Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலம்பிய விமானவிபத்து - 16 நாட்களின் பின்னர் 11 மாத குழந்தை உட்பட நான்கு சிறுவர்கள் உயிருடன் இருப்பதாக தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

18 MAY, 2023 | 05:15 PM
image

அமேசனில் கொலம்பிய விமானமொன்று விழுந்து நொருங்கிய விபத்தில் உயிர்தப்பிய நான்கு   சிறுவர்கள் இரண்டுவாரங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் தங்கள் தாயையும் குடும்பத்தவர்களையும் இழந்த நான்கு சிறுவர்களே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

WhatsApp_Image_2023-05-18_at_10.57.51-16

சிறுவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக  கொலம்பிய அரச அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

அமேசனின் மழைக்காட்டில் உள்ள பூர்வீககுடிகளே இந்த சிறுவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.

எனினும் மீட்புபணியில் ஈடுபட்டுள்ள படையினர் இன்னமும் சிறுவர்களை பார்க்கவில்லை என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கொலம்பியாவில் அமேசன் காடுகளிற்கு மேலாக பறந்துகொண்டிருந்த விமானம் மே முதலாம் திகதி காணாமல்போனது.விமானத்தின் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக  விமானி அறிவித்திருந்தார்.

பின்னர் விபத்து இடம்பெற்ற பகுதியில் நான்கு சிறுவர்களினது தயாரினது சடலமும் விமானிகளின் சடலமும் மீட்கப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் 13, ஒன்பது நான்கு வயது மற்றும் 11 மாதம் ஆன குழந்தை உட்பட்ட சிறுவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்பட்டது.

1777-crush.jpg

எனினும் அவர்கள் உயிர்தப்பியுள்ளனர் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

மோப்பநாய்கள் சிறுவர்கள் பயன்படுத்தும் சில பொருட்களை அடையாளம் கண்டிருந்தன.

மரங்கள் குச்சிகளை வைத்து தற்காலிகமாக கட்டப்பட்ட தங்குமிடம் ஒன்றையும் மீட்பு குழுவினர் கண்டுபிடித்திருந்தனர்.

விமானத்திலிருந்த சிறுவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என நாங்கள் கருதுகின்றோம்,பல இடங்களில் தடயங்களை அவதானித்துள்ளோம்,அவர்கள் தங்கவைக்கப்படிருக்ககூடிய இடத்தையும் கண்டுபிடித்துள்ளோம் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் காட்டிற்குள் உள்ளே சென்றுவிடலாம் என்ற அச்சம் காரணமாக அவர்களின் பாட்டியின் செய்தியை பதிவு செய்து அதிகாரிகள் ஹெலிக்கொப்டரில் ஒலிபரப்பிச்சென்றனர்- பாட்டி தனது பிள்ளைகளை ஒரே இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் செய்தி அது.

3547-806x378-four-children-found-alive-i

கடும் மழை காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

எனினும் உள்ளுர் மக்கள் சிறுவர்களை கண்டுபிடித்துள்ளனர் என்ற தகவல் கொலம்பிய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் நலம் தொடர்பான கொலம்பிய நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொலம்பிய ஜனாதிபதியும் இதனை உறுதி செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/155633

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் காட்டில் சிக்கிக்கொண்ட 4 குழந்தைகள் 17 நாட்களுக்குப் பின்னர் மீட்பு

Four children found alive 17 days after plane crash in Amazon jungle

கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து உயிர் பிழைத்த 4 குழந்தைகள் வனப்பகுதிக்குள் காணாமல் போன நிலையில், அவர்கள் 17 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1ஆம் திகதி 3 பெரியவர்கள் 4 குழந்தைகள் சென்ற விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 பெரியவர்களும் உயிரிழந்துவிட, குழந்தைகள் காட்டுக்குள் திசை மாறிப் போயினர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட விமானி இன்ஜின் கோளாறு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அதன்பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, விமான நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தேடுதல் வேட்டை தொடங்கியது.

இந்நிலையில், குழந்தைகளைத் தேடி கொலம்பிய அரசு 100 இராணுவ வீரர்கள், மோப்ப நாய்களைக் களமிறக்கியது. குழந்தைகளைப் பல நாட்களாகத் தேடி வந்த நிலையில், 17ஆவது நாளில் கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கொலம்பிய ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ,
இராணுவ வீரர்கள் கடுமையான தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். குழந்தைகள் கிடைத்தது தேசத்திற்கே மகிழ்ச்சியான செய்தி என்று ட்வீட் செய்திருந்தார்.

16844065613092.jpeg

முன்னதாக, இராணுவ வீரர்கள் தங்கள் நீண்ட தேடுதல் வேட்டையின்போது ஓரிடத்தில் கொம்புகள், இலைகள் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக தங்குமிடத்தைக் கண்டனர். அதனைத் தொடர்ந்தே அவர்கள் தேடுதலைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், குழந்தைகள் மீட்கப்பட்டதாக கொலம்பிய ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/254529

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொலம்பியாவில் விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்  40 நாட்களின் பின் மீட்பு

adminJune 10, 2023
colombia-plane-crash.jpg?fit=1170%2C614&

கொலம்பியா நாட்டில்  விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்  40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.  கொலம்பியாவில்  கடந்த மே மாதம் 1-ந் திகதி  4 குழந்தைகள் உட்பட 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு ஒற்றை இயந்திரம்  கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று    விபத்துக்குள்ளானது.

