Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதற்றங்கள் நிறைந்த வங்கதேசம்

Featured Replies

பதற்றங்கள் நிறைந்த வங்கதேசம் - 1

 
 
கடந்த ஜூன் மாதம் வங்கதேச பயணத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த பிரதமர் மோடி.
கடந்த ஜூன் மாதம் வங்கதேச பயணத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த பிரதமர் மோடி.

கொஞ்சநஞ்சமல்ல, நாற்பது ஆண்டுகள்! தங்களுக்கிடையே உண்டான எல்லைப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது இந்தியாவுக்கும் வங்கதேசத் துக்கும். என்றாலும் இப்படி ஒர் ஒற்றுமையை இப்போது கண்டதே கூட ஒரு சாதனைதான். வங்கதேச தலைநகரான டாக்காவில் இருதரப்புப் பிரதிநிதிகளும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டனர்.

1974-லிலேயே இது தொடர்பான கோணங்கள் வரையறுக்கப்பட்டன. என்றாலும் சமீபத்தில்தான் இந்திய நாடாளுமன்றம் இதை ஏற்றுக் கொண்டது. அந்த விதத்தில் உலக அரங்கில் இது தற்போதைய இந்திய அரசின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இருநாடு களுக்குமிடையே உள்ள பொருளாதாரப் பரிவர்த்தனைகள் அதிகமாகி இருக்கின்றன.

இந்த உடன்படிக்கை நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, இப்போது வங்கதேச பிரதமராக உள்ள ஷேக் ஹசீனாவுக்கும் ஒரு தலைநிமிர்வு தான்.

ஒரு பெரும் குற்றச்சாட்டில் மூழ்கி இருக்கிறது தற்போதைய வங்கதேச அரசு. சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹசீனாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. என்றாலும் அந்தத் தேர்தலை முக்கிய எதிர்கட்சி புறக்கணித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்கட்சிகள் நடத்திய வெறித் தாக்குதலில் பலர் இறந்தனர். பதற்றத்தில் தள்ளப்பட்டது வங்க தேசம். அந்த விதத்தில் ஆக்கபூர்வ மான ஒரு இமேஜ் தன் மீது படிவதை ஹசீனா மிகவும் விரும்புகிறார்.

இந்திய - வங்கதேச எல்லையில் ‘162 என்க்ளேவ்கள்’ எனப்படும் நிலத்திட்டுகள் உள்ளன. (ஒரு நாட்டின் எல்லைக்குள் அமைந்த மற்றொரு நாட்டின் பகுதியை என்க்ளேவ் என்பார்கள்).

சமீபத்திய உடன்படிக்கை காரணமாக இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய எல்லைகளுக்கு உட்பட்டு ‘‘நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்பு கிறீர்களா? அல்லது வங்கதேசத் தில் வசிக்க விரும்புகிறீர்களா? அதை நீங்களே இப்போது தீர்மானித்துக் கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்தாற்போல் அவர் களுக்கு அந்தந்த நாடுகள் பாஸ் போர்ட் வழங்கி அங்கீகரிக்கும்.

ஆக சீனாவுடனும், பாகிஸ் தானுடனும் நடத்த முடியாத ஒரு சாதனை (எல்லைகள் குறித்த தீர்மானம்) வங்கதேசத்துடன் நடந் தேறியுள்ளது.

இப்படிச் சொன்னால் ‘‘வங்க தேசம் தனி நாடாக உருவாவதற்கு இந்தியா பெரும் உதவிகள் செய்திருக்கிறது. இதனால் நம் இரு நாடுகளுக்கிடையே ஆழமான நட்பு நிலவுகிறது. எனவே வங்கதேசத்துடன் நமக்கு உண்டான ஒப்பந்தத்தை சீனா, பாகிஸ்தா னுடன் ஒப்பிடவேகூடாது’’ என்று சிலர் கூறலாம். இதற்கு ஓர் உதாரணமாக 1972ல் இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து கையெழுத்திட்ட நட்பு ஒப்பந்தத் தைக் கூட குறிப்பிடலாம். ஆனால் இப்படி நினைப்பவர்கள் வங்கதேசத்தில் மாறிவரும் உணர்வுப் போராட்டங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளத் தவறி விட்டதாகவே அர்த்தம்.

வேடிக்கை என்னவென்றால் மேலே குறிப்பிட்ட ஒப்பந்தமே இந்தியாவுக்கு எதிரான போக்கை வங்கதேச தலைவர்கள் மேற்கொள்ளக் காரணமாக அமைந்து வந்தது!

இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்பது மிக முக்கியப் பிரச்னையாக - சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குமூலமாக கூட ஆவதற்கான சாத்தியக் கூறுகள் பளிச்சென்று உருவாயின.

சொல்லப்போனால் வங்கதே சத்தில் ஒவ்வொருமுறை தேர்தல் நடைபெறும் போதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் கொம்பு சீவப்படுகின்றன.

தன் நாட்டுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் முஜிபுர் ரஹ்மான், நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் ஒன்பதாவது பிரிவின்படி இருநாடுகளில் எதற்கு “ஆபத்து’’ ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதில் மற்ற நாடு கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும். ‘‘ஆபத்து’’ என்றால் என்ன? பிற நாடுகளிடமிருந்தா? உள்நாட்டிலிருந்தே அந்த அரசுக்கா? இதற்கான விளக்கம் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. தவிர வங்கதேசத்தின் தனித்துவத்தை இதுபோன்ற ஒப்பந்தம் குறைத்து விடுவதாகவே பல கட்சிகள் பிரசாரம் செய்தன. நடுவில் 1975-ல் வங்கதேச எல்லையில் இந்திய ராணுவம் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டதாக வேறு ஒரு வதந்தி பரவி இந்தியாவுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை அதிகரித்தது.

இதனாலெல்லாம் 1975க்குப் பிறகு (முஜிபுர் ரஹ்மான் உருவாக்கிய கட்சியான) அவாமி லீகைத் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்பந்தத்தை நீக்கக் கோரின.

அவாமி லீக்கின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஹஸீனா கூட இந்தியாவுக்கெதிர்க் குழுவில் சேர்ந்து விட்டார் எனலாம். தான் பதவிக்கு வந்தால் இந்த அமைதி ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்று அவரும் அறிவித்தார்.

வங்கதேசத்தைப் பொருத்த வரை அதன் முக்கியக் கட்சிகளின் ஒன்றான பி.என்.பி. (வங்கதேச தேசியக் கட்சி) ‘இஸ்லாம் அடிப்படையிலான’ வங்கதேசம் அமைய வேண்டும் என்று கருத்து கொண்டது. அவாமி லீக் ‘மதச் சார்பற்ற ‘ வங்கதேசத்துக்கு குரல் கொடுக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும் போது வங்கதேச தலைமை இந்தியாவுடன் நல்லுறவுடன்தான் இருந்து வந்திருக்கிறது என்பதை யும், அதே சமயம் அண்டை நாடான வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் வலிவடைந்து வருகிறது என்பதையும் இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.

வங்கதேசம் சென்ற இந்தியப் பிரதமர் வேறொரு பஞ்சாயத்தில் ஈடுபடுவாரோ என்ற யூகம் உலக அரங்கில் நிலவியது. அது வங்கதேசத்தின் இரண்டு அரசியல் தலைமை பெண்களுக்கு நடுவே பல ஆண்டு காலமாக நடந்துவரும் பனிப்போர். ஹசீனா மற்றும் கலீதா ஆகிய இந்த இருவரும் அந்த நாட்டின் அசைக்க முடியாத சக்திகளாக வலம் வருகிறார்கள். மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.

எதனால் அவர்களுக்கிடையே இந்தப் பகைமை?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றங்கள்-நிறைந்த-வங்கதேசம்-1/article7502243.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றங்கள் நிறைந்த வங்கதேசம் - 2

 
 
வங்கதேசத்தின் நவோகான் பகுதியில் உள்ள இந்திய துணைக் கண்டத்திலேயே பெரிய புத்த விஹாரம்.
வங்கதேசத்தின் நவோகான் பகுதியில் உள்ள இந்திய துணைக் கண்டத்திலேயே பெரிய புத்த விஹாரம்.

ஹசீனா, கலீதா ஆகிய பெண்மணிகளுக்கிடையே தோன்றிய பகைமைப் பின்னணியை அறிவதற்கு முன்பாக வங்கதேசத்தின் பின்னணியைப் பார்ப்போம்.

வங்கதேச எல்லைகள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கப் பகுதியோடு இழைந்திருக்கின்றன.

பெங்கால் என்பதை நாம் வங்கம் என்று தொன்றுதொட்டுக் குறிப் பிட்டிருக்கிறோம். மகாபாரதத்தில் மன்னன் வாலியின் தத்துப் பிள்ளை களில் ஒருவனான ஹரிவம்ச வங்கன் என்பவர் வங்க சாம்ராஜ் யத்தை உருவாக்கியதாக குறிப்பு உண்டு.

பண்டைய இந்தியாவின் வங்கம் மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதி நாடாக இருந்திருக்கிறது. ஜாவா, சுமத்ரா, சயாம் ஆகிய பகுதிக ளோடு செழிப்பான வணிக உறவு கொண்டு விளங்கியது. வங்க இளவரசன் விஜயசிங்கா இலங் கையை கி.மு.544-ல் தன்வசம் கொண்டு வந்தான். இதைத் தொடர்ந்து தனது பெயரின் ஒரு பகுதியான சிங்களம் என்பதை இலங்கையின் பெயராக மாற்றி னான் என்கிறார்கள்.

பதினோறாம் நூற்றாண்டுவரை இந்தியாவின் மிகவும் வளம் நிறைந்த பகுதியாக இருந்தது பெங்கால் எனப்படும் வங்காளம். இந்திய சாம்ராஜ்யங்களின் போட்டிகள் நிறைந்த வாரிசுரிமைப் போர்கள் அங்கு நிறையவே நடந்துள்ளன. இந்து மதத்தினரும், புத்த மதத்தினரும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் களமாக அதைத் தேர்ந்தெடுத்ததுண்டு.

ஆனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் முடிவில் அங்கு ஓர் அலை வீசியது. இஸ்லாமிய அலை. துர்கிஸ்தான் பகுதியைச் சேர்ந்த முகம்மது பக்தியார் என்பவர் வங்காளத்தைத் தன் பிடிக்குள் கொண்டு வந்தார்.

சன்னி பிரிவு மதப் பிரசாரகர்கள் பின் பெருமளவில் அங்கு வந்து சேர்ந்தனர். பல மசூதிகளையும், மதரஸா எனப்படும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களையும் நிறைய எழுப்பினார்கள்.

இதன் காரணமாக இஸ்லாம் அந்தப் பகுதியில் வேர்விடத் தொடங்கியது. 1202-ம் ஆண்டில் டெல்லி பகுதியைச் சேர்ந்த ராணுவத் தளபதியான பக்தியார் கில்ஜி என்பவர் பிஹார், வங்காளம் ஆகிய இரு பகுதிகளையுமே தன் பிடிக்குள் கொண்டு வந்தார். ஆக்கிரமிப்பு என்பது அராஜகம் தான். என்றாலும் இஸ்லாமிய ஆட்சி யில் வங்காளத்தின் வணிகம் உலக அளவில் செழித்து வளர்ந்ததை குறிப்பிடத்தான் வேண்டும்.

1575-ல் நடைபெற்ற துகரோய் போரைத் தொடர்ந்து அக்பரின் முகலாயப் படைகள் வங்காளத்தைத் தங்கள் வசம் கொண்டு வந்தன. அப்போது டாக்காவை தங்கள் தலைநகரம் ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் அது ஆட்சி மையத்திலிருந்து மிகவும் தொலைவாக இருந்ததால் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன.

பிரம்மபுத்ரா நதிக்குக் கிழக்காக அமைந்த பகுதி முகலாயத் தாக்கத்துக்கு உட்படவில்லை. பெங்காலி பண்பாடு அங்குவேர் விட்டிருந்தது. அதை அசைத்துப் பார்க்க முகலாய சாம்ராஜ் யத்தினால் முடியவில்லை. இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் தங்கள் தனித்துவமான பண்பாடு மற்றும் இலக்கியத்தை வளர்த்துக் கொள்ள வங்க தேசத்தினர் அனுமதிக்கப்பட்டனர்.

உலகத்தின் அத்தனை கடல் மார்க்கங்களுக்கும் வங்காளம் தன் கதவை முழுமையாகத் திறந்து விட்டது. இதனால் வணிகம் பெருகியது. கூடவே ஆபத்தும் பெருகியது.

பதினைந்தாம் நூற் றாண்டின் தொடக்கத்தில் போர்ச்சுக்கீஸியர்கள் வந்து இறங்கினார்கள். வணிகத்தைத் தாண்டியும் வங்காளத்தின்மீது ஆசை கொண்டார்கள். ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டனர்.

சிட்டகாங் மற்றும் ஹுக்ளி பகுதியில் தங்களை இவர்கள் நிலைநிறுத்திக் கொண்டார்கள். ஆனால் வங்காளத்தை ஆண்ட கசின் கான் மஷாதி என்பவர் தலைமையில் முகலாயப் படை போர்ச்சுக்கீஸியரை 1632ல் ஹுக்ளி யுத்தத்தில் தோற்கடித்து விரட்டியது.

ஒளரங்கசீப் ஆட்சியில் வங்காளத்தின் உள்ளூர் நவாப் தங்களது மூன்று கிராமங்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விற்றனர். அவற்றில் ஒன்று கொல்கத்தா. இந்தியாவில் பிரிட்டன் அழுத்தமாகக் காலடி பதித்த முதல் நகரம் கொல்கத்தாதான்.

ஜாப் சர்னோக் பிரிட்டிஷ் அரசைச் சேர்ந்த இவர் வங்காளம் தங்களது சாம்ராஜ்யத்தால் ஆளப் பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர். கல்கத்தாவைத் தொடங்கி மெல்ல மெல்ல வங்காளம் முழுவதும் தாங்கள் பரவிவிட வேண்டுமென்று திட்டமிட் டார். ஒருகட்டத்தில் வங்காளத்தை ஆண்டு முகலாயர்களுடன் நேரடி கோதாவில் இறங்கினார். தொடங்கியது ஆங்கிலேய முகலாய யுத்தம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றங்கள்-நிறைந்த-வங்கதேசம்-2/article7506909.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 3

 
ராபர்ட் கிளைவ்
ராபர்ட் கிளைவ்

வங்காளத்தின் நவாபாக விளங்கிய ஷெயிஷ்டா கான் பிரிட்டிஷ் படைகளை ஹுக்ளியிலிருந்தும், பலேஷ்வரி லிருந்தும் ஓட ஓட விரட்டினார். ஆங்கிலே யரின் கடற்புறத் தாக்குதல் தோல்வியை அடைந்தது.

பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனி வங்காள அரசை அணுகியது. ‘‘நாங்கள் ஒன்றும் இங்கு வந்த போர்ச்சுக்கீஸியர்கள் போல அரசுப் பிரதிநிதிகள் இல்லை. நாங்கள் ஒரு வணிக நிறுவனம் அவ்வளவுதான். உங்களோடு வியாபாரம் செய்தால் இருதரப்புக்குமே நல்லதுதானே’’ என்று நைச்சியமாகப் பேசினார்கள். வங்காள அரசு ஒப்புக் கொண்டவுடன் உடனடியாக தங்கள் வணிக நிறுவனத்தை கொல்கத்தாவில் 1690ல் நிறுவினார்கள்.

நாளடைவில் முகலாய சாம்ராஜ்யம் தன் முக்கியத்துவத்தை மெல்ல மெல்ல இழந்தது. ‘இனி உள்ளூர் ஆட்கள்தான் எங்களை ஆட்சி செய்யலாம்’ என்று மக்கள் உறுதியாக இருக்க, நவாப்புகள் வங்காளத்தை ஆளத் தொடங்கினர்.

அப்போது வங்காளத்தில் ஆங்காங்கே உள்ள நிலத் திட்டுகளில் பிரிட்டிஷாரும் தங்கி இருந்தனர் - கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதிகள் என்ற போர்வையில். நவாப் புக்கு இது பிடிக்கவில்லை. என்ன இருந்தா லும் இவர்களால் தனது ஆட்சிக்கு ஆபத்து நேரும் என்று எண்ணினார். தங்கள் எல்லைக் குள் இருந்த ஆங்கிலேயர்கள் வசித்த பகுதிகளின்மீது தாக்குதல் நடத்தினார்.

அந்தக் காலகட்டத்தில் கிழந்திந்தியக் கம்பெனியில் குமாஸ்தாவாகச் சேர்ந்து பின்னர் ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம் கண்டிருந்த ராபர்ட் கிளைவால் இதை ஏற்க முடியவில்லை. நவாபை எதிர்த்து தாக்குதலை நடத்தினார். . அடுத்த ஒரு வருடத்தில் கல்கத்தா கிளைவின் வசமானது.

ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வங்காளத்தில் வணிகம் பாதிக்கப்பட வில்லை. மூங்கில், கரும்பு, தேயிலை, பருத்தி, மசாலாப் பொருட்கள், சணல் போன்றவை டாக்கா, ராஜ்சஹி போன்ற பகுதிகளில் விளைச்சல் செய்யப்பட்டு ஏற்றுமதியானதைத் தொடர்ந்து, ஹுக்ளி ஒரு மிக பிஸியான துறைமுகமானது.

இதனிடையே சிப்பாய்க் கலகம் போன்ற கலவரங்களைத் தொடர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியது பிரிட்டிஷ் அரசு. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசே தனது நேரடி ஆட்சியைத் தொடங்கியது.

பிரிட்டிஷ் ராஜ் என்ற பெயரில் இந்தியாவை ஆட்சி செய்யத் தொடங்கிய பிரிட்டன் தனது ஆட்சியை பதினேழு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டது. அவற்றில் வங்காளம் ஒரு முக்கியப் பகுதியானது. வைஸ்ராய் என்ற பதவியில் தனது பிரதிநிதியை நியமித்து வங்காளத்தை ஆட்சி செய்யத் தொடங்கியது.

கல்கத்தாவை மேலும் வளம் மிக்கப் பகுதியாக மாற்றிக் காட்டியது பிரிட்டன். ஆனால் இந்த வளத்தின் பெரும் பங்கு லண்டனை நோக்கிதான் சென்றது.

ஆனால் வங்காளத்தின் பொருளாதாரம் சீர்குலைந்தது. அடுத்தடுத்து இரண்டு மாபெரும் பஞ்சங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது வங்காளத்துக்கு.

பிரிட்டிஷ் ஆட்சி வங்காளத்தில் இருந்த மைனாரிட்டி இந்துக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் அங்கிருந்த முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையேயான நேரடி உரசல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன.

அங்கு வசித்த இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், ஆங்கில மொழியைக் கற்கவும் முன்வந்தனர். ஆனால் முஸ்லிம்கள் இப்படி ஒத்துழைக்க மறுத்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலை தோன்றியது.

1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளித்துவிட பிரிட்டன் தீர்மானித்தது. ஆனால் வங்காளத்தில் குழப்பநிலையே நீடித்தது. சுயாட்சி வேண்டுமென்று அங்குள்ளவர்கள் விரும்பினாலும் மதத்தின் அடிப்படையில் அவர்கள் பிளவுண்டிருந்தார்கள்.

முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் உண்டாவது நடக்காத ஒன்று என்று தீர்மானித்த பிரிட்டிஷ் அரசு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தது. மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம்.

வணிக ரீதியாகப் பார்த்தால் பெரும் பாலான விவசாயப் பொருட்கள் விளைச்சல் கண்டது முஸ்லிம்கள் அதிகம் உள்ள டாக்கா பகுதியில். ஆனால் அந்தப் பொருட்கள் பக்கு வப்படுத்தப்பட்டு கப்பல்களில் ஏற்றப்பட் டது இந்துக்களை அதிகம் கொண்ட மேற்குப் பகுதியில். இந்த இரண்டு பகுதிகளுக்கு மிடையே அடிக்கடி சண்டைகள் மூண்டன.

பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனி நாடாகியது. அந்த பாகிஸ்தானின் ஒரு பகுதியாக்கப்பட்டது கிழக்கு வங்காளம் அப்போது அதன் பெயர் கிழக்கு பாகிஸ்தான் என்றானது. பின்னாளில் பங்களாதேஷாகப் பெயர் சூட்டிக் கொண்டது அந்தப் பகுதி!

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-3/article7523079.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 4

 
1970-ல் வங்கதேசத்தில் (கிழக்கு பாகிஸ்தான்) வீசிய போலா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி.
1970-ல் வங்கதேசத்தில் (கிழக்கு பாகிஸ்தான்) வீசிய போலா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி.

புவியியல் அமைப்பு ரீதியாக மேற்கு பாகிஸ்தானுக்கும், கிழக்கு பாகிஸ்தானுக்கும் நடுவே தூரம் மிக அதிகம் - சுமார் ஆயிரம் மைல்கள்!

இரு பகுதி மக்களும் மனதளவில் மேலும் அதிகமாகப் பிரிந்திருந்தனர். இந்த இடைவெளிக்கு பல முக்கிய காரணங்கள்.

அரசாட்சி, பொருளாதாரம், ராணுவம் எல்லாமே மேற்கு பாகிஸ்தானின் வசம்தான் இருந்தன. நாட்டின் மொத்த பட்ஜெட்டில் நாலில் ஒரு பங்கு மட்டுமே கிழக்கு பாகிஸ்தானுக்காகச் செலவழிக்கப்பட்டது. நவம்பர் 1970ல் புயல் ஒன்று வங்கதேசத்தை கோபாவேசமாகத் தாக்கியது.

‘போலா’ என்ற பெயரைச் சொன்னாலே வங்கதேச மக்கள் அலறுவார்கள். 1970 நவம்பர் 1 அன்று அந்தப் பகுதியை (அப்போது அது கிழக்கு பாகிஸ்தான்) புரட்டிப் போட்ட புயலின் பெயர் அது. இந்தப் புயலின் காரணமாக கடல் அலைகள் 30 அடி உயரத்துக்கு எழும்பின. குறைந்தது மூன்று லட்சம்பேர் இறந்தார்கள். புயல் சரித்திரத்திலேயே மிக அதிகமானவர்களை காவு வாங்கியது இதுதான் என்கிறார்கள். தஜுமுதீன் என்ற நகரத்தில் இருந்தவர்களில் பாதிப்பேர் இதில் இறந்துவிட்டனர். இந்த அளவுக்கு இல்லை என்றாலும் பல்வேறு புயல்களால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் பகுதியாகத்தான் வங்கதேசம் உள்ளது. 1876-ல் வீசிய புயல்கள் சுமார் 5000 பேரை பலி கொண்டது. 1991ல் வீசிய கோர்க்கி புயல் சுமார் ஒன்றரை லட்சம் பேரை மேல் உலகத்துக்கு அனுப்பியது.

போலா புயலைத் தொடர்ந்து மேற்கு பாகிஸ்தானிலிருந்து நிவாரண உதவிகள் மிக மெதுவாகவே வரத் தொடங்கின. கோபத்தின் உச்சிக்குச் சென்றனர் கிழக்கு பாகிஸ்தான் மக்கள்.

போதாக்குறைக்கு பாகிஸ்தானின் தேசிய மொழி உருது மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தானில் பெருமளவு இருந்த வங்காளிகள் தங்கள் கலாச்சார முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ளத் தீர்மானித்தனர். உருதுவுடன் வங்காள மொழியும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினர். இதெல்லாம் தங்களுக்குச் சுயாட்சி கிடைத்தால்தான் சாத்தியம் என்றனர். அவாமி லீக் என்ற கட்சி உருவாகியது.

இந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்த புட்டோ தனது பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சி என்பதை 1967ல் தொடங்கினார். கொஞ்சம் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட இந்தக் கட்சி அயூப் கானின் ஆட்சியில் எதிர்கட்சியாகப் பணியாற்றியது.

அயுப் கானுக்கு எதிராகப் பலவித குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மட்டுமே அவரது ராஜினாமாவைக் கோரியிருந்தால் அதைப்பற்றி அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஆனால் அந்த நாட்டின் ராணுவம் அவர் பதவி விலகலை எதிர்பார்க்கத் தொடங்கியது. வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியான யாஹ்யா கானுக்கு தன் பதவியை விட்டுக் கொடுத்தார்.

அதிபரான கையோடு யாஹ்யா கான் ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார். அதுவரை ஒன்றாகவே கருதப்பட்ட மேற்கு பாகிஸ்தானை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார். அவை பஞ்சாப், பலோசிஸ்தான், சிந்து மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவை. மக்கள் தொகைக்குக் தகுந்த மாதிரிதான் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென்று அவர் சட்டம் இயற்றினார். இதன் விளைவை அவர் அப்போது முழுமை யாக உணர்ந்தாரா என்பது தெரியவில்லை.

மக்கள் தொகை கிழக்கு பாகிஸ்தானில்தான் அதிகமாக இருந்தது. எனவே தேசிய நாடாளுமன்றத்தில் கிழக்கு பாகிஸ்தானுக்குத்தான் அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள் என்ற நிலை உண்டானது.

1970ல் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. கணிசமான அளவில் ஒழுங்காகவே நடைபெற்ற தேர்தல் என்கிறார்கள் உலகப் பார்வையாளர்கள்.

அதற்கு ஒரு மாதத்திற்கு முன் வீசிய போலா புயலும் அந்த விஷயத்தில் மேற்கு பாகிஸ்தான் காட்டிய அலட்சியமும் கிழக்கு பாகிஸ்தான் மக்களை கொந்தளிக்க வைத்திருந்தது.

தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் போட்டி யிட்டாலும் அவர்களில் உண்மையான போட்டி என்பது மேற்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், கிழக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட அவாமி லீக் கட்சிக்கும்தான்.

இருகட்சிகளின் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களைக் கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது. முடிவு என்னவாக இருக்கும் என்பதில் சுவாரசியம் அதிகமானது. எப்படியும் இருக்கலாம் என்பதே பலவித யூகங்களுக்கு வழிவகுத்தது.

கிழக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய அளவில் அவாமி லீக்குக்கு ஆதரவான தேர்தல் முடிவை அளித்தது. கிழக்கு பாகிஸ்தானில்தான் தொகுதிகள் அதிகம் என்பதால் மொத்த பாகிஸ்தானை எடுத்துக் கொண்டாலும் அவாமி லீக்குதான் அதிக தொகுதிகளில் வெற்றி என்று ஆனது.

இந்தத் தேர்தலில் இன்னொரு மிகத் தெளிவான போக்கும் வெளியானது. அவாமி லீக் மேற்கு பாகிஸ்தானிலும் போட்டியிட்டது. பாகிஸ்தான் மக்கள் கட்சி கிழக்கு பாகிஸ்தானிலும் போட்டியிட்டது. ஆனால் அவாமி லீகால் மேற்கு பாகிஸ்தானில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. அதேபோல் பாகிஸ்தான் மக்கள் கட்சியால் கிழக்கு பாகிஸ்தானில் ஒரு வெற்றியைக்கூட பெறமுடியவில்லை.

(உலகம் உருளும்)

 
 
 
 

 

  • தொடங்கியவர்
 

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 5

 
பாகிஸ்தான் அதிபர் சவுத்ரி பாசல், ஷேக் முஜிபுர் ரஹ்மான், சுல்பிகர் அலி புட்டோ (1970-களில் எடுக்கப்பட்ட புகைப்படம்)
பாகிஸ்தான் அதிபர் சவுத்ரி பாசல், ஷேக் முஜிபுர் ரஹ்மான், சுல்பிகர் அலி புட்டோ (1970-களில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

கிழக்கு பாகிஸ்தான் சமத்துவமாக நடத்தப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. 1945 - 1948 தொடங்கி 1960 வரை அந்தப் பகுதியில் ஏற்றுமதி வருமானம் 70 சதவீதம் என்று இருந்தது. ஆனால் இதிலிருந்து 25 சதவீதம் மட்டுமே அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டது.

1948-ல் கிழக்கு பாகிஸ்தானில் 11 நெசவு மில்கள் இருந்தன. மேற்கு பாகிஸ்தானில் வெறும் ஒன்பதுதான். ஆனால் 1971-ல் மேற்கு பாகிஸ்தானில் 150 நெசவு மில்கள் என்று அதிகரித்திருக்க கிழக்கு பாகிஸ்தானில் நெசவு மில்களின் எண்ணிக்கை வெறும் 26 ஆனது.

