Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கதையும் கருமாந்திரங்களும்

Featured Replies

 

 

நிகழ்ச்சி நிரலில் இல்லாத இந்த அவதியான இரவு  எப்படி தனது கடிகாரத்துக்குள் நுழைந்தது என்று நினைத்தவன், இந்த இரவு மட்டுமா நிகழ்ந்த, நிகழுகின்ற காலமும் தான் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லையே என, எண்ணியபடி  மேசைமீதிருந்த கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் முகிலன். இன்னும் சரியாக ஆறுமணி நேரம். குளிருக்காக போர்த்தியிருந்த கம்பளிப் போர்வையை நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் இறக்கி விட்டுக்கொண்டவன் இரவை எப்படி கடந்துவிடுவது  என யோசித்தபடி,  தலையணைக்கு கீழாக தடவி போனை எடுத்து பேஸ்புக்கை பார்க்கத்தொடங்கினான்.

 

மாட்டன் என்று சொல்லி இருக்கலாம். என்ர லீவுநாளில் நான் ஏன் போகணும். இவர் நெடுக இப்படிதான் விளையாடுறார். ஒரு வேலையை எடுத்துத் தந்துபோட்டு தான் நினைச்சநேரமெல்லாம் வா , போ என்கிறதும், ஒருமணித்தியாலம் வா, இரண்டுமணித்தியாலம் செய்துதா என்கிறதும் ... ஒருநாளைக்கு இவருக்கு கிடக்கு வேலை.. பேஸ்புக்கை  நோன்டிக்கொண்டிருந்தாலும் நினைவுகள் எல்லாம் விடிய வேலைக்கு போறது குறித்தே ஓடிக்கொண்டிருந்தது.

 

லீவு நாளில் வேலைக்கு போறதென்பது கொலைக்களத்துக்கு வலிந்து செல்வதற்கு ஒப்பானது. ஊரில் சனிக்கிழமை பள்ளிக்கூடம் போகச் சொன்னால் என்னமாதிரியான விசர் வருமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத மனநிலைதான் லீவுநாளில் வேலைக்கு போவதிலும் வருகிறது. வேலை என்ற நினைப்பு மூளைக்குள் ஆயிரம் இலையான்களின் இரைச்சலை ஒரேநேரத்தில் உருவாக்கியது போல உணர்ந்தவன் போனை வைத்துவிட்டு நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டான்.

 

முகிலன் ஒரு அகதியாக இலங்கையிலும், வெளிநாட்டிலுமாக மொத்தம்  பதினைந்து தடவைகள்  இடம்பெயர்ந்தலைந்து இரண்டாண்டுக்கு முதல் பாரிஸினை வந்தடைந்திருந்தான், முதல் மூன்று மாதங்களும் எப்படிப் போனது என்று தெரியவில்லை பொலிஸ், கேஸ், பதிவு, அது ,இது என அலைந்து திரிந்ததில் நாட்களும் மிக வேகமாக போயிருந்தன. பாரிஸ் பற்றிய கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதையவுந்தொடங்கியது.

 

*************************************************

மூன்று பேருக்கு அந்த ரூமை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள். அதன் மூலம் அவர்களுக்கு சுமார் எண்ணூறு யூரோ வருமானம் மேலதிகமாக கிடைத்தது. வீட்டின் செலவுகள் உட்பட மேலதிக செலவுகள் சிலவற்றுக்கும் அந்தப் பணம் உதவியதால் வீட்டு உரிமையாளரும் ஓரளவு மென்போக்குடன் தான் இவர்களுடன் நடந்துகொள்வார். மூன்று  ரூம் கொண்ட வீடு அது. ஒரு ரூமில் அவர்கள் தங்கிக்கொண்டு மற்ற ஒரு ரூமை இவர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

 

 ரூமில் இருந்த இரண்டு நண்பர்களும் விடியவே வேலைக்கு என்று சென்றுவிடுவார்கள். அவர்கள் இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். முகிலன் வேலை  எதுவுமில்லாததால் கொஞ்சம் பிந்தி ஒன்பது மணியளவில் நித்திரைவிட்டு எழும்புவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவன் நித்திரைவிட்டு எழும்பும் நேரம் வீட்டில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். வீட்டுக்கார அக்காவும் பிள்ளையை பாடசாலைக்கு கொண்டுபோய் விடுவதற்காக சென்றுவிடுவார்.

