Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி2).

Featured Replies

திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி2).

 

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

காலத்தை வென்று நிற்கும் திருக்குறளின் பன்மைத்துவம்

திருக்குறள் காலத்தை வென்று நிற்பதன் காரணமே அதன் பன்மைத்துவம்தான். அறவழி நிற்கும் சமயங்களைப் பின்பற்றும் சமயிகள் பலரும், குறிப்பாக,, சமணர், பௌத்தர், சிவனியம், திருமாலியம் உள்ளிட்ட சமயக்கணக்கர்கள் திருக்குறள் தத்தம் சமய அறங்களையே சொல்லுகின்றது என்று உரிமைகொள்ளும்  நூற்கள் எழுதியுள்ளனர். அப்படி இருக்கும்போது, ஸ்மார்த்தரான திரு. நாகசாமியில் நூலில் என்ன பிழை கண்டீர் என்று வினவினார் என் நண்பர்.

பல்வேறு சமயக்கணக்கரும் திருக்குறளுக்கு உரிமை கொண்டாட முயல்வது அறம் சார்ந்த விடயங்கள்; தவிர, அவர்கள் திருக்குறள் அவரவர் சமயக் கருத்துக்களின் சுருக்கம் என்று ஒருபோதும் இழிவு செய்ய முயன்றதுமில்லை. ஆனால், பிறப்பின் வழியாக, மனிதருக்குள் ஏற்றத்தாழ்வுகளைத் திணிக்கும் அறத்திற்குப் புறம்பான நால்வருண சாதிமுறை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே திருக்குறள் எழுதப்பட்டுள்ளது என்றல்லவா திரு.நாகசாமி அவர்கள் உரிமை கொண்டாடுகின்றார்; அதுமட்டுமல்ல, அறத்திற்குப் புறம்பான மனுதர்ம சாத்திரங்களின் சுருங்கிய வடிவே திருக்குறள் என்ற திரு.நாகசாமியின் வாதம் அறமே வடிவான திருக்குறளுக்கு அறத்திற்குப் புறம்பான ஆரியச்சாதிச் சாயம்பூசும் கயமைச் செயலன்றி வேறென்ன?

அறத்திற்குப் புறம்பான நால்வருண சாதிமுறைத் திணிப்பை, மனுதருமம், என்றுமுள்ள சநாதன தருமம், பாரத மண்ணின் பாரம்பரிய இந்து தரும வாழ்வியல் முறை, கீதை சொல்லும் இலட்சிய வாழ்வு என்று பல்வேறு சாயங்களைப் பச்சோந்திபோல் வார்த்தைச் சூதுகளால் மக்களை மூளைச் சலவை செய்து, பிராமணர்களின் மேலாண்மையை ஏனையமக்கள் தாங்களே மனமுவந்து ஏற்கச் செய்யும்  முயற்சிகளின் ஒரு பரிமாணமே திரு.நாகசாமியின் நூல்!

திருக்குறளை மனுதருமத்தின் சுருங்கிய வடிவென்றும், ஆரியப் பிராமணனே 'அறவாழி அந்தணன்' என்னும் தெய்வம் என்று திருக்குறளே கூறிவிட்டதாக திரு.நாகசாமி ஏற்ற முயலும் ஆரிய நஞ்சு தமிழர்களின் பொதுப்புத்தியில் ஏறிய பிறகு, ஆரியப்பிராமண மனிதப் புனிதர்களுக்குப் பணிவிடை செய்து அடிமையாக வாழ்ந்தால், அடுத்த பிறவியில் மேம்படலாம் என்னும் மனுசாத்திரத்தை எளிதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏற்றிவிடலாம் அல்லவா?  

தமிழர்களிடம் இல்லாத நால்வகைச் சாதியை நாட்ட முயலும் ஆரியர்கள்!

பரிதிமாற்கலைஞர் குறிப்பிட்ட இரண்டாவது கருத்து "(2) தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்." இக்காலத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான கருத்தாகும்.

