Jump to content

ஆந்திர கிராமத்தில் ஆணின் பிறப்புறுப்பு வடிவில் சிவன் சிலை - அரிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • வி. சங்கர்
  • பிபிசி தெலுங்கு மொழி சேவைக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கோயில்

மனிதர்களின் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களின் வழிபாட்டு வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் மனிதர்கள் இயற்கை, கல், மனித உடல் உறுப்புகள் என பல வடிவிலும் இறைவனை வணங்கி இருக்கிறார்கள்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் யேர்பேடு மண்டலத்தில் அமைந்திருக்கும் குடிமல்லம் எனும் ஊர், அங்கு இருக்கும் சிவன் கோயிலுக்குப் புகழ் பெற்றது. இந்த பிரபலமான கோயில் இருக்கும் ஊர் திருப்பதி நகரத்துக்கு அருகில் தான் இருக்கிறது.

இந்தக் கோயில் ஆணின் பிறப்புறுப்பு போன்ற லிங்க வடிவில் இருப்பதாக அறியப்படுகிறது.

இந்த கோயில் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வழிபாடுகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தான் அனுமதிக்கப்படுகிறது.

இந்த கோயிலில் சில தனித்துவமான விஷயங்கள் இருக்கின்றன.

சிவனின் உருவம், லிங்கத்தின் முன் பக்கத்தில் ஒரு ஆட்டை கையில் வைத்திருப்பது போல இருக்கிறது. இப்படிப்பட்ட தத்ரூபமான சிலைகள் சைவ சமய பாரம்பரியத்தில் மிகவும் அரிதானது. இதே போன்ற அரிதான சிவன் சிலைகளை ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஹேமாவதி கிராமத்தில் பார்க்கலாம்.

ஆணின் பிறப்புறுப்பு வடிவில் சிவலிங்கம்

சிலை

குடிமல்லம் கிராமத்தில் இருக்கும் கோயிலில், ஆணின் பிறப்புறப்பு வடிவத்தில், 7 அடி உயரத்தில், தலையில் தலைப்பாகையும், இடுப்பில் வேட்டியும் கட்டி இருப்பது போல சிவனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்து புராணங்களில் யக்‌ஷன் என்றழைக்கப்படும் உயரம் குறைவான ஒருவரின் தோலில் நிற்பது போல இருக்கிறது அந்தச் சிலை.

சிலையில் இருக்கும் சிவனின் ஆடை முறை, ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்த சிவன் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இக்கோயிலின் முதன்மைச் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி கூறுகிறார்.

"முந்தைய நாகரிகத்தில் பெண்கள் தலைமை தாங்கி சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருந்த காலம் அது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அப்போது மக்கள் பெண்களின் பிறப்புரிப்பை (யோனியை) வழிபட்டார்கள். ஆண்களின் ஆதிக்கம் அதிகரித்த பின், ஆண்களின் பிறப்புறுப்பை வழிபடுவது நடைமுறைக்கு வந்தது" என்கிறார் ராமச்சந்திரா.

முந்தைய கால கோயில்

இந்த கோயிலை பரசுராமேஸ்வர சுவாமி கோயில் எனவும் கூறுகிறார்கள். இந்த கோயில் கிறிஸ்துவுக்குப் பின் இரண்டாவது அல்லது மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என இந்தியாவின் தொல்பொருள் துறை கூறுகிறது.

தெலுகு மொழியில் பள்ளம் என்றால் தாழ்வாக இருக்கும் பகுதி என்று பொருள். இந்த கோயில் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதாலேயே இக்கோயில், நாளடைவில் குடிமல்லம் கோயில் எனப் பெயர் பெற்றுவிட்டது என `ராயலசீமா பிரசித்த ஆலயலு` என்கிற புத்தகத்தில் இ.எல்.என் சந்திரசேகர் ராவ் கூறுகிறார்.

ஸ்வர்னமுகி ஆற்றங்கரையில் அழகாக அமைந்திருக்கிறது இக்கோயில். நதியில் நீரின் அளவு குறைந்துவிட்டதால் காலப் போக்கில் நதி மற்றும் கோயிலுக்கு இடையிலான தொலைவு அதிகரித்துவிட்டது என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஆனால் மழைப் பொழிவு அதிகரித்தால் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து, கோவிலின் கருவறையில் இருக்கும் சிலையைத் தொடும் அளவுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த 2004-ம் ஆண்டு மழை பொழிவின் போது அப்படி நடந்தது.

சிலை

இந்த குடிமல்லம் கோயில், ஆந்திர பிரதேசத்தை சதவாஹனர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தைச் சேர்ந்தது என இந்திய தொல்லியல் துறை கூறுகிறது. இருப்பினும் இந்த சிலை, மெளரியர் காலத்தில் நிறுவிய சிலைகளை ஒத்து இருப்பதாக ஈமணி சிவநாகி ரெட்டி என்கிற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இவர் `குடிமல்லத்தின் வரலாறு` என்கிற பெயரில் ஒரு புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.

