Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ஊடகங்களும் பெண்களும்

Featured Replies

வணக்கம் அனைவருக்கும்,

யாழ் கருத்துக்களத்தில் பெண்கள் தொடர்பான கருத்தாடல் ஒன்று நிகழ்ந்தது அனைவரும் அறிவீர்கள். அதற்கான விளக்கமும் நாம் அளித்துள்ளோம். அதேவேளையில், பொதுவான கருத்தாடல்களில் பெண்கள் கலந்துகொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதையும் - அதிகமானவர்கள் இளைஞர்கள் என்பதுவும் நாம் உள்வாங்கவேண்டிய விடயமாக உள்ளது. அவர்களை ஊக்குவிக்கவேண்டியதும் - கருத்தாடல் சார்ந்து தன்நம்பிக்கையையும், தேடல்களையும், துணிவையும் வளர்க்கவேண்டியதும் அவசிமென உணர்கிறோம்.

எனவே, அவர்களை அனைத்துத் தலைப்புகளிலும் அது அரசியலாக இருந்தாலும் - கடவுள், மதம் சார்ந்த பதிவாக இருந்தாலும் துணிந்து அனைத்திலும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு திறந்த அழைப்பு விடுக்கிறோம்.

அந்தவகையில், இங்கே ஒரு தலைப்பை நாம் தொடங்குகிறோம். இது கருத்துக்களத்தில் நாம் தொடர்ந்து மேற்கொள்ள இருக்கிற சில புதிய முயற்சிகளுக்கான பரீட்சார்த்தமாக அமையும். இங்கு கருத்துக்கள நிர்வாகம் ஒரு தலைப்பை முன்வைக்கிறது. அந்தத் தலைப்பின் கீழ் கருத்தாட குறிப்பிட்ட சில உறுப்பினர்களை மட்டுமே முதலில் அழைக்கிறது. அவர்கள் குறிப்பிட்ட காலம் கருத்தாடல் செய்து முடித்ததன் பின்னர், ஏனையவரும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க இடமளிக்கப்படும். அதுவரை ஏனையவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்பதையும் வேண்டிக்கொள்கிறோம். இது பட்டிமன்றம் போன்ற தோற்றத்தைத் தரினும், அணி பிரிக்கப்படாமல் தங்களது சொந்தக் கருத்தை ஒவ்வொருவரும் வைப்பதற்கான இடமுண்டு. அதேநேரத்தில் பட்டிமன்றத்தைப்போன்று தேடல் - வாசிப்பு - ஒழுங்கமைப்பு போன்ற பலவிடயங்கள் இதிலும் உண்டு.

இங்கு நாம் முன்வைக்கும் தலைப்பு: தமிழ் ஊடகங்களும் பெண்களும்

பெண்களைத் தமிழ் ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன? பெண்கள் மீது தமிழ் ஊடகங்கள் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துகின்றன? பெண்கள் தொடர்பான எவ்வாறான கருத்தியலை அவை வெளிப்படுத்துகின்றன? போன்ற கேள்விகளை கவனத்தில் கொள்ளலாம். அதேநேரத்தில், தமிழ் ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பு என்பது பற்றியும் ஆராயலாம்.

சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் போன்றனவும் - சினிமா, விளம்பரம், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றனவும் இதற்குள் அடங்கும். குறிப்பாக இது தமிழ் ஊடகங்கள் சார்ந்து இருப்பினும், ஏனைய உலக ஊடகங்களின் போக்கையும் இங்கு குறிப்பிட்டுக் கருத்தாடலாம். ஆனால், தமிழ் ஊடகங்கள் என்பதே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும். தமிழ் ஊடகங்கள் என்கிறபோது அது புலம்பெயர் தமிழ் ஊடகங்களாகவும் இருக்கலாம் - சிறிலங்கா, இந்தியா போன்ற நாடுகளின் ஊடகங்களாகவும் - தமிழீழத்தில் உள்ள ஊடகங்களாகவும் இருக்கலாம்.

அழைக்கப்படுபவர்கள்:

அனிதா

தூயா

பிரியசகி

வெண்ணிலா

இனியவள்

கறுப்பி

தமிழ்தங்கை

ரமா

சிநேகிதி

ஜனனி

இவர்கள் அண்மைக்காலங்களில் களத்தில் எழுதுபவர்களாக இருக்கிறார்கள். எனவே தான் இவர்களை அழைக்கிறோம். அனைவரும் மறுக்காமல் பங்குகொள்ளுமாறு நட்புடன் வேண்டிக்கொள்கிறோம். அதேநேரத்தில் இதில் பெயர் குறிப்பிடப்படாமல் விடுபட்ட பெண்கள் எமக்கு அறியத்தரலாம். நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எண்ணவேண்டாம். மற்றும், பெண்கள் பெயரில் எழுதும் ஆண் உறுப்பினர்கள் நேர்மையாக நடந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். மேலே குறிப்பிட்டவர்கள் அனைவரும் கருத்தாடியதன் பின்னர் ஏனைய கள உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். குழப்பங்களை யாரும் விளைவிக்க வேண்டாம்.

பங்குகொள்ளும் உறுப்பினர்களுக்கு:

1. நிறைய வாசிப்புக்களை இது தொடர்பாக நீங்கள் செய்யவேண்டும். இணையம், புத்தகங்கள் போன்றவற்றில் உங்கள் தேடல்கள் செல்லலாம். களத்தில் உள்ள ஏனைய சக உறுப்பினர்களிடமு் தகவல்கள் இதுதொடர்பாக இருப்பின் பெற்றுக்கொள்ளலாம்.

2. இத்தலைப்புக்கு அவசியமான வேற்றுமொழி ஆக்கங்கள் இருப்பின் - அவற்றை மொழிபெயர்த்து இடலாம். வரவேற்கப்படுகிறது. - மூலத்தைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.

3. இது தொடர்பாக தமிழில் வந்த கட்டுரைகள் சிலவற்றை நாம் இங்கு இணைக்கிறோம் - உங்களுக்கு உதவியாக. உங்களிடமும் பிறர் எழுதிய ஆக்கங்கள் இதுதொடர்பாக இருப்பின் இணைக்கலாம். -மூலத்தைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.

4. விவாதத்தை முடிந்தளவு கட்டுரைவடிவில் முன்வைக்கவும். நிறைய எழுதவேண்டும் என்பது அல்ல, ஆனால் குறிப்பிட்டளவு உள்ளடக்கம் கொண்டதாக அமைதல் நல்லது.

5. தமிழில் சரியாக தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிலருக்கு சிக்கல் இருக்கலாம். உங்கள் எழுத்துப்பிழைகளை, வசனப்பிழைகளைத் திருத்துவதற்கும் அதுசார்ந்து உதவிகள் புரிவதற்கும் களத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் தனிமடலில் அனுப்பி திருத்தங்களைச் செய்துவிட்டு இணைக்கலாம்.

6. இத்தலைப்புத் தொடர்பாக ஊடகங்களோடு தொடர்புகொண்டு அவர்களின் கருத்துக்களை அறிந்து பதிவாக்கலாம்.

7. உங்களைச் சூழ்ந்துள்ள நண்பர்களிடம் இதுதொடர்பான கருத்துக்கணிப்பை நடத்து உங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்கலாம்.

மேற்கண்ட தரவுகளில் விளக்கங்கள் போதாதெனின் தனிமடலில் எழுதுங்கள். தலைப்புத் தொடர்பான உங்கள் கட்டுரைகளை(கருத்தக்களை) இனி இதன் கீழேயே எழுதலாம். :huh:

நன்றி

தமிழ் ஊடகங்களும் பெண்களும்

சினிமாவை எடுத்து நோக்குவோமாயின்

தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான வன்முறை!

தமிழ்ச் சமூகத்தைப் பொருத்தவரை தவிர்க்கவே முடியாத ஒரு ஊடகமாகத் திகழும் தமிழ்ச் சினிமா பன்னெடுங்காலமாக சமூகத்தைப் பிரதிபலித்தும் பிரதிபலிக்கச் செய்தும் வருகிறது. இச்சமூகத்தில் இயங்கி வரும் பெண் பற்றிய கற்பிதங்களைப் பாதை பிசகாமல் வெளிப்படுத்தியும் வளர்ச்சி நிலையில் விட்டுப் போனவற்றை தக்க வைத்து வந்திருக்கிறது.

இரத்தம் சிந்தப்படுவது, உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டும் வன்முறை ஆகாது. மனித மதிப்பீடுகளின் கொலையும் மனித உரிமையை மீறும் கருத்துருவாக்கமும் வன்முறைதான். தமிழ்ச் சினிமாவில் இது அடிக்கடி பெண் மீது நிகழ்த்தப்படுகிறது. ஆண், பெண் என்னும் இரு வேறு படைப்புகளில் பெண்ணுக்கென விதிக்கப் பெற்ற முறைகள், முரண்கள் இரண்டையும் தமிழ் சினிமா விதந்தோதுவது பெண் மீது நிகழ்த்தும் மிகப் பெரிய வன்முறை ஆகும்.

பெண்ணிற்கென பேசும் படங்கள் கூட ஆண் மொழி காரணமாக பெண்ணின் மீது கருத்தியல் ரீதியாக வன்முறையையே நிகழ்த்துகின்றன.

தமிழ்ச் சினிமாவில் வசனங்கள், காட்சிகள், பாடல்கள், பாத்திரங்கள், கதைக் கரு, உத்திகள், நகைச்சுவை எனப் பல்வேறு தளங்களில் பெண் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

"பொம்பள ஆயிட்டேன்னு பார்க்கிறேன்'

"ஒழுங்கா பொம்பளயா லட்சணமா அடக்கமா நடந்துக்கணும்'

"அதிகமா கோபப்படுற பொம்பள உருப்பட மாட்டா'

"என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளய இப்படிப் பேசக் கூடாது, அதுவும் ஒரு பொம்பள பேசவே கூடாது.. '

என இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ வசன உதாரணங்களை அடுக்கலாம்.

