Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இந்திய மாநிலங்கள் - ஒரு சிறு குறிப்பு


Recommended Posts

பதியப்பட்டது
india_1.png
 
 
தமிழ்நாடு 
 
6_2076933h.jpg
தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.
 
மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது.
 
எல்லைகள்
 
தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.
 
மதராஸ் மாகாணம்
 
தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரிப் போராட்டங்கள் நடைபெற்றன.இதில் சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 - ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
 
பாரம்பரியம்
 
ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கும் முன்னதாகப் பழங்கற் காலத்தில் இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் இலக்கியமும் தமிழ் மொழியில் காணக் கிடைக்கின்றன.
 
தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; உலக அளவிலான பாரம்பரியக் களங்கள் எட்டு தமிழ்நாட்டில் உள்ளன.
 
நகர இந்தியாவின் சின்னம்
 
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11- வது இடத்தில் உள்ளது. மக்கள்தொகையில் ஏழாவதாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவதாக உள்ளது.
 
மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை அளக்கக்கூடிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் 2006 - ஆம் ஆண்டில் இந்தியாவின் பத்தாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இந்தியாவிலேயே அதிகமாக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலம் இதுதான். இந்தியாவின் 6 சதவீத மக்கள்தான் இங்கே வசிக்கின்றனர். ஆனால் இந்தியாவின் 10.56 சதவீத வணிக நிறுவனங்கள் இங்கே உள்ளன.
 
இந்தியா உருவாக்குகிற மொத்த வேலை வாய்ப்புகளில் 9.97 சதவீதம் தமிழகத்திடம் உள்ளது. அதிகமான வேலைவாய்ப்புகளைத் தருகிற இந்திய மாநிலங்களில் இரண்டாவதாக இது உள்ளது. அது மட்டுமல்ல… தொழிற் சாலைகள் எண்ணிக்கையிலும் மொத்த தொழில்துறை உற்பத்தியிலும் இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. கறிக்கோழி வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
வெளிநாடுகளின் நேரடி மூலதனத்தைப் பெறுவதில் இந்திய அளவில் மூன்றாவது மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.ஆட்டோமொபைல் தொழில் செழித்துள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.
 
Posted

மணிப்பூர்: இந்தியாவின் கிழக்கு வாசல்

 

manippur_map_2119444g.jpg

 

மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு மாநிலம். மணிப்பூர் என்ற பெயருக்கு முன்பாக 20க்கும் மேற்பட்ட வேறு பல பெயர்களில் அது அழைக்கப்பட்டு வந்துள்ளது. நாகலாந்து, மிஜோரம், அஸ்ஸாம் ஆகிய இந்திய மாநிலங்கள் மணிப்பூரின் வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகளாக உள்ளன.
 
பக்கத்து நாடான மியான்மர் எனப்படும் பர்மாவுக்கும் இந்தியாவுக்குமான தரைவழிப்பாதை மணிப்பூரின் கிழக்குப் பகுதியின் வழியாகச் செல்கிறது. அதன் வழியாக சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியாபோன்ற கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லலாம். ஆசிய நாடுகளுக்கு இடையேயான ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேறினால் மணிப்பூரின் வழியாக நாம் பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் செல்லலாம்.
 
கற்காலத்திலும்..
 
மணிப்பூரில் 35 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். மணிப்பூரில் நீண்டகாலம் மன்னராட்சி இருந்தது. 1891- ல் மணிப்பூர் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வந்தது.
 
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசியாவை வென்று, மணிப்பூர் வரை முன்னேறினார்கள் .மணிப்பூரின் தலைநகரான இம்பால் நகரைக் கைப்பற்றுகையில் தோல்வியடைந்தனர்.
 
இந்தியா 1947- ல் சுதந்திரம் அடைந்தபோது மணிப்பூர் தனியாக இருந்தது.
 
அரசரைத் தலைவராகக் கொண்ட ஒரு அரசியல் சாசனத்தை மணிப்பூர் உருவாக்கிக்கொண்டது. அதன்பிறகு அக்டோபர் 1949ல் இந்தியாவுடன் இணைந்தது. 1956 முதல் 1972 வரை மத்திய அரசின் நேரடி ஆட்சி நடந்த யூனியன் பிரதேசமாக மணிப்பூர் இருந்தது. 1972 - ல் தனி மாநிலமானது.
 
மணிப்பூரிகள்
 
மணிப்பூரில் ஏறத்தாழ 26 லட்சம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் மைத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூரி எனப்படும் மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இது திபெத்- பர்மியன் மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி. இதற்கு 29 வட்டார வழக்குகள் உள்ளன. அதில் ஆறு வட்டார வழக்குகளில் பாடநூல்களை அரசு வெளியிட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மொழிகளில் ஒன்றாக மணிப்பூரி மொழி சேர்க்கப்பட்டது.
 
மணிப்பூரிகளில் நாகா பழங்குடிகள் உள்ளிட்டு 41 சதவீதம் பேர் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மணிப்பூரிகளிடையே சனாமகிஷம் எனும் தொன்மையான மதம் உள்ளது. அதில் இந்துமத தாக்கம் ஏற்பட்டுள்ளது. வைணவம் 1700 -களில் அரசு மதமாக இருந்துள்ளது. தற்போது 46 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். 24 சதவீதம் பேர் கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் ஒன்பது சதவீதம் பேர் உள்ளனர்.
 
மணிப்பூரில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஏறத்தாழ 80 சதவீதத்தினர்.
 
இந்தியாவின் மூங்கில் தொட்டி
 
இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் மணிப்பூருக்கு உள்ளே செல்ல டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.
 
இந்தச் சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்கும் கூட பொருந்தும். இந்தச் சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயணத் திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும்.
 
அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாக மட்டுமே இம்பால் நகரில் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
 
விவசாயமும் வனத்தின் மூலம் வருமானமுமே மாநிலத்தின் முக்கியமானப் பொருளாதாரம். மாநிலத்தில் பெரும் மூங்கில்காடுகள் உள்ளன. இந்தியாவுக்குத் தேவையான மூங்கிலை அள்ளித்தரும் மாநிலமாக மணிப்பூர் உள்ளது.வடகிழக்கு இந்தியாவிலேயே அதிகமான அளவில் கைவினைப்பொருள்கள் உற்பத்தி மணிப்பூரில்தான் நடைபெறுகிறது.
 
Posted

கோவா 

maanilam_2246073f.jpg

 

போர்ச்சுகீசியர்களின் பிடியில் 450 ஆண்டுகளாக இன்றைய கோவா மாநிலம் இருந்தது. 1812-1815 காலகட்டத்தில் கோவா ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. 1961, டிசம்பர் 17-ல் இந்தியாவோடு இணைந்தது. ஆங்கிலேயர்களிடமிருந்து 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் போர்ச்சுகல் கோவா மாநிலத்தில் இருந்து வெளியேற மறுத்தது.

 

இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12-ல் ஆப்ரேஷன் விஜய் எனும் நடவடிக்கையால் கோவாவையும் , டாமன் மற்றும் டையூ தீவுகளையும் கைப்பற்றியது. 1987 மே 30-ல் கோவா இந்தியாவின் 25-வது மாநிலமாகியது. டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களாக தொடர்கின்றன.

 

இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பழமையான பாறைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன. 360 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கடினப்பாறைகள் என அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கோவா தன் பரப்பில் 56.6% பகுதியில் காடுகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் சிறிய மாநிலம். இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் பழங்குடியின மக்களை கொண்ட மாநிலம் எனும் தனித்தன்மைகள் கோவாவுக்கு உண்டு.

 

சுற்றுலாவே கோவாவின் முதல் தொழிலாகும். இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 12% பேர் கோவா செல்கின்றனர். இந்தியாவின் மாநிலங்களில் கோவா வளமானது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள தனிநபர் வருமானத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இங்கே உள்ளது.

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6695289.ece?ref=relatedNews

 

 

Posted

யூனியன் பிரதேசமான கிராமங்கள்!

 

territary_2277556h.jpg

 

 
நம் நாட்டில் உள்ள வித்தியாசமான ஒரு யூனியன் பிரதேசம் தாத்ரா - நாகர்ஹவேலி. சுமார் இரண்டரை லட்சம் பேர் இங்கே வசிக்கிறார்கள். இந்த யூனியன் பிரதேசத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போமா?
 
# இந்தியாவில் சில பகுதிகளைப் பிடித்திருந்த போச்சுகீசியர்களும் மராட்டிய மன்னர்களும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்த காலம். அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அப்போதைய மராட்டிய அரசு தங்கள் ஆளுகைக்குட்பட்ட 72 கிராமங்களை போர்ச்சுகீசியர்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இதற்கான ஒப்பந்தம் 1799-ம் ஆண்டில் போடப்பட்டது.
 
அப்படிக் கொடுக்கப்பட்ட கிராமங்களின் கூட்டம்தான் இன்றைய இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர்ஹவேலி.
 
# குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இந்த யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது.
 
# ஆங்கிலேயர்களிடம் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் வெளியேறாமல் போர்ச்சுக்கீசியர்கள் அடம் பிடித்தார்கள். 1954-ம் ஆண்டில், இப்பகுதி மக்களே புரட்சி செய்து அவர்களை வெளியேற்றினார்கள். இதையடுத்து 1961-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தன இப்பகுதிகள்.
 
# தாத்ரா - நாகர்ஹவேலிக்கெனத் தனியாக மின் உற்பத்தி, சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் கிடையாது.
 
# மின்சாரத்தை குஜராத் அரசு வழங்குகிறது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமே இங்கு சாலைப் போக்குவரத்து பூர்த்தி செய்யப்படுகிறது.
 
# ரயில் போக்குவரத்து இல்லாத யூனியன் பிரதேசம் இது.
 
# 487 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம் சில்வாசா.
 
Posted

கர்நாடகம்

 

வலிமை மிகுந்த பேரரசுகளின் தாயகம்

 

karnataka_2298838f.jpg

 

உங்களை யாராவது‘சுத்தக் கர்நாடகம்’ எனத் திட்டினால் வருத்தப்படாதீர்கள். அது வசைச்சொல் அல்ல. வாழ்த்து. பண்பாட்டு வளம், பாரம்பரியப் பெருமையின் குறியீடுதான் கர்நாடகம்.
 
‘கரு’ என்றால் மேடு. ‘நாடு’ என்றால் நிலம். மேட்டுப்பகுதி என்ற பொருள் படும் வகையில் கர்நாடகம் எனப் பெயர் வந்தது.
 
ஆதி முதல்…
 
பழைய கற்கால கைக்கோடாரி கலாச்சாரத்துடனும் சிந்துசமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியான ஹராப்பாவுடனும் கர்நாடகத்துக்கு வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் இருந்துள்ளன.
 
நந்த வம்சம், மவுரிய வம்சம், சதவாகனர்கள், கடம்பர்கள், கங்கர்கள், பாதமி சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், கல்யாண் சாளுக்கியர்கள், தேவகிரி யாதவர்கள், ஹோசலர்கள், விஜயநகரப் பேரரசு, பாமினி பேரரசு, பிஜப்பூர் சுல்தான்கள், கீழடி நாயக்கர்கள், மைசூர் உடையார்கள், ஹைதர் அலி, திப்புசுல்தான், பிரிட்டிஷ் ஆளுகை என வலிமைமிக்க பேரரசுகளின் தாயகமாகக் கர்நாடகம் இருந்தது. இதுவே பன்முகத்தன்மை கொண்ட பிரதேசமாகக் கர்நாடகம் விளங்கக் காரணமாயிற்று.
 
தமிழகத்தில் கோலோச்சிய களப்பிரர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பெரிய புராணமும், கல்லாடமும், வேள்விக்குடி செப்பேடும் கூறுகின்றன. ஆனால் அவர்கள் கர்நாடகத்தில் அரசாண்டதாகவோ, எந்தப் பகுதியில் இருந்து படையெடுத்துத் தமிழகம் வந்தனர் என்பது குறித்தோ வரலாற்றுச் சான்றுகள் இல்லை.
 
கர்நாடகம் உதயம்
 
சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டப்படி 1956 நவம்பர் 1 அன்று மைசூர் மாநிலம் உருவாக்கப்பட்டது. அது 1973 ல்தான் கர்நாடகமானது.
 
மேற்கில் அரபிக்கடல், வட மேற்கில் கோவா, வடக்கில் மகாராஷ்டிரா, கிழக்கில் ஆந்திரம், தென் கிழக்கில் தமிழ்நாடு, தென் மேற்கில் கேரளத்தை எல்லைகளாகக் கொண்டு 1,91,976 சதுர கி.மீ. பரப்பளவுடன் இந்தியாவின் 8-வது பெரிய மாநிலமானது அது.
 
224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையைப் போலவே 75 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்ட மேலவையும் இங்கு உள்ளது. 6.1 கோடி மக்கள் தொகை. பாலின விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள். கல்வியறிவு 75.60 சதவீதம். இந்திய அளவில் 16-வது இடம். நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐஎஸ், ஐஐஎம், என்ஐடி மற்றும் தேசியச் சட்டப்பள்ளியும் பந்திப்பூர் தேசிய பூங்காவும் இங்குதான் உள்ளன.
 
காவிரி, கிருஷ்ணா, சாராவதி, மலபிரபா மற்றும் துங்கபத்திரா என முக்கிய நதிகள் வளம் சேர்க்கின்றன.
 
தசரா கோலாகலம்
 
10 நாட்கள் கொண்டாடப்படும் மைசூர் தசரா பண்டிகை பிரசித்திபெற்றது. கன்னட வருடப் பிறப்பான உகாதி, மகரசங்கராந்தி, விநாயக சதுர்த்தி, நாக பஞ்சமி, பசவா ஜெயந்தி, ஹோசலா மகோத்சவம், பட்டாடக்கல் நாட்டிய திருவிழா, கரகம், தீபாவளி, ரமலான் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
 
யக்ஸகானா, டோலு குனிதா, சோமனா குனிதா, கொடுகு, ஜக்கா காலிகே குனிதா, ஹலேலு வேஷகாரரு, பப்பட்ரி, ஜோடு காலிகி போன்ற நாட்டுப்புற நிகழ் கலைகள் இன்றும் ஜீவனோடு நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதில் யக்ஸகானா மாநில நடனமாகும்.
 
முதன்மை மொழி கன்னடம். தமிழ், கொங்கணி, கொடவா, துளு, மராத்தி, இந்தி உள்ளிட்ட பிறமொழிகளின் புழக்கமும் உள்ளன.
 
கலை இலக்கியம்
 
சாளுக்கியர் காலம் பொற்காலம். கட்டிடக் கலை உள்ளிட்ட இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றினர். அடுத்தடுத்து வந்த அரசுகளின் செழுமையான பங்களிப்பாலும் கலை இலக்கியங்களில் தனி முத்திரை பதித்தது கர்நாடகம். இன்றுவரை கன்னட எழுத்தாளர்களே அதிக அளவில் ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ளனர்.
 
மாநிலத் தலைநகரான ‘பூங்கா நகரம்’ பெங்களூரு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடி நகரமாக உருமாறியுள்ளது. இந்தியாவின் தங்க உற்பத்தியில் 90 சதவீதம் கர்நாடகத்தின் பங்கு. மாங்கனீசு, மேக்னைட், இரும்பு, எலக்ட்ரானிக் உபகரணங்கள், கணிணித் தொழில்நுட்ப உற்பத்தியில் சாதனை படைக்கும் கர்நாடகம் மனித வளத்திலும் முன்னணிதான்.
 
காப்பி உற்பத்தியில் முதலிடம். சிறுதானியம், மூல பட்டு, சந்தனம் ஆகியவை முக்கிய விளைபொருட்கள். நெல், கர்ம்பு, நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி, சோயா, மக்காச்சோளம், சோளம் உற்பத்தியும் கணிசமாக நடக்கிறது. 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேளாண்மை தொழில் செய்கின்றனர். 1,23,100 ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடக்கிறது. இருப்பினும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லை.
 
பழங்குடிகள்
 
இந்து மதத்தினர் 83 சதவீதமும் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம், கிறிஸ்தவம், பவுத்தம் மற்றும் சமண மதத்தினரும் வசிக்கின்றனர். இருளிகர், மலைக்குடி, ஏறவா, ஜெனு குறும்பர் என 49 பிரிவுகளைச் சேர்ந்த ஆதிவாசிகள் மாநில மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ளனர்.
 
கர்நாடகம் சிறந்த சுற்றுலா தேசம். நவநாகரிக நகரங்களும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களும், பண்டைய கோயில்களும், மிக நீண்ட கடற்கரையும் உள்ளடக்கியது. துவார சமுத்திரா ஏரி, ஹோசலேஸ்வரா கோயில்கள், பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஹம்பி, மைசூர் அரண்மனை, ஆசியாவின் மிக உயரமான நினைவுச்சின்னமான சரவணபெலகுலாவில் கம்பீரமாக நிற்கும் மகாவீரரின் சிலை, புத்தர் வந்ததாகக் கூறப்படும்  ரங்கபட்டினம் உள்ளிட்டவை கர்நாடகத்துக்குப் புகழ் சேர்ப்பவை.
 
Posted

திரிபுரா - வடகிழக்கே ஒரு குறிஞ்சி நாடு

 

tripura_2313434g.jpg

 

tripura2_2313433g.jpg

 

 

வங்காள விரிகுடா வரை திவிப்ரா (திரிபுரா) ராஜ்ஜியம் நீண்டிருந்தது. அதனால் ‘நீருக்கு அருகில்’என்ற பொருள் தரும் வகையிலும், மாணிக்கிய வம்ச அரசன் திர்புரியின் பெயரும்தான் திரிபுரா என்ற பெயர் வரக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்தியாவின் 51 சக்தி பீடங்களின் ஒன்றான திரிபுரச் சுந்தரி கோயில் இருப்பதும்கூட ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
 
திரிபுராவின் பண்டைய பெயர் கிராத் தேஷ் (கிராத் நாடு). ஹவுரா மற்றும் கொவாய் பள்ளத்தாக்குகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதி கற்கால மரக் கருவிகளின் படிமங்களிலும் 3-ம் நூற்றாண்டின் மகா அசோகர் கல்தூண்களிலும் திரிபுரா குறித்த சான்றுகள் கிடைக்கின்றன.
 
ராஜமலா
 
கி.பி.1430-ல் வங்க மொழியில் எழுதப்பட்டது ராஜமலா என்ற வரலாற்று நூல். இது 8-ம் நூற்றாண்டில் சந்திர வம்சம் (லுனார் வம்சம்) தொடங்கி 149 மன்னர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது. அதன் 145-வது அரசராகப் பதவியேற்ற ரத்னா ஃபா தொடங்கிய மாணிக்ய வம்சம் கிஃபி1280 முதல் 179 மன்னர்களால் ஆளப்பட்டு 1949 வரை நீடித்தது.
 
