Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்?

Featured Replies

தமிழினியின் தாய் சின்னம்மா:- நேர்காணல், படப்பிடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்……….

தமிழினி  உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்?

 
தமிழினி  உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும்  செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க வேணும் என்று நினைச்ச போது யாரும் அதுக்கு உதவயில்லை இனியென்ன மகளே இல்லை எனவே நாங்கள் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து தமிழினியை வைத்து அவவின்ர மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அதைதான் எல்லாரிட்டையும் கேட்கிறன். மற்றது பாருங்கோ இயக்கத்தில் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த என்ற மகளின்ர வாழ்கையை தடுப்பால வந்த பிறகு யாரும் எட்டியும் பார்க்கயில்லை, எதுவும் செய்யவில்லை என்றால் மற்ற சாதாரண முன்னாள் போராளிகளின் நிலைமைகளை நினைச்சுப்  பாருங்கோ பாவம் என கண்ணீருடன் கூறுகின்றார்  தமிழினியின் தாய் சின்னம்மா.

கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு முற்பகல் வேளை கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் உள்ள சிவபுரம் கிராமத்தில் வசிக்கின்ற அவரை சந்தித்து உரையாடிய போதே சின்னம்மா தனது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

சிவபுரம் கிராமம் ஒரு பரந்த வெளியான பிரதேசம். 2006 ஆம் ஆண்டு தமிழீழ நிர்வாக சேவையினரால் காணியற்றவர்களுக்கு கால் ஏக்கர் வீதம்  காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்ட பிரதேசம். இந்த காணிகள் இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன் மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் ஒன்பது பேருக்கு 15 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டது. இதில் இரண்டு  உரிமையாளர்கள் மாவட்டத்தில் உள்ளனர். ஏனையவர்கள் நாட்டில் இல்லை அல்லது உயிரோடில்லை. இந்தக் காணிகளில்தான் காணியற்ற தமிழினி குடும்பம் போன்று 254 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி தொடர்பான எந்த ஆவணங்களும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களினால் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளை எதனையும் பெறமுடியாதவர்களாக அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு தனிக் கதை. எனவே அது ஒரு புறமிருக்க தமிழினியின் அம்மா தமிழினி பற்றி எங்களோடு பகிர்ந்துகொண்ட விடயங்கள்

தமிழினி பிறந்ததும், இயக்கத்தில் இணைந்ததும் பற்றி கூறுங்கள்?

1972 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 13 திகதி ஜந்து பெண் சகோதரிகளுக்கும்,ஒரு ஆண் சகோதரருக்கும் மூத்தவளாக கிளிநொச்சி வைத்தியசாலையில் பிறந்த தமிழினி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தாள். இந்த நிலையில் 1983 ஆம்  தமிழினியின் தந்தை சிவசுப்பிரமணியம் பரந்தன் பகுதியில் புகையிரதம் மோதி இறந்து விட்டார்  எனது  அண்ணாவின் உதவியுடன் பிள்ளைகளை வளர்த்து வந்தேன்.

தமிழினி பாடசாலை முடிந்தவுடன் ஜெயந்திநகருக்கு தனது நண்பியுடன் ரீயூசனுக்கு  செல்வது வழமை. இப்படிதான் 1991 ஆம் ஆண்டு ஒரு நாள் எனக்கு திகதி ஞாபகத்தில் இல்லை  ரீயூசனுக்கு சென்றவள் வீடு திரும்பவில்லை அவளோடு சென்ற பிள்ளைதான் வந்து அம்மா  சிவகாமி இயக்கத்திற்கு போயிட்டா என்று சொன்னாள் எனக்கு அழுவதனை தவிர என்னசெய்வது என்றே தெரியவில்லை தாய்ப் பாசம் என் கண்களில் நீராக  மட்டுமே வெளியானது.

பின்னர் பெண்களின் பே(டி)ஸ் (போராளிகள் தங்குமிடம்) இருக்கும் சில இடங்களுக்கு சென்றேன் ஒரு பேஸில்(முகாம்) சொன்னார்கள் அவ மேலிடத்திற்கு போயிட்டா இங்கு இல்லை என்று அப்ப எனக்கு இயக்கத்தை பற்றி பெரிசா எதுவும் தெரியாது. மேலிடம் என்று சொல்ல நான் பயந்து போனன்.   வேறு எங்கையோ கொண்டு போயிட்டாங்கள் என்று நினைத்து இருந்தவர்களுடன் சத்தம் போட்டு பேசிவிட்டு வந்திட்டன்.

கொஞ்ச நாளைக்கு பிறகு தர்மபுரத்தில்  இருந்து அப்ப பரந்தனில் சனம் இல்லை ஆனையிறவு சண்டை நேரம் எல்லோரும் இடம்பெயர்ந்து சென்று விட்டனர். ஜெயந்திநகரில் உள்ள முகாம் ஒன்றில் அவா நிற்கிறாஎன அறிந்ததும் அங்கு நானும் எனது அண்ணாவும் சென்றோம். அங்கு கண்டவுடன் கட்டிப் பிடிச்சி அழுதனான்.  அழ வேண்டாம் அம்மா நாட்டுக்காக ஒவ்வொரு வீட்டிலிருந்து ஓராள் போகத்தானே வேண்டும் அதுதான் எங்கட வீட்டிலிருந்து நான் வந்திட்டன் என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று எனக்கு பெரிய மனிசி மாதிரி ஆறுதல் கூறினா, பிறகென்ன நானும் அழ அவவும் அழ வளர்த்த மாமாவும் அழ கொஞ்ச நேரம் கதைச்சிப் போட்டு வந்திட்டம்.

