Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு சம்பவங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சம்பவங்கள்

சம்பவம் ஒன்று---இன விரோதம்

மே மாதம் 1983.

பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்---ஜே.பி., கில்டா ஒபேயசேகரா விடுதிகள் எங்களுக்கு---முதல் வருட ஆண்களுக்குத் தரப்பட்டிருந்தது. பெண்கள் சங்கமித்த, இராமநாதன் விடுதிகளில் இருந்தார்கள். எங்கள் படிப்பு மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு கன்ரீன் இருக்கும். அங்கு நாங்கள் செய்யும் சேஷ்டைகள் கணக்கிலடங்காதவை. எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு ஆப்பு வைத்தார்கள். ஆப்பு வைத்தவனே ஆபத்பாந்தவன் ஆவதையும் தரிசித்தோம்.

மலையின் உச்சியில் இருக்கும் 'ஜே.பி' விடுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நாங்கள் அதில் ஏறி இறங்குவதற்கு இரண்டே இரண்டு பாதைகள் மாத்திரம்தான் இருந்தன. அதற்கும் மேலே மார்க்கஸ் பெர்ணாண்டோ விடுதி. அங்கே அரிசியும் பருப்பும் அரிதட்டில் இட்டுக் கிழையும் மன்னர்கள் இருந்தார்கள். அனேகமாக சமைத்துக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் அவர்கள் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள்.

என்னுடன் விஜயானந்தனும்---விஷயம் மாமா, ஸ்பென்ஷரும் இருந்தார்கள். ஸ்பென்ஷரை றாக்கிங் செய்யும் போது நாலைந்து பேரை கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டார் பேராசிரியர் சிவசேகரம். அவர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒருவருடத்திற்கு இடை நிறுத்தம் செய்திருந்தார்கள். இதனால் ஆத்திரமுற்ற சிலர் அடிக்கடி எமது றூமிற்கு வந்து ஸ்பென்ஷருக்குத் தொல்லை கொடுத்தார்கள்.

"வாடா மச்சான் போண்டா, சூசியம் சாப்பிடுவம்" சொல்லிக் கொண்டே றஜீவன் வருவான். சாரத்தை சண்டிக்கட்டாகக் கட்டிக் கொண்டு நானும் றஜீவனும் கன்ரீனுக்குப் போவோம். உடலைச் சிலிர்த்தபடி கன்ரீனுக்கு முன்னால் நிற்பான் றஜீவன். பயந்தாங்கொள்ளி நான் அவனை மருவியபடி சுவரோரமாக ஒளிந்து கொள்வேன். உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு றஜீவன் மாத்திரம்தான் தெரிவான். என்னைக் கண்டு கொள்ள முடியாது. இருப்பில் இல்லாத பொருட்களாகக் கேட்டு அவர்களை ஏமாற்றியபடி சூசியத்தை எடுத்து என்னிடம் நீட்டுவான். ஆட்டுக்குடல் கறி, வெற்றிலை பாக்குக்கூடக் கேட்பான். சரத்தைக் கட்டிய பின் விசிறி போலத் தொங்குமே ஒரு நுனி, அதற்குள் அவன் எடுத்துத் தந்தவற்றையெல்லாம் போட்டு மூடுவேன். பீடா வெத்திலைகூட வந்தது. பிறகென்ன? பாட்டுப் பாடியபடி றூமிற்கு வந்து சேருவோம். அங்கே எமக்காக ஒரு கூட்டம் காத்திருக்கும்.

'ஜே.பி' விடுதி முன்பொருதடவை பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. பகிடி வதை தாளாமல் 13 ஆம் நம்பர் அறையிலிருந்த மாணவி ஒருத்தி தன்னைத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றாள். அந்த அறை இப்போது '13ஆ' எனப் பெயரிடப்பட்டு, உடைந்த மரத்தளபாடங்களால் நிரப்பப்பட்டு ஸ்ரோர் றூமாக்கப்பட்டுள்ளது. இரவில் அங்கே அந்தப் பெண்ணின் அழும் குரல் கேட்பதாக இப்பவும் சொல்கின்றார்கள்.

உண்மையைச் சொல்லி ஜெயிலுக்குப் போன ஊடகவியலாளர் திசநாயகம், அப்போது சீனியர் மாணவராக ஜே.பி ஹோலில் தங்கியிருந்து படித்து வந்தார்.