உயிர் சமத்துவமும், அன்பும் மையநாடியாகக் கொண்டு தமிழ் அறம் படைத்த திருவள்ளுவர் நால்வகைச் சாதியைத்தான் அடிப்படையாகக் கொண்டு தமது திருக்குறளைப் படைத்தார் என்று சொல்லி திரு.நாகசாமி ஆடும் ஆரியக்கூத்து அவர்க்கு முன்னரே திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் உள்ளிட்ட பல்வேறு ஆரியப் பார்ப்பனர்கள் ஏற்கனவே ஆடித்தீர்த்த ஆரியக்கூத்துகளின் தொல்லெச்சமே! இதைத் தப்பும் தவறுமான ஆங்கிலத்திலும், சமற்கிருதத்திலும் எழுதி, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது நகைப்புக்குரியது. ஆரியக்கூத்துக்கு இலக்கணமும் தேவையில்லை; மொழித் தூய்மையும் அவசியமில்லை என்று எண்ணியிருப்பார் போலும்!

கபிலர் என்னும் ஆரியப் பிராமணரின் நேர்மை

பரிதிமாற்கலைஞருக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியப் பிராமண குலத்தில் தோன்றிய கபிலர் தம் இனத்தவரான ஆரியப் பிராமணரை வசைசொல்லிப் பாடும் பாடல் கீழே தரப்பட்டுள்ளது:

"இத் தமிழ்நாட்டில் இல்லாத நால்வருணச் சாதிமுறையை நீர் கொண்டுவந்து நாட்டினீர்" எனத் தன் இனத்தவரான ஆரியரை நோக்கி குற்றப்பத்திரிக்கை முழக்கிய கபிலரின் நேர்மை வியப்புக்குரியது.

'முற்சடைப் பலனில் வேறாகிய முறைமை சொல்
நால்வகைச் சாதி இந்நாட்டில் நீர் நாட்டினீர்'  - கபிலரகவல்

பரிதிமாற்கலைஞர் குறிப்பிட்ட மூன்றாவது கருத்து "(3) தமிழரிடத்திருந்த பல அரியவிஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்." என்பது முற்றிலுமாக உண்மை என்று நிறுவும் நூலாக திரு.நாகசாமியின் "TIRUKKURAL - An Abridgement of Sastras" நூல் இருக்கின்றது.

ஆரிய தரும சாத்திரங்களான மனுசாத்திரம் உள்ளிட்ட நூற்களின் தொகுப்பே திருக்குறள் என்று நிறுவும் பொருட்டு நூல் எழுதிய ஆரியப் பிராமணர் திரு.நாகசாமி வாழையடி வாழையாக வந்த ஆரியக் கூத்தாடிகளின் மரபினில் உதித்த ஒப்பற்ற ஆரியக்கூத்தாடியாகச் செயலாற்றியுள்ளார் என்றால் மிகையன்று.

எல்லாம் சரி, "தீக்குறள்" என்று திருக்குறளைத் தூற்றிய மகாப்பெரியவா-வின் படத்தைப் போட்டு "TIRUKKURAL - An Abridgement of Sastras - Dr. R.Nagaswamy" என்று அன்னாரது அடிப்பொடி நூல் வெளியிடுவது ஏன் என்பதுதான் நம்முன் தொக்கி நிற்கும் கேள்வி. சங்கராச்சாரியின்  அடிப்பொடியான திரு.நாகசாமிப்பிராமணர் தமது ஆரியச்சாதி மேலாண்மையை நிறுவ, திருக்குறள் மனு அதர்ம சாத்திரங்களின் தொகுப்பு என்று காட்டும் முயற்சியில் தோற்றுக் கேவலப்படுகின்றார், அவ்வளவே!

அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கே காவி வண்ணம் பூசிய சக்திகள், திருக்குறளுக்குக் காவிவண்ணம் பூசும் 'Painting Contract'-ஐ திரு.நாகசாமிக்குத் தந்துள்ளதாகவும், வேலையை முடித்தால், அதற்குக் கூலியாக 'பத்மவிபூஷன்' பட்டமும், பணமுடிப்பும் தரப் பரிந்துரைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதுபோல், இந்நூல் தயாரானதும் திரு.நாகசாமிக்கு 'பத்மவிபூஷன்' வழங்கப்பட்டிருக்கிறது.

