Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் கொண்டாடச் சென்ற 132 தமிழ் விவசாயிகளைப் படுகொலை செய்துவிட்டு பயங்கரவாதிகளை வேட்டையாடினோம் என்று பெருமை பேசிய லலித் அதுலத் முதலி

 

பரந்துபட்ட கைதுகள், சித்திரவதைகள் போன்றவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய கோபத்தினை விடவும் கிழக்கு மாகாணத்தில் சரித்திரகாலம் தொட்டு தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த பகுதிகளில் இருந்து அவர்களை பலவந்தமாக வெளியேற்ற அரச படைகள் மேற்கொண்ட திட்டமிட்ட படுகொலைகளும், தாயக அழிப்பும் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியிருந்தன. 1985 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி தமிழ் மக்கள் மீது அரச படைகள் கட்டவிழ்த்த படுகொலையினை "பயங்கரவாதிகளை அழித்தோம்" என்று அரசு மார்தட்டிக்கொண்டபோது தமிழ் மக்கள் கடுமையாக‌ வேதனையடைந்தார்கள்.

தை மாதம் 15 ஆம் திகதி தேசிய பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலி வெளியிட்ட அறிக்கையில் சிங்களக் குடியேற்றக்கிராமங்களைத் தாக்குவதற்காக அணிவகுத்துச் சென்ற 52 பயங்கரவாதிகளை தமது இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கிக் கொன்றுவிட்டதாகப் பெருமையுடன் பேசியிருந்தார். இத்தாக்குதலில் விமானப்படை ஆற்றிய பங்கையும் அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார். தேசிய ஊடகங்கள் லலித் அதுலத் முதலியின் அறிக்கையினை மிகுந்த எழுச்சியுடன் பிரச்சாரப்படுத்தி இலங்கை விமானப்படையினரின் மிகப்பெரிய வெற்றி என்றும் புகழ்ந்திருந்தன. இத்தாக்குதலினால் சிங்களவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்கள் என்றால் அது மிகையில்லை.

  ஆனால் நடந்ததோ அரசாங்கம் அறிவித்தமைக்கு நேர் எதிரானது. தை மாதத்தின் 14 ஆம் திகதியினை தமிழ் விவசாயப் பெருமக்கள் தமக்கு சக்தியைத் தரும் சூரியனுக்கு நன்றிகூறும் நாளாகப் பாவித்துக் கொண்டாடுவது வழமை. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரசியினைக் கொண்டு அவர்கள் பொங்கல் பொங்குவார்கள். அதற்கு மறுநாளான தை 15 ஆம் திகதியை விவசாயத்தில் தமக்கு உறுதுணையாகவிருந்து எருவையும், வயல்களை உழவும், சூடடிக்கவும் உதவிபுரியும் காளைகளுக்கு நன்றிசெலுத்தும் நாளாகக் கொண்டு மாட்டுப்பொங்கலைக் கொண்டாடுவார்கள்.

1984 ஆம் ஆண்டு நத்தார் தினத்திற்கு முதல்நாள் புராதன தமிழ்க் கிராமங்களான கொக்கிளாய், நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாற்றுக்கேணி, செம்மலை, குமுழமுனை, அலம்பில் ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இராணுவத்தால் அடித்து விரட்டப்பட்டு முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்திலும், வற்றாப்பளை அம்மண் ஆலயத்திலும், வித்தியானந்தாக் கல்லூரியிலும், வற்றாப்பளை ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் அகதிகளாகத் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் அகதிகளில் ஒரு பகுதியினர் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்கு முன்னர் தாம் விதைத்திருந்த வயல்களில் அறுவடை செய்து பொங்கல் விழாவை தமது வீடுகளில் கொண்டாடுவதென்று  1985 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதி முடிவெடுத்தார்கள். 

அதன்படி இக்குடும்பங்கள் சிறிய சிறிய குழுக்களாகப் பிரிந்து தமது கிராமங்கள் நோக்கிப் பயணித்தார்கள். அகதிமுகாம்களைப் பராமரித்த அதிகாரிகளும், தொண்டர் அமைப்புக்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் இவர்களைத் தடுத்தபோதும், அதனைச் சட்டை செய்யாது அவர்கள் தம்வழியே தமது கிராமங்கள் நோக்கிப் பயணித்தார்கள்.

தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கிராமங்களுக்கு அவர்கள் மீளவும் வருவதைத் தடுக்கும் முகமாக கிராம எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவக் காப்பரண்களில் இருந்த இராணுவத்தினர் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை அவதானித்திருக்கிறார்கள். இதனை புதிதாக அமைக்கப்பட்டிருந்த வெலி ஓயாக் கட்டளைப் பணியகத்திற்கு தெரிவித்து மேலதிகமாக இராணுவத்தினரை அப்பகுதிக்கு அனுப்புமாறு கூறியதுடன், விமானப்படைக்கும் அறியத் தந்தார்கள். இதனையடுத்து மிகவும் தாள்வாகப் பறந்த உலகுவானூர்திகளில் இருந்து விமானப்படையினர் அப்பாவி விவசாயிகள் மீது குண்டு மாரி பொழிய, தரையூடாக மூன்னேறி வந்த இராணுவத்தினர் மீதமிருந்தோரைச் சுட்டுக் கொன்றார்கள்.

பொதுமக்கள் மீதான அப்பட்டமான இப்படுகொலையினை "52 பயங்கராவதிகளைக் கொன்றுவிட்டோம்" என்று லலித் அதுலத் முதலி வர்ணித்திருந்தார். ஆனால் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி விவசாயிகளின் எண்ணிக்கை 52 ஐக் காட்டிலும் மிகவும் அதிகமானது. இத்தாக்குதலின் பின்னர் அகதிகள் முகாமில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது 132 தமிழ் மக்கள் காணாமற்போயிருப்பது தெரியவந்திருந்தது. இவர்களுள் 37 பேர் பெண்கள். இக்கணக்கெடுப்பினூடாக காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெயர்களும் வயதுகளும் பட்டியலிடப்பட்டன. அப்படிக் காணாமற்போனவர்களில் ஒருவர் பெயர் முத்துலிங்கம். 12 வயதே நிரம்பிய அவர் தனது பெற்றோருக்கு அறுவடையில் உதவுவதற்காக அவர்களுடன் சென்றிருந்தார்.

லலித் அதுலத் முதலியினால் பெருமையுடன் உரிமை கோரப்பட்ட பயங்கரவாதிகளின் மரணங்கள் என்பது உண்மையிலேயே அப்பாவி விவசாயிகளின் படுகொலைதான் என்று அவரிடம் பல செய்தியாளர்கள் எடுத்துக்கூறினர். அதன்பின்னர் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்ட "பயங்கரவாதிகள்" எனும் சொல்லினை நீக்கிவிட்டு "பிரிவினைவாதிகள்" என்று மாற்றுவதற்கு அவர் இணங்கினார். "அப்பகுதி தமிழ் மக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும், அப்பகுதிக்குள் பிரவேசிக்கும் எவரையும் பயங்கரவாதிகள் என்று கருதி நாம் சுட்டுக் கொல்வோம், அவர்கள் தேவையற்ற இடத்தில் தேவையற்ற நேரத்தில் சென்றதற்காகவே கொல்லப்பட்டார்கள்" என்று அப்பாவிகளின் படுகொலையினை நியாயப்படுத்தினார் லலித். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ மற்றும் தமிழ்ப் பத்திரிக்கைகள் அரசால் நடத்தப்பட்ட இப்படுகொலையினை முழுவதுமாக செய்தியாக்கி வெளிக்கொண்டுவந்திருந்தார்கள்.

 

 

  • Replies 630
  • Views 58.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1947 இல் சுதந்திரம் அடைந்தபின்னர் இலங்கையில் தமிழர்கள் இருவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தந்தை செல்வா எச்சரித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய தந்தை செல்வா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    பிரஜாவுரிமைப் பிரச்சினை தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது பழிவாங்கற்தாக்குதல்களை நடத்திய அரச படைகள்

சிங்களப் பொதுமக்கள் மீது புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதலான அநுராதபுரத் தாக்குதலுக்குப் பழிவாங்கலாக அரசாங்கம் மேலும் பல படுகொலைகளை நடத்தியிருந்தது. அநுராதபுரம் மீதான புலிகளின் தாக்குதல் நடைபெற்று அடுத்து வந்த மூன்று தினங்களில் தமிழர் தாயகத்தில் பல படுகொலைகளை அரசு நடத்தியது. அவற்றுள் முதலாவது 48 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட குமுதினிப் படகுப் படுகொலை. வைகாசி 15 ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குமுதினிப் படகில் பயணம் செய்த பெரும்பாலான தமிழ் மக்களை கடலில் இடைமறித்த கடற்படை, வாட்களாலும், கோடரிகளாலும் வெட்டிக் கொன்றது. குமுதினிப் படுகொலை நடத்தப்பட்டு இருநாட்களின் பின்னர் கிழக்கின் நற்பிட்டிமுனையில் 42 தமிழ்ப் பொதுமக்களை விசேட அதிரடிப்படை படுகொலை செய்தது.