 

துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்கு செல்வான். துவாயை கம்பியில் கொழுவிவிட்டு கொமெட்டில் போய் உட்காருவான். முகிலன் தன்னை மறந்து எல்லாவற்றையும் பற்றி யோசித்துக்கொண்டிருப்பது இந்த கொமெட்டில் இருக்கும் நேரம்தான். வசதியாக அமர்ந்திருந்து  ஒவ்வொன்றாக அசைமீட்டுக்கொண்டு இருப்பதில் நேரத்தினை மறந்துவிடுவான். வீட்டில் யாரும் இல்லாததால் ஒருவித சுகந்திரத்துடன்  தன் காலைக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வான் . தினசரி வீட்டுக் கதவு திறக்கும் ஓசை கேட்டதும் அந்தரப்பட்டுக்கொண்டு எழும்பி தண்ணீரை அமத்திவிட்டு அப்படியே குளிக்க செல்வான். எல்லாம் முடித்து அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டுவிட்டால், வீட்டுகார அக்கா கதவை தட்டி ஏதும் கேட்டால் பதில் சொல்வானே தவிர மற்றபடி வெளியில் வருவதுமில்லை. கதைப்பதுமில்லை. 

 

அன்றும் அப்படித்தான், அக்கா போகட்டும் என்று விட்டு  கட்டிலில் படுத்திருந்தவன் வீட்டின் கதவு பூட்டும் ஓசை கேட்டதும் வழமைபோல துவாயை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான். துவாயை கம்பியில் கொளுவ கையை நீட்டினான். அப்போதுதான் வீட்டுக்கார அக்காவின் ஈர உள்உடுப்புகள் அந்தக் கம்பியில் கொளுவப்பட்டு இருந்ததை பார்த்தான். கைகால் எல்லாம் ஒருகணம் நடுங்க திகைத்துப் போய் நின்றவனை அந்த  கருப்புநிற உள்ளாடைகள் இரண்டும் பூதம் போல தின்னத்தொடங்கியது. சூழ்ந்திருந்த அமைதியும் இருள் கலந்த மெல்லிய மஞ்சள் ஒளியும் அந்த அறையின் தனிமையும் இணைந்து ஒரு சூடான பெருமூச்சாக வெளிவந்தது. ஆளுயரக் கண்ணாடியில் தெறித்த தன் நிர்வாணத்தை நெருங்கிப் பார்த்தான்.  அந்த உள்ளாடைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று முட்டாமல் சிறிய இடைவெளி விட்டு கொளுவப்பட்டு இருந்ததை கண்டவன் மெதுவாக அருகில் சென்று நின்றான். உடலெங்கும் அமிலக் கரைசல் பட்டதுபோல ஒரு மெல்லிய உணர்வு எழுந்து அடங்கியது.   சடுதியான உணர்ச்சி வேகத்தால் தன்னையிழந்து   அந்த நேரத்தில் எதை செய்யமுடியுமோ  அதை செய்துமுடித்தான். 

 

இனி எப்படி அக்காவின் முகத்தில் முழிப்பது என்ற சங்கடம் பிடித்துக்கொண்டது. தன்னைத் திட்டியபடியே குளித்தான். இருவேறு மன நிலைகளில் தவித்து அலைந்தாலும்,  அடுத்தடுத்த நாட்களில் தன்னையும்  மீறி அக்காவை கொஞ்சம் கொஞ்சமாக அவதானிக்கத்தொடங்கினான்.  பின்பெல்லாம்   குளியலறையில் உள்ளாடைகள் கிடப்பது வழமையாகியது.  நான்காவது மாதத்தின் ஆரம்பநாட்களில் அந்த வீட்டில்   இருந்து வேறு  வீட்டுக்கு மாறிச்சென்றான். மாறிச்சென்ற வீடு முதல் இருந்த வீட்டில் இருந்து ஒரு முன்னூறு மீற்றர் தூரத்தில் வீதி வளைவோடு இருந்தது.

