Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆழப்புதைந்துள்ள அவலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழப்புதைந்துள்ள அவலங்கள்

ஆதிலட்சுமி

<p>ஆழப்புதைந்துள்ள அவலங்கள்</p>
ஆதிலட்சுமி

 

முள்ளிவாய்க்கால்வரை விமானங்களாலும் எறிகணைகளாலும் பீரங்கிகளாலும் கொத்துக் குண்டுகளாலும் பல மாதங்களாக துரத்தப்பட்டு, இறந்தவர்கள் போக, ஓடிக்களைத்த எஞ்சியவர்கள் வந்துசேர்ந்திருந்த செட்டிக்குளம் காட்டுப்பகுதி அது. தமிழ்ச்சனங்களுக்கென்றே அமைக்கப்பட்ட, தமிழ்ப்பெரியார்களின் பெயர்களை தாங்கிநின்றது அந்த சிறப்புமுகாம். சுற்றிவர முள்ளுக்கம்பிகள் போடப்பட்டு இருபத்துநான்கு மணிநேரமும் இராணுவக்காவலில் இருந்தது அது.

இலட்சக்கணக்கில் சேர்ந்திருந்த மனிதர்களை வடிகட்டும் ஒரு பெருந்தொழிற்சாலையாக செயற்பட்டுக்கொண்டிருந்தது அந்த இடம்.

தினமும் வடிகட்டி எடுக்கப்படட்ட மனிதர்கள் கசாப்புக்கடைக்கு கொண்டுசெல்லப்படுவதுபோல் கொண்டுசெல்லப்பட்டார்கள். மீதிச்சனங்கள் பசியும் பட்டினியும் ஆற்றொணாத் துயரங்களுமென நாளுக்குநாள் செத்துக்கொண்டுமிருந்தார்கள்.

இன்னும் சிலர் தொடர்பற்றுவிட்ட தமது உறவுகளைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள்.

நான் இனியும் அங்கிருப்பது நல்லதில்லை என்பதை அங்கு நடைபெற்ற சில சம்பவங்கள் எனக்கு உணர்த்தின. அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதற்கு நான் முடிவெடுத்தேன். ஆனாலும் அங்கிருந்து வெளியேறுவது என்பது மிகவும் ஆபத்து நிறைந்தது என்பதையும் நான் அறிந்திருந்தேன்.

என்னை அரவணைத்து வைத்திருந்த குடும்பத்தினருக்கு நான் எனது முடிவை சொன்னபோது, அவர்கள் அதிர்ந்து போனார்கள். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர்தான் என்னைப்போல் வெளியேற முயன்ற சிலர் அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டதால் அவர்களின் நடுக்கம் எனக்குப் புரிந்தது.

அடுத்தநாட் காலையில் நான் கிளம்புவதற்கான சில ஒழுங்குகள் நிறைவுற்றிருந்தன. இரவு நிச்சயம் என்னால் அமைதியாக தூங்கமுடியாது. எனவே மதிய உணவை முடித்த கையோடு நடக்கவெனப் புறப்பட்டேன்.

குட்டிக்குட்டியாகவும் நெருக்கமாகவும் இருந்த வீடுகளுக்கு நடுவே நான் நடந்துகொண்டிருந்தேன். எனக்கு என்னைச்சுற்றி வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கிற சனங்களை விட்டுப்பிரிய மனமில்லாதிருந்தது.

<p>ஆழப்புதைந்துள்ள அவலங்கள்</p>

'ரீச்சர்... ரீச்சர்.....' நான் திரும்பிப் பார்த்தேன். கிளிநொச்சியில் என்னிடம் படித்த மாணவி ஒருவர்.

'ரீச்சர் தலைமுடி கொட்டீட்டுதா..?' என அழுவதுமாதிரி கேட்டாள்.

முறையான பராமரிப்பு இல்லாமல் நீளமான என் தலைமுடி சிக்கடித்து கொட்டிவிட்டிருந்தது.

'ரீச்சர்… எங்கட வகுப்பு ஜனனியெல்லே கிபிரடியிலை செத்திட்டாள்... பாவம் ரீச்சர்..'

'ஓமோம் கேள்விப்பட்டனான்...' என்றேன்.

