Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்?

Featured Replies

இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்?

 

கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான 'டிச் தி லேபிள்'அமைப்பு நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிய வந்துள்ளது.

இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்?படத்தின் காப்புரிமைTHINKSTOCK

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தன்னுடைய செல்ஃபிகளை யாரும் லைக் செய்யவில்லை என்றால் மன வருத்தம் அடைவதாக 40 சதவீத இளைஞர்களும், தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தங்களின் மன உறுதியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாக 35 சதவீத இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

தங்களை சமூக வலைத்தளங்களில் யாராவது கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்வதாக மூன்றில் ஒருவர் தெரிவித்துள்ளனர். தோற்றத்தை கொண்டு மற்றவர்களை கேலி,கிண்டல் செய்வது சமூக வலைத்தளங்களில் முக்கிய அம்சமாக உள்ளது.

தற்போதைய குழந்தைகள் வெறுப்புணர்வு கலாசாரத்தில் வாழ்வதாக நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் விவாதிக்கும் விடயங்கள் என்ன?

இந்த ஆய்வில் பங்கு கொண்ட 12 முதல் 20 வயதுக்குட்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதின்ம வயதினர் , இணையம் வழியாக அடுத்தவரை துன்புறுத்தும் பழக்கம் பரவி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மற்றவர்களை சமூக வலைத்தளங்கள் வழியாக கேலி, கிண்டல் செய்வதாக 70 சதவீத இளைஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 17 சதவீதம் பேர் தாங்கள் இணையத்தில் கேலி, கிண்டல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட பாதி பேர் (47%) தங்களுடைய வாழ்க்கையின் கெட்ட விடயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிப்பதில்லை மற்றும் பலர் தங்களுடைய வாழ்க்கை குறித்த பொய்யான தகவல்களையே தெரிவிக்கின்றனர்.

'சமூக வலைத்தளங்களில் தங்களுடைய தோற்றம் மற்றும் குண நலன்கள் குறித்து விவாதிக்கும் போக்கு தற்போது இருக்கிறது. ஆனால் நிஜத்தில் அவர்கள் உண்மையை வெளியிடத் தயாராக இல்லை.' என டிச் த லேபிள் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி லியாம் ஹாக்கெட் தெரிவிக்கிறார்.

அவமானப்படுத்தும் வார்த்தைகளுடன் கூடிய கமெண்டுகள் அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக இன்ஸ்டாகிராம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

`இளைஞர்கள் சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இணையக் கொடுமைப்படுத்துதல் தொடர்ந்து வருகிறது` என ஹாக்கெட் கூறுகிறார்.

GETTY IMAGESபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இணையத்தில் பதிவிடப்படும் கருத்துகளை தணிக்கை செய்யும் நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் தங்களுக்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக அவை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பார்வை இங்கிலாந்தின் குழந்தைகளுக்கான ஆணையாளரான ஆன் லாங்ஃபீல்டின் கருத்திலும் எதிரொலிக்கிறது. சமூக வலைத்தளங்களுக்கும், பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த அரசின் மத்தியஸ்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பள்ளிகளில் `கட்டாய டிஜிட்டல் குடிகமன் வகுப்புகள்` நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகள், இந்த மாத்த் துவக்கத்தில் வெளியான ஆக்ஸ்ஃபோர்டு இணைய கல்வி நிறுவனம் வெளியிட்ட முடிவுகளுக்கு முரணாக உள்ளன. இதன் ஆய்வு முடிவுகளில் இணைய கொடுமை ஒப்பீட்டளவில் அரிதானது எனக் கூறப்பட்டிருந்தது.

இணையத்தால் கொடுமைப்படுத்தப்படுகின்றனரா?

15 வயதுடையவர்களிடம் அதிகம் கவனம் செலுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், இணையத்தில் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்படுவதாக 30 சதவீதம் பேரும் ,இது போன்ற கொடுமைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் நடைபெறுவதாக மூன்று சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆய்வு முடிவுகளுக்கும் இடையிலுள்ள இந்த பெரிய வேறுபாடு என்பது, ஆய்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தன்மையால் ஏற்பட்டிருக்கலாம் என கிட்ஸ்கேப் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரன் சீகர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

`இந்த ஆய்வுகள் சமூக வலைத்தளங்களில் உள்ள இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. ஆனால் இரண்டு ஆய்வுகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இதற்கு ஆய்வுக்கான கேள்விகள் எப்படி கேட்கப்பட்டது, யாரிடம் கேட்கப்பட்டது, அவர்களுடைய வயது என்ன என்பவை காரணமாக இருக்கலாம்.` என அவர் கூறியுள்ளார்.

