Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை! 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா?

Featured Replies

இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை! 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா? - பகுதி 1

 
 

2ஜி

‘17,60,00,00,00,000 ரூபாய் ஊழல்’ என இந்தியப் பத்திரிகைகள் ஒரு அதிகாலையில் செய்தி வாசித்தன. 2010 நவம்பர் 11-ம் தேதி வெளியான அந்தச் செய்தி இந்தியாவை உலுக்கியது. இந்தியாவைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. இந்த அவமானங்கள் அத்தனைக்குமான ஊழலின் ஊற்றுக்கண் தமிழகத்தில் இருந்ததால், தமிழகம் தலைகுனிந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளாக இருந்த பி.ஜே.பியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அனல் கக்கும் விவாதங்களைக் கிளப்பின. அந்த அனலின் வெப்பத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளாக இருந்த காங்கிரஸ்-தி.மு.க புளுவாய்த் துடித்துப் போயின. தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்த தி.மு.க தலைவர்கள் மட்டுமல்ல... அடிமட்டத் தொண்டனும் அவமானத்தால் தலைகாட்ட முடியாமல் தவித்தான். ஆ.ராசா மட்டும் தைரியமாக எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தார்; ஊழலே நடக்கவில்லை என்று உறுதியாகச் சொன்னார். ஆனால், 2ஜி ஊழல் எதிர்ப்பு இரைச்சலில், ஆ.ராசாவின் குரல் அமுங்கிப் போனது. 

 

2ஜி வழக்கில் தொடர்புடையவர்கள்

7 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்த விவகாரத்தில், டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வெளியாகப் போகிறது. தமிழகத்தில் தொடங்கி... இந்தியாவை கலக்கி... உலகை அதிரவைத்த 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் வெளியாகப்போகும் தீர்ப்பு பூதமாக இருக்குமா? புஷ்வாணமாக பொய்க்குமா? என்பதற்கு 21-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன், அந்த வழக்கு கடந்து வந்த பாதை!  

கருத்துக் கணிப்பில் தொடங்கிய கதை!

நெருப்பில் எரியும் தினகரன் பத்திரிகை அலுவலக வாயில்

2007 மே 9-ம் தேதி, ‘தினகரன்’ நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் ‘கருணாநிதிக்கு அடுத்தபடியாக தி.மு.கவின் தலைமைப் பதவியை வகிக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. கருணாநிதியின் வாரிசுகளில் ஸ்டாலின் அதில் முதலிடத்தைப் பிடித்தார். அழகிரி மிகக் குறைவான வாக்குகளையும், கனிமொழி அதற்கும் குறைவான வாக்குகளையும் வாங்கியிருந்தார். கழகத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவருக்கும் கடும் மோதல் நடந்து வந்த சமயம் அது என்பதால், கட்சியில் அந்தக் கருத்துக்கணிப்பு கடும் கொந்தளிப்பைக் கிளப்பியது. அழகிரிக்கான செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட இது பயன்பட்டுவிட்டது என்பதால், அவரது ஆதரவாளர்கள் மதுரை மாநகரில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். உணர்ச்சியால் தூண்டப்பட்ட குழுவினர், மதுரையில் இருக்கும் ‘தினகரன்’ மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். உள்ளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். அந்தக் கலவரத்தின் முடிவில் மூன்று உயிர்கள் பலியானது. 

மகனா? மருமகனின் மகனா? 

தினகரன் நாளிதழ், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ கருணாநிதியின் குடும்பத்துக்கோ அந்நியமானது அல்ல. கருணாநிதியின் அக்கா சண்முகசுந்தரத்தம்மாளின் மகன்களில் ஒருவரான ‘முரசொலி’ மாறன், கருணாநிதிக்கு மருமகன் முறை.
அந்த மருமகன் மாறனுக்கு கலாநிதி, தயாநிதி ஆகிய இரண்டு மகன்கள். அதில் கலாநிதியால் நடத்தப்படும் பத்திரிகைதான் ‘தினகரன்’. அந்த நேரத்தில் மாறனின் மற்றொரு மகன் தயாநிதிமாறன், கருணாநிதியால் கைபிடித்து அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு தி.மு.க. சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்டார். அதில் வெற்றி பெற்ற அவர், 2004-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக கருணாநிதியால் அமர வைக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டார். ஆனால், அவரே கருணாநிதியின் மகன்களின் ஒருவரை முன்னிலைப்படுத்தி, ஒருவரை பின்னுக்குத் தள்ளி தேவையற்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டார். கருணாநிதியின் மருமகன் முரசொலிமாறனின் மகன் வெளியிட்ட கருத்துக் கணிப்பை, கருணாநிதியின் மகன் அழகிரி எதிர்த்தார். அதன் விளைவாக மூன்று உயிர்கள் பலியாயின. ஆரம்பகாலத்தில் தி.மு.க-வின் தயவால் வளர்ந்த கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் தொலைக்காட்சியில், ‘தி.மு.க ரவுடிகள் அராஜகம்’ என நொடிக்கொரு செய்தி ஒளிபரப்பானது. மகனா... மருமகனின் மகனா..! என வந்தபோது, கருணாநிதி, மகன் பக்கம் நின்றார். தி.மு.க தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்டது; தயாநிதி அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியை விட்டே அவர் விலக்கி வைக்கப்பட்டார். அதற்கு அடுத்து தி.மு.க-வில் பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. 

maran_nithi_brothers_19182.jpg

ஆ.ராசா வந்தார்!

தயாநிதி வகித்தத் தொலைத் தொடர்புத் துறை தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதுவரை தயாநிதிமாறனின் தோள்களில் கைபோட்டு நடந்த கருணாநிதி, ராசாவின் தோளுக்கு தன் கையை மாற்றினார். ஒருகட்டத்தில் கருணாநிதியின் ‘வளர்ப்பு மகனைப்’ போல ஆ.ராசா வலம்வரத் தொடங்கினார். மே 16, 2007-ல் ஆ.ராசா மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆ.ராசா வருவதற்கு முன்பே, 2ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு 150 விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஆனால், ஏலம் நடத்தப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பிப்ரவரி மாதமே விண்ணப்பித்து இருக்கிறது. அதாவது தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோதே அது விண்ணப்பித்துவிட்டது. ராசா பொறுப்பேற்ற பிறகு, செப்டம்பர் மாதம் 24-ம் தேதி யூனிடெக் நிறுவனம் விண்ணப்பிக்கிறது. அதற்கு மறுநாள் அந்த நிறுவனத்துக்கு அனுமதிக் கடிதம் கொடுக்கப்படுகிறது. அதைக் கொடுத்த கையோடு மற்ற நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வாங்குவதை ராசா நிறுத்தச் சொல்கிறார்.  

இயற்கை நீதிக்கு எதிரானது!

ராசா அப்படி அறிவித்தபோது, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று நாம் முதலில் சொல்லிவிட்டு, திடீரென தேதியை மாற்றுவது தவறானது. அப்படிச் செய்ய விதிமுறையில் இடம் இல்லை” என ராசாவை எச்சரிக்கிறார். அதேபோல் நிதித்துறையைச் சேர்ந்த மனு மாதவன் என்பவரும் ராசாவை எச்சரிக்கிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் விடுப்பில் சென்ற ஒரு நாள் அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார். அதன்பின் சித்தார்த் பெகுரா என்பவரை ராசா தொலைத் தொடர்புத்துறை செயலாளராக கொண்டுவருகிறார். அவர் ராசா சொன்னதை அப்படியே நிறைவேற்றிக் கொடுக்கிறார். 2ஜி ஊழலுக்கான வேலைகள் வேகமாகத் தொடங்கின.  

