Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுமணம்!

Featured Replies

மறுமணம்!
 
 
E_1516871852.jpeg
 
 
 

மொட்டை மாடியில் அமர்ந்து, நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்த சவிதா, தன் தோளில் கை படவே, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். பால் டம்ளருடன் நின்றிருந்தாள், அம்மா.
''என்னம்மா மாடிக்கே வந்துட்ட... ஏதாவது பேசணுமா...'' என்றாள் அமைதியாக!
அம்மா என்ன பேசப் போகிறாள் என்பது அவளுக்குத் தெரியும்.
''தனியாக பேச என்ன இருக்கு சவி... இந்த வீட்டுல எப்பவும் நீ தனியா தானே இருக்கே... எல்லார்கிட்ட இருந்தும் உன்னை நீ தனிமைப்படுத்திக்க ஆரம்பிச்சு வருஷம் ஒண்ணாச்சு...'' என்றதும், அமைதியாக அம்மாவை பார்த்தாள், சவிதா.
''இல்ல... அந்த பையன் அருண் வீட்டிலிருந்து போன் பண்ணிட்டே இருக்காங்க... என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. உங்கண்ணன் வேற, உன்கிட்ட பேசச் சொல்லி என்னை தொந்தரவு செய்றான். நல்ல இடம்மா... உன்னோட எதிர்காலத்த கொஞ்சம் யோசி; மாட்டேன்னு சொல்லிடாத...'' என்றாள்.
''இப்ப, இது அவசியமான்னு தோணுதும்மா...'' என்றாள், நா வரள!
ஆதரவாய் அவள் அருகில் அமர்ந்ததும், அம்மாவின் மடி மீது கவிழ்ந்தாள் சபிதா.
ரகுவை எப்படி மறக்க முடியும்... நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும், காதல் திருமணத்தை விடவும் பலமடங்கு அன்பை பொழிந்தவன்; இரண்டு ஆண்டுகள் அழகாய் குடும்பம் நடத்தியவன், ஒரு விபத்தில் இறந்து போய், மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன.
வாழ்க்கையின் அத்தனை ஆதாரங்களும் நிறமிழந்து போக, நடைபிணமானாள், சவிதா. வேலைக்கு போக, திரும்பி வீட்டிற்கு வந்தால், மணிக்கணக்காய் மொட்டை மாடியில் அமர்ந்து, வெறித்து பார்த்தபடி அமர்ந்திருப்பது என்று அவள் வாழ்க்கையை முடக்கிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய தனிமை, வீட்டில் எல்லாருக்கும் மிகுந்த மன வருத்தத்தை தந்தாலும், அவளுடைய மனதை மாற்றுவதற்காக மிகுந்த பிரயத்தனப்பட்டு, முடிவில் கடுமையாக பேசத் துவங்கினர்.
''எனக்கும் வயசாகிட்டே போகுது; உங்கண்ணன், அவன் குடும்பம், குட்டின்னு செட்டிலாகிட்டான். அதை குறையா சொல்லல... நீ வேலைக்கு போறதால பொருளாதாரத்துல வேணா தன்னிறைவா இருக்கலாம்... ஆனா, வயசானப் பின் வரப்போற தனிமைய எப்படி தாங்குவே...''
''ரகுவை மறக்க முடியலம்மா... அவரோட இடத்துல என்னால இன்னொருத்தர யோசிக்க முடியல...'' விசும்பிய சவிதாவை, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள், அம்மா.
''எல்லாம் முடியும்மா... உங்க அப்பா போன பின், என்னால சுவாசிக்கவே முடியாதுன்னு நினைச்சேன்; ஆனா, 20 ஆண்டுகளா வாழ்ந்துட்டு தானே இருக்கேன்... எல்லாத்தையும் கடந்து வர்ற மன உறுதியை ஆண்டவன் தருவாரு...
