Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகிலன்... மரணம் வாழ்வின் முடிவல்ல

Featured Replies

image1.jpeg
 
மே 10, 1989 காலை 5:45 மணி.
யாழ்ப்பாணம்
 
இந்திய இராணுவமும் அதனோடிணைந்த ஒட்டுக் குழுக்களும் யாழ்ப்பாண மண்ணை ரத்தத்தால் தோய்த்தெடுத்துக் கொண்டிருந்த கொடிய காலங்களின் இன்னுமொரு நாள் புலர்ந்து கொண்டிருந்தது. அரங்கேற இருக்கும் இன்னுமொரு அநியாய படுகொலையின் கொடூரத்தை அறியாமலே யாழ்ப்பாணத்தின் கீழ் வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. 
 
இருள் முற்றாக விலகாத அந்த அதிகாலை வேளையில், கோயில் வீதியில் அமைந்திருந்த அகிலனின் வீட்டின் முன்னால் இந்திய இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுவான ஈபிக்காரன்களும் வந்திறங்குகிறார்கள்.
 
கோயில் வீதியில் இருந்த மேல் மாடி வீட்டில், மேல் வீட்டில் அகிலன் குடும்பமும், கீழ் வீட்டில் பரி யோவான் கல்லூரியின் கிரிக்கெட் அணித் தலைவரான சஞ்சீவனின் குடும்பமும் குடியிருந்தார்கள். சஞ்சீவனும் அகிலனும் 1988 மற்றும் 1989 என்று இரு ஆண்டுகள் தொடர்ந்து பரி யோவான் கிரிக்கெட் அணியை தலைமை தாங்கிய உற்ற நண்பர்கள்.
 
கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒட்டுக் குழுவினரை சஞ்சீவனின் அம்மா வழி மறிக்கிறார். “திருச்செல்வத்தின்ட வீடு இது தானோ” யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த முரசொலி நாளிதழின் பிரதான ஆசிரியரான, அகிலனின் அப்பா, திருச்செல்வத்தைத் தான் ஈபிக்காரன்கள் விசாரிக்கிறார்கள். 
 
“ஓம்.. மேல் வீடு தான்.. நீங்க நில்லுங்கோ.. நான் கூப்பிடுறன்” என்று சஞ்சீவனின் அம்மா கேட்டை திறக்க விடாமல் பிடித்துக் கொண்டிருக்கவும், அகிலனின் அம்மா balconyக்கு வரவும் சரியாக இருக்கிறது.
 
“இப்ப தான் வந்தவர்.. பல்லு மினுக்கிக் கொண்டு நிற்கிறார்.. கூப்பிடுறன்” கேட்டடியில் நடந்த உரையாடலைக் கேட்டு விட்ட, அகிலனின் அம்மா, உள்ளே சென்று ஈபிக்காரன்கள் தேடி வந்த அகிலனின் அப்பாவை அழைத்து வருகிறார். அப்போது தான் பத்திரிகை அலுவலகத்தில் கடமைகளை முடித்து விட்டு திரும்பியிருந்த திருச்செல்வத்தார் வாயில் Brush ஓடே Balconyக்கு வருகிறார்.
 
“உங்களோட ஒருக்கா கதைக்கோணும்” ஈபிக்காரன்கள் திருச்செல்வத்தை கூப்பிடுகிறார்கள் “ ஒருக்கா கீழ வாங்கோ”. யாழ்ப்பாணத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான திருச்செல்வத்திற்கு நிலைமையின் பாரதூரம் புரிய ஆரம்பிக்கிறது.
 
“ஓமோம்.. பல்லை மினுக்கிட்டு.. முகம் கழுவிட்டு.. கீழ வாறன்” என்று விட்டு உள்ளே சென்ற திருச்செல்வம், வீட்டின் மறுபுறத்தால் பாய்ந்து இறங்கி, அயல் வளவுகளினூடாக சத்தம் போடாமல் தப்பி ஓடி விடுகிறார்.
 
திருச்செல்வத்தை காணாத ஈபிக்காரன்கள் கேட்டைத் தள்ளிக் கொண்டு மேல் மாடிக்கு ஓடுகிறார்கள். அன்று காலை கல்லூரியில் நடக்கவிருந்த monthly examற்காக இரவிரவாக படித்து விட்டு நித்திரைக்கு சென்றிருந்த அகிலன் ஆரவாரம் கேட்டு அப்போது தான் நித்திரையால் எழும்புகிறார். 
 