அவரும்(கணவன்) இல்லை குடும்பத்தில் சரியான கஸ்ரம். எனவே  பிள்ளைகளை அண்ணாவின் குடும்பத்துடன் (தனது சகோதரன்)  விட்டிட்டு நான்  வெளிநாட்டுக்கு நாட்டுக்கு  வேலைக்கு போயிட்டன்.


 
தமிழினியின் தங்கை எப்பொழுது இயக்கத்தில் இணைந்தார்?


நான் வெளிநாடு சென்றவுடன் எனது அடுத்த மகள் கௌரியும் (இயக்கப் பெயர் சந்தியா) 1992 ஆம் ஆண்டு இயக்கத்திற்கு போயிட்டா. அவ சிறுத்தை பிரிவில் போராளியாக இருந்தவ. தமிழினி இயக்கத்தில சேர்ந்து ஒரு வருடத்தில் தங்கையும் போராளியாகிவிட்டார். சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது உருத்திரபுரம் பகுதியில் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் கௌரி இரண்டாம் லெப். சந்தியாவாக வீரச்சாவடைந்துவிட்டார்.

அரசியல் துறை மகளீர் பொறுப்பாளர் தமிழினி பொறுப் பேற்றது பற்றி கூறுங்கள் அம்மா?

இயக்கத்தில் தமிழினிக்கு வழங்கப்பட்ட எல்லாப் பணிகளையும் சிறப்பாக செய்திருக்கின்றா. இதனை பல பெண் போராளிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என்னிடம் கூறுவார்கள் 1991 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த தமிழினி படிப்படியாக பலப்பிரிவுகளில் இருந்து 1998 ஆம் ஆண்டு மகளீர் அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார். இயல்பாகவே வீட்டில் கெட்டிக்காரியாகவே இருந்தா பள்ளிக் கூடத்திலும் அப்படிதான் எல்லோரையும் தன் பக்கம் இழுத்துவிடுவா. ஏ.எல் மட்டும்தான் படிச்சவ அதுவும் சோதனை எழுதவில்லை.

மகளீர் அரசியல்  துறைப் பொறுப்பாளராக வருவதற்கு முதல் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது சென்று பார்ப்பது வழக்கம் அப்போதும் என்னிடம் பத்து நிமிடங்கள் வரையே செலவு செய்வா பிறகு அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்கு நான் போகவேணும் கனக்க கதைக்க ஏலாது என்று சொல்லிவிட்டு சென்று விடுவா.  அரசியல்துறை மகளீர் பொறுப்பாளராக வந்த பின்பு முதல் தடவையாக என்னை சந்திக்கும் போது இனி என்னை சந்திப்பது கஸ்ரமாக இருக்கும் முந்தி மாதிரியெல்லாம் சந்திக்க முடியாது இயக்கம் எனக்கு என்னை நம்பி  அதிக பொறுப்புகளை ஒப்படைச்சியிருக்கு நான் நேரம் கிடைக்கும் போது உங்களை வந்து சந்திப்பன் என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம் எனக்கு ஒன்டும் ஆகாது நான் சாக மாட்டன் , அம்மா கெட்டிக்காரிதானே தைரியமாக இருங்கோ என்று கூறிவிட்டு சென்று விட்டா.

பிறகென்ன சொன்ன மாதிரியே தமிழினியை சந்திப்பது அரிதாகிவிட்டது. நாங்களும் எங்காவது கூட்டங்களுக்கு வரும் போது சந்திக்கிற நிலைமையே ஏற்பட்டது. எப்பொழுது பார்த்தாலும் பிசியாகதான் திரிவா.


எப்பொழுதும் இயக்கம்  பற்றியோ தன்ர வேலை பற்றியோ எதனையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டது கிடையாது. தடுப்பில் இருந்து வந்த பிறகும் அப்படிதான் கடந்த கால சம்பவங்களை மறந்தும் பேசியது  இல்லை.



பேராளியாக இருந்த காலத்தில் வீட்டை எப்படி பார்த்துக்கொண்டார் தமிழினி?

தமிழினி  நாட்டுக்காக போன பிள்ளை தன்னுடைய சுயநலமோ, வீட்டைப் பற்றிய சிந்தனைக்கோ அவ அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை அது  தமிழினியின் இயல்பு அதுவும் அரசியல் துறை மகளீர் பொறுப்பாளராக வந்த பிறகு  இந்த குணம் மேலும் அதிகமாகிவிட்டது.


உங்களுக்கு தெரியும்தானே கிளிநொச்சியில் இரத்தினபுரம் போன்ற இடங்களில் பொறுப்பாளர்களின் வீடுகள் எப்படி இருக்குது என்று?. எனது மகள் நாட்டுக்காக, பொது நலனுக்காக சென்றவள் அவள் எப்பொழுதும் தனதும் தனது குடும்பத்தினதும் நலன்களில் அக்கறை செலுத்தியது கிடையாது அப்படி அவள் செலுத்தியிருந்தாள்  என்றால் நாங்களும்  இயக்கத்தின் ஏனைய சில பொறுப்பாளர்கள் குடும்பங்கள் இருந்தது போன்று வாழ்ந்திருப்பம். என்ர பிள்ளை நாட்டுக்காக  இயக்கத்திற்கு போனவள் நாட்டுக்காவே வாழ்ந்தாள் இறுதி வரை அந்த ஏக்கத்துடனேயே இறந்தும் போனாள்.
 