மேலே உள்ள உதாரணங்களில் 1948 என்ற வருடத்தை அடிப்படையாகக் கொள்ளக் காரணம் அது பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்ற காலகட்டம் என்பதால்தான்.

ஆக கிழக்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதி மேற்கு பாகிஸ்தானின் வளர்ச்சிக்குப் பயன்பட்டது. தவிர தங்கள் வருமானத்தில் கணிசமான பங்கு காஷ்மீர் தொடர்பாக நடைபெற்று வந்த பல்வேறு போர்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறதே தவிர தங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்கிற ஆதங்கமும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டிருந்தது.

மதமும் கூட இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்றால் அது பலருக்கு வியப்பளிக்கலாம். இரண்டு பகுதிகளுமே முஸ்லிம்கள் நிறைந்தவைதானே. சொல்லப் போனால் முஸ்லிம்களுக்குத் தனிநாடு வேண்டும் என்றுதானே பாகிஸ்தான் உரு வானது? அப்படியிருக்க அதன் இருபகுதி களுக்கிடையே தோன்றிய வேறுபாடுகளுக்கு மதம் எப்படி காரணமாக இருக்க முடியும்? நியாயமான கேள்விகள்தான். ஆனால் விடைகள் உண்டு.

மேற்கு பாகிஸ்தான் பகுதி மக்களில் 97 சதவீதம் முஸ்லிம்கள். இவர்கள் மற்ற எதையும்விட மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர்கள். கிழக்கு பாகிஸ்தானில் 85 சதவீதம் முஸ்லிம்கள். மீதம் 15 சதவீதத்தில் பலரும் இந்துக்கள். (மக்கள் தொகை அதிகம் நிறைந்த பகுதி கிழக்கு பாகிஸ்தான் எனும் கோணத்தில் பார்த்தால் இந்த 15 சதவீதம் என்பது எண்ணிக்கையில் அதிகம்தான்). எனவே அங்கு மத சகிப்புத்தன்மை கொஞ்சம் அதிகம். (பின்னாளில் அங்கிருந்து லஜ்ஜா எனும் நூலை எழுதிய தஸ்லீமா நஸ்ரின் ஓட ஓட விரட்டப்பட்டது வேறு விஷயம்).

வங்காளிகள் தங்கள் இலக்கியம் மற்றும் கலாச்சார தொன்மத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். (இந்த மதச்சார்பற்ற தன்மை பிறகுகூட வெளிப்பட்டது. வங்கதேசம் உருவானபோது அதற்கு ’வங்கதேசம் மக்கள் குடியரசு’ என்றுதான் பெயரிடப்பட்டது. ‘வங்கதேசம் இஸ்லாமியக் குடியரசு’ அல்ல).

இதன் தொடர்ச்சியாகத்தான் உருது மட்டுமே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று ஜின்னா அறிவித்தபோது கிழக்கு பாகிஸ்தானில் அதற்கு கடும் எதிர்ப்பு உண்டானது. காரணம் அங்கு வசித்த பலரும் (பல முஸ்லிம்கள் உள்பட) வங்க மொழியைத்தான் பேச்சு மொழியாகக் கொண்டிருந்தனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ‘மேற்கு பாகிஸ்தானில் ஓர் இடத்தைக்கூட வெல்ல முடியாத அவாமி லீக் எப்படி பாகிஸ்தானை ஆளலாம்?’ என்று மேற்கு பாகிஸ்தானில் சில அரசியல்வாதிகள் கேட்க, கிழக்கு பாகிஸ்தானில் உக்கிரம் அதிகமானது.

கிழக்கு பாகிஸ்தானியர்களால் உருவாகும் ஓர் அரசை ஏற்றுக் கொள்வதற்கு மேற்கு பாகிஸ்தானியர்களுக்கு மனமே இல்லை. அந்தச் சமயத்தில் புட்டோ கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அரசியல் சட்டத்தையே மீறும் வகையில் அவர் பேசத் தொடங்கினார். ‘உதர் தும், இதர் ஹம்’ என்றார். ‘அங்கே நீங்கள் ஆட்சி அமையுங்கள், இங்கே நாங்கள் ஆட்சி அமைத்துக் கொள்கிறோம்’’ என்றார். அதாவது மறைமுகமாக பிரிவினை குறித்து பேசினார். பிறகு விளக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு இரண்டு பிரதமர்கள் இருக்கலாம் என்றார். தவிர முஜிபுர் ரஹ்மானின் ஆறு அம்ச திட்டம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றார். (இந்த திட்டம் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்) இதனால் கிழக்கு பாகிஸ்தானுக்கு சுயாட்சி அந்தஸ்து உண்டாகிவிடும் என்றார் அவர்.

பிரிவினை எண்ணங்கள் கிழக்கு பாகிஸ்தானிலும் கரைபுரண்டு ஓடத் தொடங்கின. தனி நாடாக உருவானால்தான் பொருளாதார வாய்ப்புகளும், சமூக வளர்ச்சியும் தங்களுக்கு இருக்குமென்று அவர்கள் தீவிரமாகவே நினைக்கத் தொடங்கினார்கள். முக்கியமாக மேற்கு பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

இந்தச் சூழலில் மேற்கு பாகிஸ்தானில் இருந்த சில கல்வியாளர்கள் கிழக்கு பாகிஸ்தானை ஆதரித்தார்கள். ஆனால் அவர்கள் அடக்கப்பட்டார்கள். புட்டோவை அரசியலில் வளர்த்தவர் என்று கூறப்பட்ட ஜலாலுதீன் அப்துர் ரஹீம் என்பவர் நியாயத்தைப் பேசியதற்காக புட்டோவால் சிறையில் அடைக்கப்பட்டார்.

கவிஞர் அகமது பயஸ், மனித உரிமைப் போராளி மாலிக் குலாம் ஜிலானி, சிந்தி தேசியக் கட்சித் தலைவர் சையது ஆகியோர் நாட்டின் ஆட்சி (தேர்தல் முடிவுகளின்படி) அவாமி லீக்கிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே குரல் கொடுத்தனர்.

1970ல் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் கட்சிக்குப் பெரும் வெற்றியை அளித்தனர் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் என்றோம். எந்த அளவுக்கு தெரியுமா? கிழக்கு பாகிஸ்தானுக்காக 169 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றில் 167 தொகுதிகளைக் கைப்பற்றியது அவாமி லீக். உலகின் மொத்தப் பார்வையும் அவாமி லீக் மீதும் அதன் தலைவர் முஜிபுர் ரஹ்மான் மீதும் திரும்பின.

‘யார் இந்த முஜிபுர் ரஹ்மான்?’ பலரும் கேட்கத் தொடங்கினார்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-5/article7536286.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 7

 

வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தின் இன்றைய தோற்றம்.
வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தின் இன்றைய தோற்றம்.

கடந்த 1964 தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன் தேச துரோகக் குற்றம் சாட்டி முஜிபுர் ரஹ்மானைச் சிறையில் அடைத்தது பாகிஸ்தான் அரசு. பாகிஸ்தான் ஆட்சியின் இந்த அராஜகப் போக்கு கிழக்கு பாகிஸ்தான் மக்களைக் கொந்தளிக்க வைத்தது.

தவிர, அரசு அலுவலகங்களிலும் காவல் துறையிலும் ராணுவத்திலும் கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவே அங்கம் வகித்தனர்.

போதாக் குறைக்கு 1965-ல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது மேற்கு பாகிஸ்தான் கொஞ்சம் பாதுகாப்பாகவும் கிழக்கு பாகிஸ்தான் அதிக ஆபத்து கொண்டதாகவும் விளங்கியதாக எண்ணினர் கிழக்கு பாகிஸ்தான் மக்கள்.

இதைத் தொடர்ந்துதான் ஆறு அம்ச திட்டம் ஒன்றை அரசுக்கு முன் வைத்தார் முஜிபுர் ரஹ்மான். இந்த திட்டத்தை சுருக்கமாக இப்படிப் பட்டியலிடலாம். ஒன்று, பாகிஸ்தான் அரசு என்பது மக்கள் தேர்ந்தெடுத்து அமைந்த ஒன்றாகவே இருக்க வேண்டும். இரண்டு, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய இரண்டு மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். பிறவற்றைத் தீர்மானிக்கும் உரிமை அந்தந்தப் பகுதிகளின் ஆட்சிகளுக்கு விடப்பட வேண்டும். மூன்று, மேற்கு, கிழக்கு பாகிஸ்தான் பகுதிகளுக்குத் தனித்தனி நாணயம் அமைய முயற்சிக்க வேண்டும். நான்கு, வரி விதிப்பு மற்றும் வருவாய்த்துறை போன்றவை அந்தந்தப் பகுதிகளின் அரசுகளிடம்தான் அளிக்கப்பட வேண்டும். ஐந்து, அந்நியச் செலவாணி கணக்குகள் பாகிஸ்தானின் இருபகுதிகளுக்கும் தனித்தனியாக ஆவணப்படுத்த வேண்டும். ஆறு, கிழக்கு பாகிஸ்தானுக்கென்று தனி ராணுவம் இருக்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் கொஞ்சம் பிரிவினைப் போக்கு தென்பட்டது என்றாலும் கிழக்கு பாகிஸ்தான் மக்களின் பேராதரவு இந்த ஆறு அம்ச திட்டத்துக்கு இருந்தது.

இந்த நிலையில்தான் தேர்தலில் 167 தொகுதிகளைக் கைப்பற்றியது அவாமி லீக்.

பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் பதறிப்போனார். சுயாட்சி, தன்னாட்சி என்றெல்லாம் கோஷ மிடுபவர் முஜிபுர். தவிர அளவில் சிறியதாக இருந்தாலும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் தன்வசம் கொண்டிருந்தது கிழக்கு பாகிஸ்தான். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி அவாமி லீக்குக்குத் தான் என்றாகிவிட்டது. ‘முதல் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கிழக்கு பாகிஸ்தானுக்குத் தன்னாட்சி அந்தஸ்து வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேறிவிட்டால் அதற்குப் பிறகு தன் பதவி, அதிகாரம் என்னாவது?’’.

இந்தப் பாதையில் யோசித்த யாஹ்யா கான், ‘‘நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன் முஜிபுர் ரஹ்மானும் (பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரான) புட்டோவும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைய வேண்டும்’’ என்று ஒரு நிபந்தனையை விதித்தார். ‘‘அதுவரை முதல் நாடாளுமன்றம் தள்ளிப் போடப்படும்’’ என்றார்.

இரு தலைவர்களையும் 1971 மார்ச் 3 அன்று சந்திக்க வைத்தார். இது அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு சந்திப்பாக இருக்கும் என்று கருதப்பட்டது.

இந்தச் சந்திப்பு நடக்குமா என்று பலர் சந்தேகம் தெரிவித்தாலும் அது நிகழ்ந்தது. ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தேசிய அளவில் வேலை நிறுத்தம் என்று அறிவித்தார் முஜிபுர் ரஹ்மான். குறைந்தது கிழக்கு பாகிஸ்தான் முழுவதிலும் வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதனிடையே கிழக்கு பாகிஸ்தானின் ஆளுநராக டிக்கா கான் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஒரு ராணுவத் தளபதி. இவரது நியமனத்தை கிழக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. ஏனென்றால் அடக்கு முறைக்காகத்தான் அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்ற எண்ணம் பரவிவிட்டிருந்தது. கிழக்கு பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த நீதிபதிகள், டிக்கா கானுக்கு ஆளுநருக்கான பதவியேற்பு உறுதிமொழியை செய்து வைக்க மறுத்தனர்.

ராக்கெட் வேகத்தில் பதற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கின. ‘கிழக்கு பாகிஸ்தானை வன்மையாக அடக்கி வைக்க வேண்டும்’ என்று மேற்கு பாகிஸ்தானிலுள்ள ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த ஒரு கப்பல் கிழக்கு பாகிஸ்தானிலுள்ள சிட்டகாங் துறைமுகத்தை நோக்கிச் சென்றது. அதில் ராணுவ வீரர்கள் நிறைந்திருந்தார்கள். கூடவே யுத்தத் தளவாடங்களும் இருந்தன.

கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காளத் தொழிலாளர்கள் அந்தக் கப்பலில் இருந்த பொருட்களை கீழே இறக்க மறுத்தார்கள். இதன் காரணமாக இருதரப்பினரிடையே கடும் சண்டை ஏற்பட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-7/article7553210.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 8

 
மேஜர் ஜியா உர் ரஹ்மானுடன் அவரது மனைவி கலீதா ஜியா.
மேஜர் ஜியா உர் ரஹ்மானுடன் அவரது மனைவி கலீதா ஜியா.

மார்ச் 7, 1971 அன்று முஜிபுர் ரஹ்மான் ஓர் உணர்ச்சிமிகு உரையை ஆற்றினார். அதில் நான்கு அம்ச திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

அடக்குமுறைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். கிழக்கு பாகிஸ்தானில் நீக்கமற நிரப்பப்பட்டிருந்த ராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும். அடக்குமுறை காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரங்கள் உடனடியாக வழக்கப்பட வேண்டும்.

அந்தப் பக்கம் புட்டோ அடக்குமுறை எண்ணங்களுக்கு உரம் சேர்த்துக் கொண்டிருக்க இந்தப் பக்கம் முஜிபுர் ரஹ்மான் பிரிவினைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.

‘‘கிழக்கு பாகிஸ்தானிலுள்ள ஒவ்வொரு வீடும் அடக்குமுறைக்கு எதிரான கோட்டையாக வேண்டும்’’ என்றார். தன் உரையின் முத்தாய்ப்பாக ‘‘இம்முறை நமது போராட்டம் என்பது விடுதலைக்கானது. இது நமது சுதந்திரப் போராட்டம்’’ என்றார்.

மூண்டது மேற்கு - கிழக்கு பாகிஸ்தான் யுத்தம்.

மார்ச் 25 இரவு அன்று பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தான் மீது வெளிப்படையாகவே தனது தாக்குதலைத் தொடங்கியது. இதை ‘இனப்படுகொலை’ என்றே பின்னர் பலரும் வர்ணித்தனர்.

