"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம் பட மூலாதாரம்,Star Catcher கட்டுரை தகவல் ஜோனாதன் ஓ'கல்லகன் 13 டிசம்பர் 2025 சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக்கத்தில் உள்ள எமிட்டரில் இருந்து பாய்ந்து, மறுபக்கத்தில் உள்ள திரையில் சேகரிக்கப்பட்டன. சூரிய ஒளியைச் சேகரித்து, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய லென்ஸ்கள் (அவை ஒவ்வொன்றும் சுமார் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் கொண்டது) மூலம் அவை அனுப்பப்பட்டது. "லென்ஸ்களைத் திறக்க ஏணி மீது ஏறி இறங்க வேண்டியிருந்தது" என்று கூறுகிறார் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டார் கேச்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ரஷ். இந்தச் சோதனையின் நோக்கம் என்னவென்றால், விண்வெளியில் சூரிய ஒளியை ஒரு செயற்கைக்கோளிலிருந்து மற்றொன்றுக்கு அனுப்பி ஆற்றல் தர முடியுமா என்பதைச் சோதிப்பது தான். "ஜாகுவார்ஸ் அணியில் சிலரை எங்களுக்குத் தெரியும். இது ஒரு சுவாரஸ்யமான முயற்சி என்று நினைத்தோம்," என்று கூறும் ரஷ், "நாங்கள் சுமார் 105 மீட்டர் [345 அடி] தூரத்திற்கு 100 வாட் கதிர்வீச்சை அனுப்பினோம்" என்கிறார். ஸ்டார் கேச்சர் (Star Catcher) நிறுவனம் உலகம் முழுவதும் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பல நிறுவனங்களில் ஒன்றாகும். பல ஆண்டு காலமாக அறிவியலுக்கும் புனைவுக்கும் இடையே சிக்கித் தவித்த இந்த யோசனை, பூமிக்கு மிகுந்த சுத்தமான ஆற்றலை வழங்கும் நோக்கத்துடன், விண்வெளியில் சூரிய ஒளியை சேகரித்து அதை பூமிக்கோ அல்லது பிற செயற்கைக்கோள்களுக்கோ அனுப்புவதை குறிக்கிறது. பூமியில் உள்ள சோலார் பேனல்கள் வளிமண்டலம், வானிலை, பகல்-இரவு சுழற்சி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சூரிய ஒளி, பேனல்களை எட்டுவதற்கு முன்பே குறிப்பிடத்தக்க அளவு கதிர்வீச்சை வடிகட்டிவிடுகின்றன. ஆனால் விண்வெளியில் இரவு-பகல் சுழற்சி இல்லாமல் கிட்டத்தட்ட 24 மணி நேரமும், அதிக திறனுடன் சூரிய ஒளியைச் சேகரிக்க முடியும். "நான் இதைப் பற்றி அப்பாவிடம் சொன்னபோது, அவர் என்னை ஒரு முட்டாளைப் போல பார்த்தார்," என்கிறார் பிரிட்டன் நிறுவனமான 'ஸ்பேஸ் சோலார்' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான டேவிட் ஹோம்ஃப்ரே. ஆனால் இப்போது பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன. பட மூலாதாரம்,Star Catcher படக்குறிப்பு,நீண்ட தூரங்களுக்கு வயர்லெஸ் முறையில் ஆற்றலைக் கதிர்வீச்சு செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மேம்பாடுகள் இப்போது விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை மிகவும் யதார்த்தமான வாய்ப்பாக மாற்றத் தொடங்கியுள்ளன "விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றலே எரிசக்தி மாற்றத்தை செயல்படுத்தும்," என்று ஹோம்ஃப்ரே கூறுகிறார். ஐரோப்பாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேவைகளில் 80% வரை இந்த முறையால் பூர்த்தி செய்ய முடியும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். விண்வெளியில் கிடைக்கும் சூரிய சக்தியின் அடர்த்தி (power density) பூமியில் உள்ள சோலார் பேனல்களை விட 10 மடங்குக்கும் அதிகமாக இருப்பது தான் இதற்கான முக்கிய காரணம். அதாவது, அங்கு சூரியனின் ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் மிக அதிகம். ஆனால் இதை நிஜத்தில் செயல்படுத்துவது எளிதான காரியம் அல்ல. இதற்கு பிரம்மாண்டமான செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை (enormous satellite constellations) விண்ணில் அமைக்க வேண்டும். இது சர்ச்சைக்குரியதாகவும், பாதுகாப்பாக இயக்குவதற்கு கடினமாகவும் இருக்கும். அதோடு, இவற்றை உருவாக்க ஏராளமான ராக்கெட் ஏவுதல்கள் தேவைப்படும். மேலும், இதை விட மலிவாகவும் விரைவாகவும் பூமியில் செயல்படுத்தக்கூடிய பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகள் உள்ளன. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டுமெனில், புதைபடிம எரிபொருள்களை உடனடியாக மாற்றியாக வேண்டும் என்பதால் வேகமாக செயல்பட வேண்டியது மிக முக்கியம். இருந்தாலும், விண்வெளி சூரிய மின்நிலையங்களை உருவாக்குவதால் கிடைக்கும் பலன்கள் எல்லா குறைபாடுகளையும் மிஞ்சிவிடும் என்று சிலர் நம்புகிறார்கள். உதாரணமாக, அமெரிக்க ராணுவம் இந்தத் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. உலகில் எந்த இடத்துக்கும் தேவைப்படும்போது உடனடியாக ஆற்றலை அனுப்ப முடியும் என்பது நவீன போர்க்களங்களில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றைத் தீர்க்கும். அதேபோல், இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளுக்கோ, மின்சாரம் இல்லாத கிராமப்புறங்களுக்கோ இது அதிக பயனுள்ளதாக அமையும். விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல், பூமியில் உள்ள சூரிய ஆற்றல் அமைப்புகளைப் போலவே செயல்படுகிறது. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் பேனல்கள் மூலம் அது இயங்குகிறது. ஆனால் ஒரு பெரிய நன்மையையும் அது கொண்டுள்ளது. ஏனென்றால் அது வளிமண்டலத்திற்கு மேலே இருக்கும். நமது கிரகத்தை சூழ்ந்துள்ள வாயு மற்றும் மேகங்கள் மூலம் வடிகட்டப்படாத சூரிய ஒளியை நேரடியாக சேகரிக்க முடியும் என்பது தான் இதன் பொருள். வளிமண்டலம் நமது கிரகத்தை அடையும் ஆற்றலில் சுமார் 30% பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் அது பூமியின் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே கால் பகுதியை உறிஞ்சுகிறது. விண்வெளி அடிப்படையிலான சூரிய பேனல்கள் இந்த இழப்புகளைத் தவிர்க்கலாம், மேலும் அவற்றை சரியான சுற்றுப்பாதையில் வைத்தால் கிட்டத்தட்ட தொடர்ச்சியான சூரிய ஒளியை பெற முடியும். சேகரிக்கப்பட்ட மின்சாரம் மைக்ரோவேவ் அல்லது லேசர் கதிர்களாக பூமிக்கு அனுப்பப்பட்டு, பூமியில் உள்ள பெரிய ஆன்டெனாக்களால் (rectennas) பிடிக்கப்பட்டு மீண்டும் மின்சாரமாக மாற்றப்படும். ஆனால் பொருளாதார ரீதியாக இது பயனுள்ளதாக இருக்க, ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஜிகாவாட் அளவிலான மிகப் பெரிய அளவில் ஆற்றலை உற்பத்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்காக விண்வெளியில் மிகப்பெரிய சூரிய பலகை வரிசைகள் ஒன்றுசேர்க்கப்பட வேண்டிய தேவை எழலாம். அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ், 1941 ஆம் ஆண்டு 'ரீசன்' (Reason) என்ற சிறுகதையில், விண்வெளியில் இருந்து சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் யோசனையைப் பற்றி முதன்முதலில் எழுதினார் . பின்னர் 1970-களில், நாசா நடத்திய ஆய்வுகள் இந்த யோசனை சுவாரஸ்யமானது என்றாலும், அதை செயல்படுத்த பெரிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தடைகள் உள்ளன என்று கூறியது. நாசாவின் முன்னாள் இயற்பியலாளரும் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை ஆதரிப்பவருமான ஜான் மான்கின்ஸ், 1990களில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வை வழிநடத்தினார். சூரிய மின்கலங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களால், இந்த யோசனை நடைமுறைக்கு இன்னும் சாத்தியமானதாக மாறி வருவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. "செலவு மதிப்பீடு ஒரு டிரில்லியன் டாலரில் (1 trillion USD) இருந்து 100 பில்லியன் டாலராக (100 billion USD) மாறியது என்று மான்கின்ஸ் கூறுகிறார். "ஆனால் அந்தக் காலகட்டத்தில் இதில் ஆர்வம் கொண்டவர்கள் யாருமே இல்லை." "முப்பது வருடங்களுக்கு முன் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் என்பது மிகவும் குழப்பமான விஷயமாக இருந்தது," என்று கூறும் மான்கின்ஸ், "மக்கள் இரு துருவங்களாகப் பிரிந்திருந்தனர்.