'Operation Success! Patient is Dead, Contract is Executed, but Building got Collapsed' என்பதுபோல், "நூல் தயார்! நோக்கம் பணால்!" என்றாகிவிட்டது! தப்பும், தவறுமான 'I Walk English! I talk English' பட்லர் ஆங்கிலத்தில், 'தர்க்க சாஸ்திரம்' என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நூலாசிரியரைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், எவ்வித ஆதாரங்களும் தாராமல், நூலாசிரியரின் ஆரிய மனம் ஆடும் கூத்தையெல்லாம் முடிவுகளாக அறுதியிடும் போக்கும், தப்பும், தவறுமான மேற்கோள்களுடன் ஆய்வுநூல் என்பதற்கான எந்த வரையறையும் பின்பற்றப்படாத வகையில் எழுதப்பட்டுள்ளது. 1963-ல் திருக்குறளைத் 'தீக்குறள்' என்று "திருவாய்" மலர்ந்த மகாப்பெரியவா சந்தித்த கேவலத்தைவிடப் படுகேவலமான நிலையைத்தான் ஆரிய மேலாண்மைக் கருத்தியலுக்கு இந்நூல் பங்களித்துள்ளது என்பதே உண்மை.  

திருக்குறளில் பயின்றுவரும் அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்ற நான்கு தமிழர் தொழிற்பிரிவுகளையும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பிறப்பின் அடிப்படையிலான ஆரிய குலப்பிரிவுகளாக மடைமாற்றம் செய்து, திருக்குறளை நால்வருணத்தின் அடிப்படையில்தான் திருவள்ளுவர் அமைத்துள்ளார் என்று பரிமேலழகர் முதல் திரு.நாகசாமி வரையான ஆரியர்கள் கூறும் அபத்தம் ஆதாரமின்றி ஆரிய மேலாண்மையை நிறுவமுயலும் ஆரிய இனப்பற்றின் வெளிப்பாடு மட்டுமே.

தமிழ் மன்னர்கள் சத்திரியர்கள் அல்லர்!

திருக்குறள் சொல்லும் அந்தணர், பார்ப்பனர் ஆகியோர் தூய தமிழர்களே; ஆரியப் பிராமணர்கள் அல்லர் என்று குறள் ஆய்வு-3ல் நிறுவப்பட்டது.  இனி, தமிழகத்தில் சத்திரியர் என்று ஒரு குலம் இருந்ததா என்று ஆராய்வோம்.

குல வேற்றுமையின்றி தமிழர் எவரும் நாட்டின் மன்னர் ஆகலாம்!

தமிழ்நிலத்தை ஆண்ட தமிழ் அரசர்கள், பிறப்பு வழிப்பட்ட ஆரிய சத்திரியகுல அரசர்கள் போல், சத்திரிய குலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். அரசன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால், அவ்வரசனின் பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து, கோட்டையிலிருந்து வெளியே விடுவர்; குடிமக்கள் எவர் ஒருவர் கழுத்தில் யானையின் கையிலுள்ள மாலை விழுகிறதோ அவரையே அரசனாகும் நடைமுறை பண்டைய மன்னராட்சி இருந்த தமிழக அரசுகளில் இருந்துள்ளது. ஆளும் அரசன் சத்திரியன் என்னும் குலத்தில் தோன்றியவனாக இருந்தால், சத்திரிய குலத்திலிருந்துதான் அடுத்த அரசனைத் தேர்ந்தெடுத்து இருப்பார்களே அன்றி, வேறு எவரையும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.