இரண்டாம் தரமான இனமாக பெண்ணை கணிக்கும் வசனங்களை ஏராளமாகப் பேசுகிறது தமிழ் சினிமா.

இவ்வசனங்கள் நேரிடயாைகப் பெண் மீதான கற்பிதங்களைப் பேசுகின்றன. பல நிலைகளில் இத்தகைய வசனங்கள் ஆண், பெண் ஆகிய இரு பாத்திரங்களின் மூலமாகவும் அரங்கேற்றப்படுகின்றன.

"என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளகிட்ட ஒரு பொம்பள ஜெயிச்சிடக் கூடாது!'

என்று ஆணுக்கும் பெண்ணுக்குமான போட்டியில் இறுதியில் பெண்ணை வைத்து வசனம் பேச வைக்கப்படுகிறது.

பல திரைப்படங்களில் பாலியல் வன்முறைக்கான வசனங்கள் பெண் மீது எழுதப்படுகிறது. திருடா திருடி திரைப்படத்தில் கதா நாயகனும், நாயகியும் பேருந்தில் வசனம் பேசி சண்டை போடும் காட்சியில் "உன்ன பாம்பு கொத்தும்டா, மண் லாரி ஏறும்டா, உனக்கு எயிட்ஸ் வரும்டா .. '

என்று கதாநாயகி வசை பாடி வசனம் பேச, அதே வேகத்தில் வசை பாடி வசனம் பேசும் கதாநாயகன், "நான் உன்னைக் கற்பழிப்பேண்டி .. ' என்று பேசுகிறான். இத்தகைய வசனங்களும் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும், செய்திருக்க வேண்டும் என்று நேரிடையாகவும் அர்த்தமாகும்.

"உன்னை எல்லாம் சும்மா விட்டது தப்பு

அதுக்குத்தான் இப்படி திமிர் பிடிச்சி அலையற'

என்று வரும் வசனங்களும் பெண் மீது நிகழ்த்தப்படும் வார்த்தை வன்முறையாகவே இருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் பெரும்பாலும் பெண் உடலை மையமிட்டே இயங்குகின்றன.

பெண்ணிற்கான உடலையும், அவ்வுடலைக் குறித்த அவளுக்கான மதிப்பீடுகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் வசனங்கள் தமிழ்ச் சினிமாவில் மலிவாகி வருகின்றன.

தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தமட்டில் சமூகத்தின் கருத்தியலோடு இயைந்த கூறுகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. பணம், அறிவியல், தொழில்நுட்பம், நவீன தொழில்நுட்ப அறிவின் ஊடாக உழைப்பை விற்கும் வல்லுநர்கள் எனச் சினிமாவுக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளி நிரப்பப்படும் அதே வேளையில் கருத்துக்களை, மதிப்பீடுகளை, தகவல் பொருட்களை, மக்கள் வரையில் கொண்டு செல்கின்ற காரணத்தால் .. வியாபாரம், சம்பாத்தியம், பொழுதுபோக்கு எனும் எல்லைகளைக் கடந்து ஒரு பொருள் விற்கப்படும் நிலையிலிருந்து மாறுபட்டு, இச்சினிமாவின் தாக்கம் தமிழ் பேசும் மக்களின் சகம் பற்றிய கட்டமைவினை உறுதி செய்கிறது.

விற்பனை என்ற பெருநோக்கு ஈடேற, பெண் உடல் வெளி, தமிழ்ச் சினிமாவில் அத்தியாவசியமானதாகும். பெண் உடல் சார்ந்த கருத்தாக்கங்கள் பல்வேறு தளங்களில் இயங்குகின்றன.

ஆண் வர்க்கத்தினரால் ஆளுமை செய்யப் பெறும் இக்கருத்துக்களில் பெரும்பாலான பார்வையாளர்களின் கணிசமான சம்மதம் உள்ளடங்கியே உள்ளது.

தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான கற்பிதங்களை நம் அன்றாட நடைமுறைகள் மீது பொருத்திப் பார்ப்பது மதிப்பீடுகள் குறித்த விளக்கத்திற்கு உதவியாய் அமையும். இருப்பினும் சினிமா சித்தரிக்கும் மதிப்பீடுகளை உருவாக்குபவர்களை நாம் அடையாளம் காண்பது அவசியமாகும்.

ஆதிக்கம் பெற்ற சாதிய வழக்குகளுக்கு தூபம் போடும் வெறியாட்டக் கருத்துக்களும், மேலைநாட்டு நாகரீகத் திணிப்புகளும் உடல், உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றிற்கான பழைய புதிய கருத்துத் திணிப்புகளும், முதலாளித்துவ உணர்வுகளை மரபணுக்கள் தாங்கியுள்ளதைக் கூறும் முயற்சிகளுமாக தமிழ்ச் சினிமா நிகழ்த்தும் கருத்தியல் ரீதியான சித்தரிப்புகளுக்கு ஊடாக அதன் பின்னணியில் இயங்கும் பெண்ணின் மீதான பார்வையும், பெண் பற்றிக் கையாளப்படும் மதிப்பீடுகளும் உற்று நோக்கத்தக்கவை.

"பெண் மீது ஆண் புரியும் அடக்குமுறை - உயர் சாதிக்காரன் தாழ் சாதிக்காரன் மீதும், பணக்காரன் ஏழை மீதும், வெள்ளையன் கருப்பன் மீதும் செய்யும் அடக்குமுறைகளை விட அநியாயமானது என்று பாரதியார் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

இந்த ஒப்பாய்வில் ஆண் நிகழ்த்தும் அநியாயத்தின் கை ஓங்குவதின் காரணம், மற்ற அடக்குமுறையாளர்கள் பிறரை அடக்க நினைத்து ஆதிக்கம் செலுத்துவதோடு நிற்க, ஆண்-பெண்ணை அடக்க மட்டுமன்றி ஆதிக்கம் செலுத்த மட்டுமன்றி அனுபவிக்கவும் நினைப்பதுதான். இந்த அனுபவிப்பு எளிமைப்படுத்தப்பட, மான், தேன், கிளி, புறா, கவிதை என்ற வர்ணிப்புச் சாயங்கள் பூசப்படுகிறது. இதற்கு மயங்கும் பெண் பாத்திரங்களும் இத்தகைய ஆணாதிக்க கருத்து வெளிப்பாடுகளும் தமிழ்ச் சினிமாவில் நிறையவே உண்டு.

பெண் போகப் பொருளாக, அறிவுத்திறன் அற்றவளாக, சுய உணர்வு கெட்டவளாக, ஆணிற்காக வாழ்பவளாக, கன்னி கழிவதே மிகப் பெரிய இலக்காகத் திருமணத்தை எதிர் நோக்குபவளாக, ஆணின் ஆணைகளுக்கு உட்பட்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்; காட்டப்படுகிறாள்.

"என்னை அடிச்சு இப்பத்தான் என்னைப் பொண்டாட்டியா ஏத்துக்கிட்டார் என் புருஷன் ..'

என்று தொழில் அதிபர் நிலைக்கு உயர்ந்த, கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் பெற்ற ஒரு பெண் வசனம் பேசுகிறாள்.

"சப்புன்னு என்னை ஒர் அறை விட்டிருந்தீங்கன்னா நான் தப்பு செஞ்சிருப்பேனா.? என்னை ஏன் அப்பவே அடிக்கலை .. '

என்று வசனம் பேசுகிறாள் - அடங்காப்பிடாரியாக இருந்து கிளைமாக்ஸில் புருஷனுக்கு அடங்கும் ஒரு பெண்.

இப்படியாகக் கணவன் என்னும் பொறுப்பில் உள்ள ஆண், பெண்ணை அடித்தல் என்பது மனைவி என்ற அந்தஸ்து பெறக் கிடைக்கும் அங்கீகாரம் என தமிழ்ச் சினிமா சித்தரிக்கிறது.

ஓர் ஆண், மனைவி வீட்டாரால் அடிபடுவதை மிகப் பெரிய சோகமாகக் காட்டும் தமிழ்ச் சினிமா, ஓர் ஆண் மூலமாக பெண் அடிபடுவதை - நியாயமாகவும், நகைச்சுவையாகவும் காட்டுவதுதான் அலங்கோலம்.

அடக்கமானவள், பொறுமைசாலி, தியாகம் செய்பவள், பேசாதவள்; பத்தினித் தெய்வம் - உத்தமி. துணிச்சலானவள், செருக்குடையவள், அடங்காப்பிடாரி, - வில்லி- முரண்பாத்திரம். இதுமட்டுமின்றி - தாலி என்பது தமிழ் சினிமா பெண்ணுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நெடுங்காலமாகத் தன் கைவசம் வைத்திருக்கும் ஓர் ஆயுதமாகவும் திகழ்கிறது.

வில்லன் கதறக் கதற நாயகிக்குக் தாலி கட்டும் காட்சி, பார்வையாளர்களின் பலத்த கரகோஷம், கைதட்டல், தவிப்பு, திட்டு, அழுகை இவற்றிற்கு ஊடே அடிக்கடி தமிழ் சினிமாவில் பார்க்கக் கிடைக்கும் அம்சம்.

தன்னை விரும்பாத பெண்ணிற்கு பலாத்காரமாக தாலி கட்டும் கதாநாயகன்களும் தமிழ்ச் சினிமாவில் உண்டு.அந்தத் தாலியை சினிமா முடியும் வரை தாங்கிக் கொண்டு இறுதிக் காட்சியில் தாலி கட்டும்போது அதை ஏற்காமல், இவ்வளவு நாள் கழித்ததற்காக ஏங்கி ஏங்கி அழுது கதாநாயகனிடம் மன்னிப்புக் கேட்டு காலில் விழும் கதாநாயகியரும் உண்டு.

