Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு நிலைப்பாடு என்ன?: சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா?- ஜனாதிபதி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு நிலைப்பாடு என்ன?: சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா?- ஜனாதிபதி அறிவிப்பு

 

 

by : Benitlas

ஜனாதிபதி-கோட்டாபய-ராஜபக்ஷ.jpg

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தினை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் அவர்களுக்குப் பணியாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் சில சிக்கல்களே இதற்குப் பிரதான காரணமாக இருக்கின்றது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. எனவேதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை வழங்குமாறு மக்களிடம் ஆணை கோரியுள்ளோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் ஏதேனும் செய்யமுடியும் என வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். இதற்கு இடையூறு ஏற்படும் போது அதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

19ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள அரச ஆட்சி முறையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சரிசெய்வதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கோரியுள்ளோம்.

அதேபோன்று, சுயாதீன ஆணைக்குழு என்றால் சுயாதீனமான முறையில் செயற்பட வேண்டும். அதில் எவ்வித அரசியல் தலையீடுகளோ அல்லது அரசியலோ இருக்கக் கூடாது.

உதாரணமாக கடந்த காலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஒருவர் தனக்கு விருப்பமான முறையில் செயற்பட்டார். அத்துடன், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஏன் அது உருவாக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

பொலிஸ் அதிகாரிகள் சுயாதீனமான முறையில் செயற்படும் அதிகாரிகள் இல்லையா எனக் கேட்க விரும்புகின்றேன். உதாரணத்திற்கு 38 வருடங்களாக நாட்டில் பணியாற்றியுள்ள பொலிஸ்மா அதிபரை நம்ப முடியாவிட்டால். எப்படி புதிதாக நியமிக்கப்படும் ஆணைக்குழுவினை நம்ப முடியும்?

அதேபோன்று, தற்போது பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம் தொடர்பாக அதிகமாகப் பேசப்படுகின்றது. தேர்தலினை இலக்குவைத்து இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான நியமனங்கள் அனைத்தும் பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் வழங்கப்படும். தகுதிவாய்ந்தவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் நோக்கங்களோ அல்லது எவ்விதமான அரசியல் தலையீடுகளோ இல்லை என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கின்றேன்.

தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கும் செயற்பாட்டினை இடைநிறுத்துமாறு அறிவித்துள்ளார். ஏன் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் ஊடாக தெளிவுபடுத்தவுள்ளோம். பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கும்போது அதற்குத் தடைவிதிக்க முடியாது.

பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை இடைநிறுத்துவதனால் எவ்வித பயன்களும் இல்லை. எனவே இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெளிவுபடுத்தப்படும்.

இதேவேளை, வடக்கு கிழக்கிலுள்ள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதன் ஊடாகவே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

வடக்கு, கிழக்கு, தென் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சம அளவிலேயே வளப்பங்கீடுகள் வழங்கப்பட வேண்டும். பிரச்சினை என்பது அனைவருக்கும் உள்ளதுதான்.

வடக்கு, கிழக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் ஜெனீவா விடயம் பற்றி அதிகம் பேசி வருகின்றனர்.

பொருளாதாரப் பிரச்சினையே இங்கு அரசியல் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. அதேபோன்று காணாமல் போனவர்கள் பற்றித் தெளிவாக ஆராயவேண்டியுள்ளது. இதுகுறித்து தேடிப்பார்த்ததன் பின்னரே பேச வேண்டும். இராணுவத்திலும் காணாமல் போனவர்கள் உள்ளனர். யுத்தத்தின் அடிப்படையிலேயே காணாமல் போனவர்கள் பற்றிப் பேசப்படுகின்றது.

யுத்த பூமி என்றால் அங்கு காணாமல் போனவர்கள் இருப்பார்கள். இதுகுறித்துத் தெரியாதவர்களே அதிகம் பேசுகின்றனர். தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களது தேவைகளுக்காக காணாமல் போனவர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

காணாமல் போனவர்கள் அனைத்துத் தரப்பிலும் உள்ளார்கள். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யுத்தத்தின்போது காணாமல் போயுள்ளனர்.

யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்களை அடையாளம் காணமுடியாதவிடத்து, அவர்களின் சடலங்களை உறவினர்களிடம் கையளிக்க முடியாது.

எனவே இவ்வாறு உயிரிழந்தவர்கள் அனைவரும் அவர்களின் உறவினர்களைப் பொறுத்தவரையில் காணாமல் போனவர்களே. கடந்த காலத்தினைப் பற்றிப் பேசுவதனால் எவ்விதப் பயனும் இல்லை. எதிர்காலம் பற்றியே இனிப் பேசவேண்டும்.

காணாமல் போனவர்கள் கனடாவிலும் இருக்கலாம். ஆகவே இதுகுறித்து நன்கு ஆராய்ந்ததன் பின்னரே தீர்மானம் ஒன்றினை எடுக்கமுடியும். அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு.

இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நிச்சயம் கலந்துகொள்வேன்.

அதேபோன்று, மனிதர்களை விடவும் கொள்கைகளினையே பார்க்க வேண்டும். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அனுமதி வழங்கவில்லை.

வடக்கில் உள்ள வாக்குகள் கொள்கை ரீதியானவை இல்லை. அவை இனவாதம் கொண்டவை. அரசியல் நோக்கம் கொண்டவை. எனவே அங்கு சஜித்திற்கு வழங்கப்பட்ட வாக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அனுமதி வழங்கவில்லை என்பது புலனாகின்றது.

கொள்கைகள் அற்ற, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து அக்கறை செலுத்தாத கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த சஜித்துடன் இணைந்து பயணிக்க முடியாது. கொள்கைகள் எதுவும் இல்லாத அரசாங்கத்தினால் எவ்விதப் பயன்களும் இல்லை என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.

தற்போது நாட்டில் நிர்வாக சேவையில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து பலரும் பேசுகின்றனர். நான் நியமித்துள்ள அதிகாரிகளை விடவும் கடந்த அரசாங்கத்தில் அதிகளவானர்கள் நியமிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக நிர்வாகங்களில் கூட கடந்த அரசாங்கத்தில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதுகுறித்து எவரும் பேசவில்லை. குறிப்பாக ஊடகங்களோ, வெளிநாட்டினரோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ இதுபற்றிப் பேசவில்லை.

எனினும் இவர்கள் அனைவரும் தற்போது என்னால் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் பற்றிப் பேசுகின்றனர். இவையனைத்தும் அரசியலை நோக்காகக் கொண்டவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வடக்கு-கிழக்கு-நிலைப்பாட/

 

2 hours ago, nunavilan said:

வடக்கில் உள்ள வாக்குகள் கொள்கை ரீதியானவை இல்லை. அவை இனவாதம் கொண்டவை. அரசியல் நோக்கம் கொண்டவை. எனவே அங்கு சஜித்திற்கு வழங்கப்பட்ட வாக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அனுமதி வழங்கவில்லை என்பது புலனாகின்றது.

வடக்கு கிழக்கு நிலைப்பாடு என்ன?: சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா?- ஜனாதிபதி அறிவிப்பு

வாசித்த பொழுது, சனாதிபதி வெருட்டுவதாக தெரிகின்றது. அதாவது 3/2 பெரும்பான்மை கிடைக்கவிட்டால் உங்களுக்கு இருக்கு என்பது போன்று கூற வருவதாக தெரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: 'போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்'

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
காணாமல் போனவர்கள்படத்தின் காப்புரிமை Getty Images Image caption காணமால் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று கோட்டாபய கூறியிருந்தார்.

இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, ராணுவத்தைச் சேர்ந்த பெருந்திரளானோரும் காணாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதன்படி, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனையொன்று நாட்டில் உள்ளதாகவும், அந்த பிரச்சனையை அனைத்து தரப்பினரும் மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தாக்குதல்களுக்கு இலக்காகி, உயிரிழந்தவர்களே காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாகவே காணாமல் போனோரின் உறவினர்கள் கூறி வருவதாக தெரிவித்திருந்தனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை என குறிப்பிட்டார்.

யுத்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டவர்களே காணாமல் போயுள்ளமை யுனிசெஃப் நிறுவத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 4000திற்கும் அதிகமானோர் யுத்தக் காலத்தில் காணாமல் போயுள்ளதையும் அவர் இதன்போது கூறினார்.

யுத்தத்தில் உயிரிழந்து, சடலங்கள் கிடைக்காதவர்களே இந்த காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்த களம் தொடர்பிலான புரிந்துணர்வு இல்லாதவர்களே, இவ்வாறான பிரச்சனைகளை எழுப்பி வருவதாக அவர் கூறினார்.

காணாமல் போயுள்ளதாக கூறிக் கொள்ளும் சிலர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

gotabaya rajapaksaபடத்தின் காப்புரிமை Pmd sri lanka Image caption இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் பாதுகாப்பு செயலராக இருந்தார் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

இதனால், குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் முழுமையான ஆய்வொன்று நடத்தப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது என ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், காணாமல் போனோர் விவகாரத்தை மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என கூறிய ஜனாதிபதி, காணாமல் போனமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பிரகீத் எக்னெலிகொட உயிரிழந்திருக்கும் பட்சத்தில் அவருக்கும் மரண சான்றிதழை வழங்க முடியும் என குறிப்பிட்டார்.

ஜெனீவா விவகாரம்

நாடொன்றிற்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமொன்றை இதுவரை எந்தவொரு நாடும் ஆதரிக்காத நிலையில், இலங்கையை ஆட்சி செய்த கடந்த அரசாங்கமே அதனை ஆதரித்திருந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் தனக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அந்த தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் தாம் ஒருபோதும் ஈடுபட போவதில்லை என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்திருந்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதன் ஊடாகவே அவர்களின் பிரச்சனைகளுக்காக தீர்வை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழர்கள் முதலில் பொருளாதாரத்தை இலக்காகவே கொண்டே போராட்டங்களை ஆரம்பித்திருந்ததாக கூறிய ஜனாதிபதி, பின்னர் அந்த போராட்டங்கள் அரசியல்மயப் படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும், அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில், பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

'19ஆவது திருத்தச் சட்டமே பிரச்சனை'

கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமே, நாட்டின் அரசியல் பிரச்சனைகளுக்கான பிரதான காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

19ஆவது திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டமையினால், நிறைவேற்று அதிகாரத்திற்கும் (ஜனாதிபதி), சட்டவாக்கத்திற்கும் (நாடாளுமன்றம்) இடையில் பிரச்சனை ஏற்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியொருவருக்கு, 19ஆவது திருத்தச் சட்டம் இருக்கின்றமையினால் கடமையாற்ற கடினமாக உள்ளதென அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் காரணமாகவே நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை

மத பயங்கரவாதமொன்று நாட்டில் மீண்டும் தலைத்தூக்காதிருக்கும் வகையில் தான் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

 

அரச புலனாய்வுத்துறை, ரகசிய போலீசார், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளை ஒன்றிணைந்து, அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

மத பயங்கரவாதம் மற்றும் ஏனைய பயங்கரவாதங்களை இல்லாதொழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சிறந்ததாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது இடைகால அறிக்கையிலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகள் விவகாரம்

நாட்டில் அரசியல் கைதிகள் என்ற ஒரு தரப்பு இருக்கின்றமை தொடர்பில் தான் நம்பவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

 

ராணுவ ஆட்சி முறைமை ஏற்படுத்தப்படுகின்றதா?