விமானத்தில்  இயந்திரத்தில்  ஏற்பட்ட பழுது  காரணமாக  விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொருங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும், 40 நாட்களாக விமானம் விழுந்த அமேசன் வன பகுதியில் தீவிர தேடுதல்   நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

. இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தமை தெரிய வந்தது. ஆனால், சிறுவர்கள் 4 பேர் உயிருடன் இருந்து உள்ளனர். அவர்கள் தற்போது  மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுவர்கள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர்   என  தொிவித்துள்ள கொலம்பியாவின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ. அவர்களின் காலம் வரலாற்றில் இடம்பெறும் எனக் கூறியுள்ளார். விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை ஒன்றுறும் 4 வயது சிறுவன் ஒருவரும்  அடங்குவார்கள். அவர்களுக்கு   மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

https://globaltamilnews.net/2023/191750/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலம்பியா நாட்டில்  விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்  40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.  கொலம்பியாவில்  கடந்த மே மாதம் 1-ந் திகதி  4 குழந்தைகள் உட்பட 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு ஒற்றை இயந்திரம்  கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று    விபத்துக்குள்ளானது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை ஒன்றுறும் 4 வயது சிறுவன் ஒருவரும்  அடங்குவார்கள். அவர்களுக்கு   மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறுவர்கள், 40 நாட்களுக்கு பிறகு... அடர்ந்த காட்டுப் பகுதியில்... 
விஷப் பூச்சிகள், விலங்குகள் வாழும் இடத்தில் இருந்து தப்பி வந்தது அதிசயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமான விபத்தில் மாயமான 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் மீட்பு - அமேசான் காடுகளில் உயிர் பிழைத்தது எப்படி?

அமேசான், காடுகள், குழந்தைகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

அமேசான் காடுகளின் பழங்குடி மக்களும் ராணுவ வீரர்களும் அக்குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் புகைப்படமொன்றை அதிபர் பெத்ரோ பகிர்ந்திருந்தார்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அவாய்ஃப் வால்ஷ்
  • பதவி,பிபிசி நியூஸஂ
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒரு விமான விபத்தில் சிக்குண்டு கொலம்பியாவின் அமேசான் காடுகளில் தொலைந்து போயிருந்த நான்கு குழந்தைகள் 40 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தனை நாட்களும் அவர்கள் காட்டுக்குள் இரைதேடி உண்டு பிழைத்திருந்தனர்.

கொலம்பியாவின் அதிபர் குஸ்தாவோ பெத்ரோ, இக்குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பது, ‘நாடு முழுவதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகக்’ கூறியிருக்கிறார்.

மீட்கப்பட்ட நான்கு குழந்தைகளின் வயதுகள் – 13, 9, 4 மற்றும் 1.

 

விபத்தில் இறந்த குழந்தைகளின் தாய்

மே மாதம் 1ஆம் தேதி, அவர்கள் பயணித்தச் சிறிய விமானம் காட்டின்மேல் விபத்துக்குள்ளானதில், அவர்களது தாயும், இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.

காணாமல் போயிருந்த குழந்தைகளைத் தேட பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அதிபர் பெத்ரோ, குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை ‘அற்புத நாள்’ என்று வர்ணித்தார். மேலும், “அவர்கள் தனித்து இருந்தனர். சுயமாக அவர்கள் பல இடர்ப்பாடுகளைச் சமாளித்துப் பிழைத்ததன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றனர்,” என்றார்.

“இன்று இக்குழந்தைகள், அமைதியின் குழந்தைகள், கொலம்பியாவின் குழந்தைகள்,” என்றும் கூறினார்.

அமேசான் காடுகளின் பழங்குடி மக்களும் ராணுவ வீரர்களும் அக்குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் புகைப்படமொன்றை அதிபர் பெத்ரோ பகிர்ந்திருந்தார். அதில், ஒருவர் கைக்குழந்தையின் வாயில் ஒரு பாட்டிலை வைத்திருக்கிறார், மற்றொருவர், இன்னொரு குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஒரு வீடியோவில் மீட்கப்பட்டக் குழந்தைகள் ஒரு ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஹெலிகாப்டர், அமேசான் காட்டின் நெடுமரங்களினூடே பறந்து செல்கிறது.

பயங்கர மிருகங்கள் நிறைந்த காட்டில் 40 நாட்கள்...

குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படு வருவதாக அதிபர் பெத்ரோ கூறினார். மேலும் அவர் குழந்தைகளின் தாத்தாவுடன் பேசியதாகவும், அப்பெரியவர் ‘வன மாதா குழந்தைகளைத் திருப்பி அளித்திருப்பதாகக்’ கூறியதாகவும் தெரிவித்தார்.

மீட்கப்பட்டக் குழந்தைககள் நாட்டின் தலைநகரான பொகோதாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.

குழந்தைகளும் அவர்களின் தாயும் பயணித்த செஸ்னா 206 (Cessna 206) வகை விமானம் அமேசோனாஸ் பகுதியின் அரரகுவாராவிலிருந்து சான் ஹோசே தெல் குவாவியாரேவிற்குப் பயணித்துக்கொண்டிருந்தது. காட்டின்மீது பறந்துகொண்டிருக்கையில், எஞ்சின் கோளாறு ஏற்படவே அவசரகால அறிவிப்பினை வெளியிட்டது.

அமேசான், காடுகள், குழந்தைகள், கொலம்பியா

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

காணாமல் போன குழந்தைகளை ராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் தேடி வந்தனர்

விபத்தில் இறந்த மூன்று பெரியவர்களின் உடல்கள் விபத்து நிகழ்ந்த இடத்தில் ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். ஆனால் குழந்தைகளோ அங்கிருந்து தப்பித்து, உதவி தேடி மழைக்காடுகளுக்குள் சென்றிருப்பதாக நம்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து மே மாதம் ஒரு பெரும் தேடுதல் வேட்டை துவங்கியது. தேடலில் ஈடுபட்டிருந்தோர் குழந்தைகள் விட்டுச்சென்றிருந்த பொருட்களைக் கண்டறிந்தனர் – ஒரு பாட்டில், ஒரு கத்திரிக்கோல், ஒரு ஹேர்பேண்ட், மற்றும் ஒரு தற்காலிக வசிப்பிடம்.