  
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில்; தமிழினி உங்களுடன் இணைந்துகொண்டது பற்றி சொல்லுங்களேன்?


கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற பின்பு தமிழினியை காணமுடியவில்லை.  மகள் எங்க என்ன செய்கிறாள் என்பது தெரியவில்லை. பரந்தனிலிருந்து தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, புதுமாத்தளன், வளைஞர்மடம் என இடம்பெயர்ந்து சென்றோம். இந்தக்  காலப்பகுதியில் பேராளிகளாலும் தங்களது குடும்பங்களை சந்திக்க முடியவில்லை குடும்பங்களாலும் தங்களது போராளிப் பிள்ளைகளை தேட முடியவில்லை.

எனவேதான்  எனக்கு ஏற்பட்டுள்ள கஸ்ரத்தை தீர்க்கும் வகையிலும், மகளை (தமிழினி)  சந்திப்பதற்கான ஒரு வழியாகவும் சிறு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். மேசை ஒன்றில் அந்த நேரம் எனக்கு கிடைத்த சவற்காரம், வெற்றிலை, கச்சான் போன்ற பொருட்களை வீதி ஓரமாக வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தேன். அப்பொழுதுதான் 2009 மார்ச் மாதம் என நினைக்கிறன் , வளைஞர் மடத்தில் வைத்து மகளை பார்த்திட்டன். அவசர அலுவலாக போய்க்கொண்டிருந்தவ என்னைப் பார்த்ததும்  அம்மா இது என்ன வேலை என்று கேட்க உன்னை சந்திக்கதான்  இப்படி என்றேன். சரிசரி கவனம் என்று சொல்லி விட்டு என்னைப் பற்றியோசிக்க வேண்டாம் என்னை காணவில்லை என்றால் எங்கையும் தேடிதிரிய வேண்டாம் நான் செத்திருப்பன் அல்லது குப்பி கடிச்சிருப்பன்  நான் ஒராளுக்காக மற்ற பிள்ளைகளை வைச்சிக்கொண்டு இருக்க வேண்டாம் நீங்கள் சனத்தோட வெளி;கிட்டு போங்கோ என்று சொல்லிப்போட்டு போயிட்டா. ஆனல் அவளுடைய முகம் நான் வழமையாக காணும் தமிழினியின் முகம் மாதிரி இருக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்தவள் போன்று காணப்பட்டாள்.

அதற்கு பிறகு எல்லாம் முடிந்து முள்ளிவாய்க்காலிருந்து வட்டுவாகல் ஊடாக முல்லைத்தீவு நோக்கி போய்க்கொண்டிருக்கிறம். ஆனால் எனக்கு எனது கால்கள் எடுத்து வைத்து நடக்க முடியவில்லை தமிழினிக்கு என்ன நடந்திருக்கும் அவள் எங்க இருப்பாள் என்ன செய்யப்போகி;ன்றாள் உயிரோடுதான்  இருக்கின்றாளா? இப்படி பல கேள்விகள். இது மே பதினெட்டாம் திகதி.

நாங்கள் அனைவரும் முல்லைத்தீவுக்கு வந்திட்டம் அப்போது எனது மருமகன்  வந்து சொன்னாh,  மாமி அக்கா இருக்கிறா என்று. எனக்கு நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை எங்க இருக்கிறா வாங்கோ போய் பார்ப்பம் என்று  அவரையும் கூட்டிக்கொண்டு போனால் ஒரிடத்தில் நிறைய சனம் மற்றும் போராளிகளுடன் இருக்கிறா. பிள்ளையை பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை பஞ்சாபியுடன் இருந்தா. தமிழினி தான் வைத்திருந்த பாக்; ஒன்றில் ஒரு பஞ்சாபி ஒன்றை  வைத்திருந்தவ அதைதான்  போட்டிருந்தா. எனக்கு பதற்றம், அழுகை என்ன செய்வது என்றே தெரியவில்லை என்னிட்ட  இருந்த பத்தாயிரம் ரூபா காசை கொடுத்து அம்மா (தமிழினியை) நீ  இங்க வராத எங்கையென்றாலும் போ என்றேன். எனக்கு தெரியாது நாங்கள் இருப்பதுதான் கடைசி இடம், இனி போவதற்கு எந்த இடமும் இல்லை நான் எங்க அம்மா இனி போறது உங்களுடன்தான் வர வேண்டும் என்று அழுதவாறு சொன்னாள். பிறகு தமிழினியை கையில் பிடித்துக்கொண்டு நீ யாரையும் எதிர்பார்க்க கூடாது என்னோட வா என்று கூட்டிக்கொண்டு போக தமிழினி தயங்க வெளிக்கிட்டா. நான் விடவில்லை. உனக்காகதான் கடைசி வரைக்கும் இருந்தனான் அண்ணா (தமிழினியின் மாமா) எல்லாம் இரண்டாம் மாதமே ஆமிக் கட்டுப்பாட்டுக்குள் போயிற்றார். நீ என்னோட வா எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறன் என்று கூறி கூட்டிக்கொண்டு வந்து பஸ்ஸில ஏறி ஓமந்தை வரைக்கும் வந்திட்டம்.

