Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனில் ரஷ்ய ராணுவப் படையெடுப்பும்... நேட்டோவின் ‘மாற்றாள் போரும்’... - எஸ்.வி.ராஜதுரை 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: உக்ரைனில் ரஷ்ய ராணுவப் படையெடுப்பும்... நேட்டோவின் ‘மாற்றாள் போரும்’...

spacer.png

எஸ்.வி.ராஜதுரை 

1990இல் சோவியத் யூனியனில் நடந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி, அதிலிருந்த ஆறு குடியரசுகள் யூனியனிலிருந்து பிரிந்து போவதாக அறிவித்துவிட்ட பிறகு, எஞ்சியிருந்த குடியரசுகளைச் சரிசமமான இறையாண்மையுள்ள சோவியத் குடியரசுகளின் யூனியன் என்ற வடிவத்தில் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக கோர்பசேவ் தலைமையிலிருந்த சோவியத் நாடாளுமன்றம் 1991 மார்ச்17இல் பொது வாக்கெடுப்பை நடத்தியது. அதற்கு ஆதரவாக, ஏற்கெனவே பிரிந்துபோன குடியரசுகளைத் தவிர மற்ற குடியரசுகளைச் சேர்ந்த மக்களில் 76.5% மக்கள் ஆதரவளித்தனர்.

சோவியத் யூனியனில் எல்லா வகையிலும் பலம் வாய்ந்ததும் மிகப் பெரியதும், அப்போது யெல்ட்ஸினைக் குடியரசுத் தலைவராகக் கொண்டிருந்ததுமான ரஷ்யக் குடியரசிலுள்ள மக்களிலும்கூட 71% மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அதை ஏற்றுக்கொண்டு யெல்ட்ஸினும்கூட சோவியத் யூனியன் புதிய வடிவத்தில் நீடிக்க ஆதரவு தெரிவித்தார். ஆதரவு தெரிவித்த எட்டு குடியரசுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, பொது ராணுவமும் பொதுக் குடியரசுத் தலைவரும் கொண்ட ’சோவியத் இறையாண்மை குடியரசுகளின் ஒன்றியத்தை’ உருவாக்கும் திட்டத்தை சில புதிய நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தில் 1991 ஆகஸ்ட் 20இல் கையெழுத்திட முடிவு செய்திருந்தனர்.

அத்தகைய புதிய ‘ஒன்றியம்’ உருவாகியிருக்குமானால், அது சோஷலிசத் தன்மையற்றதாக இருந்திருந்தாலும், அங்கு இன்னும் உயிர்ப்போடு இருந்த சோஷலிசச் சக்திகள் மீண்டும் வளர்வதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என்பதுடன் அமெரிக்காவினதும் பிற நேட்டோ நாடுகளினதும் விஸ்தரிப்புக் கொள்கை நிறைவேறாதபடி தடுத்திருக்கும். ஆனால், இந்த முயற்சியைத் தடுத்து, பழைய சோவியத் யூனியனை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, ராணுவம், உளவுத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ரஷ்ய அதிகாரிகள் மக்களை அணி திரட்டுவதற்கு பதிலாக ‘மேலிருந்து நடத்திய ராணுவப் புரட்சி', ரத்தம் சிந்தப்படாமலேயே அன்று ரஷ்ய சோஷலிசக் குடியரசு மக்களில் யெல்ட்சினுக்கு ஆதரவளித்து வந்த மிகப் பெரும்பான்மையான மக்களாலேயே முறியடிக்கப்பட்டது.

யெல்ட்ஸின் ரஷ்ய மக்களிடையே இருந்த பேராதரவைப் பயன்படுத்திக்கொண்டு உக்ரைன், பைலைரஷியா (இப்போது பேலாரஸ்), சோவியத் குடியரசுத் தலைவர்களுடன் தனியாக ஒப்பந்தம் செய்துகொண்டு சுதந்திர அரசுகளின் காமன்வெல்த் (Commonwealth of Independent States) என்ற அமைப்பை உருவாக்கி சோவியத் யூனியனின் மறைவுக்குப் பச்சைக்கொடி காட்டி அறிவித்தார். அப்போது யெல்ட்ஸினின் கூட்டாளிகளில் ஒருவராக இருந்தவர்தான் விளாடிமிர் புதின்.

spacer.png

சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்த அரசு உடைமைகளை யெல்ட்ஸினும் அவரது கூட்டாளிகளும் அபகரித்துக் கொண்டனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் பல்வேறு சமரசங்களைச் செய்து கொண்டார். மேற்கு நாடுகளிலிருந்த முதலாளிய ஜனநாயக முறையோ, பொருளாதார அமைப்போ இல்லாதிருந்த யெல்ட்ஸினின் ரஷ்யாவில் மாஃபியாக்களின் ஆட்சியே கொட்டமடித்து வந்தது. யெல்ட்ஸினால் ஏமாற்றப்பட்டுவிட்ட ரஷ்ய மக்களிடையே பொங்கி எழுந்த எதிர்ப்பின் காரணமாக 1990இல் அவர் பதவி விலகினாலும் அவரால் தெரிவு செய்யப்பட்ட விளாதிமிர் புதினே ரஷ்யப் பிரதமராகவும் பின்னர் குடியரசுத் தலைவராகவும் ஆக முடிந்தது.

