Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடை

Featured Replies

எட்டுமணிக்கு முந்திய காலைப்பொழுது. தினம் விரியும் காட்சிகள் அப்படியே விரிந்து கொண்டிருக்கின்றன. பத்து நிமிட நடையில் மூன்று நடைபாதை நித்திரைகொள்ளிகள். காட்டுக்குள் காட்டெருமைகள் குழாமாய் நீரிற்கு ஓடுவதைப்போல் அலுவலகம் நோக்கி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நடைபாதை நித்திரைகொள்ளிகளை மிதித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் மேற்படி மூன்று இடங்களிலும்; காட்டருவி கிளையாய்ப் பிரிந்து பின் மறுபடி சேர்ந்து ஓடுவதைப்போல அலுவலக பயணிகள் விலகி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். நடைபாதை மனிதரை மிதித்துவிடக்கூடாது என்ற சிரத்தையில் நமக்கு அழுக்காகுமோ என்ற கவனமும் அவர்களிற்குள்ளாக இருந்ததாகவே பட்டது. அழுக்கு எனும்போது அது மனவெளியில் நடைபாதை மனிதன் சித்தரிக்கும் அந்தஸ்த்து இழப்பு சார்ந்து நிகழும் பயங்களுமாக இருக்கக்கூடும். 

ஒரு குழந்தையினை வளர்ப்பதற்கு ஒரு கிராமம் தேவை என்பது நடைமுறையாகையில், நடைபாதைக்கு வரும் ஒரு மனிதனின் கிராமம் தொலைந்தமை உணரப்படுவது உழைச்சல் தருகிறது. சிங்கம் கடிக்கையில் மல்லுக்கு நின்று ஒருவாறு சிங்கத்தை வென்று தப்பி வந்ததால் காட்டெருமைக்கு உயிர் இன்னமும் இருக்கிறது. ஆனால், நீருக்கு ஒடும் குழாத்தோடு சேர்ந்து தானும் ஓட வலுவில்லை. அங்கங்கு வெளித்தெரியும் சில ரணங்கள். தெரியாது பல ரணங்கள். மூசியபடி மாடு நகராது நிற்கிறது.

—-

மதியம் மனிதர்கள் மீண்டும் தெருவிற்கு வந்துவிடுகிறார்கள். கட்டிடங்களிற்குள் இருப்பதற்காய் நாளாந்தம் மல்லுக்கட்டும் மனிதன் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திறந்தவெளிக்கே ஓடிக்கொண்டிருக்கிறான். ஒரு மணிநேரத்திற்குப் பொருத்தமான நடைபாதையினை மனத்தில் ஏற்றிவிட்டுக் கால்கலைள இயல்பாய் விடுகிறேன். 

ஒரு தெருவிளக்கின் மாற்றம் பார்த்துச் சந்தியில் நிற்கையில் ஒரு மனிதன் வந்து பக்கத்தில் நின்று முகம்பார்க்கிறான். முறுவலி;க்கிறான் பின் நகர்ந்துசெல்கிறான். காலையில் பயணத்தின் போது ஒலித்திருந்த வானொலியில் எதிர்பார்க்காச் செவ்வி ஒன்று வந்து போயிருந்தது. ஏறத்தாள இருபது வருடங்கள் முன்னர் ஒரு அகால மரணத்தோடு துண்டிக்கப்பட்ட வாழ்வின் ஒரு கூறு வானொலி ஊடு பேசிச்சென்றிருந்தது. தெருவில் சிரித்த மனிதனிற்கும் வானொலியில் வந்துபோன கூறிற்கும் சம்பந்தம் ஏதுமிருந்தால் அது நானறியாதது. எனினும் அன்றைய நாளிற்கு அந்த இரண்டும் பின்னணி இசையினை வழங்கியதாய்ப்பட்டது. ஒன்று முன்னறிமுகமற்றது மற்றையது அறிந்து பிரிந்தது. இரண்டும் என்னிடம் பேசின. இரண்டுமே தாம் பேசியது எனக்குக் கேட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளத் தேவையற்றனவாய், தமது பேச்சை நானும் கேட்கிறேன் என்ற பிரஞ்ஞையே அற்றவர்களாகப் பேசிச்சொன்றன. இரு பேச்சும் எனக்குள் பதிந்து விரிந்தன.

