Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரைக்காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சம்

Featured Replies

உயிரைக்காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சம்

மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

மியான்மரில் இருந்து தப்பித்து வங்கதேசத்தை அடைய ரோஹிஞ்சா முஸ்லிம்களின் குடும்பங்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionமியான்மரில் இருந்து தப்பித்து வங்கதேசத்தை அடைய ரோஹிஞ்சா முஸ்லிம்களின் குடும்பங்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை வரை 164,000 ஆக இருந்த எண்ணிக்கையானது, மேலும் பல பகுதிகளில் அந்த மக்கள் வந்து சேர்ந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதிகரித்துள்ளதாக பெண் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சூழ்நிலை "மிகவும் அச்சமூட்டுவதாக" கூறும் அவர், மியான்மரில் நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளார்.

தங்கள் கிராமங்களை தீ வைத்துக் கொளுத்தும் மியான்மர் ராணுவத்தினர், தங்களையும் தாக்குவதால்தான் நாட்டை விட்டு தப்பிச் செல்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மியான்மரின் வடக்கே உள்ள ரகைன் மாநிலத்தில் காவல் சாவடியை ரோஹிஞ்சாக்கள் தாக்கியதால் இந்த வன்முறை வெடித்தது.

புத்தமதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில், நாடற்ற, பெரும்பாலும் முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிஞ்சாக்கள், தங்களை ராணுவம் மற்றும் பௌத்தர்கள் மோசமான முறையில் நடத்துவதாக கூறுகிறார்கள்.

வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் உள்ள ஒரு ரோஹிஞ்சா குழந்தை.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் உள்ள ஒரு ரோஹிஞ்சா குழந்தை.

இக்குற்றச்சாட்டை மறுக்கும் மியான்மர் அரசு, தனது ராணுவம் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களை மட்டுமே தாக்குவதாக தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக, ரோஹிஞ்சாக்கள் குடும்பம் குடும்பமாக வங்கதேசம் செல்வதற்காக வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

வங்கதேசத்துக்குள் வந்துள்ள ரோஷிஞ்சாக்களின் எண்ணிக்கையானது "கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக வந்தவர்களால் உயர்ந்து விடவில்லை என்றும், இதுவரை அறியப்படாத பல்வேறு பகுதிகளில் மக்கள் வந்துள்ளது தற்போதுதான் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும் அதனால், இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும்" ஐநா அகதிகள் முகமையை சேர்ந்த பெண் செய்தித்தொடர்பாளர் விவியன் டான் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அதிகள் முகாம்கள் நிரம்பிவிட்டதாகவும் மற்றும் எல்லையை கடந்துவிட்ட "மக்கள் சாலைகள் அல்லது காலியாக உள்ள இடங்கள் அனைத்திலும் கூடாரத்தை அமைத்துவிடுவதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் "சோர்வுடனும், பசியுடனும் உள்ளனர். தங்குவதற்கு ஏதாவது இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில்" உள்ளதாக ஐ.நாவின் அகதிகள் முகமையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மர் மற்றும் வங்கதேச எல்லையாக உள்ள நப் ஏரியை நோக்கி சிலரும் மற்றவர்கள் கடல் மார்க்கமாகவும் செல்கின்றனர். கடந்த புதன்கிழமையன்று வங்கதேசத்தின் காஸ் பஜார் என்னும் இடத்தில் மட்டும் குறைந்தது 300 படகுகள் வந்திருக்கலாம் என்று ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

 