மெனிக்பாம் முகாமில் தமிழினி எவ்வாறு கைது செய்யப்பட்டார்?


மகள் மெனிக்பாம் முகாமில் கைது செய்யப்பட்டது என்பது  ஒரு அப்பட்டமான பொய். 2009 மே இருபதாம் திகதி ஒமந்தையில் வைத்து போராளிகள், எல்லைப்படைகள் என எல்லோரையும் தனித்தனியாக வருமாறு அறிவிச்சாங்கள.; அப்ப தமிழினியும் எழும்பினாள், நான் கையை பிடிச்சி இருத்திட்டன் ஏன் எழும்புறாய் நீ என்னோடு இரு நான் பார்த்துக்கொள்றன் என்றேன். இ;ல்லை அம்மா சரணடையப் போகிறேன். பிரச்சினையில்லை என்று சொல்லிப் போட்டு எழும்பி போயிட்டா. காலை ஜந்து மணி இருக்கும்  பல போராளிகளுடன் அவவும் சரணடைகிறாள் பிறகு எங்களை மெனிக்பாம் வலயம் நான்கு முகாமுக்கு  ஏற்றிவிட்டார்கள். அதற்கு பிறக்கு சில மாதங்கள் தமிழினியின் தொடர்பு இல்லை. நான் முகாமுக்கு வருகிற ஜசிஆர்சி போன்ற பல நிறுவனங்களிடமும் சென்று பதிவுகளை மேற்கொண்டேன். பத்திரிகைகளில் எல்லாம் தமிழினி மெனிக்பாம் முகாமில் வைத்து கைது செய்யப்பட்;டுள்ளதாக பல தகவல்கள் வந்தது. ஆனால் அது அனைத்தும்  அப்பட்டமான பச்சைப் பொய்.

இதற்கு பிறகு பல தகவல்கள்  வந்தது தமிழினி நாலாம் மாடியில் இருக்கிறா, அந்த முகாமில் இருக்கிறா இந்த முகாமில் இருக்கிறா என்று எல்லாம் சொன்னார்கள் எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை. நானும் முயற்சியை கைவிடவில்லை வவுனியாவில உள்ள சொந்தகாரர் ஒருவரிடம் தமிழினியின் விபரங்களை கொடுத்து ஜசிஆர்சி அலுவலகத்தில் பார்க்கச்சொல்லி கேட்டனான.;  அவர்  போய் பார்த்த இடத்திலதான் தமிழினி வெலிக்கடைச் சிறைசாலையில் இருப்பது தெரியவந்து.

பிறகு நானும் முகாமிலிருந்து வெளியால வந்திட்டன். தமிழினியை பார்க்க வெலிக்கடைக்கு எங்களுடைய சித்தப்பா ஒருவரையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு போறன் வெலிக்கடை எங்கு இருக்கு  எப்படி போகவேணும் என்று எதுவும் தெரியாது மகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வெளிக்கிட்டு போயிற்றம். ஒரு வழியாக விசாரித்து வெலிக்கடை சிறைக்கு  போய் மகளை பார்த்த போது எனது மகளா? என்ற சந்தேகம் மெலிஞ்சி முகம் எல்லாம் கறுத்து ஆள் அடையாளமே மாறியிருந்தா.  கண்டவுடன் அவவும் அழுது நானும் அழுது சில நிமிடங்கள்  கதைச்சுப் போட்டு கொண்டு போன பொருட்களையும்  கொடுத்தவிட்டு வந்திட்டன். அதற்கு பிறகு தொடர்ச்சியாக மாத்திற்கு ஒருக்கா அல்லது இரண்டு மாத்திற்கு ஒருக்கா பலகாரங்கள் மற்றும் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வெலிக்கடைக்கு சென்று பார்த்திட்டு வருவன். கஸ்ரம்தான் ஆனாலும் என்ன செய்யிறது தாய் பாசம். எவரும் பெரிசா எதுவும் செய்ததாக இல்லை. எனது மகள் ஒராள் நோர்வேயில் இருக்கிறா அவதான் சிறிய உதவிகளை செய்தவ.

தமிழினி சிறையிலும், தடுப்பிலும் இருந்த போது யார் யார் சென்று பார்த்தார்கள் உதவி செய்தார்கள்?

தமிழினி சிறையில் இருந்த போது அவவ யாரும் சென்று பார்த்தது கிடையாது.  சிறையில் இருந்து வெளியில் எடுக்கவும் எவரும் எதுவும் செய்யவில்லை.  மகளின் மரண வீட்டில் பலரும் பல மாதிரி கதைத்தார்கள் ஆனால் இதுதான் உண்மை. ஆக சிறிதரன் எம்பி மட்டும் வேறு யாரையோ வெலிக்கடை சிறைக்கு பார்க்க போன இடத்தில் தமிழினியையும் எட்டிப்பார்த்திட்டு  வந்தவர்.

பிறகு தடுப்பு முகாமுக்கு வந்து விடுதலையாகி வரும் வரைக்கும் எவரும் தமிழினியை எட்டியும் பார்க்கவில்லை. தமிழனி வீட்டுக்கு வந்த பின்னரும் எவரும் அவரை வந்து பார்த்து சுக துக்கங்கள் விசாரிக்கவும் இல்லை, உதவவும் இல்லை. அனால் அடிக்கடி ஆமி, சிஜடி, புலனாய்வு என்று அவர்கள் வந்து போனார்கள்.