கி.பி.1279-ல் இஸ்லாம் மன்னன் துக்ரில் வருகை, கி.பி.1733-க்குப்பிறகு முகலாயர் ஆதிக்கம், 18-ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் என மாறி மாறி இடையூறுகள் வந்தாலும் மாணிக்கியர்களின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படவில்லை.
 
மாநில அந்தஸ்து
 
1947-ல் இந்தியா விடுதலையடைந்து, கிழக்குப் பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) பிரிக்கப்பட்டது. 1949 செப். 9-ம் தேதி மகாராணி காஞ்சன் பிரபா தேவி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, திரிபுரா இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. முடியாட்சி முடிவுக்கு வந்தது. 1956-ல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் 1963-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் அமைந்தது. பின்னர் 1972 ஜனவரி 21-ம் தேதிதான் முழு மாநில அந்தஸ்தை அடைந்தது.
 
எல்லைகள்
 
839 கி.மீ. நீள சர்வதேச எல்லைக்கோடு வகுக்கப்பட்டு மேற்கு, வடக்கு மற்றும் தெற்கில் வங்கதேசம் அமைந்தது. வடகிழக்கில் அஸ்ஸாம், கிழக்கே மிசோரம் அமைந்துள்ளன. ஐந்து மிகப்பெரிய மடிப்பு மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் உள்ளடக்கியதால் இது மலையும் மலை சார்ந்த நிலமும் கொண்ட குறிஞ்சி தேசம்.
 
பழங்குடிகளின் தேசம்
 
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்கள் ஏழு சகோதரிகள் எனப்படுகின்றன. அதில் கடைசி சகோதரி திரிபுரா. இந்தியாவின் 2-வது சிறிய மாநிலம். மக்கள் தொகை 36.74 லட்சம். கோக்பொரோக், ரியாங், ஜாமதியா, சக்மா, ஹாலம், மோக், முண்டா, குக்கி, காரோ பழங்குடிகள் வசிக்கின்றனர்.
 
நான்கு பேரின் மொழி
 
வங்க மொழியும், கோக்பொரோக்கும் அதிகளவில் பேசப்படும் மொழிகள். இவை தவிர ஹிந்தி, மோக், ஒரியா, பிஸ்னுப்ரியா மணிப்பூரி, மணிப்பூரி, ஹாலம், காரோ மொழிகளும் பேசப்படுகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள மொழி சாய்மர். 2012-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒரு கிராமத்தில் 4 பேர் மட்டுமே இந்த மொழியை பேசுவது தெரியவந்துள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள். எழுத்தறிவு 87.22 சதவீதம். இந்திய அளவில் 4-வது இடம்.
 
விவசாயம்
 
2.55 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடக்கிறது. 45 சதவீதம் பேர் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள். நெல் முக்கியப் பயிர். உருளைக்கிழங்கு, தேயிலை, கரும்பு, பயறு வகைகளும் பயிரிடப்படுகின்றன. ரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடம். கும்டி, கொவாய் மற்றும் மானு ஆறுகள் பாய்கின்றன. அகர்தலாவில் இருந்து வங்கதேசத்துக்கு ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.
 
மின் மிகை மாநிலம்
 
மின் உற்பத்தியில் மிகை மாநிலமாகத் திகழ்கிறது. அருகில் உள்ள 6 மாநிலங்களுக்கு வழங்கியதுபோக வங்கதேசத்துக்கும் மின்சாரம் ஏற்றுமதியாகிறது. 85.60 சதவீதம் பேர் இந்து மதத்தையும், 7.90 சதவீதம் பேர் இஸ்லாம், 3.20 சதவீதம் பேர் கிறிஸ்தவம், 3.10 சதவீதம் பேர் புத்த மதம், 0.5 சதவீதம் பேர் சீக்கிய மற்றும் சமண மதத்தையும் பின்பற்றுகின்றனர்.
 
வளமான கலாச்சாரம்
 
இங்கு பழங்குடிகளே கலைகளின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். வங்காளிகளின் ஆதிக்கத்தால் பழங்குடிகளிடையே வங்கக் கலாச்சாரமும் மொழியும் கலப்புக்குள்ளாகின. அனைத்து விழாக்களையும் பண்டிகைகளையும் இசை, நடனங்களால் மெருகேற்றுகின்றனர். கோரியா, லெபங், மமிதா, மொசாக் சுல்மானி, ஹோஜா கிரி, பிஜூ, வாங்கலா, சங்காரி, ஓவா ஆகிய நடனங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
 
திரிபுரா மன்னர்களுடன் ஆழமான நட்பு கொண்டிருந்த ரவீந்திரநாத் தாகூர், மாணிக்யர் வம்சப் புனைவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘ராஜர்ஷி’ நாவல், ‘விஜர்சன்’ மற்றும் ‘முக்குத்’ நாடகம் புகழ்பெற்றது. தாகூர் நோபல் பரிசு வென்றதற்காக மன்னர் பிக்ராம் கிஷோர் பெரிய விழாவையே நடத்தினார். இந்தி திரையிசை உலகின் ஜாம்பவனான சச்சின் தேவ் பர்மன் திரிபுரா அரச வம்சாவளியைச் சேர்ந்தவரே.
 
  • 2 weeks later...
Posted

ஆந்திரா

காரமான ஆந்திரா: மாநிலங்கள் அறிவோம்

 

andhra_2336536f.jpg

 

கி.மு.800-களில் ஆந்திரம் குறித்த பதிவுகள் ஐதரைய பிராமணத்தில் உள்ளது. ஆந்திரர், புலிண்டர்கள், சாபர்கள் உள்ளிட்ட இனக்குழுக்கள் வசித்துள்ளன. ஆந்திர நாட்டைப் பற்றி கி.மு.350-களில் மெகதஸ்தனிஸும் குறிப்பிட்டுள்ளார். மகா அசோகரின் 13-வது கல்வெட்டிலும் குறிப்புகள் உள்ளன.
 
மவுரியர்களுக்குப்பிறகு சாதவாகனர்கள், கிழக்கு சாளுக்கியர்கள், கிழக்கு கங்கர்களும் பல்லவ சாம்ராஜ்யமும் அதன்பிறகு சோழ வம்சமும் ஆண்டது. பின்னர் காக்கத்தியர்கள், டெல்லி சுல்தான், அலாவுதீன் கில்ஜி படையெடுப்பு, பாமினி பேரரசு, விஜயநகரப் பேரரசு, குதுப் ஷாகி வம்சம், மொகலாயர் காலம், ஆங்கிலேயர் ஆதிக்கம், என ஆந்திரம் பலரையும் கண்டது.
 
ஹைதராபாத்
 
இன்றைய நவீன நகரமான ஹைதராபாத்தை கி.பி.1590- 91- ல் நிர்மாணித்தவர் குதுப் ஷாகி வம்ச அரசர் மொகமது அலி. 1724 - ல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த நிஜாம் கமார்-உத்-தின் கான் ஹைதராபாத்தை ஆண்டார். ஆங்கிலேயர் ஆதிக்கத்திலும் அவர்களுடன் நட்பு பாராட்டியதில் தன்னாட்சி பெற்ற தனி நாடாகவே விளங்கியது.
 
1857- ல் நடந்த முதல் விடுதலைப்போரில் ஆந்திரத்தின் பங்கு அளப்பரியது. ராம்ஜி கோண்ட் தலைமையிலான வீரர்கள் தீரத்துடன் போரிட்டனர். சீரலா, பேரலாவில் வரிவிதிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முதல் முறையாகப் பெண்கள் சிறை சென்றனர். பின்னாளில் காந்தியடிகள் அறிவித்த வரி கொடா இயக்கத்த்துக்கு முன்னோடியாக இந்தப் போராட்டம் அமைந்தது.
 
விடுதலை இந்தியாவில்..
 
1947- ல் நாடு விடுதலையடைந்தது. மொழிவாரி மாநிலக் கோரிக்கையை தார் கமிஷனும் ஜவஹர்கலால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமைய்யா கொண்ட ஜெ.வி.பி. கமிஷனும் நிராகரித்தது. மக்களின் கோபம் பெரும் போராட்டமாக வெடித்தது. இதனால் 1952- ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸுக்குப் பலத்த அடியும் கம்யூனிஸ்ட்களுக்கு அதிக இடங்களும் கிடைத்தன.
 
தனி மாநிலத்துக்காக சுவாமி சீதாராம் நடத்திய சாகும்வரை உண்ணாவிரதம் வினோபாவேயின் தலையீட்டால் நிறைவடைந்தது. ஆனால் பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் 1952 டிச.15 - ல் அவரது மரணத்தில்தான் முடிந்தது.
 
இது ஆந்திரத்தைக் கலவரக்காடாக மாற்றியது. மக்களின் பேரெழுச்சியைக் கண்டு மிரண்டுபோன நேரு, “தெலுங்கு பேசும் 11 மாவட்டங்களையும் பெல்லாரியின் மூன்று தாலுகாக்களையும் இணைத்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும்” என அறிவித்தார். மொழியின் அடிப்படையில் உருவான முதல் மாநிலமும் அதுதான்.
 
1953 அக்டோபர் 1- ம் தேதி கர்னூலைத் தலைநகராகக் கொண்டு புதிய ஆந்திர மாநிலம் உதயமானது. முதல் முதலமைச்சராக பிரகாசம் பொறுப்பேற்றார். இருப்பினும் விசாலாந்திராவை எதிர்நோக்கி ஆந்திரர்கள் காத்திருந்தனர்.
 
போலோ ஆபரேஷன்
 
ஹைதராபாத் தனிநாடாக இருக்கவே நிஜாம் மன்னர் உஸ்மான் அலிகான் விரும்பினார். 1948 செப். 13-ம் தேதி ‘போலோ ஆபரேஷன்’ என்ற போலீஸ் நடவடிக்கை மூலம் 5 நாளில் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆபரேஷனுக்குத் தலைமையேற்ற மேஜர் ஜெனரல் ஜே.என்.சவுத்திரி 1949 டிசம்பர் வரை ராணுவ ஆளுநராக இருந்தார். எம்.கே.வெல்லோடி முதல்வராக நியமிக்கப்பட்டார். 1952-ல் நடந்த பொதுத்தேர்தலில் ஹைதராபாத் முதல்வராக ராமகிருஷ்ணாராவ் தலைமையிலான அரசு அமைந்தது.
 
விசாலாந்திரா
 
விசாலாந்திரா அமைப்பதற்கான கோரிக்கை குறித்து நியமிக்கப்பட்ட சையத் பசல் அலி குழுவிடம் தெலங்கானா மாநிலக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. பின்னர் தெலங்கானா மேம்பாட்டுக்காக மண்டலக் கவுன்சில் ஏற்படுத்துவது என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 20 மாவட்டங்களுடன் 1956 நவம்பர் 1-ம் தேதி ஆந்திரப் பிரதேசம் பிறந்தது. முதல் முதலமைச்சராக நீலம் சஞ்சீவரெட்டி பதவியேற்றார்.
 
இப்படியாக உருவான மாநிலம் 2014 ஜூன் மாதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுப் புதிய தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது தனிக்கதை.
 
தற்போது 13 மாவட்டங்களை உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் 2-வது நீண்ட கடற்கரையைக் கொண்டது. கிழக்கே வங்கக்கடலும் வடக்கே தெலங்கானாவும் தெற்கில் தமிழ்நாடும் வடகிழக்கே ஒடிஷாவும், மேற்கில் கர்நாடகமும் எல்லையாக அமைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் தெலங்கானாவுக்கும் ஹைதராபாத் தலைநகராக இருக்கும். தற்போது விஜயவாடாவைத் தலைநகராக்கும் வேலைகளில் ஆந்திரப்பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது.
 
உகாதி கோலாகலம்
 
தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி கோலாகலப் பண்டிகையாகும். திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் இந்தியாவிலேயே அதிக வருவாய் கொண்ட கோயில். உலகப் பிரசித்திபெற்றது.
 
இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பேசும் மொழி தெலுங்கு. உருதும் புழக்கத்தில் உள்ளது. தெலங்கானா பிரிந்த நிலையில் தற்போதைய ஆந்திரத்தின் மக்கள் தொகை 4.9 கோடி. படிப்பறிவு 67.4 சதவீதம்.
 
வளம்
 
11.14 லட்சம் ஹெக்டேரில் 54 சதவீதம் நிலம் பாசன சாகுபடி பெறுகிறது. அரிசி, மக்காச்சோளம், பருப்பு, நிலக்கடலை, சூரியகாந்தி, வாழை, மாம்பழம், புகையிலை, பருத்தி, கரும்பு, மிளகாய் ஆகியவை முக்கிய விளைபொருட்கள். கிருஷ்ணா, கோதாவரி, சாராதா உள்ளிட்ட நதிகள் பாய்கின்றன. கிரானைட் மற்றும் சுண்ணாம்பு தாதுகள் நிறைந்துள்ளன. சிறந்த சுற்றுலா பிரதேசமாகவும் திகழ்கிறது ஆந்திரப் பிரதேசம்
 
இந்துக்கள் 92.25 சதவீதம், இஸ்லாமியர் 6.09 சதவீதம், கிறிஸ்தவர்கள் 1.51 சதவீதம், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமண மதத்தினர் சராசரியாக 0.5 சதவீதம் என்ற அளவில் உள்ளனர்.
 
கலை இலக்கியம்
 
சாதவாகனர்கள், கிழக்கு சாளுக்கியர்கள், விஜநகரப்பேரரசுகளின் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம். தெலுங்கின் முதல் கவிஞர் நானய்யா பாட்டா, திகானா, யெர்ரப்ரகடா, அல்லசானி பெத்தன்னா கவிதைகளின் பிதாமகன்கள் எனப் போற்றப்படுகின்றனர். வீரேசலிங்கம் பந்துலு எழுதிய ராஜசேகர சரித்திரம் தெலுங்கின் முதல் நாவல். 1950-ல் முதல் சிறுகதை காலிவனா, முதல் தகவல் திரட்டு விஜனசர்வாசமு 1923-ல் வெளிவந்தது.
 
கேளிக்கை நடனங்கள், குச்சிப்புடி, பாமா கல்பம், கொல்லா கல்பம் உள்ளிட்ட தொன்மையான நடனங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. 1918-களில் விதவை மறுமணத்தை வலியுறுத்தியது புரட்சிகர கன்யாசல்கம் நாடகம். 1966 கணக்கெடுப்பின்படி 700 நாடகக் கம்பெனிகள் இருந்துள்ளன.
 
தகவல் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் மாநிலமாக மிளிர்கிறது. மிகப்பெரிய சினிமா தொழிற்சாலையாக தெலுங்கு படவுலகம் (டோலிவுட்) உருவெடுத்துள்ளது. அதிகப் படங்களைத் தயாரித்துக் கின்னஸ் சாதனை படைத்த ராமாநாயுடு, கர்நாடக இசை மேதை பத்மபூஷன் விருதாளர் எம்.பாலமுரளிகிருஷ்ணா உள்ளிட்டவர்களை ஈன்றது ஆந்திரம்தான்.
 
காரமான ஆந்திர உணவைப் போலவே போர்க்குணமும் அன்பும் கலாச்சாரப் பெருமையும் மிகுந்து காணப்படுவது ஆந்திரத்தின் தனித்துவம்.
 
Posted

அருணாசலப் பிரதேசம்

மொழிகள் செழிக்கும் வனம்

 

 

arunachal_2344133f.jpg

 

அருணாசலப் பிரதேசம் என்றால் ‘சூரியன் உதிக்கும் நாடு’ என்று பொருள்.காலிகா புராணம், மகாபாரதத்தில் இந்தப் பகுதிகள் குறித்த தரவுகள் இருக்கின்றன. ஆதிகாலத்தில் திபெத், பர்மாவிலிருந்து பழங்குடியினர் குடியேறினர். வடமேற்கு பகுதியை மொன்பா வம்சமும் வடக்குப் பகுதியைப் பூட்டானும் திபெத்தும் மற்றப் பகுதிகளைச் சுதியா வம்சமும் பின்னர் வந்த அஹோம் வம்சமும் ஆண்டது. 1858-ல் ஆங்கிலேயர்கள் வந்தனர். 1875-ல் வடக்கு எல்லைப்புறப் பகுதியைத் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப் படிப்படியாக ஊடுருவல் கொள்கையை ஆங்கில அரசு பின்பற்றியது.
 
இந்திய - சீனப் போர்
 
இந்தியாவின் எல்லையைத் தீர்மானிக்க 1912- 13-ல் பிரிட்டிஷ் இந்தியா, சீனா மற்றும் திபெத் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை சிம்லாவில் நடந்தது. இதில் மக்மோகன் எல்லைக்கோடு வகுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சீனா பிறகு நிராகரித்தது. 1935-ல் அது வெளியிட்ட வரைபடம் மூலம் அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளையும் திபெத்தையும் சொந்தம் கொண்டாடியது.
 
நீடித்த இந்தச் சர்ச்சையால் இந்திய - சீனப் போர் மூண்டது. 1959 ஆகஸ்ட் 26-லும் பின்னர் முழு வீச்சில் அக்டோபர் 1962-லும் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. அருணாச்சலப்பிரதேசம் முழுமைக்கும் தாக்குதல் நடத்தின. பின்னர் மக்மோகன் எல்லையைத் தோராயமாக ஏற்பதாகக்கூறி சண்டை நிறுத்தம் செய்து 1963-ல் இந்தியப் போர் கைதிகளையும் சீனா விடுவித்தது. இந்தப் போர் மூலம் திபெத் உடனான பண்டமாற்று வியாபாரம் முடிவுக்கு வந்ததுடன் திபெத் தனிநாடாக உருவாகும் வாய்ப்பும் முறியடிக்கப்பட்டது.
 
நெஃபா உருவாக்கம்
 
இதன்பின்னர் 1954-ல் வடகிழக்கு எல்லைப்புற முகமை (நெஃபா) உருவாக்கப்பட்டது. (North East Frontier Agency (NEFA). அருணாசலப் பிரதேசத்தின் அன்றைய பெயர் இதுதான். வெளியுறவுத் துறையுடன் அஸ்ஸாம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்து வந்தது.
 
பின்னர் 1972-ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு அருணாசலப் பிரதேசம் என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பெயர் சூட்டினார். பின்னர் 1975-ல் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1978 மார்ச் 4-ம் தேதி 33 உறுப்பினர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அவை அமைந்தது. 1987 பிப்ரவரி 20-ம் தேதி மாநில அந்தஸ்தை அடைந்து நாட்டின் 25-வது மாநிலமாக உதித்தது.
 
