Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கான தனித்துவநாள்!!

Featured Replies

தமிழருக்கான தனித்துவநாள்

தமிழர்களின் ஆண்டின் முதல் மாதம் சித்திரை மாதம் என்றே பலர் கூறுகின்றோம். ஆனால் உழவர்கள் தை மாதத்தையே ஆண்டின் தொடக்க மாதம் என்று போற்றுகின்றனர். தை மாதப் பிறப்பை ஒரு புத்தாண்டைப் போல தெய்வ வழிபாட்டுடன் உண்டு உடுத்து கொண்டாடி மகிழ்கிறார்கள். தை மாதத்திற்கு சிறப்புகளும், பெருமைகளும் நிறையவே உண்டு. அந்தவைகையில் பொங்கல் விழாவானது தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகும். தமிழர்கள் எத்தனையோ விழாக்களைக் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் இல்லாத தனிச் சிறப்பு பொங்கலுக்கு மட்டுமே உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா மதத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் அற்றதாகவும் உள்ளது. உழைக்கும் மக்கள் உழவர்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது. ஆகவே அந்த நாளை தமிழர்களாகிய நாம் விமரிசையாக கொண்டாடி வளர்ந்துவரும் எமது சிறார்களுக்கு அதன் பெருமைகளையும் சிறப்புக்களையும் எடுத்துக் கூறி அதனை சிறப்பாக ஒரு தனித்துவமான நாளாக கொண்டாட வேண்டும். அதேநேரம் தமிழர்களின் சுதந்திர வேட்கையை, பொங்கும் விடுதலை உணர்வை வெளிப்படுத்தும் நாளாகவும் இதை அடையாளம் காணவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருநாள்

அமிழ்தினியதாய் வரும் ஆண்டிலொருநாள்

என்று ஒரு பாடலும் உண்டு, அறிந்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்.

இது தமிழர்களுக்கான ஒரு திருநாளாக இருந்தபோதிலும் இந்துக்கள்தான் இதனை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மற்றைய சமயத்தினர் கொண்டாடியதாக நான் கேள்விப்படவில்லை. சகோதரி இரசிகை சொன்னதுபோல் எல்லோரும் சேர்ந்தே கொண்டாடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற ஆண்டு வெளிவந்த இக்கட்டுரையைப் பொருத்தப்பாடு கருதி இதில் இணைக்கிறேன்.

நன்றி

புலம் பெயர்ந்த தமிழர்கள்

பொங்கல் திருநாள் - அடையாள நாள்

- முகிலன்

கடலோடிகளாக பாரம்பரிய அறிவைப்பெற்ற மூத்த இனம் தமிழர் என்றால் மிகையில்லை.

‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என எம்மவரிடம் புளங்கும் பழமொழியும் -

எட்டுத்திங்கும் சென்று கலைச் செல்வம் கொணர்ந்திடுவீர் எனக் கனவைச் சொன்ன பாரதியும்-

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பகன்ற கவிஞன் பூங்குன்றனின் வார்த்;தையையும் -இருபதாம் நூற்றாண்டுக் கடைக்கூறுகளிலிருந்து புலம் பெயர்ந்த ஈழத்தமிழன் வாழ்வாக்கிக் கொண்டுள்ளான். விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்ட இந்தப் புலப்பெயர்வின் மூன்றாவது தசாப்த காலத்தில் கற்பதும் பெறுவதும் பலப்பல…

இன்று, பூமிப்பந்தின் பல்வேறு பகுதிகளிலும் தடம்பதித்த தமிழனின் அடுத்த தலைமுறை தலையெடுக்கத் தொடங்கியுள்ள இருபத்தொராம் நூற்றாண்டின் முற்பகுதியில் தன் அடையாளத்தேடலில் - மூலத்தேடலில் மையம் கொண்டதாகவே இக்கட்டுரை வரைவுபெறுகிறது.

