணசபை அலுவலர்களும். இதனை இரு சகோதரர்களும் எமக்குப் பெற்றுக் கொடுக்காதிருந்தால் நாம் நேரிடையாகக் கோரியும் வெளிநாட்டார் எமக்குப் பணம் தந்திருப்பார்கள்; கடன் வழங்கியிருப்பார்கள். இதில் உங்களுடன் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஏன் கருதுகின்றீர்கள்? உங்களைத்தான் எங்கள் மக்கள் வேண்டாம் என்று விரட்டி விட்டார்களே.

 

ஆகவே செயற்திட்டங்களை எங்களிடம் கையளித்துவிட்டு நீங்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றலாமே! நாங்கள் ஏன் உங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்? போரில் நீங்கள் வென்றபடியாலா அல்லது முழு இலங்கைத் தேர்தலில் உங்கள் கட்சி வென்றபடியாலா? ஆனால் உங்கள் கட்சி வடமாகாணத்தில் எத்தருணத்திலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே. ஆகவே அன்பார்ந்த சகோதரர் கோத்தபாயவிடம் நான் கேட்பது செயற்திட்டங்களை எங்களைச் செய்ய விடுங்கள். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என்று. சகோதரர் பஸில் அவர்களுக்கு நான் கூறுவது உங்களை விட எங்களால் செயற்திட்டங்களை ஊழல் இன்றி, ஊறு இன்றி, உண்மையாக நடைமுறைப்படுத்த முடியும். ஆதலால் அவற்றை எங்களுக்கு வழங்குங்கள் என்று. அதே கூட்டத்தில் தன்னைப் போல் என்னையும் அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்களிடம் இருந்து பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மற்றுமொருவர் - அதாவது கொழும்பு நகர பிதா சகோதரர் முஸாமில் அவர்கள் என்னைக் கேட்டிருக்கின்றார். கொழும்பு புதுக்கடையில் அதாவது ஹல்ஸ்டோபில் நான் பிறந்தபடியால் எனக்கு பண்டமாற்று, வணிக, வாணிப அரசியல் பற்றி நன்றாகத் தெரியும். வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வாணிப அடிப்படையில் அரசியல் செய்ய முன் வந்தவர்கள் அல்லர். அப்படியிருந்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அண்மைக் காலத்தில் சென்ற வழியில் எமது கட்சியும் சென்றிருக்கும். நாங்கள் அபிவிருத்தி என்ற மாயையை விட எங்கள் பிறப்போடு ஒட்டிய பிறப்புரிமையை வென்றெடுக்க விழைபவர்கள் என்பதை என் முஸ்லிம் சகோதரர் தம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 

எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாகப் பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என்பதை சகோதரருக்குக் கூறி வைக்கின்றேன். எங்களுடைய ஒத்த கருத்துடைய ஒரு முஸ்லீம் கட்சி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எங்களுடன் தோளோடு தோள் நின்று இன்று முன்னேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவர்களும் வணிக, வாணிப அரசியலை ஒதுக்கிவிட்டு நல்லாட்சிக்கான நடைபாதையில் எம்மோடு நடந்துவர நலமான நடவடிக்கைகளில் இறங்கியவர்கள்.

 

 

இறுதியாக கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கம் அவர்கள் எமக்குணர்த்திச் சென்ற விடயங்களாகச் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். அதை “வன்னியனார் போராட்டங்கள் - விளைவுகள்” என்ற கண்ணோட்டக் கட்டுரையில் இருந்து எடுத்து வழங்குகின்றேன். அவர் எமக்கு இன்று அறிவுரை வழங்குவாரெனில் பின்வருவனவற்றை எமக்குரைப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம் - "தமிழ் மொழியையும் தமிழர்தம் மண்ணையுங் கண்ணெனப் போற்றி வாருங்கள். காந்தியின் சாத்வீக வழியில் நின்று விடுதலைக்காகக் போராடுங்கள். போராடுந் தலைவர்கள் தியாகிகளாக, ஒழுக்கசீலர்களாக, உறவுகளை இம்மியும் வருத்தாதவர்களாக, கைசுத்தமானவர்களாக, காமம், கப்பம், களவு, கொலை, கற்பழிப்பை வெறுப்பவர்களாக, தமது சொந்த குடும்ப ஆடம்பரங்களை மறுப்பவர்களாக, கடும் உழைப்பாளிகளாக, மனித நேயம் மிக்கவர்களாக, அறிஞர்களாக, நாடாளுமன்றத்தில் பயமின்றி வித்துவத்துடன் விவாதிக்க வல்லவர்களாக, சிந்தனையாளர்களாக, சாணக்கியர்களாக இருக்க வேண்டும்".! அதுவே அவர் எம்மிடம் எதிர்பார்த்தவை! ஏற்றுக் கொள்வீர்களா எனதருமைச் சகோதர சகோதரிகளே! - என்றார்.

 malarum.com

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப பெரிய பதிலடி.