ஆ.ராசா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின்

ராசா முடிவின் பின்னணி 

25 செப்டம்பர் 2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ராசா அறிவித்ததற்குக் காரணம், அப்படிச் செய்தால் டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும். அந்த நிறுவனம் ஸ்வான் டெலிகாம். இந்த நிறுவனமும் ராசாவும் அத்தனை நெருக்கம். ராசா  சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருந்தது. அப்போதே அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக பல தடையில்லாச் சான்றுகளை வழங்கியவர் ராசா. அப்போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ராசா அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக 2ஜி அலைக்கற்றையைப் பெறுவதற்கான தேதியை மாற்றினார். தங்களுக்கு நெருக்கமான ஆ.ராசா தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த ஸ்வான் நிறுவனம், தொலைபேசி சேவைக்கு தொழிலை மாற்றியது. 

2ஜி ஊழல் தொடக்கம்!

2007 அக்டோபர் மாதம் 1-ம் தேதி ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா ஆகியோர் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர்களாக பொறுப்பேற்கின்றனர். அதே ஆண்டு, அதே மாதம் 18-ம் தேதி டிபி குழும நிறுவனங்கள், ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்குகின்றன. 49.90 லட்சம் மதிப்புள்ள பங்குகள் கைமாற்றப்படுகின்றன. 

2008 ஜனவரி 10-ம் தேதி மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அதன் அதிகாரபூர்வ இணையத் தளத்தில், மதியம் 2.45 மணிக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 2ஜி அலைக்கற்றைக்கான உரிமம் பெற விரும்பும் நிறுவனங்கள் தங்களின் விண்ணப்பங்களை 45 நிமிடத்துக்குள் தொலைத் தொடர்புத்துறை தலைமையகத்துக்கு வரவேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. அதனால், பல நிறுவனங்கள் விண்ணப்பங்களைக் கொடுக்கவும், நேரில் போகவும் முடியவில்லை. ஆனால், ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் மட்டும், 2007 நவம்பர், அக்டோபர் மாதங்கள் தேதியிட்டு தயாராக ஆயிரத்து 600 கோடிக்கு டி.டி.எடுத்து தயாராக வைத்திருந்தன. ஸ்வான் டெலிகாம், லூப் டெலிகாம், ஸ்பைஸ், ஐடியா, டேட்டாகாம்/வீடியோகான், ஷ்யாம் டெலிகாம், டாடா டெலி சர்வீஸ், யுனிடெக் நிறுவனங்கள் மட்டும் 2ஜி அலைக்கற்றையைப் பெற்றன. அங்குதான் இந்த விவகாரத்தின் வில்லங்க முடிச்சும் போடப்பட்டது. 

தொடரும்...

https://www.vikatan.com/news/india/110849-2g-spectrum-judgement-series-part-1.html

  • தொடங்கியவர்

இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை! பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அது தெரியும்! 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா? - பகுதி 2

 
 

2ஜி ஊழல்

2ஜி அலைக்கற்றை ஏலம், ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற புதிய விதிப்படி நடந்து முடிந்தது. 2008 ஜனவரி 10-ம் தேதி அந்த ஏலத்தை நடத்தி முடித்திருந்தார் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. அதோடு அவருடைய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது; அதன்பிறகு ஆட ஆரம்பித்த, எதிர்கட்சிகள் அரசியல் களத்தை ரணகளமாக்கின. எதிர்க் கட்சிகளின் அதிரடி ஆட்டத்தில், மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி போட்டு ஆட்சி நடத்திய காங்கிரஸ்-தி.மு.கவின் ‘இமேஜ்’ சரசரவென சரியத் தொடங்கியது. அலைக்கற்றை விவகாரத்தில், ‘எதுவுமே சரியாக நடக்கவில்லை’ என எதிர் கட்சிகள் புகார் கிளப்பின; அவசர அவசரமாக வாங்கப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்பிக்கும் தேதியிலும், நேரத்திலும் செய்யப்பட்ட குளறுபடிகள், விதிமுறைகளைத் தளர்த்தியதில் வில்லங்கம் என அத்தனை விவகாரங்களையும் எதிர் கட்சிகள் கேள்விக்கு உட்படுத்தின. பொது ஏலம் நடத்தி இருந்தால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்திருக்கலாம் என யூகக் கணக்குகள் போடப்பட்டன; தொலைத் தொடர்புத்துறை அமைச்சரின் இந்த முடிவு பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தெரியுமா? என்ற கேள்விகள் நாடாளுமன்ற அவைகளை அதிர வைத்தன. எதிர்க் கட்சிகளின் எந்தக் கேள்விக்கும்... யாரிடமும் பதில் இல்லை. ஆனால்,  அத்தனை கேள்விகளுக்கும் ஆ.ராசா பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

 

பிரதமருக்குத் தெரியும்!

2 நவம்பர் 2007-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங், 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பாக ஆ.ராசாவுக்குக் கடிதம் எழுதுகிறார். அதில், ‘2ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விடுங்கள்’ என்று குறிப்பிடுகிறார். அதற்கு பதில் எழுதிய ராசா, “ ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2ஜி-யை விற்பனை செய்ய உள்ளேன்” எனக் குறிப்பிடுகிறார். முதலில் அதற்கு அனுமதி அளிக்காத பிரதமர் மன்மோகன் சிங், 3 ஜனவரி 2008-ல் ஆ.ராசாவுக்கு எழுதிய கடிதத்தில் அனுமதி அளிக்கிறார். அதன்பிறகுதான் 122 வட்டங்களுக்கான 2ஜி லைசென்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. 

http___photolibrary.vikatan.com_images_g

ப.சிதம்பரம் அனுமதித்தார்!

ப.சிதம்பரம் 2ஜி ஏலம் நடந்தபோது மத்திய நிதியமைச்சராக இருந்தார். 2ஜி அலைக்கற்றைக்கான தொகை, நிதித்துறை மூலம்தான் வசூலிக்கப்படும். அதனால், 2ஜி விற்பனை கொள்கையில் தொலைத் தொடர்புத்துறை செய்த மாற்றம் குறித்து நிதித்துறை ஆலோசனை நடத்துகிறது. ஆரம்பத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின் முடிவை நிதித்துறை நிராகரித்தது. அதன்பிறகு என்ன நடந்ததோ... 2008-காலகட்டத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு, நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கடிதத்தில், ‘‘இந்த முறை உங்கள் யோசனைப்படியே செய்யுங்கள்; ஆனால், அடுத்தமுறை ஏலத்தில் விற்பனை செய்யுங்கள்” என்று பட்டும்படாமலும் ஒப்புதல் அளித்துள்ளார். 

உடனடி கொள்முதல்... உடனடி விற்பனை... கொள்ளை லாபம்!