1630 கி.மீ. எல்லை
 
அண்டை நாடுகளுடன் 1630 கி.மீ. தூரத்துக்குச் சர்வதேச எல்லையைப் பகிரும் மாநிலம் இது. மேற்கில் பூட்டான் (160 கி.மீ.), வடக்கு மற்றும் வடகிழக்கே சீனா (1080 கி.மீ.), கிழக்கே வங்கதேசம் (440 கி.மீ.), தெற்கே அஸ்ஸாம் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
கலப்பில்லா கலாச்சாரம்
 
நிலப்பகுதியைக் கமெங், சுபான்ஷ்ஸ்ரீ , சியாங், லோகி மற்றும் டிரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பிரிக்கின்றன. மிகப்பெரிய மலைகளும் வனங்களும் ஏற்படுத்திய இயற்கையின் தடையால் பழங்குடி யினங்களின் அடை யாளங்களும், மொழிகளும் எவ்விதக் கலப்புக்கும் உள்ளாகாமல் தனித்துவத்துடன் தழைத்தோங்க வழிவகுத்தன.
 
சமூக- சமய ரீதியாகப் பழங்குடியினரை 3 கலாச்சாரக் குழுக்களாகப் பிரிக்கலாம். இதில் மோன்பாஸ் பிரிவினர் பெரும்பாலும் விவசாயிகள். மிக உயர்ந்த மலைகளில் மெம்பர்களும், கெம்பர்களும் வசிக்கின்றனர். கிழக்குப் பகுதியில் கெம்ப்டியர், சிங்போஸ் இனத்தினர் ஹீனயான புத்த மதக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர்.
 
இரண்டாம் பிரிவான அதி, அகா, அபாதனி, பாங்னி, நிஷ்கி, மிஜி மற்றும் தொங்சாகர்கள் உள்ளிட்ட பிரிவினர் டொன்யி – போலோ, அபோ-தானி என்ற பெயரில் சூரியனையும் சந்திரனையும் வணங்குகின்றனர். வழிபாடுகளில் விலங்குகளைப் பலியிடுகின்றனர். படியடுக்கு சாகுபடி மற்றும் மாற்றுச் சாகுபடியுடன், ஈர நெல் சாகுபடி மூலம் கணிசமான வேளாண் பொருளாதாரத்தில் ஈடுபடுகின்றனர். அபாதனி மக்கள்
 
நெல்லுடன் வயலிலேயே மீன் வளர்ப்புத் தொழில் செய்வதில் வல்லவர்கள். ஒரே சாகுபடியில் நெல்லுடன் இருமுறை மீன் அறுவடையும் நடக்கும். மூன்றாவது குழுவினர் டிரா மாவட்டத்தில் வசிக்கின்றனர். இதில் நோக்டெ மற்றும் வான்சோஸ், ஹார்டி இனக்குழுவினர் குறிப்பிடத்தகுந்தவர்கள். பண்டைய வைஷ்ணவத்தைப் பின்பற்றுவர்கள்.
 
மொழிகளின் ஆதிக்கம்
 
ஆசியாவிலேயே அதிகமான மொழிச் செறிவுள்ள மாநிலம். சுமார் 30 முக்கிய மொழிகளும் 50-க்கும் மேற்பட்ட கிளை மொழிகளும் பேசப்படுகின்றன. அவை பெரும்பாலும் திபெத், பர்மா, பூட்டான் பகுதியில் புழக்கத்தில் இருப்பவை. போடிக், தான்யி மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன. இடு, மிஜி, திராகு, சிங்போ, ஷான் மொழியும் இவை தவிர அஸ்ஸாமி, வங்கமொழி, நேபாளி, இந்தி ஆகியவையும் பேசப்படுகின்றன. ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி.
 
மக்கள் தொகை 13.84 லட்சம் பேர். எழுத்தறிவு 65.38 சதவீதம். ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் என்பது பாலின விகிதாச்சாரம். இந்து மதம் 34.6 சதவீதம், டோனி - போலோ மதம் 30.7 சதவீதம், கிறிஸ்தவம் 18.7 சதவீதம், பவுத்தம் 13 சதவீதம், இஸ்லாம் 1.9 சதவீதம், சீக்கிய மற்றும் சமண மதம் தலா 1 சதவீதம் பேர் பின்பற்றுகின்றனர்.
 
டோலமைட், கிராபைட், நிலக்கரி, சுண்ணாம்பு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மார்பிள் உள்ளிட்ட முக்கியமானக் கனிம வளங்களைக் கொண்டுள்ளது. நெல், மக்காச்சோளம், தினை, கோதுமை முக்கியப் பயிர்கள். எண்ணை வித்துகள், உருளை, இஞ்சி, கரும்பு, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.
 
பழங்குடி பண்டிகைகள்
 
மோபின், சோலங், நய்யோகும், லொஸ்ஸர், சி-டோனி, பூரி-பூட், டிரீ, ரேஹ், சிபாங் யாங், சலோ-லொகு, தாமலாடு, சரோ உள்ளிட்டவை பழங்குடி மக்களின் முக்கியப் பண்டிகைகள். பெரும்பாலும் நடனங்கள் அவர்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே திகழ்கிறது. ஆடைகள் மற்றும் தலைப்பாகை தனித்துவம் மிக்கவை.
 
தவங், ஜிரோ, பாசர் நகரங்கள் நாம்தாபா, மவுலிங் தேசியப் பூங்காக்கள், மூங்கில் பாலத்துடன் கூடிய சேலா ஏரி, ருக்மணியுடன் கிருஷ்ணர் வாழ்ந்ததாகக் கூறப்படும் ருக்மணிநகர், பாவங்களைப் போக்குமென நம்பப்படும் பரசுராம் கண்ட் ஏரி, பனி மூடிய இமயமலைகள் என மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
 
அதிக மழை பொழிவு உள்ள மாநிலம் இது. மே முதல் செப்டம்பர் மாதங்களில் ஏறக்குறைய 4100 மி.மீ. மழை பெய்கிறது. 5 ஆயிரம் தாவரங்கள், 85 பாலூட்டி வகைகள், 500 பறவை இனங்கள், அதிக எண்ணிக்கையிலான பட்டாம்பூச்சிகள் எனப் பல்லுயிர் தேசமாக இருக்கிறது.
 
வற்றாத ஆறுகளும் பெரிய மரங்களும் கரும்பு தோட்டங்களும் விளைந்த மூங்கில்களுமாய்ப் பசுமை மாறா நாடாக விளங்கும் அருணாசலப் பிரதேசம் இயற்கை செதுக்கிய தேசம்.
 
  • 2 weeks later...
Posted

மத்தியப் பிரதேசம்- இந்தியாவின் இதயம்

 

mathyapradesh_2351352f.jpg

 

மத்தியப் பிரதேசத்தின் இடவமைவை நர்மதை மற்றும் சோன் பள்ளத்தாக்குகள் வரையறுக்கின்றன. பழைய, மத்திய, புதிய கற்காலம் மற்றும் இரும்பு காலங்கள் முதல் மத்தியப்பிரதேச வரலாறு தொடங்குகிறது. பிம்பேத்திகாவில் உள்ள 600 குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கும் சுமார் 500 குகைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்கின்றன.
 
ஆண்ட பரம்பரைகள்
 
இந்தியாவின் மத்தியப் பகுதியைச் சாகர்களும் குஷானர்களும் மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிப் பெரும் ராஜ்ஜியமாக மவுரியர்களும் ஆண்டனர். வடக்குப் பகுதியில் சாதவாகனர்களும், மற்றப் பகுதிகளைச் சத்திரபதிகளும் பின்னர் தென்னிந்திய மன்னர் கவுதமிபுத்திர சதாகாரணி ஆதிக்கம் செலுத்தினர்.
 
அவருக்குப்பிறகு குப்தர்கள், ஹூனர்கள், யசோதர்மன், ஹர்ஷர், ராஷ்ட்டிரகூடர்கள், பராமார்கள், பண்டல்கண்ட் சாண்டெலாக்கள், கோண்டு ராஜ்ஜியம், டெல்லி, துருக்கி, குஜராத் சுல்தான்கள், மொகலாயர்கள், மராட்டியர்கள், ஹோல்கர்கள், மஹாகோசர்கள், சிந்திக்கள், போபாலை ஆண்ட ஆப்கானிஸ்தான் அரசர் தோஸ் மொமது கான் என ஆண்ட பரம்பரையின் பட்டியல் நீளமானது.
 
பிரிட்டிஸாரின் சி.ஐ.ஏ.
 
இந்தச் சூழலில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். வங்கம் முதல் பாம்பே, மெட்ராஸ் வரை தங்கள் எல்லையை விரிவாக்கினர். இதற்காக மராட்டியர்களை விரட்டியடித்துப் பெரும்பாலான மத்தியப்பிரதேசப் பகுதிகளைக் கைப்பற்றினர். அவற்றில் சில பகுதிகளைச் சென்ட்ரல் இந்தியா ஏஜென்சி (சி.ஐ.ஏ.) என்ற அமைப்பை ஏற்படுத்திக் கண்காணித்து வந்தனர்.
 
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களில் ம.பி.யின் பங்கு மகத்தானது. முதல் சுதந்திரப் போரில் வீரமரணம் அடைந்த ராணி லட்சுமி பாய் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்ட விடுதலை வீரர்களைத் தந்த மாநிலம். ஜபல்பூர் கொடி சத்தியாகிரகம், பழங்குடியினர் நடத்திய உப்பு சத்தியாகிரகம் ஆங்கிலேயரை மிரளச்செய்தன.
 
பிரம்மாண்ட உதயம்
 
1947-ல் நாட்டின் விடுதலைக்குப்பிறகு மத்தியப் பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1956-ல் மாநிலங்கள் மறு சீரமைப்பு சட்டத்தின் கீழ் இவற்றை ஒன்றிணைத்து இந்தியாவின் முதல் பெரிய மாநிலமாக உருவெடுத்தது மத்தியப்பிரதேசம். போபால் தலைநகரானது.
 
கடந்த 2000 நவம்பர் 1-ல் சில பகுதிகளைப் பிரித்துப் புதிதாகச் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் முதல் பெரிய மாநிலம் என்ற பெருமையில் இருந்து ஒருபடி இறங்கி, ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்துக்கு வந்தது.
 
எல்லைகள்
 
மேற்கே குஜராத், வடமேற்கே ராஜஸ்தான், வடகிழக்கே உத்தரப்பிரதேசம், கிழக்கே சத்தீஸ்கர், தெற்கே மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நடுவே ம.பி. அமைந்துள்ளது. வட மற்றும் தென்னிந்தியாவின் எல்லையாக நர்மதை ஆறு விளங்குகிறது.
 
மாநில மக்கள் தொகை 7.26 கோடி. 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். 20 சதவீதம்பேர் மலைவாழ் மக்கள். டிராவிட், சஹாரியா, பாரியா, படால்கோட் பாரியா, பீல், சாண்டியா, கோலர்கள், பாணிக்கா, தானுக், சவுர் கோண்ட் முக்கியப் பழங்குடிகளாகும்.
 
மாநிலத்தின் முதல் மொழி ஹிந்தி. ஆங்கிலம் இரண்டாவது மொழி. மராத்தி, உருது, மால்வி, பண்டேலி, பாஹேலி, நிமாடி, தெலுகு, பிலோடி, கோதி, கொர்கு, கால்டோ, நிகாலி ஆகிய மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.
 
முதன்மை தொழில்
 
விவசாயமே முதன்மை தொழில். 23,233 ஹெக்டேரில் சாகுபடி நடக்கிறது. கோதுமை, சோயா, சோளம், பூண்டு முக்கிய விளைபொருள்கள். இவை தவிர, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, எண்ணை வித்துகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகளின் சாகுபடியும் நடக்கிறது. ஓபியம் உற்பத்தியில் ம.பி.யே முதலிடம்.
 
நர்மதா, சம்பல், தபதி, பேட்வா, சோன், ஷிப்ரா, காளிசிந் மற்றும் தாவா நதிகளும் கென், சோனார், பார்னா மற்றும் டான் ஆறுகளும் வளம் சேர்க்கின்றன.
 
கனிம வளத்தில் 2-வது பணக்கார மாநிலம். வைரம், சுண்ணாம்புக்கல், இரும்பு, மாங்கனீசு, பாக்சைட், செப்பு, பாஸ்பேட், டோலமைட் மற்றும் நிலக்கரி தாதுகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதம் வனம். சிமெண்ட் தயாரிப்பில் 3-வது இடம்.
 
படிப்பறிவு 70.6 சதவீதம். பாலின விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள். இந்துக்கள் 91.15 சதவீதம். இஸ்லாமியர்கள் 6.37 சதவீதம். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமண மதத்தினர் 2 சதவீதம் வசிக்கின்றனர்.
 
உலகப்புகழ் பெற்ற திருவிழா
 
பெரும்பாலான பண்டிகைகள் விவசாயிகளின் வேலை நாட்களைப் பொருத்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. சிம்ஹாஸ்தா, சிவராத்திரி, ராமநவமி, ஹிரா பூமியா, பிர்புதான், நாகாஜி, டேடாஜி, மகாமிருத்துயன்ஜெய் பண்டிகைகளும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பாபா ஷகாபுதீன் அவுலியா மற்றும் 3 நாள் திருவிழாவான ஆலாமி தாபிலீகி இஸ்திமா பண்டிகை பிரசித்திபெற்றது. இதில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து இஸ்லாமியர்கள் வருகின்றனர்.
 
கஜூராஹோ
 
ஆதி முதலே கலை இலக்கியத்தில் கோலோச்சி வந்துள்ளது மத்தியப் பிரதேசம். பராமரா மன்னன் போஜ் பல்துறைகளில் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர். சாண்டெலா வம்சத்தினர் உலகப் புகழ்பெற்ற கஜூராகோ கோயில் நகரத்தை இங்குதான் உருவாக்கினர்.
 
மேலும் இசை மற்றும் நாட்டிய விழாக்களும் அரங்கேறி வருகின்றன. இதன்படி லோக்ரங் மற்றும் லோக்ரன்ஜன், தான்சேன் இசைவிழா, கான்கவுர், பாதை, பாரெடி, நவுராதா, அகிராய், பகோரியா உஸ்தா அலாவுதீன்கான் இசைவிழா, காளிதாஸ் சமரோ, உஜ்ஜியினி மற்றும் கஜூராஹோவில் நடைபெறும் நாட்டிய விழாக்கள் முக்கியமானவை.
 
இவைத் தவிர தியாகம், வீரம், காதல், கடமை மற்றும் தீரச்செயல்களைக் கதைகளாகக் கூறும் வகையிலான நாட்டுப்புறப் பாடல்கள் பிரபலமானவை. ஓவியங்கள் தீட்டுவதில் இம்மாநில மக்கள் வல்லவர்கள். பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையை வளர்த்தெடுத்ததில் முக்கியப் பங்கு இந்த மாநிலத்துக்குண்டு.
 
மகுடங்கள்
 
சான்ச்சியில் அசோகர் கட்டிய சான்சி ஸ்தூபிகள், போஜ்பூரில் கட்டிமுடிக்கப்படாத அழகிய சிவன் கோயில், பச்மாரியின் சாந்தமான அழகு, ஒளிரும் பளிங்குப் பாறைகள், பென்ச், பண்ணா, சாத்புரா, கண்ஹா மற்றும் பந்தவ்கார்ஹ் புலிகள் சரணாலயங்கள், மாதவ், பாசில், வான் விஹார் தேசியப் பூங்காக்கள், ஆதி மனிதர்களின் குகை வாழ்விடங்கள், தனித்த புகழுடைய கஜுராஹோ கோயில் ஆகியவை மத்தியப் பிரதேசத்தின் மகுடங்கள்.
 
நாட்டின் நடுவே அமைந்ததால் மட்டுமல்ல, செறிவான கலை கலாச்சாரங்களின் குறியீடாகத் திகழும் மத்தியப்பிரதேசம், இந்தியாவின் இதயம் என அழைக்கப்படுவது பொருத்தமானதுதான்.
 
Posted

சிக்கிம் -  எல்லையோர சிகரம்

 

sikkim_2366355g.jpg

 

 

buddha_2366360g.jpg

புத்த துறவி ரின்போக்சேவின் 120 அடி உயர சிலை

 

லிம்பு மொழியில் ‘சு’ என்றால் ‘புதிய’ ‘கியம்’ என்றால் ‘இடம்’அல்லது ‘வீடு’ என்று பொருள். அந்த ‘சுக்கியம்’ மருவிச் சிக்கிம் ஆனது.

 
ஏறக்குறைய இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த மவுரிய பேரரசோ, மொகலாயர் ராஜ்ஜியமோ சிக்கிமை நெருங்கக்கூட முடியவில்லை. அவ்வளவு தூரத்திலும் உயரத்திலும் அமைந்திருக்கிறது.
 
திபெத்தியர்களின் அதிகப்படியான வருகையால் பவுத்த மதம் சிக்கிமில் நிலைகொண்டது. கி.பி.8-ம் நூற்றாண்டில் திபெத் புத்தத் துறவி ரின்போச்சே சிக்கிம் வழியாகப் பயணித்ததாகவும், அவரது மூன்று சீடர்கள் பவுத்தத்தைப் பரப்ப சிக்கிம் வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. பவுத்தத் துறவியே மன்னராக ஆக முடியும் என்பதால் குரு டாஷியின் 5-வது தலைமுறையைச் சேர்ந்த புன்ட்சாங் நாம்கய்ல் 1642-ல் சிக்கிம் மன்னராகப் பதவியேற்றார்.
 
திபெத்தின் ஆதிக்கம்
 
சிக்கிமில் பெரும்பாலும் திபெத்தின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இருப்பினும் பூட்டானும் தங்கள் பங்குக்கு ஆக்கிரமித்தது. நேபாளத்தின் ஆதிக்க மனப்பான்மை சிக்கிமில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது. நேபாளத்தைப் பிடிக்காத பிரிட்டிஷ் இந்தியா சிக்கிமுக்கு ராணுவ உதவி அளித்ததன்பேரில் போர் நடந்தது. இதில் நேபாளம் பின்வாங்கியது.
 
இதையொட்டி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு நன்றியாக மோராங்கிலும் பின்னாளில் டார்ஜிலிங்கிலும் வரி வசூலிக்கும் உரிமை பிரிட்டிஷாருக்கு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் திபெத்தில் வளர்ந்துவரும் ரஷ்யாவின் செல்வாக்கைத் தடுக்கவும் தனது வியாபாரத் தளத்தை விரிவாக்கவும் பிரிட்டிஷ் இந்தியா முடிவுசெய்தது. திபெத்தை இணைக்கச் சிக்கிம் அனுமதியுடன் 1886-ல் சாலை அமைத்தது. இதில் சந்தேகமடைந்து 1888-ல் தாக்குதல் தொடுத்த திபெத்தியர்களை பிரிட்டிஷ் படைகள் அடக்கின. சிக்கிமுக்குள் நுழைந்ததுடன் அரசியல் நிலவரங்களைக் கண்காணிக்க 1889-ல் கிளைவ் வைட் என்ற அதிகாரியையும் நியமித்தது ஆங்கில அரசு.
 
