Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்

on June 21, 2022

Sri-Lanka-Fuel-Queue.jpg?resize=1200%2C5

Photo, AP Photo/Eranga Jayawardena, Indianexpress

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது. தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர் என்று வர்ணிக்கும் அவர் இலங்கை மக்கள் மூன்று வேளை உணவு உண்பதை உறுதிசெய்வதே தனது முதல் பொறுப்பு என்று பதவியேற்ற அன்றே  சொன்னார். பிறகு நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமடையும் ஆபத்து இருக்கிறது என்றும் மக்கள் இரு வேளை உணவுடன் சமாளிக்கவேண்டிய நிலை வரக்கூடும் என்றும் அபாயச்சங்கு ஊதினார். உக்ரெயின் போர் காரணமாக செப்டெம்பரில் இருந்து உலகளாவிய ரீதியில் தோன்றக்கூடிய பாரிய உணவுத் தட்டுப்பாடு இலங்கையை பெரிதும் பாதிக்கும் என்றும் அந்த நிலைவரம் 2024 வரை நீடிக்கும் என்றும் கூறிய அவர்  தினமும் பொருளாதார நிலைவரம் குறித்து அச்சம் தரும் தகவல்களையே வெளியிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

முன்னைய எந்தப் பிரதமரும்  விக்கிரமசிங்கவைப் போன்று பொருளாதார நிலை குறித்து நாட்டு மக்களுக்குத் தினமும் வகுப்பு எடுத்தில்லை. நாடாளுமன்றத்திலும் நேர்காணல்களிலும் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றுகின்ற உரைகளிலும் பொருளாதார நிலைவரம் குறித்து விளக்கமளிப்பதில் அவர் உலக சாதனையொன்றை படைக்கப்போகிறார் என்று கொழும்பு ஆங்கிலப்பத்திரிகையொன்று சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியதலையங்கத்தில் நையாண்டி செய்திருந்தது.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராத வகையிலான படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக அவர் பதவியேற்றபோது அவருக்கு சர்வதேச சமூகத்துடன் குறிப்பாக மேற்குலகுடன் இருக்கக்கூடிய நெருக்கமான உறவு காரணமாக நெருக்கடியில் ஒரு தணிவு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கும் என்று பலரும் நம்பினர். அவரால் மாத்திரமே நிலைவரத்தில் ஓரளவுக்கேனும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் என்று அரசியல் அவதானிகள் பரவலாக அபிப்பிராயம் வெளியிட்டனர். மக்களும் வானளாவ உயர்ந்துகொண்டுசெல்லும் வாழ்க்கைச்செலவைச் சமாளிக்க ஏதாவது நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால், நிலைவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக, பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாழ்க்கைச் செலவு ஒரு  கட்டுப்பாட்டுக்குள் இல்லை. மக்கள் சகல பொருட்களுக்கும் தினம் ஒரு விலை கொடுக்கவேண்டியிருக்கிறது. எரிபொருட்களைப் பெறுவதற்கு மக்கள் மைல் கணக்கில் இரவுபகலாக சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் காத்துநிற்கிறார்கள். எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இப்போது மக்கள் கிளர்ச்சி செய்யும் இடங்களாக மாறிவிட்டன. இராணுவம் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு வரிகளையும் சேவைகளின் கட்டணங்களையும் அதிகரித்து மக்களின் தோள்களில் பொருளாதார நெருக்கடியின் சுமையை ஏற்றிவிட்டு அரசாங்கம் தற்போதைக்கு நிலைவரத்தை மக்கள் பொறுமையுடன் சமாளிக்கவேண்டும் என்றும் அர்ப்பணிப்பைச் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்றும்  கேட்கிறது. எரிபொருட்களுடனும் அத்தியாவசிய பொருட்களுடனும் வருகின்ற கப்பல்களுக்குச் செலுத்துவதற்கு டொலர்களைத் தேடுவதில் அரசாங்கம் தினமும் தலையைப் பிய்த்துக்கொள்கிறது. இதுவே தொடரப்போகின்ற நிலைமை என்றால் விக்கிரமசிங்க பிரதமராக வந்ததன் பயன்தான் என்ன என்று வீதிகளுக்கு  இறங்கிய மக்கள் கேட்கிறார்கள்.