2ஜி அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள், தொலைத் தொடர்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாதவை. ஆனால், அந்த நிறுவனங்கள்தான் 2ஜி அலைக்கற்றையை வாங்கிக் குவித்தன. வாங்கிய கையோடு, அதை அப்படியே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட்டன. ஆயிரத்து 537 கோடிக்கு ரூபாய்க்கு 2ஜி அலைக்கற்றையை வாங்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதில் பாதியை அரபு நாட்டு நிறுவனமான ஈடிசாலட்டுக்கு, 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு விற்றது. ‘ஜஸ்ட் லைக்தட்’ இந்தப்பக்கம் வாங்கி, அந்தப் பக்கம் கொடுத்ததில் அந்த நிறுவனத்துக்கு லாபம் மட்டும் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய். 

செல்போன் டவர்

ஷியாம் டெலிகாம் நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த எம்.டி.எஸ் பிராண்ட் நிறுவனத்துக்கு 74 சதவிகிதப் பங்குகளை விற்றது. யுனிடெக் நிறுவனம் நார்வேயைச் சேர்ந்த யுனிநார் நிறுவனத்துக்கு 67 சதவிகிதப் பங்குகளை விற்றது. டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ நிறுவனத்துக்கு அதன் 26 சதவிகிதப் பங்குகளை விற்றன. ஆயிரம் கோடி ரூபாய்க்குள் 2ஜி அலைக்கற்றையைப் பெற்ற நிறுவனங்கள், அவற்றில் பாதியை மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் அடித்தன. அரசாங்கம் ஏன் இதைச் செய்யவில்லை என்பதுதான் 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு அடிப்படையான கேள்வியாக அமைந்தது. 

கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி!

2ஜி ஏலம் முடிந்த அதே நேரத்தில்... கலைஞர் தொலைக்காட்சியின் அக்கவுண்டில் 200 கோடி ரூபாய் கொத்தாக வந்து விழுகிறது. அதுவும் யாரிடம் இருந்து? எந்த நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்ததோ... அந்த நிறுவனங்களிடம் இருந்து வருகிறது. எந்தவிதமான வியாபார ஒப்பந்தமும் இல்லாமல் 200 கோடி ரூபாய் பணத்தை 23 டிசம்பர் 2008-ல் கலைஞர் தொலைக்காட்சியில் சினியூக் நிறுவனம் முதலீடு செய்கிறது. கலைஞர் தொலைக்காட்சியின் முதலீடு செய்த சினியூக் நிறுவனத்துக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என தேடிப்பார்த்தால்... டைனமிக்ஸ் ரியலிட்டி, குஷேகான் புருட்ஸ் என்ற நிறுவனங்களிடம் இருந்து வந்தது தெரிந்தது. டைனமிக்ஸ் ரியாலிட்டிக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று தேடிப்பார்த்தால்... அந்த நிறுவனத்துக்கு டி.பி ரியாலிட்டி என்ற நிறுவனத்திடம் இருந்து வந்தது தெரிந்தது. டி.பி.ரியாலிட்டி யாருடைய நிறுவனம் என்று பார்த்தால், அது ஸ்வான் டெலிகாம் நிறுவத்தினத்தின் ஒரு அங்கம் என்பது புரிந்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் யாரென்று பார்த்தால்... மத்திய அமைச்சர் ராசா மூலம், 2ஜி அலைக்கற்றையை வாங்கி, வெளிநாட்டு நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டதில் லம்ப்பாக சம்பாதித்த நிறுவனம்தான் அது. ஆக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம், 2ஜி விற்பனையில் கிடைத்த லாபத்தில், 200 கோடி ரூபாயை கலைஞர் தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ளது; அலைக்கற்றையை தங்களுக்கே கிடைக்கும்படி செய்த மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சகாயம் செய்வதற்காக அந்த நிறுவனம் இந்தப் பரிவர்த்தனையை நடத்தி உள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது. 

ஆ.ராசா, கனிமொழி

புகார்... புகார்... புகார்!

2ஜி விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது. பலமுறை எதிர் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசல் புரசலாக குற்றம்சாட்டின. மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி சார்பில் சீத்தாராம் யெச்சூரி, 2ஜி வியாபாரத்தில் நடந்த ஊழல்கள் குறித்து புத்தகம் எழுதி, அதை நாடாளுமன்றத்தில் எல்லா எம்.பி-களுக்கும் கொடுத்தார். டெல்லியைச் சேர்ந்த டெலிகாம் வாட்ச்டாக், பத்திரிகையாளர் பிரஞ்சாய் குகா உள்ளிட்டவர்கள் புகார் அளித்தனர். 

நீரா ராடியா அமைச்சரவை! 

2ஜி விவகாரம் மெல்ல மெல்ல சூடுபிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், கார்ப்பரேட் தரகர் நீரா ராடியா விவகாரம் வெளியானது. கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசாவுடன் நீரா ராடியா தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியானதுதான் ‘நீரா ராடியா டெலிபோன் டேப்’ என இந்தியா முழுவதும் பரவலாக அதிர்வைக் கிளப்பின. அந்த தொலைபேசி உரையாடல்களில், “யாருக்கு என்ன அமைச்சரவை கிடைக்கும், கிடைக்க வேண்டும்” என நீரா ராடியா அமைச்சர் ராசா, கனிமொழியுடன் விவாதிக்கிறார். ராசாவுக்கு கண்டிப்பாக தொலைத் தொடர்புத்துறையை ஒதுக்க வேண்டும் என்பதில் கனிமொழி, நீரா ராடியா என இருவரும் உறுதியாக இருப்பதை அந்த தொலைபேசி உரையாடல் போட்டு உடைத்தன. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை கிடைக்க வேண்டும் என நீரா ராடியா ஏன் போராட வேண்டும்? ஏனென்றால், அந்த நீரா ராடியா, டாடா டெலிசர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆலோசகராக இருந்தவர். அதனால், தான் ஆலோசகராக இருந்த நிறுவனத்துக்கு தகுந்த ஆளை அமைச்சராகப் போட வேண்டும் என்பதுதான் நீரா ராடியாவின் பிரயத்தனம். ‘நீரா ராடியா டெலிபோன்’ டெப் வெளியானபிறகு, மந்திரி சபை அமைப்பது, நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளைத் தீர்மானிப்பது என அனைத்திலும் அரசியல் கட்சித் தலைமைகளின் கைகளில் மட்டுமில்லை... கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் இருக்கிறது என்பது அம்பலமானது. 

ரத்தன் டாடா, நீரா ராடியா

நொந்துகொண்ட கருணாநிதி!

நீராராடியா-கனிமொழி டேப் விவகாரம் வெளியான போது, டெல்லியில் யாருக்கு அமைச்சர் பதவி, எந்தத் துறைக்கு யாரை அமைச்சராகப் போடுவது என டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் அமர்ந்து கருணாநிதி மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார். அப்போது வெளியான நீரா ராடியா டேப்பில், ‘ஆ.ராசாதான் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்’ என்று உறுதிபட போனில் தகவல் சொல்கிறது நீரா ராடியாவின் குரல்! தயாநிதி மாறன் கைக்கு அந்தத் துறை வந்துவிடக்கூடாது என்று நீரா ராடியாவும் துடிக்கிறார். ஒன்றரை மணி நேர டேப்பில் நீரா ராடியா, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் தொலைபேசிப் பேச்சுக்களை கேட்ட கருணாநிதி  நொந்து போனார். அவர் கனிமொழியிடம், “யாராம்மா அந்தப் பெண்... அவர் நினைத்தால் அமைச்சரவையில் எந்தப் பதவியை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுத்துவிடுவாரா? அப்படியானால், நீங்கள் எல்லாம் என்னை நம்பவில்லை... யாரோ ஒரு பெண்ணை நம்பித்தான் கட்சிக்கு வந்தீர்களா..?” என்று கேட்டு நொந்து கொண்டார். 