கடந்த அரசாங்கம் பல ராணுவ அதிகாரிகளை உயர் நிலை கடமைகளில் ஈடுபடுத்தியிருந்த போதிலும், அது தொடர்பில் எவரும் குரல் எழுப்பாத பின்னணியில் தன்னை மாத்திரம் விமர்சித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

நாட்டில் ராணுவத்தினர் சிவில் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ராணுவ அதிகாரிகள் பல்வேறு பயிற்சிகளை பெற்று, சிறந்த தலைமைத்துவத்தை பெற்றிருக்கின்றமையினால், அவர்கள் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனாலேயே தான் ராணுவ அதிகாரிகளை கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.https://www.bbc.com/tamil/sri-lanka-51751694

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனவா்கள் உயிருடன் இல்லை..! பத்திாிகை ஆசிாியா்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மீண்டும் காட்டம்.!

Gota.jpg

காணாமல் போனவா்கள் உயிருடன் இல்லை. அந்த விடயத்தை மறந்து நாங்கள் முன்னோக்கி பயணிக்கவேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மீண்டும் கூறியிருக்கின்றாா்.

இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்தபோது அதனைக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை.

கடத்தப்பட்டமை மற்றும் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பு போரின் பின் நடத்திய ஆய்வில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே முறைப்பாடுகள் பதிவாகியதாவும் 2600 முறைப்பாடுகளில் 08 முறைப்பாடுகளே படையினருக்கு எதிராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட 19ஆவது திருத்தத்தினால் நாட்டின் ஆட்சிமுறை சீர்குலைந்ததாகவும், அதனால் அந்த திருத்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களால் ஊடகங்களுக்கு சுயாதீனமற்ற கருத்து வெளியிடப்படுவதாக நேரடியாக சாடினார்.

மேலும் பொலிஸ்மா அதிபர் மீது நம்பிக்கை இல்லாததினால்தான் பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட்டதாகவும் ஆனால் அரசியல் தலையீடுகள் இல்லை என்றுகூறி இறுதியில் அரசியல் தலையீடுகளே ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே சுயாதீனமாக அவர்கள் செயற்பட இந்த 19ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும்.இதேவேளை இராணுவ மயமாக்கல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், சிவில் நிர்வாக சேவையில் தன்னை விடவும் நல்லாட்சி அரசாங்கமே அதிகளவான இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகத்தில் நியமித்ததாக குற்றஞ்சாட்டினார்.

https://jaffnazone.com/news/16198

முதலில் சிங்கள மொழியில் பெயர் மாற்றம் -> இரண்டாவதாக சிங்கள குடியேற்றம் -> இறுதியாக இனப்படுகொலைகள் .

இவை மூன்றும் சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஆரம்ப நிகழ்வை தடுக்க தவறினால் இறுதி நிகழ்வுகளை நிறுத்த முடியாது .

ஒவ்வொரு சிங்கள குடியேற்றமும் கொடிய இனப்படுகொலையாக தமிழர் நிலத்தில் வெளிவந்தது வரலாறு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

’100 நாள்களில் திருப்தி இல்லை’

 

 

image_ae7abd515c.jpg

ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள், இராணுவ பிரசன்னம், ஜெனீவா தீர்மானம், அரசியல் கைதிகள், பட்டதாரிகள் விவகாரம், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நேற்றையதினம் பதிலளித்தார்.

ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் ஆணையையேற்றுப் பதவியில் இருக்கின்றபோதிலும் பலமான அரசாங்கம் ஒன்றில்லாத காரணத்தால் தன்னால் முழுமையாகப் பணியாற்ற முடியவில்லையெனவும், பொதுத் தேர்தலின் பின்னர் நிலையான, பலமான அரசாங்கம் ஒன்று அமைவதை நாட்டுமக்கள் உறுதிப்படுத்துவதனூடானத் தன் சேவையின் பூரணத்துவத்தை உணரச் செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய, மேலும் தெரிவித்தார்.

