Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா/(கொழும்பு திவான் கந்தையா மகள்)

Featured Replies

அம்மா எப்போ தூங்குவான்னு தெரியாது, காலைல எந்திரிச்சுப் பாத்தா சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கண்ண மூடிக்கிட்டு நிப்பா, வாய் மட்டும் முணுமுணுக்குறது தெரியும், சாமிக்கிட்ட என்ன வேண்டுவான்னு தெரியாது, அநேகமா ஊர்லயே சாமிக்கிட்ட அதிக நேரம் பேசுறது அம்மாவாத்தான் இருக்கும்......
கோயில் பூசாரி கூட சாமியவிட மத்தவங்ககிட்டத்தான் அதிக நேரம் பேசிப் பாத்திருக்கேன், கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல அம்மாவும் சாமிகிட்ட ஏதோ வேண்டிக்கிட்டேதான் இருக்கா, ஆனா, அவ வாழ்க்கைல வேண்டுறது எதுவும் நடந்த மாதிரித் தெரியல....
அம்மாவோட வாழ்க்கை ரொம்ப நீளமானது, அம்மாவோட கதைய சின்ன வயசுல கேக்குறப்பவெல்லாம், கண்ணு விரிச்சு படம் பாக்குற மாதிரி இருக்கும், வெள்ளக்காரங்கிட்ட கணக்கு எழுதுற வேலைல இருந்து தன்னோட திறமையால துரைமாருங்க நம்பிக்கையோட திவானா வளந்தவரு, அம்மாவோட அப்பா......
கறுப்புக் கோட்டுப் போட்டு சாப்பாட்டு மேசைல உக்காந்தா குதிரை வண்டி சத்தம் வெளில கேக்குமாம், கொழும்பு நகரத்துல செல்வச் செழிப்போட வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள்ல அம்மாவோட குடும்பமும் ஒன்னு....
சமையக்காரங்க, தோட்டக்காரங்கன்னு அம்மா ஒரு இளவரசி மாதிரி காடில போயி கான்வென்ட்ல இறங்குவாங்களாம், பெட்டியும், சாப்பாடும் தூக்கிட்டு வந்து கிளாஸ்ரூம் வரைக்கும் விட்டுட்டுப் போற டிரைவரு, துரைமாருங்க புள்ளைங்கள்ளாம் படிக்கிற பெரிய கிறிஸ்தவப் பள்ளிக்கூடம்னு அம்மா நாமெல்லாம் கற்பனை பண்ண முடியாத வாழ்க்கை வாழ்ந்தவ....
பங்களா வாழ்க்கை, வறுமைன்னா என்னன்னே தெரியாத இளமைக்காலத்துல இருந்து சறுக்கி இந்தக் கிராமத்துல வந்து பீடி சுத்திப் பொழக்கற அம்மாவப் பாத்தா ரொம்பப் பாவமாவும், கவலையாவும் இருக்கும், பீடிக்காரம் ஏறி ஏறி ரெண்டு வருஷமா இருமல் வந்துருச்சு, ராத்திரி எல்லாம் இருமிக்கிட்டே சேலத்தலப்புல வாயத் தொடச்சுக்கிட்டே பொரண்டு படுக்கிற அம்மாவுக்கு ஏன் ஆண்டவன் இரக்கமே காட்டலன்னு கோவம் வரும்.....
அப்பாவ சின்ன வயசுல நான் பாத்திருக்கேன், ஆனா ஒரு நாள் கூட அப்பான்னு மனசுல உணர்ந்ததே இல்ல, எல்லாப் பொண்ணுங்களுக்கும் இருக்குற கனவுகளோட அம்மா, கல்யாணம் பண்ணிக் கடல் தாண்டி இந்தக் கிராமத்துக்கு வந்து சேந்தப்ப 20 வயசு, சொந்த ஊருல கட்டிக் குடுத்துறனும்னு தாத்தா அம்மாவக் கொண்டு வந்து நரகத்துல தள்ளிவிட்டு ஒருநா செத்தும் போனாரு....
நாலு வருஷம் வாழ்க்கை நல்லாத்தான் போயிருக்கு, அக்காவும் நானும் பொறந்து ஆடி விளையாடுற வயசுல அப்பா வேல பாத்த ஊர்லேயே இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, அதுக்குப் பெறகு நாங்க யாருமே அப்பாவப் பாக்கல....
பெரியப்பா இருந்த வரைக்கும் ஓடாத் தேஞ்சு தம்பி பிள்ளைகள வளத்தாரு, பம்பாய்ல சேட்டு வீட்ல சமையல் வேல பெரியப்பாவுக்கு, அடுப்பும், சிகரெட்டுந்தான் பெரியப்பாவோட உலகம், வருஷத்துல 15 நாள் பொங்கலுக்கு வந்தா எங்களுக்கெல்லாம் திருவிழாதான், புதுத் துணி, டின் பிஸ்கட்டு, லக்ஸ் சோப்புன்னு வீடே கமகமன்னு இருக்கும்....
