Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பா - ஜெயமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா-1, அழியா ஊற்று

- ஜெயமோகன்

europ1

2016 வரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய’ உலகங்கள். இன்றைய நாகரீகம் உருவாகத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் குடியேறி சமைத்துக்கொண்டவை. நான் இந்திய எல்லையைக் கடந்து சென்ற முதல் அயல்நாடு கனடா. 2001 செப்டெம்பரில் அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றேன். முதல்வெளிநாடு என்பது எவருக்கும் எண்ண எண்ணக் கிளர்ச்சியூட்டும் நினைவு. இன்றும் நயாகராவும், மேப்பிள்காடும், டிம் ஹார்ட்டன் டீக்கடையில் அமர்ந்து பேசிய இலக்கியமும் நினைவில் இனிக்கின்றன.

அதன்பின்னர் 2006 ல் சித்ரா ரமேஷ் முயற்சியால் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து மலேசியாவுக்கும் சென்றேன். 2009 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு நோயல் நடேசன் அவர்களின் அழைப்பால் சென்றேன். அங்கிருந்து வந்ததுமே 2009 ஜூலையில் அமெரிக்கா சென்றேன். நண்பர் திருமலைராஜனும், சிறில் அலெக்ஸும் ஏற்பாடுசெய்திருந்த வாசகர் சந்திப்புகள்.

eu2

சுந்தர ராமசாமி ஒர் அவதானிப்பை முன்வைப்பதுண்டு. நேராகச் செல்லும் சாலை வளைந்து வளைந்து செல்லத் தொடங்கினால், அகன்ற சாலை இடுங்கத் தொடங்கினால், ஆறு வரப்போகிறது என்று பொருள். ஆறு இருக்குமிடத்தில் முன்னரே மக்கள் செறிவாகக் குடியேறி ஊர்களை அமைத்திருப்பார்கள். அங்கே வழிகள் வளைந்தாகவேண்டும். இடுங்கியாகவேண்டும். கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கண்ட மாபெரும் சாலைகள் அந்த நிலம் புதியது என்பதற்கான சான்றுகள் என நினைத்துக்கொண்டேன்

கனடா கிட்டத்தட்ட வெற்றிடமாக கிடந்த நிலப்பரப்பு. அங்கே சென்றமைந்த ஐரோப்பியக் குடியேறிகள் உருவாக்கியது அந்நாடு. கனடாவின் நீட்சியாகவே நான அமெரிக்காவைக் கண்டேன். பலவகையான நிலங்களுடன் விரிந்துபரந்துகிடந்த அந்த மாபெரும் நாடு இன்னமும்கூட முழுமையாகக் கண்டடையப்படாதது என்று தோன்றியது. சிங்கப்பூரும் புதியநிலம்தான்.ஒரு பழைய செம்படவச் சிற்றூர் லீ க்வான் யூ என்னும் தலைவரின் ஒருங்கிணைப்பால், மேற்குநாடுகளின் ஆதரவால் பெருநகரென்றும் நாடென்றும் ஆனது அது.

eu3

மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் பழங்குடி நிலங்கள். அங்கு இன்றுகாணும் அனைத்தும் சென்ற சில நூற்றாண்டுகளாக உருவானவை. ஆஸ்திரேலியாவிலும் மலேசியாவிலும் பயணம் செய்யும்போது இந்தியவிழிகளுக்கு அந்நிலம் ஆளில்லாமல் ஒழிந்து கிடப்பதாகவே உளமயக்கு ஏற்படும்

இந்தப் புதுநிலங்களுக்கு உரிய முதல் பொதுத்தன்மை இவை ‘வரலாறற்றவை’ என்பதே. சில நூறாண்டுகளின் குடியேற்ற – ஆதிக்க வரலாறே இவற்றில் உள்ளது. அதை ‘இளம் வரலாறு’ என்று சொல்வேன். அது சுண்ணக்கல் போன்றது. காலத்தால் இறுகி இறுகித்தான் அது பளிங்கு ஆக முடியும். வரலாற்றின் நிகழ்வுகள் காலத்தின் அழுத்தத்தால், மொழி அதன்மேல் ஓயாது அலையடித்துக்கொண்டிருப்பதனால் மெல்ல மெல்ல தொன்மங்கள் ஆகின்றன. வரலாற்றுச் சின்னங்கள் படிமங்களாகின்றன. இளம் வரலாறு நமக்கு செய்திகளின் தொகையாகவே வந்து சேர்கிறது. முதிர்ந்த வரலாறு உணர்வுகளாக, கனவுகளாக வந்து சேர்கிறது. செய்தித்தாளுக்கும் இலக்கியப்படைப்புக்குமான வேறுபாடு போன்றது இது.

eu4

பேரிலக்கியப் படைப்பு போல தொடத்தொடத் திறக்கும் ஆழம் கொண்டதாக, நமக்கே உரிய உட்பொருட்களை அளித்துக்கொண்டே இருப்பதாக வரலாறும் மாறக்கூடும். அதற்கு அவ்வரலாறு பற்பல அடுக்குகள் கொண்டதாக ஆகவேண்டும். அதன் ஒவ்வொரு புள்ளியும் பலமுனைகளில் திறக்கப்படவேண்டும். அதை வரலாற்றாசிரியர்கள் ஓர் அளவுக்குமேல் செய்யமுடியாது. அதைச் செய்பவை இலக்கியங்கள். பேரிலக்கியங்களில் வரலாறும் தத்துவமும் சமூகவியலும் அன்றாடவாழ்க்கையும் ஒன்றாகக் கூடிக்கலக்கின்றன. அந்த ஒட்டுமொத்தமே வரலாற்றை பெருகச் செய்கிறது. காடாகி நிற்பது மண்ணின் சுவையே. இலக்கியங்களாக ஆகும்போதே மண் பொருள் பெறுகிறது

வரலாற்றை சந்திக்கும்போது நாம் அடையும் விம்மிதம், உளவிரிவு, எண்ணப்பெருக்கு ஆகியவை வரலாறு அவ்வாறு தொன்மமும் படிமமும் ஆக மாறி ஆழம் கொள்ளும்போது உருவாகின்றவைதான். நான் கண்ட புதிய உலகங்களின் வரலாறு வியப்பூட்டியது, சித்திரங்களாக மாறி நினைவில் நிறைந்தது. ஆனால் இந்தியாவில் பயணம் செய்யும்போது உருவாகும் உணர்வுக்கொந்தளிப்புகளும் கனவும் அப்பயணங்களில் பெரும்பாலும் உருவாகவேயில்லை. அது இந்தியா என் நாடு என்பதனாலா என நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். புதிய உலகங்களில் உள்ள நவீனத்தன்மையாலா என்று எண்ணியிருக்கிறேன்.

eu5
2012 செப்டெம்பரில் நமீபியா சென்றபோது அவ்வெண்ணம் மாறியது. ஆப்ரிக்கா ஒரு தொல்நிலம். நமீபியாவின் மணல்பரப்பும் கலஹாரியும் காலமே அற்ற பாலை வெளி. அங்கும் நான் ஒருவகை புத்தெழுச்சியைத்தான் உணர்ந்தேன். இயற்கையில் ஒரு விலங்கென நின்றிருப்பதன் விரிவை. ஆனால் இமையத்தில், கங்கைக்கரையில் நான் அறிந்த அந்தக் கனவை அடையவில்லை. அப்போது தோன்றியது அக்கனவை உருவாக்குவது நிலம் அல்ல என. நிலத்தை படிமங்களாக ஆக்கும் வரலாறுதான் அந்நிலங்களில் விடுபடுகிறது

சென்ற 2016 ல் நான் முதல்முறையாக ஐரோப்பாவை கண்டேன்.  ஜூன் 10 ஆம் தேதி சென்னையிலிருந்து அருண்மொழியுடன் கிளம்பி அபுதாபி வழியாக லண்டனைச் சென்றடைந்தேன். நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, சதீஷ், பிரபு, சிறில் அலெக்ஸ், கிரிதரன் ராஜகோபாலன் ஆகியோர் வரவேற்றனர். நண்பர்களின் இல்லங்களில் தங்கியபடி லண்டனையும் சூழ்ந்திருந்த இங்கிலாந்தின் சிற்றூர்களையும் பார்த்தேன். அங்கிருந்து காரில் கிளம்பி பிரான்ஸ் வழியாக இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம் வந்து மீண்டும் லண்டன் திரும்பி ஊருக்கு மீண்டேன். முதல்கணம் முதல் ஐரோப்பா எனக்கு முற்றிலும் ஆழ்ந்த அனுபவமாக, வரலாற்றுத்தரிசனமாக இருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை மீளமுடியாமல் ஆழ்த்திவைக்கும் கனவு. நாற்பதாண்டுகளாக என்னை சுழற்றியடிக்கும் இந்தியா என்னும் கனவுக்குச் சற்றும் குறைவில்லாதது

விக்டர் ஹ்யூகோ

விக்டர் ஹ்யூகோ

லண்டனின் தொன்மையான தெருக்களில் நண்பர்களுடன் நடந்தேன். சில கணங்களிலேயே ஆழ்ந்த கனவுநிலையை அடைந்தேன். கனவுகள் அனைத்துக்கும் ஒரு பொதுக்கூறு உண்டு, அவை நம்மை கிளர்ச்சியும் அச்சமும் கொள்ளச் செய்யும்போதே நாம் முன்னர் அறிந்தவையாகவும் இருக்கும். லண்டன் நான் நன்கறிந்த்தாகத் தோன்றியது. அதன் கல்வேய்ந்த இடுங்கிய தெருக்கள், நான்கடுக்கு மாளிகைகளின் சாம்பல்நிறச் சுவர்கள், கண்ணாடிச்சாளரங்களில் தெரிந்த வானொளி. புனைகதைகள் வழியாக பலநூறு முறை நான் உலவிய நகர். அங்கிருந்த ஒவ்வொன்றும் வரலாற்றின் ஆழம் கொண்டிருந்தன. புனைவிலக்கியத்தால் கனவூட்டப்பட்டிருந்தன.

லண்டனின் ஓசைகளை இப்போதும்கூட நினைவுறுகிறேன். பெரும்பாலான கட்டிடங்களின் வெளிப்பக்கம் மிகப்பழையது. சுண்ணக்கல்லாலோ மணல்கல்லாலோ ஆன சுவர்கள். அரிதாக ஆழ்சிவப்புச் செங்கற்கள். பல கட்டிடங்களில் செங்கற்களில் ஒரு சில உதிர்ந்துபோன இடைவெளிகள். கல்லால் ஆன அடித்தளங்களில் சிலசமயம் திறக்கும் சிறு சாளரங்கள். சில இடங்களில் சாலைப்பரப்புக்கு அடியிலேயே இறங்கிச்செல்லும் படிகள் சென்றடையும் அறைகளை காணமுடிந்தது. அவ்வப்போது பெய்து சுவடறியாமல் மறையும் மழை. இந்தியத்தோலுக்கு எப்போதும் இருக்கும் குளிர். பெரும்பாலானவர்கள் தோள்களைக் குறுக்கியபடி வேகமாக நடந்தனர். பெரும்பாலானவர்கள் குடை வைத்திருந்தார்கள். நீளமான மழைமேலாடைகள் மங்கலான மழையொளியில் நெளிந்தசைய அவர்கள் மிகப்பெரிய மீன்கள் போல எனக்குத் தோன்றினார்கள்.

டிக்கன்ஸ்

டிக்கன்ஸ்

ஐரோப்பா என்னும் ‘கருத்து’ என்னுள் குடியேறி நெடுங்காலமாகிறது. சொல்லப்போனால் இந்தியா என்னும் கருத்துடன் இணைந்தே அதுவும் வந்தது. இந்தியாவை ஐரோப்பாவின் கண்கள் வழியாகப் பார்ப்பதும், இந்தியாவையும் ஐரோப்பாவையும் எதிரெதிரென வைப்பதும் பின்னர் சிந்தனையில் அறிமுகமாயின.ஆனால் நானறிந்த ஐரோப்பா நான் சொற்கள் வழியாக உருவாக்கிக்கொண்ட உருவகம்தான். நேரடியாக அந்த மண்ணில் கால்வைக்கையில் அந்த பிம்பங்கள் உடைந்து சிதறியிருக்கவேண்டும். அதையே நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவை மேலும் மேலும் கூர்மையும் தெளிவுமே கொண்டன.

ஐரோப்பாவின் அத்தனை இடங்களிலும் நான் முன்னரே வாழ்ந்திருந்தேன். நாஸ்தர்தாம் பேராலயத்தில் நான் நாஸ்தர்தாமின் கூனனைச் சந்தித்து உடனுறைந்தது என் பதிமூன்றாவது வயதில். பாரீஸ் நகரின் மக்கள் கொந்தளிப்பு வழியாக அச்சமும் பதற்றமுமாக நான் அலைந்தது பதினைந்தாவது வயதில் டிக்கன்ஸின் இருநகரங்களின் கதையை வாசித்தபோது. லூவர் கலைக்காட்சியகமும், வத்திகான் மாளிகையும், கொலோன் பேராலயமும் நான் ஆழ்ந்து அறிந்தவையாக இருந்தன.

தாமஸ் மன்

தாமஸ் மன்

அப்போது ஒரு புனைகதை வழியாகவே நான் ஐரோப்பாவைப்பற்றிச் சொல்ல முடியும் என்று தோன்றியது. அத்துடன் நான் எழுதிக்கொண்டிருந்த வெண்முரசின் கனவுக்குள் வலுவாக ஊடுருவி அதை கலைத்தன ஐரோப்பா அளித்த உளச்சித்திரங்கள். மூர்க்கமாக அவற்றை அள்ளி ஒதுக்கி அப்பால் வைத்துவிட்டே என்னால் வெண்முரசில் இறங்க முடிந்தது.  இப்போது என் எண்ணங்களை தொகுத்துச் சொல்லிக்கொள்ளலாம் என தோன்றுகிறது. இப்போது இவ்வாறு தொகுக்காவிட்டால் இவை நினைவில் சிதறிப்போய்விடலாம்.

இவை வெளியே இருந்து வந்து நோக்கிச் செல்பவனின் பார்வைகள். அங்கே சென்று வாழ்பவர் அடையும் புரிதல்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அயலவன் அடையும் பலவற்றை அங்கிருப்போர் அடைவதில்லை. விலக்கமும் தெளிவை அளிக்கக்கூடும். மேலும் ஐரோப்பாவைப் புரிந்துகொள்வது நான் என்னைப்புரிந்துகொள்வதும்கூட

eu0

சென்ற 2000த்தில் மலையாள மனோரமா நாளிதழ் லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த ஒரு பட்டியலை அதன் இரண்டாயிரமாண்டு சிறப்பு மலரில் வெளியிட்டிருந்தது. அதை நான் மொழியாக்கம் செய்தேன். 2000 ஆண்டு உலகவரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகள் இரண்டாயிரத்தை அது பட்டியலிட்டிருந்தது. சீனாவில் ஒரு அரசவம்சம் முடிவுக்கு வருவது, தென்கிழக்காசியாவில் ஒரு பேரரசு அழிவது ஒரு நிகழ்வு. காண்டர்பரி ஆர்ச்பிஷப் பதவி ஏற்பது ஒரு நிகழ்வு. அந்த அசட்டுத்தனத்துக்கு எதிராக அப்போது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.அப்போது வந்த ஒரு கேலிச்சித்திரம் கூட நினைவுள்ளது. உலகம் என்னும் தர்ப்பூசனியில் ஐரோப்பா என்னும் கீற்று தராசின் ஒரு தட்டில். மறுதட்டில் எஞ்சிய உலகு. ஐரோப்பாதான் கீழே இருக்கிறது
உண்மையிலேயே ஐரோப்பியர் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவே உலகமென நம்புபவர்கள். சிந்தனையாளர்கள்கூட. உலகையே ஐரோப்பிய விழிகளால் கண்டு இறுதியாக மதிப்பிடவும் அவர்களுக்குத் தயக்கமில்லை. சென்ற ஐம்பதாண்டுக்கால கீழைநாட்டு ,ஆப்ரிக்க வரலாற்றெழுத்து என்பது ஐரோப்பா உருவாக்கிய வரலாற்றுக்கு எதிரான , அவர்களால் விடப்பட்டுவிட்ட வரலாற்றை எழுதும் முயற்சி என்பதைக் காணலாம். ஆனால் மறுபக்கம் உலகவரலாற்றை புறவயமாக எழுதும் முயற்சியே ஐரோப்பாவால் முன்னெடுக்கப்பட்டது என்பதும் உண்மை.

2016-06-18 21.17.15

ஐரோப்பா சென்ற இரண்டாயிரத்தைநூறாண்டுகளாக மானுட நாகரீகத்தின் மிக முக்கியமான ஊற்றுநிலமாக இருந்திருக்கிறது. உலகசிந்தனைகள், கலைகள் அனைத்தையும் முன்னெடுக்கும் முதன்மைவிசை அது. ஐரோப்பாவின் தாக்கம் இல்லாத பண்பாடு என இன்று உலகில் எதுவுமே இல்லை. அப்பண்பாடுகளின் மலர்ச்சிக்கும், பிறபண்பாடுகளுடனான உறவாடலுக்கும் ஐரோப்பிய ஊடாட்டம் களம் அமைத்துள்ளது. இன்றுநாம் காணும் உலகப்பண்பாடு என்பது ஐரோப்பியப் பண்பாட்டுக்கூறுகளால் முடைந்து ஒன்றிணைக்கப்பட்டதுதான். இன்றைய உலகின் நவீன ஜனநாயகவிழுமியங்கள், அரசியல்முறைமைகள் ஐரோப்பாவில் விளைந்தவை.

மறுபக்கம் சென்ற முந்நூறாண்டுகளில் ஐரோப்பாவின் காலனியாதிக்கம் உலகநாகரீகங்களைச் சூறையாடியிருக்கிறது. பெரும் பஞ்சங்களுக்குக் காரணமாகியிருக்கிறது. உலகப்போர்களினூடாக பேரழிவுகளை உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பாவில் உருவான நுகர்வுப் பண்பாடும், முதலீட்டியமும் உலகை அடக்கி ஆள்கின்றன. இன்றும் உலகின்மேல் ஐரோப்பாவின் மறைமுகப் பொருளியல் ஆதிக்கம் உள்ளது

ஐரோப்பாவை இவ்விரு முனைகளில் நின்றுதான் புரிந்துகொள்ளமுடியும். இரண்டும் இரண்டு உண்மைகள். ஒன்றை ஒன்று மறுப்பவை அல்ல, ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்பவை. வற்றாத பேராற்றல் ஒன்றின் ஊற்று அது என்றே நான் புரிந்துகொள்கிறேன். அது நித்ய சைதன்ய யதியின் கூற்று. ஆற்றல் ஒன்றே, வெளிப்பாட்டுமுறையே அழிவோ ஆக்கமோ ஆக அதை மாற்றுகிறது

k

மீண்டும் வருவேன் என அப்போதே தெரிந்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இப்போது 2018 ல் மீண்டும் ஐரோப்பா கிளம்பும்போது வாசித்து நிறுத்திவிட்டிருந்த ஒரு பெருநூலை விட்ட இடத்தில் இருந்து தொடங்குவதுபோலத்தான் தோன்றியது. 2015 நவம்பரில் இந்தோனேசியாவிற்குச் சென்று பரம்பனான் பேராலயத்தையும், போராப்புதூர் தூபியையும் பார்த்தேன். 2018 ஜூலையில் கம்போடியா சென்று ஆங்கோர்வாட் ஆலயத் தொகையைப் பார்த்தேன். வழக்கம்போல இந்திய விரிநிலத்தில் பயணம் செய்தேன். தொல்லுலகினூடாகச் சென்று கொண்டிருந்த என் உள்ளம் இன்னும் ஆழமாக ஐரோப்பாவை சென்று தொட்டு மீண்டுகொண்டிருந்தது.

2018 ஆகஸ்ட் 4 அன்று சென்னையிலிருந்து கிளம்பி ஃப்ராங்க்பர்ட் சென்றிறங்கினேன். விமானம் தரையிறங்குவதுவரை தூங்கிக்கொண்டிருந்தேன். தட் என அந்தப் பேருடல்பறவை நிலம்தொட்டபோது ‘புடன்ஃபுரூக்ஸில் இறங்கிவிட்டேன்’ என்று அரைத்துயிலில் எண்ணம் வந்தது. ‘புடன்புரூக்ஸிலிருந்து அடுத்து எங்கே செல்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டேன். அதன்பின்னர்தான் அது தாமஸ் மன்னின் நாவல் என நினைவுக்கு வந்தது. ஃப்ராங்க்பர்ட் என நினைவைத் திருத்திக்கொண்டேன். பெட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது மீண்டும் அந்த ஊரின் பெயர் புடன்புரூக்ஸ் என்றே ஞாபகம் வந்தது. அதை தவிர்க்கமுயன்றபின் ஏன் தவிர்க்கவேண்டும், இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். எனக்கு ஜெர்மனி என்றால் தாமஸ் மன்தான்.

 

 

https://www.jeyamohan.in/112238#.W4hYhS_TVR4

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, கிருபன் said:

நான் இந்திய எல்லையைக் கடந்து சென்ற முதல் அயல்நாடு கனடா.

அயல்நாடு என்றால் அதன் அர்த்தம் என்ன? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அயல்நாடு என்றால் அதன் அர்த்தம் என்ன? :rolleyes:

அயல்நாடு

 
 

பெயர்ச்சொல்

  • 1

    வெளிநாடு.

 

https://ta.oxforddictionaries.com/விளக்கம்/அயல்நாடு

 

அயல்

 
 

பெயர்ச்சொல்

  • 1

    உறவுக்குள் அமையாதது; அந்நியம்.

     

    ‘என் மகனுக்கு அயலில்தான் பெண்ணெடுத்திருக்கிறோம்’
     

     

  • 2

    (ஒருவர் வசிக்கும் பகுதியை) ஒட்டியிருக்கும் பகுதி; அண்டை.

     

    ‘அயலில் நடப்பது ஒன்றும் அவனுக்குத் தெரியாது’
     
    ‘அயல் வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு இருக்கிறது’

     

  • 3

    தன் நாட்டைச் சேராதது.

     

    ‘அயல் மொழி இலக்கியம்’
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயல் என்றால் அக்கம்பக்கம்,அருகாமை என்பது என் கருத்து.

அயல் கனடா என்றால் தூர நாடுகள் செவ்வாய்க்கிரகம் மற்றும் சனிக்கிரகம் போன்றவற்றில் இருக்கலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா-2, சொல்லில் எஞ்சுவது

london1

எழுத்தாளர் இடங்களுக்கு அழைத்துச்செல்லும் இளம் எழுத்தாளர்

2016 ஜூன் மாதம் எங்கள் லண்டன் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு லண்டனில் வசித்த இலக்கியவாதிகளின் இல்லங்கள் மற்றும் அவர்கள் வழக்கமாக வரும் மாலைவிடுதிகள் வழியாக ஒரு சுற்றுலா. வழக்கத்துக்கு மாறாக ராய் மாக்ஸம் அதில் வந்துகலந்துகொண்டு சுற்றுலா முழுக்க நடந்து வந்தார். “புதிய பப் எதையாவது காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கண்ணடித்தபடிச் சொன்னார். எங்கள் வழிகாட்டி ஒர் ஆய்வுமாணவர், எழுத்தாளராக முயல்பவர். ராய் மாக்ஸமை அறிமுகம் செய்தபோது அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடைய தேநீர் குறித்த நூலை வாசித்திருந்தார்

லண்டனில் வாழ்ந்த எழுத்தாளர்கள் என் நினைவில் எழுந்தபடியே இருந்தார்கள். வழிகாட்டியின் பேச்சிலும் தாக்கரே, டபிள்யூ டபிள்யூ ஜேகப்ஸ், எமிலி பிராண்டே, டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின் என பெயர்கள் வந்துகொண்டே இருந்தன. என்ன சிக்கலென்றால் இவர்களை கேள்விப்பட்ட நாளிலிருந்து லண்டன் என்னும் நகரம் என் மனதில் விரிந்துபரந்த வெளியாக மாறிக்கொண்டே இருந்தது. நடக்கவைத்தே அழைத்துச்சென்ற வழிகாட்டி அந்நகரை மிகச்சிறிதாக ஆக்கிவிட்டிருந்தார். திடீரென லண்டன் நாகர்கோயில் அளவுக்கே ஆகிவிட்டதுபோல ஒரு மனப்பிரமை.

lon3

லண்டன் நகர் மையத்தில் 77, பரோ ஹை தெருவில் [Borough High Street] இருக்கும் ஜார்ஜ் இன் என்னும் உணவு விடுதியின் முன்னாலிருந்து பயணம் ஆரம்பித்தது. இந்த விடுதி முந்நூறாண்டு பழைமையானது என்றார். பதினாறாம் நூற்றாண்டு முதல் அந்த விடுதி செயல்படுகிறது. ஷேக்ஸ்பியரே அங்கே வந்து உண்டு குடித்திருக்கிறார். டிக்கன்ஸின் நாவலொன்றில் அவ்விடுதி பற்றியக் குறிப்புகள் உள்ளன . இவை அங்கே எழுதி வைக்கப்பட்டிருந்தன. உண்மையா இல்லையா என நம்மால் சோதித்தறியமுடியாது. அந்த கோணத்தில் பழைமையான அவ்விடுதியைப் பார்ப்பது உள எழுச்சியை அளிப்பதாக இருந்தது

முதல்முறையாக லண்டனின் அக்காலத்தைய கணப்புகளைப் பார்த்தது அங்கேதான். மின்கணப்புகளின் காலகட்டத்தில் அவை அர்த்தமற்ற நினைவுச்சின்னங்கள். அக்கணப்புகள் எரிந்த நாட்களில்தான் லண்டன் உலகத்தின் நவீன சிந்தனையின் மையமாக இருந்தது. ஷேக்ஸ்பியர் முதல் ஜேம்ஸ் ஜாய்ஸ் வரை, ஜே.எஸ்.மில் முதல் டி.எஸ். எலியட் வரை, ஜான் ஹோப்ஸில் இருந்து ஏ.என்.வைட்ஹெட் வரை, ஃப்ரான்ஸிஸ் பேக்கன் முதல் சார்ல்ஸ் டார்வின் வரை முந்நூறாண்டுகள் அறிவின் அலைக்கொந்தளிப்பு நிகழ்ந்தது. இன்றும் அறிவியலிலும் தத்துவத்திலும் பிரிட்டிஷ் அறிவியக்கம் தொடர்கிறது என்றாலும் இலக்கியத்தில் அது எரிந்தெழுந்த காலங்கள் வரலாறாக மாறிவிட்டிருக்கின்றன. ஒருகாலத்தில் லண்டன் தீவிபத்துக்களுக்குப் புகழ்பெற்றது. கணப்புகள் எல்லைமீறுவதன் விளைவு. ஜார்ஜ் இன்னில் பல கணப்புகளில் செயற்கையாக எரியா விறகுகளை வைத்திருந்தனர்.

lon4

லண்டனின் தெருக்களில் செங்கற்களையும் கருங்கற்களையும் பாவியிருந்தனர். சற்று அப்பாலிருந்து நோக்க அவ்வெளி மிகப்பெரிய முதலைதோற்பரப்பு போலத் தோன்றியது. இடுங்கலான தெருக்கள் அதே தொன்மையுடன் பேணப்படுகின்றன. இருபுறமும் சென்றநூற்றாண்டுகளைச் சேர்ந்த கட்டிடங்கள். பெரும்பாலானவை இரண்டாம் உலகப்போரின் ஜெர்மானியக் குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டவை. மீண்டும் அதே வடிவில் கட்டப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பாசிப்பரவலையும் நீர்க்கருமையையும்கூட அப்படியே திரும்பக்கொண்டு வந்துவிட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன்.

வழிகாட்டி சொன்னதற்கும் மேலாக நானே கற்பனை செய்துகொண்டேன். ஜேன் ஆஸ்டின் இந்த தெருக்களில் சாரட் வண்டியில் சென்றிருப்பார். மேரி கெரெல்லி இந்தத் தெருக்களில் நடந்திருக்கக் கூடும் .அப்போதே தண்டவாளங்களில் குதிரைகள் இழுத்துச்செல்லும் வண்டிகள் வந்துவிட்டிருந்தன. அவை ஓசையின்றி செல்லும் என்பதனால் வண்டிகளின் வலப்பக்கம் மிகப்பெரிய வெண்கல மணியைக் கட்டி அடித்தபடியே செல்வார்கள்.நகரமே அந்த மணியோசையால் நிறைந்திருக்கும். அவற்றுக்குமேல் தேவாலய மணியோசைகள்.  லண்டன் உட்பட ஐரோப்பிய நகர்கள் அனைத்திலுமே நகர்மையத்திலேயே வைக்கோல்சந்தை என்னும் பெயர்கொண்ட ஓர் இடம் உள்ளது. லண்டனின் ஹேமார்க்கெட் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் உள்ளது. அக்காலத்தில் நகரம் குதிரைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்று டீசல்,பெட்ரோல் போல அன்று வைக்கோல் நகரை இயக்கும் ஆற்றலாக இருந்திருக்கிறது.இன்று வண்டிப்புகை போல அன்று குதிரைச்சாணி

lon5

லண்டனை நேரில் பார்ப்பதுவரை ஆங்கில இலக்கியங்களில் வரும் ‘செய்தியோட்டச் சிறுவன்’ [Erraand boy] என்ற விஷயம் எனக்குப் பிடிகிடைக்கவேயில்லை. ஒருவருக்கொருவர் செய்திகளைச் சிறிய காகிதச்சுருளில் எழுதி சிறுவனிடம் கொடுத்தனுப்புகிறார்கள். இதற்கென்றே சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். லண்டனைப் பார்த்தபின் புரிந்தது, பெரும்பாலான பிரபுக்களின் வீடுகள் சிறுவர்கள் ஓடிச்சென்று குறிப்பைக் கொடுத்துவிட்டு திரும்ப ஓடிவரும் அளவுக்கு அருகருகேதான் இருந்திருக்கின்றன. தாக்கரே அந்தப்பக்கம் ஓரு மதுக்கடையில் இருக்க கூப்பிடு தூரத்தில் டிக்கன்ஸ் இந்தப்பக்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் சின்னச் சந்தில் தோளோடு தோள் முட்டி ‘மன்னிக்கவும்’ என தொப்பியை எடுத்து தாழ்த்தி வணங்கிவிட்டுச் சென்றிருக்கவும்கூடும்.

சார்ல்ஸ் டிக்கன்ஸ் வந்தமர்ந்து எழுதியதாகச் சொல்லப்படும் The Grapes என்னும் மதுவிடுதி Narrow Street,ல் உள்ளது. 1583ல் கட்டப்பட்ட இவ்விடுதியை சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவருடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார் அங்கே ஷேக்ஸ்பியர்கூட வந்து தங்கியிருந்தார் என்று சொல்லி அருகிலிருந்த ஒரு தங்கும் விடுதியின் சாளரத்தை வழிகாட்டி வெளியே நின்று சுட்டிக்காட்டினார்.

old-curiosity-shop-resized

சாத்தானின் மதுவிடுதி என அழைக்கப்பட்ட Prospect of Whitby அருகிலுள்ளது.எழுத்தாளர்கள் சந்திக்க உகந்த இடம்தான். ஜெருசலேம் விடுதி The Jerusalem Tavern இன்னொரு இடம். இது பதினாலாம் நூற்றாண்டு முதல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவை அனைத்துமே இன்று பழுதுபார்க்கப்பட்டு நல்லநிலையில் உள்ளன. பழமையின் தடையங்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, அவற்றை புதியனவாக்கி புழக்கத்திற்குக் கொண்டுவருவது ஐரோப்பாவின் இயல்புகளில் ஒன்று. பழைமையை தோன்றச்செய்யும்படி புதிதாகக் கட்டுவதுமுண்டு. இது வரலாற்றுடன் ஆழ்ந்த தொடர்பை உருவாக்குகிறது, சமகாலத்தை சென்றகாலத்துடன் இணைக்கிறது. கட்டிடங்கள் போல காலத்துடன் இணைந்தவை வேறில்லை. அந்த விடுதிகளில் ஒவ்வொரு பொருளும் குறியீடுகளும் அடையாளங்களுமாக ஆகிவிட்டிருந்தன. அங்கே அமர்ந்திருக்கையில் சென்ற காலம் ஆழ்மனத்தில் ஓடிக்கொண்டேதான் இருக்கும். அருகே அந்த இலக்கியமேதைகள் இருப்பதுபோன்ற பிரமை இருந்துகொண்டிருக்கும்

லண்டனில் சென்றகால எழுத்தாளர்கள் வாழ்ந்த மையங்கள் அவர்களுடைய டைரிக்குறிப்புகள், வாழ்க்கை வரலாறுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. Fitzroy Tavern அவற்றிலொன்று. அக்காலத்து உயர்தர மதுவிடுதி. டைலன் தாமஸ், ஜார்ஜ் ஆர்வல் போன்றவர்கள் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடம். முதல்,. இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் இலக்கியவாதிகள், கலைஞர்கள் சந்திக்கும் முக்கியமான மையம் ..ஃபிட்ஸ்ராய் காபிநிலையமாக 1883ல் டபிள்யூ. எம் ப்ரட்டன் என்பவரால் கட்டப்பட்டது. பல கைகள் மாறி இன்று ஒரு மதுநிறுவனத்திற்கு உரிமையானதாக உள்ளது.இன்று வெவ்வேறு இலக்கிய ஆர்வலர் அங்கு வந்துகொண்டிருந்த தங்கள் எழுத்தாளர்களுக்காக அங்கே நினைவுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள்

The Grapes [76 Narrow Street, E14]

The Grapes [76 Narrow Street, E14]

ப்ளூம்ஸ்பரி விடுதி, ஃபிரெஞ்ச் ஹவுஸ் விடுதி ஆகியவையும் இலக்கியமுக்கியத்துவம் உடையவை என்றார். புளூம்ஸ்பரி விடுதி விர்ஜீனியா வுல்ஃபுடன் தொடர்புள்ளது. டீன் தெருவிலுள்ள பிரெஞ்சு ஹவுஸ் விடுதியில்தான் சார்ல்ஸ் டிகால் பிரெஞ்சு மக்களுக்கு அவர் விடுத்த புகழ்மிக்க அறைகூவலை எழுதினாராம். சொல்லப்போனால் அங்குள்ள எல்லா மதுவிடுதிகளுமே இலக்கிய முக்கியத்துவம் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும். எழுத்தாளனுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன? இதெல்லாம் ஒருவகையான சுற்றுலாக் கவற்சிகள். இன்று உருவாக்கப்படும் நவீனத் தொன்மங்கள்

ஒருகட்டத்தில் அவர் சொன்னவற்றை பின் தொடரமுடியாமலாயிற்று. பெரும்பாலும் அக்காலத்தைய சில்லறைப் பூசல்கள். வம்புவழக்குகள். ராய் மிக ஆர்வமாகக் கேட்டுத்தெரிந்துகொண்டார். அங்கே நான் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் ஒருவரோடொருவர் பேசியபடிச் செல்வதை என்னுள் பார்த்துக்கொண்டிருந்தேன். டிக்கன்ஸின் கற்பனாவாதத்தைப் பற்றி ஜான்சன் என்ன சொல்லக்கூடும்? ஆனால் வால்டர் ஸ்காட்டுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் அவரைப் பிடித்திருக்கும்…திடீரென்று தோன்றியது, எங்களுடனேயே ஓர் ஆங்கில எழுத்தாளர் இருக்கிறார். ராய் மாக்சம் அந்த கதைகளைக் கேட்டு என்னை நோக்கி கண் சிமிட்டிப் புன்னகைசெய்தார்.

.

The_Jubilee_Hospital,_Neyoor_(p.322,_1891)_-_Copy

The_Jubilee_Hospital,_Neyoor_(p.322,_1891)_-_Copy

குமரிமாவட்டத்திற்கு லண்டன் மிக நன்கு தெரிந்த ஊர். குமரிமாவட்டத்தில் கடலோரங்களில் போர்ச்சுக்கீசியர்களால் 1730 வாக்கில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் கொண்டுவரப்பட்டது. [அதற்கு முன் கிபி ஏழாம் நூற்றாண்டிலேயே சிரியன் மிஷனைச் சேர்ந்த தாமஸ் கானாயியால் திருவிதாங்கோட்டில் அரைப்பள்ளி என்னும் தொன்மையான தேவாலயம் வந்துவிட்டது. அது அனேகமாக இந்தியாவின் முதல் கிறித்தவ தேவாலயமாக இருக்கலாம்] மிகவிரைவிலேயே 1809ல் களில் லண்டன் மிஷன் குமரிமாவட்டத்தின் உட்பகுதிகளில் பணியாற்றத் தொடங்கியது.நாகர்கோயில் அருகே உள்ள மயிலாடியில் வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே லண்டன் மிஷனரி சொசைட்டியின் சார்பில் உருவாக்கிய முதல் தேவாலயமே இங்கே சீர்திருத்தக் கிறித்தவத்தின் வருகையை உருவாக்கியது.

