Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: திருடனைப் பிடிக்க உதவும் ஆரஞ்சு பந்து!

 
 
masala_2417970f.jpg
 

ஜப்பானில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், நகைக் கடைகள், துணிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களில் பணம் செலுத்தும் நபருக்கு அருகில் 2 ஆரஞ்சு வண்ணப் பந்துகளைப் பார்க்க முடியும். இந்தப் பந்துகள் விற்பனைக்கு அல்ல. இவை திருட்டைத் தடுப்பதற்கும் திருடனைப் பிடிப்பதற்கும் உதவுகின்றன. ஆரஞ்சு பெயிண்ட்டால் நிரப்பப்பட்டிருக்கின்றன இந்தப் பந்துகள்.

எந்தக் கடையில் ஆரஞ்சு பந்துகளைப் பார்த்தாலும் அங்கே திருடர்கள் திருட நினைப்பதில்லை. இதன் மூலம் திருட்டுத் தடுக்கப்பட்டுவிடுகிறது. அதையும் மீறி யாராவது திருடினாலோ, திருட முயற்சி செய்தாலோ அவர்கள் மீது பந்துகளை வீசுவார்கள். பந்து உடைந்து திருடனின் உடல் முழுவதும் ஆரஞ்சு பெயிண்ட் கொட்டிவிடும். இந்த நபரை அருகில் உள்ளவர்கள் எளிதாகப் பிடித்துக் கொடுத்து விடுவார்கள். ஆரஞ்சு பந்துகள் மூலம் கணிசமான அளவில் திருட்டைக் குறைக்க முடிந்திருக்கிறது என்கிறார்கள் ஜப்பானிய காவல்துறையினர்.

இந்தப் பந்துகளை எப்படிக் கையாள்வது என்று அங்கே பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்கள். ஜப்பானில் 8,500 கடைகளில் ஆரஞ்சு பந்துகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டுக்கு 1 லட்சம் பந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 20 ஆண்டுகளாக ஜப்பானில் திருடர்களைப் பிடிக்கும் பணியில் உதவி செய்துவருகின்றன இந்த ஆரஞ்சு பந்துகள்.

வங்கிகள், காவல் நிலையங்களில்கூட இந்தப் பந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கடைக்காரர்களுக்கு மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் பணத்தையும் மீட்டுக் கொடுத்து, ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன இந்த ஆரஞ்சு பந்துகள்.

அடடா! ஒரு பந்து எவ்வளவு பெரிய வேலையைச் செய்யுது!

சீனாவின் ஷென்ஸென் பகுதியில் சர்வதேச கலை, கலாசார விழா நடைபெற்றது. மோனாலிசா ஓவியத்துக்கு இணையான புகழ் பெற்ற சீனாவின் பழங்காலச் சிற்பத்தை மறு உருவாக்கம் செய்திருந்தனர். கருங்காலி மரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தில் 800 மக்கள், 30 கட்டிடங்கள், 28 கப்பல்கள், துறைமுகம், சந்தை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

27.5 மீட்டர் நீளமும் 1.92 மீட்டர் உயரமும் கொண்ட இந்தச் சிற்பத்தை 600 நாட்களில் வாங் ஸின்யுவான் குழுவினர் உருவாக்கியிருக்கின்றனர். நிஜ சிற்பம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மின்ஜியாங் ஆற்றுப்படுகையில் இருந்து இது கண்டெடுக்கப்பட்டது. சாங் வம்சத்தில் ஸாங் ஸெடுவான் சிற்பியால் உருவாக்கப்பட்டது இந்த அற்புதமான சிற்பம். சிற்பத்தின் பழமை மாறாமல், அதே நேர்த்தியுடன் இந்தப் புதிய சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் இதில் சிறப்பான அம்சம்.

பிரமாதம்! உழைப்புக்கு ஏற்ற பலன் தெரியுது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-திருடனைப்-பிடிக்க-உதவும்-ஆரஞ்சு-பந்து/article7247109.ece?ref=relatedNews

  • Replies 1k
  • Views 150k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: குழந்தைகளுக்குத் தண்டனை கொடுப்பவர்களுக்கு ஒரு பாடம்.

 
yamato_2882531f.jpg
 

ப்பானைச் சேர்ந்த 7 வயது யமடோ டானூகா, 6 நாட்களுக்குப் பிறகு அடர்ந்த காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டிருக்கிறான். குறும்பு அதிகம் செய்வதால், அவனுக்குத் தண்டனை அளிக்கும் விதத்தில், காட்டுக்குள் அவனது பெற்றோர் இறக்கிவிட்டனர். காரை எடுத்துக்கொண்டு கிளம்பினர். சில நிமிடங்களில் அவர்கள் திரும்பி வந்தபோது யமடோ அங்கே இல்லை. அவனைத் தேடி அலைந்தார்கள். அடர்ந்த காட்டுக்குள் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அடர்ந்த மரங்கள், கடுமையான குளிர், கரடி போன்ற விலங்குகள் வசிக்கும் காட்டில் ஒரு சிறுவன் தனியாக மாட்டிக்கொண்டதை நினைத்து எல்லோருக்கும் பதற்றம் ஏற்பட்டது. 180 ராணுவ வீரர்கள் யமடோவை மீட்கும் பணியில் இறங்கினர். ஆனால் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆறாவது நாள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாருமற்ற ஓர் அறையில் யமடோ கண்டுபிடிக்கப்பட்டான். ராணுவ வீரரைப் பார்த்தவுடன் தண்ணீரும் ரொட்டியும் சாப்பிடக் கொடுக்கும்படிக் கேட்டான். ஆரோக்கியமான சிறுவன் என்பதால் 6 நாட்கள் உணவின்றி இருந்திருக்கிறான். உணவு கொடுத்தவுடன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் யமடோ. ‘‘குழந்தையைத் திருத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காரியத்தில் இறங்கியது மிகவும் தவறு. என் குழந்தை இந்த ஆறு நாட்களில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்… என்னால் இந்த வலியை எப்போதும் மறக்க முடியாது. எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் குழந்தையை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி’’ என்று அழுதார் யமடோவின் அப்பா டானூகா. புத்திசாலி என்பதால் பத்திரமான இடத்தில் தங்கிவிட்டான் யமடோ.

குழந்தைகளுக்குத் தண்டனை கொடுப்பவர்களுக்கு ஒரு பாடம்.

கொலம்பியாவில் வசிக்கும் ஜோசப் ஃபுல்லர், தன் பேரனை அழைத்து வருவதற்காகப் பள்ளிக்குச் சென்றார். பேரனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கும் வந்து சேர்ந்தார். ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் தான் அழைத்து வந்தது வேறொரு சிறுவன் என்று அறிந்தார்! ‘‘6 வயது பேரனை அழைத்து வருவதற்காகப் பள்ளிக்குச் சென்றேன். பள்ளி ஜிம்மில் இருந்து ஒரு சிறுவன் வெளியே வந்தான். நான் அவன்தான் என் பேரன் என்று நினைத்துவிட்டேன். அவனைப் பார்த்தவுடன் கட்டிப் பிடித்து, வீட்டுக்குப் போகலாமா என்று கேட்டேன். அவனும் ஆர்வத்துடன் சரி என்றான். அலுவலக உதவியாளர் ஒருவர், சிறுவனைப் பார்த்து இவர் உன் தாத்தாவா என்று கேட்டார். அதற்கும் அவன் ஆமாம் என்றான். புத்தகத்தில் கையொப்பமிட்டுவிட்டு, சிறுவனை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். காரில் என் மனைவி எங்களுக்காகக் காத்திருந்தார். அவரும் சிறுவனை நன்றாகக் கவனிக்கவில்லை. முன் இருக்கையில் இருந்து, மெக்டொனால்டில் வாங்கி வைத்த மதிய உணவைக் கொடுத்தார். பின் இருக்கையில் இருந்த சிறுவன் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டு முடித்தான். வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அவன் சிரிப்பை இப்போதுதான் நன்றாகக் கவனித்தேன். ஓட்டைப் பல்! என் பேரனுக்கு ஓட்டைப் பற்கள் கிடையாது. உடனே அவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்தேன். அவர்களிடம் என் செயலுக்கு மன்னிப்புக் கேட்டேன். அதற்குள் காவலர்கள் வந்துவிட்டனர். அவர்கள் விசாரித்துவிட்டு, இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி முடி வெட்டியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட உருவமும் அப்படி இருக்கிறது. ஆனால் எடையோ, உயரமோ ஒன்றாக இல்லை என்றனர். அந்தச் சிறுவனின் அம்மா, என்னைப் போலவே அவனின் தாத்தாவும் இருப்பதால் அவனும் குழப்பம் அடைந்துவிட்டான் என்றார். நீண்ட நேர விசாரணைக்குப் பின் இது தற்செயலாக நடந்த தவறு என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். பள்ளியில் இன்னும் கவனமாகக் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பல் மட்டும் உடையவில்லை என்றால் அவனை அடையாளம் கண்டுபிடிக்க இன்னும் நிறைய நேரம் தேவைப்பட்டிருக்கும். ஒருவழியாக என் பேரனுடன் வீடு திரும்பினேன்’’ என்கிறார் ஜோசப் ஃபுல்லர்.

சினிமாவில் வரும் ஆள் மாறாட்ட காமெடி போல இருக்கே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குழந்தைகளுக்குத்-தண்டனை-கொடுப்பவர்களுக்கு-ஒரு-பாடம்/article8693398.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஒளி புகாத கண்ணாடிகள்

 

 
 
masala_2884835f.jpg
 

இன்று பெரும்பாலான பொழுதுகள் ஸ்மார்ட்போன் களிலேயே கழிகின்றன. ஸ்மார்ட்போன் ஸ்க்ரீன், கம்ப்யூட்டர் ஸ்க்ரீன், டிவி ஸ்க்ரீன் என்று கண்கள் ஏதாவது ஸ்கீரினையே பார்த்துக்கொண்டிருக்கின்றன. இதனால் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் பேசும் வாய்ப்பே குறைந்து போய்விட்டது. சிலர் மிக மோசமாகத் தொழில்நுட்பங்களுக்கு அடிமைகளாகவே மாறிவிடுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வைக் கொண்டு வரவே ஒளிபுகா கண்ணாடிகளை உருவாக்கியிருக்கிறார் சினோ கிம்.

’’ஒரே இடத்தை நம் கண்கள் அதிக நேரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சோர்வடைந்து விடுகின்றன. இந்தக் கண்ணாடியில் மெல்லிய ஒளிபுகா காகிதம் ஒட்டப்பட்டிருக்கிறது. தலை மீது இருக்கும் வெப்கேமும் போனும் இணைக்கப்பட்டிருக்கும். எப்போது கண் சோர்வடைகிறதோ, அப்போது கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஒளிபுகா காகிதம் வேலை செய்ய ஆரம்பிக்கும். எதையும் பார்க்க முடியாது. கண்கள் ஓய்வெடுக்கும். இந்தக் கண்ணாடியை இன்னும் மேன்மைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன்’’ என்கிறார் சினோ கிம்.

கண் கெட்டுப் போறதுக்குள்ள சீக்கிரம் கொண்டு வாங்க கிம்…

 

குரோவேசியாவைச் சேர்ந்த கலைஞர் டைனோ டாமிக். பென்சில்களையும் பேப்பர்களையும் வைத்து ஓவியங்களைத் தீட்டிப் புகழ்பெற்றவர், தற்போது உப்பு ஓவியங்களைத் தீட்டி வருகிறார். கருப்புத் துணிகளில் உப்புத் துகள்களைத் தூவி, பிரமாதமான ஓவியங்களைப் படைத்துவிடுகிறார்! ’’ஓவிய ஆசிரியராக இருந்த நான், என் ஆர்வத்தின் பேரில் டாட்டூ கலையையும் கற்றுக்கொண்டேன். ஒரே இடத்தில் தேங்கிவிடக்கூடாது என்பதற்காக புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறேன். வரைந்து வரைந்து கை வலிக்கும்போது, ஓய்வு கொடுப்பதற்காக உப்பில் வரைகிறேன். உப்பு மூலம் வரையும்போது மணிக்கட்டுக்கு அவ்வளவு வேலை இருக்காது.

தோள்களுக்குத்தான் வேலை அதிகம். பிரஷ் பிடித்து வரைவதற்கும் உப்பில் வரைவதற்கும் எனக்கு அதிகம் வித்தியாசம் தெரியவில்லை. மூன்றே வாரங்களில் உப்பு ஓவியங்களில் தேர்ந்தவனாகிவிட்டேன். மணிக்கணக்கில் வரைந்துவிட்டு, விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன். பிறகு வரைந்த கைகளாலேயே ஓவியத்தைக் கலைத்து விடுவேன். உணவுக்கு முக்கியமான உப்பை வைத்துச் செய்யப்படும் இந்த எளிய ஓவியங்கள் அற்புதமானவையாக அமைந்துவிடுவதில் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!’’ என்கிறார் டைனோ டாமிக்.

அட! எங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறது டைனோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒளி-புகாத-கண்ணாடிகள்/article8700431.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: முதலையிடம் இருந்து மானைக் காப்பாற்ற முயன்ற நீர்யானை

 
 
masala_2415392f.jpg
 

எருது போன்ற தோற்றம் கொண்ட மான் இனத்தைச் சேர்ந்த விலங்கு வில்ட்பீஸ்ட். தென்னாப்பிரிக்காவில் உள்ள சபி வனவிலங்கு பூங்காவில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள் காத்திருந்த முதலை மானை வாயால் கவ்வியது. முதலைக்கும் மானுக்கும் கடுமையான போராட்டம். அந்த வழியே வந்த நீர்யானை சட்டென்று முதலையின் அருகில் வந்தது.

முதலையைத் தன் வாயால் இழுத்தது. ஆனால் முதலை தன் பிடியை விடுவதாக இல்லை. சட்டென்று யோசிக்காமல் மானுக்கும் முதலைக்கும் இடையே தன் தலையை நுழைத்து முதலையின் பிடியை விடுவிக்கப் போராடியது. ஆனால் முதலை நீர்யானையையும் சமாளித்துக் கொண்டு, மானையும் விட்டுவிடாமல் இருந்தது. மூன்று விலங்குகளும் நீண்ட நேரம் போராடின.