அன்று காலை ஆறு மணிக்கு அகிலனிற்கு Shamrock tutoryயில் Botany வகுப்பு வேறு இருந்தது. வழமையாக tutionற்கு போக வெள்ளனவே எழும்பும் அகிலன் அன்று மட்டும் ஏனோ நித்திரையாகி விட்டிருந்தார். 
 
ஐந்தே ஐந்து நாட்களிற்கு முன்னர், மே 5, அன்று அகிலன் தனது 19வது பிறந்த நாளை தனது வீட்டில் நண்பர்களை அழைத்து கொண்டாடியிருந்தார். எப்பவுமே தனது பிறந்த நாளை கொண்டாடாத அகிலன் அந்த முறை மட்டும் ஏனோ கொண்டாட முடிவு செய்து விட்டு, பரி யோவான் நண்பர்களை மட்டுமல்ல பிற பாடசாலை நண்பர்களையும் நேரில் சென்று அழைக்கும் போது, பம்பலாக “இதான்டா கடைசி party, கட்டாயம் வாங்கடா” என்று அழைத்ததை அவரது நண்பர்கள் கவலையோடு நினைவுறுத்தினார்கள். 
 
வீட்டிற்குள் தேடியும் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை காணாத ஈபிக்காரன்கள், அகிலனைக் கண்டதும் “இவர் யார்” என்று விசாரிக்க, தாங்கள் தேடி வந்த திருச்செலவத்தின் மகன் என்று அறிந்ததும், “நீர் எங்களோடு வாரும்.. அவரை எங்கட campக்கு வரச் சொல்லுங்கோ.. அவர் வந்ததும் இவரை விடுறம்” என்று அகிலனை பிடிக்க, அகிலனின் அம்மா ஓவென்று அழத் தொடங்கினா. 
 
அம்மாவை பயப்பட வேண்டாம், தான் அவர்களோடு போய் விட்டு வருகிறேன் அன்று ஆறுதல்படுத்தி விட்டு, Shirtஐ மாட்டிக் கொண்டு, உடுத்திருந்த சாரத்தோடு, ஈபிக்காரன்களின் வாகனத்தில் அகிலன் ஏற, நல்லூர் கோயில் பக்கமாக அந்த வாகன தொடரணி புறப்பட்டுச் செல்கிறது.
 
இந்த சம்பவங்கள் நடந்த போது கீழ் வீட்டில் இருந்த அகிலனின் நண்பன் சஞ்சீவன், வாகனம் போன கையோடு சைக்கிளை எடுத்துக் கொண்டு பரி யோவான் அதிபர் தேவசகாயத்திடம் தகவல் சொல்ல விரைகிறார். இந்திய இராணுவத்தின் உயர்மட்டத்தினரோடு தொடர்புகளை பேணிய அதிபரால் அகிலனை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு அந்த காலை வேளையில் பரி யோவான் அதிபரின் வீட்டுக் கதவை சஞ்சீவன் தட்டுகிறார்.
 
அகிலனை ஈபிக்காரன்கள் பிடித்துக்கொண்டு போனதையறிந்து அதிர்ந்த அதிபர், உடனடியாக செயலில் இறங்கி, இந்திய இராணுவ உயரதிகாரிகளை தொடர்பு கொள்ள முயல்கிறார். 
 
அகிலனை ஏற்றிக் கொண்டு நல்லூர் பக்கமாக சென்ற வாகனம் Brown Rd இந்து மகளிர் கல்லூரியடியில் நடு ரோட்டில் நிறுத்தப்படுகிறது. வாகனத்தில் இருந்து சாரமும் ஷேர்ட்டும் அணிந்த பெடியன் ஒருவன்  இறக்கப்படுவதை அந்த வீதியில் வசித்து வந்த அம்மா ஒராள் பார்த்துக் கொண்டு இருக்கிறா. 
 
வாகனத்தில் இருந்து இறக்கபட்ட பெடியன் முழங்காலில் இருக்க வைக்கப்பட்டதும் அந்த அம்மாவிற்கு வடிவாக தெரிகிறது. முழங்காலில் இருக்கும் பெடியனிற்கு முன்னால் யாழ்ப்பாணமே அறிந்த மண்டையன் குழு கொலைஞன் துப்பாக்கியோடு நிற்பதும் அம்மாவின் கண்களுக்கு தெரிகிறது.
 
