Jump to content

தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்


Recommended Posts

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்

 
 

 

p44a_1529451713.jpg‘‘தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம்.

‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் அவர்  செய்வதாக அந்த அணியில் சொல்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வந்த அன்று தினகரன் வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.’’

‘‘ஏன்?’’

‘‘முரண்பட்ட தீர்ப்பு வந்து, மூன்றாவது நீதிபதிக்கு விவகாரம் போனதும், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நொந்துபோய் விட்டார்கள். ‘இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த விவகாரம் இழுத்துக்கொண்டு போகுமோ’ என அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அப்போதுகூட தினகரன் எந்த சலனமும் இல்லாமல் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது எனக் கடந்த முறையே நான் சொல்லியிருந்தேன்.’’

p44_1529451733.jpg

‘‘ஆமாம். நீர் சொன்னதைக் கடந்த இதழில் எழுதியிருந்தோம்.’’

‘‘தினகரனின் இந்த ரியாக்‌ஷனால், தங்க தமிழ்ச்செல்வன் கடுப்பாகிவிட்டாராம். ‘வழக்கு இழுத்துக்கொண்டே போவதில் இவருக்குத் துளிகூட வருத்தம் இல்லை. தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு நமக்கெல்லாம் பதவி வந்துவிடக் கூடாது என்பதைத்தான் தினகரன் எதிர்பார்க்கிறார். அப்படிப் பதவி வந்தால், நம்மில் பலரும் எடப்பாடி பக்கம் போய்விடுவோம் என அவர் பயப்படுகிறார்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் கமென்ட் அடித்தார். தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் தினகரன் பேசியபோது, ‘18 பேரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள்’ என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தினாரே தவிர, தீர்ப்பை அதிகம் கண்டிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களைச் சந்தித்து, ‘நான் வழக்கிலிருந்து வாபஸ் பெறப் போகிறேன்’ என்று அறிவித்தார். அது மட்டுமல்ல... தீர்ப்புக்கு முதல் நாள்தான் ‘தீர்ப்பு எப்படி வந்தாலும் நான் மேல் முறையீடு செய்ய மாட்டேன்’ என்று வேறு அவர் சொல்லியிருந்தார். இதெல்லாம் தினகரனை எரிச்சலில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனைத் தன் வீட்டுக்குக் கூப்பிட்டார் தினகரன்.’’

‘‘அப்போதுதான் வாக்குவாதம் ஏற்பட்டதா?’’

‘‘ஆமாம். ‘நான் ஒன்று சொன்னால், நீங்கள் வேறு ஏதாவது பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள். இப்படிப் பேசினால் என்ன அர்த்தம்? எங்கள் அணியில் பிரச்னை இல்லை என்று நான்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இப்படிப் பேசினால் நான் என்ன செய்வது? தீர்ப்பை விமர்சித்துப் பேசினால் பிரச்னையாகும், ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும் என்பது தெரியாதா?’ என்று தினகரன் கோபமாகக் கேட்டாராம். ‘நீங்கள் விமர்சனம் செய்திருந்தால், நான் ஏன் பேசப்போகிறேன்?’ என்று தங்க தமிழ்ச்செல்வன் பதிலுக்குக் கேட்டாராம். ‘வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என ஏன் பேசினீர்கள்?’ என்று தினகரன் கேட்க, உடனே தங்க தமிழ்ச்செல்வன், ‘நீங்கள் ஆர்.கே.நகர்... ஆர்.கே.நகர் என உங்கள் தொகுதிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். எனக்கு ஓட்டு போட்ட ஆண்டிபட்டி மக்களுக்காக நான் பேசக்கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். ‘நீங்க இப்போ அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ இல்லை. உங்களைத் தகுதிநீக்கம் செய்துட்டாங்க என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுங்க’ என்று குத்தலாகச் சொல்லியிருக்கிறார் தினகரன்.’’

p44aaa_1529451770.jpg

‘‘அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொன்னாராம்?’’

