Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலி - கோமகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலி - கோமகன்

 

அதிகாலை மூன்று மணிக்கு வேலையால்  வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த  தொலைபேசி அழைப்பு,  வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . “உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்” என்றான் நரேன் .நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை .நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலையணையைக் கட்டிப்பிடித்தேன் .போன நித்திரை திரும்பி என்னிடம் வர சண்டித்தனம் செய்தது. ஆவி பறக்கும் தேத்தண்ணியை போட்டுக்கொண்டு அறையில் கிடந்த செற்றியில் இருந்தேன் .தேத்தண்ணி சாயத்தின் மணம் மூக்கில் நுழைந்து உடம்பை முறுக்கேற்றியது. தேத்தண்ணியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் இந்தக் காலமை நேரத்தில் எனக்கு சூராவத்தை பிள்ளையார் கோயிலின் கொடியேத்தம் முக்கியமா ? என்று மனம் யோசித்தது.

0000


 

எங்கடை சனங்களால் செல்லமாய் அழைக்கப்படுகின்ற ஜப்(F)னா பட்டினத்தில் ஒரு சின்னப் புள்ளியாகத் தெரிவதுதான் சூராவத்தை. மொத்த குடிகளாக ஓரு முன்னூறு குடும்பங்கள் இருந்தன. சூராவத்தையில் இருந்து பத்துப் பதினைஞ்சு ஒழுங்கைகள் தள்ளி வண்ணான் குண்டு குறிச்சியின் எல்லை தொடங்குகின்றது . இவர்களின் தொழிலாக ,சூராவத்தையார் விவசாயமும் வண்ணங்குண்டார் உடுப்புகள் தோய்ப்பதுமாக இருந்துவந்தது . ஜப்(F)னா பட்டினத்தில் காலங்கள் பலகட்டங்களில் அதன் வாழ்க்கை முறையை மாற்றி இருந்தாலும் இந்த இரண்டு பகுதியும் தங்கள் நிலையில் இருந்து அசைவதாகத் தெரியவில்லை. சூராவத்தையாருக்கு தாங்கள் தோட்டம் செய்யாவிட்டால் வண்ணங்குண்டார் சோற்றில் கைவைக்க மாட்டார்கள் என்ற இழி பார்வையும், தாங்கள் சூராவத்தையாரின் உடுப்புகளைத் தோய்க்காவிட்டால் உடுப்பே போட மாட்டார்கள் என்ற மிதப்பும் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு பகுதியும் சூராவத்தை பிள்ளையார் கோவில் கொடியேத்தத்தில் மட்டும் ஒன்றாக இருப்பார்கள் .கொடியேத்தத்துக்கு வண்ணாங்குண்டில் இருந்துதான் வெள்ளைத்துணி சூராவத்தை பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துவரப்படும்,  இது இரண்டு பக்கத்திற்கும் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த பாரம்பரியம்.


ஒருநாள் மாலை தவறணையில் பம்பலுக்கு இரண்டு பக்கத்து பெடியளும் வெவ்வேறு இடங்களில் இருந்து குடித்துக்கொண்டிருக்க, வெறிவளத்தில் நக்கல் கதைகள் இரண்டு பகுதிக்கும் நடந்து அதன் உச்சக்கட்டமாக,” நாங்கள் வெள்ளை துணி தராவிட்டால் உங்கடை பிள்ளையார் கோயில் கொடி ஏறுமோடா” ?என்று வண்ணாங்குண்டார் எகிற, சூராவத்தையார் இவர்களை துவைத்து எடுத்து விட்டார்கள். இதில் அடிவாங்கியவர்களில் நரேனின் ஒன்றவிட்ட தம்பியும் ஒருவன். பிரச்சனை விதானையார் வரை போய் விதானையாரின் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கு விதானையார் சூராவத்தை பகுதி என்பது ஒரு காரணமாக இருந்தது .வண்ணாங்குண்டு பெரிசுகளுக்கு பெடியள் “வெள்ளைத்துணி கொண்டு போகக்கூடாது” என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள். இந்த நேரத்தில் தான் நரேன் காலமை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடியேத்தத்தைப் பற்றி எனது காதில் போட்டிருக்கின்றான்.


