Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எத்தியோப்பிய எலியும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பிய எலியும் நானும்

எனது எத்தியோப்பிய வதிவிடத்தில் நீண்ட காலம் எலிகளும் இல்லை அவற்றின் தொல்லையும் இல்லை. சமீபத்தில் அவனோ அவளோ தெரியாது இந்துவோ கிறிஸ்தவமோ தெரியாது எலி ஒன்று வந்து சேர்ந்தது.
நிச்சயமாய் நாலுகால் எலிதான்.
பைட் பைப்பர் என்னும் குழலூதிக் கலைஞன் போல் எலிகளை இசையால் வசியம் பண்ணும் இசையாற்றல் எனக்கில்லை. ஜெர்மனியின் கீழச் சக்சோனியில் 13 ம் நூற்றாண்டில் தோன்றிய கிராமியக் கதையின் கதாபாத்திரமே பைட் பைப்பர்.

எலியை விவசாயிகளின் நண்பன் என்பார்கள். அதனாற்தான் என்னவோ பின்னே வந்த ஆரியக் கடவுள் பிள்ளையாரின் வாகனமாயும் வலம் வருகிறது.
“யானை” முகக் கடவுளுக்கு எலி வாகனம் என்று சில வட இந்தியர்கள் எத்தியோப்பியர்களுக்கு “அறிவியல்” விளக்கம் கொடுக்கும் போது நானும் கூடச் சிரித்திருக்கிறேன். சரி இருந்துவிட்டுப் போகட்டும். கிரேக்க தத்துவ ஞானி டியோஜீனஸ் கூறியது போல் “கடவுள்கள் இருக்கிறார்களா எனக்குத் தெரியாது. ஆனால் இருப்பது நல்லது” என்பது என் கருத்து.

எலியாளோ எலியானோ தெரியாது. சமீபகாலமாக இருவர் அல்லது அதற்கு மேல் என்னும் சந்தேகம் வலுக்கிறது. என் சிந்திய உணவை உண்பது பரவாயில்லை. நான் இந்தியாவிலிருந்து கொண்டுவந்த உழுந்தை உண்டாலும் பரவாயில்லை. சாப்பாடுதானே சாப்பிட்டுவிட்டுப் போகட்டும். அதைவிட அதன் மீது கொலை வெறிவராமல் தடுக்கும் இன்னொரு நல்ல பழக்கம் அதுக்கு அல்லது அவர்களுக்கு உண்டு.

என் புத்தகங்களை ஒருநாளும் ருசித்ததில்லை. நம்மூர் எலிகளைப் போலன்றி இவைகள் கல்வியின் பயனறிந்தனவோ அடியேன் அறியேன். கவனியாமல் இருக்கும் உடுப்புப் பெட்டிகளில் கூட அவை குடும்பம் நடத்துவது இல்லை. நல்லது. பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்.
ஆனால் நடுநிசியில் நான் படும் பாடு பெரும் பாடு. நான் தூங்க முற்படும் பின்னிரவுகளில் என்படுக்கை அறையை விளையாட்டு மைதானமாக்குவதுதான் என்னை எலிக் கொலைக்குத் தூண்டியது. கிபீர் விமானச் சத்தம் போல் எங்கு எப்போதென்று தெரியாமல் சத்தம். சமயத்தில் திருடன் வந்துவிட்டானோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்குச் சத்தம்.

பீங்கான் கண்ணாடிக் குவளைகள் பாத்திரங்கள் என்று புதிய இசையாராய்ச்சி. பிளாஸ்டிக் பைகளை சுவரோரத்தின் ஓட்டை வரை இழுத்துச் சென்று அதற்கும் மேல் கொண்டு செல்ல முடியாமல் அக்கப் போர் புரியும்.
நித்திரை குழம்பி எழும்பி மின்கல விளக்கடித்தால் தன் குண்டுமணிக் கண்களைக் காட்டி மயக்க முயலும். தன் ரோஜா நிறத்தில் நெய்த பட்டுக் கால்களை கைகளாய் அசைத்து குழந்தை போல் பகடி பண்ணிப் பல்லிளிக்கும்.

கோபம் வந்து கண்டதாலை தூக்கியெறிந்தால் சடக்கென்று மறையும். மின்னல் வேகத்தில். பிள்ளையாருக்கே சாரதி என்பது சரியென்று நினைத்துப் புன்னகைத்து விட்டு மீண்டும் படுத்துவிடுவேன். விட்டதா எலி? டானா எலியான்? டாளா எலியாள்? விட்டதுகளா எலிகள்?