‘‘இரண்டு ஃப்ளாஷ்பேக் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் அவர். ‘ஆரம்பத்தில் உங்கள் பக்கம் 20 எம்.எல்.ஏ-க்கள் இருந்தோம். முதல்வர் எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் கடிதம் கொடுக்கலாம் என்று நீங்கள் சொன்னபோது, தோப்பு வெங்கடாசலம் விலகிப் போனார். ‘இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் எம்.எல்.ஏ பதவி போய்விடும்’ என்று எங்கள் எல்லோரையும் எச்சரித்தார். பதவி போய்விடும் என்று தெரிந்தேதான் நாங்கள் அந்தக் கடிதத்தைக் கொடுத்தோம்’ என்று சத்தமாக தினகரனைப் பார்த்துச் சொன்னாராம் தங்க தமிழ்ச்செல்வன்.’’

‘‘அவர் சொன்ன இன்னொரு சம்பவம் என்ன?’’

‘‘ஜக்கையன் விவகாரம்தான் அது. கவர்னரிடம் கடிதம் கொடுத்தது 19 பேர். அதன்பின், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் போய் விளக்கம் அளித்து, தகுதிநீக்கத்திலிருந்து தப்பித்துக்கொண்டார். அவரைக் குறிப்பிட்ட தங்க தமிழ்ச்செல்வன், ‘நாம யார் பக்கம் இருக்கிறோம் என்பது ரெண்டாவது விஷயம். ஆனால், பதவியில் இருக்கணும். இப்போதைக்கு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து, நடவடிக்கை யிலிருந்து தப்பிக்கப் பாருங்க’ என எங்கள் 18 பேரிடமும் ஜக்கையன் மன்றாடினார். அதையெல்லாம் செய்யாமல் தான், பதவியை இழந்து உங்கள் பக்கம் இருக்கிறோம்’ என்று தினகரனிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.’’

‘‘அப்படியானால் தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் பக்கமிருந்து விலகுவாரா?’’

‘‘தங்க தமிழ்ச்செல்வனுக்கு தினகரனைப் பிடிக்கவில்லை; தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன், பெங்களூரு புகழேந்தி ஆகிய இருவரையும் பிடிக்கவில்லை. ‘இவர்கள் போனால் பரவாயில்லை என்ற மனநிலைக்கு தினகரன் வந்துவிட்டார். ஆனால், இன்னும் சில தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களையும் தங்க தமிழ்ச்செல்வன் கூட சேர்த்து அழைத்துக்கொண்டு போனால் என்ன செய்வது என்பதுதான் தினகரனின் கவலை. அதற்கு ஏற்றார் போல, தங்க தமிழ்ச்செல்வனுடன் சிலர் தொடர்பில் இருக்கிறார்கள். அதனால்தான், தன் சம்மதத்துடன் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில் மக்கள் கருத்து கேட்பது போல தினகரன் பேசிவருகிறார்’ என்கிறார்கள் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘இந்த இருவர்மீது மட்டும் தினகரனுக்கு ஏன் கோபம்?’’

‘‘தினகரன் அணியில் இருக்கும் மற்ற யாரும் பெங்களூரு சிறைக்குத் தனியாகப் போய் சசிகலாவைப் பார்க்க முடியாது. ஆனால், இவர்களால் அது முடியும்!’’

‘‘புரிகிறது. தங்க தமிழ்ச்செல்வன் இனி தனி ரூட்டில் போவாரா?’’

‘‘ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடத்துக்கு அவரால் போகமுடியாது. அ.தி.மு.க-வில் பிரச்னை வந்தபோது, பல மாவட்டங்களில் இருக்கும் அ.தி.மு.க கட்சி அலுவலகங்கள் எடப்பாடி அணியின் வசம் வந்துவிட்டன. ஆனால், தேனி மாவட்ட அலுவலகம் மட்டும் இன்னமும் தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் நினைத்த நேரத்தில் செல்போனில் பேச முடிகிற மிகச் சிலரில் தங்க தமிழ்ச்செல்வன் ஒருவர். ‘ஐந்து பேரையாவது சேர்த்துக்கொண்டு வந்துவிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைச் செய்கிறோம் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு எடப்பாடி ஆசை காட்டியிருக்கிறார். அதனால்தான், அவர் ஏதேதோ பேசி குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார். தகுதிநீக்க வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு அவரைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் எடப்பாடி’ என்று தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ‘துரோகம் செய்ய மாட்டேன் என்று சசிகலாவிடம் சிறையில் சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன். அதை மீற மாட்டேன்’ என தங்க தமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.’’

