Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரவும் போர் - உலகப்போர் 2 பாகம் - 11

Featured Replies

கம்யூனிஸமா? நாஸிசிசமா? இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று என்னைக் கேட்டால், நான் கம்யூனிசம் என்று தான் சொல்வேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. 1937 ல் சேர்ச்சில் இப்படி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடான பிரிட்டனை ஆட்சி செய்திருந்த சேர்ச்சில் கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரே காரணத்தோடு தான். கம்யூனிஸம், நாஸிஸம் இரண்டையும் அவர் ஒரே வரிசையில் வைத்து தான் ஒப்பிடுகிறார்.

சாம்பர்லைன் ஹிட்லரை ஆதரிப்பதை தொடக்கம் முதலே சேர்ச்சில் எதிர்த்து வந்திருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். நாம் இணைய வேண்டியது சோவியத்துடன் என்று 1938 முதலே சேர்ச்சில் சொல்லி வந்திருக்கிறார். ஐரோப்பாவை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து வந்தது. பிரான்ஸை வசப்படுத்தியது. பிரிட்டனை தாக்கியது என்று ஹிட்லரை வெறுக்க பல்வேறு காரணங்கள் சேர்ச்சிலிடம் இருந்தன.

கம்யூனிஸத்தை சேர்ச்சில் எக்காலத்திலும் ஆதரித்ததில்லை. சோவியத் எதிர்ப்பை அவர் எந்த நோடியிலும் கைவிட்டதும் இல்லை. என்றாலும் ஹிட்லரை வீழ்த்துவதற்கு சோவியத்துடன் இணைந்தாகவேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு தயக்கம் இருந்ததில்லை.

ஜேர்மனி, சோவியத் மீது போர்பிரகடனம் செய்த போது சேர்ச்சில் ரேடியோவில் அன்றைய தினமே அறிவித்தார். கம்யூனிஸத்தைப் பற்றி நான் இதுவரை சொல்லி வந்த கருத்துக்கள் எதிலும் மாற்றம் இல்லை. ஆனால், சோவியத் இப்போது தாக்கப்பட்டதைப் பார்க்கும் போது முன்னால் சொன்னவை அனைத்தும் மறைந்துவிட்டன, ஜுலை 12, 1941  அன்று பிரிட்டனும் சோவியத்தும் ஒப்பந்தம் செய்துகொண்டன, போர்க் காலத்தில் நமக்குள் உதவி செய்து கொள்ளலாம் என்பது அடிப்படை சாரம்சம்.

 

பேர்ல் துறைமுக தாக்குதல்

கிழக்கு முனையில் சோவியத்திற்கும் ஜேர்மனிக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், டிசம்பர் 7, 1941 அன்று ஜப்பான், பேர்ல் துறைமுகத்தை (Pearl Habour) தாக்கியது. ஹவாயில் இருந்த இந்த துறைமுகப்பகுதியில் தான் அமெரிக்கா தனது ராணுவத் தளத்தை அமைத்திருந்தது. இது நாள் வரை ஒதுங்கி வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவை பேர்ல் துறைமுகத் தாக்குதல் உலுக்கியெடுத்தது. 

பதினெட்டு மாதங்களுக்கு முன்பே ரூஸ்வெல்ட் அமெரிக்கப்படைகளை பேர்ல் துறைமுகத்தில் குவித்து வைத்திருந்தார். ஜப்பானின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தப் படை உதவும் என்று அமெரிக்கா நம்பியது. ஜப்பான் சீனாவுடன் தொடர்ச்சியான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயம் அது. போரைச் சமாளிக்க எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மூலப்பொருட்கள் ஜப்பானுக்கு குறைவின்றி தேவைப்பட்டன. இதை உணர்ந்து கொண்ட நேச நாடுகள் ஜப்பானுடனான வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டன. ஜுன் 1941 ல் இந்த வர்த்தக உறவு முடிவுக்கு வந்தது. எண்ணெய் வளமிக்க பிரதேசங்களான கிழக்கிந்திய தீவுகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றுவது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு ஜப்பான் வந்து சேர்ந்தது. ஐரோப்பா கொடுக்காவிட்டால் என்ன? எமக்கு வேண்டியதை நாங்கள் பறித்துக்கொள்வோம். ஜப்பான் இப்படித்தான் சிந்திக்கும் என்று அமெரிக்காவுக்கு தெரியும். ஆனால் எப்படியாவது தடுத்து நிறுத்திவிடலாம் என்று நம்பியது அமெரிக்கா.