மான் உயிர் இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. தான் ஓர் அசைவ பிராணியிடம் மோதிக்கொண்டிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தவுடன் வேகமாக முதலையை விட்டு அகன்றது நீர்யானை. விலங்குகளில் இப்படி அடுத்தவருக்காக உதவ வருவது அரிது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உணவு, உயிர், இரக்கம்… மூன்று விலங்குகளின் போராட்டங்களிலும் நியாயம் இருக்கிறது…

சர்வதேச அளவில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம் ஐ.கே.இ.ஏ. இது உணவுப் பொருட்களையும் விற்பனை செய்து வந்தது. தற்போது வீட்டு உபயோகப் பொருளையும் உணவையும் இணைத்து ஒரு புது தொழிலில் இறங்கியிருக்கிறது. ’தி ஐ.கே.இ.ஏ பிரேக்ஃபாஸ்ட் இன் பெட் கஃபே’ என்ற உணவு விடுதியில் தூங்கவும் செய்யலாம் சாப்பிடவும் செய்யலாம். உணவு விடுதிக்குள் பெரிய அறைகளில் படுக்கைகளுடன் கூடிய கட்டில்கள், இரவு விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

குடும்பத்தோடு வந்து கட்டில்களில் படுத்து ஓய்வெடுக்கலாம். புத்தகம் படிக்கலாம். பாட்டுக் கேட்கலாம். குழந்தைகள் குதித்து விளையாடலாம். பசி எடுத்தால் படுக்கைக்கே உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள். பிரிட்டிஷ், ஸ்வீடிஷ் உணவுகள் வழங்கப்படுகின்றன. ஜூஸ், காபி போன்றவையும் கிடைக்கும். படுக்கையில் அமர்ந்து சாப்பிட்ட பிறகு, அப்படியே மீண்டும் தூக்கத்தைத் தொடரலாம்.

லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவு விடுதி காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்குகிறது. 50 சதவிகித பிரிட்டிஷ் மக்கள் படுக்கையில் உணவு சாப்பிடும் அனுபவத்தை இதுவரை பெற்றதில்லை. அவர்களுக்காகவே இந்தத் தூங்கும் உணவு விடுதியை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார் அதன் உரிமையாளர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 45 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. அதற்குள் சாப்பிட்டு, குட்டித் தூக்கம் போட்டுச் சென்றுவிட வேண்டும்.

படுக்கையில் சாப்பிடுவது எல்லாம் ஒரு அனுபவமா?

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ரெஜின் க்ரைஸ். கடந்த 10 ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை ஆராய்ச்சி செய்துவருகிறார். இந்த ஆராய்ச்சியில் அவரது கணவர் கெர்ஹார்ட் உதவி செய்து வருகிறார். தன்னுடைய ஆராய்ச்சிக்காக ஆயிரம் மூட்டைப் பூச்சிகளை 5 குடுவைகளில் போட்டு வளர்த்து வருகிறார் க்ரைஸ். மாதத்துக்கு ஒருமுறை குடுவைகளைத் திறந்து, தங்கள் கைகள் மீது கவிழ்க்கிறார்கள். அப்பொழுது மூட்டைப் பூச்சிகள் தங்களுக்கு வேண்டிய அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சிக்கொள்கின்றன.

‘‘ஒரே நேரத்தில் மூட்டைப் பூச்சிகள் கடிக்கும்போது கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும். ஆராய்ச்சிக்காகப் பொறுத்துக்கொள்வோம். 10 நிமிடங்களில் பாட்டிலை எடுத்துவிடுவோம். மூட்டைப் பூச்சி கடித்த இடங்கள் வீங்கியிருக்கும். ஆனால் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படாது’’ என்கிறார் க்ரைஸ். கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் தடவையாவது தங்கள் ரத்தத்தை மூட்டைப் பூச்சிகளுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்தத் தம்பதியர். மனித உடலில் மட்டுமில்லை, கினியா பன்றி, கோழி போன்றவற்றையும் மூட்டைப் பூச்சிகளைக் கடிக்க வைத்து ஆராய்ச்சி செய்து முடித்திருக்கிறார் க்ரைஸ். இதன் மூலம் மூட்டைப் பூச்சி ஒழிப்பதற்கான ரசாயனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். கனடாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று க்ரைஸ் தம்பதியினரின் கண்டுபிடிப்பைக் கேட்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-முதலையிடம்-இருந்து-மானைக்-காப்பாற்ற-முயன்ற-நீர்யானை/article7238506.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: பேராசிரியர் ஸ்பைடர்மேன்

 
 
masala_2886156f.jpg
 

ஸ்பைடர்மேன் அநீதிக்கு எதிராகப் போராடுவார், வில்லன்களை வெற்றிகொள்வார். ஆனால் மெக்ஸிகோ ஸ்பைடர்மேன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2002-ம் ஆண்டு ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியானது. 12 வயது மோய்சஸ் வாஸ்க்வஸ் ரேயஸ் திரைப்படத்தைப் பார்த்தவுடன் ஸ்பைடர்மேன் ரசிகனாகிவிட்டார்.

ஒருகட்டத்தில் ஸ்படைமேன் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். ஸ்பைடமேன் குறித்த அனைத்துத் தகவல்களையும் இணையத்தின் மூலம் அறிந்துகொண்டார். ஒரு கதையில் ஸ்பைடர்மேன் ஆசிரியராக வேலை செய்வார். உடனே தானும் ஸ்பைடர்மேன் ஆடையுடன் பாடம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். கடந்த 2 ஆண்டுகளாக மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக மோய்சஸ் பணியாற்றி வருகிறார்.

‘’தினமும் ஸ்பைடர்மேன் போல உடை அணிந்து வருவது சாத்தியமில்லை. பரீட்சை, சில முக்கியமான தருணங்களின்போது ஸ்பைடர்மேன் உடையில் அசத்திவிடுவேன். ஒரு ஸ்பைடர்மேனாக நான் சொல்லும் அனைத்து விஷயங்களையும் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வார்கள். ஆரம்பத்தில் என் குடும்பத்தினரும் நண்பர்களும் இதை எதிர்த்தார்கள்.

மாணவர்களும் சக பேராசிரியர்களும் கூட வித்தியாசமாகப் பார்த்தார்கள். எல்லாம் கொஞ்சம் காலத்துக்குத்தான். இப்போது எல்லோரும் இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள். ஸ்பைடி மோய் என்று செல்லமாக அழைக்கிறார்கள். எல்லோரையும் போல அதே பாடத்தைத்தான் நானும் எடுக்கிறேன். ஆனால் ஸ்பைடர்மேன் ஆடையில் பாடம் எடுப்பதால் உலகிலேயே தனித்துவம் கொண்டவனாக இருக்கிறேன்.

இப்படி இருப்பவர் எப்படிப் பாடம் எடுப்பார் என்று சிலர் நினைப்பதுண்டு. என் வேலையை நான் அதிக சிரத்தையுடன் செய்து வருகிறேன் என்பதை என் மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்’’ என்கிறார் மோய்சஸ்.

பாடம் எடுக்கும் ஸ்பைடர்மேன்!

 

ரஷ்யாவைச் சேர்ந்த 29 வயது நீனா ஸ்குர்ஸ்கயா, சைபீரியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். அவருக்கு ஏற்கெனவே 2 முறை திருமணம் ஆகிவிட்டது என்ற தகவலையும் சொல்லிவிட்டார். தான் எதிர்பார்த்த நேர்மையான, அருமையான மனிதர் இவர்தான் என்று நீனாவும் மகிழ்ச்சியில் இருந்தார். தன்னை அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்று காத்திருந்தார். தானே ஒரு சுற்றுலா செல்லலாம் என்றும் கேட்டார். ஆனால் வழக்கறிஞரோ க்ரீமியாவுக்குச் செல்ல வேண்டும் என்றார்.

அதற்குச் சம்மதம் தெரிவித்த நீனா, தானே விமான டிக்கெட்டுகள் எடுத்தார், 12 நாட்களுக்குத் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்தார். ஆனால் க்ரீமியா சென்றும், வழக்கறிஞர் திருமணக் கோரிக்கையை வைக்கவில்லை. பொறுத்துப் பார்த்த நீனா, அவரிடம் சண்டை போட்டார். உடனே தங்கும் விடுதியை விட்டு நீனாவை வெளியேற்றினார் வழக்கறிஞர். தன் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, வீடு வந்து சேர்ந்தார் நீனா. அந்த நாளில் இருந்து வரிசையாகப் பிரச்சினைகள் ஆரம்பித்தன. வழக்கறிஞர் 2 ஆண்டுகளில் தான் செலவு செய்த ஒவ்வொரு ரூபாயையும் திருப்பித் தரும்படிக் கேட்டார். பூங்கொத்து வாங்கிய பில், காபி குடித்த பில், உணவு சாப்பிட்ட பில், பெட்ரோல் பில் போன்றவற்றைச் சமர்ப்பித்து, 46 ஆயிரம் ரூபாயைத் திருப்பித் தரும்படிச் சொன்னார்.

அதிர்ச்சியடைந்தார் நீனா. கடந்த 2 இரண்டு ஆண்டுகளில் வழக்கறிஞர் அவரிடம் மிகவும் அன்பாக நடந்த ஒரு சம்பவமும் இல்லை. அதனால் அவரிடம் ஆதாரம் எதுவுமில்லை. இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் கூட எடுத்தது இல்லை. வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ’’நான் இதுவரை நீனாவுக்குப் பரிசுப் பொருள் தருகிறேன் என்றோ, இலவசமாக காரில் அழைத்துச் செல்கிறேன் என்றோ சொன்னதில்லை. நானாக இவரைக் காதலிக்கிறேன் என்று கூறியதும் இல்லை. அவர்தான் என்னுடைய நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

நேரத்துக்குக் கணக்குப் பண்ணினால் எவ்வளவோ தரவேண்டும். ஆனால் நான் செலவு செய்தவற்றுக்கு மட்டுமே பணத்தைத் தரச் சொல்கிறேன்’’ என்கிறார் வழக்கறிஞர். ’’இந்தச் சம்பவமும் எனக்கு ஒரு பாடம். ஆண்கள் மீது என் நம்பிக்கை குறைந்துவிட்டது’’ என்கிறார் நீனா.

காதலியிடம் ரீஃபண்ட் கேட்பவரை என்ன செய்யலாம்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பேராசிரியர்-ஸ்பைடர்மேன்/article8704931.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நன்றி மறக்காத சிம்பன்ஸிகள்!

 
 
gorilla_2887332f.jpg
 

அமெரிக்காவில் ஹெபடைடிஸ் ஆராய்ச்சிக்காக பரிசோதனைக் கூடத்தில் 6 ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்த சிம்பன்ஸிகளை வெளியே கொண்டு வந்தவர் லின்டா கோப்னர். ஃப்ளோரிடாவில் சிம்பன்ஸிகளுக்காக ஒரு சரணாலயம் அமைக்கப்பட்டது. அங்கே காட்டு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சிம்பன்ஸிகளுக்கு கற்றுக் கொடுத்தார் லின்டா. 4 ஆண்டுகள் சிம்பன்ஸிகளுடன் வேலை செய்தார். பிறகு லூசியானாவில் சொந்தமாக ஒரு சிம்பன்ஸி சரணாலயம் அமைப்பதற்காகச் சென்றுவிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக அவர் ஃப்ளோரிடாவுக்கு வரவே இல்லை.

விலங்குகள் நடத்தையியல் நிபுணராக மாறிய லின்டா, மீண்டும் ஃப்ளோரிடாவுக்கு வந்தார். ‘‘20 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த சிம்பன்ஸிகளில் இரண்டு மட்டும்தான் இப்போது இங்கே இருக்கின்றன. ஸ்விங் என்று நான் பெயர் சொல்லி அழைத்தவுடன், என்னை ஞாபகம் வைத்திருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. என்னைப் பார்த்துச் சிரித்தது. கை கொடுத்தது. சட்டென்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டது. என்னை அறியாமல் கண்ணீர் பெருகியது.

உனக்கு என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டேன். தலையாட்டியபடி, மீண்டும் கட்டிப் பிடித்தது. எங்கிருந்தோ டால் என்ற இன்னொரு சிம்பன்ஸியும் ஓடி வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டது. இரண்டு சிம்பன்ஸிகளுக்கும் என்னை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அடையாளம் தெரிகிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. சிம்பன்ஸிகள் மனிதர்களைப் போன்ற பல பண்புகளைப் பெற்றிருக்கின்றன. பரிசோதனைக் கூடத்தில் இருந்து அவற்றை மீட்டு வந்த நன்றி உணர்ச்சியை இப்போதும் வெளிப்படுத்துகின்றன. என்னுடைய வாழ்க்கையில் அற்புதமான அனுபவம்’’ என்கிறார் லின்டா.

நன்றி மறக்காத சிம்பன்ஸிகள்!

சார்க் தீவைச் சேர்ந்தவர் 33 வயது ஜார்ஜ் கில். 9 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் உலகம் சுற்ற ஆரம்பித்தார். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார்! ‘’நான் பிளம்பிங் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் மோட்டார் சைக்கிளில் உலகம் சுற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 4 ஆண்டுகள் சேகரித்த பணத்தை வைத்து ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினேன்.

உலகப் பயணம் கிளம்பினேன். நான் எந்த குறிக்கோளையும் வைத்துக்கொள்ளவில்லை. கட்டுப்பாடுகள் இன்றி, நினைத்த இடத்துக்குப் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம். அதனால் வரைபடத்தையோ, வழிகாட்டும் புத்தகங்களையோ வைத்துக்கொள்வதில்லை. வழியில் சந்திக்கும் மனிதர்களிடம் பேசியபடி, வழி கேட்டுச் செல்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படிச் சென்றதால்தான் இதுவரை யாரும் பார்க்காத, குறிப்பிடாத பகுதிகளை எல்லாம் நான் கண்டிருக்கிறேன். நானே ஒரு உலக வரைபடத்தை என் மூளையில் உருவாக்கியிருக்கிறேன். இந்த உலகம்தான் எவ்வளவு அற்புதமானது! சுட்டெரிக்கும் பாலைவனம், குளிர் மிகுந்த பனிப்பிரதேசம், சமவெளிகள், மலைகள், கடல்கள், ஆறுகள், காடுகள் என்று எத்தனை எத்தனை அற்புதங்களைக் கொண்டிருக்கிறது! ஒவ்வொரு இடத்திலும் விஷயங்களைச் சேகரிப்பேன். விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன். ஓய்வு நேரங்களில் எழுதி வைத்துவிடுவேன். இதுவரை 1,10,0000 மைல்களை மோட்டார் சைக்கிள் மூலம் கடந்திருக்கிறேன். ஆங்காங்கு கிடைக்கும் வேலைகளைச் செய்து, பயணத்துக்குத் தேவையான பணத்தையும் பெற்றுக்கொள்கிறேன். எங்கள் தீவில் 500 மக்களே வசிக்கிறார்கள். அங்கே மோட்டார் சைக்கிளோ, கார்களோ கிடையாது.

