Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்ணீரிலே தாமரைப் பூ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இறைவன் எனும் மாகலைஞன்

எழுதுகின்ற கவிதை இது

பூச்சொரிவின் மென்மையினால்

பூரித்த பூமியிது

வசந்தம் துகிலுரியும்

வனப்பான காட்சிகளால்

இலையுதிரின் ஆரம்பம்

எத்திசையும் ஆனந்தம்'

 

வசந்தத்தின் வர்ணனை அழகாக உள்ளது...!

 

இந்தக் கதை முழுவதையும்.. இந்த வார விடுமுறைக்குள் ஒரே மூச்சில் வாசிக்கும் எண்ணத்துடன் இருக்கிறேன்!

 

அதன் பின்னர் விரிவாகக் கருத்திடலாம் என்று எண்ணம்!

 

நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள், காவலூரின் கண்மணி!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அக்கா. கதையுடன் ஆவலாகத் தொடர்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் தளராத ஊக்குவிப்புக்கு நன்றிகள். கதையை முழுவதுமாக வாசித்தபின் உங்கள் முழுமையான கருத்தை கேட்க ஆவலாய் உள்ளேன். என் ஆக்கங்களை உடனுக்குடன் படித்து கருத்தெழுதி ஊக்குவிக்கும் சுமேக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

              (22)

 

'வாழத் துடித்திட்ட
வண்ணப் பறவையது
மீளத் தன் சிறகை
மெல்லச் சுருக்கியது'

 

அன்று காலை இதமான காலநிலை. அறையை விட்டு வெளியே வந்து பூ மரங்களைப் பார்த்தாடி நின்றாள் கல்யாணி.
'இண்டைக்கு போற காரியம் உருப்பட்ட மாதிரத்தான். யார் இந்த முழுவியழத்துக்கு ஆகாததுகளை முன்னுக்கு வந்து நிற்கச் சொன்னது'
யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.
கடைசியில் என் நிலமை இப்படி ஆகிவிட்டதே.
வெளிநாட்டுக்கு வந்து விட்டால் ராணிபோல வாழ்வு என்று கண்ட கனவு கை நழுவிப் போக மனது என்னென்னவோ நினைவுகளைக் கடந்து தன் சிறு பிராயத்து நினைவுகள் நிழற்படங்களாய் உள்ளுக்குள் ஓடத் தொடங்கியது.
மற்றொருநாள் அறைக்கதவின் நிலையைப் பிடித்தபடி கல்யாணி நின்றிருந்தாள். அதைக் கவனித்த சங்கர் கவனிக்காதவன் போல் கதவை இழுத்துப் பூட்டினான். கல்யாணியின் கை விரல்கள் கதவுக்கும் நிலைக்கும் இடையில் அகப்பட்டு நசுங்கிப்போனது.
கல்யாணி துடித்துப் போனாள்.
சங்கரோ செருக்கான பார்வையுடன் அவ்விடத்தை விட்டகன்றான்.
விரல் நகக்கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் விரல்கள் வீங்கி இருந்தன.
'அம்மா ஏனம்மா கைவிரல்கள் வீங்கி இருக்கு'
ராகவி கேட்கவும்,
'அதுக்கு விசர் எங்காவது ஓடித்திரிந்து கையில காயம் பட்டிருக்கும்'
ராகவியால் எதுவும் பேச முடியவில்லை.
கணவனது வக்கிரமான எண்ணங்களும் செயல்களும் ராகவிக்கு ஓரளவு தெரிந்தாலும் அவனுடன் சண்டைபோட அவளுக்கு விருப்பமில்லை.
கல்யாணிக்கு உணவுகூட சரியாகக் கொடுப்பதில்லை. ராகவி வைக்கும் உணவை சில நாட்களில் சங்கர் எடுத்து குப்பைக் கூடைக்குள் போட்டு விடுவான். பசியைக்கூட உணர முடியாத பரிதாப நிலைக்கு கல்யாணி நிர்ப்பந்திக்கப் பட்டாள்.
ராகவியும் எவ்வளவோ பொறுமையுடன் கணவனையும் தாயையும் குழந்தையையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்தாள்.
இப்பொழுதெல்லாம் கல்யாணிக்கு தான் இரக்குமிடம், சூழ்நிலை அனைத்தும் மறந்து போயிற்று.
இரவிலெல்லாம் மாத்திரை எடுத்தும் தூக்கம் வராமல் தவித்தாள்.
'இந்தப் பேய் ஏன் இரவில அலைந்து திரியுது'
பழி வாங்கும் எண்ணம் நெஞ்சில் நிறைந்தவனாய் சங்கர் வேண்டிய மட்டும் வேதனை கொடுத்தான்.