மூலமறியும் தேடலில் விருத்தியானதுதான் மனித அறிவு. விஞ்ஞானங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் - பிரபஞ்சத்தின் எல்லைகளை அறியும் தேடற்பதிவுகள் மனிதனின் சாதனைகள். ஆனாலும் அறிவும்- அறிவுசார் நம்பிக்கைகளும் ஒருபுறமாகவும், வெறுமையான எண்ணக் கருதுகோள்களும்- இதனுடன் கூடிய மூடநம்பிக்கைகளும் மறுபுறமாகவும் மனிதவிலங்கினம் பயணித்துக் கொண்டிருக்கிறது.

காலனியாக்க காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழர்களின் புலப்பெயர்வு நான்காவது, ஐந்தாவது தலைமுறையில் வேறொரு பரிமாணத்தில் நிற்பதைக்கண்ட இந்தப் புதிய புலப்பெயர்வுத் தமிழன் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கியதில் வியப்பில்லை. இது « தமிழால் ஒன்றுபடுவோம்! » என்ற கோசமாகியுள்ளது.

நீண்ட காலனியாதிக்கத்தின் கீழ் தொடர்ந்த அவலத்தில் ‘மறத்தமிழன்’ ‘வீரத்தமிழன்’ என்ற சொற்களுக்கான விபரணங்களை அகராதிகளில் தேடும் நிலையிலேயே இருந்தது. இதனால் வெண்திரையில் கதாநாயக-நாயகிகளின் சலன விம்பங்களில் தன்னை இழந்து இலயித்துப் போனவர்களாகக் காணப்பட்டனர் தமிழர்கள். இதன் பிரதிபலிப்புகள் அரசியல் அரங்கிலும் காணப்பட்டது. அடுத்த கட்டத்தில் வாய்ச்சவடாலர்களும், சினிமாக் கலைக் கதாநாயக-நாயகிகளும் ஒரு சுற்று வந்துபோனார்கள். இலங்கைத் தீவில், வைட் கொலர் சீமான்களும் கறுத்த கோட்டணிந்த அப்புகாத்துகளும் கலக்கிவிட்டுப்போனார்கள்.

இன்று நாம்பெற்ற பட்டறிவால் எமது கால்களில், எமதுபலத்தில் நிமிர்ந்தெழும் காலகட்டத்தில் தமிழால் ஒன்றுபடும் கருதுகோளைச் சாத்தியமாக்கும் முன்மொழிவாக இக்கட்டுரை வரையப்பெறுகிறது.

புலம் பெயர்வாழ்வில் நான் யார்? –என்ற கேள்வி எம்மால் விட்டுச் செல்லும் புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் பிரதான வினாவாகவிருக்கும். நாம் வாழும் பல் இனக்குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே நடமாடப்போகிறார்கள் எமது சந்ததியினர். இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்பூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாது, எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்குண்டு.

கலை- கலாச்சார நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு இதமாக இசைவாகின்றன. இவை,

1. குடும்ப நிகழ்வுகள் (பிறந்தநாள், மணநாள், இன்ன பிற)

2. பொது நிகழ்வுகள் (சங்கங்கள்- அமைப்புகளின் ஆண்டுவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இன்ன பிற)

இதில் தமிழால் ஒன்றுபடக்கூடியதான குறைந்த பட்ச நிலையிலுள்ள நிகழ்வாகத் தெரியப்படக்கூடியது பொங்கல் நாளாகும். இந்நாள் வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருக்கிறது. இந்நாளுக்கும் மதத்திற்கும் சம்மந்தங்களேதுமில்லை. தமிழர்கள் கூடும் இடமெல்லாம் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பது சாதாரண நிகழ்வு. அப்படியிருக்கும்போது தை முதலாம் நாளை ஏன் பொங்கல் நாளாகக்குறித்தான் தமிழன்? இந்நாளில் வாழ்வு இயங்கியல் நியதியான ‘பழையன களைந்து புதியன புகல்’ வழமையையும், வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ - வாசகப் பிரயோகமும் ஏன் தொடர்கின்றன ? தமிழுடன் கூடிய வீர விளையாட்டுகளும், மனிதனுடன் இணைந்துள்ள மிருகங்களுடன் அன்பைப் பொழியும் - தன்வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசித்த இந்தப் பண்பாட்டு விழுமியம் எம்மிடம் காணப்படும் வரலாற்றுப் பொக்கிசம். இந்த உயரிய பண்பாலேயே இந்நிகழ்வு குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது.