இன்றைய நெருக்கடி தன்னால் உருவாக்கப்பட்டதல்ல என்பதால் பிரதமர் பரபரப்பின்றி இருக்கிறார். வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கும்போது மிகவும் சாவகாசமாக  புன்சிரிப்புடன் அவர்  விளக்கமளிக்கிறார். பொருளாதார அனர்த்தத்தில்  சிக்கியிருக்கும் ஒரு நாட்டின் பிரதமரின் முகத்தில் காணப்படவேண்டிய வேதனையின் எந்தவொரு அடையாளத்தையும் அவர் முகத்தில் காணவில்லை. முன்னைய அரசாங்கம் எடுத்த தவறான முடிவுகளினால்தான் நெருக்கடி ஏற்பட்டது என்பதை கூறுகின்ற வேளையில் ராஜபக்‌ஷர்களை நேரடியாக பெயர்சொல்லி விமர்சிப்பதை  தவிர்க்கிறார். வெளிநாடுகளுடனான உறவுகளை முன்னைய அரசாங்கம் சீர்கெடச்செய்துவிட்டதால் உதவிகளைப் பெறுவதற்கு மீண்டும் நட்புறவைக்கட்டி வளர்க்கவேண்டியிருக்கிறது என்று கூறுவதன் மூலம் சர்வதேச சமூகத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்களை வெளிப்படையாகவே அவர் ஒத்துக்கொள்கிறார். இவ்வாறான விளக்கங்கள் ஊடாக இன்றைய நெருக்கடிக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என்று காட்டிக்கொண்டு மக்கள் பொறுமையாக இருந்து தான் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்று  விக்கிரமசிங்க எதிர்பார்க்கிறார். நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தன்னால் முடியாவிட்டால் பதவியை விட்டு விலகிச்சென்றுவிடத் தயங்கப்போவதில்லை என்று கூட பதவியேற்ற தொடக்கத்தில் ஒரு தடவை அவர் கூறினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

பொருளாதார நெருக்கடியில் ஒரு தணிவை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் வெளிநாடுகளிடமும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும் கடனுதவிகளைப் பெறுவதிலேயே அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது. வேறு வழியில்லை. இது இலங்கையின் கடனை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்லப்போகிறது.

வெளிநாடுகளிடம் இருந்து பொருளாதார உதவிகளைப் பெறுவதில் இலங்கை இன்று எந்தளவுக்கு இடர்பாடுகளை எதிர்நோக்குகிறது என்பதற்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான முஹமட் நஷீட் அண்மையில் வெளியிட்ட தகவல் சிறந்ததொரு உதாரணம்.