இன்று குமரிமாவட்டத்தில் உள்ள இரு பெரிய அமைப்புகள் லண்டன் மிஷன் இயக்கத்தால் உருவாக்கப்பட்டவை. தமிழகத்தின் மிகப்பழைய கல்லூரி என அறியப்படும் நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி 1818ல் சார்ல்ஸ் மீட் அவர்களால் நாகர்கோயிலில் ஆரம்பிக்கப்பட்டது. 1891ல் ஆரம்பிக்கப்பட்டநெய்யூர் ஜூபிலீ ஆஸ்பிட்டல் இன்று சி.எஸ்.ஐ ஆஸ்பத்திரியாக தொடர்கிறது. குமரிமாவட்டத்தில் லண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான தேவாலயங்களும் கல்விநிலைகளும் உள்ளன. இன்று அவை சி.எஸ்.ஐ அமைப்பின் பகுதிகளாக உள்ளன

the-george-inn

the-george-inn

இளமையில் லண்டனில் இருந்து வரும் துரைகளை நிறையவே பார்த்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் மதப்பிரச்சாரத்துக்காக வரும் பாதிரியார்கள். லண்டனின் குளிராடையிலேயே மேடையில் தோன்றுவார்கள். அதே ஆடை அணிந்த ஒருவர் அவர்களின் பேச்சை மொழியாக்கம் செய்வார். தேனீ வளர்ப்பு உட்பட பல்வேறு கைத்தொழில்களை உள்ளூரில் பரப்புவதற்காக வந்தவர்கள் இன்னொரு வகை. வேட்டிகட்டி மெல்லிய துணியில் சட்டை அணிந்து புண் போன்ற உதடுகளும் நரைத்த கண்களும் சிவப்பு தலைமயிரும் கொண்ட அவர்கள் எங்களுக்கு தீராத வேடிக்கைப்பொருட்கள். அக்காலத்தில் அமர்ந்துகழிக்கும் கழிப்பறை[ கம்மோடு] எங்களூரில் லண்டன் எனப்பட்டது. யாராவது லண்டன் என்றாலே வாய் பொத்திச் சிரிப்போம்.

நான் இளமையில் வாழ்ந்த முழுக்கோடு சிற்றூரின் மையமே அங்கிருந்த ஒய்.எம்.சி.ஏ தான். நூறாண்டு பழைமை கொண்ட அமைப்புஅது. அங்கே இருந்த லண்டன் மிஷன் பாதிரியார்கள் பேணிய தொன்மையான நூலகம் இளமையில் எனக்கு பெரிய புதையலாகவே தென்பட்டது. நான் எழுத்துக்கூட்டி மூச்சுப்பிடித்து படித்து முடித்த முதல் ஆங்கில நூல் ஐவன்ஹோ. வால்டர் ஸ்காட் என்றபெயரை பெருமிதத்துடன் சொல்லி அலைந்தது இன்றும் நினைவிலிருக்கிறது. பள்ளியில் அந்நூலின் கதையை சொல்லிச்சொல்லி பலமடங்கு பெரிதாக்கிக் கொண்டேன்.

.

shake

Shakespeare’s Globe

ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் இருந்த 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் வழியாகவே நான் இலக்கியத்தைப் பொறுமையாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன். பெரியபெரிய சொற்றொடர்கள். நீண்ட உரையாடல்கள். அதைவிட நீண்ட கடிதங்கள். பல பக்கங்களுக்கு நீளும் விவரணைகள். டெஸ் ஆஃப் ஊபர்வில்ஸில் டெஸ் தன் ஊரைவிட்டுக் கிளம்பிச்செல்லவே பல பக்கங்கள் ஆனதை மெய்மறந்து வாசித்து அவள் போய் சேர்ந்ததும் நானே நீண்ட நடை ஒன்றை முடித்ததுபோல் உணர்ந்ததை நினைவுறுகிறேன்

நீளமான சித்தரிப்புகளுக்கு இருக்கும் ஆற்றலை நெடுங்காலம் கழித்தே நம்மால் உணரமுடியும். அவை மெதுவாகச் செல்வதனாலேயே அவற்றில் நாம் நெடுநேரம் வாழ்கிறோம். நுட்பமாக நினைவில் நிறுத்திக்கொள்கிறோம். ஹெமிங்வே பாணி நவீனத்துவநாவல்களின் நிலமும் வாழ்க்கையும் வெறும் செய்தியாகவே நினைவில் எஞ்சுகின்றன. பழைய பிரிட்டிஷ் , ருஷ்ய நாவல்களிலோ நாம் வாழ்ந்து மீண்டிருப்பதாகவே உணர்கிறோம். அவ்வப்போது வண்டிகளில் ஏறியும் நடந்தும் அந்தப்பயணத்தை செய்துகொண்டிருந்தபோது பிரிட்டிஷ் நாவல் ஒன்றினூடாகச் செல்வதாகவே தோன்றியது. சலிப்பு என்பது நம் மூலை ஓய்ந்துவிடும் நிலை அல்ல. நம் மூளையின் வழக்கமான பாதைகள் ஓய்ந்து ஆழம் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் நிலை. நினைவுகூருங்கள், சலிப்பூட்டும் நாவல்களே நீண்டகாலம் நினைவில் நிற்கின்றன. சலிப்பூட்டாத பேரிலக்கியமென ஏதுமில்லை.

Fitzroy_Tavern_-_Fitzrovia_-_W1

Fitzroy Tavern

லண்டனில் பெரும்பாலான புத்தகப்பிரியர்கள் செல்லும் செயரிங் கிராஸ் சாலை. ஒருகாலகட்டத்தில் பழைய புத்தகங்களின் சொற்கம். இப்போது குறைவாகவே அங்கே புத்தகங்கள் விற்கப்படுகின்றன. பொதுவாக புத்தகக் கடைகளே சோர்ந்துதான் காணப்படுகின்றன. நிறைய ஊர்ப்பெயர்களை ஊட்டியில் வெள்ளைக்காரர்கள் வைத்திருக்கிறார்கள். செயரிங் கிராஸ் முன்பு பிரம்மராஜன் இருந்த இடம். The Pillars of Hercules  என்ற மதுவிடுதி 1910ல் கட்டப்பட்டது. 1733 முதல் அங்கே செயல்படுகிறது. டிக்கன்ஸின்  இருநகரங்களின் கதையில்  அது குறிப்பிடப்பட்டுள்ளது- எனக்கு ஞாபகமில்லை. சொல்லப்போனால் அவர் சொன்ன எதுவுமே எனக்கு தெரிந்திருக்கவில்லை. பின்னர் விக்கிப்பீடியாவிலிருந்தே பல செய்திகளை தெரிந்துகொண்டேன். அந்தச் சாலை டிக்கன்ஸின் கதாபாத்திரமான Dr Manette, நினைவாக மேனெட் சாலை என அழைக்கப்படுகிறது

உண்மையில் பப்கள் எனக்கு ஆர்வமளிக்காத இடங்கள். இலக்கிய மதுக்கடை என்ற கருதுகோளே அன்னியமானது. ஆனால் இந்தவகையான மதுக்கடைகள் வழியாகவே லண்டனில் இலக்கியம் வளர்ந்திருக்கிறது. நாஞ்சில்நாடன் வந்திருந்தால் ஒரு முழுநாளும் எல்லா மதுக்கடையிலும் அமர்ந்து ஒரு குவளைவீதம் அருந்தி சென்றுமறைந்த பேரிலக்கியவாதிகளின் ஆத்மாக்களுக்கு அணுக்கமானவராக ஆகியிருப்பார்.எந்த மதுக்கடைக்கும் உள்ளே நுழையாமல் வெளியே நின்று பார்த்துச்செல்வதென்பது ஒரு பிழைதான்.

holms

திருவனந்தபுரத்தில் கேரளா காஃபி ஹவுஸ் ஒரு காலத்தில் அப்படி இலக்கியவாதிகள் சந்திக்கும் இடமாக இருந்திருக்கிறது. நான் இரண்டுமுறை சென்றிருக்கிறேன். பி.கே.பாலகிருஷ்ணன்,  மலையாற்றூர் ராமகிருஷ்ணன், எஸ்.வி.வேனுகோபன்நாயர் போன்ற எழுத்தாளர்களையும் இயக்குநர்  ஜி,அரவிந்தனையும் அங்கே சந்தித்தேன். இன்று திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்.  அதற்கு முன் ஐம்பதுகளில் இன்றைய ஸ்ரீகுமார் திரையரங்கின் முன்புறம் அப்படி ஒரு மையமாக இருந்திருக்கிறது என சுந்தர ராமசாமியின் நினைவுகள். நாகர்கோயிலில் இருந்த போத்தி ஓட்டல் கவிமணி, கே.என்.சிவராஜபிள்ளை, வையாபுரிப்பிள்ளை, கே.கே..பிள்ளை போன்றவர்கள் வந்தமரும் மையமாக இருந்திருக்கிறது. சென்னையில்டிரைவ் இன்  உட்லண்ட்ஸ் ஓட்டல் சமீபகாலம் வரை எழுத்தாளர்கள், கலைஞர்களின் பொதுவான சந்திப்புப் புள்ளி. ஒருகாலத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியே அங்கேதான் நடக்கும்.

ஆனால் இவை எதற்கும் இங்கே எந்தவகையான முக்கியத்துவமும் இன்றில்லை. எழுத்தாளர்களின் கடந்தகால ஏக்கங்களில் மட்டும் வாழ்பவை. இடங்களில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்தான். ஆனால் ஒருகாலகட்டத்தின் சிந்தனைகள்  மேல் நமக்கு ஈடுபாடு இருக்கும்பட்சத்தில் அவை உருவான இடங்களும் முக்கியமாக ஆகிவிடுகின்றன. அவை அச்சிந்தனையின் படிமங்களாக மாறுகின்றன. .

ஷேக்ஸ்பியரின் குளோப் அரங்குடன் சுற்று முடிந்ததும் ராய் வழிகாட்டியின் முதுகைத்தட்டி வாழ்த்து தெரிவித்தார். நண்பர்கள் அளித்த மேலதிக பரிசை வழிகாட்டி நன்றியுடன் தலைவணங்கி பெற்றுக்கொண்டார். நான் லண்டனை முழுமையாகப் பார்த்துவிட்டதுபோன்ற திகைப்பை அடைந்தேன். டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார். ஒரு புதியநூல் அதற்குமுன் நாம் வாசித்த அத்தனை நூல்களையும் முழுமையாக மாற்றியமைத்துவிடுகிறது என்று. லண்டன் தெருக்களில் நடந்த அந்த ஒருநாள் நான் வாசித்த அத்தனை பிரிட்டிஷ் நாவல்களையும் மாற்றியமைத்துவிட்டது என உணர்ந்தேன்.

https://www.jeyamohan.in/112260#.W4liDi_TVR4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா-3, புறத்தோர்

Jeyamohan UK visit 248-COLLAGE

என் ஆரம்பகால வாசிப்புகளில் அதிகமும் பிரிட்டிஷ் நாவல்கள். என் அம்மாவுக்கு அவை பிரியமானவை. மேலும் குமரிமாவட்டத்தில் அவை எளிதாகக் கிடைக்கும். எங்கள் ஆசிரியர்களும் அவற்றைத்தான் பெரிதாகச் சொல்வார்கள். கல்லூரியில் எனக்கு ஆங்கிலம் கற்பித்தவர்கள் அமெரிக்காவில் இலக்கியம் முளைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக நம்பியவர்கள். ஏனென்றால் அவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்களிடம் படித்தவர்கள்.

ருஷ்யப்பெருநாவல்களில் பின்னர் நான் கண்டுணர்ந்த ஆன்மிகச் சிக்கல்கள், அடிப்படைக் கேள்விகள் எதையும் பிரித்தானிய நாவல்களில் கண்டடைந்ததில்லை. ஆகவே டிக்கன்ஸ் உட்பட எவருமே என்னை நெடுங்காலம் பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அவற்றின் புறவர்ணனைகளை மட்டுமே இப்போது நினைவுறுகிறேன். இரு விதிவிலக்குகள் மேரி கெரெல்லியும், ஜார்ஜ் எலியட்டும். இருவருமே பெண் எழுத்தாளர்கள்.

மேரி கொரெல்லி

மேரி கொரெல்லி

மேரி கொரெல்லி [Marie Corelli ]யின் இயற்பெயர் மேரி மாக்கே. 1855ல் லண்டனில் ஸ்காட்லாந்து கவிஞரான டாக்டர் சார்லஸ் மாக்கேக்கு அவருடைய வேலைக்காரியான எலிசபெத் மில்ஸிடம் அங்கீகரிக்கப்படாத மகளாகப்பிறந்தார். இசைக்கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதில் வெற்றிபெறாமல் எழுத ஆரம்பித்தார். மேரி கொரெல்லி என பெயர் சூட்டிக்கொண்டார். 1886ல் தன் முதல் நாவலை வெளியிட்டார். மேரி கொரெல்லி தன் புனைவுகளால் பெரும்புகழ்பெற்றார். ஆனால் அக்கால விமர்சகர்களால் ‘மிகையுணர்ச்சி நிறைந்த போலி எழுத்து’ என அவை நிராகரிக்கப்பட்டன. “எட்கார் ஆலன்போவின் கற்பனையும் குய்தாவின் நடையழகும் கொண்டவர், ஆனால் மனநிலை ஒரு தாதியுடையது” என அக்கால விமர்சகர் ஒருவர் எழுதினார்

அந்த வெறுப்புக்கு முக்கியமான காரணம் மேரி கொரெல்லியின் வாழ்க்கை. அவர் மணம் புரிந்துகொள்ளவில்லை. தன் தந்தையின் இல்லப்பணிப்பெண்ணாக இருந்த பெர்த்தா வ்யெர் [Bertha Vyver] ருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுடையது ஒருபாலுறவாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் மேரிக்கு ஓவியரான ஜோசஃப் செவெர்னுடன் ஆழ்ந்த உறவு இருந்திருக்கிறது. பதினொரு ஆண்டுகள் அவருக்கு தொடர்ச்சியாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் மணமானவரான செவெர்ன் அந்த உறவை பெரிதாகக் கருதவில்லை.

lon7

மேரியின் ஆர்வங்கள் குழப்பமானவை. பதினேழாம் நூற்றாண்டு கட்டிடங்களை மீட்டமைப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அக்காலத்தில் பிரபலமாக இருந்த Fraternitas Rosae Crucis போன்ற கிறித்தவ குறுங்குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.பழங்கால ஞானவாத கிறித்தவ மரபின் நீட்சியான தன்வதைக்குழுக்கள் இவை. இன்று பிரபலமாக உள்ள பெந்தேகொஸ்தே சபைகளைப்போல. அதேசமயம் மாற்றுச்சிந்தனையாளரான ஜான் ரஸ்கின் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். 1924ல் மறைந்தார். மேரி கொரெல்லி இறந்த பின் பெர்த்தா மேரியைப்பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

மேரி கொரெல்லி ஒதுங்கிப்போகும் இயல்பு கொண்டிருந்தார். மார்க் ட்வைன் உட்பட அன்றைய பல எழுத்தாளர்கள் மேரியைப்பற்றிய எதிர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். முதல் உலகப்போரில் உணவைப் பதுக்கிவைத்தார் என்னும் குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தமையால் பெரும்பான்மையானவர்களால் வெறுக்கப்பட்டார். இறப்புக்கு பின்னர் அவர் அனேகமாக நினைவுகூரப்படவே இல்லை.

george

ஜார்ஜ் எலியட்

ஜார்ஜ் எலியட் என்ற ஆண் பெயரில் எழுதிய மேரி ஆன் ஈவன்ஸ் வார்விக்‌ஷயரில் ராபர்ட் ஈவன்ஸுக்கும் கிறிஸ்டினா ஈவன்ஸுக்கும் மகளாக பிறந்தார். செல்வச்செழிப்புள்ள குடியில் பிறந்து உயர்கல்வியை அடைந்தாவர் ஜார்ஜ் எலியட். மேரி ஈவன்ஸ் மிக அழகற்ற தோற்றம் கொண்டிருந்தார் என்றும், ஆகவே அவருக்கு மணம் நிகழ வாய்ப்பில்லை என கருதிய தந்தை அவருக்கு அன்றைய சூழலில் பெண்களுக்கு அரிதானதும் செலவேறியதுமான கல்வியை அளித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இளமையிலேயே ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர், லுட்விக் ஃபாயர்பாக் ஆகியோருடன் பழகி உரையாடும் வாய்ப்பு அமைந்தது. ஆகவே அவருடைய மரபான கிறித்தவ நம்பிக்கை உடைந்தது.டேவிட் ஸ்டிராஸின் The Life of Jesus ஐ அவர் மொழியாக்கம் செய்தார். அதுதான் அவருடைய முதல் இலக்கிய முயற்சி. அதன்பின் ஃபாயர்பாகின் The Essence of Christianity யை மொழியாக்கம் செய்தார். அவருடைய மதமறுப்பு தந்தையை சினம் கொள்ளச்செய்தது. தந்தையின் இறப்புக்குப்பின் அவர் சுவிட்சர்லாந்துக்குச் சென்று அங்கே தங்கினார். 1850ல் லண்டன் திரும்பிய மேரி அன்றைய இடதுசாரி இதழான Westminster Review வின் இணையாசிரியராகப் பணியாற்றினார்.

800px-Marie_Corelli_-_the_writer_and_the

மேரி இலக்கியப்படைப்பாளியாகவும் அரசியல் விமர்சகராகவும் தொடர்ச்சியாகச் செயலாற்றியவர். அவருடைய முதல்நாவல் Adam Bede 1859 ல் வெளிவந்தது. அவருடைய Middlemarch முதன்மையான ஆக்கம் எனப்படுகிறது. பரவலாக படிக்கப்படுவது Silas Marner. நான் சிலாஸ் மார்னர் நாவலை கல்லூரி முதலாண்டு படிக்கையில் வாசித்தேன். பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர் என்னும் எண்ணம் உருவாகியது, அது இன்றுவரை மாறவில்லை.

lon8
மேரி சுதந்திரமான பல பாலுறவுகள் கொண்டிருந்தார். வெஸ்ட்மினிஸ்டர் ரெவ்யூவின் ஆசிரியர் ஜான் சாப்மான், தத்துவ ஆசிரியரான ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் ஆகியோருடனான உறவும் அவற்றில் அடங்கும். பின்னர் தத்துவவாதியான ஜார்ஜ் ஹென்றி லூயிஸுடன் [George Henry Lewes] அவருக்கு உறவு ஏற்பட்டது. ஜார்ஜ் லூயிஸ் ஏற்கனவே மணமானவர், ஆகவே அவ்வுறவு சட்டவிரோத உறவாகவே நீடித்தது. 1880ல் மேரி தன்னைவிட இருபது வயது குறைவானவரான ஜான் கிராஸை மணந்தார். அவருடன் வெனிஸ் சென்றபோது ஜான் கிராஸ் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பிழைத்துக்கொண்டார். அவ்வாண்டே தொண்டைத் தொற்றுநோயால் மேரி இறந்தார்.

மேரி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் புதைக்கப்படவில்லை. அவர் கிறித்தவ நம்பிக்கைகளை மறுத்தமையாலும் முறைகேடான பாலுறவுகள் கொண்டிருந்தமையாலும் அனுமதி மறுக்கப்பட்டது. அவருடைய உடல் ஹைகேட் சிமித்தேரிக்குக் கொண்டுசென்று அடக்கம் செய்யப்பட்டது. அக்காலத்தில் பொதுவாக மதமறுப்பாளர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள். கார்ல் மார்க்ஸின் கல்லறையும் அங்குதான் உள்ளது.

சிலாஸ் மார்னர் சித்தரிப்பு

சிலாஸ் மார்னர் சித்தரிப்பு

இருபெண்கள். இருவருமே வாழ்ந்தகாலத்தில் வெறுக்கப்பட்டார்கள். ஒருவகையான திமிருடன் எதிர்த்து நின்றனர். எழுத்தை தங்கள் ஆயுதமாகக் கொண்டனர். இருவருக்குமே மதம் முக்கியமான ஆய்வுப்பொருள். இருவருமே மதத்தை கவித்துவமாகவும் தர்க்கபூர்வமாகவும் நுணுகி நோக்க முயன்றனர். மேரி கொரெல்லி அரசியலற்றவர். ஜார்ஜ் எலியட் அரசியல் நிறைந்தவர். மேரி கொரெல்லி மறக்கப்பட்டார். ஜார்ஜ் எலியட் பிரிட்டிஷ் இலக்கியத்தின் வெற்றிகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறார்

ஹைகேட் சிமித்தேரிக்கு லண்டன் நண்பர்களுடன் சென்றபோது இந்த இரு எழுத்தாளர்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். நான் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுள் முதன்மையானவர்களாகக் கருதும் இருவருமே பெண்கள் என்பது ஆச்சரியப்படச் செய்தது. அவர்கள் இருவருக்குமே மதம்சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த தேடல் இருந்தது என்பது அவர்களை எனக்கு அணுக்கமாக ஆக்கியிருக்கலாம். ஆனால் அதற்கும் மேல் ஏதோ ஒப்புமை இருக்கவேண்டும் அந்தக்கோணத்தில் யோசித்ததே இல்லை. “ஏன் பெண்கள்?” என்று நானே கேட்டுக்கொண்டேன். எனக்குப்பிடித்த இன்னொரு பிரிட்டிஷ் எழுத்தாளரான ஸகி[ Saki]யை நினைவுகூர்ந்தேன்.

Hector Hugh Munro என்ற இயற்பெயர் கொண்ட ஸகி இவ்விரு எழுத்தாளர்களுக்கும் சமகாலத்தவர். [1870 -1916] ஸகி அங்கத எழுத்தாளர். பிரிட்டிஷ் பர்மாவில் பிறந்தவர். கல்கத்தா அன்றைய பிரிட்டிஷ் பர்மாவின் தலைநகர். ஸகி பிரிட்டிஷ் இந்தியாவின் காவல்துறை அதிகாரியாக இருந்த சார்லஸ் அகஸ்டஸ் மன்றோவுக்கு மைந்தனாகப்பிறந்தார். 1896ல் லண்டன் திரும்பிய ஹெச்.ஹெச்.மன்றோ ஸகி என்ற பேரில் எழுதலானார்

saki

ஸகி

ஸகி என்ற பெயரில் பெரும்பாலும் அறியப்படாதவராக ஒளிந்துகொண்டு அவர் எழுதியமைக்கு ஒரு காரணம் இருந்தது, அவர் ஒருபாலுறவுப் பழக்கம் கொண்டவர். அன்றைய பிரிட்டிஷ் ‘கனவானுக்கு’ அது மிக வெறுக்கத்தக்கப் பழக்கம். மன்றோ முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காகப் போரிட்டு பிரான்சில் உயிர்துறந்தார். அவருடைய இறப்புக்குப்பின் அவருடைய சகோதரி ஈதெல் அவர் எழுதி வைத்திருந்த சுயசரிதைக் குறிப்புகளை முழுமையாக அழித்து தங்கள் இளமைப்பருவத்தைப் பற்றிய நினைவுகளை நூலாக எழுதினார். பின்னாளில் ஆய்வாளர்கள் அது பெரும்பாலும் கற்பனை என நிராகரித்தார்கள்.

அன்றைய பிரிட்டிஷ் கனவான் என்னும் தோற்றமே எழுத்தாளர்களுக்கு இரும்புச்சட்டையாக ஆகிவிட்டதா? அவர்கள் உணர்வுரீதியாக அத்துமீறவும் ஆன்மிகமாக பித்துகொள்ளவும் அது தடையாக ஆனதா? கனவான் அல்லாமல் இருந்தமையால் ஸக்கி மேலெழுந்தாரா? பெண்கள் என்பதனால், சீமாட்டிகளாக இல்லாமலிருந்தமையால் மேரிகள் தங்களுக்கு அப்பால் செல்ல முடிந்ததா? அவர்கள் ஒடுக்கப்பட்டமையே பெருவழிகளிலிருந்து அவர்களை விலக்கியது. வெறுக்கப்பட்டமையே அழியாதவற்றை நோக்கி அவர்களைச் செலுத்தியது.

lon2

ஹைகேட் சிமித்தேரி லண்டனுக்கு வடக்கே உள்ளது. 1839ல் இன்றைய வடிவில் அமைக்கப்பட்டது. அன்று லண்டனின் இறப்பு மிகுந்தபடியே வந்தமையால் ஏழு பெரிய செமித்தேரிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று இது. Magnificent Seven என இவை அழைக்கப்படுகின்றன. புனித ஜேம்ஸுக்குரியது இது.பதினைந்து ஏக்கர் பரப்பு கொண்டது. அடர்ந்த புதர்களும் நிழல்மரங்களும் கொண்ட காடு இது. நாங்கள் சென்றிருந்தபோது எவருமே இல்லை. இறந்தோரின் நினைவிடங்களின் நடுவே எவரென்று அறியாமல் வெற்று எழுத்துக்களென பெயர் தாங்கி நின்றிருந்த நடுகற்களின் நடுவே நடந்தோம்.

எப்போதும் சிமித்தேரிகள் எழுப்பும் விந்தையானதோர் உணர்வை அவ்விடம் அளித்தது. வாழ்க்கை அங்கே இல்லை, ஆனால் ஒருவர் அங்கே நுழைகையில் நினைவுகளினூடாக ஒரு வாழ்க்கை உருகாகி அலைகொள்ளத் தொடங்குகிறது. நடுகற்கள். நீருக்குள் உடல் மறைத்து நுனிவாலை மட்டும் வெளியே காட்டிக்கொண்டிருக்கும் ராட்சத விலங்குபோல இறந்தவர்கள் இறப்புலகில் வாழ்ந்தபடி தங்கள் ஒரு சிறுபகுதியை மட்டும் இவ்வுலகுக்குக் காட்டிக்கொண்டிருந்தார்கள். நினைவுப்பலகைகளில் சீமாட்டிகள், வீரர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள். கணிசமானவை பிரிட்டிஷ் பெயர்கள் அல்ல என்னும் எண்ணம் எழுந்தது.நிறைய ருஷ்ய, ஜெர்மானியப்பெயர்கள் கண்ணில்பட்டன.

marx

ஹைகேட் சிமித்தேரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் முதன்மையான ஆளுமையாக அறியப்பட்டிருப்பவர் கார்ல் மார்க்ஸ். இருபதாம்நூற்றாண்டின் மிகப்பெரிய மதத்தின் நிறுவனர் என்பதனால் ஒவ்வொருநாளும் இங்கே மார்க்ஸியர்கள் வந்து மலர்வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். மற்றவர்கள் அவர்களின் நினைவுநாளில் மட்டுமே எண்ணப்படுகிறார்கள். மைக்கேல் ஃபாரடேயின் கல்லறை இங்குதான் உள்ளது. புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளரான டக்ளஸ் ஆடம்ஸ் [சுஜாதாவின் கணிசமான கதைகளின் மூல ஊற்று] இங்குதான் மண்ணிலிருக்கிறார்.

இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள முக்கியமானவர்களின் பட்டியலை பார்த்தபோது எங்கும் ஜார்ஜ் எலியட்டின் பெயரைக் காணமுடியவில்லை. ஆனால் அங்கே சென்றபோது பெரிதாகத் தேடாமலேயே அதைக் கண்டடையமுடிந்தது. கார்ல் மார்க்ஸ் சமாதிக்குச் சென்றபின் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் பெயரைக் கண்டேன். மலர்வைக்கும் எண்ணம் ஏதும் இருக்கவில்லை என்பதனால் கையில் ஏதுமில்லை. அங்கேயே ஒரு காட்டு மலரைப் பறித்து அவர் கல்லறைமேல் வைத்து வணங்கிவிட்டு வந்தேன்.

geo

திரும்பும்போது மீண்டும் ஓர் எண்ணம் எழுந்தது. மலையாளத்தில் தெம்மாடிக்குழி என ஒரு சொல் உண்டு. கத்தோலிக்க தேவாலயத்தால் முறையான நல்லடக்கம் மறுக்கப்படுபவர்களுக்குரியது இது. தேவாலய வளாகத்திலோ அல்லது குடும்பத்தவரின் நிலத்திலோ எந்த சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்படுபவர்களின் கல்லறை. ஹைகேட் சிமித்தேரி லண்டனின் தெம்மாடிக்குழிகளின் இடம். ஐரோப்பாவின் தெம்மாடிக்குழிகளில் இருந்துதான் புதிய யுகம் பிறந்து வந்தது என்று தோன்றியது,

 

https://www.jeyamohan.in/112268#.W4zahqTTVR4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா-4, நுண்ணோக்கிகள்

sher

ஷெர்லக் ஹோம்ஸின் இல்லம். சிறில் அலெக்ஸ் -ஹோம்ஸ்

மலையாள நகைச்சுவைப் படம் ஒன்றில் கதாநாயகனுக்கு ‘சி.ஐ.டி’ வேலை கிடைக்கிறது, தனியார் நிறுவனத்தில். உடனே அவன் சென்று நீளமான மழைச்சட்டை, உயரமான தொப்பி, தோல் கையுறைகள், முழங்கால்வரை வரும் சேற்றுச்சப்பாத்துக்களை வாங்கிக்கொண்டு  அணிந்துகொள்கிறான். திருவனந்தபுரம் தம்பானூர் வழியாக மேமாத வெயிலில்அதைப்போட்டபடி சிந்தனையில் ஆழ்ந்து நடக்கிறான். நான் லண்டனின் தெருக்களில் நடந்தபோது எனக்கு சுற்றும் நடப்பவர்கள் பெரும்பாலானவர்கள் ரகசிய உளவாளிகள் என்னும் மனப்பிராந்திக்கு ஆளானேன். லண்டனே துப்பறிவாளர்களின் நகரம் என்று தோன்றியது.பெரும்பாலானவர்கள் நானறிந்த துப்பறிவாளர்களின் உடைகளை அணிந்திருந்தனர். எஞ்சியவர்கள் குற்றவாளிகளின் உடையை. அத்துடன் அந்த பழைமையான வீடுகள், கல்வேய்ந்த தெருக்கள், மெல்லிய மழையீரம் எல்லாம் மர்மங்களை ஒளித்துவைத்துக்கொண்டிருப்பவை.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில வாசிப்பே துப்பறியும் கதைகள், சாகசக்கதைகள் வழியாகத்தான் தொடங்கியிருக்கும். அதுவே எளிய வழி. மொழி நம்மைப் படுத்தியெடுத்தாலும் என்ன நிகழ்கிறது என்று அறிவதற்கான ஆவல் வாசிக்கச்செய்திருக்கும். லண்டனில் இருந்து பிரிக்கமுடியாதவர்கள் ஷெர்லக் ஹோம்சும், ஜேம்ஸ் பாண்டும். இளமையில் எனக்கு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தின் பழையதாள் குவியலில் ஏதோ வெள்ளையர் வாசித்து தூக்கிப்போட்ட எர்ல் டெர் பிக்கர்ஸ் [Earl Derr Biggers] எழுதிய சார்லி சான் துப்பறியும் நாவல்களின் பெருந்தொகை ஒன்று கிடைத்தது. அடுத்த இருபதாண்டுகளில் எங்கள் நூலகமே அழிந்துவிட்டிருந்தாலும் அது மட்டும் என் கையில் எஞ்சியிருந்தது. சார்லி சான் என் இளமையில் நாயகன். அவரைவிட அவர் செயல்பட்ட ஹோனலூலு போன்ற நான் முற்றிலும் கற்பனையில் உருவாக்கிக் கொள்ளவேண்டிய நிலங்கள் பெரிதும் கவர்ந்தன.

sher

ஹோம்ஸ் படிப்பறை

உலகமொழிகளின் இலக்கியத்தைக் கூர்ந்து பார்த்தால் பிரிட்டிஷ் இலக்கியத்திற்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு என்பதைக் காணலாம் – வெறும் பொழுதுபோக்குக்கான எழுத்து என்ற தனி வகைமை அங்கே மிகுதி. சொல்லப்போனால் இன்று உலகை ஆளும் வணிக எழுத்தின் எல்லா வகைமாதிரிகளும் பிரிட்டிஷ் இலக்கியச்சூழலில்தான் தொடங்கின. பேய்க்கதைகள், துப்பறியும் கதைகள், உளவாளிக் கதைகள், குற்றப்பரபரப்புக் கதைகள், அறிவியல் புனைகதைகள் ஆகிய அனைத்துக்கும் மிகத் தொடக்ககால மாதிரிகள் பிரிட்டிஷ் இலக்கியத்தில் உள்ளன.. இவை ஒவ்வொன்றிலும் ஓரிரு பெரும்படைப்பாளிகளை நாம் பிரிட்டிஷ் இலக்கியத்தில் குறிப்பிட முடியும். சரித்திரக்கதைகளுக்கு வால்டர் ஸ்காட், சாகசக்கதைகளுக்கு டானியல் டீஃபோ, துப்பறியும் கதைகளுக்கு சர் ஆர்தர் கானன் டாயில், [ஷெர்லக் ஹோம்ஸ்]  உளவாளிக்கதைகளுக்கு இயான் ஃப்ளமிங் [ஜேம்ஸ்பாண்ட்] பேய்க்கதைகளுக்கு பிராம் ஸ்டாக்கர் [டிராக்குலா] அறிவியல் குற்றக்கதைகளுக்கு மேரி ஷெல்லி [பிராங்கன்ஸ்டைன்]

பிரிட்டிஷ் இலக்கியத்தில் இவை உருவாகக் காரணங்கள் பல. முதன்மையாக, ஆங்கிலம் பதினெட்டாம்நூற்றாண்டிலேயே உலகமொழி ஆகத் தொடங்கியது. அதற்கு உலகமெங்கும் வாசகர்கள் உருவானார்கள். ஆகவே பத்தொன்பதாம்நூற்றாண்டில் நூல்வெளியீடு பிரிட்டனின் மிகப்பெரிய தொழிலாக ஆகியது. அது பரவலாக வாசிக்கப்படும் எழுத்துக்கான தேவையை உருவாக்கியது. அதன் எல்லா வகைமாதிரிகளும் சோதனைசெய்து பார்க்கப்பட்டன. அவை பின்னர் அமெரிக்காவில் பேருருக் கொண்டன. பிரிட்டன் மீது ஒரு  மாபெரும் பூதக்கண்ணாடியை வைத்துப்பார்ப்பதே பலசமயம் அமெரிக்காவாகத் தெரிகிறது. பிரிட்டனில் முளைப்பவை அமெரிக்காவில் பல்கிப்பெருகி பெருந்தொழிலாக ஆகிவிடுகின்றன

she

ஷெர்லக் ஹோம்ஸ் இல்லம்

அதைவிட முக்கியமான காரணங்கள் இவ்வகை கேளிக்கை எழுத்து உருவானமைக்குப் பின்னணியில் இருக்கவேண்டும். வரலாற்றையும், சமூகவியலையும் இலக்கியத்தையும் ஒருங்கிணைத்துப்பார்க்கும் ஆய்வாளர்கள்தான் அதைப்பற்றி உசாவ வேண்டும். பொதுப்பார்வையில் இரு சமூகவியல் காரணங்களைச் சொல்லலாம். அக்கால பிரிட்டனின் மாபெரும் விருந்தறைப் பேச்சுக்கள் இவ்வகை எழுத்துக்கான தேவையை உருவாக்கியிருக்கின்றன. நெடுநேரம் நீளும் விருந்துகளில் கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அத்தகைய கூட்டுவாசிப்பில்  நுண்ணிய அவதானிப்புகளுக்கு தேவையில்லாமலேயே சட்டென்று உச்ச உணர்ச்சிகளை உருவாக்கும் கதைகள் விரும்பப் பட்டிருக்கின்றன. இன்னொன்று, பிரிட்டிஷ் பேரரசின் ஊழியர்களாக உலகமெங்கும் சென்ற ஆங்கிலேயருக்கு அந்நூல்கள் பிரிட்டனின் நினைவை மீட்டுவனவாக இருந்தன, அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல்தலைமுறையில் கல்வியறிவு பெற்றவர்கள். ஆகவே மொழிநுண்ணுணர்வோ இலக்கியப் பயிற்சியோ அற்றவர்கள். அவர்களுக்கான எழுத்து தேவைப்பட்டிருக்கலாம்

மேலும் ஆழ்ந்த  ஒரு பண்பாட்டுக் காரணம் இருக்குமென நான் எண்ணுகிறேன். பிரிட்டன் சீர்திருத்தக் கிறித்தவத்தின் நிலம். நவீன ஜனநாயகக் கருத்துக்களும், மதச்சீர்திருத்தக் கருத்துக்களும், பகுத்தறிவுவாதமும் அங்கே இருநூறாண்டுக்காலம் பேசப்பட்டிருக்கின்றன. அந்தத் தளத்தில் நின்றபடி சென்ற மதஆதிக்கத்தின் இருண்டகாலத்தை பார்க்கையில் உருவாகும் அச்சமும் ஒவ்வாமையும் அவர்களின் உளஇயல்புகளில் உறைந்துள்ளன. அந்த அச்சத்தையும் ஒவ்வாமையையும் பிரிட்டிஷ் பேய்க்கதைகள் பயன்படுத்திக்கொள்கின்றன என்று தோன்றுகிறது. பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலாவே அதற்கு மிகச்சிறந்த உதாரணம். மத்தியகால ஐரோப்பா அவர்களின் கெட்டகனவுகள் பரவிய நிலம்.

lead_large

ஹோம்ஸ் ஒரு பழைய சித்திரம்

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நவீன அறிவியலை புனைவுகள் சந்திப்பதன் விளைவாகவே துப்பறியும் கதைகளும் குற்றக்கதைகளும் உளவாளிக் கதைகளும் உருவாகின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆர்தர் கானன் டாயில் துப்பாக்கிகளைப்பற்றியும் அகதா கிறிஸ்டி நஞ்சைப்பற்றியும் எழுதுவதை வாசிக்கையில் உருவாகும் எண்ணம் இது. குற்றம், துப்பறிதல் இரண்டிலுமே அறிவியல்செய்திகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட படைப்புகளே பெரும்புகழ்பெறுகின்றன. ஆனால் செய்திகளை விட முக்கியமானது சிறிய தகவல்களினூடாக துப்பறிந்து உண்மையைச் சென்றடையும் அந்தப் பயணம். அது அறிவியலில் இருந்தும் தத்துவத்தில் இருந்தும் இலக்கியத்திற்கு வந்தது

பேராசிரியர் ஜேசுதாசன் பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகரான ஐ.ஏ.ரிச்சர்ட்ஸின் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். Ivor Armstrong Richards (1893 1979) நவீன இலக்கியவிமர்சனத்தின் பிதாமகர்களில் ஒருவர். இலக்கியப்படைப்பை நுணுகி ஆராய்ந்து அதில் ஆசிரியரின் நோக்கத்தை, அவருடைய உத்திகளை, அவர் தன்னைக் கடந்துசெல்லும் தருணங்களைக் கண்டடைவது அவருடைய விமர்சன முறை. படைப்பில் ஒளிந்திருக்கும் சிறுசிறு தகவல்களைக்கூட கருத்தில்கொண்டு, படைபாளி நுட்பமாக ஒளித்துவைத்தவற்றை கண்டுபிடித்து விரித்துக்கொண்டு வாசிக்கும் இந்த முறையே பின்னாளில் அமெரிக்காவில்  ‘புதுத்திறனாய்வு’முறையாக உருவாகியது. இது பிரதிஆய்வு விமர்சனமுறை எனப்படுகிறது. ரிச்சர்ட்ஸின் நூல் ஒன்றின் தலைப்பே அவருடைய வழிமுறையை தெளிவாகக் காட்டுவது –The meaning of meaning

I.A. Richards

I.A. Richards

ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் பற்றிப் பேசுகையில் ஜேசுதாசன் சிரித்தபடிச் சொன்னார் “அவரு ஷெர்லக் ஹோம்ஸுல்லா?” கிண்டலாக அல்லாமல் நேரடியாகவே அவ்வாறு விளக்கினார். பதினெட்டாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் சிந்தனையை ஆட்கொண்டிருந்த மைய எண்ணம் என்பது புறவயத்தன்மைதான். எதையும் தர்க்கபூர்வமாக அணுகுவது, புறவயமான ஆதாரங்களை நுட்பமாக சேகரித்து அவற்றைத் தொகுத்து ஒரு விரிவான சித்திரத்தை உருவாக்கி அதன் சாரமாக ஓர் உண்மையை உருவாக்குவது. இரண்டு மூலங்களில் இருந்து தொடங்கியது இந்த ஆய்வுமுறை. ஒன்று, இறையியல்.இன்னொன்று அறிவியல்

அன்றைய சீர்திருத்தவாத கிறித்தவம் விவிலியம் முதலான மதமூலங்களை நுட்பமாக ஆராய்ந்து தரவுகளின் அடிப்படையில் கத்தோலிக்கர்களுடன் விவாதித்தது. மூன்றுநூற்றாண்டுக்காலம் நீடித்த அந்தப் பெருவிவாதம் இறையியலில் ஆக்ஸ்போர்ட் இயக்கம் போன்ற ஏராளமான தரப்புக்களை உருவாக்கியது. பிரதிஆய்வு விமர்சனம் என்னும் பார்வையின் ஆரம்பமே அதுதான். அந்த விமர்சனமுறை பின்னர் தத்துவத்திலும் இலக்கியத்திலும் வேரூன்றியது. பிரிட்டிஷ் அறிவியலாளரான ஃப்ரான்ஸிஸ் பேக்கன் நவீன அறிவியல் முறைமைகளின் தொடக்கப்புள்ளி என்பார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் நிரூபணவாத அறிவியல் கிடைக்கும் தரவுகளைத் தொகுப்பதிலும் அவற்றைக்கொண்டு ஊகங்களை நிரூபிப்பதிலும், அவற்றின் எதிர்த்தரப்புகளுடன் விவாதிப்பதிலும் தெளிவான முறைமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.

