Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்தர்ஜனம் / சாதனம். - கேரளாவில் பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை மற்றும் எம்.ஜி.ஆர்

Featured Replies

அந்தர்ஜனம் / சாதனம்.
 
கேரளாவில் அந்தர்ஜனம் என்னும் பெயரில் நடந்த பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை
சுமார்த்த விசாரம் என்பது கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்கும் ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது.
 
நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்களுடன் உதிர உறவை நிறுவினார்கள். நாயர்கள் நேரடியாக ஆயுதங்க¨ளைக் கையாண்ட சாதி. நிலங்களை கையில் வைத்திருந்தவர்கள். இந்த உறவு நம்பூதிரிகளுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது.நாயர்களுக்கு மத அதிகாரத்தை அளித்தது.
 
இந்த வழக்கம் நின்றுவிடாமலிருக்க நம்பூதிரிகள் ஒரு மரபை சட்டமாக்கினார்கள். நம்பூதிரிச் சாதியில் ஒரு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப்பெண்ணை மணம் புரிந்துகொள்ள முடியும். பிற மகன்கள் மன்னர்குடும்பங்களிலோ, நாயர் சாதியிலோ மட்டுமே மணம்புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்பூதிரிப்பெண் விலக்கு. நம்பூதிரிகள் ஆண்வழிச் சொத்துரிமை கொண்டவர்கள். நாயர்கள் பெண்வழிச்சொத்துரிமை கொண்டவர்கள். ஆனால் நம்பூதிரிச்சொத்துக்களுக்கு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே வாரிசு. பிறருக்கு எந்த உரிமையும் இல்லை
 
இதன் விளைவாக நம்பூதிரிச் சொத்துக்கள் நூற்றாண்டுகளாக பிளவுபடவே இல்லை.
நம்பூதிரிச்சாதியின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆகவே அவர்களின் ஆதிக்கம் நீடித்தது. ஆனால் நம்பூதிரிப்பெண்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கன்னியராகவோ விதவைகளாகவோ நின்றுவிட நேர்ந்தது. ஆகவே அவர்களிடம் பாலியல் மீறல்களுக்கான வாய்ப்புகள் சற்று அதிகம். இதனால் நம்பூதிரிகள் தங்கள் பெண்களின் கற்பை கண்காணிக்கவும் தண்டிக்கவும் ஸ்மார்த்த சபை(ஆசார விதிகளின்படி ஒழுக்க மீறல்களை விசாரிக்கும் ஒரு அமைப்பு) என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டார்கள். பாலுறவைக் கண்காணிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு வைத்திருந்த ஒரே சாதி நம்பூதிரிகள்தான்
நம்பூதிரிப்பெண் அந்தர்ஜனம் [உள்ளே இருப்பவள்] என்று அழைக்கப்பட்டாள். அதன் மொழியாக்கம் சாதாரணர்களால் அழைக்கப்பட்டது, அகத்தம்மா. அந்தர்ஜனங்கள் வெள்ளை ஆடை மட்டுமே அணியவேண்டும். உடலையும் முகத்தையும் முழுமையாக மறைத்துக்கொண்டுதான் வெளியே கிளம்ப வேண்டும். குளிப்பதற்குக் கூட தனியாக வீட்டை விட்டு செல்லவே கூடாது. எப்போதும் கையில் ஒரு ஓலைக்குடையை வைத்திருக்க வேண்டும். இதற்கு மறைக்குடை என்று பெயர். ஆண்கள் யாரைக் கண்டாலும் அந்தக்குடையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். விதவை மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. மொத்தத்தில் இருண்ட நம்பூதிரி இல்லங்களில் பிறந்து இருளில் வாழ்ந்து இருளில் மடியும் வாழ்க்கை அவர்களுடையது.
 
அந்தர்ஜனங்களின் அடுக்களை தோஷம் என்பது இந்தக் குற்றச்சாட்டுக்குப் பெயர். பரபுருஷனிடம் ஒரு அந்தர்ஜனம் (மனைக்குள் இருக்கும் மக்கள் என்று அர்த்தம்) தொடர்பு கொண்டுவிட்டாள் என்ற சமூகத்துக்குள் ஒரு வதந்தி உருவாகும்போது இந்த ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படும்.
இந்த ஸ்மார்த்த விசாரம் 'தாசீ விசாரத்தில்' துவங்குகிறது. அதாவது அந்தர்ஜனத்தின் வேலைக்காரியை விசாரணை செய்தல். வேலைக்காரி தன் எஜமானி நடத்தை கெட்டவள் என்பதை உறுதி செய்துவிட்டால், உடனே அந்த அந்தர்ஜனம் தன் பெயரை இழக்கிறாள். தன் திணையையும் இழக்கிறாள். அதாவது அஃறிணை ஆகிறாள். அதுமுதல், அவள் 'சாதனம்' என்றே அறியப்படுகிறாள்.
 