அவ்வாறு அல்லாமல், யானையால் மாலையிடப்பட்டவர் யாராயினும் (குலம், கோத்திரம், குடி, சூத்திரன் போன்றவை இங்கு கணக்கில் கொள்ளப் படாதவை) அவரே இறைவன் திருவுள்ளப்படி வாய்த்த புதிய அரசன் என்று பயின்றுவந்த நடைமுறை உரக்கச் சொல்லும் சமூகச் சான்று ஒன்றே ஒன்றுதான்! செய்யும் தொழிலால் தமிழர்கள் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், சாதியற்ற ஒரே இனமாகத்தான் தமிழர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதுதான் அது! செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வாமல் இருப்பினும், தமிழர்கள் அனைவருக்கும் "பிறப்பு ஒக்கும்' என்னும் திருக்குறள் அறமே நடைமுறையில் இருந்த நீதியாகவே இருந்தது என்பதற்கு வலுவான வரலாற்றுச் சான்றாகத் திகழ்கின்றது கரிகாற் சோழன் சோழ அரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு..

கழுமலம் என்னும் சீர்காழியைத் தலைநகராகக் கொண்ட சோழநாட்டின் மன்னன் வாரிசு இல்லாமல் இறக்கவே, மாலையுடன் வீதிக்கு வந்த பட்டத்துயானை, பல ஊர்களைக் கடந்து சென்று, சேர நாட்டின் கருவூரில் வாழ்ந்திருந்த சாமானியன் கரிகாலன் கழுத்தில் மாலையிட்டதால், சோழ மன்னனாக முடிசூட்டப்பட்டுக் கரிகாற்சோழன் ஆனான்; ஆயினும் கரிகாலன் பிறந்த குலம் குறித்த எக்குறிப்பும் வரலாற்றில் இல்லை; பிறப்பால் தமிழன் ஒரே இனம் என்ற தகுதிப்பாடே அக்காலத்தில் போதுமானதாக இருந்திருக்கிறது.

காவிரி பெருக்கெடுத்தால் துள்ளுமிடமான கொள்ளிடத்தின் குறுக்கே காலத்தை வென்று நிற்கும் கல்லணையைக் கட்டியதால் வரலாறு இவனைக் கரிகால் பெருவளத்தான் என்று கொண்டாடுகின்றது! (காவிரியைக் கன்னடர்களிடம்  அடகுவைத்த  'கரிகாலனை(காலா'-வை) இங்கு குறிப்பிடவில்லை)

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முன்றுரையனார் இயற்றிய பழமொழி நானூறு பாடல் எண்.62 ஒருவருக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும் என்னும் நல்லூழ் விளக்கம் சொல்லும் போக்கில் இவ்வரலாற்றுச் செய்தியை வெளிப்படுத்துகிறது.
 

சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த பட்டத்து யானை, கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாலனின் கழுத்தில் மாலைசூடி, அவனைக் கரிகாற்சோழனாக்கி, சோழ அரசுரிமையைப் பெறவைத்தது; ஆகையினால், ஒருவன்  சிறந்த பொருட்களை, வேண்டினாலும் வேண்டாவிட்டாலும், அவன் அப்பொருட்களை  அடைதற்குரியவனாயின், அந்நன்மைகள் அவனுக்கு வந்தே தீரும் என்கின்றது முன்றுரையனாரின் பழமொழி அறுபத்தி இரண்டாம் பாடல்.

கழுமலம் - இது சோழநாட்டுள்ளதோர் ஊர். கருவூர் - இது சேரநாட்டுள்ளதோர் ஊர்; இவ்விரண்டும் இடையே உள்ள பெருந்தொலைவால் பிரிக்கப்பட்டனவாயினும், ஊழ், கருவூரிலுள்ள கரிகால் பெருவளத்தானைச் சோழ அரசனாக்கியது.

இப்பாடலில், 'விழுமியோன்' என்றது, சிறுவனாக அரியணை ஏறிய கரிகாற்சோழன், ('இளமை நாணி முதுமை எய்தி, உரைமுடிவு காட்டிய வுரவோன்' ஆக,) நீதிமன்றத்துக்கு முதியவர் வேடமணிந்து சென்று, நல்லதீர்ப்பு வழங்கிய தன்மையைக் கருத்தில் கொண்டு சொல்லியதாகும்.