அடங்காப்பிடாரி பெண்ணுக்கு இரும்பில் தாலி பூட்டி அடக்கி ஆளும் காட்சி தமிழ்ச் சினிமா காட்டும் மலிவான சிந்தனை. தமிழ்ச் சினிமாவில் தாலி எனும் இந்த ஆதாரப் பொருள் பற்றிய சிந்தனை நெடுங்காலம்தொட்டு இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.

வற்புறுத்தித் தனக்குத் தாலி கட்ட வரும் வில்லனிடமிருந்து தப்பித்து அந்த வெற்றியின் லயிப்பில் மனச் சிதைவுடன் கூடிய எள்ளல் நகைப்பிற்கு ஊடாக கழுத்தில் கயிறு சுருக்கி தன்னைத் தானே தூக்கிட்டுக் கொள்ளும் விருமாண்டி படக் கதாநாயகி வரை இத் தாலி பற்றிய கருத்துத் திணிப்பு தொடர்வது சகத்தின் கருத்தியல் ஆய்வுக்கு களம் அமைக்கும் அவசியத்தை உணர்த்துகிறது.

பாலியல் பலாத்காரம் என்பது ஒரு பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறையின் உச்சம். இவ் வன்முறை ஏறக்குறைய எல்லாத் தமிழ் சினிமாவிலும் கட்டாயக் காட்சி ஆகும். கொலை செய்வதும், திருடுவது மாதிரி இதுவும் வில்லனிடமோ அல்லது கதாநாயகனிடமோ உள்ள ஒரு அவசியமான கெட்ட பழக்கமாகத் தமிழ் சினிமா சித்தரிக்கிறது.

பலாத்காரம் செய்யும் ஆண், வில்லன் பாத்திரமாக இருந்தால், ஒன்று கதாநாயகி தப்பித்து விடுவாள். அல்லது தற்கொலை செய்து கொள்வாள். கதாநாயகன் பலாத்காரம் செய்து விட்டாலோ நாயகி அவனைக் கட்டாயமாகத் திருமணம் செய்தே ஆக வேண்டும். அவன் காமுகனாக இருந்தால் அவனைத் திருத்திப் "புதிய பாதை' அமைக்க வேண்டும்.

ஒரு பெண்ணிற்கு இச்சகத்தால் மறுக்கப்படும் எந்தவொரு லட்சியமோ கனவோ ஆணுக்கு மட்டும் நிறைவேறுவதாக காட்டப்படும்போது அதில் ஒரு பெண்ணாக நின்று சந்தோஷிக்க முடியாமல் போகிறது.

சேரன் இயக்கிய "ஆட்டோகிராப்' படத்தில் காதலில் தோற்றுப் போன ஓர் ஆணுக்கு அவனை இயல்பாக தன் அக வாழ்வுக்குள் அங்கீகரிக்கும் ஒரு பெண் வாய்க்கிறாள். அதே வாய்ப்பு காதலில் தோற்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு வாய்க்கும்போது அதை மறுத்துச் சமூக சேவையில் ஈடுபடும் வாய்ப்பையே அப் பெண் தேர்ந்தெடுப்பதாக காட்டப்படும் மதிப்பீடுகளின் பிம்பம் இன்றைய மாற்றுச் சினிமா.

பரத்தை வாழ்க்கையை மறுதலித்த மாதவியின் மகள் எப்போதும் துறவிதானா? காதல்-காமம்-குடும்பம், இதில் எது பெண்ணின் தளம்? எங்கே அவள் தொடங்குகிறாள்? எது அவளுக்கான முடிவு? ஓர் ஆணுக்கான நினைவோ-துணையோ ஒரு முறை வாய்த்து விட்டால் அப்பெண்ணின் உலகு அதற்குள் அடங்கிப் போகிறது.

பெண்ணுக்கு எப்போதும் வாய்க்கும் கட்டாயத் துணைகளின் திணிப்பு கட்டாயமாக்கப்பட்ட துணையை மீறி அவள் நினைவு இல்லை. துணை இருக்கும்போதும் இல்லை, துணை செத்துப் போனாலும் நினைவுகள்.. கனவுகள் இல்லை. ஆனால் ஆணின் உலகம் விரிந்தது, பரந்தது, கடந்தது. இந்த நிலைப்பாடு பெண்ணின் மீதான கருத்தியல் வன்முறையே.

காதல் தோல்வி பற்றிய ஆண், பெண் இருவேறுபட்ட சிந்தனா வெளிப்பாடு ஒருபுறம் இருக்க மறுமணம் பற்றிய கருத்தாக்கத்தில் இரட்டை நிலையையே தமிழ்ச் சினிமா பேணுகிறது.

"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?

தெருவினிலே விழுந்தாலும் வேறொரு கை படலாமா?'

என்று ஒரு பெண்ணின் மறுமணம் பற்றிய ஒரு பெண்ணின் சிந்தனை மறுப்பு பெண் மீதான கருத்து வன்முறைதான்.

இதுவே ஒரு ஆணுக்கு வாய்ப்பு மாறும்போது மறுமணத்தை மறுக்கும் ஆணிடத்தில்,

"இன்னொருத்தி வடிவினில் இருப்பவளும் நானல்லவா? '

என்று ஆவியாக வந்தாவது ஆணிற்கான மறுமணத்தை பெண்ணே செய்விப்பாள்.

இதற்கு ஆண் எப்போதும் மறுப்புச் சொல்வதில்லை. இந்த பாரபட்ச சிந்தனை தமிழ்ச் சினிமாவில் அதிகம்.

தமிழ்ச் சினிமாவில் தன் மீது ஆசைப்படாத ஆண் மீது ஆசைப்படும் பெண் பாத்திரம், வில்லி பாத்திரம் - முரண் பாத்திரம். இம் மரபு .. "கணவனே கண் கண்ட தெய்வம்' படத்தில் தன் மீது காதல் கொள்ளாத இளவரசன் மீது காதல் வயப்படும் நாகராணி முதல் தன் மீது காதல் கொள்ளாத "படையப்பா' மீது காதல் கொள்ளும் நீலாம்பரி வரை தொடர்கிறது.

இந்த இலக்கணம் பெண்களுக்கு மட்டுமே. ஆனால், தன் மீது காதல் கொள்ளாத பெண்ணாக இருந்தாலும், தான் காதல் கொண்டு அவளை வசப்படுத்துவதே பல கதாநாயகரின் பிரதான வேலையாக தமிழ்ச் சினிமா காட்டுகிறது.

"பெண் தன் ஆசையைப் பேசுதல் உண்டோ?

கண் பேசும் ஆவல் புரியாதோ? '

பெண் காமம் பேசுதல் மரபன்று என்று கூறும் தமிழ் மரபு தெரியாத தவிட்டுக் கவிகள் தவளைச் சத்தம் போட்டுக் கொண்டே தமிழ்ச் சினிமாவில் பெண் மூலமாக ஆபாசம் பேச வைக்கும் பாடல் வரிகளை எழுதித் தள்ளுகிறார்கள்.

"தக்காளி பழம், பப்பாளிப் பழம் .. '

என்ற வர்ணிப்புகளுக்கு ஊடாக,

"பூக்காரி உன் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு .. '

என்றும்,

"அத்தனைப் பூவையும் ஒருமுறை கிள்ளி விடு .. '

என்றும்,

"ஆடாத தேகமெங்கும் ஆண் வாசனை'

என்றும்,

"பருவத் திருடா, பருவத் திருடா பசிக்குதாடா ..'

என்றும்,

"என் பச்ச உடம்பிலே உச்சி நரம்பிலே .. '

என்றும் இன்னும் இன்னும் பெண் உடல் மீதான ஆபாசச் சித்தரிப்புகள் வன்முறையின் வெளிப்பாடே.

பெண்ணுக்கு எதிரான வன்முறை நிறைந்த பாடல் வரிகள் அரசாங்கத்தின் தணிக்கைக் குழுக்களையும் கடந்து வருவதுதான் மிகவும் வேதனை.

"ஈவ் டீசிங் செய்வதெல்லாம்

இளமைக்கு இனிமை

இலக்குகள் எல்லாமே

என்னோட உடமை'

என்று கல்லூரி மாணவன் போல் ஒருவன் ஆபாசக் கையசைவுகளுடனும், அங்க அசைவுகளுடனும் பாடல் வரிகளை உச்சரிக்கிறான்.

பகடிவதை என்று கூறப் பெறும் பாலியல் சீண்டல் - திரைப்படங்களில் நகைச்சுவை உட்பட பல்வேறு தளங்களில் காட்சிப் படுத்தப்படுகிறது. தமிழ்ச் சினிமாவில் பாலியல் வன்முறை போலவே இரு தார மணமும் ஆணின் இருப்பைப் போற்றியும் பெண்ணின் இருப்பைப் பரிகசித்தும் காட்டும் கருத்தியல் சிதைவாக இருக்கிறது.

மரபுகளை மாற்றிச் சிந்திக்கிறேன் என்று கூறும் சில படைப்பாளிகளின் படைப்புகள் உதாரணமாக கல்கி, அழகி, அபூர்வ ராகங்கள் போன்ற சினிமாக்கள் பெண் குறித்த ஆளுமை நிறைந்த பாத்திரப் படைப்பைக் காட்டத் தவறுவதோடு பெண் சார் மதிப்பீடுகளின் தரத்தையும் குறைக்கின்றன.