"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் இருக்கின்றபோதிலும், அரசமைப்பின் 19ஆவது திருத்தம் சில முட்டுக்கட்டைகளைப் போடுகின்றது. மக்கள் எனக்கான ஆணையைத் தந்திருக்கிறார்கள். அதை முழுமைப்படுத்துவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாம் நிரூபிக்கவேண்டும். அந்த அங்கிகாரத்தையும் மக்கள் தருவார்களேயானால் பல வரப்பிரசாதங்களை அவர்கள் அனுபவிப்பர்" என்றார் ஜனாதிபதி கோட்டா.

"என்னைப் பொறுத்தவரையில் ஒரு தடவை ஜனாதிபதியாக இருந்தாலே பல முழுமையான நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்காகச் செய்யமுடியும். எம் திட்டங்கள் தூரநோக்குடைய திட்டங்களாக இருக்க வேண்டும். அத்தகைய திட்டங்களைத்தான் நாம் முன்னெடுத்துவருகிறோம்" எனவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானம்

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலிருந்து தாம் விலகுவாத அறிவித்தமையால் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும், தமக்கு நாட்டு மக்கள் வழங்கிய அங்கிகாரத்தை ஒருபோதுத் துஷ்பிரயோகம் செய்யப் போவதில்லை எனவும் சர்வதேசத்துக்கு எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில், 'இங்கு சகல இன மக்களும் இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் சுதந்திரமாக வாழும் நிலைமையை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நிவர்த்திசெய்து, நிலையான வாழ்வை உறுதிப்படுத்துவதனூடாகவே அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். அதைவிடுத்து, அரசியல் சுயலாபங்களுக்காகச் சிலர் செய்கின்ற சதிகளுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டோம். சர்வதேச அங்கத்தவர்களைச் சந்தித்து இந்த நிலைபற்றிய விளக்கத்தை நாம் வழங்கியிருக்கிறோம். அவர்களும் அதைப் புரிந்துகொண்டுள்ளார்கள்' என, ஜனாதிபதி கோட்டா தெரிவித்தார்.

"சிங்களம், தமிழ், முஸ்லிம் யாராகினும் இந்நாட்டின் பிரஜைகளாக இருக்கும்போது இந்நாட்டிலுள்ள சகல வரப்பிரசாதங்களையும் பயன்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, அபிவிருத்திகளை அனைவரும் அனுபவிக்க வேண்டும். தெற்கிலுள்ளவர்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றதென. வடக்கிலுள்ளவர்களும், வடக்கிலுள்ளவர்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றதென தெற்கிலுள்ளவர்களும் நினைக்கின்றனர். தெற்கிலே முருங்கை இலை மாத்திரம் சமைத்துச் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் வடக்கிலும் இருக்கிறார்கள். ஆகவே, பிரச்சினைகள் என்பன அனைவரிடத்திலும் இருக்கின்றன. அவற்றைத் தகர்த்து முன்னோக்கிப் பயணிக்க நாம் முனையவேண்டும்" எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கேட்டுக்கொண்டார்.

பட்டதாரிகள் பாதிக்கப்படார்

பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கின்றமையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளதாகவும், பயிற்சியளிப்பதொன்றும் தேர்தல்கால உறுதிமொழிகளாகதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

"பட்டதாரிகளுக்கான நியமனம் என்பதை நாங்கள் ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். அதன்பிரகாரமே தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பித்தன. தனியார் துறைகளில் பணிபுரிந்தவர்கள்கூட அதனைவிட்டுவிட்டு இவ்வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டனர். இப்போது அதை நிறுத்தச் சொல்வது ஏற்புடையதல்ல.