கிழக்கு பாகிஸ்தானிலுள்ள வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்திலிருந்த வங்காளிகள் அனைவரும் நீக்கப்பட்டனர் அல்லது ஆயுதம் ஏந்த முடியாத பதவிகளுக்கு மாற்றப்பட்டனர். தாக்குதலின் முக்கிய இலக்கு டாக்காவாக இருந்தது.

முக்கியமாக கல்வியாளர்கள் மீது கடும் கோபம் இருந்தது ஆட்சியாளர்களுக்கு. டாக்கா பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் சூறையாடப்பட்டன. அந்தப் பல்கலைக்கழகத்தில் ‘ஜகன்னாத் அரங்கம்’ என்ற ஒன்று இருந்தது. அதில் தங்கியவர்கள் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். அதைக் குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தான் ராணுவம். அங்கிருந்த சுமார் 700 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பின்னர் பாகிஸ்தான் அரசு மறுத்தது. ஆனால் ஆதாரங்களாக சில வீடியோக்கள் வெளியிடப்பட்டதும் வாயை மூடிக் கொண்டது. பொதுவாகவே கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் கணிசமாக தங்கியிருந்த இடங்கள் சூறையாடப் பட்டன.

முஜிபுர் ரஹ்மான் ஆபத்தான மனிதராக ஆட்சியாளர்களால் கருதப்பட்டார். எனவே அவர் கைது செய்யப்பட்டார். அவாமி லீக் என்ற கட்சியையே தடை செய்தார் தளபதி யாஹ்யா கான்.

மார்ச் 26, 1971 அன்று அவாமி லீக் கட்சியின் ஒரு தலைவரான எம்.ஏ.ஹன்னன் முதன்முறையாக ஓர் அறிவிப்பை வானொலியின் மூலம் செய்தார். ‘‘இனி கிழக்கு பாகிஸ்தான் புதிய நாடாகிறது. அதன் பெயர் வங்கதேசம்’. அதற்கு முன்தினம் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தனது அறிவிப்பைக் கையெழுத்திட்டுப் பரப்பச் செய்தார். அதில் காணப்பட்ட வாசகங்கள் இவை. ‘‘இன்று முதல் வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு. மேற்கு பாகிஸ்தானின் ராணுவம் டாக்காவில் உள்ள காவல்துறையினர் தங்கும் இடங்களை சென்ற வியாழன் இரவன்று தாக்கியது. டாக்காவிலுள்ள ஆயும் தாங்காத அப்பாவிப் பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

“பெரும் துணிவோடு வங்காளிகள், எதிரிகளை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் சுதந்திரப் போரில் கடவுள் எங்களுக்கு உதவட்டும்’’ஆங்காங்கே பல வானொலிகளில் இந்த அறிவிப்பு ஒலிபரப்பானது. இதையெல்லாம் முழுவதுமாக தடுக்க முடியாமல் தவித்தனர் ஆட்சியாளர்கள். காரணம் உள்ளூர் மக்களின் ஆதரவு முஜிபுர் ரஹ்மானுக்கு. மேற்கு பாகிஸ்தானிடமிருந்து எந்த உதவி வேண்டுமென்றாலும் அது ஆறாயிரம் கிலோ மீட்டரை தாண்டிதான் வரவேண்டும்.

முஜிபுர் ரஹ்மானின் சார்பில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார் மேஜர் ஜியா உர் ரஹ்மான். (இந்த இருவரில் முன்னவரின் மகள்தான் ஹசீனா. பின்னவரின் மனைவிதான் கலீதா. இந்த இருவரும் இன்று எதிரெதிராக இருப்பது காலத்தின் கோலம்).

‘‘வங்கதேச மக்கள் குடியரசு உதயமாகிவிட்டது. இதன் தற்காலிகத் தலைவராக நான் பொறுப்பேற்கிறேன். ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயரில், வங்காள மக்களை மேற்கு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகச் செயல்பட நான் அழைக்கிறேன். இறுதிவரை நாம் நம் தாய்நாட்டுக்காகப் போராடுவோம். அல்லாவின் அருளால் நமக்கே வெற்றி உண்டாகும்’’.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-8/article7557077.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 9

 
 
இந்தியாவிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி நியாஜி .
இந்தியாவிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி நியாஜி .

மார்ச் 26, 1971 என்பதுதான் வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ சுதந்திர தினமாக கருதப்பட்டது. அன்று முதல் பலரும் கிழக்கு பாகிஸ் தானை வங்கதேசம் என்றே குறிப்பிடத் தொடங்கினர். வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களை முக்தி பாகினி என்று அழைத்துக் கொண்டனர்.

போரைத் தொடர்ந்து வங்கதேசத்தை சேர்ந்த பலரும் அகதிகளாக இந்தியாவின் மேற்கு வங்க பகுதிக்குள் நுழைந்தனர். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இதைத் தொடர்ந்து மேற்கு பாகிஸ்தான் மீது போர் என்று அறிவித்தார். தவிர பாகிஸ்தான் விமானப் படையினர் அகதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இந்தியாவின் சில பகுதிகளையும் நாசமாக்கிக் கொண்டிருந்தனர்.

வங்கதேசத்தின் முக்தி பாகினி சுதந்திரப் போராட்ட வீரர்களின் வலிமை அதிகமானது. வங்கதேசம் தன்னை ஒரு சுதந்திர நாடு என்று அறிவித்துக் கொண்டவுடன் பாகிஸ் தான் ராணுவம் கடும் கோபம் கொண்டது. தங்களின் எண்ணிக் கையை அதிகரித்துக் கொள்ள பல பிஹாரி முஸ்லிம்களை ராணுவத்தில் புதிதாக சேர்த்துக் கொண்டது. ரஜாக்கர் என அழைக்கப்பட்ட இந்தப் பிரிவினரை துரோகிகள் எனக் கருதினர் வங்கதேச தரப்பினர்.

மேற்கு வங்கத்தில் இந்திய அரசின் உதவியும் கிடைத்ததால் பாகிஸ்தான் ராணுவத்தை சமாளிப்பது வங்கதேசத்துக்கு கடினமாக இல்லை. தரைப்பாதை வழியாக டாக்காவை அடைந்து பாகிஸ்தான் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது இந்திய ராணுவம். இதை அறிந்து கொண்ட பாகிஸ்தான் டிசம்பர் 3 அன்று வானிலிருந்து தாக்குதல் நிகழ்த்தியது. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தை முழுவதுமாகப் போரில் ஈடுபடச் செய்தார் இந்திரா காந்தி.

ஆக இந்தியா - பாகிஸ்தான் போர் 1971-ல் அதிகாரப்பூர்வமாகவே தொடங்கியது. மேற்கு வங்கம், அசாம், திரிபுரா ஆகிய மூன்று பகுதிகளிலிருந்துமே பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கியது இந்திய ராணுவம். இந்தப் பகுதிகளிலிருந்த முக்தி பாகினி படையினரும் உள்ளூர் மக்களும் இந்திய ராணுவத்துக்கு முழுவதுமாக ஒத்துழைத்தனர். பாகிஸ்தான் ராணுவம் பற்றிய பல விவரமான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. வங்கதேசத்தின் அத்தனை விமான சேவைகளும் பாகிஸ்தான் ராணுவத்தால் சீரழிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலி் வான்வழித் தொடர்புக்கு இந்தியா செய்த உதவி வங்கதேசத் துக்கு பேருதவியாக இருந்தது. இந்தியக் கடற்படையினரும் வங்கதேச துறைமுகங்களை வளைத்துக் கொள்ள, பாகிஸ்தான் கடற்படை தப்புவதற்கு வழியில் லாமல் போனது.

அதே சமயம் தரைப்படை யினரும் மோதிக் கொண்டனர். கெரில்லா முறையில் முக்தி பாகினி யும் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திணறியது.

டிசம்பர் 12 அன்று டாக்கா பாகிஸ்தானின் கையிலிருந்து நீங்கி மித்ரோ வாகினி வசம் வந்தது. (மித்ரோ வாகினி என்பது முக்தி பாகினியும் இந்திய ராணுவமும் கலந்த நட்பு இணக்கமாகும்.) ராணுவத் தளபதி நியாஜி தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணாகதிப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

இந்தப் போரில் எவ்வளவு பேர் இறந்தனர்? 26,000 பேர் என்றது பாகிஸ்தான். இந்தியாவும், வங்கதேசமும் முப்பது லட்சம் பேர் என்றனர். உண்மை இந்த இரண்டுக்கும் நடுவே எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது.

பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பகுதியைச் சேர்ந்த இரண்டு லட்சம் பெண்களை பலாத்காரம் செய்தனர் என்று அறிவித்தது வங்கதேசம். ‘‘இது அதிகமான எண்ணிக்கை’’ என்று பாகிஸ்தான் கூற, உலக அளவில் பாகிஸ்தானுக்குக் கடும் கண்டனம் எழுந்தது.

வங்கதேசத்தில் இருந்த சிறுபான்மையினரைத்தான் பாகிஸ் தான் ராணுவம் முக்கியமாகக் குறிவைத்தது. இந்து ஆண்கள் குறிவைத்துக் கொல்லப்பட் டார்கள். இந்துப் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். போர் நடந்த நாட்களில் பொது இடங்களில் வங்கதேச ஆண்களின் ஆடைகளைக் களையச் சொன்னது பாகிஸ்தான் ராணுவம். சுன்னத் செய்திருந்தால் அடி உதை மட்டும். சுன்னத் செய்திருக்கவில்லை என்றால் படுகொலை.

வங்கதேசத்தில் இருந்த இந்துக்களில் பெரும்பாலான வர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குடியேறத் தொடங்கினர்.

சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இவ்வளவு அதிக அளவில் ராணுவத்தினர் ஒரு நாட்டிடம் சரணடைந்தது என்பது இதுதான்.

வங்கதேசத்தை முதலில் அங்கீகரித்த நாடு பூடான். அதுவரை பாகிஸ்தானுக்குப் பலவிதங்களில் உதவி செய்து வந்த நாடு அமெரிக்கா. பாகிஸ்தானின் மேற்கு - கிழக்கு பகுதிகளில் கடும் போர் நடந்தபோது ‘‘அது உள்நாட்டு விவகாரம்’’ என்று கருத்து தெரிவித்துவிட்டு மெளனம் காத்தார் அன்றைய அமெரிக்க அதிபர் நிக்ஸன். ஒருகட்டத்தில் பாகிஸ்தானின் தோல்வி நிச்சயமானவுடன் அதற்கு உதவ முடிவெடுத்தார்.

போரை நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியா வின்மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயங்காது என்றார். அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றும் பாகிஸ்தானை அடைந்தது. தொடர்ந்து பாகிஸ் தானுக்கு ஆதரவான நிலையையே அமெரிக்கா எடுத்தது. போர் முடிவடைந்த பிறகுகூட இந்த விஷயத்தில் இந்தியாவின்மீது பழி சுமத்தியது. ஆனால் பல உலக நாடுகளும் வங்கதேசத்தின் ‘வேறுவழியில்லாத சுதந்திரப் பாதையை’ அங்கீகரித்ததும் அமெரிக்கா வாயை மூடிக் கொள்ள நேரிட்டது.

சோவியத் யூனியன் தொடக்கத் திலிருந்தே இந்திய ராணுவத்தை யும், முக்தி பாகினியையும் ஆதரித்தது. அமெரிக்கா இந்தியா மீது போர் தொடுத்தால், இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் குதிப்போம் என்றது சோவியத் யூனியன். இந்தியாவுக்கு ஒரு போர் நீழ்மூழ்கிக் கப்பலையும் அனுப்பி வைத்தது.

ஒருகட்டத்தில் இது மற்றொரு உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற கவலை கூட எழத் தொடங்கியது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-9/article7560905.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம்- 10

 
சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் பிரதமர் புட்டோ, இந்திய பிரதமர் இந்திரா காந்தி.
சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் பிரதமர் புட்டோ, இந்திய பிரதமர் இந்திரா காந்தி.

வங்கதேசம் உருவான காலகட்டத்தில் அடுத்தடுத்து பலவித நிலைப்பாடுகளை இந்தியாவுக்கு எதிராக எடுத்துத் தள்ளியது அமெரிக்கா. (சோவியத்தின் நட்பு நாடாக இந்தியா இருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம்).

தனது பாகிஸ்தான் ஆதரவு நிலைக்கு தந்திரமாக சீனாவைத் துணைக்கு அழைத்தது அமெரிக்கா. இது தொடர்பாக அமெரிக்க அதிபரின் அரசியல் ஆலோசகரான ஹென்றி கிஸிங்கர் சீனாவுக்குச் சென்றார். ஒருபுறம் மேற்கு பாகிஸ்தானின் வழியாக அமெரிக்கா, மறுபுறம் சீனா ஆகிய இரண்டுமே ஒருசேர இந்தியாவைத் தாக்கினால்? இப்படி ஒரு திட்டமும் அப்போது அலசப்பட்டது. இந்தியாவின் விரோதியான பாகிஸ்தானை நேச நாடாகவே சீனாவும் நினைத்தது. ஆனால் அமெரிக்காவுடன் கைகோர்க்க சீனாவுக்கு தயக்கம். அந்தப் பகுதியில் அமெரிக்காவை வளர்த்துவிட சீனா விரும்பவில்லை.

ஐக்கிய நாடுகளைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ராணுவத்தால் வங்கதேசத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்டித்து அறிக்கை விட்டது. ‘’உடனடியாக சமாதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாகிஸ்தானின் ராணுவம் திரும்ப அழைக்கப்பட வேண்டும்’’ என்றது.

பாகிஸ்தானின் சரணாகதியைத் தொடர்ந்து வங்கதேசத்தில் கொண்டாட்டம், குதூகலம். உலக நாடுகள் தங்களைத் தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் அடுத்ததாக ஈடுபட்டது வங்கதேசம். ஐ.நா. சபையில் தன்னை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்தது. பல நாடுகள் இதை ஏற்றுக் கொண்டாலும் சீனா மறுத்தது. வங்கதேசம் ஐ.நா. உறுப்பினராவதற்கு அரைமனதுடன் அமெரிக்கா சம்மதித்தது.

இந்த சூழ்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே 1972-ல் ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. சிம்லா ஒப்பந்தம் என்ற பெயர் கொண்ட இது வேறொரு விதத்திலும் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே அமைதி நிலவுவது தொடர்பான ஒப்பந்தம்தான் இது. என்றாலும் வங்கதேசம் என்ற பெயர் கொண்ட புது நாட்டை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது இந்த ஒப்பந்தத்தில்தான்.