 

ஆனால் இந்தியாவை பற்றிய ஐயாவின் கற்பிதம்.. கொஞ்சம் ஓவர்.

 

இதே இந்தியா 1987 இல் நல்லதொரு வாய்ப்பைப் பெற்றிருந்தும் கூட தமிழர்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய மறுத்தது என்பதையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்..! இதே இந்தியா தான் யாழ் குடாநாட்டில் 2002 இல் 40,000 சிங்களவர்களை மீட்க படை தயார் செய்தது. அதே இந்தியா தான் முள்ளிவாய்க்காலில் 40,000 மக்களை படுகொலை செய்யவும் காரணமாக இருந்தது..!!!!

 

கோப்பாய் கோமகன்.. வன்னியசிங்கம் போன்ற தலைவர்களின் கருத்துக்கள் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய கருத்துக்களாக இருந்திருக்கிறது. அப்படி இருந்தும்.. இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இதே தமிழரசுக் கட்சியினர் தான்.. பின்னர் முன் கொண்டு வந்தனர்.

 

குறிப்பாக யோகேஸ்வரன் போன்றவர்கள் 5000 இளைஞர்களை தாருங்கள்.. நான் தமிழீழம் மீட்டுத் தருகிறேன் என்று அன்று அழைப்பு விடுத்ததை மறக்கக் கூடாது. தீர்க்க தரிசனம் என்பதற்கும் ஒரு கால எல்லை உண்டு. கால அளவு நீட்டல் அடையும் போது மாறும் சூழலுக்கு ஏற்ப தீர்க்க தரிசனங்கள் மாறியாக வேண்டும்.

 

ஒரு காலத்தில் சீனாவோடு போர் செய்த இந்தியா இன்று 20 பில்லியன் அபிவிருத்தி திட்டத்தை அதனிடம் இருந்து பெறுகிறது. பிராந்தியத்தில்.. பொருண்மிய சூழல் மாறி உள்ளது. அது தொடர்பாக ராஜீய உறவுகள் தொடர்பான கொள்கைகளும் மாற்றம் கண்டுள்ளன. ஆனாலும்.. இராணுவ வலு என்பது தான் எல்லாத்தையும் தீர்மானிப்பதாக உள்ளது. அந்த வகையில்...  இந்தியாவை மட்டும் நம்பி தமிழர்கள் பிராந்தியத்தின் பொருண்மிய.. ராஜீய நகர்வுகளில் செல்வாக்குச் செய்ய முடியாது. சீனாவோடும்... ஒட்ட வேண்டி வரலாம். மேற்குலகோடும் இந்தியாவை விட நெருங்க வேண்டி வரலாம். பழைய தீர்க்க தரிசனத்தோடு புதிய சூழலை எதிர்கொள்ள  முடியாது..! மாற்றங்கள் அவசியம்..!

 

30 வருட கால ஆயுதப் போராட்ட சூழல் வேறு.. இன்றுள்ள உலக.. பிராந்திய சூழல் வேறு. வன்னிய சிங்கம்.. கோமகன் காலச் சூழல் வேறு. சில கோட்பாடுகள் எப்போதும் பொருந்துவது போல இருந்தாலும்.. நுட்பமான வேறுபாடுகளை அங்கு இனங்காணத் தவறுவது கூட சிங்கள பேரினவாத எதிரிகளுக்கு சாதகமாகவே அமையும்..!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப பெரிய பதிலடி.

------

30 வருட கால ஆயுதப் போராட்ட சூழல் வேறு.. இன்றுள்ள உலக.. பிராந்திய சூழல் வேறு. வன்னிய சிங்கம்.. கோமகன் காலச் சூழல் வேறு. சில கோட்பாடுகள் எப்போதும் பொருந்துவது போல இருந்தாலும்.. நுட்பமான வேறுபாடுகளை அங்கு இனங்காணத் தவறுவது கூட சிங்கள பேரினவாத எதிரிகளுக்கு சாதகமாகவே அமையும்..!! :icon_idea::)

 

இவர்கள் மனமிருந்தால்.....

அனந்தி சசிதரன் போல்.... துணிந்து, களமிறங்கலாம்.

ஆனால்... அறிக்கை, விட்டே.... வாழ்வை தொலைச்ச இனம், தமிழினம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.