"கட்சி, பிரதேசம் பார்த்து இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை. விண்ணப்பதாரிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கே பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஆகையால் இப்பயிற்சிநெறிகள் ஒருபோதும் தேர்தல்கால அறிவித்தலாகாது. ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் வழங்கிய வாக்குறுதிகளையே தற்போது நிறைவேற்றி வருகிறோம். ஆகையால், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு இவ்விடயங்களை விளக்கிக் கடிதம் அனுப்பப்படும்" என, ஜனாதிபதி தெரிவித்தார்.

காணாமல் போனோர்

'காணாமல் போனவர்கள் பிரச்சினை இரு தரப்பிலும் இருக்கிறது. நான் ஏற்கெனவே பலதடவை இதனைச் சொல்லியிருக்கிறேன். யுத்தகாலத்தில் மரணித்தவர்களின் உடலங்களை மீட்க முடியவில்லை. அத்தகையவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்படுகின்றனர். ஒரு சிலரின் தூண்டுதலால் இப்பிரச்சினையைப் பூதாகரமாக்கப் பார்க்கின்றனர்" என ஜனாதிபதி தெரிவித்தபோது, படையினரிடம் ஒப்படைத்தவர்கள் பற்றியே மக்கள் போராடுகின்றனர் என ஊடகவியலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கையில், "படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர்கள், காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் யுனிசெப், ஆதாரங்களைத் திரட்டி வெளியிட்ட அறிக்கையில், சுமார் 2,600 பேர் சாட்சியம் வழங்கியிருக்கிறார்கள். இவர்களில் ஆறு பேர் மாத்திரமே இராணுவத்தில் தம் பிள்ளைகளை ஒப்படைத்ததாகக் கூறியிருக்கிறார்கள். ஏனையவர்கள் அனைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைத்ததாகவும், யுத்தம் முடிந்த பின்னர் தம் பிள்ளைகளைக் காணவில்லை எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

"எனவே இதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பில் சில கருத்துகளை மாத்திரம் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்ட முடியாது" என்றார் ஜனாதிபதி.

அப்படியானால், காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு ஜனாதிபதியாகிய உங்களின் பொறுப்புக்கூறலென்ன? என ஊடகவியலாளரால் கேட்கப்பட்டபோது, "காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்த களத்தில் இறந்துவிட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான மரண சான்றிதழை நாம் வழங்கத் தயாராக இருக்கின்றோம். தம் சொந்தங்களை இழந்தவர்கள், அச்சோகத்திலிருந்து மீண்டு வரவேண்டும். எதிர்காலத்தை நோக்கிப் பயணித்தால் எதிர்வரும் நூறு நாள்களுக்குள் இந்தப் பிரச்சினைக்கு என்னால் தீர்வு வழங்க முடியும்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

"அப்படியானால் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்க அரசாங்கம் தயாரா?' எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'எக்னெலிகொட தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டால் மரண சான்றிதழ் வழங்குவோம். இதேபோல், காணாமல் போனவர்களில் ஆதாரமுள்ள சில விடயங்களை விசாரணைக்குட்படுத்தவும் நாம் தயாராக இருக்கின்றோம்" என, ஜனாதிபதி பதிலளித்தார்.

இராணுவப் பிரசன்னம்

சிவில் நடவடிக்கைகளில் படையினரை உள்வாங்கியிருப்பது தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்கையில், "எங்களுடைய ஆட்சிக்காலத்திலும் பார்க்க, கடந்த ஆட்சிக்காலத்தில் அதிகளவான இராணுவத்தைப் பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால், அதைப்பற்றித் தற்போது எவரும் பேசுகிறார்களில்லை. அலரி மாளிகையில் எத்தனை இராணுவ வீரர்கள் கடமையாற்றினார்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தில்கூட இராணுவத்தை ஈடுபடுத்தினார்கள். ஒப்பீட்டளவில் கடந்த ஆட்சிக்காலத்தில்தான் அதிகளவான படையினரை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருந்தனர்.

