Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக யானைகள் தினம்: காட்டைத் தேடி ஒரு யானையின் பயணம்: ரிவால்டோவுக்கான போராட்டம் வெற்றியடைந்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக யானைகள் தினம்: காட்டைத் தேடி ஒரு யானையின் பயணம்: ரிவால்டோவுக்கான போராட்டம் வெற்றியடைந்தது எப்படி?

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரிவால்டோ

பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM

ரிவால்டோ. தும்பிக்கையின் நுனி வெட்டுப்பட்ட அந்த யானை, ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது அதன் இல்லமான முதுமலை காப்புக்காட்டுக்குள் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு பல்லுயிர்ச்சூழல் வாரியத்தின் தலைவராக இருக்கும் முனைவர் ஷேகர் குமார் நீரஜ், இந்தியாவில் தனக்குத் தெரிந்து, வனத்துறையால் பிடிக்கப்பட்டு முகாமில் வைக்கப்பட்ட காட்டு யானை மீண்டும் காட்டிற்குள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என்கிறார்.

யார் இந்த ரிவால்டோ? பிரேசில் கால்பந்தாட்ட வீரரின் பெயரைக் கொண்ட இந்த யானை எதற்காக பிடிக்கப்பட்டது? அதை மீண்டும் காட்டில் விடுவிக்க ஏன் அவ்வளவு முயற்சிகள்? அதைத் தெரிந்துகொள்ள, சில நிமிடங்களுக்கு நாமும் ரிவால்டோவோடு முதுமலை காட்டுக்குள் பயணிப்போம்.

2013ஆம் ஆண்டு காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக வைக்கப்பட்ட பன்றிக்காய் வெடித்ததில், ரிவால்டோ அவனது தும்பிக்கையின் நுனியில் 30 செமீ நீளத்தை இழக்க நேரிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு சுயமாக உணவுண்ண சிரமப்பட்ட அவனுக்கு வனத்துறையினரும் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் உணவளிக்கத் தொடங்கினார்கள்.

 

ரிவால்டோ காட்டிலிருந்து ஊருக்குள் வருவதால் ஏற்பட்ட அச்சம் குறித்து, அவனை விடுவிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒருவரான உலக காட்டுயிர் நிதியத்தின் உறுப்பினர் மோகன் ராஜ் பிபிசி தமிழிடம் பேசியபோது, "பலா, தேங்காய், தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்கள் உட்பட அவனுக்குப் பல்வேறு உணவுகளை ஊர் மக்கள் கொடுக்கத் தொடங்கினர். அந்தப் பகுதிகளில் இருந்த ரிசார்ட்டுகளில் இருப்பவர்களும் அவனுக்கு உணவளித்துப் பழக்கியதால், அங்கும் அடிக்கடி சென்று கொண்டிருந்தான். இப்படியாக அனைவரிடையிலும் பிரபலமாகிவிட்ட ரிவால்டோ, ஊருக்குள் எப்போது வேண்டுமானாலும் வருவான், எங்கு வேண்டுமானாலும் உலவுவான்.

இது காட்டு யானைக்கு நல்லதல்ல என்பதாலும் அவனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் பற்றிய அச்சம் அதிகரித்ததாலும் அவனை முகாமுக்குக் கொண்டு சென்றார்கள்," என்று கூறுகிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஆனால் ரிவால்டோவை விடுவிப்பது குறித்த விவாதங்களின் போது, "ரிவால்டோ வாழக்கூடிய சிகூர் பள்ளத்தாக்கு காட்டுப்பகுதி யானை வழித்தடமாக அறிவிக்கப்பட்ட காட்டுப் பகுதி. இங்கிருந்தே ஒரு யானையைப் பிடிப்பதாக இருந்தால், வேறு எங்கு கொண்டு போய்விடுவது என்று காட்டுயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள் வாதிட்டனர். அதோடு, முகாமில் வைப்பது என்பது ஆயுள் தண்டனையைப் போன்றது. அப்படியான தண்டனையைப் பெறும் அளவுக்கு ரிவால்டோ என்ன தவறு செய்துவிட்டான் என்று கேள்வியெழுப்பினர்," என்று மோகன் ராஜ் கூறினார்.

2015ஆம் ஆண்டிலேயே ரிவால்டோவை பிடிக்க வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனால், அப்போது அதுகுறித்துப் பெரிதாகப் பேசப்படவில்லை.

