Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

கப்டன் துளசிராம்

Lots-to-Share-with-You-Again-Captain-Thu

கப்டன் துளசிரா! மீண்டும் உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய…

இருள் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. நுளம்புச் சனியன் கை, கால் மூஞ்சி…… ஆ… ச்சீ குத்திக்குத்தி மனுசற்றை உயிரை எடுக்கும். கை அடிக்க…… பற்கள் குளிரில் கிட்டிக் கொள்ளும். வயிற்றுக்குள் குளிர் பந்தாகச் சுருட்டி உள்ளுறுப்புகள் நடுங்கும் குளிர். ஆனால்……?

ஆ……ச்…… ஐயோ தும்மல் வாய்பிளந்து மூக்குளைஞ்சு…… ஆ… ச்… தும்மக்கூடாது; இல்லை நிச்சயம் அடிக்கியபடி……

பாம்பு ஒன்று நொளுநொளெண்டு வளுவளுத்தபடி முதுகாலை வழிய…… ஆட்டி விழுத்தலாம்……? உடல்கூசி…… ஐயோ அசையக்கூடாதே! அசைஞ்சா? ஆசையக்கூடாது அவ்வளவுதான்!

பசியோடு தாகம்…… விழி நித்திரைக்கு யாசிக்கும். விழித்திரு…… விழித்திரு உனக்கு நிறைய விடயம் தேவை நிறையப் பொறுமை தேவை.

அந்த இருளில் நிழலோடு நிழலாய்…… கருமையோடு கருமையாய் ஓ! எங்கள் துளசிராவும் அதில் பச்சையாய் – அந்தப் பெண் வேவுப்புலி கண்கள் சுழல…… காதுகள் தீட்டியபடி எதை எதைப் பார்க்கும்? எதிரியின் நகர்வு, ஆயுதம்…… எல்லாமே தேவை அவளுக்கு. அது முக்கியமானதும்கூட. மீண்டும் ஊர்ந்து…… அட எப்படி முடிந்தது இவளால் இவ்வளவு துரிதமாய்……? ஆச்சரியம் தரும் பெண் துளசிரா.

ஆழ்ந்து சதா சிந்திக்கும் கண்கள். சற்றுக் கோபத்தைப் பூசிய விடுக்கான முகம். அன்பு இதயத்தில் இருந்தும் வார்த்தைகளில் கடுமை பூசி அனுப்பும் துளசி, எதையோ எழுதியபடி…… எதையோ தோழிகளுடன் பகிர்ந்தபடி…… எதையோ வாசித்த…… எதையோ அல்ல, வீரமும் தியாகமும் நிறைந்த கியூபாப் புரட்சி வீரன் ‘சேகுவேரா’ பற்றியோ அல்லது கரிபால்டி லெனின்…… இந்த வரிசையில் அமைந்த புத்தகங்களில் வரும் மனதைத் தொடும் சம்பவங்கள், வாக்கியங்கள்…… சகதோழியருடன் பகிர்ந்தபடி…… ஓ! அது எங்கள் துளசிராவால் முடியும். அது அவளேதான்.

“தத் தெய்தாம் தித் தெய்தாம்” ஜதியின் ஒலியில் நனைந்தபடி நீ ஆசானாய் அபிநயித்தபடி…… உன் தோழியர் ஆர்வத்துடன் பழகியபடி……

“இவளது இன்பங்கள் தொலைந்தது யாரால்?” – கவிதை முழங்கும். திரும்பிப் பார்த்தால், அட…… நம்மடை துளசிரா.

“பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர்……?” கேள்விகள் தொடர்வது அதுவும் எங்கட துளசிராதான்.

வேவு நேரத்தில், “மூதேவி மாதிரிக் கிட்டவாரான் அசையாதை” எனக்கூறி, தனியாக தான் மட்டும் முன்னால் ஊர்ந்து ஊர்ந்து…… தோழியின் காதில் கிசுகிசுப்பாய் கூறியவள் முன்பக்கம் கிடப்பாள்.