இதற்குப் பதிலாக சிறைபிடிக்கப்பட்ட தனது ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றது பாகிஸ்தான். மற்றொரு நிபந்தனையாக (அல்லது கோரிக்கையாக) சமீபத்திய போரில் இந்தியா தன் வசம் கொண்டு வந்திருந்த 13,000 சதுர கிலோ மீட்டர் பாகிஸ்தான் பரப்பைத் திருப்பித்தந்துவிட வேண்டும் என்றது. அப்போது கார்கில் பகுதிகூட முழுவதுமாக இந்தியாவின் வசம் இருந்தது. இதற்கு ஒப்புக் கொண்ட இந்தியா 200 ராணுவ வீரர்களை விடுதலை செய்தது.

இந்தியா மேலும் கடுமையாக பாகிஸ்தானிடம் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஒருசாராரும், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பக்குவப்பட்ட நிலையைக் காட்டுகிறது என்று மறுசாராரும் விமர்சித்தனர். சொல்லப்போனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஒரே காரணத்தினால்தான் புட்டோவின் தலைமை பாகிஸ்தானில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறுவதும் உண்டு.

தங்கள் ராணுவம் சரணடைய நேரிட்டது பாகிஸ்தானுக்கு கடும் அவமானத்தை அளித்தது. யாஹ்யா கானின் சர்வாதிகார ஆட்சி மறைந்தது. புட்டோ ஆட்சியில் அமர்ந்தார்.

ராணுவத் தளபதி நியாஜி என்பவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்தபோது அவர் கடுமையாக எதிர்க்கப்பட்டார். சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தானிய வீரர்களுடன் அவர் இந்தியாவிடம் சரணடைந்தது அங்கு கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. அவர் துரோகியாகக் கருதப்பட்டார். தவிர அமெரிக்கா நீங்கலாக மற்ற நாடுகள் எல்லாமே வங்கதேசத்துக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததை பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

பாகிஸ்தான் ராணுவம் எங்கு தவறு செய்தது என்பதை அறிய நீதியரசர் ரஹ்மான் தலைமையில் ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. அதில் அந்த ராணுவம் செய்த பல தவறுகள் வெளியாயின. தவிர பாலியல் வல்லுறவுகள் உள்பட அந்த ராணுவத்தினர் செய்த அநீதிகளும் வெளியாகி புட்டோவை சங்கடப்படுத்தியது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-10/article7565179.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 11

 
இந்திய முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் ஜியா உர் ரஹ்மான்.
இந்திய முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் ஜியா உர் ரஹ்மான்.

வங்கதேச விடுதலைப் போரில் எவ்வளவுபேர் இறந்தனர் என்பது குறித்து மிகவும் மாறுபட்ட கருத்துகள் நிலவு கின்றன. 26,000 பேர் இறந்தனர் என்கிறது பாகிஸ்தான். இல்லை முப்பது லட்சம் பேர் என்றன இந்தியாவும், வங்கதேசமும்.

பத்து லட்சம் பேர் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று கருதுகிறார்கள் பல அரசியல் நோக்கர்கள். எனினும் நடந்தது இனப்படுகொலை என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இரண்டு லட்சம் வங்கதேச பெண்கள் பாகிஸ்தான் ராணுவத் தினரால் பலாத்காரம் செய்யப் பட்டனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். பாகிஸ்தான் ராணுவத் தினர் ‘பாலியல் அடிமைகள்’ என்ற பெயரில் சில பெண்களை தொடர்ந்து தங்கள் அடிமைகளாக வைத்துக் கொண்டிருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.

வங்காள அறிஞர்களையும், மாணவர்களையும் குறிவைத்து வீழ்த்தியது பாகிஸ்தான். காரணம் கிழக்கு பாகிஸ்தான் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டு சிலிர்த்து நின்றதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம் என்று நம்பியது. உருது மட்டுமே தேசிய மொழியாக்கப்பட்டதற்கு கிழக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததற்கு இவர்கள் முக்கிய காரணம் என்று கருதப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டிருந்த முஜிபுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். வங்க தேசத்தின் முதல் பிரதமரானார்.

சுதந்திரம் பெற்றதை வங்கதேசம் கோலாகலமாகக் கொண்டாடியது. ஆனால் விரைவிலேயே நாட்டின் பிரச்னைகள் பயமுறுத்தத் தொடங்கின. போரில் வீடிழந்தவர்களுக்குத் தகுந்த இடம் கொடுக்க வேண்டியிருந்தது. கூடவே, ஊழலுக்கும் இடம் கொடுத்து விட்டதாக முஜிபுர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தான் பதவியேற்ற சில ஆண்டுகளில் ‘அதிபருக்கே முழு அதிகாரம்’ என்கிற வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, சூட்டோடு சூடாகத் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, தன்னையே அதிபராகவும் அறிவித்துக் கொண்டார் முஜிபுர் ரஹ்மான்! அதுமட்டுமல்ல... நாட்டின் அரசியல் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தினார். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தடை!

மக்களைக் கவர்ந்த மகத்தான தலைவர்தான் முஜிபுர் ரஹ்மான். ஆனால், பதவிக்கு வந்தபின் தான் இப்படிச் செய்ய நேர்ந்ததை நியாயப்படுத்தினார். தனிநாடான பின் தங்களது தாய்நாடு சொர்க்கமாக மாறிவிடும் என்று கனவு கண்டிருந்த வங்கதேச மக்கள் திகைத்தனர்.

இந்த நிலையில் ஜியா உர் ரஹ்மான் ‘வளரத்’ தொடங்கினார். வங்கதேச சரித்திரத்தில் அழுத்தமாகக் கால் பதித்தவர் அவர். தவிர அவரது மனைவியும் அந்த நாட்டின் முக்கிய சக்தி. எனவே ஜியாவின் பின்னணியைச் சற்று விரிவாகவே பார்க்கலாமே.

ஜியா உர் ரஹ்மான் வங்கதேச முதல் ராணுவத் தளபதி. ராணுவ சர்வாதிகாரி என்றும் வைத்துக் கொள்ளலாம். முஜிபுர் ரஹ்மானின் சார்பில் நாட்டின் விடுதலையை அளித்தவர் இவர்தான் என்று பார்த்தோம். (பாகிஸ்தானின் அதிபராக 1978லிருந்து 1988 வரை இருந்த ஜியா உர் ரஹ்மானோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இருவருமே ஜியா என்று குறிப்பிடப்பட்டவர்கள் என்பது வேறு விஷயம்).

சிறு வயதில் ஜியா உர் ரஹ்மான் மிகவும் அமைதியானவராக பிறருடன் அதிகம் பழகாதவராக இருந்திருக்கிறார். கல்கத்தாவில் படித்திருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து முஸ்லிம் நாடான பாகிஸ் தானின் குடிமகனாக வேண்டும் எனத் தீர்மானித்து கராச்சிக்குச் சென்றார். (பாகிஸ்தானின் முதல் தலைநகரம் அதுதான்).

பதினாறாம் வயதுவரை கராச்சியில் உள்ள பள்ளியில் படித்துவிட்டு அங்கிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்தார். கூடவே அவர் சேர்ந்தது பாகிஸ்தான் ராணுவ அகாடமியில்தான்.

பின்னர் கலீதா மஜும்தார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது கலீதா வுக்கு வயது 15தான். ஜியா பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்ட னாகி இருந்தார். பாகிஸ்தான் ராணுவ அகாடமியின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக விளங் கினார்.

ஒருமுறை கிழக்கு பாகிஸ் தானுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பலரும் ராணுவத்தை ஆதரிக்காத முறையிலேயே நடந்து கொண்டதைப் பார்த்தார். கிழக்கு பாகிஸ்தானின் வருமானத்தில் பெரும் பகுதி ராணுவத்துக்கே செலவிடப் படுகிறது என்ற எண்ணம் இதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார். தவிர பாகிஸ்தான் ராணுவத்தில் வங்காளிகள் குறைவாகவே இருப்பதைக் கவனித்து இந்த விகிதத்தை அதிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் - 1957ல் - கிழக்கு பாகிஸ்தானுக்கே இவருக்கு பணி மாற்றம் ஏற்பட்டது. (இந்தக் காலகட்டத்தில் 23 வயதாகி இருந்த கலீதா தனது முதல் மகனை பெற்றெடுத்தார்). அதற்குப் பிறகு ஜெர்மானிய ராணுவம், பிரிட்டிஷ் ராணுவம் போன்றவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்றார் ஜியா.

பின்னர் அவர் பாகிஸ்தான் திரும்பியபோது மேற்கு - கிழக்கு பாகிஸ்தான் மக்கள் உணர்வுகளால் வேறுபட்டு கொதி நிலையை அடைந்ததைக் கண்டார். அதுவும் போலா புயலைத் தொடர்ந்து மிகத் தாமதமாக ஆட்சியாளர் களிடமிருந்து கிடைத்த உதவிகள் கிழக்கு பாகிஸ்தான் மக்களை வெறுப்படைய வைத்திருந்தது.

இதுபோன்ற சூழல்கள் ஜியாவின் மனதை மாற்றி இருந்தன. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மனநிலை அவருக்குத் தோன்றியிருந்தது. முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக்கில் சேர விழைந்தார். அதன் தீவிர ஆதரவாளர் ஆனார். பின்னொரு கட்டத்தில் தனக்கு மேல்நிலையில் இருந்த ராணுவ அதிகாரிகளையே கைது செய்யவும் முற்பட்டார்.

ஆகஸ்ட் 15, நமக்குச் சுதந்திர தினம். ஆனால் 1975ல் அந்த தினம் வங்கதேசத்துக்கு கருப்பு தினமாக விடிந்தது. அன்று முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-11/article7571769.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 12

 
மகள் ஷேக் ஹஸீனாவுடன் ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
மகள் ஷேக் ஹஸீனாவுடன் ஷேக் முஜிபுர் ரஹ்மான்.

1971 இறுதியில் வங்கதேசம் சுதந்திரம் பெற்றபின் பாகிஸ்தானின் பிடியிலி ருந்து முஜிபுர் ரஹ்மான் விடுவிக் கப்பட்டார். லண்டன் வழியாக அவர் இந்தியாவுக்கு வரவழைக்கப் பட்டார். (வங்கதேசம் அப்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருந்தது). முஜிபுர் ரஹ்மான் வங்க தேசத்தின் பிரதமராக அறிவிக்கப் பட்டார். (பின்னர் அதிபரானார்).

ஆனால் ஆட்சியில் கசப்புகள் உருவாயின என்பதைக் குறிப்பிட்டி ருந்தோம். தனிநாடாக ஆனவுடன் பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று நம்பினார்கள் வங்கதேச மக்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக அதன் பொருளாதாரம் வேகமாக சரிந்தது.

அரசியல் ரீதியாகவும் முஜிபு ருக்குப் புதிய பகைமைகள் தோன்றத் தொடங்கின. ராணுவத் தின் ஒரு பிரிவுக்கு ‘ஜதியோ ரக்கி பாகினி’ என்று பெயரிடப் பட்டிருந்தது. இதில் உள்ளவர்கள் முஜிபுர் ரஹ்மானுக்கு மேலும் நெருக்கமானவர்களாகக் கருதப் பட்டனர். பொதுமக்களிடையே இருந்த ஆயுதங்களை மீட்பது தான் இந்தப் பிரிவின் முக்கியக் குறிக்கோள் என்று கூறப்பட்டது. என்றாலும் முஜிபுர் ரஹ்மான் ஆட்சிக்குக் காவலாக இருப்பது தான் இதன் நோக்கமாக இருந்தது. இதன் காரணமாக ராணுவத்தின் பிற பிரிவினர் அதிருப்தி அடைந்தனர். சில பெரும்புள்ளிகள் அரசை வீழ்த்தி ராணுவ ஆட்சியை கொண்டுவர முடிவெடுத்தனர். அவாமி லீக்கிலிருந்த சிலரும் இதற்குத் துணை நின்றனர். முக்கிய மாக முஜிபுர் ரஹ்மான் ஆட்சியில் அமைச்சராக இருந்த மொஸ்டாக் அகமது, தான் அதிபராக தயார் என்று ராணுவத்துக்கு சிக்னல் கொடுத்தார். பல சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஆகஸ்ட் 15, 1975 அன்று விடியற் காலையில் சதித்திட்டம் தீட்டிய வர்கள் தங்களை நான்கு பகுதி களாகப் பிரித்துக் கொண்டனர்.

முஜிபுர் ரஹ்மானின் வீட்டை நோக்கி ஒரு பிரிவினர் சென்றனர்.வேறொரு கும்பல் முஜிபுரின் சகோதரி மகன் ஷேக் ஃபஸ்லுல் ஹக் என்பவரின் வீட்டை நோக்கிச் சென்றது. இவர் அவாமி லீக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர். மூன்றாவது பிரிவு முஜிபுரின் அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகித்த அப்துர் ரப் ஸெர்னியாபத் என்பவரின் வீட்டை நோக்கிச் சென்றது.

நான்காவது பிரிவினரின் எண்ணிக்கை அதிகம். இவர்களின் நோக்கம் மேற்படி பிரிவுகள் படுகொலைகளில் ஈடுபடும்போது எதிர்க்கும் பாதுகாப்புப் படையை எதிர்கொள்வதுதான்.

முதல் குழு முஜிபுர் ரஹ்மானின் வீட்டை அடைந்து தாக்குதலைத் தொடங்கியது. இதற்குத் தலைமை வகித்தவர் மேஜர் ஹுடா. வீட்டின் இரண்டாவது தளத்தில் இருந்த முஜிபுரின் மகன் ஷேக் கமல் என்பவர் பதிலுக்குத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பலன் இல்லை.கிளர்ச்சி ராணுவம் முன்னேறியது. முஜிபுர் ரஹ்மான் மிக அவசரமாக தொலைபேசியில் ராணுவத் தளபதி ஜமீலுக்கு விபரீதத்தை உணர்த்தியிருக்க வேண்டும். இவர் ராணுவ உளவுத் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டி ருந்தார். திட்டமிட்டபடி முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப் பட்டார். உடலில் 20 இடங்களில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு அப்போதும் வலது கையில் சிகார் பைப்பை விடாமல் பற்றிக் கொண்டிருந்த நிலையில் முஜிபுர் ரஹ்மானின் உயிர் பிரிந்தது.