''எல்லாத்துக்கும் மேல, அந்த பையன் அருண், உன்னை மாதிரியே, ஒரே வருஷத்துல மனைவிய இழந்தவர். உங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரோட துணை இன்னொருத்தருக்கு ஆறுதலா இருக்கும். மறுமணம் தப்பில்ல சவிதா... நாமயென்ன கற்காலத்துலயா இருக்கோம்...'' என்ற அம்மாவை, வருத்தமாய் பார்த்தாள்.
''மறுமணம் தப்புன்னு சொல்லலம்மா... அதை ஏத்துக்கும்போது பழைய நினைப்பையெல்லாம் துாக்கி போடணும்கிற ஒரு நிஜம் வரும் பாருங்க, அந்த வலி யாருக்கும் வரக்கூடாது. ஆனாலும், உங்களுக்காகவும், உங்க வார்த்தைக்காகவும் சம்மதிக்கிறேன்...'' என்றாள் வெறுமையாக!
சந்தோஷத்துடன், அவளை கட்டிக் கொண்டாள், அம்மா.
''சவிதா... என்ன... இட்லிக்கு, தேங்காய் சட்னி பண்ணியிருக்க... எனக்கு தேங்காயே பிடிக்காது...'' டைனிங் ஹாலில் இருந்து சத்தம் போட்டான், அருண். டிபன் பாக்சில் சாதத்தை அடைத்துக் கொண்டிருந்த சவிதா, வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள்.
''உங்களுக்கு தேங்காய் பிடிக்காதுன்னு எனக்கெப்படி தெரியும்... பொதுவா எல்லா இடத்துலயும் இட்லிக்கு, தேங்காய் சட்னி தானே அரைப்பாங்க. அதை, மனசுல வெச்சுதான் இதை செஞ்சேன். அடுத்த தரம் என்ன வேணும்ன்னு சொல்லுங்க, செஞ்சு வச்சுடறேன்,'' என்றாள் புன்முறுவலுடன்!
''எல்லாம் என் தலையெழுத்து; பாரதி இருந்த வரை, இந்த வீட்டில யாருக்கு என்ன வேணும்ன்னு பாத்து பாத்து செய்வா... அவளை மாதிரி குறிப்பறிஞ்சு சேவை செய்ய முடியாது,'' என்றாள், ஹாலில் உட்கார்ந்திருந்த அருணின் அம்மா.
சவிதாவிற்கு ரகுவின் நினைவு வந்தது. ஒருநாள், தலை வலிக்கிறது என்று எதுவும் சமைக்காமல் படுத்து விட்டாள். ரகு தானே தோசை வார்த்து, வெங்காய சட்னி செய்து, இவளை எழுப்பி ஊட்டிவிட்ட கரிசனம், மனதில் மின்னலாய் தோன்றி மறைந்தது.
அம்மாவின் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாமல் அமர்ந்திருந்த அருண், ரகுவின் இடத்தில் பொருந்தவில்லை.
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அடுத்தடுத்த நகர்தலுக்கான மூலமாய் அமைகிறது என்பது நிஜமான கூற்று தான். விரும்பியோ, விரும்பாமலோ சவிதா எடுத்து வைத்த அடிகள், அவளுக்கான பிடிமானத்தை தந்திருக்கிறது என்றால் மிகையில்லை.
அன்று கடற்கரைக்கு வந்திருந்தனர். சவிதாவும், அருணும்!
கொஞ்சம் துாரமாய் அமர்ந்து, அலைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள், சவிதா. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், மணல் பரப்பில் மோதி விளையாடும் அழகை தள்ளி நின்று ரசிப்பதே அவளுக்கு சுகானுபவம்!
''என்ன சவிதா, இப்படி தள்ளி உட்கார்ந்து கடலை வெறிச்சுப் பாத்துட்டு இருக்கே... வா... அலையில் கால் நனைக்கலாம்...'' என்றான், அருண்.
