Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சச்சின் தனது திறமைக்கு நியாயம் செய்யவில்லை: கபில் தேவ் கருத்து

Featured Replies

சச்சின் தனது திறமைக்கு நியாயம் செய்யவில்லை: கபில் தேவ் கருத்து

 
KAPIL_DEV-TENDULKA_2601594f.jpg
 

சச்சின் டெண்டுல்கர் தனது அபரிதமான திறமைகளுக்கு நியாயம் செய்யவில்லை, அவர் முச்சதம், நாற்சதங்களை எடுத்திருக்க முடியும் ஆனால் அவரால் முடியவில்லை என்று உலகக் கோப்பை வென்ற இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் கபில் தேவ் கூறியுள்ளார்.

கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் கபிலை மேற்கோள் காட்டி வெளியான செய்தி வருமாறு: "என்னை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தனது திறமைக்கு சச்சின் நியாயம் செய்யவில்லை. அவர் செய்ததைக் காட்டிலும் இன்னும் கூட அதிகமாக சாதித்திருக்க முடியும் என்றே நான் எப்போதும் கருதுகிறேன்.

அவர் மும்பை வகையறா கிரிக்கெட்டில் தேங்கி விட்டார். கருணை காட்டாத சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர் தன்னை அவரது திறமைக்கேற்ப ஈடுபடுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. துல்லியமாகவும், நேராகவும் ஆடும் மும்பை வீரர்களுடன் அவர் செலவிட்டதை விட விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர்களுடன் அவர் நிறைய நேரம் செலவிட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அதாவது சதங்கள் எடுப்பது எப்படி என்பதை அறிந்துள்ள வீரர்கள் வகையில் அவர் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். ஆனால் அதனை இரட்டைச் சதமாக, முச்சதமாக, ஏன் 400 ரன்களாக அவரால் மாற்ற முடியவில்லை.

சச்சினிடம் திறமை இருந்தது. உத்தி ரீதியாக வலிமையானவர், ஆனால் அவர் சதமெடுக்கவே இருந்ததாக தெரிகிறது. ரிச்சர்ட்ஸ் போல் அல்லாமல் இவர் கருணையற்ற ஒரு பேட்ஸ்மெனாக இல்லை, துல்லியமான, சரியான ஒரு பேட்ஸ்மேனாகவே இருந்தார். நான் அவருடன் நிறைய பேசியிருந்தால், நிச்சயம் அவரிடம் கூறியிருப்பேன், ‘இன்னும் மகிழ்ச்சியுடன் ஆடு, சேவாக் போல் விளையாடு’ என்று கூறியிருப்பேன், என்றார்.

துபாயில் உள்ள ஜுமெய்ரா ஹோட்டலில் உள்ள கோவ் கடற்கரை கிளப்பில் கபில் இதனை தெரிவித்தார். ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், இயன் போத்தம் ஆகியோரும் இருந்தனர்.

ஆனால் ஷேன் வார்ன் கூறும்போது, “சச்சின் ஒரு ஆச்சரியமான வீரர். எனது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் நான் எதிர்த்து விளையாடிய பேட்ஸ்மென்களில் சச்சினே சிறந்தவர். அவர் மீதிருந்த எதிர்பார்ப்பு, வேகப்பந்து வீச்சு, ஸ்பின் இரண்டுக்கும் எதிரான அவரது திறமை, பந்துகளை அவர் கணிக்கும் விதம் என்று கிரிக்கெட் ஆட்டத்தின் மிகப்பெரிய வீரர் சச்சின், மிகச்சிறந்த வீரர் சச்சின்.

90-களின் நடுப்பகுதியில் பவுலர்களை ஆதிக்கம் செலுத்தினார். எந்த ஒரு வீச்சாளருக்கு எதிராகவும் அவரது திறமை ஈடு இணையற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகச்சிறப்பாக ஆடியவரும் சச்சினே.

இப்போது சச்சினின் வேறொரு பக்கத்தை பார்க்கிறேன், அவருடன் நான் வர்த்தகம் செய்து வருகிறேன். அவர் ஒரு சிறந்த நண்பர்” என்றார்.