பொறியியல்பீடத்திற்கு இங்கிருந்து போவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இயற்கையை ரசித்தபடி கலஹா வீதியில் நடந்து செனற் பில்டிங் தாண்டி, மகாவலிகங்கையை ஊடறுத்துச் செல்லும் அக்பர் பாலத்தின் மீது நடந்து செல்வது மிகவும் பிடித்தமானது. ஆற்றின் ஒருபக்கம் இருக்கும் பொறியியல் பீடத்தையும், மறுபக்கம் உள்ள ஏனைய பீடங்களையும் இணைக்கும் நோக்கில் ஒற்றைத்தூணின் உதவியுடன் பேராசிரியர் துரைராஜாவினால் இந்தப் பாலம் நிர்மாணிக்கபட்டது. செனற்றைக் கடக்கும் தோறும் கண்கள் 'லவ்வேர்ஸ் லேனை' நோக்கி தானாக விரியும். ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து, உரசிக்கொண்டு 'லவ்வேர்ஸ் பார்க்'கிற்கு தள்ளிச் செல்பவர்களைப் பார்ப்பதில் ஒரு கிறக்கம்.

பொறியியல் பீடத்திற்கு அருகாமையில் - ஆண்கள் இருக்கும் அக்பர் விடுதி. வகுப்பு நடைபெறும் நாட்களில் அங்குதான் மதியம் சாப்பாடு. 'அடு' எடுத்துச் சாப்பிடவும் ஆட்டுக்குடல் சாப்பிடவும் அங்குதான் பழகினோம். முதல்வருட படிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர், 'ஆங்கில வகுப்பு' என்று அறுத்தெடுத்த காலங்களில் அக்பர் ஹோலில்தான் தங்கியிருந்தோம். அக்பர் விடுதிவாசிகளுக்கு பெண்பிரசைகளைக் காணுவதென்பது முயற்கொம்பு. பொறியியல்பீடம்கூட ஒரு வரண்ட பிரதேசம். பல்கலைக்கழகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அறைகளுக்கு எதிரான அறைகளில் இருப்பவர்கள் முற்பிறப்பில் புண்ணியம் செய்தவர்கள். மாலை வகுப்புகள் முடிந்து றூமிற்குத் திரும்பிய பின்னர் கண்ணாடி ஜன்னலைப் பார்த்தபடி ஏங்கியிருப்பார்கள். ஏதாவது அசுமாத்தம் தென்படாதா? தூரத்தே புல்லுக்கட்டுகளைச் சுமந்தபடி கனவுக்கன்னிகள் அசைந்து செல்வார்கள். முதல் விசிலடி ஆரம்பிப்பது யார் என்பதில் எங்களுக்குள் ஒரு போட்டியே நிகழும்.

பொறியியல் பீட கலையரங்கம் ஏ.ஓ.ஏ Pஎரெஇர Tஹெஅட்ரெ இல்தான் அனேகமான தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் நடைபெறும். நாங்கள் இருந்த காலத்தில் 'நிழலில்லா மனிதர்கள்' நாடகம், மாவை நித்தியின் 'திருவிழா' , 'ஓ கல்கத்தா' என்ற இரண்டு நாடகங்கள் நடந்தன. நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாக சொல்லி வைத்தபடி, 'ஜே.பி' விடுதி வந்து விட்டோம். எண்பதிற்கும் மேற்பட்ட படிக்கட்டுகளையும் ஒரே தாவலில் ஏறி முடித்தோம். வழமையாக இடையில் இரண்டொரு தடவைகள் இளைப்பாறுவதுண்டு. அன்று அது இல்லை. எங்கள் விடுதிகளைக் கடந்து 'சங்கமித்தா', 'இராமநாதன்' விடுதிகளுக்குப் போகும் பெண்களுக்கு அன்று சங்காபிஷேகம்.

மலசலகூடம் சென்று 'ஷொப்பிங் பேக்கிற்குள் வாசனைத் தீர்த்தம் நிரப்பினோம். வாங்கு ஒன்றிலிருந்த தவராஜா தூரத்தே கலஹா வீதியை நோட்டம் விடுகின்றான்.
"வாறாளவை... வாறாளவை..."

அவர்கள் தூரத்தில் வரும் போதே, ஆட்கள் மேலே நிற்பதைக் கண்டு கொண்டார்கள். நாங்கள் சாரத்தை வாகாகத் தூக்கி முகத்தை மூடிக்கொண்டு ஆடத் தொடங்கினோம். 'தொங்கு மணிகள்' சுயாதீனமாக ஆடத் தொடங்கின.