ஒரு பகுதியினர் இதை உச்சகட்ட ஆர்வத்துடன் ஆதரித்தனர், மற்றொரு பகுதியினர் இதை முழுமையாக வெறுத்தனர்" என்கிறார். கடந்த பத்தாண்டுகளில் நிலைமை மாறிவிட்டதாக, பிரிட்டனில் உள்ள சேட்டிலைட் அப்ளிகேஷன்ஸ் கேடபுல்ட் என்ற ஆராய்ச்சி அமைப்பின் மைக் கர்டிஸ்-ரௌஸ் கூறுகிறார். "இந்த துறையில் ஆர்வம் பெரிதும் உயர்ந்துள்ளது," என்கிறார் அவர். விண்வெளியில் பொருட்களை ஏவுவதற்கான செலவு குறைந்து வருவதாலும், டெக்சாஸில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் போன்ற புதிய பெரிய ராக்கெட்டுகளின் வருகையாலும் இதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உற்பத்தி, ரோபாட்டிக்ஸ் மற்றும் பவர்-பீமிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியைப் பெறுவது தொடர்பான வாய்ப்பை நம்முன் கொண்டு வந்துள்ளன. "நாம் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டிவிட்டோம் என்று சொல்லலாம்," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். "அடுத்த இருபது ஆண்டுகளுக்குள், சுற்றுப்பாதையில் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் திறன் உருவாகும் என நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றும் அவர் பகிர்ந்து கொள்கிறார். 2023 ஆம் ஆண்டில், பிரிட்டன் அரசு விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பல நிறுவனங்களுக்கு 4.3 மில்லியன் யூரோ (சுமார் 5.7 மில்லியன் டாலர்) நிதி வழங்கியது. சீனாவில், விஞ்ஞானிகள் ஓமேகா 2.0 எனும் ஒரு முன்மாதிரி விண்வெளி சூரிய மின் செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றனர். இது மைக்ரோவேவ்களைப் பயன்படுத்தி பல்வேறு சூரிய பேனல்களிலிருந்து மின்சாரத்தை கடத்தும் திட்டத்தை நோக்கி செயல்படுகிறது. இதற்காக, விண்வெளியில் 1 கிமீ அகலமான ஆன்டெனாவையும், தலா 100 மீட்டர் அகலமுடைய 600 சூரிய துணை-வரிசைகளையும் ஒன்றுசேர்க்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது பூமியில் நடத்தப்பட்ட சோதனைகளில், மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2,081 வாட், அதாவது ஒரு சமையலறை கெட்டில் (kettle) இயங்க போதுமான அளவு சக்தியை 55 மீட்டர் தூரத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர். பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலாரிஸ் முயற்சி, விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலாரிஸ் (Solaris) திட்டம் , விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றலை மேலும் ஆழமாக ஆராய வேண்டுமா என்பது குறித்து இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை எடுக்க உள்ளது. அமெரிக்காவில், அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவியுடன் பல தொடக்க நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. "இது பலரும் நினைப்பதை விட யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது" என்று மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் விண்வெளி சட்ட நிபுணரான மிச்செல் ஹன்லான் கூறுகிறார். "ஒருமுறை அந்த தொடக்க முதலீட்டை செய்துவிட்டால், அந்த ஆற்றல் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும். ஆகவே, அந்த முதலீட்டை செய்யும் தைரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வை உள்ளதா என்பதுதான் முக்கியம்" என்கிறார் அவர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஏதர்ஃப்ளக்ஸ் (Aetherflux) எனும் தொடக்க நிலை நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் பணிபுரியும் நிறுவனங்களில் ஒன்று. "விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி என்பது இந்த அற்புதமான யோசனை," என்கிறார் நிறுவனர் பைஜு பட். "ஆனால் நாங்கள் கேட்டுக்கொண்ட கேள்வி இதுதான், 2050-க்கு இலக்கு வைக்காமல், அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள் இதைச் செய்ய வேண்டுமானால் எப்படிச் செய்வது?" என்றும் அவர் தெரிவித்தார். ஏதர்ஃப்ளக்ஸ் நிறுவனம், அதிக சக்தி வாய்ந்த அகச்சிவப்பு லேசர்கள் மற்றும் ஃபோட்டோவோல்டாயிக் செல்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைச் சேகரித்து, பின்னர் அதை பூமியில் உள்ள 5–10 மீட்டர் (16–33 அடி) அகலமுடைய சிறிய சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பும். இதனால் அவை நிலத்தில் மிகக் குறைந்த இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும். பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒவ்வொரு லேசரும் அதன் பாதையில் ஒரு விமானமோ, மற்றொரு செயற்கைக்கோளோ அல்லது வேறு பொருளோ பறந்து வந்தால், உடனடியாக அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்படும். இது அவற்றின் சென்சார்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ சேதம் விளைவிக்காது. இந்த லேசர்கள் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வலிமையானவை அல்ல. உதாரணமாக, இவற்றால் ஒரு விமானத்தை இரண்டு துண்டுகளாக உடைக்க முடியாது. ஆனால், அவை போதுமான சக்தி கொண்டவை என்பதால், அவற்றால் மனித உடல்நலத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கர்டிஸ்-ரௌஸ் கூறுகிறார். "ஒரு 'டெத் ஸ்டாரை' உருவாக்குவது நோக்கம் இல்லை," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். தொடர்ந்து பேசிய அவர், "உண்மையில் இந்த லேசரில் ஒரு முட்டையை வேகவைக்கக் கூட நிறைய நேரம் ஆகும். அதனால் பறவைகள், விமானங்கள், சூப்பர்மேன் என எதுவாக இருந்தாலும் அதன் வழியாக செல்ல முடியும்" என்கிறார். ஆற்றல் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயனளிக்கக்கூடும் என்று பட் கூறுகிறார். இதில் ராணுவம் ஆரம்பகட்டப் பயனாளர்களில் ஒருவராக இருக்கலாம். "அமெரிக்க அரசாங்கத்துக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். பட மூலாதாரம்,Alamy படக்குறிப்பு,இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியால் எல்லா நகரங்களுக்கும் மின்சாரம் வழங்க போதுமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்க முடியும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன ஏப்ரல் மாதத்தில், ஏதர்ஃப்ளக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் டாலர் நிதியை திரட்டியதாக அறிவித்தது. 2026ஆம் ஆண்டில், பூமியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்கலங்களுக்கு 1 கிலோவாட் அல்லது 1.3 கிலோவாட் சக்தி கொண்ட லேசர் கற்றையை அனுப்பக்கூடிய ஒரு செயல் விளக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. "சிறந்த சூழ்நிலையில், இரண்டு நூறு வாட் அளவிலான மின்சாரம் கிடைப்பதை காண வாய்ப்பு உண்டு," என்கிறார் பட். பூமியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதன் அகச்சிவப்பு லேசர் பரிமாற்ற அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. பிரிட்டனின் ஸ்பேஸ் சோலார் (Space Solar) நிறுவனம் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது. விண்வெளியில் பெரிய நகரங்களின் அளவில், பிரம்மாண்டமான சூரிய மின் நிலையங்களை அமைத்து, எல்லா நாடுகளுக்கும் போதுமான மின்சாரத்தை வழங்க வேண்டும் என கனவு காண்கிறார்கள். இது மிகப்பெரிய பணியென்றாலும், அது சாத்தியமான ஒன்று என ஹோம்ஃப்ரே நம்புகிறார். "2050க்குள், உலகின் மொத்த மின்சார தேவையின் 20% வரை விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் வழங்கும் என