திட்டங்கள் தீட்டினேன் என் பணியாளின் ஆலோசனை பெற்றேன். தீர்வு கிட்டியது என்று மகிழ்ந்தேன். எலிப்பொறிதான் தீர்வு. ஒன்றென்ன இரண்டு வாங்கிவா என்றேன் வீறாப்பாய். நல்ல காரைநகர் நெத்தலிக் கருவாடு சிறிதாய் மின் அடுப்பில் வாட்டிப் பொறியில் வைத்தேன் வசமாய்.

சைவ எலியோ அல்லது ஆசிய நிறவெறி எலியோ தெரியாது. கருவாட்டைச் சீண்டவேயில்லை. பிறகு தான் புரிந்தது எரித்திரியா பிரிந்ததும் எத்தியோப்பியாவிற்கு கடல் வளம் கிடையாது. அப்போ கடல் மீன் சுவை தெரியாத துரதிஷ்டசாலிதான் என்று எண்ணித் திட்டத்தை மாற்றினேன்.
பொதியில் இருந்த பாசிப்பயற்றை அது அல்லது அவை உண்டது ஞாபகம் வரவே பயறு வறுத்துப் பக்குவமாய்ப் பொறியில் வைத்தேன். அதை மட்டும் விடுத்து மிகுதி இடமெல்லாம் அட்டகாசம்.
வறுத்த கச்சான் (வேர்க்கடலை) சுட்ட வெங்காயம் சுடாத தக்காளி என்றெல்லாம் என் அறிவுக்கெட்டிய வரை முயன்றேன். அதே பொருட்கள் வேறு இடத்தில் இருந்தால் அபேஸ் பண்ணும் அதே வேளை பொறியில் உள்ளதைப் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அட்டகாசம் மட்டும் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்தது. நான் படித்தது பற்றி நானே சிரித்துக் கொண்டேன். ஆங்கில இலக்கிய ஆய்வறிவு சோறு போடுகிறது. எலிகளிடமிருந்து கூடச் சுதந்திரமாய் வாழத் தெரியவில்லையே என்று நொந்த நாட்கள் பல. இல்லை இரவுகள் அதிகம்.

இப்போ எலிகளின் எண்ணிக்கை இரண்டு அல்லது மேல் என உணர்கிறேன். அமவாசை பௌர்ணமி மாதிரி கனத்த நாட்களில் நடு நிசியில் சோடி போட்டு அவை செய்யும் லீலைகளும் லூட்டிகளும் என்னவோ தனியே இருக்கும் என்னை ஏளனம் செய்கிற மாதிரித்தான் இருக்கிறது.

ஒரே ஒரு வழி சமரசம்தான். இரு பொறிகளும் அகற்றப் பட்டன. நான் பாவிக்கும் உணவுப் பாத்திரங்கள் பொதிகள் எல்லாம் பாதுகாப்பாக வைத்தேன். ஆனால் எலிக்கென்று சில உணவுத் துகள்களை ஓரிடத்தில் இட்டு வைக்கிறேன் விதம் விதமாய். அட்டகாசம் குறைகின்ற மாதிரி உணர்கிறேன்.

ஆனாலும் நீண்ட இராத்திரிகளின் யோசனைகளில் தீர்வு கிடைத்தது. பொறி வைத்த நானே பொறிதட்டி நின்றேன். பொறியில் நானன்றோ வீழ்ந்;தேன் என்று உணர்ந்தேன்.
பயறோ அரிசியோ சிந்திய உணவுப் பருக்கைகளோ உண்டு வாழும் எலிகளுக்குச் சாதி இல்லை. சீதனம் இல்லை. விதவை வாழ்வு இல்லை. கடவுள் இல்லை. கோயில் என்ற பெயரில் கேளிக்கை இல்லை. கடவுள் பெயரில் விளம்பரம் இல்லை.
பேராசையில்லை. பொறாமையில்லை. அந்நிய மோகமில்லை. எந்த ஆடம்பரமும் இல்லை. பெண்ணடிமையில்லை. முதியோரில்லமும் அனாதையில்லமும் இல்லவே இல்லை. கந்து வட்டியில்லை. லஞ்சம் இல்லை.
போரில்லை. மொழிக் கொலை இல்லை. அகதி வாழ்வில்லை. இனவாதம் இல்லை. கடவுளின் பெயரால் கொலையில்லை. பௌத்தம் பேசிப் பெண்ணை (கோணேஸ்வரியை) பிள்ளைகள் கண் முன்னே வன்புணர்ந்து பின் தடயம் அழிக்கவென பெற்ற வாசலை எலிகள் குண்டு வைத்துச் சிதைத்ததில்லை.
பிரதேச வாதம் இல்லை. போலித் தேசிய அரசியல் இல்லை. எலிகளில் “கருணா”நிதியில்லை. ஐ. நா. இல்லை. துப்பாக்கி இல்லை. பணம் இல்லை.