 

அன்றிலிருந்து இன்றுவரை இந்த வீட்டில் மொத்தமாக ஐந்து பேருடன் சேர்ந்து வசித்துவருகிறான். குடி கூத்து கும்மாளம் சமையல் சாப்பாடு சண்டை என எல்லாவற்றையும் கடந்து ஒருவித நின்மதி இந்த வீட்டில் இருப்பதாகவே முகிலனுக்குப் பட்டது. இப்போது செய்கின்ற வேலையும் முதல் இருந்த வீட்டுஉரிமையாளர் தான் எடுத்துக்கொடுத்திருந்தார். அதன் பின் இந்த வீட்டில் இருக்கும் இருவரை தான் வேலையும் ரெஸ்ரோரண்டில் வேலைக்கு சேர்த்தும் விட்டான் முகிலன்.

 

சமையல் மற்றும் வீட்டு வேலைகளை ஒவ்வொருவரும் பிரித்து கொள்வார்கள். அவசரமான வேலையென்றால் மாறியும், சில நாள்களில் எல்லோரும் சேர்ந்தும் செய்துகொள்வார்கள். இப்போதெல்லாம் முகிலன் குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதில்லை. எதுவிட சங்கடங்களும் இல்லாமல் நேரம் காலம் என்றில்லாமல் குளிக்கவோ அல்லது வேறு தேவைகளுக்கோ, அல்லது வீட்டின் எந்தப்பகுதிக்குமோ செல்ல முடிந்தது. ஊரில் நண்பர்களுடன் இருக்கும் உணர்வு அடிக்கடி எழும். வீடு வேலை திரும்ப வீடு பேஸ்புக் படம் நித்திரை திருப்ப வேலை எப்பவாவது லாசெப்பல். இதுவே வாழ்க்கை முறையாகியது. முகிலன் ஒரு நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்கு ஒன்றுக்குள் அவனையறியாமல் இயங்கத்தொடங்கினான்.

****************************************************************

போனில் அலாரம் அலறியதும் கையை நீட்டி நிறுத்தினான். கண்கள் இரண்டும் எரிந்தன. தலை மெல்லியதாய் வலித்து. சரியில்லை வேலை எடுத்துத் தந்த மனுசன் என்னவோ அவசரமோ கேட்டிட்டார் ஓம் என்றாச்சு போகத்தான் வேணும் என்று நினைத்தபடி எழுந்தவன் இருபதாவது நிமிடம் வீட்டின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு ரோட்டில் இறங்கினான். அதிலிருந்து இருபது நிமிடத்தில் வேலைசெய்யும் ரெஸ்ரோரண்டில் நின்றான். தம்பி குறைநினைக்காதை என்றவரை மெல்லிய சிரிப்புடன் கடந்தான். அந்த சிரிப்பில் இருந்தது சுயநலம் கலந்த  நன்றியுணர்வென்பதை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. லீவு நாளில் வேலைசெய்தால் கிடைக்கும் பணம் மேலதிக வருமானம் என்பதனையும் அதன் மூலம் நிறைவேறும் சில தேவைகளையும் அந்த தேவைகளே லீவு நாளிலும் வேலைக்கு அழைத்தவுடன் ஓடு எனக் கலைத்தமையையும் எப்படி நேரடியாக ஒப்புக்கொள்வான்.   வேலைக்கான  உடுப்பினை மாற்றிக்கொண்டுவர, அம்மாவுக்கு சுகமில்லையாம் நான் ஊருக்கு போகணும் அதுதான் தம்பி உன்னை செய்யசொல்லி கேட்டனான் அனேகமாக நாளைக்கு வெளிகிடுவன். இடைக்கிடை வீட்டை ஒருக்கா எட்டிப் பார். அக்கா தனிய பாவம். வேலையை செய்தபடியே கதைத்தவரை நிமிர்ந்துபார்த்தான்.