நற்பிட்டிமுனைப் படுகொலைகள் குறித்த தமது அதிருப்தியினை இந்திய அதிகாரிகள் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கியநாடுகள் மனிதவுரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் எழுப்பியிருந்தனர். இக்கூட்டத்தொடரின் முடிவில் இப்படுகொலை குறித்து ஆராய விசேட பிரதிநிதியாக பாக்ரே வாலி நிடியே எனும் அதிகாரியை ஆணையம் நியமித்தது. இலங்கைக்கான தனது பயணத்தின் நிறைவில் இதுபற்றிய அறிக்கை ஒன்றினை அவர் தந்திருந்தார்.

1985 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி கல்லடி விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து நற்பிட்டிமுனை நோக்கி ரோந்துசென்ற விசேட அதிரடிப்படையினர், அப்பகுதியில் இருந்து 23 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து முகாமிற்கு இழுத்துச் சென்றபின்னர், அவர்களுக்கான புதைகுழிகளை வெட்டுமாறு பணித்தனர். குழிகள் வெட்டி முடிக்கப்பட்டதும் அவற்றினருகில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு தகவல் தந்தார் என்கிற காரணத்திற்காக கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவர் போல் நல்லநாயகம் கைதுசெய்யப்பட்டு, அரசிற்கும், இராணுவத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் முகமாக பொய்வதந்திகளை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்குகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். 1986 ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் போல் நல்லநாயகம் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது படுகொலை செய்யப்பட்ட 23 இளைஞர்களினதும் விபரங்கள் வெளிப்படையாகவே பலராலும் சாட்சியமாக வழங்கப்பட்ட போதிலும் நீதித்துறையோ, அரசோ அதனைச் சட்டை செய்யவுமில்லை, குற்றவாளிகளைத் தண்டிக்கவுமில்லை. ஆனால் 1986 ஆம் ஆண்டு ஆடி 17 ஆம் திகதி அனைத்துக் குற்றச்சட்டுக்களிலிருந்தும் போல் நல்லநாயகத்தை அரசு விடுதலை செய்திருந்தது. இதன்படி படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்பதும், காணமலாக்கப்பட்டவர்களை விசேட அதிரடிப்படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை என்பதே அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிரடிப்படையினரால இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் போதுமானளவு இருந்தபோதும், கல்லடி இராணுவ முகாமிற்குள் அவர்கள் கொண்டுசெல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சியங்கள் இருந்தபோதும் இன்றுவரை அவர்களது காணாமற்போதலினை விசாரிக்கவோ அல்லது பொறுப்பானவர்களைத் தண்டிக்கவோ காவற்றுரை மறுத்தே வருகின்றது என்பது குறிப்ப்டத் தக்கது.

குமுதினிப் படகுப் படுகொலையினையும் அரசு விசாரிக்க முன்வரவில்லை. அநுராதபுரத் தாக்குதலையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம், விமானப்படை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ஊர்காவற்படை ஆகியன‌ தமிழ் மக்கள் மீது அடுத்தடுத்து பல படுகொலைகளை அரங்கேற்றியிருந்த போதிலும் இவற்றுள் எவையும் இன்றுவரை விசாரிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. 

அதிகார பலத்தின் அகங்காரம் எனும் நூலினை எழுதிய ராஜன் ஹூல், இக்காலப்பகுதியில் அரச படைகளால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளை திகதிவாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார். திருகோணமலை மாவட்டத்தில் அரசால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து தனக்கு அறிக்கையொன்றினைத் தருமாறு இந்தியப் பிரதமர் ரஜீவ், அம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையிடம் கோரியிருந்தார். அவ்வாறு அவரால் சேகரிக்கப்பட்ட விடயங்களை அவரது சகோதரர் பாக்கியத்துரை ஊடாக ராஜன் ஹூல் பெற்றுக்கொண்டே தனது புத்தகத்தில் இவற்றினைப் பட்டியலிட்டிருந்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் மீதான பழிவாங்கும் தாக்குதல்களை வைகாசி 23 ஆம் திகதி இராணுவம் ஆரம்பித்தது. அன்று இராணுவத்தினரால் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரின் புதல்வன் கங்காதரன் உட்பட எண்மர் படுகொலை செய்யப்பட்டனர். கங்காதரன் கொல்லப்பட்ட நிகழ்வை அவரது துணைவியார் சரஸ்வதி, ஏ.எப்.பி செய்தியாளரிடம் பின்வருமாறு தெரிவித்திருந்தார். 