1947-ல் இந்தியா விடுதலையடைந்தபோது தனிநாடாக நீடிக்க வேண்டும் என்ற சிக்கிம் மன்னர் தாஷி நாம்கய்லின் கோரிக்கையை ஜவஹர்லால் நேரு ஏற்றுக்கொண்டார். இருப்பினும் வெளியுறவு, சட்டம், ஒழுங்கு ஆகியவற்றில் இந்தியாவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் இந்தியா தலையிடவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
துண்டிப்பு
 
1962-ல் நடந்த இந்திய- சீனப் போரின்போது சிக்கிம் எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. எனவே இந்தியாவைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் “இந்தியா அரசியல் ரீதியாக அபாயகரமான நாடு” என்று 1966-ல் வெளிநாட்டுப் பத்திரிகைக்கு அப்போதைய மன்னர் பால்டன் தொன்ட நாம்கய்ல் பேட்டியளித்தார். இது பதற்றத்தை ஏற்படுத்தியது. சிக்கிமில் முடியாட்சிக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி வெடித்தது.
 
பொது வாக்கெடுப்பு
 
சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமைத்த குழுவின் பரிந்துரையின்பேரில் ஐ.நா. பிரதிநிதிகள் முன்னிலையில் அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 97.6 சதவீதம் பேர் இந்தியாவுடன் இணைய வாக்களித்தனர். இதன்பேரில் 1975-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் 22-வது மாநிலமாக சிக்கிம் உதயமானது. 1979-ல் நடந்த பொதுத் தேர்தலில் சிக்கிம் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, நார் பகதூர் பண்டாரி முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
 
குடியேற்றம்
 
நேபாளிகளின் அபரிமிதமான குடியேற்றத்தால் தற்போது இந்துக்களே அதிகமாக உள்ளனர். இதன்படி 60 சதவீதம் இந்துக்கள், 28 சதவீதம் பேர் பவுத்தம், 6.6 சதவீதம் கிறிஸ்தவம், மற்றவர்கள் 4 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.
 
மேற்கே நேபாளம், வடக்கு மற்றும் வடகிழக்கே சீனா, திபெத், கிழக்கே பூட்டான், தெற்கே இந்தியாவின் மேற்கு வங்கம் அமைந்துள்ளது. சர்வதேச எல்லைகளைக் கொண்ட மாநிலம் என்பதால் சில விதிமுறைகளுக்கு உட்பட்டே சுற்றுலா செல்ல முடியும்.
 
சுற்றுலா மூலமே மாநிலத்துக்கு வருவாய் கிடைக்கிறது. உலகின் 3-வது உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்கா இங்குதான் உள்ளது. 28 மலைச்சிகரங்கள், 227 ஏரிகள், 5 வெப்ப நீரூற்றுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகள் என இயற்கை கோலோச்சும் மாநிலம் இது.
 
அரிசிப் பள்ளத்தாக்கு
 
பெரும்பாலும் பாறை நிலங்களாய் இருப்பதால் வேளாண்மைக்கு உகந்த மாநிலம் அல்ல. அடுக்கு வேளாண்முறையில் நெல் பயிரிடப்படுகிறது. இதனாலேயே திபெத்தியர்களும் பூட்டானியர்களும் சிக்கிமை அரிசிப் பள்ளத்தாக்கு என்று அழைக்கின்றனர். இதுதவிர சோளம், கோதுமை, பார்லி, ஆரஞ்சு, தேயிலை ஆகியவை உற்பத்தியாகின்றன. ஏலக்காய் உற்பத்தியில் முதல் மாநிலம். டீஸ்டா மற்றும் ரங்கீத் நதிகள் பாய்கின்றன.
 
தோல் பதனிடுதல் முக்கியமான தொழில். காப்பர், டோலமைட், கிராபைட், நிலக்கரி, துத்தநாகம் போன்ற தாதுகள் உள்ளன. இருப்பினும் தொழில் வளர்ச்சியில்லை.
 
மக்கள் தொகை 6 லட்சம். ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு 82.2 சதவீதம்.
 
இணைக்கும் மொழி
 
சிக்கிமை இணைக்கும் பொது மொழியாக நேபாளம் இருக்கிறது. இதுதவிர டிசோங்கா, க்ரோமா, குருங், லிம்பு, மகர், மஜி, மஜ்வார், ராய், ஷெர்பா, தமங், துலுங், திபெத்தியன் மற்றும் யாகா ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இந்தி, ஆங்கிலமும் புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொருவரும் சராசரியாக ஐந்து மொழிகள் வரை பேசுகின்றனர்.
 
பூட்டியாக்கள், லெப்சே முக்கியமான பழங்குடியினங்கள். பிஹாரிகள், வங்காளிகள் மற்றும் மார்வாரிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட இனங்கள் வசிக்கின்றன.
 
பெரும்பாலும் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி, தசரா, சங்காராந்தி உள்ளிட்ட அனைத்துப் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. புத்த மதப் பண்டிகைகளான லோசர் (திபெத் புத்தாண்டு), சாகாத் தாவா, ஹபா துச்சென், டுருப்கா தேசி மற்றும் பும்ச்சு ஆகியவையும் கொண்டாடப்படும். மொகரம் மற்றும் கிறிஸ்துமஸும் முக்கியத்துவம் வாய்ந்தவை. லெப்சா இசை, ராக் இசை சிக்கிமில் பிரபலம்.
 
உலகின் அழகிய இடமாகவும் பனி மூடிய சிகரங்களுடனும் வண்ணத்துப் பூச்சிகளின் வசிப்பிடமாகவும் இயற்கையின் வனப்பில் உண்மையிலேயே மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது சிக்கிம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

'யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா'வின் தகவல்களுக்கு நன்றி! :icon_idea:

 

 மெதுவா பாத்து.... U.S.A. க்கு போட்டியாக...  U.S.I.  வரப்போகுது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 மெதுவா பாத்து.... U.S.A. க்கு போட்டியாக...  U.S.I.  வரப்போகுது. :lol:

 

அதைவிட 'தமிழக குடியரசு' நன்றே ! :) கனவிற்கு ஏன் பஞ்சம் ..? :lol:

 

Posted

 ஒடிசா - கடலோரக் கலிங்க தேசம்

 

odisa2_2380900g.jpg

 

 

odisa1_2380902g.jpg

இரவின் ஒளியில் கோனார்க் சூரிய கோயில்

 

odisa_2380903g.jpg

புவனேஸ்வரத்தில் உள்ள உதயகிரி மலைக் குகை

 

கலிங்கம், மகாகாந்தாரா, கமலமண்டலா, தெற்கு கோசலம், திரிகலிங்கம், மற்றும் ஒரிஸ்ஸா எனப் பல பெயர்களில் இன்றைய ஒடிசா அழைக்கப்பட்டது.

 
ஆதிவரலாறு
 
மகாபாரதத்தில் கலிங்கம் குறித்த பதிவுகள் உள்ளன. நந்தவம்சத்தில் இருந்து தொடங்குகிறது கலிங்கம். கி.மு. 261-ல் நடந்த கலிங்கப் போர் அசோகரைப் புத்த மதத்தைத் தழுவச் செய்தது. கரவேலாவின் புகழ்மிக்க ஆட்சி, சாதவாகனர்கள், சமுத்திர குப்தர், மராத்தியர்கள், சசாங்கா, ஹர்ஷவர்தன், சோமவம்சி வம்சம், கங்கா வம்சம், சூர்யவம்சி கஜபதி அரசர்கள், சாளுக்கிய வம்சம், சோழப் பேரரசு என முக்கியமான அரசுகளின் தடம் ஒடிசாவில் ஆழமாகவே பதிந்துள்ளது.
 
4 மற்றும் 5-ம் நூற்றாண்டுகளில் கடல் மூலம் வாணிகம் சிறப்பாக நடந்தது. இதன் மூலம் குடியேற்றமும் பண்பாடும் அயல்நாடுகளுக்குப் பரவியது. இலங்கையின் முதல் மன்னன் விஜயா ஒரிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற தகவல் இதனைச் சொல்லும்.
 
7-வது நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் வருகை நிகழ்ந்தது.
 
வங்கச் சுல்தான் சுலைமான் கார்னி கி.பி. 1568-ல் படையெடுத்து நுழைந்தார். பின்னர் மொகலாயர்களும் மராட்டியர்களும் அதிகாரத்துக்கு வந்தனர். 1803-ல் ஆங்கிலேயர்கள் ஒரிஸ்ஸாவில் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
 
உதயமான மாநிலம்
 
ஆங்கிலேய அரசின் நிலக் கொள் கையை எதிர்த்து 1817-ல் பிகா புரட்சி என்ற விவசாயிகள் எழுச்சி நடந்தது. புரட்சிக் குழுவின் தலைவர் பாகா ஜாட்டினும் அவரது சகாக்களும் கொல்லப்பட்டனர்.
 
1911-ல் வங்க மாகாணத்தில் இருந்து பீஹார் மற்றும் ஒரிஸ்ஸா தனிப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. 1920-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, ஒரிய மொழி பேசும் மக்களை இணைத்துத் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தது.
 
இதையடுத்து 24 சமஸ்தானங்களை உள்ளடக்கி 1936 ஏப்ரல் 1-ம் தேதி ஒரிஸ்ஸாவை ஆங்கிலேய அரசு அமைத்தது. 1947-ல் இந்தியா விடுதலையடைந்தது. சாரய்கேலா மற்றும் கார்ச்சவான் சமஸ்தானங்கள் பிஹாருடன் இணைக்கப்பட்டன. மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி 1950-ல் ஒரிஸ்ஸா முழுமைபெற்ற மாநிலமாக உதயமானது.
 
வடக்கில் ஜார்க்கண்ட், வடகிழக்கே மேற்கு வங்கம், கிழக்கு மற்றும் தென்கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கில் ஆந்திரப் பிரதேசம், மேற்கில் சத்தீஸ்கர் மாநிலங்கள் தற்போதைய எல்லைகள்.
 
ஒரிய மொழி அதிகாரபூர்வ அலுவல் மொழி. சாந்தல், சாரவா, கோன்ட், ஓரயான், வங்கம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. 2014-ல் ஒரிய மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
 
மக்களும் மதங்களும்
 
இந்துக்கள் 94.35 சதவீதமும், இஸ்லாமி யர்கள் 2.07 சதவீதமும் கிறிஸ்தவர்கள் 2.44 சதவீதமும் ஏனையவர்கள் சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களும் வசிக்கின்றனர்.
 
மக்கள் தொகை: 4 கோடியே 20 லட்சம் பேர். ஆயிரம் ஆண்களுக்கு 978 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதாச்சாரம் உள்ளது. எழுத்தறிவு 73.45 சதவீதம்.
 
வேளாண்மை
 
மூன்றில் ஒரு பங்கு மக்கள் விவசாயிகள். நெல் முதன்மைப் பயிர். பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், கோதுமை, மக்காச்சோளம், கரும்பு, தேங்காய் மற்றும் வாசனைப் பொருட்கள் விளைகின்றன. குறைவான சூரிய ஒளி, மாறுபட்ட மழைப்பொழிவு, குறைவான உரம் பயன்பாடு போன்றவற்றால் வேளாண்மையில் பெருமளவில் சாதிக்க முடியவில்லை.
 
தாது வளம்
 
குரோமைட், மாங்கனீஸ், கிராபைட் நிக்கல் மற்றும் இரும்பு போன்ற தாது வளத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலம். நிலக்கரியும் வெட்டி எடுக்கப்படுகிறது.
 
மணல் சிற்பங்கள்
 
பட்டை சித்திரம் என்ற ஓவிய வடிவம் ஒடிசாவில் மட்டுமே காணக்கூடியது. கைவினைக் கலைப்பொருட்களை வடிவமைப்பதில் ஒடியர்கள் வல்லவர்கள்.
 
தற்போதைய ஒடிசாவின் மணல் சிற்பம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்தப் பகுதியில் இந்தக் கலை செழித்தோங்கக் காரணமாகக் கதை ஒன்று கூறப்படுகிறது: தண்டி ராமாயணத்தை எழுதியவர் புலவர் பலராம் தாஸ் தீவிர ஜெகநாதர் பக்தர். தேரோட்டத்தின்போது இறைவனைத் தரிசிக்க முயன்ற அவர் தடுத்து விரட்டப்பட்டார்.
 
அவமானமடைந்த அவர் நேராக மகோதாதி கடற்கரைக்கு வந்தார். தங்க நிற மணலைக் குவித்து ஜெகநாதரையும் தேவி சுபத்திராவையும் சிற்பமாகப் படைத்து வழிபட்டார். அப்போது தேரில் இருந்த இறைவன், தேவியுடன் மறைந்து மணல் சிற்பம் முன்பு தோன்றினார்கள். பலராம் அவர்களை வணங்கி மகிழ்ந்தார் என்கிறது கதை. இதன் தொடர்ச்சியாகவே இங்கு மணல் சிற்பக் கலை தழைத்தோங்கியதாகக் கூறப்படுகிறது.
 
சுற்றுலா
 
கோனார்க் சூரியக் கோவில், பூரி ஜெகநாதர் ஆலயம், ராஜாராணி கோயில், உதயகிரி மற்றும் காந்தகிரி குகைகள், சிலிக்கா ஏரி, பூரி கடற்கரை, பிதர்காணிகா தேசியப் பூங்கா, நந்தன்கனன் உயிரியல் பூங்கா, ஏவுகணை சோதனை தளமான வீலர் தீவு ஆகியவை முக்கிய இடங்கள்.
 
அரசியலமைப்புச் சட்டம் 113-வது திருத்தத்தின்படி நவம்பர் 2010-ல் ஒரிஸ்ஸாவின் பெயர் ஒடிசா என மாறியது. பெயர் மாறினாலும் செறிவான கலாச்சாரத்தில் மாறாத தேசமாகவே திகழ்கிறது ஒடிசா.
 
Posted

 இமாச்சல பிரதேசம் -  ஆப்பிள் மாநிலம்

 

imachal1_2395683g.jpg

 

imachal_2395684g.jpg

 

 

இமயமலையின் அருகில் அமைந்துள்ள இமாச்சல பிரதேசத்தை மகாபாரதமும் பேசுகிறது. இதற்கு தேவ பூமி என்ற பெயரும் உண்டு. இங்குள்ள கோய்லி, தாகி, தாக்குரி, தாசா, காஸா, கின்னர், கிராத் ஆகிய இனங்கள் ஆதி பழங்குடிகளாகக் கருதப்படுகின்றன.
 
குடியேற்றங்கள்
 
கி.மு. 2250 1750 காலகட்டங்களில் சிந்து சமவெளி நாகரிக மக்கள் இமாச்சலில் குடியேறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது முதல் குடியேற்றம். மங்கோலியர்களாக அறியப்படும் மக்கள் குழு இரண்டாவதாக வந்துள்ளது. மூன்றாவதாக, ஆரியர்கள் எனப்பட்டவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்துள்ளனர்.
 
மவுரியப் பேரரசின் அதிகார எல்லை இமாச்சல்வரை இருந்தது. அதன்பிறகு ஹர்ஷர், தாக்கூர் மற்றும் ராணாக்களின் ஆளுகையிலும் இமாச்சல் இருந்தது. கி.பி.883-ல் காஷ்மீரை ஆண்ட சங்கர் வர்மாவின் செல்வாக்கு இமாச்சலிலும் பரவியிருந்தது. 1043-ல் ராஜபுத்திரர்கள் ஆண்டனர். பின்னர், சன்சார் சந்த் மகாராஜா, சீக்கியப் பேரரசர் மகாராஜா ரஞ்சித் சிங், 1804-களில் இஸ்லாமியத் தளபதிகள் மஹ்மூத் கஜ்நாவி மற்றும் தைமூர், சிக்கந்தர் லோடி ஆகியோரைக் கண்டது இமாச்சல் பிரதேசம்.
 
கூர்க்கா போரும் கல்சா ராணுவமும்
 
இந்தச் சூழலில் 1768-ல் பழங்குடி கூர்க்கர்கள் நேபாளத்தில் அதிகாரத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களின் ராஜ்ஜியத்துடன் இமாச்சலின் சிர்மோர் மற்றும் சிம்லாவை இணைத்தனர். பின்னர், நடந்த ஆங்கிலேயர்- கூர்க்கா மோதலுக்குப் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் படிப்படியாக ஆங்கிலேயர் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினர்.
 
1839-ல் ரஞ்சித் சிங் மறைவால் உணர்ச்சிவசப்பட்டிருந்த சீக்கியர்களின் கல்சா ராணுவம் 1845-ல் ஆங்கிலேயர் மீது தாக்குதல் தொடுத்தது. இருப்பினும் பல மலைப்பிரதேச ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்கள் பக்கம் நின்றனர்.
 
விடுதலைப் போராட்டக் களம்
 
1857-ல் நடந்த முதல் விடுதலைப் போருக்குப் பின்னர், ஆங்கிலேயருக்கு எதிரான மனப்பான்மை மாநில மக்களிடையே உருவானது. சுதந்திரத்துக்கான தீரமிக்க போராட்டங்கள் வெடித்தன.
 
18-வது மாநிலம்
 
1947-ல் நாடு விடுதலைக்குப் பிறகு 1948 ஏப்ரல் 15-ல் இமாச்சல் பிரதேசத்துக்கான முதன்மை மாகாண ஆணையர் நியமிக்கப்பட்டார். 1956 நவம்பர் 1-ல் யூனியன் பிரதேசமாக உயர்ந்தது. 1966-ல் பஞ்சாப்பில் இருந்த கங்ரா உள்ளிட்ட பல மலைப்பிரதேசங்கள் இமாச்சலுடன் இணைக்கப்பட்டன. 1971 ஜனவரி 25-ல் இந்தியாவின் 18-வது மாநிலமாக உதயமானது.
 
வடக்கில் ஜம்மு காஷ்மீர், மேற்கு மற்றும் தென்மேற்கில் பஞ்சாப், தெற்கில் ஹரியாணா, தென்கிழக்கில் உத்ராஞ்சல், கிழக்கில் திபெத் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 450 மீட்டர் முதல் 6,500 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது. 40 சதவீதம் வனப்பகுதிகளாகும்.
 
தன்னிறைவு
 
வேளாண்மையில் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்ற மாநிலம். 93 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். முக்கியமான பயிராகக் கோதுமை, சோளம், நெல் மற்றும் பார்லி விளைகிறது. காய்கறி, பழ உற்பத்தியில் முதன்மை மாநிலம். ஆண்டுக்கு ரூ.300 கோடி வர்த்தகம் நடக்கிறது. இதனால் இமாச்சல் பிரதேசத்துக்கு ‘ஆப்பிள் மாநிலம்’ என்ற பெயரும் உண்டு.
 
போக்குவரத்து வசதியில்லாததால் தொழில் வளம் சொல்லும்படியில்லை. தாதுவளம் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே. சுண்ணாம்புக்கல், ஜிப்சம், பாறை உப்பு உள்ளன. நீர் மின் உற்பத்தியில் சாதனை செய்யப்பட்டுள்ளது.
 