இவ்விரு  முன்னோடி மனநிலைகளின் இலக்கிய வெளிப்பாடுதான் பிரிட்டிஷ் குற்றப்பரபரப்பு எழுத்துக்களிலும் துப்பறியும் எழுத்துக்களிலும் எழுந்தது. அதன் மிகச்சிறந்த முன்னோடி ஷெர்லக் ஹோம்ஸ்தான். இன்று துப்பறிவாளருக்குரிய ஒரு தொல்படிமமாகவே அவருடைய பெயரும் தோற்றமும் மாறிவிட்டிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் வெறும் துப்பறிவாளர் அல்ல. அவர் மிகமிக பிரிட்டிஷ்தனமான ஒரு நிகழ்வு. பத்தொன்பதாம்நூற்றானின் பிரிட்டிஷ்தன்மையின் ஓர் அடையாளம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொல்லியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், ஆட்சியாளர்கள், சட்ட நிபுணர்கள் அனைவரிடமும் நாம் கொஞ்சமேனும் ஹோம்ஸைப் பார்க்கமுடியும். யோசித்துப்பாருங்கள் கால்டுவெல், [திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்] ஜே.எச்.நெல்சன் [மதுரா கண்ட்ரி மேனுவல்] மார்ட்டிமர் வீலர் அனைவருமே ஒருவகையான ஷெர்லக் ஹோம்ஸ்கள்தானே?

ஐரோப்பாவின் இந்த நுண்ணோக்கி விழிகள்தான் நமக்கு ஒரு புறவய வரலாற்றை உருவாக்கி அளித்துள்ளன. நம் தொன்மையை நவீன முறைமைகளைக் கொண்டு தொகுத்து நமக்கு அளித்துள்ளன. நாம் நம்மைப்பார்க்கும் பார்வையையே அவைதான் ஒருவகையில் வரையறைசெய்துள்ளன. ஐரோப்பாவின் உணர்ச்சிகளற்ற புறவயப்பார்வையின் அடையாளம் ஹோம்ஸ்

Arthur_Conany_Doyle_by_Walter_Benington,_1914

மருத்துவரான சர் ஆர்தர் கானன்டாயில் [859- 1930] எழுதிய துப்பறியும் கதைநாயகன் ஷெர்லக் ஹோம்ஸ். கானன் டாயில் ஏராளமாக எழுதியிருந்தாலும் ஷெர்லக் ஹோம்ஸ் வழியாகவே வரலாற்றில் இடம்பெற்றார். கானன்டாயிலின் A Study in Scarlet என்ற கதையில் 1881ல் முதல்முறையாகத் தோன்றினார்., ஹோம்ஸின் இயல்புகளை மிகத்துல்லியமாக ஆசிரியர் வரையறை செய்தமையால்தான் அவர் அத்தனை புகழ்பெற்றார் எனத் தோன்றுகிறது. ஹோம்ஸ் ஒரு பொஹீமியன் வாழ்க்கைப்போக்கு கொண்டவர் என்று வாட்ஸன் ஓரிடத்தில் சொல்கிறார். வெளியே நோக்கிய உள்ளம் கொண்டவர், ஆனால் தனித்தவர். நெருக்கமானவர்களுடன் மட்டும் இருக்க விரும்புபவர். மிகமிகத் தூய்மையான பழக்கவழக்கங்கள் கொண்டவர். பிரிட்டிஷ் கனவானுக்குரிய மென்மையான குரலும், மரபான பேச்சுமொழியும் கொண்டவர். கிண்டலாக மாறாத உள்ளடங்கிய நகைச்சுவை கொண்டவர். தத்துவம், மதம் ஆகியவற்றில் அறிவார்ந்த ஈடுபாடு கொண்டவர். ஆயுதங்களில் ஈடுபாடுகொண்டவர், ஆனால் வன்முறை மனநிலை அற்றவர். பெண்களிடம் மரியாதையாகப் பழகுபவர், ஆனால் அவர்களிடம் பெரிய ஈடுபாடில்லாதவர். அவர்களை இரண்டாந்தரமான அறிவுள்ள்ளவர்களாக எண்ணுபவர். மொத்தத்தில் ஒரு இலட்சிய பிரிட்டிஷ் கனவான்.

The_Adventure_of_the_Veiled_Lodger_02

The Adventure of the Veiled Lodger

2000 த்தில் நான் ஹோம்ஸ் துப்பறியும் ஒரு கதையை எம்.எஸைக்கொண்டு. மொழியாக்கம் செய்து சொல்புதிது சிற்றிதழில் வெளியிட்டேன். தொடர்ச்சியாக நான் தெரிவுசெய்த உலகச்சிறுகதைகளை எம்.எஸ். மொழியாக்கம் செய்து சொல் புதிது வெளியிட்டுவந்த காலம் அது. அவ்வரிசையில் இக்கதை வந்தது இலக்கிய வாசகர்களை அதிர்ச்சியுறச் செய்தது. பின்னர் எம்.எஸ் மொழியாக்கம் செய்த கதைகளின் தொகுதி வெளிவந்தபோதும் அக்கதை சேர்க்கப்படவில்லை. துப்பறியும் கதை எப்படி இலக்கியமாகும் என அன்று பலர் கேட்டார்கள். ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் சில உயர்தர இலக்கியமே என நான் பதில் சொன்னேன். அந்த விவாதம் எழவேண்டும் என்றுதான் அக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டது. ஹோம்ஸ் பலசமயம் குற்றத்தை மட்டும் துப்பறிந்து விளக்குவதில்லை, அதற்குப்பின்னாலிருக்கும் உளநிலையை நோக்கிச் செல்கிறார். எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதைவிட எதைக் கண்டுபிடிக்கிறார் என்பது முக்கியமாக ஆகும் கதைகள் அவை. The Adventure of the Veiled Lodger என்ற அக்கதையில் குருதிமணம் பெறும் சிம்மம் ஆழமான ஒரு படிமம் என்பது என் எண்ணம். இந்த அம்சத்தால் கானன்டாயில் வெறும் துப்பறியும்கதையாசிரியர் அல்ல, படைப்பாளி என நான் நினைக்கிறேன்.

லண்டனில் ஹோம்ஸுக்கு ஓர் நினைவுமாளிகை உள்ளது. லண்டனில் 221 பேக்கர் தெருவில் ஹோம்ஸ் வாழ்ந்ததாக கானன் டாயில் தன் நாவல்களில் குறிப்பிடுகிறார். கானன் டாயில் குறிப்பிட்ட அந்த வீடு இருந்ததா என்பதே ஐயத்திற்குரியது. அந்த எண்கொண்ட வீடு வெவ்வேறு கைகளுக்குச் சென்றுவிட்டது. இப்போது ஹோம்ஸ் வாழ்ந்த காலகட்டத்தை ஏறத்தாழ அதேபோன்ற ஒரு கட்டிடத்தில் அப்படியே உருவாக்கி அதை ஒரு சுற்றுலாமையமாக ஆக்கியிருக்கிறார்கள். ஷெர்லக் ஹோம்ஸ் சொசைட்டியால் அது இப்போது நிர்வகிக்கப் படுகிறது. கானன் டாயிலின் கதைகளின்படி ஹோம்ஸும் அவர் நண்பர் வாட்ஸனும் இங்குதான் தங்கியிருந்தார்கள்.

இன்று  உலகமெங்குமிருந்து பலநூறு ஹோம்ஸ் ஆர்வலர் அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். கீழ்த்தளம் கட்டணச்சீட்டு கொடுப்பதற்குரிய இடமாகவும் நினைவுப்பொருட்கள் விற்கும் இடமாகவும் உள்ளது. சிறிய இடுங்கலான படிகளின் வழியாக மேலேறிச் சென்றால் முதல்தளம் ஹோம்ஸ் காலகட்டத்தின் அனைத்துப் பொருட்களுடனும் அவ்வண்ணமே பாதுகாக்கப்படுகிறது. எக்கணமும் வீட்டு உரிமையாளரும் காப்பாளருமான திருமதி ஹட்ஸன் வந்து “மன்னிக்கவேண்டும், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டுவிடக்கூடும் எனத் தோன்றும்

je

முதல்மாடியில் ஹோம்ஸ் அமர்ந்து பைப் பிடித்தபடி பேக்கர் தெருவை நோக்கிக்கொண்டிருக்கும் வழக்கமான தொடக்கக் காட்சி நிகழும் முகப்பறை. பழைமையான கணப்பு. தட்டச்சுப்பொறி. ஹோம்ஸின் ஆய்வகம், அங்கே அவருடைய துப்பறியும் கருவிகள். அவருடைய நீண்ட மழைமேல்சட்டை, deerstalker தொப்பி. ஒவ்வொன்றும் இந்த ஒன்றரை நூற்றாண்டுக்குள் தொன்மத் தகுதியை அடைந்துவிட்டிருக்கின்றன. அந்த சிறிய இல்லத்தில் ஹோம்ஸ் கதைகளின் சில கதைமாந்தர்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன. ஹோம்சின் ஆடைகளை அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர் பயணிகள்

எனக்கு அந்த வீடுதான் மேலும் ஆர்வமூட்டியது. அங்கே வாழ்ந்த மனிதர் எப்படி அக்காலகட்டத்தின் அடையாளமோ அதைப்போல. ஒவ்வொன்றும் முந்தைய காலகட்டத்தில் உறைந்துபோயிருந்தன.  சென்ற காலம் போல அச்சமூட்டுவது வேறில்லை. அதை நாம் அருகே காணமுடியும், உள்ளே நுழைய முடியாது. குழந்தைத்தனமான எண்ணமாக இளவயதில் உருவாகும் அந்த அச்சம் வயதாகும்தோறும் கூடிக்கூடி வருகிறது. அங்குள்ள பொருட்களை நோக்கிக்கொண்டே சென்றுகொண்டிருந்தேன். இன்றைய லண்டனுக்கு மேல் காற்றென வீசி மறைந்த ஒரு காலகட்டத்தை மீண்டும் உருவாக்கிக் கொள்ளமுயன்றேன். பெரிய தோலுறைபோட்ட நூல்களை பூதக்கண்ணாடி கொண்டு நோக்கி ஆராயும் ஆய்வாளர்கள், விருந்துமேஜையில் அமர்ந்து மெல்லியகுரலில் விவாதிப்பவர்கள், உலகமெங்குமிருந்து வரும் செய்திகளை வானொலியில் கேட்டுக்கொண்டிருப்பவர்கள். அறிவியலாளர்கள், தத்துவவாதிகள், துப்பறிவாளர்கள்… இன்றைய லண்டனுடன் நமக்கு பெரிய உறவேதுமில்லை. நமக்கு வந்துசேர்ந்து, இன்றைக்கும் நம்மிடம் எஞ்சியிருப்பது அந்த பத்தொன்பதாம்நூற்றண்டு லண்டன்தான்

.

 

https://www.jeyamohan.in/112327#.W5LSo6TTVR4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா-5, அடித்தளத்தின் குருதி

lona

என் அம்மாவின் மலையாள நூல் சேகரிப்பில் இரு விந்தையான நூல்கள் இருந்தன. இரண்டுமே மொழியாக்கநூல்கள். ஒன்று கோட்டயத்த்தில் வாழ்ந்த ரிச்சர்ட் காலின்ஸ் என்னும் பாதிரியாரின் மனைவியான ஃப்ரான்ஸிஸ் வைட் காலின்ஸ் [Mrs Frances Wright Collins] 19 ஆம் நூற்றாண்டில் எழுதிய The Slayer Slain என்னும் ஆங்கில நாவலின் மலையாள மொழியாக்கமான காதக வதம். கோட்டயத்திலிருந்து அந்நாளில் வெளிவந்துகொண்டிருந்த கிறித்தவ இறையியல் இதழான வித்யா சம்கிரஹ் அதை வெளியிட்டது. வைட் அந்நாவலை முழுமையாக்கவில்லை.அதை அவர் கணவர் எழுதி முழுமையாக்கினார். இன்னொன்று லண்டன் கொட்டாரத்திலே ரஹஸ்யங்கள். George W. M. Reynolds என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளர் எழுதிய  The Mysteries of the Court of Londonஎன்னும் நாவலின் தொன்மையான மொழியாக்கம்.

இரு நூல்களுமே பைபிளை செய்யுளில் எழுதியதுபோன்ற நடை கொண்டவை. நான் அவற்றை பலமுறை வாசிக்கமுயன்று தோற்றேன். முதல்நாவல் 1872 லும் இரண்டாவது நாவல் 1910 லும் வெளிவந்திருந்தன. அவற்றை அம்மா எங்கோ கைவிடப்பட்ட நூலகமொன்றிலிருந்து வாங்கியிருந்தாள்.  காதக வதத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, அது ஒரு நல்லுபதேசக் கதை. பின்னாளைய மலையாள நாவல் இலக்கியத்திற்கு அது தொடக்கமாக அமைந்தது. மேலும் பல ஆண்டுகள் கடந்தே 1889ல் முதல் மலையாள நாவலாகக் கருதப்படும் இந்துலேகா [ஒ.சந்துமேனன்] வெளிவந்தது. நடுவே இந்த லண்டன் அரண்மனை ரகசியங்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் வெளிவந்தது என எண்ணி வியந்திருக்கிறேன்

reyno

George William MacArthur Reynolds  [1814 – 1879] பிரிட்டிஷ் எழுத்தாளர், இதழியலாளர். ராணுவ அதிகாரியின் மகனாகப்பிறந்தார். ராணுவப்பயிற்சி பெற்றபின் எழுத்தை வாழ்க்கையாகத் தேர்வுசெய்தார்.வாழ்நாளின் பெரும்பகுதியை பிரான்ஸில் கழித்தவர். மதுவிலக்குக் கொள்கைகொண்டவர், அதற்காக ஒரு இதழையும் நடத்தியிருக்கிறார். [The Teetotaler ].தாக்கரே, டிக்கன்ஸ் ஆகியோரின் காலகட்டத்தில் அவர்களைவிடவும் பிரபலமாக இருந்திருக்கிறார். பெரும்பாலும் வணிகக்கேளிக்கை எழுத்துக்களை எழுதினார்.மிக விரைவிலேயே மறக்கப்பட்ட ரெய்னால்ட்ஸின் நாவல்கள் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் விரும்பப்பட்டவை. இந்தியாவில் பெரும்பாலான பழைய நூலகங்களில் அவை இருக்கும்.

இந்திய மொழிகள் பலவற்றில் ரெய்னால்ட்ஸின் நாவல்கள் ஆரம்பகாலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தழுவி எழுதப்பட்ட மர்மக் கதைகள் வழியாகவே இந்தியாவில் ஆரம்பகால வணிகக் கேளிக்கை எழுத்துக்கள் தோன்றின. மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் ‘பிரதாப முதலியார் சரித்திரத்தில்’ [1884] ரெய்னால்ட்ஸின் பாதிப்பு நிறைய உண்டு. மறைமலை அடிகளின் கோகிலாம்பாள் கடிதங்கள் [1931] போன்ற அக்கால நாவல்களில் ரெய்னால்ட்ஸின் நேரடி செல்வாக்கைக் காணலாம். நம்பமுடியாத இடத்தில் நிலவறை ஒன்று திறந்தால், சாக்சத் திருப்பங்கள் மூலம் கதாபாத்திரங்கள் வெளிப்பட்டால் அங்கே ரெயினால்ட்ஸ் நின்றிருக்கிறார்.

lonb

ரெய்னால்ட்ஸின் The Mysteries of London என்னும் நாவலின் தொடர்ச்சிதான்  The Mysteries of the Court of London . இவை  ’நகர்மர்ம’ வகை கதைகள். [City mystery]. ஒரு நகரத்தின் மர்மங்களை கற்பனையாகச் சொல்லிச்செல்லும் படைப்புக்கள் இவை. பெரும்பாலும் தொன்மையான நகரங்களே கதைக்களமாக இருக்கும். கண்ணுக்குத் தெரியும் நகரத்தின் அடியில் மேலும் பல அறியா நகர அடுக்குகள் இருப்பதாகவும் அங்கே செல்லும் சுரங்கவழிகள் உண்டு என்றும் இவை புனைந்துகொள்ளும். ரெய்னால்ட்ஸின் நாவலில் சுரங்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் லண்டனே மாபெரும் எலிவளைகளின் தொகுப்புதான் என்னும் எண்ணத்தை அடைந்தேன்.

லண்டன் நண்பர்கள் மாறி மாறி என்னை சுற்றிக்காட்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். பெரும்பாலும் சிறில் அலெக்ஸ். அவ்வப்போது சிவா கிருஷ்ணமூர்த்தி. சிவா கிருஷ்ணமூர்த்தி ஈரோட்டுக்காரர். லண்டனைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதைகளை இணைய இதழ்களில் எழுதி வருபவர். சமீபத்தில் குறிப்பிடத்தக்க பல கதைகளை எழுதியிருக்கிறார்

சிவா கிருஷ்ணமூர்த்தி

சிவா கிருஷ்ணமூர்த்தி

லண்டனில் நண்பர்களுடன் நடந்துகொண்டிருந்தபோது ரெய்னால்ட்ஸ் நினைவுக்கு வந்தபடியே இருந்தார். நான் நடந்துகொண்டிருந்த நிலத்துக்கு அடியில் இன்னொரு லண்டன் இருக்கிறது. அதற்கும் அடியில் இன்னொன்று. தொன்மையான நகரங்களுக்கு அப்படி பல அடுக்குகள் உண்டு. வரணாசியில் பெரிய வணிகமையங்களும் ஆடம்பரத் திரையரங்குகளும் கொண்ட பகுதியில் இருந்து கங்கைக்கரை வரைச் சென்றால் எளிதாக நாநூறாண்டுகளை கடந்து காலத்தில் பின்னால் சென்றுவிடலாம். அவ்வாறு ஆழம் மிக்க நகரங்களைப் பற்றித்தான் அத்தகைய  நகர்மர்ம நாவல்களை எழுதமுடியும்.

லண்டன் மாநகருக்கு இரண்டாயிரமாண்டுக் கால எழுதப்பட்ட வரலாறுண்டு.  அவ்வகையில் உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்று அது. 1136 ல் ஜியோஃப்ரீ மோன்மோத்  [Geoffrey of Monmout ] என்ற பாதிரியாரால் பிரிட்டனின் ஆட்சியாளர்களின் வரலாற்றைச் சொல்லும்பொருட்டு எழுதப்பட்ட தொன்மத் தொகுதியான Historia regum Britanniae லண்டன் நகரம் ப்ருட்டஸ் ஆஃப் டிராய் என்பவரால் நிறுவப்பட்டது என்கிறது,. அவர் டிராய் நகரை மீட்கும் போருக்குச் சென்று மீண்டவரான ஏனியாஸ் [Aeneas] என்னும் தொன்மக் கதாநாயகனின் வம்சத்தில் வந்தவர். Historia Britonum என்னும் ஒன்பதாம் நூற்றாண்டு தொன்மத் தொகைநூலில் இவருடைய கதைவருகிறது. புருட்டஸ் பிரிட்டிஷ் நிலத்துக்கு வரும்போது அங்கே அரக்கர்கள் வாழ்ந்துவந்தார்கள். கடைசி அரக்கனாகிய கோக்மகோக் Gogmagog புரூட்டஸால் கொல்லப்பட்டான். புரூட்டஸ் அங்கே ஓர் ஊரை உருவாக்கினார். அதுவே லண்டன். இது கிமு ஆயிரத்தில் நிகழ்ந்தது என்கிறது ஹிஸ்டோரியா ரீகம் பிரிட்டன். அதை ஒரு தொன்மமாக மட்டுமே ஆய்வாளர் நோக்குகிறார்கள். ஆனால்  கிரேக்கக் குடியிருப்பாளர்கள் தொல்குடியினரை வென்று அந்நிலத்தைக் கைப்பற்றியமைக்குச் சான்று அது.

Brutus of Troy

Brutus of Troy

இங்கே வாழ்ந்த தொல்கால மக்களைப் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைக்கின்றன. ஜியோஃப்ரி கிறிஸ்துவுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட தொன்மையான அரசர்களின் [கற்பனைப்] பட்டியலை அளிக்கிறார். அவர்களில் லுட் [Lud] என்பவர் Caer Ludein என அந்நகரத்துக்குப் பெயரிட்டார். அது மருவி லண்டன் என்று ஆனது என்று ஜியோஃப்ரியின் நூல் குறிப்பிடுகிறது. லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் வெண்கலக் காலகட்டத்து தொல்லியல் தடையங்கள் கிடைத்துள்ளன. தேம்ஸுக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருந்த மரப்பாலம் ஒன்றின் அடித்தண்டுகள் 1993ல் ஓர் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன

 

 

கிபி 43ல் இங்கிலாந்து மண்ணின்மேல் ரோமாபுரி படையெடுத்துவந்து நிரந்தரக் குடியிருப்பை அமைத்தது. அப்போதுதான் வரலாற்றுநோக்கில் லண்டன் [ Londinium]  உருவானது. தேம்ஸின் பாலம் அமைப்பதற்குரிய வகையில் மிகக்குறுகிய பகுதியில் நகரம் உருவானது. அது அக்காலத்தைய வழக்கப்படி ஆற்றங்கரையில் அமைந்த துறைமுகம். கலங்கள் தேம்ஸ் வழியாக உள்ளே வந்தன. கிபி ஆறாம் நூற்றாண்டில் ஜெர்மானிய பழங்குடிகளான ஆங்கிலோ சாக்சன்கள் பிரிட்டன் மேல் படைகொண்டுவந்து லண்டனைக் கைப்பற்றிக் குடியேறினர். பதினொன்றாம் நூற்றாண்டில் பிரெஞ்சு நிலப்பகுதியாகிய நார்மண்டியைச் சேர்ந்த நார்மன்கள் ஆங்கிலோ சாக்ஸன்களை வென்று லண்டனைக் கைப்பற்றினர்.  பதினைந்தாம் நூற்றாண்டில் அயர்லாந்தின் பிரபுவான ஹென்றி டியூடர் [Henry Tudor] ஏழாம் ஹென்றி என்றபேரில் லண்டனைக் கைப்பற்றினார். ஒருங்கிணைந்த பிரிட்டனின் சிற்பி என அவர் கருதப்படுகிறார். அதுவரை ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் ஒன்றுடன் ஒன்றுபோரிடும் இனக்குழுக்களின் தொகுப்பாக இருந்த பிரிட்டன் அதன் பின்னர் உலகப்பேரரசாக எழுந்தது.  ரத்தினச் சுருக்கமாக இதுவே லண்டனின் வரலாறு

lond

ரெய்னால்ட்ஸின் நாவலை இன்று நினைவுகூர்ந்தால் அது மூழ்கிச்செல்லும் காலகட்டம் லண்டனின் புகழ்பெற்ற மதப்பூசல்களின் யுகம் எனத் தெரிகிறது. மதப்பூசலின் அடியில் இனவேறுபாட்டின் காழ்ப்புகள் இருந்தன. அவை அதிகாரப்போர்களாக ஆகி அரண்மனைச் சதிகளாக வெளிப்பட்டன. லண்டன் என்பது ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும்  இங்கிலாந்தும் முட்டிக்கொள்ள்ளும் உயர்விசைப்புள்ளி அல்லவா? ரெய்னால்ட்ஸ் வெறும் கொலைகள், அவற்றை கண்டடைதல் என்றே கதை சொல்லிச் செல்கிறார். ஆனால் அக்கதைகள் நின்றிருக்கும் களம் அங்கே இருந்தது

இந்தியாவில் அப்படி சிலநகரங்களை வைத்து எழுதமுடியும். தமிழகத்தில் மதுரையும் காஞ்சியும். ஆனால் எழுதப்பட்டதில்லை. டெல்லி பற்றி நிறையவே எழுதலாம், ஆனால் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. வரணாசியின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள சிவ்பிரசாத் சிங்கின் நீலநிலா, உஜ்ஜயினியின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள அமர் மித்ராவின் துருவன் மகன் போன்றவை வரலாற்றுநாவல்களே ஒழிய நகர்மர்மக் கதைகள் அல்ல. நகர்மர்மக் கதைகளுக்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. அவை நிலைகொள்ளும் அதிகார அமைப்புக்கு அடியிலுள்ள புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளைச் சுட்டிக்காட்டும் தன்மை கொண்டவை

lonc

மாபெரும் சகடம், உடன் நண்பர் சதீஷ்

லண்டனின் புகழ்பெற்ற நிலஅடையாளங்களை நின்று நோக்கியபடி நானும் அருண்மொழியும் நண்பர்களுடன் நடந்தோம். சிறில் அலெக்ஸ் வீட்டில்தான் தங்கியிருந்தோம். அவர் நகருக்கு சற்று வெளியே இருந்தார். அங்கிருந்து நிலத்தடி ரயிலில் லண்டன் நகருக்குள் புகுந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரயில்களில் ஏறி நகர்ச்சாலைகளில் வெளிப்பட்டோம். தலைக்குமேல் நகரம் கொந்தளித்துக்கொண்டிருக்க உள்ளே நகரின் குடல்களினூடாக ரெயினால்ட்ஸின் சுரங்கப்பாதைகளில்  செல்வதுபோலப் பயணம் செய்தோம்.பெருச்சாளிகள் வளைகளிலிருந்து வெளிவருவதுபோல. அல்லது விட்டில்கள் பெருகிஎழுவதுபோல. எங்களைக் காத்து நின்றிருந்த நண்பர்களுடன் பேசியபடி நகரை பெரும்பாலும் நடந்தே உணர்ந்தோம்.

நியூயார்க்கின் டைம் ஸ்குயரில் நிற்கையில் எனக்குப் பட்டது, அது மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட ஓர் இடம் என்று. லண்டனைப்பற்றியும் அதுவே தோன்றியது. எங்குநோக்கினாலும் சுற்றுலாப்பயணிகள். புகைப்படங்கள் எடுப்பவர்கள், சாப்பிடுபவர்கள், வேடிக்கை பார்த்து பேசிச்சிரிப்பவர்கள். புகழ்பெற்ற லண்டன் பாலம். தேம்ஸ் நீலக்கலங்கலாக ஓடியது. அதில் படகுகள் வெண்பாய் விரித்து பறப்பவைபோலச் சென்றன. பாலத்தில் நின்றபடி தேம்ஸின் நீர்ப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். நீர் கண்ணெதிரிலேயே குறைய தரைவிளிம்பு தெரியலாயிற்று. நகர்நடுவே ஓடும் நதிகளுக்குரிய துயரம். நகரின் கழிவுகளைச் சுமந்தாகவேண்டும். எத்தனை தூய்மைப்படுத்தினாலும், என்னென்ன சட்டங்கள் இருந்தாலும் அது மாசுபடுவதை தடுக்கவியலாது. அந்த நீரிலும் மென்படகுகளில் இளைஞர்கள் விளையாட்டுத்துழாவலில் ஈடுபட்டிருந்தார்கள்.

thames

இத்தகைய பயணங்களில் நாம் பழகிய தடங்களினூடாக அடித்துச் செல்லப்படுகிறோம். நாம் என்ன பார்க்கவேண்டும் என்பதை லண்டனின் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் சென்றுதேய்ந்த தடத்தினூடாக முடிவுசெய்து வைத்திருக்கிறார்கள். வேறு வழியாக நாம் செல்லவே முடியாது. சுற்றுலா மையங்கள் அறுதியாக வரையறைசெய்யப்பட்ட அர்த்தம் கொண்டவை. நாம் சென்றுநோக்கும் ஒரு வரலாற்றுத்தலம் நம்மால் அர்த்தப்படுத்தப்படுகிறது, நம்முள் விரிவடைகிறது. சுற்றுலாமையங்களில் விடுபடுவது அதுதான்

தேம்ஸின் கரையோரமாக வேடிக்கை பார்த்தோம். தெருப்பாடகர்கள், இசைக்கலைஞர்கள், நினைவுப்பொருட்கள் விற்பவர்கள், ஓவியர்கள்… வெவ்வேறுவகையான முகங்கள். நம்பமுடியாதபடி மாறுபட்ட தலைமயிர் அலங்காரங்கள். மானுட முகம் என ஒன்று உண்டா என்றே ஐயம் எழும். மஞ்சளினத்தின் முகமும் கறுப்பினத்தின் முகமும் உறுப்புகளின் அமைப்பால் மட்டுமே ஒன்று என்று தோன்றும். ஆனால் புன்னகையில் ஒளிரும் அன்பு, சிரிப்பு, தன்னுள் ஆழ்ந்திருக்கும் அழுத்தம் என முகங்களின் உணர்வுகள் மானுடம் முழுக்க ஒன்றே

lons

நான்கு நாட்கள் லண்டனில் கண்ட வெவ்வேறு இடங்களைப்பற்றி விரிவாகவே எழுதலாம், ஆனால் இன்றைய இணைய உலகில் செய்திகள் மிக எளிதாக எங்கும் கிடைக்கின்றன. நான் எழுத எண்ணுவது என் உள்ளம் எவற்றையெல்லாம் அவற்றுடன் இணைத்துக்கொண்டது என்பதைப்பற்றி மட்டுமே. அதன் தர்க்கமென்ன என்பதிலுள்ளது இந்நிலத்தை இன்று நான் எப்படி உள்வாங்கிக்கொள்கிறேன் என்பது, இந்நிலம் என் பின்புலத்திற்கு என்னவாகப் பொருள்கொண்டது என்பது

லண்டனின் கண் எனப்படும் மாபெரும் சக்கரராட்டினம் லண்டனின் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்மேலேறி லண்டனை பார்ப்பதென்பது ஓரு சுற்றுலாச் சடங்கு. ஏற்கனவே அமெரிக்காவில் டிஸ்னிலேண்டிலும் யூனிவர்சல் ஸ்டுடியோவிலும் மாபெரும் ரங்கராட்டினங்களில் ஏறியிருக்கிறேன். என்ன வேடிக்கை என்றால் அப்போதும் சிறில் அலெக்ஸ்தான் உடனிருந்தார். ஆனால் சுற்றுலாக்களின் மகிழ்ச்சிகளில் ஒன்று எல்லா தன்னிலைகளையும் கழற்றிவிட்டு நாமும் சுற்றுலாப்பயணியாக அவ்வப்போது ஆவது. ஆகவே நானும் அருண்மொழியும் அதில் ஏறிக்கொண்டு வானுக்கும் மண்ணுக்கும் சுற்றிவந்தோம். அதன் மேலே சென்றால் லண்டனைப் பார்க்கலாம் என்றார்கள். நான் பார்த்தது தலைசுற்றச்செய்யும் ஒளிப்பிழம்புகளின் சுழியை மட்டுமே

buckingham-palace

394 அடி விட்டம் கொண்ட பெரும் சக்கரம் இது. மெர்லின் எண்டர்டெயினர்ஸ் அமைப்புக்குச் சொந்தமானது. ஜூலியா ஃபார்பீல்ட் மற்றும் டேவிட் மார்க்ஸ் என்னும் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. மில்லினியம் நிறைவை ஒட்டி 2000 ஜனவரி ஒன்றாம்தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது. இத்தகைய சக்கரங்களிலுள்ள இன்பம் என்பது ‘பத்திரமான அபாயம்’தான். நம் தர்க்கமனம் அபாயமில்லை என்று சொல்கிறது. உடலும் உள்ளமும் அதை உணராது பதறுகின்றன. இறங்கியதும் உடலையும் உள்ளத்தையும் ஏமாற்றிவிட்டதான ஓர் அசட்டுப்பெருமிதம். அந்தச் சிரிப்பை அத்தனை முகங்களிலும் காணமுடிந்தது.