வெளிநாடுகளிடம் இருந்து இலங்கைக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக நஷீட்டை பிரதமர் விக்கிரமசிங்க நியமித்திருந்தார். அவர் அண்மையில் சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுடன் உரையாடியவேளையில் இலங்கைக்கு உதவிசெய்யுமாறு சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹமட் பின் சல்மானிடம் கேட்டபோது பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கான உகந்த திட்டம் எதுவும்  இலங்கையிடம் இல்லை என்று கூறி கைவிரித்துவிட்டார் என்று குறிப்பிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளரிடம் உதவி கேட்டபோது இலங்கை விற்பனை செய்வதற்குத் தயாராக வைத்திருக்கும் சொத்துக்களின் பட்டியலைத் தருமாறு அவர் கேட்டதாக நஷீட் கூறியதாக ஹர்ஷா சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியபோது நஷீட் தான் அவ்வாறு ஹர்ஷவிடம் கூறவில்லை என்று மறுத்தார். ஊடக செய்திகள் தவறானவை என்று கூறிய அவர் பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்யத் தயாராயிருக்கின்றன. உதவிகள் வந்துசேரும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் சவூதி இளவரசரோ அல்லது ஐக்கிய அரபு இராச்சிய ஆட்சியாளரோ தன்னிடம் அவ்வாறு கூறவில்லை என்பதை நஷீட் வெளிப்படையாக மறுக்கவில்லை. அதேவேளை, ஹர்ஷ தான் கூறியவற்றில் இருந்து பின்வாங்கவேயில்லை. தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாகவே நிற்கிறார். நஷீட்டிடம் இருந்து அதற்கு இதுவரை பதில் இல்லை.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவரும் இலங்கை மீது தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக தன்னிடம் கூறியதாக ஹர்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்தார். இலங்கையில் ஒரு சர்வகட்சி அரசாங்கம் பதவியேற்குமானால் அல்லது கடன் உடன்படிக்கையில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைச்சாத்திடுமானால் குறுகிய கால கடனுதவியைச் செய்வது குறித்து பரிசீலிக்கமுடியும் என்று ஜப்பானிய தூதுவர் கூறியதாகவும் ஹர்ஷா சொன்னார். இந்த தகவல்கள் குறித்து இதுவரையில் எந்தத் தரப்பிடம் இருந்தும் மறுதலிப்பு இல்லை.

இதனிடையே, எதிர்காலத்தில் இலங்கை கூட்டுவதற்கு முயற்சிக்கும் உதவிவழங்கும் நாடுகள் மகாநாட்டில் சீனாவையும் உள்ளடக்குவதற்கு அவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக விக்கிரமசிங்க இந்தியாவின் வியோன் (WION ) செய்தி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் கடந்த வாரம் கூறியிருந்தார். “முக்கிய  உதவியைப் பெறுவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறோம். ஓரளவுக்கு சீனா எமக்கு உதவிக்கொண்டிருக்கிறது. ஆனால், தற்சமயம் இந்தியாவுடன் சேர்ந்து நாம் பணியாற்றிக்கொண்டிருப்பதால், சீனாவிடமிருந்து வரவேண்டிய முக்கிய  உதவி வரவில்லை” என்றும் பிரதமர் சொன்னார்.

இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா தயாராயிருப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அண்மையில் பெய்ஜிங்கில் கூறியிருந்தார். அதேவேளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரும் சீனத்தூதுவரும் கடந்தவாரம் சந்தித்து இலங்கைக்கு உதவுவதில் இரு நாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தார்கள். இலங்கைக்கு  உதவுவதில் இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் ஒத்துழைத்துச் செயற்படுவதில் சீனா காட்டுகின்ற நாட்டத்தை அவ்விரு நாடுகளும்  பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக விடுபட இலங்கைக்கு செய்கின்ற அவசர உதவிகளின் பின்புலத்திலேயே நோக்கவேண்டும். இந்தியா போன்று பெருமளவு அவசர உதவியை செய்ய சீனா தயாராயில்லை. அதேவேளை தனது செல்வாக்கு வலயத்தில் இருந்து கொழும்பு விலகிச்சென்றுவிடாதிருப்பதையும் உறுதிசெய்யவேண்டிய அவசியம் பெய்ஜிங்கிற்கு இருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், இந்தியாவின் அவசரகால உதவிகள் கொழும்பை புதுடில்லிக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றுவிட்டன என்பதில் சந்தேகமில்லை. அதிலிருந்து இலங்கை தற்போதைக்கு  விடுபடமுடியாது.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்ராலினா ஜோர்ஜீவாவுடன் சில தினங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் என்ற வகையில் பேசிய பிரதமர் விக்கிரமசிங்க குறைந்தபட்சம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவிலாவது அவசர மீட்பு உதவியை இலங்கை பெறுவதற்கு வசதியாக அலுவலர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், நாணய நிதியத்தின் உதவிக்கு இவ்வருட இறுதிவரை இலங்கை காத்திருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. அலுவலர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்ற போதிலும் கடனுதவிக்கு நாணய நிதியத்தின் நாணய சபையின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என்று நிதித்துறை விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்டவரான ஹர்ஷ டி சில்வா கூறுகிறார். இவ்வாறாக அவசரமாக தேவைப்படுகின்ற உதவிகளைப் பெறுவதில் இலங்கை பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றது. இந்தியா இறுதியாக வழங்கிய தொடர் கடனுதவி (credit line) யின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. இதற்கு பிறகு என்ன செய்வது? மீண்டும் இந்தியாவிடம் கடனுதவி பெறுவதற்கு இலங்கை நாட்டம் காட்டியிருக்கிறது. ஆனால், இந்தியாவினால் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு கடனுதவியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க இயலும் என்ற கேள்வி எழுகிறது. ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களைப் பெறுவதற்கு இலங்கை நிர்ப்பந்திக்கப்படக்கூடும் என்று பிரதமர் கூறுகிறார்.