மக்கள்
 
மக்கள் தொகை 68.65 லட்சம் பேர். எழுத்தறிவு பெற்றோர் 82.80 சதவீதம் பேர். பாலின விகிதாச்சாரம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள். இந்து மதத்தினர் 95.45 சதவீதம், இஸ்லாமியர் 1.94 சதவீதம், சீக்கிய மற்றும் பவுத்த மதத்தினர் 2.26 சதவீதமும் கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர்.
 
பண்பாடு
 
இந்தி மாநில மொழியாக இருந்தாலும் மக்கள் அதிகம் பேசுவது பஹாரி. இதுதவிர, பகுதிவாரியாக மாண்டி, குலாவி, கேஹ்லுரி, ஹிண்டுரி, சாமேலி, சிர்மவுரி, மியாஹாஸ்வி, பங்வாலி உள்ளிட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
 
பாடல், நடனம் இல்லாத பண்டிகையோ விழாவோ இல்லை. போரி விழா, தசரா, , ஹோலி, தீபாவளி, மின்ஜார், லோஸார், டயாளி உள்ளிட்ட 25 வகையான பண்டிகைகளும் சோவி ஜாட்டாராஸ், காஹிக்கா, ரேணுக்கா, லவி சீக்கிய விழா உள்ளிட்ட 19 விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. தொலுரு, பகாககட், சுகாககட், உள்ளிட்ட நாட்டுப்புறப் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.
 
கலைநயம்
 
கல் மற்றும் உலோகச் சிற்பங்கள், ஓவியம், நகை வடிவமைப்பு, துணி அச்சு, நூற்பு மற்றும் நெய்தல், பொம்மைகள் உற்பத்தி, காலணி உற்பத்திகளில் இமாச்சல் மக்களின் கைவண்ணம் மிளிரும்.
 
உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் இமாச்சல் தனித்து விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் வனம், பனி மூடிய நீர்வீழ்ச்சி, ஆறுகள், பள்ளத்தாக்குகள் என வனப்புமிக்க மலைப்பிரதேசமாக, இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலம் இமாச்சல்.
 
சிம்லா, பாலம்பூர், தர்மசாலா, குலு-மணாலி, சாம்பா- டல்ஹவுசி மற்றும் பீமாஹாலி, சாமுண்டா தேவி, சிண்ட்பூர்ணி, ரேணுக்கா கோயில்கள், மடாலயங்கள் உள்ளிட்டவை சுற்றச் சுற்றத் திகட்டாத பகுதிகள்.
 

himachalpradesh-location-map.jpg

Posted

 குஜராத் - மாநிலங்களை அறிவோம்: இந்தியாவின் அணிகலன்

 

kuja1_2403590g.jpg

 

 

kuja_2403591g.jpg

 

 

குஜ்ஜர்களின் நாடு. குர்ஜார்ராட்ரா என்று அழைக்கப்பட்டுப் பின்னாளில் குஜராத் ஆனது.
 
வரலாறு
 
சபர்மதி, மாகி நதிகளின் கரையோரங்கள், லோத்தல், ராம்பூர், ஆம்ரி உள்ளிட்ட இடங்களில் கற்கால மனிதர் வாழ்ந்த தடயங்களும் சிந்து சமவெளி நாகரிகத்தின் மச்சங்களும் உள்ளன. குஜராத் பழங்காலத்தில் எகிப்து, பஹ்ரைன், பாரசீக வளைகுடா நாடுகளுடன் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறது.
 
பண்டைய குஜராத்தை மவுரிய வம்சம் ஆண்டது. பிறகு சாகர்கள், மைத்ராகா வம்சத்தினர் ஆண்டனர். அவர்களுக்குப் பிறகு, சாதவாகனர் வம்சம், குப்த பேரரசு, சாளுக்கிய வம்சம், ராஷ்ட்ரகூடர், பாலா பேரரசு, குர்ஜாரா- ப்ரத்திகாரா பேரரசு, சவ்ரா, சோலங்கி, பாகிலா பழங்குடி வம்சங்கள், ராஜபுத்திரர்கள், வகேலாக்கள் என்று குஜராத்தில் பல அரசுகள் மாறி மாறி வந்துள்ளன. கி.பி.1297-ல் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியும் குஜராத்தில் ஏற்பட்டது. குஜராத்தின் முதல் சுல்தானாக ஜாபர்கான் முசாபர் ஆனார். பின்னர் மராத்தியர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
 
1600-களில் டச்சு, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குஜராத்தின் கடலோரப் பகுதியில் தங்களின் தளங்களை நிறுவினர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1614-ல் சூரத்தில் முதல் தொழிற்சாலையை நிறுவியது. பின்னர் ஆங்கிலேயர்- மராட்டியர் போர் நிகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆதிக்கம் வளர்ந்த போது, பாம்பே ராஜதானி உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் குஜராத் வந்தது.
 
இந்தியாவின் நகை
 
இந்திய விடுதலையின் விதையைப் போன்ற காந்தியடிகள் பிறந்தது இந்த மண்ணில்தான். சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், உள்ளிட்ட விடுதலை வீரர்களின் தலைமையிலான போராட்டம் ஆங்கிலேயரை உலுக்கியது.
 
நாடு விடுதலையடைந்த பிறகு 1948-ல் குஜராத்தி மொழி பேசும் மக்களை உள்ளடக்கிய தனி மாநிலக் கோரிக்கையாக ‘மகா குஜராத்’ முழக்கம் முன்வைக்கப்பட்டது. 1960 மே 1-ல் பாம்பே ராஜதானி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. குஜராத், மகாராஷ்ட்ரம் மாநிலங்கள் உதயமாகின. குஜராத்துக்கு முன்பு அகமதாபாத் தலைநகராக இருந்தது. 1970-ல் அது காந்தி நகருக்கு மாற்றப்பட்டது. குஜராத்துக்கு ‘இந்தியாவின் மேற்குப் பகுதி நகை’ என்னும் பெயர் உள்ளது.
 
மக்களும் மொழியும்
 
குஜராத்தின் எல்லையாக, 1600 கி.மீ நீளத்துக்கு கடற்கரை உள்ளது. மேற்கில் அரபிக்கடலும், வடக்கில் பாகிஸ்தானும் வடகிழக்கில் ராஜஸ்தான், கிழக்கில் மத்தியப் பிரதேசமும் தெற்கில் மகாராஷ்ட்ரா, டாமன் டையூ, நாகர் ஹவேலி ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.
 
மக்கள் தொகை ஏறத்தாழ 6 கோடிப்பேர் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற பாலின விகிதாச்சாரம். எழுத்தறிவு 79.31 சதவீதம். இந்து மதத்தை 89.09 பேரும் இஸ்லாமை 9.06 பேரும் சமணத்தை 1.03 பேரும் மற்றவர்கள் ஏனைய மதங்களையும் பின்பற்றுகின்றனர்.
 
சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளின் கலவையே குஜராத்தி மொழி. பெரும்பாலும் குஜராத்தி, இந்தி பேசுகின்றனர். உருது, அராபி மற்றும் பாரசீகம், மராத்தி, மார்வாரி, பஞ்சாபி, தமிழ், தெலுகு, பெங்காலி, ஒரியா, மலையாளம் என பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
 
தொழில் வளம்
 
உலக முதலீட்டைக் கவர்வதில் குஜராத் முன்னணி வகிக்கிறது. ‘வைப்ரண்ட் குஜராத்’ என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 7936 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது.
 
ரசாயனம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி, சிமெண்ட், ஜவுளி, முத்து மற்றும் நகைகள், துறைமுக மேம்பாடு, வாகன மற்றும் பொறியியல் உற்பத்தியில் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை குஜராத் எட்டியுள்ளது.
 
வேளாண்மை
 
மாநிலத்தில் நர்மதை, தபி உள்ளிட்ட 61 நதிகள் பாய்கின்றன. 63 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். கோதுமை, எண்ணெய் வித்துகள், பருத்தி, நிலக்கடலை, பேரீச்சம், கரும்பு, பால் மற்றும் பால் பொருட்கள், மாம்பழம், வெங்காயம், கத்திரிக்காய், இஞ்சி ஆகியவை மகசூல் செய்யப்படுகின்றன.
 
கலாச்சாரச் செழுமை
 
இந்து, இஸ்லாமிய, ஐரோப்பிய கலாச்சாரங் களை உள்வாங்கிய
 
கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது குஜராத். கார்பா, கார்பி, ராஸ், தாண்டியா நடனங்கள், ஹல்லிசாகா குழு நடனங்களும் லுல்லாபீஸ், நுப்தியல் மற்றும் ரான்னடே பாடல்களும் பாவை, ராம்லீலா நாடகங்களும் பிரசித்தி பெற்றவை. 1650-களில் அக்யான் என்ற கதை சொல்லும் வழக்கம் இருந்தது.
 
பண்டிகைகள்
 
நவராத்திரி, சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஹோலி, மொகரம், ரம்ஜான்,ஆகியவை முக்கியமான பண்டிகைகள். வானில் பட்டத்தை பறக்க விடுவதற்காகவே ஒரு தனியான திருவிழா கொண்டாடப்படுகிறது.
 
சுற்றுலா
 
குஜராத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இவற்றில் அக்ஷார்தம் கோயில், அம்பாஜி கோயில், துவாரகாதேஷ், பகவத், சோம்நாத் மற்றும் சூரியக் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. லகோட்டா, உபக்கோட், தபோய், ஓகா, சின்ஜுவாடா, பத்ரா உள்ளிட்ட இடங்களில் உள்ள பழங்கால கோட்டைகளும், மகாத்மா காந்தியின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் காந்தி சமரக் சங்கராலாயா அருங்காட்சியகமும் உலக மக்களைக் கவர்ந்து இழுக்கின்றன.
 
சிங்கங்களின் புகலிடமாகத் திகழும் கிர் காடுகள், பிளாக் பக் தேசியப் பூங்கா, மரைன் தேசியப் பூங்காக்கள் மற்றும் 21 பறவைகள் சரணாலயங்கள் இங்கு உண்டு. அதனால் ஒரு சுற்றுலா தேசமாக குஜராத் திகழ்கிறது.
 
ஆளுமைகள்
 
பாகிஸ்தானின் தந்தை எனப்படும் முகமது அலி ஜின்னா, சர்தார் வல்லபாய் படேல், இந்த அணு விஞ்ஞானி விக்ரம் சாராபாய் உள்ளிட்ட ஆளுமைகளின் தேசம் இது. காந்தி பிறந்ததாலேயே குஜராத்துக்கு ஏகப்பெருமை. இந்தியா முழுவதுமே காந்தி தேசமாக இருந்தாலும் காந்தியின் பிறந்த தேசம் குஜராத் என்பதால் வந்த பெருமை அது.
 
  • 5 weeks later...
Posted
மாநிலங்களை அறிவோம்: மேகங்களின் தாயகம்- மேகாலயா

 

 

meha_2432987g.jpg

 

meha1_2432986g.jpg

 

புதிய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் இங்கே வசித்துள்ளனர். காசி, காரோ மலைகளில் அதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூர்வகுடி மக்களான காசி, ஜெய்ன்தியாஸ் மற்றும் காரோ பழங்குடியினரின் சுயாட்சிப் பகுதிகளாக இவை இருந்தன. பின்னர் 19-வது நூற்றாண்டில்தான் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ஆங்கிலேயர் அசாமுடன் மேகாலயாவை 1835-ல் இணைத்தனர்.
 
மாநில அந்தஸ்து
 
நாடு விடுதலை அடைந்தபோது இன்றைய மேகாலயா அசாமுக்கு உள்ளேயே இரண்டு மாவட்டங்களாக இணைந்து இருந்தது. தனியாக ‘மலை மாநிலம்’ அமைக்கக் கோரி 1960-ல் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969-ல் கொண்டுவரப்பட்டது. அசாமில் இருந்து பிரிந்து தன்னாட்சி பெற்ற பிரதேசமாக மேகாலயா 1970 ஏப்.2-ல் உதயமானது.
 
வடகிழக்கு மாநிலங்களின் மறுசீரமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் 1971-ல் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் மேகாலயா தனி மாநில அந்தஸ்தை 1972 ஜனவரி 21-ல் பெற்றது. வடகிழக்கின் 7 சகோதரிகள் என வர்ணிக்கப்படுகிற ஏழு மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்றானது.
 
தெற்கிலும் மேற்கிலும் வங்கதேச நாடும் மற்ற பகுதிகளில் அசாம் மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. வங்கதேசத்துக்கும் மேகாலயாவுக்கும் இடையே 440 கி.மீ. தூரத்துக்கு எல்லை அமைந்துள்ளது. மேகாலயாவின் மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதம் காடுகள்தான்.
 
கிறிஸ்தவர்கள்
 
மக்கள் தொகை 29.64 லட்சம். எழுத்தறிவு 75.48 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மூன்று மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. இங்குள்ள மக்களில் 70.25 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். இந்து மதத்தை 13.27 சதவீதம் பேரும் இஸ்லாமை 4.27 சதவீதம் பேரும் மற்ற மதங்களை 11.90 சதவீதம் பேரும் பின்பற்றுகின்றனர்.
 
மொழிகள்
 
ஆங்கிலம் அலுவல் மொழியாகவும் பரவலாகப் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. மக்களால் பேசப்படும் மொழிகளில் முக்கியமானவை காசி, காரோ. காசி மொழியில் பயன்படுத்தப்படும் அனேக வார்த்தைகள் இந்தோ – ஆரிய, நேபாள, வங்க, அசாமிய மொழிகளில் இருந்து தருவிக்கப்பட்டவை. காரோ மொழி கோச், போடோ மொழியின் நெருக்கமான வடிவமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, பினார், பியாட், நேபாளி மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.
 
தாய் வழி சமூகம்
 
மேகாலாயாவின் மண்ணின் மைந்தர்களாக, காசிஸ், ஜெய்ன் தியாஸ், காரோ இன மக்கள் உள்ளனர். இவர்களின் பண்பாடு தனித்துவமானது. பண்டைக்காலச் சமூக முறையான தாய்வழிச் சமூகத்தை இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த இனக் குழுக்களை டேவிட் ராய் என்பவர் ஆய்வு செய்துள்ளார். ‘‘இந்தச் சமூகத்தில் பெண்ணைச் சார்ந்தே ஆண் இருக்கிறான். குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திர மாகப் பெண் இருக்கிறார்’’ என்கிறார் அவர்.
 
சொத்துகளைப் பெண்களே நிர்வகிக்க வேண்டும். அவர்களே வயதான பெற்றோர்களையும் மணமுடிக்காதவர் களையும் பாதுகாக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பிறக்காத வீடுகளில் தத்து எடுப்பதும் அல்லது மருமகளாக வரும் பெண்களிடத்தில் குடும்பத்தின் பொறுப்புகளை ஒப்படைப்பதும் இவர்களின் சமூகக் கட்டமைப்பாக உள்ளது. தாய்வழிச் சமூகக் கட்டமைப்பு மேகாலயாவில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.
 
வேளாண்மை
 
வேளாண்மையில் 80 சதவீத மக்கள் ஈடுபடுகின்றனர். நெல், சோளம் முதன்மை பயிர்களாக உள்ளன.
 
உருளை, இஞ்சி, மிளகு, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கொய்யா, வாழை, பிளம்ஸ் உள்ளிட்ட பழங்கள், தேயிலை, முந்திரி, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், தக்காளி, கோதுமை, காளான் ஆகியவை மேகாலயாவின் முக்கியமான பயிர்கள்.
 
மேகாலயாவில் அதிக எண்ணிக்கையிலான ஆறுகள் உள்ளன. நிலக்கரி, சுண்ணாம்பு, கிரானைட், களிமண் உள்ளிட்ட தாதுக்கள் நிரம்பிய பூமியாக மேகாலயா உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் வளம்பெற உதவுகிறது. இங்கே விளையும் மஞ்சள் உலகில் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
 
பண்டிகைகள்
 
நடனங்களால் தங்களைத் தனித்துவ மிக்கவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் காசி இன மக்கள். பாம் கானா, சா சக், மைன்சியம், செங்குத், ஸ்நெம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்.
 
ஜெய்ன்தியாஸ் இன மக்கள்
 
மனிதன் – கலாச்சாரம் – இயற்கை ஆகியவற்றின் சமநிலையைப் பராமரிக்கும் வகையிலான விழாக்களையே கொண்டாடு
 
கின்றனர். இதில் சமூக இணக்கமும் ஒற்றுமையை வலியுறுத்தும்படியான அம்சங்களும் மேலோங்கி இருக்கும். புலித்திருவிழா, பாம் பலார், பாம் தோ, ராங் பிலிகான், துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் இவர்களுக்கானவை.
 
காரோ மக்களின் முக்கியமான பண்டிகை டென் பிளஸ்ஸியா, வாங்கலா, ரோங்குச்சு கலா, ஜமங் சாய் உள்ளிட்ட 15 வகைத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர்.
 
இவர்களின் பழங்குடிப் பண்பாட்டின்மீது கிறிஸ்துவம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை மூன்று இன மக்களும் பொதுவானதாகக் கொண்டாடுகின்றர்.
 
சுற்றுலா தேசம்
 
சுருள் சுருளாய் மேகக் கூட்டங்கள் தவழும் பள்ளத்தாக்குகள், எங்கும் பசுமை, முடிவுறா மலைத்தொடர்கள், நீர் வீழ்ச்சி, அடர்த்தியான காடுகள் என்று உலகைக் கவரும் சுற்றுலா வளத்தைக் கொண்டது மேகாலயா. நோகாளிகை அருவி, ஸ்வீட் அருவி, வேர்ட்ஸ் வேக், லேடி ஹைதரி பூங்கா, இயற்கையாகவே அமைந்த சுண்ணாம்புப் பாறை, மண் குகைகள் உள்ளிட்டவை பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை.
 
மேகாலயா என்றால் மேகங்களின் தாயகம் என்கிறது சமஸ்கிருதம். மேகங்களைப் போர்த்தியபடி படர்ந்து கிடக்கும் இந்தப் பசுமைப் பிரதேசம் இயற்கை வாசம் செய்யும் தேசம்.
 
meha12_2432985g.jpg
 
  • 2 weeks later...
Posted

 ஹரியாணா - மகாபாரதப் போர்க்களம் 

dance_2440577g.jpg

கடவுளின் இல்லம், பசுங்காடு என்று ஹரியாணாவுக்கு அர்த்தம். அபிராயனா வம்சம் ஆண்டதால் ஹரியாணா வந்ததாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. கி.மு.1328-ல் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டோ ஹரியாணாவை பூலோக சொர்க்கம் என்கிறது.

சிந்துசமவெளி , முந்தைய ஹரப்பா நாகரீகம், மற்றும் வேதகால நாகரிகம் செழித்து இருந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு கிடைத்த பாண்டங்கள், சிற்பங்கள், அணிகலன்களை வைத்து மகாபாரதப் போர் இங்குள்ள குருஷேத்திரம் எனும் பகுதியில்தான் நடந்தது என்றும் ஒரு வாதம் உள்ளது.