ஒரு நாள் சாப்பாடு சரியாக வராததால் அவர்கள் அனைவரும் சோர்ந்தபடி…… “என்ன விசரப்பா மனுசனுக்குப் பசிக்குது” சிணுங்கிய அந்தச் சிறியவளை துளசி அழைத்து பசிக்குதா? பசியை நினைக்காதையுங்கோ…… வேவுப் புலிகள் இப்படிச் சோரக்கூடாது. மனசைத் தைரியப்படுத்துங்கோ. அண்ணாவை நினையுங்கோ. எவ்வளவு கஸ்டம் துன்பம்……” தொடரும் அவளது வார்த்தைகள் பசியை மட்டுமல்ல சோர்வையும் விரட்டும் தன்மைவாய்ந்தவை. துளசி, உன்னால் எப்படி முடிந்தது? நீ வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கண்டவள் போல்…… இனி யார்? இப்படி அவர்களுடன் கதைச்சு……?

கரிபால்டியையும், கீயூபாப் புரட்சியின் ஆன்மார்த்த உணர்வைத் தட்டும் சம்பவங்களையும் கோர்வையாய்க் கண்கள் மின்ன மின்னச் சொல்லும் துளசிரா நீயா……? சோர்ந்து போகும் தருணம் விழி ஏங்கி…… முகம் வானம் பார்த்து……

ஓ துளசி! நீ நினைப்பது……

“அம்மா, என்ரை குஞ்சம்மர் என்னை மன்னி, நீ சீவியத்துக்கு என்ன செய்வாய்? எனக்குத் தெரியும் உன் கஸ்டம். ஆனால்……” …… கண்கள் பனித்து பெருமூச்செறிவாய். மீண்டும் உன் நினைவு தொடரும்……

“நிமிர்ந்திரு அம்மா, உன் பிள்ளைகள் இருவர் போராட்டத்தில்…… என்னை மன்னிப்பாயா?” மானசீக உரையாடல் அது. நட்சத்திரம் இவளை அமைதியாயப் பார்த்துக் கண் வெட்டும். ஆறுதல் அளிக்கும் – இவள் கவிஞை என்பதால்……

துளசிரா எனும் தாமரைச் செல்வியை (இயற்பெயர்) கால்கொஞ்சி அரவணைத்து மகிழ்ந்திருக்க, 1974.08.17 அன்று அவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்த சின்னமணி தவமணி மலைத்து நின்ற நாளாய், அவள் பிறந்தாள். செங்கதிரவன் முகம் பார்க்கும்போது சீண்டும் கடலையும், வானத்து நீலத்தைப் பார்த்தபடி நிமிர்ந்த பனைகளும், மணல்திடல் அராபியப் பிரமைதரும் அந்த வடமராட்சியின் கிழக்குப் பிரதேசமான வல்லிபுரக்குறிச்சி கிராமம் இவளை புதுப் பிரஜையாகச் சோர்த்துக்கொண்டது.

சிறிது காலத்தின் பின், பசுமை படுத்திருந்து சிரிக்கும் கிளிநொச்சியின் 3ஆம் வாய்க்காலில் உன் சிறிய குடும்பம் குடியேறியது. உன்னுடன் ஓடிப்பிடித்து விளையாடி குதூகலித்திருக்க இரு தங்கை ஒரு தம்பி…… என்ன இனிமையானவை இந்த நாட்கள்! அப்பாவின் தோள்களில் தூங்கி…… அப்பாவுடன் நொடு நொடுத்து, ஆயிரம் கேள்விகள் கேட்டு……

அம்மாவின் குங்குமமும் அவர்கள் சந்தோசம் அத்தனையும் வழித்தெடுத்தபடி, அவள் அப்பா 1989 இல் காலமானார். அப்பாவைத் தழுவி மாலை போட்டு சந்தனம் சாத்தி…… அம்மா, அவள்தான் அவ்வளவு துன்பத்தையும் தாங்கியவள். “என்னை, தன்ரை கஸ்டத்தின் விடிவெள்ளியாய் நினைத்து கனவு நிறைச்சு ஏங்கியபடி……” என கலங்கி உரைத்து மௌனித்தழும் துளசிரா.

“அப்ப துளசி ஏன் இயக்கத்துக்கு நீங்கள்……?” என வினவினால் “சீ அது எனது கடமை. எனக்கு வீட்டுக் கஸ்டத்தைவிட நாடு……” தொடரும் அவளது உறுதி. “ஆனா தங்கைச்சியும் என்னைப்போலவே…… அதனால் சந்தோசம் அவள் இறுதிவரை போராட வேணும் இது என்ரை விருப்பம்…… ஏன் கடைசி விருப்பமும்கூட” எனக் கூறும் துளசிரா……

தங்கைக்கு உணர்வும் அனுபவமும் பகிரும் கடிதங்கள்…… ஓ துளசி, நீ வித்தியாசமானவள் தான். அந்த மௌனத்தில் எத்தனை அர்த்தங்கள் அம்மா!

