Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையைத் தந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம் - சுமந்திரனின் விரிவான பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைணந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மெய்யான வாய்ப்பொன்று இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டது. 

41-Sumandiran_Interview.jpg

ஆனால் அவ்வாறு செய்தது கூட்டமைப்பைப் பாதித்திருக்கிறது. தவறான 'குதிரைக்கு' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவைக் கொடுத்து, தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்று இப்போது நோக்கப்படுகின்றது. 

இது ஒரு உண்மையாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், உத்தியோகபூர்வப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் பிரபலமான தேசிய தினசரிகளில் ஒன்றான 'த இந்து' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய விரிவான பேட்டியொன்றிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அந்த நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளின் தோல்வி, தேசிய அரசாங்கத்திற்குக் கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவினால் ஏற்பட்ட பின்னடைவு, இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பங்கு, இந்தியாவின் முக்கியத்துவம், தமிழ் - முஸ்லிம் உறவு, தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனான எதிர்கால ஈடுபாட்டின் முக்கியத்துவம், அரசியல் தீர்வைக் காண்பதில் தென்னிலங்கைத் தலைவர்களின் அக்கறையின்மை ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக அவர் பேசியிருக்கிறார்.

அந்நேர்காணலின் முழுமையான விபரங்கள் வருமாறு:

சீர்திருத்தங்களில்  இருந்து பின்வாங்குதல்

கேள்வி : 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. வேறுபல வாக்குறுதிகளுக்கு மத்தியில் அந்தக் கூட்டணி தமிழர் பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காண்பதாக உறுதியளித்தது. அதற்கான செயன்முறைகள் தொடங்கப்பட்ட போதும் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையை  அடைந்துவிட்டன. ஏன் அது வெற்றி பெறவில்லை?

பதில் : அரசியலமைப்புச் சீர்திருத்த செயன்முறைகளின் போது குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் கூட்டரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தது போன்று பலமானதாக இருக்கவில்லை. பூசல்கள் வெளிப்பட ஆரம்பித்து, நாளடைவில் குறிப்பாக 2018 பெப்ரவரி தேர்தலுக்கு முன்னதாக அவை ஆழமாகின. கூட்டரசாங்கத்தில் முக்கிய பங்காளிகளான இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரிகள் போன்று மீண்டும் பார்க்க ஆரம்பித்தன. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமலிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பதை விடவும் தேர்தல் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதிலேNயு அவை கூடுதலான அளவு கரிசனை காட்டின. அதன் விளைவாக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இணங்கிக்கொள்ளப்பட்ட விடயங்களுக்குக் கூட சொந்தங்கொண்டாட அவர்கள் தயாராக இருக்கவில்லை. 

சீர்திருத்தச் செயன்முறைகளில் இருந்து அவர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். அந்தப் பின்வாங்கும் போக்கில் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதானமாக முனைப்பைக் காட்டியது. அதனைத் தொடர்ந்து அவர்கள் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தொடர்ந்து செயற்படுகின்றார்கள் இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரியவந்தது. எவருமே தாங்களாக அந்தச் செயன்முறைகளை முன்னெடுக்க விரும்பவில்லை. அவர்களும் கூடப் பின்வாங்கத் தொடங்கினார்கள். 

கேள்வி : பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சியையும் அவ்வாறு கூறுகின்றீர்களா? 

பதில் : ஆம், பி;னநோக்கிப் பார்த்தால் இதனை விளங்கிக்கொள்ள முடியும். தங்களது கூட்டரசாங்கப் பங்காளி அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை என்று குறிப்பிட்ட ஒருகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் உணர்ந்துகொண்ட போது, அவர்களும் அந்தச் சீர்திருத்தச் செயன்முறைகள் தொடர்ந்து நீடித்துச் செல்வதற்கு அவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினார்கள். 