அதிகம் பேசப்பட்ட தங்கர் பச்சானின் அழகி படத்தில் கதாநாயகனின் முட்டாள்தனமான அணுகுமுறைக்கு அசிங்கமாகப் பலியாகும் பெண்ணின் படைப்பு முடிந்த மட்டும் கேலி செய்யப்பட்டுள்ளது (மனைவி பாத்திரம் உட்பட)

"மனசுக் கேட்டு அள்ளு அள்ளு

ஊரு கெடக்கு தள்ளு தள்ளு

ஸ்கூட்டி வருது அள்ளு அள்ளு

தண்ணீர் லாரிய தள்ளு தள்ளு'

என்று பெண், வாகனங்களுக்கு ஒப்புமையாக்கப்படும் போக்கும், அவள் உடல் மீதான அழகியல் கருத்துக்களின் திணிப்பும் நேரடியாக பெண் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையே தவிர வேறில்லை.

தென்றல் எனும் படத்தில் - விபச்சாரனாக உள்ள ஒருவன் மேல் ஆசை கொள்ளும் கதாநாயகி - விபச்சாரியாக விதி வசத்தால் மாறி அவனை அடைந்து சாபல்யம் பெறுவதாக காட்டப்பட்டிருப்பது தமிழ்ச் சினிமாவின் பெண் பற்றிய மதிப்பீட்டிற்கான நிஜ பிம்பமாகக் கொள்ளலாம்.

தமிழ்ச் சினிமா பெண் மீது நிகழ்த்தும் காட்சி மற்றும் கருத்தியல் வன்முறைகளை அடையாளம் காண்பது அவசியம். தமிழ்ச் சினிமா மூன்று மணி நேரமும் - சில ரூபாய்களும் அல்ல. நம் பொழுதைப் போக்க நமக்குக் கிடைத்த ஊடகமும் அல்ல.

"இருக்கிறதத்தான காட்டுகிறான்' என்று கூறித் தப்பித்தல் சரியன்று. ஏன்? உள் நோக்கம் என்ன? இதை இப்படிக் கூறுவது தவறு என தட்டிக் கேட்கும் பார்வையாளரின் நிச்சயம் சினிமா உற்பத்தியில் கருத்து ரீதியான சிறு இடையீட்டை செய்ய இயலும்.

நம் வீட்டில் தவறு நடந்தால் தட்டிக் கேட்கிறோமே. இப்பொறுப்பு கொஞ்சமாவது சமூகத்தின் மீது காட்டினால் .. ஒரு சிறு அசைவு .. ஒரு சிறு குரல் .. நிச்சயம் நிறையச் சாதிக்கும். பெண்களின் திரைத் துறையின் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பங்களிப்பு நிச்சயம் மாற்றத்தைத் தரும்.

ஆனால், ஆணின் திட்டமிடப்பட்ட வலைக்குள் முடங்காமல் பெண் குரல் ஒலிக்க முடியுமானால் இது சாத்தியம். ஆண் மொழி பேசி, ஆணியச் சிந்தனைக்குரிய பெண்களின் திரைத் துறை உற்பத்திக்கான ஊடாட்டம் எவ்வித மாற்றத்தையும் இத்துறையில் உண்டாக்கப் போவதில்லை. ;) :D

நன்றி தற்ஸ்தமிழ்

ஊடகங்களில் பெண் வெளியும் இருப்பும்

"பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்

பேசாத பேச்செல்லாம் பேசவந்தாள்..."

என்ற பாடலை ரசிக்காமல் இருக்கமுடியாது. திரைப்படம் பெண்ணைப் பாடச்சொல்கிறது; பேசச் சொல்கிறது, ஆடச்சொல்கிறது. நடிக்கச் சொல்கிறது. இந்த முகங்களின் பின்னே மறைந்திருக்கும் திரைசூட்சுமம் எல்லா ஆண்களுக்கும் எளிதில் புரியும். நடிகைகளாக, துணை நடிகைகளாக இருக்கும் பெண்கள் சுவாசிக்க மறந்தவர்களாக வாழ்கின்றனர்.

ஆண் ஆதிக்கமும், படைப்பாற்றல் ஆளுமையைச் சுய கட்டுக்குள் கொண்டு இயங்கிவரும் திரைப்பட இயக்குநர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள் 99.9% ஆண்களாக இருக்கின்றனர். ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மண்ணில் சுதந்திரம் பேசப்பட்டு வருகிறது. ஆண்டுகள் திரைப்பட வயதென நிர்ணயிக்கப்படுகிறது. எனினும் படைப்பாற்றலில், பாடல் எழுதுவதில், இயக்குவதில் பெண்களின் வெளி அனுமதிக்கப்பட்டிருக்கிறதா? ஊடகங்களில் அவர்களின் இருப்பு கட்டற்றதாக இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டிய தேவையைப் பெண் வெளி உருவாக்கி இருக்கிறது.

பெண்ணின் குரல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. பெண், உடல், நுகர்வுச் சந்தையில் மலிவாக்கப்பட்டிருக்கிறது. ஆணின் பார்வையில் பெண் இரண்டு முலைகளை உடையவள். வெளுத்த மேனியும், பம்பரம் சுற்றும் விளையாட்டுக்களமாகத் தொப்பூழும், சிறுத்த இடையும், பெருத்ததொடையும் காமத்தைத் தூண்டக் கூடியதாக மட்டும் கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. காலங் காலமாக இந்தச் சிந்தனை நடிகைகளுக்கு ஊட்டப் படுகிறது. அவளது உடலை தரை பெருக்குபவனிலிருந்து, இயக்குநர் வரையில் ஒரே மாதிரி நுகரலாம் என்ற சிந்தனையில் நடிகைகளும் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.

காலங்காலமாகப் பெண்கள் சிந்திக்கத் திறனற்றவர்கள். பொம்மலாட்டக் கருவி இசைப்பாளனின் இசைவுக்கு ஏற்றவாறு இயங்குபவர்கள், சுயமற்றவர்கள் என்பதுதான் ஊடகம், பெண்மீது கட்டுவிக்கும் தர்க்கம். இந்தத் தர்க்கத்தை இன்னும் சற்று கூடுதலாக்கிக் காட்டும் பணியைச் செய்கிறார் தொலைக்காட்சி தொடர்களை இயக்கும் ஆண் சூத்ரதாரி. கணவன் உட்பட சமூகம் பெண்ணைத் தெய்வமாக (அச்சம், மடம் நிறைந்திருந்தால்)வும் வில்லியாகவும், (பொறாமை, பழிவாங்கும் குணம்) சித்திரித்துக் காட்டுவதில் பெண்கள் தங்கள் இருப்பை இழந்தவர்களாகவே உள்ளனர். சித்தி, அண்ணாமலை போன்ற கதாபாத்திரங்களை ஏற்று சகலகலா வல்லியாகவும் அண்மையில் ஒளிபரப்பாகிவரும் கோலங்களில் பண்பில் சிறந்தவளாக, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவளாக நடைமுறைக்குப் புறமான வாழ்வியல் யதார்த்தமற்ற கதாபாத்திர உருவாக்கம் ஒரு புறம்; மாமியாரையோ, மருமகளையோ, நாத்தனாரையோ எல்லாத் துர்க்குணங்களோடும், பழிவாங்கும் எண்ணத்துடனும், கொலை செய்யத் தூண்டுதல் வரை யதார்த்தமற்றுக் காட்சிப்படுத்தும் சூழல் மறுபுறம். இவற்றிற்கு இடையில் கணவனால் பிரச்சினை எழும்போது கணவனுடன் சேர்ந்து வாழ்வதா, விலகுவதா என்ற முடிவு எடுக்கும் சூழல் பெண்ணிடம் ஒப்படைக்கப் படுவதில்லை. தந்தையின் கௌரவம் அல்லது அந்தஸ்து, சகோதரிகள் இருப்பின் அவர்களின் வாழ்க்கையை நினைத்துத் தன்னை ஏமாற்றிக் கொள்ளும் போக்குடைய பெண்களைத் திரைப்படமும், தொலைக்காட்சியும் அலுத்துக் கொள்ளாமல் காட்சிப்படுத்துகின்றன.

நடிகைகளாக இருக்கும் நெருக்கடி இது என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாமா? மரபுகளாலும், பண்பாடுகளாலும் எந்தவிதமான நியாயமும் நேர்மையுமில்லாமல் வறுமையில் உள்ள ஒரே காரணத்திற்காகக் குறைபாடுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் போதெல்லாம் பெண் மௌனியாக, தேர்வுரிமை அற்றவளாக சம்மதித்தல் பெண்ணின் இருப்பை விசாரணைக்குட்படுத்தாதா?

மேலை நாட்டுக் கலாச்சாரத்தாக்குதலால் ஒரு வருட ஒப்பந்தத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகவும், பின் ஆணின் கட்டளை / தீர்மானத்தை ஏற்றுப் பிரிந்தவள் அவனோடு சேரவேண்டுவதும் பெண்ணின் வெளியை நீதிமன்றக் கூண்டில் அடைப்பதாயில்லையா?

அண்மைக் காலங்களில் திரைப்பாடல்களில் பெண் நுகர்ச்சி என்பது ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது. (சின்ன ராசாவே சிற்றெறும்பு என்ன கடிக்குதா, வறுத்து வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்..., மன்மத ராசா, ஓடிபபோயி கல்யாணந்தா கட்டிக்கிலாமா இன்னும் பல) பாடல் எழுதும் ஆண் பாடலாசிரியர்கள் தங்கள் அனுபவங்களையோ, பிறர் வாழ்க்கையில் கண்ட அனுபவங்களையோ பாடலாகத் தரும் பொழுது ரசிக்கக் கூடியதாக இல்லாமல் ஆபாசத்தின் விளிம்பைத் தொடுவதாகவே படுகிறது.