எதிர்பார்க்கலாம். அது முற்றிலும் சாத்தியம் தான் " என்கிறார் அவர். சுமார் 1.2 மில்லியன் யூரோ (1.6 மில்லியன் டாலர்) பிரிட்டன் அரச நிதி பெற்ற ஸ்பேஸ் சோலார், அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு செயல் விளக்கப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஒன்று ரேடியோ அலைகள் மூலம் நிலத்துக்கு சக்தியை கடத்துவதைப் பயிற்சி செய்வது. இன்னொன்று, ரோபோக்களால் விண்வெளியில் பெரிய கட்டமைப்புகளை உருவாகும் திறனை நிரூபிப்பது. இறுதியில், 1.8 கிமீ அகலமுடைய ஒரு பிரம்மாண்ட விண்வெளி கட்டமைப்பை உருவாக்கி, அதை கேசியோபியா (Cassiopeia) என அழைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது பூமியில் இருந்து சுமார் 36,000 கிமீ உயரத்தில் உள்ள ஜியோஸ்டேஷனரி சுற்றுவட்டத்தில் (geostationary orbit) நிலைநிறுத்தப்படும். அதாவது, பூமியின் ஒரே இடத்திற்கு மேலேயே எப்போதும் நிலைத்து, கிட்டத்தட்ட தொடர்ச்சியாக சூரிய ஒளியைப் பெறும். இந்த மின்நிலையம், மில்லியன் கணக்கான மேசை அளவிலான சிறு செயற்கைக்கோள்களால் (modular satellites) ஆனது, அவை ஒவ்வொன்றும் சோலார் பேனல்களால் மூடப்பட்டிருக்கும். அதன்பின், சுமார் 100 கோடி சிறிய ஆன்டெனாக்கள் மூலம் சேகரித்த ஆற்றலை ரேடியோ அலைகளாக பூமிக்கு அனுப்பும். பூமியில் ஒரு ஹீத்ரோ (Heathrow) விமான நிலைய அளவிலான ரிசீவிங் ஸ்டேஷன் போதும். சுமார் ஒரு பில்லியன் ஆன்டெனாக்கள் சேர்ந்து, சேமித்த சக்தியை ஹீத்ரோ விமான நிலையத்தின் பரப்பளவுக்கு இணையான தரை நிலையத்துக்கு அனுப்பும். அங்கு ரேடியோ அலைகள் மின்சாரமாக மாற்றப்படும். "இவற்றில் ஒரு டஜன் அளவு நிலையங்கள் பிரிட்டனில் இருந்தால், நாட்டின் முழு மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். பட மூலாதாரம்,Space Solar படக்குறிப்பு,சுமார் ஒரு பில்லியன் ஆன்டெனாக்கள் சேர்ந்து, சேமித்த சக்தியை ஹீத்ரோ விமான நிலையத்தின் பரப்பளவுக்கு இணையான தரை நிலையத்துக்கு அனுப்பும். அங்கு ரேடியோ அலைகள் மின்சாரமாக மாற்றப்படும். ஒரு கேசியோபியா மின்நிலையம் சுமார் 700 மெகாவாட் மின்சார திறன் கொண்டதாக இருக்கும் என ஹோம்ஃப்ரே கூறுகிறார். இது பிரிட்டனில் அரை மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப் போதுமானது. மேலும், சோமர்செட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் ஹின்க்லி பாய்ன்ட் C அணு மின் நிலையத்தின் மின்சார உற்பத்தியின் நான்கில் ஒரு பங்கை இது வழங்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பேஸ் சோலார், விண்வெளியில் கட்டமைப்புகளை அமைக்கத் தேவையான ரோபோடிக் அமைப்பின் செயல் விளக்க வடிவமைப்பை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. கடந்த ஆண்டு, வட அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்ஃபாஸ்டில் உள்ள ஒரு ஆய்வகத்தில், 360-டிகிரி வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றம் செய்யும் திறனை நிறுவனம் வெற்றிகரமாகக் நிரூபித்தது. அமெரிக்க நிறுவனமான விர்டுஸ் சோலிஸ், விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறது. இந்நிறுவனத்தின் திட்டம், 2,00,000 தேன்கூடு வடிவ செயற்கைக்கோள்களை பல கிலோமீட்டர் நீளமான மிகப்பெரிய விண்மீன் கூட்டங்களாக ஒருங்கிணைப்பது தான். இவற்றால், மால்னியா சுற்றுப்பாதை எனப்படும் விசித்திரமான சுற்றுப்பாதையில் பயணித்து, வட அரைக்கோளத்திற்குச் சக்தியை அனுப்ப நீண்ட நேரம் உயர்ந்த அட்சரேகைகளில் தங்க இயலும். விர்டுஸ் சோலிஸ் தனது செயல் விளக்கப் பயணத்தை 2027ல் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது வெற்றி பெற்றால், பூமியில் மின்சாரச் செலவு மிகுந்த வீழ்ச்சியடையும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிறுவனர் ஜான் பக்னல் கூறுகிறார். "உலகளாவிய சராசரி