கனிமொழி, கருணாநிதி

17,60,00,00,00,000 கோடி நட்டம்!

2ஜி அலைக்கற்றையை ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது 2009-10 காலகட்டத்திலேயே வெளிவந்துவிட்டது. ஆனால், ஊழலின் ரூபாய் மதிப்பு எவ்வளவு என்பதில் யாருக்கும் அப்போது தெளிவு ஏற்படவில்லை. அந்த நேரத்தில், சி.ஏ.ஜி(Comptroller Auditor General Of India) அறிக்கை வெளியானது. 8 நவம்பர் 2010-ல் வெளியான அறிக்கை, 2ஜி அலைக்கற்றை விற்பனையால் நாட்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் என்று அறிவித்தது. இந்தியாவின் ஊழல் திறமையைப் பார்த்து உலகம் அதிர்ந்தது!

தொடரும்...

https://www.vikatan.com/news/coverstory/110954-the-story-of-2g-spectrum-scam-how-kalaignar-tv-received-200-crores-chapter-2.html

  • தொடங்கியவர்

ராசா, கனிமொழிக்கு திகார் சிறை.. திகீர் திருப்பம்!

 
 

2ஜி ஊழல்

2ஜி அலைக்கற்றை விவகாரம் 2009-ல் இருந்து புகையத் தொடங்கியது. ஆனால், 2010-ல் சி.ஏ.ஜி அறிக்கை வெளியான பிறகே, அது காட்டுத் தீயாய் வேகமெடுத்துப் பரவியது. அந்த நெருப்பின் வேகத்தில், காங்கிரஸ்-தி.மு.க உறவு மெல்லக் கருகத் தொடங்கியது. ஆ.ராசாவின் அமைச்சர் பதவி காலியானது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் டெல்லி அரசியல் வாரிசாகப் பார்க்கப்பட்ட கனிமொழி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த அளவுக்கு இந்த விவகாரத்தில், சி.ஏ.ஜி அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக மாறியது. சி.ஏ.ஜி அறிக்கைக்குப் பிறகுதான், 2ஜி இந்தியா முழுதும் பேச்சாக மாறியது. 21 டிசம்பர் 2009-ல் சி.பி.ஐ எப்.ஐ.ஆர் பதிவுசெய்தது. அதில், குற்றவாளிகள் என்று குறிப்பிட்டு யாரையும் சேர்க்கவில்லை; அடையாளம் தெரியாத தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் என்று மட்டுமே பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால், 2010-ல் சி.ஏ.ஜி அறிக்கை வெளியான பிறகு காட்சிகள் மாறின; தி.மு.க-வுக்கு அடிவயிற்றில் தீப்பிடித்தது!  

 

ஆ.ராசா மற்றும் 9 பேர்! 

சி.பி.ஐ பதிவுசெய்த எப்.ஐ.ஆரில் ஆ.ராசா உள்பட 9 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்; அதோடு, 4 கம்பெனிகளையும் குற்றவாளிகளாகச் சேர்த்தது சி.பி.ஐ. இந்த விவகாரத்தில், வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்ற அடிப்படையில் அமலாக்கத்துறையும் ஒரு எப்.ஐ.ஆரை எழுதியது. அதில், ஆ.ராசா உள்பட 10 நபர்களையும், 9 கம்பெனிகளையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது. அதன்பிறகு, 2ஜி சூறாவளி நாடாளுமன்ற அவைகளை துவம்சம் செய்தது. இந்திய அரசியல் 2ஜி-யைச் சுற்றியே அந்த நேரத்தில் சுழன்றது! மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தனக்குப் நெருக்கமான கூட்டளியான தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்தது. தி.மு.க-வைச் சேர்ந்த ஆ.ராசாவை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. முடிந்தவரை ராசாவின் ராஜினாமாவைத் தவிர்ப்பதற்கு தி.மு.க தவித்தது; ஆனால், முடியவில்லை! 
நவம்பர் 14, 2010-அன்று இரவு, ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி 2, 2011-ல் ராசா கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 2ஜி விவகாரத்தில் லாபம் அடைந்த நிறுவனங்கள், ‘கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்யும் பாணியில் பணம் கொடுத்தன’ என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கனிமொழியும் கைதுசெய்யப்பட்டார். 2011 மே 20-ம் தேதி கைது செய்யப்பட்ட கனிமொழியும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, 2ஜி அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களின் இயக்குநர்கள், நிர்வாகிகள், அலைக்கற்றை விவகாரத்தில் அமைச்சர் ராசாவுக்கு உதவிய தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் என ஒரு டஜன் பேர் கைதுசெய்யப்பட்டனர். 

2 ஜி தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் சாட்டையடிகள்!

2ஜி வழக்கு, டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்தது. ஆமை வேகத்தில் அந்த வழக்கு நகர்வதைப் பார்த்துக் கொதித்துப்போன, ‘டெலிகாம் வாட்ச் டாக்’ என்ற தன்னார்வ அமைப்பு, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுடைய மனுவின் சாரம், “2ஜி வழக்கு விசாரணையை வேகப்படுத்த உத்தரவிட வேண்டும்” என்பதே.  அவர்களுடைய மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், “இவ்வளவு பெரிய குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவர் எப்படி இப்போதும் அமைச்சராக நீடிக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியது. அதன்பிறகுதான் ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி அழுத்தம் அதிகரித்தது. அதுபோல, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், “இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த வழக்கை விசாரிப்பீர்கள்... உங்களுக்கு இன்னும் 20 வருடங்கள் தேவைப்படுமா” என்று  கேட்டுச் சாட்டையைச் சுழற்றியது. அதுபோல, இந்த வழக்கை விரைந்து முடிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமைக்க 2010 டிசம்பர் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இதுபோன்ற வலி மிகுந்த சாட்டையடிகளால்தான் 2ஜி வழக்கு இன்று தீர்ப்புத் தேதியை எட்டி இருக்கிறது. இல்லையென்றால், இன்னும் ஒரு பல தசாப்தங்களுக்கு இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!  

தாயாளு அம்மாளை விடுவிக்க முடியாது!

2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சி 200 கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தது. கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த அந்த 200 கோடி ரூபாய்  முறைகேடான பணப்பரிவர்த்தனை என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை ஒரு வழக்கை பிரத்யேகமாகப்  பதிவுசெய்தது. அதில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத்குமார் ரெட்டி, கரீம் மொரானி, ஷாகித் பல்வா உள்ளிட்டோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், “தயாளு அம்மாளை அமலாக்கத்துறை பதிவுசெய்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்; தயாளு அம்மாள் ‘அல்சைமர்’ என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்; மேலும் வயோதிகத்தின் காரணமாக அவரது உடல்நிலையில் பல பாதிப்புகள் இருக்கின்றன” எனக் குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நிறுவனத்தின் 60 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் ஒருவரை, உடல்நிலையைக் காரணம் காட்டி வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது” எனக் குறிப்பிட்டு செல்வியின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, தயாளு அம்மாளும் அந்த வழக்கில் வலுவாகச் சிக்கிக்கொண்டார். 