டிசம்பர் 7, 1941  காலை எட்டு மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது. அமெரிக்க கடற்படையின் நான்கு கப்பல்கள் அழிக்கப்பட்டன. 3 ஆயுதம் தாங்கிய க்ரூஸர் கப்பல்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. 188 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். தன் மீது தொடுக்கபட்ட மாபெரும் போராகவே அமெரிக்கா இதை எடுத்துக் கொண்டது. எப்படி இதை அமெரிக்கா அனுமதிக்கலாம் என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பின.

large.1024px-Pearl_Harbor_1941_de_svg.png.c6adcb48aa5f60d0d61cc27edf507aab.png

அடுத்த நாள். ஹாங்காங், மலேசியா, ஷங்காய் மூன்றின் மீதும் போர்ப்பிரகடனம் செய்தது ஜப்பான். ஹிட்லரே அடிபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. கூட்டணியில் இருந்த கோலிக்குண்டு அளவுக்கே உள்ள ஜப்பான் எத்தனை ஆர்ப்பாட்டமாகத் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

மறுநாள், அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பான் மீது போர்ப்பிரகடனம் செய்தன. முன்று தினங்கள் கழித்து டிசம்பர் 11ம் திகதி ஹிட்லர் அமெரிக்கா மீது போர்ப்பிரகடனம் செய்தார். அது குறித்து அவர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி இது தான்.

large.243723347_Perlharborangriffe1941.jpg.202abc6331a4f3f6ebdfe2b542d70d24.jpg

ஒப்பந்த‍த்தின்படி, ஜேர்மனியும் இத்தாலியும் அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் எதிராக போரிட தீர்மானித்துவிட்டோம். ஜப்பானுக்கு ஆதரவாக நாங்கள் போர்ப்பிரகடனம் செய்கிறோம். ரூஸ்வெல்டின் கொள்கை உலகைக் கட்டியாள வேண்டும் என்பது தான். இத்தாலி ஜேர்மனி, ஜப்பான் மூன்றையும் எப்படியாவது அடக்கியாளவேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் விரும்புகின்றன. உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்று இந்த இரு சர்வாதிகார அரசுகளும் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதை ஜேர்மனி அனுமதிக்காது.

இது ஹிட்லரின் முக்கிய தவறு. ஜப்பானே தாக்க ஆரம்பித்துவிட்டதே நாம் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று ஹிட்லர் சிந்தித்திருக்க‍க்கூடும். சோவியத்துடன் ஏற்படும் தொடர் தோல்விகளில் இருந்து விடுபட இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் போன்ற பலம் மிக்க நாடுகளோடு மோதிய அவர் அமெரிக்காவை நேரிடையாக பகைத்த‍து மிகப்பெரிய தவறு. இதுவரை போரில் நேரடி பங்காளராக இல்லாமல் பார்வையாளராக  பிரிட்டனுக்கு உதவிகள் மட்டும் செய்து வந்த‍ அமெரிக்காவை பிரிட்டன் பக்கம் வலுக்கட்டாமாக தள்ளிய ஹிட்லரின் செயல் தோல்வியை நோக்கிய தனது அடிகளில் ஒன்று என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

