Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை உட்பட 6 நாடுகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உட்பட 6 நாடுகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

Published By: VISHNU

26 FEB, 2023 | 10:41 AM
image

 

(எம்.மனோசித்ரா)

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இலங்கை, எகிப்து, துர்க்மெனிஸ்தான், ஜாம்பியா, பேரு மற்றும் பனாமா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரே நாளை ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய இலங்கை குறித்த மீளாய்வு கூட்டத் தொடர் மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளது. மார்ச் 8ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை முதலாவது கூட்டத்தொடரும், அன்றைய தினம் மாலை 3 மணி முதல் 5 மணிவரை முதலாவது கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட விவாதமும் இடம்பெறவுள்ளது. 

இதே வேளை மார்ச் 9ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இரண்டாவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 173 உறுப்பினர்களில் ஆறு கட்சிகளும் உள்ளடங்குகின்றன. இவை ஐ.நா.வுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கையை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பது தொடர்பில் இந்தக் கூட்டத் தொடரில் ஆராயப்படும்.

அத்தோடு ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் முந்தைய பரிந்துரைகள் குறித்து 18 சுயாதீன சர்வதேச நிபுணர்கள் குழுவின் வழக்கமான மதிப்பாய்வுகளுக்கும் உட்படுத்தப்படவுள்ளது.

அந்தந்த நாடுகளின் அறிக்கைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பிற சமர்ப்பிப்புகளைப் பெற்றுக் கொண்டுள்ள மனித உரிமைகள் குழு, பொது உரையாடல்களின் மூலம் ஆறு பிரதிநிதிகளுடன் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/149157

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்தமுறை நரி (அணில்) வெல்லும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இதில் இந்தமுறை நரி (அணில்) வெல்லும்...

இந்த நம்பிக்கை அணிலுக்கு இல்லை.......ஆனால் நீங்கள் நம்புகிறீர்களே ஏன். ?.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

இந்த நம்பிக்கை அணிலுக்கு இல்லை.......ஆனால் நீங்கள் நம்புகிறீர்களே ஏன். ?.  

நாலு இடத்திலை சின்னக்காணிகள் விட்டிருக்கு....நாலு விடுதலை பெற்ற அரசியல் கைதிகளை விட்டிருக்கிறார் காணாதே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிடம் வலியுறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் விடுத்துள்ள கோரிக்கை

Published By: T. SARANYA

04 MAR, 2023 | 05:30 PM
image

(நா.தனுஜா)

மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நீதிமன்றம் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கைவிடுத்துள்ளது.

அதேபோன்று கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கு அவசியமான விசாரணை செயன்முறையில் தாமதமேற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் 8 - 9 ஆம் திகதியகளில் நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையின் கடந்தகால மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

 அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

 

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பல்வேறு விடயங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டன. இருப்பினும் கடந்த 2022 ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம், 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில அம்சங்களை உள்ளடக்கியிருந்தாலும்கூட முன்னர் காணப்பட்டவாறு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளுமற்ற நிலை இதில் உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நீதிமன்றம் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தவேண்டும்.

அடுத்ததாக இலங்கை அரசாங்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், பிறிதொரு சட்டத்தின்மூலம் அதனைப் பதிலீடு செய்வதாகவும் தொடர்ந்து வாக்குறுதியளித்து வந்திருக்கின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள், அச்சட்டத்தின் ஊடாக நிகழ்த்தப்புடும் தன்னிச்சையான கைதுகள், தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பில் உரியவாறான தீர்வை வழங்கவில்லை. எனவே மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக மிகமோசமான அனைத்துச்சட்டங்களையும் திருத்தியமைக்குமாறு அல்லது முழுமையாக நீக்குமாறும், அதுவரையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துங்கள்.

மேலும் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாத நிலையில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51ஃ1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழு மற்றும் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு வழிமுறைகளில் உள்ளடக விசாரணைகளைத் தாமதப்படுத்துவதற்கோ அல்லது அதில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கோ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துங்கள்.

அதேபோன்று அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்படுவதுடன் அவ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும். அத்தோடு அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகித்த அனைத்து அதிகாரிகளும் உரியவாறான விசாரணைகள் மூலம் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/149714

