Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல்! - விமானத்தில் சென்னை வருகிறார்

Featured Replies

கர்நாடக உள்துறையின் அனுமதியை தொடர்ந்து சசிகலா இன்று பரோலில் வருகிறார்?

 
 
Sasikala1

சசிகலா | கோப்புப் படம்

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவர் இன்று வெளியே வர வாய்ப்பு உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சசிகலா தனது கணவரை சந்திக்க செல்வதற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகரிடம் நேற்று முன் தினம் விண்ணப்பித்தார்.

 

 

சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக், உள்துறை, சட்ட அமைச்சகத்துக்கு சோமசேகர் கடிதம் அனுப்பினார். மேலும் சசிகலா சென்னை வருவதால் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்படுமா? அவருக்கு ஆபத்து உள்ளதா? போதிய பாதுகாப்பு வழங்கப்படுமா போன்ற விஷயங்களில் தடையில்லா சான்று வழங்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். அதன்பேரில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் நேற்று தடையில்லா சான்றிதழின் நகலை மின்னஞ்சலில் சிறைத் துறைக்கு அனுப்பி வைத்தார்.

இதே போல கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சசிகலா பரோலில் செல்ல அனுமதி அளித்தார். மாநில உள்துறை செயலர் பசவராஜ், சிறைத்துறையின் விதிமுறையின்படி சசிகலாவுக்கு பரோல் வழங்கலாம் என பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார். இந்நிலையில் சட்ட அமைச்சகம், சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் அவசியமா? ஒரு வாரத்துக்கு மேல் பரோல் விடுப்பில் சென்றால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். எனவே சசிகலாவுக்கு 5 நாட்கள் வரை பரோல் வழங்கலாம் என சிறைத்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

சசிகலாவுக்கு பரோல் வழங்குவதற்கு சட்டத்துறை இன்று ஒப்புதல் அளிக்கும். இதைத் தொடர்ந்து இன்று மாலையோ அல்லது சனிக்கிழமையோ அவர் வெளியே வர வாய்ப்பு உள்ளது என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/india/article19806546.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்!

 
 

5_13400.jpg

கர்நாடக சிறைத்துறை, சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல் வழங்க அனுமதித்துள்ளது. அதோடு, கடும் நிபந்தனைகளும் விதித்துள்ளது.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முதலில் போதிய ஆவணங்கள் இல்லை என்று பரோலை நிராகரித்தது சிறைத்துறை. அடுத்து, புதிய மனுவை அவர் தாக்கல்செய்தார். மனுவைப் பரிசீலித்த கர்நாடகச் சிறைத்துறை, சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி, சசிகலாவை டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் உறவினர்கள் சிறையில் சந்தித்தனர். அப்போது சசிகலா, நடராசன் உடல்நலம்குறித்து கேட்டறிந்துள்ளார். பரோல் கிடைத்த மகிழ்ச்சி அவர் முகத்தில் இல்லையாம். சோகத்துடனே இருப்பதாக அவரைச் சந்தித்தவர்கள் தங்களுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், "சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரை வரவேற்கத் தயார்நிலையில் இருக்கிறோம். ஏழு மாதங்களுக்குப் பிறகு, சசிகலா சிறையிலிருந்து வெளியில் வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் அனுமதியில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நடராசனை மட்டும் சசிகலா சந்திக்கலாம். அதைத் தவிர, மற்ற யாரையும் அவர் சந்திக்க வேண்டும் என்றால், சிறைத்துறையின் அனுமதி பெற வேண்டும். குறிப்பாக, உறவினர்களைக்கூட சசிகலா சந்திக்க வேண்டும் என்றால், அவருடன் வரும் காவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது, பரோலில் வரும் எல்லோருக்கும் பொதுவானதுதான்" என்றனர்.