ரோஹிஞ்சாக்களின் இந்த அவல நிலையானது பல்வேறு நாடுகளில் கவனத்தையும், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுக்க செய்துள்ளது. இந்நிலையை கையாளத் தவறியதாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சு சி, விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இனவெறிக்கெதிராக போராடிய தென் ஆப்பிரிக்காவின் டெஸ்மோண்ட் டூடு கடந்த வியாழக்கிழமை இதுகுறித்து கூறும்போது, "மியான்மரின் மிக உயர்ந்த பதவியை அடைவதற்கு நீங்கள் கொடுக்கும் அரசியல் விலை உங்களது மெளனம்தான் என்றால், அந்த விலை கண்டிப்பாக உச்சபட்சமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிரைக்காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நோக்கி...படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஓர் அகதிகள் முகாமில் உள்ள குடிலில் இரவு உணவு உண்ணும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி பல்வேறு ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆங் சான் சூ சியை "மக்களின் நீதிக்காகவும், மனித உரிமைகள் மற்றும் உங்கள் மக்களின் ஒற்றுமைக்காகவும் குரல் கொடுங்கள்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவருக்கு அளிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவரும் சூழ்நிலையில், அது சாத்தியமில்லை என்று நோபல் குழுவின் தலைவர் ரெய்ஸ்-ஆண்டர்சென் தெரிவித்துள்ளார்.

"மியான்மரின் சுதந்திர போராட்ட வீரர் என்ற வகையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் மற்றும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதற்காகவும்" நோபல் பரிசை சூ சி வென்றார் என நார்வே வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

"இதுகுறித்த எந்த ஆணையோ, அல்லது நோபல் பரிசு பெற்றவர்கள் அதற்கு பிறகு செய்யும் செயலை மதிப்பீடு செய்வதோ எங்களின் வேலையில்லை" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மரில் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக செயல்படுவதாக கடுமையாக சாடப்படும் ஆங் சான் சூ சி, இதுகுறித்து இந்த வாரத்தின் தொடக்கத்தில் கூறும்போது, ரகைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிக்கு அங்கு "பரப்பப்பட்ட தவறான தகவலே காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் மற்றும் முஸ்லிம்களும் தங்களின் வீடுகளை எரித்துவிட்டு, முஸ்லிம் அல்லாதோரை தாக்குவதாக சூ சியின் அரசாங்கம் கூறியுள்ளது.

ஆனால், அரசாங்கத்தின் தகவல்களுக்கு முரணாக, ரகைன் மாநிலத்தில் உள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை ஒரு முஸ்லிம் கிராமம் அங்குள்ள ரகைன் பெளத்த குழுவினரால் எரிக்கப்படுவதை நேரில் பார்த்துள்ளார்.

உயிரைக்காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நோக்கி...படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிபிசியிடம் பேசிய மியான்மர் நாட்டின் மறுகுடியேற்றத்திற்கான அமைச்சர் வின் மியாட் ஆவ், மியான்மரில் வசித்ததற்கான சான்று அல்லது குடியுரிமை உள்ள, வங்கதேசம் சென்ற ரோஹிஞ்சாக்கள் மியான்மர் திரும்பி வர அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதால் மிகவும் சொற்பமானவர்களே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாடு திரும்ப முடியும்.

நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் தங்கள் ஆயுத வல்லுனர்களின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, வங்கதேச எல்லையில் மியான்மர் ராணுவம் கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.

இந்த வெடிகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார், இரண்டு குழந்தைகள் உள்பட மூவர் காயமடைந்துள்ளனர். ரோஹிஞ்சாக்கள் மீண்டும் மியான்மருக்குள் நுழையாமல் இருக்க இவ்வாறு செய்வதாக வங்கதேச அதிகாரிகளும் ஏற்கனவே கூறியிருந்தனர்.

 

http://www.bbc.com/tamil/global-41213849

  • தொடங்கியவர்

ரோஹிங்கியாக்களை ஏன் அழிக்கிறது பர்மா?

 

 

76p1.jpg

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் பிளாஸ்டிக் பைகளைப்போல் மிதந்து மிதந்து வந்து கரை ஒதுங்கின அந்தச் சடலங்கள்.  இழுத்துப்போட்டபிறகே எண்ணிப் பார்த்தார்கள்; பதினைந்து பெண்கள், பதினோரு குழந்தைகள். இது நடந்தது பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் என்னும் நகரில் உள்ள கடற்கரையில். `எங்களுக்குக் கிடைத்தவற்றை மட்டுமே மீட்டிருக்கிறோம், கடலிலே கலந்து தொலைந்துவிட்டவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை’ என்கிறார்கள் கரையோரம் பணிபுரியும் மக்கள். வருத்தத்தைக் காட்டிலும் அவர்கள் குரலில் அதிகம் தட்டுப்படுவது வெறுப்பே. காரணம், இப்படி மனிதர்கள் மிதந்துவருவது அங்கே கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகிவிட்டது.