0000


நரேன் என்னுடன் நட்பாகி  பல வருடங்களாகின்றன. இருவரும் ஒரே ஊர் என்பதாலும் எமது நட்பு உடையாது இருந்தது .நரேன் வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்தவன். நானோ சூராவத்தை பகுதியை சேர்ந்தவன். என்னமோ தெரியவில்லை எம்மை இந்த இரண்டு பகுதிகளும் பிரிக்கவில்லை. நரேன் பாரிஸ் வந்தபின்னர் சில காலம் வேறு வேலைகள் செய்துவிட்டு வங்கியில் இருந்து கடன் எடுத்து இங்கும் உடுப்புகள் தோய்க்கும் நிறுவனம் ஒன்றின் முதலாளியாகிப் பல வோஷிங் மெசின்களைப் போட்டு உடுப்புகள் தோய்த்துக்கொண்டிருந்தான். அவனது நிறுவனத்தில் பல தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவன் எவ்வளவு வளர்ந்தாலும் என்னுடன் இருந்த நட்பைக் குலைக்கவில்லை. நிறுவனத்தில் வரும் வருமானத்தின் ஒருபகுதியை வண்ணாங்குண்டு வளர்ச்சிக்காக செலவழிப்பான். நான் ஏதாவது கேட்டால்,” எனக்கு தெரிஞ்ச தொழிலை கொஞ்சம் மொடேர்னாய் செய்யிறன். என்ரை ஊருக்கும் குடுக்கிறன். நீ ஏன் குத்தி முறியிறாய் ? என்று எனது வாயை அடக்கிவிடுவான். நானோ எனது வருமானத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓர் தொண்டு நிறுவனம் ஊடாக யாருக்கும் தெரியாது செய்து வந்தேன்.

00000

அன்று பின்னேரம் மீண்டும் நரேனது ரெலிபோன் அழைப்பு வந்தது ,” மச்சான் உனக்கு காலமை இன்னமொரு விசயம் சொல்ல மறந்து போனன். முந்த நாள் என்ரை ஒண்டவிட்ட தம்பிக்கு உங்கடையாக்கள் வெறிவளத்திலை அடிச்சுப்போட்டாங்கள். நாங்கள் என்ன மசிரே…………….? இல்லை நாங்கள் என்ன மசிரோ எண்டு கேக்கிறன் ? என்ன இருந்தாலும் உங்கடை ஆக்கள் எங்களிட்டைதானே வரவேணும் ? இருந்துபாரடி எங்கடை விளையாட்டை. எப்பிடி பிள்ளையார் கோயில் கொடி ஏறுது எண்டு பாப்பம் ?” என்றான் நரேன். எனக்கு மெதுவாக கோபம் எட்டிப்பார்க்க தொடங்கியது ” உன்ரை குடும்ப பிரச்னைக்கு ஏன்ராப்பா இதை ஊர் பிரச்சனையாக்கி பிள்ளையாரை இதுக்குள்ளை இழுக்கிறாய் ? “என்றேன். ” நீ என்னதான் சொல்லு உதிலை நாங்கள் விட்டுத்தரமாட்டம். நீயும் பாக்கத்தானே போறாய் ” என்று போனை துண்டித்தான் நரேன். இவனைத் திருத்தவே முடியாதா ? என்று எண்ணியவாறே வேலைக்குச் சென்று விட்டேன் .  நான் ஊருக்குப் போகும் பொழுது இரண்டு பகுதியையும் சமாதானப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

00000

என்னையும் சேர்த்துக்கொண்டு பாரிஸில் இருந்து பறந்த கட்டார் எயார்வேய்ஸ் பன்னிரண்டு மணித்துளிகளை முழுமையாக வானத்தில் கழித்து விட்டு அதிகாலைப் பொழுதொன்றில் கொழும்பில் வந்திறங்கியது.எயார்ப்போர்ட் சம்பிரதாயங்களை விரைவாக முடித்துக் கொண்டு காலை இன்ரர் சிற்ரியில் ஜப்(F)னா பட்டினம் நோக்கிப் புறப்பட்டேன். மத்தியானப் பொழுதொன்றில் ஜப்(F)னா பட்டினம் என்னை அணைத்துக்கொண்டது . நான் சூராவத்தயை அடையும் பொழுது ஒரு தாயின் அணைப்பில் குழந்தை கரைவதுபோலவே இருந்தேன். சொந்தங்கள் பந்தங்கள் என்று நாட்கள் என்னை முன்னோக்கித் தள்ளின. ஒருநாள் மாலை வீட்டு வாசலில் இருந்து அம்மாவுடன் வீட்டுக் கதைகள் கதைத்துக்கொண்டிருந்த பொழுது “வீரகேசரி” விநாசித்தம்பியரே அந்தக் கதையைக் கொண்டுவந்தார்……