அங்கிருந்து ஒருவன் மோட்டார் சைக்கிளில் உலகை வலம் வருகிறான் என்பது எங்கள் தீவு மக்களுக்குப் பெருமையாக இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த இடம் என்றால் அது இந்தோனேஷியாதான். அங்கே வெளி உலகத்துக்குத் தெரியாத இடங்களில் எல்லாம் பயணம் செய்தேன். ஃப்ளோரஸ் தீவில் மக்களோடு மக்களாகத் தங்கியிருந்தேன். அவர்களின் அன்பை மறக்க முடியாது. கடந்த 40 ஆண்டுகளில் அங்கே தங்கியிருந்த முதல் ஐரோப்பியர் நான்தான். காபி குடிப்பதும் விதவிதமான மனிதர்களிடம் பேசுவதும்தான் என் பயணத்தின் சிறப்பம்சமாகக் கருதுகிறேன். இன்னும் மோட்டார் சைக்கிள் பயணம் முடியவில்லை. என் பாதம் படுவதற்காகச் சில நாடுகள் காத்திருக்கின்றன’’ என்கிறார் ஜார்ஜ் கில்.

மோட்டார் சைக்கிள் டைரி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நன்றி-மறக்காத-சிம்பன்ஸிகள்/article8709252.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: அதிசய மனிதர்!

 
masala_2889220f.jpg
 

கனடாவைச் சேர்ந்த டிம் டோசெட் பார்வையற்ற வானியலாளர். பகலில் சராசரி மனிதர்களைப் போல 10 சதவீதம் மட்டுமே அவரால் பார்க்க இயலும். ஆனால் இரவு நேரத்திலோ மனிதர்களால் பார்க்க இயலாத விண்மீன் கூட்டங்களையும் இவரால் பார்க்க முடியும். சிறு வயதில் பார்வையை அதிகரித்துக் கொள்வதற்காகக் கண்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது கண்களில் உள்ள லென்ஸுகள் அகற்றப்பட்டன. கண் பாவையை அகலமாக்கி, பார்வையை அதிகரிக்க வைத்தனர். சாதாரண மனிதர்களுக்கு வெளிச்சத்துக்கு ஏற்ப கண் பாவை தானாகவே சரி செய்துகொள்ளும்.

ஆனால் டிம்முக்கு எப்போதும் கண் பாவை விரிந்தே இருக்கும். பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமான வெளிச்சம் கண்களில் விழும். இதற்காக கறுப்பு கண்ணாடியை அணிந்துகொள்வார். அப்படியும் கண் கூசும், பார்வையும் சரியாகத் தெரியாது. இரவில் நேர் மாறாக வெறும் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களையும் இவரால் பார்க்க முடியும். “அறுவை சிகிச்சை முடிந்து நான் வெளியே வந்து ஆகாயத்தைப் பார்த்தேன். வானில் லட்சக்கணக்கான ஒளிப் புள்ளிகள் தெரிந்தன. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் நம் அண்டத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அவை என்று தெரிந்துகொண்டேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி அமண்டா, ஒரு தொலைநோக்கியை வாங்கிப் பரிசளித்தார். அதிலிருந்து வானியல் ஆராய்ச்சி என் பொழுதுபோக்காக மாறியது. தொலைநோக்கியில் எல்லோரும் நிலவைப் பார்த்தால், நான் அதில் இருக்கும் பள்ளங்களைப் பார்த்தேன். என்னுடைய சேமிப்பை வைத்து

‘டீப் ஸ்கை ஐ அப்சர்வேட்டரி’ ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் டிம் டோசெட். இவரது மனைவியும் பார்வையற்றவர்.

யாராலும் பார்க்க முடியாததைப் பார்க்கும் அதிசய மனிதர் டிம்!

ஜப்பானைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், முட்டையின் ஓடு இல்லாமல், ஒரு கோழிக் குஞ்சை உருவாக்கியிருக்கிறார்கள். முட்டையை உடைத்து, ஒளி புகக்கூடிய பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றினார்கள். பிறகு பிளாஸ்டிக் தாளைப் போட்டு மூடினார்கள். காற்று புகுவதற்காக மிகச் சிறிய துளைகள் போட்டனர். சில வேதிப் பொருட்களை சேர்த்தனர். பிறகு இன்குபேட்டரில் வைத்துவிட்டனர். மூன்றாவது நாளிலேயே முட்டையில் இதயம் உருவாக ஆரம்பித்தது. 5-வது நாளில் இதயத்தின் வடிவம் தெரிந்தது. அனைத்தையும் முழுமையாக வீடியோ எடுத்தனர். கருவில் இருந்து உறுப்புகள் உருவாவதைக் கண் முன்னே கண்டனர். 21-வது நாள் முழு கோழிக் குஞ்சு கால்களால் பிளாஸ்டிக் தாளை உதைத்துக்கொண்டு, எழுந்தது! விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டனர். பள்ளி மாணவர்கள் செய்வது இதுதான் முதல் முறை.

சுவாரசியமான முயற்சி!

பாஸ்டனைச் சேர்ந்த டான் புட்ரெல், ஐசாக் ஸ்டோனர் இருவரும் ஆண்டிஸ் மலை மீது பயணம் மேற்கொண்டனர். அப்போது 31 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ஒரு விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தனர். “கடந்த ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, விமான விபத்து குறித்த ஆராய்ச்சியை தொடங்கினோம். ஈஸ்டர்ன் விமானம் 980, விபத்து நடந்த பிறகு அதன் கறுப்புப் பெட்டி மீட்கப்படாதது தெரிய வந்தது. நானும் ஐசாக்கும் அந்தக் கறுப்புப் பெட்டியைத் தேடி ஆண்டிஸ் மலையில் பயணம் மேற்கொண்டோம். 15 மணி நேரம் பனிச் சிகரத்தில் ஏறி, 20 ஆயிரம் அடி உயரத்தை அடைந்தோம். பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. முயற்சியைக் கைவிட முடிவு செய்தபோது, அந்தக் கறுப்புப் பெட்டி கிடைத்தது. மோசமான வானிலையால் இந்தக் கறுப்புப் பெட்டியில் உள்ள தகவல்கள் பத்திரமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை ஏதாவது சிறிய தகவல் கிடைத்தாலும் எங்கள் பயணம் வெற்றியே” என்கிறார் டான் புட்ரெல்.

சாமானியர்கள் சாதனையாளர்களாகிவிட்டனர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அதிசய-மனிதர்/article8713707.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: காஃபியோடு எழுப்பும் அலாரம்!

 
 
masala_2890636f.jpg
 

அலாரம் அடித்தால் பெரும்பாலானவர்களுக்குப் பிடிப்ப தில்லை. அதே அலாரம் காபி நறுமணத்துடன் உங்களை எழுப்பினால், அந்த நாளே மகிழ்ச்சியாக மாறிவிடாதா என்ன! பாரிசியர் அலாரம் கடிகாரம் காபியுடன் உங்களை எழுப்பக் காத்திருக்கிறது. காபி, தேநீர் இரண்டையும் இதன் மூலம் பெற முடியும். காலை எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று அலாரம் வைத்துவிட வேண்டும்.

பெரிய குடுவையில் தண்ணீரை ஊற்ற வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் புனலில் காபியோ, தேயிலையோ போட்டுவிட வேண்டும். புனலுக்கு அடியில் கோப்பையை வைத்துவிட வேண்டும். அதிகாலை குறித்த நேரத்தில் கருவி இயங்க ஆரம்பிக்கும். குடுவையில் உள்ள நீர் கொதித்து, குழாய் வழியே புனலுக்குச் செல்லும்.

புனலில் உள்ள காபித்தூளில் இருந்து சாறு கோப்பைக்குள் இறங்கும். உடனே மணி அடிக்கும். எழுந்தவுடன் சர்க்கரை சேர்த்து, சூடாக காபி குடிக்க வேண்டியதுதான். இந்தக் கருவியைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மிகவும் எளிமையானது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆஹா! ரியல் பெட் காபி!

கடந்த ஓராண்டில் சீனாவில் உள்ள 11 இளைஞர்கள் தங்க ளுடைய காதலி காணாமல் போயிருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார்கள். 11 பேரும் தங்கள் காதலி கருவுற்ற பிறகே ஏராளமான பணத்துடன் காணாமல் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். ஹுயையாங் பகுதியில் வசிக்கும் வாங், ’’நானும் என் காதலியும் நெருங்கிப் பழகி வந்தோம். திடீரென்று ஒருநாள் குழந்தை உண்டாகிவிட்டது என்று கூறினாள். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். விமரிசையாகத் திருமணம் நடந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு அவளைக் காணவில்லை. வீட்டில் இருந்த பணம், நகைகள், திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருள்களையும் காணவில்லை. எனக்குப் பொருளோ, பணமோ முக்கியமில்லை. என் மனைவிதான் முக்கியம் என்று காவல்துறையில் புகார் அளித்தேன்.

இன்னொரு இளைஞரும் இப்படி ஒரு புகாரோடு அங்கே வந்தார். என்னைப் போலவே ஆன்லைன் மூலம் அறிமுகமாகி, நட்பு காதலாகி, குழந்தை உண்டாகி, திருமணம் முடிந்த பிறகு காணாமல் போயிருக்கிறார் அவர் மனைவி. நாங்கள் இருவரும் அந்தப் பெண்ணைத் தேடினோம். இறுதியில் அவள் இருப்பிடம் அறிந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது நுழைந்து பார்த்தோம். விக், பெண்கள் ஆடை எல்லாம் ஒரு பெட்டியில் இருந்தன. எங்களை ஏமாற்றியது ஒரு ஆண் என்பதை அறிந்தவுடன் எங்கள் கோபம் பல மடங்காகிவிட்டது. நீண்ட விசாரணையில் எங்கள் 11 பேரையும் இவன்தான் ஏமாற்றியிருக்கிறான் என்பது உறுதியானது. எங்களில் ஒரே ஒருவர்தான் தன்னை ஏமாற்றியது பெண் அல்ல என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்!’’ என்கிறார்.

ஓர் ஆணை, பெண் என்று நம்பும் அப்பாவிகளா நீங்கள்!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள உணவுத் தொழிற் சாலையில் மிகுந்த பசியோடு நுழைந்தது ஒரு சீகல் பறவை. அங்கே பெரிய வாளியில் டிக்கா மசாலா சேர்த்து ஊறவைக்கப்பட்டிருந்தது கோழி இறைச்சி. பசியிலிருந்த சீகல், இறைச்சியைப் பிடித்து வேகமாக இழுத்தது. ஆனால் இறைச்சி வாய்க்கு வருவதற்குள், தானே மசாலா வாளிக்குள் விழுந்துவிட்டது. இப்படியும் அப்படியும் புரண்டதில் வெள்ளை சீகல் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த சீகலாக உருமாறிவிட்டது. ஊழியர்கள் உடனே சீகலைத் தூக்கி, நன்றாகத் தண்ணீரால் சுத்தம் செய்தனர்.

ஆனாலும் இயல்பான சீகலின் வண்ணம் கிடைக்கவில்லை. உடனே விலங்குகள் மருத்துவமனைக்கு சீகலை அனுப்பி வைத்தனர். தற்போது முழுவதுமாகக் குணமடைந்துவிட்டது. ஆனாலும் மசாலாவின் வாசனை மட்டும் அதன் உடலில் இருந்து வந்துகொண்டே இருக்கிறது. ‘‘சுத்தம் செய்ததிலும் சிகிச்சை அளித்ததிலும் உடலில் உள்ள தண்ணீர்ப் புகாத பசை காணாமல் போய்விட்டது. அதனால் கடல் பறவையான சீகலை இன்னும் சில காலம் மருத்துவமனையிலேயே வைத்திருக்கப் போகிறோம்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

மசாலாவுக்குள் தானே விழுந்த அசட்டுப் பறவை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-காபியோடு-எழுப்பும்-அலாரம்/article8717819.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: சமூகம் இன்னும் மாற வேண்டும்

 
 
masala_2891832h.jpg
 

மெரிக்காவைச் சேர்ந்த ஹலீ சோரென்சன் தன்னுடைய 18-வது பிறந்தநாள் விழாவுக்கு, வகுப்புத் தோழர்கள் 20 பேரை அழைத்திருந்தார். பலூன்களாலும் வண்ணக் காகிதங்களாலும் இடத்தை அலங்கரித்திருந்தனர். விருந்தினர்களுக்கு உணவும் தயாரானது. ஸ்பெஷல் கேக் ஒன்றும் வந்து சேர்ந்தது. ஹலீ நண்பர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் ஒருவர் கூட வரவே இல்லை. தனியாக கேக் முன்னால் அமர்ந்து, கண்ணீர் விட்டார். இந்தக் காட்சி ஹலீயின் அம்மாவை உலுக்கிவிட்டது. ’’என் மகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவள். அவளுக்குப் 18 வயது ஆனாலும் 6 வயது குழந்தையின் மனநிலைதான் இருக்கிறது. பிறந்தநாள் விழாவுக்குத் தன் நண்பர்கள் ஒருவர்கூட வராதது அவளை மிகவும் புண்படுத்திவிட்டது. இன்னொரு முறை ஹலீக்கு இந்தக் கஷ்டம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு யாரையும் அழைக்கப் போவதில்லை’’ என்றார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உறவினர் ரெபேகா லின், ஹலீ தனியாக கேக் முன்னால் அமர்ந்திருந்த படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். ’ஹலீ உள்ளும் புறமும் அழகான, புத்திசாலியான பெண். அன்பானவள். ஓட்டப்பந்தய வீராங்கனை. சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றவள். நன்றாகப் படிப்பவள். இப்படி ஒரு பெண் என் உறவினர் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். குறைபாடு அவளிடம் இல்லை, இந்தச் சமூகத்திடம்தான் இருக்கிறது’ என்று எழுதியிருந்தார். 48 மணி நேரங்களில் 1,20,000 தடவை இந்தப் படம் பகிரப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் குவிந்துவிட்டன! ‘’இந்த ஆண்டு ஹலீயின் மெயில் வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது! வாழ்த்து அட்டைகளைப் பிரித்தபடியே இருக்கிறாள். பொம்மை, நகை, துணி என்று ஏராளமான பரிசுப் பொருட்களும் குவிந்துவிட்டன! இந்த உலகம் அற்புதமானது!’’ என்கிறார் ஹலீயின் அம்மா.