வேட்பாளர்களுடன்  பேசிய பின்னரே முடிவு

கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ராஜபக்ஷ முகாம் அதன் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்திருக்கிறது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை அறிவித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் அதன் வேட்பாளரை நியமிக்கவில்லை. 2015 இல் நீங்கள் ஆதரித்த அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உங்களுக்கு இப்போதிருக்கக்கூடிய தெரிவுகள் குறித்து எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : 2015 இல் குறிப்பிட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரித்தோம். தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற வாக்குறுதிகளுக்குப் புறம்பாக, நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைமையை ஒழிப்பது என்பதை அவர்கள் பிரதான வாக்குறுதியாகவும் அவர்கள் முன்வைத்தார்கள். 1994 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டுமக்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ஆணையைத் தொடர்ச்சியாக வழங்கி வந்திருந்த பின்னணியில் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்திருந்த போது நாம் மனப்பூர்வமாக அவர்கள் அந்த வாக்குறுதிகளை இத்தடவை நிறைவேற்றுவார்கள் என்று நம்பினோம்.

 ஆனால் அது நடைபெறவில்லை. இப்பொழுது நாம் யாராவதொரு வேட்பாளரை அவர்கள் ஒழிப்பதாக முன்னர் உறுதியளித்த நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவிக்கு ஆதரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்த நிகழ்வுத் திருப்பங்களை நாம் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளவில்லை. சகல கட்சிகளுமே அவற்றின் வேட்பாளர்களை நியமித்து விஞ்ஞாபனங்களை வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தித் தீர்மானம் ஒன்றுக்கு வருவோம். எமக்கு அவசரமில்லை. 

தீர்வில் அக்கறையில்லை

கேள்வி : 2015 ஆம் ஆண்டில் தேசிய ஐக்கிய கூட்டு அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தமைக்கான காரணங்களில் ஒன்று அரசியல் தீர்வைக் காண்பதற்கான சாத்தியப்பாடேயாகும். புதிய அரசியலமைப்பு ஒன்றுக்காக வாக்களித்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் (1987 இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக வந்த) தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்திற்கே இப்போது பின்நோக்கிச் செல்கிறார்கள். இது 'ஓரடி முன்னால், ஈரடி பின்னால்' என்பது போன்றதொரு நிலவரமில்லையா?

பதில் : இது எல்லாக் காலத்திலுமே நடைபெறுகின்றது. 13 ஆவது திருத்தம் என்பது ஒரு மைல்கல்லாகும். மாகாணசபைகள் உருவாக்கத்தின் மூலமாக ஆட்சிமுறைக் கட்டமைப்பு அடிப்படையில் முதற்தடவையாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பமாக அது அமைந்தது.மாகாணசபைகளுக்கு சட்டவாக்க அதிகாரங்களும் ஓரளவிற்கு இருப்பதுடன், ஆளுநரூடாக சில வகையான நிறைவேற்று அதிகாரங்களும் இருக்கின்றன.

13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அது அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கலாக அமையவில்லை என்றுகூறி தமிழ்த்தரப்பினர் கணிசமானளவில் அதனை நிராகரித்தனர். அவ்வாறு நிராகரிப்பதற்கு அவர்களிடம் நல்ல காரணங்கள் இருந்தன. அதனால்தான் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதிகாரப்பரவலாக்கலை அர்த்தமுடையதாக்குவதற்கு 13 இற்கு அப்பாலும் செல்வதாகத் தென்னிலங்கை தலைமைத்துவத்தினால் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் போர் முடிவிற்கு வந்த பின்னரும் கூட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களைத் திருப்பி எடுப்பதற்குக்கூட முயற்சித்தார்.

இந்தப் பின்புலத்தில்தான் 2015 மாற்றம் வந்தது. 13 ஆவது திருத்தம் ஒருபுறமிருக்க முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் பெடரல் ஏற்பாடு ஒன்றை நாடுவது குறித்தும் அக்கறை காட்டப்பட்டது. இப்போது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிப்போம் என்று கூறுவது அந்த உறுதிமொழிகள் அனைத்திலிருந்தும் பின்வாங்குவதேயாகும். 

