Jump to content

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம் - தினகரன் என்ற அரசியல் புதிரை அணுகுவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம் - தினகரன் என்ற அரசியல் புதிரை அணுகுவது எப்படி?

spacer.png

ராஜன் குறை 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன், சீமான் தவிர முதலமைச்சர் பதவிக்கான போட்டியாளராக இரண்டு பிரதான கட்சிகளுக்கு வெளியில் களம்கண்டவர் டி.டி.வி.தினகரன். இந்தத் தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றமும் இவருடையதுதான். அ.இ.அ.தி.மு.க வாக்குகளை தென்மாவட்டங்களில் கணிசமாகப் பிரிப்பார் என்றும், குறைந்தபட்சம் அவர் போட்டியிட்ட தொகுதியிலாவது வெல்வார் என்றும் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டுமே நிகழவில்லை. அ.இ.அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில் தே.மு.தி.க இவருடன் கூட்டணி அமைத்ததும், ஓவைசி கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய இஸ்லாமிய கட்சிகள் இவருடன் கூட்டணி வைத்ததும் இவருடைய அரசியல் மதிப்பைக் கூட்டுவதாக இருந்தது. ஆனால், எல்லாம் சேர்ந்து மூன்று சதவிகித ஓட்டைக்கூடப் பெற முடியவில்லை என்பது உண்மையிலேயே அதிர்ச்சித் தோல்விதான். மொத்த வாக்கு எண்ணிக்கையில் இவர் கூட்டணி மக்கள் நீதி மய்யக் கூட்டணியைவிட ஐந்து லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றது மட்டுமே சிறிய ஆறுதல் எனக் கொள்ளலாம். தே.மு.தி.க-வின் அரசியல் அஸ்தமனத்துக்கு உதவி செய்தார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. ஆனால், இது ஏன் இப்படி நிகழ்ந்தது? இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஜெயலலிதாவின் வாரிசா?

தினகரன் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இறுதியாண்டுகளில் இருக்கவில்லை. அதிகார மையத்திலிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருந்தார். அவர் கட்சியில் செல்வாக்காக இருந்த காலத்திலும்கூட தலமட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டாரா என்பது கேள்விக்குரியதுதான். ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலாவுக்குப் பக்கபலமாக அவர் மீண்டும் மையத்துக்கு வந்தார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சிறை சென்றதும், துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு சசிகலா சார்பாக கட்சியை நிர்வகிப்பவராக இருந்தார். ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதியில் சசிகலா அணி வேட்பாளராக ஒட்டுமொத்த அமைச்சரவை ஆதரவுடன் களம் கண்டார். ஓ.பி.எஸ் அணியைச் சார்ந்த மதுசூதனனை எதிர்த்து நின்றார். வென்றிருந்தால் முதல்வராகவும் ஆகியிருக்கலாம். ஆனால் பாரதீய ஜனதா கட்சி அதை அனுமதிக்க விரும்பவில்லை. பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தது. அ.இ.அ.தி.மு.க அமைச்சரவை மிரட்டப்பட்டது. பழனிசாமி யோசிக்கத் தொடங்கினார். ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை என்று தினகரனையோ, சசிகலாவையோ ஆதரிக்க வேண்டிய தேவை இல்லை என்பதை உணர்ந்தார். அதனால் பாஜக-வின் மேலாதிக்கத்தை ஏற்று பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்தார். முதல்வர் பதவியை மட்டும் ஓ.பி.எஸ்ஸுக்கு விட்டுத்தர முடியாது என்பதில் குறியாக இருந்தார். ஒருவழியாக பேரங்கள் முடிந்து சமரசமாகி பன்னீர்செல்வத்துடன் கட்சியையும், ஆட்சியையும் பகிர்ந்துகொண்டு, தினகரனை, சசிகலாவைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார். தேர்தல் ஆணையம் உடனே முடக்கப்பட்ட இரட்டை இலையை ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் கூட்டுத் தலைமைக்குக் கொடுத்தது. மீண்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல். இந்த முறை இரட்டை இலைக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்டார் தினகரன். தி.மு.க லேசாக பிரேக்கில் கால்வைக்க, தினகரன் ஆக்ஸிலேட்டரை ஒரே அழுத்தாக அழுத்தி ஆர்.கே.நகர் தொகுதியில் வென்றார். ஆனாலும் அவரால் மோடியின் கோரப் பிடியிலிருந்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ஈர்க்க முடியவில்லை. அ.இ.அ.தி.மு.க ஆகவும் இல்லாமல், அதற்கு எதிரான கட்சியாகவும் இல்லாமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கி தேங்கி நின்றார்.