"எறியடா... எறியடா...  பாத்து அடியடா... " கூக்குரல்கள் கிழம்பின.

"எடியேய்..." வசீ தனது அர்ச்சனையைத் தொடங்கினான். 'கிஸ்ஸிங் பென்ட்'டை நோக்கி சரமாரியான மூத்திர அடி. சிறுநீர் வாடை காற்றில் கலந்தது. அவர்கள் மழையில் குளித்தபடி 'கிஸ்ஸிங் பென்ட்'டை விட்டு விலகி, 'சரத்சந்திர களரி'யை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். பார்க்க வேடிக்கையாக இருந்த அந்த தரிசனத்தை அவர்களும் நாங்களும் வாழ்க்கையில் மறக்க முடியாது.

வடக்குக் கிழக்கில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் இங்கும் முறுகல்நிலை தோன்றி விடும்.

மே 11 இரவு - கில்டா, மார்ஸ், ஜே.பி விடுதிகளில் ஏககாலத்தில் சலசலப்புத் தொடங்கியது. கில்டா ஒபேசேகரா ஹோலில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எங்களுக்கு வந்தது. அங்கே சில காடையர்கள் புகுந்து தமிழ் மாணவர்களை அடிக்கத் தொடங்கி இருப்பதாகவும், எல்லாரையும் கவனமாக இருக்கும்படியும் சொன்னார்கள்.

காடையர்கள் யார் என்பது பின்னர் தெளிவானது. எங்கள் ஹோலில் இருந்தவர்கள் எங்களை அடிக்கவில்லை. அவர்கள் வேறு ஹோலில் உள்ளவர்களைப் போய் அடித்தார்கள். அங்குள்ளவர்கள் இங்கு வந்து அடித்தார்கள். தமிழர்களை அடையாளம் காட்டுவதற்காக மட்டும் ஒருசிலர் நின்றார்கள்.

சுசந்த தென்னக்கோன் - அவன்தான் எங்களது ஹோலில் இருந்த தமிழர்களை அடையாளம் காட்டிய வீரன். முகம் முழுக்க திட்டுக்களைக் கொண்ட அவன், இழுத்து இழுத்து ஆங்கிலம் கதைப்பான். ஒவ்வொரு இழுவைக்குள்ளும் அடுத்து என்ன கதைப்பது என்பதைத் தீர்மானித்து விடுவான். அடிக்கடி மூக்கை இழுப்பான். அந்த நுகர்ச்சியில் ஏற்கனவே தமிழர்களின் அறைகளை அடையாளம் கண்டிருந்தான்.

எங்களில் பல பேருக்கு அடி. ஹந்தான, உடபெராதனிய, றஜவத்த போன்ற இடங்களிலிருந்து சில காடையர்கள் வந்திருக்க வேண்டும். மாணவர்கள் அல்லாத தோற்றம் கொண்ட பலர், பொல்லுகளுடன் கத்திக் கொண்டு வெறிபிடித்தவர்கள் போல ஓடித்திரிந்தார்கள். எங்களில் சிலர் மலையிலிருந்து விழுந்து - உருண்டு புரண்டு  கண்டிக்கும் கொழும்புக்கும் தமது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் போய்ச் சேர்ந்தார்கள். உடுத்திருந்த சாரத்துடன் ஓடிப் போனவர்களும் உண்டு. எங்கள் றூமில் நான் , தவராஜா, சிறீ, விஷயம் மாமா இருந்தோம். ஒருவர் ஜன்னலிற்குள்ளால் நோட்டம் விட, மிகுதி மூன்று பேரும் கதவை இறுகப் பிடித்திருந்தோம். தூரத்தே அறைகளிற்குள் முட்டி மோதி எதிரொலிக்கும் கூக்குரல்கள் கேட்கின்றன.