  • கருத்துக்கள உறவுகள்

முப்பத்தைந்து ஆண்டுகளாய் இந்தியா பதின்மூன்றை தூக்கிப்பிடிக்குது, பதினான்கு ஆண்டுகளாய் இவர்கள் கூடுறதும், வலியுறுத்துறதும், பாராட்டு தெரிவிக்கிறதும் நடக்குது. ஆனால் இலங்கையில் கொழுத்துறதும், எச்சரிக்கிறதுந்தான் தொடருது. இதுக்கொரு சபை, சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறதால என்ன மாற்றம்? கால விரயம், அடுத்தடுத்து வேற சோலி. இப்போ கதை ரஷ்யா உக்ரேயின், நிலநடுக்கம். நமது பிரச்சனை தொடங்கிய இடத்திலேயே தூங்குது. இத்தனை ஆண்டுகளாய் நிகழாதது இனிமேற்தான் நிகழப்போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. வருடா வருடம் நடத்தும் திருவிழா.
அதுதான் நம்ம சுமந்திரனே… போர்க்குற்றம் நடை பெறவில்லை.
உள்ளூரிலேயே பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டு வந்து விட்டார்.
பிறகேன்… இவர்கள், நேரம் மினக்கெட்டு கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

பிறகேன்… இவர்கள், நேரம் மினக்கெட்டு கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வருடா வருடம் ஒன்றுகூடல்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் ஒருவருடத்திற்குள் நிறைவேற்றப்படும் ; ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் அறிவித்தது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Published By: T. SARANYA

08 MAR, 2023 | 10:16 AM
image

(நா.தனுஜா)

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ள நிலையில், பெரும்பாலும் ஒருவருடகாலத்திற்குள் அச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் இன்றும், நாளையும் இலங்கை தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது. 

அதனை முன்னிட்டு இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பன தொடர்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிகழ்நிலை முறைமையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வாய்மொழி மூலம் விளக்கமளித்தார். 

அதுமாத்திரமன்றி இதுகுறித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எழுத்துமூல அறிக்கையும் மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு நேர்மறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், 'இருதரப்பினரும் மீறல்களில் ஈடுபட்ட அதேவேளை, இது முன்நோக்கிப் பயணிப்பதற்கான தருணம்' என்ற கோணத்தில் நிலைமாறுகாலநீதியை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு உள்ளகப்பொறிமுறைகளை அரசாங்கம் ஸ்தாபித்தது. 

இந்தப் பொறிமுறைகள் ஆயுதப்போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன், அவை மீளநிகழாதிருப்பதை உறுதிப்படுத்தின.

அதன் ஓரங்கமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், மரணங்களைப் பதிவுசெய்தல், காணாமல்போனமைக்கான சான்றிதழ் வழங்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சட்டம், குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்பன அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டன. 

மேலும் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும். அதுமாத்திரமன்றி பெரும்பாலும் ஒருவருடத்திற்குள் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

அடுத்ததாக நினைவுகூர்தல் என்பது நல்லிணக்க செயன்முறையின் இன்றியமையாததோர் அங்கமாகும். அதற்கான வாய்ப்பை மறுப்பதென்பது இனங்களுக்கு இடையிலான பிளவை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நல்லிணக்க செயன்முறையில் தடங்கல்களை ஏற்படுத்துவதற்குமே வழிவகுக்கும். 

அதன்படி இராணுவத்தினரின் குடும்பங்களைப்போன்று பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்களும் சமத்துவமான முறையில் நடத்தப்படவேண்டும் என்றும், தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நாம் பரிந்துரைத்துள்ளோம். அதற்கமைய இப்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் தமது உறவுகளை நினைவுகூருவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பது குறித்தும் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் ஆணைக்குழுவின் வகிபாகம், மரணதண்டனைக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பெண்கள்மீதான வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதில் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வறிக்கையில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/149949

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்கள் உள்ளக பொறிமுறையை ஏற்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளது - எஸ். சிறிதரன்

Published By: VISHNU

08 MAR, 2023 | 08:41 PM
image

 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாண மக்கள் உள்ளக பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமை அப்பட்டமான பொய்யாகும்,ஆணைக்குழுவின் பொய்யான கருத்திற்கு இந்த உயரிய சபை ஊடாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நாட்டில் நீதி இல்லை என்பதற்கு குருந்தூர் மலை விவகாரம் சிறந்த எடுத்துக்காட்டு இதனால் தான் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்காக சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் இன்று (08) புதன்கிழமை இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த பெப்ரவரி மாதம் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்து ஜனாதிபதியிடம் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

வடக்கு மக்கள் உள்ளக பொறிமுறையிலான விசாரணையை ஏற்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அப்பட்டமான பொய்யை குறிப்பிட்டுள்ளதையிட்டு கவலையடைவதுடன், இந்த உயரிய சபை ஊடாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் உள்ளக பொறிமுறையை ஒருபோதும் ஏற்கவில்லை,ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை, கடந்த 40 ஆண்டு காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல உரிமைகளை இழந்துள்ளார்கள், ஆகவே வெளியக பொறிமுறை ஊடாகவே சிறந்த  ஏற்றுக்கொள்ள கூடிய தீர்மானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து  தமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை மனித  உரிமைகள் ஆணைக்குழு அப்பட்டமான முறையில் அரசாங்கத்திற்கு சார்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளமை மிக மோசமான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது, இதற்கு எமது கடும் கண்டனத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51.1 பிரேரணை ஊடாக உள்ளக பொறிமுறை விசாரணையை தாம் எதிர்ப்பதாக  இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்தை ஏமாற்றும் தன்மையில் தான் அரசாங்கம் செயற்படுகிறது.