லண்டனுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் மூன்று அரண்மனைகளைத் தவறவிடுவதில்லை.  அவற்றில் பக்கிங்ஹாம் அரண்மனை முதன்மையானது. பிரிட்டனின் அரசியின் உறைவிடம், பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்தின் குறியீட்டு மையம் இந்த மாபெரும் அரண்மனை. 1703ல் பக்கிங்ஹாம் பிரபுவால் கட்டப்பட்டது. 1761ல் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இதை தன் அரசி சார்லட்டுக்கான மாளிகையாக கொண்டார்.19 ஆம் நூற்றாண்டில் சிற்பிகளான ஜான் நாஷ், எட்வர்ட் ப்ளோர் ஆகியோர் அதை விரிவாக்கி கட்டினர். 1837ல் விக்டோரிய அரசி அதை தன் மாளிகையாகக் கொண்டார்

and

Andrea Palladio

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன் அனுமதிபெற்ற சுற்றுலாப்பயணிகள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுகிறார்கள். நாங்கள் அந்த மாபெரும் கம்பிவாயிலுக்கு வெளியே நின்று அக்கட்டிடத்தை நோக்கினோம். இந்தியாவை நூறாண்டுகள் ஆண்ட மையம் அது என்ற எண்ணமே என்னுள் இருந்தது. மாளிகைகளுக்கு சில பாவனைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமையமாக உருவாகிவிடும் மாளிகைகள் தோரணையும் அலட்சியமும் வெளிப்படும் நிமிர்வு கொண்டிருக்கும். முகவாயை தூக்கிய உயரமான பிரிட்டிஷ் அரசகுடியினரை காணும் உணர்வை அடைந்தேன்

பக்கிங்ஹாம் அரண்மனை புதுச்செவ்வியல் வடிவிலமைந்தது.[ Neoclassical] பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் பெரும்பாலான அரசுக் கட்டிடங்கள் அந்தப்பாணியில் அமைந்தவையே. இவ்வரசுகளின் அதிகாரக்கொள்கை, அவர்கள் கோரும் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றை குறியீட்டளவில் மிகச்சிறப்பாக உணர்த்தும் பாணி இது.  இத்தாலியச் சிற்பி அண்டிரியா பல்லாடியோ [Andrea Palladio] இந்தப்பாணியின் முன்னோடி. பண்டைய கிரேக்க, ரோமானியக் கட்டிடக்கலையை ஒட்டி நவீனகாலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டது இந்த வடிவம். காட்சியில் தொன்மையான பெருமாளிகைகளின் மாண்பு தெரியும். ரோமானியபாணியின் உயர்ந்த பெருந்தூண்கள் இதன் முகப்படையாளம். நமது பாராளுமன்றமும் இந்த அமைப்பு கொண்டதே. பக்கிங்ஹாம் அரண்மனை ஒரே சமயம் மாளிகை போலவும் பெரிய அணைக்கட்டு போலவும் எனக்கு பிரமை எழுப்பிக்கொண்டிருந்தது

famine

சென்னை பஞ்சம் -மெட்ராஸ் மெயில்

பக்கிங்ஹாம் என்னும் சொல் சென்னை கவர்னராக இருந்த பக்கிங்ஹாம் அவர்களை நினைவிலெழுப்புகிறது.  அவர் வெட்டியதுதான் விழுப்புரத்திலிருந்து சென்னைவழியாக காக்கிநாடா வரைச் செல்லும் 796 கிலோமீட்டர் தொலைவுள்ள பக்கிங்ஹாம் கால்வாய். டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் [1823 – 1889] பல்வேறு அரசியல்சூதாடங்களால் சொத்துக்களை இழந்து கடனாளியாகிய நிலையில் ஓர் ஆறுதல்பரிசாக சென்னை கவர்னர் பதவி அவருக்கு 1877ல் வழங்கப்பட்டது. சென்னை மாகாணம் உச்சபட்ச பஞ்சத்தைச் சந்தித்த காலகட்டம் அது. அது ஒரு செயற்கைப் பஞ்சம். இந்தியாவின் கிழக்குப்பகுதி பஞ்சத்தால் அழிந்தபோது மேற்குபகுதியிலிருந்து பெருமளவுக்கு உணவு வெளியே கொண்டுசெல்லப்பட்டது. சென்னையின் பிரிட்டிஷ் நாளிதழான மெட்ராஸ் மெயில் உட்பட இதழாளர்களும், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீருடன் மன்றாடியும்கூட விசாகபட்டினத்திலிருந்து உணவுத்தானியம் ஏற்றுமதியாவது நிறுத்தப்படவில்லை. அரசு கணக்குகளின்படியே கூட கிட்டத்தட்ட ஒருகோடிபேர் பலியானார்கள். மும்மடங்கினர் அயல்நாடுகளுக்கு அடிமைப்பணிக்காகச் சென்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அன்னியச்சூழலில் அழிந்தனர்.

அந்தப் பேரழிவுக்கு பக்கிங்ஹாம் ஒருவகையில் பொறுப்பேற்கவேண்டும். அவருடைய ஆட்சி என்பது கட்டுமானத்தொழிலில் இருந்த இந்தியர்கள், ஏற்றுமதியாளர்கள், தோட்டத்தொழில் உரிமையாளர்கள் ஆகியோர் சேர்ந்து செய்த மாபெரும் கூட்டு ஊழலாக மட்டுமே இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களாலும் அவர்களின் அடிபணிந்து வரலாறெழுதியவர்களாலும் அவ்வரலாறு பெரும்பாலும் மறைக்கப்பட்டது, பூசிமெழுகப்பட்டது. முதன்மைக்காரணம், பஞ்சத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் அடித்தள மக்கள். இன்று மலைமலையாகத் தகவல்களை பிரிட்டிஷ் ஆய்வாளர்களே எடுத்து வைத்தபின்னரும்கூட பிரிட்டிஷ்தாசர்களாகிய இந்தியர்கள் ஒருசாரார் பிரிட்டிஷார் மேல் பிழையில்லை, அவர்கள் சிறந்த நிர்வாகிகள் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

1024px-GrainFamineMadras

பஞ்சத்தின்போது சென்னையிலிருந்து ஏற்றுமதியான உணவுத்தானியம் – மெட்ராஸ் மெயில்

அவர்கள் சொல்வது பிரிட்டிஷார் உருவாக்கிய நிவாரண முகாம்களைப்பற்றி. பிரிட்டிஷார் செய்திருக்கவேண்டியது முதலில் உணவு ஏற்றுமதியை நிறுத்துவது. அது இறுதிவரை செய்யப்படவில்லை. மாறாக நிவாரணநிதி ஒதுக்கப்பட்டு அதில் கட்டுமானங்கள் செய்யப்பட்டன. கட்டுமானம் என்றால் இந்தியாவில் ஊழல் என்றே பொருள். கிட்டத்தட்ட உலகம் முழுக்க அப்படித்தான். அதிலும் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசுநிர்வாகம் ஊழல் வழியாகவே உருவாகி நிலை நின்ற ஒன்று.

அந்த ஊழல்மைய நிவாரணப் பணிகளின் உச்சம் பக்கிங்ஹாம் கால்வாய். அருகே கடல் இருக்க உள்நாட்டு படகுப்போக்குவரத்துக்கு அத்தனை பெரிய கால்வாய் என்பதே ஒரு வேடிக்கை. அந்த மாபெரும் அமைப்பு வெறும் ஐம்பதாண்டுகள் கூட பயன்பாட்டில் இருக்கவில்லை. சொல்லப்போனால் எப்போதுமே முழுமையாக பயன்பாட்டில் இருக்கவில்லை. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இயற்கையான உள்கடல்கள் மட்டுமே சிறிதுகாலம் பயன்பாட்டிலிருந்தன. தொடர்ந்து மணல்மூடிக்கொண்டிருக்கும் இடத்தில் அமைந்த அக்கால்வாயை பராமரிப்பது இயல்வதல்ல என்பதனால் அது கைவிடப்பட்டது. இன்று கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது. பிரிட்டிஷாரின் நிர்வாகத்திறன், பொறியியல் திறன் ஆகியவற்றை விதந்தோதுபவர்கள் அந்த மாபெரும் தோல்வியை, ஊதாரித்தனத்தை , ஊழலை கருத்தில்கொள்வதேயில்லை.

buk

பக்கிங்ஹாம் பிரபு

பக்கிங்ஹாம் என்ற சொல்லை கால்வாயுடன் , பஞ்சத்துடன் இணைக்காமலிருக்க என்னால் இயலவில்லை. ரெயினால்ட்ஸின் கதைநாயகனாக அந்த அரண்மனையின் ஆழ்ந்த சுரங்கங்கள் வழியாகச் சென்றால் அடுக்கடுக்காக செல்லும் அதன் அடித்தள வரலாற்றில் எங்கே சென்று சேர்வேன்? கோடிக்கணக்கான எலும்புகளும் மண்டையோடுகளும் குவிந்துகிடக்கும் ஒரு வெளிக்கா என்ன?

பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணைந்து நினைவுக்கு வந்தவர் காந்தி. 1930 ல் வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் வந்த காந்தி பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆறாம் ஜார்ஜ் மன்னரை  சந்திக்கச்சென்றபோது சம்பிரதாயங்களையும் மீறி எளிய அரையாடை அணிந்திருந்தார்.  அவ்வெண்ணம் வந்தபோது மீண்டும் பக்கிங்ஹாம் மாளிகையை நிமிர்ந்து பார்த்தேன்.  அந்த மாளிகையே மன்னரைப்போலத் தோன்றியது. சரோஜினி நாயுடுவுடன் காந்தி கைத்தடி ஊன்றி நடந்துவரும் காட்சி என் உள்ளத்தில் எழுந்தது.

gandhi-handshake-with-king-george

காந்தி 1921 செப்டெம்பரில் மதுரைக்கு வந்து இங்கிருந்த பஞ்சத்தில் நலிந்த விவசாயிகளின் கந்தலணிந்த மெலிந்த உடல்களைக் கண்டபின்னரே அந்த ஆடைக்கு மாறினார். மாபெரும் பஞ்சத்தின் பலியாடுகளில் ஒருவராக அவரும் ஆனார். அவர்களின் பிரதிநிதியாகச் சென்று பக்கிங்ஹாம் அரண்மனையில்  ‘தேவைக்குமேல்’ ஆடையும் அணிகளும் அணிந்திருந்த அரசர் முன் நின்றார். ஒருங்கிணைந்த இந்தியாவின் ஆற்றலின் அடையாளமாக ஆனார். அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் ஒட்டுமொத்தச் சுரண்டலுக்கும் எதிராக இந்தியாவின் பதில்.

 

 

https://www.jeyamohan.in/112369#.W5VGV6TTVR4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா-6,மேற்குமலைமுடி

shak

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒருகாலகட்டத்தில் பள்ளிக்கல்வியின் தவிர்க்கமுடியாத பகுதியாக இருந்தது. அவர்கள் வெளியிட்ட நூல்கள் பெரும்பாலான பள்ளிநூலங்களில் இருக்கும். முதன்மையாக, பழந்தமிழ் இலக்கியங்களின் முறையாக பிழைநோக்கப்பட்ட எளிய பதிப்புகள். புலியூர் கேசிகன் உரையுடன் சங்கப்பாடல்களை நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் வாசித்தது ஒரு மாபெரும் திறப்பு. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட வெளிநாட்டு இலக்கிய அறிமுக நூல்கள் ஒரு புத்துலகைத் திறந்துவைத்தவை. வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ, லிட்டன்பிரபுவின் பாம்பியின் கடைசிநாட்கள்  முதலிய செவ்வியலக்கியப் படைப்புகளை எளிய நடையில் சுருக்கி கோட்டோவியங்களுடன் நல்ல காகிதத்தில் கெட்டி அட்டையில் வெளியிட்டார்கள். என் நடுநிலைப்பள்ளி நாட்களில் ஒரே வீச்சில் உலக இலக்கியச்சூழலை அறிந்துகொள்ள வழியமைத்தவை அந்நூல்கள்.

நான் ஷேக்ஸ்பியரின் படைப்புக்களை வாசிப்பது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்த கா.அப்பாத்துரையின் ‘ஷேக்ஸ்பியர் கதைக்கொத்து’ என்னும் நூலில்தான். ஐந்தாம் வகுப்பை முழுக்கோடு பள்ளியில் முடித்து ஆறாம் வகுப்பை அருமனை உயர்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக வந்திருந்தேன். முத்தையா என்னும் ஆசிரியர்தான் நூலகத்துக்குப் பொறுப்பு. என் வாசிப்பார்வத்தைக் கண்டு அவர் அந்நூலை எனக்கு அளித்து “இதப்படிலே.இவனுக்குமேலே கதைசொல்றவன் கெடையாது” என்றார்.  மாக்பெத்தும், லியர் மன்னனும், ஹாம்லெட்டும் என்னை ஆட்கொண்டார்கள்.

கா அப்பாத்துரை

கா அப்பாத்துரை

பன்மொழிப்புலவர் என அழைக்கப்பட்ட கா.அப்பாத்துரை குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரல்வாய்மொழியில் 1907ல் பிறந்தார். இயற்பெயர் நல்லசிவம். திருவனந்தபுரம் பல்கலை மாணவர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் முதுகலைப் பட்டம்பெற்றவர். இந்தி, சம்ஸ்கிருதம் ஆகியமொழிகளிலும் பட்டம்பெற்றிருக்கிறார். நெல்லையிலும் மதுரையிலும் காரைக்குடியிலும் இந்தி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். அக்காலத்தைய தமிழியக்கச் செயல்பாடுகளில் முதன்மைக்குரல்களில் ஒன்றான கா.அப்பாத்துரை மொழியாக்கம், வரலாற்றாய்வு, தமிழாய்வு என எழுதிக்குவித்தவர். இவருடைய மொழியாக்கத்தில் மலையாள முதல்நாவல்களான இந்துலேகா , மார்த்தாண்டவர்மா போன்றவை தமிழில் வெளிவந்துள்ளன. பதினொன்றாம்நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய ஆசிரியரான  முரசாகி ஷிகுபு எழுதிய The Tale of Genji  இவருடைய மொழியாக்கத்தில் செஞ்சி கதை என்றபேரில் வெளிவந்துள்ளது. குமரிக்கண்டம் பற்றி நிறைய எழுதியவர் என்றாலும் இவருடைய வரலாற்றாய்வுநூல்களில் தென்னாட்டுப் போர்க்களங்கள் தான் முக்கியமான படைப்பு.

கா.அப்பாத்துரைக்கு முன்னோடியாக அமைந்தது பிரிட்டிஷ் கட்டுரையாளரும் தொல்பொருள் சேகரிப்பாளருமான சார்லஸ் லாம்ப் [Charles Lamb  1775 – 1834] எழுதிய Tales From Shakespeare. என்னும் கதைநூல் 1807 ல் வெளிவந்த இந்த குறுங்கதைத் தொகுதி ஷேக்ஸ்பியரை உலகமெங்கும் கொண்டுசென்றது. அப்போது பிரிட்டிஷ் பேரரசு உலகின் பெரும்பகுதியை ஆண்டது. அங்கெல்லாம் ஆங்கிலக் கல்வியை அவர்கள் கொண்டுசென்றார்கள். பிரிட்டிஷார் வகுத்த ஆங்கிலக் கல்வியின் முதன்மை ஆசிரியராக ஷேக்ஸ்பியர் இருந்தார். அவரை ஒரு பிரிட்டிஷ்பெருமிதமாகவே அவர்கள் கருதினர். ஷேக்ஸ்பியரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முதல்நூலாக சார்லஸ் லாம்பின் கதைத் தொகுதி புகழ்பெற்றது. பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் பாடமாக இருந்தது. பல்லாயிரக்கணக்காக அது அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. இன்றும்கூட அது பல கல்விநிலையங்களில் பாடமாக உள்ளது.

lamb

சார்ல்ஸ் லாம்ப்

உலகமெங்கும் முந்நூறாண்டுக்காலம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மதநூல்களைப்போலப் பயிலப்பட்டன. ஆங்கில நடையைக் கற்றுக்கொள்வதற்கு ஷேக்ஸ்பியர் கவிதைகளில் பயிற்சி இருந்தாகவேண்டும் என்று சொல்லப்பட்டது. பேச்சில் ஷேக்ஸ்பியர் வரிகளை மேற்கோளாக்குவது அன்றைய படித்த நாகரீக மனிதர்களின் இயல்பாகக் கருதப்பட்டது. பேராசிரியர்கள் ஷேக்ஸ்பியர் வரிகளை வேடிக்கையாகவும் கவித்துவமாகவும் கையாள்வதும் அதை மாணவர்கள் புரிந்துகொண்டு சிரிப்பதும் அன்று சாதாரணம். சென்றகால அரசு அதிகாரிகளின் கோப்புக் குறிப்புகளில் ஷேக்ஸ்பியர் வரிகள் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

சில நினைவுகள். இந்திரா பார்த்தசாரதியின் நாவலொன்றில் ஒரு சிறு கிராமத்தில் விருந்தினராக வீட்டுக்கு வரும் நாடோடிக்கிழவர் பேச்சின் நடுவே  the rest is silence என்ற ஷேக்ஸ்பியர் வரியை சொல்வதைக் கண்டு கதைசொல்லி வியப்பதை எழுதியிருப்பார். நான் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் இளங்கலை பயின்றபோது Adwanced English கற்பித்த ஆசிரியர் ஆர்தர் டேவிஸ் எரிச்சலுடன் Listen to many, speak to a few ,do nothing  என்று சொன்னது ஷேக்ஸ்பியரின் வரியின் மீதான அவருடைய பகடி என  மாணவர்கள் அறிந்திருந்தார்கள் என்பது பலர் சிரித்ததிலிருந்து தெரிந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் அறுபதுகளைச் சேர்ந்த கோப்பு ஒன்றை ஒரு வழக்குக்காக பார்த்தபோது அக்கால அதிகாரி ஒருவர் Nothing can come of nothing. என்ற ஷேக்ஸ்பியர் வரியை குறிப்பிட்டிருப்பதைக் கண்டேன்.

[மொத்த ஷேக்ஸ்பியரே இவர்களிடம் மேற்கோளாக மாறிவிட்டார் என்பார்கள். ஷேக்ஸ்பியர் நூல் ஒன்றை நூலகத்தில் எடுத்து வாசித்த பெண்மணி ஏகப்பட்ட மேற்கோள்கள், ஆகவே நடை நன்றாக இல்லை என்று திருப்பிக்கொடுத்துவிட்டார் என்று  ஒரு நகைச்சுவை உண்டு].

ஸ்டிராட்போர்ட் அரங்கு கனடா

ஸ்டிராட்போர்ட் அரங்கு கனடா

இவர்கள் பெரும்பாலும் அக்கால ஆங்கிலேய ஆசிரியர்களிடம் படித்தவர்கள். அவர்கள் ஷேக்ஸ்பியர் வெறியர்கள். அவர்களிடமிருந்து அந்நோய் தொற்றிக்கொண்டது. அக்காலக் கல்லூரிகளில் ஒரு ஷேக்ஸ்பியர் நிபுணர் இருப்பார். ஷேக்ஸ்பியர் என்றே அடைமொழி இருக்கும். மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியில் லைசாண்டர் என்ற ஆசிரியருக்கு அப்படி ஓர் அடைமொழி உண்டு. வசையாக கொஞ்சம் மாற்றியும் சொல்வோம்.

ஆச்சரியமான ஒன்றுண்டு, இந்தியர்களின் உள்ளத்தில் ஷேக்ஸ்பியரின் செல்வாக்கு மிகமிகக் குறைவு. இந்திய இலக்கியச் சிற்பிகள் எவருமே தங்களைக் கவர்ந்த முன்னோடிப்படைப்பாளியாக அவரைச் சொன்னதில்லை. கற்பனாவாதக் கவிஞர்களில் பைரன்,ஷெல்லி, கீட்ஸ், வெர்ட்ஸ்வெர்த் ஆகியோரும் பிற்காலக் கவிஞர்களில் டி.எஸ்.எலியட்டும் இந்தியமொழிகளில் தீவிரமாக செல்வாக்கு செலுத்தியவர்கள். இந்திய மொழிகள் அனைத்திலுமே ஒரு ஷெல்லியும் எலியட்டும் இருப்பார்கள் என்று சுந்தர ராமசாமி சொன்னதுண்டு. தமிழில் ஷெல்லிக்கு பாரதி எலியட்டுக்கு சி.மணி. மலையாளத்தில் ஷெல்லிக்கு சங்கம்புழா எலியட்டுக்கு என்.என்.கக்காடு. ஆனால் ஷேக்ஸ்பியர்கள் இல்லை

இந்திய கட்டிடக்கலை குறித்தும் இலக்கியம் குறித்தும் முக்கியமான நூல்களை எழுதியிருக்கும் கே.ஆர்.அய்யங்கார் இந்திய மொழிகளில் ஷேக்ஸ்பியர் எப்போது மொழியாக்கம் செய்யப்பட்டார் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார்.  Shakespeare in India  என்னும் தலைப்பில்.. இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு ஒன்றுக்குமேற்பட்ட மொழியாக்கங்கள் உள்ளன. இந்திய மொழிகளில்  அச்சில்வெளிவந்த மிக ஆரம்பகால படைப்புகள், ஷேக்ஸ்பியர் மொழியாக்கங்கள்தான்.

மலையாளத்தில் ஷேக்ஸ்பியரின் The Comedy of Errors நாடகத்தை கல்லூர் உம்மன் பிலிப்போஸ் உரைநடையில் 1866ல் ஆள்மாறாட்டம் என்றபேரில் மொழியாக்கம் செய்தார். அது உரைநடையிலக்கியத்தின் தொடக்ககால நூல்களில் ஒன்று. தமிழில் விஸ்வநாத பிள்ளை 1870ல்  The Merchant of Venice  ஐ மொழியாக்கம் செய்தார். பம்மல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியரின் நான்கு நாடகங்களை தமிழாக்கம் செய்துமேடையேற்றினார். இலக்கிய நோக்கில் அரு.சோமசுந்தரம், கள்ளபிரான் பிள்ளை, சி.நமச்சிவாயம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பாளர்கள். இந்த மொழியாக்கங்கள் எவையுமே கவித்துவமானவை அல்ல.  தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள், இலக்கியத்தகுதி கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் ஷேக்ஸ்பியரை மொழியாக்கம் செய்ததில்லை. ஆகவே தமிழிலும் மலையாளத்திலும் ஷேக்ஸ்பியரின்  கருத்தியலோ அழகியலோ எந்த இடத்தையும் பெறவில்லை. ஏன் என்பது ஆய்வாளர்களுக்குரிய தேடல்.

பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார்

என்னுடைய உளப்பதிவு இது. ஒன்று, ஷேக்ஸ்பியர் எலிசபெத் –விக்டோரிய யுகத்தின் அடையாளமாகவே இங்கே முன்வைக்கப்பட்டார். ஆகவே அவர் கல்வித்துறையிலேயே திகழ்ந்தார். இந்திய இலக்கியம் என்பது ஆங்கில ஆதிக்கத்திற்கும் அதன் விழுமியங்கள் நிறைந்திருந்த கல்விநிலையங்களுக்கும் எதிராக எழுந்த ஒன்று. ஆகவே ஷேக்ஸ்பியரை இந்திய இலக்கிய முன்னோடிகள் பொருட்படுத்தாமலிருந்திருக்கலாம். ஷேக்ஸ்பியரின் உலகப்பார்வை அங்கதம் நிறைந்த கசப்பு கொண்டது. அது இலட்சியவாதம் பெருகி எழுந்த பத்தொன்பதாம்நூற்றாண்டு இந்திய உள்ளத்துக்கு உவப்பாக இல்லாமலிருந்திருக்கலாம். அதோடு ஷேக்ஸ்பியர் பேசிய ஐரோப்பிய வரலாற்றுச்சூழலுடன் ஒன்றமுடியாததும் காரணமாக இருந்திருக்கலாம்

சென்ற இருபத்தைந்தாண்டுகளாகத்தான் ஷேக்ஸ்பியர் பள்ளிப்பாடங்களில் இருந்து வெளியேறி வருகிறார். உலக அளவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுக்கச் சென்ற Plain Language Movement அதற்கு முக்கியமான காரணம். அவ்வியக்கத்தின் வேர்கள் நவீனத்துவ அழகியலில் உள்ளன. நவீனத்துவ எழுத்தாளர்கள் மொழியை ஒலியழகுடனும்  சொல்லணிகளுடனும் எழுதுவதை எதிர்த்தார்கள். சிக்கலான மொழி நடைமுறையில் பயனற்றது என்று வாதிட்டனர். மக்கள் பேசும் மொழிக்கு அணுக்கமாக இருப்பதே நல்ல நடை என்ற கருத்து நவீனத்துவத்தின் ஆசிரியர்களால் சொல்லிச்சொல்லி நிறுவப்பட்டது.  காம்யூ, காஃப்கா, ஹெமிங்வே ஜார்ஜ் ஆர்வல் போன்றவர்கள்   மிக எளிய நேரடி நடையில் எழுதியவர்கள். அந்த அலை உலகம் முழுக்கச் சென்றது. தமிழில் ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சுஜாதா போன்றவர்கள் அந்நடைக்காக வாதிட்டிருப்பதைக் காணலாம்

ஷேக்ஸ்பியர் இல்லம் இங்கிலாந்து

ஷேக்ஸ்பியர் இல்லம் இங்கிலாந்து

நேரடியான எளிய நடையை முன்வைத்தவர்களுக்கு இதழியலுடன் உள்ள தொடர்பு குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் ஆர்வெல், ஹெமிங்வே போன்றவர்கள் இதழியலாளர்கள் மட்டுமல்ல, போர்ச்செய்தியாளர்களும் கூட.ஆகவே நேரடித்தன்மை, சுருக்கம் ஆகிய இரண்டும் அவர்களுக்கு முதன்மையாகப் பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் நவீனத்துவம் ஓர் இலக்கிய அலையாக உலகமெங்கும் பரவியது. அதன் விளைவாக அதுவரை உலகமெங்கும் ஆங்கிலக்கல்வியின் ஒருபகுதியாக இருந்த பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

1970 களில் அமெரிக்காவில் அது ஒரு கொள்கையாகப் பரவலாயிற்று. செய்தி,வணிகம், அரசுநிர்வாகம் ஆகிய தளங்களில் மிக எளிமையான நேரடியான ஆங்கிலமே பயன்படுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. 1976ல் ஜிம்மி கார்ட்டரின் அரசு எளிய ஆங்கிலத்தையே அரசில் பயன்படுத்தவேண்டும் என ஆணை பிறப்பித்தது. எளிய ஆங்கிலம் பல்லினக்குடியேற்றம் கொண்ட அமெரிக்காவுக்கு தவிர்க்கமுடியாததாக இருந்தது. அத்துடன் பெருவளர்ச்சி அடையத் தொடங்கிய அறிவியல்- தொழில்நுட்பத்துறை  எளிய ஆங்கிலத்தையே நாடியது

விளைவாக இந்தியாவிலும் கல்வித்துறை மாற்றங்கள் உருவாயின. கல்லூரிகளில் கற்பிக்கப்பட்ட ஆங்கிலத்தை ‘நடைமுறை’ ஆங்கிலமாக மாற்றவேண்டும் என்று கொள்கை வகுக்கப்பட்டது. விளைவாக கவிதை மிகவும் குறைக்கப்பட்டது. குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கவிதை. பெரும்பாலான பாடங்களில் அமெரிக்க எழுத்து அதிக இடம்பெற்றது. அந்த அலையில் ஷேக்ஸ்பியர் காணாமலானார். நான் என் கல்லூரி புகுமுக வகுப்பில் இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களை படித்திருக்கிறேன். A Midsummer Night’s Dream, As You Like It. என் மனைவி என்னைவிட எட்டாண்டுகள் இளைவள். அவள் ஷேக்ஸ்பியரின் மிகச்சிறிய மனப்பாடச்செய்யுள் ஒன்றை மட்டுமே படித்திருக்கிறாள். மற்றபடி ஷேக்ஸ்பியரை கல்விக்கூடம் வழியாக அறியவே இல்லை.

shak6

ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு, ,பழையபடம்

இதில் ஒரு வேடிக்கை, அக்காலத் தமிழ்ப் பாடத்திட்டமும் ஆங்கிலப்பாடத்திட்டத்தை ஒட்டி அமைக்கப்பட்டது என்பதே. ஆகவே ’நாடகச்செய்யுள்’ ஒரு பாடம். அதற்கு தமிழில் செய்யுள் நாடகங்கள் இல்லை. ஆகவே ஆசிரியர்கள் அதன்பொருட்டு நாடகங்கள் எழுதினர். சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியம் அவ்வாறு எழுதப்பட்டதே. புலவர் ஆ.பழநியின் அனிச்ச அடி போன்ற பல நாடகங்கள் பின்னாளில் எழுதப்பட்டன. எச்சுவையும்  இல்லாத இந்த சக்கைகளை ஷேக்ஸ்பியரை நினைத்துக்கொண்டு மாணவர்கள் மென்று விழுங்கவேண்டியிருந்தது.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசிக்க மிகச்சிறந்த வழியாக நான் கண்டுகொண்டது ஆங்கிலப் பட்டப்படிப்பு முதுகலைப் படிப்புகளுக்குப் பாடமாக பரிந்துரைசெய்யப்பட்ட நாடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள உரையுடன் கூடிய நூல்கள். சாணித்தாளில் வெளியிடப்பட்டவை. பழையபுத்தகக் கடைகளில் ஓரிரு ரூபாய் விலையில் கிடைக்கும். ஒருபக்கம் மூலம், நேர் எதிர்பக்கம் சொற்பொருள், பொழிப்புரை. என்னிடம் ஏறத்தாழ எல்லா ஷேக்ஸ்பியர் நாடகங்களும் இருந்தன. இணையம் இல்லாத அந்தக்காலத்தில் மிக எளிதாக பொருளறிந்து வாசிப்பதற்கு உதவியானவை அவை.

ஷேக்ஸ்பியர் நாடகங்களின் சிறப்புகள் குறித்து பலவாறாக எழுதப்பட்டுள்ளது. நான் முக்கியமாக நினைப்பது அவற்றின் ‘நாடகத்தன்மை’தான். நாடகாந்தம் கவித்துவம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லாட்சிக்குச் சிறந்த உதாரணங்கள் அவை. நாடகம் என்பது மிகச்சிறிய ஓர் கால இட எல்லைக்குள் வைத்து வாழ்க்கையைச் சொல்லியாகவேண்டிய கட்டாயம் கொண்டது.எந்தக் கலைக்கும் அதன் எல்லையே சாத்தியமும் ஆகிறது. நாடகம் அந்த எல்லை காரணமாகவே வாழ்க்கையின் உச்சத்தருணங்கள் வழியாகச் செல்லவேண்டியிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அத்தகையவை. ஓதெல்லோ தொடங்குமிடம் ஓர் உதாரணம். டெஸ்டெமோனாவைத் தேடி வாளுடன் அரங்கில் பாய்ந்து நுழையும் வீரர்கள், அங்கே வந்து அவர்களிடம் உங்கள் வாள்களை உறையிலிடுங்கள், நிலவொளியில் துருப்பிடிக்கப்போகின்றன என  ‘பஞ்ச் டயலாக்’ பேசும் ஓதெல்லோ என அது பரபரப்பாகவே ஆரம்பித்து அப்பரபரப்பு குறையாமல் மேலே செல்கிறது.

sham4

ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு,

அந்த உச்சப்படுத்தல் கொஞ்சம் செயற்கையானதே, ஆனால் கலை  என்பதே அடிப்படையில் செயற்கையானதுதான். இயற்கையானதாகத் தெரிவதுகூட செயற்கையான செதுக்கல்தான். இயற்கையான வெளிப்பாட்டின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தல்ஸ்தோய் ஷேக்ஸ்பியரை நிராகரித்தது புரிந்துகொள்ளக்கூடியதே, ஆனால் அவருடைய  The Power of Darkness கூட ஷேக்ஸ்பியர் பாணி செயற்கை உச்சங்கள் கொண்டதே. ஷேக்ஸ்பியரின் கலை அந்த உச்சங்களினூடாக அது சென்றடையும் வாழ்க்கைத்தரிசனங்களில் உள்ளது. அது மானுடனின் அனைத்து இருள்களையும் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கைநோக்கிய ஒரு பார்வையைச் சென்றடைவது. பலசமயம் எதிர்மறைத்தன்மை கொண்டதாயினும் பகடியும் கவித்துவமும் கலந்தது

ஆனால் இன்று ஷேக்ஸ்பியர் நாடகங்களை மேடையில் நடிக்கமுடியுமா என்னும் ஐயம் எனக்கிருந்தது.2001ல் கனடாவுக்குச் சென்றபோது அ.முத்துலிங்கம் அவர்களின் உதவியால் Stratford Shakespeare Festival லுக்குச் சென்றேன். கனடாவின் ஒண்டோரியோ மாநிலத்தில் உள்ள ஸ்டிராட்போர்ட் என்னும் ஊரில் நிகழும் ஷேக்ஸ்பியர் நாடகவிழா நாடகத் தயாரிப்பாளரான டாம் பாட்டர்ஸன் Tom Patterson அவர்களால் தொடங்கப்பட்டது. பாட்டர்ஸன் கனடாவின் ஸ்ட்ராஃபோர்டு ஊரைச் சேர்ந்தவர்.இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரின் பெயர் அது. அவர் அங்கே 1953 ல் மேயர் டேவிட் சிம்ப்ஸனின் உதவியுடன் அந்த நாடகவிழாவை ஒருங்கிணைத்தார்.அக்கால நட்சத்திரமான அலெக் கின்னஸ் அதை தொடங்கிவைத்தார். மிகச்சிறிய புறநகரான ஸ்டிராஃபோர்ட் மெல்ல புகழ்பெறலாயிற்று. இன்று திறந்தவெளி அரங்குகள், மரபான அரங்குகள் என பற்பல நிரந்தர நாடக அரங்குகளுடன் முக்கியமான கலைமையமாக ஆகியிருக்கிறது இவ்வூர்

shamr

ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு, ,பழையபடம்

ஷேக்ஸ்பியர் நாடகவிழாவாக இருந்தாலும் அனைத்து நாடகங்களும் அங்கே அரங்கேறும். நான்  வில்லியம் ரோஸ் எழுதிய Guess Who’s Coming to Dinner போன்ற நவீனயுக நாடகங்களை அங்கே பார்த்தேன் இவையெல்லாம் பேசிக்கொண்டே இருக்கும் நாடகங்கள், வசனமழை என்றுதான் வாசிக்கையில் நினைத்திருந்தேன். ஆனால் மேடையில் பார்க்கையில் , நாடக அரங்கை நிறைக்கும் உடலசைவுகள், நேரக்கணக்கு தவறாத சொல்பரிமாற்றம், இயற்கையான நடிப்புடன் அபாரமான அனுபவமாக இருந்தன. இங்குதான் முதல்முறையாக ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை மேடையில் பார்த்தேன். Twelfth Night. மிகத்தேர்ந்த அரங்கப்பயிற்சியால் கண்களை விலக்கமுடியவில்லை, கீழே விழுந்த ஒரு கைக்குட்டையைக்கூட இடைவேளையிலேயே எடுக்கமுடிந்தது. பயின்ற குரல்களால் பேசப்பட்ட ஒரு வசனம்கூட புரியாமலில்லை – எனக்கு ஆங்கில உச்சரிப்பு எப்போதுமே புரிந்துகொள்ளக் கடினமானது. அரங்க அனுபவம் என்றால் என்ன என்று அறிந்துகொண்ட நாட்கள் – நான் தமிழில் இன்றுவரை ஒரு மேடைநாடகத்தைக்கூட ரசித்ததில்லை.