சமூகம் இன்னும் மாற வேண்டும்…

பாஸ்டனைச் சேர்ந்த கெய்த் ஃப்ரான்கெல், விளையாட்டுக்குக்கூடப் பொய் சொல்லாமல் வாழ்ந்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு வரை புராடக் டிசைன் எக்ஸிக்யூட்டிவ் வேலை செய்து வந்தார். தினமும் பொய் சொல்லாமல் இந்த வேலையை அவரால் செய்யவே முடியாது. “தொழில் முறையில் நான் தேர்ந்த பொய் சொல்பவனாக மாறினேன். அதற்கு ஏற்ப என் நிறுவனத்துக்கும் நல்ல லாபம் கிடைத்தது. ஒருகட்டத்தில் பொய் சொல்வதை ஒரு கலையாக மாற்றிவிட்டேன். வீடு, ஆபிஸ் எங்கும் பொய் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி, நான் புத்திசாலியாக நடந்துகொண்டேன். திடீரென்று ஒருநாள் இந்தப் பொய் சொல்லும் வாழ்க்கை அலுப்பைத் தந்தது. நான் விற்கும் பொருளாலோ, என் திறமையாலோ விற்பனை அதிகரிக்கவில்லை. என்னுடைய பொய் மூலமே இது சாத்தியமாகியிருக்கிறது என்பதை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இனி இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாகச் சொல்லி, ஏமாற்ற மாட்டேன் என்று முடிவெடுத்தேன். கடந்த 6 மாதங்களாகப் பொய் சொல்லாமல் வாழ்ந்து வருகிறேன். பொய் சொல்வதைவிட உண்மையாக இருப்பது மிகவும் கஷ்டமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. என் தூரத்து உறவினர் எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். உன்னை யார் என்று எனக்குத் தெரியவில்லை என்று உண்மையைச் சொன்னேன். உடனே அவர் முகம் மாறிவிட்டது. தெரியாவிட்டாலும் கூட தெரிந்த மாதிரி காட்டிக்கக்கூடாதா, அவர் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்று எல்லோரும் சொன்னார்கள். பொய் சொன்னபோது உலகமும் குடும்பமும் என்னைக் கொண்டாடியது. ஆனால் உண்மை சொல்லும்போது எல்லோரும் சங்கடமும் மனக்கஷ்டமும் அடைவதாகச் சொல்கிறார்கள்’’ என்கிறார் கெய்த். பொய் சொல்லாத 6 மாதங்களில், உண்மையாக இருப்பது எப்படி என்பதையும் இடையூறுகளை எப்படிச் சமாளித்தார் என்பது குறித்தும் எழுதி வருகிறார். உரையாற்றி வருகிறார். நேர்மையாக இருப்பதுதான் எளிமையானது. இயற்கையானது என்கிறார் கெய்த்.

உண்மை அழகானது; உன்னதமானது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சமூகம்-இன்னும்-மாற-வேண்டும்/article8720770.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: இரும்பு மீன் சமையல்

 
 
masala_2414184f.jpg
 

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் சார்லஸ். 6 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய மக்களை ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த ஏழை மக்களால் இரும்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட இயலாது. சத்தான மாத்திரைகளையும் வாங்க முடியாது. இரும்புப் பாத்திரங்களில் சமைப்பதும் கூட முடியாத விஷயமாக இருந்தது.

கிறிஸ்டோபர் யோசித்து, இரும்புக் குண்டுகளை உருவாக்கினார். சமைக்கும்போது, தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது இந்த இரும்புக் குண்டைப் போட்டு விட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துவிட வேண்டும். தேவையான இரும்புச் சத்து உணவில் சேர்ந்துவிடும் என்றார். ஓர் இரும்புக் குண்டைப் போட்டுச் சமையல் செய்வதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரும்புக் குண்டை தாமரை வடிவமாக மாற்றிச் சமைக்கச் சொன்னார். அதையும் மக்கள் ஏற்கவில்லை. இறுதியில் மக்களின் கலாசாரத்தைப் படித்தார். மீன் அவர்களின் அதிர்ஷ்டச் சின்னம். அதனால் இரும்பால் ஆன மீனைச் செய்து கொடுத்தார்.

மக்கள் மகிழ்ச்சியோடு சமையலில் இரும்பு மீனைச் சேர்த்துக்கொண்டனர். இரும்பு மீனால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களை ஓராண்டுக்குப் பிறகு சோதனை செய்து பார்த்ததில் பல நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தச்சோகையில் இருந்து மீண்டது தெரியவந்தது. மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் இரும்பு மீன்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

ரத்தச்சோகை மட்டுமில்லை, காய்ச்சல், தலைவலி கூட இப்பொழுது வருவதில்லை என்கிறார்கள் பெண்கள். கம்போடியாவில் வெற்றி பெற்ற இரும்பு மீன் திட்டத்தை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த இருக்கிறார்கள். “எவ்வளவுதான் பிரமாதமான சிகிச்சைகள் இருந்தாலும் மக்கள் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அவற்றால் பலன் ஒன்றும் இல்லை. எந்த விஷயமும் எல்லா மக்களுக்கும் பயன் அளிக்கும் விதத்தில் கொண்டுவர வேண்டும்’’ என்கிறார் கிறிஸ்டோபர்.

அடடா! உலக நாடுகள் அனைத்துமே கிறிஸ்டோபர் யோசனையை அமல்படுத்தலாமே…

சீனாவின் சிச்சுவான் மருத்துவமனைக்குக் கடுமையான வயிற்று வலியுடன் வந்தார் லியு. ஆரம்பக்கட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவமனையில் தங்கச் சொன்னார்கள். 6 நாட்கள் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே என்று ஏராளமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குள் 41 ஆயிரம் ரூபாய் லியுக்குச் செலவாகிவிட்டது. ஆறாவது நாள் அவரிடம் மருத்துவ ரிப்போர்ட் அளிக்கப்பட்டு, வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த லியு, அதிர்ந்து போனார். `3 மாத கர்ப்பம்’ என்று ரிப்போர்ட் எழுதப்பட்டு மருத்துவர், மருத்துவக் குழு தலைவர், சூப்பர்வைஸர் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர். லியு புகார் கொடுத்தார். மருத்துவமனை மன்னிப்புக் கோரியிருக்கிறது. லியுவைப் பரிசோதித்த மருத்துவரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறது. லியுவுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கியிருக்கிறது. மருத்துவமனையின் தரத்தைப் பரிசோதிக்க அரசாங்கம் ஓர் ஆராய்ச்சிக் குழுவை அனுப்பி வைத்திருக்கிறது.

அடக்கொடுமையே…

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில் லிகோலாண்ட் என்ற தங்கும் விடுதி திறக்கப்பட்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவருக்கு ஒரு கனவு இல்லம் இருக்கும். அந்தக் கனவு இல்லத்தை உங்கள் விருப்பப்படி நீங்களே இந்த விடுதியில் உருவாக்கிக்கொள்ள முடியும். பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் விடுதியில் ஆங்காங்கே பல வண்ண பிளாஸ்டிக் ப்ளாக்குகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

தங்கும் அறை, குளியலறை, உணவறை, நீச்சல் குளம் என்று எங்கு வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல அலங்காரம் செய்துகொள்ளலாம். விடுதியை விட்டுக் கிளம்பும்போது, அவற்றை எல்லாம் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றுவிடவேண்டும். அடுத்து யாராவது வந்து அவர்கள் கனவு இல்லைத்தை உருவாக்கிக்கொள்வார்கள். இங்கே வரும் பெரியவர்களும் சிறியவர்களும் அத்தனை மகிழ்ச்சியோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

குழந்தைகள் விளையாடும் பில்டிங் செட்டைக் கொஞ்சம் பெரிய அளவில் வச்சிட்டாங்க!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இரும்பு-மீன்-சமையல்/article7234563.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஜஸ்டினுக்கு ஒரு சல்யூட்!

 
 
masala_2894036f.jpg
 

அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயது ஜஸ்டின் சலாஸ் தொழில்முறை புகைப்படக் கலைஞராகவும் மலையேறுபவராகவும் இருக்கிறார். இவருக்குப் பார்வை கிடையாது. 5 வயதில் இருந்தே பார்வை குறைய ஆரம்பித்துவிட்டது. 14 வயதில் ஒருநாள் காலை விழிக்கும்போது பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது.

எத்தனையோ மருத்துவம் பார்த்தும் பார்வை கிடைக்கவில்லை, பறிபோனதற்கான காரணமும் கண்டறியமுடியவில்லை. ஜஸ்டின் மிகவும் மனம் உடைந்து போனார். சில நாட்கள் யாரிடமும் பேச மாட்டார். கம்ப்யூட்டர் திரையில் படங்களைப் பெரிதாக வைத்துக்கொண்டு ஏதாவது உருவம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பார். பெரிய எழுத்துகளும் படங்களும் மிக மங்கலாகத் தெரிந்தன.

’’ஒருநாள் என் நண்பன் ஜான்சன், பைக்கில் வெளியே அழைத்துச் சென்றான். அங்கே இன்னொரு நண்பனைச் சந்தித்தேன். அவன் என்னை மலையேறுவதற்கு அழைத்தான். பார்வை இல்லாமல் நான் எப்படி மலையேற முடியும் என்று கேட்டேன். மலை ஏறுவதற்குப் பார்வை அவசியம் இல்லை. தொட்டு உணரும் திறன் இருந்தால் போதும் என்றான். நானும் முயன்று பார்க்க நினைத்தேன். நான் தவறி விழுந்தால், அடிபடாமல் இருப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். மலை ஏறுபவர்கள் எப்போதும் கீழே பார்க்காமல் மேலே ஏறிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். எனக்கு அந்தப் பிரச்சினை இல்லை. என் கைகளும் கால் பாதங்களும்தான் எனக்குக் கண்கள். அவற்றின் மூலம் உணர்ந்துகொண்டு வேகமாக ஏறிச் சென்றேன். பல தடவை என் முயற்சியில் தோல்வியடைந்தேன்.

ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. வெகு விரைவில் மலையேற்றம் என் வசப்பட்டது. 50 அடி உயரத்துக்கு ஏறி, வெற்றிகரமாக என் கணக்கைத் தொடங்கினேன். அதற்குப் பிறகு நண்பர்களின் ஒத்துழைப்பில் பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தேன். போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இன்று மலையேறுபவர்களில் ஒருவனாக அறியப்படுகிறேன். என்னை யாரும் பார்வையற்றவன் என்று கருதுவதே இல்லை. நான் நடக்கும்போதோ, மலையேறும்போதோ பிரச்சினை வந்தால்தான் குரல் மூலம் எனக்கு எச்சரிக்கை செய்வார்கள். மற்றபடி நான் நானாக இருக்க அனுமதிக்கிறார்கள்.

சாகசப் பயணம் செய்யக்கூடிய என்னால் புகைப்படங்கள் எடுக்கவும் முடியும் என்று நம்பிக்கை கொடுத்தனர். என் புலன்களைப் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்து வருகிறேன். சூரிய ஒளி, மனிதர்களின் குரல், காற்று போன்ற நுட்பமான விஷயங்களைக் கவனித்துப் புகைப்படம் எடுக்கிறேன். என் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் பார்வையற்ற ஒருவர் எடுத்த புகைப்படம் என்று நம்பவே மாட்டார்கள். 27 அங்குல கம்ப்யூட்டர் திரையில் தெளிவற்ற பிம்பமாக நான் எடுக்கும் படங்களைப் பார்த்துவிடுவேன்’’ என்கிறார் ஜஸ்டின் சலாஸ்!

மலையேறும் வீரராகவும் புகைப்படக் கலைஞராகவும் அசத்தும் ஜஸ்டினுக்கு சல்யூட்!

துணிகளைத் துவைத்து, இஸ்திரி போடுவது கொஞ்சம் சிரமமான வேலை. துணிகளை இஸ்திரி போட்டு, அழகாக மடித்துக் கொடுப்பதற்கு ’ஃபோல்டி மேட்’ என்ற கருவி உருவாக்கப்பட்டிருக்கிறது. 32 அங்குல உயரமும் 28 அங்குல அகலமும் கொண்ட இந்தக் கருவியை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். கருவியின் வெளிப்பக்கம் துணிகளை வரிசையாக மாட்டி வைக்க வேண்டும். பட்டனை அழுத்தினால் ஒவ்வொரு துணியையும் வரிசையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். உட்புறத்தில் ரோபோ கைகள் இருக்கின்றன. துணியை வைத்து, சூடான நீராவியைச் செலுத்தி, அழுத்துகின்றன. இஸ்திரி போட்ட உடன், ரோபோ கைகள் வேகமாகத் துணியை மடித்து கீழே அனுப்பி விடுகின்றன. ஒரு துணியை இஸ்திரி போட்டு, மடிக்க ஒரு நிமிடத்துக்குக் குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்கிறது. ஒரு தடவைக்கு 15 முதல் 20 துணிகள் வரை அடுக்கலாம். இதுபோன்ற ஒரு கருவி 2014-ம் ஆண்டு முதல் சந்தையில் இருந்தாலும், தற்போதுதான் வீட்டில் எளிதாகப் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஃபோல்டி மேட் அடுத்த ஆண்டு, 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.

விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நல்ல கருவிதான்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஜஸ்டினுக்கு-ஒரு-சல்யூட்/article8727705.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: டூ இன் ஒன் கை!

 
masala_2895207f.jpg
 

பிரான்ஸைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஜே.சி. ஷெய்டன் டெனெட். இவரது வலது கையை 22 ஆண்டுகளுக்கு முன்பு இழந்துவிட்டார். பிறகு ஒற்றைக் கையிலேயே எல்லா வேலை களையும் பழகிக்கொண்டார். டாட்டூவையும் இடது கை மூலமே வரைந்து வந்தார். சமீபத்தில் செயற்கைக் கையுடன் டாட்டூ கருவியையும் இணைத்துக்கொண்டார். ‘’உலகிலேயே செயற் கைக் கையுடன் டாட்டூ கருவியையும் இணைத்துப் பயன்படுத்தும் முதல் மனிதன் நான்தான்! இனி என்னால் இரண்டு கைகளையும் சமமாகப் பயன்படுத்த முடியும்! ஜீன் லூயி கோன்ஸாலெஸ் என்ற பொறியாளர் அற்புதமாகச் செயற்கைக் கைகளை உருவாக்கி வருகிறார். அவரிடம் என்னுடைய ஆலோசனையைக் கூறினேன்.

இருவரும் சேர்ந்து டூ இன் ஒன் கருவியை உரு வாக்க ஆரம்பித்தோம். வெற்றிகரமாக இந்தக் கருவி உருவாகி விட்டது. செயற்கைக் கை டாட்டூ கருவியைப் பயன்படுத்திப் பார்க்க ஆர்வமாக இருந்தது. தன்னுடைய கையைக் கொடுத்து உதவினார் ஜீன். முதல் சில முயற்சிகள் அத்தனை எளிதாக இல்லை. பிறகு பயிற்சியில் இயல்பான கையைப் போலவே டாட்டூவை வரைய ஆரம்பித்துவிட்டது. டாட்டூ கலைஞர்களுக்கான போட்டியில் பங்கேற்றேன். என் செயற்கைக் கை டாட்டூ கருவி யைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். என் கை இருந்திருந்தால் கூட இத்தனை வேலைகளை என்னால் செய்ய முடிந்திருக்காது!’’ என்கிறார் ஷெய்டன் டெனட்.