சிறு கால்தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம், தேடலில் ஈடுபட்டிருந்தோர் குழந்தைகள் காட்டுக்குள் உயிருடன் இருப்பதாக நம்பினர். இக்காட்டில், ஜாகுவார் எனப்படும் வகைச் சிறுத்தைகள், பாம்புகள், மற்றும் பல்வேறு பயங்கர மிருகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

'பழங்குடி அறிவு அவர்களைக் காப்பாற்றும்'

மீட்கப்பட்டக் குழந்தைகள் உய்தோதோ எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். பழங்களைப் பற்றியும் வனத்தில் பிழைத்திருப்பதைப் பற்றியும் அவர்களின் அறிவு, அவர்களுக்கு உதவும் என அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நம்பினர்.

பழங்குடியினர் தேடுதல் பணிகளில் இணைந்தனர். குழந்தைகளின் பாட்டி உய்தோதோ மொழியில் பேசி பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு செய்தி ஹெலிகாப்டர்கள் மூலம் ஒலிபரப்பப்பட்டது – அச்செய்தியின் மூலம் காட்டுக்குள் வேறெங்கும் நகராமல் இருக்கும்படிக் குழந்தைகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களைக் கண்டு அடைவதைச் சுலபமாக்கும் என்பதால் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சென்ற மாதம், கொலம்பியாவின் அதிபரது டிவிட்டர் கணக்கிலிருந்து, குழந்தைகள் கண்டிபிடிக்கப்பட்டுவிட்டனர் எனத் தவறுதலாகப் பகிரப்பட்டச் செய்தியினால் அதிபர் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தார்.

அதற்கு அடுத்த நாளே, கொலம்பியாவின் குழந்தைகள் நல முகமை அளித்திருந்த அத்தகவலை உறுதிப்படுத்த இயலவில்லை எனக்கூறி, அந்தப் பதிவை அவர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cw4vnkd171do

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானவிபத்தின்பின்னர் அமேசன் காட்டில் 40 நாட்கள் சிக்கிய கைக்குழந்தை உட்பட நான்கு சிறுவர்கள் - உயிர்பிழைப்பதற்காக எதனை உண்டனர்?

Published By: RAJEEBAN

12 JUN, 2023 | 11:44 AM
image
 

விமானவிபத்தின் பின்னர் கொலம்பியாவின் அமேசன் காட்டில்  நாற்பது நாட்கள் நிர்க்கதியாகிஅலைந்த சிறுவர்கள் மரவள்ளிக்கிழங்கை உண்டே உயிர்தப்பினார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

கொலம்பிய இராணுவத்தின் விசேட படைப்பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்கள் மரவள்ளிக்கிழங்கிலிருந்து செய்யப்பட்ட மூன்று கிலோ மாவை உண்டார்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

FyQTu7LWwAEqN2v.jpg

அமேசனின் பழங்குடியினர் இ;வ்வகை மாவை உண்பது வழமை .

விபத்து இடம்பெற்ற மறுநாள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அந்த மாவை- உண்டனர் அது முடிந்ததும் அவர்கள் தாங்கள் உயிருடன் இருக்ககூடிய இடத்தை தேடதொடங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவர்களை கண்டுபிடித்தவேளை அவர்கள் மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டிருந்தனர் ஆனால் முழு விழிப்புணர்வோடும் தெளிவோடும் காணப்பட்டனர் என விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் பூர்வீககுடிகளை சேர்ந்தவர்கள் என்பதால் காட்டில்வசிப்பதால் உண்டாகக்கூடிய சிலவகை நோய்களில் இருந்து தப்புவதற்காக வலு அவர்களிடம் உள்ளது என தெரிவித்துள்ள விமானப்படை அதிகாரி காட்டை பற்றிய அறிவும் எதனை உண்ணவேண்டும்,தண்ணீர் குடிப்பது போன்ற விபரங்களும் அவர்கள் உயிர்தப்ப உதவியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FyQTvIOXsAA2MHc.jpg

மீட்கப்பட்டுள்ள நான்கு சிறுவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,கொலம்பிய விமானப்படைக்கு சொந்தமான வான்வெளிஅம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அவர்கள் நீர்ச்சத்தினை இழந்துள்ளனர் உணவு உண்ணும் நிலையில் இல்லை என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர்.

மே முதலாம் திகதி இடம்பெற்ற விமானவிபத்தில் சிக்கிய இவர்கள் தாயை இழந்தனர்.

சிறுவர்கள் காணாமல்போனதை தொடர்ந்து கொலம்பிய இராணுவம் பாரிய தேடுதல் நடவடிக்கையைஆரம்பித்தது.

40 நாட்களின் பின்னர் அவர்கள் மரமற்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/157518

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடர்ந்த அமேசான் காடு; 40 நாட்கள் உயிர் பிழைத்த 4 குழந்தைகள் - அதிசயம் சாத்தியமானது எப்படி?

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

அமேசான் காடுகளின் பழங்குடி மக்களும் ராணுவ வீரர்களும் அந்தக் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் புகைப்படமொன்றை அதிபர் பெட்ரோ பகிர்ந்திருந்தார்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மாட் மர்ஃபி
  • பதவி,பிபிசி செய்திகள்
  • 12 ஜூன் 2023, 10:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்

"அதிசயம்... அதிசயம்... அதிசயம்..."

கொலம்பியா நாட்டுக்குள் பரவிக்கிடக்கும் அமேசான் காட்டின் மையப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அந்நாட்டு ராணுவத்தின் 'வயர்லெஸ்' கருவிகளில் ஒலித்த ஒரே சொல் இதுதான்.