ஆனால் நான் ஏற்கனவே கூறியது போன்று எல்லாக் காலத்திலும் இது இவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பரவலாக்கல் நாட்டுப் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று தேர்தலுக்குத் தேர்தல் தங்களது தென்பகுதி வாக்காளர்களுக்குக் கூறுகின்ற இந்தத் தலைவர்கள், கூடுதலான எந்தவொரு ஏற்பாடு குறித்தும் தங்களை அர்ப்பணிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் உள்ளதைப் போன்ற இருகட்சி முறைமையில் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளின் ஒரு பெரும்பகுதியைத் தங்கடன் வைத்திருக்க விரும்பும் அதேவேளை, சிறுபான்மை இனத்தவரினதும் வாக்குகளைளப் பெறவேண்டிய அவசியமிருக்கின்றது. அதனால் '13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது' என்ற கதையளப்பைத் தொடர்ந்து நாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய தந்திரோபாயத்தின் மூலமாக இந்தத் தலைவர்கள் தென்னிலங்கை வாக்காளர்கள் அச்சங்கொள்ளாத ஒரு சூழ்நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, தமிழ் வாக்காளர்களுக்கும் இன்னமும் எதையாவது உறுதியளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது வாக்குறுதி இதயபூர்வமானது அல்ல. நாங்கள் அதனைக் கரிசனையுடன் நோக்கவில்லை.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதற்தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 1994 ஆம் ஆண்டில் மாத்திரமே வேறுபட்ட ஒரு அணுகுமுறையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. அவர் இந்தக் கதையளப்புக்கள் சகலதையும் முழுமையாக மாற்றியமைத்து சமஷ்டி ஏற்பாடொன்றைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். சுமார் 60 சதவீதமான வாக்குகளையும் பெற்றார். 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா அளவுக்கு உரத்துக்கூறாவிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவும் இதுபோன்ற உறுதிமொழியை அளித்தார். ஆனால் இரு தடவைகளும் விடுதலைப் புலிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அவர்களின் அரசியல் போராட்டத்திற்கு வழிவகுத்த 'தனியான அரசு' என்ற கோட்hடு அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவரகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் சமஷ்டி ஏற்பாடொன்றுக்கான சாத்தியம் வருவது போன்று தென்படுகின்ற போது அவர்கள் பேச்சுவார்த்தைகளை முறித்தார்கள். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் தமது தனிநாட்டுக்கான கனவு என்றென்றைக்குமாக அழிந்துவிடுமென அவர்கள் அஞ்சினார்கள். 

இப்போது போரும், போரின் விளைவான களைப்பும் இல்லாத சூழ்நிலையில் எந்தவொரு தலைவருமே முன்னர் வாக்குறுதி அளித்ததைப் போன்று செயற்படுவதற்குத் தயாராக இல்லை. அவர்கள் தமிழர்களின் வாக்குகளை எளிதாகப் பெறமுடியுமென நினைக்கின்றார்கள். அதாவது வாக்குறுதிகளை உண்மையில் நிறைவேற்றக்கூடிய கட்சி என்று நோக்குவதை விடவும் கெடுதியான இரு கட்சிகளில் குறைந்த கெடுதியுள்ளதை தமிழர்கள் தேர்தலில் ஆதரிக்கக்கூடும் என்பதே அந்த நினைப்பு.

கேள்வி : வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரத்யேகமான சவால்களை நோக்கும்போது இன்றை நிலைவரத்தை எவ்வாறு நீங்கள் பார்க்கின்றீர்கள்? போருக்குப் பிறகு பத்து வருடங்கள் கழிந்த நிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் புனர்நிர்மாணம் குறித்த உங்களது கருத்தென்ன?

பதில் : 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் 5 வருடங்களும் ராஜபக்ஷ ஆட்சி (போருக்கு வந்த தமிழர்கள் தோற்றுவிட்டார்கள். வெற்றி பெற்றவர்களுக்கே எல்லாம் என்ற அடிப்படையில்) தமிழ் மக்களை முதன்முதலாக அடிமைப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரமாக போர்வெற்றியைப் பார்த்தது. அரசியல் இணக்கத்தீர்வு குறித்து அது உதட்டளவிலேயே பேசிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை அது நடைமுறைப்படுத்தியது. ஆனால் மக்களின் அவலங்களையும் வேதனைகளையும் போக்குவதற்கு, வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்கு, உடனடி அக்கறைகளைக் கவனிப்பதற்கு எந்தவொரு முயற்சியும் இல்லாத நிலையில் பிரம்மாண்டமான செயற்திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு முற்றிலும் அந்நியமானவையாகவே இருந்தன. 

