Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`கிச்சன், ராஜ்ஜியம் அல்ல; சிறை!' - நம் குடும்பங்களுக்கு #TheGreatIndianKitchen சொல்வது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`கிச்சன், ராஜ்ஜியம் அல்ல; சிறை!' - நம் குடும்பங்களுக்கு #TheGreatIndianKitchen சொல்வது என்ன?

#GreatIndianKitchen

#GreatIndianKitchen

பலரும் நினைப்பது போல இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் மட்டுமல்ல, ஆணாதிக்கத்திற்குத் துணை நிற்கும் பெண்களுக்குமான படமாகவும் இருக்கிறது.

மலையாள இயக்குநர் `ஜோ பேபி’ இயக்கி Neestream தளத்தில் வெளியாகியிருக்கும் The Great Indian Kitchen திரைப்படம், சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. படத்திற்கு பெண்கள் தரப்பிலிருந்து தொடர் ஆதரவும் ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன. குடும்பத்தோடு பார்ப்பதற்கேற்ற படமாக இருந்தாலும் படம் பார்க்கும்போது அம்மாவோ, மனைவியோ `இப்ப தெரியுதா என் அருமை' என்று கடைவாயில் இடிப்பதற்கான அபாயங்கள் இருப்பதால் ஆண்கள் இந்தப் படத்தைப் பார்க்க அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன! 😉😁

#GreatIndianKitchen
 
#GreatIndianKitchen

அப்படியென்ன அபாயகரமான கதை? படத்தில் கதை என்று தனியாய் எதுவுமில்லை. க்ளைமாக்ஸ் தவிர்த்து எஞ்சிய படம் முழுவதும் நம் வீட்டிலும், அக்கம்பக்கத்து வீடுகளிலும் நடக்கும் காட்சிகள்தான். நிமிஷா சஜயனும், சூரஜ் வெஞ்சரமுடுவும் கணவன் மனைவியாக நடித்திருக்கும் இந்தப் படம், `பிக் பாஸ்’ பார்ப்பது போல, அவர்களின் அன்றாட வாழ்க்கையை தினமும் பார்ப்பது போன்றதோர் உணர்வைக் கொடுக்கிறது. மணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் நிமிஷா, காலையில் தூங்கி எழுகிறார். தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என நாள் முழுக்க மூன்று வேளையும் மாமியார் துணையோடு விதவிதமாய் சமைத்து கணவனுக்கும் மாமனாருக்கும் பரிமாறுகிறார். அவர்கள் உண்ட மிச்சங்களையும் சமைத்த பாத்திரங்களையும் கழுவுகிறார்.

இரவு உறங்கி, மறுநாள் காலை எழுந்து, தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என சமைக்கிறார். பாத்திரங்களை தூய்மை செய்கிறார். மறுநாள் காலை எழுந்து திரும்பவும் மூன்று வேளை சமைத்து, பாத்திரம் கழுவி இரவில் அடுக்களையைத் தூய்மை செய்கிறார். மறுநாளும் அதையே செய்கிறார். இதை திரும்பத் திரும்பப் படிக்கும் போதும், திரைப்படத்தில் இதே காட்சிகளை திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும் நமக்கு ஒரு சலிப்பு தட்டுகிறதில்லையா? அந்த சலிப்புதான் படத்தின் மையப்புள்ளி. திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கே அலுப்பாயிருக்கும் விஷயங்களை, நாள் கணக்கில் வருடக்கணக்கில் ஓயாமல் செய்து கொண்டேயிருக்கும் வீட்டுப் பெண்களுக்கு அது எவ்வளவு சலிப்பாய் இருக்கும்? ஒரு குடும்பத்தில் சமையலும் வீட்டு வேலைகளும் பெண்களுக்கு மட்டுமே உரியவையா என்று யோசிக்க வைப்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம்.