ஹர்ஷவர்த்தன், பிரித்திவிராஜ் சவுகான், ஷெர்ஷாசூரி, மொகலாயர், மராத்தியர்கள், டெல்லி சுல்தான் என்னும் முக்கியமான அரசுகளின் பகுதி இது.

நுழைவு வாயில்

மொகலாய அரசின் நிறுவனர் பாபர் முதல் பானிப்பட் போரில் இப்ராஹிம் லோடியை வீழ்த்தினார். பின்னர் வந்த ஹெம் சந்திர விக்கிரமாத்தியனுக்கு எதிராக அக்பரின் பாதுகாவலர் பைராம்கான் போரிட்டது இரண்டாம் பானிப்பட் போர்.

18-ம் நூற்றாண்டில் மொகலாயர் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆதிக்கத்துக்கு வந்த மராத்தியர்கள், ஆப்கானிஸ்தானின் அகமது ஷா துரானியை எதிர்த்து போரிட்டது 3-வது பானிப்பட் போர். இரண்டாவது ஆங்கிலேயர்- மராத்தியர் போர் மூலம் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி 1803-ல் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்துக்கு வந்தனர்.

மகாபாரதத்தின் குருக்ஷேத்ர போர், பானிப்பட் போர்கள் மற்றும் ஹூணர்கள், துருக்கியர் மற்றும் ஆப்கானிஸ்தானியர் என பலர் இந்தியாவுக்குள் நுழைய முயன்று தீர்க்கமுடன் நடத்திய போர்கள் அனைத்தும் ஹரியாணாவில் நிகழ்ந்தவை. இதனால் ஹரியாணாவுக்கு ‘வட இந்தியாவின் நுழைவு வாயில்’ என்ற பெயரும் வந்து சேர்ந்தது.

ராவ் துலா ராம்

1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக தீரமிக்க போராட்டத்தை ஹரியாணா வெளிப்படுத்தியது. இதில் முக்கியமான பாத்திரம் வகித்தது வீரர் ராவ் துலா ராம். போராளிகளுக்குத் தேவையான ஆயுதங்கள், பொருட்களை டெல்லிக்குச் சாமர்த்தியமாக அனுப்பினார்.

ஆங்கிலேயருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தினார். புரட்சியை ஆங்கிலேய படைகள் ஒடுக்கிய நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறி ரஷ்யா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களிடம் ஆங்கிலேயரை விரட்ட உதவி கோரினார். அவரது திட்டம் நிறைவேறும் முன்பே காபூலில் உயிரிழந்தார். ஹரியானாவைப் பொறுத்தவரை அவரே கதாநாயகன்.

புதிதாய்ப் பிறந்தது

விடுதலைக்குப் பிறகு, பஞ்சாப்பில் இருந்து 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 1966 நவம்பர் 1-ம் தேதி புதிய ஹரியாணா மாநிலம் பிறந்தது.

சண்டிகரை உள்ளடக்கிய காராட் தாலுகாவின் சில பகுதிகள் ஹரியாணாவில் இணைக்கப் பட்டாலும், சண்டிகர் தனி யூனியன் பிரதேசமானது. இப்போது ஹரியாணாவுக்கும் பஞ்சாப்புக்கும் அதுதான் தலைநகர்.

முதுகெலும்பு

மாநிலத்தின் பொருளாதார வளத்துக்கு வேளாண்மை முதுகெலும்பாக உள்ளது. தானிய உற்பத்தியில் முதன்மை இடம். கோதுமை, நெல், கரும்பு, எண்ணெய் வித்துகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. பருத்தி, காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் உற்பத்தியிலும் முக்கியத்துவம் பெற்ற மாநிலம்.

நாடும் மக்களும்

மாநிலத்துக்கு வடக்கே பஞ்சாபும் இமாச்சல பிரதேசமும், மேற்கிலும் தெற்கிலும் ராஜஸ்தானும் கிழக்கே உத்திரப்பிரதேசமும் எல்லையாக அமைந்துள்ளன. இந்தியாவின் தலைநகர் டெல்லியைக் கருவைச் சுமப்பது போல முழுவதுமாக உள்வாங்கி அமைந்துள்ளது ஹரியாணா.

மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2.5 கோடி. ஆயிரம் ஆண்களுக்கு 877 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு 76.6 சதவீதம்.

ஹரியாணா மக்களின் கலாச்சாரம் சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்து தொடங்குகிறது. பண்டைய மதவழிபாட்டு சடங்குகள், பாரம்பரியங்களை பாதுகாப்பவர்கள். நாட்டுப்புற கலாச்சாரம், பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்களை உயிர்ப்புடன் இன்றும் நிகழ்த்தி வருகின்றனர். பஞ்சாபியர்களைப் போலவே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

தமிழுக்கு அந்தஸ்து

ஹரியாணாவின் தாய் மொழி ஹர்யான்வி. மாநிலத்தின் அனைத்து மக்களாலும் பேசக்கூடிய பஞ்சாபி அலுவல் மொழி. இந்தி இரண்டாவதாக பேசப்படும் மொழி. பாக்ரி, அகிர்வதி உள்ளிட்ட பிற மொழிகளின் புழக்கமும் உண்டு.

ஹரியாணாவில் ஒரு தமிழ் பேசும் குடும்பம் கூட இல்லாத நிலையில் 1969-ல் அந்த மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டது. ‘மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழி பஞ்சாபியாகத்தான் இருக்க வேண்டும். இரண்டாவது மொழியாக எது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்’ என பஞ்சாபி சுபா இயக்கம் அறிவித்தது. இதன்படியே முதல்வராக இருந்த பன்சிலால் முதன்மை மொழியாக பஞ்சாபியையும் இரண்டாவது மொழியாக தமிழையும் அறிவித்தார்.

பஞ்சாபியும், இந்தியும் அதிகளவில் பேசும் ஒரு மாநிலத்தில், புழக்கத்திலேயே இல்லாத தமிழ் மொழி எப்படி என்பது விவாதப் பொருளாகவே இருந்து வந்தது. தமிழ் நீக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதி அளித்து வந்தன. கடைசியாக 2010-ல் தமிழ் நீக்கப்பட்டது.

தொழில் வளம்

தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ள குர்கான், முன்னணி தொழிற்சாலைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய தொழில் நகரமான பரிதாபாத், ஆசியாவின் மிகப்பெரிய காகித ஆலை மற்றும் சர்க்கரை ஆலையை உள்ளடக்கிய யமுனா நகர், கண்ணாடி, இரும்பு, டைல்ஸ் உற்பத்தியில் சாதனை படைக்கும் பாதுர்கர், ஜவுளி தொழில் வளமிக்க பானிப்பட் மற்றும் ஹிஸ்ஸார், அறிவியல் உபகரணங்கள் உற்பத்திக் கேந்திர மாக விளங்கும் ஆம்பலா, மோட்டார் வாகன உற்பத்தியில் முதன்மை பெற்று திகழும் ரோடாக், ஆசியாவின் மிகப்பெரிய தானியச் சந்தையான குருக்ஷேத்ரா ஆகியவை மாநிலத்தின் தொழில் வளத்துக்கு சாட்சியாக நிற்கின்றன.

முத்திரை

விளையாட்டுத் துறையில் சாதனை மாநிலம் இது. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய மற்றும் தேசிய விளையாட்டுகளில் தனி முத்திரை பதித்துள்ளது. கபடி, கோ கோ, ஜுடோ, குத்துச்சண்டை, மல்யுத்தம், வாலிபால் போட்டிகளில் பதக்கங்கள் தான். போர்க்கள வெற்றிகள் மட்டுமல்ல, விளையாட்டிலும் ஹரியாணாவுக்கு வெற்றிகள் குவியவே செய்கின்றன.

 

http://tamil.thehindu.com/general/education/மாநிலங்களை-அறிவோம்-மகாபாரதப்-போர்க்களம்-ஹரியாணா/article7321387.ece?widget-art=four-rel

 

 

Posted

 லட்சத் தீவு- அரபிக்கடலின் காவல்காரன்

laklaklak_2448425g.jpg

lakshadweeppp_2448423g.jpg

லட்சத் தீவு என்றால் லட்சக்கணக்கில் உள்ள தீவு என்று பொருள். ஆனால் இருப்பது 36-தான். அதிலும் மக்கள் வசிப்பது 10 தீவுகளில்தான். கடலுக்கடியில் நீளும் சாக்கோஸ்- லக்காதீவ் மலைத்தொடரின் வெளியில் தெரியும் மலையின் உச்சிப் பகுதிகளே இந்தத் தீவுகள். ஆதலால் இது கடலும் கடல் சார்ந்த நெய்தலும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும் கலந்த தேசம்.

தீவின் கதை

இந்தத் தீவில் பூர்வகுடிமக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அரபிக்கடலில் இப்படி ஒரு தீவு இருப்பது வெளியுலகுக்குத் தெரியவந்த கதை சுவாரஸ்யமானது. இஸ்லாம் மதம் மீது ஏற்பட்ட பற்று காரணமாக, சேர வம்சத்தின் கடைசி அரசர் சேரமான் பெருமாள் ரகசியமாக அரேபிய வர்த்தகர்களின் கப்பலில் ஏறி மெக்காவுக்குச் சென்றார்.

இதை அறிந்து அவரைத் தேடிச் சென்ற குழுவினர், புயலில் சிக்கி நடுக்கடலில் தீவு ஒன்றில் (தற்போதைய பாங்காராம் தீவு) தஞ்சம் புகுந்தனர். புயல் ஓய்ந்ததும் மீண்டும் கண்ணனூர் கிளம்பினார்கள். வழியில் மேலும் சில தீவுகளைப் பார்த்தார்கள். நாடு திரும்பியதும் இதுகுறித்து அரசனிடம் தெரிவித்தார்கள். இதையடுத்து, அங்குக் குடியேறி விவசாயம் செய்யும் மக்களுக்கு அந்த நிலம் சொந்தம் என அரசன் அறிவித்தார். அதனால் அமினித் தீவில் முதல் குடியேற்றம் நிகழ்ந்தது என்கிறது உள்ளூர் கதை. ஆனால், எந்த ஆதாரமும் இல்லை.

பரிசோதனைக் களம்

இந்த தீவுகளை பல்லவ ராஜ்ஜியமும் சோழர்களும் அடுத்தடுத்த காலகட்டங்களில் ஆண்டுள்ளனர். போர்த்துகீசியர்கள், கொளத்துநாடு வம்சம், சிராக்கல் மற்றும் அராக்கல் மன்னர்கள் எனப் படிப்படியாகத் தீவுகள் கை மாறின. 1783-ல் மைசூர் அரசன் திப்பு சுல்தான் வசம் அமினி குழுமத்தீவுகள் சென்றன. 1799-ல் ரங்கப்பட்டினம் போரில் திப்புவை வீழ்த்திய ஆங்கிலேயர்கள் மைசூரையும் அமினி தீவுக்கூட்டங்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில் சிராக்கல் ராஜா நிர்வகித்து வந்த அன்டோர்ட் தீவு 1847-ல் வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய ஆங்கிலேய அதிகாரி வில்லியம் ராபினிடம் சிராக்கல் ராஜா வட்டிக்குக் கடன் பெற்றார். 4 ஆண்டுகளில் வட்டி பெருகிட, கடனுக்கு ஈடாக மீதமுள்ள தீவுகளும் ஆங்கிலேயருக்குத் தாரை வார்க்கப்பட்டன. அது முதல் தீவுக்கூட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர் வசமாகின.

ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை அமலாக்கி வெற்றி கண்ட பரிசோதனைக் களம்தான் லட்சத் தீவு. இதையே இந்தியாவிலும் அமலாக்கி வெற்றியும் கண்டார்கள்.

மிகச் சிறிய யூனியன்

இந்தியா விடுதலை ஆனபிறகு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி இது யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. 1973-ல்தான் இதற்கு லட்சத்தீவு எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்திய யூனியன் பிரதேசங்களில் இது மிகச் சிறியது. பவளப்பாறைகள் நிரம்பிய ஒரே தீவுக்கூட்டம். இதன் மொத்தப் பரப்பு 32 சதுர கி.மீதான். 12 பவளத் தீவுகள், 3 திட்டுகள் மற்றும் 5 நீரில் மூழ்கிய பகுதிகள் காணப்படுகின்றன. அகத்தி, அன்டோர்ட், பிட்ரா, செட்லட், காட்மாத், கல்பேனி, கவரத்தி மற்றும் கில்டன் ஆகிய தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். பல தீவுகளில் மனித நடமாட்டமே இல்லை.

மொத்த தீவுக்கூட்டமும் ஒரே மாவட்டமாகக் கருதப்படுகிறது. இதன் தலைநகரம் கவரத்தி. நிர்வாக அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இஸ்லாம் பரவிய கதை

எழுத்தறிவு 81.78 சதவீதம். மக்கள் தொகை 64,429 பேர். முதன்மை மதம் இஸ்லாம். அந்த மதத்தை 93 சதவீதம் பேர் பின்பற்றுகிறார்கள். இந்து மதத்தை 4 சதவீதம் பேரும் மற்ற மதங்களை 3 சதவீதம் பேரும் பின்பற்றுகிறார்கள் .

கனவில் தோன்றி இறைவன் இட்ட கட்டளையை ஏற்று, 7-ம் நூற்றாண்டு வாக்கில் மெக்காவிலிருந்து புறப்பட்டவர் உபயதுல்லா என்பவர். கடலில் பயணமாகிப் புயலில் சிக்கி, அமினி தீவு வந்து சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு இஸ்லாத்தை பரப்பியவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளம் பெண் ஒருவர் உபயதுல்லா மீது காதல் வயப்பட்டுத் தனது பெயரை ஹமீதத் பீவி என்று மாற்றி அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இதில் கடும் கோபமுற்று மக்கள் அவரைக் கொல்ல முயன்றபோது அனைவரின் கண்களையும் மறைத்துத் தப்பினார். இடைவிடாத பிரச்சாரத்தால் அன்டோர்ட் தீவு மக்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள். படிப்படியாக அனைத்துத் தீவு மக்களும் மதம் மாறினார்கள். அன்டோர்ட்டில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. உபயதுல்லாவின் பெருமை இலங்கை, பர்மா, மலேசியா வரை பரவியிருக்கிறது. இந்தப் பாரம்பரியம்தான் இங்கு இஸ்லாம் மதம் கோலோச்சக் காரணமாக உள்ளது.

மொழிகள்

மினிகாய் தீவு மக்களைத் (மலாய் மொழி) தவிர மற்றவர்கள் பேசும் மொழி மலையாளம். மேலும் ஜெசேரி, அர்வி மொழிகள் போன்று தமிழ், மலையாளம் மற்றும் அரபி கலந்த பேச்சுவழக்கும் உண்டு. ஏறக்குறைய அனைவரும் பழங்குடியினராகவே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தலித் மக்கள் இல்லை.

தேங்காய் உற்பத்தி

தாது வளம் நிரம்பிய கடற்கரைகளைக் கொண்ட பகுதி. சூறை மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன. வேளாண்மையைப் பொறுத்தவரை தேங்காய் உற்பத்தியே பிரதானம். கிட்டத்தட்ட 7 லட்சம் தென்னை மரங்கள் இருக்கின்றன. மீன்பிடித்தல், தென்னை வளர்ப்பு, கயிறு திரித்தல் மற்றும் சுற்றுலா ஆகியவை முக்கியமான தொழில்.

சமூக அமைப்பு

பெண்களுக்குப் பொருளாதார ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘மருமக்கா ஆதாயம்’ என்ற சொத்து உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மனைவியின் பராமரிப்புக்கென ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரிலேயே திருமணம் நடக்கும். கட்டணம் செலுத்தத் தவறினால் விவகாரத்து செய்யவும் அதன்பிறகு வேறு ஒருவரை மணக்கவும் பெண்னுக்கு உரிமை உண்டு. விதவைகள் மறுமணம் செய்யவும் தடையில்லை.

லாவா நடனம், கொல்காளி நடனம் மற்றும் பாரிச்சாக்கிளி நடனம் ஆகியவை நிகழ்த்து கலைகளாக உள்ளன.

காவல்காரன்

இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் லட்சத்தீவு முக்கியமானது. கடலின் அழகோடு இயற்கை கொஞ்சும் நிலப்பரப்பு, பவளத்தீவுகள் எனக் காண்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கவரத்தியில் உள்ள மீன் அருங்காட்சியகம் கவனத்தை ஈர்க்கிறது. கவரத்தியில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்குக் கடலில் இந்தியாவின் கடல் வழித்தடங்களைக் கண்காணிக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உகந்த இடமாக லட்சத்தீவுகள் உள்ளன. இந்தியத் தீபகற்பத்துக்கு வெளியே நாட்டைக் காக்கும் காவல்காரர்களைப்போல பரவி நிற்கிறது லட்சத்தீவு.

http://tamil.thehindu.com/general/education/மாநிலங்களை-அறிவோம்-லட்சத்-தீவு-அரபிக்கடலின்-காவல்காரன்/article7345515.ece?widget-art=four-rel

 

  • 1 year later...
Posted

மாநிலங்களை அறிவோம்: பவுத்தமும் சமணமும் பிறந்த நாடு- பிஹார்

state_2565154g.jpg

state_jpg1_2565153g.jpg

நாளந்தா, விக்கிரமஷிலா பல்கலைக்கழகங்களைப் பழங்காலத்தில் அமைத்து அறிவு வெளிச்சம் பரவச்செய்த தேசம் பிஹார். புராணங்கள், இதிகாசங்கள் இதைக் கொண்டாடுகின்றன. கவுதம புத்தர் ஞானம் பெற்ற இடமும் இதுவே. சமண மதத்தை ஸ்தாபித்த மகாவீரர் பிறந்த இடமும் இதுவே.

ராமரின் மாமியார் வீடு

ராமன் மணந்த சீதையின் அப்பாவான ஜனகர் ஆண்ட விதேகம் எனும் நாடு இங்கேதான் இருக்கிறது. ராமாயணத்தை எழுதிய வால்மீகி வாழ்ந்ததும் இங்கேதான் எனக் கூறப்படுகிறது.

கி.மு.7 மற்றும் 8-ம் நூற்றாண்டில் மகத மற்றும் லிச்சாவி அரசுகள் நிர்வாகத் திறன் மிக்க முன்னோடி அரசாகத் திகழ்ந்தன. முதல் பொருளாதார அறிவியல் நூலான அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கவுடில்யர், அலெக்சாண்டரின் தூதுவர் மெகஸ்தனிஸ், அஜாதசத்ரு பாடலிபுத்திரத்தைக் கட்டமைத்தது குறித்த வரலாற்றைப் பதிவு செய்த வெளிநாட்டு பயணி செல்யூக்கஸ் நிகேட்டர், அசோகர், சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோவிந்த் சிங் ஆகியோரால் பிஹாரின் பழங்காலப் பெருமைகள் நிலைத்து நிற்கின்றன.