பிறகு, "2020ஆம் ஆண்டில் ரிவால்டோவை பிடிக்க வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, 2021 மார்ச் மாதம், ரிவால்டோவின் வழித்தடமான வாழைத்தோட்டம் செக்போஸ்டில் யானைகளை அடைத்து வைக்கும் க்ரால் என்றழைக்கப்படும் கூண்டை வைத்து, அதற்குள் பலாப்பழம், பப்பாளி போன்ற பழங்களைப் போட்டு வைத்து அவனைப் பிடித்தார்கள்," என்கிறார் ரிவால்டோவை விடுவிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்த பேரா.த.முருகவேள்.

 

ரிவால்டோ யானை

பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM

 

படக்குறிப்பு,

மீண்டும் காட்டுக்குள் ரிவால்டோ

மேலும், இப்படியாக பிடிக்கப்பட்ட யானையை க்ராலில் வைத்து பழக்கப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று கூறுபவர், "அதுகுறித்து நீதிமன்றத்தில் குறிப்பிட்டபோது, யானையைப் பழக்கப்படுத்தவில்லை. அதன் தும்பிக்கையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கவே பிடித்துள்ளோம் என்றும் விடுவித்துவிடுவோம் என்றும் தவறான தகவலை வனத்துறை தெரிவித்தது.

ஆனால், உண்மையில் அங்கு அவனை அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். க்ராலில் அடைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ரிவால்டோ, க்ராலின் மேல்பகுதியைத் தூக்க முயல்வது, இரவெல்லாம் பிளிறுவது என்றபடி இருந்தான். இதுகுறித்த ஓர் அறிக்கையை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, யானைக்குப் பயிற்சியளிப்பது நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பானது என்று நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கான பதிலில் மீண்டும் சிகிச்சை தான் கொடுப்பதாகக் கூறப்பட்டது," என்று கூறுகிறார்.

இதற்கிடையே, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தலைமை வனப்பாதுகாவலராக முனைவர்.ஷேகர் குமார் நீரஜ் மாற்றப்படுகிறார். தமிழ்நாடு வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலராகப் பதவியேற்றவுடன் அவர் கைக்கு வந்த முதல் வழக்கு ரிவால்டோ.

 

ரிவால்டோ யானை

பட மூலாதாரம்,DR SHEKHAR K NIRAJ

"மக்களுடைய பொருட்களுக்குச் சேதம் விளைவிப்பதாகவும் உயிர் பலி ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறி அவன் க்ராலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். அதுவரை இருந்த தகவலின்படி, அவனை க்ராலில் அடைத்து வைத்து, ஒரு குழுவால் கண்காணிக்கப்பட்டான். பிறகு, தெப்பக்காடு முகாமில் அவனை இருக்க வைப்பதும் முகாம் யானையாகப் பயன்படுத்தப்படலாம் என்பதும் தான் திட்டமாக இருந்தது.

அதோடு, ரிவால்டோவின் தும்பிக்கை வெட்டுப்பட்டிருந்ததும் அவனுடைய ஒரு கண்ணில் கண்புரை பாதிப்பு இருந்ததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவனுடைய உடல்நிலை, காட்டில் வாழக்கூடிய திறனைக் குறைத்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

நான் இந்த வழக்கைப் பகுப்பாய்வு செய்தபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு காட்டு யானையை ஏன் முகாமில் வைத்திருக்க வேண்டும் என்பதை நேரடியாகச் சென்று ஆராய முடிவெடுத்தேன். ஜூலை 10ஆம் தேதியன்று ரிவால்டோவை நேரில் பார்வையிட்டேன்.

முதல்முறையாக அந்தக் காட்டு யானையைப் பார்த்தபோது, எனக்கு அவன் நல்ல ஆரோக்கியத்தோடு, புத்திசாலியாக, மென்மையானவனாக இருப்பதாகவே தோன்றியது," என்கிறார் முனைவர் ஷேகர் குமார் நீரஜ்.