அமெரிக்காவின் வருகை பிரிட்டனை உற்சாகம் கொள்ளச் செய்தது உண்மை. பிரான்ஸின் வீழ்ச்சிக்கு பிறகு தோதான ஒரு கை பிரிட்டனுக்கு கிடைக்கவில்லை. ஜேர்மனியுடனான போரில் கணிசமான இழப்புக்களை பிரிட்டன் சந்தித்திருந்த‍து. இந்நிலையில் அமெரிக்காவோடு கைகோர்த்துக்கொள்வது அற்புதமான வாய்ப்பு. ஜப்பானின் சமீபத்திய அவதாரம் அச்சமூட்டியது. முஸோலினியும் தன்னால் முடிந்தவரை அங்கே , இங்கே என்று மோதிக்கொண்டிருக்கிறார். இந்த மூன்று நாடுகளும் ஒரணியில் நிற்பது பிரிட்டனுக்கு அச்சுறுத்தல். அதோடு ஐரோப்பாவுக்கும்.

ஜப்பான் விரைவாக சில வெற்றிகளை குவித்த‍து. பேர்ல் துறைமுகத் தாக்குதல் நடந்த இரண்டாவது தினம், பிரிட்டனின் இரு பெரும் கப்பல்களை (Prince of Wales, the Repulse) ஜப்பான் தகர்த்தது. அடுத்த நாள் பர்மாவை நோக்கி முன்னேறியது. டிசம்பர் 26 ம் திகதி ஹாங்காங் ஜப்பானிடம் சரணடைந்தது. ஜனவரி 1942 ல் டச்சு கிழக்கு இந்திய தீவுகளை பாய்ந்து  தாக்கி கையகப்படுத்திக் கொண்டது. அங்கிருந்த எண்ணெய் வளங்களை கைப்பற்றி கொண்டது. பெப்ரவரி 15, 1942 அன்று பிரிட்டனின் எதிர்ப்பையும் மீறி மலேயா முழுவதையும் ஜப்பான் கைப்பற்றியது. கூடவே சிங்கப்பூரில் இருந்த மிகப்பெரிய கடற்படைத் தளத்தையும் சுற்றிவளைத்து தனதாக்கிக்கொண்டது. ஏப்ரல் 1942 ல் இந்திய எல்லைக்கு அருகே வந்து ஜப்பான் நோட்டம் விட்டபோது பிரிட்டன் உச்சக்கட்ட அதிர்ச்சியை சந்தித்தது. அடுத்து ஆஸ்திரேலியா தான் என்று பேச்சு அடிபட்டது.  

பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உறவு மேலும் வலுவடைந்தது. நிதி உதவியும் ஆயுத உதவியும் மட்டுமே இதுவரை அளித்து வந்த அமெரிக்கா பிரிட்டனுடன் ஒரு தொழில் பார்ட்னராக கைகோர்த்துக் கொண்டது. டிசம்பர் 22, 1941 முதல் ஜனவரி 14 1942 வரை வாஷிங்ரனில் நடைபெற்ற மகாநாட்டின் போது, பொதுவான தலைமைக்குழு (Combined Chiefs of Staff committee) ஒன்றை உருவாக்க முடிவு செய்தனர். அமெரிக்கா பிரிட்டன் இரண்டும் இணைந்து போரிடுவதற்கான அடித்தளம் இது. எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்படும்? என்னென்ன உபகரணங்கள், மூலப்பொருட்கள் வேண்டியிருக்கும்? தகவல் தொடர்பை எப்படி முறையாக பயன்படுத்திக்கொள்வது? உளவு நிறுவனங்களிடம் இருந்து எப்படி கூட்டாக தகவல்கள் கேட்டறிவது? போக்குவரத்து ஏற்பாடுகளை எப்படிக் கவனிப்பது? போருக்கு தேவைப்படும் அத்தனை விஷயங்கள் பற்றியும் இந்த கமிட்டி முடிவு செய்தது.