நேற்றும் இன்றும்

மகத நாடு, மிதிலை, அங்கதேசம் மற்றும் வைசாலி எனப் பல பெயர்களில் இன்றைய பிஹார் அழைக்கப்பட்டது. புத்தரின் சமகாலத்தவராக ஹர்யான்கா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் அஜாதசத்ரு உருவாக்கியதுதான் பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா). பின்னர் சிசுநாகா வம்சம், நந்தா வம்சம், மவுரியர்கள் அதிகாரத்துக்கு வந்தனர்.

11-ம் நூற்றாண்டில் பிஹாரையும் வங்கத்தையும் முதலாம் ராஜேந்திர சோழன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதன் பிறகு மீண்டும் மொகலாயர்கள் ஆட்சி. அவர்களுக்குப் பிறகு வங்காள நவாப்கள் என பிஹார் பலர் கைக்கு மாறியது.

1764-ல் பக்ஸார் போர் மூலம் காலடி எடுத்து வைத்த ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி, பிஹார், வங்கம் ஒரிஸ்ஸாவில் ஆதிக்கம் பெற்றது. வங்க மாகாணத்தின் ஒரு பகுதியாக பிஹார் 1912- வரை இருந்தது. 1935-ல் பிஹாரிலிருந்து ஒடிசா மாநிலம் உருவாக்கிப் பிரிக்கப்பட்டது.

2000-ம் ஆண்டில் பிஹார் மீண்டும் பிரிக்கப்பட்டுப் புதிய ஜார்கண்ட் மாநிலம் உருவானது.

சம்பரன் சத்தியாகிரகம்

பிஹாரில் ஆங்கிலேயர்கள் விதித்த கட்டுப்பாடுகள் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்தன. இதைக் கண்டித்து காந்தி களமிறங்கினார். போராட்டம் நடத்தினார். கைது செய்யப்பட்டார். இதையடுத்து விவசாயிகளின் தேவைகளை அறிய விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. நவீன இந்தியாவில் அஹிம்சை வழி போராட்டம் வெற்றி பெற்ற முதல் நிகழ்வு இதுதான்.

முதல் குடியரசுத் தலைவர்

1946 ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிஹார் மாநில அரசு அமைந்தது. இருப்பினும் முதல் அமைச்சரவை செயல்படத் தொடங்கியது 1947 சுதந்திர இந்தியாவில்தான். பிஹாரின் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவரானார்.

மக்கள் தொகை 10.38 கோடி. எழுத்தறிவு பெற்றோர் 63.82 சதவீதம். ஆயிரம் ஆண்களுக்கு 916 பெண்கள் என்ற பாலின விகிதாச்சாரம் நிலவுகிறது.

இந்தியும் உருதுவும் அலுவல் மொழி. இது தவிரகள் போஜ்புரி, மைதிலி, மகாஹி, பாஜிக்கா, அங்கிகா ஆகிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன. இதில் மைதிலி மொழியை மட்டும் இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.

முதுகெலும்பு

விவசாயம் மாநிலத்தின் முதுகெலும்பு. நாட்டிலேயே அதிக அளவாக, அதாவது 81 சதவீதம் பேர் வேளாண்மையைச் சார்ந்துள்ளனர். மாநில உள்நாட்டு உற்பத்தியில் 42 சதவீதத்தை வேளாண்மையே நிரப்புகிறது. நெல், கோதுமை முதன்மை பயிர்களாக உள்ளன. சோளம், எண்ணை வித்துகள், கரும்பு, உருளை மற்றும் வெங்காய விளைச்சலும் அமோகமாக இருக்கிறது. இதுதவிர மைக்கா, சுண்ணாம்புக்கல், இரும்பு, பைரைட்ஸ் உள்ளிட்ட தாது வளங்களைக் கொண்டது பிஹார்.

பிஹாரின் முக்கியமான நதி கங்கைதான். சரயு, காங்டாக், பூதி காங்கடாக், பாக்மாதி, காம்லா-பாலன், மகாநந்தா, சோன், உத்தாரி கோயல், புன்புன், பன்சானே மற்றும் கார்மனஷா ஆகிய 10-க்கும் மேற்பட்ட நதிகள் கங்கையில் கலக்கின்றன.

http://tamil.thehindu.com/general/education/மாநிலங்களை-அறிவோம்-பவுத்தமும்-சமணமும்-பிறந்த-நாடு-பிஹார்/article7701555.ece?ref=relatedNews

Posted

மாநிலங்களை அறிவோம்: பாலைவனச் சோலை- ராஜஸ்தான்

rajasthan_2623529f.jpg
 

ராஜஸ்தானுக்கு ‘குஜராட்டிரா’ என்பதே நெடுங்காலமாக இருந்த பழைய பெயர் என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆர்.சி. மஜூம்தார். குஜராட்டிராவுக்கு குஜ்ஜர்களால் பாதுகாக்கப்பட்ட நாடு என்று அர்த்தம்.

இப்போதைய 1869-ல் ஜேம்ஸ் டாட்ஸ் என்பவர் எழுதிய புத்தகத்தில்தான் ராஜஸ்தான் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆவணங்களின்படி இதன் பெயர் ராஜ்புதனா என்றிருந்தது. ஆரம்பக் கால மொகலாயர் ஆட்சியின்போது ராஜ்பூத் பிரதேசம் என்று அழைக்கப்பட்டது.

சிந்து சமவெளி

சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்த பகுதி இது. தற்போதைய காலிபங்கன் அதன் முக்கிய நகரமாக இருந்திருக்கிறது. கி.மு. 405-435 களில் ஆண்ட இந்திய- ஸ்கைதியர்களின் வழித்தோன்றல்களான மேற்கு சத்ரபதிகள் உஜ்ஜைனியைக் கைப்பற்றியதிலிருந்து சாகா வம்சம் ஆளத் தொடங்கியது. ஜாட், மீனா, குர்ஜார், பில், ராஜபுரோகிதம், சாரானா, யாதவர், பிஸ்நோய் மற்றும் புல்மாலி ஆகிய சமூகத்தினர்கள் குறுநில மன்னர்களாக இருந்தனர்.

கி.பி.700-க்கு முந்தைய காலகட்டம் வரை மவுரியப் பேரரசு மற்றும் மாளவாக்கள், அர்ஜுன்யர்கள், குஷானர்கள், குப்தர்கள் மற்றும் ஹூணர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 8-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை ராஜபுத்திரர்களும் பிராத்திகர்களும் ஆண்டனர். அதிகாரத்தைக் கைப்பற்ற சாளுக்கியர்களும் பார்மர்களும் சவுகான்களும் நடத்திய போர் ராஜஸ்தான் வரலாற்றில் ஆழமாகப் பதிவாகியுள்ளது.

ஜாட் அரசன் மகாராஜா சுராஜ் மால், மார்வாரி மன்னன் மகாராணா பிரதாப் சிங், இந்து அரசராக அறிவித்துக்கொண்ட ஹெமு ஆகியோர் ராஜஸ்தானை ஆண்டவர்களில் முக்கியமானவர்கள்.

ராஜஸ்தான் உதயம்

மொகலாயப் பேரரசர் அக்பர் அதிகாரத்துக்கு வந்த பிறகு ஒன்றுபட்ட மாகாணத்தை உருவாக்கினார். மொகலாயர்கள் அதிகாரம் வீழ்ச்சியடைந்ததும் ராஜஸ்தான் துண்டு துண்டாக உடையத் தொடங்கியது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மராத்தியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். 1755-ல் அஜ்மீரைக் கைப்பற்றினர். பின்னர் முழுமையான ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். 1818-ல் ஆங்கிலேயர்கள் அவர்களை அகற்றினர். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜஸ்தான் முழுவதிலும் ஆங்கிலேயர் கொடி பறக்கத் தொடங்கியது.

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ராஜபுதனா மண்டலம் பின்னாளில் 1949 மார்ச் 30-ல் அதே பெயருடன் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டப்படி 1956 நவம்பர் 1-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதயமானது.

பெரிய மாநிலம்

இந்தியாவின் வடமேற்கில் ராஜஸ்தான் அமைந்துள்ளது. மேற்கு மற்றும் வட மேற்கில் பாகிஸ்தானும், வடக்கு மற்றும் வடகிழக்கில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசமும் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் மத்தியப் பிரதேசமும் தென் மேற்கில் குஜராத்தும் எல்லைகளாக அமைந்துள்ளன. தலைநகரம் ஜெய்பூர். மாநிலத்தின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனமும் தென்மேற்கில் விளைநிலங்களும் மலைகளுமாய்க் காட்சியளிக்கிறது.

மக்களும் மதமும்

மக்கள் தொகை 6.86 கோடி. இவர்களில் 75.1 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். நகர்ப்புறங்களில் குறைந்த அளவாக 24.9 சதவீதம் பேர் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் விவசாயத் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர். ஆயிரம் ஆண்களுக்கு 928 பெண்கள் என்ற பாலின விகிதாச்சாரம் நிலவுகிறது. படிப்பறிவு 66.11 சதவீதம்.

88.45 சதவீதம் பேர் இந்து மதத்தையும் 9.08 சதவீதம் பேர் இஸ்லாம் மதத்தையும் 1.27 சதவீதம் பேர் சீக்கியத்தையும், 0.91 சதவீதம் பேர் சமணத்தையும் பின்பற்றுகின்றனர்.

இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜஸ்தானி முக்கிய மொழியாகும். ராஜஸ்தானி மொழிக் குடும்பத்தில் ராஜஸ்தானி, மார்வாரி, மால்வி மற்றும் நிம்மாடி ஆகிய மொழிகள் அடக்கம். பேசும் மொழியாகவும் அலுவல் மொழி யாகவும் இந்தி இருக்கிறது. இது தவிர பிலி, பஞ்சாபி மற்றும் உருது மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.

கலையும் கலாச்சாரமும்

பிகானேரில் நடைபெறும் ஒட்டகத் திருவிழா, நாகூரில் ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் மாடு, ஒட்டகச் சந்தை, 18 நாள் திருவிழாவான மேவார் திருவிழா, ஜெய்பூரில் நடக்கும் காங்கூர் சித்திரைத் திருவிழா, கைலா தேவி விழா, மகாவீர் விழா, கோடை விழா, தீஜ் பண்டிகை, காளிதீஜ், தசரா, புஷ்கர், சந்திரபாகா, கொல்யாட் உள்ளிட்டவை ராஜஸ்தான் மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடும் விழாக்கள்.

மாநிலத்தின் பாரம்பரியமிக்க கோமார் நடனம், கய்ர், சாரி நடனம், காச்சி கோதி (பொய்க்கால் குதிரை), நெருப்பு நடனம், பழங்குடிகளின் தெரா தாலி, காட்ச்புட்லி (பொம்மலாட்டம்), மான்ட் எனப்படும் கஜல் ஆகிய நடனங்கள் ராஜஸ்தானுக்கு உரியவை.

துணி வகைகள், கைவினை நகைகள், விரிப்புகள், பீங்கான் பாத்திரங்கள், காலணிகள், பளிங்கு பொருட்கள், பிரசித்தி பெற்ற ஐவெரி வளையல்கள் செய்வதிலும் ஓவியங்கள் தீட்டுவதிலும் இவர்கள் வல்லவர்கள்.

பண்பாட்டுச் செறிவு மிக்க பிரதேசமாக ராஜஸ்தான் திகழ்வதற்குப் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டது முக்கியக் காரணம். இங்குள்ள ஏராளமான கோட்டைகள், அரண்மனைகள் இஸ்லாமிய, சமணக் கலை வடிவத்தைப் பறைசாற்றுகின்றன.

ஜெய்பூர், அஜ்மீர்- புஷ்கர், உதய்பூர் ஏரி, ஜோத்பூர் பாலைவனக் கோட்டை, தாராகர் கோட்டை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தலங்கள். இவை தவிர, குடைவரை கோயில்கள், ஜந்தர் மந்தர், தில்வாரா கோயில்கள், ஏரி மாளிகை உள்ளிட்டவை ராஜஸ்தானின் பெருமை மிகு அடையாளங்கள்.

பொருளாதாரம்

ராஜஸ்தானின் பொருளாதார பலம் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் கோதுமை, பார்லி முதன்மைப் பயிர்கள். பருப்பு வகைகள், கரும்பு, எண்ணெய் வித்துகள், பருத்தி, புகையிலை மற்றும் அபின் விளைவிக்கப்படுகின்றன. வடமேற்கு ராஜஸ்தானில் சாகுபடிக்கு முக்கியப் பங்காற்றுகிறது இந்திராகாந்தி கால்வாய். மழைப் பொழிவு குறைந்த மாநிலங்களில் முதலிடம் ராஜஸ்தானுக்கு.

கனிம, ஜவுளித் துறைகளிலும் ராஜஸ்தானுக்கு முக்கிய பங்கு உண்டு. பருத்தி மற்றும் பாலியஸ்டர் துணி ஏற்றுமதியில் பெரிய பங்காற்றுகிறது.

தாஜ்மகால் கட்டுவதற்கான வெள்ளை மார்பிள் கல் இங்குள்ள மக்ரானா நகரத்தில் இருந்துதான் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்.

உப்பு வளம், தாமிர மற்றும் துத்தநாகச் சுரங்கங்கள், உள்ளிட்ட கனிம வளங்களை இம்மாநிலம் உள்ளடக்கியிருக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு ரூ.15 கோடி என அபரிமிதமான வருவாய் கிடைக்கிறது. டெல்லி - மும்பை தொழிற்பாதையின் நடுவே ராஜஸ்தான் அமைந்திருப்பது அதன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் பாலைவனத்தைக் கொண்ட ஒரே மாநிலம் ராஜஸ்தான்தான். இருப்பினும் பண்பாட்டு ரீதியில் இந்தியாவின் சோலைவனமாக ஜொலிக்கிறது.

 

http://tamil.thehindu.com/general/education/மாநிலங்களை-அறிவோம்-பாலைவனச்-சோலை-ராஜஸ்தான்/article7886979.ece?ref=relatedNews

Posted

மாநிலங்களை அறிவோம்: உத்தராகண்ட் - இமயமலையின் மாநிலம்

himalayas_2701668h.jpg

கற்காலத்தில் உத்தராகண்ட்டின் குமோன் பகுதியில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களாக, குகை வீடுகளும் உலோக காலத்தைச் சேர்ந்த சில ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாண்டவர் பூமி

உத்தராகண்ட்டின் பூர்வ குடி மக்கள் கோல் இனத்தினர். பின்னர் வேதகாலத்தில் வடமேற்கிலிருந்து திராவிட மொழிகளைப் பேசிய மக்களைப் போன்று ஆரிய மொழிகளைப் பேசிய மக்களும் வந்தனர். ரிஷிகளும் முனிவர்களும் வாழ்ந்த பகுதியாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது. பாண்டவர்கள் வாழ்ந்த பகுதி இது என்கிறார் மகாபாரதத்தில் வியாசர்.

பல பெயர்கள்

உபநிடதங்களில் இதன் பெயர் உத்தர்பாஞ்சல். வால்மீகியோ உத்தர்கவுசல் என்கிறார். மகாபாரதம் எழுதிய வியாசர் இதை உத்தர்குரு என்றும் கவுடில்யர் உத்தராபட்டி என்று குறிப்பிட்டுள்ளனர். கிராத்தர்கள் எனும் மக்களின் காலத்தில் கிராத்மண்டல், காஸ் வம்சாவழியினர் ஆண்டபோது காஸ்தேசம், கதாயுர்கள் காலத்தில் கார்த்திப்பூர், பர்வத்கரன் மற்றும் கிர்யாவாலி என்றும் உத்தராகண்ட்டுக்கு பல காலகட்டங்களில் பல பெயர்கள்.

ஆதி முதற்கொண்டு இந்தப் பகுதியை ஆண்டவர்கள் பவுரவர்கள். பின்னர் குஷானர்கள், குனின்தர்கள், குப்தர்கள், குர்ஜாரா-பிராத்திஹார்கள், கத்யூரிகள், ராய்கர்கள், பாலர்கள், சந்த்கள், பார்மர், சீக்கிய மற்றும் ஆங்கிலேயர்கள் என ஆண்ட பரம்பரையின் பட்டியல் பெரியது.

மவுரியர் காலத்தில் நாடு முழுவதும் தழைத்தோங்கிய புத்த மதம் ஏனோ இந்தப் பகுதிக்குள் நுழையவில்லை.

கார்வால், குமோன்

வரலாற்றுத் தேடலில் உத்தராகண்ட் என்றால் அது கார்வால் மற்றும் குமோன் ராஜ்ஜியங்களையே குறிக்கும். குமோன் பகுதியில் 7 முதல் 11-ம் நூற்றாண்டு வரை கத்யூரி வம்சம் ஆண்டுள்ளது. கார்வாலும் குமோனும் பிராமணிய ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பயணம் உதவியிருக்கிறது. கிராத்தர்கள் என்றழைக்கப்படும் திபெத்திய- பர்ம குழுவினர் வடக்கு மலை நாட்டுப் பகுதியில் குடியேறினர். அவர்களே போடியா, ராஜி, பக் ஷா மற்றும் தாரு இன மக்கள் என தற்போதும் நம்பப்படுகிறது.

மத்திய காலப் பகுதியில் கார்வால் அரசு மேற்கிலும் குமோன் அரசு கிழக்கிலும் பிரித்துக்கொண்டு 13 முதல் 18-ம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தன. கார்வால் மன்னர்கள் சமவெளிப்பகுதியில் இருந்து பெருமளவிலான பிராமணர்களையும் ராஜபுத்திரர்களையும் குடியமர்த்தினர்.

ஆங்கிலேயர்கள் ஆதிக்கம்

1791-ல் குமோனின் அல்மோரா பகுதியை ஆக்கிரமித்து தனது எல்லையை விரிவுபடுத்தியது நேபாள கூர்க்கா பேரரசு. 1803-ல் கார்வால் ராஜ்ஜியமும் கூர்க்காக்களின் வசமானது.

பின்னர் நடந்த ஆங்கிலேய- நேபாள யுத்தத்துக்குப் பிறகு எஞ்சிய பகுதியான தேரியில் கர்வால் ராஜ்ஜியம் மட்டும் மீண்டும் 1816-ல் நிறுவப்பட்டது. சுகாவுலி (நேபாள பிரிவினை) உடன்படிக்கையின்படி கார்வால் மற்றும் குமோனின் பெரும்பகுதி ஆங்கிலேயருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டன.

ஆக்ராவையும் அவேத்தையும் இணைத்து வடமேற்கு மாகாணத்தை ஆங்கிலேயர்கள் ஸ்தாபித்தனர். 1902 முதல் 1947 வரை ஒருங்கிணைந்த மாகாணமாக ஆங்கிலேயர்கள் வைத்திருந்தனர்.