சுசந்தாவின் குரல் வெளியே கேட்கிறது. கதவை உதைய அது உள்ளே வருவதும், பின்னர் நாங்கள் தள்ள வெளியே போவதுமாக இருந்தது. எங்களுக்கு அந்த இக்கட்டான நேரத்திலும் சிரிப்பு வந்தது. கொஞ்ச நேரம் நடந்த இந்தத் திகில் விளையாட்டு முடிவுக்கு வந்தது. திறப்புப்போடும் துவாரத்தினூடாக வெளியே பார்த்தபோது - தடித்த, முதலைத்தோல் போல பொருபொருத்த கையொன்று தெரிந்தது. நிட்சயமாக அது வெளியிலிருந்து வந்த ஒருவரின் கையாகத்தான் இருக்க வேண்டும். 'பலமான கதவு' என்று சொல்லிக் கொண்டு அடுத்த அறைக்குப் போனார்கள். சிறிது நேரம் சுவரின்மீதிருந்த துவாரத்தினூடாக வெளியே நடப்பதை நோட்டமிட்டேன். சாரம் அணிந்த ஒரு குள்ள மனிதன் தனது கால்களை அகட்டி வைத்து நடந்து போய்க் கொண்டிருந்தான். சிங்கம் ஒன்று வேட்டை முடித்துத் திரும்பும் கர்வம் அவனது நடையில். அவனின் பின்னால் ஏதோ இரைந்து சத்தமிட்டபடி மூன்று மனிதர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். குள்ளமனிதனின் முதலைத்தோல் கைகளில் மண்வெட்டிப்பிடியும், புல்லு வெட்டும் நீண்ட வளைந்த கத்தியும் தொங்கிக் கொண்டிருந்தன.

இரண்டு மணித்தியாலங்களில் நிலமை சீராகியது. வெளியே போய் மற்றைய விடுதிகளில் உள்ளவர்களுக்கு உதை போட்டுவிட்டு வந்தவர்கள், எங்களுக்குக் கவலை தெரிவித்து ஒத்தடம் போட முனைந்தார்கள். எங்களுடன் கூட இருந்த விக்கியைக் காணவில்லை. இரவு முழுவதும் பதட்டத்துடன் குறிஞ்சிக்குமரனைக் கும்பிட்டபடி இருந்தோம்.

கில்டா ஹோலில் இருந்தவர்களை சுவரோடு சாத்தி வைத்து அடித்தார்கள்.
"நாடகம் நடத்துவியளோ? புத்தகம் வெளியிடுவியளோ?" என்று கேட்டுக் கேட்டுத் தாக்கினார்கள். அவர்களின் "நோ... நோ...." என்ற கூக்குரல் ஹந்தான மலைச்சாரல் எங்கும் எதிரொலித்தது. சிங்களம் அப்ப டிக்க டிக்கப் பழகவில்லை. எக்காயும் தெக்காயும் எக்கித் தெக்கிச் சொன்ன நேரம். அங்கு வந்தவர்களின் முக்கிய இலக்கு - 'பாலசூரியன்'. முதலாம் வருட பொறியில்பீட மாணவன், எமது சக நண்பன். அன்று காலை 'புதுசு' என்ற சஞ்சிகையின் நான்கு இதழ்கள், வடக்கிலிருந்து அவனுக்குத் தபாலில் வந்திருந்தன. பாலசூரியன் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவன். அதன் முகப்பு அட்டையில் - கூட்டுக்குள் ஒரு புறா, அதனுடன் இரும்புக்குண்டு சங்கிலியிடப்பட்டிருந்தது. அது ஒன்றே அவனை 'புலி' என்று சந்தேகிக்கப் போதுமானதாக இருந்தது. ஆனால் அந்த இதழ் புலிகளையும் அதன் செயற்பாடுகளையும் விமர்சித்திருந்தது என்பது வேறு விடயம்.

கில்டா ஹோலில் பாலசூரியனைக் கலைத்துப் பிடித்துக் கொண்டார்கள். சக சிங்கள மாணவன் பண்டார அவனை அடையாளம் காட்டினான். உடைந்த கதிரைகளின் கால்களினால் அவனைத் தாக்கினார்கள். எங்களுடன் சேர்ந்து படித்த பெர்னாண்டோதான் அவனை அதிகம் தாக்கினான். நள்ளிரவு தாண்டிய நிலையில் கில்டா ஹோலின் வார்டன் - முனைவர் தர்மதாச பாலசூரியனைப் பொறுப்பெடுத்தார்.

பாலசூரியன் பேராசிரியர் சிவசேகரத்தை நன்கு தெரியும் என்று சொல்லியிருந்ததால், அவனை அங்கு கூட்டிச் சென்றார் தர்மதாச. அங்கே பேராசிரியர் தில்லைநாதனும் கலாநிதி காசிநாதரும் இருந்தார்கள். இவர்கள் மூவரும் உபவேந்தர், பேராசிரியர் பண்டிதரத்னவுடன் கதைத்தார்கள். ஆனால் பண்டிதரத்தின, பாலசூரியனைப் பொலிசிடம் ஒப்படைக்கப் போவதாகக் கூறினார். அன்றிரவு பல்கலைக்கழக Mஅர்ஷல்'ச் ஒffஇcஎ இல் வைத்திருந்தார்கள். பாலசூரியனின் பாதுகாப்புக் கருதி பேராசிரியர் சிவசேகரமும் அங்கேயே தங்கியிருந்தார். அதன் பிறகு கண்டி பொலிஸ் ஸ்ரேஷன், கொழும்பு கொட்டஹேன பொலிஸ் ஸ்ரேசன் என்று தொடர்ந்து, மர்மம் பயங்கரம் நிறைந்த கொழும்பு புலனாய்வுத்துறையின் 4 ஆவது மாடியில் முடிவடைந்தது.