கனிமொழி

ஆனந்த் குரோவர் கர்ஜனை!

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குத் தொடங்கியபோது, சி.பி.ஐ சார்பில் யு.யு.லலித் நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றதையடுத்து, 2ஜி வழக்கை சி.பி.ஐ சார்பில் நடத்த புதிய வழக்கறிஞர் தேர்வு நடைபெற்றது; மூன்று வழக்கறிஞர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் கேட்டது. கே.கே.வேணுகோபால், “மூன்று வழக்கறிஞர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கவில்லை; மாறாக, ஆனந்த் குரோவர் என்ற ஓரே பெயரை மட்டும்தான் பரிந்துரைத்தார். உச்ச நீதிமன்றம் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு, 2ஜி வழக்கைத் தொடர்ந்து நடத்த ஆனந்த் குரோவரை சி.பி.ஐ.யின் வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டது. ஆனந்த் குரோவர் இடதுசாரிச் சிந்தனையாளர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக திறம்பட பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர். ஒரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பல வழக்குகளை நடத்திப் புகழ் பெற்றவர். அதுபோல, பொருளாதாரக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.  

கறார் நீதிபதி ஓ.பி.சைனி! 

டெல்லியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி.சைனி, கொஞ்சமும் ஈவு இரக்கம் காட்டாமல் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார். சி.பி.ஐ 80 ஆயிரம் பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையை 2011-ம் ஆண்டு தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை 2014-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2ஜி மெயின் வழக்கு, அதன் கிளை வழக்குகளான, கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி பணம் வந்த வழக்கு, ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு என அனைத்தையும் நீதிபதி ஓ.பி.சைனிதான் விசாரித்தார். ‘டே டூ டே’ விசாரணை என்ற அடிப்படையில், வாரத்தின் ஆறு நாள்கள் விசாரணை நடைபெற்றது.  குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஓரிரு முறை ஆஜராகாமல் டிமிக்கி கொடுக்க நினைத்தபோது, ‘ஜாமீனை ரத்து செய்துவிடுவேன்’ என்று சாட்டையடி கொடுத்தார். நீதிபதியின் இந்தக் கறார்... எந்த இடத்திலும் தளரவில்லை; அதனால், வழக்கு வேகமாக நடைபெற்றது. அனைத்துக் கட்டங்களையும் தாண்டி, 2015 ஏப்ரல் 15-ம் தேதி இறுதிவாதம் தொடங்கியது. அதே ஆண்டு, நவம்பர் மாதம் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிகாரி ஷாகித் உஸ்மான் பால்வா, கலைஞர் டி.வி. சரத் ரெட்டி, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் ஆஜராகி இருந்தனர். ‘உடல்நலம் சரியில்லை’ எனச் சொல்லி ஆ.ராசா அப்போது ஆஜராகவில்லை. அன்றைய தினம், நீதிபதி ஓ.பி.சைனி, ‘எப்போது உங்கள் இறுதிவாதத்தை முடிப்பீர்கள்?’ என்று சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவருக்குப் பொறி வைத்தார். நீதிபதி சைனியின் கேள்விக்குப் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்ன வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘இந்த மாத இறுதிக்குள் என்னுடைய வாதத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்’ என்றார். 

கனிமொழிக்கு கருணை காட்டாத உச்ச நீதிமன்றம்!

கனிமொழி

2015-ம் ஆண்டு, கனிமொழி உச்ச நீதிமன்றத்தை அணுகி, ‘தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கேட்டு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘2ஜி வழக்கில், என்னைச் சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ சேர்த்துள்ளது; குற்றம்சாட்டப்பட்ட ஒருவர்மீது உறுதியான சந்தேகம் இருந்தால் மட்டுமே குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட வேண்டும்; நான் துளி அளவு தவறு செய்ததற்கான ஆதாரம்கூட இல்லை; எனவே, என்மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை ரத்துசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதேபோன்ற மனுவை ஷாகித் உஸ்மான் பால்வாவும் தாக்கல் செய்தார். ‘ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் கனிமொழி இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருதரப்பு சாட்சி விசாரணை முடிந்துவிட்டது. இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் அதை முடிக்க சி.பி.ஐ சார்பில் திட்டமிட்டுள்ளேன். இந்த நிலையில், இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது’ என்று வாதிட்டு வெற்றிபெற்றார். அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட, ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி, ரோஹிண்டர் நார்மன் ஆகியோர், ‘வழக்கில் தீர்ப்பு வரும்காலம் நெருங்கிவிட்டது; இந்த நிலையில், இதில் எந்தவிதமான இடைக்கால உத்தரவோ, விடுதலையோ அளிக்க முடியாது. கனிமொழி, ஷாகித் உஸ்மான் பால்வா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்கும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகு, இதில் தொடர்புடையவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தனர். 

தொடரும்... 

https://www.vikatan.com/news/coverstory/111110-tihar-prison-for-raja-kanimozhi-the-story-of-2g-scam-chapter-3.html

  • தொடங்கியவர்

நீதிமன்றத்தை அதிரவைத்த ஆ.ராசா!, இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை!, 2ஜி தீர்ப்பு: பூதமா... புஸ்வாணமா?, அத்தியாயம் - 4

 
 

2ஜி ஊழலின் கதை!

2ஜி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஆ.ராசாவை துளைத்தெடுத்தன; 2ஜி விசாரணைகளில் ஆ.ராசாவை விசாரணை அமைப்புகள் அலைக்கழித்தன; 2ஜி கேள்விகளை முன்வைத்து, ஊடகங்கள் ஆ.ராசாவை ஓடஓடத் துரத்தின! இவை அனைத்துக்கும், 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில், நேர்த்தியாகப் பதிலடி கொடுத்தார் ஆ.ராசா! வழக்கின் தீர்ப்பு ராசாவுக்குச் சாதகமாக இருக்குமா... பாதகமாக அமையுமா? என இப்போது உறுதியாகச் சொல்லமுடியாது; ஆனால் நீதிமன்றத்தில், ‘ஆ.ராசாவின் வாதங்கள் எழுப்பிய கேள்விகளும், தன்பக்க நியாயத்தை ஆணித்தரமாக அவர் எடுத்துவைத்த விதமும் மிகச்சிறப்பாக இருந்தது’ என உறுதியாகச் சொல்ல முடியும்!

 

raja_14142.jpg 

சி.பி.ஐ இறுதிவாதம்! 

2015 டிசம்பர் 22-ம் தேதி சி.பி.ஐ, 2ஜி வழக்கில் தனது இறுதிவாதத்தை நடத்தியது. சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், சி.பி.ஐ-யின் வாதங்களை நீதிமன்றத்தில் அடுக்கிக்கொண்டே போனார்; அதில், உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2ஜி வழக்குக்குத் தொடர்பான வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டினார்; அதன்பிறகு, ஆ.ராசாவின் குற்றங்கள் என்று ஆனந்த் குரோவர் பட்டியல் வாசித்தார்.

 1.மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ‘முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை’ கொடுத்தார்; அது இயற்கை நீதிக்கு எதிரானது! 

