Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சான்றாண்மை                -   சுப. சோமசுந்தரம்  

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                          சான்றாண்மை 

                                                                              -   சுப. சோமசுந்தரம்

 

 

 தற்காலத்தில் சான்றாண்மை எனும் சொல் அறிவுக் களத்தில் சிறந்து நிற்றலையே குறிக்கிறது. பரிமேலழகர் காலத்திலேயே இப்பொருள் மட்டும் குறிக்கும் வழக்கம் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும்.

"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
           (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு)

எனும் பொய்யாமொழிக்கு உரை சொல்ல வந்த பரிமேலழகர் "தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையார் சொல்லக் கேட்ட தாய் தான் அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வாள்" என்றுரைக்கக் காணலாம். மணக்குடவர் 'சான்றோன்' என்பதனை விரித்துரையாமல் குறளில் உள்ளவாறு சான்றோன் என்றே தம் உரையில் சுட்டுகிறார். பெரும்பாலான உரையாசிரியர்கள் சான்றோன் என்பதன் பொருளை பரிமேலழகர் வழிநின்றே உரைக்கின்றனர். மு.வரதராசனார் போன்ற வெகுசில உரையாசிரியர் பெருமக்களே 'நற்பண்பு நிறைந்தவன்' என்று மேற்கூறிய குறளில் வரும் சான்றோனைக் குறிக்கின்றனர். பரிமேலழகர் காலமானாலும் தற்காலமானாலும், 'சான்றோர்' என்பது நூலுடையாரை (நூலறிவுடையாரை) மட்டும் குறிக்காமல், கற்றலும் கற்றவழி நிற்றலும் உடையாரைக் குறிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெள்ளிதின் விளங்கி நிற்பது.
             வள்ளுவத்தில் 'சான்றாண்மை' அறிவுக்களம் மட்டுமின்றி பரந்துபட்ட பொருளிலேயே காணப்படுகிறது. அஃது சால்புடைமையாகவே கொள்ளப்படுகிறது. 'சால்புடைமை' இன்றளவும் தகைசால் பண்புகளைக் குறிப்பதாகவே வழக்கில் உள்ளது.

"கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு"
       (குறள் 984; அதிகாரம்: சான்றாண்மை)

"சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்"
        (குறள் 986; அதிகாரம்: சான்றாண்மை)

"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு"
         (குறள் 987; அதிகாரம்: சான்றாண்மை)

"இன்மை ஒருவற்கு இழிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்"
         (குறள் 988; அதிகாரம்: சான்றாண்மை)

எனும் குறட்பாக்களில் 'சான்றாண்மை' குறிக்க வந்த வள்ளுவன் சால்புடைமையையே குறிக்கிறான். அவ்வதிகாரத்தில் 'சான்றாண்மை' எனும் சொல்லாட்சி வரும் வேறு சில குறட்பாக்களுக்குச் சொல்ல வந்த உரையில் உரையாசிரியர் மு.வரதராசனார் சால்புடைமையையே குறிப்பதும் குறித்து நோக்கத்தக்கது.
           "ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும்" எனும் வள்ளுவனின் வாக்கு முன்னோர் மொழியாய் "ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே" என்றும் "ஈன்ற ஞான்றினும் பெரிதே" என்றும் புறநானூறில் ஒலிக்கக் காணலாம்.

"நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென்  யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே"
                      (புறநானூறு 278)

எனும் புறநானூற்றுப் பாடலில் செருகளத்தில் புறமுதுகிட்டான் தன் மகன் எனத் தவறான செய்தி கேட்டு வெகுண்டெழுந்த தாய் களத்திற்கே சென்று அவன் மார்பில் புண்பட்டு வீரமரணம் எய்தியதைக் கண்டதும் அவனை ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தாள் என்று வருகிறது. இதுபோலவே

"மீன் உண் கொக்கின் தூவியன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே"
                           (புறநானூறு 277)

எனும் பாடலில் களிற்றியானையைக் கொன்று தன் மகன் இறந்துபட்டான் எனக் கேட்டதும் அவள் பெற்ற உவகை அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்வினும் பெரிது என அறிவிக்கப் பெறுகிறது. மேற்கூறிய இரு புறநானூற்றுப் பாடல்களிலும் ஈன்ற ஞான்றினும் எய்திய உவகை, மகன் போர்க்களத்தில் வீரனாய் நின்றமைக்கே ! அறிவுக் களத்தில் சார்புடையோன் அறிஞனாகவும், போர்க்களத்தில் சால்புடையோன் அப்பொருகளத்தின் அறம் அறிந்தொழுகும் வீரனாகவும் நிற்பதுதானே இயல்பு ! எனவே அவை அறமும் போர் அறமும் சான்றாண்மையின்பாற் கொளல் தகும். முன்னோர் மொழி பொன்னே போல் போற்றிய வள்ளுவன், ஈன்ற பொழுதினும் உவகை தந்த சான்றோனைக் குறித்தது இவ்விரு பொருள் பற்றி மட்டுமல்லாமல், 'தகைசால் பண்புடையோன்' என்று அனைத்து அறங்களையும் உள்ளடக்கியது போலும். அங்ஙனம் கொள்வதே புறநானூறு தோன்றிய சங்க காலத்தும் வள்ளுவம் தோன்றிய சங்க மருவிய காலத்தும் பொருந்தி வருவது. சான்றோர் சிலரும் அவ்வாறு கொண்டது இக்கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பது.
        நிறைவாக இக்கருத்தை வலியுறுத்த அன்னையரில் ஒருவரையே அழைக்கலாமே !