தென்னமெரிக்காவில் உள்ள பிரேசில், கொலம்பியா, பொலிவியா போன்ற 9 நாடுகளில் பரவிக் கிடக்கும் உலகின் மிகப் பெரிய, அடர்ந்த காடுதான் அமேசான்.

கொலம்பியாவின் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதையோ எதிர்பார்த்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, அந்தக் காட்டுக்குள் 'வயர்லெஸ்' கருவிகளில் ஏற்பட்ட இரைச்சலைத் தாண்டி அந்த ஒரு சொல் மட்டும் தெளிவாக திரும்பத் திரும்பக் கேட்டது.

 

"அதிசயம்... அதிசயம்... அதிசயம்... "

40 நாட்களுக்கு முன் ஆபத்து நிறைந்த அந்த அடர்ந்த காட்டுக்குள் காணாமல் போயிருந்த நான்கு குழந்தைகள் உயிருடன் இருந்ததைக் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் அந்தக் குரல்.

அவர்களைத் தேடிக் கொண்டிருந்த அந்நாட்டு ராணுவத்தினரின் மட்டற்ற மகிழ்ச்சியைத்தான் அந்தச் சொல் வெளிப்படுத்தியது.

 

தாயும் நான்கு குழந்தைகளும் எதிர்கொண்ட விமான விபத்து

கடந்த மாதம் 1ஆம் தேதி அதிகாலையில் அவர்கள் பயணித்த இலகுரக விமானம் அமேசான் காட்டுக்குள் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த ஹுய்டோட்டோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

அந்த இலகுரக விமானத்தில் ஒரு தாயும், அவரது நான்கு குழந்தைகளும் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் தாய் உயிரிழந்துவிட்டார். இருப்பினும், 13, 9, 4, மற்றும் 1 வயது குழந்தைகள் காட்டுக்குள் தனியாகத் தவித்து வந்துள்ளனர்.

பாம்பு, ஜாகுவார் எனப்படும் சிறுத்தையைப் போன்ற வேட்டையாடி உயிரினம், பல வகை கொடிய கொசுக்கள் எனப் பல ஆபத்தான உயிரினங்கள் சர்வசாதாரனமாகக் காணப்படும் பகுதி அது.

அத்தகைய ஆபத்தான அடர்காட்டுக்குள் தொலைந்துபோன நான்கு குழந்தைகளின் நிலையை நினைத்து நாடே வருந்தியது.

அவர்களைத் தேடும் பணிகளை கொலம்பிய அரசு முடுக்கிவிட்டது. இதற்காக அந்நாட்டு ராணுவத்தினர் ஒரு மீட்புக் குழுவையும் அமைத்தனர்.

விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்னவாக இருக்குமோ என மீட்புக் குழுவினர் தொடக்கத்தில் அஞ்சினர். ஆனால் காட்டுப்பகுதியில் தென்பட்ட கால்தடங்கள், பகுதி பகுதியாக உண்ணப்பட்ட காட்டுப் பழங்கள் கிடந்ததை மையமாக வைத்து அவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம், விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டது.

அடுத்த ஆறு வாரங்களில், கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, "காட்டுக்குள் 40 நாட்களுக்குப் பின் நான்கு குழந்தைகள் மீட்கப்பட்ட நிகழ்வு ஓர் அதிசயம். அது வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்," என்று அறிவித்தார்.

அடர்வனத்தின் குழந்தைகள்தான் அவர்கள்

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம்,ALVARO DEL CAMPO

 
படக்குறிப்பு,

அமேசான் காடுகள்

அந்தக் குழந்தைகள் முக்குடுய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.வாழ்வில் இத்தகைய அபாயகரமான சூழலில் சிக்கும் நிலை ஏற்பட்டால், அதில் பிழைத்திருக்கும் வகையில் அவர்கள் தங்கள் குழந்தைகளைத் தயார்படுத்தியுள்ளார்கள்.

சிறுவயதிலிருந்தே ஹுய்டோட்டோ மக்கள் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் காட்டுக்குள் ஒன்று சேர்ந்து வாழ்க்கையை வாழ்வது உள்ளிட்ட பல பழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றனர்.

தற்போது அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள குழந்தைகளின் தாத்தா ஃபிடென்சியோ வேலென்சியா செய்தியாளர்களிடம் பேசிய போது, "மூத்த குழந்தைகளான லெஸ்லி மற்றும் சோலினி ஆகியோர் அடர்ந்த காட்டுப்பகுதி குறித்து நன்கு அறிந்தவர்கள்," என்றார்.

கொலம்பிய ஊடகத்திடம் பேசிய குழந்தைகளின் உறவினரான டாமரிஸ் முக்குடுய், எங்கள் குடும்பங்களில், குழந்தைகள் வளரும்போது சிறுவயதிலேயே அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் "உயிர் பிழைக்க எதிர்கொள்ள வேண்டிய சவால்களை" சந்திப்பதற்குப் பழகிவிடுகின்றனர் என்றார்.

"சிறு வயதில் நாங்கள் காட்டுக்குள் இதுபோல் உயிர் வாழும் விளையாட்டை விளையாடியபோது, சிறிய முகாம்களைப் போல டென்ட்களை அமைத்து விளையாடுவோம்," என்று அவர் தனது இளமைக் காலத்தை நினைவு கூர்ந்தார்.

பதின்மூன்று வயதான லெஸ்லி, "காட்டில் பல நச்சுப் பழங்கள் இருப்பதால், என்னென்ன பழங்களைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தாள். ஒரு பச்சிளம் குழந்தையை எப்படிப் பராமரிப்பது என்றுகூட அவளுக்குத் தெரியும்," என்று தெரிவித்தார்.

