Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவல்(துறை) இல்லாத காணி நிர்வாகத்தை’முழுமையான’ அதிகாரப்பகிர்வு எனலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காவல்(துறை) இல்லாத காணி நிர்வாகத்தை’முழுமையான’ அதிகாரப்பகிர்வு எனலாமா?

sri-lanka-1-300x200.jpegஅரைப்பரப்புக் காணிக்கே எல்லைகளைச் சரியாக வரையறுத்து வேலி கட்டி வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்கள் தங்கள் காணியை எவரும் அபகரிக்க விடமாட்டார்கள். மற்றவர் காணியையும் அபகரிக்க மாட்டார்கள். காவல்(துறை) இல்லாத காணி அதிகாரத்தை, முழுமையான அதிகாரப் பகிர்வு என்று இவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வர்? தமிழ்த் தேசிய தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்?

இந்தப் பத்தியை எழுத ஆரம்பிக்கும்போது, கடந்த வாரம் இதே பத்தியில் குறிப்பிட்ட இரண்டு விடயங்களை முன்னிறுத்திச் செல்வது பொருத்தம்போல தெரிகிறது.

‘சிங்கள் இனவாதிகள், கோதபாயவின் அறிவாளிகள் (வியத்மக), பௌத்த மகா சங்கங்கள் தனித்தனியாக 13ம் திருத்தத்தை அமல் செய்யக்கூடாதென கூற ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் இனி கூட்டாகக் களத்தில் குதிக்க வேண்டியதுதான் மிச்சம்” என்று தெரிவித்தது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.

’13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென ரணில் உண்மையாகவே விரும்புகிறாரா, அல்லது இதனை பகிரங்கமாகக் கூறி சிங்கள தரப்பின் எதிர்ப்பை லாபமாக்கி, இதற்கு (13ம் திருத்தம்) முடிவு கட்டவிரும்புகிறாரா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்” என்று தெரிவித்திருந்த சந்தேகத்துக்கும் விடை கிடைத்துவிட்டது.

இப்போது இன்னொரு அணியும் 13ம் திருத்த நடைமுறைக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணிலை தாங்கள் ஜனாதிபதியாக்கவில்லையென்று சாடியுள்ளார்.

கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் ரணிலைச் சந்தித்தபோது 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று அவர் உறுதியளித்ததாக செய்திகள் வந்தன. இதனை உறுதிப்படுத்துவது போன்று தமிழ் தேசிய அரசியல் கட்சிகளைச் சந்தித்தபோது அவர்களிடம் ஜெய்சங்கர் ரணிலின் உத்தரவாதத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றும் ரணிலை வலியுறுத்த வேண்டுமெனவும் ஜெய்சங்கர் கூறிச் சென்றார்.

ஜனாதிபதி கதிரையில் அமர்ந்துள்ள ரணில் உண்மையாகவும் நேர்மையாகவும் 13ம் திருத்தத்தை செயற்படுத்த விரும்புபவராகவிருந்தால், அதற்கான ஏற்பாடுகளை தமக்கான நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆரம்பித்திருக்கலாம். அவ்வாறு செய்யாது, அதனை முழுமையாகச் செயற்படுத்துவேனென்று சந்தர்ப்பம் கிடைத்த ஒவ்வொரு வெளியிலும் அழுத்திக் கூறி வந்தபோது நியாயமான சந்தேகம் பல தரப்பிலும் ஏற்பட்டது.