      

              (23)

 

'மற்றவர்களுக்காக வாழ்ந்து
உன் வாழ்நாள்
முடிந்து போகிறது
நீ உனக்காக வாழ
ஆரம்பிப்பது எப்போது?'

 

'கணேசுக்கு சாப்பாடு எடுத்து வைக்க வேணும்' என்று கோப்பையில் சாப்பாடு போட்டு வைத்து அது மாலை வரை காய்ந்து கிடக்கும்.
அடிக்கடி வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பறிப்பது போல பூந்தோடட்டத்தில் பூக்கள் இலைகள் எல்லாம் பிய்த்து வைத்தாள்.
போன் எடுத்து ரவியுடன் பேசுகிறேன் என்று யார்யாரிடம் எல்லாமோ பேசினாள்.
ராதாவும் ரவியும் ராகவியும் பாடசாலையால் வரப் போகிறார்கள் என்று தேநிர் தயாரித்து வைத்தாள்.
ராகவியும் எப்படி எப்படி எல்லாமோ சொல்லிப் பார்த்தாள்.
சொல்லும் போது அமைதியாகக் கேட்கும் கல்யாணி மறுநிமிடமே மறந்து போனாள்.
மனம் பொறுக்காமல் ராகவி ரவியிடம் அம்மாவின் நிலையை எடுத்துச் சொன்னாள்.
ரவியும் விடுமுறை எடுத்து தாயைப் பார்க்க ஓடி வந்தான்.
'அம்மா உங்களுக்கு என்னம்மா கவலை'
'பிள்ளைகள் எல்லோரும் நல்லாத்தானே இருக்கிறம்'
'நீங்க படாத கஸ்ரமா? இப்ப எல்லாம் நிறைவாத்தானே அம்மா இருக்கு'
'ஏனம்மா வீணா யோசிக்கிறீங்க'
இப்படி எத்தனையோ தன் மனதிலுள்ள ஆதங்கங்களை எல்லாம் வார்த்தைகளில் கொட்டினான் ரவி.
எல்லாவற்றையும் அமைதியாகத்தான் கேட்கிறாள் கல்யாணி.
ஆனாலும் பார்வையில் தெளிவின்மை.
வெறுமையை வெறித்தபடி எப்பொழுதும் சிந்தனை வசப்பட்டவளாய்.
ரவி கல்யாணியை டொக்ரரிடம் அழைத்துச் சென்றான்.
டொக்ரர் கல்யாணியை முழுவதுமாக பரிசீலனை செய்தார்.
எல்லா பெறுபேறுகளையும் செக் பண்ணிய டொக்ரருக்கு கல்யாணியின் நோயின் தன்மை விளங்கியது.
மனப்பிறழ்வு என்னும் அல்சைமர் நோய்.
'ரவி அம்மாவை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்க. தனிமையாக இருக்க விடாமல் நல்ல சத்தான உணவு கொடுங்க.
மருந்துகள் நேரத்துக்கு பார்த்து கவனித்து கொடுங்க.
இரவில நித்திரைக்கு மருந்து தாறன்.
கவனித்து மருந்தை கொடுங்க'
'ஏதாவது பாட்டு கேட்கக்கூடியதாக அல்லது ரிவியில படம் பார்க்கக் கூடியதாக ஒழுங்கு செய்து தனிமை உணர்வை குறைக்கலாம்.'
இப்பிடி எத்தனையோ அறிவுரைகள் கூறி அனுப்பினார்.
ரவி மனதுக்குள் அழுதான்.
இதைவிட அம்மா ஊரில இருந்திருந்தால் இத்தனை பாதிப்பு வந்திருக்காதோ? ரவி கவலைப்படக் காரணம் இருந்தது.
வீட்டில் நடந்து கொண்டிருக்கும் விடயமெல்லாம் ரவி அரசல் புரசலாக அறிந்தே இருந்தான்.
ரவி ஓய்வுநாள் முடிந்ததும் தன் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலையில் தன் அன்னையை மிகுந்த வேதனையுடன் பிரிந்து சென்றான்.
ஆனால் சங்கரோ கல்யாணியை எதிரியாகத்தான் பார்த்தான்.