மிகச் சரியாக பங்களாதேஷுக்கும் பர்மாவுக்கும் நடுவில் இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையைப்போல் அமைந்திருக்கிறது நஃப் ஆறு. ரோஹிங்கியா மக்களைப் பொறுத்தவரை இது வெறும் ஆறு மட்டுமல்ல, மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாலம். அதில் ஏறிவிட்டால், பர்மாவிலிருந்து விடுபட்டு பங்களாதேஷை அடைந்துவிட முடியும். ஆனால், அத்தனை எளிதானதல்ல இந்த மார்க்கம். கள்ளத்தனமாகத்தான் சென்றாக வேண்டும். கையில் அதிகக் காசில்லை என்பதால், சிறு கப்பல்களைத்தான் அமர்த்திக்கொள்ள முடியும்.  ஆட்டுமந்தைகளைப்போலத்தான் நெருக்கியடித்து அமர்ந்துகொள்ள முடியும். எப்போது வேண்டுமானாலும் நடுக்கடலில் கப்பல் கவிழலாம்; கடந்த புதனன்று நடந்ததைப் போல். அல்லது எப்போது வேண்டுமானாலும் பங்களாதேஷ் அதிகாரிகளிடம் பிடிபடலாம். கப்பலும் கவிழாமல் ஒருவரிடமும் மாட்டாமல் இருந்தாலும் மரணம் சாத்தியம்தான். செல்லும் வழியிலேயே பசி, குளிர், நோய் என்று பல காரணங்களால் கப்பலிலேயே சுருண்டு மாண்டிருக்கிறார்கள் பலர்.

இருந்தும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடல் வழியாகவும் நிலம் வழியாகவும் தினம் தினம் பர்மாவிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்து என்று தெரிந்தேதான் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். காரணம் ஒன்றுதான். பர்மாவில் தங்கியிருப்பது என்பது இதைக் காட்டிலும் மோசமானது. அந்த வகையில் தப்பித்தல் என்பது அவர்கள் முன்னிருக்கும் ஒரு வாய்ப்பல்ல, அது ஒன்றுதான் உயிர்த்திருப்பதற்கான ஒரே வழி.

76p2.jpg

ஐ.நா-வின் புலம் பெயர்வோருக்கான அமைப்பு (இன்டர்நேஷனல் ஆர்கனைசேஷன் ஆஃப் மைக்ரேஷன்) அளிக்கும் புள்ளி விவரங்களின்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18,500 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பர்மாவிலிருந்து அகதிகளாக வெளியேறி பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். எல்லையைத் தாண்ட முடியாமல் பங்களாதேஷுக்கு  மிக  அருகில்  ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் இருக்கும் வங்கதேசத்து வீரர்கள் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு ஒரு விநாடி கண்களை மூடிக்கொண்டாலும், அவர்கள் அத்தனை பேரும் உள் நுழைந்து விடுவார்கள்.

பங்களாதேஷை ஆண்டுவரும் ஷேக் ஹசீனாவின் பயம் இதுதான். ரோஹிங்கியா என்றாலே அவர் குரலில்  கோபமும், வெறுப்பும், சலிப்பும் கலந்துவிடுகின்றன. ‘ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளை நாங்கள் எங்கள் நாட்டுக்குள் அனுமதித்து விட்டோம். மனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கருதியே இந்த உதவியை நாங்கள் செய்தோம். ஆனால், இப்போது அதுவே பிரச்னையாகிவிட்டது’ என்கிறார்.  அமெரிக்கா இதில் தலையிட வேண்டும் என்பது ஹசீனாவின் விருப்பம். பர்மாவுக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது ரோஹிங்கி யாக்களை அவர்களுடைய எல்லை களுக்கு உள்ளேயே தடுத்துநிறுத்த உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பங்களாதேஷில் உள்ளவர்களின் பெரும்பான்மை கருத்தும் இதுவேதான். `நாங்களே ஆயிரத்தெட்டுப் பிரச்னைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது எதற்கு அலையலையாக அகதிகளை அனுமதிக்க வேண்டும்? எப்போதாவது சிலர் என்றால் பாதகமில்லை; இதுவே ஒரு வழக்கமாகிவிடுவதை அனுமதிக்கக் கூடாது அல்லவா? பங்களாதேஷ் என்ன அமெரிக்காவா, ஐரோப்பாவா? அவர்களே பார்த்துப் பார்த்துதான் அகதிகளைச் சேர்த்துக்கொள்கிறார்கள் என்னும்போது நாம் மட்டும் கதவுகளை அகலமாகத் திறந்துவைத்துக்கொண்டு உள்ளேவரும் எல்லோரையும் வரவேற்று மகிழ வேண்டுமா?’ என்பது பங்களாதேஷின் குரல்.