புன்னகையுடன், ''எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்ல. குதிச்சு விளையாடுற அலையோட அழகை தள்ளி நின்னு, கண் இமைக்காம ரசிக்கணும்; அதுதான் என்னோட விருப்பம். அது மட்டுமில்லாம, காலை நனைச்சுட்டு மறுபடியும் மணல்ல வந்து உட்கார்ந்தா டிரஸ் எல்லாம் நனைஞ்சு, 'நசநச'ன்னு ஆயிடும்,'' என்றாள்.
அவளை ஒரு மாதிரியாய் பார்த்து, ''எனக்கு ஏமாற்றமா இருக்கு சவிதா... எனக்கும், பாரதிக்கும் கல்யாணம் ஆனதும், நாங்க முதல்ல தனியா வந்ததே கடற்கரைக்கு தான். தண்ணிய பாத்தா, அவ குழந்தையா மாறிடுவா. வாரத்துல ஒரு நாளாவது அவளுக்கு கடற்கரைக்கு வந்தாகணும். ஒருநாள், நைட் பத்து மணிக்கு, கடற்கரைக்கு போயாகணும்ன்னு அடம் பிடிச்சு, அலையில கால் நனைச்சுட்டு போனா...
''அது மட்டுமில்ல, அவ கடற்கரைக்கு வந்தா, இப்படி மங்குனி மாதிரி உட்கார்ந்து இருக்க மாட்டா... கடற்கரையில அவ தொலைச்ச செருப்புகளும், கொலுசுகளும் அளவே இல்லாதது. அதிகாலை பொழுதுல வர்ற அற்புதமான துாக்கம் மாதிரி, அவ, ஒரு சுகமான தாலாட்டு; அவளுடைய இடத்தை யாருமே நிரப்ப முடியாது.''
பாரதியின் நினைவில் அவன் கண்கள் பனித்தது. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள், சவிதா. அவள் மனதில் ஏமாற்றம் மட்டுமே மிகுந்திருந்தது.
'ரகு, என்னைப் பாத்தா உங்க பேவரிட் ஹீரோயின் மாதிரி இருக்கேன்னு என் பிரெண்ட்ஸ் எல்லாரும் சொல்றாங்க... நீங்க சொல்லுங்க, நான் அப்படியா இருக்கேன்...' ரகுவின் கழுத்தை கட்டி, ஊஞ்சலாடினாள், சவிதா.
'யார் சொன்னா, நீ அந்த ஹீரோயின் மாதிரி இருக்கேன்னு... சொன்னவங்களுக்கு கண் இல்லயா...' என்று ரகு சொன்னதும், சவிதாவின் முகம் சுண்டிப் போனது.
'ஏய் லுாசு... உடனே மூஞ்சி சுருங்குது பாரு... அந்த ஹீரோயின் எல்லாம், 'பாசிங் கிளவுட்' மாதிரி; அவங்க அழகெல்லாம் ஒப்பனையால வந்தது. ஆனா, என் நிஜ ஹீரோயின் உனக்கு ஈடாகுமா அவங்க அழகு...' என்று கூறி, இவள் மூக்கை பிடித்து திருகிய ரகுவின் நினைவை எப்படி கடந்து வர முடியும்!
அருணின் நண்பன் கல்யாண ரிசப்ஷனுக்கு செல்ல, தயாராகிக் கொண்டிருந்தாள், சவிதா.
''சவி... கிளம்பிட்டயா...'' என்று குரல் கொடுத்த அருண், மிதமான அலங்காரத்தில் வந்து நின்ற சபிதாவை பார்த்து, கொஞ்சமாய் அசந்து போனான்.
''ரியலி லுக்கிங் பியூட்டிபுல் சவி...'' என்றான், அவள் ஜிமிக்கியை ஒற்றை விரலால் சுண்டி!
''தேங்ஸ்!'' என்றாள்.