டூ இன் ஒன் கை!

கிரேக்க நாட்டில் உள்ள ரிஜானா கிராமத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஈஸ்டர் ஞாயிறுக்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை யைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இதை தூய தாமஸ் ஞாயிறு என்று அழைக்கிறார்கள். 1914 முதல் 1923-ம் ஆண்டு வரை நடைபெற்ற போர்களில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவைப் போற் றும் விதமாக இந்தத் தூய தாமஸ் ஞாயிற்றுக் கிழமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ’’நாங்கள் மிகச் சிறிய குழுக் களாக மாறிவிட்டோம். ஆனாலும் நாங்கள் மிகவும் உயர்வாக மதிப்பது எங்கள் முன்னோர்களைத்தான். அவர்களின் நினைவைக் கொண்டாடும் விதமாக இந்த பிக்னிக்கை ஏற்பாடு செய்து வருகிறோம்.

இறந்தவர்களுக்காக, கல்லறைகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அழுகையோ, துக்கமோ இங்கே கிடையாது. வீட்டில் இருந்து பிக்னிக் செல்வது போல மேஜை, நாற்காலிகள், விதவிதமான உணவுகள், பழங்கள், கேக், குளிர்பானங்கள், பூக்கள், மெழுகுவர்த்திகள் போன்ற வற்றை எடுத்துச் செல்வோம். கல்லறைகளை மலர்களால் அலங்கரிப்போம். மெழுகுவர்த்திகளை ஏற்றி, முன்னோர்களை நினைத்துப் பிரார்த்தனை செய்வோம். குழந்தை கள் விளையாடுவார்கள். பெரியவர்கள் ஜாலியாக அரட்டையடிப் பார்கள். பிறகு அனைவரும் உணவுகளைச் சாப்பிடு வோம். இந்த விருந்தில் இறந்த முன்னோர்கள் எங்களுடன் அமர்ந்து சாப்பிடுவதாக நம்புகிறோம்’’ என்கிறார் அலெக்சாண்ட்ரோஸ்.

முன்னோர்களுக்கு மரியாதை!

அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் கேவன்னா பாலே நடனத்தில் வித்தியாசமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். பொதுவாக பாலே நடனமாடுபவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் எரிக் மிகவும் பருமனானவர். அவரால் நிச்சயம் நடனமாட முடியாது என்றே எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் சிறிதும் சிரமமின்றி நேர்த்தியாக நடனமாடுகிறார் எரிக். ‘’உருவமோ, எடையோ உங்கள் நடனத் திறமையைத் தீர்மானிப்பதில்லை என்ற நோக்கில்தான் நான் இந்த நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். இன்று உடல் பருமன் உலகம் முழுவதும் பெரிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பருமனானவர்கள் தங்கள் உடலை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அந்த எண்ணத்தை மாற்றுவதுதான் என் நோக்கம். நான் சின்ன வயதில் இருந்தே பருமனாக இருந்து வருகிறேன். நடனப் பள்ளியில் சேர்ந்து முறையாக நடனம் கற்றுக்கொண்டேன். என் நடனத்தில் வழக்கமான விஷயங்கள் இருப்பதில்லை. இந்த உடலை வைத்துக்கொண்டு இதெல்லாம் செய்ய முடியுமா என்று ஆச்சரியம் ஏற்படும் வகையில் நடனங்களை அமைத்துக்கொள்வதுதான் என் சிறப்பு. என் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் தங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டு, என்னிடம் நடனம் கற்றுக்கொள்ள வருகிறார்கள். உழைப்பு ஒன்று மட்டும் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும் என்பதைத்தான் எல்லோருக்கும் சொல்லி வருகிறேன். நடனத்தோடு தன்னம்பிக்கையையும் விதைத்து வருகிறேன்’’ என்கிறார் எரிக் கேவன்னா.

தன்னம்பிக்கை நடன மனிதர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-டூ-இன்-ஒன்-கை/article8731575.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: உணவு ஓவியம்!

 
masala_2896499f.jpg
 

செய்ஜியின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை எடுத்துச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றும். அந்த அளவுக்கு உணவுப் பொருட்களைத் தத்ரூபமாக மரத்தில் செதுக்கி, வண்ணம் தீட்டுகிறார் ஜப்பானைச் சேர்ந்த செய்ஜி கவசாகி. ஜப்பானிய தொலைக்காட்சிகள், இணையதளங்களில் அதிகம் இடம்பெறும் மனிதர்களில் செய்ஜி மிக முக்கியமானவர். ஜப்பான் முழுவதும் இவரது கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது சர்வதேச அளவில் தனது கவனத்தைத் திருப்பி இருக்கிறார் செய்ஜி. காய்ந்த மீன், சமைக்கப்படாத இறால், ரொட்டி, பன், சிவப்பு மிளகாய், பாதி சுவைக்கப்பட்ட சாக்லேட் என்று எந்த உணவுப் பொருளும் நிஜம் போலவே தோற்றம் அளிக்கின்றன. ஓர் உணவுப் பொருளை தயாரிக்க 2 முதல் 3 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார் செய்ஜி. “மரத்தை வைத்து, கைகளாலேயே சிற்பங்களை செதுக்குகிறேன். அதனால்தான் நேரம் அதிகமாகிறது. மரத்தால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மீது பொருத்தமான வண்ணங்களைத் தீட்டுகிறேன். காய வைத்து எடுத்தால், இது போலி என்று சொல்லவே முடியாது. உண்மை தெரியாதவர்கள் வாயில் வைத்துக் கடித்துப் பார்க்கிறார்கள். உணவுப் பொருட்கள் தவிர்த்து, நாய், டிராஃபிக் லைட் போன்றவற்றையும் செய்திருக்கிறேன். ஆனால் உணவுப் பொருட்கள்தான் சூப்பர் ஹிட்” என்கிறார் செய்ஜி.

ஆஹா! அசத்திட்டீங்க செய்ஜி!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் வசிக்கிறார் 54 வயது மைக்கேல் வட்ரெயுல். கடந்த 8 ஆண்டுகளாக வுர்செஸ்டர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்து வருகிறார். தரையை சுத்தம் செய்தல், கரும்பலகையை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளைச் செய்து வந்த மைக்கேல், கடந்த மாதம் மெக்கானிகல் இன்ஜினீயரிங் டிகிரியைப் பெற்றுவிட்டார். “நான் சின்ன வயதில் ஏரோநாட்டிகல் இன்ஜினீயராக விரும்பினேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பிறகு சொந்தமாக தொழில் செய்து வந்தேன். ஒருகட்டத்தில் தொழில் நலிந்துவிட்டது. என் மனைவியின் வருமானத்தில் ஓரளவு நிலைமையை சமாளித்து வந்தோம். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை.

இறுதியாக இந்த பாலிடெக்னிக்கில் வேலை கிடைத்தது. மிக சொற்பமான சம்பளம்தான். ஆனால் இலவசமாக சில சலுகைகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று படிப்பு. மாலை 3 முதல் இரவு 11 மணி வரை கல்லூரியை சுத்தம் செய்யும் பணிகளைச் செய்தேன். இரவில் என் குழந்தைகள் போல இருக்கும் மாணவர்களிடம் பாடம் கற்றுக்கொண்டேன். என் மனைவி பகலில் வேலைக்குச் சென்றுவிடுவார். நான் இரவு முழுவதும் வேலை செய்வேன். இருவரும் என்றாவது ஒருநாள்தான் சந்தித்துக்கொள்வோம். இப்படி உழைத்ததால் எனக்குக் கோபம் அதிகம் வரும்.

ஆனாலும் படிப்பை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் உழைப்புக்கான பலனை அனுபவித்துவிட்டேன். வாழ்க்கையில் எதை இழந்தாலும் உங்கள் லட்சியத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள். என்றாவது ஒருநாள் அது நிச்சயம் நிறைவேறும். இந்த வேலையில் இருந்துகொண்டே என் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடப் போகிறேன். அதற்கு முன் பல இடங்களில் இருந்தும் தன்னம்பிக்கை பேச்சாளராக வரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். என் வாழ்க்கை பிறருக்கு உத்வேகமாக இருந்தால், அதை விட வேறு என்ன சிறப்பு இருக்க முடியும்” என்கிறார் மைக்கேல்.

54 வயதில் பட்டம் பெற்ற மைக்கேலுக்கு வாழ்த்துகள்!

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் ‘ஒயின்க்ரீம்’ என்ற பெயரில் புதிய ஐஸ்க்ரீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான இந்த ஒயின்க்ரீம், அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கோர்ஹம் குடும்பத்தினர் ஒயினையும் ஐஸ்க்ரீமையும் சேர்த்து, ஒயின்க்ரீமை தயாரித்துப் பார்த்தனர். புதிய சுவையில் எல்லோரும் விரும்பக்கூடியதாக இருந்தது. மூன்று ஆண்டுகளில் அதில் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்து, வணிக ரீதியில் விற்பனைக்கும் வைத்துவிட்டனர். ஒரு கண்ணாடி டம்ளர் ஒயினில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு மட்டுமே இந்த ஒயின்க்ரீமிலும் இருப்பதால் உடல்நலத்துக்குக் கேடு இல்லை என்கிறார்கள்.

ஐஸ்க்ரீமைக்கூட ஆல்கஹால் இல்லாமல் சாப்பிடக்கூடாதா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உணவு-ஓவியம்/article8736367.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஃபிட்னஸ் பஸ்!

 
 
masala_2898059f.jpg
 

லண்டனில் வசிப்பவர்கள் நேரமே இல்லாமல் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஜிம்முக்குச் செல்வதற்கோ, உடற்பயிற்சி செய்வதற்கோ நேரமே இல்லை. இவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறைகொண்ட பிரிட்டன் பிட்னஸ் நிறுவனமான 1ரிபெல், பிட்னஸ் பேருந்தை அறிமுகம் செய்திருக்கிறது. ரிபெல் 2 ரிபெல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள் லண்டன் வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பேருந்துகளுக்குள் இருக்கைகள் கிடையாது. அதற்குப் பதிலாக உடற்பயிற்சி சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பயணம் செய்யும்போது உட்கார்ந்து இருக்காமல், இந்த சாதனங்களில் அமர்ந்து உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்.

“உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்பதைவிட, சோம்பேறித்தனம்தான் முக்கியமான காரணம். குறைந்தது அரை மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது பயணத்தை சுவாரசியமாக்குகிறது. எங்களிடம் பதிவு செய்துகொள்வதற்காக 8,121 பேர் காத்திருக்கிறார்கள். இந்த பிட்னஸ் பேருந்தில் சீட் பெல்ட், ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு விஷயங்களைக் கொண்டு வர இருக்கிறோம். 45 நிமிடப் பயணத்துக்கு ஒருவர் 1,100 முதல் 1,400 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்’’ என்கிறார் உரிமையாளர் ஜேம்ஸ் பால்போர்.

நேரத்தை மிச்சப்படுத்தும் பிட்னஸ் பஸ்!

சீனாவின் ஸியாங்ஃபெங் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா நிறுவனம் ஒன்று குரங்குகளைக் கொண்டு வந்தது. அருகில் இருக்கும் மலையில் குரங்குகள் வசித்து வந்தன. சுற்றுலாப் பயணிகளும் கிராமத்தை நோக்கிப் படையெடுத்தனர். வருமானம் பெருகியதால் குரங்குகளுக்கு நல்ல உணவுகளை அளித்து, பராமரித்துக்கொண்டது நிறுவனம். சில ஆண்டுகளில் சுற்றுலாத் தொழில் நலிவடைந்தது. குரங்குகளின் எண்ணிக்கையோ பல மடங்காகப் பெருகிவிட்டது. நிறுவனத்தால் குரங்குகளைப் பராமரிக்க இயலவில்லை. நிறுவனத்தை மூடிவிட்டனர். குரங்குகளுக்கு உணவளிக்க யாரும் இல்லை. யாராவது செல்வந்தர்கள் அந்த வழியே சென்றால், குரங்குகளுக்கு உணவு அளிக்கிறார்கள். ஒரு சில குரங்குகள் என்றால் கிராம மக்களே உணவளித்து விடுவார்கள். 600 குரங்குகளுக்கு உணவளிக்க அவர்களால் முடியவில்லை. பசி தாங்காத குரங்குகள், தாங்களாகவே கிராமத்துக்குள் நுழைந்து, கிடைத்ததை எடுத்துச் சென்று விடுகின்றன. “கடந்த

2 ஆண்டுகளாகக் குரங்குகளால் நாங்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி வருகிறோம். எந்த நேரமும் வீட்டைப் பூட்டிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு குரங்குகள் என்றால் விரட்ட முடியும். கூட்டமாக வரும்போது ஒன்றும் செய்ய இயலாது. உணவுக்காக குரங்குகள் வன்முறையில் இறங்கிவிடுகின்றன’’ என்கிறார் யு சான். விலங்குகள் ஆர்வலர்கள் 300 குரங்குகளைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். இன்னும் 300 குரங்குகள் கிராமத்தைச் சுற்றி வருகின்றன.

ஒரு நிறுவனத்தின் பணத்தாசை, மனிதர்களையும் குரங்குகளையும் துன்பத்தில் தள்ளிவிட்டது…

இங்கிலாந்தைச் சேர்ந்த கேக் கலைஞர் ஹன்னா எட்வர்ட்ஸ், விலங்குகள் நல ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார். புலி, நாய், பெங்குவின், பூனை, முதலை என்று நிஜமான உயிரினங்களைப் போலவே கேக்குகளை உருவாக்குவதில் நிபுணர் ஹன்னா. விலங்குகள் கேக்குகளை வெட்டும்போது குழந்தைகளிடம் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். விலங்குகள் மீது அன்பு உருவாகாது என்பது எதிர்ப்பவர்களின் வாதம். ‘’மனிதர்களையே கேக்குகளாக உருவாக்கி, வெட்டும் காலம் இது.

எந்தக் குழந்தையும் இதைப் பார்த்து விலங்குகளுக்குத் தீங்கு இழைக்கப்போவதில்லை. பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை என் கேக்குகளை விரும்புகின்றனர். ஒவ்வொரு கேக்கையும் செய்து முடிக்க 80 மணி நேரங்கள் ஆகின்றன. 14 ஆயிரம் ரூபாய் முதல் 2.4 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறேன். என்னிடம் கேக் வேண்டும் என்றால் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். கேக் விலங்குகளுக்குக் குரல் கொடுப்பதைவிட, நிஜ விலங்குகளுக்காகக் குரல் கொடுத்தால் உண்மையிலேயே நல்ல விஷயம்’’ என்கிறார் ஹன்னா.

ஹன்னா சொல்வதிலும் நியாயமிருக்கிறது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிட்னஸ்-பஸ்/article8740984.ece?ref=relatedNews

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் வண்ண ஏரி!