‘‘ஆண்டிபட்டி தொகுதியில் அவர் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாரே?’’

p44c_1529451826.jpg

‘‘ஆமாம். கட்சிக்காரர்கள் புடை சூழ, டிராக்டர் வண்டியில் நின்றுகொண்டு பேசினார் தங்க தமிழ்ச்செல்வன். ‘நான் வழக்கை வாபஸ் வாங்கி, பதவியை ராஜினாமா செய்யலாமா?’ என அவர் கேட்டதும், பலரும் ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்றனர். ‘சரி, பின்னர் இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘சந்திக்கலாம், சந்திக்கலாம்’ என்றனர். ‘நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் கண்டிப்பதற்காகவே இதைச் செய்கிறேன். வழக்கறிஞர் குழுவிடம் பேசி, இறுதி முடிவு எடுத்த பின்னர், இதேபோல் உங்களிடம் வந்து எனது முடிவைச் சொல்வேன்’ என்று சொல்லி முடித்தார். தங்க தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. ‘சுமார் ஒரு வருடமாக என் தொகுதி, எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை, சாலை இல்லை, பல இடங்களில் சரியாக மின்சாரம் இல்லை. தொகுதி மக்கள் வந்து சொல்லும்போது, மனசு வலிக்கிறது. என் தொகுதி மக்களை நினைத்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். இடைத்தேர்தல் வரட்டும் நாங்கள் யார் என்று காட்டுகிறோம்’ என்று நிருபர்களிடம் சொன்னார் அவர். அது மட்டுமல்ல, ‘18 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்தித்தால் அனைவரும் வெற்றி பெறுவார்கள்’ என்றும் சொன்னார்.’’

‘‘திவாகரன் சத்தமே காணோமே?’’

‘‘மன்னார்குடியில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய திவாகரன், ஓய்வுபெற்ற அதிகாரிகள் இரண்டு பேருடன் டெல்லி சென்றார். கட்சிப் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காகத்தான் சென்றதாகச் சொல்லப்பட்டது. ஐந்து நாள்கள் டெல்லியிலேயே முகாமிட்டார் திவாகரன். ஜூன் 16-ம் தேதி சென்னை வந்தார். தன் ஆதரவாளர்களிடம், ‘நாம் நினைத்தது நடக்க ஆரம்பித்திருக்கிறது. தங்க தமிழ்செல்வன் தினகரனுக்கு எதிராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். இன்னும் சிலர் அவரைப் பின்தொடர்வார்கள். தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் குறித்த வழக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும். தினகரனின் கோட்டையில் விரிசல் விழுந்திருக்கிறது’ என்று சிரித்தபடியே சொன்னாராம்.’’

p44e_1529451804.jpg

‘‘மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதே?’’

‘‘ஆமாம். ‘என் பதவியைக் காப்பாற்றுங்கள்’ என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் முதல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரை செல்லத்துரை உதவி கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாருமே சாதகமான பதில் தரவில்லை. இந்நிலையில், உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் ஜூன் 16-ம் தேதி மதுரை வந்தார். அவர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார், சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டது. உயர் கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கைகள் செல்லத்துரையைக் கலங்க வைத்துள்ளது. ‘இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு நிறைய இழந்துள்ளேன். திடீரென்று கழற்றி விடுகிறார்கள்’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டாராம். முன்பு துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு இதே நிலை ஏற்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பெரிய வழக்கறிஞரை நியமித்தார். ஆனால், செல்லத்துரைக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்யும் நிலையில் இப்போது உயர்கல்வித் துறை இல்லை. ‘எங்களைச் சிக்க வைத்ததற்குத்தான் இப்போது செல்லத்துரை இப்போது அனுபவிக்கிறார்’ என்று சிறையில் இருக்கும் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கூறி வருகிறார்களாம்’’ என்ற கழுகார் பறந்தார்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஈ.ஜெ.நந்தகுமார்
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி, பிரேம் டாவின்ஸி