கடைசி 5 வருடங்களிலும் நிலைவரம் மேலும் சிக்கலானதாக மாறிவிட்டது. நீண்டகாலமாகத் தீர்மானிக்கப்படாத மக்களின் மனக்குறைகளை அரசாங்கம் கவனிக்கத் தொடங்கியது. இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலப்பகுதிகள் முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் கணிசமானளவு மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பொறுப்புக்கூறல் விவகாரத்தைப் பொறுத்தவரை காணாமல்போனோர் விவகார அலுவலகம் அமைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணைகளில் முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லை என்ற போதிலும்கூட, பொறுப்புக்கூறல் தொடர்பில் மேற்கூறப்பட்ட நடவடிக்கை முக்கியமானதொன்றாக அமைந்தது. அரசியல் கைதிகளில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள்.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் விவகாரத்தைப் பொறுத்தவரை உண்மையில் எதுவும் உருப்படியாக நடைபெறவில்லை. அவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 5 வருடங்களில் ஜனநாயகவெளி விரிவடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. வடபகுதி மக்கள் தங்களது அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிக்காட்டுவதற்கு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ராஜபக்ஷ ஆட்சியின் கீi; அது சாத்தியமானதாக இருக்கவில்லை. அப்போது ஒரு அச்சநிலையே காணப்பட்டது. 

உரிமைகள் என்றுவரும் போது தமிழர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று ராஜபக்ஷ வெளிப்படையாக உணர்த்தினார். ஆனால் இந்த அரசாங்கத்தை நம்பிக்கையுடன் நோக்கியமைக்குக் காரணங்கள் இருந்தன. பிறகு அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினார்கள். எமது மக்கள் ஏமாற்றப்பட்டு, கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

சவேந்திர சில்வா நியமனம்

கேள்வி : இராணுவமய நீக்கம் நோக்கிய முயற்சிகள் குறித்து நீங்கள் குறிப்பிட்டீர்கள். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அவர் ஜனாதிபதியினால் அண்மையில் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை குறித்து எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

41-Sumandiran_Interview.jpg

பதில் : கூட்டரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதும் ஜனாதிபதி கடுமையான சில நடவடிக்கைகளில் நாட்டம் காண்பிக்கத் தொடங்கினார். 2018 அக்டோபரில் அது ஒரு உச்சநிலைக்கு வந்து பிரதமர் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி நியமித்தார். இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையையும் அந்த அடிப்படையிலேயே நோக்க வேண்டியிருக்கிறது. 2015 இல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் காணப்பட்ட திசைமாற்றத்திற்கும், தற்போதைய திசைமாற்றத்திற்கும் இடையே பெருமளவு வேறுபாடு இருக்கிறது. போர் வெற்றித் தினத்தைக் கொண்டாடுவதை நிறுத்தியதன் மூலமும், தேசிய தினத்தன்று தமிழிலும் தேசியகீதத்தைப் பாடுவதற்கு ஏற்பாடு செய்ததன் மூலமும் இனநல்லிணக்கம் மற்றும் புதியதொரு அரசியலமைப்பு ஆகியவற்றை உறுதியாக நியாயப்படுத்தியதன் மூலமும் மிகவும் ஆக்கபூர்வமானதொரு வழியில் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாக வழிநடத்தியவர் ஜனாதிபதியே.

ஆனால் இப்போது அவர் அவை எல்லாவற்றிலிருந்தும் பின்வாங்கிவிட்டது பெரும் கவலை தருகிறது. நாங்கள் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்திருக்கிறோம். ஏனென்றால் இனவெறிக்கு வசப்படக்கூடியவரல்ல ஜனாதிபதி என்பதை நாமறிவோம். அதிகாரப்பகிர்வு குறித்த மிகவும் முற்போக்கான கருத்துக்களை அவர் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது அவர் தேர்தல் மற்றும் ஏனைய அரசியல் காரணங்களால் நிர்பந்திக்கப்பட்டு, அவர் தனது குணவியல்புக்குப் புறம்பான முறையில் நடந்துகொண்டிருக்கிறார்.