துளசிராவையும் புதுப்போராளியாக மாற்றியது அந்தக் காடு. 13ஆவது பயிற்சி முகாம் அது. அவள் படுத்திருந்து ‘நிலை’ எடுத்த மரம், பதுங்கித் தாக்குதலுக்காய் படுத்திருந்த அந்தப் புல்வெளி…… அவள் படுத்தபடி நிமிர்ந்து பார்த்து கற்பனையில் மிதக்கும் அந்தச் சிறு குடில்…… மரங்களின் இடையில் சிரிக்கும் அந்த நட்சத்திரம்…… எல்லாம் அவளுக்கு அடிக்கடி கியூபாப் போராட்டத்தை நினைவுபடுத்துவதாய்…… முழுப் போராளியாய் திறமையும் ஊக்கமுமாகஇ துளசி எதிரியுடன் யுத்தமாட ஆரம்பித்தாள்.

மாங்களம் எம்மவர் கைகளில் வீழ்ந்த பின் அதைப் பாதுகாக்கும் குழுவுடன் இவளும்……

ஆ. க. வெ. தாக்குதலில் எதிரியின் அங்குல நகர்வுக்கும் பதிலடி கொடுத்த பெண்புலி அணியில், இவளும் மிகவும் மூர்க்கமாக……

‘மின்னல்’ – எங்கள் இதயபூமியில் தாண்டவமாடிய எதிரி நடவடிக்கையில் எதிரியைக் காலொடித்து விரட்டியவர்களில் இவளும் முன்னணியில்……

எதில் நீ உன் திறமையைக் காட்டவில்லை? ‘மின்னலில்’ காலில் காயமுற்று நீ சிறுகால ஓய்வுக்குப்பின்; வேவுப்புலியாய், அப்பப்பா இவளுக்கு எத்தனை அனுபவங்கள்…… மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து…… இருளில் இருளாக…… இலையாகி சருகாகி…… கட்டையாகி…… ஏதோ ஏதோவெல்லாம் இவர்களால் எப்படி? ஓ, இவர்கள் வேவுப்புலிகள். எத்தனை சகிப்புத்தன்மை வேண்டும் இவற்றுக்கு. துளசி, உன்னிடம் அது நிறைந்திருந்தது. உன் விழிச்சிவப்பு அது கூறும்.

இரவு தரும் தனிமை. அந்த மௌனம் தரும் பயங்கரம். கட்டைகள் எதிரியாகி உருவகிக்கும், பயம் தரும் உருவமாக……

திக்கென்று இதயம் அடித்துக்கொள்ளும். இதயம் சுழன்றுபோல்…… அந்த சரசரச் சத்தம். ஒருவேளை அந்த இழவுவிழுவானோ? கிட்டகிட்ட அண்மிக்கும் அந்தச் சத்தம். ‘சடார்’…… இதயம் லப்டப் லப்ட… ப்… நின்றுவிடும்போல் உதறிக்கொள்ளும். அந்த ‘அரியண்ட’ உணர்வு. இது சாதாரணமாய் ஏற்படும் அனுபவம். இதை இவளும் இவள் தோழிகளும் நிதானமுடனும் மிகுந்த சகிப்புத்தன்மையுடனும் பிரித்தறிந்து, அலுக்காமல் இருக்கும் உறுதி. துளசி, நீ இதில் ஊறியவள்.

குளித்து பலநாள் கூட இருக்கலாம். எத்தனை இரவுகள் நித்திரை இழந்து சிவந்துபோன கண்கள். அலுப்பற்ற தொடர் பயணம். ஊர்ந்து…… நடந்து…… கிடந்து…… மறைந்து…… அவன் ‘அசிங்கங்களின்’ மேல் படுத்தபடி கூட எடுத்த தகவல்கள். பகலில் அவற்றின் சாயல் கூட இன்றி துறுதுறுத்தபடி துளசி…… உன்னால் எப்படி இவற்றைத் தாங்க முடிந்தது? அதுவும் அறுவையும் சிரிப்புமாக…… எம் துளசியே உன்னை இழந்துவிட்டோமா நாம்? ஏக்கம் இதயத்தில் வந்தமர்ந்தது.