உதயமானது புதிய மாநிலம்

நாடு விடுதலைக்குப் பிறகு கார்வால் மற்றும் குமோன் ஒருங்கிணைக்கப்பட்டு உத்தரப்பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. பிற்காலத்தில் உத்ராஞ்சல் பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்தக் கோரிக்கைக்காகப் போராடிய தன்னார்வலர்கள் மீது 1994-ல் ராம்பூர் திராகா துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.

ஒருவழியாக உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையிலும் மேல்சபையிலும் மாநில மறுசீரமைப்புக்கு 1998-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகள் கழித்து மக்களவையில் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து 2000 நவம்பர் 9-ம் தேதி இந்தியாவின் 27-வது மாநிலமாக புதிய உத்ராஞ்சல் உதயமானது. (முதலில் வைத்த பெயர் உத்ராஞ்சல். அதன்பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டு உத்தராகண்ட் ஆனது)

இதன்படி, 2000-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உத்தரபிரதேசத்தின் வடக்குப்பகுதிகளை உள்ளடக்கி இமயமலை தொடர் அடிவாரத்தில் இந்த மலைப்பிரதேச மாநிலம் உதயமானது.

வடக்கே சீனாவின் திபெத்தும் கிழக்கே நேபாளமும் எல்லைகளாக உள்ளன.

175 வகையான அரியவகை வாசனை மற்றும் மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளை இங்கு மட்டுமே காணமுடியும். இந்த இயற்கைச் சூழலில்தான் தோட்டக்கலை, பழ உற்பத்தியில் சாதனை படைக்கிறது. வேளாண் ஏற்றுமதி மண்டலம் அமைத்து பாஸ்மதி அரிசி உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெல், கோதுமை, பார்லி, சோளம், பருப்பு வகைகள், எண்ணை வித்துக்கள், கரும்பு, வெங்காயம் ஆகியன முதன்மை பயிர்கள். மீன்பிடி தொழிலிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உள்ளது. கங்கா, யமுனை, அலக்நந்தா, பகீரதி, ராம்கங்கா, கோரி கங்கா, கவுலா உள்ளிட்டவை வளம் சேர்க்கும் முக்கிய நதிகள்.

அதிகப்படியான சுண்ணாம்புக்கல், மார்பிள், பாறை பாஸ்பேட், டோலமைட், தாமிரம், ஜிப்சம் என தாதுவளத்திலும் குறைவில்லை. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மட்டும் 54047 உள்ளன. சிறு மற்றும் குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் சுமார் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தகவல் தொடர்புத் துறையிலும் மருந்து உற்பத்தியிலும் அனல் மின் உற்பத்தியிலும் வளம்பெற்ற பகுதி இது. சுற்றிப்பார்க்க மட்டும் 264 இடங்கள் உள்ளன. மாநில அரசுக்கு அதிகப்படியான வருவாய் தருவது சுற்றுலாத் துறைதான்.

மக்கள் தொகை 1 கோடியே 86 லட்சம் பேர். ஆயிரம் ஆண்களுக்கு 963 பெண்கள் என்பது பாலின விகிதாச்சாரம். இந்து மதத்தை 83.97 சதவீதம் பேரும் இஸ்லாத்தை 12.94 சதவீதம் பேரும், சீக்கியர்கள் 2.34 சதவீதம், கிறிஸ்தவம், சமணம், புத்த மதத்தினரும் குறைந்த சதவீதங்களில் வசிக்கின்றனர். எழுத்தறிவு 79.63 சதவீதம். ஹிந்தி, கார்வாலி, குமோனி, உருது, பஞ்சாபி, ஜன்சாரி, நேபாளி, போட்டி, புஷ்கா, தாரு, ராஜி, ராவத் ஆகிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன. ஹிந்தியும் சமஸ்கிருதமும் அதிகாரப்பூர்வ மொழிகளாகத் திகழ்கின்றன.

இந்து மதத்தினர் வணங்கும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியின் பிறப்பிட மலைகளை உள்ளடக்கி ஏகத்துக்கு கவுரவம் பெற்று திகழ்கிறது உத்தராகண்ட். இங்கு யாத்திரை செல்வது புண்ணியம் என்ற ஐதீகத்தால் ஆண்டுதோறும் வரும் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

அடர்ந்த வனப்பகுதிகள், உயரமான மலை முகடுகள், இயற்கையாக அமைந்த நீராதாரங்கள், ஜீவ நதிகள் என இயற்கை கொஞ்சும் உத்தராகண்ட் உண்மையில் இமயமலையின் மடியில் உள்ள சொர்க்கம்.

http://tamil.thehindu.com/general/education/மாநிலங்களை-அறிவோம்-உத்தராகண்ட்-இமயமலையின்-மாநிலம்/article8123419.ece?ref=relatedNews

Posted

மாநிலம் அறிவோம்: இந்தியாவின் பிரான்ஸ் - புதுச்சேரி

பிரெஞ்சு பாணி கட்டிடங்கள்

பிரெஞ்சு பாணி கட்டிடங்கள்

புதுச்சேரி கடற்கரை

புதுச்சேரி கடற்கரை

ஆரோவில்

ஆரோவில்

 

ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. அரவிந்தர், மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில் தங்கியிருந்து இந்திய விடுதலை வேட்கையைத் தூண்டினார்கள். அரவிந்தர், மதர், பாரதிதாசன் முதல் இன்றைய மைக்ரோசாப்ட் துணைத் தலைவர் சோமசேகர், விஞ்ஞானி கணபதி தணிகைமொனி வரை புதுச்சேரியின் அடையாளங்கள் பல. அத்தகைய புத்துச்சேரியின் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்போமா!

பிரஞ்சுக்காரர்களை அழைத்தது யார்?

பிரஞ்சு மொழியில் புதுச்சேரி என்பதற்கு ‘புதிய உடன்பாடு’ என்று அர்த்தம். கிபி முதல் நூற்றாண்டில் இருந்து புதுச்சேரியின் வரலாறு தொடங்குகிறது. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரோமானியர்களின் வணிகத் தளமாக புதுச்சேரி விளங்கியிது. கிபி 4-ம் நூற்றாண்டில் காஞ்சி பல்லவர்கள், 10-ம் நூற்றாண்டில் தஞ்சை சோழர்கள், 13-வது நூற்றாண்டில் பாண்டியர்கள் அதன் பிறகு, வட பகுதி முஸ்லிம்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, 1638-ல் செஞ்சியை ஆண்ட பிஜப்பூர் சுல்தான்கள் எனப் பலரையும் கண்டது புதுச்சேரி.

இதனிடையே 1497-ல் போர்த்து கீசியர்கள் புதுச்சேரி வந்தனர். பிறகு டச்சுக்காரர்களும் வந்து வியாபாரங்களைப் பெருக்கினர். இவர்களுக்குப் போட்டியாக வியாபாரம் செய்ய பிரஞ்சுக்காரர்களை புதுச்சேரிக்கு அழைத்தது அப்போதைய செஞ்சி அரசு.

இதன்படி, 1673 பிப்ரவரி 4-ல் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி பெல்லாங்கர் புதுச்சேரி வந்தார். பிரஞ்சு ஆதிக்கத்துக்கான முதல் அடி அப்போதுதான் எடுத்து வைக்கப்பட்டது. 1738-ல் காரைக்காலையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் மெட்ராஸ் பட்டணமும் பிரெஞ்சு கைக்குச் சென்றது. ஆனால் ராபர்ட் கிளைவ் இந்தியா வந்த பிறகு புதுச்சேரியை ஆங்கிலேய அரசு கைப்பற்றி பிரெஞ்சு ஆட்சியை ஒழிக்க நகரத்தை நிர்மூலமாக்கியது. இதனால் தென் இந்தியாவில் தங்களுக்கு இருந்த பிடியை இழந்தது பிரான்ஸ்.

பின்னர் 1765-ல் இங்கிலாந்தில் இரு தரப்புக்கும் உடன்படிக்கை கையெழுத்தாகி புதுச்சேரி வந்தார் பிரெஞ்சு ஆளுநர் லா டி லாரிஸ்டன். அவர் புத்துச்சேரியை மறுநிர்மாணம் செய்தார். அடுத்த 50 ஆண்டுக்குப் பிறகு 1816-களில் பிரெஞ்சின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் புதுச்சேரி மீண்டும் வந்தது. அதன் பிறகு 138 ஆண்டுகளுக்கு புதுச்சேரி மண்ணில் பிரெஞ்சு நிலைத்து நின்றது.

விடுதலை

இந்நிலையில் 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். ஆனால் பிரான்ஸுக்கு புதுச்சேரியை விட மனமில்லை. இது இந்தியாவின் பிரான்ஸாக இருந்து வந்தது. ஒருவழியாக 1954 அக்.18-ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது. 178 பிரதிநிதிகளில் 170 வாக்குகள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து விழுந்தன. இதையடுத்து 1954 நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரியை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. ஆனால், 1963-ல்தான் புதுச்சேரி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என பிரெஞ்சு நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மக்கள் தலைவர்

ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய இந்தியர்கள் பலருக்கு பிரெஞ்சு அரசு புதுச்சேரியில் அடைக்கலம் கொடுத்தது. ஆனால் சொந்த நாட்டுக்குள் விடுதலைக்கு எதிரான போராட்டங்களை பிரெஞ்சு அரசு ஒடுக்கியது. கம்யூனிஸ்ட்டாகக் களத்தில் நின்று பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவர்களில் முதன்மையானவர் வ.சுப்பையா.

ஆசிய கண்டத்திலேயே தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை பெற்றுத்தந்தவர் அவர். சுப்பையாவுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமானவர் இடதுசாரி இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.

புதுச்சேரி விடுதலை பெற்ற அன்றைய தினத்தில் சுப்பையாவைத் தேரில் அமர வைத்து கோட்டைகுப்பம் முஸ்லிம் மக்கள் நடத்திய பிரம்மாண்ட ஊர்வலத்தை 1954 ஜனசக்தி நவம்பர் புரட்சி தின மலரில் தத்ரூபமாக விவரித்தவர் தியாகி ஐ.மாயாண்டி பாரதி. பிரெஞ்சு அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் என்று தலையங்கம் தீட்டியது ‘தி இந்து’ நாளிதழ்.

எந்த நாள்?

இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்து பல வருடங்கள் கழித்துதான் புதுச்சேரி பிரெஞ்சிடமிருந்து விடுதலை அடைந்தது. ஆகையால் நவம்பர் 1-தான் புத்துசேரியின் சுதந்திர தினம் எனவும் ஆகஸ்ட் 16-தான் புதுச்சேரிக்கான குடியரசு தினம் எனவும் ஒரு சாரரின் வாதமாக இன்றளவும் நீடிக்கிறது.

புதுச்சேரியின் மேயராக இருந்த எட்வர்ட் கோபர்ட் முதல் முதலமைச்சராக 1963 ஜூலை 1-ல் பதவி ஏற்றார். தொடக்கத்தில் பிரெஞ்சு ஆதரவாளராக இருந்த அவர், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பையா, 1954, 1963-ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் 1969-ல் கூட்டணி அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இப்படியாக இந்திய ஜனநாயகப் பாதைக்குள் நுழைந்தது புதுச்சேரி.

பிரஞ்சுகாரர்களாகவே வாழ்பவர்கள்

தமிழ், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், உருது உள்ளிட்ட மொழிகள் புதுச்சேரியில் புழக்கத்தில் உள்ளன. தமிழ், ஆங்கிலம் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகள். மக்கள் தொகை 6.54 லட்சம். படிப்பறிவு 81.24 சதவீதம். பிரெஞ்சுக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இன்னமும் இங்கு வசிக்கின்றனர்.

நேரடியாகவும் மறைமுகமாகவும் 45 சதவீதம் பேர் வேளாண்மையைச் சார்ந்திருக்கின்றனர். தாது வளம் இல்லாத பிரதேசம் இது. காரைக்காலில் மட்டும் சிறிய அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகின்றன.

புதுச்சேரி மக்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல். 27 கடலோர மீன்பிடி கிராமங்களும், 23 உள்நாட்டு மீன்பிடி கிராமங்களும் உள்ளன.

ஊர் சுற்றலாம் வாங்க!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக புதுச்சேரி விளங்குகிறது. அரவிந்தர்- மதர் ஆசிரமங்கள், ஆரோவில், கடற்கரை ஆகியவை வசீகரிப்பவை. இங்கு பிரெஞ்சு கலாச்சார பாணியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இந்தியாவுக்குள் ஒரு பிரான்ஸ் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

http://tamil.thehindu.com/general/education/மாநிலம்-அறிவோம்-இந்தியாவின்-பிரான்ஸ்-புதுச்சேரி/article8436975.ece?ref=relatedNews

  • 2 weeks later...
Posted

மாநிலம் அறிவோம்: கங்கை நதி தீரத்திலே

tajmahal_2875758f.jpg
 

வேத காலத்திலிருந்து, இன்றைய காலம் வரை வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலம் உத்தரப் பிரதேசம். இந்து மதமும் பவுத்தமும் தழைத்தோங்கிய பூமி இது. மவுரியப் பேரரசன் அசோகர் அரசாண்ட பூமி இது. இந்திய அரசின் சின்னமான நான்கு சிங்கங்கள் தாங்கிய அசோகா ஸ்தூபி அமைந்திருக்கும் இடம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத்.

கட்டிடக் கலை, ஓவியம், இசை, நடனம் என்று சகல கலைகளும் ஆதரிக்கப்பட்டு செழித்தோங்கிய முகலாயர் ஆட்சிக் காலத்தின் பெருமைமிகு அடையாளமான தாஜ்மகால் இருக்கும் இடம் இது. அக்பரின் அரசவைக் கவிஞரான தான்சேனும் பைஜூ பவ்ராவும் இன்னும் தங்கள் பாடல்களால் நினைவுகூரப்படுகிறார்கள். ஜான்சி ராணி லட்சுமி பாய், ஆவாத் பேகம் ஹஸ்ரத் மஹால் பக்த் கான் உள்ளிட்ட வீரம்செறிந்த தியாகங்களின் பூமி.

நவீன இந்திய வரலாற்றிலும் உத்திரப் பிரதேசம் பிரதான இடத்தை வகிக்கிறது. 1857-ல் முதல் சுதந்திரப் போர் என்று கருதப்படும் சிப்பாய்க் கலகத்தின் மையமாக மீரட் திகழ்ந்தது. சுதந்திரப் போராட்டம் அரசியல் போராட்டமாக உருவெடுத்து, இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட வேளையில் முன் நின்ற மாநிலம் இது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி முதல் ராகுல் காந்தி வரை நீளும் அரசியல் சங்கிலி இங்கேதான் தொடங்குகிறது. இந்தியாவுக்கு அதிக பிரதமர்களை அளித்த மாநிலம் இது.

பாரதிய ஜனதாக் கட்சியின் முதல் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் இம்மாநிலத்தைச் சேர்ந்தவரே. இந்தியாவின் மதச்சார்பின்மைக்குக் களங்கத்தை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்த அயோத்தி இங்கேதான் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் அரசியலிலும் முன்னோடியாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் தான், தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாயாவதி முதலமைச்சராக ஆனார். இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கும் இந்தி மொழி இலக்கியம் பிறந்த இடம் இது.

உதயமானது உத்தரப் பிரதேசம்

1947-ல் ஐக்கிய மாகாணமாக இருந்த பகுதி, சுதந்திர இந்தியாவின் நிர்வாக மையங்களில் ஒன்றாக ஆனது. 1950-ல் ஐக்கிய மாகாணம், உத்தரப் பிரதேசம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்தியக் குடியரசின் ஒரு பகுதியாக மாறியது.

அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளையும் 404 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்ட பரந்து விரிந்த மாநிலம் இது. 1999-ல் இம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து உத்தராகாண்ட் என்னும் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.

UP_2875756a.jpg

பரந்து விரிந்த பிரதேசம்

கிழக்கே பிஹாரும் தெற்கில் மத்தியப் பிரதேசமும் மேற்கில் ராஜஸ்தான், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களும் வடக்கே உத்தராகண்டும் நேபாளமும் எல்லையாக அமைந்துள்ளன. இம்மாநிலம் 2,36,286 சதுர கி.மீ. பரப்புடையது. இது பிரான்ஸ் நாட்டின் பரப்பளவில் பாதி அளவு.

வளம் மிக்க பூமி

வேளாண்மையே மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளது. நெல், கோதுமை, பார்லி, சோளம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்டவை முதன்மைப் பயிர்கள். மாம்பழம், கொய்யா மகசூலும் அதிக அளவில் உள்ளது. கங்கை, யமுனை, கோமதி, ராம கங்கை, காரா, பேத்வா, கென் ஆகிய முக்கிய நதிகளின் பலனால் வளமிக்க பூமியாகத் திகழ்கிறது இம்மாநிலம்.

மக்களும் கலைகளும்

மக்கள் தொகை 19 கோடியே 95 லட்சத்து 81 ஆயிரத்து 477 பேர். ஆயிரம் ஆண்களுக்கு 908 பெண்கள் என்பது பாலின விகிதாச்சாரம். படிப்பறிவு 69.72 சதவீதம். இந்து மதத்தினர் 79.73 சதவீதமும் இஸ்லாம் மதத்தினர் 19.26 சதவீதமும் சீக்கிய மதத்தினர் 0.32 சதவீதம் பேரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் 0.11 சதவீதம் பேரும் உள்ளனர்.

மர வேலைப்பாடுகள், அலங்காரத் தரை விரிப்புகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களுக்குப் பெயர் பெற்ற மாநிலம் இது.

சர்குலா, கார்மா, பாண்டவம், பாய்-தண்டா, தாரு, தோபியா, ராய், ஷாய்ரா ஆகியவை மண்ணின் கலைகளாக இன்றும் உயிர்ப்புடன் நிகழ்த்தப்படுகின்றன. செவ்வியல் நடனமான கதக் பிறந்த பூமி இது.

பண்டிகைகள் மற்றும் விழாக்கள்

ரக்ஷாபந்தன், வைஷாகி பூர்ணிமா, விஜயதசமி, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா, மகர சங்கராந்தி, சிவராத்திரி, ஹோலி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், மொகரம், புத்த பூர்ணிமா, மகாவீர் ஜெயந்தி, குருநானக் ஜெயந்தி என ஆண்டுதோறும் சுமார் 2,250 பண்டிகைகள் இங்கே நடத்தப்படுகின்றன.

சுற்றுலாத் தலங்கள்

பிப்ரஹவா, கவுசாம்பி, சரஸ்வதி, சாரணாத், குஷிநகர், சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, ஜான்சி, மீரட் .

http://tamil.thehindu.com/general/education/மாநிலம்-அறிவோம்-கங்கை-நதி-தீரத்திலே/article8671490.ece?widget-art=four-rel

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.