அசல் ஸ்டிராட்போர்டுக்குச் செல்வோம் என அப்போது எண்ணியிருக்கவில்லை. Stratford-upon-Avon என அழைக்கப்படும் சிற்றூர் பிரிட்டனில் வார்விக்‌ஷயரில் அவோன் ஆற்றங்கரையில் உள்ளது. ஷேக்ஸ்பியர் பிறந்த ஊர் அது. இங்குள்ள ஹென்லி தெருவில் உள்ள பழைமையான மாளிகையில்தான் ஷேக்ஸ்பியர் பிறந்தார் என்கிறார்கள். வரலாறு என்பதைவிட பெரும்பாலும் இது ஒருவகை நவீனத் தொன்மம்தான். அந்த வீடு 16 ஆம் நூற்றாண்டுமுதல் அங்கிருந்தாலும் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. செங்கல்லாலும் மரத்தாலும் ஆனது. இன்று அது ஷேக்ஸ்பியர் அருங்காட்சியகமாக உள்ளது. பதினாறாம்நூற்றாண்டின் தன்மையை வைத்து நோக்கினால் இது ஒரு பெரிய மாளிகைதான். இந்திய விழிகளுக்கு அந்த மாளிகைக்கும் ஸ்ட்ரார்போர்டில் உள்ள பிற வீடுகளுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. அதை பழைமையான வீடு என வெளியே இருந்து நோக்கினால் சொல்லமுடியாது

shak

ஆனால் உள்ளே சென்றால் பழைமை தெரியும். பல அறைகள் குறுகலானவை. உணவுமேஜை, நாற்காலிகள் எல்லாமே எளிமையான அமைப்பு கொண்டவை.  1564 ல் அங்கே ஷேக்ஸ்பியர் ஜான் ஷேக்ஸ்பியர் என்னும் கம்பிளி வணிகரின் மகனாகப்பிறந்தார். ஜான் ஷேக்ஸ்பியர் தோலால் கையுறைகள் செய்யும்தொழிலையும் செய்துவந்தார். அந்த இல்லத்தின் கீழ்ப்பக்கம் அவருடைய பணிச்சாலையும் கடையும் இருந்தன. அங்கே இப்போது பாதிசெய்யப்பட்ட கையுறைகளுடன் அவருடைய பணிக்கருவிகள் உள்ளன. ஜான் ஷேக்ஸ்பியரிடமிருந்து இந்த இல்லம் ஷேக்ஸ்பியருக்கு வந்தது. அவருக்கு வேறுவீடு இருந்தமையால் அவர் இதை பெரும்பாலும் பயன்படுத்தவில்லை. லூயிஸ் ஹிக்காக்ஸ் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்ட இந்த கட்டிடம் ஒரு விடுதியாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியருக்குப்பின் அவர் மகள் சூசன்னாவுக்கு உரிமையான இவ்வில்லம் அக்குடும்பம் மறைந்தபின் மறக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் தாமஸ் கார்லைல், சார்ல்ஸ் டிக்கன்ஸ் போன்ற பலர் இங்கே வந்து சுவர்களில் கையெழுத்திட்டிருக்கின்றனர்

1846ல் ல் அமெரிக்க வணிகரான பி.டிபார்னம் [ P. T. Barnum]  என்பவர் இந்த மாளிகையை விலைக்கு வாங்கி செங்கல்செங்கல்லாகப் பெயர்த்து அமெரிக்கா கொண்டுசென்று நிறுவ திட்டமிட்டார். அச்செய்தி பிரிட்டனின் தேசிய உணர்வை எழச்செய்யவே  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒரு தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஷேக்ஸ்பியர் பிறந்த ஊர் கமிட்டி அமைக்கப்பட்டது. டிக்கன்ஸ் போன்றவர்களின் உதவியுடன் 3000 பவுண்டுக்கு அந்த இடம் வாங்கப்பட்டு ஷேக்ஸ்பியர் நினைவில்லமாக ஆக்கப்பட்டது.  இன்றிருக்கும் கட்டிடம் அக்கமிட்டியால் விரிவாக்கி கட்டப்பட்டது

shakk

ஸ்டிரார்போர்ட் குளிராக இருந்தது. அந்த கட்டிடத்தின் உள்ளே செல்கையில் வரலாற்றுநிலைகளில் உருவாகும் காலப்பயணம் சாத்தியமானது. குறுகலான அறைக்குள் மூச்சுக்காற்றின் நீராவி நிறைந்திருந்தது. கற்பனையோ உண்மையோ அங்கே ஷேக்ஸ்பியர் வாழ்ந்தார் என்ற எண்ணத்துடன் அவ்வறைகளுக்குள் நடப்பதும், ஷேக்ஸ்பியர் படைப்புகளின் முதல் அச்சுப்பதிப்பு உட்பட அரிய நூல்சேகரிப்புகளை நோக்குவதும் கனவிலாழ்த்துவதாக இருந்தது.மெல்லியகுரலில் உரையாடல்கள்.வெளியே நிறைந்திருந்த ஆழ்ந்த அமைதி.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலிருந்து வெவ்வேறு கதைமாந்தர்களை நினைத்துக்கொண்டேன். எனக்கு எப்போதும் நெருக்கமானவனான மாக்பெத். ‘என் வாளே என்னை எங்கே அழைத்துச்செல்கிறாய்?’. காலத்தின் பெருக்கில் கற்பனைக்கதாபாத்திரங்கள் மேலும் மேலும் உண்மையானவர்களாக ஆகிறார்கள். உண்மையான மானுடர் கற்பனைக்கதாபாத்திரங்களாக ஆகிவிடுகிறார்கள். ஷேக்ஸ்பியரைவிட அவருடைய கதைமாந்தர் வரலாற்றில் மேலும் தெளிவுடன் தெரிகிறார்கள்.

வெளிவந்தபோது தோட்டம் இளமழையில் நனைந்திருந்தது. அங்கே லண்டன் வாழ் வங்கத்தவர் கொடையாக அளித்த தாகூரின் கற்சிலை. அருகில் ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். கா.அப்பாத்துரை முதல் எழுந்த ஒரு நீண்ட நினைவுச்சரடை உள்ளோ ஜெபமாலை போல மணிமணியாகத் தொட்டு உருட்டமுடிந்தது.

 

 

https://www.jeyamohan.in/112397#.W5n1nqTTVR4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

ராய் மாக்ஸம்

ராய் மாக்ஸம்

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

லண்டனில் மிக மையமான ஓர் இடத்தில் ராய் மாக்ஸம் வசிக்கிறார். அவர் ஆப்ரிக்காவிலிருந்து திரும்பிவந்து கையிலிருந்த பணத்துக்கு வாங்கிப்போட்ட இடம் அது. இன்று அது மிக மதிப்பு மிக்கது. கீழே கடைகள். மேலே அவருடைய இல்லம். அவர் மணம் செய்துகொள்ளாதவர். அவருடைய முன்னாள் தோழிகள் அன்றி இப்போது துணை எவருமில்லை. தானாகவே சமையல்செய்துகொள்கிறார். சன்னல்களில் வளர்ந்திருக்கும் செடிகளுக்கு நீரூற்றுகிறார். நாகரீகமான, பிரிட்டிஷ்த்தனமான, பிரம்மசாரி அறை. நிறைய ஒலிநாடாக்களைக் கண்டு நான் புன்னகைத்துக்கொண்டேன். பெரிசுகள் உலகமெங்கும் ஒரே வார்ப்புதான், சேர்த்துவைத்தவற்றை விட்டுவிட மனமிருக்காது

லண்டனின் தெருக்கள் நெரிசலானவை. நகர்மையத்தின் கட்டிடங்கள் பொதுவாக மிகப்பழையவை. குறுகலான படிகள் கொண்டவை. நகருக்கு வெளியே அமைதியான பெரிய புல்வெளிகளும் அழகிய மாளிகைகளும் உள்ளன. ஆனாலும் நகர்மையத்திற்குத்தான் சந்தை மதிப்பு அதிகம். ஏனென்றால் அங்கே தங்குவது கௌரவம்.

நானும் அருண்மொழியும் சிறில் அலெக்ஸ் மற்றும் அவர் மனைவி சோபனாவும் அவரைப் பார்க்கச் சென்றபோது ராய் உவகை அடைந்தார். ராய் எப்போதுமே குடும்பத்துடன் இருக்க விரும்புவர். நாங்கள் ஏற்பாடு செய்த தமிழகப் பயணத்தின்போது அவர் விடுதிகளில் தங்க மறுத்துவிட்டார். வீடுகளில் குடும்பத்துடன் தங்கினார், எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும். வெளியே போய்விட்டு வந்தால் ‘ஏருனா’ என்று அழைத்தபடி நேராக சமையலறைக்கே சென்று அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருப்பார். மென்மையான நகைச்சுவை கொண்ட ராய் பெண்களிடம் பேசும்போது குறும்பாக கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருப்பார். சிறில் அலெக்ஸின் மனைவி சோபனா அவருக்காக சமைத்துக் கொண்டுவந்த உணவை வாங்கி குளிர்பெட்டிக்குள் வைத்தார் எங்களுக்கு தேநீர் போட்டுத்தந்தார்.

Jeyamohan UK visit 008

ராய் சரியான பழையபாணி பிரிட்டிஷ் சார்புகள் கொண்டவர். கிரிக்கெட் மோகம். காபி குடிப்பதில்லை, டீதான். காபி அமெரிக்கர்கள் குடிக்கும் பானம் என்று நக்கல்வேறு. கால்பந்து நுணுக்கமில்லாத முரட்டு ஆட்டம்.  இந்தியாவிற்கு பலமுறை வந்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மக்களுடன் செல்வதை விரும்புபவர். நான் குளிர்சாதன  பெட்டியில் பதிவுசெய்தமைக்காக வருந்தினார். ரயில் பயணிகளுடன் ஓரிரு நிமிடங்களில் ஒண்ணுமண்ணாக ஆனார். ‘கல்யாணமாயிற்றா?” என்ற கேள்விக்கு மட்டும் “இந்தியாவில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கண்களைச் சிமிட்டியபடிச் சொல்வார். பெண்கள் கேட்டால் ‘உங்களைப்போல ஒருவரை’ என்று சேர்த்துக்கொள்வார்.

,

ராய் மாக்ஸம் [Roy Moxham ] பிரிட்டிஷ் எழுத்தாளர். 1939 ல் இங்கிலாந்தில் வொர்ஸெஸ்டர்ஷயரில் எவெஷம் என்னும் ஊரில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். 1961ல் இன்றைய மலாவியிலுள்ள ந்யாஸாலேண்டுக்கு ஒரு தேயிலைத் தோட்டத்தின் நிர்வாகியாகச் சென்றார். 1973ல் லண்டன் திரும்பி  ஆப்ரிக்க கலைப்பொருட்கள் மற்றும் பழைய இதழ்களுக்கான ஒரு விற்பனைநிலையத்தை தொடங்கினார். 1978ல் கேம்பர்வெல் கலைக்கல்லூரியில் சேர்ந்து பழைய நூல்களைப் பராமரிக்கும் பணியைக் கற்றுக்கொண்டார். காண்டர்பரி தேவாலயத்தில் பழைய ஆவணங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார்.  லண்டன்பல்கலையில் நூல்பராமரிப்பாளராக பணியாற்றி 2005ல் ஓய்வு பெற்றார்

ராயின் முதல் நூல் தேயிலையின் வரலாறு பற்றியது. இந்தியா வந்து மறைந்த கொள்ளைக்காரியான பூலன்தேவியுடன் தங்கி அவருடைய வரலாற்றை எழுதினார். [Outlaw: India’s Bandit Queen and Me,2010]  இவ்விரு நூல்களும் அவருக்குப் பெரும்புகழை ஈட்டித்தந்தவை. ஆனால் அவர் பெரிதும் கவனிக்கப்பட்டது அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் வேலி குறித்து எழுதிய The Great Hedge of India என்ற நூலுக்காகத்தான்.

Jeyamohan UK visit 320

பிரிட்டிஷ் இந்தியாவின் தொடக்க நாட்களில் இந்தியநிலத்தின்மேல் அவர்களுக்கு நேரடிக் கட்டுப்பாடு இருக்கவில்லை. ஆகவே நிலவரி பெரிய அளவில் கிடைக்கவில்லை. அவர்களுக்கிருந்த முதன்மையான வருவாய் வணிகம் மூலம் வந்ததும் மன்னர்களிடம் பெற்ற கப்பமும் சுங்கமும்தான். சுங்க வருவாயை பெருக்கும்பொருட்டு அவர்கள் உப்புக்கு வரிவிதித்தனர். உப்பு இந்தியாவின் தெற்கே கடற்கரைப்பகுதிகளில் உருவாகி வண்டிப்பாதைகளினூடாக வடக்கே விரிந்திருந்த கங்கைவெளிக்கும் இமையமலைப்பகுதிகளுக்கும் செல்லவேண்டியிருந்தது. அன்று அரிசிக்கு நிகரான விலை உப்புக்கு இருந்தது. வெண்தங்கம் என்றே அழைக்கப்பட்டது.

உப்புவண்டிகளுக்கு சுங்க வரி விதிக்கும்பொருட்டு பிரிட்டிஷார் இந்தியாவுக்குக் குறுக்கே முள்மரங்களை நட்டு அவற்றை இணைத்து மிகபெரிய வேலி ஒன்றை அமைத்தார்கள். மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. 12 அடி உயரம் உடையது அன்று உலகிலிருந்த மாபெரும் வேலி அது. அதில் வாயில்களை அமைத்து காவலர்களை நிறுத்தி சுங்கம் வசூலித்தார்கள். ஏறத்தாழ 2,500 கி.மீ. நீளமிருந்த அந்த வேலியில் 1872ல் கிட்டத்தட்ட 14000 காவல் நின்றார்கள்.

Jeyamohan UK visit 004-COLLAGE

இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை.    ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது.  . அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்லியிருந்தார். ராய் வியப்படைந்து அந்த வேலி பற்றிய ஆவணங்களைத் திரட்டினார்.  அதற்காக பயணம் செய்தார். அப்பயணமும் அவ்வேலி குறித்த கண்டடைதலும்தான் உப்புவேலி [தமிழில் சிறில் அலெக்ஸ்]

பிரிட்டிஷார் 1803  முதல் இந்த வேலியை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை 1843 ல் கட்டிமுடித்தார்கள். பிரிட்டிஷார் இந்தியாமேல் முற்றதிகாரத்தை அடைந்து நிலவரியை ஒழுங்குபடுத்தி கடற்கரைகளை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது உப்புவேலி தேவையில்லாமலாகியது. கைவிடப்பட்டு அழிந்தது. சிலருடைய நினைவுகளில் மட்டும் அது எஞ்சியிருந்தது.  மத்தியப்பிரதேசத்தில் அவ்வேலியின் எச்சங்களை ராய் கண்டுபிடித்தார். இன்று அங்கே ஓர் உணவகம் உள்ளது, உலகமெங்கும் இருந்து ஆய்வாளர்கள் வருகிறார்கள்.

south-kensington

ராயின் நூலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் அந்த வேலி உண்மையில் இந்தியாவுக்குச் செய்த அழிவு என்ன என்று அவர் சொல்லியிருப்பதுதான். உப்பு மட்டுமல்ல உணவுத்தானியமும் இந்தியாவில் வண்டிகள் வழியாகவே உள்நாடுகளுக்குச் சென்றது. 1870களில் இந்தியாவில் வந்த மாபெரும் பஞ்சத்தில் மேற்குப்பகுதியில் தேவைக்கும் மேலாக உணவுத்தானியம் விளைந்தது. மறுபக்கம் கிழக்கில் மழைபொய்த்து பெரும்பஞ்சம் வந்தது. உப்புவேலி உணவு மேற்கிலிருந்து கிழக்கே செல்லவிடாமல் தடுத்துவிட்டது. கூடவே உப்பின்விலையும் தாறுமாறாக ஏறியது. மக்கள் பட்டினியாலும் உப்புக்குறைபாடாலும் கோடிக்கணக்கில் செத்து அழிந்தனர். அவர்களைப்பற்றிய முறையான கணக்குகள் கூட இன்றில்லை. இந்திய வரலாற்றாசிரியர்கள் அவர்களைப்பற்றி பெரிதாக எழுதியதுமில்லை.

ராயின் The Theft of India: The European Conquests of India, 1498-1765 இந்தியாவில் ஐரோப்பிய ஆதிக்கம் தொடங்கிய காலம் முதல் காலனியாதிக்கம் வரை நிகழ்ந்த தொடர்ச்சியான சூறையாடலின் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. இன்று உலகமெங்கும் வலுவடைந்துள்ள காலனிய – பின்காலனிய ஆய்வுகளில் மிகமுக்கியமான ஒரு பாய்ச்சல் இந்நூல். ஆகவே ஏகாதிபத்தியத்தின் நல்ல பக்கங்களை முன்னிறுத்த விழைபவர்களுக்கு எரிச்சலை ஊட்டியதும்கூட. ராயின் நூல் முக்கியமான ஒரு பார்வையை உருவாக்குகிறது. இந்தியாமேல் படையெடுத்துவந்த போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் நேரடியாக மானுட அழிவையும் செல்வ இழப்பையும் உருவாக்கியவர்கள். ஆனால் இருநூறாண்டுக்கால பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவான உயிரிழப்பும் பொருளிழப்பும் பற்பல மடங்கு.

அமர்த்யா சென்

அமர்த்யா சென்

இந்தியப் பஞ்சங்களைப்பற்றி இந்திய ஆசிரியர்கள் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பலகாரணங்கள். ஒன்று, முதன்மை ஆவணங்கள் அனைத்தும் லண்டனில் இருந்தன என்பது. இன்னொன்று, பொதுவாக ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் பிரிட்டிஷாரை எதிர்மறை வெளிச்சத்தில் காட்ட விரும்பியதில்லை. அது ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களை எரிச்சலூட்டி இவர்களுக்குக் கிடைக்கும் சர்வதேசக் கவனிப்பை இல்லாமலாக்கும். இவர்கள் தேசியவெறியர்கள் என முத்திரைகுத்தப்படுவார்கள். அது கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு மிகப்பெரிய தடை. மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களுக்கு எப்போதுமே ஐரோப்பிய வழிபாட்டு நோக்கு உண்டு. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் ஆங்கிலேய ஐரோப்பிய வாசகர்களுக்கு எரிச்சலூட்டும் எதையும் எழுத இயலாது.

ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிற காலனிநாடுகளிலும் உருவாக்கப்பட்ட செயற்கைப்பஞ்சங்களைப்பற்றிய ஆய்வுகள் வர தொடங்கின. இந்தியச் சூழலில் அமர்த்யா சென் 1998ல் நோபல்நினைவுப் பரிசு பெற்றபின் அவர் பஞ்சங்களைப் பற்றி எழுதிய நூல்கள் பேசப்படலாயின. தொடர்ச்சியாக கல்வித்துறை சார்ந்த ஆய்வுகள் வெளிவந்தன.

1933ல் தாகூரின் சாந்தி நிகேதனத்தில் பிறந்தவர் அமர்த்யா சென். அவருடைய தாத்தா க்ஷிதிமோகன் சென் சாந்திநிகேதனத்தின் ஆசிரியராக இருந்த புகழ்மிக்க இந்துஞான அறிஞர். [இந்துஞானம் எளிய அறிமுகம்- க்ஷிதிமோகன் சென். தமிழாக்கம் சுனீல் கிருஷ்ணன்]. கல்கத்தா பல்கலையிலும் கேம்பிரிட்ஜிலும் பயின்ற அமர்த்யா சென் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பொருளியல் ஆசிரியராக இருந்தார். ஹார்வார்ட் பல்கலையில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். வளர்ச்சிநிலைப் பொருளியலின் நிபுணர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இந்தியப்பஞ்சங்கள் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டவை என்று அமர்த்யா சென் விரிவாக விளக்குகிறார். அப்பார்வை இந்தியாவில் ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது.

சர்ச்சில் பொம்மையுடன்  மதுஸ்ரீ

சர்ச்சில் பொம்மையுடன் மதுஸ்ரீ

இந்திய அறிவுச்சூழலில் ஆழமான பாதிப்பை உருவாக்கிய நூல் மதுஸ்ரீ முகர்ஜி எழுதி 2010 ல் வெளிவந்த  Churchill’s Secret War: The British Empire and the Ravaging of India during World War II . மதுஸ்ரீ முகர்ஜி வங்காளத்தில் பிறந்தார். ஜாதவ்பூர் பல்கலையில் இயற்பியலில் பட்டம்பெற்றார். சிகாகோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றபின் கலிஃபோரினியா தொழில்நுட்ப கல்விநிலையத்தில் மேலதிக ஆய்வை மேற்கொண்டார். அறிவியல், பொருளியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இப்போது ஜெர்மனியில் ஃப்ராங்பர்ட் நகரில் வசிக்கிறார்.

மதுஸ்ரீயின் நூல் பொருளியல் மாணவர்களுக்குரியதல்ல, பொதுவாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே சீண்டும் தலைப்பும் விறுவிறுப்பான நடையும் கொண்டிருந்தது. அத்துடன் உறுதியான ஆதாரங்களுடன் திட்டவட்டமான கருத்துக்களைச் சொன்னது. இரண்டாம் உலகப்போரில் வங்கம்,பிகார் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பஞ்சங்களில் முப்பதுலட்சம் பேர் வரை உயிரிழந்தனர். ஏற்கனவே நிகழ்ந்த இரு மாபெரும் பஞ்சங்களில் கோடிக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்த பின்னர் இப்பஞ்சம் உருவாகியது. முந்தைய பஞ்சங்களிலிருந்து அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதோடு மேலும் அலட்சியமான நிலைபாட்டையே சென்றடைந்தது. பஞ்சம் அந்த அலட்சியத்தின் விளைவு

Jeyamohan UK visit 025-COLLAGE

எப்படியாவது உலகை வென்றாகவேண்டும் என்னும் கனவில் இருந்த ஏகாதிபத்தியம் பட்டினிச்சாவுகளை பொருட்டாக நினைக்கவில்லை, அதை போர்ச்சாவுகளின் ஒரு பகுதியாகவே நினைத்தது.வின்ஸ்டன் சர்ச்சில் ’இந்தியாவில் பஞ்சத்தில் மக்கள் சாகிறார்கள் என்று குறைசொல்கிறார்கள். முந்தைய பஞ்சங்களில் பல லட்சம் பேர் செத்தார்கள். அப்படியென்றால் மீண்டும் சாவதற்கு எங்கிருந்து ஆட்கள் வந்தார்கள்? இந்தியர்கள் எலிகளைப்போல. ஒவ்வொரு இந்தியனும் பல குழந்தைகளைப் பெற்று பெருகுவார்கள்’ என்றார்.

இரண்டாம் உலகப்போரின் பொருட்டு இந்தியாவிலிருந்து ஏராளமான உணவுத்தானியம் ஏற்றுமதியானதே பஞ்சத்திற்கான முதன்மைக் காரணம். அந்த ஏற்றுமதியைக் குறைக்க சர்ச்சில் உறுதியாக மறுத்துவிட்டார். அது சர்ச்சில் இந்திய மக்கள்மேல் நிகழ்த்திய ரகசியப்போர் என்று மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் குற்றம்சாட்டுகிறது. பொதுவாக பொருளியல்நூல்களுக்கு இருக்கும் பற்றற்ற நடை இல்லை என்றாலும் மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் எவராலும் ஆதாரபூர்வமாக மறுக்கமுடியாததாகவே இன்றுவரை உள்ளது. கூடவே பல்லாயிரம்பேரால் படிக்கப்பட்டு பிரிட்டிஷ்காலப் பஞ்சங்களைப்பற்றி இந்திய அறிவுலகம் பேசியே ஆகவேண்டும் என்னும் நிலையை அது உருவாக்கியது. இன்று ஏராளமான நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ராயுடன் லண்டனில் உலவச்செல்வது ஒரு துன்பியல் அனுபவம். அவர் அங்குள்ள பப்களை தவிர எதைப்பற்றியும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஒவ்வொரு பப்புக்கும் தனித்தனியான சமூகப்பின்புலமும் பண்பாட்டு வேறுபாடுகளும் அதன் விளைவான தனித்தன்மையும் உண்டு என்றார். மாலையில் அன்றைய மனநிலைக்கேற்ப பப்பை தெரிவுசெய்து சென்று அமர்ந்து இரவில் திரும்புவது அவருடைய வாழ்க்கை.

ukd

ராய் சொன்னபின்னர்தான் பப் என்பதை அறியும் யோகமில்லாதவனாகிய நான் செல்லும் வழியிலுள்ள மதுவிடுதிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவற்றின் முகப்பில் சாலையோரமாகவே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அனைவருமே மிக ஓய்வான மனநிலையில் காணப்பட்டனர். கண்முன் ஒரு பீரோ ஒயினோ விஸ்கியோ இருக்கையில் ஓய்வாகத் தளர்த்திக்கொள்ளவேண்டும், அர்த்தமில்லாத சின்னப்பேச்சுக்களை பேசவேண்டும் என அவர்கள் உளம்பழகியிருக்கிறார்கள்

உண்மையில் ஐரோப்பிய நகரங்களில் நாம் காணும் புறப்பகுதி வாழ்க்கை தமிழகத்திலென்றல்ல இந்தியநகரங்கள் எதிலும் இல்லாத ஒன்று. இந்தியாவில் நகரம் என்றால் அங்கே வணிகநிலைகளும் அலுவலகங்களும் தொழில்முறைவிடுதிகளும் உணவகங்களும் தேனீக்கூடு போல மக்கள் செறிந்து பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். சாலைகள் அனைத்துமே நெரிசலானவை. சென்னைபோன்ற நகர்களில் பூங்காக்களோ சதுக்கங்களோ இல்லை. மெரினாவை மாபெரும் சந்தைக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். ஓய்வாக மக்கள் அமர்ந்திருக்கும் ஓர் இடத்தை இங்கே எங்கும் காணமுடியாது. ஏனென்றால் அதற்கென்ற இடங்களே இல்லை. சென்னையில் நட்சத்திரவிடுதிகளின் மதுக்கூடங்களைத் தவிர அமர்ந்து பேச இடம் என ஏதுமில்லை.

pub

ஒரு மாநகர் இப்படி இடைவெளியே இல்லாமலிருப்பதுபோல மூச்சுத்திணறும் அனுபவம் ஏதுமில்லை. இந்தியாவில் எந்த வெற்றிடத்தைக் கண்டாலும் அங்கே கட்டிடங்களைக் கட்டவே நம் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். பெருநகர்களுக்கு வெற்றிடம் நுரையீரல்போல என அவர்கள் உணர்வதில்லை. நம் நகரங்கள் உண்மையில் நகரங்களே அல்ல, மக்கள்செறிந்த கட்டிடக்குவியல்கள்.நான் சென்னையை நாடாமலிருப்பதற்கு முதற்காரணம் இதுவே.

ஐரோப்பிய நகரங்கள் அனைத்திலுமே மிகப்பெரிய பூங்காக்கள் உள்ளன.  பெரும்பாலான நகரங்களின் மையங்களில் மிகப்பெரிய நகர்ச்சதுக்கங்கள் உள்ளன. அங்கே வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே புகை இல்லை. சதுக்கங்களில் மக்கள் சட்டையை கழற்றிவிட்டு படுத்து வெயில்காய்வதை, புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பதை, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பல நகர்களில் நகரின் மையப்பகுதியிலுள்ள தெருக்களில் வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை, மின்சாரத்தால் ஓடும் டிராம்களைத் தவிர. இதனால் புகையும் தூசியும் கிடையாது. எல்லா விடுதிகளுக்கும் தெருவோரத்தில் திறந்தவெளி உணவக அமர்விடங்கள் உள்ளன. மக்கள் சாலைரமாக அமர்ந்து உண்ண விரும்புகிறார்கள்.

sq

லண்டனின் சதுக்கங்கள் ஐரோப்பிய நகர்களை ஒப்புநோக்க நெரிசலானவை. ஏனென்றால் பெரும்பாலானவை ஏற்கனவே புகழ்பெற்ற சுற்றுலா மையங்களாக ஆகிவிட்டவை. எங்குபார்த்தாலும் தலைகள். ஆனால் ஐரோப்பிய உள்ளம் ஒழுங்கு என்பதை நோன்பாகக் கொண்டது. இன்னொருவருக்கு நாம் தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதிலிருந்து வரித்துக்கொண்டது அவ்வொழுங்கு. எனவே கூச்சல்கள், முட்டிச்செல்லுதல்கள், ஆக்ரமித்தல்கள் இல்லை. அத்தனை நெரிசல்களிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் தனியுலகில் இருக்க இயன்றது. சாலையோரங்களில் உண்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் அச்சாலைகள் நிறைந்து பெருகுவது தெரியாதென்றே தோன்றியது

வெஸ்ட்மினிஸ்டர் நகர்ப்பகுதியிலுள்ள டிரஃபால்கர் ஸ்குயர் முன்பு சேரிங் கிராஸ் என அழைக்கப்பட்டிருக்கிறது. 1805ல் ல் பிரிட்டிஷ் கடற்படை நெப்போலியனை ஸ்பெயினில் உள்ள டிரஃபால்கர் கடல்முனையில் வென்றதன் நினைவாக டிரஃபால்கர் சதுக்கம் என பெயர்மாற்றம்செய்யப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு முதலே இச்சதுக்கம் நகரின் மையமான இடமாக இருந்திருக்கிறது. புகழ்பெற்ற சிற்பியான ஜான் நாஷ் இச்சதுக்கத்தைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களையும் சிற்பங்களையும் புதுப்பித்து அமைத்தார்.

nel

நெல்சன்

சதுக்கத்தின் மையத்திலுள்ளது நெப்போலியனை வென்ற தளபதி நெல்சனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெற்றித்தூண். 169 அடி உயரமானது இது 1854ல் வில்லியல் ரால்ட்டன் என்னும் சிற்பியால் அமைக்கப்பட்டது. இ.எச்.பெய்லியால் அமைக்கப்பட்ட நெல்சனின் சிலை தூணின்மேல் அமைந்துள்ளது. 1867ல் சர் எட்வின் லாண்ட்ஸீரால் அமைக்கப்பட்ட நான்கு வெண்கலச் சிம்மங்கள் தூணைச் சுற்றி இருக்கின்றன. ஏழு டன் எடையுள்ளவை இவை. டிரஃபால்கர் போரில் கைப்பற்றப்பட்ட பீரங்கிகளை உருக்கி அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் அடித்தளத்திலுள்ளன. அவற்றில் பிரிட்டிஷாரின் போர்வெற்றிகளும், வெற்றித்தளபதிகளும் பொறிக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல எந்த ஐரோப்பிய வரலாற்றுச்சின்னத்திற்கும் உரிய மிக விரிவான நுணுக்கமான வரலாறு இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது.

Heliodorus pillar

Heliodorus pillar

இந்தியா முழுக்க பல்வேறு வெற்றித்தூண்கள் உள்ளன. பெரும்பாலானவை ஏதேனும் ஆலயத்துக்குக் கொடிமரங்களாகச் செய்து அளிக்கப்பட்டவையாக இருக்கும். உதாரணம், கிருஷ்ண தேவராயர் தன் தென்னாட்டு வெற்றிக்காக நிறுத்தியதுதான் அஹோபிலம் நரசிம்மர் ஆலயத்தின் முன்னால் உள்ள கல்லால் ஆன கொடித்தூண். அரசர்கள் ஓர் ஆலயத்திற்குச் செல்வதை ஒட்டி அங்கே தூண் ஒன்றை செய்தளிப்பதுண்டு. இந்தியாவிலுள்ள அத்தகைய தூண்களில் பழைமையானது விதிஷாவில் உள்ள வாசுதேவர் ஆலயத்துக்கு கிரேக்க மன்னரின் தூதரான ஹிலியோடோரஸ் [Heliodorus] வழிபட வந்ததை ஒட்டி அளித்தது. அதன் உச்சியில் கருடன் செதுக்கப்பட்டுள்ளது. கிமு 113 ஆம் ஆண்டைச்சேர்ந்தது இத்தூண். சுங்க வம்ச மன்னராகிய பகபத்ரரின் ஆட்சியிலிருந்தது இப்பகுதி. இந்தியாவில் வைணவம் குறித்து கிடைக்கும் மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது என்கிறார்கள்.

கீர்த்தி ஸ்தம்பம்,சித்தூர்கர்

கீர்த்தி ஸ்தம்பம்,சித்தூர்கர்

ஆனால் இந்தியாவிலுள்ள தூண்களில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கர் கோட்டையில் சமண வணிகரான ஜீஜா பாகேர்வாலா [Jeeja Bhagerwala ]  பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டிய புகழ்த்தூண்தான். சித்தூரை ராவல்குமார் சிங் ஆட்சி செய்தபோது இது கட்டப்பட்டது. சமண மதத்தின் உண்மையை நிறுவும்பொருட்டு இது அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் அழகான ஒற்றைச்சிற்பம்.பூத்த மலர்மரம்போல நோக்க நோக்க தீராதது. இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் இந்து நாகராபாணி கட்டிடக்கலைக்கும் இடையேயான உரையாடலின் விளைவு.

li

சிம்மம், நெல்சன் சிலையருகே

இந்த வெற்றித்தூண்கள் அந்நாட்டினருக்கு பெருமிதத்தை அளிக்கக்கூடும், உண்மையில் ஜனநாயக யுகத்தில் சென்றகாலப் போர்வெற்றிகள் அப்படியேதும் பெருமிதத்தை அளிப்பதில்லை. பிறநாட்டினருக்கு அவை வெறும் சுற்றுலாக் கவற்சிகளே. டிரஃபால்கர் தூணின் பிரம்மாண்டம்தான் என்னை ஆட்கொண்டது. ஓர் அரசரை நேரில் பார்ப்பதுபோன்ற பிரமிப்பும் விலக்கமும் கலந்த உணர்வு. சென்ற நூற்றாண்டிலென்றால் அது பணிவை உருவாக்கியிருக்கக் கூடும். இத்தகைய பெருங்கட்டிடங்கள், வெற்றிநிமிர்வுகள் சாமானியர்களான நம்மை நோக்கி அதட்டுகின்றன. நாம் நம்மையறியாமலேயே அமர்ந்து அவர்களின் பூட்ஸ்களின் நாடாக்களை கட்டிவிடத் தொடங்குகிறோம்.  ஆனால் சித்தூர் புகழ்த்தூண் அந்த விலக்கத்தை உருவாக்கவில்லை. அதை நோக்கியபடி அமர்ந்திருக்கையில் உளவிரிவும் அமைதியும்தான் உருவானது. ஏனென்றால் அது எந்த உலகியல் வெற்றியையும் அறிவிப்பதல்ல.

எனக்கு ஒரு பெருங்கட்டுமானம் தெய்வத்திற்குரியதாக இருக்கையில் மட்டுமே உள்ளம் அமைதிகொண்டு அதை ஏற்கமுடிகிறது. அரண்மனைகளும் வெற்றித்தூண்களும் எனக்கு எதிரானவை என்றே என்னால் எண்ணமுடிகிறது. ஒரு மாபெரும் சிலை சென்றகால மாவீரனுடையதென்றால் அது எனக்குப் பொருளிழந்த ஒன்றே. அது ஒரு தெய்வத்துடையது என்றால் அத்தெய்வம் என்னை நோக்குவதை உணர்வேன். இருபதாம்நூற்றாண்டில் உருவான மாபெரும் தெய்வச்சிலை அமெரிக்காவின் சுதந்திரதேவி.

நெல்சன்

நெல்சன்

நெல்சன் நெப்போலியன் மேல் கொண்ட வெற்றி பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. உலகின்மீதான ஆதிக்கம் எவருக்கு என்னும் போட்டியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மேல் பிரிட்டன் கொண்ட வெற்றி அது. அதுவே பிரிட்டனின் கடலாதிக்கத்தை உருவாக்கியது. இந்தியா மீதான பிரிட்டனின் பிடி இறுகியதும் அதன்பின்னரே.

அட்மிரல் நெல்சன் [Horatio Nelson, 1st Viscount Nelson 1758 –1805 ] பிரிட்டிஷ் வீரத்தின் அடையாளமாக கருதப்படுபவர். பிரிட்டிஷ் பேரரசின் சோதனையான காலம் நெப்போலியனுடனான போர்களின் காலகட்டம்தான். அப்போது நெப்போலியனை எதிர்த்து வென்றவர் நெல்சன்.

நெல்சன் போர்முனையில் பலமுறை காயம்பட்டிருக்கிறார். ஒரு கண்ணையும் கையையும் இழந்தபின்னரும் தளராமல் களத்தில் இருந்தார். இயற்கையின் அடிப்படைச்சக்தியின் மானுடவெளிப்பாடு என கதே வர்ணித்த நெப்போலியனை டிரஃபால்கர் போரில் வென்று தான் மடிந்தார். இன்றும் பிரிட்டனில் மிக நினைவுகூரப்படும் மனிதராக நெல்சன் இருக்கிறார்.

statue

வெண்கலச்சிலைகள் நெல்சன் தூணில்

நெல்சனை அடிக்கடி நினைவுகூர்ந்த தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில். பிரிட்டன் உலகை ஆளும் பேரரசாக உயர்ந்து, தொழிற்புரட்சி உச்சத்தை அடைந்து, புதிய பொருளியல் விசைகள் உருவாகி வந்து, குடியாட்சிக்கருத்துக்களும் தனிமனித விடுதலை சார்ந்த விழுமியங்களும் வலுப்பெற்று, பேரரசின் வெற்றிமுழக்கங்களுக்கு அடியில் எளியவர்களின் அவநம்பிக்கைகள் திரண்ட இருபதாம்நூற்றாண்டில் பிரிட்டனை ஆட்சிசெய்தவர் சர்ச்சில். ஆனால் நெல்சனின் அதே பேரரசுக் கனவை தானும் கொண்டிருந்தார். நெல்சன் முன்வைத்த வீரவிழுமியங்களை மீண்டும் எழுப்பி நிலைநாட்ட முயன்றார். இரண்டாம் உலகப்போர்  அவருக்கான வாய்ப்பாக அமைந்தது. உலகப்போரில் மிகப்பெரிய இழப்புகளுடன் பிரிட்டன் வென்றதற்கு சர்ச்சிலின் ராணுவநுட்பம் அறிந்த தலைமையும் அவருடைய ஓங்கி ஒலித்த குரலும் முக்கியமான காரணம். ஆனால் போருக்குப்பின் பிரிட்டன் தன் நிலப்பிரபுத்துவகால சுமைகளை இறக்கிவைக்க முடிவுசெய்தது. சர்ச்சில் பதவியிழந்தார்.

 churchil

சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill  [1874 -1965] அடிப்படையில் ஒரு ராணுவவீரர். பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி போன்ற முகங்களெல்லாம் அதற்குமேல் அமைந்தவையே. பிரிட்டனைப்பற்றி, உலகைப்பற்றி, எளிய மக்களைப்பற்றி அவருடைய எண்ணங்கள் அனைத்தும் ராணுவ அதிகாரிக்குரியவை.  வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்பென்ஸர் குலத்தின் கிளை வழியான  மார்ல்ப்ரோ டியூக்குகளின் குடும்பத்தில் பிறந்தார். சர்ச்சிலின் தந்தை  ராண்டால்ஃப் சர்ச்சில் பிரபு. தாய் ஜென்னி ஜெரோம் அமெரிக்கச் செல்வந்தர் லியனோர்ட் ஜெரோம் என்பவரின் மகள்.  இளமையிலேயே பிரபுக்களுக்குரிய முறையில் குடும்பத்துடன் தொடர்பில்லாமல் கல்விநிலையங்களில் வளர்ந்தார். ராணுவத்தில் சேர்ந்த சர்ச்சில் கியூபா, இந்தியா, சூடான் போன்ற நாடுகளில் போரில் பங்கெடுத்தார்.