நாட்டில் ஏற்பட்டிருந்த ஒழுக்கச் சீர்குலைவுகளைப் போக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் எண்ணெய், கனரகத் தொழில்கள், ராணுவத் தொழில் உற்பத்தி முதலியவற்றை அரசின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு அரசு உடைமைகளைத் தன்னைப் போலவே கொள்ளையடித்து வைத்திருந்தவர்கள், திடீர் செல்வந்தர்கள், புதிய முதலாளிகள், ராணுவத்தில் உள்ள உயரதிகாரி வர்க்கத்தினர் ஆகியோர் அடங்கிய சிறு குழுவினராட்சியை (Oligarchy) நிறுவி, சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்குதல், கருத்து சுதந்திரத்தை மறுத்தல், அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்குதல் என்ற சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தினார்.

spacer.png

பழைய ஜார் முடிமன்னர் ஆட்சிகளின்போது, ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவ சபையும் அரசும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டு மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருந்த நிலையை லெனின் தலைமையிலிருந்த போல்ஷ்விக் புரட்சி மாற்றி, மேற்கு நாடுகளில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருந்ததுபோல அரசிலிருந்து மதத்தைப் பிரித்து வைத்ததுடன் ஆர்த்தடாக்ஸ் திருச்சபை சமுதாய, அரசியல், பண்பாட்டு விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்த முடியாதபடி செய்தது. ஆனால் மீண்டும் இரண்டையும் இணைக்க யெல்ட்ஸின் காலத்தில் செய்யப்பட்ட முயற்சியை இப்போது புதின் நிறைவேற்றிவிட்டார்.

யெல்ட்ஸின் ஆட்சிக்காலத்திலிருந்து வறுமைக்கும் அந்நியமாதலுக்கும் உட்பட்டு வந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு திருச்சபை, மறு உலக வாழ்க்கையை உத்தரவாதம் செய்து ஆறுதலளித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அந்த சபையின் உயர்பீடத் தலைவர் (கத்தோலிக்கர்களின் போப்புக்கு இணையானவர்), உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு முழு ஆதரவையும் ஆசியையும் வழங்கியிருப்பதுடன் புதின் ஊக்குவித்து வந்த ரஷ்யப் பெருந்தேசியவாதத்துக்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளார். பழைய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மரபுக்கு உரிமை கொண்டாடி வருவதாகக் கூறிக் கொள்ளும் ரஷ்யக் கூட்டாட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியும் ரஷ்யப் பெருந்தேசியவாதத்தை உட்கொண்டுள்ளதுடன் இந்தப் போருக்கு முழு ஆதரவு தந்துள்ளது.

நாஜிகளுக்கு எதிராக சோவியத் யூனியனால் நடத்தப்பட்ட மாபெரும் தேசபக்தப்போர் அடைந்த வெற்றியைப் பாராட்டும் அதேவேளை, அக்டோபர் புரட்சியையும் போல்ஷ்விக் புரட்சியாளர்களையும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட கூட்டாட்சி உருவாக்கப்பட்டதையும் புதின் கண்டனம் செய்வதையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

“போல்ஷ்விக்குகள்தான் உக்ரைன் என்ற நாட்டை உருவாக்கினார்கள்” என்பதுதான் புதினின் வாதம். உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முதல் நாள் புதின் தொலைக்காட்சியில் ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய உரையில் “உக்ரைன் பிரதேசங்களை ஆக்கிரமிப்பது நமது திட்டமல்ல” என்று கூறிய அதே மூச்சில் , “இன்றைய உக்ரைனின் பகுதியாக உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களிடம் சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டபோதோ அல்லது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தியோ எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நிர்மாணிக்கப் போகிறார்கள் என்று கேட்கப்படவேயில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று சொல்கிறார். அதாவது, உக்ரைனில் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைத்தான் இவ்வாறு மறைமுகமாகக் கூறுகிறார். அதாவது அவற்றை ஏற்கெனவே ‘மக்கள் குடியரசு’களாக அங்கீகரித்துவிட்ட ரஷ்ய அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் என்பதுதான் இதன் பொருள்.

“பழைய சோவியத் யூனியன் தன்னை வலுப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. ஆனால், இப்போதுள்ள நவீன ரஷ்யா அந்தத் தவற்றைச் செய்யாது” என்று கூறும் அவர், அந்த சோவியத் யூனியனை வலுக்குறையச் செய்து அது தகர்ந்து விழுவதை உத்தரவாதம் செய்துகொண்ட சதிகாரர்களில் தானும் ஒருவர் என்பதை மூடி மறைக்கிறார்.