 

 உந்தாளுக்குகென்ன தலைஎழுத்து. பாவம். இப்படி கிடந்தது முறிகிறார் என நினைத்தபடி, ஓம் அண்ணை ஏதும் தேவை என்றால் போன் அடிக்க சொல்லுங்க ,அம்மாவுக்கு என்ன வருத்தமாம் எனக் கேட்டான் முகிலன். தெரியேல்லை போய் தான் பார்க்கணும் போனவருசம் போகேக்கை கொஞ்சம் தளம்பித்தான் இருந்தவ. வயதும் போடுத்து. நாங்களே இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கேக்கை அதுகள் இவ்வளவு காலம் இருந்ததும் பெரிய விசயம்தான்.  என்றவரைக் கடந்து முகிலனின் நினைவுகள் தாயிடம் சென்று மீண்டது.

 

இப்பெல்லாம் அம்மா பெரிதாக கதைப்பதில்லை. மாமாவின் மகளை கலியாணம் கட்டச்சொன்னதுக்கு மாட்டன் என்ற கோபம். நான் என்ன செய்ய இன்னும் இங்கு வாழ்க்கை ஒரு நிலைக்கு வருகுதில்லை. அதில் அவளையும் கூப்பிட்டு என்ன செய்ய என்று கேட்ட கோபம். இங்கிருந்து என்ன சொன்னாலும் விளங்கப்போவதில்லை. அம்மாவும் என்ன செய்வா. யோசித்துக்கொண்டிருந்தவனை தொடர்ந்தும் யோசிக்க விடாமல் வேலை நெருக்கியது. இயந்திரத்தனமான வேலைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து போனான் முகிலன்.

 

ஆறு அடி அகலமும்  பத்து அடி நீளமும் கொண்டதான ஒரு நீள் சதுரமே முகிலன் வேலை செய்யும் இடம். அந்த சிறிய இடத்திற்குள் நான்கு அடுப்புகள் அதை ஒட்டி இரண்டடி நீளஅகல கரண்ட அடுப்பு பக்கத்தில்  ஒரு சுடுநீர் தொட்டி. இவைக்கு எதிராக மற்ற மூலையில் இரண்டு கழுவும் தொட்டிகள். இரண்டு கழுவும் மிசின்கள். நடந்து திரிவதற்கும் வேலை செய்வதற்கும்   இரண்டடி அகலத்தில் ஆறடி நீளத்தில் இருக்கும் ஒரு குறுகிய இடம் மட்டும். இந்த  இடத்திற்குள் தான்  இருவரும் நிற்கவும் வேண்டும் வேலை செய்யவேண்டும். ருநூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உணவுவகைகையும் தயார் செய்யவும் வேண்டும்.

 

இடுப்பு உயரத்துக்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் ஸ்ரேயின் ஸ்டீலில் செய்யப்பட்ட மேசைகள். அவற்றின் கீழே முழுவதும் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு குளிரூட்டிகள். ஒரு குசினி அறைக்கான பாதுகாப்போ அல்லது அமைப்போ கொண்டிருக்காத ஒரு பகுதி அது. அதற்கு சரி நேர்மாறாக சாப்பிடும் கூடம்  அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.  அழகிய மின் விளக்குகள் பூட்டப்பட்டு, சித்திரங்கள், பழைய காலத்து வீட்டு உபகரணங்கள் வைத்தும் மக்களை கவர்ந்து கொள்வதற்காக  அவற்றைப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

 