"எமது கேட்டிற்கு இருவர் வந்திருந்தனர். ஒருவர் சீருடை அணிந்திருந்தார். அவர் ஒரு இராணுவ வீரனாக இருக்கலாம் என்று அனுமானித்தேன். அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது, சீருடை தரித்த இராணுவத்தினன் எனது கணவரின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து அழுத்திச் சுட்டார். எனது கணவர் அவ்விடத்திலேயே மல்லாந்து பின்புறமாக‌ விழுந்தார். பின்னர் அந்த இராணுவத்தினன் என்னை நோக்கி  துப்பாக்கியை திருப்பவும், நான் எனது இரு குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினேன்" என்று கூறினார். 

கங்காதரன் செய்த ஒரே தவறு அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு ஆதரவு அளித்ததுதான். ஏனைய ஏழு தமிழர்களும் அவர்களது வீடுகளுக்குள் நுழைந்த இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். இப்படுகொலைகளின் ஒரே நோக்கம் உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமான நிலாவெளியில் இருந்து தமிழர்களை அடியோடு அடித்து விரட்டுவதுதான். 

மறுநாள், வைகாசி 24 ஆம் திகதி திருகோணமலை நகரின் மேற்கில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமமான பன்குளத்தில் ஒன்பது தமிழர்களை விமானப்படையினர் சுட்டுக் கொன்றனர். முதியவரான தாமோதரம்பிள்ளை, அவரது துணைவியார் பரமேஸ்வரி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், 65 வயதுடைய அபிராமி பாண்டியையா, வள்ளி மாரிமுத்து மற்றும் 2 வயது நிரம்பிய பாலகன் ஜெயபாலன் ஆகியோரும் அன்று கொல்லப்பட்டவர்களுள் அடங்கும்.  

அரசாங்கத்தின் புதிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த சிங்கள ஊர்காவற்படையினரும் அன்றைய நாளில் படுகொலைகளில் ஈடுபட்டனர். மூதூர்ப் பகுதியின் கொட்டியார் குடா பகுதியில் நுழைந்த சிங்கள ஊர்காவற்படையினர் தமிழர்கள் மீது தாக்குதலில் இறங்கினர். மேலும் கங்குவெளியில் இருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய தெகிவத்தைச் சந்திக்குச் சென்ற இரு தமிழர்களைக் கொன்ற அவர்கள் அவர்களின் உடல்களை அடையாளம் தெரியாது எரியூட்டினர்.

மறுநாளான வைகாசி 25 ஆம் திகதி, அல்லையில் அமைந்திருக்கும் லிங்கபுரத்திலிருந்து கங்குவெளிக்கு தமது உறவினர்களைக் கொண்டாட்டம் ஒன்றிற்காக அழைக்கச் சென்ற தகப்பன் ஒருவரும் அவரது 12 வயது மகனும் சிங்கள ஊர்காவற்படையினரால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டு கங்குவெளிக்குளத்திற்கருகில் புதைக்கப்பட்டனர். 

மறுநாளான வைகாசி 26 ஆம் திகதி மிகிந்தபுர இராணுவ முகாமில் இருந்து வெளியே வந்த சிங்கள ஊர்காவற்படையினர் தமிழர்களின் கிராமங்களான பூநகர் மற்றும் ஈச்சிலாம்பற்றை ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்து 40 வீடுகளைத் தீக்கிரையாக்கினர். ஆனால் கொழும்பில் செய்தி வெளியிட்ட அரசாங்கம், மிகிந்தபுரவில் சிங்களவர்களின் 40 வீடுகளைத் தமிழர்கள் எரித்துவிட்டதாகச் செய்தி பரப்பியிருந்தமை அரசாங்கத்தால் செய்திகள் எந்தளவு தூரத்திற்கு புனையப்பட்டு, திரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருந்தது. அதேநாள் அல்லையின் லிங்கபுரத்திலிருந்து காட்டிற்கு வேட்டைக்குச் சென்ற நான்கு தமிழர்களைக் கொன்ற ஊர்காவற்படையினர் அவர்களின் உடல்களை உருத்தெரியாது அழித்துவிட்டனர். அல்லை கந்தளாய் வீதியில் உலாவரும் ஊர்காவற்படையினரே இப்படுகொலைகளிச் செய்வதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டியபோதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நாள் மாலை மூதூரின் கூனித்தீவு ஏரியில் மூன்று தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

வைகாசி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மூதூர் வீதியூடாகப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியை மிகிந்தபுர பகுதியில் வழிமறித்த சிங்கள ஊர்காவற்படையினர், சாரதியான புஸ்ப்பராஜாவையும் இன்னும் ஏழு தமிழ்ப் பயணிகளையும் பஸ்ஸை விட்டுக் கீழிறங்குமாறு பணித்தனர். பஸ்ஸின் அருகில் வரிசையாக நிற்கவைக்கப்பட்ட அவர்களில் எழுவர் ஊர்காவற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட எட்டாமவரான கிருஷ்ணபிள்ளை காயத்துடன் உயிர்தப்பினார். கொல்லப்பட்ட அனைவரினதும் உடல்களும் வீதியில் குவிக்கப்பட்டு அவர்களால் எரியூட்டப்பட்டன.