வயித்து வலின்னு வந்து படுத்தவருதான் எந்திரிக்கவே இல்ல, பெரியப்பா செத்தப்பறம் தோட்டத்து எடத்துல கீத்துப்பாவி அம்மாவும் நாங்களும் இந்த வீட்டுக்கு வந்துட்டோம், லண்டியன் வெளக்கு வெளிச்சத்துல ராத்திரி எல்லாம் மண்ணு கொழச்சுப் பூசிப் பூசி கீத்துக் கொட்டகைய அம்மா வீடாக்கி வச்சிருக்கு....
அப்பாவுக்குச் சேர வேண்டிய வயல வித்து அக்காவ ஒரு நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக்குடுத்த பெறகு அம்மாவுக்கு எல்லாமே நாந்தான், நாட்டாமைக்காரு, பஞ்சு மில்லு பூமிநாதய்யான்னு கடன உடன வாங்கி அம்மா என்னைய எப்பிடியோ படிக்க வச்சிருச்சு, எனக்கு ஒரு வருஷமா வேல கெடைக்காம சுத்திக்கிட்டு இருக்கேன்.
காலைல குளிச்சு முடிச்சு தலைசீவும் போது அம்மா வந்து நெத்தில விபூதி வச்சு விடும், நானும், கொஞ்ச நாள் ரொம்ப தீவிரமா வேல தேடுனேன், டவுன் வாத்தியாரு யாரோ தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி இருக்காராம்ப்பான்னு அம்மா சொல்லி நானும் பல தடவ அவரப் போயி பள்ளிக்கூடத்துல பாத்தேன், ஆனா, இன்னக்கி வரைக்கும் வேல கெடச்ச மாதிரி இல்ல...
கணேசன், வெங்கடேசன் கூடச் சேந்து ஸ்கூல் கிரௌண்டு, பார்க்கு, எப்பயாச்சும் சினிமான்னு நாள் பூரா சுத்திட்டு இருட்டோட வீட்டுக்கு வந்தா அம்மா தவம் பண்ற மாதிரி பீடி சுத்திக்கிட்டே இருக்கும், அம்மா, பாலுன்னு என்னைய பேரச் சொல்லிக் கூப்பிடறது ரொம்பக் கம்மி, எப்பயாச்சும் யய்யா, யய்யான்னு ரெண்டு மூணு தடவ கூப்புட்டும் கேக்கலைன்னாத்தான் கொஞ்சம் சத்தமா பாலுன்னு கூப்புடும்.
வருஷக்கணக்கா ராத்திரில வந்து நானும், அங்க வேலதேடிப் போனேன், இங்க போனேன்னு பொய் சொல்லுவேன், அம்மா எதுவுமே சொல்லாது, அமைதியா இருந்துட்டு "யய்யா, கையக் காலக் கழுவிட்டு வந்து சாப்பிடு"ன்னு சொல்லும், அம்மா ஒருநாளும் நான் வீட்டுக்கு வாரதுக்கு முந்தி சாப்புடாது.
நான் சாப்பிட்டு கயத்துக் கட்டில்ல படுத்தப்பறமா அம்மா சாப்பிடும், அஞ்சு நிமிஷத்துல அம்மா எப்புடி சாப்புடும்னு தெரியாது, டைனிங் டேபிள்ல உக்காந்து சமையக்காரங்க பறிமாறிச் சாப்பிட்ட மகராசி, தண்ணிய ஊத்திப் பெசஞ்சு வெங்காயத்தக் கடிச்சுக்கிட்டு சாப்பிடனும்னு தலவிதி.
ராத்திரி எல்லாம் கூடத்துல லண்டியன் எரிஞ்சுக்கிட்டே இருக்கும், அம்மாவோட கையி லண்டியன் வெளிச்சத்துல பீடித்தட்டுல இருக்குற எலைய சுருட்டி போயலைய அமுக்கிச் சுருட்டுறது என்னமோ மிஷின் மாதிரி இருக்கும்.
காலைல எந்திருச்சு கெணத்துல இருந்து அஞ்சாறு வாளி தண்ணி எறச்சு வாழ மரத்துக்கெல்லாம் ஊத்தி முடிச்சுட்டு, என் சட்டை பேண்ட்டையெல்லாம் தொவச்சுக் கொடில காயப் போட்டுட்டு குளிச்சு முடிச்சிட்டு சாமிப் படத்துக்கு முன்னாடி ரொம்ப நேரமா அம்மா நிக்கிறப்பத்தான் நான் எந்திரிப்பேன், எனக்கு ஒருமாதிரி இருக்கும்.