 

சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல், மீடியாக்கள் போன்ற நடவடிக்கைகளில் பரோலில் வருபவர்கள் ஈடுபடக்கூடாது போன்ற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளை மீறினால், பரோல் ரத்துசெய்யப்படும்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/104204-sasikala-granted-parole-for-5-days-under-these-conditions.html

சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல்! - விமானத்தில் சென்னை வருகிறார்

 
 

9_12043.jpg

சசிகலாவுக்கு ஐந்து நாள்கள் பரோல் வழங்கி, கர்நாடக  சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை, விமானம்மூலம் சென்னை வருகிறார் சசிகலா.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது கணவர் நடராசனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலழிந்துவிட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி, நடராசனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. தற்போது, அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவமனையில் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், நடராசனைச் சந்திக்க வேண்டும் என்று சசிகலா, கர்நாடக சிறைத்துறையிடம் அனுமதி கேட்டார். 15 நாள்கள் பரோல் கேட்டு அவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் தொடர்பாக கர்நாடக சிறைத்துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, விண்ணப்பத்தில் சில ஆவணங்கள் இணைக்கப்படாததால், பரோல் நிராகரிக்கப்பட்டது. அடுத்து, புதிய மனுவை சசிகலா நேற்று தாக்கல்செய்தார். சசிகலாவை பரோலில் அனுப்புவது தொடர்பாக, தமிழக காவல்துறைக்கு கர்நாடக சிறைத்துறை மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அதற்கு, இன்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

 

அதில், நடராசனின் உடல் நிலை, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகுறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலாவுக்கு பரோல் வழங்க தமிழக காவல்துறையும் கிரீன் சிக்னல் கொடுத்தது. இந்த நிலையில், சசிகலாவுக்கு 5 நாள்கள் பரோல் வழங்கி  கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா பரோல் கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டாடினர்.

http://www.vikatan.com/news/tamilnadu/104196-sasikala-likely-to-get-parole-for-5-days.html

  • தொடங்கியவர்

`விமான நிலையத்தில் திரளுங்கள்!’: சசிகலாவை அசத்த தினகரன் தடபுடல் ஏற்பாடு

 

 

சசிகலா டிடிவிதினகரன்

 

பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னை வரும் சசிகலாவை வரவேற்கத் தமிழகம் முழுவதிலுமிருந்து கட்சித் தொண்டர்கள் வரத்தொடங்கிவிட்டனர். பல ஆயிரம் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கடந்த 7 மாதங்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவரை, அவரது உறவினர்கள் சென்னையில் இருந்து சென்று 15 நாள்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர். அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அடிக்கடி பெங்களூரு சென்று சசிகலாவை பார்த்து வந்தார்.

சசிகலாவின் உறவினர் மகாதேவன் மரணத்தின்போது சசிகலாவுக்கு பரோல் வாங்க முயற்சி செய்யலாமா? என்று அவரது குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி பரோல் மனு போட்டனர். 'பரோல் கொடுக்கும் அளவுக்கு போதிய காரணங்கள் இல்லை' என்று அப்போது அந்த பரோல் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சசிகாவின் கணவர் நடராசன், இப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்டிருக்கிறார். கல்லீரல், கிட்னி போன்றவைகளை மாற்றும் வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. எனவே, தனது கணவரை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்க்க வேண்டும் என்று சசிகலா பரோல் கேட்டு சிறைத்துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.  அந்த பரோல் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு சசிகலா சென்னைக்கு வருவார் என்று அ.தி.மு.க அம்மா அணியினர் தெரிவித்தனர். சென்னை வரும் சசிகலாவை வரவேற்க கட்சியினர் வரவேண்டும் என்று அ.தி.மு.க அம்மா அணி சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போய் இருக்கிறது. 

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கார்களில் சென்னை விமான நிலையத்துக்கு சசிகலாவை வரவேற்க புறப்பட்டுவிட்டார்கள். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். பெங்களூருவில் இருந்தவாரே சசிகலாவை வரவேற்கும் வேலைகளை டி.டி.வி.தினகரன் கவனித்துவருகிறார். சசிகலாவை வரவேற்க பல ஆயிரம் பேர் வர வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் இருந்து  உத்தரவு போய் இருக்கிறது.

 

http://www.vikatan.com/news/tamilnadu/104207-admk-party-cadres-from-all-over-the-state-gathers-to-welcome-sasikala.html

  • தொடங்கியவர்

சசிகலா தங்கப்போகும் வீடு இதுதான்!