தமிழினி தடுப்பில் இருக்கும் போது ஒரு நேரம் பார்க்க போவதற்கு காசு இல்லாமல் எத்தனை தடவைகள் கஸ்ரப்பட்டிருக்கிறன். இதெல்லாம் யாருக்கு தெரியும். நோர்வேயில் உள்ள மகள்தான் அப்பப்ப  உதவிகள் செய்யிறவ அதை வைச்சிதான் அவவ போய் பார்த்திட்டு தேவையான உடுப்பு, சாப்பாடுகள் எல்லாம் வாங்கி கொடுக்க முடியாது என்றாலும் கேட்டதில  கொஞ்சத்தையாவது வாங்கி கொடுத்துப் போட்டு வாறது. 

தமிழினியின் வழக்குக்காக ஒரு சிங்கள சட்டத்தரணி உதவியதாக கூறப்படுகிறது எப்படி, எவ்வாறு?


தமிழினியை சிறையில் இருந்து வெளியில் எடுக்கும் முயற்சியி;ல் பல லோயர்மாரை சந்தித்தன.; இந்த நேரத்தில் எனக்கு சென்னார்கள் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை (முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பா.உ) போய் பாருங்கோ என்று அவரை போய் சந்தித்து விசயத்தை சொன்னன். அவர்  சொன்னார் அம்மா இந்த வழக்கை ஒரு மூன்று இலட்சம் வரை செலவாகும்  என்று, நான் மூன்று ரூபாவுக்கும் வழியில்லாத நான் எப்படி  மூன்று இலட்சத்தை கொடுக்கிறது. ஜயா நீங்கள் வழக்குக்கு காசு கேட்கிறீங்களா? அல்லது வசனத்திற்கு காசு கேட்றீங்களா என்று கேட்டுப்போட்டு நான் வந்திட்டன்.

பிறகு எனக்கு ஒருவர் சொன்னார் தலைமன்னாரில் ஒரு லோயர் இருக்கிறார் அவர் நல்ல மனிசன் பீஸ் குறைவாகதான் கேட்பார் போய் பாருங்கோ என்று . நானும் இடம் வலம் தெரியாது அவருடைய போன் நம்பரையும் எடுத்துக்கொண்டு விசாரிச்சு விசாரிச்சு போய் ஆளை சந்தித்து விசயத்தை சொன்னன். அவர் சொன்னார் சரியம்மா நாங்கள் வழக்கை எடுக்கிறம்.  ஆனால் நான் மட்டும் பேச முடியாது கொழும்பில் உள்ள ஒரு சிங்கள லோயரையும் பிடிக்க வேண்டும் என்று. நான் திருப்பிச் சொன்னனான் ஜயா என்னிட்ட அதிக பணம் தாரதற்கு வசதியில்லை ஆனாலும் என்னால் முடிஞ்ச காசை தருவன் இதையொரு உதவியாக செய்து தாங்கோ என்று சரி நாங்கள் காசு எவ்வளவு என்று பிறகு சொல்லுறம் நீங்கள் விபரத்தை தாங்கோ என்று எல்லா விபரத்தையும் பெற்றுக்கொண்டார். என்னைப் பொறுத்தவரை  தலை மன்னார் லோயர் ஒரு தெய்வம் மாதிரி.

பிறக்கு ஒவ்வொரு தவணைக்கும் ஒரு நாளைக்கு முதல் போன் எடுத்துச் சொல்லுவார் கொழும்புக்குதான் தமிழினியின் வழக்குக்காகதான் போய்க்கொண்டிருக்கிறன் என்று அப்படியொரு மனிசன். வழக்கு சில தவணைகள் நடந்தது நான் ஒரு தடவைதான் நீதிமன்றம் போனனான் அங்கு நானும் தலைமன்னார் லோயரும் சிங்கள லோயரும் சோடா வேண்டி குடிச்சனாங்கள் அப்போது எனக்கு தெரியாது தமிழினியின் வழக்குகாக நான் கொடுக்க போவது இந்த சோடா மட்டும்தான் என்று. 

பிறக்கு நான் கொழும்பு போவதில்லை வழக்கு தவணைக்கு முன் லோயருக்கு கோல் பண்ணினால் கொழும்புக்குதான் போய்க்கொண்டிருக்கிறன்  என்ற பதிலே பெரும்பாலும் எனக்கு வரும்.

2012  ஆம் ஆண்டு ஒரு நாள் மதியம் பதினொரு மணியிருக்கும் சமைத்துக்கொண்டிருக்கும் போது போன் கோல் வந்தது  அந்த சிங்கள லோயர் சொன்னார் தனக்கு தெரிஞ்ச கொச்சை தமிழில் தமிழினி அம்மா தமிழினி றிலீஸ் நீங்க ஒங்கட மகளோட சந்தோசமாக வாழுங்கோ அவ புன்வாழ்வுக்கு விட்டாச்சு கெதியில ஒங்களோட சேர்;ந்திருவா என்ற அந்த வார்த்தைகள் இப்பொழுதும் என்ற காதுக்குள்ள கேட்டுகொண்டிருக்கு.