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

அடர்ந்த வனப்பகுதியில் எப்படி வாழ வேண்டும் என்பதை குழந்தைகள் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார்கள் என ஃபிடென்சியோ வேலன்சியா தெரிவித்தார்

அந்த விபத்திற்குப் பிறகு, லெஸ்லி தனது தலைமுடியை நேர்த்தியாக வைத்திருக்கப் பயன்படுத்திய ரப்பர்களின் உதவியுடன், மரக்கிளைகளை இணைத்து சிறிய தற்காலிக கூடாரங்களைக் கட்டினார்.

அவர்கள் பயணித்த செஸ்னா 206 விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ஃபரினா என்ற மாவுப் பொருளையும் அவர் பத்திரமாக மீட்டு வைத்துக்கொண்டார்.

அந்த மாவுப் பொருளைச் சாப்பிட்டே குழந்தைகள் நால்வரும் தங்கள் பசியை ஆற்றிவந்தனர். மாவுப் பொருள் தீர்ந்த பின்னர், சில மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள் மற்றும் பழங்களை உணவாக உட்கொண்டு காட்டில் தொடர்ந்து வாழ்ந்திருக்கின்றனர் எனத் தேடுதல் முயற்சியில் பங்கேற்ற பழங்குடி தலைவர்களில் ஒருவரான எட்வின் பாக்கி செய்தியாளர்களிடம் கூறினார்.

"அவிச்சூர் என்று அழைக்கப்படும், பேசன் பழத்தைப் போன்ற ஒரு பழம் அந்த காட்டுப் பகுதியில் உள்ளது," என்றும், "அந்தப் பழத்தைத் தேடி அவர்கள் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவுக்கு அலைந்து அந்தப் பழத்தைக் கண்டுபிடித்தனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

கொலம்பியா அரசின் சமூக நலத் துறையின் தலைவரான ஆஸ்ட்ரிட் காசெரெஸ், அந்தக் குழந்தைகளுக்கு இதுபோன்ற சோதனை ஏற்பட்ட நேரம் "காட்டு மரங்களில் இருந்த பழங்கள் அனைத்தும் நன்றாகப் பழுத்திருக்கும் காலம்" என்பதால் அவர்களுக்கு எளிதாக உணவு கிடைத்துள்ளது என்று கூறினார்.

ஆனால் அவர்கள் இதுபோன்ற சூழலில், உயிர் வாழ்வதற்கு மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலைதான் இருந்துள்ளது.

பூர்வகுடிகள் பற்றி ஆராய்ந்து வரும் நிபுணர் அலெக்ஸ் ருஃபினோ, சனிக்கிழமையன்று பிபிசி முண்டோவிடம் பேசியபோது, குழந்தைகள் "மிகவும் இருண்ட, மிகவும் அடர்த்தியான காட்டில், மிக உயரமான மரங்கள் வளர்ந்திருந்த பகுதியில் இத்தனை நாட்கள் வாழ்ந்து வந்துள்ளனர்," என்றார்.

மேலும், சில இலைகள் மூலம் அந்தக் குழந்தைகள் தண்ணீரைச் சுத்திகரிக்க முடியும் என்றாலும், அங்கே நச்சுச் செடிகளும், கொடிகளும் இருந்தன என்றும் அவர் கூறினார்.

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்

"இந்தக் காட்டுப் பகுதிக்கு இன்னும் யாரும் சென்று இதுவரை ஆராய்ச்சி செய்ததில்லை. அந்த இருண்ட பகுதியில் இருந்து கொஞ்சம் தொலைவுக்குப் பயணித்தால் அங்கே ஓடும் ஆற்றைத் தாண்டினால் தான் சிறு சிறு குடியிருப்புப் பகுதிகள் உள்ளன," என்று அவர் மேலும் பேசியபோது கூறினார்.

இதுமட்டுமல்லாமல், அந்தக் காட்டுப் பகுதிக்குள் உலவும் ஆயுத கும்பல்கள் மற்றும் பல்வேறு வேட்டையாடி உயிரினங்களிடம் இருந்து தற்காத்துக் கொண்டதுடன், கடுமையான மழை மற்றும் குளிரையும் அந்தக் குழந்தைகள் எதிர்கொண்டிருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தைகள் காட்டு நாயிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்று அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறினார்.

ஆனால், ஒரு பழங்குடி சமூகத்தில் வளர்க்கப்பட்ட 13 வயது சிறுமி, காட்டுப்பகுதியில் அச்சம் சூழ்ந்த அத்தகைய நிலையை எதிர்கொண்டு வாழத் தேவையான பல திறன்களை ஏற்கேனவே பெற்றிருந்திருப்பார் என்று ருஃபினோ குறிப்பிட்டார்.

கொலம்பியாவில் அந்தக் குழந்தைகள் வளர்ந்து வந்த பகுதியில் வசிக்கும் குவானனோ இனத்தின் தலைவரான ஜான் மொரேனே, அந்தக் குழந்தைகளை சமூகத்தில் மதிப்புடன் வாழ்ந்த அவர்களுடைய பாட்டிதான் வளர்த்துள்ளார் என்று கூறினார். நாட்டின் தென்கிழக்கில் உள்ள இப்பகுதியில்தான் அந்தக் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர்.