'என்ர குட்டித்தம்பிக்கும் ஒருகால் இல்லை ரீச்சர்… எங்களுக்கு சரியான கஷ்டமாயிருக்கு...' என்று அவள் அடுக்கிக்கொண்டு போக... அவளை ஒருவாறு சமாளித்துக்கொண்டு நடந்தேன்.

ஒரு மரத்தின்கீழ் ஒருவர் கொய்யாப்பழம் விற்றுக்கொண்டிருந்தார்.  அடுத்த பக்கத்தில் ஒரு சிறுவன் பெரிதாக அழுதுகொண்டிருந்தான்.

'நான் என்னடா செய்ய…? அம்மாட்டை இப்ப காசில்லை... இருந்தால் வாங்கித் தருவன்தானே...'

அந்தத் தாயின் குரல் நடந்துகொண்டிருந்த என்னை இழுத்து நிறுத்தியது. எனக்குத் தெரிந்த ஒரு போராளியின் மனைவி அவள். அவளுடைய காதல் கணவன் கடைசிச்சண்டையில் போர்முனையில் வீரச்சாவடைந்திருந்தான் லெப்.கேணலாக.

அவளும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.

'அன்ரீ... இஞ்சபாருங்கோ... என்ர பிள்ளை கொய்யாக்காய்க்கு அடம்பிடிக்குது...காசுக்கு நான் எங்கை போவன்..?' என்றாள்.

அவளுடன் சிறிதுநேரம் கதைத்துவிட்டு, ஆறுதலும் கூறிவிட்டு நடந்தேன்.

'அன்ரி... எனக்கு எப்பிடியாவது ஒரு தையல்மிஷின் வாங்க ஆரிட்டையும் உதவி வாங்கித் தாங்கோ...' என்றாள்.

நான் காலையில் வெளியேறப் போகிறேன் என்பதைச் சொல்லமுடியாத இக்கட்டான நிலை. என் மீது எனக்கே பரிதாபமாக இருந்தது.

நடையை முடித்துக்கொண்டு இருப்பிடம் வந்து இரவுணவை முடித்துக்கொண்டு தூங்க முயற்சித்தேன்... விடியும் வரை அயர்ந்துகொள்வதும் திடுக்கிட்டு விழிப்பதுமாகக் கழிந்தது.

விடிகாலை ஐந்துமணிக்கு நான் சேர்ந்திருந்த வீட்டுக்காரப் பெண் என்னை சுரண்டினாள்.

'அண்ணி... எழும்புங்கோ.. நேரமாச்சு...'

துணிச்சலுடன் பயணத்துக்கு நாள்குறித்தாலும் கேள்விப்பட்ட பயங்கரமான கதைகள் நினைவுக்குள் வந்து மனதுக்குள் ஏதோ செய்துகொண்டிருந்தன.

இருளில் வீட்டின் தாழ்வாரத்தில் பாத்திரமொன்றில் இரவே நிரப்பிவைத்த தண்ணீரில் குளியல்.

தலையில் துண்டுஒன்றைக் கட்டிக்கொண்டு, கையில் ஒரு மருந்துப் போத்தலையும் காவிக்கொண்டு, நானும் வீட்டுக்காரப் பெண்ணுமாக குறிப்பிட்ட இடத்துக்கு நடந்தோம்.

பேருந்து காத்திருந்தது.

'வேளைக்கே ஏறி இருந்தால் சனங்கள் கண்டிடும்... கடைசியாய் ஏறுங்கா...' என்றாள் அவள்.

என்னைச் சுற்றிலும் இலட்சக்கணக்கான சனங்கள். அதிலும் என்னைத் தெரிந்தவர்கள்தான் நிறையப்பேர். யாரையும் நம்பிவிடவே முடியாத சூழல். தெரிந்தவர்கள் அறிந்தவர்களால்தான் ஆபத்துகள் விளைந்துகொண்டிருந்தன...

யாராவது கண்டுவிட்டால் காரியம் கெட்டுவிடும். யாரையோ தேடுபவர்கள் போல நின்றோம்.

பேருந்து புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக என்னை ஏற்றிவிட்டு, கண்கலங்கியபடியே, 'போய்ச் சேர்ந்தவுடனை சொல்லுங்கோ... கோயிலுக்கு காசுபோடவேணும்... அதுக்குப் பிறகுதான் நான் சாப்பிடுவன்...' என்றாள் அவள்.