“ஐயோ அண்ணே.. என்னை ஒன்றும் செய்யாதீங்கோ” முழங்காலில் இருக்கும் பெடியன் கதறி அழுது கொண்டே அந்தக் கொலைஞனின் காலில் விழுந்து புரள்கிறான். அந்தக் கதறல் சத்தமும் அந்த அம்மாவுக்கு நன்றாகவே கேட்கிறது.
 
அப்ப.. அப்பத் தான்....முழங்காலில் இருந்த பெடியனிற்கு பின் பக்கத்தால வந்த ஒருத்தன், முழங்காலில் இருந்தவனின்ட தலைமயிரை பிடித்து இழுத்து நிமிர்த்த...முன்னால் நின்ற அந்த மண்டையன் குழு கொலைகாரன்.. துவக்கை முழங்காலில் இருந்த அந்தப் பெடியனின் மண்டையில் வைத்து..... 
 
முழங்காலில் இருந்த பெடியன் சரிந்து விழுவதை அம்மா பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெடியனின் உயிரைப் பறித்த வேட்டொலி அம்மாவின் காதில் எதிரொலிக்கிறது.
 
Brown Rd சந்தியில் சுடப்பட்டு குற்றுயிராய் கிடந்த அகிலனை, அதே வீதியால் Tutionற்கு போன இன்னுமொரு ஜொனியன் அடையாளம் கண்டு கொள்கிறான். சைக்கிளை வீதியில் போட்டு விட்டு தரையில் அமர்ந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்த அகிலனின் தலையை தூக்கி தனது மடியில் கிடத்தி.. “டேய் மச்சான் அகிலன்.. ஒன்றுமில்லைடா” என்று தேற்றவும் “ஹூம்” என்ற சத்தத்துடன் அகிலனின் உயிர் தான் நேசித்த பெற்றோரையும் நண்பர்களையும் விட்டு பிரிந்து செல்கிறது.  
 
அகிலனின் இறுதி யாத்திரைக்கு பரி யோவானின் மாணவர்கள் அலையென திரண்டார்கள். கோயில் வீதி எங்கும் வெள்ளை சீருடையணிந்த அண்ணாமாரும் நீலக் காற்சட்டையும் வெள்ளை ஷேர்ட்டும் அணிந்த பெடியளும் தான். வரிசை வரிசையாக அகிலனின் வீட்டிற்குள் சென்று இறுதி வணக்கத்தைத் தெரிவித்து விட்டு வந்தவர்களை மாணவ தலைவர்கள் ஒருங்கிணைத்து இறுதி ஊர்வலத்தை  நெறிப்படுத்த ஆயத்தமானார்கள்.
 
“அவன்ட Birthday party அன்று நான் யாழ்ப்பாணத்தில் நிக்கேல்ல” அகிலனின் இன்னுமொரு நெருங்கிய நண்பரும் பரி யோவான் கிரிக்கெட் அணியும் விக்கெட் காப்பாளருமான ரதீசன் கதைக்கத் தொடங்கினார். “எனக்கென்று சொல்லி கேக், லட்டு என்று சாப்பாட்டை எல்லாம் plateல் போட்டு fridgeல் வச்சிருக்கிறான்டா” ரதீசனின் குரல் தழுதழுத்தது. “நான் செத்த வீட்டுக்கு போக.. அகிலன்ட அம்மா.. கத்தி அழுதுகொண்டே போய் அந்த plateஐ கொண்டு வந்து எல்லாருக்கும் முன்னால என்னை சாப்பிட வச்சா” என்று அகிலனின் செத்த வீட்டு நினைவுகளை ரதீசன் நினைவுகூர்ந்தார்.  
 
பரி யோவான் கிரிக்கட் அணியின் ஆரம்ப பந்து வீச்சாளராக new ballஐ கையில் எடுக்கும் அகிலனின் கையிற்குள் செருகப்பட்டிருந்த புத்தம் புதிய cricket பந்தோடு அவரது பேழை மூடப்படும் போது எழுந்த அழுகுரல் அந்தப் பிரதேசத்தையே கலங்க வைத்துக் கொண்டிருந்தது. 
 