ஆனால் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் கருத்து எதனையும் கூறவில்லை.

சர்வதேச சமூகத்தின் பங்கு 

கேள்வி : சர்வதேச சமூகத்தின் பங்கை இப்பொழுது நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அதன் நகர்வுகளும் எம்மைப் பொறுத்தவரை முக்கியமானவையாக இருந்துவருகின்றன. ஒரு நல்ல விடயம் என்னவென்றால் ஐ.நா தீர்மானங்கள் கட்டுப்படுத்தும் தன்மையானவை என்றில்லாத போதும்கூட, அவை மிகுந்த தூண்டுதலாக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. இலங்கையில் இடம்பெற்றிருக்கக்கூடிய பெருமளவான மாற்றங்கள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விளைவானவை என நான் நினைக்கின்றேன். அந்தத் தீர்மானங்களில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இலங்கை இணையனுசரணை வழங்கிய தீர்மானங்களும் அடங்கும். குறிப்பிட்டதொரு நடவடிக்கையே ஒவ்வொரு மாற்றத்திற்கும் நேரடியாகக் காரணமென்று கூறமுடியாது. ஆனால் மேற்பார்வை என்று இருக்கும்Nபுhது அது பயன்தரக்கூடியதாக இருக்கும். 

சர்வதேச சமூகமென்று கூறும்போது நான் இதுவரையில் இந்தியாவைத் தவிர்ந்த நாடுகளையே குறிப்பிட்டு வந்திருக்கிறேன். ஏனென்றால் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானங்களில் இந்தியா தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொள்ளவில்லை. அது பெரும்பாலும் நடுநிலையாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் இந்தியாவிற்கு விசேட அக்கறை இருக்கிறது. இலங்கையுடன் செய்துகொண்ட இருதரப்பு உடன்படிக்கையான இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையிலிருந்தே இந்த அக்கறை எழுகிறது. இந்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கலைச் சாதிப்பதற்குத் தலைவர்கள் உடன்படிக்கைக்கு அப்பாலும் செல்வதைக் காணவும் இந்தியாவிற்கு அக்கறை இருக்கிறது. ஏனென்றால் அந்த உறுதிnhமழி வேறு யாராலும் அல்ல, மஹிந்த ராஜபக்ஷவினாலேNயு வழங்கப்பட்டது.

எனவே சர்வதேச சமூகத்தின் நெருக்குல் பற்றி நாம் பேசும்போது அது இந்தியாவையும், ஏனைய நாடுகளையும் சம்பந்தப்படுத்தியதாகும். ஏனைய நாடுகள் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரங்களில் எம்மை ஆதரிக்கின்ற அதேவேளை, இந்தியா மாத்திரமே அரசியல் தீர்வுடன் தொடர்பான விடயங்களில் நேரடியான தொடர்பெர்னறைக் கொண்டிருக்கிறது. இந்தியாவினால் மாத்திரமே 13 ஆவது திருத்தத்தின் மூலமாக 1987 இல் இலங்கையில் ஆட்சிமுறைக் கட்டமைப்பை மாற்றக்கூடியதாக இருந்தது. 

இந்தியாவுடனான எமது போராட்டம் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடாக பிறகு டில்லியில் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி உன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இலங்கைக்கு வந்திருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்திற்குக் கூடச் சென்றார். யாழுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமரும் அவரேயாவார். இலங்கை தொடர்பிலும், தமிழர் பிரச்சினை தொடர்பிலும் இந்தியாவின் கொள்கை முன்னரைப் போன்றே தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தியாவின் முக்கியத்துவம்

கேள்வி : பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் டில்லியில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறது. இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்கான சாத்தியங்கள் குறித்துக் கருத்துக்கூறிய போது சில அரசியல் தலைவர்கள் இந்திய அரசாங்கம் ஜம்மு – காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தார்கள். அதை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசாங்கம் எடுத்த தீர்மானம் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் ஏதாவதொரு தாக்கத்தைக் கொண்டிருக்கும் என நினைக்கவில்லை. நல்லதோ, கெட்டதோ ஜம்மு – காஷ்மீர் விசேட அந்தஸ்த்து ஒன்றைக் கொண்டிருந்தது. அதை இல்லாமல் செய்து அந்த மாநிலத்தை இந்திய அரசாங்கம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்திருத்திருக்கிறது. 