இந்த இடத்திலை “வீரகேசரி” விநாசித்தம்பியை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேணும். சூரவத்தையிலை ஆர் சாதிமான் எண்டு கேட்டால் தவ்வல் கூட விநாசித்தம்பியைத்தான் கையைக் காட்டும். தன்ரை வீட்டு கிணத்திலை தண்ணி அள்ளினாலும் செம்பிலை தண்ணியை விட்டு அண்ணாந்து சொண்டு படாமல் குடிக்கிற ஆசார சீலன். அதோடை காய் தீட்சை எடுத்த சைவப்பழம். தனக்குப் பிறந்த ரெண்டு பெட்டையளையும் பொத்திப் பொத்தி வளத்து லண்டனிலை தனக்குத் தோதான இடத்திலை கலியாணம் கட்டிக் குடுத்திருக்கிறார். அவனவன் வயிற்றுப்பாட்டுக்கு குனிஞ்சு வளைஞ்சு எழும்ப, லண்டன் பவுண்ஸாலை இவருக்கு மெயின் பொழுது போக்கு ஊர்த்துளவாரம்தான். ஜப்னா பட்டணத்திலை இருக்கிற கோயில் திருவிழாவிலை சாமியள் கேக்கினமோ இல்லையோ முதல் ஆளா நிண்டு விரதம் பிடிச்சு பக்திப் பழமாகவே விநாசித்தம்பியர் இருந்தார். ஆனாலும் அவரிலை இருக்கிற ஒரு அழுகல் பழக்கம் என்னவெண்டால், சூராவத்தையிலை ஒவ்வரு குடும்பத்திலையும் நடக்கிற நிகழ்சி நிரல் எல்லாம் விரல் நுனியிலை வைச்சு ஊர் முழுக்க காவிக்கொண்டு திரிவார். இதாலை அவருக்கு “வீரகேசரி” எண்ட பட்டப் பெயரை சூராவத்தை பெடியள் வைச்சிருந்தாங்கள். இனி வீரகேசரி விநாசித்தம்பி கதையிலை என்றி ஆகிறார் …………

கதை பெரிதாக ஒன்றும் இல்லை.,” வண்ணாங்குண்டு பெடியள் பிள்ளையார் கோயில் தெப்பக்குளத்துக்கை இறங்கி விசமத்துக்கு குளிக்கிறாங்களாம். உந்த எளிய சாதியளை வைக்கிற இடத்திலை வைக்கவேணும். எங்களுக்கு உடுப்பு தோய்கிறவங்கள். எங்கடை தண்ணியிலை வந்து குளிக்கவோ? அதுவும் கோயில் தெப்ப குளத்துக்கை. உது எக்கணம் இது பெரிய வில்லங்கத்தைக் கொண்டு வரப்போகுது” என்று பதகளிப்பட்டார் “வீரகேசரி” விநாசித்தம்பியர்.