பத்து வருடங்களாக குசினிக்குள் வேலைசெய்த மாலி நாட்டவன் றஹீம் வேலையைவிட்டு போகும் போது கட்டிப்பிடித்தபடி சொன்ன வார்த்தைகளை எப்போதும் நினைத்துப்பார்ப்பான் முகிலன். நண்பா , இங்கே எத்தனை வருடம் வேண்டுமானாலும் வேலைசெய்யலாம். ஒருபோதும் பரிசோதகர்கள் வரமாட்டாங்கள். ஏனென்றால் முதலாளி ஒரு ஒறியினல்  பிரெஞ்சுக்காரன். ஆனால் அவன் உங்களை முழுதுமாக உறிஞ்சி விடுவான். இதோ இன்றோடு  நான் இந்த  வேலையை  விடுகிறேன். தந்த பணத்தைக்  கொண்டு போக வேண்டியதுதான். நாளைக்கு என் நாட்டுக்கு போய் ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ள வேண்டியதுதான். இதே காலத்தை என் ஊரில் என் சொந்தங்களுடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசம். எல்லாத்தையும் இழந்து இந்தக் காசைக் கொண்டுபோய் என்ன செய்ய ...என்றபடி கண் கலங்க விடைபெற்றவன் அவன்.

 

இவ்வளவுக்கும் றஹீம் வாழ்க்கையை அனுபவிக்காதவன் இல்லை. கிழமையில் இரண்டுநாள் லீவிலும் ஏதாவது கிளப்பிலும் விடுதிகளிலும் தான் இருப்பான்.  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பெண்களை சாப்பிட அழைத்துவருவான். கேட்டால் நண்பர்கள் என்று சிரித்தபடி கூறுவான் போதைப்பொருள்கள், குடி என எல்லாவற்றையும் அனுபவித்தவன். வேலை தவிர்ந்த நேரங்களில் அவனைச்சுற்றி நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள் "நாளைச் சுமக்காத ஒரு மனிதன் அவன்."

 

காசு காசு என்று இரண்டு வேலைகளைச் செய்துகொண்டு வீட்டில் இருக்க நேரமில்லாமல் நண்பர்களும் இல்லாமல், சாப்பிடாமல் கிடந்து  வீடு நகை கார் என சொத்துக்களையும் சேர்த்துக்கொண்டு பிள்ளைகளோடு கதைக்க நேரமே இல்லாமல் மனுசியோடு நாலு இடத்துக்கு போக வர நேரமில்லாமல் அவையின்ர சுக துக்கங்களை கேளாமல் இருந்துகொண்டு, உழைக்கிற காசை ஊருக்கு  அனுப்பி கோயில் குளம் மடம் என கட்டி அதில் பேரை வேற போட்டுக் கொண்டு இருக்கிற எங்கட ஆக்களுக்கு, எப்பவாவது றஹீமுக்கு தோன்றியது போல தோன்றுமோ என எண்ணிப்பார்ப்பான். இவர்களுக்கு தாங்கள் விட்ட பிழையை உணரும் போது குடும்பம் சிதைந்து எல்லா உறவுகளும் அறுந்து அந்தரத்தில் வாழ்ந்து மன அழுத்தத்தில் ரெயினிலோ மாடியாலோ விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது மித மிஞ்சி குடித்து தங்களை மறந்து போகிறார்கள்.

 

பல தடவைகள் திருப்ப திருப்ப இவற்றை நினைப்பான். ஒரு கோர்வையில்லாமல் நினைவுகள் அங்குமிங்குமாய் அலைந்து அலைந்து வீட்டிலும் ரெஸ்ரோரண்டிலும் வந்து நிற்கும். ரெயினில், வீட்டில், கட்டிலில் என எப்போது இப்படி சலிப்பான நினைவுகள் தோன்றும் என்று தெரியாது. இப்படியான நினைவுகள் வரும்நாள்களில்  நீண்ட நேரம் குளிப்பதை வழமையாக கொண்டிருந்தான் முகிலன். குளித்துமுடிந்து பல்கனியில் நிற்கும் போது ஒரு மெல்லிய காற்று உடலை தழுவும் அந்த கணத்தில் தாடியை தடவிக்கொண்டு எல்லாம் மறந்து சாதரனமானவனாக நிற்பான்.