 

house_14316.jpg

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, ஐந்து நாள் பரோலில் சென்னை வருகிறார். தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் அவர் தங்க உள்ளார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடராசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 4-ம் தேதி உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நடராசனைப் பார்க்க 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா விண்ணப்பித்திருந்தார். தீவிர பரிசீலனைக்குப் பின்னர், சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை இன்று 5 நாள் மட்டுமே பரோல் வழங்கியுள்ளது. இன்று மாலை பெங்களூரிலிருந்து சென்னை வரும் சசிகலாவை வரவேற்க, தினகரன் தரப்பு தடபுடல் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டுக்குச் செல்கிறார்.  எண்: 181/69. தியாகராய நகர் வீட்டுக்கு வரும் சசிகலா, பின்னர் நடராசன் சிகிச்சைபெறும் மருத்துவமனைக்குச் செல்கிறார். ஏழு மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து வெளியே வருவதால், வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

முன்னதாக தினகரன், இளவரசியின் மகன் விவேக், அவரின் மனைவி கீர்த்தனா, ராஜராஜன் ஆகியோர் சசிகலாவைச் சந்தித்துப் பேசினர்.

http://www.vikatan.com/news/tamilnadu/104213-sasikala-to-stay-in-tnagar-house.html

 

  • தொடங்கியவர்

‘ஐந்து நாள்களில் அனைத்தும் மாறும்!’ - சசிகலாவின் ‘திடீர்’ நம்பிக்கை

 
 

சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று மாலைக்குள் சென்னை வர இருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ' டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா. பரோல் காலம் முடிவதற்குள் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என அவர் நம்புகிறார்' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இன்று அவர் பரோலில் வர இருக்கிறார். கணவர் நடராசனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் முதலில் கொடுத்த பரோல் விண்ணப்பத்தில் மருத்துவரீதியான ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, மருத்துவ சான்றுகளுடன் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகரிடம் 4-ம் தேதி மனுகொடுத்தார் சசிகலா. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறைத்துறை நிர்வாகம், அவருக்குப் பரோல் வழங்கியுள்ளது. "இன்று மதிய உணவை சிறையில் முடித்துவிட்டு மாலை விமானம் மூலம் தி.நகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டுக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார் சசிகலா.

ஐந்து நாள்கள் அவருக்குப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஒரு வாரத்துக்கு மேல் பரோல் விடுப்பு என்றால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். தமிழக அரசின் தடையில்லாச் சான்றுக்காக கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். இதற்கான அனுமதியை சென்னை மாநகர காவல்துறை வழங்கிவிட்டது. நேற்று காலை 9.30 மணியளவில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவைத் தொடர்புகொண்ட காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், 'இந்த வீட்டில் சசிகலா தங்க இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு தி.நகர் வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், ' எத்தனை ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருக்கிறீர்கள்? வீட்டின் பேரில் எதாவது வில்லங்கம் இருக்கிறதா?' என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர். போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு இளவரசி குடும்பத்தினர் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை" என விவரித்த சசிகலா குடும்ப உறவினர் ஒருவர், 

தினகரன்" பரோல் விடுப்பில் சசிகலா வருவதற்கு மிக முக்கியக் காரணமே கட்சிதான். சிறைக்குச் சென்றபோது தினகரனிடம் கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அவர் சிறை சென்றபோது, ' அவனை என்ன பாடு படுத்தறாங்க பாருங்க...எனக்காக ரொம்பவே கஷ்டப்படறான்' என வேதனைப்பட்டார். அதே மனநிலையோடு இப்போது சசிகலா இருக்கிறாரா என்றால், நிச்சயமாக இல்லை. தினகரனின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார். குடும்ப உறவுகளில் விவேக் ஜெயராமன் மட்டுமே டி.டி.வி பக்கம் இருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் சசிகலா பக்கமே உள்ளனர். இதற்குக் காரணம் அமைச்சர்கள் தரப்பில் இருந்து சசிகலாவுக்குச் சென்ற கடிதங்கள்தான். இந்தக் கடிதங்களில், ' தினகரன் செய்த தவறுகள் என்ன?' என்பதை விளக்கியுள்ளனர். ஒரு அமைச்சர் எழுதிய கடிதத்தில், ' அமைச்சர்களை அடிக்கும் அளவுக்கு தினகரன் சென்றதால்தான், டி.டி.விக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வந்தது. சாதியைச் சொல்லி எல்லாம் அவர் திட்டுகிறார்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைப் படித்துவிட்டு குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் சசிகலா பேசும்போது, ' கட்சியிலும் ஆட்சியிலும் என்ன நடக்கிறது என்பதை என்னிடம் யாரும் முழுமையாகச் சொல்லவில்லை. இன்று எனக்குக் கடிதம் எழுதும் நிர்வாகிகள், அன்றே கூறியிருந்தால் நம்பிக்கையான சீனியரை துணைப் பொதுச் செயலாளராக்கியிருப்பேன். என் குடும்பத்தில் உள்ளவர்களை நான் பெரிதாக நினைத்திருந்தால், அன்றே டி.டி.வியை துணை முதல்வராக ஆக்கியிருப்பேனே...' என ஆதங்கப்பட்டார்.