ரிவால்டோவின் உடல்நிலை குறித்துப் பேசும்போது, நீதிமன்றத்தில் முன்பே குறிப்பிட்டிருந்ததைப் போல சிகிச்சைக்காக அவனைப் பிடித்ததாக முந்தைய அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், நான் காட்டுயிர்களுக்கான மருத்துவர்களிடம் கலந்து பேசியபோது, அவனுக்குக் கூடுதலாக சிகிச்சையளிக்க வேண்டிய தேவை எதுவுமில்லை என்று தெரிய வந்தது என்கிறார் நீரஜ்.

அதுமட்டுமின்றி, சுமார் 4,500 முதல் 5,000 டன்கள் வரை எடைகொண்ட ஒரு காட்டு யானை அந்த க்ராலில் தன் உடலைத் திருப்பக்கூட முடியாமல் சிரமத்தில் நின்றிருந்ததாகக் குறிப்பிட்டவர், "அன்றிரவு பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 10 வல்லுநர்களோடு இதுகுறித்து விவாதித்தேன். அடுத்த நாளில், யானைப்பாகன்களால் உணவு கொடுக்கப்பட்ட ரிவால்டோவை மீண்டும் கண்காணித்தேன்.

பிறகு சென்னைக்குத் திரும்பி, அஜய் தேசாய், மோகன் ராஜ், சந்தானராமன் ஆகியோரின் அறிக்கையைப் படித்தேன். அதோடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பல வல்லுநர்களிடம் கலந்து பேசிய பிறகு, ரிவால்டோவை காட்டில் விடுவிக்கலாம் என்றும் இதைப் பல மடங்கு எச்சரிக்கையோடு முன்னெடுக்கவும் முடிவெடுத்தேன்," என்கிறார்.

அரசுக்கு, ரிவால்டோவை மீண்டும் காட்டில் விடுவிக்கும் முடிவு குறித்த தனது அறிக்கையைச் சமர்பித்தார் முனைவர்.ஷேகர் குமார் நீரஜ். முடிவை எடுத்தாகிவிட்டது. ஆனால், இனி தான், இதில் மிகப்பெரிய சவாலே காத்திருந்தது.

ரிவால்டோ ஆபரேஷன் எப்படி நடந்தது?

ஏற்கெனவே சுமார் 75-80 நாட்களாக க்ராலில் இருந்துவிட்டான், பாகன்களால் ஓரளவுக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தான். இதையெல்லாம் தாண்டி அவனை காட்டிற்குள் மீண்டும் விடுவித்தாலும், ஊருக்குள் வராமல் இருக்க வேண்டும், மக்களின் பொருட்களுக்குச் சேதம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்.

இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து இன்று ரிவால்டோ வெற்றிகரமாக காட்டில் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். காட்டுயிர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆபரேஷன் எப்படி நடந்தது?

ரிவாரிவால்டோவை விடுவிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் காட்டில், அவனுக்கு மிகவும் பிடித்த தாவர வகைகள் அதிகமாகக் காணப்பட வேண்டும். க்ரால் இருக்குமிடத்தில் இருந்து தொலைவில் இருக்க வேண்டும். தண்ணீர் இருப்பு, அவன் தன்னைக் குளிர்வித்துக் கொள்வதற்கு ஏற்ற நீர்நிலைகள் ஆகியவை இருக்க வேண்டும்.

அவனை விடுவிக்கும் காடு, அவனுடைய இருக்கும் வாழைத்தோட்டம் பகுதியைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியிலிருந்து துண்டாக்கப்படாத தொடர்ச்சியுள்ள நிலப்பகுதியாக இருக்க வேண்டும். அருகில் மனிதக் குடியிருப்புகள் இருக்கக்கூடாது. ரிவால்டோவை விடுவிக்கும் பகுதியில் வேறு ஆண் யானைகள் இருந்துவிட்டால், அது இரண்டுக்குமான வாழ்விட மோதலுக்கு வழிவகுக்கலாம், அதையும் கவனிக்க வேண்டும்.

இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து இறுதியில், வாழைத்தோட்டத்திலுள்ள க்ராலில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவிலிருந்த சிக்காலா என்ற காட்டுப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

ரிவால்டோ யானை

பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM

இதற்கிடையே, மனிதர்கள் வழங்கும் உணவைச் சாப்பிட்டுப் பழகியிருந்த ரிவால்டோவை அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டும் இயற்கையான காட்டு உணவுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்காக, சீரான அளவில் சிறிது சிறிதாக, 90% மனிதர்கள் வழங்கும் உணவு மற்றும் 10% இயற்கை உணவு என்ற விகிதத்தில் இருந்த அவனுடைய உணவுமுறையிலிருந்து, 10% மனிதர்கள் வழங்கும் உணவு மற்றும் 90% இயற்கை உணவு என்ற அளவிலான உணவுமுறைக்குப் பழக்கப்படுத்தப்பட்டான்.