ஆனால் கடந்தகாலத்தில் ஏனைய மாநிலங்களுடனான விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் அணுகுமுறையை நோக்குவீர்களேயானால் பேச்சுவார்த்தைகளின் ஊடாக மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதில் மிகுந்த நெகிழ்ச்சித் தன்மையை அது வெளிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பிய மிசோரம், அசாம் அல்லது பஞ்சாப் போன்ற மாநிலங்களை உதாரணமாகக் கூறமுடியும். இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவாகுவதற்கு எந்த எதிர்ப்புமில்லை. அண்மைக்காலத்தில் தெலுங்கானாவும், அதற்கு முன்னர் சத்தீஸ்கரும் புதிய மாநிலங்களாக உருவானதை நாம் கண்டோம். எனNவு எம்மைப் பொறுத்தவரை இந்தியா இந்த விவகாரங்களை நடைமுறைச் சாத்தியமான வழியிலேயே அணுகுகின்றது என்றே நாம் நினைக்கின்றோம். 

பிரதமர் மோடி எமக்களித்த உறுதிமொழியின் அடிப்படையில் நோக்குகையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு முன்னையதைப் போன்றே தொடர்கின்றது. இந்தியாவின் நல்லெண்ணம் முக்கியமானதாக இருக்கின்றது. அதேவேளை இந்திய - இலங்கை உடன்படிக்கையில் விதந்துரைக்கப்பட்டவாறு அர்த்தமுடைய அதிகாரப்பரவலாக்கலைச் சாதிப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இதற்காக விரைவில் பிரதமர் மோடியை டில்லியில் சந்திக்கும் போது அவரது உதவியை நாம் நாடுவோம். 

தமிழ் - முஸ்லிம் உறவு 

கேள்வி : ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையும், அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் அடுத்து முன்னர் தமிழருக்குச் செய்த அட்டூழியங்கள் இப்போது முஸ்லிம்களுக்குச் செய்யப்படுகின்றது என்று நீங்கள் கவலை வெளியிட்டிருந்தீர்கள். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான குழப்பகரமான வரலாற்றையும், இரு சமூகங்களுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் அவநம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இப்போது கிழக்கிலுள்ள தமிழ் - முஸ்லிம் உறவுகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? அங்கே ஒருமைப்பாடு இருக்கிறதா?

பதில் : ஏப்ரல் 21 இற்குப் பிறகு தொடக்கத்தில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளி அகலமாகிக்கொண்டு போனது போன்று தோன்றியது. அதை இப்பொழுது நீங்கள் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் முன்னரைக் காட்டிலும் நாம் ஒன்றிணைந்து இருக்க வேண்டியதன் தேவையை இப்போது இரு சமூகங்களும் கூடுதலாக உணர்கின்றன என்று நான் நினைக்கின்றேன். நாம் இலக்கு வைக்கப்பட்ட போது முஸ்லிம்கள் எங்களுடன் நிற்கவில்லை என்ற ஒரு உணர்வு தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்தாலும் கூட அந்தவகையான மனோபாவம் எந்தப் பயனையும் தராது என்று இப்பொழுது கூடுதலான மக்கள் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். வடக்கிலும், கிழக்கிலும் சனத்தொகை எண்ணிக்கையில் அதிகப் பெரும்பான்மையினராக இருக்கும் தமிழ் பேசும் சமூகங்கள் என்ற வகையில் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும். அல்லது பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து வருகின்ற நெருக்குதல்களுக்கு எம்மால் தாக்குப்பிடிக்க இயலாமல் போகும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களும். அதற்குப் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களும் இந்தப் புரிந்துணர்வை வலுப்படுத்த உதவியிருக்கிறது என்பது நிச்சயமானது.