டிச் த லேபிள் அமைப்பின் ஆய்வு முடிவுகள் தனக்கு பெரிய ஆச்சரியத்தை அளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

`நாம் வெறுப்புணர்வு கலாசாரத்தில் வாழ்ந்து வருகிறோம். இதில் சோகமான அம்சம் என்னவென்றால், நம் குழந்தைகள் இந்த கலாசாரத்தில்தான் வளர்ந்து வருகிறார்கள்.`

மேலும் இளைஞர்களும் தங்களுடைய இணைய பயன்பாடு குறித்து யோசிக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

`குழந்தைகளுக்கு நிகராக பெற்றோர்களும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக உள்ளனர். இது தங்களுடைய வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை விட இன்னும் பல விடயங்கள் வாழ்க்கையில் உள்ளது என்பதை சொல்லக் கூடிய நேரம் இது.` என லாரன் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-40657968

  • தொடங்கியவர்

விழிப்புணர்வு: வலைவிரிக்கும் சமூக ஊடகங்கள்

shutterstock71935402

இன்று பலரும் சமூக வலைத்தளங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். கருத்துச் சொல்வதும் சொற்போர் புரிவதும் ஒரு ரகம் என்றால், தங்கள் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது இன்னொரு ரகம். அந்த அந்தரங்கமான விஷயங்களைத் தெரிந்தவர் தெரியாதவர் என்று பலருக்கும் பகிரும்போது, பெரும்பாலும் பெண்களே பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

“சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்குக் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இளைஞருடன் ஃபேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த இளைஞரை நம்பி அந்தப் பெண்ணும் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை இரண்டு நாட்களாக காரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த இளைஞர். பிறகு பண்ருட்டி அருகே ஒரு முந்திரித் தோப்புக்கு அழைத்துச் சென்று அவர் மீது இன்ஜின் ஆயிலை ஊற்றிக் கொளுத்த முயன்றிருக்கிறார். இதில் அந்தப் பெண்ணுக்கு நெற்றிப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் எப்படியோ அங்கிருந்து தப்பித்திருக்கிறார். அருகிலிருந்த கிராமத்தினர் அவரை மீட்டுள்ளனர். இப்போது அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். நேரில் அறிமுகம் இல்லாமல் ஃபேஸ்புக் மூலமாக மட்டுமே கிடைக்கும் நட்புகளிடம் சற்றே எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்”

- விழுப்புரம் சரக டிஐஜி பாலகிருஷ்ணன் வெள்ளையா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த தகவல் இது.

வேண்டாமே அந்தரங்கப் பகிர்வு

சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வயப்பட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணத்தை இழப்பது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பின்னணியில் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, இணையவழிக் குற்றங்களிலிருந்து பெண்கள் எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“சமூக வலைத்தளம் என்பது ஒரு திறந்தவெளி. அதில் யார் வேண்டுமானாலும் ஊடுருவலாம். என்றைக்காவது திறந்தவெளியில் ஆடை மாற்றுவது குறித்து யோசித்திருப்போமா? ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டும் விதவிதமான படங்களை எவ்விதப் பாதுகாப்பும் இன்றிப் பதிவேற்றுவது ஏன்?

முதலில் ஃபேஸ்புக் கணக்கில் உங்கள் ‘செட்டிங்க்ஸ்’ பக்கத்துக்குச் சென்று உங்களது புகைப்படங்களை நெருக்கமாக அறிமுகமான நட்பு வட்டாரம் மட்டும் பார்க்கும்படி மாற்றுங்கள். தேவையில்லாமல் புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டாம்.

பலரிடம் இருந்தும் நட்பு அழைப்புகள் வரலாம். ஆனால், தகுந்த ஆய்வு செய்யாமல் யாருடைய நட்பு அழைப்பையும் ஏற்கக் கூடாது.