தாசீ விசாரம் முடிந்தவுடன் அடுத்த கட்டம் சாதனத்தை அஞ்சாம் புறையில் தள்ளுவது. அதாவது அவள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அஞ்சாம் புறை எனப்படும் தனி அறையில் தனிமைக்காவலில் வைக்கப்படுகிறாள்.
 
அடுத்த கட்டமாக அந்த தேசத்தின் ஆட்சியாளரிடம் (ராஜா அல்லது 'நாடுவாழி' என்று அழைக்கப்படும் பண்ணையார்) குற்ற விசாரணைக்கான அனுமதி கோரப்படுகிறது. விசாரணையை ஒரு நம்பூதிரிதான் நடத்த வேண்டும். அவருக்கு 'ஸ்மார்த்தன்' என்று பெயர். ராஜா அந்தப் பகுதியின் பிரபலமான ஒரு ஸ்மார்த்தனையும், இரண்டு மீமாம்சகர்களையும் ஒரு அரசப் பிரதிநிதியையும் விசாரணைக்காக நியமிக்கிறார்.
விசாரணை நடத்தி, சாதனம் குற்றம் செய்திருக்கிறது என்பதை எப்படியேனும் நிரூபித்து, சாதனத்தை 'கதவடைத்து பிண்டம் வைப்பது' வரை ஒரு மிகப்பெரிய கடமையை நிர்வகிப்பதுதான் ஒரு 'உண்மையான' ஸ்மார்த்தனின் பணி.
 
விசாரணை நேரத்தில் மேற்பார்வை செய்கின்ற அரசப் பிரதிநிதியை 'புறக் கோய்மை' என்றும் அந்தப் பிரதேசத்து நம்பூதிரிகளின் பிரதிநிதியை 'அகக் கோய்மை' என்று அழைப்பார்கள். அஞ்சாம்புறையின் புறத்தளத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள். விருப்பமுள்ள ஊர் மக்களும் பங்குபெறலாம்.
 
ஸ்மார்த்தனும் இரண்டு கோய்மைகளும் சேர்ந்து உள்ளே நுழைய முற்படுகிறார்கள். அப்போது வாசலில் இருக்கும் தாசி அவர்களைத் தடுக்கிறாள். ஆண்கள் உள்ளே நுழையக் கூடாது என்கிறாள். ஏன் என்று இவர்கள் கேட்கிறார்கள். உள்ளே ஒரு சாதனம் இருக்கிறது என்று தாசி கூறுகிறாள். யார் அது என்று ஸ்மார்த்தன் கேட்கிறார். இந்த மாதிரி இந்த மாதிரி மனையின் இந்த மாதிரி இந்த மாதிரி நம்பூதிரியின் மகள் அல்லது சகோதரி அல்லது மனைவியான இந்த மாதிரி இந்த மாதிரி சாதனம் என்று அவள் பெயரைக் கூறுகிறாள் தாசி. இப்படிப்பட்ட ஒரு பெண் இந்த வீட்டில் எப்படி தனியாக இருக்கிறாள் என்று ஆச்சர்யம் அபிநயிக்கும் ஸ்மார்த்தன் கூடுதல் விவரங்களைக் கோருகிறார்.
 
இந்த இடத்திலிருந்து அதிகாரபூர்வமாகத் துவங்குகிறது ஸ்மார்த்த விசாரம். குற்றவாளியான சாதனம், கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, கண்ணையும் முகத்தையும் வெள்ளைத் துண்டால் கட்டி, ஸ்மார்த்தனின் கேள்விகளுக்கு தாசியின் மூலமாக பதில் அளிக்க வேண்டும். வேறு யாரும் பேசுவதற்கு அனுமதியில்லை. ஸ்மார்த்தனின் கேள்விகளில் ஏதேனும் தவறு இருந்தால் அகக்கோய்மை தன் தலையில் கட்டியிருக்கும் துண்டை கீழே போடுவார். இதற்கு 'நாட்டாமை, கேள்வியை மாத்து' என்று அர்த்தம், ஸ்மார்த்தன் தன் கேள்வியை மாற்றிக் கேட்பார். எல்லாமே அவளை குற்றத்தை சம்மதிக்க வைப்பதற்கான வழிகள்தான்.
 