இறுதி ஊர்வலத்தை ஈபிக்காரன்கள் குழப்பலாம் என்ற பீதியையும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குறிவைக்கப்படலாம் என்ற பயத்தையும் துணிவுடன் மீறி, முகத்தை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு கண்களில் கண்ணீர் முட்ட பரி யோவான் மாணவர்களோடு பிற பாடசாலை மாணவர்களும் கோயில் வீதி நெடுக அணிவகுக்கத் தொடங்கினார்கள். 
 
அகிலனின் பூதவுடலை சுமந்த பேழைக்கு முன்னால் பரி யோவானின் கல்லூரி கொடியை Prefects மாறி மாறி சுமந்து வர, அகிலன் அண்ணா தனது இறுதி யாத்திரையை, கொலைஞர்கள் அவனை கடைசியாக கொண்டு போன அதே நல்லூர் கோயில் பக்கமாக ஆரம்பித்தான். 

.................................................................
 
அகிலனின் படுகொலையுடன் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதே காலப்பகுதியிலேயே ஈபிகாரன்கள் கட்டாய ஆட்சேர்ப்பிற்கென பிள்ளை பிடிபடலத்தை தொடங்க பல மாதங்கள் யாழ் நகரில் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டுப் போகின.
 
அந்த ஆண்டு, ஓகஸ்ட் 1989ல் நடந்த உயர்தரப் பரீட்சையில் அகிலனின் SJC89 பிரிவு மாணவர்கள் ஒரு கலக்கு கலக்கினார்கள். Bio பிரிவில் சுபநேசன் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பிடித்து பரி யோவான் கல்லூரியின் வரலாற்று ஏடுகளில் இடம்பிடித்துக் கொண்டார். 1988ம் ஆண்டு கச்சேரியடி கார் குண்டுவெடிப்பில் கண்ணில் ஏற்பட்ட காயத்துடன் கஷ்டப்பட்டு படித்த சுபநேசனின் சாதனையை பரி யோவான் இன்றும் கொண்டாடுகிறது.
 
அதே பரீட்சையில் Maths பிரிவில் திசைநாயகம் 4A எடுக்க, 3AC பெறுபேறுகளை பெற்று, அந்த பெறுபேறுகளை அறியாமலே ஈபிக்காரன்களால் அழிக்கப்பட்ட இன்னுமொரு ஜொனியன் தான் அறிவாளி என்றழைக்கப்பட்ட தேவகுமார்.
 
அதே 1989ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய SJC92 பிரிவு மாணவர்களில் ஐவர் 8D சித்திகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பரி யோவான் கல்லூரிக்கு பெற்றுத் தந்தார்கள்.
 
எந்தவிதமான வன்முறையும் அடக்குமுறையும் எங்கள் கல்வியை பாதிக்க விட மாட்டோம் என்ற எங்கள் மண்ணின் உறுதிப்பாட்டை பரீட்சைக்கு பெறுபேறுகளில் பொறித்துக் காட்டிய ஆண்டுகளாகவும் 1989-1990கள் அமைந்தன.
 
image1%2B%25281%2529.jpeg
 
image2%2B%25282%2529.jpeg
...................................................................
 
 
1983 ஜூலை கலவரத்திற்கு முன்னர், கொழும்பு DS Senanayake கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அகிலன், தனது பெற்றோருடன் Anderson flatsல் வசித்து வந்தார். 
 
சிறு வயதில் ரஜினிகாந்தின் ஸ்டைலால் கவரப்பட்ட அகிலனின் நடை உடை பாவனை எல்லாவற்றிலும் ரஜினியிஸம் கலந்திருக்கும் என்று  அதே தொடர்மாடியில் வசித்த அவரது சிறு பிராயத்து நண்பர் ஒருவர் அகிலனின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
 
“Steps ஆல நடந்து வரும் போதும் ரஜினி ஸ்டைல் தான்... race ஓடும் போதும் ரஜினி ஓடுறது போலத் தான்.. தலை இழுப்பும் ரஜினி மாதிரி தான்” என்று அந்த சிறுபிராய நண்பரது அகிலன் பற்றிய நினைவுகள் அமைந்திருந்தது.
 
“அகிலனுக்கு என்றொரு ஸ்டைல் இருந்தது ஐசே .. அவர் யார்ட ஸ்டைலையும் follow பண்ணேல்ல” என்று பதின்ம வயதில் அகிலனோடு நெருங்கிப் பழகிய அவரது நண்பரான சஞ்சீவன், அகிலனின் சிறுவயது ரஜினி மோகம் பற்றி கேட்ட பொழுது சொல்லிக் கொண்டு போனார்.
 
