Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எப்படி புகைப்பதை நிறுத்தினேன்?

Featured Replies

cigar_3061339f.jpg
 

புகைத்தல் வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய்

புது வருஷத்தைத் தொடங்கும்போது “இந்த வருஷமாவது சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திடணும்” என்று வைராக்கியத்துடன் கிளம்புபவர்கள் பொங்கல் முடிவதற்குள் புகைபிடிப்பதை மீண்டும் தொடர்வதைப் பார்த்திருப்போம். பலரும் சொல்வதைப் போல் புகைப் பழக்கத்தை நிறுத்துவது சற்று சிரமமான காரியம்தான். ஆனால், மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை. எனது அனுபவமே அதற்கு உதாரணம்.

அப்பா ஆசிரியர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளுக்கும் பள்ளிக் கூடத்தில் தொண்டை வறளக் கத்தியதும், ஓய்வுநேரத்தில் புகைத்த கோபால் பீடிகளும் அவருக்குத் தீராத இருமலைத் தந்தன. பள்ளியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, திடீரென்று ஆஸ்துமா தாக்குலுக்கு ஆளாகி, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்த நாட்களில் புகைக்க வழியில்லை. கொர்...கொர்… என்று மூச்சுத் திணறல்களுக்கு இடையே பீடி வேண்டும் என்று கேட்டார். நான் முடியாது என்று மறுக்க, இருமிக்கொண்டே திட்டினார். அதில் கோபத்தைவிட கெஞ்சல்தான் அதிகம் இருந்தது. கடைசியில் மனது கேளாமல், நர்ஸ்களுக்குத் தெரியாமல் பீடியும் தீப்பெட்டி யும் கொடுத்தேன். அடுத்த நாள் அவர் இறந்துபோனார்.

தவறான நம்பிக்கைகள்

புகைப் பழக்கம் ஒரு மனிதனை இவ்வளவு தவிக்க வைக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது. பீடி - சிகரெட்டுகள் மீது, புகைப்பவர்கள் மீது கோபமும் வெறுப்பும் வந்தது. புகையை இவ்வளவு வெறுத்த நான் எப்படி, எப்போது, யாரிடமிருந்து பழகினேன் என்று நினைவில்லை. எப்படியோ பழகிவிட்டேன். சுமார் 40 ஆண்டுகளாகப் புகைத்துவந்திருக்கிறேன். புகைப்பதை வெறுத்தவன் படிப்படியாக புகைப்பதைப் போற்றுபவன் ஆகிப்போனேன். புகைப்பது ஒரு ஸ்டைல், ஆண்மகனின் அடையாளம், புகைப்பது மூளையைச் சுறுசுறுப்பாக்கும், பதற்றத்தைக் குறைக்கும், கவலையை மறக்கடிக்கும்... இப்படிப் பலவித தவறான நம்பிக்கைகளால் கட்டுண்டு கிடந்தேன்.

குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் அறிவுரைகள், அல்லது பொருளாதாரச் சிக்கல்கள், அல்லது உடல் ஆரோக்கியம் கெடுதல் போன்ற காரணங்களால் புகைப்பதை விட்டொழிக்கும் ஆசை அவ்வப்போது தலை தூக்கும். முயற்சிசெய்வோம், தோற்போம், அல்லது தற்காலிக வெற்றி பெறுவோம், மீண்டும் புகைக்கத் தொடங்குவோம்.

புகைப் பழக்கம் ஒரு நோய்

புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி யிருக்கும் நாடுகளில் முதன்மையானவை ஆசிய நாடுகள்தான். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்றவை. இந்த நாடுகளில் உள்ள மக்களின் மொழிகளில் புகைப் பழக்கத்துக்கு எதிரான தகவல்கள் கிடைக்காதிருப்பது துரதிர்ஷ்டம்தான். இங்கே கிடைப்பவை எல்லாம் பெரும்பாலும் மிரட்டல்கள்தான். பொது இடங்களில் புகைக்கக் கூடாது போன்ற சட்டங்களால் புகைப் பழக்கத்தை ஒழித்துவிட முடியாது. புகைத்தல் என்பது வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய். புகைப்பவன் ஒரு நோயாளி. தான் நோயாளி என்று அறியாத நோயாளி. புகைப்பவரை ஒரு நோயாளியைக் கையாள்வதுபோல எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.