சசிகலா ஜெயலலிதாவுடனேயே வசித்தவர்; அவரது உடன்பிறவா சகோதரி. அவருக்கு ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிக்கொள்ள, மக்களும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு வலுவாக இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோதே தற்காலிக முதல்வராக இருந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதனால் சசிகலாவை எதிர்த்து நானே வாரிசு என்று கூறிக்கொள்ளவும், மக்கள் ஏற்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் பழனிசாமி, தினகரன் இருவருமே சசிகலாவின் பினாமிகள்தான். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அ.மு.மு.க-வால் கணிசமான மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை. அதைவிட தினகரனை ஆதரித்ததால் பதவியிழந்த பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளையும் அ.மு.மு.க-வால் கைப்பற்ற முடியவில்லை. அந்தத் தொகுதிகள் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றால் பங்குபோட்டுக்கொள்ளப்பட்டன.

சசிகலா விடுதலை படலம்

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் அடைந்த தோல்வி அ.ம.மு.க-வின் பலவீனத்தைத் தெளிவுபடுத்திவிட்டது. மக்கள் இரட்டை இலை சின்னத்தின் தொடர்ச்சியைத்தான் பார்க்கிறார்கள் என்பதும் உணர்த்தப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தினகரனுக்கு முக்கியத்துவம் எதுவும் இருந்திருக்க முடியாது. ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தண்டனை காலம் முடிந்து சசிகலா சிறையிலிருந்து விடுதலையானார். அவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அது தினகரனுக்கு புதியதொரு ஆற்றலை வழங்கியது.

தேர்தல் நெருங்க, நெருங்க பாஜக பழனிசாமி, பன்னீர்செல்வத்தால் தி.மு.க-வை எதிர்த்து வெல்வது கடினம் என்பதை உணரத் தொடங்கியது. அதனால் சசிகலா, தினகரனை மீண்டும் இணைத்து ஒன்றிணைந்து அ.இ.அ.தி.மு.க-வை உருவாக்க விரும்பியது. ஆடிட்டர் குருமூர்த்தி வெளிப்படையாக இந்த விருப்பத்தைத் தெளிவுபடுத்தினார். ஆனால், பழனிசாமி தானே முதல்வர் வேட்பாளர் என்பதில் குறியாக இருந்தார். அதில் எந்த சமரசத்துக்கும் அவர் தயாராக இல்லை. அதனால் பாஜக, சசிகலாவிடம் தேர்தலில் அ.ம.மு.க-வை ஆதரிக்க வேண்டாம் என்று கூறிவிட்டது. அதேநேரம் தினகரனும் போட்டியிடாவிட்டால் அது அ.இ.அ.தி.மு.க-வுக்கு சாதகமாகப் போய்விடக் கூடாது என்பதும் சசிகலா - தினகரனுக்கு முக்கியம். தப்பித்தவறி பழனிசாமி மீண்டும் முதல்வராகிவிட்டால் அதன்பிறகு அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் எதுவும் இருக்காது. அதனால் கூடியவரை அ.இ.அ.தி.மு.க-வுக்கு சேதாரம் விளைவிக்கவே தினகரன் 170 தொகுதிகளில் போட்டியிட்டார் என்று தோன்றுகிறது. சசிகலா இல்லாமல் அவரால் அ.இ.அ.தி.மு.க-வை வீழ்த்த முடியாது.

 

பெரும்பாலான மக்கள் தீர்மானிப்பது தி.மு.க-வா, அ,இ.அ.தி.மு.க-வா, உதயசூரியனா, இரட்டை இலையா என்றுதான். அதனால் அ.இ.அ.தி.மு.க-வின் கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தாமல் இருப்பதால் இரட்டை இலையை முடக்கினால்தான் சசிகலாவுக்கே கூட தேர்தலில் பழனிசாமியை வென்று அ.இ.அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முடியும். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, தேர்தல் களமாக இருந்தாலும் சரி... அந்தப் போராட்டத்தில் தினகரனுக்குப் பெரிய பங்கு எதுவும் கிடையாது. சசிகலாவுக்கு நம்பகமான செயலராக இருக்கலாம் என்பதைத்தவிர வேறு அரசியல் எதிர்காலம் எதுவும் தினகரனுக்கு அமையுமா என்பது ஐயம்தான்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. 

 

https://minnambalam.com/politics/2021/06/21/14/ttv-dinakaran-election-performance-political-future

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.