சில நாட்களுக்கு  பிறகு சிங்கள லோயருக்கு கோல் பண்ணி எவ்வளவு பீஸ் என்று கேட்டனான் அவர் சொன்னார் நீங்க மனம் நோகாமல் தமிழினியோடு சந்தோசமாக இருங்கோ அது காணும் எங்களுக்கு என்று. திரும்ப தலைமன்னார் லோயருக்கு எடுத்து கேட்டனான்  அவர் சொன்னார்.  அததெல்லாம் வேண்டாம் தமிழினி நாட்டுக்காக சனத்திற்காக எவ்வளவோ கஸ்ரப்பட்டிருக்கா நாங்கள் அவவுக்காக இதையாவது செய்யக் கூடாதா? எத்தனை வழக்குகள் செய்யிறம் இதை நாங்கள் ஒரு சேவையாக செய்யிறம் என்றார்.

தமிழினியின் விடுதலையின் முழு பங்களிப்பு  இந்த இரண்டும் லோயர்களையே சாரும். அவர்களால்தான் தமிழினி தடுப்புக்கு போய் விடுதலையாகி வந்தவ. மற்றும்படி யாரும் எங்களுக்கு எந்த சின்ன உதவியும் செய்யவில்லை.

தமழினி தடுப்பிலிருந்து விடுதலையாகிய காலம் வடக்கு மாகாண சபை தேர்தல் காலம் அப்போது நிலைமைகளை எவ்வாறு இருந்தது?


ஒரு வருட புனர்வாழ்வு முடிச்சி வெளியாள 2013 யூன் 29 ஆம் திகதி பூந்தோட்டம் தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போது மாகாண சபை தேர்தல் காலம். அப்ப பலரும் பல விதமாக கதைச்சினம் செய்திகளும்  தமிழினியை பற்றி கண்டப்படி வெளிவந்தது.

தமிழினி தொலைபேசி வைத்திருக்கவில்லை, தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக அவ அதை தவிர்த்துக்கொண்டா. என்னுடைய நம்பருக்குதான் எல்லோரும் தொடர்பு கொள்வார்கள் அப்ப அந்த நேரத்தில் பலர் தொடர்புகொண்டு தமிழினி தேர்தலில் நிற்கப்போறாவா என்றெல்லாம் கேட்டிச்சினம். பத்திரிகையாளர்கள் எடுத்து கேப்பினம்  நான் எல்லோருக்கும் பதிலளிச்சனான்  எல்லோருக்கும் சொன்னது அப்படி எதுவும் இல்லை தயவு செய்து எங்களை நிம்மதியாக இருக்க விடுகோ என்று.

தமிழினி பற்றி அரசியல் வாதிகள் முதல் பத்திரிகைகள் வரை சொன்ன எதுவும் நடக்கவில்லை. அதெல்லாம் பொய் என்று என்ற மகள் நிரூபித்து உலகத்தை விட்டு போயிட்டா. தமிழினி அரசாங்கத்துடன் சேர்ந்திட்டா அதனால்தான் தேர்தல் காலத்தில் விடுதலை  செய்யப்பட்டவ தேர்தலில் நிற்கப்போறா, இப்படி பல கதைகள் கதைச்சினம் ஆனால்  அப்படி எதுவும் நடக்கயில்லை. அமைதியாக இருக்க விரும்பினா அப்படியே போயிட்டா..
  
தமிழினி தடுப்பிலிருந்து வந்த பின்னர் தனது சமூகத்தில் எவ்வாறான சவால்களை அல்லது நெருக்கடிகளை  எதிர்கொண்டார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு வருட புனர்வாழ்வு முடிச்சி வெளியில் வந்த  மகள் இங்க (பரந்தனில்) இருக்க விரும்பவில்லை. உங்களுக்கு தெரியும்தானே சமூகத்தில் நல்ல மனிசரும் இருப்பினும் கெட்ட மனிசரும் இருப்பினும் சில பேர் மனதை நோகடிக்கிற மாதிரி நடக்க மாட்டினம் ஆனால் பல பேர் அப்படியில்லை.

மெனிக்ப்பாம் முகாமில் இருந்த போது ஒருக்கா ஜசிஆர்சியிடம் பதிய போயிருந்தன,; அப்ப பலர் என்னை பார்த்து இவன்ர மகள்தான் பிள்ளைகளை பிடிச்சவ அவ உயிரோட எங்கையோ இருக்கிறா ஆனால் எங்கட பிள்ளைகள்தான்  இல்லை என்று என் காதுபடவே மிக மோசமாக கதைச்சினம் சிலர்  எங்களுக்கு பின்னாள் கதைச்சிருக்கினம்.

தமிழினி  தடுப்பால வந்தவுடனும் இப்படி பலர் கதைச்சினம் சிலர் அவ கேட்கிற மாதிரியே கதைச்சிருக்கினம் பிள்ளைகளை பிடிச்சி கொண்டு பொய் கொன்று போட்டு அவ மட்டும் உயிரோட வந்திட்டா என்று  கதைப்பினம். இதால தமிழினிக்கு இங்க வாழ விருப்பம் இல்லாமல் போயிட்டுது. வெளிய வெளிக்கிட்டு போக முடியாது விடுதலையாகி வந்தும் சிறைக்குள் இருக்கிற மாதிரி இருக்க அவ விரும்பவில்ல. அதனாலதான் அவ கொழும்புக்கு போயிட்டா. பூந்தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்பில்தான் அதிகம் இருந்தவ. அவவுக்கு இங்க (பரந்தனில்) இருக்கவே விருப்பம் இல்லை.