எல்லாவற்றையும் கூகுளில் தேடும் நாம், சைபர் விழிப்புணர்வு குறித்தும் அதே முக்கியத்துவத்துடன் அறிந்துகொள்ள வேண்டும். நமது அந்தரங்கப் புகைப்படத்தை யாருடனாவது பகிர்ந்து, அது இணையத்தில் துஷ்பிரயேகம் செய்யப்பட்டால், பிறகு அதை நிரந்தரமாக நீக்குவதற்கான சாத்தியம் குறைவு. வெளிநாட்டிலிருந்து அந்தப் புகைப்படமோ வீடியோவோ பதிவேற்றப்பட்டிருந்தால், அதை நீக்குவதற்கான அனுமதி நமக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே, தேவையற்றதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது” என்கிறார் அந்த அதிகாரி.

பெற்றோர்கள் ஜாக்கிரதை

டேப்லட், லேப்டாப், விலையுயர்ந்த செல்போன் எனப் பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளையும் அதற்கு இணைய இணைப்பையும் பல பெற்றோர் இன்றைக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகள் அவற்றில் எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்று என்றைக்காவது கண்காணித்திருக்கிறார்களா?

என் குழந்தைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் என பெருமிதம்கொள்பவரா நீங்கள்? அப்படியென்றால் மிகப்பெரிய தவறு செய்துகொண்டிருக்கிறீர்கள். இணையவெளியில் என்னென்னவோ தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அத்தனையையும் கையாளும் அளவுக்கு ஒரு குழந்தைக்கு உளவியல் பக்குவம் இருக்கும் என்பதை எதை வைத்துத் தீர்மானிப்பது?

உங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் இணையக் கருவிகளில் பாதுகாப்புக்கான மென்பொருள்களை நிறுவுங்கள். நீங்கள் அலுவலகத்தில் இருந்தால்கூட அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை அப்போது கண்காணிக்க முடியும்.

நீங்கள்தான் முதல் நண்பன்

குழந்தைகளை நாம் கண்காணிப்பது அவசியம். அதேவேளையில் அவர்கள் செல்லுமிடம் எல்லாம் நாமும் சென்றுகொண்டிருக்க முடியாது. குழந்தைகளுக்கு நாம்தான் முதல் நட்பாக இருக்க வேண்டும். எதையும் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 20 வருடங்களுக்கு முன் அப்பா வீட்டுக்குள் வந்துவிட்டால், ஒட்டுமொத்தக் குடும்பமுமே அமைதியாகிவிடும். ஆனால், இப்போது இறுக்கம் தளர்ந்துவிட்டது. குழந்தைகளுக்கு நிறையவே சுதந்திரம் இருக்கிறது.

அந்தச் சுதந்திரத்தால் அவர்கள் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, அவர்களுடைய முதல் நட்பாக பெற்றோர் இருப்பது அவசியம். ஃபேஸ்புக்கில் நீங்களும் ஒரு மியூச்சுவல் ஃபிரெண்டாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் எதைப் பதிவிடுகிறார்கள், என்ன மாதிரியான கருத்துகளைப் பகிர்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். அவர்கள் பதிவிடும் கருத்து சரியில்லை எனத் தோன்றினால், ஒரு நட்பைப் போலவே அங்கேயே டிஸ்லைக் செய்து ஒரு பின்னூட்டமும் இடுங்கள். உங்களுக்கு அந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பதை அவர்கள் நாசூக்காகப் புரிந்துகொள்வார்கள்.

எதைத் தொலைக்கிறோம்?

காதல் தவறல்ல. ஆனால், காதல் எதுவென்று தெரியாத மயக்கத்தில் கல்விப் பருவத்தை தொலைக்கலாமா? இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கும் நட்பு, பல நேரம் காதலாக மாறுகிறது. தொடர்ச்சியாக காதலுக்காக நடைபெறும் சண்டைகளும் அதிகரித்துவிட்டன.

காதலை மட்டுமே முதன்மைப்படுத்தி கல்லூரிக்குச் சென்றுவந்தால், நாம் தொலைத்த நேரமும் காலமும் நம் வளர்ச்சியைத் தடுத்துவிடும். ‘உனக்கு ஆள் இல்லையா?’ என்ற கேள்வி எழும்பும் பியர் பிரஷருக்கு இரையாக வேண்டிய அவசியமில்லை. காதல் இயல்பாகக் கைகூடட்டும், மெனக்கெடத் தேவையில்லை.