எட்டுக்கோடியினை அண்மிக்கும் மனிதர் தொகையில் முகங்கள் அதிகமாகிவிட்டன. புறாக்கூட்டம் போன்று மனிதக்கூட்டம். முகங்களைப் பார்ப்பதற்கும் புரிவதற்கும் அவகாசமில்லை. பிரபஞ்சத்தில் வேறேதும் உயிரனங்கள் உள்ளனவா என்பதைத் தேடியலைகிறான் மனிதன். பக்கத்தில் நிற்பவன் பேசுவதையே கேட்கமுடியாதவனிற்குப் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருந்து இனம்புரியாக் கதைகள் வரின் அது புரியும் என்ற நம்பிக்கை அவன் கண்டுபிடித்து வைத்திருக்கும் கருவிகளின் சக்த்தியின் நம்பிக்கையால் மட்டும் பிறக்கிறது. சுற்றுலாக்களிற்குச்; செல்பவன் கூட கருவிகளில் காட்சிகளைப் பதிந்து செல்ல நினைக்கிறானே அன்றி மனிதனாய் ஒரு காட்சியை வாங்கி விரிய மறந்துபோகிறான். நடைபாதை நித்திரைகொள்ளிகள் வயதுவேறுபாடின்றி உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

காதிற்குக் கேட்காத கதைகளையும் உடல் உள்வாங்கிக்கொண்டே இருக்கிறது. அலைவரிசைகள் ஏராளம் ஏதேதோ கதைபேசியபடி அதிர்ந்திருக்கின்றன. கேட்பதற்கு நாதியற்றவனாய் மனிதன் கருவிகளிடம் சரணாகதியாகி வாழாதிருக்கிறான். அதனால் பொழுதைப்போக்கச் சிரமப்பட்டவனாய் போதையினை வேலை வடிவிலோ வேறேதின் வடிவிலோ தேடியலைந்துகொண்டிருக்கிறான்.


நோர்வேயின் ஒன்டால்ஸ்னஸ் பிரதேசத்தின் ற்றோல்ஸ்ற்றீகன் மலையில் ஏறிக்கொண்டிருக்கிறேன். மலையேறுவதைக் கயிறுகளோடும், படிகளோடும் மட்டும் நினைத்திருந்த எனக்கு, கரடுமுரடான பாறாங்கற்களிலும், சிறுசெடிகளும் கூளாங்கலும் எனச் சறுக்கும் மலையில் பாதுகாப்பு ஏதுமின்றி, உருண்டு விழுந்தால் இறப்பு நிச்சயம் என ஏறிக்கொண்டிருந்தமை மனதைக் குவியப்படுத்தியது. மூச்சுவாங்கியது. ஒரு மணிநேரம் ஏறி ஒரு தற்காலிக சமாந்தரத்தை அடைந்தபோது அங்கு செம்மரி ஆடுகள் மேய்ந்து நின்றன. அதுவரை குளிர்மட்டும் தெரிந்த மனதிற்குள் குளிர்ச்சி பிறந்தது. ஆடுகளைப் பிரிய மனமின்றிப் பிரிந்து இன்னமும் இருமணிநேரம் ஏறியபோது மேலும் ஒரு தற்காலிக சமாந்தரம் ஆனால் பெரிய நிலப்பரப்பு. மலை இன்னமும் உயர்ந்துகொண்டிருந்தது. தற்காலிக சமாந்தரத்தில் பனி இருந்தது. 
ஒரு பெரிய குளம் இருந்தது. சுத்தமான காற்றுப் போதையேற்றியது. பாறாங்கல்லில் பூ இருந்தது. வானம் தெளிவாய் இருக்க, சுற்றிப் பார்த்தபோது நான் சந்திரனில் நிற்கின் இப்படி இருக்குமோ என்று தோன்றியது. சந்திரனில் பூபும் செம்மரியும் இருப்பதாய்ச் சொல்லவில்லை மனிதன் அமைத்த கட்டிடம் ஒன்று கூட இல்லை. மலைக்கு மனிதன் வந்து போனதால் நிகழ்ந்த மாற்றமின்றிப் பிறவனைத்தும் இம்மலையில் இயற்கைக்பிரகாரமிருந்தன. மலை என் கர்வங்களை உடைத்துப் பணிய வைத்தது. மனமாரப் பணிந்து நிற்கையில் எழும் பிரமாண்டம் கட்டற்றது. மலைக்குத் தியானம் செய்யப் போகும் கதைகளை ஏராளம் கேட்டதுண்டு. மலைக்கு வந்தால் பின் தனியாகத் தியானம் செய்ய எவரிற்கும் தோன்றாது. மலையே தியானம்.