"அச்சிலையின் பின் புறத்தில் ஆணின் பிறப்புறுப்பும், முன் புறத்தில் யக்‌ஷனின் தோலில், இரண்டு கைகளில் விலங்குகளோடு ருத்ரன் நிற்பது போல சிலை அமைந்திருக்கிறது. மெளரியர் காலத்தில் கட்டப்பட்டதற்கான குறியீடுகள் இருக்கின்றன. இக்கோயிலின் அடித்தளம் சதவாஹன காலத்தைச் சேர்ந்தது போலத் தெரிகிறது. இந்தச் சிலை சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கிறது. எனவே இது ஒரு பழங்கால கோயில்" என சிவநாகி கூறுகிறார்.

தீவிர ஆராய்ச்சி

1911-ம் ஆண்டு கோபிநாத் ராவ் இந்த கோயிலில் சர்வேக்களை நடத்தியதாக ஆதாரங்கள் கூறுகின்றன. இந்திய தொல்லியல் துறையும் பல ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளை இங்கு நடத்தி இருக்கிறது.

1908-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்து அரசு அறிவிக்கையில், இந்த கோயில் தொடர்பான விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல்லவர்கள், யாதவ தேவராயலு, கங்கா பல்லவா, பனா, சோழர்கள் என பல்வெறு காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இந்த கோயிலின் சந்நிதிகளில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிலை

உஜ்ஹைனியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு நாணயத்தில், குடிமல்லத்தில் இருக்கும் சிவன் சிலையை பிரதிபலிக்கும் உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல மதுராவில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிற்பம், குடிமல்லம் சிவன் சிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இங்குவா கார்த்திகேய ஷர்மா கூறியுள்ளார். இவர் முற்கால சைவக் கலைகள் மற்றும் கட்டடக் கலையைக் குறித்து `Development Of Early Saiva Art And Architecture` என ஒரு புத்தகதை எழுதி இருக்கிறார்.

இந்த கோயிலின் வரலாறு குறித்து பல பத்திரிகைகளில் அகழ்வாய்வாளர் மற்றும் வரலாற்று ஆசிரியர் நந்தா குமாரசாமி மற்றும் ஜிதேந்திரநாத் பேனர்ஜி விவாதித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும் போது, தற்போது இருக்கும் கோயில் 12-ம் நூற்றாண்டில் விக்கிரம சோழனால் மறுகட்டுமானம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கிறார்கள் அகழ்வாய்வாளர்கள். கடந்த 1954-ம் ஆண்டில் இருந்து இந்த கோயிலை இந்திய தொல்லியல் துறை தான் பதுகாத்து வருகிறது. இந்த கோயிலில் வழிபாடுகளை நடத்த சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

வழிபாட்டுக்கு கட்டுபாட்டுடன் அனுமதி

சிலை

இந்தக் கோயில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்குவதால், வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சில சிலைகள் மற்றும் அதிக மதிப்புடைய பொருட்கள் கோயிலில் இருந்து திருடு போனதாக உள்ளூர் வாசி ரவி என்பவர் பிபிசியிடம் கூறினார்.

அதிகாரிகளின் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து தான் இந்த கோயிலில் மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டார்கள். அதன் பிறகு தான் கோயில் விவகாரங்களை அறநிலையத் துறை கவனித்து வருகிறது.

சிலை

எப்போது எல்லாம் இங்கு சடங்குகளை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறதோ, அப்போது எல்லாம் சந்திரகிரி கோட்டையில் வைக்கப்பட்டிருக்கும் இதே போன்ற சிலையை வழிபடுகிறார்கள் மக்கள்.

மேம்பாட்டுக்கான முயற்சிகள்

சிலை

திருப்பதிக்கு அருகில் குடிமல்லம் அமைந்திருப்பதால், இந்த கோயில் போதிய கவனத்தைப் பெறவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

"போதுமான வசதிகள் இல்லாதது, போதுமான விளம்பரங்கள் இல்லாதது தான் இந்த நிலைக்குக் காரணம்" என்கிறார் கோயிலின் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி.

தற்போது இக்கோயிலைச் சுற்றி இருக்கும் கட்டமைப்பு வசதிகளைச் சரி செய்வதில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் அம்பிகா சோனி மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கோயிலைச் சுற்றி சில மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் எதுவுமே செயல்படுத்தப்படவில்லை என உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

ஆந்திர கிராமத்தில் ஆணின் பிறப்புறுப்பு வடிவில் சிவன் சிலை - அரிய தகவல்கள் - BBC News தமிழ்

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.