சிங்கள பௌத்த இனவாதிகளை உசுப்பேற்றி 13ம் திருத்தத்துக்கு எதிராக களமிறக்குவதே அவரது நோக்கமாக இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது. ஷவியத்மக| பிரமுகரான கடற்படை முன்னாள் அட்மிரல் சரத் வீரசேகர, பெரமுனவிலிருந்து வெளியேறியுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய மூவரும் 13ம் திருத்தத்தை எதி;ர்க்கும் புதிய அணியொன்றை அடையாளம் காட்டியுள்ளனர். இவர்கள் மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவுமிருப்பதால் உள்ளும் புறமும் இப்போது இவர்களுடைய செயற்பாடுகள் 13ம் திருத்தத்துக்கு எதிரானதாகவே காணப்படுகிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் தென்னிலங்கை மக்களை எவ்வளவு தூரம் இவர்களால் இவ்விடயத்தில் கூட்டிணைக்க முடியுமென்று நிச்சயமாக சொல்ல முடியாது. பொருளாதாரப் பிரச்சனையாலும் வாழ்வாதார நெருக்கடியாலும், ஒருவேளை உணவுக்காகவும் திண்டாடும் நிலைமையிலுள்ள அப்பாவிப் பொதுமக்கள் 13க்கென அறகலயவை உருவாக்குவார்களா என்பதற்கு உத்தரவாதமில்லை.

கோதபாயவை வெளியேற்றுவதற்கு காலிமுகத்திடலில் இயங்கிய அறகலயவின் பின்பலமாகவிருந்த ஜே.வி.பி. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இப்போது ஆதரவு வழங்கி வருகிறது. இந்த மனமாற்றம் எதன் அடிப்படையிலானது என்பது புரியாதது. மக்களுக்கு அதிகாரப் பகிர்வினால் நன்மை கிடைக்குமென்றால் அது நல்லது என்பது இவர்களின் கருத்து.

இதற்குப் போட்டியாக, 13ஐ அமல்படுத்தினால், ‘மீண்டும் இரத்த ஆறு ஓடும்” என்று சரத் – விமல் – உதய மும்மணிகள் கூட்டாக அச்சுறுத்தி வருகின்றனர். மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று கூறிவருவதன் வழியாக முன்னரும் இனவன்செயல்கள், இனஅழிப்புகள் என்பவற்றை முன்னின்று நடத்தியவர்கள் தாங்களே என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதை அவதானிக்க முடிகிறது.

பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிங்கள தேசத்தின் சுதந்திர தின விழாவின்போது இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக தாம் எடுத்துவரும் செயற்பாடுகளை பகிரங்கமாக அறிவிப்பேன் என்று பல தடவை கூறிவந்த ரணில், அன்றைய நிகழ்வில் உரையாற்றாது தப்பிக் கொண்டார். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து நிகழ்த்திய இவ்வைபவம், சிங்கள தேச அரசின் படைபலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி அரங்காக காட்சியளித்தது.

அன்றிரவு நாட்டு மக்களுக்கு ஒலி ஒளி ஊடகங்கள் வாயிலாக உரையாற்றிய ரணில், வழமையான பாணியில் இனப்பிரச்சனைத் தீர்வை தொட்டுச் சென்றார். இதனால், 8ம் திகதிய நாடாளுமன்ற கொள்கை விளக்க உரை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அறிவிப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

‘நான் ஒருபோதும் செய்ய முடியாதவற்றைக் கூறமாட்டேன்” என்று சத்தியவான் பாணியில் தமது உரையை ஆரம்பித்த ரணில், சம்பந்தனும் தானும் நாடாளுமன்றத்தில் இருக்கும் காலத்திலேயே இனப்பிரச்சனைக்கு இறுதியான தீர்வை வழங்குவோம் என்று குறிப்பிட்டபோது அதில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிந்தது.

ஆனால், 13ம் திருத்தம் முழுமையாக அமலாகும் என்று இரண்டு மாதங்களாக அவர் கூறிவந்ததன் அர்த்தத்தை, அடுத்த சில நிமிடங்களில் ஒரு வரியில் இல்லாமற் செய்தார். ‘பொலிஸ் (காவற்துறை) அதிகாரங்கள் தொடர்பாக எந்தவித மாற்றமும் இடம்பெற மாட்டாது” என்பதுவே அந்த அறிவிப்பு. மாகாணங்களுக்குப் பொறுப்பாக ஒவ்வொரு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனமாவார் என்பதும், மத்திய அரசினது பொலிஸ்மா அதிபரின் நேரடி நிர்வாகத்தில் அவர்கள் பணி புரிவார்கள் என்பதும் இதனூடாக தெளிவுபடுத்தப்பட்டது.