அவனுடைய ரத்தம், சிறுநீர், டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, நோய்த்தொற்றுகள் போன்றவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதி கொண்ட ரேடியோ காலர், வயர்லெஸ் தொடர்புச் சாதனங்கள் ஆகியவை ரிவால்டோவுக்காக தயாராகின.

ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று அதிகாலை 3 மணியளவில் ரிவால்டோவை விடுவிக்கும் பணி தொடங்கியது. 25 முதல் 30 பேர் வரையிலான காட்டுயிர் வல்லுநர்கள், காட்டுயிர் மருத்துவர்கள் அடங்கிய குழு மற்றும் கூடுதலாகச் சுமார் 100 வனத்துறை பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து ரிவால்டோவை அவனுடைய இல்லத்திற்கு அனுப்பும் பணியைத் தொடங்கினார்கள்.

ஆனால், ஒரு தடங்கல். யானையை ஏற்றிச் செல்லும் லாரியில் ஏறுவதற்கு அவன் மறுத்துவிட்டான்.

திரும்பி வந்த ரிவால்டோ

சுமார் நான்கு மணிநேரப் போராட்டத்தில், மிகக் குறைந்த அளவில் ஜைலஸீன்(300mg) என்ற மயக்க மருந்து கொடுத்த பிறகு, மெல்ல மெல்ல ரிவால்டோ லாரிக்குள் ஏறினான். ரிவால்டோவின் காட்டை நோக்கிய பயணம் அதிகாலை 6:30 மணியளவில் தொடங்கியது. 25 கி.மீட்டருக்கு மிகாமல் மிதமான வேகத்தில் தனக்கான விடியலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான்.

அவனை விடுவிக்க வேண்டிய காட்டுப் பகுதியை அடையும்போது மணி 9 இருக்கும். அங்கு ஒன்றரை மனிநேர முயற்சிக்குப் பிறகு, லாரியிலிருந்து இறங்கி, சிறிது நேரம் நின்றுவிட்டு, மெல்ல நடைபோட்டு காட்டுக்குள் சென்றான்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

ரிவால்டோவை சிறிது தூரம் இடைவெளி விட்டு, டிரோன் கேமரா பின் தொடர்ந்தது. அதற்கும் பின்னால், களத்தின் முன்னணியிலிருந்த முனைவர் ஷேகர் குமார் நீரஜ் உட்பட மூன்று பேர் கொண்ட குழுவும் அவர்களுக்குப் பின்னால் 15 பேர் கொண்ட மற்றொரு குழுவும் பின்தொடர்ந்தனர். காட்டுக்குள் செல்லச் செல்ல கண் பார்வையிலிருந்தும் டிரோன் கேமராவிடமிருந்தும் ரிவால்டோ மறைந்தான்.

இப்போது, அவன் கழுத்தில் மாட்டியிருந்த ரேடியோ காலரின் உதவியோடு, செயற்கைக்கோள் மூலம் அவன் பயணிக்கும் பாதையைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஆனால், நீரஜ் உட்பட அந்தக் குழுவிலிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்த ஒரு விஷயம் அன்று மாலை நடந்தது.

ரிவால்டோ, அவனுடைய வலசைப் பாதையைப் பின்பற்றி மீண்டும் தெப்பக்காடு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். சிக்காலாவிலிருந்து மசினகுடி, தெப்பக்காடு என்று வந்துகொண்டிருந்தவன், அடுத்த நாள் காலை சுமார் 9 மணியளவில் வாழைத்தோட்டம் காட்டுப்பகுதிக்கே திரும்பிவிட்டான்.

எங்கிருந்து 40 கிமீ தொலைவு கடந்து விடுவிக்கப்பட்டானோ, அதே இடத்திற்கு அடுத்த 24 மணிநேரத்திற்குள் திரும்பி வந்துவிட்டான் ரிவால்டோ.