இப்போதுகூட கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி வெளியில் வந்தாலும், அவர் கவனம் எல்லாம் கட்சி மீதுதான் உள்ளது. ஜெயலலிதா இறந்தபோது கார்டனுக்குள் வருவதற்கு நடராசன் விரும்பியபோது, ' அக்கா இருந்தபோது நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்துவிடுகிறேன். யாரும் வர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். பரோலில் வரும்போது சில அமைச்சர்களும் நிர்வாகிகளும் தன்னை சந்திக்க வருவார்கள் என அவர் உறுதியாக நம்புகிறார். குறிப்பாக, ' நம்மை முழுமையாக வீழ்த்தும் அளவுக்கு ஒரு லாபி செயல்படுகிறது. அவற்றை எதிர்த்து நாம் தாக்குப்பிடிக்க வேண்டும்' என அடிக்கடி சொல்கிறார். பரோல் விடுப்பு முடிவதற்குள் கட்சிக் கட்டுப்பாட்டை தன் பக்கம் கொண்டு வந்துவிட முடியும்' என்பதில் உறுதியாக இருக்கிறார்" என்றார் விரிவாக. 

 

பரோல் விடுப்பு உறுதியானதும் தி.நகர் வீட்டை சசிகலா தேர்வு செய்ததற்கும் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது, ' பிரியா வீட்டில் போய் தங்கிக் கொள்' எனக் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. இந்த வீட்டை சசிகலா பயன்படுத்துவதற்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. பிரியாவின் ஜாதகமும் சசிகலாவின் ஜாதகமும் ஒன்று. பல முக்கிய முடிவுகளை இந்த வீட்டில் இருந்துதான் சசிகலா எடுத்திருக்கிறார். ஆனால், ஒரே ஒரு முரண்பாடு நடராசன் பிறந்த நவம்பர் 10-ம் தேதிதான் கிருஷ்ணபிரியாவுக்கும் பிறந்தநாள். சசிகலா சென்டிமென்டுக்கான உண்மைக் காரணத்தை மன்னார்குடி உறவுகளால்கூட அறிந்துகொள்ள முடியவில்லை. 

 

http://www.vikatan.com/news/tamilnadu/104200-everything-will-be-changed--sasikalas-new-hope.html

  • தொடங்கியவர்

233 நாள்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா!

 

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனைச் சந்திப்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா பரோலில் வெளியே வந்தார். 

sasikala_15157.jpg

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். சிறைத்தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டார். சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையின் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கணவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று சசிகலா கர்நாடக சிறைத்துறையிடம் மனு அளித்தார். முதலில் அவர் அளித்த மனுவில், கணவர் நடராஜன் உடல்நிலை குறித்த ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்று கூறி, பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கணவர் நடராஜனின் உடல்நிலை குறித்த விரிவான ஆவணங்களுடன் 15 நாள்கள் பரோல் கோரி அவர் மீண்டும் மனு செய்தார். அவரது மனுவை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், சசிகலாவுக்கு சில நிபந்தனைகளுடன் 5 நாள்கள் பரோல் அளித்தது. இதையடுத்து, 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் 5 நாள்கள் பரோலில் சசிகலா வெளியே வந்தார். பெங்களூருவில் இருந்து காரில் இன்று மாலையே சென்னை வரும் சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்குகிறார். 

http://www.vikatan.com/news/tamilnadu/104221-vk-sasikala-steps-out-of-parappana-agraharam-prison-after-233-days-on-five-day-parole.html

 

  • தொடங்கியவர்

''சின்னம்மா ரிட்டர்ன்ஸ்'': ட்விட்டரில் கலக்கும் 'சசிகலா' மீம்கள்

''சின்னம்மா ரிட்டர்ன்ஸ்'': ட்விட்டரில் கலக்கும் 'சசிகலா' மீம்கள்படத்தின் காப்புரிமைTWITTER

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலாவுக்கு 5 நாள் பரோல் கிடைத்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அவர் சென்னை வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சூழலில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் சசிகலாவின் தமிழக வருகை குறித்தும், அவரது ஆதரவாளர்களின் மனநிலை குறித்தும் பல கேலி மீம்கள் இடம்பெற்றுள்ளன. அதனை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