எத்தனை தடவை துளசியும் குழுவும் அதிர்ச்சியான சம்பவங்களை அலுக்காமல் அனுபவித்து வரும்! நீண்ட நாள் எதிரியின் எல்லையுள்…… இரவில் தம்வீட்டு முற்றத்தில் திரியும் இரவுப்பிசாசுகள் போல்…… கண்கள் சுழன்று…… காதுகள் திரும்பி ஒலி சேகரிக்கும். இரவில் எதையோ தேடும்…… அது தடயமாக…… எதிரியின் நடவடிக்கையாய்…… அவனின் ஆயு…… மொத்தத்தில் எல்லாமே உனக்குத் தேவை. உன் தகவல் சேகரிப்பும் துணிவும் உன்னை சண்டைக்கான சிறந்த வழிகாட்டியாக்கியது உண்மை. அதனால்தான் உன்னை பத்தமேனிச் சண்டையில், உன் நகர்வு…… மிகவும் நுணுக்கமான உன் போர்த் தந்திரம்…… பொறுமை, கண்ணில் காயமுற்ற போதும் நீ மற்றவர்களுக்கு உதவிய உன் பண்பு, தாங்கும் தன்மை…… நீ வேவுப்புலிதான் அதுவும் பெண்புலி.

கம்பிவேலி தாண்டும் இவர்கள் பாதங்களில் ஒன்றை எதிரி கண்ணிவெடி பதம் பார்க்கும். இழுத்தபடி…… அல்லது உயிரைத் தியாகம் செய்யும் அந்தப் புனித யுவதிகளாய்…… கண்ணும் மனமும் பலநாள் பார்த்திருக்கும். எதிர்பாராமல் அது நடந்தது. ‘அட விசரன் மாதிரி ‘போக்கஸ்’ அடிக்கிறான்.’ கிட்டக் கிட்ட இவர்களுக்கு அண்மையில் அவன் அட! பத்து யார் இருக்குமா? இல்லை மூன்று நாலு யார்…… அசையாமல் இறுகியபடி…… அப்பாடி! அங்காலை? ‘அசிங்கம்’ பண்ணியவன் மீண்டபோது இதயமும் மூச்சும் இயங்கும். ஒருவேளை அவன் கண்டால் சிதறும் உடல், சிவந்த தசைத் துகள்களாக்கித் கொள்ளும் தியாகம். துளசிரா நீ எத்தனை இரவை இப்படிச் சந்தித்திருப்பாய்! இவை உன்னைப் பாதிப்பதில்லை. நீ ஓர் திறமையான வேவுப்புலி; அதிலும் பெண்களில் தன்மானம் கூடியவள் நீ.

Captain-Thulasiram.jpg

இவர்கள் மாயப்பிசாசுகள் போல் திரிவது எதிரியின் கண்ணிவெடி விதைத்த வயல்களுக்குள்தான். அதில் பாதை அமைத்து மரணத்தை இருமருங்கிலும் ஒதுக்கிச் செல்லும் துணிவு மிக்கவர்கள்.

இவ்வளவும், இவளை பூநகரிக்கு வேவுப் பணிக்கு அமர்த்தக் காரணமாய் அமைந்தன. கால்கள் நடந்தன் கண்கள் துருவின் கைகள் ஸ்பரிசித்தன் காதுகள் கேட்டன. இருளிலும் தேடிய மறைந்து கிடந்த எதிரியின் அத்தனை விடயமும் தகவல்களாக…… அவை சண்டையாக உருவகம் பெற்று நிமிர்ந்து நின்றது துளசிபோல்.

“அங்கை பார் இந்த ‘போக்கஸ் லைற்’ சண்டை முடிந்து திரும்ப நாம் வரும்போது மானமிழந்து விடும்.” எத்தனை கனவடி உன் கண்களில். ஏன் திரும்பி அதை நீ பார்க்காமலே…… உனை நாம் இழந்துவிட்டோமே துளசிரா.

பூநகரியில் – அந்த ஜில்லித்துப்போன பனித்த இரவு. படையணிகள் பல அணிகளாய் நகர்வதில்…… ஒரு அணிக்கு இவள் பாதைகாட்டி நகர்ந்தாள். உறுதியான உன் நகர்வும் உன் நாவு சொன்னதுபோல் சரியான வெளி. அவ்விடத்தை அடைந்தது அணி. கம்பிக்கட்டுக்கு நீ வைத்த ‘டோபிடோ’ காலைவாரியதால் ஒன்றும் பிசகி நிற்கவில்லை; மாறாய்இ மாற்றுவழி தேடியது உன் கூர்மதி. கைகளால் அத்தனை துரிதமாய், வேகமான பெண்ணாய் இயங்கிய உன் யுத்த அறிவு, அத்தனை ‘பொயின்’றும் கிளியர் பண்ணியது உனது கிரனேற்றுக்கள், பாதையமைத்து விரைந்தாய்; சுழன்றாடினாய்; களம் உன்னைப் பார்த்துத் திகைத்தது. உன் திறமையை நெடுக நெடுக உரைத்து நிமிரும் உன் தோழியர் கண் சிவந்தது எதனால் துளசி? உனை இழந்தோமே…… அதனால்.