ஆதலால் மனிதர்களே!
அவற்றிடம் நல்லன ஆயிரம் உண்டு. இழிபிறப்பான மனிதர்களில் ஒருவனாகிய நான் அவற்றிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உண்டு.
கொல்ல முயன்றது தவறா? முயன்ற முறை தவறா? மயக்கம் தீர்ந்தது. உயிரியைச் சகித்துக் கொள்வதில் கற்றிடவேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.

இன்னும் ஒரு காரணம் உண்டு எலிப் பெரியார்களைக் கொல்லாமல் இருப்பதற்கு. பிள்ளையார்களுக்குப் போக்குவரத்துச் சிரமம் வேண்டாமே! பாவம் உலகெங்கும் பல்லாயிரம் பிள்ளையார்கள் உள்ளனர்.
மரத்தடிகள் தெருவோரங்கள் அலங்காரங்கள் வீடுகள் கோயில்கள் மதுச்சாலைகள் பாலியல் தொழில் விடுதிகள் படங்கள் வாகனங்கள் கலப்பட ஆலைகள் கள்ளக் காசோலை அச்சகங்கள் கருமியின் காசுப் பெட்டி பைத்தியகாரனின் கழுத்துப்பட்டியில் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள் பிள்ளையார்கள். இவர்களுக்கெல்லாம் சொகுசு ஊர்திகள் வேண்டாமா?

அதையும் விட சாதி-சீதனம்-பெண்ணடிமை-காசுத்திமிர்-பொறாமை-லஞ்சம் என்று எல்லா “மனித” குணங்களையும் போற்றிக் காப்பாற்றும் மனிதர் மனங்களிலும் கூட நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்கள் பிள்ளையார்கள்.
நல்ல வேளை அவர்களுக்குத் தேவையான நான்கைந்து சொகுசு ஊர்திகளை விட்டு வைத்திருக்கிறேன் என்ற நிம்மதியில் இப்போது நன்றாக நித்திரை கொள்கிறேன்.

சிவயோகச்செல்வன்
(ஜோன் மனோகரன் கென்னடி)

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர் கண்டது மகிழ்ச்சி வாத்தியார்!

உங்கள் அண்ணாவின் அனுபவம் போல உள்ளது!

பகிர்வுக்கு நன்றி...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

நீண்ட நாட்களின் பின்னர் கண்டது மகிழ்ச்சி வாத்தியார்!

உங்கள் அண்ணாவின் அனுபவம் போல உள்ளது!

பகிர்வுக்கு நன்றி...!

கருத்திற்கும் விருப்பிற்கும்  நன்றி புங்கை அண்ணா மற்றும் யாயினி, நவீனன் .
அண்ணா அல்ல எனது தம்பியின் அனுபவம்

  • கருத்துக்கள உறவுகள்

 நீண்ட நாட்களின் பின் கண்டது மகிழ்ச்சி ...நகைச்சுவைகலந்த அழகான வர்ணனை உள்ள கதை .. பாராட்டுக்கள் . ஆன்மாவுக்கு சேரட்டும் ..
  நாம் இறந்தாலும் வாழும் நாம் விட்டு செல்பவை ...பகிர்வுக்கு  நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த தம்பியாரின் எலிகள் பற்றிய அனுபவப் பதிவுக்கு நன்றி வாத்தியார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் விருப்பிற்கும்  நன்றி நிலாமதி அக்கா மற்றும் கிருபன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நகாஸ்சான கதை வாத்தியார். உங்களின் சகோதரரா எழுதியது. சிறப்பான நகைசுவையாளர்தான்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.