DLceBasUIAA3TXD.jpg

DLcZPPaVYAAPei0.jpg

 

 

DLcWji_UQAEQndS.jpg

#sasikala on a 5 day parole. #Headache for #TNagar residents. She will stay on #HabibullahRoad in #Chennai . #SasikalaParole

DLckz4ZUQAAVDrO.jpg

DLcjf8iVoAYZ55k.jpg

DLcjYNgVwAMAnBN.jpg

செய்தி : சசிகலா பரோலில் விடுதலை. #sasikala #SasikalaParole எல்லாரும் ஓடுங்கடா ஓடுங்கடா...

DLcjNvxV4AApOZ6.jpg

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

15 வாகனங்கள் புடைசூழத் தமிழகம் வந்தடைந்த சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனைச் சந்திப்பதற்காக பரோலில் வெளியே வந்துள்ளார். 

சசிகலா
 

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர், தமிழகம் வரும் சசிகலாவைக் காண தி.நகரில் தினகரன் ஆதரவு அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனிடையே பல ஆயிரம் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரிலிருந்து பிற்பகல் புறப்பட்ட சசிகலா மாலை 4.30 மணிக்கு தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரியை அடைந்தார். சுமார் 15 கார்கள் சசிகலா செல்லும் காருக்கு முன்னும் பின்னும் புடைசூழ்ந்து செல்கின்றன. 

சசிகலா
 

கிருஷ்ணகிரி டோல் கேட் அருகே திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து வணக்கம் சொன்னபடியே கடந்துசென்றுள்ளார் சசிகலா. அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கூறுகையில் ‘தினகரன் முகத்தில் இருக்கும் உற்சாகம், சின்னம்மா முகத்தில் இல்லை’ என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/104234-sasikala-reached-tamilnadu-border.html

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்... சசிகலா .... 
ஜெயலலிதா இருந்த  போது  தான்.... தாலி கட்டிய மனுசனை   பார்க்க விடவில்லை.
இப்பவாவது..... வருத்தக்கார  புருசனை பார்க்க விடுங்கடா..... 

  • தொடங்கியவர்

தி.மு.க கடையில் டீ குடித்த சசிகலா!

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை பெற்றுவந்த சசிகலா இன்று தன் கணவரை பார்க்க பரோலில் வெளியே வந்துள்ளார். தினகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்று சசிகலாவை அழைத்து வந்தார்கள்.

சசிகலா

 

இன்று காலை 8 மணி வரை விமானம் மூலம் சென்னை அழைத்து வரும் முடிவில் இருந்தார் தினகரன். காரில் சென்றால் தொண்டர்களின் வரவேற்பை பெறமுடியும். அதேபோல பேசிக் கொண்டு வருவதற்கு பிரச்னை இருக்காது என்பதால் கடைசி நேரத்தில் காரில் பயணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் ஒரு காரிலும், புகழேந்தி, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ  மொளச்சூர் பெருமாள் உள்ளிட்டவர்கள் இன்னொரு காரிலும் ஏறிக் கொண்டார்கள். சிறை வளாகத்துக்குள் சுமார் 10 கார்கள் சென்றன. சிறை வளாகத்தை விட்டு ஒரு கி.மீ தாண்டியதும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஓசூர் வந்ததும் அங்கே காரை நிறுத்தி டிபன் சாப்பிட்டார் சசிகலா.  ராணிப்பேட்டை வந்ததும் ஒரு டீ சாப்பிட வேண்டும் என்றார் சசிகலா. அங்கே ஒரு டீ கடைக்கு அருகில் காரை நிறுத்தி டீ வாங்க சென்றிருக்கிறார்கள். அந்த டீ கடையில் தி.மு.க தலைவர்களின் படங்கள் இருந்தது. தி.மு.க கடை டீ என்று தெரிந்தும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அந்த கடையில் இருந்து வாங்கிவந்து கொடுத்த டீயை காரிலிருந்தே சாப்பிட்டார் சசிகலா. இரவு 7.05 மணிக்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதிக்கு வந்தார் சசிகலா. மொளச்சூர் பெருமாள் தலைமையில் அவருக்கு பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் என திருஷ்டி சுற்றினார்கள் அ.தி.மு.க.வினர். அவற்றை புன்னகையோடு ஏற்றுக்கொண்டு புறப்பட்டார் சசிகலா.