எற்றுவால் வெற்றிக் கோபுரத்தின் உச்சியில் நின்று பாரீசைப் பார்த்து நிற்கிறேன். இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது பாரீசில் இருந்து மாமா அனுப்பிய போஸ்ற்காட்டில் இருந்த படத்தை அப்படியே நேரே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மணிநேரம் தொலைந்தது தெரியாது தொலைந்து போகிறது. ச்சாஸ் அலிசேயில் மனித வெள்ளத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு கபேயில் அமர்;ந்து கோப்பியைப் பருகிக்கொண்டு மணிக்கணக்கில் மனிதரைப் பார்க்கிறேன். எத்தனை ஆனந்தம் முகங்களில். எத்தனை பேச்சுக்கள். நோற்றடாம் தேவாலயத்தின் பிரமிப்பில் இருந்து மீழ்வதற்காய் சீன் நதியோரம் சென்று அமர்ந்துகொள்கிறேன். இருமணிநேரம் கரைந்தது தெரியாது கரைந்து போகிறது. உறங்கி எழுந்து பதினான்காம் லூயி தொட்டு நெப்போலியன் வரை நடந்து திரிந்த வேர்சாய் கோட்டையில் தொலைந்து போகிறேன். ஒரு நாள் கரைந்து போகிறது. 'பாணில்லை என்றால் கேக்கை உண்ணட்டுமே' என்று சொன்ன மேரி அன்ற்றுனற் வாழ்ந்த அரண்மனையினைப் பார்க்கவேண்டும் என்று பட்டதால் சென்று நின்று அவள் எப்படி அதைச் சொல்லியிருப்பாள் என நினைப் பார்த்துக் கொண்டேன். ல்லூவ் அருங்காட்சியகம் முழுவதும் சரித்திரம் நேரக்குடுவையில் வைத்து என்னை அழைத்துத் திரிந்தது. போதை இறங்கும் என நினைத்து ற்றூவலறீஸ் பூங்காவிற்குள்ளால் நடந்து கால்போன போக்கில் திரிந்து பாரீசை அணுவணுவாய் ரசிக்கிறேன். போதை ஏறிக்கொண்டேயிருக்கிறது.

பாரீசின் வெள்ளையன் பாதைகளில் திரிந்துகொண்டிருக்கையில் தமிழன் தொணதொணத்தான். லாசப்பல் சென்றேன். ஆசியாவிற்கு வெளியே அதிக தமிழர் வாழும் கனடாவில் வாழும் எனக்கும் கூட லாசப்பல் ஊரைக் காட்டத் தவறவில்லை. நடந்து திரிந்தபடி அப்பக்கடைக்கு முன்னால் இருந்த பாரத் கபே என்ற தமிழ் உணவகத்திற்குள் நுழைந்தேன். அருமையான சாப்பாடு, அற்புதனமான உபசரிப்பு. மகிழ்வாய் எழுகையில், பரிமாறியவர், இதற்கு முன் நான அறிந்திராதவர் வந்து 'சாப்பிட்டாச்சா, சந்தோசம். போட்டுவாங்கோ' என்றோர். எத்தைனையோ தேசங்களில் எத்தனையோ உணவகங்களைக் கடந்து எனக்குள் மேற்படி வாசகம் நெகிழ்தலைப் பரப்பியது. அடையாளம் சார்ந்து நினைக்கத் தோன்றியது. அறிந்தவர் தெரிந்தவரை எல்லாம் பாரீஸ் போனால் பாரத் கபேக்குப் போங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மனதில் ஏற்றிய பாதையின் ஒரு மணிநேர முடிவாய்க் கால்கள் அலுவலகத்தை அண்மித்தன. நோர்வேயின் மலைகளில், பாரீசின் வனப்பில் அலைந்த எனது மனநிலைகளை அப்படியே ரொறன்ரோவின் மத்தியில் நடந்துகொண்டிருந்தபடி அள்ளிப் பருக முடிந்தமை புத்துணர்ச்சி தந்தன. காலையில் கேட்ட வானொலிச் செவ்வியின் பேச்சு, சந்தியில் நின்று பார்த்துக் கடந்து போன மனிதனின் பேச்சு, நடைபாதை நித்திரைகொள்ளிகளைக் கடந்து போன மனிதரின் பயங்கள், உலகெங்கும் எனக்குள் பதிந்த பதிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாக ஆனால் தனித்தனித் தெளிவாக நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உணரமுடிகிறது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Innumoruvan said:

பாரீசின் வெள்ளையன் பாதைகளில் திரிந்துகொண்டிருக்கையில் தமிழன் தொணதொணத்தான். லாசப்பல் சென்றேன். ஆசியாவிற்கு வெளியே அதிக தமிழர் வாழும் கனடாவில் வாழும் எனக்கும் கூட லாசப்பல் ஊரைக் காட்டத் தவறவில்லை. நடந்து திரிந்தபடி அப்பக்கடைக்கு முன்னால் இருந்த பாரத் கபே என்ற தமிழ் உணவகத்திற்குள் நுழைந்தேன். அருமையான சாப்பாடு, அற்புதனமான உபசரிப்பு. மகிழ்வாய் எழுகையில், பரிமாறியவர், இதற்கு முன் நான அறிந்திராதவர் வந்து 'சாப்பிட்டாச்சா, சந்தோசம். போட்டுவாங்கோ' என்றோர். எத்தைனையோ தேசங்களில் எத்தனையோ உணவகங்களைக் கடந்து எனக்குள் மேற்படி வாசகம் நெகிழ்தலைப் பரப்பியது. அடையாளம் சார்ந்து நினைக்கத் தோன்றியது. அறிந்தவர் தெரிந்தவரை எல்லாம் பாரீஸ் போனால் பாரத் கபேக்குப் போங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு தொலைபேசி  எடுத்திருந்தால்

ஓடி வந்திருப்பேன்

கடை முதலாளிமார் எனது உறவுகள்தான்

இதை நிச்சயம் அவர்களுக்கு காட்டுவேன்.