கரிகால் சோழன் மிகச்சிறிய வயதிலேயே அரசனாகிவிட்டவன். போதுமான அனுபவம் இல்லாவிட்டாலும் அவனுக்குப் புத்திக் கூர்மை அதிகம். ஒருநாள், கரிகாலனின் சபையில் ஒரு சிக்கலான வழக்கொன்று வந்தது. மன்னன் என்ற முறையில் முறைப்படி வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்லத் தயாரானான் கரிகாலன். மன்னனானாலும், வயதில் மிகவும் இளையவன் என்பதால், அந்த வழக்கைத் தொடுத்தவர், மறுத்தவர் இருவருமே வழக்கைச் சொல்லத் தயங்கினர். புத்திகூர்மையுடைய கரிகாலன் அவர்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்டு,  ‘நல்லது, நீங்கள் இருவரும் நாளை வாருங்கள், மிகவும் சிக்கலான இந்த வழக்கை விசாரிப்பதற்காக அனுபவசாலியான ஒரு நீதிபதியை அனுப்பிவைக்கிறேன்’ என்றுகூறி, அவையை ஒத்திவைத்தான்.

கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற் சென்றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது - பழமொழி 62 (முன்றுரையனார்)

வழக்குத் தொடுத்தவர்-மறுத்தவர் ஆகியோர் மறுநாள் மீண்டும் அவைக்கு வந்தார்கள். நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த தலைமுடி முழுவதும் நரைத்த முதியவர்,  வழக்கை விசாரித்து, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் சரியான தீர்ப்பு வழங்கினார்.

'இளமை நாணி முதுமை எய்தி, உரைமுடிவு காட்டிய வுரவோன்

தனது இளம் வயதின் காரணமாகத் தன்னிடம் வழக்குரைக்கத் தயங்கிய மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முதியவர் வேடமணிந்து வந்து சரியான தீர்ப்புச் சொன்னான் கரிகாற் சோழன். குலத்தொழில் கல்லாமலேயே கைவரும் என்கிறது பின்வரும் பழமொழி நானூறின் இருபத்தி ஒன்றாம் பாடல்.

உரைமுடிவு காணான் இளமையோன்; என்ற
நரை முது மக்கள் உவப்ப … நரை முடித்துச்
சொல்லால் முறை செய்தான் சோழன், குல விச்சை
கல்லாமல் பாகம் படும் - பழமொழிநானூறு-21,முன்றுரையரையனார்

சோழ மன்னனுக்கு மகனாகப் பிறக்காது, பட்டத்து யானையால் மாலையிடப்பட்டு, சோழமன்னனான கரிகாலனுக்கு, "குலவிச்சை கல்லாமல் பாகம் படும்" என்று முன்றுரையனார் பாடியது பலருக்கும் முரணாகத் தோன்றலாம். கரிகாற்சோழன் வாரிசு இன்றி இறந்த சோழமன்னனின் வாரிசாக பட்டத்து யானையால் மாலைசூட்டப்பட்டு மன்னன் ஆனான் என்று முன்றுரையனாரே பாடியுள்ளதால், இங்கு 'குலம்' என்பது 'ஏற்றுக்கொண்ட தொழில் சூழல்' என்ற பொருளில் கவிஞரால் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை ஊகித்து உணர முடியும்;

சில திறமைகள் கல்வியாலோ, அனுபவத்தாலோ மட்டும் வருபவை அன்று; அந்தந்தக் தொழிற்சூழல் அல்லது குடும்பச் சூழலில் வளர்கிறவர்களுக்குத் தானே அமையும்.

சூத்திரன் . . அந்தணன் என்ற நால்வருண முறை தமிழ் மண்ணில் நடைமுறையில் இருந்திருந்தால் யாரை வேண்டுமானாலும் பட்டத்துயானை மாலையிட்டு அரசனைத் தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறையில் இருந்திருப்பது சாத்தியமில்லை; சத்திரிய குலத்திலிருந்து ஒருவர் என்றே சங்கப்பாடல்கள் அமைந்திருக்கும்.