திரைப்பட இயக்குநர்களாகப் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனரா என்று பார்த்தால் தமிழ்த் திரைப்படத்துறையில் வெறும் பூஜ்யம்தான். படம் இயக்கலாம் என்று ஒரு பெண் முடிவெடுக்க முடியுமா என்பது கூட ஐயம்தான். பயர் போன்ற திரைப்படங்களை எடுத்தவர்கள் நாடு முழுவதும் சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட சூழலைக் கொண்டே பெண்ணின் இருப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம். குறும்படங்கள் தயாரிப்பதில் குட்டி, மல்லி போன்ற படங்கள் பெண் பார்வையைக் கூர்மைப்படுத்த உதவும். பெண்கள் ஆண்களால் உருவாக்கப்பட்ட ஊடகங்களில் ஆணின் பார்வையில் பார்ப்பது வழக்கமாகி வருகிறது. பெண்ணின் வலி, அனுபவம், தேர்வுரிமை, சமூகப் புரிதல் யாவும் பெண்ணின் மனக்காட்சித் திரைவழி பார்க்கவும், பகிர்ந்து கொள்ளவும் அவளைத் தயார்படுத்த வேண்டிய தேவையின் பின்னணியில் பெண் வெளி பெண் இயக்கம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அரைமணி, ஒரு மணி நேர நிகழ்ச்சிகள் பெண்களின் பிரச்சினையை மையமிட்டதாக இருந்தால் அதை எந்தவிதத் தணிக்கைக்குட்படுத்தாமல் தயாரித்து வெளியிட பெண்ணின் வெளி மறுதலிக்கப்படுகின்றது. 33% இட ஒதுக்கீடு என்பது அரசியலில் கனவாகத் தொடரும் அவலம் ஊடகத்திலும் தொடர்கிறது. ஒரு பெண் திருமணமானவளாக பொதுவாக ஊடகங்களில் பணியாற்றும் போது அவளின் சுதந்திரம் வரையறுக்கப்படுகிறது. குடும்பத்தைப் போலவே சமூகமும் ஊடகமும் இயங்குகின்றன. வெளிப்புறக் காட்சிகளில் நடிக்க வெளியூர் செல்ல நேரும் போதெல்லாம் பெண்ணிற்குக் காவல் இறுகுகிறது. உணர்ச்சிகளுக்காட்பட்டும் கதாநாயகர்களின் காதல், ஏற்றுக்கொள்ளப்படாதபோது அவள் மீது தகாத விமரிசனங்கள் எழுகின்றன. திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொள்ள இருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அது செய்தியாகிறது. நடிப்புத் திறமையை வியந்து பார்க்கும் போது ஸ்ரீதேவி போன்றோரின் சொந்த வாழ்க்கை பல மாற்றுப் புரிதல்களைத் தருகிறது. சில நடிகைகளின் முடிவெடுக்க இயலாத திறனால் அவர்களின் வாழ்க்கை தற்கொலையில் முடிகிறது. இவற்றையெல்லாம் அசை போட்டுப் பார்த்தால் பெண்ணின் வெளியும் இருப்பும் ஒரு சருகுக்கு உள்ள உயிர்ப்பினும் கேவலமானது என்று உணரலாம்.

செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாக, காட்சிகளை வர்ணிப்பவர்களாக உள்ள பெண்களின் அறிவுக் கூர்மையும், செய்தியை யதார்த்தமாகச் சொல்லும் ஆளுமையும் நிறையப் பெற்றிருந்தாலும் கூட ஆண் செய்தி வாசிப்பாளர்களை மட்டும் முன்னிலைப்படுத்தும் யுத்தி அறிவுத்துறையிலும் பெண்கள் தங்கள் அதிகாரத்தை இழந்தவர்களாகவே உள்ளனர் என்பதையே காட்டுகிறது. கோடானுகோடி ரசிகர்களைத் தன்வயப்படுத்திக் கொண்டுள்ள கிரிக்கெட் வருணனைக் குழு தீவிரமாக விளையாட்டை விமரிசித்துக் கொண்டிருக்கும்போது பெண்ணின் (வருணனையாளர்) மார்பைக் குறி வைத்த காமிரா ஒளிப்பதிவாளரின் கண்ணைக் குத்தி காட்சி கெடுத்திட வேண்டாமோ என்று சிந்திக்கத் தூண்டுகிறது.

பயர் படத்தை எடுத்த சகோதரிகளைப் போலக் குட்டி படத்தை இயக்கிய இயக்குநரைப் போல, சிநேகிதனே சிநேகிதனே போன்ற பாடலை எழுதிய பெண் கவிஞர் தாமரை போன்றோரும், காமிராவைக் கையில் எடுக்க வேண்டிய தீவிரத்தைச் சொல்லிக் கொடுக்கும் சூழலை பெண்ணே தீர்மானிக்க வேண்டும் என்போரும் தொடர்ந்து கலகக் குரலை எழுப்ப வேண்டிய சூழலை பெண்ணின் வெளி - இருப்பு தூண்டுகிறது.

நன்றி கீற்று

தமிழ் ஊடகங்களும் பெண்களும்

இதைப்பற்றி என்னுடைய கருத்துக்களை எழுதுறதுக்கு முதல் எனக்குள்ள ஒரு சந்தேகம். தமிழ் ஊடகங்களும் தமிழ் பெண்களுமா? அல்லது தமிழ் ஊடகங்களும் பெண்களுமா (பொதுப்படையில் ?) இந்த விவாத தலைப்பு? நான் தமிழ் ஊடகங்களும் தமிழ் பெண்களும் என்ற தலைப்பினுள் இருந்து எனது எண்ணங்கள இங்க எழுதுவது பொருத்தமாக இருக்குமோ?

முதலாவது, தமிழ் பெண்கள் என்றால் யார்? புலத்தில வாழ்கின்ற எங்களை மாதிரி பெண்கள் தொடக்கம், தமிழ் நாட்டில வாழுற, கொழும்பில் வாழுற, மற்றும் தாயகத்தில போராடுற போராளிகள் வரை நிறைய வகை பெண்கள் இருக்கினம்....... ஒவ்வொரு இடங்களில வாழ்கின்ற பெண்களுக்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மைகள் இருக்கும். இதனால் எங்கள் எல்லோரையும் ஒரே கோணத்தில் வைத்து நோக்குவது சரியான பார்வையல்ல என்று உங்களுக்கு முதலில சொல்லிக்கொள்ள விரும்புறன்....! உதாரணத்திற்கு, கொழும்பில இருக்கிற பெண்கள் அப்பிடிச் செய்யுயினம், இப்பிடி செய்யுயினம் என்று சொல்லிக்கொண்டு புலத்தில இருக்கிற எங்களை மட்டம் தட்டுவது பிழையான அணுகுமுறை!

அடுத்த விசயம், தமிழ் ஊடகங்கள் என்றால் எந்த மாதிரியான தமிழ் ஊடகங்களை பற்றி இங்க கேட்கப்பட்டுள்ளது? சிறீ லங்கா அரசுக்கு சார்பான தமிழ் ஊடகங்கள் இருக்கின்றன. இந்திய அரசுக்கு சார்பான தமிழ் ஊடகங்கள் இருக்கின்றன. தமிழீழத்திற்கு ஆதரவான தமிழ் ஊடகங்கள் இருக்கின்றன. அப்படியும், இப்படியுமா மதில் மேல் பூன மாதிரி இருந்துகொண்டு நேரத்துக்கு நேரம் ஒவ்வொரு கதை கதைக்கிற தமிழ் ஊடகங்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில பார்த்தால் ஒவ்வொரு தமிழ் ஊடகங்களும் ஒவ்வொரு விதமாக தமிழ் பெண்களை கையாளுறீனம் என்று சொல்ல வேணும். தாயகத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் என்று பார்த்தா அங்கு பெண்களுக்கு தேவையான மதிப்பு, கவுரவம் எப்பவும் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதில எதுவித சந்தேகமும் தேவையில்லை. ஆனால், நாங்கள் தமிழ் நாட்டில இருக்கிற தமிழ் ஊடகங்கள் பற்றி கதைக்கப்போனா எங்கட தலைவிதி அங்க தலைகீழாக எழுதப்பட்டிருக்கும். உங்கள் எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஊடகங்கள் எப்பிடி பெண்களை போட்டு பந்தாடுகின்றன என்று! இந்த காரணத்தால, நான் இங்கு திரும்பவும் அதைப்பற்றி இங்க சொல்ல விரும்பவில்லை. மேலும், நான் புலத்தில வாழுற பெண் என்றபடியால் எனது எண்ணங்களை "புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்களும் புலத்தில் வாழும் பெண்களும்!" என்ற தலைப்பினுள் சுருக்கிக் கொள்ளுறன்.....!

சரி நாங்கள் விசயத்துக்கு வருவம், புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் எவை? தொலைக்காட்சி சேவைகள் முந்தி ரீரீஎன், இப்போது தரிசனம், தீபம், இப்படி பல.., பிறகு நிறைய வானொலிச் சேவைகள், இதில இணைய வானொலிகளும் அடக்கம், அதுக்கு பிறகு நாங்கள் கருத்தாடல் செய்யுற இந்த யாழ் இணையம், தமிழ்நாதம், தமிழ் பாட்டு கேட்கிற சைட்டுக்கள், தமிழில சட் பண்ணுற சைட்டுக்கள், இப்படி ஒரு தொகை இணையங்கள் இருக்கு. இத மாதிரி புலத்தில் இருந்து வெளிவாற பத்திரிகைகளும் இருக்கு. நான் எனக்கு தெரிஞ்ச சில ஊடகங்களை மேற்கோள் காட்டி இனி மிச்ச கதைய சுருக்கமா சொல்லுறன்.......