நன்றி விளம்பரத்துக்கும் கதைக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் ஜரோப்பா டூர் வந்து போயிருக்கார் போல.பரத் கபேயை ரொம்பத் தான் புகழுகிறார்.கொஞ்ச காலத்திற்கு முன்பு பிரான்சில் இருப்பவர்கள் சொன்னார்கள் அந்த உண்வகத்தினர் தமிழாட்கள் போனால் வடிவாய் கவனிக்க மாட்டினமாம் என்று ஒரு வேளை இன்னுமொருவனைப் பார்த்தால்...

பி.கு; முகத்தை ஒருத்தருக்கும் காட்டாதீங்கோ.காட்டினால் தில் குறைந்து விடும். அனுபவ பதிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் எங்கெல்லாமோ சுற்றியலைந்து வந்து பரத் கபேயில் ஒரு மனிதனைக் கண்டு களித்தார். அழகான அனுபவக் கதை, கதை கவிதை வடிவிலும் வடிந்து கருத்தைக் கவருகிறது. வாழ்த்துக்கள்!! 

  • தொடங்கியவர்

நன்றி விசுகு, ரதி, புங்கையூரான் மற்றும் பான்ச் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

நண்பர் எண்ணிக்கை வைத்துப் பார்க்கையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் வகை தான் என்னையும் உள்ளடக்கும். ஆத்மார்த்தமற்ற உறவுகளில் நேரம் செலவிடுவதில்லை. வுhழ்வில் இரண்டே நண்பர்கள் தான். ஒருவர் அகாலமான காலகட்டத்தில் தான் இரண்டாவது நட்புக் கிடைத்தது. எனவே ஒரே ஒரு நட்பு தான் வாழ்வில் இருந்திருக்கிறது. ஏகப்பட்ட தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நட்பு என்பது ஒன்று தான்.

பொதுவில் பிற இடங்களிற்குச் செல்லும் போது ஹோட்டலில் நிற்பது தான் வழமை. இம்முறை என்னைச் சற்று மாற்றவேண்டும் என்ற முயற்சியில் உறவுக்காரர்--ஆனால் நான் இதற்குமுன்னர் சந்தித்திராதவர்-வீட்டில் நின்றேன். நான் வெளியே கிழம்பித் திரிந்த நேரங்கள் போக அவர்கள் வீட்டில் நின்றபோது, உண்மையிலேயே நெகிழச்செய்து விட்டார்கள். இதற்கு முன்னால் நான் பார்த்தே இராதவர்கள நான் கிழம்பும்போது ஏதோ சிறுபராயம் முதல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் போன்றதொரு அன்னியோன்னியத்தை உணரவைத்துவிட்டார்கள். 

வட அமெரிக்க வாழ்வு முறைக்கும் ஐரோப்பாவிற்கும் நிறையவே வித்தியாசங்களை உணர முடிந்தது (இது பற்றி ஒரு பதிவு போட நினைத்து பின் விட்டுவிட்டேன்). ஈழத்தில் பதின்ம வயதில் விட்டுப் பிரிந்த நடைமுறைகள் ஐரோப்பாவில் மீளக் காணமுடிந்தது (ஈழத்தைக் காட்டிலும் வட அமெரிக்காவில் நிலமை வெகு சிறப்பாக உள்ளது—எனது அபிப்பிராயம்).

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மனிதர்களை அவதானிப்பது ஒரு பொழுதுபோக்கு. இலண்டனில் உள்ள பிரபலமான trafalgar சதுக்கத்தில் இருந்து விதவிதமான மனிதர்களை பார்ப்பது பிடிக்கும். எனினும் இதனை என்னுடன் வேலை செய்த பின்லாந்துக்காரன் ஒருவனுக்கு ஒருமுறை சொன்னபோது ஒரு மாதிரியாகப் பார்த்தான்!

இலண்டனில் இருந்தாலும் பாரிஸ் வீதிகளில் நடப்பதுதான் பிடித்தமானது. இன்னுமொருவனின் அனுபவம் எழுத்தில் மிகவும் அழகாக வந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.