 

 வீட்டுக்கார அண்ணர் ஊருக்குப் போய் எட்டாவது நாள் மதியம். நித்திரையில் இருந்தவன் போன் அதிர எடுத்துப் பார்த்தான். அகன்ற திரையில் அக்கா என்று இலத்திரனியல் எழுத்துக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

 

**********************************************

இப்படியாக கதையை எழுதி முடித்துவிட்டு பிரபல இணைய சஞ்சிகை ஒன்றுக்கு அனுப்பினேன். மூன்று நாள்களின் பின் மிகவும் பிற்போக்குத்தனமாக சிந்தனையுள்ள கதையாக இருப்பதால் பிரசுரிக்க முடியாது என்று பதில் அனுப்பினார்கள். சரி போகட்டும் என்று விட்டு ஒரு புதிதாக ஆரம்பித்து வளர்ந்துவரும் சஞ்சிகைக்கு அனுப்பினேன். அன்றே பதில் அனுப்பி இருந்தார்கள். நல்ல கதை நல்ல மொழி நடை. ஒரு சிறிய மாற்றம் அந்த குளியலறையில் அக்காவின் உள்ளுடுப்புகளை பற்றிய பந்தியை நீக்கி விட்டு போடுவதென்றால் நாங்கள் பிரசுரிக்கிறோம் என.

 

நான் ஒரு எழுத்தாளன் என் கதையை இவர்கள் திருத்துவதா  என்ற திமிரில் மன்னிக்கவும் என்று பதில் அனுப்பி விட்டு, என் காதலிக்கு அனுப்பினேன். இதை வாசித்து விட்டு சொல்லுடி என்று, நாயே என்னடா எழுதி வைத்திருக்கிறாய் நீயெல்லாம் மனுசனோ கதையை இப்படி எழுதுவாங்களோ ஏன்டா நாங்கள் போடுற உள் உடுப்பை பார்க்க உங்களுக்கு என்னடா. அது வெறும் துணிதானே. வெறும் சதைகளை பற்றியே நினையுங்கோடா. எங்களையும் மனிசன் எங்களுக்கும் ஒரு மனசு இருக்கு என்று நினைக்காதையுங்கோ. நீயும் இப்படிதானோ இனி இப்படி கதை  எழுதாதை என்று பதில் வந்தது . என்னடா இது கதை காதலுக்கே ஆப்பை வைத்துவிடுமோ என்று விட்டு உடனே போன் எடுத்து கதைத்து சமாளித்த பின்னும்  எழுதிய மனம் விடவில்லை.

 

இன்னொரு இலக்கிய நண்பனுக்கு அனுப்பினேன். அவன் அண்மையில் வந்திருந்த ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதி இருந்தான். அதில் அந்த நாவலை பின்நவீனத்தின் முழுமையான அடையாளங்களை கொண்ட நாவல் என்றும் மிக மிக எளிமையான மொழி மூலம் அந்த நாவல் பின்னப்பட்டிருப்பதாகவும் மையம் என்பதே இல்லை அதனால் தமிழில் குறிப்பிடத்தக்க பின்னவீனத்துவ நாவல்களில் ஒன்று எனவும் எழுதி இருந்தவன். எனக்கு அந்த நாவலை வாசிக்க  ஜேம்ஸ் பாண்டின்  காமிக்ஸ் கதை நினைவுக்கு வந்ததை இந்த இடத்தில் மறந்துவிட்டுதான் அவனுக்கு அனுப்பினேன்.

 

இரண்டாவது நாள் அவன் பதில் அனுப்பினான். "உண்மையில் மிக சிறந்த படைப்பு இது. ஆற்றொழுக்கான மொழி மூலம் கதையை நகர்த்தி இருக்கிறாய்.  ஒரு திணிப்பாக இல்லாமல் ஒவ்வொரு பாத்திரங்களையும் அதன் போக்கில் விடிருப்பது சிறுகதைக்குரிய நல்ல பண்பு. பின்னவீனத்துவ பாணி ன்று சொல்லமுடியாவிட்டாலும் அதில் நீ முயற்சி செய்திருக்கிறாய். மைய சிதைவு நல்லமுறையில் வந்திருக்கிறது. நல்ல சஞ்சிகைக்கு அனுப்பு. அடுத்தது நீ ஒரு நாவல் எழுதவேண்டும். என்று.