ஆண் பிள்ளைகளுக்கும்

ஆண் குழந்தைகளைச் சமூகப் பொறுப்புடன் வளர்க்கும் கடமை குடும்பங்களுக்கு இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் முகம் தெரியப் போவதில்லையே, எதையும் பேசி வைக்கலாம் என்கிற இளைஞர்களின் எண்ணம் மாற வேண்டும். பாதிப்பு பெண்ணுக்கு என்பதால் அத்துமீறுவது ஆண்களுக்கான அடையாளம் அல்ல. தன்னுடன் கல்வி பயிலும் அல்லது பணிபுரியும் பெண்ணை சக மனுஷி என்ற மாண்புடன் நடத்தப் பழக வேண்டும். இதை குடும்பத்தினர் உணர்த்த வேண்டும். எப்போது வீட்டிலிருந்து சமூகப் பார்வை விதைக்கப்படுகிறதோ, அப்போதுதான் சமூக மாற்றம் உறுதியாகும். மனிதனை விலங்கில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய பண்பு சுய ஒழுக்கம். அது இருபாலருக்கும் பொதுவானது.

எப்படி அடையாளம் காண்பது?

இணையக் குற்றவாளிகளை அடையாளம் காணவும் சில வழிகள் காவல்துறையில் இருக்கின்றன என்கிறார் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன்.

“உங்களுக்கு நட்பு அழைப்பு தருபவர்கள் புரொஃபைல் பிக்சராக சினிமா நடிகர், நடிகையின் போட்டோ வைத்திருந்தால் பெரும்பாலும் அது ஃபேக் ஐடியாக இருக்கக் கூடும். அவற்றை ஏற்றுக்கொள்வதில் எச்சரிக்கை தேவை.

தான் ஒரு பெரும் பணக்காரர், பகட்டானவர், அழகானவர் என இயல்புக்கு மாறான விஷயங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால் மயங்கிவிடாதீர்கள். இன்பாக்ஸில் பேச ஆரம்பிக்கும்போது உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை அறிந்துகொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டினால், நோக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் அழகை வர்ணித்துப் பேசி மயக்க முயற்சிக்கலாம். எக்காரணம் கொண்டும் அந்தரங்கப் புகைப்படங்களை சாட் பாக்ஸில் பகிராதீர்கள்.

உங்கள் மீது அக்கறை இருப்பதுபோல் ஆறுதல் வார்த்தை கூறும் சாக்கில் இன்னும் நெருங்கிவர முயலலாம். சமூக வலைத்தளங்களில் பெண்கள் மட்டும்தான் ஏமாறுகிறார்கள் என்றில்லை. சில வேளைகளில் ஆண்களிடம் இனிமையாகப் பேசி எதிர்முனையில் இருப்பவரைத் தூண்டிவிட்டுப் பணம் பறிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. உங்கள் நிதிநிலைமை பற்றிய கேள்விகள் அடிக்கடி வந்தால் கவனமாக இருங்கள்.

ஃபேஸ்புக்கில் மட்டுமே பழக்கமான நபரை நேரில் சந்திக்கிறீர்கள் என்றால், தகுந்த முன்யோசனைக்குப் பின் தேவைப்பட்டால் மட்டுமே சந்தியுங்கள்.

உங்களை யாராவது பிளாக்மெயில் செய்தால் அதை நீங்களே சமாளிக்கலாம் என நினைக்காமல் முதலில் குடும்பத்தினரிடம் அதைப் பற்றி பேசுங்கள். தேவைப்பட்டால் காவல்துறை உதவியையும் அணுகுங்கள். புகார் அளிக்கத் தவறிவிடுவதாலேயே பல குற்றங்கள் நடந்தேறிவிடுகின்றன. சைபர் குற்றங்கள் 1% அளவுக்குதான் புகார்களாகப் பதிவாகின்றன. புகார்கள் பதிவாகும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கலாம்” என்கிறார் பாலகிருஷ்ணன்.

http://tamil.thehindu.com/society/women/விழிப்புணர்வு-வலைவிரிக்கும்-சமூக-ஊடகங்கள்/article9770320.ece

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலையில்.. தெரியாதவர்களோடும்.. தெரிந்தவர்களோடும்.. அதிகம் அந்தரங்கப் படங்களைப் பகிர்பவர்களாக.. பதின்ம வயதில் உள்ள பெண் பிள்ளைகளும்.. இளம் பெண்களும் முன்னணியில் இருக்கின்றனர்.  குறிப்பாக இன்ஸ்ரகிராம்.. சினாப்சாட் மூலம். 