அரசியலில் ஈடுபட்டு பிரிட்டிஷ் பிரதமரான சர்ச்சில்  இனவாத வெறுப்பரசியலை, பிரிட்டிஷ் தேசியவாத பெருமிதத்துடன் கலந்து ஆக்ரோஷமாகப் பேசுவதற்காகப் புகழ்பெற்றவர். ஒருவகையில் ஹிட்லரின் பிரிட்டிஷ் வடிவம் அவர். ஹிட்லரைப்போலவே தன் இனம் உலகை ஆளவேண்டிய பொறுப்பும் தகுதியும் உண்டு என நம்பியவர். காந்தியை ‘அரைநிர்வாண பக்கிரி’ என்றமைக்காக இன்றும் இந்தியர்களால் நினைவுகூரப்படுபவர். சமீபத்தில் ராய் மாக்ஸமின் நூல் லண்டனில் வெளியிடப்பட்டமையை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் சர்ச்சிலை ஹிட்லரின் இன்னொரு வடிவம் என இந்திய எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சசி தரூர் குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேற்குலகுக்கு ஹிட்லரைப் போரில் வென்றவர் என்பதனால் சர்ச்சில் ஒரு கதாநாயகன். சோவியத் ருஷ்யாவின் இறுதிநாள் வரை அதே காரணத்துக்காக ஸ்டாலினும் கதாநாயகனாகக் கருதப்பட்டார். மேற்குலகை வழிபடுபவர்களுக்கும் சர்ச்சில் அவ்வாறு தோன்றக்கூடும். ஆனால் கறாரான வரலாற்றுந் நோக்கில் நவீன ஜனநாயக எண்ணங்கள் அற்ற, பிரிட்டிஷ் இனவெறிநோக்கு கொண்டிருந்த, வேண்டுமென்றே லட்சக்கணக்கான இந்தியர்களின் இறப்புக்குக் காரணமாக இருந்த, அதற்காக எள்ளளவும் வருந்தாத சர்ச்சிலுக்கு ஹிட்லர் சென்றமைந்த அதே வரலாற்று வரிசையில்தான் இடம். வரலாறு அத்திசை நோக்கிச் செல்வதை தடுக்கவியலாது.

par

லண்டனின் பாராளுமன்றச் சதுக்கம் அங்கிருக்கும் சிலைகளுக்காகப் புகழ்பெற்றது. நாங்கள் பல இடங்களில் நடந்து களைத்து அங்கே செல்லும்போது அந்தி. ஆனால் லண்டனில் அது கோடைகாலம் என்பதனால் வெளிச்சமிருந்தது. மத்தியலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை அருகே உள்ளது இந்தச் சதுக்கம். முக்கியமான ஒரு சுற்றுலா மையம். வெஸ்ட்மினிஸ்டர் அபே, லண்டன் பாராளுமன்றம், லண்டன் தலைமை நீதிமன்றம் ஆகியவை இதற்குச் சுற்றும் உள்ளன. 1868ல் இச்சதுக்கம் அமைக்கப்பட்டது.பொதுவாக இது பிரிட்டனின் அரசியல் நடவடிக்கைகளின் மையம்

இச்சதுக்கத்தின் மையமான சுவாரசியம் இங்கே நிகழும் அரசியல்போராட்டங்கள். சின்னச்சின்ன கூடாரங்கள், தட்டிகள் வைத்து வெவ்வேறு அரசியல்குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். செசென்யாவுக்கு நீதிகோரி முஸ்லீம்களின் ஒரு புகைப்படக் கண்காட்சி, செர்பியர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றது இன்னொரு தரப்பு. தன்பாலின மணம் அனுமதிக்கப்படவேண்டும் என ஒரு சிறுகுழு. இங்கே 2014லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டதே என்று பார்த்தால் அவர்கள் கோருவது அது துருக்கியில் அனுமதிக்கப்படவேண்டும் என்று.

வழக்கம்போல திபெத்துக்கான தன்னாட்சி உரிமைகோரி ஒரு தட்டிக்குமுன் திபெத்திய பாரம்பரிய உடையில் சிலர் நின்று துண்டுப்பிரசுரம் அளித்தனர். 1995ல் ஆறு வயதில் சீனர்களால் கடத்தப்பட்டு இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாத 11 ஆவது பஞ்சன் லாமாவின் இளமையான பதைப்பு நிறைந்த புகைப்பட முகம்.

dis

டிஸ்ரேலி

பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது ஒரு சுற்றுலாச் சடங்கு. அங்கிருந்த ஜப்பானிய சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும்பாலானவர்கள் எவரென்றுகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கே கூட பெரும்பாலானவர்களைத் தெரியாது. டேவிட் லியோட் ஜார்ஜ்,  ஹென்றி ஜான் டெம்பிள்,  எட்வர்ட் ஸ்மித் ஸ்டேன்லி, ராபர்ட் பீல் ஆகியோர் பிரிட்டிஷ் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். என் நினைவில் அப்பெயர்கள் எதையும் சுண்டவில்லை.

ஆனால்  பெஞ்சமின் டிஸ்ரேலி இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் அடிக்கடி காதில்விழும் பெயர். பிரிட்டிஷ் பழைமைவாதக் கட்சியின் தலைவராக இருமுறை பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார். 1868 முதல் 1880 வரை இவர் பிரிட்டிஷ்  பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் இரண்டாவது பெரும் பஞ்சத்தால் இந்தியா கிட்டத்தட்ட அழிந்தது. பாராளுமன்றத்தில் ஜனநாயகவாதிகள் இந்தியாவைக் காக்கவேண்டுமென கோரி கண்ணீருடன் மன்றாடியதை அலட்சியமாகக் கடந்துசெல்ல அவருடைய பழைமைவாதமும் இனமேட்டிமை நோக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் சர்ச்சிலுக்கு இணையாக வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர் டிஸ்ரேலி.

smuts

smuts

சிலையாக நின்றிருக்கும் இன்னொருவர் ஜான் ஸ்மட்ஸ் [Jan Smuts]. காந்தியின் சுயசரிதையில் வரும் பெயர். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதமராக இருந்தவர். போயர் போரில் முதன்மைப் பங்கெடுத்தவர். காந்தி ஜான் ஸ்மட்ஸைப்பற்றி இரண்டு வகையாகவும் குறிப்பிடுகிறார். முதலில் ஸ்மட்ஸ் நேர்மையான நாணயமான அரசியலாளர் என்று சொல்லும் காந்தி பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியலாடல்களுக்குப்பின் ஸ்மட்ஸ் வழக்கமான தந்திரம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர், இனவெறி நோக்கு கொண்டவர் என்கிறார்.

1914ல் ஜான் ஸ்மட்ஸுக்கு காந்தி சிறையில் தன் கையால் தைத்த ஒரு தோல் செருப்பை பரிசாக அளித்ததை காந்தி சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். காந்தியின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது ஸ்மட்ஸ் அதை ஒரு குறிப்புடன் திருப்பியனுப்பினார். “நான் இதை ஒரு கோடைகாலத்தில் அணிந்தேன். ஆனால் ஒரு மாமனிதரின் கையால் உருவாக்கப்பட்ட இதை அணியும் தகுதி தனக்கில்லை’. அச்செருப்பு இப்போது ஆப்ரிக்காவில் Ditsong National Museum of Cultural History யில் அரும்பொருளாக உள்ளது.

காந்திமேல் ஸ்மட்ஸ் கொண்ட மதிப்பு உண்மையானது. ஆனால் இந்தியர்களுக்கான மனித உரிமைகளை அளிப்பதிலும் முழுமையான நிறவெறிப்போக்குடனேயே ஸ்மட்ஸ் நடந்துகொண்டார். அதைப்புரிந்துகொள்வது மிக எளிது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்தப் பொதுக்குணம் இனவாதமும், ஈவிரக்கமற்ற சுரண்டலும். தனிமனிதர்களாக அவர்கள் செய்நேர்த்தி, பண்பு, மென்மையான நடத்தை மற்றும் கலையார்வம் கொண்டவர்கள். இந்த முரண்பாட்டை காந்தி ஸ்மட்ஸுடனான பழக்கம் வழியாகவே கண்டடைகிறார். பின்னர் அவர் பிரிட்டிஷ் உயர்பதவியினரை இயல்பாகக் கையாள இந்த அனுபவம் கைகொடுத்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை இந்த இரட்டைப்பண்பை உணராமல் எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மானுடம் கண்ட மோசமான நிறவெறி அரசை நடத்திய ஸ்மட்ஸ் ஒரு சிந்தனையாளர், தத்துவவாதி. ஸ்மட்ஸ் முதல் உலகப்போருக்குப்பின்  உலக ஒற்றுமைக்காக  League of Nations என்னும் அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். அது பிற்கால ஐக்கியநாடுகள் சபை உருவாவதற்கான முன்னோடி அமைப்பு.

ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்

ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்

இந்த இரட்டைநிலைக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம். [Allan Octavian Hume  1829 –  1912)    இன்று அவர் வரலாற்றில் வாழ்வது இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவனர் , ஒருவகையில் இந்திய விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டவர் என்றவகையில். இந்தியர்களுக்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள உரிமைகளைப் பெற்றுத்தரும்பொருட்டு அவர் 1885ல் இந்திய தேசியக் காங்கிரசை நிறுவினார். இந்திய பறவையியலின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்த காலம் முழுக்க இந்தியப் பறவைகளை கவனித்து பல்லாயிரக்கணக்கான மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றின் சிறகுகளையும் வடிவங்களையும் கவனித்து வரைந்து இயல்புகளைக் குறித்துவைத்தார். Stray Feathers  என்னும் பறவை ஆய்விதழை நடத்தினார். இன்னொரு பக்கமும் உண்டு. இந்தியாவில் பேரழிவை உருவாக்கிய உப்புவேலியை 1867 முதல் 1870 வரையிலான தன் பணிக்காலத்தில் முழுமையாக நிறுவி அதன் நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்தவர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்தான்.

பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளில் அதிகாரத்தில் இல்லாதவரான பிரிட்டிஷ்காரர் என்றால் அது  மில்லிசெண்ட் ஃபாசெட் [Millicent Fawcett]. இங்குள்ள ஒரே பெண் சிலை இது. பெண்ணிய நூல்களில் இப்பெயரை கேள்விப்பட்டிருக்கலாம். பிரிட்டனில் பெண்ணுரிமைக்காக போராடியவர். மில்லிசெண்ட் [ 1847 –1929 ] மில்லி வழக்கமான புரட்சியாளர் அல்ல. தன் கருத்துக்களால் குடிமைச்சமூகத்தில் கருத்துமாற்றம் உருவாவதற்காக தொடர்ச்சியாக, பொறுமையாகப் பாடுபட்டவர்.  பெண்களின் கல்வியுரிமை, அரசியல் பங்கேற்புரிமை ஆகியவற்றை இலக்காக்கியவர். பெட்ஃபோர்ட் கல்லூரியின் ஆளுநராக பணியாற்றினார்.  1875  ல்  கேம்பிரிட்ஜ் நியூஹாம் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

Millicent Fawcett

Millicent Fawcett

பிரிட்டிஷாரல்லாதவர்கள் மேலும் ஆர்வமூட்டுபவர்கள். ஆபிரகாம் லிங்கன் சிலை அங்கிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நெல்சன் மண்டேலா ,காந்தி இருவரின் சிலைகளும் வியப்பூட்டுபவை. இருவரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி வென்றவர்கள். நெல்சன் சிலை போல வெற்றிச்சிலைகள் வைக்கும் மரபிலிருந்து பிரிட்டிஷ் மனநிலை மெல்ல முன்னகர்ந்து நெல்சன் மண்டேலா போல தங்களை வென்றவர்களுக்குச் சிலை வைத்திருக்கிறது. மிகச்சாதாரணமானதாக இது தோன்றலாம். ஆனால் மிகமிக மெல்லத்தான் இந்தச் சமூக மாற்றம் உருவாகும். நீண்ட கருத்துப்போராட்டம் பின் அதன் நீட்சியான  அரசாடல்கள் இதற்குத்தேவைப்படும்.

mandela

நெல்சன் மன்டேலாவின் சிலை அழகியது. நெல்சன் மண்டேலா உயிருடன் இருக்கையிலேயே இச்சிலைக்கான பணி தொடங்கப்பட்டது. ‘பிரிட்டிஷ் பாராளுமன்ற வாசலில் ஒரு கறுப்பினத்தானுக்கு சிலை இருப்பது தேவைதான்’என நெல்சன் மண்டேலா அதற்கு அனுமதி அளித்தார். தென்னாப்ரிக்க அரசியல்வாதியும் இனவெறி எதிர்ப்புப் போராளியுமான டொனால்ட் வுட்ஸ் இச்சிலையை நிறுவவேண்டும் என முன்முயற்சி எடுத்தார். அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவுடன் திரைப்பட ஆளுமையான ரிச்சர்ட் அட்டன்பரோ இணைந்து எடுத்த முயற்சியால் இச்சிலை 2007ல் நிறுவப்பட்டது. இயால் வால்ட்டர்ஸ் என்ற சிற்பியால் உருவாக்கப்பட்டது இது.

நெல்சன் மண்டேலாவின் சிலையருகே நின்று பேசிக்கொண்டிருக்கையில் இரண்டு தகவல்களைக் குறிப்பிட்டேன். ஒன்று , இந்தியாவிலுள்ள அசட்டு இடதுசாரித்தரப்பு ஒன்றுண்டு. உலகப்போர் உருவாக்கிய நெருக்கடிகள் காரணமாக தானாகவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகிச் சென்றார்கள் என்றும் அதில் காந்திக்கும் நேருவுக்கும் பெரிய பங்கு ஏதுமில்லை என்றும், அது வெறும் வரலாற்றுவிளைவு மட்டுமே அவர்கள் வாதிடுவார்கள். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷாரின் மறைமுக ஆட்சியான வெள்ளையர்களின் இனவெறி அரசு 1994 வரை வெவ்வேறு அடையாளங்களுடன், வெவ்வேறு ரகசிய ஆதரவுகளுடன் நீடித்தது.

இன்னொன்று, உலகஜனநாயகத்தின் மடித்தொட்டிலான பிரிட்டன் 1995 வரை தென்னாப்ரிக்க அரசின் வெளிப்படையான இனவெறியை நுட்பமான பசப்புச் சொற்களுடன் ஆதரித்தது.  பிரிட்டிஷ் பிரதமரான மார்கரட் தாச்சர் 22 ஆண்டுக்காலம் இனவெறியர்களின் சிறையிலிருந்த நெல்சன் மண்டேலாவை தீவிரவாதி , சமூக விரோதி என கருத்துத் தெரிவித்தார். பிரிட்டனில் ஜனநாயகவாதிகள் ஆப்ரிக்காவின் இன ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக கடுமையாகப் போராடினாலும்கூட பிரிட்டனில் தொடர்ச்சியாக  தென்னாப்ரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு இருந்துகொண்டேதான் இருந்தது. நெடுங்காலம் ஆகவில்லை, அந்த உணர்வுகள் முற்றாக மறைவதுமில்லை.

Gandhi_statue_2

நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை வைக்கப்பட்டு மேலும் எட்டாண்டுகள் கழித்துத்தான் பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தியின் சிலை நிறுவப்பட்டது.  1931ல் காந்தி பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்டொனால்டின் அலுவலகத்துக்கு முன் நின்றிருக்கும் ஒரு புகைப்படத்திலிருந்து உருவாக்கப்பட்ட சிலை இது. பிலிப் ஜாக்ஸன் இதன் சிற்பி. மண்டேலாவின் சிலை அங்கே வைக்கப்பட்டபின்னர்தான் காந்திக்கும் சிலை வேண்டும் என்ற எண்ணமே எழுந்திருக்கிறது. 2015ல் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதைத் திறந்துவைத்தார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.மற்ற சிலைகளைப்போல உயர்ந்த பீடத்தில் நிமிர்ந்த நோக்குடன் நிற்காமல் தரைமட்டத்தில் இயல்பாக நின்றிருக்கிறார் காந்தி. தோழரைப்போல நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக.

காந்தி சிலைக்கு நேர் மறுமுனையில் நின்றிருக்கிறது வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை. இவோர் ராபர்ட் ஜோன்ஸ் வடிவமைத்த சிலை இது. சர்ச்சில் அவருக்கு பாராளுமன்றச் சதுக்கத்தில் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்று விரும்பியமையால் 1950ல் உருவாக்கப்பட்ட சிலை அது. 1973ல் திறந்து வைக்கப்பட்டது. இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினியின் சாயல் இச்சிலைக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சர்ச்சிலின் ஆணவமும் நிமிர்வும் கலந்த உடல்மொழி கொண்ட சிலை இது

ch

பிரிட்டனின் இன்றைய அறச்சிக்கலை, எப்போதும் அதன் பண்பாட்டில் இருந்து வந்த இரட்டைநிலையைக் காட்டும் இடம் இந்தச் சதுக்கம். எந்த நாட்டையும்போல பிரிட்டன் அதன் கடந்தகாலப் பெருமைகளை தேசிய அடையாளமாகத் தூக்கிப்பிடிக்கிறது. அது நெல்சனை தன் தலைக்குமேல் கொடிபோல ஏந்தி நின்றிருக்கிறது. மறுபக்கம் நவீன ஜனநாயகப் பண்புகளை அது ஏற்றுப் பேணியாகவேண்டியிருக்கிறது. அதன் சென்றகால நாயகர்கள் பலர் ஏகாதிபத்தியத்தின் படைப்பாளிகள்,  காவலர்கள். ஆகவே அவர்களை போற்றி அதைச் சமன் செய்ய அவர்களை எதிர்த்தவர்களையும் போற்றவேண்டியிருக்கிறது

இச்சிலைகள் வழியாகச் செல்லும்போது நாமறிந்த வரலாற்று அடுக்கை வேறொரு கை வந்து கலைத்து அமைத்ததுபோல திகைப்பு ஏற்படுகிறது. காந்தியும் , டிஸ்ரேலியும், சர்ச்சிலும் ஒரே நிரையில் நிற்கும் வரலாறு. ஸ்மட்ஸும்  மண்டேலாவும் அருகருகே நிலைகொள்ளும் வரலாறு. அவர்கள் சிலைகளிலிருந்து உயிர்கொண்டால் என்ன செய்வார்கள்? திகைப்பார்கள்,  ஒருகணம் குழம்புவார்கள். அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள், அல்லது பிரிட்டிஷ் பண்புகளால் ஆனவர்கள் ஆதலால் ஒருவரோடொருவர் மென்மையாக முகமனுரைத்து வணங்கி சம்பிரதாயமான கைகுலுக்கல்களுடன் பிரிந்துசெல்வார்கள். மீண்டும் சிலையான பின் வேறு எங்கோ இருந்து வெடித்துச்சிரிப்பார்கள்.

https://www.jeyamohan.in/112499#.W6ANiKTTVR4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா 8- காலத்தின் விழிமணி

kohinura

இந்தியத் தொன்மங்களில் வரும் அருமணி சியமந்தகம். இது ஒரு வைரம் என்பதை வர்ணனைகளிலிருந்து உணரமுடிகிறது. சூரியன் தன் கழுத்திலணிந்திருந்த இந்த வைரம் சத்ராஜித் என்னும் யாதவனுக்குக் கிடைத்தது. அங்கிருந்து அது கிருஷ்ணனின் கைக்கு வந்தது. இந்த மணியைப்பற்றிய வரலாற்றுக்குறிப்பு ஏதுமில்லை. பாகவதத்திலும் பின்னர் விஷ்ணுபுராணத்திலும் இதைப்பற்றிய கதைகள் உள்ளன. இந்த வைரம் எது, எங்குள்ளது என்பதைப்பற்றி ஏராளமான கதைகள் உள்ளன.

இத்தகைய ஒர் அரிய வைரம் அப்படி தொலைந்துபோய்விடாது, எங்காவது இருக்கும் என்று சிலர் வாதிடுகிறார்கள். கோகினூர் வைரம்தான் அது என்று கதை உள்ளது. இன்னொருநாட்டில் என்றால் பல நாவல்கள், சினிமாக்கள் வந்திருக்கும். உண்மையில் இதற்கிணையான பல வைரங்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கிருஷ்ணதேவராயர் அணிந்திருந்த பல வைரங்களைப் பற்றி பர்ப்போஸா [Duarte Barbosa] பயஸ்  [Dominigo Paes] போன்ற அக்காலப் பயணிகளின் குறிப்புகளில் காணமுடிகிறது. அவருடைய குதிரையின் நெற்றியில் ஒரு பெரிய வைரம் அணிவிக்கப்பட்டிருந்தது என்கிறார் பர்போஸா. அவ்வைரங்கள் எவை என பெரும்பாலும் அடையாளம் காணப்படவில்லை.

lon1

பொதுவாக அவ்வைரங்களைப்பற்றிய அறிவார்ந்த உரையாடல்களே இந்தியாவில் இல்லை. அவை எங்கோ தேடப்படுகின்றன, கண்டடையப்படுகின்றன, பொது அறிவுத்தளத்துக்கு வருவதேயில்லை. கிருஷ்ணதேவராயரின் வழிவந்தவர் என சொல்லப்படும் ஜி.வைத்யராஜ் என்பவரிடம் மிக அரிய வைரங்கள் பல உள்ளன என்றும் அவற்றில் ஒருபகுதி சர்வதேச ஏலத்துக்கு வந்தது என்றும் ஒரு வதந்தி காற்றில் அடிக்கடி உலவிக்கொண்டிருக்கிறது. விஜயநகரத்தின் வைரங்களைப்பற்றி அவ்வாறான கதைகள் அடிக்கடி செவியில் விழுவதுண்டு. வைரங்களைத் தேடி விஜயநகர் சார்ந்த பகுதிகளில் கோட்டைகளையும் ஆலயங்களையும் உடைப்பவர்கள் அடிக்கடி கைதாகிறார்கள்

இன்றைய ஆந்திர-கர்நாடக எல்லையில் ஹோஸ்பெட் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருந்தது விஜயநகரம். 1336 ல் ஹரிஹரர் ,புக்கர் என்னும் இரு படைத்தலைவர்களால் உருவாக்கப்பட்ட நகரம். டெல்லி சுல்தான்களின் ஆட்சி வலுவிழந்தமையால் தெற்கே ஒரு பேரரசாக எழுந்தது. பல குலங்களால் ஆளப்பட்டாலும் பொதுவாக இவர்களை நாயக்கர்கள் என்பது வழக்கம். கிருஷ்ணதேவராயர் இவர்களில் மிகச்சிறந்த மன்னர். அவர் காலத்தில் தென்னகமே விஜயநகரின் ஆட்சியில் இருந்தது

lon4

1565ல் தலைக்கோட்டை என்ற இடத்தில் நிகழ்ந்தபோரில் அன்றிருந்த பாமினி சுல்தான்களால் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. [பிஜப்பூர், பீரார் ,பீதார் ,அஹமதுநகர், கோல்கொண்டா] விஜயநகரம் அழிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சி அங்கிருந்து தெற்கேவிலகி கூத்தி என்னுமிடத்திலும் பின்னர் அனந்தபூரிலும் நீடித்து 1646 வரை நீடித்தது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நாயக்கர் ஆட்சிகள் தஞ்சை, மதுரை, செஞ்சி, அனந்தபூர், துவாரசமுத்திரம், சித்ரதுர்க்கா ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட வெள்ளையர் ஆட்சி வருவதற்கு முன்புவரை நீடித்தன. ஹைதர் அலி, திப்பு சுல்தான், சந்தாசாகிப் ஆகியோரால் 1730ல் அவை வெல்லப்பட்டன.

இன்று விஜயநகரம் ஹம்பி என அழைக்கப்படுகிறது. ஒரு மாபெரும் இடிபாட்டுக்குவியல் அது. நான் பலமுறை அங்கே சென்றிருக்கிறேன். 1982ல் முதல்முறையாகச் சென்றபோது உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகி மயங்கிவிழுந்திருக்கிறேன். ஹம்பியில் விரூபாக்ஷர் ஆலயத்திற்கு முன்னால் அந்நகரின் மாபெரும் வைரவணிகர் வீதி உள்ளது. இந்த சந்தையைப்பற்றி பர்போசா எழுதியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட எடைக்குமேல் உள்ள வைரங்களை அரசர்களுக்கு மட்டுமே விற்கவேண்டும் என்றும், பிறர் அதை வாங்கினால் தண்டனை என்றும் சட்டமிருந்தது என்கிறார். அரசகுடியினர் அரிய மணிகளை விற்பதில்லை. அவற்றை அவர்கள் அணிகலன்களாகவும் தெய்வங்களுக்குரிய காணிக்கைகளாகவும் கருதினர்

ஹம்பி வைரச்சந்தை

ஹம்பி வைரச்சந்தை

கோஹினூர் இந்தச் சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனென்றால் அநத அருமணி அன்றைய கோல்கொண்டாவில் கிடைத்திருக்கலாம் என்பது நிலவியலாளர் கூற்று. அது அப்போது விஜயநகரத்தின் ஆட்சியில் இருந்தது. ஆந்திராவில் ஹைதராபாத் அருகே, பழைய கோல்கொண்டா நாட்டுக்குள், கிருஷ்ணா நதி பலவகையான பாறைகளை அரித்துக்கொண்டு ஓடும் கொள்ளூர் வைரச்சுரங்கம் நெடுங்காலமாகவே வைரங்களுக்குப் புகழ்பெற்றது. அங்கேதான் இந்தியாவின் புகழ்பெற்ற பல வைரங்கள் கிடைத்தன. கோஹினூர் அங்கே கிடைத்திருக்கலாம். அது கிருஷ்ணதேவராயரிடம் இருந்தது என்றும் விஜயநகர் வீட்சிக்குப்பின் பிஜப்பூர் சுல்தானின் கைக்குச் சென்றது என்றும் அங்கிருந்து பீஜப்பூரை வென்ற முகலாய ஆட்சியாளரான அக்பரிடமும் பின்னர் ஷாஜகானிடமும் சென்றது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

அன்று ஆப்ரிக்கா பிற உலகத்தால் கண்டடையப்படவில்லை. ஆகவே தரமான வைரங்கள் இந்தியாவில் மட்டுமே கிடைத்தன. மிகத்தொல்காலத்தில் எரிமலைக்குழம்புக்குள் அகப்பட்டு அழுத்தமும் வெப்பமும் கொண்டு இறுகும் கரியே வைரம். தென்னிந்தியா தொன்மையான எரிமலைப்பாறைகளாலானது. அந்தப்பாறைகளை நதி ஒன்று ஆழமாக வெட்டிச்செல்கையில் வைரம் வெளியே வருகிறது. கிருஷ்ணா ஆவேசமான ஆறு. பெருவெள்ளம் வடிந்தபின் அதன் கூழாங்கற்பரப்பு விரிந்துபரந்து கிடக்கும். அதில் அரிதாக வைரங்கள் கிடைத்தன. வாழ்நாளெல்லாம் அந்த மணலை அரித்துக்கொண்டிருப்பவர்களில் மிகச்சிலருக்கு மட்டும் அவை அகப்பட்டன. பின்னர் ஆப்ரிக்காவில் நிலக்கரிப்படிவங்களில் வைரங்கள் கிடைக்கத் தொடங்கியபோது  வைரம் மதிப்பிழந்தது. இன்று கருவிகளைக்கொண்டு இருக்குமிடத்தை அறிந்து ஆழத்தில் தோண்டி அவற்றை எடுக்கிறார்கள். அருமணிகளில் எவற்றுக்கும் இன்று விலைமதிப்பு பெரிதாக இல்லை. வைரத்துக்கு மட்டும் அதன் மதிப்பு செயற்கையாக உருவாக்கி நிலைநிறுத்தப்படுகிறது

கிருஷ்ண தேவராயர்

கிருஷ்ண தேவராயர்

b1

ஷா ஜகான்

நாதிர்ஷா

நாதிர்ஷா

அகமது ஷா துரானி

அகமது ஷா துரானி

ரஞ்சித் சிங்

ரஞ்சித் சிங்

vic

விக்டோரியா

கோஹிநூர் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுகள் ஏதுமில்லை. ஆனால் முகலாய ஆட்சியாளரான பாபர்  187 காரட் எடையுள்ள ஒரு அரிய வைரத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். கோகினூர் 186 காரட் எடையுள்ளதென்பதனால் அது கோகினூர்பற்றிய குறிப்பே என சில ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் 1307ல் தென்னகப்படையெடுப்பின்போது கைப்பற்றிக் கொண்டுவந்த செல்வங்களில் ஒன்று அது என்றும், பெரும்பாலும் வரங்கலை ஆண்ட காகதீயர்களின் கையிலிருந்து கொள்ளையிடப்பட்டிருக்கலாமென்றும் அவர்கள் கூறுகிறார்கள். 1526 ல் சுல்தான்களை பாபர் வென்றபோது அவருக்கு பரிசாக இந்த வைரம் அளிக்கப்பட்டது. காகதீயர்களின் ஆட்சியில்தான் அன்றைய கோல்கொண்டா இருந்தது. வரலாற்றுக்கு முன்பாக கோகினூர் தோன்றுவது ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில்தான். அலங்காரப்பித்து கொண்டிருந்த ஷாஜகான் அமைத்த மயிலாசனத்தில் அவருடைய தலைக்குமேல் பதிக்கப்பட்டிருந்தது கோகிநூர்.

கோகி நூர் 196 மெட்ரிக் காரட் எடைகொண்டது.[38.2 கிராம்] ஷாஜகான் அவருடைய மைந்தரான ஔரங்கசீபால் சிறையிலடைக்கப்பட்டார். வைரங்களை அணியவிரும்பாதவரான ஔரங்கசீப் கோகிநூரை கருவூலத்தில் வைத்தார். 1739 ல் பாரசீக ஆட்சியாளரான நாதிர் ஷா டெல்லிமேல் படையெடுத்துவந்தார். டெல்லியை ஆண்ட முகம்மது ஷாவைத் தோற்கடித்து கருவூலத்தைக் கைப்பற்றினார். கோகிநூர் அவர் கைக்குச் சென்றது. அவருடைய அவைப்புலவர் ஒருவர் இவ்வாறு சொன்னதாகச் சொல்லப்படுகிறது. “ஒரு கல்லை நான்கு திசைகளுக்கும் எறிந்து முழுவிசையுடன் வானிலும் எறிந்து நடுவேயுள்ள இடத்தை முழுமையாக தங்கத்தால் நிரப்பினாலும் இந்த வைரத்தின் மதிப்புக்கு நிகராகாது” அந்த அருமணிக்கு பாரசீக மொழியில்  மலையின் ஒளி அல்லது ஒளிகொண்ட மலை என்ற பொருளில் கோகி நூர் என பெயரிட்டதும் நாதிர்ஷாவின் அவையில்தான்

lon

நாதிர்ஷாவின் மகனிடமிருந்து ஆப்கன் மன்னர் அகமது ஷா துரானியிடம் இந்த வைரம் சென்றது. அவருடைய மகன் ஷூஜா ஷா துரானி ரஷ்யாவால் தாக்கப்பட்டபோது பஞ்சாபுக்கு தப்பி ஓடிவந்தார். அவருக்கு அடைக்கலம் அளித்த சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்குக்கு நன்றிக்கடனாக அந்த வைரத்தை அளிக்கவேண்டியிருந்தது. மகாராஜா ரஞ்சித் சிங் பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு கோகினூர் அளிக்கப்படவேண்டும் என இறுதிச்சாத்து எழுதியிருந்தார். ஆனால்  1849 ல் சீக்கிய அரசை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தோற்கடித்து தன் நிலத்துடன் சேர்த்துக்கொண்டது. அவர்கள் அந்த வைரத்தையும் சீக்கிய அரசின் கருவூலத்தையும் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள். விக்டோரியா மகாராணிக்கு சீக்கிய அரசர் அதை அன்பளிப்பாக அளிப்பதாக போருக்குப்பின் எழுதப்பட்ட லாகூர் உடன்படிக்கையில் எழுதி கைச்சாத்து பெறப்பட்டது. 1850ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவரால் பக்கிங்ஹாம் அரண்மனையில் நிகழ்ந்த விழாவில் கோகினூர் விக்டோரியா மகாராணிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அவ்வாறு கோகினூர் பிரிட்டிஷ் அரசின் உடைமையாக ஆகியது.

கோகினூரை துரதிருஷ்டங்களின் கல் என்று சொல்வதுண்டு. அதை ஒருவர் அணிந்தால் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் அவரோ அவர் வாரிசுகளோ  பெருந்துயரை அல்லது அழிவைச் சந்திப்பார்.அதை வைத்திருந்த காகதீயர்கள் அல்லது நாயக்கர்களின் அரசு முற்றாக அழிந்தது. ஷாஜகான் மகனால் சிறையிடப்பட்டு நோயாளியாகி இறந்தார். அகமதுஷா அப்தாலி படையெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். துரானி நாடிழந்து ஓடினார். சீக்கியர்கள் அரசிழந்தனர். அதைக் கைப்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆறாண்டுகளில் அதிகாரமிழந்தது. அந்தக் கல்லை லண்டனுக்கு கொண்டுபோன கப்பல் காலராவாலும் விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டது. அந்நம்பிக்கையால்தான் பிரிட்டிஷ் அரசியின் மணிமுடியில் சூட்டப்பட்ட அக்கல் அங்கிருந்து அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

download

சென்ற 2011ல் திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்திற்குள் இருக்கும் நிலவறைகளில் உள்ள பெருஞ்செல்வம் நீதிமன்ற ஆணைப்படி திறந்து கணக்கிடப்பட்டது. சமீபகாலத்தில் பெரிய வியப்பலைகளை உருவாக்கியது இந்நிகழ்வு. இச்செல்வம்  சேரன் செங்குட்டுவன் காலம் முதலே இருந்துவரும் கருவூலம் என்றும் அதை 1731ல் இன்றைய ஆலயம் கட்டப்படும்போதே  உருவாக்கப்பட்ட  ஆலயத்தின் அடித்தள அறைகளில் பாதுகாத்து வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 1789ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர்மேல் படையெடுத்துவந்தபோது மேலும் செல்வம் அவ்வறைகளில் ஒளித்துவைக்கப்பட்டது. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசகுடி மட்டுமே அறிந்த ரகசியமாக இருந்தது அச்செல்வம். ஆகவே பாதுகாப்பாகவும் இருந்தது, பிரிட்டிஷார் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. கப்பத்துக்காக திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கசக்கிப்பிழியப்பட்டது. ஆனால் அரசகுடியினர் அச்செல்வத்தைப்பற்றி மூச்சுவிடவில்லை.