அடுத்தநாள் பல்கலைக்கழகம் கால வரையறையற்று மூடப்பட்டது. காலை விக்கியின் தொலைபேசி அழைப்பு கொழும்பிலிருந்து வந்தது. உடுத்த சாரத்துடன் தெருவெல்லாம் ஓடி கண்டிக்குச் சென்று, அங்கிருந்து ரயில் ஏறி கொழும்பிற்கு தனது மாமா இருக்குமிடத்திற்குப் போயிருந்தான் அவன்.  எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஸ்ரோர் றூமிற்குள் வைத்து விட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் ஒரு சிறிய பாக்கையும் தூக்கிக் கொண்டு கண்டிக்குப் போனோம். அங்கிருந்து வடக்கு, கிழக்கிற்கு பயணமானோம்.
நான்கு நாட்கள் தீவிர விசாரணையின் பின்னர் கொழும்பில் விடுவிக்கப்பட்டான் பாலசூரியன்.

இந்தச் சச்சரவு திடீரென்று நடக்கவில்லை. நன்கு திட்டமிடப்பட்டே நடந்தது. அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக மக்களையும் மாணவர்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்கள். அவர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. உணர்வுகள் தூண்டப்பட்டு ஆவேசத்துடன் வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னே ஒன்றுமே செய்யமுடியாமல் கையாலாகாத்தனமாக இருந்தோம். இது நடந்திருக்காவிடில் எண்பத்திமூன்று ஜூலைக் கலவரத்தில் நாங்கள் எல்லாரும் அகப்பட்டிருப்போம்.

மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பியபோது பாலசூரியன், ஸ்பென்ஷர் உட்பட வேறு சில மாணவர்கள் படிப்பதற்கு வரவில்லை. சில விரிவுரையாளர்களும் வரவில்லை.

சம்பவம் இரண்டு---மனிதாபிமானம்

மகாவலிகங்கைக் கரையோரமாக பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான, 'ஏ', 'பி', 'சி' எனப் பெயரிடப்பட்ட சில தொடர்மாடிகள் இருந்தன.  பொறியியல் வளாகத்திற்கு அருகாமையில் செல்லும் மேல் கம்பொல றோட் வழியே குருந்துவத்த என்ற இடம் நோக்கிச் செல்லும்போது குடியிருப்பு 'ஈ' வரும். மூன்று மூன்று வீடுகள் கொண்ட தொடர்மாடிகள் அவை. அப்படிப்பட்ட குடிமனை ஒன்றின் முதலாவது வீட்டில் பியசேன இருந்தார். அவர் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை செய்கின்றார். அவரும் மனைவி பிள்ளைகளும் வீட்டின் கீழே இருந்துகொண்டு மேற்பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார்கள்.

பல்கலைக்கழக சட்டதிட்டங்களின் பிரகாரம், இரண்டாம் ஆண்டுப் படிப்பின் வேளை எல்லா பொறியியல்பீட மாணவர்களும் விடுதியில் தங்க முடியாது. பியசேனவின் வீட்டின் மேற்பகுதியில் அமைந்திருந்த இரண்டு அறைகளில், இவ்விரண்டு பேராக மொத்தம் நான்குபேர் அங்கு குடியிருந்தோம். அதற்கடுத்திருந்த வீடுகள் இரண்டும் வாடகைக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பியசேனவிற்கு இரண்டு பெண்பிள்ளைகள், ஒரு மகன். அந்த வீட்டின் குசினி இரவு வேளைகளில் பியசேனவிற்கும் அவரது மனைவிக்கும் படுக்கை அறையாக மாறிவிடும். பெண்பிள்ளைகள் இருவரும் கீழே இருந்த ஒரு அறையைப் பாவிப்பார்கள். பையன் ஹோலிற்குள் இருந்த 'சிங்கிள் பெட்'டில் உறங்கிக் கொள்வான். மூத்த பெண் அம்மாவிற்கு ஒத்தாசையாக இருக்க, மற்றப்பெண்ணும் பையனும் பள்ளி போய் வந்தார்கள். வீட்டிற்கு ஒரே ஒரு வாசல்தான். அந்த வாசலினூடு உட்சென்று, மகன் உறங்கிக் கொள்ளும் படுக்கையின் முன்னால் உள்ள, குத்தெண்டு எழுந்து செல்லும் படிகளின்மீது மேல் ஏறினால் எங்கள் அறைகள் வந்துவிடும்.