"இராணுவத்தில் கேணல் நிலையை அடைகின்ற வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட அறிவுசார் பயிற்சிகள் மிகப் பயனுள்ளவை. ஒரு கட்டுக்கோப்புக்குள் தம் கடமையைச் செய்யக்கூடியவர்களே படையினர். ஆகையால் அவர்களைச் சிவில் சேவைகளில் இணைத்துக்கொள்வதால் எத்தகைய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய பல நாடுகளிலும் இத்தகைய நடைமுறை இருக்கிறது. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார் அவர்கள் சிவிலியர்கள்தான்" என்றார்.

"ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் இராணுவத் தளபதியை பாதுகாப்புச் செயலாளராக நியமிப்போம் என பகிரங்கமாகத் தெரிவித்தவர்கள்தான் தற்போது இராணுவப் பிரசன்னம்பற்றிப் பிதற்குகின்றனர்" எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாடினார்.

அரசியல் கைதிகள்

"அரசியல் கைதிகள் விவகாரத்தை, தேர்தல் பிரசாரங்களுக்காகப் பயன்படுத்துவீர்களா?" எனக் கேட்கப்பட்டபோது, 'இந்நாட்டில் அரசியல் கைதிகள் இருப்பதாக நான் கருதவில்லை" என ஒன்றை வசனத்தில் பதிலளித்தார் ஜனாதிபதி.

ஆயிரம் ரூபாய் சம்பளம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும், அவர்களின் ஒத்துழைப்புடன் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.

சுயாதீனம் பேணப்படவேண்டும்

சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, சில ஆணைக்குழுக்கள் அரசியல் சுயலாபங்களுக்காக உருவாக்கப்பட்டவையாகவே தோன்றுவதாகவும் சாடினார்.

"சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம்தான் உருவாக்குகிறது. தனிப்பட்ட பிரசாரங்களைச் செய்வதை சுயாதீனம் என்று கூறமுடியாது. பொலிஸ் ஆணைக்குழு எதற்காக உருவாக்கப்பட்டது. 38 ஆண்டுகால சேவை அனுபவமுள்ள பொலிஸ்மா அதிபரின்மீது நம்பிக்கையில்லாமலா பொலிஸ் ஆணைக்குழுவை உருவாக்கினார்கள்? இதனூடாக, பொலிஸ்மா அதிபர் சுயாதீனமற்றவர் என்று கூறமுடியுமா? ஆகையால், அடிப்படையை மாற்ற வேண்டும்" என, ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசியல் எதிர்காலம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுரவுக்கான முழு ஆதரவையும் தான் வழங்கவுள்ளதாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்து வாக்களிக்கும் நடைமுறையை மக்கள் சாத்தியப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, "வடக்கு, கிழக்குவாழ் மக்கள் என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்காமல், வேறு பல புற அழுத்தங்களினாலேயே எனக்கு வாக்களிக்கவில்லை. எதிர்காலத்தில், முகங்களுக்கு அப்பால் சென்று, தேர்தல் விஞ்ஞானத்திலுள்ள தூரநோக்குத் திட்டங்களைப் பார்த்து வாக்களிக்கும் உறுதிப்பாட்டை மக்கள் எடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/100-நளகளல-தரபத-இலல/150-246466

2 hours ago, nunavilan said:

"என்னைப் பொறுத்தவரையில் ஒரு தடவை ஜனாதிபதியாக இருந்தாலே பல முழுமையான நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்காகச் செய்யமுடியும். எம் திட்டங்கள் தூரநோக்குடைய திட்டங்களாக இருக்க வேண்டும். அத்தகைய திட்டங்களைத்தான் நாம் முன்னெடுத்துவருகிறோம்" எனவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தார்.

ஆரப்பாட்ட சதுக்கமும் 'திடீர்' விஜயங்களும் தான் எனது மனத்தில் இந்த 100 நாள் ஆட்சியில் பதிந்து உள்ளன 🙂 இவற்றில் "கிட்ட நோக்கங்கள்" மட்டுமே தெரிகின்றன. 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.