ராஜன் ஹூலினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி மிகிந்தபுர மற்றும் தெகியத்தை ஆகிய திருகோணமலை மாவட்டத்தின் "அல்லை சிங்கள ஆக்கிரமிப்புப் பகுதி"யின் இரு குடியேற்றக் கிராமங்கள் மீதான போராளிகளின் தாக்குதல் நடைபெறும் நாள்வரைக்குமான எட்டு நாட்களில் மட்டும் 42 தமிழர்களை இராணுவத்தினரும், விமானப்படையினரும், ஊர்காவற்படையினரும் சேர்ந்து சுட்டும் வெட்டியும் கொன்றிருந்தனர். இவ்வாறு கொல்லப்பட்ட தமிழர்களில் பாதிப்பேர் சிங்கள ஊர்காவற்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர் என்பதுடன், தமிழர்களுக்குச் சொந்தமான பல வீடுகளும் இவர்களால் எரியூட்டப்பட்டிருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரஞ்சித் said:

எட்டு நாட்களில் மட்டும் 42 தமிழர்களை இராணுவத்தினரும், விமானப்படையினரும், ஊர்காவற்படையினரும் சேர்ந்து சுட்டும் வெட்டியும் கொன்றிருந்தனர். இவ்வாறு கொல்லப்பட்ட தமிழர்களில் பாதிப்பேர் சிங்கள ஊர்காவற்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர்

தமிழர்தேசம் என்பதைவிடத் சிங்களத்திற்கான தமிழினப் படுகொலைத் தேசமாகவே தமிழர்தாயகமெங்கனும் பதிவாகியுள்ளமை என்பது எவளவு இழப்பு, எவளவு துயரம். தங்கள் உறவுகளை இழந்தோரை, சந்ததிகளையோ இழந்தோரை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. குறிப்பாக தமிழர் தாயகத்தின் எல்லைக் கிராமங்களின் மக்களது நிலை இனியும் அச்சத்திற்குரியதே. ஆட்சித்தலைமை மாறும். ஆனால் கொலைப்படைகள் அப்படியே இருப்பவை. தண்டனைகள் வழங்காது பாதுகாக்கப்படும் தமிழினக் கொலைக்காக உருவாகிய சிங்களப்படைகளின் கீழ் தமிழினத்தின் அழிவு தொடர்கதையாகவே இருக்கிறது.  

ரஞ்சித் அவர்களே தங்களின் தொடர் முயற்சிக்குப் பாராட்டுகள் உரித்தாகுக.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரின் இறுதி அத்தியாயம் :  திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதியை தமிழினச் சுத்திகரிப்புச் செய்த இலங்கையரசு

தமிழ்ப் போராளிகளால் சிங்களவர்கள் (ஆயுதம் தரித்தவர்கள் உட்பட‌) மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலான மிகிந்தபுர -  தெகிவத்தை ஆகிய குடியேற்றக்கிராமங்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரசு புத்தக வடிவில் பட்டியலிட்டு வெளியிட்டிருந்தது. வைகாசி 30 ஆம் திகதி ஊ.கா.படையினர் மீது நடத்தப்பட்ட‌ இத்தாக்குதலை "5 சிங்கள அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று அது செய்தி வெளியிட்டிருந்தது. இத்தாக்குதலினை டெலோ அமைப்பு நடத்தியிருந்தது. தமிழ் மக்களைப் படுகொலை செய்தும் அவர்களின் வீடுகளை எரித்தும் அட்டூழியம் புரியும் ஊர்காவற்படையினருக்குத் தண்டனையாகவே இத்தாக்குதலை நடத்தியதாக டெலோ போராளிகள் சிங்களவரிடம் தெரிவித்திருந்தனர்.