“அவன் ஐசே.. காலம்பற மேல இருந்து படியால இறங்கி வரும் போது.. பாட்டு பாடிக் கொண்டு ஸ்டைலாத் தான் இறங்கி வருவான்” என்ற சஞ்சீவன், “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட்டுத் தான்.. அவனை பார்த்தாலே எங்களுக்கும் அந்த நாள் கலகலப்பாயிடும்” என்றார் சஞ்சீவன். 
 
1983 ஜூலை இனக்கலவரத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்த அகிலனிற்கு முதலில் அடைக்கலம் கொடுத்தது யாழ் இந்துக் கல்லூரி தான். 1984ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அகிலன் பரி யோவான் கல்லூரியில் இணைந்தார்.  
 
image2.jpeg

 
பரி யோவான் கிரிக்கெட் அணியின் U15 அணிக்கு தலைமை தாங்கிய அகிலன், U17 மற்றும் U19 அணிகளின் Vice Captain ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பரி யோவான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப பந்து வீச்சாளராக, அந்த முழு நீள வெள்ளை Shirt அணிந்து, Principle Bungalow பக்கமிருந்து அகிலன் ஒடிவருவது இன்றும் இதை வாசிக்கும் கனபேருக்கு கண்ணிற்குள் வந்து நிற்கும். 
 
பதினைந்து வயதிலேயே Johnians Cricket Club அணிக்கு விளையாடத் தொடங்கிய அகிலனின் முதலாவது ஓவரும் அவர் தொடர்ந்து வீசிய அந்த ஐந்து wide ballsஐயும் வைத்தே அவரை நக்கலடித்த கணங்களை அவரது நண்பர்கள் இன்றும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்.
 
“அகிலன், ரகுராம் ஆக்கள் கொழும்பில இருந்து வந்தாக்கள்.. அவக்கு startல கொஞ்சம் எடுப்பிருந்தது” என்று தங்களின் நட்பின் ஆரம்ப நாட்களைப் பற்றி ரதீசன் பேசத் தொடங்கினார்.

 “Sports meetல அவயள் Thompson house.. நான் Johnstone House.. 4x300 relayயில் அவயள் தான் முதல் மூன்று lapம் leading.. கடைசி lapல் நான் ஓடி எங்கட house வென்றது.. race முடிய அகிலன் வந்து நீங்க இப்படி நல்லா ஓடுவீங்க என்று நினைக்கேல்ல என்று தானாக கதைக்கத் தொடங்கினார்” என்று ரதீசன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
 
“Match தொடங்கும் போது, அகிலன் தான் first slip, சஞ்சீவன் second slip” என்று பரி யோவான் கிரிக்கெட் அணியின் Wicket Keeper ரதீசன் அந்தக் காலத்து பலமான பரி யோவான் அணியை மீண்டும் மனக் கண்முன் கொண்டு வந்தார். 
 
“ஒருக்கா Jaffna Hinduவோட match.. அவங்கட captain புவனேந்திரனுக்கு கால் பிடிச்சிட்டு.. runnerஆக ரவிக்குமார் வந்தார்.. ரவிக்குமார் ball guard போடாமல் வந்திட்டான்..அதை வச்சு அகிலன் அவனுக்கு கொடுத்த அலுப்பு இருக்கே..” என்று விலாவாரியாக அந்த சம்பவங்களை மகிழ்வோடு ரதீசன் இரை மீட்டுக் கொண்டார். யுத்தம் நம்மை விட்டு பறித்த ஆளுமைகளில் யாழ் இந்துவின் ரவிக்குமாரும் ஒருவர். 
 

அகிலன்ட பகிடிகள் சொல்லுறதென்டால்..” என்று ஆரம்பித்து அந்த பதின்ம வயதிற்கேயுரிய பல பகிடிகளைரதீசன் பகிர்ந்து கொள்ள, நாங்கள் இருவரும் பள்ளிக் காலங்களிற்கே மீண்டும் சென்று வந்தோம். “Matchக்குபோய் வரும் போது.. வானிற்குள் ஒரே பகிடி விட்டுக் கொண்டு தான் வருவான்..”என்று பத்து நிமிஷம் தான்இருக்கு என்று கதைக்க தொடங்கிய ரதீசன் அரை மணித்தியாலத்திற்கும் மேலாக அகிலன் புராணம் பாடிக்கொண்டிருந்தார்.