இதனால்தான் கூறுபட்டுக்கிடக்கும் தமிழ்ப்பேசும் மக்களது நெஞ்கங்களில் பதிவுற்றிருக்கும் தமிழின் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் நாளாகவும் - தமிழர்களின் புத்தாண்டாகவும் தமிழ் அறிஞர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக மிகத்தெளிவாக தமிழுக்காக ஒரு நாள் இருக்கிறதென்றால் அது தமிழர் திருநாள் - பொங்கல் நாளாகும். இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் - வர்க்கவேறுபாடுகளால் எனப் பலவாகப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடியப் பொது நாள் இந்தப் பொங்கல் நாள்.

அமெரிக்காவில் பெயர்ந்த கறுப்பர்கள் தங்களது அடையாளத் தேடலில் பத்து நாட்களைக் கொண்ட பெரிய அடையாள மீட்புக் கலாச்சார ஒன்றுகூடலை நடைமுறைப்படுத்துகிறார்கள். உலகமெங்கும் விரவியுள்ள சீனர்கள் தங்களுக்கான தனித்துவமிக்க புதுவருட நிழ்வை எல்லோரும் அறியச் செய்துள்ளார்கள். இவ்வேளையில் இங்குள்ள சிறப்பு பல்பொருளங்காடிகள் சீன வாரத்தைக் கொண்டாடுவதைக்காண்கிறோம். இந்த வகையில் நாமும் தமிழ் வாரத்தை (பொங்கல் தினம் வரும்) வருடம்தோறும் பிரகடனப்படுத்தி தமிழர் திருநாளை அடையாள தினமாக்க வேண்டும். இதற்கு உலகளாவிய தமிழாவலர்களும், தமிழ்த் தாராளர்களும் இவர்களை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பாளர்களும் களமிறங்கிடும் தருணமிது.

காலங்கள் கரைய ஐரோப்பாவிலும், அமெரிக்க- அவுஸ்திரேலியக் கண்டங்களிலும் புதிய ஒன்றுகூடலை நிகழ்த்தத் தொடங்கி உலகத்தின் பார்வையைப் பெறவைத்தவர்கள் புலம்பெயர் ஈழத்தமிழர். இதில் இன்றைய புதிய கலாச்சாரமாகியுள்ள 'மாவீரர் தினம்' முக்கிய சான்றாகும். வீரமறவர்களை வணங்கும் தமிழர்களின் தொல்மரபை மீண்டும் தொடரத்தொடங்கியது தமிழரின் முதுகெலும்பு நிமிரும் படிமுறையாகியது. இதன் தொடராக மூலத்தேடலும் புத்துயிர்பூட்டலுமான சுயஅடையாளத்தை தக்கவைக்கும் நிகழ்வுகள் இணையத்தொடங்கின.

பிரதேச மற்றும் மத நிகழ்வுகளாகவும், சடங்குகளாகவும் குறுகிப் பிளவுண்டுள்ள தமிழர்களுக்கு தமிழால் ஒன்றிணையும் முக்கிய நிகழ்வாவது ‘தமிழர் திருநாள்’ எனப்படும் தைப்பொங்கல் தினமாகும். இரண்டாவது தமிழரின் வீரமரபைப் பேணும் நிகழ்வாக அமையும் ஆடிப்பிறப்பாகும்.. இதையொட்டி உலகெங்கிலும் ஆரோக்கிய விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறுவதையும் காண்கிறோம்.