உளவுத் துறைத் தலைவர் ஜமீல், முஜிபுர் ரஹ்மான் வீட்டு வாசல் அருகே சுடப்பட்டு உயிரிழந்தார். மாடியில் இருந்த முஜிபுரின் மனைவி கொல்லப்பட்டார். மகன் ஷேக் கமலும் படுகொலை செய்யப்பட்டார். பத்தே வயது நிரம்பிய ஷேக் ரஸலும் உயிரிழந்தார். இவர்களைத் தவிர மேலும் பலரும் படுகொலை செய்யப்பட்டனர். வேறு சில இடங்களுக்குச் சென்றிருந்த மூன்று பிரிவினரும் தத்தம் திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்றினர்.

இத்தனை பேரில் உயிர் தப்பியவர்கள் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹஸீனாவும் அவரது சகோதரி ரஹானாவும்தான். இவர்கள் இருவரும் ஜெர்மனியில் பெர்லின் நகருக்குச் சென்றிருந்தனர். அப்போதே ஹஸீனாவுக்குத் திருமணம் ஆகியிருந்தது. அவரது கணவர் அணுவியல் விஞ்ஞானி யாக விளங்கியவர். ஹஸீனா வங்கதேசத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

ஆக முஜிபுர் ரஹ்மான் படுகொலையைத் தொடர்ந்து ஹஸீனாவும் அவரது தங்கை ரஹானாவும் அனாதைகள் ஆக்கப் பட்டனர். தந்தை, தாய், நெருங்கிய உறவினர்கள் அத்தனை பேரையும் ஒரே நாளில் இழந்து விட்டனர். தங்களுக்கு அப்போதைய பாதுகாப்பான இடம் இந்தியாதான் என்று கருதி அங்கு வந்தனர்.

(இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி சமீபத்தில் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த ஹஸீனா தன் மகள், சகோதரி மற்றும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் நேரில் வந்ததும், நெகிழ்ச்சியுடன் பேசியதும் சிலருக்கு வியப்பை அளித்திருக்கலாம். அதன் பின்னணி இதுதான்.

சுவ்ரா வங்கதேசத்தில் (அப்போ தைய கிழக்கு வங்காளம்) பிறந்தவர். தனது பத்தாவது வயது வரை அங்கு வளர்ந்தவர். அப்போது இவரது குடும்பமும், ஹஸீனாவின் குடும்பமும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமாயினர்.

தந்தையை இழந்து பாதுகாப்பு தேடி ஹஸீனா இந்தியா வந்தபோது அவருக்குப் பாதுகாப்பு கொடுத்தார் சுவ்ரா முகர்ஜி. அப்போது இந்திரா காந்தி அமைச்சரவையில் ஜுனியர் அமைச்சராகப் பதவியேற்றிருந்த பிரணாப் முகர்ஜியோடு சுவ்ராவுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது.

கால ஓட்டத்தில் ஹஸீனா வங்கதேசம் திரும்பிய பிறகும் அவரது குழந்தைகள் தங்கள் படிப்பை இந்தியாவில்தான் தொடர்ந்தனர். அந்தக் குழந்தைகளை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டார் சுவ்ரா.)

முஜிபுர் ரஹ்மான் இறந்த மூன்று வருடங்களில் அவாமி லீக்கை நிறுவிய வேறு முக்கிய நான்கு தலைவர்கள் கைது செய்யப் பட்டு டாக்கா சிறையில் அடைக்கப் பட்டனர். வங்கதேசத்தின் முதல் பிரதமரான தாஜுதீன் அகமது, முன்னாள் பிரதமர் மன்சூர் அலி, முன்னாள் துணை ஜனாதிபதி சையது நஸ்ரூல் இஸ்லாம் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் கம்ருஜமான் ஆகியவர்கள்தான் அந்த நால்வரும். இவர்கள் நால்வரும் 1975 நவம்பர் 3 அன்று டாக்கா சிறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-12/article7578140.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 13

 
 
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் ஜியா உர் ரஹ்மான். (கோப்புப் படம்)
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் ஜியா உர் ரஹ்மான். (கோப்புப் படம்)

முஸ்தாக் அகமது அதிபர் ஆனதைத் தொடர்ந்து ராணுவத்தின் தலைவராக ஜியா உர் ரஹ்மான் நியமிக்கப்பட்டார். ஆக முஜிபுர் ரஹ்மானின் அணுக்கமானவராக தொடக்கத்தில் கருதப்பட்ட ஜியா இப்போது எதிரணியின் (முஜிபுரை கொன்றவர்கள் தரப்பு) முக்கிய நபரானார். 1976ல் தொழிற்சங்கங்களுக்குத் தடை விதித்தது ராணுவ ஆட்சி.

ஆனால் ராணுவத்திற்குள் மீண்டும் ஒரு பிரிவு ஏற்பட்டது. கலேத் முஷரப் மற்றும் சஃபத் ஜமீல் போன்றோர் ராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டனர். அதாவது ராணுவம் இரண்டுபட்டது. இதன் விளைவாக ஜியா தனது பதவியை விட்டு விலக நேரிட்டது. அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

மீண்டும் ராணுவக் கலகம். கலேத் முஷரப் கொல்லப்பட்டார். சஃபத் ஜமீல் கைது செய்யப் பட்டார். ஜியா உர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். ஆக மொத் தத்தில் ராணுவத்தில் கட்டுப்பாடு என்பது ஒட்டுமொத்தமாகக் குலைந் திருந்தது.

தனக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் என்று நம்பியவர் களை ஜியா கைது செய்தார். அவர்களில் தகேர் என்பவரைத் தூக்கிலிட்டார். பின்னர் ராணுவத்தினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். ராணுவத்தில் அதிருப்தி அடைந்தவர்களை வெளிநாட்டுத் தூதரகப் பணிகளில் அமர்த்தினார்.

பின்னர் 1977ல் வங்கதேச அதிபர் ஆனார். ராணுவச் சட்டத்தை நீக்கினார். இஸ்லாம் அரசியல மைப்பு சட்டத்தின் மையமானது. அதேசமயம் ஜியா பல வளர்ச்சித் திட்டங்களையும் அறிமுகப் படுத்தினார்.

எனினும் உள்நாட்டுக் கலவரங்கள் அதிகமாயின. காவல் துறையிலும், ராணுவத்திலும் ஆட்களை மிக அதிக அளவில் அதிகரித்தார் ஜியா. எர்ஷத் என்பவரை ராணுவத்தின் ஒரு முக்கிய தலைவராக்கினார். இவர் காலப்போக்கில் ஜியாவுக்கு மிகவும் நெருக்கமானார். (பின்னர் 1981ல் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹஸீனாவை அரசியலுக்கு கொண்டு வந்ததிலும் இவருக்குப் பங்கு உண்டு).

1978 தேர்தலில் ஜியாவின் கட்சிக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. அந்த காலகட்டத்தில் ஹஸீனா வங்கதேசத்துக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார். ராணுவ ஆட்சி நீக்கப்பட்டது. ஜியாவின் ஆட்சியிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன.

மக்களின் பரவலான ஆதரவைப் பெற்றவராக ஜியா இருந்தாலும், அவரது சர்வாதிகாரப் போக்கு பிடிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வந்தது. 1981 மே 29 அன்று சிட்டகாங்குக்கு ஒரு விசிட் செய்தார் ஜியா. அதற்கு அடுத்த நாள் விடியற்காலையில் ராணுவ அதிகாரிகள் சிலரால் அவர் படுகொலை செய்யப்பட்டார். கூடவே 6 பாதுகாவலர்களும், 2 உதவியாளர்களும் கொல்லப் பட்டனர்.

ஜியா உர் ரஹ்மானின் இறுதி ஊர்வலத்தில் மிக அதிகம்பேர் கலந்து கொண்டனர் (இருபது லட்சம்பேர் என்கிறார்கள்). அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது.

அப்துஸ் சட்டார் என்பவர் நாட்டின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜியா படுகொலை செய்யப்பட்ட அடுத்த ஆண்டே மீண்டும் ராணுவப் புரட்சி நடைபெற்றது. தளபதி எர்ஷாத் நாட்டின் பொறுப்பை ஏற்றார். அவர் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு தற்காலிக விடை கொடுத்தார். அரசியல் கட்சிகளுக்கும் தடை விதித்தார்.

மேலும் ஒரு வருடம் கடந்தது. சிறிதளவு மட்டும் அரசியல் இருக்கலாம் என்று பெரிய மனது செய்த எர்ஷாத் தன்னை நாட்டின் அதிபராக அறிவித்துக்கொண்டார்.

1986ல் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் எர்ஷாத் ஜனநாயகபூர்வமாகவே அதிபரா னார். ராணுவச் சட்டத்தை நீக்கினார். மீண்டும் அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இதெல்லாம் ஒரே வருடம்தான்.எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கான எதிர்ப்பினை வலிமையாகத் தெரிவிக்கத் தொடங்கின. எதிர்ப்பு ஊர்வலங்கள் வலிமையாக நடைபெறத் தொடங்கின. எனவே தான் அதிபரான அடுத்த வருடமே நாட்டில் அவசரநிலைச் சட்டத்தைக் கொண்டு வந்தார் எர்ஷாத்.

1988ல் வெள்ளத்தினால் உண்டான சேதம் மிக அதிகமாக இருந்தது. வங்கதேசத்தையே புரட்டிப் போட்ட அந்த வெள்ளத் தினால் நாட்டின் முக்கால்வாசிப் பகுதி பாதிக்கப்பட்டது. லட்சக் கணக்கானவர்கள் வீடிழந்தனர்.

அரசால் சமாளிக்க முடியவில்லை. எதிர்ப்பு மேலும் மேலும் அதிகமானது. 1990-ல் எர்ஷாத் பதவி விலகினார். ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத் தப்பட்டன. சட்டமீறலாக ஆயுதங் களை அவர் வைத்திருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறைப்படுத்தப்பட்டார்.

கலீதா ஜியா நாட்டின் பிரதமரானார். ‘இனி பிரதமர் பதவிக்குதான் அதிகாரங்கள். அதிபர் என்பது வெறும் அலங்கார பதவிதான்’ என்கிற வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. இந்த அரசியல் புயலைப் பற்றிக் கவலைப்படாமல் அதே ஆண்டு (1991) இயற்கைப் புயல் கடலைச் சீற்றம்கொள்ள வைத்து ஒன்றே கால் லட்சம் பேரைக் காவு வாங்கியது.

ராணுவமும், இயற்கையும் வங்கதேசத்தின் வரலாற்றை மிகவும் புரட்டிப் போடும் சக்திகளாயின.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-13/article7582071.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் உங்களது தொடரில் இந்த திரைப்படத்தை இணைப்பதற்கு மன்னிக்கவும்...இத்திரைப்படம்  இந்த தொடரின் சில சம்பவங்களை பிரதிபலிக்கின்றது

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 14

 

 
 
ஹிலாரி கிளிண்டனுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா
ஹிலாரி கிளிண்டனுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா

1991ல் கலீதா ஜியா வங்கதேச பிரதமர் ஆனார். அதிகபட்ச அதிகாரங்களை தன்னிடம் வைத்துக் கொண்டார். ஆனால் அதற்கடுத்த (1996) தேர்தல்கள் அவாமி லீக்குக்கு ஆதரவாக அமைந்தன. காட்சிகள் தலைகீழாக மாறின. முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹஸீனா பிரதமர் ஆனார். எர்ஷாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

கலீதாவோ, ஹஸீனாவோ எனக்கென்ன என்பதுபோல் வெள்ளம் தன் கடமையை ஆற்றியது! 1998ல் மீண்டும் வங்கதேசம் வெள்ளத்தால் தடுமாறியது.

மேலும் அரசியல் குழப்பங்கள், பொருளாதார பின்னடைவும் சேர்ந்து கலீதாவின் அரசின்மீது மக்களுக்கு வெறுப்பு வரும்படிச் செய்திருந்தன.

நடுவே மிர்புரா, மகுரா ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்கள், வங்கதேச அரசியலுக்கு ஒரு புதியமாற்றம் உருவாகக் காரணமாக அமைந்தன. இந்த இடைத் தேர்தல்களில் ஊழலும், கள்ள வாக்குகளும் அளவின்றி தலைவிரித்தாட ‘‘இனி நடுநிலையான ஓர் அமைப்பே வருங்காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும்’’ என்றது நீதிமன்றம்.

கலீதாவின் ஆட்சியில் வெறுப்படைந்த மக்கள் ஹஸீனாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். 1996 தேர்தலில் அவாமி லீக் கட்சி அதிகத் தொகுதிகளை வென்று ஹஸீனாவை தலைமைப் பதவியில் அமர்த்தியது.

தன் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வீட்டில்தான் ஹஸீனா 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்தார். தான் அரசியலில் பெரும் சக்தியாக உருவாக வேண்டும், தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தின் தீவிரம் கொஞ்சம்கூட குறையக் கூடாது என்பதற்காக அந்த வீட்டின் உட்புறத்தை அவர் வெள்ளை அடிக்கவில்லையாம். ரத்தக் கறைகளையும், துப்பாக்கி குண்டுகளையும் கொண்ட அந்த வீட்டுச் சுவர்கள் இன்றும் அந்த கொடூர தினத்துக்கு சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.

1996ல் பிரதமரான கையோடு வெளிநாடுகளில் வசித்த ஆறு கொலைகாரர்களை (அதாவது ராணுவ அதிகாரிகளை), நாடு திரும்பும்படி உத்தரவிட்டார் ஹஸீனா. ஒருவரைத் தவிர வேறு எவரும் நாடு திரும்பவில்லை. மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். நாடு திரும்பியவர் சட்டவி ரோதமாக ஆயுதம் வைத்திருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். (அந்த கொலை குற்றத்துக்காக அவரை கைது செய்ய அரசியல் அமைப்புதான் இடம் கொடுக்கவில்லையே). அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றலாம் என்றால் மூன்றில் இருபங்கு ஆதரவு அதற்குக் கிடைக்க வேண்டும் - அது அப்போதைக்கு அவாமி லீகுக்கு இல்லை.