76p3.jpg

ரோஹிங்கியாக்கள் பர்மாவிலிருந்து துரத்தப்படுவது இது முதன்முறையல்ல. மிக மோசமான முறையில் நடத்தப்படுவதும் கொல்லப்படுவதும்கூட புதிதல்ல. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நீண்டுவரும் திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதிதான்  கடந்த மாத இறுதியில் பர்மாவின் மேற்குப் பகுதியில் மூண்ட ஒரு மதக்கலவரத்தில் 89 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டனில் இருந்து செயல்படும் ரோஹிங்கியாக்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் கணிப்பின்படி சமீபத்தில் மட்டும் ஆயிரம் பேர் இத்தகைய கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் குடியிருப்புகள் கொளுத்தப் பட்டிருக்கின்றன. உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன அல்லது முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கலவரமும் ஒவ்வொரு தாக்குதலும் ரோஹிங்கியா முஸ்லிம்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதால், அவர்கள் உயிருக்குப் பயந்து எல்லாவற்றையும் போட்டது போட்டபடி பர்மாவிலிருந்து தப்பியோடுகிறார்கள். பர்மியர்கள் விரும்புவதும் இதைத்தான். ‘இது எங்கள் நாடு. இனி இங்கே வராதே’ என்கிறார்கள் அவர்கள்.

பங்களாதேஷ் மறுப்புச் சொல்வதற்குக் காரணம் ரோஹிங்கியாக்கள் அவர்களைப் பொறுத்தவரை அந்நியர்கள். ஆனால், அவர்களுடைய வாழ்விடமான பர்மாவும் இதையே சொல்கிறது என்றால், குழப்பமாக அல்லவா இருக்கிறது? ரோஹிங்கியாக்களின் உண்மையான தாய்வீடுதான் எது? எதனால் அவர்கள் பர்மாவிலிருந்து திட்டமிட்டுத் துரத்தப்படுகிறார்கள்?  முக்கியமாக, ரோஹிங்கியாக்கள் எதனைத் தங்கள் தாய்நாடாகக் கருதுகிறார்கள்? பங்களாதேஷுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?

பர்மா பெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட ஒரு நாடு என்பது அனைவருக்கும் தெரியும். பௌத்தர்கள் பற்றி நமக்கெல்லாம் ஒரு பிம்பம் இருக்கும். காவி உடை தரித்து, அமைதியே உருவாய், புழு பூச்சிக்கும் தீங்கு விளைவிக்காமல், தர்மத்தை மதித்து, புத்தரின் உபதேசங்களைப் போற்றி, பரப்பி வாழும் சாதுவான ஒரு மக்கள் கூட்டம் என்றே நினைத்துக்கொள்வோம். ஆனால், ரோஹிங்கியாக்களைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக ஏற்க மறுப்பவர்களில் முதலிடம் பெறுபவர்கள் இவர்கள்தாம்.