கூட்டமைப்பு மீதான விமர்சனம்

கேள்வி : அரசாங்கம் இழைத்திருக்கக்கூடிய பல தவறுகளையும் பொருட்படுத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதைத் தொடர்ச்சியாக ஆதரித்து வருவதாக சில தமிழர்கள் அடிக்கடி கண்டனம் செய்கின்றார்கள். மறுபுறத்தில் 2013 வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிமுறை குறித்து தமிழ்ச் சமூகத்திடமிருந்து கடுமையான கண்டனங்களும் வந்திருக்கின்றன. அதனால் உங்களுக்கு இரட்டைப் பிரதிகூலங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது?

பதில் : வடமாகாண சபையைப் பொறுத்தவரை அது நிச்சயமாகத் தவறவிடப்பட்ட ஒரு வாய்ப்பேயாகும். மிகவும் பாரதூரமான தவறு. ஏனென்றால் அது பெருமளவு சிக்கலானதும், விரும்பத்தகாததுமான விளைவுகளைக் கொண்டிருக்கிறது. நாம் அதிகாரப்பரவலாக்கலைக் கோரும்போது எமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தையே பாழாக்கியவர்கள் என்று எம்மைப் பார்த்துக் கூறுகின்றார்கள். மாகாணசபைகளுக்குப் புதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றாலும் கூட, மட்டுப்படுத்தப்பட்ட அந்த அதிகாரங்களைக்கூட நாம் பயன்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. அந்தக் குற்றச்சாட்டில் அர்த்தம் இருக்கிறது.

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான மெய்யான வாய்ப்பொன்று வருகிறது என்று நம்பிய காரணத்தினால் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டோம். என்றாலும் அவ்வாறு நாம் செய்தது எம்மைப் பாதித்திருக்கிறது. கூட்டரசாங்கம் இப்பொழுது முறிவடைந்து போயிருக்கிறது. அந்த முறிவினால் பல்வேறு பாதகமான விளைவுகளை இன்று நாம் பார்க்கின்றோம். அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுத்த, இன்னமும் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான குதிரையொன்றிற்கு ஆதரவளித்துப் பணத்தைக் கட்டிவிட்டது, அதன் மக்களுக்காக எதையும் சாதிக்கக்கூடியதாக இருக்கவில்லை என்றே நோக்கப்படுகின்றது. அது ஒரு உண்மையுமாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

தென்னிலங்கை முற்போக்கு சக்திகள்

கேள்வி : கடந்த 5 வருடங்களாக தெற்குத் தலைமைத்துவத்துடன் ஊடாட்டங்களைச் செய்து ஒத்துப்பேர்கும் அரசியலொன்றை முன்னெடுத்தீர்கள். கடந்த வருடம் அக்டோபரில் அரசியல் நெருக்கடியின் போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற கட்சிகள் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மிகவும் அண்மையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சேர்ந்து பணியாற்றும் என்றும். முஸ்லிம்;களுடன் நேர்ந்து நிற்கும் என்றும் கூறியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் எவ்வாறானதாக இருக்கும்?

பதில் : விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தனியரசு ஒன்றுக்கான கோரிக்கை முடிந்துவிட்டது. அந்தத் திட்டம் முடிந்துபோன பிறகு எமது அணுகுமுறையும் மாறவேண்டும். பேச்சுவார்த்தைகளை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை. நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தனிநாடு ஒன்றுக்காகப் போராடப் போவதில்லை. அது எமது குறிக்கோளும் அல்ல. ஒரு நாட்டிற்குள்தான் தீர்வு என்றார் பேச்சுவார்த்தை தான் முன்நோக்கிய ஒரேவழி.