மேலும் சமூக வலையில் தங்களின் வனப்பை காட்ட.. அதனை அழகுபடுத்த.. தாம் வசதியானவர்கள்.. நல்ல உணவங்களுக்கு போபவர்கள்.. விலை உயர்ந்த உணவுகளை உண்பவர்கள்.. நல்ல தரமான இரவு விடுதிகள்.. களியாட்ட விடுதிகளுக்கு.. சுற்றுலாக்களுக்கு போய் வருபவர்கள்.. என்றெல்லாம் பகட்டுக்காட்ட என்று.. பலர் பெருந்தொகை பணங்களையும் விரையமாக்கி வருவதோடு அவை கடனட்டை கடனில் முடிய அதன் எழுப்பும் பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கும்... மன அழுத்தத்திற்கும் ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இளம் பராயத்தினர் தான் இப்படி என்றில்லாமல்.. இப்போ.. எல்லோரும்.

எங்கட தமிழ் ஆக்கள்.. பேஸ்புக்கில போடனும் என்பதற்காகவே.. ஆடம்பர சாமத்திய வீடுகள்... கல்யாண வீடுகள்.. பிள்ளைப்பெறு நிகழ்வுகள்.. பிள்ளை வவுத்துக்குள் வளரும் நிகழ்வுகள்.. பிள்ளை பள்ளிக்கூடம் போகும் நிகழ்வுகள்.. கார் வாங்கும் நிகழ்வுகள்.. பேர்த்டே நிகழ்வுகள்.. பட்டமளிப்பு நிகழ்வுகள்.. களியாட்ட குத்தாட்ட நிகழ்வுகள்..என்று இன்னோரென்ன நிகழ்வுகளை எல்லாம் மிக ஆடம்பர அளவில்.. பெரும் பணச் செலவில் நடத்தி விட்டு.. பின் அந்தக் கடனுக்காக மாடு மாதிரி உழைக்கிறதும்.. வட்டிக்கு காசு வாங்கி அது குட்டி போட.. ஓடித் தலைமறைவாவதும்.. சீட்டு கட்டிறம் என்று ஏமாறிறதும்.. ஏமாற்றிறதும்..  அது பின் மன உளைச்சல்.. மன அழுத்தத்தில் முடிய தற்கொலை செய்வதும்.. போதைக்கு அடிமையாவதும் என்று.. பல்வேறு சமூகச் சீரழிவுகள் நிகழ்கின்றன.

இப்ப காதல் கல்யாணம் எல்லாம்.. பேஸ்புக் மற்றும் சமூக வலை.. ஸ்ரேரஸுக்கு என்றே செய்யுற நிலைமையாப் போச்சு.  பிரண்டு ஸ்ரேரஸ்.. இன் ரிலேசன்சிப் என்று வந்திட்டால்.. கூடத் திரிஞ்ச சிநேகிதிக்கு தனக்கு ஒன்றும் வாய்க்குதில்லையே என்ற ஏக்கத்தில்.. தானும் ஒன்றை பிடிக்க கண்ட டேட்டிங் பக்கங்களுக்கும் போய் தேடி அலைஞ்சு.. அது போய் வில்லங்கமான ஆக்களிடம் மாட்டி.. பின்.. உள்ளதை எல்லாம் பறிகொடுத்திட்டு... மானத்தையும் இழந்திட்டு. மன முறிவு.. மண முறிவுன்னு... நிற்கிற ஆக்களை இப்ப அடிக்கடி காண முடிகிறது.

வேலை கூட.. இப்ப சமூக வலையில்.. போட்டு பீற்றிக்க என்று தேட முனைகிறார்கள். இல்லை வேலை இல்லாமல் வீட்டில் குந்திக்கிட்டு.. அங்க வேலை இங்க வேலை என்றும் போட்டுக்கிறார்கள்.

அதேபோல்.. படிப்பும் பல்கலைக்கழகங்களும் கூட தம்மை விளம்பரப்படுத்த பாவிக்கப்படுகின்றனவே தவிர.. அவற்றின் உண்மையான நோக்கத்திற்குப் பயன்படுவதில்லை.

