Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு

என்.கே. அஷோக்பரன்

போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு  கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று.

சித்திரவதை முகாம், யூதர்கள் விஷவாயு செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விஷவாயு அறைகளைக் கொண்டதும், சுவரோடு நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்படும் கொலைச் சுவரைக் கொண்டதுமான கொலைக்களம் அது. இன்று, அந்த முகாம் ஒஷ்விட்ஸ் ஞாபகார்த்த முகாமாக, வரலாற்றின் கொடுமையான பக்கங்களை, அடுத்து வரும் சந்ததிகள் அறிந்துகொள்வதற்காக, பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

யூதர்களின் வெட்டப்பட்ட தலைமுடிகள், அவர்கள் கொண்டு வந்த பயணப் பெட்டிகள், அவர்களது உணவுத் தட்டுகள், தண்ணீர்க் கோப்பைகள்,  காலணிகள் என்பவை மாபெரும் மண்டப அளவிலான கண்ணாடிப் பெட்டிக்குள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு உள்ளமை எந்த உறுதியான இதயத்தையும் அதிர்ச்சியடைய வைக்கக்கூடியவை. 

அங்கு, அடைத்து வைக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம் அறைகள், உடனடித் தீர்ப்பு வழங்கப்படும் அறை, அதற்கடுத்து, சுட்டுக்கொல்லப்பட முன்பு உடைமாற்றித் தம்மைக் கழுவிக்கொள்வதற்கான அறை, அடுத்து காத்திருப்பு அறை, அதற்கு அப்பால் கொலைச் சுவர் என அந்த முகாமினூடாக நடக்கும் போதே, கால்கள் நடுங்கும்! 

ஒரு கட்டடத்தின் அடிப்பகுதியில் சில அறைகள்; அவைதான் விஷவாயு அறைகள் என அங்கிருந்த வழிகாட்டி சொன்னபோது, முதுகுத்தண்டினூடாக மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த முகாமினூடாக நடந்தபோது, ஏதோ பெரும் அவல ஓலச்சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருப்பதாகவே காதுகள் உணர்ந்தன. கண்டவை தந்த அதிர்ச்சியால் வந்த மனப்பிரம்மையாக அது இருக்கலாம். 

முதலாவது முகாமைப் பார்த்துவிட்டு வௌியே வந்தபோது, இரண்டாவது முகாமுக்குச் செல்லும் மனப்பலம் இருக்கவில்லை. இந்தச் சித்திரவதை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் (குழந்தைகள் உட்பட) புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வந்திருந்தவர்களில் சிலர், தமது மூதாதையர்களின் படங்களை அடையாளம்கண்டு, கண்ணீர் மல்கினார்கள். அது மனதை நொறுக்கும் காட்சியாக இருந்தது. 

அன்றைய தினம், மனம் உறக்கம் கொள்ளவில்லை; சிந்தனைகள் எங்கெங்கோ சென்றன. இன்று ஞாபகச் சின்னமாக மாறியிருக்கும் ‘ஒஷ்விட்ஸ் முகாம்’, எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு, வார்த்தைகளுக்குள் அடங்காது. நாஸிகளின் கொடுமைகள் பற்றி, பல ஆயிரம் பங்கங்களில் எழுதிய எழுத்தின் மூலம் உணரப்பட முடியாததை, அந்த ஞாபகச்சின்னம் உணர்த்தியது என்றால் அது மிகையல்ல. அந்த உணர்வு, நாஸிகளின் கொடுமைகள் பற்றிய உணர்வு மட்டுமல்ல; அது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எல்லா மனிதர்களின் மீதுமான உணர்வு;  உலகில் இதுபோன்ற கொடுமைகள், இனி அரங்கேறவே கூடாது என்ற உணர்வு; அதனை உணர்வதற்கு யூதனாக இருக்க வேண்டியதில்லை; மனிதனாக இருந்தால் போதும். நிற்க!

இன்று ஞாபகார்த்த இடமாக மாற்றப்பட்டுள்ள ஒஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் ஒரு  கட்டடத்துக்குள் நுழையும் போது, ‘வாழ்வுக்கான காரணம்’ (The Life of Reason) எனும் நூலின் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா, தனது நூலில் எழுதியிருந்த, ‘வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், வரலாற்றை மீள அரங்கேற்றுவதற்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்’ என்ற வாசகம், அதன் வாசலில் எழுதப்பட்டிருந்தது. 