 
“அகிலன் என்ர economics கொப்பி மூலையில் எழுதின கவிதையை நான் இப்பவும் அப்படியே வச்சிருக்கிறன்டா..” என்ற ரதீசன், “என்ர மகளுக்கும் அதை காட்டியிருக்கிறன்.. நான் சாகும் போது அந்த கொப்பியையும் சேர்த்து எரிக்க சொல்லியிருக்கிறன்” என்று முப்பதாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் பள்ளிக்கால நட்பின் வலிமையை உணரச் செய்தார். அகிலனின் அந்தக் கவிதை தனக்கு நேரப்போகும் மரணத்தை தானே முன்னுணர்ந்து எழுதியது போலவே இருக்கிறது.
 
image2%2B%25281%2529.jpeg
 
“அகிலன் ஒரு அதி தீவீரமான தமிழ்தேசியவாதிடா” என்னு அகிலனோடு நெருங்கிப் பழகிய SJC89 batch ஐங்கரன், அகிலன் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினார். “அந்த மாதிரி கவிதை எழுதுவான்டா.. சிறுகதைகளும் எழுதியிருக்கிறான்” என்று பலருக்கு தெரியாத அகிலனின் இன்னுமொரு ஆற்றலைப் பற்றி கதைக்கத் தொடங்கினார்.
 
“TESOன்ட பொங்கும் தமிழமுது என்ற magazineல் அகிலன்ட கவிதைகள் வந்திருக்கிடா” என்றார் ஐங்கரன். “ ஒபரேஷன் லிபரேஷன்ட முதலாவது ஆண்டு நினைவாக வெளியான கல்லறை மேலான காற்று கவிதைத் தொகுப்பிலும் அகிலனின் கவிதை வெளிவந்திருக்கு.. ஒருக்கா நூலகம் websiteல் தட்டிப்பார்.. இருந்தாலும் இருக்கும்” என்று ஐங்கரன் சொல்லிக் கொண்டே போனார்.
 
“அகிலன் செத்து முதலாவது ஆண்டு நினைவிற்கு, அவன் எழுதிய கவிதைகள் எல்லாத்தையும் தொகுத்து..மரணம் வாழ்வின் முடிவல்ல என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டனாங்க” என்ற ஐங்கரன் “அகிலன் ஓரு பெட்டையை சுழற்றினவன்.. அப்பவும் கவிதை தான்.. ஒரு நாள் அந்த பெட்டையை பார்த்து..  என்னைக் காதலிக்கா விட்டாலும் பரவாயில்லை, என்னை துணையாகவேனும் ஏற்றுக் கொள்.. என்னு கவிதை சொல்லிவிட்டு போனவன்” என்று காதலிக்க கவிதையெனும் பந்தை அழகாக  வீசிய தனது நண்பன் அகிலனை நினைத்து ஐங்கரன் பூரித்துக் கொண்டார். 
 
அகிலனின் தமிழ் மீதான காதலும் பற்றும் கிரிக்கெட் மைதானத்திலும் எதிரொலித்தது. “அவர் ஐசே groundலும் சுத்த தமிழில் தான் பம்பலடிப்பார்.. good ball என்று சொல்ல மாட்டார்.. நல்ல பந்து என்றுவார்.. இப்படி கனக்க இருக்கு” என்று அவரோடு அணியில் விளையாடிய நரேஷ் தனது கிரிக்கெட் நினைவுகளை மீட்டுக் கொண்டார். 
 
“அகிலனினட birthdayக்கு நான் தான் படம் எடுத்தனான்” எப்பவுமே அதிகம் அலட்டிக் கொள்ளாத ஜீனிடம்இருந்து கதைகேட்பதே ஒரு சுவாரசியமான அனுபவம். “ஆளை மேல் மாடியில் இருத்தி, சூரியன் மறையிற நேரம் ஒரு நல்ல silhouette shot எடுத்த ஞாபகம்.. அதுவும் சஞ்சீவன்டயோ யார்றயோ camera  தான்” என்று அகிலனின் நெருங்கிய நட்பு வட்டாரத்திற்குள் இருந்த ஜீனும் அகிலனின் கதைதகளை நினைவுபடுத்திக் கொண்டார். 
 