 2.‘கட்-ஆஃப்’ தேதியில் மாற்றம் செய்தார்; அது, தொலைத் தொடர்புத்துறை விதிமுறைகளுக்கு மட்டும் அல்ல; சட்டப்படியும்-பொதுவான தார்மிக நெறிகளுக்கும் எதிரானது! 

 3.பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தி உள்ளார்.

 4.அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக தேசிய தொலைத்தொடர்புக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும், விதிமுறைகளையும் ஆ.ராசா சரிவரக் கடைப்பிடிக்கவில்லை. 

 5.அலைக்கற்றை எவ்வளவு உள்ளது? என்பதை முறைப்படி ஆராயாமல் தன்னிச்சையாக அவர் எடுத்த நடவடிக்கையால்தான் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது

 6.‘யூனிடெக்' நிறுவனத்துக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டு, அதற்குச் சாதகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஆ.ராசா வழங்கியுள்ளார். 

இவைதாம் சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் பிரதானமாக ஆ.ராசா மீது கடுமையாகக் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். அதோடு, அவர் சி.பி.ஐ-யின் இறுதிவாதத்தை முடித்துக்கொண்டார். அவற்றைப் பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி ஷைனி, “குற்றம்சாட்டப்பட்டோர் அவர்களது இறுதிவாதங்களை 2016 பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கலாம்” என தேதி கொடுத்தார்.

கனிமொழி இறுதிவாதம்!

ராஜாத்தி அம்மாள்,கருணாநிதி, கனிமொழி, வசந்தி ஸ்டான்லி

கனிமொழி, ஆ.ராசா, ரிலையன்ஸ் நிறுவனங்களின் இறுதிவாதம் தொடங்கியது. கனிமொழி தனது இறுதிவாதத்தில், “கலைஞர் தொலைக்காட்சியில் இரண்டு வாரங்கள் மட்டுமே நிர்வாகப் பொறுப்பில் இருந்தேன்; என்னிடம் வெறும் 20 சதவிகிதப் பங்குகள் மட்டுமே இருந்தன; வியாபார அடிப்படையில் வேறு சில தனியார் நிறுவனங்களிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சி கடன் வாங்கியதும், அதைத் திருப்பிக் கொடுத்ததற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று குறிப்பிட்டார். 

அதிரவைத்த ஆ.ராசாவின் வாதம்! 

ஆ.ராசா தனது இறுதிவாதத்தில், தனது வாதத் திறமையால் நீதிமன்றத்தை அதிரவைத்தார்; நீதிபதியை சிரிக்கவைத்தார்; நம்பிக்கையாக தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார். குறிப்பாக, சி.பி.ஐ இறுதி வாதம் நடந்தபோது சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களை ராசா தகர்த்தெறியும் வகையில் தன்பக்க நியாயத்தை எடுத்துரைத்தார்!  

ஆ.ராசா

 1.அலைக்கற்றை எவ்வளவு உள்ளது என்பதை அறிந்தபிறகுதான், அதை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை மறைத்து சி.பி.ஐ வழக்கறிஞர் வாதிடுகிறார். 

 2.சி.பி.ஐ வழக்கறிஞரின் வாதம், சட்டத்தை வளைத்து, குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் என்ற தொனியில் மட்டுமே இருக்கிறது; மாறாக, ஆவணங்களில் அடிப்படையிலான - சட்டப்படியான - வாதங்களாக அவை இல்லை. 

 3.நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்களில் உள்ள விவரங்களை மறைத்து - தவறான தகவலைத் தெரிவித்து-நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த சி.பி.ஐ வழக்கறிஞர் முயற்சி செய்துள்ளார் என்று குறிப்பிட்டார். 

ஆ.ராசாவின் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டதும், கடுப்பான சிபிஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், “எனக்கே... சட்டம் சொல்லித் தருகிறீர்களா?! நான் ஒரு நேர்மையான வழக்கறிஞர்” என்றார்!  அதற்குச் சட்டெனப் பதிலளித்த ராசா, ‘நீங்கள் பெரிய நீதிமன்றங்களில் வாதிடும் மூத்த வழக்கறிஞராக இருக்கலாம்; அதற்காக, எனக்கெதிராகக் கண்மூடித்தனமாக நீங்கள் எடுத்துவைக்கும் பொய்யான தகவல்களை, ‘சரி’ என ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்க என்னால் முடியாது; எனக்கும் சட்டம் தெரியும்; நானும் விசாரணை நீதிமன்றங்களில் வழக்கறிஞர் தொழில் செய்தவன்தான்!” என்றார். ஆ.ராசாவின் இந்த அதிரடியில் மேலும் ஆத்திரமடைந்த ஆனந்த் குரோவர், ‘எனக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது' என்றார். அதற்கு ராசா பதில் சொல்வதற்குள் குறுக்கிட்ட நீதிபதி ஷைனி இருவரையும் சமாதானம் செய்தார். 

கலைஞர் டி.வி-யோடு சம்பந்தம் இல்லை! 

இறுதிவாதம் முடிந்ததையடுத்து ஒவ்வொருவரும் கூடுதல் ஆவணங்களை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்தனர். ஆ.ராசா 184 பக்கங்களில், தனது பதில்களை 2017 ஏப்ரல் 25-ம் தேதி தாக்கல் செய்தார். அதில், 

 1.ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தொழில் போட்டியில் எதிர் எதிரானவை. அப்படியிருக்கும்போது, அவை பரஸ்பரம் ஒற்றுமையாக இருந்து ஒரே நேரத்தில் குற்றச்சதியில் எவ்வாறு ஈடுபட முடியும்? அப்படிச் செய்திருந்தால், ஒரு நிறுவனம் வளர்ச்சியும்...  மற்றொரு நிறுவனம் வீழ்ச்சியும் அடையும்; அப்படிப்பட்ட வீழ்ச்சியைச் சந்திக்க எந்த நிறுவனமாவது முன்வருமா? 

 2.ஏலம் நடத்தாமல், ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் உரிமம்’ என்ற அடிப்படையில், நான் செயல்பட்டதால், அரசுக்கு நட்டம் என்பது குற்றச்சாட்டு! ஆனால், இந்த விதியின் கீழ் உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் (டெல்லி வட்டம் தவிர), ஒரே நேரத்தில் அலைவரிசை வழங்கப்பட்டது. அதில், அரசுக்கு வருவாயும் அலைக்கற்றை பயன்பாடும் உறுதி செய்யப்பட்டது. இதில் எனது அதிகாரத்தை நான் எங்கே தவறாகப் பயன்படுத்தி உள்ளேன்?

 3.கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரராகவோ, நிர்வாகியாகவோ நான் இல்லாதபோது, தனியார் நிறுவனங்களுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனைகளை, எனக்கு வழங்கப்பட்ட லஞ்சமாக எப்படிக் கருதமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

kanimozhi_prime_minister_rasa_14368.jpg

ராசா சொன்ன யானை கதை!