எல்லாருக்கும் தெரிஞ்ச சில விசயங்களை அடிப்படையா வச்சு விளங்கப்படுத்தினா, எல்லாருக்கும் விளங்கும் என்றபடியால், முதலாவது தமிழ் ஊடகங்களில போடப்படுகிற சில நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது பொருத்தமா இருக்கும் என்று நினைக்கிறன்....! இதில முக்கியமானது ரீவியில் போடப்படுகின்ற நாடகங்கள். இதில வாற நிறைய நகைச்சுவைகளில பெண்கள் காலுக்கு போடுற செருப்பில இருந்து தலையில வைக்கிற பூ மட்டும் எங்கெங்க பெண்களை கிண்டல் செய்யலாம் என்று பார்த்து உருவாக்கப்படுகிது.....!

நகைச்சுவையில கூறப்படுபவை எல்லாம் பொய் என்று நான் சொல்லயில்ல. ஆனால், இப்படியான நகைச்சுவையின் மூலம் எங்களுக்கு சொல்ல வருகிற செய்தி என்னவென்று தெளிவாக விளங்கயில்ல. இன்னொரு விதமா சொல்லிறதா இருந்தா, இந்த நாடகங்களின் இறுதியில் நாங்கள் தலைமயிரை எவ்வளவு நீளமா வளர்க்க வேணும், அதைப் பிண்ணிக்கட்ட வேணுமா இல்லாட்டி கிளிப்போட வேணுமா, உதட்டுக்கு என்னென்ன கலரில சாயம் பூசலாம், என்னென்ன கலரில பூசக் கூடாது, எவ்வளவுக்கு மேல பூசக்கூடாது, ஆகக்கூடினது எத்தின பவுண் நகை போடலாம், என்னென்ன உடுப்பு போடலாம், என்னென்ன உடுப்பு போடக்கூடாது, எங்கெங்க போகலாம், எங்கெங்க போககூடாது... இவற்றை ஒரு பட்டியலாக்கி வெளியிட்டா இந்த நாடகத்தில் வரும் பெண்களைப் பற்றிய நகைச்சுவைகளை பார்த்து பெண்கள் முன்னேறிக்கொள்வது இன்னும் இலகுவாக இருக்கும். தமிழ் ஊடகங்கள் பெண்களை நல்லா கிண்டல் செய்கின்றன என்பதற்கு புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் விதிவிலக்கல்ல என்பதை இதன் மூலம் சொல்லிக்கொள்ள விரும்புறன்.

அடுத்தது, பெண்கள் ரெண்டு பேர் சேர்ந்திட்டா லேடீஸ் கிளப் இல்லாட்டி பெண்கள் அமைப்பு என்று சொல்லி எங்கள இனங்காட்ட முயற்சிக்கிற தன்மை புலத்தில் இருக்கிற தமிழ் ஊடகங்களிலையும் இருக்கு. அதாவது இப்படி செய்வதன் மூலம் எங்கள வித்தியாசமான ஆக்களா சமூகத்தில பிரித்து காட்டி ஒதுக்கி வைக்கிற விளையாட்டுக்கள் நிறைய இருக்கு.

பெண்கள் என்று சொல்லேக்க என் அம்மாவும் பெண், என்னுடடைய அம்மம்மாவும் பெண், நானும் பெண். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்ததியாக சேர்ந்தனாங்கள். அந்தக்காலத்தில என்னுடைய அம்மம்மா நான் இப்போது வாழுறமாதிரி வாழயில்லை. இதேமாதிரி நான் என் அம்மா மாதிரியோ அல்லது அம்மம்மா மாதிரியோ இப்ப வாழல. நவீன உலகில், கால ஓட்டத்தில தினமும் எங்கட வாழ்க்கை முறையில நிறைய மாறுதல்கள் நடந்துகொண்டு இருக்கு. நிலமை இப்படி இருக்க, இங்க சிரிப்பு என்னவென்றால் சந்ததிகள பிரிச்சு பார்க்கிற பக்குவம் இன்னும்தான் எங்கட தமிழ் ஊடகங்களுக்கு வரயில்லை. பனங்கிழங்குகள ஒன்றா கட்டி அடுக்கிறமாதிரி எல்லாரையும் ஒரே சாக்கில போட்டு கட்டிவச்சிருக்கினம்.

முக்கியமான ஒரு சிக்கல் என்னென்றா, தமிழ் ஊடகங்கள் பெண்களை பாரபட்சமா நடத்துகின்றன என்று சொல்லேக்க நீங்கள் அந்த ஊடகங்கள நடத்துற நிருவாகமே இதற்கு காரணம் என்று நினைக்ககூடாது. சிலவேளைகளில நிருவாகமும் காரணமா இருக்கலாம். ஆனால், முக்கிய காரணமா இருப்பவர்கள் ஊடகங்களின் நேயர்கள் அல்லது வாசகர்கள் என்று குறிப்பிட வேணும்....! ஊடகங்களின்ர அடிநாதமா உண்மையில இருப்பவர்கள் அதன் நேயர்கள் அல்லது வாசகர்கள். இவர்கள் பெண்களை கையாளுகின்ற விதத்தை பொறுத்து அந்தந்த ஊடகங்களின்ற இமேஜ் பாதிக்கப்படுது. உதாரணமா, இங்க எங்கட யாழ் இணையத்தையே எடுத்துக்கொள்ளுவம். ஒரு சிலர் செய்கின்ற கீழ்த்தரமான வேலைகளால மொத்த யாழ் களமும் அல்லோல கல்லோலப் படவேண்டி இருக்கு. இதே பிரச்சனை வானொலிகளிலையும் வரும். முக்கியமா, ஏதாவது விவாதங்கள் ரெலிபோனுக்கிலால நடக்கேக்க வக்கிர புத்தியோட நடந்துகொள்ளுற சில நேயர்களால் முழு வானொலிக்குமே கெட்ட பெயர் வருது. புலத்தில வாழுற தமிழ் மக்களின்ர மனங்களில மாற்றம் வராதவரை புலத்து தமிழ் ஊடகங்களில் பெண்கள் சம்மந்தமான போக்கிலும் மாற்றங்கள் வரப்போவதில்லை. நான் என்ன சொல்ல வாறன் என்பதை நீங்கள் புரிஞ்சு இருப்பீங்கள் என்று நினைக்கிறன்.

ஒரு சமூகம் எண்டிறது பல குடும்பங்கள் சேர்ந்தது. சமூகத்தில நடக்கிற எல்லா விசயங்களும் தனித்தனி குடும்பங்களில நடக்கிற விசயங்களின்ர ஒட்டுமொத்த பிரதிபலிப்பா இருக்கு. அதாவது முகம் பாக்கிற கண்ணாடி மாதிரி. தமிழ் ஊடகங்களில பெண்கள் என்று சொல்லேக்க இங்க நடக்கிற பெரும்பாலான விசயங்களுக்கும் எங்கட தனித்தனி குடும்பங்களில பெண்கள் சம்மந்தமா நடக்கிற விசயங்களுக்கும் அடிப்படையில நிறைய ஒற்றுமைகள் இருக்கு என்று நான் நினைக்கிறன். பானையுக்க இருக்கிறது தானே அகப்பையில வரும்? அதாவது பொதுவா சொல்லப்போனால், புலத்தில இருக்கிற தமிழ் ஊடகங்கள் பெண்களை சரியான முறையில அணுகிறதுக்கு முன்னம் முதலில புலத்தில் வாழுற தமிழர்களின்ர குடும்பங்கள் பெண்களை சரியான முறையில அணுகமுயற்சிக்க வேண்டும்.

கடைசியா சொல்ல வேணும் ஒரு விசயத்தை! தமிழின துரோகிகள் நடத்துற புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் தவிர, மிச்ச எல்லா புலத்தில உள்ள தமிழ் ஊடகங்களும் தாயகம் சம்மந்தமான விடயங்களில பெண்களுக்கு எதுவித பாகுபாடோ இல்லாட்டி வேற்றுமையோ காட்டுறதில்ல. கெளரவமா, சமத்துவமாக கையாள்கின்றார்கள். தாயகம் தவிர்ந்த மற்றைய விடயங்கள பற்றி போகேக்கதான் எங்கையோ பிழைக்கிது என்று நான் நினைக்கிறன். இதில இருந்து தெரியுறது என்னவென்றா தாயகத்தில நடக்கிற விடுதலைப் போராட்டமே புலத்தில இருக்கிற எங்கள மாதிரி பெண்கள இந்தளவு நிலைக்காவது உயர்த்தி இருக்கு. இதற்காக புலத்தில வாழுற நாங்கள் தாயகத்துக்கு நன்றி கூற வேணும். தமிழீழ தனியரசு சர்வதேச நாடுகளால விரைவில அங்கீகரிக்கப்பட்டு எங்கட இனம் விடுதலை அடையிற காலத்தில நிச்சயமா புலத்தில இருக்கிற ஊடகங்களிலையும் பெண்கள் சம்மந்தமாக நிறைய நல்ல மாறுதல்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் ஊடகங்களும் பெண்களும் என்ற இந்த கருத்தாடலில என்னையும் அழைத்து வாய்ப்பு தந்த வலைஞன் அண்ணாவிற்கு எனது நன்றியத் தெரிவித்துக் கொள்ளுறன். சந்தர்ப்பம் வரும்போது மீண்டும் எனது கருத்தை தொடருவன் என்று கூறி இப்போது விடைபெறுகிறேன். :)

நன்றி!

Edited by அனிதா

பெண்களும் விளம்பரங்களும்...

-----------------------------------------------------------

கேடிஸ்ரீ

ஒரு பெண் தன் மகளிடம் சோப் வாங்கி வா என்று சொல்லி கடைக்கு அனுப்புகிறாள்.... அப்பெண்ணின் மகள் சோப் வாங்க கடைக்கு சென்றப்பிறகே... அந்த தாய்க்கு தன் மகளிடம் என்ன சோப் வாங்கிவர வேண்டும் என்று சொல்லவில்லையே என்பது நினைவுக்குவர... பதறுகிறாள்... தான் நினைத்த சோப்பை பெண் வாங்கி வராமல் வேறு ஏதாவது சோப் வாங்கி வந்துவிடடாள்... அதை அவள் உபயோகித்துவிட்டால்... அவளுடைய சருமம் கெட்டு, அழகு கெட்டு நாளை வளர்ந்தப் பிறகு தன் பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? என்கிற ரீதியில் அவளுடைய கற்பனை நீண்டு செல்ல.. அந்த தாய் பதறுகிறாள்....