தமிழர்களின் தனிப்பெரும் நாளும், தமிழால் ஒன்றுபடும் நாளுமாகிய தைப்பொங்கல் நாள் - தமிழர் நாள் - ஒன்றுகூடலை பிரமாண்டமாக ஒருங்கிணைத்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி: ஈழமுரசு பாரீஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தைமாதம் முதலாம் திகதிதான் தமிழ் புது வருடமாக இருந்ததாகவும், பிறகு சித்திரை மாதம் முதலாம் திகதி தமிழ்ப் புத்தாண்டாக மாற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஏன் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கோ. ஏன் சிங்களவர்களும் சித்திரை முதலாம் திகதியினை சிங்கள புது வருடமாகக் கொண்டாடுகிறார்கள். இதற்கும் தமிழர்களின் புதுவருடத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய விழா!

(பழ. நெடுமாறன்)

"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து"

என வள்ளுவப் பேராசான் கூறியுள்ளார். உழவர்கள்தான் உலகத்தவருக்கு அச்சாணி போன்றவர்கள். ஏனெனில் உழவுத் தொழிலில் ஈடுபட முடியாமல் உயிர் வாழ்வோரையும் சேர்த்து அவர்கள் தாங்குகிறார்கள் என்கிறார் அவர்.

உழவு என்ற தலைப்பில் தனி அதிகாரமே படைத்து அதனைச் சிறப்பித்திருக்கிறார். வள்ளுவர் காலத்தில் நிலவிய வாணிபத் தொழில் குறித்து சில குறட்பாக்களில் குறிப்பாகக் கூறிவிட்டுச் செல்லும் அவர் அதற்கென்று தனி அதிகாரம் இயற்றவில்லை என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

புதிய கற்காலம் தொடங்கிய காலக்கட்டத்திலேயே தமிழர்கள் உழவுத் தொழிலைச் செய்யக் கற்றிருந்தனர். தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்துள்ள புதிய கற்காலக் கருவிகள் பல உழவுத் தொழிலுக்குரியவைகளாக உள்ளன, என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நெல்பயிரிடும் முறையில் பண்டைக்காலம் முதலே தமிழர்கள் சிறப்புற்று விளங்கி வந்துள்ளனர். நெல்லைப் பயிரிடும் முறையை முதன் முதலாகக் கண்டறிந்தவர்கள் தமிழர்களே.

தமிழ்நாட்டில் இருந்துதான் நெல் சாகுபடி முறை தென்கிழக்காசிய நாடுகளில் பரவிற்று எனலாம். இந்நாடுகளுக்குத் தமிழர் சென்றபோது தமிழர் வேளாண்மை முறைகளும் அந்நாடுகளில் பரவின.

வேளாண்மையைத் தங்களது தலையாய தொழிலாகக் கொண்ட தமிழர் உழவினைப் போற்றும் வகையில் விழா எடுத்தனர். அவ்விழாவே பொங்கல் விழாவாகும். தேசியத் திருநாளாக இவ்விழாவைத் தமிழர் கொண்டாடி வருகின்றனர். இவ்விழா தமிழர் திருநாள் மட்டுமல்ல உழைப்பாளர் திருநாளுமாகும். உழவரும், அவருக்கு வேண்டிய கருவிகள் செய்து கொடுக்கும் கம்மியரும், உழுது பயிரிட உதவிய மாடுகளும் நன்றியோடு பாராட்டப்படும் நாள் இதுவாகும்.

தொன்றுதொட்டே தமிழர்கள் பொங்கல் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர். புறநானூற்றுக் காலத்தில் இவ்விழா எவ்விதம் கொண்டாடப்பட்டது என்பதை குருங்கோழியூர்க் கிழார் என்னும் புலவர் பின்வருமாறு பாடியுள்ளார்.

"வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த

வாய் கரும்பின் கொடிக் கூரை

சாறு கொண்ட களம் போல,

வேறு வேறு பொலிவு தோன்ற

குற்றானா வுலக்கையால்

கலிச் சும்மை வியாலங் கண்'

நெற்கதிரைக் கொண்டு வேயப்பட்ட கூரைவீடுகள். அவ்வீடுகளின் வாசலில் கரும்பைத் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். அங்கு தானியம் குவிந்து கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்றுவதற்காக அல்ல. வள்ளக்கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். வள்ளைக்கூத்து என்பது நெல்குற்றுவது போல பெண்கள் ஆடும் கூத்து என இப்பாடல் நமக்குக் கூறுகிறது.

ஆக 2000 ஆண்டு காலத்திற்கு முன்பே பொங்கல் விழாவினை சங்க காலத் தமிழர் சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார்கள் என்பதற்கு வேறுபல இலக்கியங்களிலும் சான்றுகள் நிறைய உள்ளன.

தமிழரின் பொங்கல் விழாவில் கரும்பும், சருக்கரையும் முதன்மை இடம் பெற்றுள்ளன. உலக மக்களுக்குக் கரும்பையும் சருக்கரையையும் அறிமுகப்படுத்திய பெருமை தமிழர்களையே சாரும்.

"அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்து

நீரக இருக்கை ஆழி சூட்டிய

தொன்னிலை மரபின் முன்னோன் போல"

என ஒளவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. சேரமரபைச் சேர்ந்த அதியமானின் முன்னோர்களுள் ஒருவன் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று திரும்பியபோது கரும்புப் பயிரை முதன் முதலாகத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தான் என்பதை இப்பாடல் மூலம் அறிகிறோம்.

ஆஸ்திரேலியாவிற்கு அருகேயுள்ள சாலமன் தீவில் கரும்பு இயற்கையாக முதன் முதலில் விளைந்தது என பிரிட்டானியா கலைக் களஞ்சியம் கூறும் செய்தியோடு ஒப்பிட்டால் ஒளவையார் பாடலில் உள்ள உண்மை தெளிவாகும்.

தமிழ்நாட்டில் பனை மரங்கள் மிகுதி. எனவே பதநீர் இறக்கி அதிலிருந்து வெல்லம் காய்ச்சும் முறையைத் தமிழர்கள் கரும்பு வருவதற்கு முன்பே அறிந்திருந்தார்கள்.

கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகம் வந்த சீனர்கள் கரும்பு பயிரிடும் முறையைக் கற்றுக்கொண்டு போனார்கள். நம்மிடமிருந்தே சருக்கரை காய்ச்சுவதையும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். இப்படிப் படிப்படியாக உலகின் மற்ற நாடுகளுக்கும் கரும்பும், சருக்கரையும் பரவின அதைப் போல அறுவடைத் திருநாளைக் கொண்டாடுவதும் உலகமெல்லாம் பரவியது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. தமிழர் பண்பாடு பரவிய தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் பொங்கல் பெருவிழா அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தோனேசியாவின் பாலித் தீவில் சனவரி மாதத்தில் அறுவடைத் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழர்களைப் போல வீட்டின் முற்றத்தில் பொங்கல் முதலிய பொருட்களை வைத்து சூரிய-சேனா என்ற தேவனை வழிபடுகின்றனர். அடுத்தநாள் கால்நடைகளைச் சிறப்பிக்கும் வகையில் பொங்கலிட்டுப் படைக்கின்றனர். பிறகு இரண்டு நாட்கள் பலவகை கேளிக்கைகளிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

தாய்லாந்து நாட்டின் சிறப்புமிக்க பண்டிகை சோங்ரான் என்னும் அறுவடைத் திருநாளாகும். இவ்விழா அங்கு நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முற்பட்ட நாளில் வேண்டப்படாத பொருட்களையும், கழிக்கப்பட்ட பொருட்களையும் வீட்டின் முன் குவித்து நாம் கொளுத்துதல் போல அங்கும் சோங்ரான் பண்டிகை தொடங்குவதற்கு முன்னால் அவ்விதமே கொளுத்துகின்றனர்.