''நீ கொஞ்சம் பாரதி சாயல் தான்... என்ன, அவ உன்னை விட கொஞ்சம் நிறம் அதிகம். லேசா தெத்துப் பல் தெறிய, அவ சிரிச்சா அவ்வளவு அழகாய் இருக்கும். நீ நல்ல உயரம்... அவ நார்மல் ஹைட். அப்புறம்...'' அவன் அடுத்தடுத்து விவரித்த சில விஷயங்கள் சவிதாவை மனதிற்குள் கதற வைத்தது.
அவள் முகமாற்றமும், கண்களில் தெரிந்த கண்ணீரும் அவனுக்கு தன் பிழையை உணர்த்தியது.
''ஐயம் சாரி சவிதா... சரி, சரி கிளம்பு நேரமாச்சு...'' என்றான்.
''சாரிங்க நான் வரல... தலை வலிக்குது; நீங்க மட்டும் போயிட்டு வாங்க...'' என்றாள்.
''போதும் சவிதா, பொய் சொல்லாத... நான், உன்னை பாரதியோடு ஒப்பிட்டு பேசினதால தானே உனக்கு இந்த கோபம்... அவ, என் ஒய்ப் சவி... நான் நேசிச்ச முதல் பெண். எனக்கு எப்பவும் அவ ஸ்பெஷல் தான். இப்ப, அவ என்ன திரும்ப வந்து உன்கிட்ட போட்டி போடவா போறா... அப்பப்பா இந்த பொம்பளைங்களுக்கு புருஷன் விஷயத்துல இவ்வளவு பொறாமை கூடாது...'' என்று கூறி சிரித்தான்.
அவன் முகத்தையே கூர்ந்து பார்த்தாள், சவிதா.
'என் அந்தரங்கம் அவமானப்பட்டது உனக்கு பொறாமையாக மட்டும் தெரிகிறது...' என நினைத்தவள், ''அதெல்லாம் இல்லீங்க... நிஜமாவே தலை வலிக்குது; என்னை கம்பல் பண்ணாதீங்க...'' என்றாள்.
''போதும் சவி, கிளம்பு; என் பாரதி இப்படி, பிகு பண்ணவே மாட்டா...'' என்றான்.
''ஆமாம்; என் ரகுவும், என் மனசை புரிஞ்சுக்காம, எந்த விஷயத்துக்கும் என்னை கட்டாயப்படுத்த மாட்டாரு. ஆணும், பெண்ணும் சமம்ன்னு நினைக்க தயங்குற இந்த உலகத்துல, பெண்ணை, ஆண்களை விட உயர்ந்த பிறப்பா நினைச்ச உத்தமர். அவர் நிழல்ல இருக்குற கருப்பு கூட இயற்கை அவருக்கு இழைச்ச அநீதின்னு நினைப்பேன்; அத்தனை வெள்ளை மனசு அவருக்கு...'' சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
அருணின் முகம் கருத்தது. கோபத்தில் உதடு துடிக்க, அவளுக்கு காத்திராமல் கிளம்பிப் போனான்.
இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பியவன், அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உடையை மாற்றியவன், அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.
அடுத்து வந்த இரண்டு நாளும், அவசியத்திற்கு கூட அவளிடம் பேசவில்லை. சவிதாவிற்கு அவனுடைய கோபத்தின் சுவடை புரிந்து கொள்ள முடிந்தது.
மறுமணத்தில் கூட நறுமணம் வீசாத ஆண் மனம் அது. கணவனின் முதல் மனைவியை, வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததும், 'உன் அக்கா சாமி ஆயிட்டா... அவளை கும்பிட்டுக்கோ...' என்று சொல்லும் சமூகம், அதே உரிமையை பெண்ணுக்கு வழங்குமா என்ன... ஆணுக்கும், பெண்ணுக்குமான வலியின் சமத்துவத்தை புரிந்து கொள்ளாதவனிடம் பேசியென்ன லாபம் என்பது போல், தன் அம்மா வீட்டிற்கு சென்று வர ஆயத்தமானாள்.