பொதுவாக கலீதாவின் கட்சிக் குப் பழமைவாதிகளின் ஆதரவு கொஞ்சம் அதிகம். ஹஸீனா சற்றே அதிகமாக மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர் என்ற கருத்து நிலவுகிறது. ஹஸீனாவின் ஆட்சியிலாவது பெண்களின் பரிதாப நிலை மாறுமா என்பது கவனிக்கப்பட்டது.

மதத் தீவிரவாதிகளின் பேச்சுக் குப் பல இடங்களில் மறுப்பு இல்லை. இவர்களது அட்டகாசம் அடிக்கடி எல்லைமீறியது. ‘‘ஆண்களுக்கு சமமாகப் பெண்களுக்கும் சில உரிமைகள் வேண்டும்’’ என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்த ஒரு பெண் பிரதிநிதி தண்டிக்கப்பட வேண்டியவர் என்று சொல்லி பதற்றத்தை உருவாக்கினார்கள் தீவிர மதவாதிகள். பல சர்வதேச அமைப்புகள், இங்குள்ள பெண் களின் நிலையை முன்னேற்ற விரும்பினாலும் (ஹிலாரி கிளிண்டன் கூட அங்கு சென்றி ருந்தபோது இதற்கான முயற்சி களை எடுத்துக் கொண்டார்) பலன்தான் போதிய அளவில் இல்லை. ‘‘உன் மனைவி வெளி நாட்டு சமூக அமைப்பு அளிக்கும் மருந்தை உட்கொள்கிறாள். இதனால் அவளை தூய்மையான நமது மதத்தவள் என்று சொல்ல முடியாது’’ என்று மதபோதகர்கள் கூறியதைத் தொடர்ந்து, தன் மனைவியை விவாகரத்து செய்த கணவனைப் பற்றிகூட செய்தி வந்தது.

மீண்டும் 2001ல் ஆட்சியைப் பிடித்தார் கலீதா. இப்படி இந்த இரண்டு பெண்மணிகளும் மாறி மாறி வங்கதேசத்தில் ஆட்சியில் அமர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் முஜிபுரைக் கொலை செய்த ஒரு டஜன் முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. (ஆனால் இவர்களில் நால்வர் மட்டுமே சிறையில் இருந்தனர் என்பது வேறு விஷயம்)

இதைத் தொடர்ந்து ஹஸீனா வுக்கும், அவர் சகோதரி ரெஹனாவுக்கும் சிறப்பு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. காரணம் முஜிபுரைக் கொலை செய்த கும்பலின் ஒரு பகுதி அப்போதும் பழிவாங்கக் காத்திருப்பதாக அவர்களுக்குக் கிடைத்த செய்தி.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-14/article7586123.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 15

 
 
2004-ம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி.
2004-ம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி.

இவ்வளவு வருடங்கள் கழித்து ஹஸீனா மற்றும் ரெஹானாவுக்கு திடீரென்று என்ன உயிருக்கான அச்சுறுத்தல்? இதற்காக ஒரு சிறப்பு பாதுகாப்பு வளையத்தை வங்கதேச நாடாளுமன்றம் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?

எதிர்கட்சிகள் மேலே உள்ள கேள்விகளை எழுப்பினாலும், 2001 ஜூன் என்பது வங்கதேசத்தைப் பொறுத்தவரை ஒரு வெடிகுண்டு மாதமாகவே விளங்கியது. பனி யார்சர் என்ற சிறுநகரம் ஒன்றில் இருந்தது ஒரு பிரபல ரோமன் கத்தோலிக்க மா தாகோவில். அதன்மீது கிளர்ச்சியாளர்கள் குண்டு வீசினர். ஞாயிற்றுக்கிழமை காலையில் பலரும் பிரார்த்தனைக் காக அங்கு குழுமி இருந்ததால் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்ல, டாக்காவின் அருகிலிருந்த அவா மி லீக் அலுவலகத்தின் மீதும் வெடி குண்டு வீசப்பட்டதில் 22 பேர் உயிரிழந்தனர்.

இவையெல்லாம் ஹஸீனா வைக் கொல்வதற்கான ஒத்திகை கள்தான் என்று கருதப்பட்டது. தவிர ஜூலை 2001 அன்று ஹஸீனா பதவியிறங்க வேண்டிய சூழல். (அவர் பிரதமராக முழுமையாக ஐந்து வருடங்களை நிறைவு செய்திருந்தார். மீண்டும் தேர்தலில் வென்றால்தான் பிரதமராக முடியும்). எனவே தன் ஆட்சிக் காலத்தி லேயே தனது உயிருக்குப் பாதுகாப்பான சட்டத்தை நடை முறைப் படுத்தினார் என்றும் கருதப் பட்டது.

வெடிகுண்டு சரித்திரம் முடிந்த பாடில்லை. அடுத்த சில மாதங்களில் தேர்தல் பிர சாரம் தொடங்கியது. வங்கதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் தேர்தல் பிரச்சார ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் அங்கே வீசப்பட்டன. சுமார் 10 பேர் இறந்ததாகவும், நூற்றுக் கணக்கானவர்கள் இதில் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

தேர்தலில் க லீதாவின் கட்சி வென்றது. முன்னாள் பிரதமர் ஹஸீனாவுக்கு வாழ்நாள் பாதுகாப்பு என்று இயற்றப்பட்டிருந்த சட்டத்துக்கு என்ன ஆகியிருக்கும்? உங்கள் யூகம் சரிதான். அந்தச் சட்டம் நீக்கப்பட்டது.

தாங்கள் ஆட்சியில் இருப்பதால் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளை ஒடுக்க நினைத்தது அரசு. அதே சமயம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தேசத்தில் அதிக மாகிக் கொண்டிருந்தன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ஒரு சட்டத்தை இயற்றியது அரசு. ‘‘அமிலத்தை யார் மீதாவது வீசினால் அவருக்கு மரண தண்டனை’’ என்றது புதிய சட்டம்.

பிரதமர் க லீதாவுக்கும், அதிபர் செளத்ரிக்கும் ஒத்துப்போக வில்லை. தங்கள் கட்சிக்கு எதிரான நிலைப்பாடை அதிபர் எடுக்கிறார் என்று கலீதா குற்றம் சாட்ட, செளத்ரி பதவி விலகினார். இயாஜுதீன் அகமது என்பவர் புதிய அதிபரானார்.

2004 மே மாதத்தில் வங்க தேசத்தில் ஒரு திருப்பு முனை. நாடாளுமன்றத்தில் 45 சதவீத உறுப்பினர்களாவது பெண் களாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் மாற்றப் பட்டது.

2004 ஜூலையிலிருந்து சில மாதங்களுக்கு மீண்டும் வெள்ளம். ஆனால் இது வழக்கத்தைவிட மோசமானதாக இருந்தது. 800 பேர் இறந்தனர். லட்சக்கணக்கான வர்கள் வீடுகளை இழந்தனர்.

2005ல் அவாமி லீக் ஒரு முடி வெடுத்தது - ‘நாடாளுமன் றத்தை பகிஷ்கரிப்போ ம்’. ஒரு வருடம் க ழித்து இந்த முடிவை மாற்றிக் கொண்டது.

அடுத்து ஜனவரி 2006-ல் தேர்தல் என்று அறிவிக்கப்பட, அவாமி லீக் அந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்தது. அதிபர் அகமது, கலீதாவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டியது. பலத்த கலவரம் காரணமாக நாடாளுமன்றத் தேர்தல்கள் சரிவர நடைபெறவில்லை. அடுத்த ஆண்டு நாட்டில் அவசர நிலைச் சட்டம் அறிமுகமானது. 6 தீவிரவாதிகள் மீது குண்டு வீசிய குற்றத்துக்காக தூக்கில் ஏற்றப்பட்டனர். அதிபர் அகமது தேர்தலை ரத்து செய்தார்.

அரசின் தாற்காலிக பொறுப்பாளரான அவர் ஆட்சியில் ஹஸீனா மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. கலீதா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். பல அரசியல்வாதிகள் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்தது. 2007 நவம்பரில் ஒரு புயல் வந்து தன் பங்குக்கு தாக்கிவிட்டுச் சென்றது.

ஹசீனா அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டு மென்று தீர்மானிக்க அவர் ‘விடுவிக்கப்பட்டார்’. 2008 டிசம்பரில் பொதுத் தேர்தல் நடக்கு மென அறிவிக்கப்பட, ஹசீனா நாடு திரும்பி தனது கட்சியை தேர்தலை நோக்கி வழிநடத்தத் தொடங்கினார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-15/article7590300.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 16

 
 
கலீதா ஜியாவுடன் ஷேக் ஹஸீனா.
கலீதா ஜியாவுடன் ஷேக் ஹஸீனா.

2008 இறுதியில் வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில் அவாமி லீக் பெரும் வெற்றி பெற்றது. 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 250-ல் அந்தக் கட்சி வென்றது. ஹஸீனா மீண்டும் பிரதமர் ஆனார். இதற்கிடையே வேறொரு பழைய வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதாவது ‘‘1971-ல் வங்க தேசத்தை சுதந்திர நாடு என்று முதலில் அறிவித்தது யார்? முஜிபுர் ரஹ்மானா அல்லது ஜியாவா?’’ என்ற கேள்விக்கான விடை.

இது ஒரு விதத்தில் ஆழமில்லாத பட்டிமன்றக் கேள்வி. ஏனென்றால் அப்போது இவர்கள் இருவருமே ஒரே அணியில் அணுக்கமாக இருந்தவர்கள். ஆனால் காலப்போக்கில் முஜிபுரின் மகள் ஹஸீனாவும், ஜியாவின் மனைவி கலீதாவும் அரசியலில் நேரெதிர் துருவங்களாக உருவாகி விட்டதால் மேற்படி கேள்வி முக்கியமானதாகி விட்டது. இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் ஆற, அமர 2009-ல் ஒரு தீர்ப்பை அளித்தது. ‘வங்கதேச சுதந்திரப் பிரகடனத்தை முதலில் செய்தவர் முஜிபுர் ரஹ்மான்’என்று அறிவித்தது.

பொதுத் தேர்தல்களை நடுநிலை யான தாற்காலிக அரசுதான் நடத்த வேண்டும் என்ற சட்டம் வங்கதேசத்தில் இருந்தது. அதாவது ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு நடுநிலையான ஒருவரிடம் பிரதமர் ஆட்சியை ஒப்படைக்க அவர்தான் தேர்தலை வழி நடத்துவார். இந்தச் சட்டத்தை நீக்கியது ஹஸீனா அரசு.

பழிவாங்கும் நிகழ்ச்சிகள் தொடர்கதை ஆயின. ராணுவத்தை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் அடுத்தடுத்த ஆட்சிகளுக்கு இருந்தது. பிற நாடுகளிலிருந்து தேசத்தைக் காப்பாற்றத்தான் ராணுவம் என்பதுபோக, தங்கள் ஆட்சியை ராணுவம் கவிழ்த்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையும், பயமும்தான் வங்கதேச அரசுகளுக்கு இருந்து வந்திருக்கின்றன. கடந்த கால கசப்பான அனுபவங்களின் விளைவு.

ஹஸீனா அரசு ராணுவ ‘களை யெடுப்பில்’ மிகுந்த முனைப்பு காட்டியது. 1971 சுதந்திரப் போராட் டத்தின்போது பாகிஸ்தானுடன் இணைந்து உள்குத்து வேலை களைச் செய்தார்கள் என்று கூறி சில ராணுவ அதிகாரிகளை 2012-ல் தூக்கிலிட்டனர்.

2012ல் ஃபேஸ்புக்கில் பாதி எரிக்கப்பட்ட குரானின் படம் வெளியானது. புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று தெரியவர, முஸ்லிம் கிளர்ச்சியா ளர்கள் வெகுண்டெழுந்தனர்.

தவறுதலாக அந்தப் படம் இணைக்கப்பட்டுவிட்டதாக அந்த புத்தமதச் சிறுவன் கூற, உடனடியாக அந்த முகநூல் பக்கம் நிறுத்தப்பட்டது. சிறுவனும் அவன் குடும்பமும் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிவிட்டது. புத்தமதத்தினர் அதிகம் வசிக்கும் கிராமங்களை முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தாக்கத் தொடங்கினார்கள். பத்து புத்த ஆலயங்கள் நொறுக் கப்பட்டன.

2014 ஜனவரி தேர்தலில் எதிர்க் கட்சியான வங்கதேச தேசியக் கட்சி பங்கெடுத்துக் கொள்ளவில்லை. நடுநிலையான ஓர் அமைப்பு தேர்தலை நடத்தினால்தான் அது நியாயமான தேர்தலாக இருக்கும் என்று கூறி நாடாளுமன்றத் தேர்தலில் கலீதாவின் கட்சி போட்டியிடாமல் போக, மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் ஹஸீனா.

இப்படி மாறி மாறி அரசியல் ஸ்திரத் தன்மை கேள்விக்குறி யாகிவரும் நாடாக வங்கதேசம் இருந்து வருகிறது. ஹஸீனா, கலீதா ஆகிய இருவரின் ஆட்சி களிலும் ஊழல், அடக்குமுறை, பழிவாங்கும் எண்ணம், ஒருதலைப்பட்ச செயல்முறைகள் போன்றவை காணப்பட்டாலும் அந்த நாட்டில் ஜனநாயகம் ஓரளவாவது இருப்பதற்குக் காரணமும் இவர்கள்தான்!

உலகின் மிக நெரிசலான நாடுகளில் ஒன்று வங்கதேசம். கல்வி அறிவு பெற்றவர்கள் ஐந்தில் ஒரு பங்கு மட்டும்தான். கட்டாயக் கல்வி எல்லாம் கிடையாது. தெற்கு ஆசியாவின் வேறு எந்த நாட்டை யும்விட வங்கதேசத்தில் நகரவாசிகள் மிகக் குறைவு. மொத்த மக்கள் தொகையில் பத்து சதவீதம் கூட நகரங்களில் வசிப்பதில்லை.

அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் சில விஷயங்களில் ஒன்று கிரிக்கெட்.

ஆரம்ப கட்டத்தில் வங்கதேச மக்களின் முக்கியப் பொழுதுபோக்கு கால்பந்தாக இருந்தது. இப்போது கிரிக்கெட் முதலிடத்தைப் பிடித்து விட்டது.