அவளின் அந்த அன்பை நினைத்து உருகியபடியே இருந்தேன். இதயம் இருந்த இடத்தை விட்டுவந்து தொண்டைக்குழிக்குள் நின்று படார் படார் என சத்தமெழுப்பிக்கொண்டிருந்தது. பேருந்து உதவியாளர் முதலில் ஏறி, தான் கையில் வைத்திருக்கும் தாளைப் பார்த்து ஒவ்வொருவராக பெயரைக் கூப்பிட்டு உறுதிப்படுத்திக்கொண்டிருந்தான்.

நல்லவேளை எனக்கு யன்னலோர இருக்கைதான். நான் வெளியே பார்த்தவண்ணமிருந்தேன்.

பெரிய பெரிய காட்டுமரங்கள்... ஏழ்மையாக்கப்பட்ட என்னுடன் கூடிவாழ்ந்த எளிமையான மனிதர்கள்... எல்லோரையும் விட்டுபோகிறேன்... இனி எப்போ இதையெல்லாம் பார்ப்பேன் என மனது துடித்தது.

ஓடித்திரியும் குழந்தைகளையும்... மனிதர்களையும் மரம் செடிகொடிகளையும் பார்த்து மானசீகமாய் மன்னிப்புக் கேட்டு மன்றாடினேன். பிறந்தமண்ணில் வாழமுடியாப் பாவியாக போகிறேனே என்று மனது அழுதது.

சாரத்தை மடித்துக்கட்டியபடி தடித்த ஒருவர். அவர்தான் பேருந்து ஓட்டுநர். ஏறியதும் பேருந்தை எடுக்கவேண்டிய அவர்,

'ஆரும் இஞ்சையிருந்து தப்பிப்போற நோக்கத்தோடை இருக்காதேங்கோ... பிறகு தெரியும்தானே... அவங்களிட்ட பிடிபட்டால் என்ன நடக்கும் எண்டு. உங்களுக்கு நான் சொல்லதேவையில்லை...' என்றபடி கண்களை மூடி பிரார்த்தித்தபடி பேருந்தை உருட்டினார்.

'எல்லாரும் உங்கட உங்கட உறுதிப்படுத்தின கடிதங்கள் வைச்சிருக்கிறியள் தானே... ஆரும் டூப்பிளிக்கேட் கடிதம் வைச்சிருந்தா இப்பவே இறங்கிடுங்கோ... இடையில கடிதம் பாப்பாங்கள்... பிறகு நாங்கள் பொறுப்பில்லை... ' பேருந்து உதவியாளரும் தன்பங்குக்கு மிரட்டினார்.

பேருந்துக்குள் அதிகமானவர்கள் பெண்கள். யாரும் யாரோடும் பேசவில்லை. மயான அமைதி என்பார்களே... அன்றுதான் அதைநான் உணர்ந்தேன்.

பேருந்து உதவியாளர் சொன்ன அந்த பயணிகளை ஆய்வுசெய்யும் அல்லது உறுதிப்படுத்தும் இடம். எல்லோரும் இறங்கி வரிசை கட்டினோம். முன்னர் வந்த பேருந்திலிருந்து இறங்கியவர்கள் முன்னால் நின்றார்கள்.

'உள்ளை இருக்கிறவன் பொல்லாதவனாம்... என்ன செய்யிறானோ தெரியாது...' என்றாள் எனக்கு முன்னால் நின்ற பெண்.

அவள் சொன்னதை விளங்கிக்கொள்ளாதவள் போல நான் நின்றேன்.

வரிசை நகர்ந்தது. சாதாரண சேட்டும், இராணுவ சீருடைத்துணியில் நீளக்காற்சட்டையும் அணிந்த ஒருவன் கடிதங்களை பரிசீலித்துக்கொண்டிருந்தான்.

'இனிப் பயந்தென்ன...' என்ற மனநிலையுடன் எனது முறை வந்தபோது மருந்துப் போத்தலை அவனது மேசையில் வைத்துவிட்டு கடிதத்தை நீட்டினேன்.

கடிதத்தை பார்த்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாமல் கையெழுத்திட்டு தந்தான்.

அப்பாடா என்று யாரையும் பார்க்காமல் வந்து பேருந்துக்குள் ஏறி அமர்ந்தேன். ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தார்கள்.