வாசிம் அக்ரம் கூறும்போது, “எனக்கும் வக்கார் யூனுஸுக்கும் ஒரு மிகப்பெரிய வருத்தமென்னவெனில் டெண்டுல்கருக்கு எதிராக 10 ஆண்டுகள் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட முடியாமல் போனதுதான். 1989-ல் அறிமுக காலத்தில் விளையாடினோம் அதன் பிறகு 1999-ல்தான் ஆடினோம். வார்ன் கூறியது போல் ஆட்டத்தின் சிறந்த வீரர் அவர், 100 சர்வதேச சதங்கள் அவருக்காக பக்கம் பக்கமாக பேசும்” என்றார்.

தாங்கள் பந்து வீசியதில் சிறந்த பேட்ஸ்மென் யார் என்ற கேள்விக்கு, விவ் ரிச்சர்ட்ஸ் என்றார் கபில்தேவ், போத்தமும் அதையே கூறினார். அதாவது ஆஃப் திசையில் பீல்டர்களைக் குவித்து வீசினால் அவர் லெக் திசையில் கிராண்ட் ஸ்டாண்டுக்கு சிக்ஸ் அடிப்பார் என்றார் போத்தம்.

வாசிம் அக்ரம் கூறும்போது, “நான் தொடங்கும் போது விவ் ரிச்சர்ட்ஸ், மற்றும் சுனில் கவாஸ்கர். நான் கவாஸ்கரை ஒரேயொரு முறை வீழ்த்தியுள்ளேன். 90களில் சச்சின் மற்றும் பிரையன் லாரா” என்றார்.

http://tamil.thehindu.com/sports/சச்சின்-தனது-திறமைக்கு-நியாயம்-செய்யவில்லை-கபில்-தேவ்-கருத்து/article7818893.ece

  • தொடங்கியவர்

மிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொல்வது உண்மையா? - ஒரு சச்சின் ரசிகனின் கடிதம்

 

‘‘சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய திறமைக்கு நியாயம் செய்யவில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். ‘‘சச்சின் டெண்டுல்கர் மும்பை பையனாகவே இருந்தார். இரக்கமே இல்லாத சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் மாறவில்லை. மற்ற மும்பை வீரர்களுடன் அவர் செலவிட்ட நேரத்தை விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற சர்வதேச வீரர்களுடன் அவர் செலவிட்டிருக்கலாம். சச்சின் திறமையான வீரர்தான். ஆனால், அவர் ஏதோ எங்களைப் போலவே ஆடிவிட்டார். சதங்கள் அடிப்பதில் ஆர்வமாக இருந்தாரே தவிர 200, 300, 400 ரன்கள் எல்லாம் அவர் அடிக்க முயற்சிக்கவே இல்லை. அவரை ஷேவாக் போல கிரிக்கெட்டை ‘என்ஜாய்’ செய்து விளையாடப் பலமுறை சொல்லியிருக்கிறேன்’’ என்று சச்சினைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையை வென்று தந்த கபில்தேவ்.

sachin01.jpg

கபில்தேவ் சொல்வது உண்மையா?

ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடக்கவேண்டும், கவாஸ்கரின் 34 சதங்கள் என்கிற சாதனையை முறியடிக்க வேண்டும், லாராவை முந்த வேண்டும் என்று எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஆடியவரை ‘‘இதை எல்லாம் நீ செய்ய வேண்டும், இத்தனை சதங்கள் அடிக்க வேண்டும்’’ என்று சாதனைகளை நோக்கி லாடம் கட்டிய குதிரைப் போல அவரை ஓடவிட்டது யார்? கிரிக்கெட் விமர்சகர்களும், மீடியாவும், ரசிகர்களும்தானே. இந்த சாதனைகளை எல்லாம் சச்சின் முறியடித்தபோது, தனிப்பட்ட சாதனைகளுக்காக சச்சின் விளையாடுகிறார் என்று முதலில் விமர்சித்தவர்களும் அவர்கள்தான்.