அம்மாவும் அவருடன் சேர்ந்து,” ஓ………… அவங்களுக்கும் இப்ப நல்லாய் குளிர் விட்டுப்போச்சுது. அதோடை இந்த முறை கொடியேத்தத்துக்கு வெள்ளைத்துணி கொண்டு வரமாட்டினமாம். இந்த முறை திருவிழா கலம்பகத்திலைதான் முடியப்போகுது” என்று வீரகேசரி விநாசித்தம்பியருக்கு புகைப் போட்டா. எனக்கு இரண்டு பேரிலும் கோபம் கோபமாக வந்தது ,” என்ன மனிதர்கள் இவர்கள் ? எல்லோருக்கும் பொதுவாக இருந்த தண்ணி இப்பொழுது இந்த மடையர்களால் குட்டையாக வருகின்றதே! இவர்கள் என்ன படிக்காதவர்களா ? இளம் வயது பெடியளுக்கு இங்கு என்ன பெரிதாகப் பொழுது போக்கு இருக்கின்றது? குளம் குட்டைகள்தானே இவர்களது ஸ்விமிங் பூல்? . அதென்ன நாங்கள் மட்டும் குளிக்கலாம் அவங்கள் குளிக்க கூடாது ?இது எந்த ஊர் நியாயம்? “என்று என் மனம் அலைபாய்ந்தது. இவர்களுக்கும் நரேனுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக நான் எண்ணவில்லை. எல்லோருமே எரிகின்ற காஸ் குக்கறில் குளிருக்கு கை காட்டிக்கொண்டு நின்றார்கள்.

IMG_20150919_121831

ஒருவேளை எனக்கு எதோ வண்ணாங்குண்டு பெடியளிடம் ஒருமுறை கதைத்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. எல்லோரும் ஒன்றாகத்தானே படித்தோம் ? கதைப்பவன் கதைத்தால் சரியாகலாம் என்ற எண்ணத்தில் மறுநாள் காலை நண்பர்களை சந்திக்க சென்றேன். அவர்களை சந்திக்க முதல் பிள்ளையாரையும் ஒருமுறை பார்த்துவிட்டு போகலாம் என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி சைக்கிளை விட்டேன் .அங்கு பெரிதாகக் கூட்டம் இருக்கவில்லை .குருக்கள் ஆறுதலாக இருந்தார் என்னைக் கண்ட சந்தோசம் அவரது முகத்தில் தெரிந்தது. “ஐயா………. இதுக்கு ஒரு சொலூசனும் இல்லையோ? ஏன் இப்பிடி சனங்கள் விசர் பிடிச்சு திரியுதுகள் ?இவ்வளவுகாலமும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே கொடி ஏறீச்சுது ? உங்களுக்கு ஏதாவது படுதே” என்று குருக்களை நோண்டினேன். “தம்பி நீங்கள் வெளியாலை இருக்கிறதாலை வித்தியாசமாய் யோசிக்கிறியள். இங்கை அப்பிடி இல்லை. இல்லாட்டி எங்கடை சனத்துக்கு எப்பவோ விடிவு வந்திருக்கும். இவ்வளவு உழுது தள்ளியும் இதுகள் திருந்தீச்சுதுகளே? கடைசி நேரத்திலையும் புளியம் பொக்கணையிலை நிண்டுகொண்டு குடிக்கிற தண்ணிக்கு தள்ளுமுள்ளு பட்டுதுகள். இயக்கம் இருந்த நேரம் அடங்கி இருந்துதுகள். இப்ப திருப்பவும் ஆடத்தொடங்கீட்டுதுகள். இதிலை ஆரை எண்டு நோகிறது? காலம் காலமாய் வண்ணாங்குண்டார்தான் கொடித்துணி கொண்டுவாறது. அது அவங்கடை உரிமை. அதை கொண்டுவரக்கூடாது எண்டு சொல்லுறது கொஞ்சம் கூட சரியில்லை .எல்லாம் பிள்ளையார் பாத்துக்கொள்ளுவார் .நீங்கள் விரும்பினால் எதுக்கும் சின்னாட்டியிட்டை கதைச்சு பாருங்கோ. அவர்தான் காலம் காலமாய் கொடித்துணி கொண்டு வாறது. ” ” இந்த பிள்ளையார் எப்பவுமே பிரச்சனைக்குரிய ஆள்தான். இருக்கும் பொழுது சனங்களை சும்மா இருக்க விடமாட்டார் .நடந்து போய் கடலிலையோ குளத்திலை குளிக்க இறங்கும் பொழுதும் சனத்தை உருவேத்திறதுதான் வேலை. வெட்டுக்கொத்து எண்டு ரத்தம் கண்டுதான் பிள்ளையார் ஒரு நிலைக்கு வருவார். ” என்று என்மனம் சொல்லிக்கொண்டது.