ஐந்து சிங்கள ஊர்காவற்படையினர் மீதான டெலொ அமைப்பின் தாக்குதலினை அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும், குடியேற்றக் கிராமங்கள் மீதுமான தாக்குதலாகக் காண்பிப்பதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் மீதமாயிருக்கும் புராதன தமிழ்க் கீராமங்களில் இருந்து தமிழர்களை படுகொலை செய்தோ, அடித்து விரட்டியோ ஆக்கிரமிப்பதுதான் இலங்கையரசின் நோக்கமாக இருந்தது. தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவரான சம்பந்தன் 2002 இல் பாராளுமன்றத்தில் பேசும்போது பாரம்பரிய தமிழ் விவசாயக் கிராமமான கிளிவெட்டியில் ஜெயவர்த்தன காலத்து அரச பயங்கரவாதத்தின் கோரச் சுவடுகள் இன்றும் காணப்படுவதாகவும், மிகுந்த விளைச்சல் தரும் கிராமமான கிளிவெட்டியினை ஜெயவர்த்தனவின் அரசும் இராணுவமும்  இணைந்து சுடுகாடாக வெறும் 48 மணித்தியாலத்தில் மாற்றிவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீளவும் அவர்களின் வாழிடங்களுக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சம்பந்தன், அப்பகுதிகளுக்கான தனது அண்மைய பயணத்தின்பின்னரே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

"எரிந்து சாம்பலாகக் கிடக்கும் வீடுகள், நெற்களஞ்சியசாலைகளின் துருப்பிடித்த இரும்புச் சட்டங்கள், பால் சேகரிக்கும் நிலையத்தின் வெற்றுக் கூட்டுக் கட்டிடம் ஆகியன எமக்குக் கூறும் செய்தி என்னவெனில் ஒருகாலத்தில் இக்கிராமம் செல்வச் செழிப்புடன் வசதியாக இருந்திருக்கிறது என்பதையும், இன்றோ அது மனித நடமாட்டமில்லாத சுடுகாடாக ஜெயவர்த்தன அரச பயங்கரவாதத்தினால் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதும்தான்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 மட்டக்களப்பு - திருகோணமலை கடற்கரையோர நெடுஞ்சாலையில் , மட்டக்களப்பிலிருந்து வடக்காக 85 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் புராதனத் தமிழ்க் கிராமம்தான் கிளிவெட்டி. கிளிவெட்டிக்குத் தெற்காக நூறுவீதம் சிங்களக் குடியேற்றவாசிகளைக் கொண்ட அல்லைச் சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிளிவெட்டியில் வட மேற்குப் புறத்தில் இன்னும் இரு சிங்களக் குடியேற்றக் கிராமங்களான டெஹிவ‌த்தையும், நீலபொலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கிளிவெட்டிக் கிராமம் மீதான தாக்குதல் 1985 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதி ஆரம்பமானது. அருகிலிருக்கும் சிங்களக் கிராமமான சேருநுவர பகுதியில் இருந்து புறப்பட்ட பொலீஸாரும் ஊர்காவற்படையினரும் கிளிவெட்டியின் தெற்குக் கரையிலிருக்கும் தங்கநகர் ஊடாக கிராமத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான 50 வீடுகளைத் தீக்கிரையாக்கிய பொலீஸ் - ஊர்காவற்படை அணியினர் பெண்கள் உடபட 37 தமிழர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்றனர். முதலில் பொலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் பின்னர் கந்தளாயிற்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். பின்னர் அல்லை - கந்தளாய் வீதியில், மகாவலி ஆற்றின் மதவு கடந்து சாம்பல்ப்பிட்டியில் வாகன‌ங்களை நிறுத்தி, 36 தமிழர்களை அவ்விடத்திலேயே சுட்டுக் கொன்று உடல்களை வீதியில் வைத்து எரியூட்டினார்கள். சின்னவன் எனப்படும் இராசைய்யா சூட்டுக் காயங்களுடன் ஓடித் தப்பிக்கொண்டார். அருகிலிருந்த பற்றைக் காடுகளுக்குள் ஓடி ஒளித்துக்கொண்ட அவர் பின்னர் திருகோணமலையினை வந்தடைந்தார்.

அந்தநாள் இரவு கிளிவெட்டிக் கிராமத்தின் பெரும்பாலான தமிழர்கள் அச்சத்தினால் திருகோணமல நகருக்கு அருகில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமங்களான பச்சனூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார்கள். சில வயது முதிர்ந்தவர்கள் மட்டும் தம்மை சிங்களவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை என்கிற எண்ணத்தில் கிளிவெட்டியிலேயே இருக்க முடிவுசெய்தார்கள்.