தமிழினியின் திருமணம் பற்றி?

எனக்கு நோர்வேயில் ஒரு மகள் இருக்கிறா அவதான் எங்களுக்கு அப்ப உதவி செய்கிறவ. அவதான் அம்மா அக்காவிற்கு இனி கலியாணம் செய்து வைக்க வேண்டும,; ஜெயகுமார் என்று எனக்கு தெரிச்ச ஒரு அண்ணா இருக்கிறார் லண்டனில் இருக்கிறார் நீங்கள் அக்காவுடன் கதையுங்கோ என்று. நான் சொன்னனான் இல்லை நீயே கதை என்று பின்ன அவவும் தமிழினியுடன் பல தடவைகள் கதைத்திருக்கிறா.  ஒம் என்று சொல்லாதவ  என்னவோ ஒம்  என்று சொல்லிப் போட்டா பிறகு தடுப்பால வந்தவுடன் அதே  வருசம் புரட்டாதி மாதம் 28 ஆம் திகதி எழுத்து எழுதி செய்து வைச்சம். கலியாணம் வேண்டாம் என்று இருந்தவ நாங்கள் தான் வலுக்கட்டாயப்படுத்தி செய்து வைச்சம்.

சிவபுரத்தில் உங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு பின் நிரந்தர வீடு கிடைக்காது போனமைக்கு  கிளிநொச்சியில்  அரசோடு சேர்ந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் காரணம் என்று கூறப்படுகிறது அது பற்றி குறிப்பிடுங்கள்?

நாங்கள் இருக்கிற சிவபுரம் காணி 2006 ஆம் ஆண்டு தமிழீழ நிர்வாக சேவையினரால் கால் ஏக்கர் வீதம் காணியற்ற மக்களுக்கு என வழங்கப்பட்டது. இங்க யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த வந்து மக்கள் மற்றும் கிளிநொச்சியில் காணியற்ற மக்கள் என எல்லோருக்கும் வழங்க்கப்பட்டது. இங்கு மாவீரர் குடும்பங்களும் இருக்கு போராளி குடும்பங்களும் இருக்கு இல்லாத குடும்பங்களும் இருக்கு  இந்த காணிகள் காணியற்ற மக்களுக்கு என்று வழங்கப்பட்ட  காணிகள் எங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் மத்திய வகுப்புத்திட்ட காணிகள் என்று சொல்லினம். காணிக்குரிய சொந்தக் காரர்களில் இரண்டு பேர் கிளிநொச்சியில் இருக்கினம் அவர்கள் பிரச்சினை போடுறதால எங்களுக்கு காணிக்குரிய  ஆவணங்கள் எதுவும் வழங்கமுடியாதாம்.

சொந்தமாக காணியிருந்தால்தான் வீட்டுத்திட்டம் கிடைக்கும் மற்றவையிளின்ர காணியில எங்களுக்கு வீடு கட்டித்தர மாட்டினம் தானே. இந்தக் காணிப்பிரச்சினைதான் எங்களுக்கு வீட்டு;த்திட்டம் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம். எனக்கு மட்டும் வீட்டுத்திட்டம் கிடைக்காது ஏனையவர்களுக்கு கிடைச்சிருந்தால் அப்படி சொல்லலாம் ஆனால் சிவபுரத்தில் உள்ள இருநூறு, முந்நூறு குடும்பங்களும் நிரந்தர வீடுகள் இல்லாமல் தான் இருக்கிறார்கள். எங்கள் கிராமத்திற்கு வீட்டுத்திட்டம் வரயில்லை காணி பிரச்சினை தீரும் வரைக்கும் வீட்டுத்திட்டம் வராது என்று சொல்லியினம். மற்றையது நாங்கள் அந்த எம்பியிடம் எந்த உதவிக்கும் போனது கிடையாது. எங்களுக்கு எங்களுடைய காணி பிரச்சினையால்தான் வீடு கிடைக்கவில்லை. மற்றது அந்த எம்பிதான் ஊருக்கு கரன்ட் கொண்டு வந்தவர் அவரால்தான் நாங்கள் கரன்டில இருக்கிறம்.

இந்த காணிகள் பணக்கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு ஏற்கனவே  வேறு இட்களில் பத்து ஏக்கர் இருபது ஏக்கர் என்று காணிகள் உண்டு எனவே இந்த காணிகளை இங்க குடியிருக்கின்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். இங்க உள்ள எல்லோரும் பாவம் என்றார்

நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக கச்சான் வியாபாரம் செய்வதாக செய்திகள் வந்திருக்கின்றனவே அது உண்மையா?

நான் எப்பொழுதும் எங்கையாவது வேலை செய்வன் உங்களுக்கு தெரியும் 2009 க்கு முன் தமிழர் புனர்வாழ்வுக்கு கழகத்தில் வேலை செய்தனான், இறுதி யுத்தம் நடக்கும் போது வியாபாரம் பிறகு மீள்குடியேற்றத்திற்கு பின்னரும் எனது வருமானத்திற்கு வியாபாரம் செய்தன். எனக்கு எல்லாம் பொம்பிள பிள்ளைகள் எல்லோரும் கலியாணம் செய்திட்டினம். அவையலிட்ட நான் எந்த  உதவியும் கேட்டு போறது இல்லை. என்ர வாழ்க்கைக்கு நான் உழைக்க வேணும். அதுதான் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் திருவிழா நேரம் கச்சான் விற்க வெளிக்கிட்டன். அப்ப தமிழினிட்ட கேட்டனான் இப்படி செய்யப் போறன் என்று அவ சொன்னா, வேண்டாம்  என்று சொன்னா கேட்கவா போற அம்மா, உங்கட விளையாட்டுகளில்  இதுவும் ஒன்று எதனையென்டாலும் செய்யுங்கோ என்று.