"அந்த அடர்ந்த காட்டுக்குள் வாழ, அந்தக் குழந்தைகள், அவர்களுடைய சமூகத்தில் கற்றுக்கொண்ட விஷங்களையும் மூதாதையர்களிடம் இருந்து பெற்ற அறிவையும் பயன்படுத்தியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

 

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு மீட்பு நடவடிக்கை

தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, அது மிகவும் தாமதமாக நடந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், போகோட்டாவில் உள்ள அதிகாரிகள் மீது ஒருவகை அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இது மட்டுமின்றி, ஏற்கெனவே ஒருமுறை அந்தக் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிபரின் அலுவலகம் தவறாக ஒரு தகவலை வெளியிட்டதால் கொலம்பிய அதிபர் பெட்ரோக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

காட்டுக்குள் குழந்தைகளைத் தேடிய மீட்புக் குழுவினர், ஸ்பானிஷ் மற்றும் பூர்வகுடிகளின் மொழிகளில் அச்சிடப்பட்ட பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்களை அப்பகுதியில் காட்டுக்குள் போட்டனர்.

அந்தத் துண்டுப் பிரசுரங்களில், அடர்ந்த காட்டுக்குள் உயிர்வாழத் தேவையான வழிகாட்டும் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும், அந்தக் குழந்தைகளுடைய பாட்டியின் குரல் பதிவை அதிக ஒலியுடன்ஒலிக்கவிட்டவாறே மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்களில் பறந்தனர். இதன்மூலம் அந்தக் குழந்தைகளுக்கு ஓர் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் ஊடகங்களுக்குத் தெரியாமல், அந்த குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க ராணுவம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. பல நேரங்களில் மீட்புக்குழுவினர் அந்தக் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து "20 முதல் 50 மீட்டர் தொலைவுக்கு நெருக்கமாக இருந்த பகுதிகளில்கூட தேடியதாக" மீட்புக் குழுவினரின் தலைவரான ராணுவ ஜெனரல் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார்.

குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், சுமார் 150 ராணுவ வீரர்கள், உள்ளூர் பழங்குடி குழுக்களைச் சேர்ந்த 200 தன்னார்வலர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த மீட்பு நடவடிக்கை சுமார் 300 சதுர கிலோ மீட்டர் (124 சதுர மைல்கள்) பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது.

"மீட்புப் பணிகள் வைக்கோல் போரில் ஒரு ஊசியைத் தேடுவதைவிட கடினமாக இருந்தது. அதாவது ஒரு பெரிய பரந்த கம்பளியில் ஒரு சிறிய பூச்சியைத் தேடுவது போல் இருந்தது. அந்தக் குழந்தைகள் தினமும் வேறு வேறு இடங்களுக்குச் சென்றுகொண்டே இருந்தனர்," என்று ராணுவ ஜெனரல் சான்செஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் வெள்ளிக்கிழமை, சுமார் ஒரு மாத தேடலுக்குப் பிறகு, மீட்புக் குழுவில் இடம்பெற்றிருந்த, சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் அந்தக் குழந்தைகளைக் கண்டுபிடித்தன.

ஒரு வயது குழந்தையைக் கையில் பிடித்திருந்த மூத்த மகள் லெஸ்லியை மீட்புக் குழுவினர் நெருங்கியபோது,"எனக்கு பசியாக இருக்கிறது," என்பதுதான் அவரது வாயிலிருந்து வந்த முதல் சொற்கள் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அங்கே படுத்திருந்த ஒரு சிறுவன் எழுந்து, “என் அம்மா இறந்துவிட்டார்,” என்று சொன்னதாகவும் அவர் கூறினார்.

40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட குழந்தைகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

காணாமல் போன குழந்தைகளை ராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் தேடி வந்தனர்

குழந்தைகளை தப்பிச் செல்ல அறிவுறுத்திய தாய்

விமானம் விபத்துக்குள்ளான பிறகு அந்தக் குழந்தைகளின் தாய் நான்கு நாட்கள் காட்டில் உயிருடன்தான் இருந்திருக்கிறார். உயிரிழக்கும் தருவாயில் இருந்த அவர்களது தாய், "நீங்கள் இங்கிருந்து எப்படியாவது தப்பிச் சென்றுவிடுங்கள்," என்று கூறியுள்ளார் என்று குழந்தைகளின் தந்தை மானுவல் ரனோக் தெரிவித்துள்ளார்.

தனது உயிரைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாத அந்தத் தாய், தனது குழந்தைகள் தப்பிச் சென்று உயிர் பிழைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தனது கடைசி நாட்களைக் கழித்தது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

கொலம்பியா நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வீடியோவில், உயரமான மரங்களுக்குக் கீழே இருள் சூழ்ந்த பகுதியில் இருந்து அந்தக் குழந்தைகளை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் ஏற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் மீட்கப்பட்ட உடன், அவர்கள் நால்வரும் நாட்டின் தலைநகர் பொகோட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்பட்ட நிலையிலும்கூட நம்பிக்கையுடன் தேடுதல் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கு குழந்தைகளின் குடும்பத்தினரும், பொதுமக்களும் நன்றியைத் தெரிவித்தனர். மேலும், விரைவில் குழந்தைகளை அவர்களது வீட்டில் சேர்க்கவும் குடும்பத்தினரும், உறவினர்களும் கொலம்பிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

"நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை, ராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரித்தேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன், பல சிரமங்களைக் கடந்து குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட அதிபர் பெட்ரோ, எனது நாட்டு ராணுவம் மற்றும் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று அவர்களின் பாட்டி அரசு ஊடகங்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

இராணுவத்தினரும், தன்னார்வலர்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளை அதிபர் பெட்ரோ வெகுவாகப் பாராட்டினார், "ராணுவம் மற்றும் பூர்வக்குடிமக்களின் திறமைகள் இணைந்து இந்த அரிய மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன. இந்த இரண்டும் இணைவதுதான் உண்மையான அமைதிப் பாதை," என்று தனது பாராட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

"அந்தக் குழந்தைகள் இயற்கையின் குழந்தைகள்...