 

இவன் வீணாப் போனவன் இப்படிதான் சொல்லுவான் என்றுவிட்டு சாதியப் பிரச்சனைகளையும் மாக்சிய கோட்பாடுகளையும் நிதமும் பேசுகின்ற பெரியவருக்கு அனுப்பி கருத்தினைக் கேட்டேன்.

 

முகிலன் என்ற பாத்திரம் ஒரு மேட்டுக்குடியினை பிரதிபலிப்பாக இருக்கிறது. இதில் எங்கேயும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலினைக் காணமுடியவில்லை. அந்த வேலை தளத்தில் ஒரு தொழில்ச் சங்கமும்  இல்லை தொழிலாளிகள் சுரண்டப்படுவதைப்பற்றிய சித்திரங்கள் எதுவும் இல்லை. மற்றைய கதா பாத்திரங்களுக்கு பெயர் சூட்டாமல் விடுவதிலிருந்து கதையாசிரியர் ஒரு நழுவும் போக்கினை கொண்டு தப்பி செல்கிறார். இலக்கியக் கோட்பாடு எனபது கருத்துநிலைப்பட்ட பிரகடனமாக இல்லாது மனிதனின் சமூக இயக்கம் பற்றிய தெளிவு அடைவதாகவிருத்தல் வேண்டும் அக் கோட்பாடு ஒரு உலகம் பற்றிய முழுமையான விளக்கத்தை தரவேண்டும் மேலும் அது நெகிழ்வுடையதாக இருத்தல் வேண்டும் இலக்கியக் கோட்பாடு தெளிவினை அல்லது தெளிவின்மையை அடிப்படையாகக் கொண்டு தர நிர்ணயம் செய்யப்படுகிறது.

 

இவ்வாறு நோக்கும் போது எழுத்தாளன் ஒருவன் சமூகப்பிரச்சனையை விளங்கிக்கொள்வதற்கும் பிற துறையினர் விளங்கிக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. மேலே கூறிய தெளிவு இல்லாதவிடத்து ஒரு ஒரு சமூகப்பிரச்சனையை இலக்கியமாக மாற்றும் அறிவுத்தெளிவு இல்லாமல் போய்விடும். எனினும் இலக்கிய கோட்பாடு பற்றிய சுகந்திரம் எழுத்தாளனுக்கு உண்டு. ஆனாலும் அந்த சுகந்திரத்துக்கூடாக வாசகன் விளங்கிக் கொள்வதற்கான சட்டகத்தை எழுத்தாளன் உருவாக்கவேண்டும்.இது வாசகனுடைய நுகர்ச்சி தொடர்பிலானது என்றாலும் ....

 

இன்னும் இரண்டு பக்கங்களில் இப்படியான விளக்கம் இருக்கவே, அத்தோடு வாசிப்பதை நிறுத்திவிட்டேன்

 

இனி இது  கதையா இல்லையா என்று தீர்மானிக்கும் பொறுப்பு உங்களுடையது.

 

(காக்கை சிறகினிலே இதழ் நடத்திய போட்டிக்கு அனுப்பிய கதை )

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாய்  இது கதைதான்....! மனசுக்குள் பல வினாக்களை எழுப்புது....! ஆனால் அவற்றின் விடைகளை வாசகனின் போக்குக்கே விட்டிருப்பது சிறந்த உத்தி ....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பரிசுபெற்ற கதை கதைதானே. ம் வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள் மகனே.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
On 8/15/2016 at 10:40 AM, suvy said:

நிச்சயமாய்  இது கதைதான்....! மனசுக்குள் பல வினாக்களை எழுப்புது....! ஆனால் அவற்றின் விடைகளை வாசகனின் போக்குக்கே விட்டிருப்பது சிறந்த உத்தி ....! tw_blush:

நன்றியும் அன்பும் சுவி ஐயா 

On 8/15/2016 at 2:49 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பரிசுபெற்ற கதை கதைதானே. ம் வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள் மகனே.

மிக்க நன்றி அம்மா .. அப்புறம் பேஸ்புக்கில அம்மாவைக் காணேம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.