இளைஞன் ஒருவனின் செல்பேசியில் லைன் சரியாக கிடைக்காமல் டென்ஷனாக காணப்படுகிறான்... அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருக்கிறான்... அருகாமையில் இளம் பெண் ஒருத்தி தன் சகதோழியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறாள்...

''நேற்று எங்க வீட்டில கரண்ட் ஆ·ப் ஆயிடுச்சு... அந்த சீரியல என்ன நடந்தது---'' என்று அவர்களுடைய பேச்சு செல்கிறது..

உடனே அந்த இளைஞன் ''இப்ப இது ரொம்ப முக்கியம்..'' என்று சொல்லிக்கொள்கிறான்...

விளம்பர படம் ஒன்றில் மேற்கூறிய சம்பவங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன...

நாம் சந்திக்கும் இன்றைய இளம் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைக்காக, பெண் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்காகவும் விளம்பரத்தில் வரும் பெண் போல் அதிகம் கவலைப்படுகிறார்கள்... பதட்டமடைகிறார்கள்.... ஆம்.. எல்லாம் அவர்கள் எதிர்கால வாழ்விற்காகத்தான்...

விளம்பரத்தில் வரும் தாயார் போல் மகளின் கல்யாணத்திற்காக அல்ல... தன் மகள் மருத்துவத்துறையில் பட்டம் பெற வேண்டும்; பொறியியல் துறையில் வல்லுனராக வேண்டும்... நாட்டியத்தில் ஓர் சித்ரா விஸ்வேஸ்வரனாக வேண்டும், பாட்டில் எம்.எஸ். ஆக வேண்டும் என்று நாள் முழுவதும் மகளுடனே ஓடுகிறார்கள்.

இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் உள்நுழைந்துவிட்டார்கள். உயர் பதவியிலிருந்து கடைநிலை பதவி வரை பெண்கள் வியாபித்திருக்கும் வேளையில்... சாதனைப் பல படைத்துவரும் இந்த நூற்றாண்டில் பெண்களைப் பற்றிய இத்தகைய விளம்பரங்கள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

இருபதாம் நூற்றாண்டு முதலே பெண் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் அன்றே பெண் உரிமைக்காக போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களை மாபெரும் பெண்மணி என்று சொல்லலாம்.

அன்றைய காலத்தில் பலவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் கல்லூரி படிப்பை தொட்டவர் முத்துலட்சுமி. இந்தியாவிலேயே முதன் முதலாக மருத்துவக்கல்வியில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றவர். 1925வாக்கில் பெண்கள் குழந்தைகள் மருத்துவ நோய் ஆராய்ச்சிக்காக லண்டன் செல்லும் சந்தர்ப்பம் இவருக்கு ஏற்பட, அங்கு நடைபெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரை அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சட்டசபையில் நுழைந்த முதல் இந்தியப் பெண்மணியும் இவர்தான். உலகிலேயே, அதே போல் ஒரு சட்டசபையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே.

இவரைத் தொடர்ந்து பல பெண்கள்.. பெண் விடுதலைக்காகவும், பெண் உரிமைகளுக்காவும், மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் போராடியிருக்கிறார்கள்.

60களில் பெண்கள் படிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் சிந்தனையும், அவர்கள் உலகமும் விரியத்தொடங்கிவிட்டன. ஆணுக்கு சமமாக.. ஏன் சில துறைகளில் ஆண்களை பின்தள்ளி முன்னுக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் பெண் முன்னேறினாலும், இந்த ஆணாதிக்க உலகில் பெண் இரண்டாம் குடிமக்களாகத்தான் கவனிக்கப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் பெண் போகப்பொருளாகத்தான் பதிவு செய்யப்படுகிறாள். இன்றைய ஊடகங்களும் மறுபடியும் மறுபடியும் பெண்கணை ஓர் வட்டத்துக்குள்ளேயே வளைய வரச்செய்வதையே தங்களின் கொள்கையாக கொண்டுள்ளது. கல்யாணம், கணவன், குழந்தை, வீடு என்று பெண்ணை அந்த வட்டத்திற்குள்ளேயே தள்ளிவிடுகிறது இந்த உலகம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான விளம்பர நிறுவனங்களில் உள்ள உயர்பதவிகளில் அதிகம் இருப்பவர்கள் பெண்கள் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால் விளம்பரங்களில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பயன்படுத்துவதற்கு எப்படி இப்பெண்கள் அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி ஏழாமல் இல்லை. பெரும்பாலான மக்களை சென்றடையும் இந்த விளம்பரங்களை எப்படிச் சொல்கிறோம் என்பதில் விளம்பர தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சமூக அக்கறை கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் மூலம் லட்சக்கணக்கான வெகுஜன மக்களை சென்றடையும் இந்த விளம்பரங்கள், பெண்களின் தனி மனித சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்வின் அத்தியாவசியங்களான இந்த இரண்டையும் உணர்ந்து விட்ட சில பெண்கள் இது போன்ற தடைகளைக் கடந்து இயங்கத் துணிகிறார்கள். ஆனால் இன்னும் பெருமளவில் இருக்கும் படிக்காத, படித்தும் தன் கூட்டிற்குள்ளிருந்து வெளி வரத் துணியாத பெண்களின் மேல் இந்த விளம்பரங்கள் ஒரு கூடுதல் சுமையை ஏற்றி வைக்க நினைக்கின்றன. மிக வேகமாக எய்யப்படும் இந்த விளம்பர அம்புகள் பெண்களின் சுயத்தை நொடிக்கொரு தடவை குத்திக் கிழித்துப் பதம் பார்க்கின்றன.

இந்த விளம்பரங்கள் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை விடவும், கல்வியை விடவும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில்தான் அதிக அக்கறை செலுத்துவர் என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது. பெண்கள், ஆண்களை மயக்குவதற்கு இந்தக் கிரீமை உபயோகப்படுத்தலாம் என்பது போல் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து இது மாதிரி விளம்பரங்கள் வருவது, ஒன்று திட்டமிட்ட சதியாகயிருக்கலாம் அல்லது சமூக அமைப்பு சார்ந்த அறியாமையாக இருக்கலாம். இரண்டுமே அபாயகரமானவை. காரணம், திட்டமிட்ட சதியாக இருந்தால் ஒரு நூற்றாண்டுப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. சமூக அமைப்பு சார்ந்த அறியாமையாக இருந்தால், அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளாமல் சமூக அங்கீகாரத்தைத் தானே எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. படித்து வெளிவந்து இயங்கும் பெண்கள் கூட அவர்களுக்கான அங்கீகாரத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாமலிருப்பதே - பெண் பற்றி இந்தச் சமூகம் பிடிவாதமாக வைத்துக் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மாற்ற முடியாமல் போவதற்குக் காரணமாகிறது.

விளம்பரங்களில் பெண்கள் வெறும் காட்சிப் பொருளாகவும், கவர்ச்சிப் பதுமைகளாகவும் சித்திரிப்பதை எதிர்க்க வேண்டியது ஒரு பெரிய சமூக மாற்றத்திற்கான உடனடித் தேவையெனப்படுகிறது.

எதற்கெல்லாமோ போராடும் பெண் இயக்கங்கள் இத்தகைய பெண்களை இழிவுப்படுத்தும் விளம்பரங்களுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி, பெண்களை மழுங்க அடிக்கும் இத்தகைய விளம்பரங்களை தடை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

ஆனால் இத்தனை போராட்டங்களையும் தாண்டி இன்று பெண் சாதிக்கிறாள்! சாதிக்கப் புறப்பட்டுவிட்டாள்!

ஒரு இந்திரா காந்தி, ஒரு கல்பனா சாவ்லா, ஒரு ஐஸ்வர்யா ராய் என்று எங்கும் எதிலும் பெண் நிறைந்து இருக்கிறாள். வருடா வருடம் நடக்கு பள்ளி இறுதியாண்டு தேர்வில் ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள்தான் அதிகம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.

நம் நாட்டை, நம் மாநிலத்தை வழிநடத்தி செல்பவர்கள் பெண்கள்தான் என்பதை நினைவில் கொண்டு.. இத்தகைய போலித்தானமான, கட்டுப்பொட்டித்தனமாக விளம்பரங்களை இனியாவது தயாரிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே பல பெண் அமைப்புகளின் எதிர்பார்ப்பு.

நன்றி - ஆறாம்தினை

ஊடகம் என்றால் என்ன ?

உலகத்தில் பரந்து இருக்கும் இதழியல்கள், தொலைக்காட்சி, திரைப்படம், , இணையம், தனிநபர் பிரச்சாரம், வானொலி மற்றும் அலைவரிசைகள் எனப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் செய்திகள் மற்றும் இதற்குப் பயன்படும் தகவல் தொடர்புக் கருவிகள், ஜனசக்தி ஆகிய அனைத்தும் ஊடகம் என்ற கருத்தாக்கத்தில் அடக்கிவிடலாம்.

ஊடகங்களின் அவசியம்?

ஊடகங்கள் ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது. சில சம்பவங்களை எடுத்து அலசி, ஆராய்ந்துப் பார்த்தோமானால் மீடியாவின் அவசியம் என்ன என்பதை அனுமானித்துவிடலாம்.விஞ்ஞானம

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஊடகங்களும் பெண்களும்!