ஸ்மார்த்த விசாரம் அன்றைய தினம் முடியாமல் நீண்டு போகிறது என்றால் அன்றைய தினம் தனக்குக் கிடைத்த விவரங்களை சபையின் முன் அறிவிப்பார் ஸ்மார்த்தன். இதற்கு 'ஸ்வரூபம் சொல்லுதல்' என்று பெயர். ஒவ்வொரு நாளும் ஸ்மார்த்த விசாரம் முடிந்ததும் குற்றவாளியின் உறவினர்கள் ஜட்ஜ் டிரிப்யூனல் அங்கத்தினர்களுக்கு விருந்து அளிக்க வேண்டும். சில ஸ்மார்த்த விசாரங்கள் மாதக்கணக்கிலும் வருடக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன. (ஷோரணூருக்கு அருகில் கவளப்பாறையில் ஒரு நம்பூதிரி குடும்பத்தில் இந்த ஸ்மார்த்த விசாரம் 36 வருடங்கள் நீண்டது. இறுதியில் அந்த அந்தர்ஜனம் குற்றமற்றவர் என்று நிரூபணமாயிற்று. ஆனாலும்... தன யௌவனம் முழுவதும் இருளடைந்த அஞ்சாம்புறையில் கழித்ததற்கான எந்த நியாயமும் அவருக்கு வழங்கப்படவில்லை.)
சாதனம் குற்றத்தை ஒத்துக்கொண்டதும் தான் சம்போகித்த ஆள் யார், எந்த தருணத்தில் நடைபெற்றது, எப்படி நடைபெற்றது, எவ்வளவு முறை நடைபெற்றது என்பதையெல்லாம் விவரிக்க வேண்டும். ஒரு வேளை ஒன்றிற்கு மேல் ஆட்கள் இருந்தால் ஒவ்வொருவர் பெயர் சொல்லப்படும்போதும் இந்த விவரணைகளும் தேவை. அதற்குப் பிறகு சாதனம் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. அவள் மரித்துவிட்டதாகக் கருதி பிண்டம் வைக்கப்படுகிறது. பிரஷ்டம் செய்யப்பட்ட அவள் தனக்குத் தோன்றிய திசையில் செல்கிறாள்.
 
அவளால் சுட்டப்பட்ட ஆண்களும் சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அப்பீலுக்குப் போகலாம். தான் குற்றமற்றவன் என்பதை கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு நிரூபிக்கலாம். இந்த கைமுக்கல் சடங்கு நடப்பது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்தரம் கோவிலில்.
இப்படி ஆணாதிக்கம் கொடிகட்டி வாழ்ந்திருந்த அந்தக் கால நம்பூதிரி சமுதாயத்தில் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகி வீரத்துடன் எதிர்த்து நின்ற ஒரே ஒரு அந்தர்ஜனம் தாத்ரிக்குட்டி
 
குன்னங்குளம் கல்பகசேரி மனையின் குறியேடத்து தாத்ரி என்ற தாத்ரிக்குட்டி, அழகாகயிருந்ததாலேயே ஆணாதிக்கத்தின் அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளானவள்.
சிறு வயதிலேயே தன் சொந்த தந்தையாலும் சகோதரனாலும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகிறாள். திருமணம் நடந்ததும் முதலிரவில் கணவனின் மூத்த சகோதரனிடம் முதலில் தன்னைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதற்குப் பிறகுதான் பழி தீர்க்கும் படலத்தைத் துவக்குகிறாள் தாத்ரிக்குட்டி. சமூகத்தின் பிரபலமானவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தி வீழ்த்துகிறாள். அவர்களுடன் சம்போகித்ததற்கான எல்லா நிரூபணங்களையும் சேகரித்து வைக்கிறாள். அவளிடம் ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படுகிறது.
நம்பூதிரி சமூகத்தையே நடுங்கச் செய்த இந்த ஸ்மார்த்த விசாரம் நடந்தது 1905ம் ஆண்டு. இதுவே கடைசி ஸ்மார்த்த விசாரம் என்றும் அறியப்படுகிறது.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் அரங்கோட்டுக் கரையில் கல்பகசேரி இல்லத்தில் அஷ்டமூர்த்தி நம்பூதிரியின் மகளாகப் பிறந்தவள் சாவித்திரி. பிடிவாதக்காரக் குழந்தையாக வளர்ந்தாள். பெண்கள் கல்வி கற்பது ஆசாரத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்பட்ட காலத்தில் அருகிலிருந்த குருகுலத்தில் படிக்க அந்தப் பிடிவாதம் துணைசெய்தது. தர்க்க புத்தியுடனும் சுதந்திர வாஞ்சையுடனும் வளர்ந்த பெண் பூப்படைந்தபோது தீச்சுடரின் அழகுடன் ஒளிர்ந்தாள்.உடல் மலர்வதற்கு முன்னும் உடல் மலர்ந்த பின்னும் அவளை மோகித்து கலந்தவர்கள் பலர் என்று செவிவழிக் கதைகள் சொல்கின்றன.
 