மின்சார விலை, ஒரு மெகாவாட்-மணிக்கு 75 டாலராக (£55) உள்ளது," என்கிறார் அவர். ஆனால் நிறுவனத்தின் மாதிரி அடிப்படையில், விண்வெளி அடிப்படையிலான மின்சாரம் ஒரு மெகாவாட்-மணிக்கு 0.50 டாலர் (£0.40) ஆக அமையலாம். "அதனால், நம் அனைவருக்கும் ஆண்டுதோறும் எரிசக்திக்காக சுமார் 10 டாலர் (£7) செலவு மட்டுமே ஆகும்," என்கிறார் பக்னல். "அதுவே எங்கள் நோக்கம்." இருப்பினும், சிலர் விண்வெளி சூரிய மின்சாரத்தை குறைந்த செலவில் வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. பெரிய அளவிலான விண்வெளி- சூரிய மின்சக்தி வடிவமைப்புகளின் ஒரு மதிப்பீடு, இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பூமி அடிப்படையிலான மாற்றுகளை விட 12-80 மடங்கு அதிகமாக செலவாகும் என்று கூறுகிறது. விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும். ஃப்ளோரிடாவில் என்எஃப்எல் மைதானத்தில் இந்த சோதனையை நடத்திய ஸ்டார் கேச்சர் நிறுவனம், ஒரு நாள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களுக்கு திருப்பி, விண்வெளியில் அவற்றின் சக்தியை அனுப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது. அவர்களின் கதிர்வீச்சு (beam) அமைப்பு, ஃப்ரெஸ்னல் லென்ஸ் (Fresnel lenses) எனப்படும் ஒரு தொடர் கண்ணாடிகளைப் பயன்படுத்தும். இவை நீண்ட காலமாக லைட் ஹவுஸ்களில் (lighthouses) ஒளியை பிரதிபலிக்கவும், விலக்கவும் (reflect & refract) பயன்படுத்தப்பட்டவை. இந்தக் கண்ணாடிகள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களின் சூரிய பலகைகளில் திருப்பி செலுத்தும். இந்தத் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களுக்கு இயற்கையான சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கும் ஆற்றலைவிட அதிக சக்தியை வழங்கக்கூடும் என்று ரஷ் கூறுகிறார். "சூரிய ஒளி நேராகப் பட்டால் அவற்றுக்கு மின்சாரம் கிடைக்கிறது. சூரியன் மறைந்தால் எந்த ஆற்றலும் கிடைக்காது," என்கிறார் ரஷ். "நாங்கள் அந்தச் செயற்கைக்கோள்கள் இருக்கும் இடத்துக்கே ஒளியை அனுப்புகிறோம். அந்த ஒளியின் தீவிரத்தைக் ஒரு சூரியனிலிருந்து பத்து சூரியன்கள் அளவுக்கு எங்களால் மாற்றிக் காட்ட முடியும்" என்றும் விளக்குகிறார். பட மூலாதாரம்,Star Catcher படக்குறிப்பு,விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும். ஃப்ளோரிடாவில் என்எஃப்எல் மைதானத்தில் இந்த சோதனையை நடத்திய ஸ்டார் கேச்சர் நிறுவனம், ஒரு நாள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களுக்கு திருப்பி, விண்வெளியில் அவற்றின் சக்தியை அனுப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது. அத்தகைய அமைப்பு சந்திரனில் உள்ள ரோவர்களுக்கு ஆற்றலை வழங்கவும் உதவும், அவை இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும் சந்திர இரவுகளில் உயிர்வாழ வேண்டும் என்று ரஷ் கூறுகிறார். ஆனால், விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் குறித்து அனைவரும் நம்பிக்கையுடன் இல்லை. முக்கிய கவலை என்னவென்றால், மிக அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை ஏவுவதும், விண்வெளியில் பாதுகாப்பாக இயக்குவதும் தான். இது இதுவரை யாராலும், இத்தகைய அளவுக்கு, முயற்சிக்கப்படாத ஒன்று. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைத்து இயக்குவது, மேலும் அவை மற்ற செயற்கைக்கோள்களுடன் மோதாமல் பாதுகாப்பது, மிகப்பெரிய சவால் என்று நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளிக் குப்பை நிபுணர் பிரான்செஸ்கா லெடிசியா கூறுகிறார். ஏதேனும் விபத்துகள் நடந்தால், அது இந்த புதிய தொழில்துறையின் வளர்ச்சியை உடனடியாகத் பாதிக்கக்கூடும். "சில சம்பவங்கள் மட்டுமே நடந்தால் கூட அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார். மேலும், இத்தகைய மிகப்பெரிய செயற்கைக்கோள் குழுக்கள் சட்டபூர்வமானதாக கூட இல்லாமல் இருக்கலாம் என ஹான்லன் கூறுகிறார். 