எனக்கு கொஞ்ச தகரம் கிடைச்சது. அதையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு முன்னாள் உள்ள சிறிதரன் எம்பி ஜயாவின்ர ஓப்பிசில போய் ஒரு மேசையும் கதிரையும் வாங்கி பத்துநாளும் கச்சான் விற்றனான். இப்படி எங்கட வாழ்க்கையை நாங்கள் ஒரு மாதிரி ஓட்டிக்கொண்டு போனனாங்கள் யாரிட்டையும் போகயில்லை.

தமிழினிக்கு புற்றுநோய் என்று எப்பொழுது அறிந்துகொண்டீர்கள்?


பெரும்பாலும் போராளிகளுக்கு அல்சர் இருக்கும் அவர்கள் நேரத்திற்கு நேரம் சாப்பிடுவது இல்லை எனவே தமிழினியும் அடிக்கடி வயிற்று வலி என்று சொல்லும் போது நான் சொல்லுவன் நீ நேர காலத்திற்கு சாப்பிடுறது இல்லை, கூட்டம் அது இது என்று திரிஞ்சுபோட்டு பிறகு ஒரு சோடாவை குடிச்சுப் போட்டு போறது இப்படி இருந்தால்  அல்சர் வராமல் வேறு என்ன செய்யும் என்று. ஆரம்பித்தில் வயிற்று வலி  வரும் போதெல்லாம் அல்சர் மருந்துதான் குடிக்கிறவ.

ஆனால் இந்த வருடம் (2015) சித்திரை மாதம்தான்  புற்றுநோய் இருக்குது என்று கண்டுபிடிச்சது. கல்லீரலுக்கு பக்கத்தில் கான்சர் தமிழினிக்கும் சித்திரை மாதம்தான் தெரியும் தனக்கு கான்சர் என்று. வருத்தம் வந்து கடைசி ஒரு மாதம் சரியா கஸ்ரப்பட்டுப் போட்டா. மருமகனும் அவவோட சரியாக கஸ்ரப்பட்டவர்.

இறுதியாக தமிழினியின் மரணம் அதன் பின்னரான நிலைமைகள் தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

தமிழினி  உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும்  செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க வேணும் என்று நினைச்ச போது யாரும் அதுக்கு உதவவில்லை இனியென்ன மகளே இல்லை எனவே நாங்கள் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து தமிழினியை வைத்து அவவின்ர மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அதைதான் எல்லாரிட்டையும் கேட்கிறன். மற்றயது இயக்கத்தில் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த என்ற மகளின்ர வாழ்கையை தடுப்பால வந்த பிறகு யாரும் எட்டியும் பார்க்கயில்லை என்றால் மற்ற முன்னாள் சாதாரண போராளிகளின் நிலைமைகளை நினைச்சுப்  பாருங்கோ பாவம் அவர்கள் என்றார் கண்ணீருடன்.

நேர்காணல், படப்பிடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்………

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125926/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாயின் ஞாயமான மனக் குமுறல்.
"எம்மவரை" கைவிட்டு விட்டோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இயக்கத்தின் அழிவு, 
கே பீயின் கைது 
இலங்கை புலனாய்வு தொடர் நடவடிக்கைகள் 
இலங்கையில் அப்போது இருந்த ராஜபக்சே சகோதரர்களின் மூர்கத்தனமான ராணுவ நடவடிக்கைகள் 
எமக்குள் இருந்த பிளவுகள், அர்த்தமற்ற அரசியல் ஆய்வுகள், கணிப்பிடுகள்   
புலத்தில் இருந்த பினாமிகள் சிலரின் செயற்பாடு 
மொத்தத்தில் யாரையும் யாருமே நம்பும் விதத்தில் நிலைமைகள் இருக்கவில்லை.
இந்த துரதிஷ்டமான நிலை இன்று வரைக்கும் தொடர்கின்றது என்பது சாபக்கேடு.
தமிழ் அரசியல் கட்சிகள் கூட எட்டி நின்று  தான் காரியம் செய்கிறார்கள்.
தமிழினி அக்காவின் நிலை தெரிந்து இருந்தால் நிச்சயம் புலத்தில் இருந்து ஏதாவது உதவி போய் சேர்ந்திருக்கும் என்பதுவும் உண்மை.... 
அக்காவின் விடுதலைக்கு பாடு பட்ட சிங்கள, மற்றும் தமிழ் வழக்கறிஞர் இருவருக்கும் கரம் கூப்பி சிரம் தாழ்த்துகின்றேன். 

எம்மை மன்னித்துவிடு தாயே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிக்கும் போதே மனம் வேதனையடைகின்றது.
புலம்பெயர்தமிழர்கள் ஒரு நேர உணவையாவது தவிர்த்து போரின் மூலம் வாழ்வாதாரங்களை இழந்த உறவுகளுக்கு உதவவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.