20 வயது பொடியனாக நியூஸிலாந்துக்கு எதிராக அவர் ஆடிய ருத்திரதாண்டவத்தை மறக்க முடியுமா! சித்துவுக்கு காயம் ஏற்பட்டதால் முதல்முறையாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் வாய்ப்பு அளிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆக்லாந்து மைதானத்தில் பந்துகளை பிரிந்து மேய்ந்தார் சச்சின். 49 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். 15 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி அதிரடி ஆட்டம் ஆடினார். பௌலர்களைக் கண்டு பயப்படாமல் பந்துகளை நாலாபக்கமும் சிதறடிக்கும் பேட்ஸ்மேனாகத்தான் அறிமுகமானார் சச்சின். ஆனால், அவரை அதிரடியாக ஆடும் மனப்பான்மையில் இருந்து மாற்றியது அப்போதைய இந்திய அணி கேப்டன்களும், கிரிக்கெட் நிர்வாகமும்தான். ஓய்வுபெறும்போதும்கூட ‘200-வது டெஸ்ட்டோடு நீ ஓய்வுபெற்றுவிடு’ என நம்பரை சொல்லியே மிரட்டியது மீடியாவும், முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் அமைப்பும்தான்.

sachin02.jpg'100 சதங்கள் அடித்தார் சச்சின். அவ்ளோதானே..’ என்று சொல்லுவார்கள். ஆனால், சச்சினின் 100 சதங்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே அடிக்கப்பட்டவைதான். ஷார்ஜாவில் 1998-ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைய வேண்டும் என்றால் 276 பந்துகளில் 234 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை. சச்சினுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கங்குலி 17 ரன்களில் அவுட். ஒன் டவுன் வந்தவர் நயன் மோங்கியா. விக்கெட் கீப்பரான இவருடன்தான் 60 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் போட்டு நம்பிக்கை கொடுத்தார் சச்சின். அடுத்து வந்த கேப்டன் அசாருதின், அஜய் ஜடேஜா என இரண்டு சீனியர்களுமே சொற்ப ரன்களில் அவுட். வி.வி.எஸ். லக்ஷ்மணுடன் இணைந்து விளையாடி 143 ரன்கள் குவித்து ஒற்றை மனிதனாக இறுதிப் போட்டிக்குள் நுழைய வைத்து, இறுதிப்போட்டியிலும் சதம் அடித்து கோப்பையைப் பெற்றுத்தந்தார் சச்சின்.

‘‘சச்சின் டெண்டுல்கர் இருக்கிறானா, நாம் யாரும் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. ரிலாக்ஸாக இருக்கலாம்’’ என்பதுதான் அப்போது அவருடன் விளையாடிய இந்திய வீரர்களின் மனநிலை. அசாருதின், ஜடேஜா, மஞ்ரேக்கர் யாருமே விளையாட மெனக்கெட்டதே இல்லை. சச்சின் அவுட் ஆனால் இந்தியா அவுட். 2003 உலகக்கோப்பை வரை உண்மையிலேயே சச்சினை மட்டுமே நம்பி இருந்தது இந்திய அணி. அப்போது எப்படி அவர் ‘என்ஜாய்’ செய்து கிரிக்கெட் ஆட முடியும்?

பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை டெஸ்ட்டில் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலை. சடகோபன் ரமேஷ், வி.வி.எஸ். லக்ஷ்மண், டிராவிட், அசாருதின், கங்குலி என அந்தப் போட்டியில் ஆடிய இந்த ஸ்டார் பேட்ஸ்மேன்களில் 10 ரன்கள் எடுத்த டாப் ஸ்கோரர் டிராவிட் மட்டுமே. மற்றவர்கள் யாரும் சிங்கிள் டிஜிட்டடைக் கூடத் தாண்டவில்லை. இறுதி நாளில் நயன் மோங்கியாவுடன் சேர்ந்து அடித்து ஆடுகிறார் சச்சின். 18 பவுண்டரிகள் விளாசி 136 ரன்கள் குவித்து, வெற்றிக்கு இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் அவுட் ஆனார் சச்சின். அனில் கும்ப்ளே, ஜோஷி, ஸ்ரீநாத், பிரசாத் என அடுத்துவந்த சீனியர்கள் என எல்லோரும் சேர்த்து வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்தனர். சச்சினின் சதம் வீணாய்ப் போனது. சதம் அடிக்கவா அன்று விளையாடினார் சச்சின்?