சப்பான் நாட்டிலும் அறுவடைத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் தமிழர் பரவிய நாடுகளிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான பொங்கல் பெருவிழா உண்மையில் தமிழரின் தேசியத் திருநாளாகும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் எழுந்த தமிழ்த் தேசிய உணர்வின் வெளிப்பாடாக பொங்கல் விழாவினைக் கொண்டாடும் போக்கு தோன்றிற்று. தமிழ்நாட்டில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் கொண்டாடும் தேசியத் திருவிழா பொங்கல் விழாவே என்ற உணர்வைப் பரப்புவதில் தமிழறிஞர்கள் முன்னின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் இதை ஏற்று பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனாலும் பகுத்தறிவுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் சற்றும் ஒவ்வாத தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படும் அளவுக்கு பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதில்லை என்பது வருந்தற்குரிய உண்மையாகும். தீபாவளிப் பண்டிகை என்பது தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சியின்போது அதாவது 16ம் நூற்றாண்டிற்குப் பிறகே நடைமுறைக்கு வந்த விழாவாகும். பிற்காலத்தில் துணி வணிகர்களும், வெடி வணிகர்களும் தங்கள் ஆதாயத்திற்காக இவ்விழாவை விளம்பரப்படுத்தினார்கள். தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையும் தீபாவளியின் போது வழங்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டதால் தீபாவளி பெரிய விழாவாகிவிட்டது. ஆனாலும் கிராமப் புறங்களில் வாழும் மக்களில் பெரும்பாலோர் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. பொங்கல் விழாவையே அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்த வேண்டாத போக்கை மாற்றுவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையைத்தான் மலையாளிகள் தேசிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். தீபாவளியை அல்ல. அதைப்போல பொங்கல் திருநாளை பெருவிழா நாளாகக் கொண்டாட கீழ்க்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

1. பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் விழா ஆகியவற்றை தமிழகத் தேசிய விழாக்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

2. அரசு ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஊக்கத்தொகை பொங்கல் விழாவின்போது மட்டுமே அளிக்கப்படவேண்டும். தனியார் துறையிலும் இதை நடைமுறைப்படுத்தவேண்டும்.

3. தமிழகம் எங்கும் மாவட்டம் தோறும் விளையாட்டு விழாக்கள், இலக்கிய விழாக்கள், இசை விழாக்கள், நாடக விழாக்கள் போன்றவற்றை நடத்தி பரிசுகள் வழங்க அரசு முன்வரவேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டால் பொங்கல் விழா தமிழகத்தின் தேசியத் திருவிழாவாக மாறும் என்பதில் அய்யமில்லை.

-தென்செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

தைமாதம் முதலாம் திகதிதான் தமிழ் புது வருடமாக இருந்ததாகவும், பிறகு சித்திரை மாதம் முதலாம் திகதி தமிழ்ப் புத்தாண்டாக மாற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஏன் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கோ. ஏன் சிங்களவர்களும் சித்திரை முதலாம் திகதியினை சிங்கள புது வருடமாகக் கொண்டாடுகிறார்கள். இதற்கும் தமிழர்களின் புதுவருடத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

கந்தப்பு இதுக்கு போய் சிங்களவனை குறை சொல்லாதயும் எங்கன்ட தமிழனுக்கு காசை கொடுத்து கொண்டாட சொல்லியிருப்பாங்கள் கொண்டாடி இருப்பாங்கள்.புலத்தில் எல்லா டமிழ்சும் டிசம்பர் 31 திகதி பஜனை வைக்கிறாங்கள்,1 ம் திகதி வருசம் என்கிறாங்கள் கோயிலுக்கும் போறாங்கள் இதற்கு என்ன காரணம் அப்பு???

என்னொரு விசயம் கோயிலில் ஜனவரி 1 திகதி வந்த வருமானம் அதிகமாம் பொங்கல் வருமானத்தையும் விட..............

:):(:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.