1967 ஆம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தத்தின் படி, பூமியின் சுற்றுப்பாதையின் எந்தப் பகுதியையும் எந்த நாடும் உரிமை கோர முடியாது. "ஆனால் ஒரு சதுர மைல் அளவிலான செயற்கைக்கோள் வரிசையைப் பற்றிப் பேசும்போது அது எப்படி அமையும்?" என ஹான்லன் கேள்வி எழுப்புகிறார். "சீனா 4 சதுர மைல் [10 சதுர கி.மீ] செயற்கைக்கோள்களை அமைக்கப் போவதாக அறிவித்தால், அமெரிக்கா கண்டிப்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று நான் நினைக்கிறேன்." விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி உண்மையில் நம்மால் அடையக்கூடியதா என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாசா அறிக்கை, இந்த தொழில்நுட்பம் தற்போது நிலத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விட மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது என்றும், ஏவுதல், உற்பத்தி மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றங்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் கூறியது. "நாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நிச்சயமாக சிறந்த இடத்தில் இருக்கிறோம்," என்று தொழில்நுட்பம், கொள்கை மற்றும் உத்தி சார்ந்த செயல்பாடுகளுக்கான முன்னாள் நாசா இணை நிர்வாகியும், விண்வெளி கொள்கை நிபுணருமான சாரிட்டி வீடன் கூறுகிறார். "ஆனால், இதைச் செய்ய நாம் தயாரா ?" எனக் கேள்வி எழுப்புகிறார். அமெரிக்க லாப நோக்கற்ற நிறுவனமான தி ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷனின் விண்வெளி பொருளாதார வல்லுநரும் தொழில்நுட்ப மூலோபாய வல்லுநருமான கரேன் ஜோன்ஸ், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை உருவாக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் என்றும், "இது கார்பன் இல்லாத ஆற்றல்," என்றும் கூறுகிறார். "இது நிஜமாகட்டும் என்று நம்புவோம். ஏனெனில், தற்போதைய சூழலில் விண்வெளியில் பரஸ்பர நம்பிக்கை குறைவாக உள்ளது." அத்தகைய முயற்சி , ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) கட்டுமானத்தை சாத்தியமாக்கிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கக்கூடும். "பூமத்திய ரேகைக்கு மேல் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் நீங்கள் ஒரே ஒரு முதலீட்டைச் செய்யலாம்," என்கிறார் மான்கின்ஸ். "தேவையைப் பொறுத்து, இது போலந்து, லண்டன், ரியாத், கேப் டவுனுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மேலும் ஒரு நாளில் பல முறை இலக்கை மாற்றவும் முடியும்." பெரிய புயல் அல்லது பேரழிவுக்குப் பிறகு மின்சாரம் இழந்த நாடுகள், மின்கட்டமைப்பு சரி செய்யப்படும் வரை தற்காலிக உயிர்நாடி போல இதன் பயன்களை பெறலாம். "மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு குறைந்த அளவு மின்சாரத்தையும் நீங்கள் வழங்க முடியும்," என்கிறார் ஜோன்ஸ். ஸ்டார் கேச்சர் தனது அடுத்த பெரிய சோதனையை விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த முறை அமெரிக்க கால்பந்து மைதானத்தில் அல்ல. புளோரிடாவின் கேப் கனாவெரலில் நாசாவின் விண்வெளி ஷட்டிலின் பழைய ஓடுபாதையில் திட்டமிட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றத்தில் ஒரு புதிய சாதனை உருவாகும். "அந்த ஓடுபாதையில் பல கிலோமீட்டர் தூரம் மின்சாரத்தை வழங்க போகிறோம்," என்கிறார் ரஷ். ஆனால் இவ்வளவு வியப்பை உண்டாக்கும் இந்த தொழில்நுட்பம் ஒருநாள் உண்மையில் வெற்றி பெறும் அளவுக்கு வளருமா என்பது இன்னும் பெரிய கேள்வியாகத் தான் எஞ்சியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly32x5ee4eo
By
ஏராளன் · 2 hours ago 2 hr