முதலில் ஜேர்மனியை கவனிப்பது என்று திட்டமிட்டார்கள். சோவியத் மீது ஜேர்மனி போர் தொடுத்திருக்கும் இந்த சமயத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோம். இனிமேலும் ஜேர்மனியால்(என்றால் அச்சுநாடுகளால்) ஐரோப்பாவிற்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி செய்வோம். ஜேர்மனியை உடனே தாக்குவோம். இது அமெரிக்காவின் நிலைப்பாடு. பிரிட்டன் தயங்கியது. ஜேர்மனியை தாக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் காலம் கனியட்டுமே. நம்மிடம் உள்ள ஆயுதங்கள் போதாது. ஆட்களும் போதாது. நம் பலத்தை அதிகப்படுத்திக்கொள்வோம். பிறகு தாக்குவோம்.

பர்மா, பிலிப்பைன்ஸ், மலேசியா, டச்சு கிழக்கிந்திய தீவுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை ஜப்பான் ஏப்ரல்1942 ல் கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றிவிட்டது. எதிர்ப்பட்ட நேசநாடுகளின் படைகளையும் விட்டுவைக்கவில்லை. தெற்கு சீன கடல், ஜாவா கடல், இந்து மகா சமுத்திரம் ஆகிய கடல் பகுதிகளை ஒட்டி அமைக்கபட்ட பல தளங்களைக் கைப்பற்றினார்கள். நேச நாடுகளின் தளம் அமைந்திருந்த டார்வின்(ஒஸ்ரேலியா) மீது குண்டுகள் வீசப்பட்டன. அட, ஜேர்மனியைப் போலவே நாமும் பெரிய ஆள் தான் என்று ஜப்பான் பெருமிதப்பட்டுக்கொண்டது.

large.198798828_Mussolini1930.jpg.91db44f8fa9daa310e4b5988d1410229.jpgஜேர்மனியும் ஜப்பானும் ஐரோப்பாவை கலக்கிக்கொண்டிருந்த போது, இத்தாலி சாய்வு நாற்காலியில் படுத்துக்கிடந்தது. கடல் மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் தாக்கி சிசிலியை கைப்பற்றிவிட்டது நேசப்படை. ஜூலை 9, 1943 ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 17 ல்  முடித்துக்கொண்டார்கள். இத்தாலியப்படை ஜேர்மனியப் படை இரண்டையுமே தாக்கி வெற்றிபெற்றிருந்தது நேசப்படை. கையோடு இத்தாலியை நோக்கி நகரவும் ஆரம்பித்தது.

வானத்தில் இருந்து தினம் தினம் குண்டு மழை, நகரங்கள் அலுவலகங்கள், வீடுகள், வீதிகள் குலுங்கி வெடித்தன, மிச்சமிருந்த தொழிற்சாலைகளும் மூலப்பொருட்களை கொண்டு வர முடியாததால் மூடியே கிடந்தன. கரி இல்லை. எண்ணெய் இல்லை. சாப்பாடு இல்லை. மருந்து மாத்திரைகள் இல்லை. எனதருமை இத்தாலி மக்களே, நாம் பீடு நடை போட்டு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் பொறுங்கள். இது போன்ற முஸோலினியின் வழக்கமான பிரச்சாரத்தை மக்கள் உதாசீனம் செய்ய ஆரம்பித்தனர். வாடிகன் ரேடியோவையும் லண்டன் ரேடியோவையும் திருகி உண்மை நிலவரம் அறிந்து கொண்டார்கள். ஆம், இத்தாலி தோற்றுத்தான் போகப்போகிறது.

Edited by tulpen

  • tulpen changed the title to பரவும் போர் - உலகப்போர் 2 பாகம் - 11
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கிறோம், தொடருங்கள்! 

உலகில் தற்போது நடப்பவையெல்லாம் ஏதோ புதிதாக நடப்பதாக நினைபோருக்கு, "இவை ஏற்கனவே நடந்தவை, இப்போது வரலாற்றை அறியாதோரால் மீள அரங்கேறுகின்றன" எனக் காட்ட இது போன்ற தொடர்கள் அவசியம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.