 
 
masala_2899356f.jpg
 

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் கனடா எல்லைக்கு அருகில் அமைந்திருக்கிறது க்ளேசியர் நேஷனல் பார்க். இந்தப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருக்கின்றன. இதில் 200 ஏரிகள் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டவை. 12 ஏரிகள் 1000 ஏக்கர் பரப்பளவு உடையவை. மலைக்கு அருகில் இருக்கும் ஏரிகளில் உள்ள தண்ணீர் தெளிவாக இருக்கின்றன. இங்கே மிகக் குறைவான வெப்பநிலை நிலவுவதால், மிதவை உயிரினங்களின் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது. 30 அடி ஆழத்திலும் தரையைத் தெளிவாகப் பார்க்க முடியும். இவற்றில் சில ஏரிகளிலும் கரைகளிலும் விதவிதமான வண்ணக் கற்கள் கம்பளம் போல பரவியிருக்கின்றன.

மெக்டொனால்ட் ஏரியில் அடர் சிவப்பு, வெளிர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், ஊதா வண்ணங்களில் அழகான பளிங்குக் கற்கள் கண்களைக் கவர்கின்றன. க்ளேசியர் நேஷனல் பார்க்கின் மிகப் பெரிய ஏரி மெக்டொனால்ட். 6,823 ஏக்கர் பரப்பளவுடையது. 15 கி.மீ. தூரத்துக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருக்கிறது. ஏரியின் ஆழம் 141 மீட்டர். ஒருகாலத்தில் க்ளேசியர் பார்க் இருக்கும் பகுதியில் உள்ள மலை பல வண்ணங்களில் இருந்திருக்கிறது. காலப் போக்கில் மலைப் பாறைகள் உடைந்து, ஆற்றில் அடித்து வரப்பட்டு, ஏரிகளில் தேங்கிவிட்டன. சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய இடமாக இந்த ஏரி இருக்கிறது.

உலகின் அழகான வண்ண ஏரி!

நியுசிலாந்தைச் சேர்ந்த முஸ்தஃபா ஃபரோக் உணவு விஞ்ஞானி. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மாட்டு இறைச்சியில் சாக்லேட்டுகளை உருவாக்கியிருக்கிறார். புரோட்டீன் சத்து அதிகமாக இருக்கும் இந்த சாக்லேட், விற்பனையில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ’’சாக்லேட் உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடக்கூடிய ஒரு பொருள். இதில் இறைச்சியைக் கலந்தால் அதிக அளவில் புரோட்டீன் சத்தைப் பெற முடியும் என்று யோசித்தேன். சாக்லேட் கலைஞர் டேவன்போர்ட்டிடம் என் யோசனையைத் தெரிவித்தேன். இருவரும் சேர்ந்து தயாரிப்பில் இறங்கினோம்.

பல பரிசோதனைகளுக்குப் பிறகு மாட்டிறைச்சி சாக்லேட் உருவானது. மாட்டிறைச்சியில் செய்யப்பட்ட சாக்லேட் என்று சொன்னபோது, பலரும் முகத்தைச் சுளித்தனர். அவர்களுக்கு நம்பிக்கை அளித்து சாப்பிட வைத்தோம். இதுவரை சுவைக்காத அற்புதமான சாக்லேட் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். எங்கள் சாக்லேட்டைச் சுவைக்காதவர்கள் மட்டுமே விமர்சனம் செய்கிறார்கள். பரிசோதனை முயற்சியாகத்தான் மாட்டிறைச்சி சாக்லேட்டை உருவாக்கினோம். கிடைத்த வரவேற்பைப் பார்த்த பிறகு, வணிக ரீதியில் சாக்லேட் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஒரு கிலோ மாட்டிறைச்சி 1,140 ரூபாய். ஒரு சாக்லேட் துண்டின் விலை 168 ரூபாய். அடுத்து ஆடு இறைச்சியில் சாக்லேட்டுகளை உருவாக்கும் திட்டம் இருக்கிறது’’ என்கிறார் முஸ்தஃபா.

விலையை கேட்டால் மலைப்பாக இருக்கிறது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-வண்ண-ஏரி/article8744606.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: பாலினச் சமத்துவக் கழிப்பறையை வரவேற்கலாம்!

 
ulagam_2900470f.jpg
 

மெரிக்காவைச் சேர்ந்த செல்சி ஹில்லுக்கு 3 வயதிலிருந்தே நடனம் மீது ஆர்வம். 5 வயது முதல் நடனத்தை முறையாகக் கற்றுக்கொண்டார். பள்ளிகளிலும் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளையும் குவித்து வந்தார். ஒரு குடிகார கார் ஓட்டுநரால், 17 வயதில் கோர விபத்தைச் சந்தித்தார் செல்சி. அவரது உடலின் கீழ்ப் பகுதி முடங்கிப் போனது. இனி அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ‘’அந்தச் செய்தி என் பெற்றோரைக் கலங்க வைத்தது. உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்பதால் நான் சிறிதும் கவலைப்படவில்லை. நடக்க முடியாவிட்டால் நடனமாடிக்கொள்கிறேன் என்றேன். எல்லோருக்கும் ஆச்சரியம். நடனமாட கால்கள் வேண்டாம். சக்கர நாற்காலியின் மூலம் நடனமாட முடியும் என்று நம்பினேன். நான் குணமாவதற்கே அதிகக் காலம் தேவைப்பட்டது. சக்கர நாற்காலி நடனப் பெண்கள் குறித்த வீடியோக்களை தேடிப் பார்த்தேன். என்னுடைய கனவு நிஜமாகும் என்ற நம்பிக்கை வந்தது. 9 மாதங்களுக்குப் பிறகு ஆடி ஏஞ்சல் என்ற நடனப் பெண்மணியைச் சந்தித்தேன். அவர் குழுவினர் 20 ஆண்டுகளாகச் சக்கர நாற்காலிகள் மூலம் நடனமாடி வருவதை அறிந்துகொண்டேன். அவர்கள் உதவி செய்ய முன்வந்தனர். சக்கர நாற்காலி மூலம் ஹிப் ஹாப் நடனம் கற்றுக்கொண்டேன். 2012-ம் ஆண்டு என் முதல் சக்கர நாற்காலி நடன நிகழ்ச்சி அரங்கேறியது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதகங்களை எடுத்துச் சொல்வதாக நடனம் அமைந்தது. நான் வெளியுலகத்தில் நன்கு அறியப்பட்டேன். என்னைப் போன்று சக்கர நாற்காலி பயன்படுத்தும் பெண்கள், நடனமாட விரும்புவதாகக் கூறினார்கள். உடலின் மேல் பாகம் இயங்குபவர்களுக்கு ஹிப் ஹாப் நடனம் சிறப்பாக வரும். நடன வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். நடனமாட கால்கள் அவசியமில்லை, நம்பிக்கையான மனம் இருந்தால் போதும். நடனம் மூலம் என் உடல் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தொடர்ச்சியாக ஜிம்முக்குச் செல்கிறேன். உடலின் கீழ்ப் பகுதியை இயங்க வைக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். என்றாவது ஒருநாள் நான் மீண்டும் எழுந்து நிற்பேன் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கைதான் பல இடங்களிலும் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்க என்னை உந்திச் செல்கிறது’’ என்கிறார் செல்சி.

கால்கள் இன்றி நடனமாடும் செல்சிக்கு ஒரு பூங்கொத்து!

இங்கிலாந்தைச் சேர்ந்த 49 வயது கார்ல் டேவிஸ், ஹாங்காங்கில் வசித்து வருகிறார். வீட்டுக்குச் செல்லும் வழியில் திடீரென்று ஒரு மலைப்பாம்பு, அவரது காலை கடித்து கவ்விக் கொண்டது. ’’என்னென்னவோ செய்து பார்த்தேன். அது விடுவதாக இல்லை. அருகில் இருந்த ஒருவர் கற்களை எடுத்து பைதான் மீது வீசச் சொன்னார். என்னால் சரியாக வீச முடியவில்லை. என் கைகளால் மலைப்பாம்பின் பற்களை எடுத்தேன். அது வேகமாகச் சென்றுவிட்டது. மருத்துவமனையில் ஒருநாள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். அந்த வழியே செல்லும் மனிதர்கள், நாய்களை மலைப்பாம்பு தொடர்ந்து கடித்து வருவது தெரிந்தது. அதைப் பிடிக்க முடிவு செய்தேன். இரண்டாவது நாள் பாம்பு பிடிப்பவரை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்குச் சென்றேன். எங்களை ஏமாற்றாமல் அது வந்து சேர்ந்தது. சட்டென்று பிடித்து, ஒரு பெட்டியில் அடைத்தோம். விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்தோம். 14 அடி நீளமும் 23 கிலோ எடையும் இருந்தது’’ என்கிறார் கார்ல் டேவிஸ்.

மலைப்பாம்பை பிடித்த பலே ஆசாமி!

சீனாவில் பாலினச் சமத்துவக் கழிப்பறைகள் வந்துவிட்டன. கஃபே, மால், பார் போன்ற இடங்களில் அனைத்துப் பாலினங்களுக்கும் பொதுவான கழிப்பறைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆண் படம், பெண் படம், பாதி ஆண், பாதி பெண் படம் சேர்த்து இதற்குச் சின்னமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கழிப்பறைகள் மூலம் பெண் குழந்தைகளை அழைத்து வரும் தந்தைகளுக்கும் உதவியாக இருக்கும். ஆண் குழந்தைகளை அழைத்து வரும் அம்மாக்களுக்கும் உதவியாக இருக்கும். வயதானவர்களை அழைத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும். திருநங்கைகளுக்கும் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படாது என்கிறார் ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தி திட்டத்துக்கான சீன அதிகாரி.

பாலினச் சமத்துவக் கழிப்பறையை வரவேற்கலாம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பாலினச்-சமத்துவக்-கழிப்பறையை-வரவேற்கலாம்/article8748414.ece?homepage=true&relartwiz=true

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள்!

 
masala_2902695f.jpg
 

ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள் கனடாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் மெக்ஸிகோ காடுகளை நோக்கிப் படையெடுக்கின்றன. உலகிலேயே மிக நீண்ட பூச்சிகளின் இடப்பெயற்சி இதுதான். சுமார் 2,500 மைல்கள் தூரம் கடந்து மெக்ஸிகோவின் மிசோகன் காடுகளை அடைகின்றன. இங்கே எண்ணிலடங்கா வண்ணத்துப்பூச்சிகள் சேர்ந்து அடர்த்தியாக மரங்களிலும் தரைகளிலும் ஓய்வெடுக்கின்றன. கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளில் மிக அழகானவை மோனார்க்.

சின்னஞ்சிறு பூச்சிகள் ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, பல்வேறு பருவ நிலைகளைச் சந்தித்து, மெக்ஸிகோவுக்கு வந்து சேர்கின்றன. இங்கே நெருக்கமாக மரங்களிலும் கிளைகளிலும் 5 மாதங்கள் வரை தங்குகின்றன. மனிதர்களின் வருகை, சட்டத்துக்குப் புறம்பாக மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களால் மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. சூழலும் மாறி வருகிறது. மெக்ஸிகோவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனம், 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு சுரங்கத்தை அமைத்தது.

அது மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால், பலரின் போராட்டங்களுக்குப் பிறகு சுரங்கம் மூடப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் சுரங்கம் அமைக்கும் பணி தீவிரமடைந்திருக்கிறது. சுரங்கம் வந்தால் இந்த மாயாஜால உலகம் தன் அற்புதத்தை இழந்துவிடும். இவை மட்டுமல்லாமல், அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட சோளம், சோயாபீன்களைப் பயிரிடுவதாலும் களைக்கொல்லிகளின் அதிகரிப்பதாலும் முட்டையிலிருந்து பூச்சியாக மாறும் காலத்து மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

இயற்கை கொடுத்த அற்புதத்தை அழிக்க மனிதர்களுக்கு உரிமை இல்லை…

அமெரிக்கக் காடுகளில் சில மரங்கள் மட்டும் வளைந்து காணப்படுகின்றன. ஏன் சில மரங்கள் மட்டும் நேராக வளராமல், வளைந்து வளர்ந்திருக்கின்றன என்பதற்கான காரணங்கள் நீண்ட காலம் தெரியாமல் இருந்து வந்தன. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே அமெரிக்கக் காடுகளில் வளைந்த மரங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக மரம் வளைந்த மர்மம் குறித்து டென்னிஸ் டவ்னெஸ் ஆராய்ந்து வருகிறார்.

‘’இவை தானாக வளைந்த மரங்கள் அல்ல. காடுகளில் வாழ்ந்த அமெரிக்கப் பூர்வகுடிகள் வளைத்து, வளர வைத்தவை. இது பாதுகாப்பான பகுதி, மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற பகுதி, அருகில் ஆறு இருக்கிறது, வழி போன்ற பல விஷயங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகக் காடுகளில் ஆங்காங்கே செடிகளாக இருக்கும்போதே வளைத்து, வளர வைத்தனர். காலப்போக்கில் அவை வளைந்த மரங்களாக மாறிவிட்டன. மரங்களுக்குத் தீங்கிழைக்காமல் ஒருவருக்கு ஒருவர் உதவிகொள்வதற்காகப் பூர்வகுடி மக்கள் இந்த வழிமுறையைக் கையாண்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் காடுகளில் வசிக்கவில்லை என்றாலும் அவர்கள் வைத்த மரங்கள் பார்ப்பவர்களுக்குப் புதிராகக் காட்சியளிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு 450 வளைந்த மரங்கள் இருந்தன. மரங்களை வெட்டியதால் தற்போது 155 மரங்களே எஞ்சியுள்ளன’’ என்கிறார் டென்னிஸ்.

இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் பூர்வகுடிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மோனார்க்-வண்ணத்துப்பூச்சிகள்/article8755451.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மீன் பிடிக்க உதவும் டால்பின்கள்

 
 
masala_2412625f.jpg
 

பிரேஸிலின் லகுனா நகரில் வசிக்கும் மீனவர்களுக்கும் டால்பின் களுக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. தினமும் அதிகாலை வலைகளுடன் மீனவர்கள் வருகிறார்கள். டால்பின்களுக்காகக் காத்திருக்கிறார்கள். மனிதர்களின் தலைகளைக் கண்டதும் உற்சாகத்தோடு நீந்தி வருகின்றன டால்பின்கள்.