திவான் கந்தையா மகளா கொழும்பு நகரத்துல செல்வாக்கா காடில போயி கான்வென்ட்ல படிச்ச அம்மாவ ஒரு நாளும் சைக்கிள்ல கூட உக்காரவச்சு எங்கயாச்சும் கூட்டிப் போக யாருமில்ல, வாழ்க்கை ரொம்பக் குரூரமானது, வறுமையவும், ஏமாற்றத்தையும் யாருக்கு எப்பக் குடுக்குறதுன்னு அதுக்குக் கணக்கே இல்ல, ஆனா அம்மாவுக்கு வாழ்க்கை மேல எந்தக் குற்றச்சாட்டும் எப்பவுமில்ல....
ஒருநா திங்கக் கெழம காலைல டவுன்ல போஸ்ட் மாஸ்ட்டரா இருந்த பெரியசாமித் தாத்தா வீட்டுக்கு வந்தாரு, ஊருக்கதயெல்லாம் பேசி முடிஞ்சு "பார்வதி, புதங்கிழம காலைல அழகேசன் வர்றானாம், தெம்மாப்பட்டு எடங்கெடக்குல்ல, அத விக்கிறதுக்கு ஆள் பாத்துருக்கானாம், பொம்பளப் புள்ளக்கி கல்யாணம் வச்சிருக்காம்மா".
நல்லது கெட்டதுன்னா, அப்பாவுக்கும், எங்களுக்கும் பாலமா இருக்குறது பெரியசாமித் தாத்தாதான், ஒருதடவ அப்பாவுக்கு முடியல, பெரியாஸ்பத்திரில சேத்துருக்குன்னு சொன்னப்ப அம்மா, பீடி சுத்தாம அழுதுக்கிட்டே இருந்ததப் பாத்தேன்......
அம்மா மேலயோ, புள்ளைங்க மேலயோ எந்த அக்கறையும் இல்லாம, நட்டாத்துல அநாதையா விட்டுட்டுப் போன மனுஷனுக்காக ஏன் அம்மா இவ்வளவு எரக்கப்பட்டு அழுகுதுன்னு எனக்குக் கோவமா வந்துச்சு.
பெரியசாமித் தாத்தா அப்பா வர்ற விஷயத்த சொல்லீட்டுக் கெளம்பவும் நான் அம்மாகிட்ட வந்து "எடத்தையெல்லாம், குடுக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே, அந்தாளு இங்கயெல்லாம் வர வேண்டாம்" ன்னு சத்தமா சொன்னேன்.
அம்மா ஒருதடவ நிமுந்து என் மொகத்தப் பாத்துட்டு, "யய்யா, அப்டியெல்லாம் பேசாத, நம்ம வீட்டுப் புள்ள கல்யாணம் ராசா, தங்கச்சிய்யா, அவ வாழ்க்கையும் நல்லா இருக்க வேணாமா?" ன்னுச்சு.
அம்மா கொஞ்சமாப் பேசுனாலும், பேசுறது சத்தியம், ஒருதடவ அம்மா பேசுனா அதுல இருந்து மாறாது, கட்டி வச்சு அடிச்சாலும் அம்மா பேச்ச மாத்தாது, என்னால எதுவும் பேச முடியல, நெத்தில விபூதிய வச்சுட்டு அம்மா கூடத்துல போய் உக்காந்து பீடி சுத்த ஆரம்பிச்சுருச்சு.
கெளம்பி வரும்போது எனக்கு ஒரே கொழப்பமா இருந்துச்சு, அம்மாவோட வாழ்க்கை செழிச்சு வளர்ற காலத்துல, கைப்புள்ளைங்களயும் விட்டுட்டு ஓடிப்போன மனுசனுக்கு எங்கயோ பொறந்த புள்ளைய "நம்ம வீட்டுப் பொம்பளப் புள்ளய்யா, ஒந்தங்கச்சிய்யா" ன்னு சொல்ல ஒரு மனசு வேணும்.
மறுநாள் காலைல, பெரியம்மாவும், கண்ணகி பாட்டியும் வந்து, என்னென்னவோ பேசிப் பாத்தாங்க, "எம்மா, இருக்குறது அந்த ஒத்தப் பிஞ்சதானே, பயலுக்கும் நிலமுன்னு வேணாமா?"
அம்மா எதுவும் பேசல, கடைசியா, அம்மா நிமுந்து பாக்காம கண்ணகி பாட்டிக்கிட்ட சொல்லுச்சு, "வெள்ளக்காரன் மாதிரி படிச்சுட்டு, வேல தேடுறவனுக்குக் காலம் இப்டியேவா அத்த போயிரும், நெலங்கரை, வீடு, வாசல்னு அவனத் தேடி வரும், வீட்டுப் பொம்பளப் புள்ள கல்யாணம் யாரும் தடையா இருக்க வேணாம்".