புகைப்பதை நிறுத்துவதற்கான பயனுள்ள ஆலோசனைகள், தகவல்கள் இணையத்தில் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. நேரடியாக மிரட்டாமல், உளவியல்ரீதியாகப் புரியவைக்கும் மென்மையான மொழியில், ஆலோசனைகள் கிடைக்கின்றன.

ஒரு மாதத்துக்கு முன்னர், ஒரு மாலை நேரத்தில் புகைப்பதை நிறுத்துவது என முடிவுசெய்தேன். சிகரெட் பாக்கெட்டில் இரண்டு சிகரெட்டுகளும், மேசையில் லைட்டர்களும் ஆஷ்ட்ரேவும் இருந்தன. மூன்றையும் துணைவியார் கையில் கொடுத்து, குப்பையில் போடச் சொன்னேன். 28 ஆண்டு கால மண வாழ்க்கையில் நம்பவே முடியாத வியப்பை அவருடைய பார்வை வெளிப்படுத்தியது. ஒரு திடீர் கணத்தில் தூண்டலால் உந்தப்பட்டு எடுத்த முடிவுதான் அது. ஆனால், அந்த முடிவில் உறுதியாக நின்றேன். ஃபேஸ்புக்கில் அதைப் பற்றி எழுதினேன். ஏராளமானோர் வாழ்த்தினார்கள். பலர் தானும் விட்டொழிக்க முன்வந்தார்கள். அதன் பிறகு சிகரெட்டின் தீமைகள் குறித்துத் தொடர்ந்து எழுதினேன். பலருக்கு தொலைபேசி வழியிலும், உரையாடல் வழியிலும் ஆலோசனைகள் வழங்கி ஊக்குவித்தேன். சிலர் என்னோடு சேர்ந்து முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறார்கள்.

புகையை வெல்ல…

தினமும் புகைக்கும் சிகரெட் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து விட்டொழிப்பேன் என்று நினைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது என்று முடிவுசெய்தால் ஒரேயடியாக விட்டொழிக்க வேண்டும். உறுதியெடுத்த அந்தக் கணமே கையில் இருக்கிற சிகரெட்டுகளை உடைத்துத் தூக்கியெறிவது அவசியம்.

சிகரெட்டை நிறுத்துவதென முடிவுசெய் வதற்குக் கால அவகாசம் தேவை என்றால், உங்கள் பிறந்தநாள், மணநாள், அல்லது பிள்ளைகளின் பிறந்தநாள் போன்ற ஏதேனுமொரு விசேஷ நாளில் விட்டொழிக்க முடிவுசெய்யலாம். சிகரெட்டை விட்டொழித்த நாள்தான் மிகச் சிறந்த விசேஷ நாள் என்பதை மறந்துவிடக் கூடாது. எதற்கும் அவசரத்துக்கு இருக்கட்டும் என்று சிகரெட்டைக் கையிருப்பில் வைத்திருக்காதீர்கள். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்ட்ரே எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடுங்கள்.

உறுதிமொழியும் ஆதரவும்

புகைப்பதை நிறுத்தப்போகிறேன் என்ற செய்தியை உங்கள் மீது அக்கறையுள்ள, உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அது ஒருவகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதுபோல் ஆகும். உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவும் அளிப்பார்கள்.

சிகரெட் பிடிப்பதால் பிரச்சினைகள் தீர்வ தில்லை. உண்மையில், பிரச்சினையை எதிர்கொள்ள நாம் புகைக்கும் சிகரெட்டே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பதை நிறுத்திய முதல் இரண்டு நாட்களைவிட அதற்கடுத்த நாட்களில்தான் சிகரெட் ஏக்கம் அதிகமாக இருக்கும். ஒரே ஒரு சிகரெட் புகைத்தால் என்ன குறைந்துவிடும் என்ற எண்ணம் அடிக்கடி வரும். அது ஆபத்து. அந்த ஒரு சிகரெட் ஒருபோதும் ஒன்றோடு நிற்காது.