p44d_1529451850.jpgdot_1529451872.jpg தமிழக பெண் வி.ஐ.பி ஒருவரின் திடீர் திருமணம், பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதையும்மீறி கைகோத்தனர். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே  மணவாழ்க்கை கசந்துவிட்டதாம். வீட்டுக்கு எதிரே இருந்த தோட்டத்தில் கடந்த வாரம் வாக்கிங் போனபோது, தம்பதிக்குள் காரசார வாக்குவாதம். ஒரு கட்டத்தில் வி.ஐ.பி மனைவி, கணவரைச் சாத்தி எடுத்துவிட்டாராம். புதுக் கணவர், இதுவரை வீடு திரும்பவில்லை. யார் மனசுல யாரோ.

dot_1529451872.jpgகடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்கக் காரணமானவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்து, அவர்களைக் களையெடுத்து வருகிறார் ஸ்டாலின். இப்போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பதவிகளில் கைவைக்கப் போகிறாராம். ‘அவர்களின் உறுப்பினர் கார்டையே புதுப்பிக்காமல், விரட்டி விடப் போகிறார்’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்!

dot_1529451872.jpg18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறார்கள் தினகரன் அணியினர். ‘இந்தத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப் போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக இருந்த       கே.சுப்பிரமணியத்திடம் இதுபற்றி தினகரன் டீம் பேசியிருக்கிறது.

dot_1529451872.jpgகடந்த வருட எம்.பி.பி.எஸ் அட்மிஷனில், வெளி மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் சிலர், தமிழகத்தில் வசிப்பதாக போலியாக நேட்டிவிட்டி சான்றிதழ் வாங்கி இடம்பிடித்தனர். இது சர்ச்சையாகி, நான்கு மாணவர்கள் சிக்கினர். ஆனால், அதேபோல இந்த வருடமும் நேட்டிவிட்டி சான்றிதழ் கேட்டு தாசில்தார் அலுவலகங்களைச் சில புரோக்கர்கள் வட்டமடித்துவருகிறார்கள்.


மீண்டும் நிற்க முடியாது!

ழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக, சட்ட நிபுணர்கள் சிலரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியிருக் கிறார். ‘‘வழக்கை வாபஸ் பெற்றாலும், இப்போதுள்ள சட்டமன்றத்தின் ஆயுள்காலம் முடியும்வரை நீங்கள் ஏற்கெனவே ஜெயித்த தொகுதியில் மீண்டும் போட்டியிட முடியாது என்று கருதுகிறோம். ஒருவேளை போட்டியிட்டால், அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் செல்லமுடியும். அந்த வழக்கும் இழுக்கும். எனவே, வேறு ஒருவரைத்தான் ஆண்டிபட்டியில் நிறுத்தவேண்டிவரும்’’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். இதைப் பற்றியும் யோசித்து வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். 

தினகரனின் வலதுகரமான பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ வெற்றிவேல், ‘‘வழக்கை வாபஸ் வாங்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்தால், சபாநாயகர் அவரது வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயித்துவிட்டார் என்று ஊர்ஜிதமாகிவிடும். சபாநாயகரின் தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் சபாநாயகரை ஜெயிக்கவிடக்கூடாது. நீதிமன்றத்தில் ஜெயித்த பிறகு சட்டசபைக்குள் வெற்றிகரமாக நுழையவேண்டும் என்று காத்திருக்கிறேன்’’ என்கிறார்.

மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விமலா எடுக்கும் முடிவில் இவர்களின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.