sachin03.jpg

உலகக் கோப்பை தொடர் தோல்விகள், தோள்பட்டை, முதுகு காயங்கள், முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்கள், கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம் என சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்கள் அடக்கம். ஆனால் ஒருமுறைகூட அவர் நிதானம் தவறிப்பேசியதில்லை. மைதானத்தில் சட்டையைக் கழற்றிவிட்டு ஓடியதில்லை, பந்து வீச்சாளர்களுக்கு கெட்டவார்த்தைகளால் பதில் சொன்னதில்லை. நடுவர்களை முறைத்துக்கொண்டு வெளியேறியதில்லை. பேட்டிகளில் எந்த வீரரையும் குறை சொன்னதில்லை.

கிரிக்கெட் இன்னும் பல சிறந்த வீரர்களை உருவாக்கலாம். பல சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால், இன்னொரு சச்சின் டெண்டுல்கரை மட்டும் இனி கிரிக்கெட் உலகம் காண முடியாது. டென்னிஸ், கால்பந்து, தடகளம் என பல்வேறு விளையாட்டுகளில் பல காலம் கோலோச்சிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், சாதனைகள் படைக்கும் வேகத்தில் அவர்கள் சறுக்கிய வரலாற்றைப் பார்த்திருக்கிறோம். போதை மருந்து சர்ச்சைகள் முதல் பல்வேறு காரணங்களால் தடம் தெரியாமல் பல வீரர்கள் அழிந்திருக்கிறார்கள். ஆனால், சச்சினை 24 ஆண்டு காலமும் முதலிடத்தில் இருக்க வைத்தது அவர் ஆட்டத்தில் கடைபிடித்த ஒழுங்கு. சச்சினிடம் இருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் அடுத்த தலைமுறைக்கு இருக்கிறது.

sachin04.jpg

ஒரு விளையாட்டு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் சச்சின். டான் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ், கர்ஃபீல்ட் சோபர்ஸ், பிரையன் லாரா, ராகுல் டிராவிட் என கிரிக்கெட் பல உன்னத பேட்ஸ்மேன்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் இவர்கள் அனைவருமே வியந்து பார்க்கும் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்... சதம் அடிக்கிறார்கள்... ஆனால் சச்சினின் ஆட்டத்தில் உள்ள நேர்த்தியை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடியாது. ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் கிளாஸ் ரகம். மேற்கிந்திய வீரர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் பந்தை முரட்டுத்தனமாக அடித்து ஆடும் ஸ்டலை பின்பற்ற, ஃபீல்டர்களுக்கு இடையில் கச்சிதமாக பந்தை தள்ளிவிடும் ஆட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சச்சின். ஸ்டிரெயிட் டிரைவ், கவர் டிரைவ், ஸ்வீப் ஷாட்... என சச்சின் அளவுக்கு நேர்த்தியாக ஆடுபவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. கிரிக்கெட்டை விளையாட்டாக அல்ல, இதயமாக சுவாசிப்பவரால்தான் இப்படி ஆட முடியும்.

சச்சின் கிரிக்கெட்டை பேட்டால் அல்ல, இதயத்தால் விளையாடியவர்!

http://www.vikatan.com/news/article.php?aid=54397

  • கருத்துக்கள உறவுகள்

கபில் சொன்னது மிகச் சரிதான். டெண்டுல்கர் ஒரு மட்ச் வின்னராக ஒருபோதும் இருந்ததில்லை. தனித்து ஒருவராக ஆட்டத்தினை மாற்றும் ஆட்டக்காரர் அல்ல அவர். வஸிம் அக்ரம்,  சோன் போலக், ஜக்ஸ் கலிஸ், லான்ஸ் குளூஸ்னர் போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களும். அரவிந்த சில்வா, சங்ககார,  முகமட் கைப், டிவிலியர்ஸ் போன்ற மட்டையாளர்களும் ஆட்டத்தின் போக்கை தனித்து நின்று மாற்றும் திறமை படைத்தவர்கள். 