துரதிஷ்டவசமாக இதை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையில் போதுமான மாற்றங்கள் ஏற்படவில்லை என்றே நான் நினைக்கின்றேன். நாம் இன்னமும் பழைய எதிர்ப்பு அரசியல் பழக்கத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கின்றோம். எதிர்ப்பு அரசியலைச் செய்யலாம், ஆனால் பெருமளவிற்கு ஈடுபாட்டில் நாட்டம் காட்ட வேண்டும். மற்றும் நாம் ஒரு நாட்டிற்குள்ளேயே வாழ்கின்றோம் என்ற புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்த மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். எமது மக்கள் அந்த மாற்றத்திற்குத் தயாராக இருக்கின்றார்களென நான் நினைக்கின்றேன்.

கடந்த 5 வருடகாலத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற போதிலும் நாம் மேலும் கூடுதலான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்ற விளக்கப்பட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அதிக பங்களிப்புச் செய்திருக்கக்கூடும்.

அடுத்தகட்டம் நாம் எவ்வாறு தெற்கிலுள்ள சக்திகளுடன் ஈடுபாட்டை கொண்டிருக்கப்போகின்றோம் என்பதில் முக்கிய நகர்வைக் காணக்கூடியதாக இருக்க வேண்டும். நாம் ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். அக்டோபர் 26 இற்குப் பின்னரான 51 நாள் அரசியல் நாடகத்திற்குப் பிறகு ஜே.வி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் பக்கத்தில் ஒன்றாக நிற்கும் இருகட்சிகள் என்றும், ஒரு அரசியல் செயற்திட்டத்தில் அவையிரண்டும் ஒன்றாக வருவது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் பலர் எம்மிடம் கூறினார்கள். அத்தகைய சக்திகளுடன் ஒன்றாக வருவதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் காணலாம் என்று என்னால் கூறமுடியாது. ஆனால் நீண்டகால அடிப்படையில் அதுவே செல்வதற்கான பாதை. இரண்டு பிரதான கட்சிகளில் ஏதாவது ஒன்றே ஆட்சியில் இருக்குமென்பதால் நாங்கள் இந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏதாவதொரு வகையில் ஒத்துழைக்க வேண்டியிருக்கலாம். ஆனால் உண்மையான மாற்றத்திற்கு நாம் தெற்கிலுள்ள ஜே.வி.பியுடனும், ஏனைய முற்போக்குக் கட்சிகளுடனும், மாற்று சக்திகளுடனும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

 

-த இந்துவிற்கு அளித்த நேர்காணலில் எம்.ஏ.சுமந்திரன்

https://www.virakesari.lk/article/64100

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆளும் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்து தமிழர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளைத்தந்து எமாற்றியது மட்டுமன்றி தமிழ்கட்சிகளின்மீது எமக்கு இருந்த நம்பிக்கையையும் வலுவிழக்கச்செய்து வந்ததில் வெற்றிகண்டுள்ளன. அதுமட்டுமின்றி தமிழரின் வாக்குகள் பல்வேறு தமிழ்கட்சிகளுக்குமத்தியில் சிதறடிக்கப்பட்டுள்ளன. இப்போது தமிழர் பிரதேசங்களில் களமிறங்கப்போகும் சிங்கள கட்சிகள் எஞ்சியுள்ள தமிழ் மக்களின் வாக்கு பலத்தையும் சூறையாடப்போவது தவிர்க்கமுடியாதது. இதற்கு காரணமாயிருந்தவர்கள் தொலைநோக்குப் பார்வையில்லாத எமது தமிழ் அரசியல்வாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுகளை பற்றி தமிழ்மக்கள் அன்று முதல் இன்று வரை தெளிவாகா அறிந்து வைத்து இருக்கின்றார்கள் ,
ஆனால் தமிழ் அரசியல் வாதிகள்தான் அவர்களை ஏமாற்றிகொன்டு வந்துள்ளனர்......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள் செய்யும்  செயலும், பொய்யும், பித்தலாட்டமும்....
மற்றைய நாடுகளிடமும்,  உளவு அமைப்புகளிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு...
அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடப்பதாகவே.. எனக்கு தோன்றுகின்றது.
இவர்களை இனியும் நம்பி.. வாக்குப் போடுபவர்கள் தான்...  ஏமாளிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.