கட்டுப்பாட்டை மீறிச்சென்றுகொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் 17 இலட்சம் மக்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக 4 கோடி 72 இலட்சம் டொலர்களை திரட்ட இலங்கையில் உள்ள ஜக்கிய நாடுகள் குழுவும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ‘ கூட்டு மனிதாபிமானத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் திட்டத்தின் ‘ கீழ் அழைப்பு  விடுத்திருக்கின்றன. இலங்கைக்கு உணவு உதவிக்காக ஐ.நா. வேண்டுகோள் விடுப்பது இதுவே முதற்தடயைாகும்.

“தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான அமைதிக் காலகட்ட பயன்கள் உட்பட பல பயன்களை மறுதலையாக்கும் அச்சுறுத்தலை தோற்றுவிக்கிறது. பலரைப் பொறுத்தவரை அடிப்படை மனித உரிமைகள் அனுபவிப்பும் ஆபத்துக்குள்ளாகி இறுதியில் சமூகக் கூட்டிணைவு மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். விரைந்து செயற்படாவிட்டால் எமது கண் முன்னாலேயே இலங்கை பாரிய மனிதாபிமான நெருக்கடிக்குள் மூழ்கப்கோகிறது” என்று கொழும்பில் உள்ள ஐ.நா. பிரதிநிதி ஹன்னா சிங்கர் ஹம்டி  அபாய அறிவிப்பு  செய்திருக்கிறார். அதன் அர்த்தம் நாடு பெரும் அராஜகத்தில் மூழ்கப்போகிறது என்பதேயாகும். அரசாங்க அலுவலகங்களும் பாடசாலைகளும் ஒழுங்காக இயங்கமுடியாத நிலை தோன்றிவிட்டது. அத்தியாவசியமான சேவைகளைத் தவிர மற்றைய அரசாங்க அலுவலர்கள் இரு வாரங்களுக்கு வீடுகளில் இருந்து பணியாற்றுமாறும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வராமல் வீடுகளில் இருந்து இணையவழியில் கல்வி கற்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, வேறு எந்த அரசியல்வாதியும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று சவால்களைச் சந்திக்க தயாரில்லாத நிலையில் பிரதமராக தான் பதவியேற்க முன்வந்ததை வெளிநாட்டு ஊடகங்களுக்கு கூறுவதில் பெருமையடைகிறார். வியோன் அலைவரிசையின் செய்தியாளர் பிரதமரிடம் ” இன்றைய சவாலுக்கு முகங்கொடுக்கக்கூடிய தகைமை உங்களிடம் தான் இருக்கிறது” என்று கூறியபோது” என்னைவிடவும் கூடுதல் தகைமையடையவர்கள் இருக்கலாம். ஆனால், எவரும் சவாலை ஏற்பதற்கு முன்வரவில்லையே. நான் அதை எதிர்கொள்ள முன்வந்தேன். யாராவது ஒருவர் அவ்வாறு செய்து நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்கவேண்டுமே”  என்று அவர் பதில் சொன்னார்.