எனக்கும் நண்பர்களுக்கும் சந்திப்பில் எதுவித பிரச்சனையும் இருக்கவில்லை. எல்லோரும் சொக்கன் கடையில் ரீ குடித்துக் கொண்டிருந்தோம். நண்பர்கள் நரேனைப்பற்றி கேட்டார்கள் .நான் இதுதான் சாட்டு என்று கதையை தொடங்கினேன் .அவர்களது முகம் கறுக்கத் தொடங்கியது .குஞ்சன் தான் முதல் கதையை தொடக்கினான் . “மச்சான் சொல்லுறதெண்டு குறைவிளங்கப்படாது. நீங்கள் எல்லாம் கதையிலைதான் இருக்கிறியளே ஒழிய நடைமுறையிலை மாறி நிக்கிறியள். உடுப்பு தோய்க்கிறது எங்கடை தொழில். தோட்டம் செய்யிறது உங்கடை தொழில். நீங்கள் தொழிலை தொழிலாய் பாக்கிறியள் இல்லை. எங்களை உங்கடை அடிமையள் மாதிரித்தான் பாக்கிறியள். அல்லாட்டி பம்பலுக்கு எங்கடை பெடியள் தவறணையிலை கதைக்க கைவைச்சிருப்பியளா ? அவ்வளவுக்கு நாங்கள் உங்களுக்கு கேவலமாய் போட்டமா? அதாலைதான் எங்களுக்கு நரேன் இந்தமுறை சொன்னான் உங்கடையாக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேணும் எண்டு”. எனக்கு இப்பொழுது பிரச்சனையின் அடிஆழம் எல்லாம் கிளியறாக விளங்கியது.

“சரி மச்சான் எங்கடை குரங்குகள் செய்தது செரியான பிழை. அவங்கழுக்காக நான் இப்ப உங்களிட்டை மன்னிப்பு கேக்கிறன். இந்த முறை ஒரு பிரச்சனையும் இல்லாமல் கொடி ஏறவேணும். இந்த கோயில் எங்கடை ரெண்டு பக்கத்துக்கும் பரம்பரை கோயிலடாப்பா. ஒரு அற்ப விசயத்துக்காக நாங்கள் வெட்டுகுத்துப்பட வேணுமோ ? நாங்கள் மனம் விட்டு கதைக்கவேணும். இதிலை ஆர் பெரிசு சின்னன் எண்டதில்லை பிரச்சனை. நாங்கள் இளம் ஆக்கள். பழசுகளின்ரை சேட்டையளுக்கு சரியான அடி குடுக்க வேணும். பெரியாக்களை விடுங்கோடாப்பா. நாங்கள் பெடியள். நாங்களும் பிழை விட்டால் ஆர் மச்சான் எங்கடை ஊரை காப்பாத்திறது? இதுக்கே எங்கள் தரவளி பெடியள் எல்லாம் காடுமேடெல்லாம் அலைஞ்சம்? எனது கதை அவர்களை ஆட்டம் காண வைத்தது. குஞ்சனே சொன்னான் ,” மச்சான் என்ன பெரிய கதை எல்லாம் கதைக்கிறாய்? நாங்கள் அப்பிடியே பழகினம்? நீ கவலை படாமல் போ. பிள்ளையார் கொடி ஏறும். சின்னாட்டியண்ணை முறையாய் கொடித்துணி கொண்டுவருவார். ஆனால் இதுகளை கெடுக்கிறமாதிரி உங்கடைபக்கம் நடக்காமல் பாக்கிறது உன்ரை பொறுப்பு. கவலைப்படாமல் போட்டுவாடாப்பா ” என்றான் குஞ்சன்.