ஜீன் எடுத்த அந்த silhouette படம் தான் அகிலனின் கவிதைத் தொகுப்பான மரணம் வாழ்வின் முடிவல்ல என்ற புத்தகத்திற்கு அட்டைப் படமாக அமைந்தது. அகிலனின் புத்தகம் இன்றும் விற்கனையில் உள்ளதால், Noolaham இணையத்தில் இன்னும் பதிவேற்றவில்லையாம்.  
 
“என்னடாப்பா” என்று விளித்து அகிலன் தனது வயதிலும் குறைந்த மாணவர்களுடன் பழகும் விதம் தனித்துவமானது. சத்தம் போடும் வகுப்பறைகளை அதட்டி அடக்காமல் “என்னடாப்பா ஏன் கதைக்கிறியள்” என்று சிரித்துக் கொண்டே அடக்கும் மாணவர்களிற்கு பிடித்த Prefect தான் அகிலன். 
 
அகிலன் அண்ணா ஆள் நல்ல கறுப்பு, ஆனால் நல்ல களையான ஆள். எப்பவும் பம்பலடித்துக் கொண்டே திரியும் அகிலனை பாலர் வகுப்பில் படிக்கும் பெடியளிள்கும் தெரியும், பாலர் வகுப்பிற்கு படிப்பிக்கும் இளம் ஆசிரியைகளிற்கும் நன்றாகவே தெரியும்.
 
 
அகிலனோடு நெருங்கிப் பழகிய இருவரான ஜெய்ஷங்கரதும் சாந்தாராமதும் நினைவுகளை பதிய முடியாமல் போய் விட்டது. அகிலனைப் பற்றி பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் சில ஆண்டுகளாக இருந்தது, இந்தாண்டு தான் அதற்கான கொடுப்பினை அமைந்தது, அதுவும் அவரது முப்பதாவது ஆண்டு நினைவு நாளில் இந்தப் பதிவை எழுதியதும் ஒரு வகையில் விதி வரைந்த கோலம் தான்.
 
அகிலன் நன்றாக பந்தடித்தார், மணியாக பம்பலடித்தார், ஸ்டைலாக வடிவான பெட்டைகளைச் சுழற்றி மடக்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பெட்டையின் பெயரைச் சொல்லி எங்களை கத்த வைத்த சகலகலா வல்லவன் தான் அகிலன் அண்ணா.  அகிலன் ஒரு முழுமையான ஜொனியனாகவே வாழ்ந்தார், வாழ்ந்து முடித்தார். சஞ்சீவன் சொன்ன மாதிரி, அவரொரு “Jolly good fellow” தான்.
 
 “பூச்செடியில்
புதிதாய் பூக்கும் 
பூக்களுக்காக
சிறகடிக்கத் தொடங்கிவிட்ட
இளம் பறவைகளின் ஒலிக்காக
எனை எதிர் கொண்டுவரும் மரணத்திற்காக
நம்பிக்கையோடு நான் காத்திருக்கிறேன்.
உண்மையை மறுப்பவர்களிடம் கூறுங்கள்
என் மரணம்
என்றுமே 
ஒரு முடிவல்ல”
அகிலன் திருச்செல்வம் (SJC89)
 
image1%2B%25282%2529.jpeg
 
 
எனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:
வாகனத்தில் இருந்து இறக்கபட்ட பெடியன் முழங்காலில் இருக்க வைக்கப்பட்டதும் அந்த அம்மாவிற்கு வடிவாக தெரிகிறது. முழங்காலில் இருக்கும் பெடியனிற்கு முன்னால் யாழ்ப்பாணமே அறிந்த மண்டையன் குழு கொலைஞன் துப்பாக்கியோடு நிற்பதும் அம்மாவின் கண்களுக்கு தெரிகிறது.
 

இணைப்புக்கு நன்றி பகலவன்.
அந்த மண்டையன் குழு கொலைஞன் யாரென்றும் சொல்லியிருக்கலாம்.
இறந்தவர் கனடாவிலுள்ள திருச்செல்வத்தின் மகனா?
இப்படி எத்தனை எத்தனை உயிர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி பகலவன்.
அந்த மண்டையன் குழு கொலைஞன் யாரென்றும் சொல்லியிருக்கலாம்.
இறந்தவர் கனடாவிலுள்ள திருச்செல்வத்தின் மகனா?
இப்படி எத்தனை எத்தனை உயிர்கள்.

ஒரு அகிலன் தான்...அதே அகிலன் திருச்செல்வம் தான் அண்ணா 😭

சுரேஸ் பிரேமசந்திரனாய் இருக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.