அவர்கள் கொலம்பியாவின் குழந்தைகள்..." என, மிகக் கடினமான சூழலை எதிர்கொண்டு காட்டுக்குள் வாழ்ந்த குழந்தைகளையும் அதிபர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஆழமான கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட கொலம்பிய மக்கள், இந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டது ஓர் அதிசயம் என்று தெரிவித்தாலும், பழங்குடி மக்கள் குறித்து ஆய்வு செய்யும் ருஃபினோ, இயற்கையுடனான ஆன்மீகத் தொடர்புதான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

"அடர்ந்த வனம் பசுமையானது மட்டுமல்ல. பழங்காலத்திலிருந்தே உருவாகியுள்ள இயற்கையான ஆற்றல்களும் அங்கு உள்ளன. அந்த ஆற்றல்கள் மூலமே, மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதுடன், பலவற்றைக் கற்றுக்கொண்டு பிறருக்கு உதவுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

"இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அப்பகுதியில் இருக்கும் ஆற்றல் குறித்து மனிதர்கள் அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு," என்றார் அவர்.

“விபத்தில் உயிரிழந்த பின் ஆவியாக மாறிய அதே தாய்தான் அவர்களைப் பாதுகாத்தார்,” என்று கூறிய அவர், "இனிமேல்தான் அந்தத் தாய் ஓய்வெடுக்கத் தொடங்குவார்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/ckvzqexkky5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் 40 நாட்களுக்கு பின் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம் கொலம்பியாவில் நடந்துள்ளது. கொலம்பிய அதிபர் Gustavo Petro, குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பது, ‘நாடு முழுவதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகக்’ கூறியிருக்கிறார். மீட்கப்பட்ட நான்கு குழந்தைகளின் வயது முறையே 1, 4, 9 மற்றும் 13 ஆகும். இத்தனை நாட்களும் அவர்கள் காட்டுக்குள் இரைதேடி உண்டு பிழைத்திருந்தது தெரியவந்திருக்கிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காடு சுகமானது அது விரும்பினால் உயிர்களை காப்பாற்றும்......இல்லையெனில் அழிக்கவும் செய்யும்......!  😁

நன்றி ஏராளன் ......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் காட்டில் குழந்தைகளை கண்டுபிடித்துவிட்டு தொலைந்த நாய் - தேடுதல் பணியில் ராணுவம்

அமேசான் காட்டில் 40 நாட்கள் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்க உதவிய நாய் - அடர்காட்டில் தொலைந்த பரிதாபம்

பட மூலாதாரம்,EJÉRCITO NACIONAL DE COLOMBIA

3 மணி நேரங்களுக்கு முன்னர்

தொலைந்த குழந்தைகளைக் கண்டடைய மிகவும் உதவிய நாய்

“தேடுதல் வேட்டை இன்னும் முடியவில்லை,” என்று கொலம்பியாவின் ராணுவம் ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது.

ஒரு விமான விபத்தில் சிக்கி, 40 நாட்கள் அமேசான் அடர்காடுகளில் தொலைந்து போயிருந்த நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதை, கொலம்பியா கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தத் தென் அமெரிக்க நாட்டின் ராணுவமோ தொலைந்து போனவர்களில் கடைசியாக ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறது.

வில்சன் என்று பெயரிடப்பட்ட மீட்பு நாய்தான் அந்த ஒருவர்.

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம்,EJÉRCITO NACIONAL DE COLOMBIA

 
படக்குறிப்பு,

குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் வில்சன்

தொலைந்துபோன குழந்தைகள் காட்டுக்குள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான தடயங்களைக் கண்டறிய மிகவும் உதவியாக இருந்தது ஆறு வயதான இந்த பெல்ஜியன் ஷெபர்ட் வகை நாய். கொலம்பியாவின் தேசிய ராணுவம் டிவிட்டரில் இத்தகவலைப் பகிர்ந்திருக்கிறது.

   

காட்டுக்குள், ‘குழந்தைகளின் கால்தடங்கள்’ என்று கருதப்பட்ட சிறிய மனிதக் கால்தடங்களுக்கு அருகில், ‘நாயின் கால்தடங்கள்’ கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம், இந்த நாயும் குழந்தைகளுடன் சிலகாலம் இருந்திருக்கலாம் என்று ராணுவம் எண்ணுகிறது.

ஆனால் இப்போது வில்சன் என்னும் இந்நாய் தொலைந்துபோய்விட்டது. மோசமான வானிலை மற்றும் பயங்கர மிருகங்கள் நிறைந்த காட்டில் அது தொலைந்து போனதாகச் சொல்லப்படுகிறது.

'யாரையும் கைவிடுவதில்லை' என்னும் கொள்கையின்படி, மீட்புப் படையினரில் ஒருவர் தொலைந்து போயிருந்தால் எப்படித் தேடுதல் வேட்டை நடக்குமோ, அதேபோல வில்சனையும் தேடி வருவதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.

முதல் தடயத்தைக் கண்டுபிடித்த வில்சன்

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

குழந்தைகள் ஜுன் 9ஆம் தேதி ராணுவம் மற்றும் சில பழங்குடி மக்களின் உதவியோடு மீட்கப்பட்டனர்

கொலம்பியாவின் அமேசான் காடுகளில் சிக்கியிருந்த நான்கு பழங்குடிக் குழந்தைகளான லெஸ்லி, சொலெய்னி, தியென், மற்றும் க்றிஸ்டின் ஆகியோரை மீட்கும் பணியின்போது வில்சன் தொலைந்துபோனது.

குழந்தைகள் ஜுன் 9ஆம் தேதி ராணுவம் மற்றும் சில பழங்குடி மக்களின் உதவியோடு மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் நாட்டின் தலைநகரான பொகோடாவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

குழந்தைகளைத்தவிர, அவர்கள் பயணித்த விமானத்திலிருந்த அனைவரும் – குழந்தைகளின் தாய், விமானி, மற்றும் ஒரு பழங்குடித் தலைவர் - விபத்தில் இறந்தனர்.