           (24)

 

'என்னைச்  சுற்றி எல்லாம்
அழகாக இருந்தாலும்
அழுகின்றேன் நான் இங்கு
அனைத்தையும் நீ இன்றி
நான் மட்டும் ரசிப்பதால்'

 

விடிந்தால் தீபாவளி. ராகவி வீட்டைச் சுத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். கல்யாணிக்கு தண்ணீர் குடிக்க வேணும் போல் இருந்ததால் சமையலறையை நோக்கி போனாள்;. சமையலறை நிலம் ஈரமாக இருந்தது. கல்யாணி போவதைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கர் கவனிக்காதவன் போல் ரிவி பார்ப்பதில் அக்கறையாக இருந்தான்.
ஈரமான நிலத்தில் கால் வைத்த கல்யாணியின் கால்கள் சறுக்கியதால் கைகள் கதவில் அடிபட்டன. காலிலும் உரசல் காயம் ஏற்பட்டது. நல்ல வேளையாக பக்கத்திலிருந்த கதவைப் பிடித்ததால் தலையில் அடிபடவில்லை.
மேலே குளியலறைக்குள் நின்ற ராகவிக்கு கல்யாணி விழுந்தது தெரியாது.
நோவுடன் மெல்ல எழுந்த கல்யாணி 'கணேஸ் நான் வழுக்கி விழுந்திற்றன். எனக்கு மருந்து போட்டு விடுங்க' என்று தன் கணவன் உயிருடன் இருப்பதாக நினைத்து உரக்க அழைத்தாள்.
'ஏய் கிழவி, உனக்கு இப்ப உன்ர புருசன் வந்து மருந்து போட வேணுமா? கிழவிக்கு ஆசையைப் பாரு' சங்கர் கை கொட்டிச் சிரித்தான்.
கல்யாணி மலங்க மலங்க விழித்தாள்.
இப்பொழுதெல்லாம் சங்கர் கல்யாணிக்கு வைத்திருக்கும் பெயர் 'லூசு'
'இந்த லூசு எங்க காணஇல்லை'
'இந்த லூசு இல்லாட்டி பேஸ்மென்ர வாடகைக்கு கொடுத்து காசு வாங்கலாம்'
இத்தனைக்கும் கல்யாணிக்கு கிடைக்கும் முதியோருக்கான உதவிப் பணம் அவர்களுக்குத்தான் போய்ச் சேருகிறது.
கண்ணில் காணும் நேரமெல்லாம் ஒரு எதிரியைப் போலவே கல்யாணியை நினைக்கவும் நடத்தவும் சங்கர் முற்பட்டான்.
ராகவி அடிக்கடி ரவியிடமும் ராதாவிடமும் கல்யாணியின் நிலை பற்றி தெரியப்படுத்துவாள்.
ராதாவும் ஒருமுறை வந்து கல்யாணியைப் பார்த்து விட்டுப் போனாள்.
ரவியும் பாவம் என்ன செய்வான். எத்தனை முயற்சி எமுத்தும் மனைவி மாலதியோ மாமியாரைப் பொறுப்பெடுக்கத் தயாராக இல்லை.
தாயுமாய் தந்தையுமாய் தம்மை வளர்த்த அன்னையின் நிலை எண்ணி பிள்ளைகள் வேதனைப் படத்தான் செய்தனர்.
கூலி வேலை செய்து தன் உடலை வருத்தி உணர்வுகளை ஒடுக்கி பிள்ளைகளே உலகமென்று வாழ்ந்த இந்த தாய்க்கு இந்தக் கதியா?