http://www.vikatan.com/news/tamilnadu/104261-sasikala-drank-tea-in-dmk-shop.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுங்கோ அடுத்த தேர்தல் வரை.<_<

  • தொடங்கியவர்

மருத்துவமனையில் நாளை நடராஜனை பார்க்கச் செல்கிறார் சசிகலா: தினகரன் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனைச் சந்திப்பதற்காக பரோலில் வெளியே வந்துள்ளார். பரோலில் வெளிவந்த சசிகலா சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின்  வீட்டுக்கு வந்தடைந்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர், தமிழகம் வந்த  சசிகலாவைக் காண தியாகராய நகரில் அவரின் ஆதரவு அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளனர். 

தி.நகர் வந்த சசிகலா

 

சசிகலா தி.நகருக்கு வந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், 'சசிகலா போயஸ் கார்டனில் கூட தங்கிக் கொள்ளலாம் என்று கர்நாடக சிறைத்துறை அனுமதித்தது. நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைத்து, திறமையில்லாத இந்த ஆட்சி, விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். தமிழக அரசின் நிபந்தனைகளால் சசிகலாவுக்கு 5 நாள்கள் மட்டுமே பரோல் கிடைத்தது' என்று கூறியவர், 'நாளை காலை 11 மணி அளவில் குலோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை, சசிகலா பார்க்கச் செல்கிறார்' என்று தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/104264-sasikala-will-meet-natarajan-tomorrow-ttv-dinakaran.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://twitter.com/withkaran/status/916210664711974912

ஸ்மால் மம்மி மீட் நட்டு ஆப்டர் தர்ட்டி இயர்ஸ்.....

  • தொடங்கியவர்

நடராசனை நேரில் சந்தித்து உருகிய சசிகலா!

 
 

hospital_12425.jpg

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராசனை அவரது மனைவி சசிகலா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

சசிகலாவின் கணவர் நடராசன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. கல்லீரல், சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவரும் நடராசனுக்குக் கடந்த 4-ம் தேதி உடல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கணவர் நடராசனைப் பார்க்க பரோல் கேட்டு சசிகலா கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், ஐந்து நாள்கள் பரோல் வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்றே சிறையிலிருந்து கார் மூலம் சென்னை வந்தார் சசிகலா. தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியுள்ளார். இன்று காலை கணவர் நடராசனைப் பார்க்க பலத்த பாதுகாப்புடன் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நடராசனைச் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வெளியில் இருக்க வேண்டும் என்று சசிகலாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் எத்தனை மணி நேரம் இருப்பார் என்று தெரியவில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/104298-sasikala-meets-natarajan-in-hospital.html

  • தொடங்கியவர்

'சசிகலாவை கண்காணிக்கும் உளவுத்துறை'  தி.நகர், பெரும்பாக்கத்தில் முகாம்

 சசிகலா

பரோலில் வந்துள்ள சசிகலாவை கண்காணிக்க உளவுத்துறை போலீஸார் தி.நகர் மற்றும் பெரும்பாக்கத்தில் முகாமிட்டுள்ளனர். உடனுக்குடன் சசிகலா குறித்த தகவல்களை ரிப்போர்ட்டாகக் கொடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கண்கொத்திப் பாம்பாக சசிகலாவின் நடவடிக்கைகளை அவர்கள் கவனித்துவருகின்றனர்.

 

சசிகலாவின் கணவர் நடராசன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி, நடராசனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. தற்போது, 24 மணி நேர தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவருகிறார். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறையில் பிப்ரவரி 15-ம் தேதி அடைக்கப்பட்ட சசிகலா, நடராசனைப் பார்க்க அனுமதிக்குமாறு சிறைத்துறையிடம் பரோல் கேட்டார். அவருக்கு 5 நாள்கள் பரோல் வழங்கிய சிறைத்துறை, கடும் நிபந்தனைகளை விதித்தது. நேற்று மாலை, கர்நாடக சிறையிலிருந்து காரில் சென்னைக்குப் புறப்பட்ட சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்ரியா வீட்டுக்கு இரவு வந்துசேர்ந்தார்.