தாத்ரியை வேளி முடித்து அனுப்பியது குறியேடத்து இல்லத்துக்கு. அவ்வாறு வெறும் சாவித்திரிக் குட்டி குறியேடத்து தாத்ரியாகிறாள்.அவளை மணந்தவர் குறியேடத்து இல்லத்தை சேர்ந்த இரண்டாம் சந்ததியான ராமன் நம்பூதிரி.
இந்த மணஉறவில் ஒரு சதி மறைந்திருந்தது.நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்தவரான மூசாம்பூரிக்கு மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் உரிமை.இரண்டாமவரான அப்பன் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால்வேத விதிப்படி ஒரே ஒரு வழியிருந்தது. மூசாம்பூதிரியால் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வாரிசை உற்பத்தி செய்ய முடியாமலிருந்தாலோ தீராத நோயிருந்தாலோ அவரது அனுமதியுடன் வைதிகமுறைப்படி பரிகாரங்கள் நடத்திய பின்பு இரண்டாமவர் மணமுடித்துக் கொள்ளலாம்.
 
குறியேடத்து நம்பியாத்தன் நம்பூதிரி தீராத நோயாளியாக இருந்தார்.அதனால் ராமன் நம்பூதிரிக்குதாத்ரியை மணந்துகொள்ள முடிந்தது. ஆனால் முதலிரவில் அவளுடன் உறவுகொண்டவர் மூசாம்பூதிரி. தாத்ரியின் கனவுகள் பொசுங்கின. மனம் துவண்டது.உடல் களவாடப்பட்டது. அந்த கொடூர நொடியில் தாத்ரி வெஞ்சினப் பிறவியானாள்.தன்னை வஞ்சித்தவர்களைப் பழிவாங்க தனது உடலை ஆயுதமாக்கினாள். அவளது மாமிசப் பொறியில் பல ஆண்கள் சிக்கினர்.தாத்ரியின் துர்நடத்தை ஊர்ப்பேச்சாக மாறியது.கொச்சி சமஸ்தானத்தின் ராஜா விசாரணைக்கு அனுமதியளித்தார். தாத்ரியை முன்னிருத்திய ஸ்மார்த்த விசாரம் நாற்பது நாட்கள் நீண்டது.தன்னைக் காமப்பிழைக்கு ஆளாக்கியவர்களைப் பற்றி முப்பத்தியொன்பது நாட்கள் எதுவும் பேசாமலிருந்தாள் தாத்ரி. அப்படிப் பேசாமலிருப்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பில் முடியும்.
 
தான்மட்டுமே குற்றத்தின் பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கும் என்ற உள்ளுணர்வில் நாற்பதாம் நாள் தன்னோடு கிடந்தவர்களை அடையாளம் காட்டினாள்.அவள் பகிரங்கப்படுத்திய வரிசையில் அறுபத்தி நான்கு புருஷர்களின் பெயர்கள் இருந்தன.அறுபத்தி ஐந்தாவது பெயரைச் சொல்வதற்கு முன்பு பணிப்பெண்ணிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து சபையில் காட்டச் சொன்னாள். 'இந்தப்பெயரையும் சொல்லவேண்டுமா ? ' என்று அவள் கேட்டதும் ஸ்மார்த்தனும் மீமாம்சகனும் மகாராஜாவும் அதிர்ந்து நடுங்கினர்.அந்த நொடியில் ஸ்மார்த்த விசாரம் முடிந்தது. தாத்ரியுடன் உறவுகொண்ட அறுபத்தி நான்கு ஆண்களும் விலக்கு கற்பித்து நாடு கடத்தப்பட்டனர்.
 