76p4.jpg

அதற்கான காரணம் என்ன? பர்மாவில் நூற்றுக்கும் அதிகமான இனக்குழுக்கள், மொழிகள், வட்டார வழக்குகள் ஆகியவை உள்ளன. இந்தியா, சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளின் சந்திப்புப் புள்ளியாக வரலாற்றுக் காலம் தொட்டு பர்மா இருந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மக்கள் இடப்பெயர்ச்சிக் காரணமாக ஒருவிதக் கலாசாரப் பன்முகத்தன்மையை இந்நாடு பெற்றுள்ளது. அரசுத்தரப்பின்படி மொத்தம் 135 ‘தேசிய இனங்கள்’ பர்மாவில் உள்ளன. பர்மாவின் மொத்த மக்கள் தொகை 56 மில்லியன். இதில் மூன்றில் இரண்டுபங்கு பலத்துடன் இருக்கும் பெரும்பான்மையினர், பர்மியர்கள். குறிப்பிடத்தக்க சில சிறுபான்மையினரின் எண்ணிக்கை பின்வருமாறு : ஷான் (ஒன்பது சதவிகிதம்); கேரன் (ஏழு சதவிகிதம்); மோன், ராக்கின், சின், கச்சின், கரேனி, கயன், சீனர்கள், இந்தியர்கள், தானு, அகா, கோகாங், நாகா, பாலாங், ரோஹிங்கியா, தவோயான், வா ஆகியோரின் எண்ணிக்கை தலா ஐந்து சதவிகிதம் அல்லது அதைவிடக் குறைவு.

முஸ்லிம்களை எடுத்துக்கொண்டால்  சன்னி முஸ்லிம்களே பெரும்பான்மையினர். எண்ணிக்கை, நான்கு சதவிகிதம். அவர்களில் பெரும்பாலானோர் ராக்கின் பகுதியிலும் கீழ்ப்புற பர்மாவிலும் வசிக்கின்றனர். வடக்கு ராக்கின் பகுதியில் வசிப்பவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுடைய மொழியின் பெயரும் அதுவேதான். ரோஹிங்கியாவின் வேர் மொழி வங்காளம். பங்களாதேஷில் சிட்டகாங் வட்டார வழக்கின் சாயலை இது கொண்டிருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைப்படி ரோஹிங்கியா என்பது மேற்கு பர்மாவில் உள்ள மத, மொழி சிறுபான்மைச் சமூகத்தைக் குறிக்கும் ஒரு பெயர். உலகில் அதிகம் ஒடுக்கப்படும் சிறுபான்மை குழுக்களில் இவர்கள் முதன்மையானவர்கள் என்கிறது ஐ.நா.  மற்றபடி, ரோஹிங்கியா என்னும் சொல்லின் பொருள், அதன் ஆணிவேர், தொன்மம், வரலாறு ஆகியவை பற்றிப் பலவிதமான மாறுபட்டக் கோட்பாடுகள் நிலவி வருகின்றன.

பர்மாவில் உள்ள அரக்கான் பகுதியைச் சேர்ந்த (ராக்கின்) புத்திடாங், மவுங்டா ஆகிய நகர்ப்புறங்களில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். அரக்கான் என்பது பங்களாதேஷின் எல்லைப்புறத்தை ஒட்டி நாஃப் நதிக்கரை அருகில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒதுக்குப்புறமான இடம். 1784-ம் ஆண்டு இந்தப் பகுதியை பர்மா கைப்பற்றியது. அதற்கு முன்புவரை தனியொரு ஆட்சிப்பிரதேசமாக அரக்கான் இருந்து வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பிரதேசத்தில் தங்களுக்குத் தனியொரு இடம் இருந்தது வந்தது என்று ரோஹிங்கியா வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாகச் சொல்வதானால், கிபி 8-ம் நூற்றாண்டில் இருந்தே அரக்கானில் நாங்கள் வசித்து வந்திருக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். ஆனால், இதற்கு வரலாற்று ஆதாரமில்லை.