13ம் திருத்தத்தின் கீழான மாகாண சபை முறைமை என்பது அதிகாரப் பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் காவற்துறை அதிகாரமும், காணி அதிகாரமுமே முக்கியமானவை. ஜே.ஆர் – ராஜிவ் ஒப்பந்தம் இடம்பெற்று 35 ஆண்டுகள் முடிவடைந்த போதிலும் இவ்விரு அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இதனாலேயே தமிழர் பூர்வீக நிலங்கள் அரசாங்க திணைக்களங்களால் தம்மி~;டப்படி அபகரிக்கப்பட்டு வந்தன. இன்றும் அந்நிலையே தொடர்கிறது. காவற்துறை இதற்குத் துணைபோவதாகவே இயங்கி வருகிறது.

அதிகாரங்கள் இல்லாத மாகாண சபைகளால் அந்தந்த பிரதேச மக்கள் உப்புச் சப்பில்லாத நிர்வாகத்தில் இருந்து வருகின்றனர். வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த மற்றைய ஏழு மாகாண சபைகளும் இதனால் பாதிக்கப்படவில்லை. அவை சிங்களப் பிரதேசங்களில் சிங்கள ஆட்சி பீடத்தின் முகவர் அமைப்புகளாக அந்தந்த மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.

ஆனால், வடக்கு கிழக்கு மாகாண சபைகள் அதிகாரமின்றி ஆளுனரின் விருப்புக்கேற்றவாறும், மத்திய அரசின் கடும்போக்குக்கு அடிபணிந்தும் இயங்கி வந்தன. இந்நிலை மாறுவதற்காகவே காவல் மற்றும் காணி அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளுக்கும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

மீண்டும் இரத்த ஆறு ஓடுமென்று தமிழருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுபவர்கள், காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவது போலவும், இதனால் நாடு துண்டாடப்படுமெனவும், தமிழருக்கு தனிநாடு கிடைக்கப் போவதாகவும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஏமாற்று அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு அடிபணிந்தவராக தம்மைக் காட்டிக் கொள்ளும் ரணில் காவற்துறை அதிகாரங்கள் இல்லாத மாகாண சபை முறைமையை முழுமையான அதிகார நிர்வாகமென ஏமாற்றி செயற்படுத்த முனைகிறார்.

முழுமையான என்பதில் காவற்துறை இல்லையென்றால் எஞ்சியிருப்பது காணி அதிகாரந்தான். அதற்கும்கூட ரணில் ஒரு பூட்டுப்போட எண்ணியுள்ளார். காணி விவகாரங்களுக்கு தேசிய காணிச்சபை ஒன்று தாபிக்கப்படுமென்றும் அதன் வழியாக தேசிய காணிக்கொள்கை வரைபு தயாரிக்கப்படுமென்றும் 8ம் திகதிய கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமன்றி, மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் ஒருங்கிணைப்புப் பணிகளை நடைமுறைப்படுத்த நவீன முறையில் மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமையினை எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளார். 1981ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமல்படுத்தி தோற்றுப்போன மாவட்டச் சபை முறைமையை மீண்டும் தூசு தட்டி எடுத்துவர ரணில் விழைகிறார்.

இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால் மீண்டும் மாவட்ட அமைச்சர்கள் நியமனமாகலாம். அவர்கள் ஆட்சியிலுள்ள அரசியல் தரப்பினராகவே இருப்பர். மாகாண சபைக்கொரு முதலமைச்சர், அதற்கொரு ஆளுனர், அதற்கும் அப்பால் மாவட்ட சபைகள், அவற்றுக்கு மாவட்ட அமைச்சர்கள்…. வேதாளம் மீண்டும் முருக்க மரத்தில் ஏறிய கதைதான்.