எத்தனை உண்மையான, பலம் மிக்க வசனம் அது. அன்று ஜேர்மனியை ஆண்ட, முதலாவது உலக யுத்தத்தில் தோல்வியடைந்த ஜேர்மனியை, சில தசாப்தங்களில் மீண்டும் உலகத்தோடு போரிடும் வல்லரசாக மாற்றிய நாஸிகளின் கொடுமைகளைப் பற்றி, இன்று ஜேர்மனியில் கற்பிக்கிறார்கள்; நாஸிகள் நாயகர்கள் அல்ல என்பதைக் கற்பிக்கிறார்கள்; அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளைப் பற்றி, சித்திரவதைகளைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். இதன் நோக்கம், இனி இதுபோல் ஒரு கொடுமை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுதான்.

யூதர்கள், உரோமானியர், நாடோடிகள் ஆகியோரை நாஸிகள் வெறுத்தார்கள். தூய ஜேர்மானிய இனத்தை, இந்த ‘அந்நியர்’கள் அசுத்தப்படுத்துவதாக பரப்புரை செய்தார்கள். அந்த வெறுப்பின் காரணமாக, அவர்களை சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பி, பட்டினிபோட்டு, கடும் வேலைகளைச் செய்யவைத்து, சித்திரவதைகளைச் செய்து, அவர்களைத் தமது மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு விலங்கைப் போல பயன்படுத்தி, சுட்டுக்கொன்று, விஷவாயு செலுத்திக் கொன்று என, நாஸிகள் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் வெறுப்பு. 

image_f867a39c92.jpg

1983இல், இலங்கையில் அரங்கேறிய ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் அடிப்படையும் வெறுப்புத்தான். உதாரணமாக, 1983 மே 19 ஆம் திகதி, ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் பிரசுரமான, டி சில்வா என்ற ஒரு வாசகர் எழுதிய கடிதமானது, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான வழிகளை முன்வைத்தது. அவர் முன்வைத்த வழிமுறையின் சுருக்கமானது: ‘வடக்கு, கிழக்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும். பொலிஸ், இராணுவம் ஆகிய படைகள் மேலதிகமாக அனுப்பப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். அவர்களைக் கண்டவுடன் சுட வேண்டும். பாரம்பரிய தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில், சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ஈழம்’ என்ற ஒன்று வழங்கப்படாது என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும். வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பதற்கான மேலதிக செலவானது, அங்கு வதிவோரின் மீது விசேட வரியொன்றை விதிப்பதனூடாக ஈடுசெய்யப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோருக்கு எந்த நட்டஈடும் வழங்கக் கூடாது’ என்றவாறாகக் காணப்பட்டது.

1983ஆம் ஆண்டு, கறுப்பு ஜூலைக் கலவரத்தின் பின்னணியில், இதுபோன்ற கடும் தமிழின வெறுப்பு மனநிலை இருந்தது. இது ஒரே நாளில் வந்ததல்ல; கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டது. இதில் இலங்கை அரசியலின் பங்கு முக்கியமானது. 

1956ஆம் ஆண்டு முதல், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பும் வன்முறைகளும் இதற்குச் சாட்சி. இதில் அரச இயந்திரத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

image_1fa32f8a9d.jpg

 

1983ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி, லண்டன் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு குறுஞ்செவ்வியை அளித்திருந்தார். அதில், “யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம், அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று, அப்பட்டமான இனவெறி அரசியலை, வௌிப்படையாக உலகுக்கு அவர் சொல்லியிருந்தார்.

ஆனால், இந்த வரலாறுகள் இலங்கையில் கற்பிக்கப்படுவதில்லை. இன்று கூட, தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் பற்றிய கருத்தியலை ‘கறுப்பு ஜூலை’ பற்றிப் பேசும் போது பலரும் முன்வைக்கிறார்கள். 
தம்முடைய உயிரைப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். அது உண்மை! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ என்பது அவர்களைப் பற்றியது அல்ல. தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த அந்த நல்ல உள்ளங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டியவையே! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ அவர்களைப் பற்றியது அல்ல. 