  • தொடங்கியவர்

சச்சின் பற்றிய தனது விமர்சனத்துக்கு கபில் விளக்கம்

 

கபில் தேவ். | கோப்புப் படம்.
கபில் தேவ். | கோப்புப் படம்.

தான் சச்சின் டெண்டுல்கர் பற்றி கூறியது அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கூறப்பட்டதே, ஆனால் அது தவறான கோணத்தில் விளக்கமளிக்கப்பட்டது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

மும்பை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களது கிரிக்கெட் ஆட்ட வகையறாவையும் கபில் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

சச்சின் டெண்டுல்கரால் இரட்டைச் சதம், முச்சதம், நாற்சதங்களை எடுக்க முடியவில்லை எனவும், மும்பை வகையறா கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் தேங்கி விட்டது என்றும், தன்னால் ஆலோசனை வழங்க முடிந்திருந்தால் சேவாக் போல் விளையாடக் கூறியிருப்பேன் என்றும் ரிச்சர்ட்ஸ் போல் பவுலர்களுக்கு கருணை காட்டாத வீரராக அவர் இருந்திருக்க வேண்டும் என்றும் கபில் தேவ் கலீஜ் டைம்ஸில் கூறிய கருத்து பல விமர்சனங்களுக்கு ஆளானது.

இந்நிலையில் கபில்தேவ் தனது கருத்து குறித்து கூறும்போது, “கபில் தேவ் இன்னொரு டெஸ்ட் அரைசதம் எடுக்க மாட்டார்” என்று சுனில் கவாஸ்கர் கூறுவதுண்டு. அவர் என் நல்லதுக்குத்தான் அப்படி கூறினார். நான் அடுத்த போட்டியில் அரைசதம் அடித்தேன் (பாகிஸ்தானுக்கு எதிராக மும்பையில் 79 பந்துகளில் 69 ரன்கள்), அதன் பிறகு சென்னையிலும் ஒரு அரைசதம் அடித்தேன். (98 பந்துகளில் 84 ரன்கள், 11 விக்கெட்டுகள், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்திய போட்டியாகும் அது)

நான் மேலும் 5,000 ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்பார் கவாஸ்கர். நான் இன்னும் எனது பேட்டிங்கை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் இப்போது ஓப்புக் கொள்கிறேன். ஆனால், கவாஸ்கரின் இந்தக் கருத்துகளை நான் தவறான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவில்லை, எனக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் அதனை கருதினேன்.

தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிய சச்சின் பற்றிய கருத்து பற்றி என்ன கூறுகிறீர்கள்?

'தேவையற்ற' என்பதுதான் இங்கு சரியான வார்த்தை. நான் சச்சின் டெண்டுல்கரை எப்போதும் விலைமதிப்பற்ற கிரிக்கெட் வீரர் என்றே கூறிவந்துள்ளேன். விவ் ரிச்சர்ட்ஸை விடவும் திறமை வாய்ந்தவர். கருணையற்ற முறையில் பேட் செய்வதற்கான திறமை அவரிடம் இருந்தது. ஆனால், நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர் அளிக்கவில்லை என்றே கருதுகிறேன். அவர் 100 சதங்களை எடுத்துள்ளார், ஆனால் அவரது ஆற்றல் இவற்றையெல்லாம் விட பெரியது.

வேறு எப்படி நான் அவரை வர்ணிக்க முடியும்? அவர் தனது திறமைக்கேற்ப சாதிக்கவில்லை என்பது அவர் மீதான புகழுரைதான். இன்னும் நன்றாக அவர் விளையாடியிருக்க முடியும். நான் கூறுவது தவறா?

சச்சின் அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில் நான் அவருக்கு எதிராக பந்து வீசினேன். என் பந்தை அவர் மிட் ஆஃபில் சிக்சர் அடித்தார். நான் ஏதோ ஆஃப் ஸ்பின்னர் போல் அவர் அடித்தார். நான் சற்று ஆடித்தான் போனேன். அவரது திறமை என்னை வியக்க வைத்தது.