#GreatIndianKitchen
 
#GreatIndianKitchen

படத்தில் வில்லன்கள், சதிகாரர்கள் என்று எவருமில்லை. மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமியாரோ, சிகரெட்டால் சூடு வைக்கும் கொடூர கணவனோ இல்லை. ஆனால் காட்சிக்கு காட்சி வன்முறை ஒளிந்திருக்கிறது. கதாநாயகன் அலுவலகம் செல்லும் முன்பாக மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுச் செல்லும் அன்பான கணவன்தான். ஒரு சாயலில், நம்முடையதே போல அழகான, அன்பான, பாரம்பர்யமும் பண்பாடும் கொண்ட, ஊருக்குள் மரியாதையான குடும்பம்தான் அது. ஆனால் உற்று கவனித்தால் மட்டுமே அந்த மரியாதை, குடும்பம் என்ற அமைப்பிற்கும் அதன் தலைவர்களான ஆண்களுக்கும் மட்டுமே உரியது, பெண்கள் அவ்வமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களாகவோ அல்லது அடிமைகளாகவோதான் இருக்கிறார்கள் என்ற உண்மை கண்களுக்குப் புலப்படுகிறது.

 

படத்தில் மாமனாராக உடல் வலுவற்ற மெலிந்த ஒரு முதியவர் இருக்கிறார். நாள் முழுக்க ஈஸிசேரில் அமர்ந்து பேப்பர் படிக்கிறார். போனில் வாட்ஸ்அப் பார்க்கிறார். இறைவழிபாடு செய்கிறார். மருமகளை வாய்நிறைய `மகளே’ என்றழைக்கிறார். எவருக்கும் மனதால் கூட எந்தத் தீங்கும் நினைக்காத நல்ல மனிதராகக் கூட இருக்கலாம். குடும்ப உயர்வுக்காக, மகனை படித்து ஆளாக்குவதற்காக ஓடி ஓடி உழைத்தவர் வயதான காலத்தில் இப்படி நிம்மதியாக வாழ்வது நியாயம்தானே? அவருக்கு வீட்டில் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள்தான். மிக்ஸியில் சட்னி அரைத்தால் ருசிப்பதில்லை. அம்மிதான் ருசி! குக்கரில் சாதம் வைத்தால் பிடிக்காது. அதை மட்டும் விறகடுப்பில் பாத்திரத்தில் சமைக்க வேண்டும். அவருடைய துணிகளை மட்டுமாவது வாஷிங்மெஷினில் போடாமல் கையில் துவைக்க வேண்டும். நேற்று வைத்த குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து இன்று சூடு பண்ணிக் கொடுக்கக் கூடாது. காலையில் பிரஷையும் டூத் பேஸ்டையும் யாராவது கொண்டு வந்து கையில் கொடுக்க வேண்டும். அவர் வெளியே கிளம்பும்போது, குரல் கொடுத்ததும் யாராவது செருப்பைக் கொண்டு வந்து காலருகே வைத்தால் போதும். அவரே போட்டுக் கொள்வார். வீட்டுப் பெண் வேலைக்குப் போவது அவருடைய கவுரவத்திற்கு அத்தனை பொருத்தமாக இல்லை. பெண்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து குழந்தைகளை சான்றோர்களாய் வளர்த்து ஆளாக்குவதே பிரதம மந்திரிகளின் பதவிக்கு நிகரானது என்பது அவர் கருத்து.

#GreatIndianKitchen
 
#GreatIndianKitchen

இவ்வளவுதானே? ஒரு குடும்பத் தலைவர் இதைக் கூட எதிர்பார்க்கக் கூடாதா? என்றால், ``கூடாது” என்பது தான் இப்படம் உரக்கக் கூறும் பதில்.

60 வயதில் தான் எடுத்துக் கொள்ளும் ஓய்வை, தன் மனைவி எத்தனை வயதில் எடுத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனை ஆண்களுக்கு வருவதே இல்லை. `என் வீடு என் உரிமை’ என்று குடித்த இடத்திலேயே காபி டம்ளரையும், மேசை மீது உணவுண்ட மிச்சங்களையும், கண்ட இடத்தில் அழுக்குத் துணிகளையும், படுக்கையின் மீது ஈரத்துண்டையும் போட்டு வைக்கும் ஆண்களுக்கு அந்த வீட்டின் தூய்மையிலும் ஒழுங்கிலும் தனக்கும் பங்கிருக்கிறது எனத் தோன்றுவதில்லை.