வழிநெடுகிலும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் வரும்போது, சசிகலாவும் தினகரனும் பேசியபடி வந்தனர். வரவேற்பைப் பார்த்ததும் சசிகலா முகம் மலர்ந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்பளித்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் காருக்குள் இருந்தபடியே கும்பிட்டார். அடுத்து, தி.நகர் வீட்டின் முன்பும் சசிகலாவைக் காண அவருடைய ஆதரவாளர்கள் காத்திருந்தனர். காரை விட்டு இறங்கிய சசிகலாவுக்கு, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதன்பிறகு வீட்டுக்குள் சென்ற சசிகலா, குடும்ப உறவுகளுடன் பேசியுள்ளார். பயணக் களைப்பிலும் அவரது பேச்சு உற்சாகமாக இருந்துள்ளது.

அடுத்து, இன்று காலை நடராசனைப் பார்க்கச் செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சசிகலா தினகரனிடம் கூறியுள்ளார். எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, சசிகலா தூங்கச் சென்றுள்ளார். காலையில், நடராசனை சந்திக்கத் தயாராகியுள்ளார். இந்தத் தகவல், மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் நடராசனிடம், சசிகலா வரும் தகவலைத் தெரிவித்தனர். சரியாக 12 மணியளவில் சசிகலா, நடராசனைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சசிகலா

நடராசனைச் சந்தித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள்குறித்து சசிகலாவும் தினகரனும் ஆலோசனை நடத்துவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், சசிகலாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க உளவுத்துறையில் ஸ்பெஷல் டீம் போடப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு டீம், தி.நகரிலும் இன்னொரு டீம் நடராசன் அனுமதிக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சசிகலா குறித்த தகவல்களை உடனுக்குடன்  அவர்களின் உயரதிகாரிகளுக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தி.நகர் வீட்டிலிருந்து சசிகலா புறப்பட்ட நேரம், அவருடன் செல்பவர்களின் பெயர், விவரம், கார் நம்பர் என அனைத்தையும் உளவுத்துறை போலீஸார் உயரதிகாரிகளுக்குத் தகவலாகச் சொல்லியுள்ளனர். இது, உளவுத்துறையின் அன்றாட அலுவல் என்றாலும், சசிகலாகுறித்த ரிப்போர்ட்டை உடனுக்குடன் கொடுக்க வேண்டும் என்று பணியில் உள்ள உளவுத்துறை போலீஸாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இரவு, பகல் உளவுத்துறை போலீஸார் அங்கு பணியில் உள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறை போலீஸ் உயரதிகாரி ஒருவர், "பரோலில் வருபவர்களை உளவுத்துறை கண்காணிப்பது வழக்கம். அந்த அடிப்படையில்தான் சசிகலாவையும் கண்காணித்துள்ளோம். கர்நாடக சிறைத்துறை, சசிகலாவுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளை சசிகலா மீறினால், அவரது பரோல் ரத்துசெய்யப்படும். இதனால், சசிகலாவைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலிருக்கும் சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், சசிகலாவை சந்திக்க வருவதாகத் தகவல் வந்துள்ளது. சிறைத்துறை நிபந்தனைப்படி சசிகலாவை யாரும் சந்திக்க அனுமதியில்லை. அதையும் மீறி யாராவது சசிகலாவை சந்தக்க வருகிறார்களா என்றும் கண்காணித்துவருகிறோம். 
 அடுத்து, சசிகலாவுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய கடமை தமிழக போலீஸாருக்கு உள்ளது. அதுதொடர்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாக்கத்தில் நடராசனைச் சந்திக்க சசிகலா இன்று சென்றுள்ளார். நடராசனை அருகில் அமர்ந்து பேச வாய்ப்பில்லை. இருப்பினும் நடராசன், சசிகலா சந்திப்பு குறித்த தகவல்களை சேகரிக்க உளவுத்துறை போலீஸாரும், மாநகர நுண்ணறிவுப் போலீஸாரும் பணியில் உள்ளனர்" என்றார். 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

 

தருமபுரி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பயண ஏற்பாட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் இருந்தாலும், சசிகலா குறித்த தகவல்களை இன்ஃபார்மர் மூலம் விசாரித்தபடி இருந்தனர். சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கையால் தங்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்படுமா என்ற அச்சத்திலும் சில அமைச்சர்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தகைய அமைச்சர்கள், தினகரன் தரப்பினர்மூலம் போனில் பேச்சுவார்த்தைக்குத் தூது அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் அதிருப்தியிலிருப்பவர்கள், சசிகலாவை வெளிப்படையாகச் சந்திக்க வாய்ப்பில்லை. இருப்பினும், ரகசியப் பேச்சுவார்த்தை போன்மூலம் நடக்க வாய்ப்புள்ளது. இதனால், அவ்வாறு சந்தேகிக்கப்படும் கட்சியினரின் போன் சிக்னல்களையும் போலீஸார் கண்காணித்துவருகின்றனர். இந்தப் பணிகளை மேற்கொள்ள ,ஸ்பெஷல் போலீஸ் டீமை எடப்பாடி அரசு பணியமர்த்தியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தி.நகர் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/104289-intelligence-team-in-tnagar-and-perumbakkam-to-monitor-sasikala.html