76p5.jpg

ரொம்பவும் பின்னோக்கிப் போகாமல் நவீன வரலாற்றுக் காலத்தோடு ஒட்டித்தான் ரோஹிங்கியாக்களை அணுக முடியும். பிரிட்டனின் ஆட்சியில் பர்மா இருந்தபோது, அரக்கான் பகுதியை விவசாயச் செழிப்பான பகுதியாக மாற்றுவதற்கு பிரிட்டனுக்கு வேலையாட்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப் பட்டார்கள். அதனால், பக்கத்து வங்காளத் திலிருந்து (இன்றைய பங்களாதேஷ்) அரக்கான் வருமாறு மக்களை காலனி அரசு ஊக்குவித்தது. இந்தியா, பர்மா இரண்டுமே தங்களுடைய காலனிகள் என்பதால் இரண்டுக்கும் இடையில் எல்லை எதையும் பிரிட்டிஷ் அரசு வைத்துக்கொள்ளவில்லை. இந்த இரு பிரதேசங்களுக்கும் இடையிலான மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் விரும்பவில்லை. உண்மையில் அதை அவர்கள் ஊக்குவிக்கவே செய்தனர். இந்தியா, பர்மா, இன்றைய பங்களாதேஷ் மூன்று நாடுகளிலும் மக்கள் பரிமாற்றங்களும் குடியேற்றங்களும் தடையின்றி நிகழ்ந்தன.

சிட்டகாங்கில் இருந்து ‘ஆயிரக்கணக்கான கூலிகள்’ நிலம் வழியாகவும் கடல் மார்க்கமாகவும் அரக்கான் பகுதிக்குக் குடிபெயர்ந்து வந்ததை பிரிட்டிஷ் ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. தாற்காலிக விவசாயக் கூலிகளாக முதலில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அறுவடை முடிந்ததும் வந்த வழியே சொந்த ஊர் திரும்பிவிடுவார்கள். இவர்களுடைய தோராய எண்ணிக்கை ஐம்பதாயிரம். நாள்கள் செல்லச் செல்ல சிட்டகாங் குடியேறிகள் அல்லது முஸ்லிம் வங்காளிகளின் எண்ணிக்கை  அதிகரிக்கத் தொடங்கியது. இவர்களே பின்னாள்களில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்னும் அடையாளத்தோடு ஒன்று திரண்டனர். காலனியாட்சி முடிவடைந்தபிறகு இந்தியாவும் பர்மாவும் தனித்தனி நாடுகளாயின. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானும் பிறகு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷும் பிரிந்து சென்றன. ரோஹிங்கியாக்களின் வேர் பர்மாவில் நிலைகொண்டிருந்தது. பர்மாவையே அவர்கள் தங்கள் தாய்நாடாகவும் கருதினர். இந்த நிமிடம் வரை அவர்கள் தங்களை பர்மாவோடுதான் உணர்வுபூர்வமாகப் பிணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், பர்மா அவர்களை அந்நியர்களாகவும் வந்தேறிகளாகவும் மட்டுமே பார்க்கிறது. பங்களாதேஷுக்கும் அவர்கள் அந்நியர்கள்தாம். இராக், சிரியா என்று தொடங்கி உலகம் முழுக்கப் பல நாடுகள் அகதிகளை உற்பத்தி செய்து சிதறடித்துக்கொண்டிருக்கின்றன என்றாலும், ரோஹிங்கியா முஸ்லிம்கள் அவர்கள் அனைவரிடமிருந்தும் மாறுபடும் முக்கியமான இடம் இது. ரோஹிங்கியாக்கள் தங்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இன்னொரு பெருஞ்சோகமும் உண்டு. பர்மாவின் சக்திமிக்கத் தலைவராக இருப்பவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி. மனிதநேயமிக்க ஒரு லிபரலாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அவரும்கூட ரோஹிங்கியா முஸ்லிம்களை அரவணைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. சூகிக்கு அதிகாரம் கிடைத்தாலாவது நம் நிலையில் மாற்றம் ஏற்படுகிறதா பார்க்கலாம் என்று காத்திருந்த ரோஹிங்கியாக்கள் அவருடைய அசாதாரணமான அமைதியைக் கண்டு ஏமாற்றமும் வேதனையும் அடைந்திருக்கிறார்கள்.