குடியிருக்கப்போன மறுநாள் அதிகாலை யாரோ முற்றத்தைப் பெருக்கும் சத்தம் கேட்டது. கண்ணாடி ஜன்னலை நீக்கி வெளியே பார்த்தேன். பக்கத்து வீட்டு முற்றத்தை ஒரு சிறுபெண் - பதினைந்து வயதிருக்கலாம் - பெருக்கிக் கொண்டிருந்தாள். அவள் கூட்டித் துப்பரவு செய்த திசை நோக்கிக் கடதாசி ஒன்றைச் சுருட்டி எறிந்தேன்.

"என்னடா விளக்கெண்ணய் குடிச்சமாதிரி இருக்கிறாய்?" படுக்கையில் இருந்தபடியே நண்பன் மோகன் கேட்டான். அவனுடன் கதை கொடுத்தால் அந்தப்பெண்ணிற்கும் எனக்குமிடையேயான ஊடல் குழம்பிவிடலாம் என நினைத்து மெளனம் சாதித்தேன். அவனோ மெதுவாக என்னை நோக்கி எழுந்து வந்தான். தானும் தன்பங்குக்கு பேப்பரைச் சுருட்டி எறிந்தான். இரண்டு பேருக்குமிடையே நடந்த பேப்பர் சுருட்டி எறியும் போட்டியில் முற்றம் நிறைந்தது. முற்றத்தைப் பெருக்கி முடித்துவிட்டேன் என்ற தோரனையில், இடுப்பிற்குக் கையூன்றி திரும்பிப் பார்த்தாள் அந்தப் பெண். நாங்கள் மெதுவாகத் தலையைத் தாழ்த்திக் கொண்டோம். அவள் மருண்டு அங்கும் இங்கும் பார்த்தாள்.  'அம்மே' என்றபடியே வீட்டிற்குள் ஓடினாள். நாங்கள் காலைக்கடனை முடிப்பதற்காக கீழே இறங்கினோம். வீட்டின் பின்புறம் ரொயிலற்றும் பாத்றூமும் ஒன்றாக இருந்தது எங்களுக்கு அருவருப்பைத் தந்தது. குளித்து முடித்து வந்ததும் பியசேனவின் மூத்தபெண் ரீ போட்டு மேலே எடுத்து வந்தாள். நாங்கள் பல்கலைக்கழகம் புறப்பட்டபோது கடைக்கண்ணால் பக்கத்து வீட்டைப் பார்த்தோம். முற்றம் சுத்தமாக பளிச்சென்று இருந்தது.

மாலை பியசேனவின் மகன் பள்ளியிலிருந்து வந்ததும், அந்தப்பெண்ணின் பெயர் 'கங்கா' என்று தெரிந்து கொண்டோம். வீட்டில் இருப்பவர்களின் பெயர்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல், பக்கத்து வீட்டுப் பெண்ணின் பெயரை மாத்திரம் அறிந்து கொண்டதிலிருந்து கங்காவின் அழகை நீங்கள் எடை போட்டுக் கொள்ளலாம். அவனும் கங்காவும் ஒரே பாடசாலையில் பத்தாம் வகுப்பில் படிக்கின்றார்கள் என்ற மகிழ்வூட்டும் செய்தியையும் மல்லி---தம்பி சொன்னான்.

