Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம் மாற்றமா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் மாற்றமா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

16 மே 2015

முள்ளிவாய்க்கால் நினைவு வாரப் வெளியீடு - 1:

விடுதலைப்புலிகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டு நிகழ்த்திய தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டு ஆறுவருடங்கள் முடிந்துவிட்டன. போரை நிகழ்த்தி வெற்றி அடைந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் எதிர்கொண்ட உள்நாட்டுப் போரில் இருந்தும் பின் தொடர்ந்த ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்தும் விடுபட்டுள்ளது.

இலங்கையில் மாற்றம் வேண்டும் என்ற குரல் எழுச்சியுடன் மகிந்தவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. மகிந்த அரசாங்கம் அது கொண்டிருந்த மோசமான ஊழல் மற்றும் சர்வாதிகாரக் குணங்களுக்காக சிங்களமக்களாலும் நான்காம் ஈழப்போரின் கொடூரங்களுக்குப் பொறுப்பானது என்றபடியால் தமிழ்மக்களாலும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் நிலவும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமும் (மென் போக்கும் வன்போக்கும்) இன்னும் வலுவிழக்கவில்லை. மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் இராணுவ ஆதிக்கமும் விலக்கப்படவில்லை. சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் என்பது வெறுமனே ஒருசில அரசியல்வாதிகளால் கடைப்பிடிக்கப்படும் அல்லது கடைப்பிடிக்கப் பட்டுவந்த அரசியல் நிலைப்பாடல்ல அது இலங்கையின் கலாசாரம். பெரும்பான்மையான மக்களின் மனங்களில் ஊறியிருக்கிற கலாசாரம். சிறுபான்மை இனங்களுக்கு ஓரளவுக்கு அதிகாரத்தை வழங்கவேண்டும் எனக் கூறுகிற சிங்கள முற்போக்காளர்கள் கூடத் தமது மேலாதிக்கத்தை இழக்காத அதிகாரப்பகிர்வைப் பற்றித்தான் பேசுகின்றனர்.

மேலாதிக்க உணர்வு ஒருவரிடத்திலோ ஒரு சமூகத்திலோ நிலவுமென்றால் அதனைத் தன்னில் இருந்து நீக்குவதற்குச் சம்பந்தப்பட்டவரோ சமூகமோதான் தேவையான முனைப்பை எடுக்கவேண்டும்.

இரணில் சந்திரிக்கா மைத்திரி கூட்டணி வெற்றியின் பின் இலங்கையில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அனேகமானவர்கள் நம்புகின்றார்கள்.

தேர்தற்காலங்களில் எதாவது ஒரு கோசத்தை மக்களைக் கவரும் தொனியுடன் முன்னிறுத்திப் பிரச்சாரப்படுத்தி வாக்குகளை பெறும் தந்திரோபாயம் அண்மைக்காலங்களில் உலகளாவிய நடைமுறையாகி இருக்கிறது.

ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்தின் கடந்த காலச் செயற்பாடுகள் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து அலசி ஆராய்ந்து வாக்களிப்பதில்லை. மக்கள் மத்தியில் தேர்தலுக்கான பேசு பொருட்களில் உணர்வு பூர்வமானவற்றை அல்லது அச்சமூட்டுபவற்றைத் தெரிவு செய்து பேசு பொருளாக்கி புதிய விம்பங்களை உருவாக்கி மக்களின் முன்னிறுத்துவதன் மூலம் மக்களை அவர்களின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து தூரமாக்கி பெரும் நாடக அளிக்கையைச் செய்யும் பணியைத் தேர்தல் பிரச்சார இயக்கங்கள் ஊடகங்களின் உதவியுடன் செய்து முடிக்கிறன.

அப்படியானால் இலங்கையில் மாற்றங்கள் நிகழவில்லையா?

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மாற்றம் இல்லையேல் அசைவியக்கம்இல்லை .

ஆனால் எந்த மாற்றங்கள் முக்கியமானவை என்பதை நாங்கள் அவதானிக்கவேண்டும். சமூகத்தின் மேற்றட்டில் நிகழும் மாற்றங்களைப் பெரிதும் விளம்பரப்படுத்தி மக்களை மாயைக்குட்படுத்துவதன் மூலம் ஒடுக்குமுறைகும் சுரண்டலுக்கும் அவசியமான அடித்தளங்கள் பேணப்படுவது உலக ஒழுங்கின் முக்கியமான அம்சம்.