அம்மாவோட பிடிவாதமும், வைராக்கியமும் ஊரறிஞ்ச விஷயம், பெரியம்மாவும், கண்ணகிப் பாட்டியும் அரவமில்லாம எந்திருச்சுப் போய்ட்டாங்க. அம்மா, நெலத்த விக்குறதுல எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லன்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் குடுத்துருச்சு.
ரெண்டு வாரங்கழிச்சு ராத்திரி வீட்டுக்கு வந்தப்ப, கட்டில்ல கல்யாணப் பத்திரிக்க இருந்துச்சு, பெரியம்மான்னு அம்மா பேரு, அண்ணன்னு எம்பேரு எல்லாம் போட்டிருந்த பத்திரிக்கைய ரொம்ப நேரமா மறுபடி மறுபடி படிச்சுப் பாத்துட்டு மடக்கி வச்சேன். அம்மா, என் வெள்ளச் சட்டயத் தொவச்சு நீலம் போட்டுக் கொடில காயப் போட்டுக்கிட்டு இருந்துச்சு.
எடைல ஒருநாள் பெரியசாமித் தாத்தா வந்து "பார்வதி, கல்யாணத்துக்கு வந்துரனும்மா, என்னமோ நேரங்காலம், நடந்தது நடந்து போச்சு, புள்ளைகெல்லாம் வளந்து பெருசாயிடுச்சுங்க, பழசையே நெனச்சுக்கிட்டு இருந்தா முடியுமா?"ன்னாரு. அம்மா எதுவுமே பேசல, அமைதியாவே இருந்துச்சு.
கல்யாணத்துக்கு மொத நாள் வரைக்கும் அம்மா எதுவுமே பேசல, காலைல நான் வெளில கெளம்புறப்ப அம்மா, "யய்யா, பொழுதோட வீட்டுக்கு வா, வேலையிருக்கு"ன்னு சொல்லீட்டு விபூதி வச்சு விட்டுச்சு.
சாயங்காலம் பொழுதோட வீட்டுக்கு வந்தப்ப, அம்மா, டீப்போட்டுக் குடுத்துச்சு, "யய்யா, காலைல கெளம்பி தங்கச்சி கல்யாணத்துக்குப் போயிரு, வெள்ளனமே எழுப்புறேன்".
காலைல வெள்ளன எந்திரிச்சுக் குளுச்சுட்டுக் கெளம்பி தலை சீவிக்கிட்டு இருந்தப்ப, அம்மா, சாமிப் படத்துக்கிட்ட ரொம்ப நேரமா வாய முணுமுணுத்துக்கிட்டே நின்னு, பலகைல இருந்து அந்த டப்பாவ எடுத்துக்கிட்டு வந்து எங்கைல குடுத்துச்சு, ஊதாக்கலர் பட்டுத்துணி சுத்துன நகை டப்பா, எங்கைலேயே வச்சுத் தொறந்து "2 பவுன் சங்கிலிய்யா, நீ நல்லாப் பெருகி வந்தப்பறமா சீர் செனத்தி செய்யலாம், புள்ள கழுத்துல மனசு நெறஞ்சு போட்டு வுடுய்யா" ன்னு சொல்லுச்சு.
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, அப்பான்னே உணராத ஒருத்தரோட புள்ளைய அம்மா தங்கச்சியா மாத்தி அழுக வச்சுருச்சு. "அம்மா, நீயும் வரலாம்ல" ன்னு கேட்டேன்.
அம்மா திரும்பி நின்னு குலுங்கிக் குலுங்கி ரொம்ப நேரம் அழுதுக்கிட்டே இருந்துச்சு, சேலத்தலப்புல கண்ணத் தொடச்சுக்கிட்டு "நான் வர்ற எடமில்லைய்யா அது"ன்னு அழுத்தமா சொல்லிட்டு, விபூதி எடுத்து நெத்தில பூசுச்சு, சாமி படத்துல இருந்து எறங்கி அம்மாவா மாறி விபூதி பூசுன மாதிரி இருந்துச்சு எனக்கு.
காலம் இப்பிடியேவா போயிரும், கொழும்பு திவான் கந்தையா மகளுக்கும், பேரனுக்கும்........
 
 
கை.அறிவழகன்(FB)

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி தோழர் ..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா வாழ்ந்த சிலகுடும்பங்கள் வாழும் காலத்திலேயே இப்படி திசைமாறி போவதுண்டு....அதேபோல் ஆரம்பத்தில் மிக மிக வறுமையில் இருந்த பல குடும்பங்கள் பின்னாளில் சுகபோகமாய் வாழ்வதுண்டு.....!

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.....!   😁

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையாக வாசித்தேன்..... நல்ல பதிவு. நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.