76p6.jpg

ரோஹிங்கியா முஸ்லிம்களைக் கவலைக் குள்ளாக்கும் இன்னொரு விஷயம், அவர்களிலேயே ஒரு பிரிவினர் ஆயுதம் தாங்கிய குழுவாகத் திரண்டு நிற்பதும் பர்மிய அரசை எதிர்த்துத் தாக்குதல் மேற்கொள்வதும்தான். அரக்கான் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி (ஏ.ஆர்.எஸ்.ஏ) என்னும் பெயரில் இயங்கும் ஒரு சிறு குழு, ரோஹிங்கியாக்களை மீட்கிறேன் என்னும் பெயரில் அவ்வப்போது வன்முறையில் இறங்குவதை அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவருகிறது. பிரிவினை கோரும் வன்முறையாளர்களைத் தாக்குகிறோம் என்னும் பெயரில் ரோஹிங்கியாக்களின் குடியிருப்புகளைச் சேர்த்தே ராணுவம் அழித்துவருகிறது. அந்த வகையில் அரசு வன்முறை, போராளிகள் என்று சொல்லிக் கொள்ளும் இத்தகைய குழுக்களின் வன்முறை இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் சாமானிய ரோஹிங்கியாக்கள் இந்த இருவரிடமிருந்தும் தப்பிப்பதற்காகத்தான் உயிரைப் பணயம் வைத்து பர்மிய எல்லையைக் கடந்துகொண்டிருக்கிறார்கள்.

அகதியாக வெளியேறுபவர்களைவிட பர்மா விலேயே தங்கியிருக்கும் ரோஹிங்கியாக்களின் நிலை மோசமாக இருக்கிறது. அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. வங்காளிகள் என்றே அவர்கள் மீண்டும் மீண்டும் அரசால் முத்திரை குத்தப்படுகிறார்கள். வேலை வாய்ப்பு, கல்வி எதிலும் அவர்களுக்கு இடமில்லை. வாக்களிப்பதற்கு வழியில்லை. பௌத்த பர்மிய அமைப்புகளின் வன்முறைத் தாக்குதல்களை அரசு கண்டுகொள்வதில்லை. பெண்கள் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.

‘ராணுவம் எங்கள் குடியிருப்புகளைத் தொடர்ந்து தாக்கிவருகிறது. எங்கள் வீடுகள் எரிக்கப்படுகின்றன. எல்லோரும் கடும் உளைச்சலில் மூழ்கியிருக்கிறோம். தற்கொலை செய்துகொள்வதுதான் எங்களுக்கான ஒரே தீர்வா?’ என்கிறார்கள் ரோஹிங்கியா மக்கள்.
 

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Should Aung San Suu Kyi's honorary Canadian citizenship be revoked? 'She doesn't bring credit to Canada,' says Canada's former ambassador to the UN, Allan Rock.

Read more: http://www.cbc.ca/1.4278239

 

  • தொடங்கியவர்

மனதை உருகவைத்த புகைப்படம்!

 
 

மியான்மரில், அரசுத் தரப்புக்கும் ரோஹிங்யா இஸ்லாமியப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மியான்மரில் வசித்து வந்த லட்சக்கணக்கான ரோஹிங்யா மக்கள், அங்கிருந்து வெளியேறுகின்றனர். மியான்மர் ராணுவத்தினர், ரோஹிங்யா மக்கள் வசிக்கும் கிராமங்களைத் தீயிட்டுக் கொழுத்துவதால், உடைமைகளை இழந்து உயிருக்கு அஞ்சி,  அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். 

ரோஹிங்யா

மியான்மரில் இருந்து நஷீர் அகமது என்பவர் மனைவி ஹமீதா மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் வங்தேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். படகில் மேலும் 18 பேர் இருந்தனர். படகு கரையை எட்டுகையில் அலையில் சிக்கி நிலைகுலைந்தது. இதில், ஹமீதாவின் கையில் இருந்த பிறந்து 40 நாள்களே ஆன குழந்தை, தண்ணீருக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தது. இறந்துபோன கைக்குழந்தையுடன் தாயும் தந்தையும் தவித்துநின்ற காட்சியை, ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் முகமது ஹூசைன் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம், சர்வதேச நாடுகளை அதிரவைத்துள்ளது. 

 

மியான்மரில் ரோஹிங்யா போராட்டக்காரர்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் தொடங்கிய ஒரே வாரத்தில், 4 லட்சம் மக்கள் வங்தேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ரோஹிங்யா மக்களுக்கு, இந்தியாவும் அடைக்கலம்கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/102672-photo-that-shakes-people.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.