ஒரு குடும்பத்திற்குள் புதிதாய் நுழையும் பெண்ணிடம், ``இது எங்க வீடு. இங்க நீ இருக்கணும்னா நாங்க சொல்றபடிதான் இருக்கணும்” என்று சொல்வதற்கும், ``இது உன் வீடும்மா. இதோட நல்லதும் கெட்டதும் உன்னோட பொறுப்பு. இங்க எல்லாத்தையும் நீதான் பார்த்துக்கணும்” என்று சொல்வதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. சொல்லும் தொனிதான் மாறுகிறதே தவிர செய்யும் வேலை ஒன்றுதான்.

The Great Indian Kitchen மலையாளத்திற்குப் புதிதாக இருக்கலாம். தமிழில் எழுத்தாளர் அம்பை எழுதிய, ``வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற அபாரமான சிறுகதை இந்தியக் குடும்பங்களில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதை பல வருடங்களுக்கு முன்னரே முன்மொழிந்திருக்கிறது.

``ஒளியற்ற, ஜன்னல் அற்ற குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால் போல், ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப் போட்டன. கால்கள் இறுக்க இறுக்கக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்து கொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகள் எடுத்தனர்.”

#GreatIndianKitchen
 
#GreatIndianKitchen

என்று அந்தச் சிறுகதை காரசாரமாய் சாடியிருப்பதைத்தான் இங்கே 100 நிமிடங்களில் ஓடும் காட்சிகளாய் மாற்றியிருக்கிறார்கள்.

பலரும் நினைப்பது போல இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் மட்டுமல்ல, ஆணாதிக்கத்திற்குத் துணை நிற்கும் பெண்களுக்குமான படமாகவும் இருக்கிறது. பெண்கள் தங்களை கிச்சன் குயின்களாக முடிசூட்டிக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் வரையில், ``அவருக்கு சகலத்துக்கும் நான் வேணும். தானா சுடு தண்ணி கூட வெச்சுக்கத் தெரியாது” என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வரையில், குடும்பம் என்ற அமைப்பு அட்டைப்பூச்சி போல அவர்கள் மேல் ஒட்டிக் கொண்டு ரத்தத்தை உறிஞ்சுவதைத் தடுக்க முடியாது.

- காயத்ரி சித்தார்த்
 
https://cinema.vikatan.com/women/an-analysis-on-the-great-indian-kitchen-movie
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி உடையார்.....ஏதோ ஆண் மட்டும் 60 வயதில் ஓய்வெடுக்கிறான் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். சுத்தப் பொய்........!   🤔

இதற்கு பதில் எழுதலாம் என்றால், படத்தை பார்க்காமல் வரும் விமர்சனங்களின் அடிப்படையில் அதைப்பற்றி எழுதவே கூடாது சொல்வார்கள் என்பதால் எழுதவில்லை. சரி, படத்தை பார்க்கலாம் என்றால், ஆங்கில சப் டைட்டில் கூட இல்லாமல் IPTV யில் படம் இருக்கின்றது. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

The Great Indian Kitchen

The Great Indian Kitchen

—   ஆரதி — 

எல்லோரும் “வெளியே புரட்சித் தலைவர். வீட்டில் நடிகர் திலகம்” என்று இசையின் கவிதை ஒன்றில் ஒரு அடிவரும். கணவர்களின் – ஆண்களின் இரட்டை உலகத்தை இதை விடச் சிறப்பாக, பகடியாக வேறு எப்படிச் சொல்ல முடியும்? ஏறக்குறைய அப்படித்தான்  The Great Indian Kitchen படத்தைப் பார்த்தபோதும் தோன்றியது.  

இது ஒரு மலையாள மொழித் திரைப்படம். ஆனால், அச்சு அசலாக நம்முடைய கதையாக, நம் நிலையாக அப்படியே நமக்குப் பொருந்தியுள்ளது. சிறந்த எந்தக் கலை வெளிப்பாட்டுக்கும் இந்தப் பண்பிருக்கும். சினிமாவில் இது இன்னும் நெருக்கமாக இருப்பதுண்டு. அந்த நெருக்கத்தை The Great Indian Kitchen என்ற இந்தப் படமும் தருகிறது. 