தனது இறுதிவாதத்தில் ராசா, “2ஜி அலைக்கற்றை வழக்கை போதிய புரிதலின்றி சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. கண் பார்வை இல்லாத நாலுபேர் யானையைத் தொட்டுப் பார்த்து, யானை எப்படி இருக்கும் என விவரித்ததைப்போல, 2ஜி வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது. யானையின் காலை தொட்டவர்... அதைத் தூண் என்றும், வாலைத் தொட்டவர்... அதைக் கயிறு என்றும், காதை தொட்டவர்... அதை முறம் என்றும், உடலைத் தொட்டவர்... அதை சுவர் என்றும் கூறியதாக ஒரு கதை உள்ளது. அதுபோல, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய புரிதலின்றி, இந்த விவகாரத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம்(சிவிசி), மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், நாடாளுமன்றக் கூட்டுக் குழு, சிபிஐ ஆகியவை அணுகியுள்ளன. அதனால்தான், இந்த வழக்கு இத்தனை தீவிரமாகப் போனது!” என்றார். இந்தக் கதையை ராசா நீதிமன்றத்தில் சொன்னபோது, சிறப்பு நீதிபதி சைனி பலமாக சிரித்தார்; நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்களும் சிரித்தனர். அதன்பிறகுதான், 2ஜி வழக்கில் தீர்ப்பெழுதும் தேதியை முடிவு செய்யும் முடிவுக்கு நீதிபதி ஓ.பி.ஷைனி வந்தார்! 

தொடரும்... 

https://www.vikatan.com/news/coverstory/111239-how-araja-stunned-the-cbi-court-the-story-of-corruption-2g-verdict-chapter4.html

  • தொடங்கியவர்

2ஜி வழக்கைக் கலக்கிய வாக்குமூலங்கள், இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை, 2ஜி தீர்ப்பு: பூதமா... புஸ்வாணமா? அத்தியாயம் - 5

 
 

ராசா, கனிமொழி

17,60,00,00,00,000 கோடி நஷ்டம்; தனிப்பட்ட நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன; ‘முதலில் வருபவர்க்கே முன்னுரிமை’ என்ற முடிவு தொலைத்தொடர்பு கொள்கைக்கு எதிரானது” என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்தியாவை அதிரவைத்தன. உலகளவில் இந்தியா ஊழல் நாடாக அடையாளம் காட்டப்பட்டது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல... அதன் அதிர்வுகள் குறைய ஆரம்பித்தன. அதன்பிறகு நடத்தப்பட்ட 2ஜி ஏலத்தின் மூலம், பழைய சி.ஏ.ஐ ரிப்போர்ட் கேள்விக்குள்ளானது. அது குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பை வலுப்படுத்தியது. இப்படி, முன்னுக்குப்பின் முரணான கேள்விகளுடன் நகர்ந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகப்போகிறது. தீர்ப்பு எப்படி வந்தாலும், அது இந்தியாவின் முக்கியத் தலைப்புச் செய்தியாக இருக்கும். இந்த நேரத்தில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? அந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் சொன்ன வாக்குமூலங்கள் என்ன? 

 

இவர்கள் குற்றவாளிகளா?

2ஜி ஊழல் டவர்I.அரசியல்வாதிகள்

 1.ஆ.ராசா-முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்(தி.மு.க)
 2.கனிமொழி-மாநிலங்களவை உறுப்பினர் - தி.மு.க

II.அரசு அதிகாரிகள்

 1.சித்தார்த் பெகுரா-முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர்
 2.ஆர்.கே.சந்தோலியா-ராசாவின் தனிச் செயலாளர்.

III.கார்ப்பரேட் முதலாளிகளும் நிர்வாகிகளும்!

 1.சஞ்சய் சந்திரா-எம்.டி, யுனிடெக் வயர்லெஸ்
 2.கௌதம் தோஷி-எம்.டி, ரிலையன்ஸ், அனில் திருபாய் அம்பானி குரூப்
 3.ஹரிநாயர்-மூத்த நிர்வாகி, ரிலையன்ஸ், அனில் திருபாய் அம்பானி குரூப்
 4.சுரேந்திர பிபரா-மூத்த நிர்வாகி, ரிலையன்ஸ், அனில் திருபாய் அம்பானி  குரூப்
 5.வினோத் கோயங்கா-எம்.டி, டி.பி.ரியாலிட்டி மற்றும் ஸ்வான் டெலிகாம்
 6.ஷாகித் உஸ்மான் பால்வா-டி.பி.ரியாலிட்டி நிறுவனம் மற்றும் ஸ்வான் டெலிகாம்
 7.ஆசிப் பால்வா-இயக்குநர், குஷேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை
 8.ராஜிவ் பி. அகர்வால்-இயக்குநர், குஷேகான் பழங்கள் மற்றும்  காய்கறிகள் விற்பனை நிறுவனம்
 9.சரத்குமார்- எம்.டி, கலைஞர் தொலைக்காட்சி
 10.ரவிராய்-இயக்குநர், எஸ்ஸார் குருப்
 11.விகாஸ் ஷரப்-இயக்குநர், ஸ்டேரட்டஜி அண்டு பிளானிங், எஸ்ஸார் குரூப்
 12.கெய்ட்டனர்-லூப் டெலிகாம்
 13.கிரண் கெய்ட்டன்-லூப் டெலிகாம்
 14.கரிம் மொரானி- சினியூக் பிலிம்ஸ்
 15. தயாளு அம்மாள் - கருணாநிதியின் மனைவி. 
 16.பி.அமிர்தம். 

IV.நிறுவனங்கள்

 1.    யூனிடெக் வயர்லெஸ்
 2.    ரிலையன்ஸ் டெலிகாம்
 3.    ஸ்வான் டெலிகாம்
 4.    லூப் டெலிகாம்
 5.    லூப் மொபைல் இந்தியா
 6.    எஸ்ஸார் டெலி ஹவுஸிங்
 7.    எஸ்ஸார் குரூப்

இவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா? என்பது நாளை தீர்ப்பில் தெரியவரும். ஆனால், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை இவர்களைத்தான் குற்றம்சாட்டுகிறது. 

வழக்கைக் கலக்கிய வாக்குமூலங்கள்! 

2ஜி வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியது குறிப்பிட்ட சிலரின் வாக்குமூலங்கள்தாம். 

ஆசிப் பால்வா- ஸ்வான் டெலிகாம்/குஷேகான் நிறுவனங்களின் இயக்குநர், டி.பி.குரூப் நிறுவனத்தின் செயல் இயக்குநர். 

2ஜி அலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற உடன், குஷேகான் நிறுவனத்திற்கு 200 கோடியை கடனாகக் கொடுத்தோம். அதற்கான முறையான ஒப்பந்தங்கள் எதுவும் போட்டுக் கொள்ளவில்லை. ஏனென்றால், டி.பி.குரூப் நிறுவனங்களில் என்னைப்போல், வினோத் கோயங்காவும் ஒரு நிர்வாகி. அதனால், முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் நம்பிக்கையின் பேரில் 200 கோடியை குஷேகான் நிறுவனத்திற்கு வழங்கினோம். 

kanimozhi_for_final_1_16174.jpgகனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர்(தி.மு.க), இயக்குநர் மற்றும் பங்குதாரர் கலைஞர் தொலைக்காட்சி

சன் தொலைக்காட்சியில், எனது தாயார் தயாளு அம்மாளுக்குப் பங்குகள் இருந்தன. அதை விற்றபோது, அவருக்குக் கிடைத்த பணத்தில், 5 கோடியை எனக்குக் கொடுத்தார். அதில், இரண்டறைக் கோடியை கலைஞர் தொலைக்காட்சியில் நான் முதலீடு செய்தேன்; வெறும் 13 நாள்கள்தான் நான் அந்தத் தொலைக்காட்சியின் இயக்குநர் பொறுப்பில் இருந்தேன். எனது தந்தை கருணாநிதி தி.மு.க தலைவராக இருப்பதால், அந்தக் கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்கள், அமைச்சர்கள் என அனைவரையும் பல ஆண்டுகளாகத் தெரியும். அந்தவகையில் மட்டும்தான் ஆ.ராசாவையும் எனக்குத் தெரியும்.