 

              (25)

 

'தினம் தினம் வருவாய்
மனதினில் மலர்வாய்
தேடியே நான் இளைத்தேன்
நிஜம் இது என்று
வரம் பெற வந்தேன்
நீ எனை ஏன் மறந்தாய்'

 

இப்பொழுது கல்யாணி இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,மூட்டு வாதம், என்ற பல நோய்களாலும் அவதிப்பட்டாள். தினமும் மூன்று வேளையும் மாத்திரைகள் எடுக்க வேணும். உணவுக் கட்டுப்பாடும் கடுமையாகக் கடைப்பிடிக்கும்படி வைத்தியர் ஆலோசனை சொன்னார்.
கல்யாணிக்கு தன்னிலேயே தனக்கு வெறுப்பு ஏற்படும் நிலை உருவாகியது.
ராகவியும் மீண்டும் கர்ப்பமாகி இருந்தாள்.
எனவே வைத்தியரின் ஆலோசனையுடன் பிள்ளைகள் மூவரும் தீர்மானித்து கல்யாணியை முதியோர் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்தனர்.
இப்பொழுது கல்யாணி அங்குள்ளவர்களுடன் ஓரளவு அமைதியாகப் பழகினாள்.
நண்பிகளுடன் பொழுது போக்கினாள்.
ஆனாலும் மனப் பிறழ்விலிருந்து முற்றாக விடுபட முடியாவிட்டாலும் சங்கரின் குத்தல் பேச்சுக்களிலிருந்தும் கொடுமைகளிலுpருந்தும் பாதுகாக்கப்பட்டிருந்தாள்.
சங்கர் 'சனியன் துலைஞ்சுது' என்று சந்தோசமாகச் சொல்லும் போதெல்லாம் ராகவி உள்ளுக்குள் அழுதாள்.
'சரி இந்தளவுக்கு அம்மா அமைதியாக இருப்பதே போதும்' இப்படி அடிக்கடி நினைத்து மனதைத் தேற்றிக் கொள்வாள்.
சங்கரால் குடிப்பழக்கத்திலிருந்து முற்றாக விடுபட முடியவில்லை.
இப்பொழுதல்லாம் குடித்தால் வாய்ச்சண்டையுடன் நிறுத்தி விடுவதால் ராகவியும் பொறுமையுடன் இருந்தாள்.
நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி விரைந்து சென்றன.
ராகவிக்கும் குழந்தை பிறப்பதற்கான காலம் அண்மித்து விட்டது.
முன்பெல்லாம் அருணைக் கவனிப்பது கல்யாணிதான்.
இப்பொழுது அருணைக் கவனிக்கவும் வீட்டில் யாருமில்லாததால்
ராகவி தனது நண்பியின் உதவியை நாடி இருந்தாள்.
கல்யாணியின் உடல் நிலையும் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே சென்றது.
இப்பொழுதெல்லாம் கல்யாணியால் எழுந்து நடக்க முடியவில்லை. யாருடைய உதவியுமின்றி தானாகவே தனது தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாதபடி உடல் பெலவீனமடைந்திருந்தது.
முதியோர் பராமரிப்பு நிலையத்தில் கவனிப்பிற்கு குறையில்லா விட்டாலும் தனது வீடு, தனது பிள்ளைகள், தனது உறவுகள் என்று இருந்த அந்தத் தாயால் நான்கு சுவர்களுக்குள் அத்தனை வசதிகளும் இருந்தாலும் வெறுமைதான் மிஞ்சியது.
தன் சிறு பிராயத்து நினைவுகளும் பாடசாலை நாட்களும் பெற்றவருடன் தான் வாழ்ந்த அந்த இனிமையான நாட்களும் இளமைப் பருவ நினைவகளும் மட்டுமே அவளது நினைவில் நிரந்தரமாக குடிகொண்டது.
இப்பொழுது தான் இருக்குமிடம், தனது வாழ்க்கை முறை,
எதுவுமே அவளால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.
வெறுமையான அறைக்குள் தன் பக்கத்து வீட்டுத் தோழி நிற்பதாக நினைத்து கற்பனையில் கதைப்பாள்.
தான் திருமண வீட்டிற்கோ அல்லது மரண வீட்டிற்கோ செல்ல வேண்டுமென்ற ஆதங்கத்துடன் உடை மாற்ற முயற்சி செய்வாள்.
தன் கணவனுக்கு உணவு சமைக்க நேரமாகிவிட்டதாக எண்ணி ஏக்கம் கொள்வாள்.
பிள்ளைகள் விளையாடப் போய் இன்னும் திரும்பி வரவில்லை என்ற தேடலுடன் காத்திருப்பாள்.
சில இரவுகளில் பயங்கரமான கனவு கண்டு அலறுவாள்.
அவளது உலகம் அவள் ஆழ்மனதுக்குள் அமிழ்ந்து போய்
நிழல்களெல்லாம் நிஜங்களாய்...