முன்னரெல்லாம்..அதிகம்.. ஒரு எக்ஸ் பாய் பிரண்டோ.. கேர்ள் பிரண்டோ தான் இருக்கும். இப்ப எல்லாம்.. மாதத்திற்கு ஒன்று என்றாகிப் போச்சு. எக்ஸ் எல்லாம்.. எக்ஸ்ரா லாட்ச் ஆகிப் போச்சு. அடிக்கடி காதலும் முறிஞ்சு போகுது... முருக்கமரக் கிளை மாதிரி.

இது மட்டுமன்றி.. கேம்ஸ்.. இவை இன்று சிறுவர்களிடம் கல்வி வீழ்ச்சியில் பெரும் பங்களிப்புச் செய்கின்றன. இவற்றோடு சமூக வலையில்.. சிறுவர்கள்/ சிறுமிகள் கள்ள வயதைப் போட்டு இணைந்து அதிலும் நேரம் கழிப்பதோடு இரவு 1 அல்லது 2 மணிக்கு அப்பால் தான் தூக்கத்திற்கே போகிறார்கள். அதுவரை சாட் பண்ணினம். இவை எல்லாம் என்ன சாட் பண்ணினம் என்பதும் பலருக்கு தெரியாது.. மேலும் போதிய நித்திரை இன்மை என்பது பாடசாலைகளில் இவர்களின் திறன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு பரீட்சைகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு பெறுபேற்றை பெற முடியாமல் செய்வதோடு விழிப்புலன் மற்றும்.. செவிப்புலன் பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர். குறிப்பாக அதிக நேரம் இசை.. பாடல்களை கேட்பதும் கூடாது. அதே போல்.. அதிக நேரம் ஒளிர் திரைகளை உற்று நோக்குவதும் கூடாது. ஆனால் இவை எல்லாம் கட்டுப்பாடின்றி நடக்கின்றன. பெற்றோரும் பிள்ளைகளின் கரைச்சல் தாங்க முடியாமல்.. அவர்களிடம் இவற்றை திணித்துவிட்டு தாம் பிள்ளைகளில் இருந்து நிம்மதியாக விலகி வந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்து திரிகின்றனர்.

நெருப்பு ஆபத்தானது. அது எப்போது ஆபத்து ஆகும் என்றால்.. அதனை நாம் தவறாக.. அளவுக்கு அதிகமாக.. எம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவில்.. பயன்படுத்தும் போது. அதேபோல் தான் சமூக வலையும். அதனை அளவோடு எமது கட்டுப்பாட்டுக்குள் எம்மைக் கட்டுப்படுத்தி பயன்படுத்திக் கொண்டால்.. அதன் மூலம் சில நன்மைகளைப் பெற முடியும். குறிப்பாக செய்திகளை.. பள்ளிசார் விடயங்களைப் பகிர்ந்து கொள்வது.. அறிவுசார் நிகழ்வுகளை தெரிந்து கொள்வது.. பூமியின் பல பகுதிகளிலும் நிகழ்வும் நிகழ்வுகள்.. காலநிலைகள்.. சுற்றுச்சூழலை தெரிந்து கொள்வது என்று.. மற்றைய மக்களின் பண்பாடுகள்.. நாகரிங்களை தெரிந்து கொள்வது என்று.. நல்ல சில அம்சங்களையும்.. இவை தாங்கி நிற்கின்றன.

மேலும்.. போலி விளம்பரங்களும் சமூக வலையில் உண்டு. பாலியல் விடயங்கள்... நாம் தேடாமல்.. எம்மைத் தேடி வரும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது ஆகும். இதில் இன்னும் இறுக்கமான கட்டுப்பாடுகள் தேவை. 

அதேவேளை.. நல்ல சில விளம்பரங்களும் வருவதுண்டு. அவை வரவேற்கப்பட வேண்டும்..அவை கூட.. தர  உறுதிப்படுத்தப்பட்ட பின் தான் சமூக வலைக்குள் வர அனுமதிக்க வேண்டும். tw_blush:

மொத்தத்தில் சமூக வலை 60% தீமை 40% நன்மைகளோடு  நாற்சந்தியில் கூட்டம் கூடி நின்று அரட்டை அடிப்பது போன்று.. போய்க்கிட்டு இருக்குது. tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.