உடனடியாக, அதிகாரிகள் ஊர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். கிராமத்தைச் சுற்றி வனத்துறையினர் கண்காணிப்பு தொடங்கியது. மூன்று கும்கிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஊர் மக்களிடையே அவனுக்கு உணவு கொடுப்பதைப் போன்ற நடவடிக்கைகளைச் செய்ய வேண்டாமென்று வலியுறுத்தப்பட்டது. காட்டுக்குள்ளிருந்து ஊருக்குள் வருவதற்கு இருந்த அனைத்து வழித்தடங்களும் வனத்துறையால் மறிக்கப்பட்டன. மரபு முறையில் பயன்படுத்தப்படும் மிளகாய் வேலிகள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், ரிவால்டோ ஊருக்குள் வரவில்லை. மசினகுடி பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்குள்ளாக உலவிக் கொண்டிருந்தான். அவன் மீதான வனத்துறையின் கண்காணிப்பு தொடர்ந்தது. "அடுத்த 15 நாட்களில் அவன் மேலும் இரண்டு ஆண் யானைகளோடு நட்பு பாராட்டி, மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அவன் முகாமில் இருந்தபோதும் கூட வேறு இரண்டு ஆண் காட்டு யானைகள், வந்து ரிவால்டோவை சந்தித்துவிட்டுச் செல்லும். இப்போது காட்டுக்குள்ளும் புதிய நண்பர்களோடு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அவன் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

முத்தமிட்ட ரிவால்டோ

ரிவால்டோ தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டான். செப்டம்பர், அக்டோபர் என்று அமைதியான நாட்கள் தொடர்ந்தன. சத்தியமங்கலம், முதுமலை, பந்திப்பூர் என்று ரிவால்டோவின் மகிழ்ச்சியான பயணங்களும் தொடர்ந்தன," என்கிறார் நீரஜ்.

இதற்கிடையே, ரிவால்டோ மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்துவிட்டதைக் குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் ரிவால்டோவை மீண்டும் காட்டுக்குள் செல்ல வற்புறுத்தக் கூடாது என்றும் அவனை எம்.ஆர் பாளையம் முகாமில் இருக்கும் 6 பெண் யானைகளோடு கொண்டு போய் வைக்க வேண்டும் என்றும் கோரி முரளிதரன் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்படுகிறது. ஆனால், அவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரிவால்டோ தனது வாழ்க்கைப் பாதையில் சுதந்திரமாகப் பயணித்துக் கொண்டிருந்தான்.

"ஒவ்வொரு யானைக்கும் யானை மந்தைக்கும் அற்றுக்கான வாழ்விடப் பகுதிகள் மற்றும் வலசைப் பாதைகள் இருக்கும். வடகிழக்குப் பருவமழையின்போது மழை பெய்யும் பகுதியில் புதிதாக வளரும் தாவரங்களைச் சாப்பிடப் பயணிக்கும். மீண்டும் அந்தப் பருவம் முடிந்தும் தனது பயணத்தை யானைகள் மீண்டும் தொடங்கும்.

இதில், மரபணுப்பன்மை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக யானை மந்தையிலிருந்து 12 வயது ஆனதும் விரட்டப்படும் ஆண் யானைகள் தனியாக உலவுவதால், ஓப்பீட்டளவில் அவற்றுக்கான இந்தப் பயணப் பரப்பு குறைவாக இருக்கும். ஆகவே, வாழைத்தோட்டத்தில் இருக்கும் ரிவால்டோ, ஆண்டு முழுக்க அங்கேயே தான் இருப்பான். ஓராண்டில் மதநீர் வடியக்கூடிய மூன்று மாதங்களுக்கு மட்டும், இனப்பெருக்கத்திற்காக பந்திப்பூர் வரை செல்கிறான். அங்கிருந்து வயநாடு சென்று பிறகு மீண்டும் முதுமலைக்கு வந்துவிடுவான். இந்தக் காலகட்டத்தில் மட்டும் மந்தைகளோடு சேர்ந்து, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது வழக்கம்.

 

ரிவால்டோ யானை

பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM

இப்போது அவனை விடுவித்த பிறகு, வழக்கமாகச் செல்வதைப் போல் இந்த முறை பந்திப்பூர், வயநாடு என்று தனது பயணத்தைத் தொடங்கினான்," என்கிறார் பேரா.த.முருகவேள்.