மாவட்ட அமைச்சர்கள் முறைதான் ரணிலின் திட்டமெனில், வடக்கில் ஐந்து மாவட்ட சபைகளும் கிழக்கில் மூன்று மாவட்டசபைகளும் உருவாகும். இவைளில் சில தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் அமையும் வாய்ப்புண்டு. மொத்தத்தி;ல், இனப்பிரச்சனைக்கான தீர்வு அல்லது தீர்வுப் பொதியென்பது பூச்சியமாகவே அமையலாம்.

காவற்துறை அதிகாரமில்லாத, தேசிய காணிச்சபை நிர்வகிக்கும் காணி அதிகார மாகாண சபை முறைதான் ரணில் நாடும் இனப்பிரச்சனைத் தீர்வு என்பது தெரிகிறது. இதனைத்தான், ‘நீங்கள் உங்களுக்கே விளக்காக இருங்கள்” என்று 8ம் திகதிய உரையில் குறிப்பிட்டாரோ?

அரைப்பரப்புக் காணிக்கே எல்லைகளைச் சரியாக வரையறுத்து வேலி கட்டி வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்கள் தங்கள் காணியை எவரும் அபகரிக்க விடமாட்டார்கள். மற்றவர் காணியையும் அபகரிக்க மாட்டார்கள். காவல்(துறை) இல்லாத காணி அதிகாரத்தை, முழுமையான அதிகாரப் பகிர்வு என்று இவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வர்? தமிழ்த் தேசிய தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்?

பனங்காட்டான்

காவல்(துறை) இல்லாத காணி நிர்வாகத்தை’முழுமையான’ அதிகாரப்பகிர்வு எனலாமா? – குறியீடு (kuriyeedu.com)

 
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழருக்கு எந்த ஒரு   தீர்வு கூட சிங்களம் கொடுப்பதுக்கு தயாராக இல்லை சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் நிபந்தனைகளுக்கு சிங்களம் நடிக்குது ஏனென்றால் தமிழர் சிங்கள பிரச்சனை இருக்கும்வரை தாங்கள் கொடுத்த கடன் திரும்பாது என்பது ஐஎம்எஃப் க்கு நன்கு தெரியும் .

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2023 at 08:57, nochchi said:

அரைப்பரப்புக் காணிக்கே எல்லைகளைச் சரியாக வரையறுத்து வேலி கட்டி வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்கள் தங்கள் காணியை எவரும் அபகரிக்கவிடமாட்டார்கள்.  மற்றவர் காணியையும் அபகரிக்க மாட்டார்கள்.

இந்த வசனத்தை எழுதியவரை நினைக்க சிரிப்பாய் இருக்கிறது. ஒரு வேளை இதை எழுதும் போது அவரும் சிரித்திருப்பாரோ என்னவோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்

இடம்: கொக்குவில்

ஒருவர் தனது வேலைப்பளு காரணமாக தனது காணிப்பக்கம் போகவில்லை. இதனை அறிந்த ஒருவர் கள்ள உறுதி மூலம் அக்காணியை ஆட்டையை போட்டு காணியை சுற்றி மதிலும் கட்டியாகி விட்டது. இதனை முதலாமவரின் நண்பர் தற்செயலாக கண்டு சொல்ல பின்பு வக்கில், நீதிமன்றம் எல்லாம் ஏறி இறங்கி தனது காணியை இறுதியாக மீட்டுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே உறவினர்களுடைய காணிகளையே திருடுகிறார்கள்.

On 13/2/2023 at 08:57, nochchi said:

அரைப்பரப்புக் காணிக்கே எல்லைகளைச் சரியாக வரையறுத்து வேலி கட்டி வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்கள் தங்கள் காணியை எவரும் அபகரிக்க விடமாட்டார்கள். மற்றவர் காணியையும் அபகரிக்க மாட்டார்கள்.

இந்த முழுமையான பொய்யை எழுதியவர் தென்னவளோ பனங்காட்டானோ தான் எழுதிய பொய்யை படித்து விட்டு அவரே விழுந்து விழுந்து சிரித்திருப்பார்😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.