‘கறுப்பு ஜூலை’யின் கருத்தியலை, அவ்வாறு மாற்ற முனைவது பெரும் வரலாற்றுத் துரோகமாகும். ‘கறுப்பு ஜூலை’ என்பது, இந்த நாட்டில் வேர் கொண்டுள்ள இனவெறியைப் பற்றியது. ஆதிக்க மனநிலை கொண்ட பேரினவாதம், சிறுபான்மை இனத்தை இன அழிப்புச் செய்ததன் வரலாறு.

 இதில் பெருஞ்சோகம் என்னவென்றால், இதைப் பற்றி முறையான நீதி விசாரணை  இடம்பெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. இது பற்றி, நாம் பேசுவது கூட இல்லை. குறைந்த பட்சம், ஞாபகார்த்த நிகழ்வுகளை அரசு நடத்துவதும் இல்லை. ஒரு ஞாபகார்த்த சின்னம் கூட இல்லை. ஜேர்மனியோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்!

தமது பிழைகள், தாம் இழைத்த கொடுமைகளை மறைத்துவிட்டு, வரலாற்றுக்கு வௌ்ளைச் சாயம் அடிப்பதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. வரலாற்றின் தவறுகளை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரயாச்சித்தம் தேடுவதுடன், இனி இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காக அந்த வரலாற்றுத்தவறைப் பற்றி, அடுத்த சந்ததிக்குக் கற்பிப்பதுதான் இந்த நாட்டுக்கும் அதன் எதிர்காலத்துக்கும் நாம் செய்யக்கூடிய பெருந்தொண்டு ஆகும்.

மறக்கமுடியாத வரலாறு இது. மனிதத்துக்கு எதிரான இந்தப் பெரும் குற்றத்துக்கு எவரேனும் பொறுப்பேற்றுக்கொண்டால்தான், மன்னிப்பது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்கக் கூட முடியும். யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாத குற்றத்துக்கு யாரை மன்னிப்பது?

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலை-மறக்கக்கூடாத-வரலாறு/91-277447

 

 

 

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன அதிசயம்! இந்தப் பக்கம் தானாக எனக்கு திறந்திருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/7/2021 at 04:44, கிருபன் said:

டி சில்வா என்ற ஒரு வாசகர் எழுதிய கடிதமானது, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான வழிகளை முன்வைத்தது. அவர் முன்வைத்த வழிமுறையின் சுருக்கமானது: ‘வடக்கு, கிழக்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும். பொலிஸ், இராணுவம் ஆகிய படைகள் மேலதிகமாக அனுப்பப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். அவர்களைக் கண்டவுடன் சுட வேண்டும். பாரம்பரிய தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில், சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ஈழம்’ என்ற ஒன்று வழங்கப்படாது என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும். வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பதற்கான மேலதிக செலவானது, அங்கு வதிவோரின் மீது விசேட வரியொன்றை விதிப்பதனூடாக ஈடுசெய்யப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோருக்கு எந்த நட்டஈடும் வழங்கக் கூடாது’

 

On 29/7/2021 at 04:44, கிருபன் said:

இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு குறுஞ்செவ்வியை அளித்திருந்தார். அதில், “யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம், அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று, அப்பட்டமான இனவெறி அரசியலை, வௌிப்படையாக உலகுக்கு அவர் சொல்லியிருந்தார்.

இதுதான் நடக்கிறது. இதிலிருந்து சிங்களவர் விடுபடப்போவதில்லை. அவர்கள் நினைத்தாலும் திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றை இனவாதம் மீண்டும் மீண்டும் ஊட்டும். நல்லிணக்க செயல் பொறிமுறையை இலங்கை இழுத்தடிப்பதன் நோக்கம் இதுவென உலகுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துரைக்க வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/7/2023 at 08:52, satan said:

இதுதான் நடக்கிறது. இதிலிருந்து சிங்களவர் விடுபடப்போவதில்லை. அவர்கள் நினைத்தாலும் திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றை இனவாதம் மீண்டும் மீண்டும் ஊட்டும். நல்லிணக்க செயல் பொறிமுறையை இலங்கை இழுத்தடிப்பதன் நோக்கம் இதுவென உலகுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துரைக்க வேண்டும்.

இவர்களுக்கா எமது நியாயத்தன்மையினை புரியவைக்கப்போகிறீர்கள்? உங்களுடன் வாதிடுவதற்காக இதனைக் கேட்கவில்லை நண்பரே, இயலாமையினால்க் கேட்கிறேன். 