சின்னாட்டியண்ணை முறைப்படி வெள்ளைத்துணி எடுத்துவர, குருக்கள் சின்னாட்டியண்ணைக்குக் காளாஞ்சி கொடுத்து பரிவட்டம் கட்டி கொடித்துணியை பெற்று, சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி பிரச்சனை இல்லாமல் ஏறியது. எமதுபக்கம் வழக்கத்தை விட பயங்கரமான அமைதியாக இருந்தது. இந்த அமைதி என்னை யோசிக்க வைத்தது .வீரகேசரி விநாசித்தம்பிக்குத் தனது பேச்சையும் மீறி நான் அவர்களை சமாதானப்படுத்தியது துண்டாகப் பிடிக்கவில்லை. “தம்பி வெளியாலை இருந்து கொண்டு நீங்கள் சுத்தமானவன் எண்டு காட்டாதையுங்கோ. நீங்கள் வித்தியாசமாய் செய்யிறன் எண்டு எல்லாரையும் குழப்பிறியள். அவன் அவனை அந்தந்த இடத்திலை வைக்கவேணும். இல்லாட்டில் எங்கடை தலையிலை மிளகாய் அரைச்சு போடுவங்கள். இண்டைக்கு கோயில் குளத்துக்கை குளிக்கிறவங்கள் நாளைக்கு எங்களோடை சம்பந்தம் பேசுவங்கள். உதெல்லாம் முழையிலை கிள்ளிப் போடவேணும்” என்று சூராவத்தை விசுவாசத்தை என்னுடன் கதைக்கும்போதே காட்டிக்கொண்டார்.

திருவிழா முடிவுக்கு வரும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தால் சூராவத்தை குய்யோ என்றது . தீர்தத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த ஒரு விடியக் காலையில் தெப்பக்குளத்தில் சொப்பிங் பாக்கில் கக்கூசும், ஒரு சோடி செருப்பும் மிதப்பதாக ஊரைக்கூட்டி விட்டார் “வீரகேசரி” விநாசித்தம்பியர். இதை வண்ணாங்குண்டாரே செய்ததாக அழிச்சாட்டியம் செய்தார். பிரச்சனை விதானை மூலம் பொலிசுக்குப் போனது. பொலிஸ் எடுத்த எடுப்பில் எதையுமே விசாரிக்காது குஞ்சனையும் இன்னும் சில நண்பர்களையும் தூக்கிக்கொண்டு போய் விட்டது. வீரகேசரி விநாசித்தம்பி வலு மும்மரமாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு நடையாய் நடந்தார். பின்பக்கத்தால் உயிர் கோழிக்கறியும் மென்டிஸ் ஸ்பெசலும் இன்ஸ்பெக்டருக்கு தாராளமாக பாய்ந்தது.

இதற்கிடையில் பிள்ளையார் கோயிலை விட்டே போய் விட்டார் என்று சூராவத்தையார் கதையை கட்டிவிட்டார்கள். பிள்ளையார் தேர் ஏறி முடிந்து அடுத்தநாள் தீர்த்தம் ஆடவெளிக்கிடும் பொழுது தான் சூராவத்தைக்கு வீரகேசரி விநாசித்தம்பி மூலம் சனி பிடித்துக்கொண்டது. இரவோடு இரவாக பொலிசைக்கொண்டு ஒருவருமே தெப்பக்குளத்தினுள் போகாத மாதிரி தெப்பக்குளத்தை சுற்றி முள்ளு வேலி அடித்து விட்டார். தெப்பக் குளத்தை சுற்றி அடைக்கப்பட்டிருந்த முள்ளு வேலிக்கு பின்னால் அந்த சபிக்கப்பட்ட வண்ணாங்குண்டு மக்கள் பிள்ளயார் குளிப்பதைக் காண முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அதில் சூராவத்தையாரும் கலந்து இருந்தார்கள் .சுற்றிவரப் போலிஸ் காவலுக்கு நின்றது. பிள்ளையாரோ குருக்களின் உதவியுடன் தன்னந்தனியனாக தெப்பக்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார் . எனக்கு ஏனோ வன்னியில் இருந்த செயிண்ட் ஜோசெப், மெனிக் பாம் முகாமின் முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் நின்ற அந்த மக்களின் நிலையே மனதில் நிழலாடின.

0000000000000000


பிற்குறிப்பு :
சாதீயமோ, எனது மக்கள் இவ்வளவு அழிவுகளையும் கண்டபின்னரும் இருக்கின்றது என்பதனை எனக்கு அண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் உணர்த்தின. அதன் விழைவே இந்தக்கதை.

 

 

 

http://eathuvarai.net/?p=5023

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் வழமையான எழுத்து நடை...நன்றாக உள்ளது!