புகைப் பழக்கத்தை நிறுத்தும்போது உடல் நிகோடினுக்காக ஏங்கும். அதை நிவர்த்திசெய்ய நிகோடின் கலந்த பபுள் கம் அல்லது மின்னணு சிகரெட்டுகள் போன்றவை இப்போது பரவலாக விளம்பரம் செய்யப்படுகின்றன. இது எப்படி என்றால், கஞ்சா போதையிலிருந்து வெளியேற அபின் சாப்பிடலாம் என்பதுபோல. தேவையில்லை. நம் மனவுறுதியைக் காட்டிலும் வேறு எதுவும் துணையில்லை.

புகைக்காமல் இருந்தமைக்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள், பெருமைப் படுங்கள். சிகரெட் வாங்காமல் சேமித்த பணத்தைக் கொண்டு உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தில் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். அந்த சந்தோஷமே தனி!

- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர்.

தொடர்புக்கு: shahjahanr@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/நான்-எப்படி-புகைப்பதை-நிறுத்தினேன்/article9279634.ece?homepage=true&theme=true

  • கருத்துக்கள உறவுகள்

புகை பிடிப்பவரா பார்த்து திருந்தாவிட்டால்  அதனை தடுக்கவும் இயலாது நிறுத்தவும் இயலாது 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

புகைப்பதை நிறுத்தும் மனவுறுதியை எங்கிருந்து பெறுவது?

cigar1_3088987f.jpg
 
 

திடமான மனவுறுதி இருந்தால், ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடலாம்

புகைப் பழக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் பலரும் புகையை வெல்வதற்குச் சொல்லும் முக்கியமான வழி மனவுறுதி. சமீபத்தில் ‘தி இந்து’வில் வெளியான ஷாஜஹானின் கட்டுரைகூட இதை ஆழமாகச் சொல்லியிருந்தது. ஆனால், அந்த மனவுறுதி இல்லாமல் அவதிப்படுபவர்கள்தான் நம்மிடம் அதிகம். அந்த மனவுறுதியை எங்கிருந்து பெறுவது?

ஒரு மருத்துவராக, புகைப் பழக்கத்தை ஒருவரின் தனிப்பட்ட பழக்கமாக அணுகுவதைக் காட்டிலும், சமூகப் பிரச்சினையாக அணுகுமாறு நான் எல்லோரிடமும் கேட்டுக்கொள்வேன். இன்றைக்குப் புகைப் பழக்கம் நம் சமூகத்தில் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதைக் கவனித்தால், இதன் பின்னணியை எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.

நான்காயிரம் நச்சுகள்

உலக அளவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்தான் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் மட்டும் 12 கோடிப் பேர் புகைபிடிக்கிறார்கள். இதில் ஆண்களில் 30%, பெண்களில் 5% பேர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகைபிடிப்பதால் மட்டுமே இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பு.

மனித உடலில் நுழைவதன் மூலம், ஒரே நேரத்தில் பல உறுப்புகளைத் தாக்கும் வல்லமை கொண்ட பொருட்களில் புகையிலையே முன்னிலையில் இருக்கிறது. புகையிலையில் நச்சுகளின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் மேல். அவற்றில் மிக அபாயகரமான நச்சு நிகோடின்! இது ஒரு போதைப் பொருள். பீடி,சிகரெட்,சுருட்டு, வெற்றிலைச் சீவல், மூக்குப் பொடி, பான்மசாலா எனப் பல வேடங்களில் இது உடலுக்குள் செல்கிறது. கொரோனரி ரத்தக் குழாயைச் சுருங்கவைத்து, மாரடைப்பைக் கொண்டுவரக் கூடியது நிகோடின். புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகை பிடிக்காதவர்களைவிட ஐந்து மடங்கு அதிகம் என்கிறது உலக இதய நோய்க் கழகம்.