ஆனால், அவர்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக ஆனி 1 ஆம் திகதி மீண்டும் கிளிவெட்டிக்குள் நுழைந்த பொலீஸாரும் ஊர்காவற்படையினரும் மீதாமக‌விருந்த முதியோர் அனைவரையும் சுட்டும் வெட்டியும் கொன்றார்கள்.அன்று தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்கள் டெலோ அமைப்பினரால் ஐந்து ஊர்காவற்படையினர் கொல்லப்பட்ட சிங்களக் குடியேற்றமான தெகிவத்தையைச் சேர்ந்தவர்கள்.  பிற்பகல் 2 மணிக்கு இராணுவமும், பொலீஸாரும், ஊர்காவற்படையினரும் இணைந்த கும்பல் கிளிவெட்டிக்குள் நுழைந்தது. தங்கத்துரையின் மாமனாரான மயில்வாகனம் கனகசபை கிளிவெட்டியை விட்டு வெளியேறிச் செல்லாது அங்கேயே தங்கிவிட்ட முதியவர்களில் ஒருவர். அன்று மர நிழலின் கீழிருந்து இன்னொரு முதியவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தொலைவில் ஆயுதம் தரித்த இராணுவத்தினரும், பொலீஸாரும், ஊர்காவற்படையினரும் பெருத்த ஆரவாரத்துடன் வருவதைக் கண்டிருக்கிறார். இக்கும்பலைக் கண்டதும் உடனடியாக ஓடிச்சென்று வைக்கல்க் குவியல் ஒன்றின்பின்னால் அவர் ஒளிந்துகொண்டார். ஆனால் அவரைக் கண்டுவிட்ட அக்கும்பல், அவரை வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்றது. மேலும் நான்கு வயது முதிர்ந்த பெண்கள் உட்பட ஒன்பது முதியவர்களை அக்கும்பல் கொன்றது. கொல்லப்பட்ட பெண்களின் பெயர்கள் வருமாறு : கமலா ராசைய்யா (முதல்நாள் இரவு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய ராசைய்யாவின் துணைவியார்) மற்றும் அவரது மகள், ராஜ ராஜேஸ்வரி அம்மாள்(கிளிவெட்டி சைவக் குருக்கள் சுப்பிரமணிய சர்மாவின் மனைவி) அவரது மகள் பிரசாந்தி.

அன்றும் 125 வீடுகளை இராணுவத்தினரும், பொலீஸாரும், ஊ.கா.படையினரும் எரியூட்டினர். கிளிவெட்டியில் மீதமாயிருந்த 3 முதிய தம்பதிகள் உட்பட 13 தமிழர்களை அவர்கள் இழுத்துச் சென்றனர். அவர்களுள் 5 இளவயது ஆண்களும், 3 இளம் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரையும் தெகிவத்தைக்கு அவர்கள் இழுத்துச் சென்றனர். ஆண்கள் அனைவரினதும் உடைகளைக் களைந்த அக்கும்பல் அவர்களைச் சுட்டுக் கொன்றது. ஒரு உடல் மரத்தில் நிர்வாணமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டது. மீதமாயிருந்த இளம்பெண்கள் மூவரையும் அக்கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திக் கொன்றது. 

அன்றைய நாட்களில் திருகோணமலையில் தங்கியிருந்த தங்கத்துரை லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் சைமன் விஞ்செஸ்ட்டருடன் கிளிவெட்டிப் படுகொலைகள் குறித்துப் பேசினார். லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை அறிக்கையினூடாக கிளிவெட்டிப் படுகொலைகள் சர்வதேசத்திற்குத் தெரியவேண்டி வந்தது. அதுலத் முதலி கிளிவெட்டிப் படுகொலைகள் குறித்த சர்வதேசச் செய்திகளை மறுத்தபோதிலும் அவரது மறுப்பை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கத்துரை பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார் என்று குற்றஞ்சுமத்தி அவரைக் கைதுசெய்துவிட‌ லலித் ஆயத்தமாகி வருகிறார் என்கிற செய்திகள் கசியத் தொடங்கியதும் தங்கத்துரை தமிழ்நாட்டிற்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார்.

மறுநாளான ஆனி 2 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியை 10 ஆவது மைல்க் கல்லிற்கு அருகாமையில் காத்திருந்த ஊ.கா.படையினர் மறித்தனர். மறிக்கப்பட்ட பஸ்ஸை அருகிலிருந்த காட்டிற்குள் அவர்கள் ஓட்டிச் சென்றனர். பெண்கள் உட்பட 13 தமிழ்ப் பயணிகளை அவர்கள் சுட்டுக் கொன்றனர். அடுத்துவந்த இருநாட்களான ஆனி 3 ஆம் 4 ஆம் திகதிகளில் கிளிவெட்டி மற்றும் மூதூர் ஆகிய கிராமங்களுக்கிடையில் வாழ்ந்துவந்த தமிழர்களை முற்றாக வெளியேற்றும் நோக்குடன் பாரிய இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று அரசால் முடுக்கிவிடப்பட்டது. இப்பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு குறைந்தது 35 தமிழர்களை இராணுவத்தினரும், ஊ.கா.படையினரும் கொன்று குவித்தனர். இத்தாக்குதலின்போது 200 தமிழர்கள் காணாமற் போயிருந்தனர் என்பதுடன் இன்றுவரை அவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்விரு தினங்களிலும் அரச படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அழித்தொழிப்பு நடவடிக்கை குறித்து தகவல்களைச் சேகரித்த சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களில் ஒன்று குறைந்தது  1,000 வீடுகளாவது இராணுவத்தாலும் ஊ.கா.படையினராலும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தது. மேலும் இங்கு வாழ்ந்துவந்த தமிழர்களில் 2500 பேர் மூதூரில் அடைக்கலம் தேடி ஒளிந்திருந்த நிலையில் இன்னும் 1,000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஓடி ஒளித்துக்கொண்டுள்ளதாக அது மேலும் தெரிவித்திருந்தது.