தாத்ரிக்குட்டிக்குப் பிண்டம் வைக்கப்பட்டது. அவளுடைய முதுகுக்குப் பின்னால் மரண ஓலத்துடன் கதவு அறைந்து மூடப்பட்டது. அவள் இறந்துபோனவர்களில் ஒருத்தியாகக் கருதப்பட்டாள்.
 
தாத்ரி வெளிப்படுத்திய அறுபத்தி நான்கு பெயர்களில் எல்லா வயதினரும் இருந்தனர்.உறவினர்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள், அண்டை வீட்டவர்கள்,கல்வி கற்பித்த குரு,இல்லத்துக்கு வந்துபோன இசைவாணர்கள், கதகளிக் கலைஞர்கள் என்று எல்லா ஆண்களும் இருந்தனர். அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பெற்ற தகப்பனின்பெயரும் உடன்பிறந்த சகோதரனின் பெயரும் இருந்தன. தாத்ரி சொன்னவர்களில் பாதி அவளை வீழ்த்தியவர்கள். மறுபாதி அவளால் வீழ்த்தப்பட்டவர்கள்.அவள் சொல்லாமல்விட்ட அறுபத்தி ஐந்தாவது பெயர் கொச்சி மகராஜாவின் பெயர் என்றும் ராஜாவுக்கு நெருக்கமுள்ள நபரின் பெயர் என்றும் நிரூபணம் செய்யப்படாத ஊகங்கள் நிலவின.இன்றும் அது விடுவிக்கப்படாத புதிர்.
 
குறியேடத்து தாத்ரி சம்பவத்துக்கு முன்பும் சில அந்தர்ஜனங்கள் பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வாயில்லாப் பிராணிகளாக தண்டனையை ஏற்றுக்கொண்டு மடிந்து காலத்தின் புழுதியாக அவர்கள் மறைந்தனர்.தாத்ரி குட்டி மட்டுமே எதிர்விசாரணைக்குத் தயாரானவள். தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் ம்றுபக்கத்தை அம்பலப்படுத்தி தார்மீக உறுத்தலை உண்டாக்கியவள்.
 
ஆணாதிக்க மனோபாவத்தையும் பெண்ணுக்கு விரோதமான சாதியொழுக்க விதிகைளையும் கேலிக்குள்ளாக்கியவள்.எந்த உடல் பாவக்கறை படிந்தது என்று உதாசீனமாகச் சொல்லப்பட்டதோ அதே உடலை ஆயுதமாக தாத்ரி மாற்றினாள். எந்த ஒழுக்க விதிகள் தன்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனவோ அதேவிதிகளை தனது பிரதிவாதமாக்கினாள்.
 
குலப்பெண்ணுக்குத்தான் பிரஷ்டம். எப்போது ஒரு குலப்பெண்ணை நடத்தை கெட்டவள் என்று தீர்மானிக்கிறீர்களோ அப்போதே அவள் அந்தத் தகுதியிலிருந்து கீழே தள்ளப்பட்டு வேசியாகிறாள். வேசியின் தர்மத்தைக் கேள்வி கேட்கவோ அவளைத் தண்டிக்கவோ ஸ்மார்த்த சபைக்கு என்ன அதிகாரம் ? ' என்ற தாத்ரியின் கேள்வியில் அன்று மிரண்ட சமுதாயம் பின்னர் ஸ்மார்த்த விசாரம் நடத்தவில்லை.
 
ஸ்மார்த்த விசாரம் நடத்தி பிரஷ்டு கற்பிக்கப் பட்ட குறியேடத்து தாத்ரிக்கு என்ன ஆயிற்று என்பது வாய்மொழிக் கதைகளிலிருந்தே அறியப்படுகிறது. தாத்ரி விசாரணை பற்றிய தகவல்கள் வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் கையேட் 'டில் (மலபார் மானுவல்) விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பின்கதைகள் அனைத்தும் மக்கள் பேச்சிலிருந்தே பெறப்படுகின்றன.சம்பவத்தோடு தொடர்புடைய பலரது பின் தலைமுறையினர் இன்றும் வாழ்கிறார்கள் என்ற நிலையில் வாய்மொழித் தகவல்களை பொய்யென்று தள்ளுபடி செய்வதும் தவறாகிவிடும். சமுதாயத்தால் விலக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் பொறுப்பு மகாராஜாவைச் சேர்ந்தது. கூடாவொழுக்கத்துக்காக தண்டிக்கப்பட்டவளை ஊர் மத்தியில் பராமரிப்பது ராஜ நீதிக்கு இழுக்கு என்பதால் புறம்போக்குப் பகுதியில் அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப்படும்.வைதீக நியதி அது.
 