  • தொடங்கியவர்

'கணவரைக் காப்பாற்றிக் கொடுங்கள்?' - மருத்துவர்களிடம் கைகூப்பிய சசிகலா

 
 

சசிகலா

கணவர் நடராசனின் உடல்நிலை குறித்து சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிடம் விசாரித்த சசிகலா, ''அவர் எப்போது வீடு திரும்புவார். உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள்'' என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். 

 

அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் கல்லீரலும் சிறுசீரகமும் முற்றிலும் பழுதடைந்து செயலிழந்துவிட்டது என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. மாற்றுச் சிறுநீரகம், கல்லீரல் பொருத்தினால் மட்டுமே நடராசனைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து, கல்லீரலையும் சிறுநீரகத்தையும் தானம் பெறும் சட்ட நடவடிக்கைகளை நடராசன் குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்நிலையில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த அறந்தாங்கி வாலிபர் கார்த்திக்கின் சிறுசீரகம், கல்லீரல் தானமாகப் பெற்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் நடராசனுக்குப் பொருத்தப்பட்டது. இதற்காக அந்த வாலிபரின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து நடராசனை மருத்துவர்கள் கவனித்துவருகிறார்கள்.

''அக்டோபர் 4-ம் தேதி இரண்டு உறுப்புகளும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுவிட்டது. நடராசன் நலமுடன் உள்ளார். உடல் நிலை தேறி வருகிறார். கல்லீரலும் கிட்னியும் நன்றாகச் செயல்படுகிறது'' என்று கல்லீரல் நோய் மற்றும்  உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை துறையின் இயக்குநர் டாக்டர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரு சிறையிலிருந்து பரோலில் சென்னை வந்துள்ள சசிகலா இன்று மதியம் 12 மணிக்கு குளோபல் மருத்துவமனைக்கு வந்து நடராசனை பார்த்தார். 2 மணி நேரம் நடராசன் அருகில் இருந்து கவனித்தார். நடராசனைப் பார்க்க சசிகலா வருகிறார் என்பதால் இன்று காலையில் நடராசனுக்கு முகச்சவரம் செய்யப்பட்டது.

சசிகலா

நடராசனுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் சசிகலா கேட்டறிந்தார். ''இன்னும் 10 நாளில் சாதாரண வார்டுக்கு நடராசன் மாற்றப்படுவார். அங்கு 10 நாள்கள் இருக்க வேண்டும். பிறகு, மூன்று மாதம் வீட்டில் தீவிர ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பிறகு அவர் வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம். கல்லீரலும் சிறுசீரகமும் நல்ல முறையில் வேலை செய்கிறது. பயப்பட வேண்டாம்'' என்று மருத்துவர்கள், சசிகலாவிடம் தெரிவித்தனர். அப்போது, மருத்துவர்களைக் கையெடுத்துக் கும்பிட்ட சசிகலா, ''நான் என் கணவரை அருகில் இருந்து கவனிக்க முடியாத நிலை உள்ளது. அவரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள். அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்ததுக்கு நன்றி. அவர் உயிரைக் காப்பாற்றிக்கொடுங்கள். அவர் எப்போது வீடு திரும்புவார்'' என்று உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, நடராசன், ''நான் நலமாக இருக்கிறேன். நீ தைரியமாக இரு'' என்று கூறினார். அதன் பின்னர், முதல் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கீழே இறங்கிய சசிகலாவைப் பார்த்து அந்த வாசல் அருகில் நின்ற நாஞ்சில் சம்பத், விஜிலா சந்தியானந்த், தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் கும்பிட்டு வணக்கம் வைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் குழுமி இருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடியே காரில் ஏறிய சசிகலா, தி.நகர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/104318-sasikala-thanked-the-doctor-who-gave-treatment-to-his-husband.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.