எனவே மாற்றங்களினால் மக்கள் என்ன விதமான சூழ்நிலைகளுக்குள் வந்து சேர்கிறார்கள் என்பதை அறிவதும் முக்கியமானது.

உதாரணங்களாக இலங்கையில் இலவசக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட போதும் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் முக்கியமானவை. சுதந்திரத்தின் பின் இலங்கை முன்னெடுத்த சுய சார்புப் பொருளாதாரக்கொள்கை கொண்டு வந்த மாற்றங்கள் முக்கியமானவை. பின் அது கைவிடப்பட்டு இலங்கை ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்துள் நுழைந்த போது ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. இலங்கையுள் முதன் முதலாக தொலைக்காட்சி நுழைந்த போது நிகழந்த மாற்றங்கள் முக்கியமானவை.

இத்தெளிவுடன் இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த சில முக்கியமான மாற்றங்களைக் கவனிப்போம்.

இராசதானிகளாகப் பிரிந்திருந்த பிரபுத்துவக் குணாம்சங்களைக் கொண்டிருந்த இலங்கைச் சமூகங்களை இலங்கையின் இறுதிக் காலனித்துவ அதிகாரமான பிரித்தானிய அதிகாரம் பலவந்தமாக அரசியல் ரீதியில் ஒரு நாடக இணைத்தது. இதனால் இயல்பான சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு அதன் வழியான இனங்களுக்கிடையிலான ஊடாட்ட உறவு மாற்றங்களும் ஏற்படுவதற்கு காலனித்துவ அதிகாரம் தடையாக அமைந்தது.

பிற்பாடு இலங்கை காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டபோது இலங்கையின் அரச உருவாக்கத்திற்கு அடிப்படையாக உருவாக்கப்பட்ட யாப்பு இற்றைவரைக்கும் இலங்கையில் கூர்மையடைந்து நிலவும் இன முரண்பாட்டுக்கு வித்திட்டது.

காலனித்துவ அரசின் நேரடி ஆதிக்கத்தில் இருந்து வெளிவந்த போது பல்லின நாடான இலங்கையில் அரச அதிகாரம் சிங்கள சமூகத்திடமே சென்றது. இதன் காரணமாகச் சிங்கள இனத்துள் மூலதனத் திரட்சிக்கான சாத்தியமும் சுய வளர்ச்சிக்கான சாத்தியமும் ஏற்பட்டது.

இன அசமத்துவம் வளர்ந்ததது.

சுதந்திர இலங்கை ஆயுதம் தாங்கிய சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிக்கு இரண்டு முறை முகம் கொடுத்தது . அதே வேளையில் தமிழர்கள் தனி நாட்டுக் கோரிக்கையை நோக்கி 70களில் மெல்ல மெல்ல நகரத் தொடங்கினர்.

இவை காரணமாக இலங்கையின் அரச அதிகாரம் சமூக பொருளாதார மாற்றங்களில் தனது கவனத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக அரசியல் ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு தனது அரச கட்டமைப்புக்களைத் தயார் படுத்தும் இயங்கியலுக்குள் சென்றது.

பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சியும் ஆதிக்கமும் காரணமாக உள்நாட்டு முலதனச் திரட்சியின் மூலம் ஏற்படக்கூடிய இயல்பான முதலாளித்துவ வளர்ச்சி தடைப்பட்டதுடன் நிலமானிய சாதிய மற்றும் மத அடையாளங்களுடன் கூடிய சனநாயக விழுமியங்கள் வளராத உயரிகள்களால் இயக்கப்படும் அரச அமைப்பைக் கொண்டதாக இலங்கை மாற்றமடைந்தது. இது காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்தநாடுகளின் பொதுப்பண்பாக இருப்பதையும் இங்கு நினைவு கூரவேண்டும்.