மேலும், "ரிவால்டோ தனது இயற்கையான, இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டான் என்பதற்கு இதுவே சான்று. இதைத் தேவையின்றி, பிரச்னை என்பதன் அடிப்படையில் பிடித்து, முகாமில் அடைத்து வைத்து, பழக்கப்படுத்தப் பார்த்தது தவறு. இதில் நீதிமன்றமும் சரியான அதிகாரிகளும் தலையிட்டதால், அவனுடைய சுதந்திரம் அவனுக்குக் கிடைத்தது," என்கிறார்.

இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் முரளிதரன் என்பவர் தொடுத்த வழக்கு ஜூலை 1ஆம் தேதியன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி," பலரும் எப்படி தங்களுடைய உடலில் குறைபாடுகள் இருந்தாலும் அதைக் கடந்து இயல்பாக வாழ்கிறார்களோ, அதேபோல அந்த யானையும் அதன் உடலிலுள்ள குறைபாட்டோடு தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு தான் மீண்டும் காட்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுவிக்கப்பட்ட ஓராண்டில் குறிப்பிட்ட யானை உணவருந்தவோ சுவாசிக்கவோ சிரமப்படுவதாகக் கூறுவதற்கு மனுதாரர் கூறுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை," என்று குறிப்பிட்டு மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

ரிவால்டோ காட்டில் விடுவிக்கப்பட்டது குறித்துப் பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, "யானை சுதந்திரமாகக் காட்டில் வாழும்போது, யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். உதாரணமாக, ரிவால்டோ ஆண் யானை. அவன் மூலமாக இனப்பெருக்கம் நடக்கும்போது, அது யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

முகாமில் அடைத்து வைத்து ஒரு காட்டுயிரின் தன்னம்பிக்கையை உடைக்கும்போது, நாம் இயற்கையின் முக்கியமான வளத்தை இழக்கிறோம். ஒவ்வொரு யானையும் மிக மிக முக்கியம். ஆகவே அவற்றை சிறை போன்ற சூழலில் வைப்பதை விடவும் காட்டில் வாழ விடுவதே சரி. அதோடு, காட்டுயிர் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அதில் நிலைத்தன்மையோடு செயல்படுவது முக்கியம். ஒரு யானையைப் பிடித்து முகாமில் வைக்கும்போது, அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும். ரிவால்டோ ஆபரேஷனை போல் நன்கு திட்டமிட்டு காட்டில் விடும்போது, அதைக் கண்காணிக்க, உடல்நிலை கோளாறு எனில் சிகிச்சையளிக்க மட்டுமே செலவாகும்," என்று கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

ரிவால்டோ சிக்காலா காட்டில் விடுவிக்கப்பட்ட தருணத்தைப் பற்றிப் பேசிய முனைவர் ஷேகர் குமார் நீரஜ், "அவன் லாரியிலிருந்து வெளியே இறங்குவதற்குச் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆனது. ஆரம்பத்தில் வெளியேறத் தயங்கினான்."

"ஆனால், அவன் துணிந்து லாரியிலிருந்து இறங்கி காட்டு நிலத்தில் அடியெடுத்து வைத்தவுடன், தனது தும்பிக்கையால் மண்ணைக் கிளறி தனது உடலின் மீது வாரியிரைத்துக் கொண்டு, காட்டுக்குள் நடக்கத் தொடங்கினான். இது காட்டு யானைகளுக்கே உரிய தனித்துவமான பழக்கம். பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் இப்படிச் செய்யாது. அந்த நிமிடமே காட்டில் வாழும் தனது உள்ளுணர்வை அவன் இழக்கவில்லை என்பதை உணர்ந்தோம்," என்று கூறினார்.

காட்டு யானை அதன் தும்பிக்கையால் நிலத்திலிருந்து மண்ணை எடுத்து தன் மீது இரைத்துக் கொள்வது, தனது தாய்நிலத்திற்கு அது கொடுக்கும் முத்தத்தைப் போன்றது. ரிவால்டோ கொடுத்த அந்த முத்தம் மூலமாக, காட்டை அடைவதற்கான அந்த நெடும்பயணத்தில் அவன் தனது இலக்கை அடைந்துவிட்டதை உணர்த்தியுள்ளான்.

https://www.bbc.com/tamil/india-62495707

  • கருத்துக்கள உறவுகள்

யானைகளும் அவற்றின் பழக்க வழக்கங்களும் தனித்துவமானவை.......!  👍

நன்றி ஏராளன் .....!   