இந்த அழித்தொழிப்பு இராணுவ நடவடிக்கையினூடாக திருகோணமலை மாவட்டத்தில் வேறொடு பிடுங்கி எறியப்பட்ட தமிழ்க் கிராமங்களாவன‌, மேன்காமம், கங்குவெளி, பாலத்தடிச்சேனை, அரிப்பு, பூநகர், மல்லிகைத்தீவு, பெருவெளி, முன்னம்போடிவத்தை, மண‌ற்சேனை, பாரதிபுரம், லிங்கபுரம், ஈற்சிலம்பற்றை, கருக்கல்முனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, மற்றும் வாழைத்தோட்டாம் ஆகியனவாகும்.  

திருகோணமலை மாவட்டத்தில் வைகாசி 23 ஆம் திகதியிலிருந்து ஆனி 4 ஆம் திகதி வரை இலங்கை அரசால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்திவந்த ராஜன் ஜூல், குறைந்தது 145 தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கான சான்றுகள இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் 5 சிங்கள ஊ.கா. படையினரும் இக்காலப்பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் அரசு வெளியிட்ட பொதுமக்கள் படுகொலைகள் பட்டியலில் டெலோ அமைப்பினரால் கொல்லப்பட்ட ஐந்து ஊ.கா.படையினரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

கொல்லப்பட்ட தமிழர்கள அனைவரியும் அரசாங்கம் "பயங்கரவாதிகளின் பட்டியலில்" சேர்த்துவிட்டிருந்தது.

மேலும், ஒவ்வொரு தமிழ் மகனையும், மகளையும் பயங்கரவாதி என்று சந்தேகிப்பதனூடாக, அவர்களை, அவர்களது பூர்வீகத் தாயகத்திலிருந்து பலவந்தமாக விரட்டியடிப்பதன் மூலம் "தமிழ்ப் பயங்கரவாதத்தினை" முற்றாக ஒழித்துவிடலாம் என்று அனைத்துச் சிங்கள அரசாங்கங்களும் எண்ணிச் செயலாற்றி வந்தன. 

 

முற்றும் !

***********************************************************************************************************

குறிப்பு : இத்துடன் இத்தொடர் முற்றுப்பெருகிறது. திரு சபாரட்ணம் எழுதிவந்த இத்தொடர் 2005 ஆம் ஆண்டு தவிர்க்கமுடியாத காரணங்களினால் இடைநடுவே நின்றுவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் திரு சபாரட்ணம் அவர்களும் இயற்கை எய்திவிட்டதனால் இத்தொடரை முழுமையாம தமிழ்ச் சங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் தமிழ்ச் சங்கம் சில பகுதிகளை தொழிநுட்பக் காரணங்களால் இழந்துவிட்டது என்றும் கூறப்பட்டது.

 ******************************************************************************************************************

நன்றிகள்:

ஈழப்பிரியன் அண்ணா, நொச்சி, விசுகு அண்ணா மற்றும் தொடர்ச்சியாக எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரஞ்சித் said:

ஈழப்பிரியன் அண்ணா, நொச்சி, விசுகு அண்ணா மற்றும் தொடர்ச்சியாக எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். 

ரஞ்சித் அவர்களே, தேடுதலும் வரலாற்றறிகையும் வற்றிச் செல்லும் உலகில் காலத்திற்கு ஏற்றவாறு தேடியெடுத்து மொழிபெயர்த்து அவற்றை அறிந்துகொள்ளப் பாலமாகச் செயலாற்றிய தங்களுக்கும் தங்கள் நேரத்துக்கும் யாழ் களமும் நாமும் நன்றியுடையோராவோம். தங்கள் தேடல்கள் தொடரட்டும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2024 at 06:57, ரஞ்சித் said:

முற்றும் !

மிகமிக கஸ்டமான ஒரு பணியை அதுவும் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து எழுதி முடிப்பது சாத்தியமான வேலை இல்லை.

எப்படி செய்து முடித்தீர்கள் என்று மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

நன்றி கலந்த பாராட்டுக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.