திருமணமாகி மணமகன் வீட்டுக்கு வரும் பெண், அந்தக் குடும்பத்துக்கு ஏற்ற மாதிரித் தன்னை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தமே கதை. இதில் அந்தப் பெண் வெறும் பொம்மையாக்கப்படுகிறாள். ஆனால், அதற்கு அவளால் முடியாமலுள்ளது. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இதில் அதிக சிக்கல்களில்லை. நிலைமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தம்மைச் சுதாகரித்துக் கொள்வதே பெரும்பாலான பெண்களுடைய வழக்கமாகவும் வாழ்க்கையாகவுமிருந்தது.  

ஆனால், இன்றைய பெண்கள் அதற்குத் தயாரில்லை. கல்வியும் சமூக வளர்ச்சியும் பெண்களின் சுயாதீனத்தைக் குறித்து சிந்திக்கவும் எழுச்சியடையவும் வைத்துள்ளன. இந்த வளர்ச்சியினால் உண்டாகும் முரணே The Great Indian Kitchen. 

வெளியே புரட்சி, மாற்றம், முன்னேற்றம் பற்றியெல்லாம் கதைக்கும் அல்லது இவற்றுக்காக முயற்சிக்கும் ஆண்கள், வீட்டில் மாற்றங்கள் ஏதுமில்லாத பழமைக்குள் ஊறிக்கிடக்கிறார்கள். குடும்பப்பாரம்பரியம், வழமை, இதென்ன பெரிய விசயம். இதெல்லாம் இயல்புதானே! என்றவாறு இருக்கும் –இயங்கும் ஆண்களாக இருக்கிறார்கள்.  வீட்டுப் பணிகளைச்செய்வதும் குடும்பத்தைப் பராமரிப்பதும் ஆணின் –ஆண்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதுமே பெண்களுடைய கடமை. அதுதான் அவர்களுடைய பொறுப்பு. அவ்வாறு வாழ்வதே பெண் வாழ்க்கை என இவர்கள் நம்புகிறார்கள்.    

அப்படி நம்புவதால்தான் அவர்கள் பத்திரிகை படிப்பார்கள். வாட்ஸப்பில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பர். அல்லது முகப்புத்தகத்தில் எதையாவது நோண்டிக் கொண்டோ மேய்ந்து கொண்டோ இருப்பார்கள். அல்லது யாராவது நண்பர்கள் வந்தால் சுவாரஷ்யமாக கதைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படியே வெளியே கிளம்பி எங்காவது சுற்றி விட்டுக் களைப்போடு வருவதாக தண்ணீரோ தேநீரோ கோப்பியோ கேட்பார்கள். இரவுகூட தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதும் அதிலே போகும் விவாதங்களைக் கேட்பதும் அவர்களுக்கு முக்கியமாக இருக்கும். ஆனால், பெண்கள் இதற்கெல்லாம் அப்பாலானவர்கள். அதிலும் மனைவி என்று வந்து விட்டால், தேநீர் ஊற்றிக் கொடுப்பதில் ஆரம்பித்து சமைப்பது (மூன்று வேளைக்கும்) துணி துவைப்பது, வீட்டைத் துப்பரவாக்குவது, பாத்திரங்களைக் கழுவுவது தொடக்கம் படுக்கை விரிப்பது வரையில் அத்தனையும் செய்ய வேண்டும். இதொன்றும் புதியதல்ல. ஏனென்றால் நம்முடைய பெரும்பாலான குடும்பங்களின் அடையாளமும் நிலையும் இதுதான். ஒவ்வொரு நாளும் வேளையோடு எழுந்திருப்பதும் பெண்தான். பிந்தித் தூக்கத்துக்குச் செல்வதும் பெண்தான். அதற்கிடையில் ஓய்வொழிச்சல் இல்லாமல் அத்தனை வேலைகளையும் அவர்கள் செய்து தீர வேணும்.  

இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் அவர்களுக்கு இரட்டைச் சுமை. ஒன்று வெளியே உள்ள வேலை. சம்பாத்தியத்துக்கானது. வீட்டில் வீட்டு வேலைகள், பிள்ளைகளையும் கணவரையும் பராமரிப்பது எனத் தொடங்கி படுக்கையை விரித்துச் சரி செய்வது வரையில் ஏராளம் ஏராளம் வேலைகள். வீட்டுக்கு யாரோ ஒருத்தர் வந்தாலும் அவர்களை வரவேற்று ஒரு தேநீர் கொடுப்பதாக இருந்தாலும் அதைப் பெண்களே செய்ய வேண்டும். எழுதப்படாத விதியாக – ஒரு நியதிபோல நாம் இதை ஆக்கி வைத்திருக்கிறோம். மட்டுமல்ல, இதில் எந்த மாற்றமும் வந்து விடக் கூடாது என்று இதைத் தொடர்ந்து பராமரித்துக் கொண்டுமிருக்கிறோம். இதொன்றும் புதியதல்ல. ஏனென்றால் நம்முடைய பெரும்பாலான குடும்பங்களின்  அடையாளமும் நிலையும் இதுதான். 

இதையெல்லாம் தினமும் எந்தக் குறையும் இல்லாமல் செய்த பிறகுதான் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான எதையும் செய்யலாம். இல்லையென்றால், உனக்கு என்னதான் தெரியும் என்று தொடங்கி ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகி விடும்.  

குடும்பம் என்ற அமைப்புக்குள்ளே பெண்களுக்கான இடம் என்பது மிகக் குறுகலானதாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை ஆண்களும் உணர்ந்து கொள்வதில்லை. பெரும்பாலான பெண்களும் பழகிய, வழமையான ஒன்றாகவே குடும்பத்தின் நன்மைக்காக என்ற எண்ணத்தில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து விடுகிறார்கள். இதையே The Great Indian Kitchen கேள்விக்குள்ளாக்குகிறது. 

இதற்கு நல்ல உதாரணம், “அம்மா என்ன செய்கிறா?” என்று பிள்ளைகளிடம் கேட்டால், “வீட்டில் சும்மா இருக்கிறா” எனச் சொல்வார்கள். ஆனால் வீட்டிலிருக்கும் அம்மா தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை கிலோ அரிசியைச் சோறாக்கியிருப்பா?எத்தனை லீற்றர் தண்ணீரைக் கொதிக்க வைத்திருப்பா? எத்தனை ஆயிரம் இடியப்பத்தை, தோசையை, றொட்டியை, இட்லியை ஆக்கிப் போட்டிருப்பா? எவ்வளவு துணியைத் துவைத்துப் போட்டிருப்பா? எவ்வளவு நிலத்தைக் கூட்டிப் பெருக்கியிருப்பா? இப்படி எத்தனை உழைப்பு? ஆனால் இதெல்லாம் கணக்கில் இல்லை. 

இதைக்குறித்து எந்தப் பிரக்ஞையும் (உணர்தலும்) அவர்களுக்குள் நிகழ்வதில்லை. 

பெண்கள் என்றாலே சமைத்து போடவும் துணி துவைக்கவும் அப்பறம் இரவில் ..வும் என்ற நிலையில் தான் ஆண்களின் பகுத்தறிவும் படிப்பறிவும் உள்ளது.    

அநேகமான ஆண்கள் நினைப்பது திருமணம் செய்வதே மேலே குறிப்பிட்ட செயல்களை செய்யத்தான் பெண்கள் என்று. இது எழுதப்படாத  விதிமுறையாக இருக்கிறது. அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்குச் செருப்படி கொடுத்துள்ளது இந்தப்படம். 

“மாவு முடிஞ்சு போச்சுது ..வாங்கி கொண்டு வாறீங்களா?” என்றால், 

“அரிசி உளுந்து ஊறப்போட்டு அரைச்சு வச்சால் ஒரு கிழமைக்குப் போதும். 

அதைச் செய்யத் தெரியாதா? எப்ப பார்த்தாலும் கடைக்குப் போய்த்தான் எதையும் செய்யோணுமா?”  என்று பதில் வரும். 