தமிழர்கள் பெரும்பான்மையான வாழ்ந்த பகுதிகளில் முளை விட்ட தேசிய வாதம் தனி நாட்டுக் கோரிக்கையை முவைத்துப் போராடி இலங்கை அரசின் இராணுவத்தையும் அதிகாரத்தையும் முடக்கி தனக்கான பிரதேசங்களை உருவாக்கியது. தமிழர்களைப் பொறுத்தவரை இது முக்கியமான மாற்றமாகும். தமிழர்கள் இலங்கை அரசிடமிருந்து மட்டுமல்ல வெளி உலகிடம் இருந்தும் தம்மைத் துண்டித்துக்கொண்டு தம்மை உள் முகமாக அலசத் தொடங்கினர். சமூக விழுமியங்களை கேள்விக்குட் படுத்தவும் தமக்கான அரசைப்பற்றிச் சிந்திக்கவும் தொடங்கினர். பொருளாதாரம் உயிர் வாழ்வதற்கான அடிப்படைகளை நோக்கித் திரும்பியது. விடுதலைப் போராட்டம் ஒன்றுடன் இணைந்து வரக்கூடிய சமூக சமத்துவம் மற்றும் சனநாயகப்பண்பாடு போன்றவை வளர்க்கப்படாதபோதும் வேறொருவகையான கூட்டுணர்வும் சமூகத்துள் வளரத் தொடங்கியது. இந்தக் கூட்டுணர்வு வளர்ச்சிக்கு மரபுணர்வு தொன்மங்கள்பற்றியபெருமை இராணுவவாதம் பிரச்சாரங்களின்மூலம் கட்டியமைக்கப்பட்ட பிம்பங்கள் போன்றவை காரணமாக இருந்தன. இது சாத்தியமாவதற்கு வெளியுலகில் இருந்து நாங்கள் துண்டிக்கப்பட்டிருந்தமைதான் முக்கிய காரணமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து முக்கியமான மாற்றம் 2002ம் ஆண்டில் ஏற்படுகிறது யுத்த நிறுத்தமும் பேச்சுவார்த்தைகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

இக்காலத்தில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பேசிய ஒரு பேச்சு முக்கியமானது.

எங்கடை பொடியள் பேச்சு வார்த்தை எண்டு வந்தாலும் பேச்சு வார்த்தை முடிந்த கையோடு ஷொப்பிங்(shoping) செய்யப்போடுவாங்கள் என்று கூறியிருப்பார். புலிகள் இலங்கை அரசாங்கம் வைத்த பொறியிற் சிக்காமல் சொப்பிங் செய்வதில்தான் அதிகம் கவனம் செலுத்தினார்கள் என்ற தொனிப்பட அவர் பேசி இருப்பார்.

புலிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த இரணிலோ மேற்குலகமோ, புலிகள் உலக ஒழுங்கைப்புரிந்து கொண்டு தமிழ் தேசிய அரசியலின் இருப்பை உறுதிசெய்யும் களமாகப் பேச்சுவார்த்தைக்களத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. பதிலாக போருக்குள்ளும் சனநாயகமற்ற தொன்ம உணர்வுக்குள்ளும் மூழ்கி இருந்த தமிழர்களும் புலிகளும் 20 நூற்றாண்டின் பல்தேசிய நிறுவனங்களினால் தீர்மானிக்கப்படுகிற அதிகாரத்துள் நிர்வகிக்கப்படுகிற திறந்த சந்தைகளுள் வந்து ஷொப்பிங் (shopping )செய்யவேண்டும் என்றுதான் விரும்பினார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே பேச்சுவார்த்தைக்களத்தை இராச தந்திரத்துடன் கூடிய அரசியற்களமாக, உலக நிலமைகளைப் புரிந்து கொண்டு தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைக்கக் கூடிய களமாகப் புலிகள் பயன்படுத்தவே இல்லை.

முள்ளி வாய்க்காலில் புலிகளின் பௌதீக மற்றும் அரசியல் அழிவுக்கும் தமிழ்த்தேசியத்தின் பின்னடைவுக்கும் வித்திட்ட முக்கியமான மாற்றம் இது.

தனிநாடு என்ற கோரிக்கையில் இருந்து தமிழர்களை அன்னியப்படுத்தி இலங்கையின் இறைமையை ஸ்திரப்படுத்துவதற்கான அடிவைப்பைச் செய்யவேண்டும் என உணர்ந்திருந்த சிங்களப் பெருந்தேசிய வாதத்திற்கு இன்று வெற்றி கிடைத்திருக்கிறது.

இழந்த நிலங்களைப் பெறுவது அரசியற் கைதிகளை விடுதலை செய்வது இறந்தவர்களை நினைவு கூருவது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறலைச் செய்வது போன்ற முக்கியமான பிரச்சனைகள் அவற்றின் அரசியற் தீவிரத்தன்மைகளை இழந்து சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனையாகக் குறுகி உள்ளதுடன் இலங்கையின் இறைமையை ஏற்றுக் கொண்டவையாகவும் சுருங்கி உள்ளன.