புகையிலையும் புற்றுநோயும்

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்திப் பக்கவாதம் உருவாவதற்கான சூழலை உருவாக்குவதிலும் நிகோடின் முன்னிலை வகிக்கிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, கால் விரல்களை அழுகவைத்து, காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளுவதும் உண்டு. நுரையீரல் புற்றுநோய்க்கு மூலகாரணங்களில் ஒன்று புகைப் பழக்கம். புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகை பிடிக்காதவர்களைவிட 25 மடங்கு அதிகம். தவிரவும், வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை, கணையம், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் என்று பல இடங்களில் புற்றுநோயை உருவாக்கும் காரணங்களிலும் புகை முன்னணியில் இருக்கிறது. ‘சிஓபிடி’(Chronic Obstructive Pulmonary Disease) என அழைக்கப்படும் ‘நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை’வளர்ப்பதில் முதலிடம் வகிப்பதும் இதுதான். முன்பெல்லாம் இது 50 வயதைத் தாண்டியவர்களுக்கே வந்தது. இப்போது 30 வயதிலும் வருகிறது. இதற்கு பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுவது, 13 வயதிலேயே புகைக்கும் பழக்கம் பலரிடமும் உருவாகிவிடுகிறது என்பதாகும். ஆக, இது ஒரு சமூகப் பிரச்சினை.

ஒருவர் புகைப்பதை அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று நாம் அப்படியே கடக்க முடியாது. புகையிலிருந்து அவரை மீட்க நம்முடைய கரிசனம் அவசியம். ஏனென்றால், நடுவயதில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினாலும் ஆயுள் நீடிக்கும். புகைக்கும் பழக்கத்துக்கு விடை கொடுத்தால், ஒருவருக்கு ஏற்கெனவே உள்ள மாரடைப்புக்கான வாய்ப்பில் 30% ஒரே வருடத்தில் குறைந்துவிடுகிறது. புகைப்பதை நிறுத்திய 5 ஆண்டுகளில் பக்கவாத வாய்ப்பு பெரிதும் அகல்கிறது. வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை, சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு பாதியாகக் குறைந்துவிடுகிறது. புகைப்பதை நிறுத்திய 10 ஆண்டுகளில், நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் பாதியாகிவிடுகிறது.

புகைப்பதை நிறுத்த வழிகள்

நம் முன்னே நிற்கும் பெரும் சவால், “நான் புகைப்பதை நிறுத்தத்தான் நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்வது?” என்ற கேள்வி. சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இந்தப் பழக்கத்தைத் தொடர்கிறவர்களே அதிகம். திடமான மனவுறுதி இருந்தால், ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடலாம் என்ற உண்மையை ஆழமாக நம்புவதே புகையிலிருந்து விடுதலை அடைவதற்கான அடிப்படை நிலை.

புகையிலிருந்து விடுபட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்கிறார்கள். முதலில் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிறகு புகைக்கும் நேர இடைவெளியைக் கூட்டி, புகைக்கும் நினைப்பு வரும்போதெல்லாம் கவனத்தை வேறு திசைக்குத் திருப்பும் நடவடிக்கைகளில் இறங்கி - இப்படி என்னென்னவோ வழிகளைக் கையாண்டு விடுதலையானவர்கள்கூட உண்டு. “எப்போதெல்லாம் புகைக்கும் எண்ணம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் என் மனைவியுடனோ, பிள்ளைகளுடனோ பேசிவிடுவேன். செல்பேசியிலாவது. அவர்கள் முகமே என் நினைப்பை மாற்றிவிடும்” என்று சொன்னார் ஒரு நோயாளி. இப்போதெல்லாம் புகைப்பதை மறக்கச் செய்யும் மாத்திரைகள்கூட வந்துவிட்டன. மருத்துவர்களின் ஆலோசனையோடு இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இன்னும் நாள்பட்ட புகை நோயாளிகளை விடுவிக்க நிகோடின் கலந்த சூயிங்கம், பட்டைகள் போன்றவைகூட வந்துவிட்டன. உதாரணமாக, பிளாஸ்திரி போன்ற நிகோடின் பட்டைகளை முடி இல்லாத முன்கையில்/தொடையில் ஒட்டிக்கொண்டால், மிகக் குறைந்த அளவிலான நிகோடின் தோல் வழியாக ரத்தத்துக்குச் சென்று, புகைக்கும்போது ஏற்படும் அதே உணர்வைக் கொடுக்கும். இதனால், புகைக்கும் ஏக்கம் குறையும். அதேசமயம், கையில் சிகரெட்டைத் தொடவில்லை எனும் உண்மை நாளடைவில் மனஉறுதியை உண்டாக்கி, அதுவும் வேண்டாம் என்று புகையிலிருந்து முழுவதுமாக விடுவிக்கும்.

புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுவிக்க அரசாங்கம் நிறையவே நடவடிக்கைகளை எடுக்கிறது. எனினும், வெறுமனே “புகைக்காதீர், புகை நமக்குப் பகை” என்றெல்லாம் வெற்றுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும், புகையை வெல்வதற்கு ஆக்கபூர்வமான வழிகள், சிகிச்சை முறைகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுசெல்வது பலன் அளிக்கும். புகைப்பதிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளையும் மாத்திரைகளையும் சிறு நகரங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் வரை கொண்டுசெல்வது கூடுதல் பலன் அளிக்கும்!

-கு.கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/புகைப்பதை-நிறுத்தும்-மனவுறுதியை-எங்கிருந்து-பெறுவது/article9373479.ece?homepage=true&theme=true

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இருபது வருடங்களாக புகைத்தவன்.......புகைத்தலை விட்டு பத்தொன்பது வருடங்களாகின்றது. எல்லாம் மனம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

40  வருடங்களுக்கு மேலாக... சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது.
விட வேண்டும் என்று... ஒவ்வொரு வருட இறுதியிலும், புது வருட சபதம் எடுப்பேன்.
அந்தச் சபதம் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது.
2017 ´ம்  ஆண்டிருந்து புகைப்பதை.. கைவிட வேண்டும் என்று.. புதிய சபதம் எடுக்க இருக்கின்றேன்.

30 minutes ago, தமிழ் சிறி said:

40  வருடங்களுக்கு மேலாக... சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது.
விட வேண்டும் என்று... ஒவ்வொரு வருட இறுதியிலும், புது வருட சபதம் எடுப்பேன்.
அந்தச் சபதம் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது.
2017 ´ம்  ஆண்டிருந்து புகைப்பதை.. கைவிட வேண்டும் என்று.. புதிய சபதம் எடுக்க இருக்கின்றேன்.

வாழ்த்துக்கள்

(ஓ கையில சிகரெட்டை வைத்துக் கொண்டு வாழ்த்து சொல்லக்கூடாதோ)

எனக்கும் 29 வருடமா இந்த பழக்கம் இருக்கு. சென்ற வருடம் இங்கு வந்தபோது 680 ரூபாக்கு வாங்கிய ஒரு பாக்கெட் இப்போது 990 ரூபா. எனக்கு சிக்ரெட்ட்டை விடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை - ஆனால் சிகரெட்டுக்குத்தான் என்னை விட விருப்பம் இல்லையாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஜீவன் சிவா said:

வாழ்த்துக்கள்

(ஓ கையில சிகரெட்டை வைத்துக் கொண்டு வாழ்த்து சொல்லக்கூடாதோ)

எனக்கும் 29 வருடமா இந்த பழக்கம் இருக்கு. சென்ற வருடம் இங்கு வந்தபோது 680 ரூபாக்கு வாங்கிய ஒரு பாக்கெட் இப்போது 990 ரூபா. எனக்கு சிக்ரெட்ட்டை விடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை - ஆனால் சிகரெட்டுக்குத்தான் என்னை விட விருப்பம் இல்லையாம். :grin:

முடியல..... :grin:  Smiley smoking 030.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.