Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்திரிகையாளர் ஞாநி பத்மஸ்ரீ கமலுக்கு எழுதிய பகிரங்க கடிதம் இது

Featured Replies

பத்திரிகையாளர் ஞாநி பத்மஸ்ரீ கமலுக்கு எழுதிய பகிரங்க கடிதம் இது

 

நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா? மாட்டீர்களா? என்று ஒரு பெட்டிங்கே நடந்துகொண்டிருக்கும் நேரம் இது. நான் நீண்ட நாட்களாகவே அரசியலில் இருந்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சமூக நிகழ்வுகள் பற்றிப் பொதுவெளியில் கருத்துச் சொல்லும் எவரும் அரசியலில் இருக்கிறார்கள் என்பதே நிஜம். அப்படிக் கருத்துச் சொல்பவராக நீங்கள் தொடர்ந்து இருந்து வருகிறீர்கள். அப்படியானால் இதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை, அதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை என்று சிலர் கேட்பது அசட்டுத்தனம்தான். கருத்துச் சொல்லாமல் இருப்பதும் அரசியல்தான் என்பது புரியாதவர்கள் அவர்கள்.

எல்லோருக்கும் இருக்கும் கேள்வி? நீங்கள் கட்சி அரசியல், தேர்தல் அரசியலுக்குள் வரப் போகிறீர்களா? இல்லையா என்பதுதான். இந்தக் கேள்வி எழுவதற்கான அடிப்படைக் காரணம் இப்போது அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம்தான். ஜெயலலிதா காலமாகிவிட்டர். கலைஞர் கருணாநிதியை முதுமை நோய் செயலிழக்க வைத்துவிட்டது. இவர்களுடைய இரு கழகங்களுக்கும் மாற்றுத் தேவை என்ற தேடல் எண்பதுகளிலிருந்தே இருப்பதுதான். 1969 லிருந்து 1975 க்குள்ளேயே தி.மு.க. எவ்வளவு அராஜகமும் ஊழலும் நிரம்பிய கட்சி என்பது அம்பலமாகிவிட்டது. 1977 இலிருந்து 1980 க்குள்ளேயே எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என்பதும் வெட்டவெளிச்சமாகி விட்டது. அதனால் தான் எண்பதுகளிலேயே நெடுமாறன் போன்றவர்கள் மூன்றாவது அணியை உருவாக்க முட்டி மோதினார்கள். முடியவில்லை.

திரும்பத் திரும்ப மாற்றத்தை வரவேற்க மக்கள் தயாராக இருந்தபோதும், அதைச் சரியாக வழங்கக்கூடிய தலைமையும் உருவாகவே இல்லை. வைகோவின் ம.தி.மு.க, ராமதாஸின் பா.ம.க, விஜய்காந்த்தின் தே.மு.தி.க, இடதுசாரிகளின் மக்கள் நலக் கூட்டணி என்று ஒவ்வொரு பத்து ஆண்டிலும் ஒரு மின்னல் கீற்றுப்போல ஏதேனும் முயற்சி நடக்கும் போது மக்கள் ஆரம்பத்தில் எதிர்பார்ப்புகளுடன் ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இருக்கும் பணபலம், அமைப்பு பலம் இரண்டுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் எல்லா முயற்சிகளும் அடிபடுகின்றன. தங்கள் ஊழலை மறைக்க இரு கட்சிகளும் வெற்றிகரமாக நலத்திட்டம் என்ற கேடயத்தை பயன்படுத்தி வந்திருக்கின்றன.

இந்த வரலாற்றுத் தொடர்ச்சியில்தான் இப்போதைய எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. ஜெயலலிதா, கலைஞர் போன்ற பலமான தலைமைகள் இல்லாமல் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சற்றே தளர்ந்துள்ள சூழ லில் மாற்று அரசியல் இப்போதேனும் துளிர்க்காதா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது.

அதற்கு வடிவமும் உயிர்ப்பும் கொடுக்க உங்களால் முடியுமா என்று ஆராய்வோம்…

உங்கள் முன்னால் இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, நற்பணி இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி தனிக்கட்சி தொடங்குவது. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் மோதிப்பார்க்க ஆயத்தம் செய்வது. தமிழ் அடையாளத்துடன் அல்லது திராவிட அடையாளத்தினுடைய ஊழலற்ற ஆட்சியே லட்சியம் என்ற கோஷத்துடன் நீங்கள் மக்களிடம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதுதான் உங்களைப் பா.ஜ.க. விடமிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியது. (அதற்கு நீங்கள் நிறைய ஹோம்வேர்க் செய்ய வேண்டும். டெங்கு தெரிந்தால் போதாது, நீட்டும் நெடுவாசலும் இட ஒதுக்கீடும் புரிய வேண்டும்).