எமது தாய்நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. ஜனநாயக, வெகுஜன வழிப் போராட்டங்களை அரசு ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை. பிராந்திய, சர்வதேச சக்திகளுக்கு எமது அவலங்கள் ஒரு பொருட்டில்லை. அதேவேளை ஆயுதப் போராட்டமும் சரிவராது. வேறு என்னதான் வழி? உண்மையாகவே தெரியவில்லை. 

பேசாமல், பெளத்தத்தைத் தழுவி சிங்களவர்கள் ஆகிவிடலாம். மீதமிருக்கும் மக்களையாவது காத்துக்கொள்ளலாம். அடையாளத்தை துர‌ந்தாவது உயிரைக் காத்துக்கொள்ளலாம். அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? இனிமேல் இந்த வழியில்த்தான் சிந்திக்க வேண்டும் போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செயற்றிறன் அற்ற சிங்களத்தின் அரசியல்  மூலதனம் இனவாதம் ஒன்றே. பெரும்பான்மை மக்களை அதற்குள் இழுத்துவிட்டு, தன் வங்குரோத்து நிலையை மறைத்து, தன்னை வளர்த்துக்கொண்டது. எனது கொழும்பில் உள்ள உறவினர் வீட்டில்  தங்கும்போது அயல் சிங்களவர் வந்து உரையாடுவதுண்டு. அப்போ அவர்கள் சொன்னது, பிரபாகரன் தமிழ்மக்களை கொடுமைப்படுத்தினார், அவர்களை மீட்கவே சண்டை நடந்ததாக. அதையே மீண்டும் மீண்டும் இன்றுவரை கூறி வருகிறார்கள் சரத் போன்றவர்கள், தாம் சொன்னதை நிரூபிப்பதற்காக. படை திரட்டும்போது, காற்சட்டை அணிந்த சின்னப்பொடியன்கள் மிகச்சிறிய  குழுவினரே போராடுகிறார்கள், இராணுவத்துக்கு பயந்து பின்வாங்குகிறார்கள் என்று கூறியே சேர்த்தார்கள் . வகைதொகையின்றி இராணுவத்துக்கு ஆட்களை வெவ்வேறு இடங்களில் சேர்த்ததால் அவர்கள் உண்மையை தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் களத்துக்கு வந்து உண்மையை அறிந்து போராட மறுத்த, வீட்டுக்கு திரும்ப முயன்றவர்களை சுட்டுத்தள்ளி விட்டு, தப்பியோடியோர், புலிகள் கொன்றனர் என அறிக்கை விட்டனர். எதற்காக? அவர்கள் உண்மையை வெளிப்படுத்தி விடுவார்கள் என்கிற பயம், புலிகளால் சிறை பிடிக்கப்பட்டு விடுதலையான இராணுவத்தினரை பத்திரிகைகளோ வேறு எவருமோ சந்திக்க விடாது மீண்டும் களத்துக்கு அனுப்பியது ஏன்?  இரையானது அப்பாவி ஏழை சிங்களவர். இப்போதும் பிக்களுக்கு பின்னால் எடுபட்டு வருவோர் இனவாதிகளும் ஏமாற்றப்பட்ட ஏழைகளுமே. விடுதலைப்போராட்டம் நடைபெறவில்லையென்றால் எப்போதோ சிங்களவர் வீதிக்கு இறங்கியிருப்பர். அப்போ சொல்லப்பட்டது, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் பயங்கரவாதத்தை முறியடித்தபின் உங்கள்  எல்லாப்  பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படுமென ஏமாற்றினார்கள் அவர்களை. ஆனால் இனியும் மக்கள் ஏமாரத் தயாராயில்லை. பல இனவாத சிங்கங்கள் உசுப்புகிறார்கள், ஆனால் யாரும் கிளம்புவதாக தெரியவில்லை. காலம் எதையும் மாற்றும். ஆனால் நம்பக்கமும் கவனிக்க வேண்டும்! இவர்கள் ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. அப்படி இவர்கள் செயற்றிறனுடன் செயற்பட்டிருந்தால்; சிங்களம் இவ்வளவுதூரம் வெற்றியடைந்திருக்க முடியாது. தமிழரை மட்டுமல்ல சிங்களவரையும் பகடைக்காய்களாக பயன்படுத்துகிறது சிங்களம். அது, தான் மூட்டிய தீயில் கருகும்வரை இது தொடரும். அது ஆரம்பித்து விட்டது என்றே நான் கருதுகிறேன். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.