உன் கண்களுக்கு தமிழீழத்தைப் பார்க்க ஆசை. ஆனால் நீ இறந்த பின் போராளிக்கு அவற்றை அளிக்கச் சொன்ன உன் நிமிர்வு, அண்ணாவை நினைவுகூர்ந்து பளபளக்கும் அந்தக் கண்கள், வீட்டின் வறுமையில் வாடிச்சிவந்த அந்தக் கண்கள், அறிவினில் ஜொலித்திருக்கும் உன் கண்கள். துளசி, நீ நிறையதான் கனவு சுமந்து நடந்தாய் பூநகரிக்கு. நினைவு இழந்து உயிரிழந்த உன் உடல்…… அதே நிமிர்வுடன் தான் துளசி இருந்தது.

‘போக்கஸ் லைற்’ இல்லை. உன் நினைவு போல் பூநகரி வீழ்ந்தது. எத்தனை உறுதியுடன் கூறிநின்றாய் துளசி!

இறுதிக் கணத்திலும் உன் இனிய இதயம் அந்தப் பாடலை ஏன் கேட்டது?

காற்றே நீயும்தானே பார்த்தாய் அவள் அழுததை. ஏன்…… ஏன் அழுதாள்?

சாவுக்கு நீயே தேதி குறித்தாயா? அல்லது சாவு உனக்குத் தேதி குறித்ததா?

“தாயக மண்ணின் காற்றே நீயும் மூசம்மா, நான் சாகும் நேரம் கடலே நீயும் மூசம்மா” பாடிய தோழி இங்கு குலுங்கிக் குலுங்கி அழுதாள் துளசி. இந்தப் பாடல்வரியில் நீ இனி அடிக்கடி வந்துவந்து போவாய்.

சாகும்போது சாதனைதான் படைத்தாய். உனக்கு அன்று ஓய்வும்கூட. நீ இழந்துபோன அத்தனை நித்திரையையும் வெறியுடன் அனுபவிப்பவள் போல் எத்தனை அழகாய்த் தூங்கினாய் துளசி!

இப்போதெல்லாம்…… “தித் தெய்தாம் தித் தெய்தாம்” என்ற ஜதியில் நீ தெரிவாய்.

வேவு நேரத்தில், அந்த மௌனித்த இருளில் காற்றோடு உன் குரல், “ஏய் கவனம் அசையாதை……” என்பதுபோல கிசுகிசுத்து நிற்கும்.

சிவந்துபோன உன் தோழியர் கண்களில், உனைக் காண்போம் அதை உன் கண்களாய்……

மௌனித்த தோழியில் நீயாக……

ஓ…… அந்த அன்னையின் விசும்பலில் தெறிக்கும் உன் பிரிவுத் துயர்…… அந்த போராளித் தங்கையை இறுகவைத்திருக்கும் உன் இழப்பு…… உன் சின்னத் தம்பி தங்கையின் விழிநீர்த்தரையில் உன் முகமாய்……

உன் அன்னைக்காய், உன் சகோதரர்க்காய் உன் மௌனித்தழும் உன் தோழியர்க்காய்…… நிமிர்வதற்காய்……

காற்றிலே நுழைந்து கவிஞையாய், நடிகையாய், நடன ஆசிரியையாய், சுழன்ற டும் வேவுப் புலியாய், “தத் தெய்தாம் தித் தெய்தாம்” ஜதியில் வந்து போகமாட்டாயா எமக்காய் ஓர் தடவை?

அந்த இருளை ஸ்பரிசித்து, நீயாக நினைத்தது மனம். உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய நிறைய விடயங்கள் துளசி மீண்டும் நீ வா ஒரு தடவை எமக்காய்……!

நினைவுப்பகிர்வு: சீத்தா.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 1994).

 

https://thesakkatru.com/capatin-thulasiram/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கம்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.