அதுபோன்று தாத்ரிக்கும் பெரியாற்றின் கரையில் மயானத்தையொட்டி இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே அவள் வாழ்ந்ததற்கான சான்றுகளில்லை. 1905 இல் இறந்துபோகவில்லை என்பது மட்டும் நிச்சயம். முன் காலங்களில் பிரஷ்டம் செய்யப்பட்ட பிற பெண்களைப்போல தாத்ரியும் பாண்டிதேசத்துக்கு -தமிழ்நாட்டுக்கு- அடைக்கலம் தேடிப்போனாள் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட விவரம். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியர் ஒருவரை மணந்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயுமாகியிருக்கிறாள். இரண்டு பெண்களும் ஓர் ஆணும். மகள்களில் ஒருத்தி பாலக்காட்டிலும் மற்றொரு மகளும் மகனும் சென்னையிலும் வாழ்ந்தார்கள்.சென்னைவாசியான மகள்வழிப் பேத்தி நடிகையாக அறிமுகமாகி மலையாளத்திரையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நட்சத்திரமாக ஜொலித்திருக்கிறாள்.
 
அறுபத்தைந்து பேருடன் உடலுறவு கொண்டும் கர்ப்பமடையாத தாத்ரி மூன்று குழந்தைகளுக்குத் தாயானது உயிரியல் விந்தையா ? மனதின் தந்திரமா ? என்பது இன்றும் தெளிவாகாத ரகசியம்.ஸ்மார்த்த விசாரத்தின்பேரில் புறக்கணிக்கப்பட்ட ஆண்கள் குற்றவுணர்வால் சாதியும் பெயரும் மாறி வேறிடங்களுக்குப் போனார்கள். அவ்வாறு வெளியேறிய ஒருவரைப் பற்றி மலையாளச் சிந்தனையாளரும் இலக்கியவாதியுமான எம்.கோவிந்தன் பின்வருமாறு எழுதினார்.
 
மேனன் சாதிப்பிரிவைச் சேர்ந்த அவர் திருச்சூர் நகரத்தில் முன்சீப்பாகவோ மாஜிஸ்திரேட்டாகவோ பணியாற்றி வந்தார்.திருமணமானவர். ஸ்மார்த்த விசாரத்தில் விலக்கப்பட்டவர்களின் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. பதறிப்போன அவரது மனைவியும் குடும்பத்தினரும் மேனனைக் கைவிட்டனர்.ஊரைவிட்டு வெளியேறினார் மேனன். அப்போது இளைஞராக இருந்த அவர் பாலக்காடு ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்துப் பெண்மணி ஒருவரை மணந்துகொண்டு பிழைப்புத் தேடி இலங்கைக்குப் போனார்.தம்பதியருக்குஇரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரும் சம்பாத்தியம் எதுவும் தேடாமல் இலங்கையிலேயே காலமானார் மேனன். அவரது விதவை பாலக்காட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் தமிழ் நாட்டில் குடியேறினார். வீட்டு வேலை பார்த்தும் சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட்டும் பிள்ளைகளை வளர்த்தார். பிற்காலத்தில் அந்த இரு பிள்ளைகளும் எம். ஜி. சக்கரபாணி மற்றும் எம். ஜி. ஆர் திரைப்பட நடிகர்களானார்கள். அவர்களில் ஒருவர் தமிழக மக்களின் அமோக ஆதரவுக்குப் பாத்திரமானார். காலப்போக்கில் அவர்களை ஆள்பவருமானார்.
 
A field of one's own: gender and land rights in South Asia - Page 429 Bina Agarwal - 1994
நன்றி - Seshathri Dhanasekaran
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ த்றில் படம் பார்ப்பது போல் இருக்குது வாசிக்கும்போது..

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு எவ்வளவோ ரகசியங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது.......!  🤔

நன்றி நிழலி ......!

  • கருத்துக்கள உறவுகள்


இணைப்புக்கு நன்றி,
பெரும் கொடுமையின் பதிவாக விரிகிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. என்ன மனிதர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.