மல்லி எங்களுடன் ஒட்டத் தொடங்கினான். அதிக நேரம் எங்கள் அறையிலே மினைக்கெட்டான். நாங்கள் அங்கு வருவதற்கு முன்னர் தான் அந்த அறையில் இருந்ததாகச் சொன்னான். ஒருநாள் இரவு தூரத்தே தெரிந்த விளக்குகளின் வெளிச்சத்தைக் காட்டி அது 'ராமநாதன் ஹோல்' என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். அங்கேயுள்ள பெண்களில் எங்களுக்கு யாராவது நண்பிகள் இருக்கின்றார்களா என்று கேட்டுக் கொண்டே ஜன்னலின் சட்டங்களைக் கழற்றினான். அவனது வீடு, அவனது ஜன்னல் கழட்டுகின்றான் என நினைக்கையில், அவன் ஜன்னலினூடாக கூரைக்குத் தாவி அடுத்த வீட்டு மேல்மாடி ஜன்னலைத் தட்டினான். அதுவும் திறந்து கொள்ள, அந்த ஜன்னலினூடே உள் புகுந்தான். அந்த 'நாடகம்' பல நாட்களாக நடந்திருக்க வேண்டும். அத்துடன் கங்கா பற்றிய எமது கனவுகள் கலைந்தன. சிறிது நேரத்தில் மீண்டு வந்து, ஜன்னலைப் பொருத்திவிட்டு ஏதோ சாதனை செய்துவிட்டவன் போல கீழிறங்கிப் போனான்.அப்பாவிடம் சொல்லுவோம் என்று மல்லியை வெருட்டிய போதும், மாதம் ஒன்றிரண்டு தடவைகள் அது நடக்கத்தான் செய்தது. 

ஒருமுறை நாங்கள் 'துசித்த' திஜேட்டரில் 'லேடி சற்றலி லவ்வர்' பார்த்துவிட்டு குருந்துவத்த பஸ் ஸ்ராண்டில் வந்து இறங்கி வீட்டிற்குப் போகும்போது எங்கள் முன்னாலே கங்கா சென்று கொண்டிருந்தாள். 'கங்காட்ட நாண்டோண' என்று சொல்ல அவள் தன் செருப்புகள் இரண்டையும் காலில் இருந்து கழற்றினாள். நாங்கள் அப்படியே பின் தங்கினோம். நல்லவேளை செருப்புகள் இரண்டையும் கையில் தூக்கவில்லை. என்ன நினைத்தாளோ செருப்புகள் இரண்டையும் கொழுவிக்கொண்டு தனக்குள் ஏதோ புறுபுறுத்தபடி சென்றுவிட்டாள்.

அந்த மகாவலிக்கரையோரமாக இப்போது சிலநாட்களாக நாங்கள் நீராடத் தொடங்கியிருந்தோம். எங்களில் ஒருவருக்கும் நீச்சல் தெரியாது. 'காக்காய்க் குளிப்பு' என ஆரம்பித்து இப்போ முன்னேறிக் கொண்டு செல்கிறது.

மல்லி அதிகாலையில் எழுந்து பள்ளி செல்வதற்கு முன், உடற்பயிற்சி செய்வதாகச் சொல்லிக்கொண்டு எங்கோ போய் வருவான். தற்காப்புப் பயிற்சி பெறுவதாகவும், இன்னும் சிலமாதங்களில் ஆயுதப்பயிற்சி பெறப்போவதாகவும் இரகசியமாகச் சொன்னான். சிலவேளைகளில் பள்ளிக்குச் செல்லாமல் அலைந்து திரிவான்.

ஒரு சனிக்கிழமை...

ஆற்றின் நடுவே இருந்த பாறையொன்றின் மீது ஏறி நின்று தொபுக்குத் தொபுக்கென்று நீருக்குள் குதித்து விளையாடினோம். குதித்து தவளைபாய்ச்சல் பாய்ந்து, சற்று நேரம் நீரிற்குள் விளையாடிவிட்டு மீண்டும் அந்தப் பாறையைக் கட்டிப் பிடிப்போம்.
தூரத்தில் குறுக்குக்கட்டுகளுடன் சில சிங்களப்பெண்களும் இரண்டு ஆண்களும் குளித்துக்கொண்டு நின்றார்கள். அவர்கள் எங்களையே நெடுநேரம் பார்த்துக்கொண்டு நின்றார்கள். பின்னர் அவர்களில் ஒருவன் தண்ணீருக்குள் விசுக்கு விசுக்கென்று நீச்சலடித்து, எங்களை நோக்கி வந்தான்.

"நீங்கள் தமிழா?"

"ஆம்...."

அவன் தனது கையை கரை நோக்கிக் காட்டி, "அதற்குக் கிட்டப் போகாதீர்கள். ச்பில்ல்நய் இருக்கின்றது" என்றான். நாங்கள் அவனது தகவலுக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் குதித்து விளையாடினோம்.