 

                     (26)

 

'மென்மையான உணர்வுகளை
நசுக்கிச் சிதைத்து
குத்திக் காயப்படுத்தி
அந்த வலி தீருமுன்
மீண்டும் மீண்டும்....'

 

பிரசவ வலி ஏற்பட்ட ராகவியை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
ராகவியைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இருக்கும் நிலை சரியில்லை என்றும் அதனால் உடனடியாக சத்திர சிகிச்சை செய்து பிள்ளையை எடுக்க வேண்டுமென்றும் கூறி விட்டனர்.
சத்திர சிகிச்சை முடிந்ததும் ராகவியை மட்டும் பார்க்க அனுமதித்தனர். குழந்தையை விசேட பராமரிப்பு அறையில் வைத்து கவனித்தனர்.
குழந்தைக்கு குறைபாடு உள்ளதாகக் கூறினர். எப்படி? என்ன குறை? என்று எல்லாம் ஒன்றும் கூறவில்லை.
மூன்று மாதங்கள் குழந்தை வைத்தியசாலையிலேயே இருந்தது. தினமும் சங்கர் ராகவியுடன் போய் பிள்ளையை பார்த்து வந்தான்.
ஆண் குழந்தை.
ஆனால் அந்தக் குழந்தையால் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடக்க முடியாது. ஓடி விளையாட முடியாது. மூளை வளர்ச்சி கூட முழுதாக இருக்க வாய்ப்பில்லை என்று அறிந்த சங்கரும் ராகவியும் உடைந்து போயினர்.
'லூசு' என்று தன் மாமியாரை ஏளனம் செய்தது அவன் எண்ணத்தில் வந்து அவனைப் பார்த்து நகைத்தது.
'ஜயையோ, மற்றவர்கள் என் பிள்ளையை அப்படி அழைத்தால் என்னால் தாங்க முடியுமா' என ஒரு கணம் எண்ணிய சங்கரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
சங்கர் உள்ளுக்குள் உடைந்து போனான்.
ராகவியின் நிலை சொல்லத் தேவையில்லை.
'ராகவி என்னை மன்னித்து விடு' என்று வாய் விட்டு சொல்லி அழ
அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை.
தனிமையில் அழுதான்.
குழந்தை வீட்டிற்கு வந்தது.
விசேட உபகரணங்கள். விசேட கவனிப்பு.
எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் தீருகின்ற சோகமா இது.