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம்,EJÉRCITO NACIONAL DE COLOMBIA

 
படக்குறிப்பு,

வில்சன் செடிகளுக்கு நடுவே ஒரு பிங்க் நிற ஃபீடிங்க் பாட்டிலைக் கண்டுபிடித்த போதுதான் குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை வலுப்பட்டது

மீட்புப் பணிகளில் நாயின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது, என்கின்றனர் ராணுவத்தினர். மார்ச் 15ஆம் தேதி காட்டுச்செடிகளுக்கு நடுவே ஒரு பிங்க் நிற ஃபீடிங்க் பாட்டிலைக் கண்டுபிடித்தது வில்சன். இதுவே அக்குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.

வில்சன் தொலைந்துபோன தகவலை கொலம்பிய ராணுவம் சென்ற வியாழக்கிழமை தெரிவித்தது.

“சிக்கலான காட்டு நிலப்பரப்பு, ஈரப்பதம், மற்றும் மோசமான வானிலை காரணமாக அது வழிதவறிப் போயிருக்கலாம்,” என்று ராணுவம் தெரிவித்தது.

வில்சன், மற்ற அனைவருக்கும் முன் குழந்தைகளிடம் சென்று, அவர்களுடன் சிலகாலம் இருந்திருக்கலாம் என்பதற்கான சில ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காட்டில் குழந்தைகளுக்குத் துணையாக இருந்த நாய்

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம்,EJÉRCITO NACIONAL DE COLOMBIA

 
படக்குறிப்பு,

குட்டியாக இருந்தபோதே வில்சன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது

குழந்தைகள், காட்டில் இருந்தபோது ‘ஒரு நாயைச்’ சந்தித்ததாகக் கூறினர் என்று, கொலம்பியா அரசின் குடும்ப நல நிறுவனத்தின் இயக்குநர் ஆஸ்ட்ரிட் காசெரெஸ் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அது வில்சன் தானா என்று சொல்லவில்லை.

‘தொலைந்துபோன ஒரு நாய்க்குட்டி தங்களுக்குத் துணையாகச் சிலகாலம் இருந்தது, ஆனால் இப்போது அது எங்கு இருக்கிறதென்று தெரியவில்லை,’ என்று குழந்தைகள் சொன்னதாகக் காசெரெஸ் தெரிவித்தார்.

இதனோடு சேர்ந்து ராணுவத்தினர் காட்டுக்குள் கண்டுபிடித்த நாயின் கால்தடங்களும் முக்கியமான ஆதாரங்கள்.

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம்,EJÉRCITO NACIONAL DE COLOMBIA

 
படக்குறிப்பு,

குழந்தைகள் சில படங்களை வரைந்து காட்டியதாகவும், அவைு வில்சனைப்போல தோற்றம் கொண்டிருந்ததாகவும் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

முப்படைத் தளபதி ஹெல்டெர் ஃபெர்னான் கிரால்டோ, மீட்கப்பட்டக் குழந்தைகளை மருத்துவமனையில் சந்திக்கச் சென்றிடுந்தார். அப்போது, லெஸ்லி, சொலெய்னி ஆகிய பெண்குழந்தைகள் சில படங்களை வரைந்து காட்டியதாகவும், அவற்றில் இருந்த நாய் 'வில்சனைப்போல தோற்றம் கொண்டிருந்ததாகவும்' அவர் சொன்னார்.

இந்த ஓவியங்கள் ‘நமது நான்கு கால் நண்பனின்’ அசாத்திய முயற்சிக்கான சான்று, என்றும் வில்சன் ‘கைவிடப்பட மாட்டான்’ என்றும் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cglv5y1xm5po

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் காட்டில் விமான விபத்து: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியீடு

அமேசான் காட்டில் விமான விபத்து: "குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பு" - ஒரு  மாதமாகத் தேடும் ராணுவம்| A Month On, Hope Still On To Find Missing Children  In Colombian ...

உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான். இந்த காடு பிரேசில், கொலம்பியா உள்பட பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில், கொலம்பியாவில் அமேசான் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தலைவி மக்டலினா மெகுடி வெலென்சியா தனது 4 குழந்தைகளுடன் சிறிய ரக விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மே மாதம் 1ஆம் திகதி சென்றுள்ளனர். இதில், 11 மாதங்களேயான கைக்குழந்தையும் அடக்கம்.

அமேசான் அடர் வனப்பகுதியில் சென்றபோது விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, மக்டலினா மெகுடி வெலென்சியா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக 13 வயது, 9 வயது, 4 வயது, 11 மாத கைக்குழந்தை ஆகிய 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர். இவர்கள் அனைவரும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார், மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு விமானி உள்பட 3 பேரின் உடல்களை கைப்பற்றினார். ஆனால், குழந்தைகளின் நிலை என்ன? என தெரியாததால் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 200-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், அமேசான் காடு பற்றி அறிந்த 70 பழங்குடியினர் களமிறக்கப்பட்டனர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

40 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை உள்பட 4 குழந்தைகள் ஜூன் 10ஆம் திகதி உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள் மிகுந்த உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஹெலிகொப்டர் மூலம் பஹொவில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தைகள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் தற்போது குழந்தைகள் உடல்நலம் பெற்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

விபத்தில் பலியான பழங்குடியின தலைவி மக்டலினா மெகுடி வெலென்சியாவின் கணவர் அவரை விட்டு விலகி வெறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவர் மெகுடியின் குழந்தைகளை கவனித்து வருகிறார். குழந்தைகள் அனைவரும் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் காட்டில் விமான விபத்து: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியீடு

https://thinakkural.lk/article/263339

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.