மகாவலியின் நீர்மட்டம் அடிக்கடி மாறும் தன்மை கொண்டது. மடை திறந்து விடும்போதும், எங்காவது மழை பெய்யும்போதும் இது நடைபெறும். கங்கையிலே மிதந்து வரும் குப்பை கூழங்களைக் கொண்டு இதனை அடையாளம் கண்டு கொள்ளலாம். உடனே அவ்விடத்தைவிட்டு அகலாவிடில் ஆபத்து காத்து நிற்கும். ஆற்றுடன் அள்ளுப்பட்டுப் போக வேண்டியதுதான்.

அந்த மனிதன் காட்டிய திசையில் ஆற்றின் கரையோரமாக சீமெந்தினாலான கட்டுத் தெரிந்தது. அதைப் பார்த்தபடி நீரிற்குள் குதித்தேன்.  திடீரென்றுதான் அது நிகழ்ந்தது. நீரிற்குள் குதித்த என்னால் மீண்டும் எழும்ப முடியவில்லை. நீச்சல் தெரியாததால் 'ஐயோ... ' என்று கூக்குரலிட்டபடி தத்தளிக்கின்றேன். என்னால் ஒருவரையுமே காணமுடியாதபடி நீரிற்குள் மூழ்கிவிட்டேன். நான் போடும் கூக்குரல் எனக்கே கேட்கவில்லை. என்னுடன் நீச்சலடித்த சகநண்பர்கள் என்னைக் காணவில்லையா? என்னுடன் நின்ற அத்தனை நண்பர்களும் எங்கே போனார்கள்?

தொண்டைக்குழிக்குள் நீர் உள்ளே போகத் தொடங்குகின்றது. நான் நீரின் அடிக்குப் போகின்றேன். என்னால் மரணம் என்ற ஒன்றைத்தவிர வேறொன்றையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. பலம் கொண்டவரை நீரைக் கால்களால் மிதித்து எம்புகின்றேன். கைகளை மேலே உயர்த்துகின்றேன். மீண்டும் கூக்குரல் இடுகின்றேன். இரண்டாவது தடவை... மூன்றாவது தடவை.... உடல் நீரின் ஆழம் பார்த்து மேல் எழும்புகின்றது. இரும்பைப் போன்று இறுகி, பின்னர் பஞ்சு போல வெறுமையாகிறது. எனக்கு ஏதோ நடக்கப் போகின்றது. என் உடலளவு உயிர் நிழல்போல வேறாகப் பிரிகின்றது. முடிவு நெருங்கி விட்டது.

இப்பொழுது நினைத்துப் பார்த்தால்கூட ஆச்சரியமாக இருக்கின்றது. திடீரென ஒரு முரட்டு உருவம் என்னை இறுகப்பற்றி நீரின் மேலே தூக்குகின்றது. நான் அவனைப் பார்க்கின்றேன். சிங்களத்தில் ஏதோ சொல்லியபடி மகாவலிக்கரையை நோக்கி நடக்கின்றான் அவன். தூரத்தில் அசையாத படிமங்கள் போல நின்ற என் நண்பர்கள், அவனின் பின்னாலே வருகின்றார்கள். கண்கள் சோர்ந்து உடல் தளர்ந்த நிலையில் நான் ஒரு குழந்தையாக அவனது கைகளில். கால்களை அகலப்பாங்கில் மிகவும் கஷ்டப்பட்டு நீரிற்குள் உதைத்து கரையை நோக்கி நடக்கும் அந்தக்குள்ள மனிதன் மாமேரு மலையை ஒத்தவனாகின்றான். கரையில் என்னை இறக்கிவிடும்போது அவனது கைகளைக் கவனித்தேன். அன்றொருநாள் திறப்புத்துவாரத்தினூடாகத் தெரிந்த அதே முதலைத்தோல் போர்த்த முரட்டுக் கரங்கள் அவை.


‘செம்பியன் செல்வன்’ ஆ.இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி (2013), ஞானம் சஞ்சிகை, இலங்கை (தளம்.ஞானம்.இலங்கை)

https://shuruthy.blogspot.com/2014/04/1983_6929.html?fbclid=IwAR02d-4sIddkytAldh0M6IJvv2rZ_eoKf9sA2cDrnS4kaH2ZvplDBvZk6CY

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சம்பவங்களும் படிக்க படிக்க கிளுகிளுப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.....அட இப்படி என்றால் நானும் குதிரை ஓடியாவது பல்கலைக்கழகத்துக்கு போயிருப்பேன்.....ம்....யாருக்குத் தெரியும் அங்கு படிப்பைத் தவிர இதெல்லாம் இருக்கும் என்று......!   😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.