இந்தத் தலைப்பை வலைஞன் அண்ணா தந்தவுடனேயே எனக்குள் மின்னலாய்த்தோன்றியது எங்கள் புரட்சிக்கவிஞர் காசிஆனந்தன் அண்ணாவின் நறுக்குகளில் தெறித்தவைதான்.

துணி

துணி இல்லா

நடிகை

விளம்பர ஓவியம்

அகலத்துணியில்.

***

விளம்பரம்

குளிப்பாட்டி

அழுக்காகிறான்

பெண்ணை

தொலைக்காட்சியில்...

****

சரி கருத்துக்குள் நுழைவோமா?

திரைப்படத்தை கொஞ்சம் விடுத்து புலம்பெயர்ந்த நாடுகளில் கோலோச்சி ஆட்சி நடத்துகின்ற எங்கள் தமிழ் வானொலிகளைப்பார்ப்போம். ஆண்களின் அடக்குமுறைத்தனமும், அடாவடித்தனமும் ஆண் என்கின்ற திமிரும் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. தங்கள் தப்புத் தாளங்களுக்கு தலையாட்டாதவர்களுக்கு 'தப்பான பட்டம்' கொடுத்து ஓரம் கட்டி விடுவதும் வானொலிகளில் அரங்கேறுகின்ற பெரும் கூத்து.

பெண்கள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டால் ஆண்களின் இச்சைகளுக்கு அடிபணிந்து போகவேண்டும் என்பதும் வளைந்து கொடுத்தாக வேண்டும் என்பதான ஒரு பிழையான கணிப்பீடு நிலவிவருகின்றது. "ஒய்யாரக்க்கொண்டையிலே தாழம்பூவாம்" உள்ளே இருப்பது ஈரும்பேனாம்" என்கின்ற ஒரு சொல்லடை நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு "கலைஞர்கள் மீது ஒரு பற்றும் பாசமும் வருவது தவிர்க்கமுடியாதது தான் இப்படி விழுந்த விட்டில் பூச்சிகளாய் ஏராளமான பெண்கள் இருக்கின்றார்கள். ஆகவே இதற்கான அலசலோடு அதற்கான தீர்வையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். பெற்றோர்கள் தான் பெண்களுக்கான நல்ல வழிகாட்டிகள் என்பதை பொறுப்புணர்வோடு உணர்ந்து செயற்படவேண்டும். அந்தந்த வயதில் அவர்களுக்கான நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும்.இன்னும் சொல்லலாம் அதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை உற்று நோக்குவோம்.

இரண்டாவது கவிதை, கட்டுரை, என்கின்ற படைப்பாளி வட்டத்துள் வார்க்கப்படும் பத்திரிகைத்துறை. இங்கு தெரிந்தோ தெரியாமலோ தவறுவிட்டுக்கொண்டிருக்கின்

  • 2 weeks later...

இதுவரை வாதாடப்பட்ட தலைப்புக்களில் இது ஒரு வித்தியாசமான தலைப்பு.

இப்படி ஆக்கபூர்வமான தலைப்பொன்றை ஆரம்பித்த வலைஞன் அண்ணாக்கு நன்றி!

இத் தலைப்புக்கு சில சம்மந்தப்பட்ட ஆக்கங்கள் தேடினேன் கிடைக்கவில்லை. அதனால

முதலில் என் கருத்தையே முன் வைக்கிறேன்.

"தமிழ் ஊடகங்களும் பெண்களும்" என்றால் தமிழ் ஊடகங்களில் கூட தமிழ் பெண்கள் தான்

இருப்பார்கள். வெள்ளைகாரர்களும் இருப்பார்கள். ஆனால் நான் தமிழ் பெண்களையே மையமாக

வைத்து என் கருத்தை சொல்கிறேன்.

சினிமாவில் பெண்களின் இடம் என்னவென்று நான் சொல்ல வேண்டியதில்லை!

பல ப(இ)டங்களில் பெண்ணோட இடையில தான் கமரா நிற்கும். ஆணின் இடையில்

கமரா நிற்பதை பார்த்திருப்பீர்களா? இதை பற்றி ஏற்கனவே நிலா ஒரு கட்டுரை போட்டிருந்தார்.

நான் சொல்ல வேண்டியதில்லை.

சரி வேறு ஊடகங்களை பார்ப்பம். எனக்கு உடனே அதில் வரும் விளம்பரங்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. விளம்பரங்களில் கூட பெண்கள் தான். நகையில் இருந்து ஆண்களுக்கான சவரம் செய்வதற்கு பாவிக்கும் பொருட்கள் வரை பெண்கள் தான். சரி இதெல்லாம் விளம்பரதாரர்களின் பிழை,

அவர்கள் பெண்களை விளம்பரப்பொருட்களாக பாவிக்கிறார்கள், பெண்களை அப்படி இப்படி என்று ஆட வைத்து அரை குறை உடைகள் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாமா?

ஏன் இதில் பெண்களின் பங்கு ஒன்றுமில்லையா? விளம்பரத்தில் நடிக்கவென்றே தங்களை தயார் படுத்தி

தானே மொடல்களாக பெண்கள் வருகிறார்கள். சினிமாவில் அப்படி தானே. விளம்பரத்தில்,சினிமாவில் பெண்களின் உருவத்தை குறி வைத்தே எடுக்கப்படுகின்றது. ஆனால் பெண்கள் அதை அறிந்து தானே தொடங்குகிறார்கள்? இன்னும் சொல்ல போனால் அதற்கேற்ப தங்களை தயார் படுத்துவதும் பெண்கள் தான். இப்படி இருக்க எப்படி ஊடகங்களை, விளம்பர தாரர்களை மட்டும் குறை சொல்ல முடியும்?

அதே போல தமிழ்தங்கை(அக்கா) சொன்னது போல பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வரும் கதைகள், கவிகள். கதைகள் என்ற பெயரில் பெண்ணே பெண்களையும், ஆண்களையும் அதை விட ஆண்,பெண்ணோட உறவுகளை வர்ணித்து எழுதுகிறார்கள். கவிகளும் தான். இப்படி இருக்க ஆண்களை மட்டும் குறை சொல்வது எப்படி?

நான் அடிக்கடி ரிரின் பார்ப்பதுண்டு. ஒரு காலத்தில். அதுவும் ஒரு ஊடகம் தான். நம்மவர்களுடையது.

அதில் பல பெண்கள் ஜஸ்மின் அக்கா,சாந்தி அக்கா எண்டு பலர் நிகழ்ச்சிகள் செய்வார்கள். படலைக்கு படலையில் கூட பெண்கள் இருக்கிறார்கள். அங்கு பார்த்தால் வித்தியாசம் பெரிதாக எனக்கு தெரிவதில்லை. இப்படியான பெண்களை மதித்து நடாத்தப்படும் ஊடகங்களும் இருக்கின்றது.

அதற்காக எல்லா ஊடகங்களும் அப்படி என்றில்லை. பிரபலமான ரேடியோவில் பணியாற்றி வந்த பெண்ணை அவர் சரியில்லை என்று துரத்திய செய்தியும் நான் அறிந்திருக்கின்றேன்.

ஆனால் என்னோட கருத்து என்னவென்றால் சினிமாவும் சரி, ஊடகங்களும் சரி பெண்கள் முதலில் அதுவும் தமிழ் பெண்கள் அவர்களாக தெரிவு செய்யப்பட்ட வழிதான் அது. யாரும் வற்புறுத்தப்பட்டு அழைக்கப்படவில்லை.

ஆனால் சினிமாவிற்குள்ளோ, ஊடகங்களுக்குள்ளோ சென்றபின் வற்புறுத்தப்படலாம்.

அது வேறு ஒரு பிரச்சனை. அது முதலாளியோ, அது ஆணோ இல்லை பெண்ணோ யாராகவும் இருக்கலாம். அப்படி பலது நடக்கின்றது. அதைப் பற்றி மேலும் தகவல்கள் சேகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கிடைத்தால் தகவல்களோடு சந்திக்கிறேன்.....

  • 1 month later...
  • தொடங்கியவர்

இத் தலைப்பின் கீழ் கருத்தாடுமாறு அழைக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள். ஏனையவர்கள் நேரப்பிரச்சனை காரணமாக பங்கெடுத்துக்கொள்ளவில்லை. இதுவரை பிற தளங்களிலிருந்தும் சில ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இனி ஏனைய கருத்துக்கள உறவுகளும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.

பெண்களுக்கேயுரிய குணமான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு!! இவைகளுக்கெல்லாம் இனி யார் வந்து உயிர்ப்புக்கொடுக்கப் போகின்றார்கள் என நான் அறியேன்..

??

விளங்கவில்லை. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு தமிழ்ப்பெண்களிக்கு மட்டுமே உரித்தான அம்சமா அல்லது வெள்ளைக்காரிகளிலும் இவற்றை காணலாமா? விஞ்ஞான ரீதியாக பார்த்தால் எனக்கு இது விளங்கவில்லை. உங்களுக்கு விளங்குகின்றதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாவே ஊடகங்களில பெண்களின்ர நிலமை கவலைக்கிடந்தான்..... இதில தமிழ் ஊடகங்கள சொல்லவா வேணும்.... முதலில பெண்களுக்கான தனி நிகழ்ச்சி எண்டு செய்யிறதுகள நிப்பாட்டோணும்.... அப்பிடி ஒரு நிகழ்ச்சிய தொடங்கி... அதில மேக்கப்போடுறது எப்பிடி..... நிகம் வெட்டுறது எப்பிடி..... சமைக்கிறது எப்பிடி...... சட்டிபானை கழுவுறது எப்பிடி எண்டு அட்வைஸ் பண்ணுவினம்..... இத ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவா செய்யலாந்தானே.... பெண்களின்ர நிகழ்ச்சி எண்டு சொல்லி பெண்கள் செய்யிற வேலையள் தான் இதெண்டு இவை பரப்புரை செய்யினமாக்கும:்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.