சச்சின் அவரது காலத்தையும் விஞ்சி நிற்கும் வீரர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அவ்வாறு அவர் வரவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஷார்ஜாவில் 1998-ல் அவர் ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடியது என் நினவில் உள்ளது, அத்தகைய சச்சினை நான் நேசிக்கிறேன். அவரது ஆதிக்கம் முழுமையாக இருந்தது. அதிரடி ஆட்டமும் பிரமாதம்.

நல்ல பவுலர்களை சாதாரண பவுலர்களாக அவரது ஆட்டம் தோன்றச் செய்யும். நினைத்தபடிக்கு அவரால் பவுண்டரி அடிக்க முடியும். ஆனால் அவரது கரியர் முன்னேற்றம் கண்ட போது அத்தகைய ஆதிக்கத் தன்மை அவரிடம் இல்லை. அதனை அவர் எங்கோ இழந்து விட்டார்.

மும்பை கிரிக்கெட் வீரர்கள் பற்றி...

மும்பை கிரிக்கெட் வீரர்களின் திறமையை நான் சந்தேகப்பட்டால் நான் ஒரு முட்டாளாகவே கருதப்பட வேண்டியவன். மும்பை அணி 40 ரஞ்சி போட்டிகளில் சாம்பியனாகியுள்ளனர். 15 முறை தொடர்ச்சியாக வென்றுள்ளனர். இது ஒரு ஆச்சரியகரமான சாதனையே.

மும்பைக்கு வெளியேயிருந்து வரும் வீரர்கள் மும்பை வீரர்களைப் பார்த்துதான் தொழில் நேர்த்தியக் கற்றுக் கொண்டனர். பாம்பே பேட்ஸ்மென்கள் சரியான உத்தியில் ஆடுவதை விரும்புபவர்கள். உத்தி ரீதியான உச்சமே அவர்களது சிறப்பு. ரிவர்ஸ் ஸ்வீப், அப்பர் கட் கிடையாது. ஆனால் இப்போது ஆட்டம் மாறிவிட்டது, இனி கருணையற்ற முறையில் ஆடத்தான் வேண்டும்.

சந்தீப் பாட்டீல், ஓரளவுக்கு வினோத் காம்ப்ளி நீங்கலாக மும்பை, கருணையற்ற விதத்தில் பேட்டிங் ஆடும் வீரர்களை உருவாக்கவில்லை. தற்போது ரோஹித் சர்மா, ரஹானே வந்துள்ளனர். இவர்கள் பேட்டிங் வித்தியாசமானது, ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர்.

மும்பை கிரிக்கெட்டை நான் மதிக்கிறேன், இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர்கள் அவர்களே. ஆனால் ஆட்டம் இப்போது மாறிவிட்டது. அதனை நான் ஏற்றுக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.

நாம் பிராந்தியவாதத்தைத் தாண்டி நாம் வளர வேண்டியுள்ளது. மும்பை என்னுடையதும்தான். மும்பை கிரிக்கெட்டும், மும்பை கிரிக்கெட் வீரர்களும் அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். மும்பை, ஹரியாணா, டெல்லி என்று கிடையாது, இது இந்திய கிரிக்கெட் பற்றிய விவகாரமாகும். மேலும் அஜித் வடேகர் சார், நான் உண்மையான இந்தியன் மும்பை நம்முடைய பகுதி. நானும் பாம்பேவாசிதான்.

போதும் என்ற மனம் ஒருவருக்கு காலத்தில் வந்து விடும், ஆனால் சச்சினைப் பொறுத்தவரையில் போதும் என்று நாம் நினைத்து விட முடியாது. அவர் மேன்மேலும் மதிப்புமிக்கவர், இதைத்தான் நான் கூறினேன்.

இளைய சகோதரர் பற்றி மூத்த சகோதரர் ஒருவர் தான் நினைத்ததை கூறக் கூடாதா? நான் அதைத்தான் செய்தேன்.

இவ்வாறு கூறினார் கபில்தேவ்.

http://tamil.thehindu.com/sports/சச்சின்-பற்றிய-தனது-விமர்சனத்துக்கு-கபில்-விளக்கம்/article7833032.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.