இந்த நோக்கத்தை முன்வைத்து அரசியல் செய்வ தென்றால் நீங்கள் தி.மு.க., அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய நான்கு கட்சிகளுடனும் எப்போதும் சேராமல் தனிப்பாதையில் நடைபோட வேண்டும். அப்படி செய்யத் தவறியதால்தான் வைகோ, விஜய்காந்த், ராமதாஸ் எல்லோருமே பலவீனமடைந்தார்கள். தலித், இடதுசாரி இயக்கங்களைத் தவிர வேறு யாருடனும் நீங்கள் கூட்டுச் சேர வாய்ப்பில்லை.

இன்று தொடங்கி அடுத்த தேர்தல்வரை உங்கள் கட்சி தாக்குப்பிடிக்க வேண்டுமானால் அதற்குப் பணபலமும் அமைப்புப் பலமும் அவசியம். விஜய்காந்த் நிறைய சொத்துக்களை விற்றுத்தான் கட்சி நடத்தினார். அதேசமயம் ஒவ்வொரு வார்டிலும் பூத் கமிட்டி அமைத்து கட்சியைச் சரியான மனிதர்களைக் கொண்டு கட்டத் தவறினார். டில்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஒரே ஆண்டில் ஆட்சியைப் பிடிக்க உதவியது. வார்டு ரீதியாக உருவாக்கிய அமைப்பு பலம் தான். அப்படி ஒன்றைத் தமிழகத்தில் உங்களால் உருவாக்க முடியுமா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். கட்சி நடத்துவது படப்பிடிப்பு நடத்துவது போல் அல்ல. தப்புச் செய்யும் துணை இயக்குநரை அடுத்த நிமிடமே துரத்திவிடலாம். தொண்டனை அப்படிக் கையாள முடியாது.

கட்சி அரசியலுக்குள் இறங்குவதற்கு முன்னரே உங்கள் மீதான ஒழுக்க விமர்சனங்கள் வரத் தொடங்கி விட்டன. இதைப் பற்றிக் கவலைப்பட ஏதும் இல்லை. தமிழகத்தில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று எந்தத் தலைவரின் தனி வாழ்க்கை ஒழுக்கம் பற்றியும் மக்கள் அலட்டிக் கொண்டதே இல்லை. பொதுவாழ்க்கை நடத்தை, அதில் தங்களுக்குக் கிடைக்கும் பயன் என்பது பற்றி மட்டுமே எப்போதும் வாக்காளர்கள் யோசித்திருக்கிறார்கள்.

ஒரு முழுநேர அரசியல் அமைப்பை உருவாக்கி நடத்த, நீங்கள் முழுநேர அரசியல்வாதி ஆக வேண்டும். விஸ்வரூபம் –2, சபாஷ் நாயுடு போன்ற படங்களுடன் உங்கள் திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி வரும். அல்லது ஆட்சியைப் பிடிக்கும் வரை எம்.ஜி.ஆரைப் போல திரைவாழ்க்கையைத் தொடரலாம். ஆனால் அப்போது உங்கள் ஒவ்வொரு படமும் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் போல் இருந்தால்தான் அது உங்கள் அரசியலுக்கு உதவும். இத்தனை வருட காலமாக நீங்கள் சினிமாவில் காட்டி வந்திருக்கிற ஈடுபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ் சினிமா வரலாற்றில், பாகவதர் முதல் சிவகார்த்திகேயன் வரை வந்திருக்கும் கதாநாயகர்களிலேயே முழுமையான சினிமாஜீவி நீங்கள் ஒருவர் தான். அந்த ஈடுபாட்டை தியாகம் செய்யாமல் அரசியலில் ஈடுபட முடியாது. மாற்று அரசியலில் காட்ட வேண்டிய உழைப்பையும் ஈடுபாட்டையும் மாற்றுச் சினிமாவுக்குக் காட்டினால் சினிமாவில் உங்கள் பங்களிப்பு இன்னொரு தளத்தை எட்டும் வாய்ப்பு உண்டு. அரசியலில் தொலைநோக்கு விளைவுகள் கிடைக்க முடியும். முழு உழைப்பை நல்கியும் உடனடி விளைவுகள் கிட்டாத விரக்தியும் வரக்கூடும். இதற்கெல்லாம் நீங்கள் தயாரா? என்ற கேள்விக்கான பதிலில்தான் முதல் வழியைத் தேர்வு செய்வீர்களா மாட்டீர்களா என்ற பதிலும் இருக்கிறது.

அரசியலில் ஈடுபட இரண்டாவது வழி ஒன்றும் இருக்கிறது. தேர்தல் அரசியலில் ஈடுபடுவதை முற்றாக நிராகரித்துவிட்டு நீங்கள் அரசியல் செய்யலாம். சுற்றுச்சூழல், இயக்கங்கள், மனிதஉரிமை அமைப்புகள் எல்லாம் அப்படிப்பட்ட பிரஷர் குரூப் அரசியலில்தான் ஈடுபட்டு வருகின்றன. பிரச்சினைகளை அடையாளப்படுத்துவது, அவற்றுக்காகக் குரல் எழுப்புவது, ஆட்சி நிர்வாக இயந்திரத்தை அவை நோக்கி செயற்பட வைப்பது, அதற்குப் போதுமான மக்கள் செல்வாக்கைத் திரட்டுவது என்பவை மட்டுமே அழுத்த அரசியலின் அம்சங்கள்.