''நான் அம்மா வீட்டிற்கு கிளம்பிட்டேன்... நீங்க கொஞ்சம் என்கூட வரணும்; இல்லாட்டி நமக்குள்ள ஏதும் பிரச்னையோன்னு எங்கம்மா துளைச்சு எடுப்பாங்க...'' பேக்கில் துணிகளை அடைத்து, ஜிப்பை போட்டபடி சொன்னாள்.
''ஏன், உன் ரகுவும் இப்படித்தான் உன்னை கொண்டு போய் விடுவாரோ...'' என்றான், நாக்கை கோணி எரிச்சல் மேவ!
''கண்டிப்பா இல்ல... ரகுவுக்கும், எனக்கும் ஒரு சின்ன மனத்தாங்கல் கூட வந்ததில்ல...''
''ஓஹோ... அப்ப, நாங்கதான் கெட்டவங்க... எப்ப, என் தாலிய கழுத்த குனிஞ்சு வாங்கிட்டயோ அப்பயே அந்த ரகுவோட நினைப்பை நீ கழட்டி வீசியிருக்கணும். அதை விட்டுட்டு அவனை நினைச்சுட்டே என் கூட வாழ்ந்திருக்கன்னு நினைக்கும்போது, அருவருப்பா இருக்கு...'' என்று அவன் கோபமாய் கத்த, கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள், சபீதா.
''இதே உணர்ச்சி எனக்குள்ளும் இருக்கும்ன்னு உங்களுக்கோ, உங்க அம்மாக்கோ ஏன் தெரியல... தெரியும்; ஆனா, அதை பத்தி நீங்க பெரிசா கவலைப்படல. ஏன்னா, நான் பொம்பளை... என் அந்தரங்கத்தை நீங்க அசிங்கம் பண்ணினாலும் நான் சிரிச்சுட்டே ஏத்துக்கணும் அப்படித் தானே...
''நீங்களும், நானும் நம்மோட துணையை இழந்தவங்க... நம்மோட பழைய வாழ்க்கையை பத்தி பேசற சுதந்திரம் உங்களுக்கு இருக்கிற மாதிரி எனக்கு இல்ல பாத்தீங்களா...'' என்று கேட்கவும், அடிபட்டவன் போல், நிமிர்ந்து நின்றான், அருண்.
''மறுமணம்ன்னா என்னன்னு தெரியுமா... மறுபடியும் மணக்க போற மனங்கள், மறுமணத்தில் இணையும்போது உடல் ஈர்ப்பை விட, மன ஈர்ப்பு அதிகமா இருக்கும். ஒருத்தருக்கொருத்தர் நண்பர்களாய் இருக்கணும். அப்படிப்பட்ட துணை வாய்ச்சாதான் மறுமணங்கள் ஜெயிக்கும். காயம்பட்ட ரெண்டு பேரும் ஆறுதல் தேட ஓரிடத்தில் கூடி, நம்மை அறியாம ஒருத்தரவொருத்தர் காயப்படுத்திக்க கூடாதில்லயா... அதான் போறேன்...'' என்றவள், பையை எடுத்து வெளியில் வந்தாள்.
வண்டியை ஸ்டார்ட் செய்தான்; பின்னால் ஏறிக் கொண்டாள்.
''ஓ.கே., இதான் உன் முடிவுன்னா, என்னோட முடிவையும் கேட்டுக்க... நாளைக்கு ஈவினிங் ஆபீஸ் முடிஞ்சதும், நான், அங்க வந்துடுவேன்; நீ, என் கூட கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்திடணும். இதை, உன் புருஷனா அதிகாரம் பண்ணி சொல்லல, உன்னோட நண்பனா சொல்றேன். ஓ.கே.,வா...'' என்றான் பக்கவாட்டில் திரும்பி!
அவர்கள் இருமனமும் மறுமணத்தில் இணைய, அந்த பயணம் சரியான பாதையில் செல்லத் துவங்கியது, இனிதாக!

http://www.dinamalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.