பத்மநாப சாமியின் செல்வம் பற்றிய செய்திகள் வெளியானபோது இந்தியா முழுக்க இருக்கும் ஆலயங்களைப்பற்றிய ஆர்வம் கிளம்பியது. ஸ்ரீரங்கம் , திருச்செந்தூர் உள்ளிட்ட ஆலயங்களில் அதேபோல அறைகள் இருந்தன. எதிலும் எந்தச் செல்வமும் இல்லை. அவை முழுக்கவே தொடர்ச்சியான படையெடுப்புகளாலும் பிரிட்டிஷாரின் திட்டமிடப்பட்ட முறையான சுரண்டலாலும் முழுமையாகவே கவர்ந்துசெல்லப்பட்டன. பத்மநாபசாமியின் கருவூலம் இன்று உலக அளவில் ஓரிடத்தில் இருக்கும் பெருஞ்செல்வங்களில் ஒன்று.ஏராளமான வைரங்கள், அருங்கலைப்பொருட்கள். அந்தக் கணக்கில் பார்த்தால் இந்தியா முழுக்க இருந்து கொள்ளைபோன செல்வத்தின் அளவு என்ன?

lon2

2014ல் நியூயார்க் சென்றிருந்தபோது அங்கு அருங்காட்சியகத்தில் முகலாயர்களின் நகைகள், வைரங்கள் ஆகியவற்றாலான தனிக்கண்காட்சி ஒன்றைக் காண வாய்ப்பு கிடைத்தது. [Treasures from India: Jewels from the Al-Thani Collection]மறைந்த கத்தார் இளவரசர் ஷேக் ஹமீது பின் அப்துல்லா அல்தானி[Sheikh Hamad bin Abdullah Al-Thani]  யின் தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள நகைகள் அவை. அவர் உலகமெங்குமிருந்து ஏலத்தில் வாங்கிய நகைகள்.  ‘சட்டபூர்வமான’ சிக்கல்களால் அக்கண்காட்சி இந்தியா தவிர பிறநாடுகளில் மட்டுமே நடந்துவருவதாக அறிவிப்பு தெரிவித்தது  . அருண்மொழி ஐந்தே நிமிடத்தில் “நான் வெளியே போயிடறேன். எனக்கு கைகாலெல்லாம் நடுங்குது… ஏன்னே தெரியலை” என்றாள். நான் சுற்றிச்சுற்றி வந்து அந்த வைரங்களையும் அருமணிகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரமைபிடித்ததுபோலிருந்தது. உறைந்த எரிதழல்கள், கல்மலர்கள், வெறித்த விழிகள், இறுகிய நீர்த்துளிகள், சொட்டுக்குருதிகள்…

இந்த அருமணிகளின் பொருள்தான் என்ன? ஏன் இவற்றை மானுடர் இத்தனை ஆர்வத்துடன் சேர்த்தனர்? இவற்றை செல்வமாகக் கருதினர்? இவற்றுக்காக பேரரசுகள் போரிட்டிருக்கின்றன. ராணுவங்கள் செத்து அழிந்திருக்கின்றன. அழகா? எளிய கண்ணாடிக்கல்லுக்கு இதே அழகு உண்டு. அரிதென்பதனாலா? ஆனால் அரிதான எத்தனையோ இப்புவியிலுள்ளன. அழகானதும் அரிதானதுமான ஒன்று நிரந்தரமானதாக இருப்பதன் விந்தையால்தான் என தோன்றுகிறது. அதிகாரத்தின் அடையாளமாக  அவை மாறின. பின் உலகை ஆளலாயின. எண்ண எண்ண விந்தைதான். உலகமே கூழாங்கற்களாலானது. அவற்றில் சில கூழாங்கற்கள் உலகை ஆள்கின்றன!

towr

சிறில் அலெக்ஸ் குடும்பத்துடன் கோகினூர் வைக்கப்பட்டிருக்கும் லண்டன் கோபுரத்திற்கு [The Tower of London] சென்றோம். லண்டன் நகருக்கு நடுவே தேம்ஸ் நதியின் கரையில் இந்த தொன்மையான கோபுரக்கோட்டை [castle] அமைந்துள்ளது. கிபி 1066ல் நார்மன் படையெடுப்பாளர்களால் அமைக்கப்பட்டது இக்கோட்டை. இதிலுள்ள வெள்ளைக்கோபுரம் வில்லியம் மன்னரால் 1078ல் கட்டப்பட்டது. இங்கிலாந்தின் மீதான படையெடுப்பாளர்களின் அடையாளமாக அன்றைய பிரிட்டிஷ் மக்களால் இது கருதப்பட்டது. நெடுங்காலம் நார்மன் மன்னர்களின் அரண்மனையாக இது இருந்தது. பின்னர் சிலகாலம் சிறையாகச் செயல்பட்டது. கடைசியாக 1950களில் குற்றக்கும்பலின் தலைவர்களான கிரே சகோதரர்கள் என்னும் இரட்டையர்   இங்கே சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். அரசர்களான முதலாம் ரிச்சர்ட், மூன்றாம் ஹென்றி மற்றும் முதலாம் எட்வர்ட்  காலகட்டங்களில் ,பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை, இந்த கோபுரக்கோட்டை விரிவாக்கிக் கட்டப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு கட்டிடம் அமைப்பே இன்றுள்ளது.

தொன்மையான கோட்டைகளில் உருவாகும் மெல்லிய படபடப்பை இங்கும் உணர முடிந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்திரா காந்தியின் இல்லத்துக்கு புபுல் ஜெயகருடன் சென்றபோது மயக்கம் வருமளவுக்கு பதற்றத்தை உணர்ந்தார் என்றும், அது அங்கே அவர் உணர்ந்த வன்முறையால்தான் என்றும் வாசித்திருக்கிறேன். எல்லா அதிகார மையங்களிலும் வன்முறை நுண்வடிவில் உறைந்திருக்கிறது. பலசமயம் உச்சகட்ட வன்முறை என்பது மென்மையானதாக, அமைதியானதாக மாற்றப்பட்டிருக்கும். சமயங்களில் அது உயர்கலையின் வடிவிலும் இருக்கும். லண்டன் கோபுரம் நெடுங்காலம் பலவகையான போர்களின், அரண்மனைச் சதிகளின் களமாக திகழ்ந்தது. அது அதிகாரச்சின்னம் என்பதனாலேயே அதைக் கைப்பற்ற தொடர்ச்சியான முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அத்துடன் அது ஒரு சிறை. சித்திரவதைகளும் மரணதண்டனைகளும் நிகழ்ந்த இடம். ‘டவருக்கு அனுப்புதல்’ என்ற சொல்லாட்சியே பிரிட்டிஷ் வரலாற்றில் இருந்திருக்கிறது.

lonaa

நான் பார்த்த முதல் ஐரோப்பியக் கோபுரக்கோட்டை இதுதான். இதற்குமுன்பு அமெரிக்காவில் சிகாகோ அருகே டியர்போர்ன் [ Fort Dearborn ] கோட்டையை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஐரோப்பியக் கோபுரக்கோட்டைகளின் பாணியில் கட்டப்பட்ட  பிற்கால அரண்மனைகள் சிலவற்றை  ஐரோப்பாவில் பார்த்ததுண்டு. லண்டன் டவர் முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது. இப்பகுதிக் கட்டிடங்கள் நதிகளில் உருண்டுவந்தமையால் உருட்சி பெற்றுள்ள சிறியகற்களை சேறுடன் கலந்து அடுக்கி கட்டப்பட்டவை. அடித்தளங்களும் பெருஞ்சுவர்களும் சேற்றுப்பாறை அல்லது சுண்ணப்பாறைகளை வெட்டி அடுக்கி எழுப்பப் பட்டவை. உருளைக்கற்கள் சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில்லை. ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் உருண்டு ஒவ்வொரு தனியாளுமையை அடைந்த கற்கள், அவற்றை ராணுவமாக்க முடியாது. ஆகவே சுவர்கள் பெரும்பாலும் மிகத்தடிமனானவை. இத்தகைய கற்களுக்கு வளைவுகள் மிக உகந்தவை. ஒன்றை ஒன்று கீழே தள்ள முயன்று அவ்விசையாலேயே அவை நிரந்தரமாக நின்றிருக்கும். இதுவே ஐரோப்பிய கோபுரக்கோட்டைகளின் அழகியல்.

தடித்த தூண்கள் எழுந்து வளைந்து கிளைபோல விரிந்து கோத்துக்கொண்டு வளைவாக ஆகி கூரையமைத்த கூடங்கள், இடைநாழிகள். குளிர்ந்த காற்று அச்சுறுத்தும் நினைவுபோலத் தோன்றியது. அரசர்களின் ஆடைகள், அவர்களின் படைக்கலங்கள். அங்கே வாழ்ந்த மன்னர்களை மானுடர் என்று நம்புவது மிகவும் கடினம். விந்தையான ஏதோ உயிர்வகை, தேவர்களும் அரக்கர்களும் கலந்த ஒன்று. ஆனால் அரசர்களும் அரசிகளும் சிறுகுழந்தைகளாக இருந்தபோது விளையாடிய பொருட்கள் அங்கே காட்சிக்கு உள்ளது. அவர்கள் விளையாடிய சிறு பொம்மை வீடு. அது அவர்களை மானுடர் என்று காட்டியது. அவர்கள் மானுடர்களாக இருப்பது சிற்றிளமையில் மட்டும்தான்.

முதலாம் ரிச்சர்ட்

முதலாம் ரிச்சர்ட்

மேலே வெள்ளைக்கோபுரத்தில் ஏறும்படிகள் குறுகலானவை. அங்கே பல அறைகள் சிறைகளாகவும் தண்டனைக் கொட்டடிகளாகவும் பயன்பட்டவை. இரும்பு வளையங்கள், தளைகள். அதற்குள் எப்போதைக்குமாக வந்துசேரும் மனிதர்களின் உள்ளம் எப்படி இருக்கும்? எதிர்காலம் என்பது முற்றிலும் இல்லாமலாவதே மிகப்பெரிய வதை. மறு எல்லை இல்லாத இருண்ட சுரங்கங்களில் சென்றுகொண்டே இருப்பதுபோல. அதைவிட சகமனிதன் இரக்கம் அற்றவன் என உணர்வது, மானுடம் மீதான நம்பிக்கையை முற்றாக இழப்பது. அந்தக்கோடையிலேயே அந்த அறைகள் ஈரமாக இருட்டாக குளிராக இருந்தன. லண்டனின் புகழ்பெற்ற குளிர்காலத்தில் அவர்கள் உருவகம் செய்து வரைந்து வைத்திருக்கும் நரகங்களைப்போலவே இருந்திருக்கும்

சுற்றிலும் அகழி. ஆழத்தில் லண்டனின் காட்சி. அப்போது கோடையானதனால் உற்சாகமான சூழல் நிலவியது. ஜப்பானிய, சீனப்பயணிகள் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கிருக்கும் எந்தக்குறிப்பையும் வாசிப்பதை நாம் பார்க்கமுடியாது. சற்று மண்ணுக்குக் கீழே செல்லும் அடித்தளத்தில் ஒரு ஒயின்கடையும் நினைவுப்பொருட்கள் விற்கும் கடையும் இருந்தன. ஒரு கோப்பை வரலாற்றை விழுங்கி ஒரு துண்டு வரலாற்றை வாங்கிக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். வரலாற்றுத் தலங்களுக்கு மேல் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக பேசியபடிச் சுற்றிவருவதைப் பார்க்கையில் வெடிமருந்துக்குமேல் ஈ ஏதுமறியாமல் அமர்ந்து எழுந்து அமர்வதுபோல ஒரு கற்பனை எழுந்தது.

Tower_of_London,_south,_Buck_brothers

வெளியே கோட்டைவாயிலில் ஒரு இசைக்குழு அக்காலத்தைய ஆடைகளை அணிந்து இசைத்துக்கொண்டிருந்தது. எதிர்பாராமல் ஒரு கூச்சல். ஒரு பெண் வாளை உருவியபடி ஓடிவந்தாள். ஒருவர் வாளை உருவியபடி எதிர்த்துச் சென்றார். இருவருமே பழங்கால ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு திறந்தவெளி நாடகக் காட்சி. அக்காலத்தைய வரலாற்று நிகழ்வொன்றை நடிக்கிறார்கள் எனத் தெரிந்தது. அந்த நாகரீகச் சுற்றுலாப்பயணிகளின் திரளில் வந்துசேர்ந்த அந்தக் கடந்தகாலம் சிலகணங்களுக்குப்பின் கேலிக்கூத்தாக மாறியது. சின்னக்குழந்தைகள் சில பயந்து அலறின.

லண்டன் டவர் அருங்காட்சியகத்தில்தான் கோகினூர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அரையிருள் பரவிய காட்சிக்கூடத்தில் பிரிட்டிஷ் அரசர்கள், அரசியரின் மணிமுடிகளும் அணிகளும் வைக்கப்பட்டுள்ளன. மணிமுடிகளிலிருந்து நகைகள் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தால் அவற்றின் மாதிரிவடிவங்கள் செய்துவைக்கப்பட்டிருந்தன. அந்த இருளில் வைரங்கள் நம்மை ஒளிரும் விழிகள் போலச் சூழ்ந்துகொள்கின்றன. எவை எங்கிருந்தவை என்றெல்லாம் அறியமுடியவில்லை. கோகினூர் பற்றி மட்டும்தான் என் சிந்தை குவிந்திருந்தது. எலிசபெத் ராணியின் மணிமுடியில் 1937 வரை அது இருந்திருக்கிறது.

Queen_Mary's_Crown

கோகினூர் கண்ணாடித்துண்டுபோலத்தான் இருந்தது. உண்மையில் அது 1852ல் அதை மக்களுக்குக் காட்சிக்கு வைத்தபோது அது எவரையும் பெரிதாகக் கவரவில்லை. ஆகவே அதை மறுவெட்டு செய்து இன்றைய அமைப்புக்குக் கொண்டுவந்தார்கள். ஒரு கண்ணாடிப்பேழைக்குள் தெரிந்த கோகினூர் மிகச்சிறிய விளக்கால் கச்சிதமாக ஒளியூட்டப்பட்டிருந்தது. அருகே சென்ற ஒருவரின் சிவப்புநிற ஆடை அதில் பல்லாயிரம் மடிப்புகளாக மாறி உள்ளே சென்று சுழன்றது. சூழ்ந்திருக்கும் அத்தனை காட்சிகளையும் தன் பட்டைகளால் அள்ளி பலகோடி உள்ளடுக்குகளுக்குள் செலுத்தியபடி இருந்தது. நாம் அங்கிருந்து விலகினாலும் உள்ளே எங்கோ அவையனைத்தும் இருக்கும், துளியாக, அணுவாக. வைரம் வெறும் படிகம் அல்ல, அது நாம் அறியமுடியாத ஒரு நிகழ்வு.

ஆனால் அங்கிருந்தது கோகினூர்தானா? அது கோகினூரின் கண்ணாடியாலான தத்ரூப நகல் என்றார் நண்பர். இருக்கலாம், வரலாற்றை நாம் எங்கே பார்க்கிறோம்? நாம் அறிவதெல்லாம் புனைவைத்தானே?வெளியே வந்து அமர்ந்தபோது வாசித்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. கோகினூரை பஞ்சாபிலிருந்து விக்டோரியாவின் அவைக்குக் கொண்டுவரும் பொறுப்பில் இருந்தவர் ராணுவ அதிகாரியும் பஞ்சாப்பகுதி ஆளுநருமான சர் ஹென்றி லாரன்ஸ். அவர் அதை தன் கோட்டுப்பையில் வைத்திருந்தார், பத்திரமாக இருக்கட்டுமே என்று. அல்லது முடிந்தவரை கையிலேயே வைத்திருப்போமே என்று. அவர் தன் கோட்டை கவனக்குறைவாக வைரத்துடன் சலவைக்குப்போட்டுவிட்டார். அதன்பின் உயிர்பதைக்க அதைத்தேடி அலைய சலவைக்காரர் அது என்ன என்று தெரியாமல் திரும்பக்கொண்டுவந்து கொடுத்துவிட்டார். எனக்கு அத்தனை ஆட்சியாளர்களைவிடவும் ஹென்றி லாரன்ஸ்தான் அணுக்கமானவராகத் தோன்றினார். முயன்றிருந்தால் அவர் நல்ல நாவல்களை எழுதியிருக்கக் கூடும்.

 

https://www.jeyamohan.in/112643#.W6cwjxbTVR4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்

Jeyamohan UK visit 320

உலகத்தில் தொலைந்துபோனவை எல்லாம் கடலடியில் இருக்கும் என்பார்கள், இல்லாதவை அனேகமாக பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கும். பிரிட்டிஷார் இருநூறாண்டுக்காலம் உலகை ஆண்டனர். உலகைக் கூர்ந்து நோக்கும் கண்கள் கொண்டிருந்தனர். அரியவை அனைத்தும் தங்களுக்கே என்னும் தன்முனைப்புடனும் இருந்தனர். ஆகவே லண்டனின் அருங்காட்சியகங்களில் உலகக் கலைச்செல்வங்களில் பெரும்பகுதி வந்து சேர்ந்தது.

லண்டன் புளூம்ஸ்பரி பகுதியிலுள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் 80 லட்சம் அரும்பொருட்கள் உள்ளன. உலகில் உருவான முதல் தேசியப் பொது அருங்காட்சியகம் இது . 1753ல் அயர்லாந்து மருத்துவரனான   சர் ஹான்ஸ் ஸ்லோன் [Sir Hans Sloane]அவர்களின் சேமிப்புகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இது  1759ல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.  பிரிட்டிஷ் அரசு உலகமெங்கும் பரவுந்தோறும் இவ்வருங்காட்சியகம் கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. இயற்கைவரலாற்று அருங்காட்சியகம் போன்று பல தனி அருங்காட்சியகங்களாகப் பிரிக்கப்பட்டது. 1972 வரை தொல்நூல்களுக்கான காப்பகமும் நூலகமும் இதனுடன் இணைந்திருந்தன, அவை தனியாகப்பிரிக்கப்பட்டன.

Jeyamohan UK visit 232

எகிப்து, கிரேக்கம் , ரோம். மத்தியகிழக்கு, ஆசியா, தென்கிழக்காசிய பகுதிகளுக்கான தனித்தனியான வைப்புக்கூடங்கள், வரலாற்றுக்கு முந்தைய ஐரோப்பாவுக்கான கூடம், ஆப்ரிக்கா மற்றும் தென்னமேரிக்காவுக்கான கூடம் வரைச்சித்திரங்கள் மற்றும் அச்சுக்கான கூடம்,  , நாணயங்கள் மற்றும் பதக்கங்களுக்கான கூடம், ஆவணக்காப்பகங்கள் நூல் சேகரிப்புகள் என பல பகுதிகளாகப் பரந்திருக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஒரு மாபெரும் கலைக்களஞ்சியத்துக்குச் சமானமானது. அதை எந்த மானுடனும் எவ்வகையிலும் பார்த்து முடிக்கமுடியாது. நமக்கு ஆர்வமுள்ள சிறிய பகுதியை முன்னரே வரையறுத்துக்கொண்டு அவற்றை மட்டும் பார்த்துவிட்டு வருவதே உகந்தது. அதைக்கூட பலநாட்கள் சென்று பார்த்துத்தான் சற்றேனும் நிறைவுற அறியமுடியும்.

நான் ஆப்ரிக்கா, எகிப்து, ரோம் மற்றும் கிரேக்க வரலாறு சார்ந்த பொருட்களை பார்த்தேன்.  ஐரோப்பிய வரலாறு நமக்கு இந்திய வரலாற்றுக்குச் சமானமாகவே கற்பிக்கப்பட்டிருப்பதனால் பெரும்பாலான காலகட்டங்களை மிக அணுக்கமாக உணரமுடிந்தது. கிரேக்கப் பளிங்குச்சிலைகளின் எளிமையான நேர்த்தி, ரோமாபுரிச் சிலைகளின் மாண்பும் அலங்காரமும், மறுமலர்ச்சிக்கலைகளில் இருந்த சுதந்திரமும் தத்துவ உள்ளடக்கமும் என ஏற்கனவே வாசித்தவற்றை பொருட்களாக பார்த்துச்செல்வது கனவினூடாகக் கற்பதைப்போன்ற அனுபவம்.  எகிப்த்ய கலைப்பொருட்கள் ஏராளமாக இருந்தன. மிகத் தொடக்க காலத்திலேயே எகிப்தை பிரிட்டன் கைப்பற்றி துல்லியமாகப் புரட்டிப்போட்டு ஆராய்ந்துவிட்டிருக்கிறது. விதவிதமான தொன்ம முகங்கள் விழித்து நோக்கி அமர்ந்திருந்தன. தங்கள் இருப்பாலேயே இருக்குமிடத்தை ஆலயமாக ஆக்கவல்லவை.

Jeyamohan UK visit 245

அருங்காட்சியகங்களை சுற்றிநோக்குவதென்பது ஒரு பயனற்ற செயல் என்று சிலசமயம் தோன்றும். ஏனென்றால் நாம் முதலில் கிளர்ச்சி அடைகிறோம். ஆர்வத்துடன் பார்க்கிறோம். மெல்லமெல்ல உள்ளம் சலிக்கிறது. பின்னர் அரைக்கவனத்துடன் பார்த்துச்செல்கிறோம்.  முன்னரே நாம் பின்னணியை அறிந்து பார்க்கவிரும்பிய பொருளைப் பார்த்தால் மட்டுமே நினைவில் நிற்கிறது. பெரும்பாலானவை மிக விரைவிலேயே நினைவிலிருந்து அகன்றுவிடுகின்றன. ஏனென்றால் உள்ளம் தகவல்களை பதிவுசெய்துகொள்வதில்லை, அதனுடன் ஏதேனும் உணர்வு கலந்திருக்கவேண்டும். அதாவது சொல்வதற்குக் கதை இல்லாத எப்பொருளுக்கும் நம் அகத்தில் இடமில்லை.

ஆனால் அருங்காட்சியகங்கள் மீதான மோகம் ஏறித்தான் வருகிறது. அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் போன்ற பெருநகர்களில் மட்டுமல்லாமல் ராலே போன்ற சிற்றூர்களில் கூட நல்ல அருங்காட்சியகங்களைக் கண்டிருக்கிறேன். சிங்கப்பூர் அருங்காட்சியகமேகூட ஒரு பெரிய கலை-வரலாற்றுத் திரட்டுதான். இந்தியாவின் முக்கியமான அருங்காட்சியகங்கள் அனைத்துக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலானவை வெறும்பொருட்குவைகள் என்றாலும் பலமுறை சென்று நோக்கியிருக்கிறேன். அருங்காட்சியகங்களை நம் ஆழம் நோக்கிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கு அது ஒரு ரகசியக் கிடங்கு. நான் கண்ட அருங்காட்சியகங்களிலிருந்து பொருட்களைப்பற்றிய நுண்மையான சித்திரங்கள் வெண்முரசு போன்ற ஒரு பெருநாவல்தொடரை உருவாக்கும்போது எங்கிருந்தோ எழுந்துவருவதைக் கண்டிருக்கிறேன். நவீனநாவலை ‘கலைக்களஞ்சியத்தன்மைகொண்டது’ என விமர்சகர்கள் சொல்வதுண்டு. அது ஒருவகை அருங்காட்சியகம் என்றும் சொல்லலாம்.Jeyamohan UK visit 216

விரிந்துபரந்த அருங்காட்சியகத்தில் எத்தனைக் கூட்டமிருப்பினும் நாம் தனியாக இருக்கமுடியும். எகிப்தியப் பிரிவில் கல்லால் ஆன சவப்பெட்டிகளில் இருந்த மம்மிகளுடன் தனித்து நின்றிருந்தபோது என்னுள் ஒரு நுண்திரவம் நலுங்கியது. ஆப்ரிக்க முகமூடிகளில் காலத்தை கடந்து உறைந்த வெறியாட்டு. செவியறியாமல் அவை எழுப்பும் கூச்சல். ரோமாபுரிச் சக்கரவர்த்தி டைபீரியஸின் மார்புருவச் சிலை அருகே நின்றிருந்தேன். நேரில்பார்ப்பதுபோன்ற சிலை. நரம்புகள்கூடத்  துல்லியமாகத் தெரியும் வடிப்பு. நோக்கி நின்றிருந்தபோது ஈராயிரமாண்டுகளைக் கடந்து அவரும் நானும் விழியொடு விழி நோக்கினோம். இன்றுவரை கனவில் வந்துகொண்டே இருக்கிறார் [இதை ஒரு பயிற்சியாகவே செய்துபார்ப்பதுண்டு. சிலைகளை பத்துநிமிடம் தனியாக மிக அண்மையில் நின்று முகத்துடன் முகம் நோக்கினால் கனவில் அந்த முகம் எழுவது உறுதி]

டக்ளஸ் ஆடம்ஸின் [Douglas Adams] புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரின் நூல்வடிவமான Hitchhiker’s guide to the galaxy என்னிடம் உள்ளது. அவ்வப்போது வாசிப்பது அந்நூல். அறிவியல்புனைகதைகளை பகடிசெய்யும் அக்கதைத் தொடரில் பிரபஞ்சச் செய்திகள் அனைத்தையும் தொகுத்தளிக்கும்  Encyclopedia galaxia என்னும் நூலை தயாரிக்கிறார்கள். பலகோடிப் பக்கங்கள் கொண்டது, ஆகவே பெரும்பாலும் பயனற்றது. அதில் ஒவ்வொரு கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோள்களுக்கு லட்சம் பக்கங்களுக்குமேல் அளிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு இரண்டு வார்த்தை- mostly harmless. லண்டன் அருங்காட்சியகத்தின் இந்தியப்பகுதி ஒப்புநோக்க பெரிதுதான். அதில் தென்னகத்தின் இடமும் குறிப்பிடும்படி உள்ளது. ஆனால் குறிப்புகள் பெரும்பாலும் சுருக்கமானவை, மேலோட்டமானவை

amaravati_stupa-759

அமராவதி ஸ்தூபம்

இந்தியப்பகுதியில் ஒரு சிறு கற்கோயிலையே பெயர்த்துக் கொண்டுசென்று வைத்திருக்கிறார்கள். கற்சிலைகள், செப்புச்சிலைகள். நடராஜர்கள், உமாமகேஸ்வரர்கள், நின்ற அமர்ந்த பெருமாள்கள். ஒவ்வொரு சிலையும் கைமுத்திரைகளாலும் உடல்நெளிவாலும் விழிகளாலும் பேசிக்கொண்டிருந்தது. காற்றில் நிறைந்திருந்தது உளமறியும் மொழி ஒன்று. உண்மையில் நம்மில் பெரும்பாலானவர்கள் உலகில் எங்கு சென்று நம் சிலைகள் அங்கிருப்பதைப் பார்த்தாலும் கொதிப்பதுண்டு. எனக்கு அவை அங்கே பாதுகாப்பாக இருப்பதும், கலைஆர்வலர்களால் பார்க்கப்படுவதும் நன்று என்றே தோன்றுகிறது. குப்பைக்குவியல்கள் போல இங்கே அவை போட்டுவைக்கப்பட்டிருப்பதைத்தான் அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உதாரணமாக சென்னை அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற அமராவதி ஸ்தூபியின் பளிங்குச்சிலைப் பகுதிகள் பல உள்ளன. புத்தர் தென்னகத்தில் அமராவதி வரை வந்தார் என்பது வரலாறு. நான் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது ஓர் அதிகாரியின் அறை அச்சிற்பங்களை வரிசையாக அடுக்கிஉருவாக்கப்பட்டிருந்ததை, அவற்றின்மேல் பொருட்கள் சாத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். லண்டன் அருங்காட்சியகத்தில் உலகுக்கே ஒரு செய்தியைச் சொல்ல அமர்ந்ததுபோல அமராவதியின் ஸ்தூபியின் சிலை இருப்பதைக் கண்டபோது எஞ்சியதும் இங்கே இருந்திருக்கலாம் என்ற எண்ணமே எழுந்தது.பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி காலின் மெக்கின்ஸி இடிந்துகிடந்த இந்த ஸ்தூபியை ஆராய்ந்து பதிவுசெய்தார். 1845ல் சர் வால்டர் எலியட் அதன் பகுதிகளை சென்னைக்குக் கொண்டுவந்தார். 1859ல் அதன் பல பகுதிகள் லண்டன் அருங்காட்சியகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவை சென்னையில் இருந்தால் அழிக்கப்படும் என வால்டர் எலியட் எழுதியிருந்தார். இந்தியர்களை வெள்ளையர்கள் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

டைபீரியஸ்

டைபீரியஸ்

இந்தியர்  பலரும் தேசிய உணர்வுடன் திப்புசுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு பொம்மையை  பார்த்துச்செல்வதைக் கண்டேன். ஒரு வெள்ளையனை புலி கொல்வதுபோன்ற பொம்மை. அழகோ நுட்பமோ அற்றது. அதற்கு ஒரு கேலிக்குரிய வரலாற்றுப்பின்புலம் மட்டுமே உள்ளது

ஆனால் ஐரோப்பியச் சாமானியர்களுக்கு இந்தியக்கலை எவ்வகையிலும் பிடிகிடைக்கவில்லை என்றும் தெரிந்தது. அவர்கள் எகிப்து பற்றி நிறையவே அறிந்திருப்பார்கள். எகிப்தைப்பற்றி வரலாற்று நோக்கில் மட்டுமல்லாமல் திகில்,சாகசக் கதைகளாகக்கூட நிறைய எழுதப்பட்டுள்ளது. பிராம் ஸ்டாக்கர் கூட எகிப்து பற்றிய பரபரப்பு நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதைவிட மம்மி வரிசை சினிமாக்களின் பாதிப்பு. ஆகவே அங்கே அவர்களுக்கு ஒரு பரபரப்பு இருந்ததைக் கண்டேன். இந்தியச் சிற்பங்கள் கல்லால் ஆன பொம்மைகள், வெறும் அணியலங்காரப் பொருட்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள்போல. அங்கே நாங்கள் மட்டுமே நின்று நோக்கி நடந்தோம்.

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள கலைச்செல்வம் விலைமதிப்புக்கு அப்பாற்பட்டது. இருநூறாண்டுகள் உலகை எடுத்து இங்கே கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.  அதைத் திருட்டு எனச் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் அவர்கள் அப்படிக் கொண்டுவர முடியாத அனைத்துக் கலைமையங்களையும் பெரும்பொருட்செலவில் பாதுகாத்திருக்கிறார்கள். தங்கள் ஆட்சிக்குட்பட்ட இந்தியா, பர்மா,தாய்லாந்தில் உள்ள ஆலயங்களையும் விகாரங்களையும் பழுதுநோக்கியிருக்கிறார்கள். மட்டுமல்ல, தங்கள் ஆட்சிக்குக் கீழே வராத டச்சு இந்தோனேசியாவிலுள்ள பரம்பனான் ஆலயவளாகத்தை சீரமைக்கவேண்டும் என கடும் அழுத்தத்தை அளித்து தாங்களும் மீட்புப்பணியில் பங்கேற்றிருக்கிறார்கள்

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

கீழைநாட்டுச் செல்வம் தங்களுக்குரியது, அது தங்கள் சாகசம் வழியாகத் தேடி அடையவேண்டியது, வரலாற்றின் ஆழத்தில் தங்களுக்காகக் காத்திருப்பது என்னும் எண்ணம் பிரிட்டிஷாருக்கு உண்டு. அவர்களிடமிருந்து அது அமெரிக்கர்களுக்குச் சென்றது. அந்த எண்ணம் ஐரோப்பாவுக்கே பொதுவானது என்றாலும் போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் சென்ற இடங்களை சூறையாடி அழித்தபின்னரே கொள்ளைப்பொருட்களை கொண்டுவந்தனர். பிரெஞ்சுக்காரர்களின் உளநிலையும் ஏறத்தாழ அதுவே. இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சிசெய்ய நேரிட்டது ஒரு பெருங்கொடைதான், ஐயமில்லை.

ஆர்.எல்.ஸ்டீவன்ஸனின் Treasure Island இளமையில் பலராலும் படிக்கப்பட்ட நூல். இளைஞர்கள் புதையல்நிறைந்த ஒரு தீவைக் கண்டடையும் கதை. பிரிட்டிஷ் உளவியலின் மிகச்சரியான உதாரணம் அந்நாவல். சொல்லப்போனால் அந்த ‘கொள்ளை-சாகச’ மனநிலையை  ‘உலகை உரிமைகொண்டாடும்’ மனநிலையை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது. அதை முன்னோடியாகக் கொண்டு நூற்றுக்கணக்கான நாவல்கள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பெரியவர்களுக்கான நாவல் என்றால்  King Solomon’s Mines (1885). சர். ரைடர் ஹகார்ட் அவர்களால் எழுதப்பட்டது [  Sir H. Rider Haggard.] சினிமாவாகவும் வந்துள்ளது.

அமெரிக்காவில் இன்றும் அந்த உளமரபு மேலும் மூர்க்கமாகத் தொடர்கிறது, ஜார்ஜ் லூக்காஸின் இன்டியானா ஜோன்ஸ் மிகச்சிறந்த உதாரணம். ‘புதையலைத் தேடி’ச் செல்லும் வெள்ளைக்கார ‘தொல்லியலாளர்’ [அவரை திருடர் என்று மேலும் கௌரவமாகச் சொல்லலாம்] அந்த பாரம்பரியச் சொத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யும் கீழைநாட்டு மக்களையும் தென்னமேரிக்கர்களையும் கொக்குகுருவிகளைப்  போல சுட்டுத்தள்ளி வெற்றிகரமாக ‘பொருளுடன்’ மீள்வதைப்பற்றிய படங்கள் அவை.

ki

புதையல்வேட்டை இன்றும் ஐரோப்பா, அமெரிக்காவில் வணிகசினிமா, வணிக வாசிப்பு, விளையாட்டுக்களில் மிகப்பெரிய கரு. ஆனால் இந்தியாவில் அதற்கு பெரிய மதிப்பில்லை. எந்தக் கதைக்கருவையும் நகல்செய்யும் தமிழ்சினிமா பலமுறை புதையல்கதைகளை எடுத்துள்ளது. பெரும்பாலும் வணிகத் தோல்விதான், மணிரத்னத்தின் திருடா திருடா வரை. அந்த உளவியலை நம் சினிமாக்காரர்களால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஆனால் அதை எடுத்தால் ஓடாது என அறிந்திருக்கிறார்கள். இன்னொருவர் சொத்தான புதையலுக்காக உயிரைப்பணயம் வைப்பதெல்லாம் நம் உள்ளத்துக்கு ஏற்புடையதாக இல்லை எனத் தோன்றுகிறது.

டிரஃபால்கர் சதுக்கத்தில் உள்ள தேசிய கலைக் காட்சியகம் [The National Gallery is an art museum]  இதைப்போல கலைப்படைப்புகளின் பெருங்களஞ்சியம். 1824 ல் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் 2,300 ஓவியங்கள் உள்ளன. சென்ற அறுநூறாண்டுகளில் ஐரோப்பாவில் உருவான ஓவியங்களில் பெரும்படைப்புகள் கணிசமானவை இங்குள்ளன. ஐரோப்பாவின் பெரும்பாலான அருங்காட்சியகங்கள் அரசர்களின் சேமிப்புகளிலிருந்து உருவாகி வந்தவை. இந்தக் கலைக்கூடம் பிரிட்டிஷ் அரசு 1824ல் கலைசேகரிப்பாளரான  ஜான் ஜூலியஸ் ஆங்கர்ஸ்டைன் [ John Julius Angerstein] அவர்களிடமிருந்து 38 ஓவியங்களை விலைகொடுத்து வாங்கி உருவாக்கியது. டைடன், ராஃபேல்,ரெம்பிராண்ட் போன்றவர்களை ரசிக்க குழந்தைக்குரிய விரிந்த கண் போதும். பழகிய அழகியல் கொண்ட அவை நேரடியாகவே கனவை விதைப்பவை. கிறித்தவ இறையியலும் ஓவிய அழகியலும் ஓரளவு தெரிந்திருந்தால் மேலும் அக்கனவு விரியும். குளோட் மோனே போன்ற ஓவியர்கள் நிலக்காட்சிகளுக்குள் நம்மைக் கொண்டுசெல்பவர்கள்.

j

John_Julius_Angerstein

இம்ப்ரஷனிச ஓவியங்களைப் பார்க்கையில் நாம் மீள மீள உணரும் வியப்பு ஒன்றுண்டு, நாம் இயற்கைக்காட்சிகளை எப்போதுமே பலவகையான விழித்திரிபு நிலைகளாகவே காண்கிறோம். காலையின் சாய்வெயில், உச்சிவெயிலின் வெறிப்பு, தூசுப்படலம், மழைத்திரை என. ஒருபோதும் நேர்விழிகளால் நாம் இயற்கையை ‘தெள்ளத்தெளிவாக’ பார்க்கும் தருணம் அமைவதில்லை. உண்மையில் அந்த திரிபை அல்லது திரையைத்தான் நாம் அழகு என உணர்கிறோம்.