யுத்தக் குற்றங்கள் ஏதும் இலங்கை இராணுவம் செய்யவில்லை என்றால் இலங்கை ஏன் சர்வதேச விசாரணைக்கு அச்சமடைகிறது.மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்த தரப்பினர் நீதிபதியாக இருந்து செயற்படும் போது எவ்வாறு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நாட்டில் நீதி என்பதொன்று கிடையாது. இதற்கு சிறந்த உதாரணமாக குறுந்தூர் மலை விவகாரத்தை குறிப்பிட முடியும். குறுந்தூர் மலையில் விகாரை அமைக்கும் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும் ஒரு தரப்பினர் நீதிமன்ற தீர்மானத்துக்கு எதிராக செயற்படுகிறார்கள், ஆகவே இந்த நாட்டில் எவ்வாறு உரிமை இழந்த தமிழ் மக்கள் நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும், இதன் காரணமாகவே சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/150042

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு எழுப்பியுள்ள கேள்வி

Published By: DIGITAL DESK 5

10 MAR, 2023 | 03:30 PM
image

(நா.தனுஜா)

மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுகள் குறித்து மிகுந்த கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு, மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணை செயன்முறையில் மேற்கொள்ளப்படும் அநாவசியமான தலையீடுகள், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் நிறைவேற்றதிகாரம் தடையிடாதிருப்பதனை உறுதிப்படுத்தாமை என்பன தொடர்பிலும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்தொடர் கடந்த 8 - 9 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்றது. 

இலங்கை பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்புடன் நடைபெற்ற இம்மீளாய்வுக்கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் இலங்கை சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளிடம் கேள்விகளும் எழுப்பப்பட்டன.

குறிப்பாக உள்நாட்டுப்போரின்போது இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய மீளாய்வுக்குழு உறுப்பினர்கள், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 92 சதவீதமான காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமையையும் வரவேற்றனர்.

அதேவேளை 'கடந்த 2020 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை வலுவிழக்கச்செய்யப்பட்டதுடன், நீதிபதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புடைய கட்டமைப்புக்களின் உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. 

அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புப்பேரவையை மீள ஸ்தாபிப்பதற்கும், முக்கிய கட்டமைப்புக்களுக்கான உறுப்பினர்களின் நியமனத்தை முன்னரைப்போன்று தொடர்வதற்குமென கடந்த 2022 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்கால அரசியலமைப்புத்திருத்தங்களின் ஊடாக நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையும் மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்தப்போகின்றது?' என்றும் மீளாய்வுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் கருத்து வெளியிட்ட மனித உரிமைகள் மீளாய்வுக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது:

கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழர்கள் எண்மரைப் படுகொலைசெய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலைசெய்யப்பட்டார். 

எனவே மட்டுமீறிய நிறைவேற்றதிகாரம் என்பது தீவிர கரிசனைக்குரிய விடயமாகக் காணப்படுவதுடன், மிகமோசமான மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்கு இடமளிக்கின்றது. 

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கலை மேற்பார்வை செய்வதற்கான நடைமுறைகள் என்ன? மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட நபருக்குரிய நீதி எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகின்றது? அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமை கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட பதவியுயர்வை நியாயப்படுத்தும் வகையிலான விளக்கம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினர்.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணை செயன்முறையில் மேற்கொள்ளப்படும் அநாவசியமான தலையீடுகள், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் நிறைவேற்றதிகாரம் தடையிடாதிருப்பதனை உறுதிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அவர்கள், மனித உரிமை மீறல் வழக்கு விசாரணைகளில் மிகக்குறைந்தளவிலான முன்னேற்றமே அடையப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

போர்க்குற்றங்களும், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களும் உள்நாட்டு சட்டத்தில் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதா? எனவும், அத்தனை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? எனவும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தோடு அரசியலமைப்பு மறுசீரமைப்பு, மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல், நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் விவகாரம், மதரீதியிலான வெறுப்புணர்வு, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இம்மீளாய்வுக்கூட்டம் இன்றியமையாததாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

https://www.virakesari.lk/article/150198

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காதமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி!

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.

இருப்பினும் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காதமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளது.

இதேநேரம் இராணுவத்தின் பிடியில் இருந்த 92 வீதமான தனியார் காணிகள் முறையாக உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டமைக்கும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான தலையீடு குறித்தும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு கவலை வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2023/1327175

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.