விக்கிரமசிங்கவுக்கு கால அவகாசத்தைக்கொடுக்வேண்டும் என்ற எண்ணம் எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் தோன்ற ஆரம்பித்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அவரின் அழைப்பையேற்று பலர் கடந்தவாரம் பொருளாதார நெருக்கடி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றார்கள். மற்றவர்கள் ஏற்க முன்வராத சவாலுக்கு  முகங்கொடுக்க முன்வந்தவர் என்ற படிமம் தான் விக்கிரமசிங்கவின் பெரிய பலமாக இன்று  இருக்கிறது.

இதேவேளை, பிரதமரின் வருகையை அடுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலகட்டத்தில் காணக்கூடியதாக இருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு ‘மாற்றம்’ என்னவென்றால் ராஜபக்‌ஷர்கள் மிகவும் ஆறுதலடைந்திருக்கிறார்கள். தங்களது எதிர்கால அரசியல் குறித்து சிந்தித்து வியூகங்களை வகுக்க அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

மக்கள் கொந்தளிப்பின்  உச்சக்கட்டத்தில் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறிய ஜனாதிபதி கோட்டபா ராஜபக்‌ஷ இப்போது தனது பதவிக்காலத்தின் எஞ்சிய இரு வருடங்களுக்கும் முழுமையான அதிகாரங்களுடன் தொடர்ந்து பதவியில் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஒன்றில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் அல்லது நாடாளுமன்றம் ஆட்சிமுறையில் இருந்து விலக்கிவைக்கப்படவேண்டும் என்றும் அண்மைய புளூம்பேர்க் நேர்காணலில் அவர் கூறியதைக் கண்டோம். 21ஆவது திருத்த வரைவு மீதான செயன்முறைகள் படிப்படியாக சோர்வடைந்து போயிருக்கின்றன. நாடாளுமன்ற கட்சித்தலைவர்களுடன் மீண்டும் ஆராயவேண்டியிருக்கிறது என்றும் அமைச்சரவையில் ஆராய்ந்து  இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் கூறி பிரதமரும் அந்தத் திருத்தம் குறித்து பெரிதாக இப்போது அக்கறை காட்டுவதாக இல்லை.

அவர் ராஜபக்‌ஷர்களை காப்பாற்றுவதற்குத் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றாரோ இல்லையோ…..அவரின் வருகைக்குப் பிறகு வேறு எவரும் அல்ல ராஜபக்‌ஷர்களே ஆறுதலாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் உண்மை.

Thanabalasingam-e1653297290887.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10208

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தன்னால் முடியாவிட்டால் பதவியை விட்டு விலகிச்சென்றுவிடத் தயங்கப்போவதில்லை என்று கூட பதவியேற்ற தொடக்கத்தில் ஒரு தடவை அவர் கூறினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

 

7 hours ago, கிருபன் said:

இதேவேளை, பிரதமரின் வருகையை அடுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலகட்டத்தில் காணக்கூடியதாக இருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு ‘மாற்றம்’ என்னவென்றால் ராஜபக்‌ஷர்கள் மிகவும் ஆறுதலடைந்திருக்கிறார்கள். தங்களது எதிர்கால அரசியல் குறித்து சிந்தித்து வியூகங்களை வகுக்க அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சாதிக்க முடியாததை இப்பதவியை வைத்து சாதிக்க முயல்வார். மேற்கின் கையாள் என்பதால் அவர்களின் தாளத்துக்கும் ஆடுவார் ரனில். 
 

மகிந்த ஆட்சியை காப்பாற்றியது இவர் தான். இல்லாவிட்டால் மகிந்த  கடற்படை முகாமில் தான் உயிர் வாழ வேண்டி  வந்திருக்கும்.ரனிலின் வரவால் சீனாவின் ஆட்ட வீரியம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தகுந்த தருணத்தில் காய் வெட்டுவார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.