“வெங்காயம் தக்காளி அப்படியே குழம்புக்கும் பொரியலுக்கும் எதாவது பார்த்துக் கொஞ்சம் காய் கறி வேணும்” என்றால் 

“இரவுக்கு என்ன செய்ய வேணும், நாளைக்கு என்ன செய்ய வேணும் எண்டெல்லாம் யோசிச்சு வாங்கி வைக்க மாட்டியா? கடைசி நேரத்துல அது வேணும் இது வேணும் எண்டு ஒரே இம்சை…” என்ற பதிலடிதான் கிடைக்கும். 

“வீடு பூரா துணிமணி..மடிச்சு வெச்சாதான் என்ன?” என்ற திட்டு வேறு. 

இதற்கு “ஒரு செட் தோய்ச்சுக் காயிறதுக்குள்ள அடுத்த செட் வந்து குவியுது.. இருக்கிற நாலு பேருக்கு வீட்டுக்கு போடுறது, ஒபீஸ்க்கு போடுறது, வெளியே போடுறதுக்கு எண்டு தினமும் ஒரு மலை சேருது..” என்று யதார்த்தை – உண்மையைச் சொன்னால் – 

“அதுக்கென்ன செய்யிறது? போடாம வெளியே போகட்டுமா?” என்று மறுத்தான் கிடைக்கும். 

போதாக்குறைக்கு – “ஒரு நாளாவது சிங்க்ல பாத்திரம் இல்லாம இருக்கா? ஏனிப்பிடிக் குவிஞ்சு போய்க் கிடக்கு?” என்ற கேள்வி வேறு. 

“ரீ குடிச்ச கப், சமைச்ச பாத்திரங்கள், சாப்பிட்ட தட்டுகள் என்ற குறைஞ்சது அஞ்சு தடவ பாத்திரம் கழுவுகிறேன்.. கை வலிக்குது..” என்று நிலைமையைச் சொன்னால்… 

“அப்பப்ப கழுவினா இவ்வளவு சேரவே சேராதே.. நீ சோம்பேறி. அதுதான் இப்பிடி… எங்கட அம்மாவும் அஞ்சு ஆறு பிள்ளைங்களைப் பெத்து வளர்த்து ஆளாக்கினவாதான். ஒரு நாள் கூட இப்படியெல்லாம் புலம்பினதே இல்லை” என்று கிடைக்கும் பதில். 

“அம்மாவுக்கு ஏதோ அவசரமாம்.. கொஞ்சம் பணம் அனுப்பினேன்” என்றால் – 

“யாரை கேட்டு அனுப்பின? நீயும் உழைக்கிறாய் என்ற திமிர்தானே!” என்பார்கள். 

இப்படியே உன்ரை சமையல் போல வருமா என்று ஏமாற்றித் தந்திரமாக ஆதிக்கம் செய்வார்கள். அல்லது சமைக்கிறதுதான் ஒரே வேலை. அதைக் கூட உருப்படியா நீ செய்ய மாட்டியா? என்று திட்டி ஆதிக்கம் செய்வார்கள். ஒன்று உழைக்கும் மனைவியிடம் தந்திரம் செய்வது. அடுத்தது, வீட்டில் இருக்கும் மனைவியிடம் அதிகாரம் செலுத்துவது. சில விதிவிலக்குகள் காய்கறி நறுக்கி கொடுப்பது, தேங்காய் துருவிக் கொடுப்பது என்ற ஏமாற்றும். இப்படியே சம்பளமில்லாத வேலைக்காரிகளை அம்மா அக்கா மனைவி தோழி என்று கொஞ்சி, குலாவி அவர்கள் வேலை செய்ய மட்டுமே பிறந்தவர்கள் என்று  அவர்களையே நம்ப வைத்து அல்லது அப்படி ஏற்க வைத்து காரியம் பார்க்கிற ஆண்களின் உலகத்தை – குடும்பம் என்ற அமைப்பின் சீர்கேட்டை உடைக்கிறது The Great Indian Kitchen. பெண்களைப் புரிந்து கொள்ள மறுக்கும் அவர்களுடைய உணர்வுகளை மறுதலிப்போரை கேள்விகளின் முன்னே நிறுத்துகிறது. வேறு யாரையுமல்ல, உங்களைத்தான். 
 

 

https://arangamnews.com/?p=3521

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.