இப்படியும் அப்படியும் வேகமாக நீந்தி, மீன்களை எல்லாம் மீனவர்கள் பக்கம் திருப்பிவிடுகின்றன. உடனே மீனவர்கள் வலைகளை வீசுகிறார்கள். மிகப் பெரிய மீன்கள் வலைகளில் வந்து விழுகின்றன. வலைகளில் இருந்து தப்பும் மீன்களை டால்பின்கள் உணவாக்கிக்கொள்கின்றன. டால்பின்கள் பொதுவாக மனிதர்களிடம் பழகக்கூடியவை. இந்தப் பகுதியில் 20 பாட்டில் மூக்கு டால்பின்கள் வசிக்கின்றன.

200 மீனவர்களுக்கும் இந்த டால்பின்கள்தான் மீன் பிடிக்க உதவுகின்றன! டால்பின்களுக்கு ஸ்கூபி, கரோபா என்று பெயர்களைக் கூட வைத்திருக்கிறார்கள் மீனவர்கள். தண்ணீருக்குள் இறங்கி, டால்பின்கள் வரவில்லை என்றால் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். உடனே டால்பின்கள் மகிழ்ச்சியாக நீந்தி வருகின்றன. டால்பின்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று வழிவழியாக மீனவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

அதேபோல மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று டால்பின்கள் தங்கள் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. மனிதர்களும் டால்பின்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு, நூறு ஆண்டுகளைக் கடந்தும் தங்கள் உறவைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

மாஸ்கோவில் வசிக்கிறார் எலினா சுலேமன்யன். இவருடைய செல்லப் பிராணி போர்ட்டோஸ் என்ற பூனை. மற்றப் பூனைகளை விட போர்ட்டோஸ் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறது. பூனையின் தலையில் இருக்கும் கறுப்பு வண்ணமும் மூக்குக்குக் கீழே இருக்கும் கறுப்பு வண்ணமும் அச்சு அசலாக ஹிட்லர் போலவே தோற்றத்தைத் தருகிறது. ஒரு வயதான போர்ட்டோஸ் குணத்திலும் ஹிட்லரை ஒத்திருப்பதாகச் சொல்கிறார் எலினா.

அதாவது எப்பொழுதும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறது. தான் விரும்பிய உணவைத் தரும் வரை வேறு உணவுகளைத் தொடுவதில்லை. எளிதில் பிறருடன் பழகுவ தில்லை. எப்பொழுதும் கம்பீரமான தோற்றத்துடன், கோபமாகவே இருப்பதுபோலக் காட்சியளிக்கிறது.

எலினா வீட்டுக்கு வருபவர்களும், போர்ட்டஸை வெளியில் அழைத்துச் செல்லும்போதும் ஹிட்லர் போலவே இருக்கிறதே என்று சொல்லாதவர்களே கிடையாது. உலகமே வெறுக்கக்கூடிய ஒரு மனிதரின் சாயலை ஒத்திருந்தாலும் எங்களுக்கு போர்ட்டஸ் விருப்பமான செல்லப் பிராணிதான் என்கிறார் எலினா.

அட… ஹிட்லரை நினைச்சிட்டுப் பார்த்தா அப்படித்தான் தெரியுது…

சிட்னியில் உள்ள ப்ளூ மலைப் பகுதியில் இயற்கையான குகை ஒன்று இருக்கிறது. இந்தக் குகையில் இருந்து பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும். செடிகள், மரங்கள், கங்காருகள் என்று நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்தக் குகையை லியோனெல் பக்கெட் என்பவரின் கைவண்ணத்தில் தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். குகைச் சுவர்கள் அப்படியே பாறைகளாக இருக்கின்றன.

ஆனால் அதற்குள் சகல வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சமையலறை, டிவி, நவீன குளியலறை, கழிப்பறை, படுக்கையறை, கணப்பு அடுப்பு எல்லாம் இருக்கின்றன. பாதுகாப்புக்குக் கண்ணாடியால் கதவுகளும் ஜன்னல்களும் போடப்பட்டுள்ளன. விடுதி ஊழியர்களைத் தவிர, மனிதர்கள் நடமாட்டம் சுத்தமாகக் கிடையாது. இரவில் காட்டின் திகிலை அனுபவிக்கலாம். ஓர் இரவு தங்குவதற்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

இயற்கையாக எதுவும் இருக்க அனுமதிக்க மாட்டேங்கிறானே இந்த மனிதன்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மீன்-பிடிக்க-உதவும்-டால்பின்கள்/article7230560.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: தோலுக்கு மாற்று

 
masala_2904063f.jpg
 

விலங்குகளின் தோல் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மாற்றாக பாலியுரெதேன், பிவிசி போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவை சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. பினாடெக்ஸ் என்ற புதிய பொருள், அன்னாசிப் பழத்தின் இலைகளில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்தது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் டாக்டர் கார்மென் ஹிஜோஸா. 1990-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் அனனாஸ் அனம் என்ற நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோதுதான், அன்னாசி இலைகளின் நார்களில் இருந்து புது வகையான தோல் போன்ற பொருளை உருவாக்க முடியும் என்று கண்டறிந்தார்.

அதற்குப் பிறகு அன்னாசி இலைகளை வைத்துப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று தோல் பொருட்களுக்கு மாற்றாக இந்த அன்னாசி இலை பொருட்களை உருவாக்கிவிட்டது அனனாஸ் அனம் நிறுவனம். சமீபத்தில் லண்ட னில் பினாடெக்ஸ் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. துணிகள், கைப்பைகள், ஷூக்கள் என்று தோலால் செய்யக்கூடிய பல வகைப் பொருட்களையும் அன்னாசி இலை நாரில் செய்து அசத்தியிருந்தனர். விவசாயிகள் அன்னாசிச் செடிகளை வெட்டி எடுக்கும் முன், இலைகளில் இருந்து நாரை எடுத்து விடுகின்றனர். இயந்திரம் மூலம் இந்த இலைகள் கூழாக்கப்பட்டு, பினாடெக்ஸ் இழைகளாக மாறுகின்றன.

இந்த நார்களில் வண்ணங்களைச் சேர்த்து, வேண்டிய விதத்தில் பொருட்களை உருவாக்கிவிடுகிறார்கள். ’’விலங்குகள் தோல் பயன்படுத்தாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த பினாடெக்ஸ் பொருட்கள் இப்போதே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. சர்வதேச நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஷூக்கள், பைகளில் பினாடெக்ஸைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இந்த இழைகளைப் பயன்படுத்தி காயங்களைச் சுற்றிப் போடும் பேண்டேஜ்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ’’ என்கிறார் ஹிஜோஸா.

அடடா! விலங்குகளின் தோலுக்கு மாற்றாக பினாடெக்ஸ்!

ஆஸ்திரேலியாவில் இளைஞர்கள் அதிக அளவில் புகைப்பழக்கத் துக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் பெண்களும் கணிசமாக இருக்கிறார்கள். புகைப்பழக்கம் தீங்கானது என்பதை பல்வேறு விதங்களில் எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கள். அதில் சிகரெட் அட்டைகளிலேயே, பெண்கள் புகைப்பிடித்தால் எடை குறைந்த குழந்தைகள் பிறக்கும் என்ற எச்சரிக்கையும் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த எச்சரிக்கை எதிர்மறையான விஷயத்தை உருவாக்கி வருகிறது. குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்தால், பிரசவ வலி குறைவாக இருக்கும் என்று பெண்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் புகைப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள்.

மானுடவியல் ஆராய்ச்சியாளர் சிமோன் டென்னிஸ், ‘’குழந்தை வயிற்றில் இருக்கும்போது புகைப்பதால், குழந்தைக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. குழந்தையின் எடையும் குறைந்து விடுகிறது. சில குழந்தைகள் பிரசவ காலத்துக்கு முன்பே பிறந்து விடுகின்றன. சில குழந்தைகள் வயிற்றிலேயே இறந்து போகின்றன. சுவாசக்குழாய் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதயக்கோளாறுகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நரம்புகளும் பாதிப்படைகின்றன. கருச்சிதை வும் அதிக அளவில் ஏற்படுகின்றன. 16, 17 வயது பெண்கள்தான் பிரசவ வலிக்குப் பயந்துகொண்டு இந்த முடிவை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை எடை குறைவாகப் பிறக்கும் என்ற எச்சரிக் கை, இப்படி ஒரு எதிர்மறையான செயலைச் செய்ய வைத்துவிட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது கவனம் தேவை’’ என்கிறார்.

புகை நமக்குப் பகை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தோலுக்கு-மாற்று/article8759606.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: 40 ஆண்டுகளாகக் கெட்டுப் போகாத கேக்!

 
 
masala_2905257f.jpg
 

1976ம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் அகாடமியில் வேதியியல் ஆசிரியராக இருந்தவர் ரோஜெர் பென்னாட்டி. ஒருநாள் ட்வின்கியை (கேக்) வகுப்பறையில் வைத்து, இது மட்குவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டார். மாணவர்கள் ஒருவருக்கும் தெரியவில்லை. ரோஜெருக்கே கூட இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. காகிதம் சுற்றப்படாத ட்வின்கியை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து மூடினார். எத்தனை நாட்களில் மட்கும் என்பதை நேரடியாகப் பார்த்துவிடலாம் என்பது அவரது திட்டம். ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை!

உலகிலேயே மிகப் பழமையான ட்வின்கி என்ற பெயருடன், 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வைக்கப்பட்டதோ, அப்படியே இருக்கிறது! இன்று கூட ட்வின்கியை 25 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிறது தயாரிப்பு நிறுவனம். “நாங்கள் உணவு குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தோம். இந்த ட்வின்கியை பரிசோதனைக் கூடத்தில் வைத்துவிட்டோம். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜெர் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார். அதற்குப் பிறகு இந்தப் பரிசோதனை என்னிடம் வந்து சேர்ந்தது. இதுவரை யாரும் இதை எடுத்துப் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இது தாக்குப் பிடிக்கிறது என்று பார்ப்போம். எனக்குப் பிறகு வருகிறவர்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து, பாதுகாத்தால் எங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்!’’ என்கிறார் இங்கே பணிபுரியும் லிபி ரோஸ்மியர்.

40 ஆண்டுகளாகக் கெட்டுப் போகாத கேக்!

குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்க்கை நடத்தும் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் பரவி வருகிறது. ஜப்பானியர்களும் இந்த வாழ்க்கை முறையை அதிகமாக விரும்புகிறார்கள். மக்கள் தொகை அதிகமிருக்கும் ஜப்பானிய நகரங்களில் இடப் பற்றாக்குறை அதிகம். இந்தச் சூழ்நிலையில் தேவையற்ற பொருட்களை வாங்குவதை ஜப்பானியர்கள் தவிர்த்து வருகிறார்கள்­. “ஜென் தத்துவங்களைப் பின்பற்றும் எங்களுக்கு இந்த வாழ்க்கை முறை கஷ்டமாக இல்லை. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். பொருட்கள் விழுந்து உடைந்து போகும். ஆனால் குறைந்தபட்ச வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. 4 பேண்ட்கள், 3 சட்டைகள், 4 சாக்ஸ்கள் மற்றும் மிக முக்கியமான சில பொருட்கள் மட்டுமே என் வீட்டில் இருக்கின்றன.

நாம் வாங்கி பிறகு பயன்படுத்துவோம் என்று பரணில் போடும் எந்தப் பொருளையும் நாம் பயன்படுத்துவதே இல்லை. அதனால் தேவையின்றி வீட்டில் பொருட்களைச் சேகரிக்க வேண்டாம். பொருட்கள் மிகக் குறைவாக இருப்பதால் வீட்டில் இடம் அதிகம் கிடைக்கிறது. சுத்தம் செய்யும் வேலை குறைந்துவிட்டது. ஷாப்பிங் செய்வது குறைந்துவிட்டதால் பணமும் மிச்சமாகிறது’’ என்கிறார் ஃபுமியோ சசாகி.

நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-40-ஆண்டுகளாகக்-கெட்டுப்-போகாத-கேக்/article8764060.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பறவைகளை அரவணைக்கும் வடகொரியா!

 
 
masala_2907025f.jpg
 

உலகிலேயே சுற்றுலாப் பயணிகள் மிகக் குறைவாகச் செல்லும் நாடு என்று வடகொரியாவைச் சொல்வார்கள். ஆனால் இடப்பெயற்சி செய்யும் பறவைகளின் சொர்க்கமாக இருக்கிறது வடகொரியா. பாடும் பறவைகள், நாரைகள் என்று 5 கோடி பறவைகள் ஒவ்வோர் ஆண்டும் வடகொரியாவில் வந்து தங்கிச் செல்கின்றன. இவற்றில் 80 லட்சம் கடல் பறவைகள். வடகொரியாவின் மேற்குக் கடற்கரைகளை ஒட்டி, ஆயிரக்கணக்கான மைல்களுக்குத் தரிசு நிலங்கள் காணப்படுகின்றன. இவை மனிதர்களுக்குப் பயன்படாவிட்டாலும் பறவைகள் வசிப்பதற்கு ஏற்றார் போல அமைந்திருக்கின்றன.

நியூஸிலாந்தைச் சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர்கள் வடகொரிய அரசாங்கத்தின் அனுமதி பெற்று, பறவைகளை ஆராய்ச்சி செய்வதற்காகச் சென்றார்கள். சக்தி வாய்ந்த தொலைநோக்கி, கேமராக்களைக் கொண்டு பறவைகள் ஆராய்ச்சி நடத்தப்பட்டன. “வடகொரியாவின் அண்டை நாடு களான சீனாவிலும் தென்கொரியாவிலும் முன்னேற்றம் என்ற பெயரில் ஏராளமான கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து, நிலத்தையும் பாழ்படுத்திவிட்டன. ஆனால் வடகொரியாவில் நிலமும் நீர்நிலைகளும் மாசு அடையாமல் இருக்கின்றன. அதனால் சீனாவுக்கும் தென்கொரியாவுக்கும் செல்ல வேண்டிய பறவைகள்கூட வடகொரியாவுக்கே வந்துவிடுகின்றன.’’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டேவிட் மெல்விலி. கடல் பறவை ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் ஃபுல்லர், “மஞ்சள் கடலை ஒட்டிய மூன்றில் இரண்டு பங்கு சதுப்பு நிலங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டன. அவற்றில் ஒரு பங்கு சதுப்பு நிலங்கள் இன்றும் வடகொரியாவில் மட்டும் பத்திரமாக இருக்கின்றன.வடகொரியாவின் இந்த நிலங்கள் இப்படியே பாதுகாக்கப்பட்டால் பறவைகளால் பிழைத்துக்கொள்ள முடியும். இன்று பறவைகளின் சொர்க்கம் என்றால் அது வடகொரியாதான்!’’ என்கிறார்.

பறவைகளை அரவணைக்கும் வடகொரியா!