மீண்டும் பயணித்தல் தொடங்கிற்று.

பேருந்து ஓடிக்கொண்டிருந்தபோது, இரு இளைஞர்கள் கையைக் காட்டியபடி சாலைக்கு குறுக்காக வந்து மறித்தார்கள். பேருந்து ஓரமாக நகர்ந்து நின்றது. அந்த இரு இளைஞர்களும் பேருந்துக்குள் ஏறினார்கள்.

'இதுக்குள்ளை '...........' எண்ட சொந்தப் பேருள்ள ஒராள் இருக்கிறியள். வேற பேரிலை இதுக்குள்ளை இருந்தாலும் இறங்குங்கோ... அடுத்த கதை வேண்டாம்...'

அவர்களில் ஒருவன் கூறிவிட்டு ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தான். அவன் கேட்கும் ஆள் நானில்லை என்றாலும் வயிற்றைக் கலக்கியது.

'ஒராளாலை இண்டைக்கு இவ்வளவுபேற்றை பயணமும் நிக்கப்போகுது... ஆள் இறங்கினால்தான் பஸ்ஸை எடுக்கவிடுவம்...'

ஓட்டுநரும் உதவியாளரும் எந்த அசைவுமின்றி உட்கார்ந்திருந்தார்கள்.

பன்னிரண்டு மணிவரை பேருந்து நகரவில்லை. நகர அவர்கள் அனுமதிக்கவில்லை. பயணிகளுமோ பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.

'சரி... இப்ப விடுறம் போங்கோ.... போய் இறங்கிற இடத்திலயும் நாங்கள் நிப்பம்... அங்க அம்பிடுவியள்தானே..'

என்றபடி அவர்கள் இறங்க பேருந்து மீண்டும் புறப்பட்டது.

எனக்கு அந்த இருவரும் யாரெனப் புரிந்தது.

'இவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்....?' என்று மனம் கவலையுற்றது.

'ஒருவேளை எனக்காக அங்கு காத்திருப்பவர் பேருந்தின் தாமதத்தை புரிந்துகொள்ளாமல் திரும்பிப் போய்விட்டால் இறங்குமிடத்தில் என்ன செய்வது...?' என்ற அச்சம் என்னை ஆட்கொண்டது.

பேருந்து எல்லோரையும் இறக்கியது.

'பஸ் இதிலைதான் நிக்கும்.... உங்கடை அலுவல்கள் முடியவந்து இதிலையே எல்லாரும் நில்லுங்கோ...' என்றார் பேருந்தின் உதவியாளர்.

எனக்கு முற்றிலும் பழக்கமற்ற இடம். அழைத்துச் செல்ல வந்தவர் யாரென்பதும் தெரியாது. ஆனால் என்னை அவருக்கு தெரியும் எனச் சொல்லப்பட்டது.

நான் சுற்றுமுற்றிலும் பார்த்தபடி நிற்க, ஒருவர் என்னை தனக்குப் பின்னால் வரும்படி சைகை செய்தார். அந்த கணப்பொழுதில் மனம் என்னவோ செய்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு, அவர் பின்னால் நடந்தேன்.

அவர் தனது உறுதிப்படுத்தற் கடிதத்தை கூட்டிலிருந்த அதிகாரியிடம் காட்டிவிட்டு நகர, நான் திடமாக முகத்தில் மென்மையை வரவைத்துக்கொண்டு எனது உறுதிப்படுத்தற் கடிதத்தை கொடுக்க, அவர் என்னை வெளியே போக அனுமதித்தார்.

'என்ன.... நல்லாப் பயந்திட்டியளோ....' என்று சிரித்தார். வெளியில் நின்றுகொண்டிருந்த அவர்.

'இனிப் பயப்பிடாதேங்கோ.... இனி எல்லாம் வெற்றிதான்...' என்றவர் நான் தங்கவேண்டிய இடத்துக்கு என்னை அழைத்துச்சென்றார். 

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=767a98df-da32-438d-8ad5-1c38f537df81

முள்வேலி முகாம் அவல வாழ்க்கை - சில அரிய புகைப் படங்கள்

Mulveli_01.jpgMulveli_03.jpg
Mulveli_02.jpg

Mulveli_04.jpg

Mulveli_05.jpg

Mulveli_06.jpg

Mulveli_07.jpg

Mulveli_08.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.