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

யானைகளும் அவற்றின் பழக்க வழக்கங்களும் தனித்துவமானவை.......!  👍

நன்றி ஏராளன் .....!   

மட்டக்களப்பில 1000ற்கும் மேல மேஞ்சு  திரியுது 

ஆனால் தாக்குதல் தொடருது 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில 1000ற்கும் மேல மேஞ்சு  திரியுது 

ஆனால் தாக்குதல் தொடருது 

என்ன .......மட்டகளப்பில மட்டும் 1000 யானைகள் திரியுதா......நீங்கள் எல்லோரும் கோடீஸ்வரன்கள் தனி ......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

என்ன .......மட்டகளப்பில மட்டும் 1000 யானைகள் திரியுதா......நீங்கள் எல்லோரும் கோடீஸ்வரன்கள் தனி ......!   😁

அண்மையில் நண்பனின் வேளாண்மை செய்கைகுள் வர எத்தனித்த போது வெடி கொழுத்தியதில் விரல் வரை சேதம் அடைந்து விட்டது வெடி கையில் வெடித்து விட்டது 

ஆயிரத்துக்கும் மேல சொன்னான் நான் நம்ம வில்லை அதன் பிற வன இலாகா அதிகாரி வீடியோ இணைத்த பிறகே அறிந்தேன் இத்தனை யானைகளா என

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அண்மையில் நண்பனின் வேளாண்மை செய்கைகுள் வர எத்தனித்த போது வெடி கொழுத்தியதில் விரல் வரை சேதம் அடைந்து விட்டது வெடி கையில் வெடித்து விட்டது 

ஆயிரத்துக்கும் மேல சொன்னான் நான் நம்ம வில்லை அதன் பிற வன இலாகா அதிகாரி வீடியோ இணைத்த பிறகே அறிந்தேன் இத்தனை யானைகளா என

நீங்கள் சும்மா சொல்லுறியள்.....உந்த சீனவெடிக்கு யானையின் விரலாவது சேதமடைகிறதாவது ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நீங்கள் சும்மா சொல்லுறியள்.....உந்த சீனவெடிக்கு யானையின் விரலாவது சேதமடைகிறதாவது ......!  😂

சேதமானது நண்பனின் விரல் சீன வெடியை நம்புனது நம்ம பிழைதான் 😋

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சேதமானது நண்பனின் விரல் சீன வெடியை நம்புனது நம்ம பிழைதான் 😋

ஒரு சீனவெடி கொளுத்தத் தெரியாதவர்களையெல்லாம் நண்பனாய் வைத்துக் கொண்டு .......கேட்க எனக்கே அவமானமாய் இருக்கு தனி.......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

ஒரு சீனவெடி கொளுத்தத் தெரியாதவர்களையெல்லாம் நண்பனாய் வைத்துக் கொண்டு .......கேட்க எனக்கே அவமானமாய் இருக்கு தனி.......!  😢

அவங்க பொருள் டூப்ளிகேட் என தெரிந்தும் அவசரத்தில திரி கரைஞ்சு இருந்தத கவனிக்கலயாம் இருட்டாக இருந்ததால

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவங்க பொருள் டூப்ளிகேட் என தெரிந்தும் அவசரத்தில திரி கரைஞ்சு இருந்தத கவனிக்கலயாம் இருட்டாக இருந்ததால

உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தனி......நண்பனை காப்பாத்த நிறைய பாடுபடுறீங்கள்......இப்ப அவர் நலமா......!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யானை வெறும் ஒரு உயிர் அல்ல.பல லட்ச உயிர்களுக்கான சூழலை உருவாக்கும் பேருயிர்... 🐘

Bild

Bild

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தனி......நண்பனை காப்பாத்த நிறைய பாடுபடுறீங்கள்......இப்ப அவர் நலமா......!  

நலம் 

என்னுடன் நன்றாக பழகியவர்களை எக்காரணம் வந்தாலும் விட்டுக்கொடுக்கமாட்டேன் உங்களையும்தான் அந்த வடையும் சம்பலும் ஞாபகம் இருக்கா நீலாம்பரி உணவகம் யாழில்😍😍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.