ஆனால் சில ஓவியர்களை தனியாகப் பயின்றுதான்  அறியவேண்டியிருக்கிறது பால் செசான் நித்ய சைதன்ய யதிக்கு மிகப்பிரியமான ஓவியர். குருகுலத்தில் பல இடங்களில் செசானின் ஓவியங்களின் நகல்களைக் காணலாம். அவரைப்பற்றி நித்யா பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். செசானின் ஓவியங்களில் ஒருவகையான  ‘நோட்டுப்புத்தகப் படங்களின் தன்மை’ எனக்குத் தோன்றியதுண்டு. அவை மிக அந்தரங்கமானவை, உணர்வுகளுக்கேற்ற வண்ணக்கலவையும் எளிமையான கற்பனையும் கொண்டிருப்பதனால் கலைத்தன்மை கொள்பவை என்பதை அறிந்தபின்னரே அவை நமக்கு  மெய்யாகத் திறப்பு கொள்கின்றன

மூல ஓவியங்களைப் பார்ப்பது மிகப்பெரிய அனுபவம், குறிப்பாக அவற்றின் பேருருவம். நம்மை முழுமையாக உள்ளே ஆழ்த்திக்கொள்கின்றன அவை. ஓர் ஓவியத்தின் முன் சொல்லடங்கி அமர்ந்திருப்பதை ஊழ்கம் என்றே சொல்லமுடியும். ரெம்ப்ராண்டின் மாபெரும் நாடகக்காட்சியோ குளோட் மோனேயின் பூத்தமலர்களின் நிலவெளியோ நமக்களிப்பது ஒரு கனவை. வாழ்தல் இனிது என காட்டுபவை கலைகள்.

dug

Douglas Adams

முதலில் இத்தகைய மாபெரும் ஓவியத்தொகை உருவாக்குவது மன எழுச்சி. பெரும்படைப்பாளிகளின் அரிய படைப்புகளை நேரில் காண்பதன் விரிவு. மெல்லமெல்ல உள்ளம் பிரமிக்கிறது. அனைவருமே பெரும்படைப்பாளிகள். மானுடத்தின் கலைவெளியில் மைக்கேலாஞ்சலோகூட மிகச்சிறிய குமிழிதான். அது உருவாக்கும் சோர்வு மீண்டும் ஒட்டுமொத்தமாக அந்தப்பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் ஒரு தரிசனமாக எழுகிறது. மானுடப் படைப்பூக்கம் பலதிசைகளில் திறந்துகொண்டு உருவாக்குவது ஒரு பெரும் ஓவியத்தை, ஓவியங்களால் ஆன ஒரு பேரோவியப் படலத்தை.

ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் [ஸ்பானிஷ் உச்சரிப்பு ஹோர்ஹே லுயிஸ் போர்கெஸ்]   எழுதிய அறிவியலின் துல்லியத்தன்மை என்ற சிறுகதை குறித்து நண்பர்களிடம் சொன்னேன். ஒரு நாட்டில் வரைபடக்கலை உச்சத்தை அடைகிறது. ஊரிலுள்ள எல்லாவற்றையும் வரைபடத்திலும் கொண்டுவர முயல்கிறார்கள். வரைபடம் வளர்ந்து ஊரளவுக்கே பரப்பு கொண்டதாக ஆகிவிடுகிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த அருங்காட்சியகமும் கலைக்கூடமும் அளித்த திகைப்பிலிருந்து விடுபட அச்சிரிப்பு உதவியாக இருந்தது. சும்மா “இந்த உலகமே ஒரு மாபெரும் அருங்காட்சியகம்தானே?” என்று சொல்லி வைப்போமா என யோசித்தேன். அருண்மொழிக்கு முதிராத்தத்துவம் எரிச்சலூட்டும் என்பதனால் சொல்லவில்லை.

 

https://www.jeyamohan.in/112667#.W6iBxBbTVR4

 

  • கருத்துக்கள உறவுகள்

அரிதான அற்புதமான தகவல்கள், நன்றி கிருபன்......!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா 10- ஒரு திருப்புமுனைப்புள்ளி

ves1

சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட நாகர்கோயில் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஒரு நுண்செய்தியை அறிந்திருப்பார்கள், லண்டன்மிஷன் ஃபாதர்களிடம் நாம் ஹிந்து என்றுகூட சொல்லலாம், கத்தோலிக்கர் என்று சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்கு ஹிந்துக்கள் மீட்புக்கு வாய்ப்புள்ள அஞ்ஞானிகள். கத்தோலிக்கர்கள் அவ்வாய்ப்பே இல்லாத திரிபுவாதிகள். சாத்தானுக்கு தங்களை அளித்துக்கொண்டவர்கள். அன்றெல்லாம் எங்களுக்கு கிறித்தவ சபைகளுக்குள் உள்ள போராட்டங்களெல்லாம் தெரியாது, லண்டன்மிஷன் சாமியார்களை கத்தோலிக்க சாமியார்கள் ஏதோ செய்துவிட்டார்கள் என்று புரிந்துகொண்டோம்.

உலக வரைபடத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வுகளில் ஒன்று என சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் [Protestantism]பிறப்பைச் சொல்லமுடியும். உலக கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 40 விழுக்காடு சீர்திருத்தக் கிறித்தவர்கள்தான். வெவ்வேறு சபைகளாக உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள். தமிழகத்தில் சி.எஸ்.ஐ [Church of south india ] சபை முக்கியமான சீர்திருத்தக் கிறித்தவ சபை. லுத்தரன் மிஷன், இரட்சணிய சேனை போன்றவை குறிப்பிடத்தக்க சபைகள். இப்போது ஒன்றிலிருந்து ஒன்றென பிரிந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மிஷனும் ஒரு தனி திருச்சபையாக மாறிக்கொண்டிருக்கிறது. தனியார் போதகர்கள் தங்களுக்கென்று சபைகளை அமைத்துக்கொள்கிறார்கள்

download (1)

வெஸ்ட்மினிஸ்டர் அபே உட்பக்கம்

ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் 1517 ல் அன்றைய கத்தோலிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக தன்னுடைய புகழ்பெற்ற அறிக்கையை [The Ninety-five Theses ] வெளியிட்டபோது சீர்திருத்தக் கத்தோலிக்க மதத்தின் கருத்தியல் தொடக்கம் உருவானது எனப்படுகிறது. அதற்கு முன்னரே பீட்டர் வால்டோ [ Peter Waldo] ஜான் வைகிளிஃப் [, John Wycliffe] ஜான் ஹுஸ்[ Jan Hus] போன்றவர்கள் கத்தோலிக்க மேலாதிக்கத்தை எதிர்த்திருந்தாலும் அரச ஆதரவும் மக்களாதரவும் கொண்டு கத்தோலிக்க திருச்சபையின் மாபெரும் அதிகாரத்தை எதிர்த்து நின்றவர் மார்ட்டின் லூதர் மட்டுமே. குமரிமாவட்டச் சூழலில் இந்தச் சபைகளில் தெளிவான சாதியடையாளம் இன்று உண்டு, எந்தச் சபை என்று கேட்பது கிட்டத்தட்ட சாதிகேட்பதேதான்.

கிபி பதினைந்தாம் நூற்றாண்டுவரை பிரிட்டனின் அதிகாரபூர்வ மதம் கத்தோலிக்கக் கிறித்தவம்தான். வேல்ஸ், அயர்லாந்து பகுதிகளும் கத்தோலிக்க நம்பிக்கை கொண்டிருந்தன. ஸ்காட்லாந்தில் மட்டும் கெல்ட் [Celt] இனக்குழுவினரின் பாகன் மதநம்பிக்கைகள் இருந்தன. கான்ஸ்டண்டீன் கிறித்தவ மதத்தைத் தழுவியபோதே பிரிட்டனில் ரோமாபுரியின் படைநிலைகள் இருந்தன. ஆனாலும் ஐந்தாம் நூற்றாண்டில் புனித அகஸ்டின், புனித பாட்ரிக் ஆகியோர் வழியாகவே பிரிட்டனில் கத்தோலிக்க மதம் வேரூன்றியது.

download

நான் முப்பதாண்டுகளுக்கு முன் cruzified என்னும் நாவலை வாசித்தேன். பிரிட்டனில் கத்தோலிக்க மதம் நுழைந்ததைப் பற்றிய நாவல் அது. ஆசிரியர் பெயர் ஓப்ரியன் என முடியும். அந்நாவலை தொண்ணூறுகளில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அ.எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்களுக்கு அன்பளிப்பாக தபாலில் அனுப்பினேன், அவர் ஒரு நாவல் எழுதும் பெருமுனைப்புடன் இருந்தார் அப்போது. அன்று அவருக்குப் பார்வை குறைந்துகொண்டிருந்தது. இப்போது பார்வை மீண்டுவிட்டது, ஆனால் இலக்கிய ஆர்வம் மறைந்துவிட்டது என சொன்னார்கள்

ஆச்சரியம்தான், பொதுவாக நூல்கள் எனக்கு மறப்பதில்லை. இந்நூலை எத்தனை தேடியும் இணையத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாவலை என்னால் நினைவிலிருந்தும் மீட்கமுடியவில்லை, ஒருகாட்சியைத் தவிர. புனித அகஸ்டின் [St.Augustine] அயர்லாந்துக்கு கிறித்தவத்தைக் கொண்டுவருகிறார். அங்கே அப்போது பேகன் மதம் பெரும் செல்வாக்குடன் இருக்கிறது. கல்லால் ஆன பெரிய ஆலயங்கள் இருந்தன. அகஸ்டின் அவற்றில் சாத்தான் குடியிருப்பதாக அம்மக்களிடம் சொல்கிறார். அதற்குள் விறகுகளைக் குவித்துத் தீயிடுகிறார். அதன்பின் குளிர்ந்த நீரை அதன்மேல் அள்ளி ஊற்றச்சொல்கிறார்கள். பேரிரைச்சலுடன் ஆவிகள் வெளியேறுகின்றன. கல்தூண்கள் வெடிக்க ஆலயம் இடிந்து சரிகிறது.

vest2

இன்றும்கூட பாகன் மதத்தின் அழிவைப்பற்றி [மதச்சார்பற்ற] பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் மொழி  இப்படித்தான் இருக்கிறது .  பிரிட்டனில் கிறித்தவம் என்னும் கட்டுரையில் பிபிசி நிறுவனம் இவ்வாறு குறிப்பிடுகிறது In the 1st Century AD, Britain had its own set of religious icons: Pagan gods of the earth and Roman gods of the sky. Into this superstitious and violent world came a modern, fashionable cult from the east: Christianity.  அதாவது ஏழுநாட்களில் இறைவன் உலகைப்படைத்தான் என்பதோ, ஏவாளை சாத்தான் ஆப்பிள் தின்னவைத்ததோ, இறந்தவர் மூன்றாம் உயிர்த்தெழுந்ததோ ‘மூடநம்பிக்கை’ அல்ல. அது மதம். அதற்குமுன்பிருந்த வழிபாடுகள் குரூரமான மூடநம்பிக்கைகள். ஐரோப்பியர்களின் மொழியில் பெரும்பாலும் கிறித்தவ மதத்தின் அனைத்து முன்முடிவுகளும் ஒளிந்திருக்கும். அதன் செல்வாக்கு அத்தகையது.  இந்தியாவுக்கு மதப்பிரச்சாரத்திற்காக வந்த முன்னோடிகள் முதல் இன்றுள்ள பிரச்சாரகர்கள் வரை இந்துமதம் பற்றி இதே வரிகளைத்தான் சொல்கிறார்கள் என்பதைக் காணலாம்.

பதின்நான்காம் நூற்றாண்டில் ஜான் வைக்கிளிஃப்  [John Wycliffe] பைபிளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தபோது பிரிட்டனில் சீர்திருத்தக் கிறித்தவம் விதையிடப்பட்டது. மதநூல் ஆய்வு மரபினரும் போதகரும் ஆக்ஸ்போர்ட் இறையியல் கல்லூரி ஆசிரியருமான வைக்கிளிஃப் ஒரு புதிய அலையைத் தொடங்கிவைத்தார்.கத்தோலிக்க மதத்தின் மையப்படுத்தப்பட்ட அதிகாரம், மதகுருக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அவர்களின் ஊழல்கள் அனைத்துக்கும் மேலாக அதிலிருந்த இத்தாலிய ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக பிரிட்டனில் மதசிந்தனையாளர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றபடியே வந்தது.

எட்டாம் ஹென்றி

எட்டாம் ஹென்றி

இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி [ Henry VIII  1491 – 1547] தன் மனைவி கேதரைன் [Catherine Aragon  1485 –1536] விவாகரத்து செய்ய விரும்பி போப்பாண்டவரின் அனுமதியைக் கோரினார். கேதரைன் ஹென்றியின் சகோதரர் ஆர்தரின் மனைவியாக இருந்தவர். ஸ்பெயினின் அரசி இசபெல்லாவின் மகள். விவாகரத்துக்கு போப் ஏழாம் கிளெமெண்ட் அனுமதி மறுக்கவே எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மதத்தைத் துறந்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றார். 1529ல் சீர்திருத்த கிறித்தவம் இங்கிலாந்தின் அதிகாரபூர்வ மதமாக அறிவிக்கப்பட்டது. சர்ச் ஆஃப் இங்கிலாந்து தோற்றுவிக்கப்பட்டது.

சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் மதத்தலைமை ஆர்ச் பிஷப் ஆஃப் காண்டர்பரியிடமும் நிர்வாகப் பொறுப்பு பிரிட்டிஷ் அரசரிடமும் இருந்தது. உலகமெங்கும் உள்ள ஆங்கிலிகன் சர்ச்களின் மைய நிர்வாக அமைப்பு இதுவே. இந்தியாவுக்கு வந்த லண்டன்மிஷனின் மூல அமைப்பு இது. இதன் சடங்குகளும் நிர்வாக முறைகளுமெல்லாம் ஆரம்பத்தில் கத்தோலிக்க மதத்தின் அதே பாணியில்தான் இருந்திருக்கின்றன. பின்னர் மெல்லமெல்ல மாற்றமடைந்தன. இன்றுகூட கிறித்தவர்கள் அல்லாதவர்கள் பெரிய வேறுபாட்டைக் கண்டுபிடிக்கமுடியாது

vest 3

பதினாறாம் நூற்றாண்டுவரை இங்கிலாந்தில் மதப்பூசல் உச்சத்தில் இருந்தது. எட்டாம் ஹென்றியின் காலம் வரை சீர்திருத்தக் கிறிஸ்தவர்களை கத்தோலிக்க மதம் வேட்டையாடியது. தொடர்ச்சியாக மதவிசாரணைகளும் கொலைத்தண்டனைகளும் அளிக்கப்பட்டன. எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மதத்தைத் தடைசெய்தார். பாதிரியார்களைச் சிறையிலடைத்தார். தவச்சாலைகளும் துறவியர் மடங்களும் மூடப்பட்டன. கத்தோலிக்கர்கள் மதவிசாரணைக்குள்ளாகி கொல்லப்பட்டனர். ஆனால் பின்னர் ஆட்சிக்கு வந்த முதலாம் மேரி கத்தோலிக்க நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே கத்தோலிக்க மதம் திரும்ப வந்தது. சீர்திருத்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.அவர்களில் முக்கியமான மத அறிஞர்களும் போதகர்களும் இருந்தார்கள்

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் எலிசபெத் சீர்திருத்தக் கிறித்தவ நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே மீண்டும் கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டு நம்பிக்கையாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். தேவாலயங்கள் சிதைக்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான் சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள் தங்கள் வழிபாட்டுமுறைகளை கத்தோலிக்க முறைகளிலிருந்து வேறுபடுத்திக்கொண்டன. முதலாம் ஜேம்ஸின் காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் உறுதியாக வேரூன்றியது. பைபிளின் புதிய ஏற்பாட்டை முறைப்படுத்தியவர் அவரே. அவரால் அங்கீகரிக்கப்பட்ட பைபிள்தான் கிங் ஜேம்ஸ் பைபிள் என்றபேரில் உலகமெங்கும் புகழ்பெற்றுள்ளது. பெரும்பாலான தங்கும் விடுதிகளில் இது வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

Tombeau_@

லண்டனின் பெரும் தேவாலயங்கள் கத்தோலிக்கர் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டவை. அவை சீர்திருத்தக் கிறித்தவத்தின் எழுச்சியின்போது கைப்பற்றப்பட்டன. ஏராளமான தேவாலயங்களில் புனிதர்களின் உருவங்கள் சிதைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னர் பலமுறை அவை பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. என் லண்டன் பயணத்தில் இரண்டு தேவாலயங்களைத்தான் குறிப்பாகப் பார்க்கமுடிந்தது. செயிண்ட் பால் கதீட்ரல் குவைக்கோபுர முகடு கொண்டது. கிபி 604 ல் கட்டப்பட்டது. பலமுறை திருப்பிக் கட்டப்பட்டிருக்கும் போலும், புதியதாகவே தோன்றியது.

ஆர்வமூட்டிய தேவாலயம் வெஸ்ட்மினிஸ்டர் அபே. புனித பீட்டருக்கான கத்தோலிக்க தேவாலயம் இது. இன்று சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆல்ட்ரிச் என்னும் மீனவன் இந்த இடத்தில் புனித பீட்டரின் தோற்றத்தைக் கண்டதாகவும் ஆகவே இங்கே வழிபாட்டிடம் ஒன்று உருவாகியதாகவும் கதைகள் சொல்கின்றன.  கிபி 1080ல் இந்த தேவாலயம் இங்கே முதலில் கட்டப்பட்டது. இப்போதிருக்கும் தேவாலயம் கிபி 1245ல் மூன்றாம் ஹென்றியின் ஆணைப்படிக் கட்டப்பட்டது. இது பிரிட்டிஷ் அரசர்களின் அதிகாரபூர்வ சடங்குமையம். இங்கே 16 அரச திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. ஏராளமான அரசர்கள் இங்கே மாபெரும் கல்சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Opactwo_Westminster_w_Londynie

குமரிமாவட்டத்தில் பிறந்தவனாதலால் நான் தொடர்ச்சியாக கிறித்தவ தேவாலயங்களை பார்த்துவருபவன். கன்யாகுமரி முதல் டாமன் வரை அமைந்திருக்கும் தேவாலயங்களில் முக்கியமான அனைத்தையும் பார்த்துவிடும்பொருட்டு ஒரு பயணத்தையும் முன்பு நண்பர்களுடன் மேற்கொண்டதுண்டு. பொதுவாகச் சுற்றுலாவிலும் கலைமரபிலும் ஆர்வமுடைய நண்பர்கள் இந்தியாவின் மாபெரும் தேவாலயங்களை தவறவிட்டுவிடுவதுண்டு. கோவாவின்  பாம் ஜீஸஸ் தேவாலயம் அதன் தொன்மையான வடிவுக்காக முக்கியமானது. டாமனில் சிறியதேவாலயங்களில் கூட அற்புதமான ஆல்தாரைகள் உண்டு.மங்களூரில் புனித அலாய்ஸியஸ் தேவாலயத்தில் பதினேழாம்நூற்றாண்டு இத்தாலியச் சுவரோவியங்கள் உள்ளன. கேரளத்தில் ஏழரைப்பள்ளி என்று சொல்லப்படும் எட்டு தொன்மையான கிறித்தவதேவாலயங்கள் குறிப்பிடத்தக்கவை

தேவாலயங்களில் பழக்கமுள்ளமையால் என் உணர்வுகளைக் குழப்பியது வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம். அது ஒரு தொன்மையான கத்தோலிக்க தேவாலயம் என்று விழிக்கும் உள்ளத்திற்கும் தோன்றியது. ஆனால் சீர்திருத்த கிறித்தவத்திற்குரிய உட்சபை அமைப்பு. மத்திய காலகட்டத்துத் தேவாலயங்களின் அமைப்பு அலையை கீழிருந்து நோக்குவதுபோன்ற கூரைவளையங்களால் ஆனதாக இருக்கும். இரு பெரும்தூண் நிரைகள் சுவர்கள் போல நீண்டு நிற்க அவற்றுக்கு நடுவே மையநீள்சதுர அவை அமைந்திருக்கும். அத்தூண்நிரைகள் இருபக்கமும் வளைந்த கூரைகள் கொண்ட கட்டிட அமைப்பால் தாங்கப்பட்டிருக்கும். நடுவே உள்ள பகுதி மிக உயரத்தில் வளைகூரை கொண்டிருக்கும். நேர் எதிரில் ஆல்தாரை. பெருந்தூண்களில் சிறு உப்பரிகைகள்.  பின்பக்கம் மிகப்பெரிய ஆர்கன். இதுதான் கத்தோலிக்க தேவாலயத்தின் மாறா வடிவம்.

Replica_of_the_Stone_of_Scone,_Scone_Palace,_Scotland_(8924541883)

Replica_of_the_Stone_of_Scone,_Scone_Palace,_Scotland_(8924541883)

நடுக்காலத்தைய கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்துமே பொன்மின்னும் அலங்காரங்களுடன் பரோக் பாணியில் அமைந்தவை. கண்கூசச்செய்யும் பொன்னலங்காரம் கொண்டது மையச்சபைமேடை. அங்கே அரசச்சடங்குகள் செய்யப்படும்போது அரசர் அமரும் அரியணை மேற்குவாயில் அருகே இருந்தது.  இதிலுள்ள நல்லூழின்கல் [  Stone of Scone] தொன்மையான ஒன்று. இதுதான் உண்மையான அரியணை. தொல்குடிகளின் தலைவர்கள் அமரும் கல்லரியணையேதான். அந்தக்கல் மரத்தாலான நாற்காலிமேல் போடப்பட்டு பிரிட்டிஷ் அரசர்களின் அரியணையாகிறது. அரசதிகாரம் தொல்குடி அதிகாரத்தின் நீட்சி என்பதற்கான சான்று அக்கல். ஸ்காட்லாந்தில் ஸ்கோன் என்னும் ஊரிலிருந்து அந்தக்கல் கொண்டுவரப்பட்டதனால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

ஆலயத்தில் வந்தமர்ந்து வழிபட்டவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள், கத்தோலிக்க வழக்கப்படி வழிபடுகிறார்கள் என்று தோன்றியது. அப்போது ஒன்று தோன்றியது, சீர்திருத்தக் கிறித்தவம் தன்னை பெருமளவுக்கு மாற்றிக்கொண்டு உருவவழிபாடு, மரபான ஆராதனைமுறைகள் அனைத்தையும் துறந்துவிட்டிருந்தாலும் கூட அதற்குள் கத்தோலிக்கம் ஏதோ ஒருவடிவில் இருந்துகொண்டேதான் இருக்கும் என்று. குமரிமாவட்டத்தில் சி.எஸ்.ஐ சபைகளுக்குள் இருந்துதான் புதிய சபைகள் உருவாகின்றன. அவையனைத்துமே கத்தோலிக்க மதத்தின் ஏதேனும் ஒரு அம்சத்தை எடுத்து வளர்த்துக்கொண்டவையாகவும் தெரிகின்றன. பிரிட்டிஷ் அரியணைக்குள் தொன்மையான பழங்குடிப் பீடம் அமைந்திருப்பதைப்போல.

SanktEdvardsstol_westminster

அரியணை

லண்டனின் நடுப்பகுதியில், பாராளுமன்றத்திற்கு அருகில், பல்லாயிரம் பயணிகள் ஒவ்வொருநாளும் வந்துசெல்வதாக இருந்தாலும்கூட வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயம் சற்றே பாழடைந்த தன்மையை காட்டியது. பல இடங்களில் புழுதி படிந்திருக்கக் கண்டேன். 1760 வரை பெரும்பாலான அரசகுடியினர் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டனர்.  மன்னர்களின் கல்லறைகள் ஒவ்வொன்றும் சிறிய கல்வீடுகள் என்றே தோன்றின. அவற்றுக்குள் அவர்களின் சடலம் வைக்கப்பட்டு வெளியே அவர்களின் உடல்தோற்றம் சிலையாகப் பொறிக்கப்பட்டிருந்தது. லண்டன் மியூசியத்தில் கண்ட எகிப்திய மம்மிகளின் கல்சவப்பெட்டிகள் நினைவுக்கு வந்தன.

சவப்பெட்டிக்குமேல் சிலையாக அரசத் தோற்றத்துடன் படுத்திருப்பது விந்தையானதாகத் தோன்றியது.  மூன்றாம் ஹென்றியின் முகத்தைப் பார்த்தபோது சாவை அவர் இன்னமும் கூடபுரிந்துகொள்ளவில்லை என்றும் அத்திகைப்பு நிரந்தரமாக அவர் முகத்தில் இருப்பதாகவும் ஒரு உளமயக்கு. ஆறாம் ஹென்றி, நாலாம் எட்வர்ட்  என அந்தப்பெட்டிகளைப் பார்த்துக்கொண்டே  சென்றோம். அத்தகவல்களால் மூளை எங்கும் சொடுக்கப்படவில்லை. ஆனால் மீளமீள பேரரசர்கள் அஞ்சும் கொடிய எதிரி காலம்தானோ என்று தோன்றியது.  என்ஐ  முன் நில்லன்மின் தெவ்விர்பலர்,என்ஐ முன் நின்று கல் நின்றவர். முன்னின்றவர்களை எல்லாம் கல்நின்றவராக்கும் அந்த மாபெரும் எதிரியை அஞ்சித்தான் எவரென்றே அறியாத தொல்குடி அரசன் தனக்கென பெருங்கற்களை நாட்டிக்கொண்டான். எத்தனை நடுகற்கள், பள்ளிப்படைகள், தூபிகள், ஆலயங்கள். பிடிவாதமாக வந்து புழுதியாக மேலே படிந்துகொண்டிருக்கிறது காலம்.

சாஸர்

சாஸர்

இந்தியாவில் இப்போது இறந்தவர்களை தேவாலயத்திற்குள் புதைப்பதில்லை. ஆனால் கோவாவின் தொன்மையான தேவாலயங்களில் ஏராளமான திருத்தந்தையர் ஆலயங்களுக்குள் அடக்கம்செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். அவர்களின் பெயர்கள் செதுக்கப்பட்ட கற்களாலானது தரை. அதன்மேல் நடந்துதான் நாம் தேவாலயத்திற்குள் செல்லவே முடியும். பழைய அரசர்கள் ஆலயத்திருப்பணிக்குப் பின் குப்புற விழுந்து வணங்கும் வடிவில் தங்ககள் சிலைகளை ஆலயமுகப்பு வாயிலின் தரையில் செதுக்குவதுண்டு. தங்களை பிறர் மிதித்து இறைவழிபாட்டுக்குச் செல்லும்போது பாவங்கள் கழுவப்படும் என்பது தொல்நம்பிக்கை.

மத்தியகாலகட்டத்தில் முக்கியமானவர்களை தேவாலயங்களுக்குள் அடக்கம் செய்வது பிரபலமாக இருந்திருக்கிறது. வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அரசர்களல்லாத பிரபலங்களில் ஒருவர் சாஸர் [Geoffrey Chaucer 1343 –1400] அவருடைய சமாதி இருக்குமிடம் கவிஞனின் மூலை [Poets’ Corner] என்று சொல்லப்படுகிறது. காண்டர்பரி கதைகள் என்னும்  அவருடைய நூல் ஆங்கில இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்பு. ஆங்கிலம் லத்தீன், கிரேக்க மொழிகளின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு தனக்கென இலக்கிய மரபொன்றை உருவாக்கிக்கொண்ட தொடக்கம் சாஸர் வழியாகவே என்று சொல்லப்படுவதுண்டு. அன்று ஆங்கிலம் எளியமக்களின் பேச்சுமொழி. அதில் சாஸர் தன் கதைகளை எழுதினார். காண்டர்பரி தேவாலயத்திற்கு புனிதபயணம் செல்பவர்கள் பேசிக்கொண்ட கதைகள் என்னும் வடிவில் உள்ளது இந்நூல்.

alte

உருவங்கள் அகற்றப்பட்ட ஆல்தாரை

ஆங்கில இலக்கியத்தைக் கல்லூரியில் படிப்பவர்களுக்கு இந்நூல் பாடமாக  அமைவது ஒரு கொடுமை. ஆங்கில இலக்கியத்தின் தோற்றத்திற்கு வழிகோலிய ஆக்கம் என்பதும், கத்தோலிக்க மதத்திற்குள் எளியமக்களின் வினாக்களும் ஐயங்களும் எழுவதை சாட்சியப்படுத்தும் நூல் என்பதும் எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு இது ஒரு தட்டையான எளிமையான கதைத்தொகுதி என்பதும் உண்மை. இலக்கியவாசகர்களுக்கு இன்று இதில் வாசிக்க ஏதுமில்லை. நான்காண்டுகளுக்கு முன் சைதன்யா சாஸரை ஏன் வாசிக்கவேண்டும் என்று சீற்றத்துடன் கேட்க அவருடைய வரலாற்று இடத்தை நான் விளக்கியதை நினைவுறுகிறேன். எனக்கு அதே விளக்கத்தை என் ஆசிரியர் அளித்தார்.

 

கவிஞனின் மூலை ஒரு சிறிய சிற்பமேடை. சற்றே பழுப்பேறிய பளிங்காலான சாஸரின் சிற்பம் நின்றிருக்கிறது. காவியதேவதை அவருக்காக இரங்கி அமர்ந்திருக்கும் சிற்பத்தை அங்கே கண்டேன். கவிஞர்களுக்கென்று ஓர் இடம் இருப்பது மகிழ்ச்சியூட்டியது. 1556ல் சாஸர் மறைந்து பதினாறாண்டுகளுக்குப்பின் வழக்கறிஞரான நிகோலஸ் பிரிகாம் [Nicholas Brigham] என்பவரால் இந்த மேடை கட்டப்பட்டது. சாஸரின் எலும்புகள் இதற்குள் வைக்கப்பட்டன. 1699ல் எட்வர்ட் ஸ்பென்ஸரின் உடல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அங்கே அடக்கம் செய்யப்படுவதோ அவர்களின் நினைவுநிகழ்வுகள் அங்கே கூடுவதோ வழக்கமாக ஆகியிருக்கிறது.

(c) Newstead Abbey; Supplied by The Public Catalogue Foundation

ஆனால் இங்கே இடம் மறுக்கப்படுவது ஒரு சமூக ஒறுப்பாகவும் செயல்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற கவிஞராக இருந்தாலும் 1824 ல் மறைந்த லார்ட் பைரன் அவருடைய சர்ச்சைக்குள்ளான வாழ்வொழுக்கம் காரணமாக இங்கே இடம் மறுக்கப்பட்டு 1969 ல்தான் இங்கே நினைவகம் அமைக்கப்பட்டார். 1616,ல் மறைந்த ஷேக்ஸ்பியருக்கும் இடமளிக்கப்படவில்லை. வில்லியம் கெண்ட் என்னும் சிற்பி அமைத்த நினைவுச்சின்னம் அவருக்கு இங்கே   1740ல் தான் அமைக்கப்பட்டது. சார்ல்ஸ் டார்வின், ஐசக் நியூட்டன் ஆகியோரும் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்குள்தான் புதைக்கப்பட்டனர். கடைசியாக ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்.

நான் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்குள் முக்கியமாகப் பார்த்தது கவிஞர்களின் நினைவுச்சின்னங்களைத்தான்.இப்பகுதி இன்று ஒரு மாபெரும் இடுகாடு. சார்ல்ஸ் டிக்கன்ஸ், ராபர்ட் பிரௌனிங், ருட்யார்ட் கிப்ளிங், ஜான் டிரைடன், பென் ஜான்சன், தாமஸ் ஹார்டி, என எழுத்தாளர்கள் கவிஞர்களின் பெயர்களை தரைமுழுக்க வாசிக்கலாம்.

பைரன் எனக்கு பிடித்தமான கவிஞர். என் படைப்புகளில் பெயர் சொல்லப்பட்டும், உருமாற்றப்பட்ட வடிவில் பெயரில்லாமலும் அவருடைய கவிதைவரிகள் வருவதுண்டு. அவருடைய நினைவுச்சின்னத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது பெரும் மன எழுச்சியை உணர்ந்தேன். பைரன் பிரபு [George Gordon Byron, 6th Baron Byron  1788 –1824] பிரிட்டிஷ் கற்பனாவாத கவிஞர்களில் முதன்மையானவர் [வேர்ட்ஸ்வெர்த் முதன்மையானவர் என்று சொல்லும் ஒரு மரபுண்டு. பைரன் கவிதைகளிலுள்ள தரிசனமுழுமையை வேர்ட்ஸ்வெர்த் அடையவில்லை என்று தோன்றுகிறது] பைரனின் தந்தை காப்டன் ஜான் பைரன் கிறுக்கு ஜாக் என்று பெயர் பெற்றவர். கவிஞர் பைரன்  அவர் காலகட்டத்தவராலும் மனைவியாலும் முழுக்கிறுக்கு என்றே கருதப்படார்

கவிஞர் மூலை

கவிஞர் மூலை

பைரன் அக்கால பிரபுக்களுக்குரிய வாழ்க்கையையும் மிஞ்சிய ஆர்ப்பாட்டமான வாழ்க்கைமுறை கொண்டவர்.   ஆணவம், காமம், கட்டற்றசினம் ஆகியவற்றாலான ஆளுமை அவர். சூதாட்டத்தில் பெரும்பணத்தை இழந்து கடனாளியானார். பல பெண்களை வென்று துய்த்து துறந்தார். தன் சகோதரி முறையுடைய ஒரு பெண்ணிடமே அவருக்குத் தொடர்பிருந்ததாகச் சொல்லப்பட்டது. மனைவியை உச்சகட்ட கொடுமைக்குள்ளாக்கி அவரால் துறக்கப்பட்டார். கடைசிக்காலத்தில் துருக்கியரால் கைப்பற்றப்பட்டிருந்த கிரீஸை வெல்லும்பொருட்டு படைகொண்டு சென்று அங்கே நோயுற்று இறந்தார்.

ஆங்கில வகுப்புகளில் பைரனைப்பற்றி பேசத்தொடங்குகையில் இக்கதைகளைத்தான் ஆசிரியர்கள் ஆர்வமாகச் சொல்வார்கள். வகுப்பில் ஒரு பெரிய கவனத்தை இது உருவாக்கும். அதன்பின்னரே அவர்கள் கவிதைகளுக்குள் செல்வார்கள். பைரனின் She Walks in Beauty என்ற அழகிய கவிதை ஒருகாலத்தில் பெரும்பாலான பாடநூல்களில் இடம்பெற்றிருக்கும். அக்கவிதையினூடாக பைரனின் உணர்ச்சிகரமான உலகுக்குள் நுழைய முடியும். பைரன் ஒரு மானுடவெறுப்பாளர் என்று சொல்லமுடியும், மானுடனை கடந்த சிலவற்றின்பொருட்டு மானுடனை வெறுத்தவர் என்று மேலும் குறிப்பாக.

பைரன், ஷேக்ஸ்பியர் நினைவிடங்களில் நின்றிருந்தது என் வாழ்க்கையின் ஆழ்ந்த அனுபவங்களில் ஒன்று. நினைவுகள் தொட்டுத்தொட்டுச் சென்றன. இதேபோல இங்கே கவிஞர்களுக்கு நினைவகங்கள் உண்டா? நம்மாழ்வாரையும் ஆண்டாளையும் கவிஞர்கள் என்று சொல்லலாம், அவர்களுக்கு ஆலயங்கள் உண்டு. ஆழ்வார்களும் சைவக்குரவர்களும் மதத்தின் ஒருபகுதியாக படிமங்களாகியிருக்கின்றனர். கம்பனுக்கு சேக்கிழாருக்கோ அருணகிரிநாதருக்கோ இங்கே பழைய நினைவிடங்கள் இல்லை. இருப்பவை நவீன ஜனநாயக யுகத்தில் உருவாக்கப்பட்டவை. கவிஞனை கவிஞனாகவே ஏற்பதில் மரபுக்கு பெருந்தயக்கம் உள்ளது.

 

 

இஸ்லாமிய பெருங்கவிஞர் உமறுப்புலவரை எண்ணிக்கொண்டேன். தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்த உமறுப்புலவர் மார்க்க அறிஞர் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் இஸ்லாமியக் கல்வியும் எட்டயபுரம் கடிகைமுத்துப் புலவரிடம் தமிழும் கற்றார். நபிகளின் வாழ்க்கையை சீறாப்புராணம் என்னும் காவியமாக இயற்றினார். 1703 ல் எட்டையபுரத்திலேயே மறைந்த அவருக்கு பிச்சையாக் கோனார் என்ற தமிழ் ஆர்வலர் 1912ல்தான்  எட்டையபுரம் இஸ்லாமிய இடுகாட்டில் ஒரு சமாதியை உருவாக்கினார். அது காலப்போக்கில் ஒரு தர்காவாக ஆகியது. 2006ல் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இன்று மக்கள் அங்கே சென்று வழிபட்டு மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்கிறார்கள். கவிஞன் உருகி உருமாறி மதத்திற்குள் நுழையாமல் இடம் கிடைப்பதில்லை.  காவிய ஆசிரியனின் தாயத்து!

வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம்தான் நான் நுழைந்த தொன்மையான ஐரோப்பிய தேவாலயங்களில் முதலாவது. அதன்பின் மீண்டும் மீண்டும் பேராலயங்களைப் பார்த்துக்கொண்டே சென்றிருக்கிறேன். எல்லா ஆலயங்களின் காட்சிகளும் என் அகத்தில் உருகியிணைந்து ஒன்றென்று ஆகிவிட்டிருக்கின்றன. வெஸ்ட்மினிஸ்டர் ஆலயத்தை எண்ணிப் பார்க்கையில் கத்தோலிக்க மதத்தில் இருந்து சீர்திருத்தக் கிறிஸ்தவம் நோக்கி ஐரோப்பா திரும்பியதன் கீல் அது என்று தோன்றியது. உரசல்களும் துருவும் கொண்ட பழைமையான கதவொன்றின் கீல்.

 

 

https://www.jeyamohan.in/112756#.W6vigRbTVR4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.