மேற்குறித்த முக்கியமான பிரச்சனைகளுக்கான தீர்வை இரணிலாலும் சந்திரிக்காவாலும் மைத்திரியாலும் மட்டுமே தரமுடியும் என்றும் கூறமுடியாது. உண்மையிலும் மகிந்த அரசாங்கம் கூட மேற்குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கியிருக்கலாம். இவற்றுக்கான தீர்வுகள் இலங்கையின் இறைமைக்கு எந்த அச்சுறுத்தலையும் வழங்கக்கூடியவை அல்ல. இதனை உணர்ந்துகொள்ளமுடியாத அரசியல் முதிர்ச்சி அற்ற கொள்ளைக் கூட்டமாக மகிந்த குடும்பம் இருந்ததும் வியப்புக்குரியதல்ல.

ஆக நிகழ்ந்த ஸ்திரமான மாற்றங்களை முன்னெடுத்து சென்று இலங்கையைப் பலப்படுத்த ரணில் சந்திரிக்கா மைத்திரி கூட்டு விரும்புகிறது.

இனமேலாதிக்கத்தை இழந்த இன அடையாளத்தையும் சுயாதீனத்தையும் பரஸ்பரம் மதிக்கிற பண்பாட்டு மாற்றத்துக்கான அடிவைப்பைச் செய்வதற்காக இலங்கையில் சமூக சனநாயக மாற்றங்களைத் துரிதப்படுத்தும் வேலைத் திட்டங்களைத் தொடங்கவும் இதற்குத் தேவையான மிக அடிப்படையான யாப்பு மாற்றங்களைச் செய்து அனைத்து அரச கட்டமைப் புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கடும் போக்குச் சிங்கள இனவாதிகளோ எந்த நிலையிலும் மேலாதிக்கத்தை இழக்க விரும்பாத சிங்கள மென் போக்குவாதிகளோ அனுமதிப்பார்களா?

ஈழம் என்பது எப்படி ஒரு அரும் கனவோ அப்படியே மேற்குறித்த மாற்றமும் அரும் கனவுதான் என்பவர்களும்இருக்கிறார்கள்..

மூன்று தசாப்த கால யுத்த அனுபவங்களினாலும் உலகமெங்கும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுக்கு ஏகாதிபத்தியங்கள் வழங்கும் செய்தியைப் புரிந்து கொண்டுள்ளமையாலும் மென்போக்குச் சிங்கள மேலாதிக்க வாதத்துடன் இணங்கிப்போவதே இப்போதுள்ள வழி என்று தமிழ் உயரிகள் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளார்கள். இதுவும் முக்கியமான மாற்றம்.

இதகையதொரு அரசியற் சூழ்நிலையுள் எதையும் விற்கவும் எதையும் வாங்கவும் கூடிய தாராளவாதச் சிந்தனைகளைக் கொண்ட சந்தைகளுக்குள் மக்களை இழுத்து விடுவதன் மூலம் கூரிய இன அரசியலில் இருந்து மக்களை அந்நியப்படுத்துவது சாதியமாகும். இதனைத் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஒரு வேளை எதிர்வரும் தேர்தலில் ரணில் சந்திரிக்கா மைத்திரி கூட்டு வெற்றி அடைந்து இராணுவ நெருக்கடிகளும் இன்னும் குறைக்கப்படு மென்றால் தமிழ் சமூகமே தானாக இந்த மாற்றங்களுக்குள் வேகமாக உள் நுழைந்து விடும்.

பாதிக்கப்படுவர்கள் மட்டும் போராடிக்கொண்டிருக்க ஏனையவர்கள் ஷொப்பிங் (shopping-அங்காடியம்) செய்துகொண்டிருப்பார்கள் அல்லது தன்னொளிப்படங்களை ( selfie) எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

சமூகம் தனியார் மயப்படுவதும் மனிதர்கள் தனிமைப்படுவதும் தன்னுணர்வு மேலோங்குவதும் கூட்டுணர்வு அழிந்து விடுவதும் அதிகரிக்கும்.

உண்மையிலும் நாங்கள்தான் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

தேவ அபிரா

வைகாசி2015

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119820/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்படுவர்கள் மட்டும் போராடிக்கொண்டிருக்க ஏனையவர்கள் ஷொப்பிங் (shopping-அங்காடியம்) செய்துகொண்டிருப்பார்கள் அல்லது தன்னொளிப்படங்களை (selfie) எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

சூப்பர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.