சாதிக் பாட்ஷா (மரணமடைந்துவிட்டார்), கிரீன் ஹவுஸ் புரோமோட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர். 

சாதிக் பாட்ஷாசாதிக் பாட்சாவின் நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரியுடைய மகன் பரமேஸ்குமார், ராசாவின் மூத்த சகோதரர் கலிய பெருமாள் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். சாதிக் பாட்சா தனது வாக்குமூலத்தில், ஆ.ராசாவை 1993-94 காலகட்டத்தில் இருந்தே தெரியும். 1996-ம் ஆண்டு தேர்தலில் ஆ.ராசாவுக்காகப் பணியாற்றினேன். டெல்லியில் உள்ள ராசாவின் வீட்டில் வைத்தும், சென்னை அரசு விருந்தினர் மாளிகையிலும் ஆ.ராசாவைத் தொடர்ந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

ராசாவின் நம்பிக்கைக்குரிய தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியாவும் எனக்கு நல்ல நெருக்கம். கோவை மற்றும் நீலகிரியில் உள்ள சில பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் டிரான்ஸ்ஃபர் தொடர்பாக சந்தோலியாவைச் சந்தித்துள்ளேன். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் கோயங்கா, ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ராசா இருந்தபோது அவரைச் சந்திக்க வருவார்கள். அப்போது அவர்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்களை மும்பையில் ஒருமுறை அவர்கள் அலுவலகத்தில் வைத்தும், இரண்டு, மூன்று முறை சென்னையில் வைத்துச் சந்தித்துள்ளேன். ஷாகித் உஸ்மான் பல்வா சென்னையில், தமிழகத்தின் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய வீட்டில் வைத்து சந்தித்தபோது நானும் ராசாவும் உடனிருந்தோம். 

(2010-ம் ஆண்டு இறுதியிலேயே 2ஜி வழக்கில் சி.பி.ஐ ரெய்டு மற்றும் விசாரணைகள் இறுக ஆரம்பித்தன. இந்தநிலையில் 2011 மார்ச் மாதம் 16-ம் தேதி சாதிக் பாட்சா மர்மமான முறையில் அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார்.) 

மனோகர் பிரசாத், இணை நிர்வாக இயக்குநர், ஜெமினி நிறுவனம் 

ஜெமினி தொலைக்காட்சியில் சரத்குமார் பணியாற்றிய காலத்திலிருந்து எனக்கு அவரைத் தெரியும். அந்தத் தொடர்பின் மூலம் கலைஞர் தொலைக்காட்சியுடன் விளம்பர ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம். மேலும், ஜெமினி நிறுவனம் இதுபோல் மிகப் பெரிய விளம்பர ஒப்பந்தத்தை வேறு எந்தத் தொலைக்காட்சியுடனும் செய்ததில்லை. இதன்பொருட்டு சரத்குமார் தன்னைச் சந்திக்க வரும்போது, அவருடன் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் ராஜா சங்கரும் வந்திருந்தார். இதுபோலவே, யுனைடெட் ஸ்பிரிட் நிறுவனம் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ்  நிறுவனமும் வேறு எந்தத் தொலைக்காட்சியுடனும் இத்தனை பெரிய விளம்பர ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால், கலைஞர் தொலைக்காட்சியுடன் மட்டும் இதுபோன்ற ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டன என அந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் அளித்த சாட்சியத்தில் குறிப்பிட்டனர். 

ஏ.கே.ஸ்ரீவத்சவா, துணை இயக்குநர், தொலைத் தொடர்புத் துறை. 

10.01.2008 அன்று, அமைச்சர் ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து, “உடனடியாக 2ஜி உரிமத்தை வழங்க வேண்டும்; நான்கு கவுன்டர்கள் அமைத்து அதில் முதலில் வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்க வேண்டும்’’ என்றார். அதற்கு நான் உள்பட மற்ற அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தோம். உடனே, சந்தோலியா, ‘தொலைத் தொடர்புத் துறை செயலாளர் அறைக்கு வரும்படி என்னை அழைத்தார்; நான் அங்கு போனதும், இது அமைச்சரின் உத்தரவு; அவருடைய தனி உதவியாளர் சந்தோலியா சொல்வதுபோல், உடனடியாக அலைக்கற்றை உரிமத்தை வழங்குங்கள்; அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க நமக்கு அதிகாரம் இல்லை” என்று தொலைத்தொடர்புத் துறை செயலாளர் பெகுகுரா என்னிடம் கூறினார். அதன்பிறகுதான் ஆர்.கே.சந்தோலியா சொன்னபடி 13 நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கினோம்!  

ஆசிர்வாதம் ஆச்சாரி, ஆ.ராசாவின் உதவி தனிச் செயலாளர்

ஆசிர்வாதம் ஆச்சாரி1999-ல் இருந்து 2008-வரை அமைச்சர் ஆ.ராசாவுடன் பல்வேறு வகைகளில் பணியாற்றி உள்ளேன். அமைச்சர் ராசாவுக்கான நாடாளுமன்ற அவைக் குறிப்புகள் மற்றும் கடிதங்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் தயார் செய்து கொடுப்பது என் வேலை. ஆ.ராசா சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, ஷாகித் உஸ்மான் பல்வா போன்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் அவரைச் சந்திக்க வருவார்கள். தங்களுடைய திட்டங்களுக்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழ் கேட்பார்கள். இவர்களில் வினோத் கோயங்கா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர், ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான பின்னும் அவரை தொடர்ந்து சந்திந்து வந்தார்கள். ஏனென்றால், அப்போது அவர்கள் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து, தொலைத் தொடர்புத் துறையிலும் அடியெடுத்து வைத்திருந்தனர்.

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டிற்கு அடிக்கடி வருவார். கனிமொழியும் ராசாவும் தொடர்ச்சியாக தொலைபேசியிலும் பேசிக்கொள்வார்கள். தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர், கலைஞர் தொலைக்காட்சியைத் தொடங்கிய போது, மத்திய ஒலிபரப்புத் துறையிடம் அதற்கு அனுமதி வாங்க சரத்ரெட்டி ராசாவை சந்தித்தார். அப்போது, ராசா, அன்றைய மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் அவருடைய தனிச் செயலாளர் மனோஜ்குமார் அகர்வால் ஆகியோரிடம் தொலைபேசியிலேயே பேசி அதற்கான அனுமதியை வாங்கினார். இந்த வாக்குமூலங்கள்தான் ராசாவுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியது; இந்த வழக்கை மிகப்பெரிய ஊழல் வழக்காக அடையாளப்படுத்தியன!

தொடரும்...

https://www.vikatan.com/news/coverstory/111365-the-story-of-corruption-what-will-become-in-2g-judgement-chapter-5.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.