கள்ளங்கபடமற்ற குழந்தையைப் போன்ற முகத்தைக்கொண்ட உக்ரைன் குடியரசுத் தலைவரின் உருவம், அமெரிக்க - நேட்டோ அணி அந்த நாட்டு மக்களைப் பலிகொடுத்தும் ‘ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்’ என்ற பெயரால் தனக்கு வேண்டிய ஆட்சியாளர்களை உக்ரைனில் உருவாக்கி, கடந்த 10 ஆண்டுகளாக ரஷ்யாவை சீண்டி வந்து இப்போது அந்த ஆட்சியாளர்களைக் கொண்டு ரஷ்யா மீது நடத்தும் ’மாற்றாள் போரின்’ (Proxy War) கொடூரத்தன்மையை, அதன் கடந்த கால ஆக்கிரமிப்புப் போர்களை மூடிமறைக்க மேற்கு நாட்டு ஊடகங்களால் பயன்படுத்தப்படுகிறது.

spacer.png

விளாதிமிர் புதின் ஒரு போர்க் குற்றவாளி என்று கூறும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடனின் கூற்றையும், அப்படித் தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூற்றையும் போன்ற மாய்மால வாதம் வேறு ஏதும் இருக்க முடியாது. ரஷ்யாவைத் தோற்கடித்து அதன் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க விரும்பும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளுக்கும் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் உள்ள ரஷ்ய ஏகபோக முதலாளிய நலன்களைக் காப்பதற்குமான விளாதிமிர் புதினின் ரஷ்யாவுக்கும் நடக்கும் போர், உக்ரைன் நாட்டு மக்களைக் கொன்று குவிப்பதுடன் மீட்டெடுக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுள்ள உலகப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இனி ஒரு போதும் நிவர்த்தி செய்யப்பட முடியாத சூழலியல் கேடுகளையும் உண்டாக்கி வருகிறது.

மேலும், அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் தங்கள் ராணுவ வலிமையை அதிகரிப்பதற்கு இன்னும் கூடுதலாகக் கோடிக்கணக்கான நிதியை செலவிட வைத்துள்ளது. ஜெர்மன் ராணுவ வாதம் வலுப்பெற்று வருகிறது. இவை யாவும் அந்தந்த நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் கொரோனோ தொற்று நோயால் மடிந்து வருவதைப் பற்றிய கவலை சிறிதும் அற்றவை. அங்குள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் அக்கறையற்றவை. எனவே, இந்தப் போர், புதிய போர்களைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஏகபோக முதலாளியம் உலகில் நீடிக்கும் வரை போர் அபாயங்கள் இருந்து கொண்டே வரும். போர் முடிந்தாலும், உக்ரைனில் தரைமட்டமாக்கப்பட்ட கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அகக்கட்டுமானங்கள், மக்களின் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை மீள்கொணர்வது உடனடியாகச் சாத்தியமில்லை.

ஒருவேளை இந்தப் போரில் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டால் (அதற்கான சாத்தியப்பாடுகள் மிகக் குறைவு), ஏற்கெனவே பொருளாதார ரீதியாக பலகீனப்பட்டுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய கோடிக்கணக்கான டாலர்களை செலவிட முன்வரும் என்பது சந்தேகத்துக்குரியது. ரஷ்யா வெற்றி பெற்றால், மிகப் பெருமளவுக்குத் தன் ராணுவ சக்தியை இந்தப் போரில் செலவிட்டுள்ளதும், மேற்கு நாட்டுப் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார பலகீனத்தை அடைந்துள்ளதுமான ரஷ்யாவிடமும் இதை எதிர்பார்க்க முடியாது. எது ‘ஆகப் பெரிய தீங்கு விளைவிக்கும் ஏகாதிபத்தியம்,’ எது ‘குறைந்த தீங்குள்ள ஏகாதிபத்தியம்’ என்று வகைப்படுத்துவதும் அரசியலையும் பொருளாதாரத்தையும் பிரித்துப் பார்ப்பதும் லெனினின் கோட்பாடுகளுக்கு எதிரானது.

“போர்களை நடத்துபவர்கள் செல்வந்தர்கள், துன்பத்தை அனுபவிப்பவர்கள் ஏழைகள்” என்று சார்த்தர் சொல்வதற்கிணங்க இந்தப் போரையும் அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ நடத்துபவர்களையும் கண்டனம் செய்வதும் ரஷ்ய, உக்ரைன் நாட்டு உழைக்கும் மக்களுடனும் அங்குள்ள போர் எதிர்ப்பு முற்போக்கு சக்திகளுடனும் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதும்தான் லெனினிசத்துக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகளின் கடமை.

 

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்


 

https://minnambalam.com/politics/2022/03/24/9/Russian-war-against-Ukraine-and-NATO-behaviour

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.......!   

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏகாதிபத்தியவாதத்தின் கடைசி இலக்கு கனடாவாகத்தான் இருக்கும்.

உலகமெங்கும் பொருளாதார வளங்களை சுரண்டி இறுதியாக கனடாவில் உள்ள வளங்கள் அமெரிக்க நிறுவனங்களால் சுரண்டப்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.