சீனாவின் ஹாங்ஸொவ் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார் ஸாங். விடுமுறை தினம் என்பதால் மாலையில் தன் தோழியுடன் நாயை அழைத்துக்கொண்டு நடைப் பயணம் மேற்கொண்டார். ஆற்றங்கரைக்கு வந்தவுடன் தன்னுடைய நாய்க்கு நீந்தத் தெரியுமா என்ற கேள்வி வந்தது. ஆற்றின் ஓரம் அமைக்கப்பட்டிருந்த குழாய் மீது நின்றுகொண்டு, திடீரென்று நாயை ஆற்றுக்குள் தள்ளிவிட்டார். நாய் நீந்தி, மேலே வந்து சேர்ந்தது.

ஆனால் ஸாங் கால் தவறி நதிக்குள் விழுந்து விட்டார். 3 மீட்டர் ஆழம் கொண்ட நதியில் ஸாங் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. உதவி கேட்டு கத்தினார் அவரின் தோழி. மீட்புப் படையினர் ஆம்புலன்ஸோடு வந்தனர். அரை மணி நேரம் தேடி, ஸாங்கை மீட்டனர். ஆனால் ஸாங் முற்றிலும் சுயநினைவை இழந்திருந்தார். முதலுதவி அளித்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் ஸாங்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஆல்கஹால் சாப்பிடாமல் இருந்திருந்தால் அவரே நீந்தி கரை சேர்ந்திருப்பார். அல்லது இவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குடி உயிரைப் பறிக்கும்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பறவைகளை-அரவணைக்கும்-வடகொரியா/article8768336.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: அன்பு, சில நேரங்களில் விசித்திரமானது!

 
ulaga_2908558f.jpg
 

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் வசித்து வரும் ஸீ ஸிஹான், ஸி ஸிபிங் தம்பதிக்கு 1996ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. 2002ம் ஆண்டு ஸீ ஸிஹான் மோசமான விபத்தில் சிக்கிக்கொண்டார். இதில் அவருடைய இடுப்புக்குக் கீழ்ப் பகுதி முற்றிலும் செயல் இழந்துவிட்டது. இனி வாழ்க்கையில் நிற்கவோ, நடக்கவோ அவரால் முடியாது. ஸிஹானைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, வீட்டு வேலை களைச் செய்வது என்று ஸிபிங் சோர்ந்து போனார். ஸிஹான் ஒரு முடிவுக்கு வந்தார். ஸிபிங்கை அழைத்து, இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி கூறினார். ஸிபிங் முடியாது என்று கூறிவிட்டார். விவாகரத்து செய்தாலாவது ஸிபிங் தன்னைவிட்டுச் செல்வார் என்று நினைத்து, அதையும் பெற்றுவிட்டார் ஸிஹான். அப்படியும் அவரைக் கவனித்துக்கொண்டு, அந்த வீட்டிலேயே வசித்து வந்தார் ஸிபிங். ஸிஹானையும் ஸிபிங்கையும் நன்கு புரிந்துகொண்ட குடும்ப நண்பர் லியு ஜோங்குய், திருமணம் செய்துகொள்ள முன்வந்தார். கணவரின் வற்புறுத்தலில் ஸிபிங்கும் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஸிஹானை விட்டுச் செல்ல மறுத்துவிட்டனர். ஓராண்டில் லியு, ஸிபிங் தம்பதிக்குக் குழந்தையும் பிறந்தது. கணவன், மனைவி இருவரும் ஸிஹானை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார்கள். மூன்று குழந்தைகளையும் மகிழ்ச்சியோடு வளர்த்து வருகிறார்கள்.

அன்பு, சில நேரங்களில் நம்ப முடியாத அளவுக்கு விசித்திரமானது!

இன்றும் கூட சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதை அங்கீகரிக்கவில்லை. மன்னர் அப்துல்லா இறப்பதற்கு முன்பு அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் தற்போதைய இளவரசர் முகம்மது பின் சல்மான், சவுதி மக்கள் பெண்கள் கார் ஓட்டுவதில் இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் சவுதி அரேபியப் பெண்கள், புதிய வழியில் கார்களை ஓட்டிப் பயிற்சி செய்து வருகிறார்கள். பொழுதுபோக்குப் பூங்காக்களில் குறிப்பிட்ட இடத்துக்குள் குழந்தைகளும் பெரியவர்களும் ஓட்டி மகிழக்கூடிய பம்பர் கார்களை ஓட்டுகிறார்கள்.

“எங்கள் நாட்டுச் சட்டங்களைப் புரிந்துகொள்வது கடினம். எல்லோருக்கும் இயல்பாகக் கிடைக்கக்கூடிய விஷயங்களைக்கூட நாங்கள் போராடியே பெற்று வருகிறோம். கார் ஓட்டும் உரிமையையும் விரைவில் பெறுவோம். அதுவரை கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நிஜமான காரில் பயிற்சி செய்தால் அது சட்டத்தை மீறியதாகப் பார்க்கப்படும். பொழுதுபோக்கு பூங்காக்களில் இரவில் சில மணி நேரங்களை, பெண்கள் மட்டும் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கிறார்கள். எங்கள் நோக்கம் கார் ஓட்டக் கற்றுக்கொள்வதுதான். சுதந்திரமாகவும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடும் கார்களை ஓட்டி வருகிறோம்’’ என்கிறார் ஒரு பெண். பொழுதுபோக்குப் பூங்காவில் பணிபுரியும் அமான் அல் அபாடி,

“கார் ஓட்ட ஆரம்பித்தவுடன் பெண்களின் முகத்தில் ஏதோ சாதித்தது போல அவ்வளவு சந்தோஷத்தைப் பார்க்க முடிகிறது. என்கிறார். சவுதி அரேபியாவில் வசதி படைத்த பெண்கள், தொலைதூரப் பாலைவனத்துக்குச் சென்று யாரும் அறியாமல் கார் ஓட்டிக்கொள்கிறார்கள்.

சாலைகளில் கார் ஓட்டும் காலம் விரைவில் மலரட்டும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அன்பு-சில-நேரங்களில்-விசித்திரமானது/article8772360.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: நாய் காதல்!

 
 
masala_2410840f.jpg
 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஜாஸ்மினுக்கும் ஜாஸ்பருக்கும் மிக ஆடம்பரமாகத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. பக் இன நாய்களான ஜாஸ்மினும் ஜாஸ்பரும் கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஜாஸ்மினின் திருமண ஆடை ஒண்ணே கால் லட்சம் ரூபாய். இந்தத் திருமணத்துக்கு 300 பேர் வந்திருந்தனர்.

மனிதர்களின் திருமணங்களைப் போலவே இந்தத் திருமணத்திலும் திருமண கேக் வெட்டப்பட்டது. விருந்தும் நடைபெற்றது. திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தங்களின் செல்லப்பிராணிகளுக்கு அலங்காரமான ஆடைகளை அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருட்கள், நன்கொடைகள் அனைத்தும் விக்டோரியா நாய்கள் பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் மூலம் மீட்கப்பட்ட ஜோடிகள்தான் ஜாஸ்மினும் ஜாஸ்பரும்.

என்னதான் காரணம் சொன்னாலும் நாய்களுக்குத் திருமணம் என்பதெல்லாம் டூ மச்…

சீனாவின் பெய்ஜிங்கில் வசிக்கும் டு ஸின் தன்னுடைய பெயரை குந்தர் என்று மாற்றிக் கொண்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு டு ஸின் காதலில் தோல்வியடைந்தார். ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் கழிந்தது. அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர், அமெரிக்க நகைச்சுவைத் தொடர் ஒன்றைப் பார்க்கும்படி பரிந்துரைத்தார். தொடரைப் பார்க்கப் பார்க்க டு ஸின்னுக்குப் பிடித்துப் போய்விட்டது.

அவருடைய துன்பமும் கரைந்து போயிருந்தது. உடனே அந்தத் தொடரில் வருவதைப் போலவே நிஜ வாழ்க்கையில் ஏதாவது செய்து, காதல் தோல்வியடைந்தவர்களின் வாழ்க்கையை மீட்க வேண்டும், காதலர்களுக்கு காதலின் ஆழத்தைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தார். தொடரில் வருவது போலவே தன்னுடைய குடியிருப்பை ’காபி ஷாப்’ ஆக மாற்றினார்.

இங்கே வருபவர்களின் மனநிலை மாறும் அளவுக்கு ஜாலியான புத்தகங்கள், நகைச்சுவைத் தொடர், பாடல் டிவிடிகள் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வைத்தார். இவை தவிர டு ஸின்னின் நண்பர்கள் 6 பேர் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் காதலுடனும் எப்படி வாழ்வது என்று வகுப்புகள் எடுக்கின்றனர். இந்தத் தலைமுறையினருக்கு நான் செய்யக்கூடிய மிகப் பெரிய கடமையாக இதைக் கருதுகிறேன். இங்கே வருபவர்கள் தங்கள் துன்பங்களை மறந்து, புதிய வாழ்க்கைக்குத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். என் மனைவி மற்றும் நண்பர்களால்தான் இந்தக் காரியம் சாத்தியமாகியிருக்கிறது என்கிறார் டு ஸின்.

நீங்களும் மீண்டு, மற்றவர்களையும் மீட்கும் உங்கள் பணிக்கு வாழ்த்துகள் டு ஸின்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கிறார்கள் 16 வயது எலிஜா வில்லியம்ஸ் மற்றும் மேரி காஸ்டென். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். மேரியின் அப்பா காவல்துறையில் உயர் அதிகாரி. விரைவில் மேரியின் குடும்பம் வேறோர் இடத்துக்குச் செல்ல இருக்கிறது. தன் திருமணக் கோரிக்கையை எப்படி வைக்கலாம் என்று யோசித்தார் வில்லியம்ஸ்.

இறுதியில் காவல்துறை பாணியிலேயே சொல்லிவிடுவது என்று தீர்மானித்தார். ஆட்கள் நடமாடத ஒரு சாலையில் மஞ்சள் வண்ண டேப்பை ஒட்டி, இது தடை செய்யப்பட்ட பகுதி என்று காட்டினார். பிறகு காருக்கு அருகில் மனித உருவத்தை வரைந்தார். அந்த உருவத்துக்குள் படுத்துவிட்டார்.

பார்ப்பதற்கு விபத்தில் ஒரு மனிதன் இறந்து கிடக்கும்போது, காவலர்கள் அந்த இடத்தை எப்படி வைத்திருப்பார்களோ, அப்படியே உருவாக்கியிருந்தார் வில்லியம்ஸ். ’நான் இறந்துகொண்டிருக்கிறேன்… உன்னுடன் வாழ விரும்புகிறேன்’ என்றும் எழுதி வைத்திருந்தார். காதலனின் வித்தியாசமான யோசனை மேரிக்குப் பிடித்துவிட்டது. வில்லியம்ஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

வித்தியாசம் காட்ட வேண்டியதுதான்… அதுக்காக இப்படியா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாய்-காதல்/article7222552.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: எடையை எடையால் கரைக்கும் புதிய டெக்னிக்

 
 
edai_2909689f.jpg
 

“நான் 115 கிலோ எடையுடன் இருந்தேன். என் ஆரோக்கியத்தை நினைத்துக் கவலை வந்துவிட்டது. எடை குறைப்பு மாத்திரைகளை நான் விரும்பவில்லை. உடற்பயிற்சியிலேயே எடையைக் கரைக்க முடிவு செய்தேன். முதலில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கல்லைச் சுமந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எடையை அதிகரித்து, 30 கிலோ எடையுடன் நடந்துகொண்டிருக்கிறேன். தற்போது தினமும் 3 கி.மீ. தூரத்துக்கு 40 கிலோ பாறையுடன் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

என்னுடைய இந்தச் செயல் மிகத் தாமதமாகத்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன்’’ என்கிறார் காங் யான். இவரின் விநோத உடற்பயிற்சி குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன. சீன இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், இப்படி எடை சுமந்தால் கழுத்து வலி வந்துவிடும் என்று எச்சரித்துள்ளார். மற்றொரு இளைஞர் தனது பதிவில், இவர்தான் உண்மையான இரும்பு தலை மனிதன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சீனாவின் ஜிலின் பகுதியில் வசிக்கிறார் 54 வயது காங் யான். இவரது உடற்பயிற்சி, இன்று உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் வெளிவந்துவிட்டது! தினமும் நடைப் பயிற்சியின்போது 40 கிலோ எடை கொண்ட பாறையைத் தலையில் வைத்துக்கொண்டு செல்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் 30 கிலோ எடை குறைந்து விட்டதாகச் சொல்கிறார். தினமும் ஜிலின் பகுதியில் உள்ள பூங்காக்கள், நடை பாதைகள், கோயில்களில் தலையில் பாறையுடன் நடக்கும் காங் யானை எல்லோரும் பார்க்கலாம். சாலையில் நடப்பது மட்டுமன்றி, மலை உச்சியில் உள்ள கோயில்களின் படிக்கட்டுகளில் தலையில் எடையுடன் ஏறி இறங்குகிறார். இப்படி நடப்பதாலேயே இவர் மிகப் பிரபலமாகிவிட்டார்.

எடையை எடையால் கரைக்கும் புதிய டெக்னிக்!

*

நாம் நினைத்த வண்ணத்தை கொண்டுவரக்கூடிய ஹைடெக் பேனா உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் சிவப்பையோ, ரோஜாவின் மஞ்சளையோ அப்படியே கொண்டு வர வேண்டும் என்றால், ஹைடெக் பேனாவை பொருட்களுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும். பேனாவில் உள்ள ஸ்கேனர், நிறத்தை ஸ்கேன் செய்துகொள்ளும். பேனாவை தாளிலோ, ஸ்மார்ட்போனிலோ வைத்து வரைய ஆரம்பித்தால் அதே வண்ணம் வந்துவிடும். உலகிலேயே வண்ணம் எடுக்கக்கூடிய முதல் பேனா இதுதான்!

பொருட்கள், ஆடைகள், தோல் என்று எந்த நிறத்தையும் இந்த பேனாவால் ஸ்கேன் செய்துகொள்ள முடியும். ஒரு செடியில் உள்ள இலைகளையும் பூக்களையும் ஸ்கேன் செய்து ஓவியத்தில் வண்ணம் தீட்டினால், நிஜ செடியைப் பார்ப்பது போலவே இருக்கும். இந்த வண்ணங்கள் நீரில் கரைந்து போவதில்லை. ஸ்மார்ட்போன், டேப்லட்களில் பயன்படுத்தும் பேனா, தாளில் பயன்படுத்தும் பேனா என்று 2 விதங்களில் ஹைடெக் பேனாக்கள் கிடைக்கின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரத்துக்கு இந்த பேனாவைப் பயன்படுத்த முடியும். ஒரு பேனாவின் விலை 17 ஆயிரம் ரூபாய்.

அட! வண்ணம் நகலெடுக்கும் பேனா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-எடையை-எடையால்-கரைக்கும்-புதிய-டெக்னிக்/article8775600.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.