            (27)


'தென்றலாய் வீசிடுவாள்
தினந் தோறும் மலர்ந்திடுவாள்
திங்களாய் வலம் வருவாள்
தினகரனாய் ஒளிதருவாள்'

விழிமலர் திறந்து குறுகுறு என்று பார்க்கும் குழந்தையின் அழகை பார்த்து ரசித்தான்.
வளர்ச்சி குன்றிய கைகளையும் கால்களையும் மெதுவாக நீவி விட்டான்.
தன் குடிதான் தன் குழந்தையின் இந்தநிலைக்குக் காரணமாக இருக்கலாம் என் எண்ணி மனம் நொந்தான்.
சங்கரின் ஈகோ ஒருநாள் உடைந்தது.
ராகவியை அணைத்தபடி மனம் விட்டு அழுதான்.
அடுத்த நாளே முதியோர் இல்லத்திற்கு சென்றனர்.
வைத்தியர் மூலம் தேவையான விளக்கங்கள் பெற்று கலல்யாணியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
'அம்மா இனி நீங்களும் எங்களுக்கு ஒரு குழந்தை'
அணைத்து ஆதரவாக கல்யாணிக்குத் தேலையான வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தனர்.
கல்யாணியின் கண்களில் கொப்பளித்த சந்தோசத்தைப் பார்த்த சங்கரும் ராகவியும் மகிழ்ந்தனர்.
'ராகவி இனி எங்களுக்கு இரண்டு பிள்ளைகளில்லை. மூன்று பிள்ளைகள்' என்று சங்கர் கூறவும் ராகவி மனதுக்குள் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.
வசந்ததாலம் பிறந்தது.
வகைவகையான பூக்கள் பூத்துக் குலுங்கின.
மாலை நேரங்களில் தம் இரு குழந்தைகளுடன் கல்யாணியையும் சக்கர நாற்காலியில் வைத்து பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர்.
அண்ணா அருண்; ஊஞ்சல் ஆடுவதையும் விளையாடுவதையும் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்கும் சின்னப்பயல் அஜந் அம்மம்மாவைப் பார்த்து பொக்கை வாயால் சிரிக்கிறான்.
தென்றலின் தாலாட்டில் பூங்காவின் மரங்கள் பூச்சொரிந்து வாழ்த்தின.

 

முற்றும்.

( இக்கதை கற்பனையல்ல.... )

 

 

Edited by Kavallur Kanmani

  • 2 weeks later...

தனது வீடு, தனது பிள்ளைகள், தனது உறவுகள் என்று இருந்த அந்தத் தாயால் நான்கு சுவர்களுக்குள் அத்தனை வசதிகளும் இருந்தாலும் வெறுமைதான் மிஞ்சியது.

தன் சிறு பிராயத்து நினைவுகளும் பாடசாலை நாட்களும் பெற்றவருடன் தான் வாழ்ந்த அந்த இனிமையான நாட்களும் இளமைப் பருவ நினைவகளும் மட்டுமே அவளது நினைவில் நிரந்தரமாக குடிகொண்டது.

இப்பொழுது தான் இருக்குமிடம், தனது வாழ்க்கை முறை,

எதுவுமே அவளால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

வெறுமையான அறைக்குள் தன் பக்கத்து வீட்டுத் தோழி நிற்பதாக நினைத்து கற்பனையில் கதைப்பாள்.

தான் திருமண வீட்டிற்கோ அல்லது மரண வீட்டிற்கோ செல்ல வேண்டுமென்ற ஆதங்கத்துடன் உடை மாற்ற முயற்சி செய்வாள்.

தன் கணவனுக்கு உணவு சமைக்க நேரமாகிவிட்டதாக எண்ணி ஏக்கம் கொள்வாள்.

பிள்ளைகள் விளையாடப் போய் இன்னும் திரும்பி வரவில்லை என்ற தேடலுடன் காத்திருப்பாள்.

சில இரவுகளில் பயங்கரமான கனவு கண்டு அலறுவாள்.

அவளது உலகம் அவள் ஆழ்மனதுக்குள் அமிழ்ந்து போய்

நிழல்களெல்லாம் நிஜங்களாய்...