யாழ்ப்பாணத்தை ஜப்னா பட்டினம் என்று விழிப்பதை.. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! ஒரு வேளை அது எனது பலவீனமாகவும், எனது மண் மீது நான் கொண்ட 'பற்று' காரணமாகவும் இருக்கலாம்!

செத்துப்போகும் சாதீயத்தை 'உயிர்த்தெழுப்புவதற்கு' சில முன்னெடுப்புகள் இப்போது யாழில் நடை பெறுவதாகச் செய்திகளில் வாசிக்கின்றேன்!

உண்மையில்.. இது நடை பெறுகின்றதா என யாராவது இங்கு தெரியப்படுத்துங்கள்! நான் எதற்காகக் கேட்கிறேன் எனில்...சாதி குறைந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களின் 'பொருளாதார நிலையே'  அவர்கள் ஒடுக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என நான் நம்புவது தான்!

இப்போது அவர்களது பொருளாதார நிலை...முன்னிலும் பார்க்க மிகவும் மேம்பட்டுள்ளது என நினைக்கிறேன்!

எனது ஊரில்.. முன்னாள் மேல் சாதி எனக்கருதப்பட்டாவர்களால் நடத்தப்பட்ட கோவில் திருவிழாவைக் கூட.. அவர்கள் கை விட்டபோது... கீழ் சாதியினர் எனக் கருதப்பட்டவர்கள் இப்போது எடுத்து நடத்துகின்றார்கள்!

மிகவும் வரவேற்கப் பட வேண்டிய விடயம்!

வாழ்த்துக்கள் கோமகன்... உங்கள் சிகரத்தில் இன்னுமொரு  மணிக் கல்லாக இந்தக் கதை அமையட்டும்! 

Edited by புங்கையூரன்
லகர ..ளகர, ழகர எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் எழுத்து நடை அருமை. புலம் பெயா் நாடுகளில்கூட இந்த சாதீய வெறி தலைவிாித்தாடுவது மறைமுகமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது, திருமணம் என்று வரும்பொழுது முதலில் என்ன சாதி என்பதுதான் பிரச்சனை. காதலிப்பவா்கள் ஓரளவு இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பி விடுகிறாா்கள். அடுத்த தலைமுறையினருக்கும் இதைத் திணிக்க முற்படும் எம் தமிழ் கலாச்சாரத்தை எப்படித் தடுப்பது என்பது தொியவில்லை. ஆனால் அடுத்த தலைமுறையினா் சாதீயத்தை சாகடிப்பாா்கள் என்ற நம்பிக்கை உண்டு, வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் எழுத்து நடை அருமை. புலம் பெயா் நாடுகளில்கூட இந்த சாதீய வெறி தலைவிாித்தாடுவது மறைமுகமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது, திருமணம் என்று வரும்பொழுது முதலில் என்ன சாதி என்பதுதான் பிரச்சனை. காதலிப்பவா்கள் ஓரளவு இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பி விடுகிறாா்கள். அடுத்த தலைமுறையினருக்கும் இதைத் திணிக்க முற்படும் எம் தமிழ் கலாச்சாரத்தை எப்படித் தடுப்பது என்பது தொியவில்லை. ஆனால் அடுத்த தலைமுறையினா் சாதீயத்தை சாகடிப்பாா்கள் என்ற நம்பிக்கை உண்டு, வாழ்த்துக்கள்.

கோமகனின் கதையை இணைத்த கிருபனுக்கு நன்றிகள்........

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதை சுட்டிக் காட்டிய புத்தனுக்கும் எப்பொழுதும் பல விடயங்களை எம்முடன் பகிா்ந்து கொள்ளும் கிருபனுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களிடையேயே  சாதி பார்க்கும் பெரியவர்கள் இருக்கும்போது  ஊரில் கட்டாயம் இருக்கும். பொது இடங்களிலும் அரசியலிலும் இருக்க முடியாத சூழ் நிலை. ஆனால் பெரும்பான்மையான  பெரியவர்கள் மனதில் அழிக்க முடியாமல் வேரூன்றிவிட்டது. சில தசாப்தங்கள் இது தொடரும்.
கோமகனின் எழுத்து நடை தொடர்ந்து வாசிக்க வைக்கின்றது.
இணைப்பிற்கு நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.