வங்காளத்தில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது கிழக்கிந் தியக் கம்பெனிதான். முதல் கிரிக்கெட் மேட்ச் அங்கு 1792-ல் நடைபெற்றது. 1934-லிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரஞ்சிக் கோப்பை பந்தயங்களை நடத்த தொடங்கியது. இதில் 1938 39 சீசனில் கோப்பையை வென்றது வங்காள அணி.

வங்காளம் பிரிக்கப்பட்டபின் கிழக்கு வங்காளத்தில் அதிகார பூர்வமான கிரிக்கெட் பந்தயங்கள் பல வருடங்களுக்கு ஆடப்படவில்லை. அதன் பிறகு கிழக்குப் பாகிஸ்தான் என்று பெயர் சூட்டிக் கொண்ட பாகிஸ்தானின் பகுதி உயர்மட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கு கொள்ளத் தொடங்கியது.

டாக்காவிலுள்ள வங்கபந்து (முஜிபுர் ரஹ்மானின் பட்டப் பெயர் இது) தேசிய மைதானம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட பயன் படுத்தப்பட்டது. 1955ல் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் இங்கு நடைபெற்றது.ஒரு முழுமை யான தனி நாடாக கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் பங்கு பெற்றது 1972-லிருந்துதான் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப் பாடு வாரியம் 1974-ல் உருவாக் கப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பந்தய மோதலுக்கு இணையான விதத்தில் எதிர்பார்க்கப்பட்டது 1986 மார்ச் 31 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கிரிக்கெட் போட்டி. எதிர்த்து விளையாடிய அணி - பாகிஸ்தான்! ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

பல வருடங்களுக்குப் பிறகு 1999 கிரிக்கெட் உலகக் கோப்பைப் பந்தயத்தில் வங்கதேச அணி பாகிஸ்தான் அணியை வென்றது. அது பலத்த அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

மற்றபடி பாகிஸ்தான் பங்களா தேஷ் உறவுகள் இப்போது எப்படி உள்ளன என்று பார்ப்போமா?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-16/article7593418.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நவீனன் உங்களது தொடரில் இந்த திரைப்படத்தை இணைப்பதற்கு மன்னிக்கவும்...இத்திரைப்படம்  இந்த தொடரின் சில சம்பவங்களை பிரதிபலிக்கின்றது

தாராளமாக நீங்கள் இணைக்கலாம் புத்தன்.   இதுக்கு எல்லாம் ஏன் மன்னிப்பு?

நேரம் கிடைக்கும்போது திரைப்படத்தை பார்க்கிறேன்:)

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

பல முக்கிய தகவல்கள்  எழுதபட்டிருப்பது பாராட்டுக்கு உரியது.
ஆனால் எதோ ஒரு வீடியோ வை மூலமாக வைத்து எழுத பட்டிருப்பதால் 

ஒரு பிராக்மென்ட் (fragment) போல் இருக்கிறது 
முடிக்கபட்ட முதலாவது பாகம் 
இரண்டாவதுடன் ஒத்துபோகவில்லை 

சில முக்கிய விடயங்கள் 
திடிரென புகுத்தபடுகிறது 

வாசிக்கும்போது ஒரு தொடர்சி இல்லாமை இருக்கிறது.

இணைப்பிற்கு நன்றி !

ஐ சி எஸ் எவ் எமது பிரச்சனையையும் முன்னெடுத்திருக்கிறார்கள் 
இவர்களுடன் நாடுகடந்த அரசு உறவை பேணி வருகிறது.

ஆதிக்க வெறியர்களின் கைகளில் மெயின் மீடிய ஸ்ட்ரீம் இருப்பதால்.
உண்மைகள் ஏதாவது ஒரு மூலைக்குள் போய் ஒழிந்துவிடுகிறது.

இவை பற்றி ஆதாரபடுத்தபட்ட இரண்டு வீடியோ வை இணைக்கிறேன்.

இது ஹிந்து நாளிதளில் வந்த படியால் ஹிந்திய நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தொடராகும்.இருந்தாலும் பல விடயங்கள் எமக்கு தெரியாதவை.இலங்கை அரசியலில் அடிமேல் அடிவைக்காமல் உலகில் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்

TPOTY.jpg?Action=thumbnail&width=600&heiferry_bangladesh_Eid_al_Fitr270714.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது ஹிந்து நாளிதளில் வந்த படியால் ஹிந்திய நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தொடராகும்.இருந்தாலும் பல விடயங்கள் எமக்கு தெரியாதவை.இலங்கை அரசியலில் அடிமேல் அடிவைக்காமல் உலகில் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்

TPOTY.jpg?Action=thumbnail&width=600&heiferry_bangladesh_Eid_al_Fitr270714.jpg

எதோ இந்தியா அச்சா பிள்ளைமாதிரிதான் தொடர் நீளுது ....
பாகிஸ்தான் படைகளைபோலவே 
இந்திய காடை இராணுவமும் முஸ்லிம் பெண்களை பிடித்து பாலியல் கொடுமை செய்தார்கள். 

  • தொடங்கியவர்
 

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 17

 
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு டாக்காவில் போராட்டம் நடத்திய ‘சிக்கிக் கொண்ட பாகிஸ்தானியர்கள்’ (கோப்புப் படம்)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு டாக்காவில் போராட்டம் நடத்திய ‘சிக்கிக் கொண்ட பாகிஸ்தானியர்கள்’ (கோப்புப் படம்)

பாகிஸ்தான், வங்கதேசம் இடையே உறவு எப்படி இருக்கிறது?

தொடக்கத்தில் ஒரே நாடாக உருவாகியிருந்த இருபகுதிகள் இன்று தனித்தனி நாடுகள். 25 வருடங்கள் இணைந்திருந்துவிட்டு பகைமையின் உச்சத்தில் பிரிந்த நாடுகள். இன்றுவரை ‘‘பாகிஸ்தான் 1971-ல் எங்கள் மண்ணில் நடத்திய இனப்படுகொலையை ஒத்துக் கொண்டு தங்கள் மனித மீறல்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்பதில் தெளிவாக இருக்கிறது வங்கதேசம். 2002-ல் வங்கதேசம் சென்ற முஷாரப் அத்துமீறல்களுக்கு அரைகுறை யான ஒரு வருத்தம் தெரிவித்தார். இதில் அந்நாடு சமாதானமானதாகத் தெரியவில்லை.

என்றாலும் வேறு சில விஷயங் களில் இவை ஒத்துப் போகின்றன. இரண்டு நாடகளுக்கிடையே வணிகத் தொடர்பு இருக்கிறது. சார்க் அமைப்பை நிறுவிய நாடுகளில் இந்த இரண்டுமே உண்டு. வங்க தேசத்துக்கு இஸ்லாமாபாத்தில் தூதரகம் உண்டு. பாகிஸ்தானுக்கு டாக்காவில் தூதரகம் உண்டு.

எனினும் அகதிகள் பிரச்னை என்பது இந்த இருநாடுகளுக் கிடையே இன்னமும்கூட தீராத தலைவலியாகத்தான் இருந்து வருகிறது.

1947ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிஹாரில் வசித்த சுமார் ஐந்து லட்சம்பேர் கிழக்கு பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தனர்.

மேற்கு - கிழக்கு பாகிஸ்தான் ஒன்றோடொன்று போரிட்டபோது இவர்கள் மேற்கு பாகிஸ்தானை ஆதரித்தார்கள். (வசித்தது கிழக்கு பாகிஸ்தானில் என்றாலும்). வங்கதேசம் பிரிந்த காலகட்டத்தில் இவர்கள் பாகிஸ்தானுக்குக் குடிபெயர ஆசைப்பட்டார்கள். அவர்களை அப்படியே அனுமதிக்க பாகிஸ்தான் தயக்கம் காட்டியது. எனவே ஒரு பகுதியினரை மட்டும் அனுமதித்தது. ஆனால் பாதிப்பேர் இன்னமும் வங்கதேசத்தில் இருந்து கொண்டே, பாகிஸ்தானுக்கு நிரந்தரமாகச் சென்றுவிட விருப்பப்படுகிறார்கள். இவர்கள் ‘சிக்கிக் கொண்ட பாகிஸ்தானியர்’ (stranded Pakistanis) என்று அழைக்கப்படுகிறார்கள்.

2002-ல் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் வங்கதேசம் சென்றிருந்த போது பலவித ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஆனால் இந்த சிக்கிக் கொண்ட பாகிஸ் தானியர்களை பாகிஸ்தானுக்குள் உடனடியாக அழைத்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இருநாடுகளின் தூதரகத் தொடர்பு களும் அப்படியும் இப்படியுமாகத் தான் இருந்து வந்திருக்கின்றன. சமீபத்தில் ஒரு கசப்பு வெளிப் பட்டுள்ளது.

டாக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை உடனடி யாக வெளியேற வேண்டும் என்று வங்கதேசம் அறிவித் துள்ளது. அந்த அதிகாரியின் பெயர் மஸார் கான். இந்திய நாணயத்தைக் கொண்டு சட்ட மீறலான வணி கத்தை அவர் டாக்காவில் செய்து கொண்டிருப்பதாகவும், தீவிரவாதி களுடன் தொடர்பு கொண்டிருப் பதாகவும் குற்றச்சாட்டு.

இந்த அதிகாரி இப்போது இஸ்லாமாபாத்துக்குச் சென்று விட்டார். ‘‘அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை. இது ஒரு துரதிஷ் டமான சம்பவம்’’ என்று அறிக்கை விட்டிருக்கிறது பாகிஸ்தான்.

சமீபகாலமாகவே இந்த இரு நாடுகளின் உறவு சீர்குலைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் டாக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தாங்கள் பாகிஸ்தானில் பயிற்சி எடுத்துக் கொண்டதாக பின்னர் தெரிவித்தனர்.

வங்கதேசம் நம் நாட்டுடன் ஓர் நட்பு ஒப்பந்தத்தை தொடக் கத்தில் ஏற்படுத்திக் கொண்ட துண்டு. முஜிபுரும், இந்திராவும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தின் ஒன்பதாவது பிரிவின்படி இரு நாடுகளில் எதற்கு ‘ஆபத்து’ ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்வதில் மற்ற நாடு கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும்.

ஒத்துழைப்பு எனும் கோணம் தூக்கலாகத் தெரிந்தாலும் இந்த ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களும் எழுந்தன. வங்கதேசத்தில் இது அதிகமாகவே புலப்பட்டது. நாட்டின் தனித்துவத்தை இந்த ஒப்பந்தம் குறைத்து விடுவதாகவே அனைத்து கட்சிகளும் (அவாமி லீக்கைத் தவிர) பிரச்சாரம் செய்தன.

இந்தியாவுக்கும், வங்கதேசத் துக்கும் இடையே எஞ்சியுள்ள முக்கிய பிரச்னைகளில் முக்கிய மானது அகதிகள் தொடர்பானது. வங்கதேசத்தின் சக்மாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள், நம் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தடுப்பை யும் மீறி, இந்தியாவுக்குள் நுழைந் திருக்கிறார்கள். இதனால் அருணாசலப் பிரதேசவாசிகள் தங்கள் உரிமைகள் பறிபோவதாகக் குமுறினர்.

இந்த வருடம் ஜூலை 13 அன்று வங்கதேச துறைமுகத்தில் பிடிபட்டது ஒரு கப்பல். அதில் பெட்டி பெட்டியாக கொகெய்ன் போதைப் பொருள் இருந்தது. ஆசியா விலேயே இந்த அளவு போதைப் பொருளை ஒரே கப்பலில் இதுவரை கைப்பற்றியதில்லையாம். இந்தக் கப்பல் இந்தியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தியா தான் அது சேர வேண்டிய இறுதி யிடமா என்பது தெரியவில்லை. ஒருவேளை ஆசியா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பிற நாடுகளுக்குக் கடத்தப்படுவதும் நோக்கமாக இருக்கலாம். அந்தக் கப்பலில் இருந்த போதைப் பொருளின் மதிப்பு 14 மில்லியன் டாலர். வங்கதேச பகுதியில் போதைப் பொருள் வணிகம் என்பது அடிக்கடி நடக்கிற ஒன்றாகிவிட்டது. கண்ணுக்குத் தெரியாமல் வேறு பல போதைப் பொருள்களும்கூட தெற்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்கிறது ஐ.நா.

ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ் தான் இது போன்ற கடத்தல்களில் சம்பந்தப்பட்டதுண்டு. இப்போது பிற நாடுகளின் பக்கமும் பார்வை திரும்பியுள்ளது. கொகெய்ன் ஐரோப்பாவிலும், வட அமெரிக்கா விலும் குறைவாகப் பயன்படுத் தப்படுகிறதாம். ஆசியாவிலுள்ள பெருநகரங்களில் வாழும் செல்வந்தர்கள் இதை அதிகமாகப் பயன்படுத்துவதாகக் கேள்வி.

ஹஸீனாவின் கடந்தகால சாதனைகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது கங்கை நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்குமிடையே கையெழுத்தான ஒப்பந்தம்.

இந்தியாவுக்கும், வங்கதேசத் துக்கும் இடைய உரசல்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் சில முக்கியமானவை. ஒன்று நதிநீர்ப் பங்கீடு தொடர்பானது. ஜெனரல் ஹாக் ‘கடந்த ஆறு வருடங்களில் இந்தியா கிட்டத்தட்ட எல்லா கங்கை நதி நீரையுமே தனக்கு எடுத்துக் கொண்டு விடுகிறது’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

மற்றொன்று அகதிகள் பிரச்னை. வங்கதேசத்தின் சக்மாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருக் கிறார்கள். இவர்கள் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

பாதுகாப்பு படையினரை ஏமாற்றிவிட்டு உள்ளே நுழைந் தவர்கள் ஏராளம். இந்த நிலையில் அருணாசலப் பிரதேசவாசிகள் தங்கள் உரிமைகள், இதனால் பறிபோய்க் கொண்டிருப்பதாகக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது எல்லைகள் பிரச்னை. அதற்குத்தான் சமீபத்தில் தீர்வு கண்டிருக்கிறார்கள். இந்தத் தீர்வு முதல் இரு பிரச்னைகளுக்கும் எந்த அளவு தீர்வாக இருக்கும் என்பது காலப்போக்கில்தான் தெரியவரும்.

http://tamil.thehindu.com/world/பதற்றம்-நிறைந்த-வங்கதேசம்-17/article7596428.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மருதங்கேணி, நீலபறவை  உங்கள் வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி:)

11954837_10153693440949396_8753519777881

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.