இந்த பகுதி வாசிக்க மிகவும் கணமாயிருந்தது. கொழும்பில் பாதிக்கபட்டபோதோ குழந்தை வளர்க்க கடினபட்ட போதோ மருமகனின் வசவு சொல்லால் மனம் பிறந்தபோதோ எற்பட்ட உணர்வுகளைவிட தனிமையில் முதுமையின் வேதனை ஒருநிமிடம் மனதை ஏதோ செய்துவிட்டது

ஒரு பெண் தனது வாழ்க்கையில் என்னென்ன நிலைகளை கடக்கிறாள் என்பதை கல்யாணி மூலம் அழகாக புரிந்து கொண்டேன். பெண் ஆணுக்கும் உயர்ந்தவள் என்பது கல்யாணியின் வாழ்க்கையால் உணர்த்தியுள்ளீர்கள். இதுவே கல்யாணி இறந்து கணவனிருந்திருந்தால் ? இங்கு தான் பெண் என்பவள் தனித்து நிற்கிறாள்.

கல்யாணியின் கதை பல படிகளை தொட்டு செல்கிறது.

* ஒரு பெண்ணின் இயல்பான ஆசைகள்

*சிங்களத்தின் தமிழர்கள் மீதான இனவெறி

*இனவெறியால் துண்டாடப்படும் வாழ்வியல்

* முற்றிலும் ஒடுக்கப்படும் நாட்டில் வாழ்விற்கான போரட்டம்

* சமூகத்தில் பெண் என்பதால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள்

* தந்தையை இழந்த பிள்ளைகளின் சின்னாபின்னமாகும் எதிர்காலம்

* உயிர்வாழ்தலுக்கான அகதி பயணங்கள்

* மேற்கத்திய நாடுகளில் இயந்திரத் தனமான, இறுக்கமான வாழ்க்கை முறை

* வயோதிபத்தின் தாக்கம்

* தனிமையை எதிர்கொள்ள பயம்

இப்படி இத்துணை விடயங்களை காண முடிகிறது. இவ்வளவையும் கொண்ட இது ஒரு நல்ல வளமான கதைக்கரு. இதை இன்னும் நுணுக்கமாக மெருகேற்றினால் சிறந்தவொரு படைப்பாக இருக்கும். கதையில் உரையாடல் போன்றும் உணர்வுகளை இன்னும் விவரமாக காட்சி படுத்த வேண்டும் என்பது என் விருப்பம்.

மிகுந்த நேரத்தை எடுத்து கொண்டு அழகான கதையை தந்த கண்மனி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.

கல்யாணி என்றைக்கும் மனதிலிருக்கும் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராஜன் விஸ்வா உங்கள் நேரத்தை ஒதுக்கி இக்கதையை மிகுந்த தேடலுடன் வாசித்து கல்யாணியின் வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு படிமுறைகளையும் ஆழ்ந்து நோக்கி அழகாக கிரகித்துள்ளீர்கள். நான் கனடாவில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்வதால் பல கலாச்சார முதியவர்களையும் தினமும் சந்திக்கிறேன். ஏனையவர்களை விட தமிழ் முதியவர்கள் பெருமளவில் மனப்பிறள்வினால் பாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. முதுமையின் சுமைகள் பெண்களுக்கு மட்டுமல்ல. மனைவியை இழந்த ஆண்களும் எதிர்கொள்ளும் பிரச்சளை எழுதினால் மனம் தாங்காது. எல்லாவற்றிற்கும் மனைவியின் உதவியுடன் வாழ்ந்து பழக்கப்பட்ட கணவர்கள் மனைவியை இழக்கும்போது மிகவும் திண்டாடி விடுகிறார்கள். தம்மை தக்கவைத்துக் கொள்ள மிகவும் சிரமப் படுகிறார்கள். எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் இயந்திர வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் எம்மால் எழுதியதை நுணுக்கமாக மெருகேற்றக்கூட நேரமில்லை. இனிவரும் காலங்களில் உங்கள் ஆதங்கத்தை கருத்தில் எடுக்கிறேன். வாசித்துவிட்டுப் போகாமல் அழகிய விமர்சனம் தந்த உங்களுக்கு என் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.