தமிழர் பூணூல் அணிந்ததில்லை!

ஆரியப் பண்பாட்டில், சூத்திரரைத் தவிர, ஏனைய மூவரும் பூணூல் அணியும் துவிஜர் என்னும் இருபிறப்பாளர்கள். ஆனால், தமிழகத்தில், ஆரியப் பிராமணர்களும், கோயில் பூசகர்களும் (அந்தணர், பார்ப்பார்) மட்டுமே பூணூல் அணிந்ததாகச் சான்றுகள் இலக்கியங்களில் காணப்படுகின்றதே தவிர, அரசரும், வணிகரும் பூணூல் அணிந்ததாக சங்க இலக்கியங்கள் எதிலும் சான்றுகள் காணப்படவில்லை.

தமிழர் அனைவரும் அரசுரிமை பெற்றவர்கள்!

மேலும், தமிழக சமுதாய அரசியல் நிலைகளில் வேளாளர் அரசர்க்கு சமமானவர் என்பதை அரசர்க்கும், வேளாளர்க்கும் இடையே மணவுறவு உண்டு என்பதிலிருந்தும், வணிகர்க்கும், வேளாளர்க்கும் அரசுரிமையுண்டு என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்தும் அறிந்துகொள்ளலாம்.

வில்லும், வேலும், கழலும், கண்ணியம்,
தாரும், மாலையும், தேரும், மாவும்,
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய - தொல்காப்பியம்: பொருளதிகாரம்:மரபியல்:1573.

(வில்லு முதலாகச் சொல்லப்பட்டன எல்லாம் மன்னனாற் பெற்ற மரபினால் வணிகர்க்கும், வேளாளர்க்கும் உரியன)

 வணிகர்கள் என்போர் உலகெங்கும் காணப்படுபவர்; தமிழகத்தில் வேளாளரே வணிகராகவும் இருந்துள்ளதால், அப்படியொரு தனி இனம் தமிழ் மண்ணில் இருந்ததில்லை.

அரசர் உள்ளிட்ட அனைவரும் தமிழினம்

எனவே, பிராமணர் என்ற ஒரு இனத்தவரைத் தவிர, சத்திரிய, வைசிய, சூத்திர குலத்தவர்கள் தமிழ் மண்ணில் ஒருபோதும் வாழ்ந்திருக்கவில்லை. அரசர்கள் உள்ளிட்ட ஏனையத் தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ் இனம் என்பதுவே சரித்திரம் சொல்லும் செய்தி. ஆனாலும், ஆரியப் பிராமணர்கள், வந்தேறிய தமிழ் மண்ணில், தாங்களே முதற்தரக் குடிகள்; தமிழர்கள் இழிந்தோர் என்ற கருத்தியலை நிலைநாட்டும் ஒரே நோக்கத்தோடு, நால்வருண சநாதன தருமம் என்று தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத ஒன்றை, இருப்பதாகக் காட்டுவதற்காக, தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ் மண்ணில் வந்தேறிய ஆரியர்களுக்கும், பூர்வகுடிகளான தமிழர்களுக்கும் இடையில் தொடர்ந்து இருந்துவரும் இனப்போராட்டத்தின் அடையாளமே 'நால்வருணம்' என்னும் ஆரியக் கருத்தியல் வன்முறை.

எனவே, நால்வருணம் தமிழ் மண்ணில் எக்காலத்தும் நடைமுறையில் இருந்ததில்லை; தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே ஆரியப் பிராமணர்கள் தமிழ் மண்ணில் குடியேறிவிட்டனர்; தொல்காப்பியரின் காலத்திலேயே அந்தணர், பார்ப்பனர், ஆரியப்பிராமணர் என்னும் மூவகை மக்களுக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக இல்லாத நிலை இருந்ததோ என்ற ஐயம் உண்டு; மக்களின் பொதுப்புத்தியில் அந்தணர் என்பவர் ஆரியப் பிராமணரோ என்ற எண்ணம் இருந்திருக்கலாம். அந்தணர் என்போரின் அடையாளம் என்ன என்பது குறித்துத் தொல்காப்பியர்

"நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய" - தொல்காப்பியம்: மரபியல்:1560

என்று ஐயத்துடனேயே ஆராய்ந்து பார்க்கும்போது என்று பொருள்படும் 'ஆயும் காலை' என்னும் முன்னொட்டுக் கொடுத்து அடையாளம் காட்டுகிறார். ஆரியப் பிராமண இல்லறத்தார் முக்கோல்களையோ, கரகத்தையோ பயன்படுத்தியவர்கள் அல்லர் என்பதால், இங்கு, 'அந்தணர்' என்னும் சொல்லால் துறவியரையே தொல்காப்பியர் குறித்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

வள்ளுவரின் குறள் நால்வருணத்தைப் பின்பற்றியது என்பதற்கான அகச்சான்று திருக்குறளிலும் இல்லை.

தமிழ் மண்ணில் வந்தேறிய மூவாயிரம் ஆண்டுகளில் பிராமணர் என்னும் ஒற்றை ஆரிய சாதியின் இருப்பை வலுவாக்கிக் கொண்டனரே தவிர, சூத்திரர் என்று ஆரியர்கள் வாய்கூசாமல் சொல்லும் வேளாளர்கள் வகுப்பைச் சார்ந்தவர்கள், அரசியல், சமூக தளங்களில் ஆரியப் பிராமணர்களுக்கு இணையாகவும், பல இடங்களில் உயர்வான நிலைகளிலும் தொடர்ந்து இருந்து வருவதைத் தடுக்க முடியவில்லை என்பதோடு, கல்வித்தகுதியில் குறைவு பட்டால், இழிநிலை அடைந்து கடைநிலை ஊழியம் செய்யவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகினர்.(காண்க பின்வரும் நறுந்தொகை-37ம் பாடல்)

கல்வியறிவு அற்ற முட்டாள்களே ஆனாலும், பிறப்பால் ஆரியப் பிராமணரானால், சமூகத்தின் அனைத்து நிலை மக்களையும்விட உயர்ந்த நிலையில் இருப்பதற்கு ஒப்புக்கொள்ளும் மனுதரும, சநாதன தரும விதிகளை  வட இந்திய சமூகம் ஏற்றுக்கொண்டதைப் போல், தமிழ்ச் சமூகத்தை ஏற்றுக்கொள்ளவைக்க ஆரியப் பிராமணர்களால் இயலவில்லை.

உதாரணமாக, பதினைந்தாம் நூற்றாண்டில் அதிவீரராம பாண்டியன் அல்லது குலசேகரப்பாண்டியன் என்பவரால்  இயற்றப்பட்ட அறநூலான நறுந்தொகையின் 36-39 வரையுள்ள நான்கு பாடல்கள், கல்வியே ஒருவனுக்குக் குலம் தரும்; நால்வருணப் பிறப்பன்று என்று தெளிவாகக் கூறுகின்றன. தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழகம் வந்தேறிய ஆரியர்களால், பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலும் கூட, நால்வருணத்தைத் தமிழ் மண்ணில் திணிக்க முடியவில்லை;

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. நறுந்தொகை-36

கல்வியை முறையாகக் கற்காத ஒருவன் தன் குலப்பெருமை பேசுவது, நெல்மணிகளுக்கிடையில், உள்ளீடாகிய அரிசி இல்லாத பதர்நெல்லுக்கு ஒப்பாகும் என்கின்றது மேற்கண்ட நறுந்தொகைப் பாடல்;  பதர்நெல் எவ்வாறு காற்றினால் தூற்றப்பட்டுக் குப்பைக் கூளத்துடன் கிடக்குமோ, அதுபோல் குலப்பெருமை பேசும் ஒருவன் வீணாவான். நால்வருணத்தைப் பின்பற்றும் ஆரியப் குலப் பிராமணன் ஆக இருந்தாலும், கல்வியறிவு இல்லாதவனாக இருப்பானேயானால், அவன் கீழ்மகனாகவே வாழ்தல் வேண்டும் என்கின்றது கீழ்க் காணப்படும் நறுந்தொகைப் பாடல்.

நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயிற் கீழ் இருப்பவனே. நறுந்தொகை-37

நால்வருண சாதி பாராட்டும் ஆரியப் பிராமணனும் கற்ற கல்வித் தகுதி ஒன்றினால் மட்டுமே ஏனையத் தமிழர்களால் ஏற்கப்பட்டனர்;  கல்வித்தகுதி  இல்லாவிட்டால் ஆரியப் பிராமணனும் வயிற்றுப் பிழைப்புக்காக  கீழ்மட்ட வேலைகளைச் செய்து கீழ் நிலையில் இருத்தல் வேண்டும் என்பதே தமிழ் மண்ணின் பொதுவிதியாகும்.அதுமட்டுமல்ல, எத்தகைய தாழ்ந்தகுடியில் பிறந்திருந்தாலும், யாவராயிருப்பினும், கல்வியறிவில் சிறப்புற்றிருந்தால் அவரை மேலே வருக என்று உயர்த்தும் தமிழ் சமூகம் என்கின்றது 38ம் நறுந்தொகைப் பாடல்; 39ம் நறுந்தொகைப் பாடலோ அறிவுடையவனையே அரசனும் விரும்புவான் என்கின்றது.                                                                                                                                                                                                                                                                                                                                       

எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வருக என்பர். நறுந்தொகை-38

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். நறுந்தொகை-39

மனுதருமம் "முட்டாளாயினும், பிராமணனை ஏனையோர் வழிபடவேண்டும். ஏனெனில், முட்டாளானாலும், பிராமணனே சிறந்த தெய்வம்!" என்கின்றது. ஆனால் திருக்குறளோ இத்தகைய கல்லாதோர் எவராயினும், அவர்கள் பெற்ற  இரு கண்களும், முகத்தில் உள்ள இரண்டு புண்களாகவே கருதப்படும் என்கிறது.

கண்ணுடையர்என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். -குறள் 393.

இக்குறள் மனுதர்ம விதிக்கு முற்றிலும் எதிரான குறள். திரு.நாகசாமி போன்ற ஆரியப் பார்ப்பனர்கள்  இக்குறளைப் படித்தல் நலம்.

சான்றோர்களாகிய கல்விமான்களே தமிழக அரசர்களால்  போற்றப்பட்டனர் என்பதுவும், அத்தகைய கல்விமான்களாக இருந்ததாலேயே சில-பல ஆரிய பிராமணர்கள் உயர்நிலை பெற்றனரே அல்லாமல், பிராமணர்கள் என்னும் பிறவிமேன்மைக்காக அன்று என்பது தெளிவு.

திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூல் அன்று!

எனவே, மனுதர்ம சநாதன சாதி படிநிலை அமைப்பு தமிழக அரசர்களால்  பின்பற்றப்படவில்லை; வடஇந்திய ஆரிய நாடுகளைப் போல் அல்லாமல், திருக்குறள் சொல்லும் நீதிமுறையைப் பின்பற்றிய தமிழகம், கல்வியை அடிப்படையாகக் கொண்ட நெகிழ்வுத் தன்மையுடன் விளங்கிற்று என்பதையே தமிழக வரலாற்றுச் சான்றுகள் தருகின்றன. எனவே, திருக்குறள் ஒருபோதும் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூல் அன்று என்பதே முடிந்த முடிவான உண்மை.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

 

 

  • 1 year later...

வணக்கம் ஐயா. தங்கள் கட்டுரையை படித்து மகிழ்ந்தேன். தசமயம் தமிழர்களின் அறக்கொள்கைகளை ஆய்வு செய்து வருகிறேன். திருமந்திரத்தில் காணப்படும் அறங்களை பார்க்கிறேன். உங்கள் பதிவு எனக்கு மிகவும் துணையாக உள்ளது. மேலும் தகவல்கள் இருந்தால் பகிரவும். 

 

நன்றி வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.