இதை உங்களால் எளிதில் செய்ய முடியும். எந்தக் கட்சியையும் எதிர்க்கவும் தேவையில்லை. ஆதரிக்கவும் தேவையில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் பிரச்சினையின் அடிப்படையில் நிலைப்பாடு எடுத்து, அதை ஊருக்கு உரக்கச் சொல்வது என்ற பப்ளிக் இண்டெலக்சுவல் இயக்கத்தை நீங்கள் வடிவமைத்து நடத்தலாம். உங்களுக்கு இருக்கும் பிரபலம் பல பிரச்சினைகளுக்குக் கவனம் கிடைக்க உதவும். தமிழ் நாட்டில் மலமும் கழிவும் அள்ளும் தொழிலில் ஒரு மனிதரும் இருக்கலாகாது என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் நீங்கள் இயக்கம் நடத்தினால் அது எத்தனை வீரியத்துடன் செயற்படும் என்று கற்பனை செய்யுங்கள். இதைச்செய்ய உங்கள் திரை வாழ்க்கையைத் தியாகம் செய்யத் தேவையும் இல்லை. இரண்டில் எந்த வழியைத் தேர்வு செய்வதானாலும் சரி, அதற்கு அவசியம் இருக்கிறது. களத்தில் எது சாத்தியம் என்பதை விட, உங்களுக்கு எது சாத்தியம் என்பதைத் தீர்மானியுங்கள். விரைந்து தீர்மானியுங்கள். உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எண்ணற்ற ரசிகர்களைச் சோர்வடையச் செய்யாதீர்கள்.

 

அன்புடன் : ஞாநி

 

பின்குறிப்பு: இந்தக் கடிதத்தை நீங்கள் உங்கள் நண்பன் ரஜினியுடனும் பகிர்ந்து கொள்ளலாம் அவருக்கும் பயன்படக்கூடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-19#page-8

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமலையும் ரஜனியையும் விட்டால் தமிழ்நாட்டு அரசியலுக்கு வேறுயாரும் தகுதியில்லாவர்களா?

அல்லது வேறு யாருமில்லையா?

நாடுதான் பெரிது....

மக்கள் தொகையோ அதை விட பெரிது...

ஆனால் ......

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கமலையும் ரஜனியையும் விட்டால் தமிழ்நாட்டு அரசியலுக்கு வேறுயாரும் தகுதியில்லாவர்களா?

அல்லது வேறு யாருமில்லையா?

நாடுதான் பெரிது....

மக்கள் தொகையோ அதை விட பெரிது...

ஆனால் ......

Face Value என ஒரு வியாதி மக்களை பீடித்துள்ளது.. திரையில் யோக்கியனாக, பாமரன் தோளில் கைபோட்டு நாலைந்து வெற்றிப்படங்களை காண்பித்துவிட்டால் போதும்..! அவனே மக்கள் நாயகன்..முதல்வன்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கமலையும் ரஜனியையும் விட்டால் தமிழ்நாட்டு அரசியலுக்கு வேறுயாரும் தகுதியில்லாவர்களா?

அல்லது வேறு யாருமில்லையா?

நாடுதான் பெரிது....

மக்கள் தொகையோ அதை விட பெரிது...

ஆனால் ......

தமிழகத்தில் நடிகரைகர்கடந்து ஒரு  நல்ல தலைமையை இனங்காணமுடியாது ஊடகவியலாளரே நிற்கிறாரெனில் நிலமை எப்படி இருக்கிறது. கவர்ச் சி அரசியல்தான் தமிழகத்தில் எடுபடுமா? அப்படியாயின் தமிழக உறவுகள்  தீர்மானமெடுக்கும் பலமற்றவர்களா? அல்லது பணத்துக்கோ  கவர்ச்சிக்கோ வாக்கை இழப்பவரா?  

சரியான வழிகாட்டுலுடன் அணிசெய்யப்படுமாயின் புதியமாற்றத்தைத் தமிழகம் காணமுடியும். ஏனெனில் காங்கிரஸை எதிர்த்து சீமானவர்கள் செய்தபரப்புரை அவர்களால் ஒரு இடத்தைக்கூட அடையமுடியாமல் செய்தது.  புதிய சிந்தனைகள் ஒருங்கிணைந்து  பெரும் அணியாகவும் தமிழகம் சார்ந்து தீர்க்கமான முடிவுகளைத் துணிவோடு எடுக்கும் உறுதியோடும் பயணிப்பவரைத் தமிழகம் ஆதரிக்குமென்றே நினைக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.