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே 
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே 
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் 
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
                        ‌(புறநானூறு 312)

எனும் பாடலில் பெண்பாற் புலவரான பொன்முடியார் தாமே தாய்மையின் குறியீடு ஆகிறார்; உருவகம் ஆகிறார். இங்கு சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்னும் இடத்தில் வீரனாய் ஆக்குதல் தந்தையின் கடமை என்றே பொருள்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தந்தையரில் சாமானியர் அனைவரும் அறிவுக் களத்தில் முன்னின்று இருக்க வாய்ப்பில்லை. ஆனால் காதலும் வீரமும் முன்னின்ற சமூகத்தில் ஆணுக்கான முதன்மைத் தகுதியாய் வீரமே கொள்ளப்பட்டதால், தந்தையர் வீரராய்ப் போற்றப்பட்டு அங்ஙனமே மகனை உருவாக்குவர் எனக் கொள்வதே இயல்பு. எனினும் சங்கப் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் தன்மையன எனும் நோக்கில் வீரம், கல்வி மற்றும் உயர்பண்புகள் அனைத்தையும் இப்பாடல் குறிப்பதாய்க் கொள்வது தற்காலத்திற்கான சிறப்பு. "வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே" என்றது வீரம் பற்றியதாகவே இருப்பினும், அவனுக்கான களத்தை அமைத்துத் தருதல் இச்சமூகத்தின் கடமை என்றும், "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்றது வினைமுடித்து வருதல் மகனின் கடமை என்றும் உருவகிப்பது அறிவுலகில் வழக்கம்தானே ! அதுபோல் வீரமாய் முன்னின்ற 'சான்றாண்மை' இன்று பரந்து பட்டது எனலாமே !

 

Edited by சுப.சோமசுந்தரம்

"சான்றாண்மை" குறித்த ஓர் முழுமையான சிறந்த இக் கட்டுரை தந்த சில சிந்தனைகள்:

சான்றாண்மை என்ற சொல் சான்று+ஆண்மை என்று விரியும். ஏனையோர் பின்பற்றும்படி  சான்றாக வாழ்ந்துஇ நடந்து காட்டிய ஆண்மை என்று பொருள். என்றாலும்இ சான்ற என்ற சொல் “சிறந்த” என்ற பொருளிலேயே பெரும்பாலும் கையாளப் பெற்றிருக்கின்றது. சங்ககால வீரனுக்குச் சிறந்த குணங்கள் "போரில் புறங்காட்டாமை"; 'போரில் பங்கு பெறாத எவரையும் கொல்லாமை" என்பதாகக் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய சிறந்த கற்பிதங்கள் சான்றாண்மை ஆகும். 

தமிழகத்தின் பெருஞ் சொத்தான திருக்குறளின் திரண்ட கருத்துஇ "மக்களாய்ப் பிறந்தவர்கள் அனைவரும் மக்கட் பண்போடு வாழவேண்டும்" என்பது. மக்கட்பண்புகளில் சிறந்த பண்பாம்  சான்றாண்மையுடையவரே சான்றோர் ஆவர் .

வேழ முடைத்து மலைநாடுஇ மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து

சான்றோரே தமிழகத்தின் செல்வம்.  நிலவளமாகிய நெல்லும், மலை வளமாகிய யானையும், கடல் வளமாகிய முத்தும்,  மக்கள் வளமாகிய சான்றோரும்,  தமிழகத்தின் செல்வங்கள் என்ற உண்மையை ஒளவையார் வாக்கிலிருந்து நன்கு உணரலாம்.

"சான்றாண்மை என்ற சொல் தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது. சான்றாண்மைத் தன்மை தமிழ் மக்களின் கலை. சான்றாண்மைப் பண்பு தமிழகத்தின் தனிப்பட்ட சொத்து. சான்றாண்மை என்ற சொல்லைக்கூடப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியாது. மொழி பெயர்த்துக் கூறினாலும் அச்சொல்லில் தமிழ் கூறும் பொருள் இராது." என்பது முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் வாக்கு.  

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்

என்ற  ‘படைச்செருக்கு’ என்ற அதிகாரத்தில் வந்துள்ள திருக்குறளில் "தன்னைக் கொல்லவந்த பகைவனது யானை மீது கைவேலை  குறிபார்த்து எறிந்தான். யானையொடு வேலும் போய் விட்டது. வெறுங்கையனானான். கைவேலை எறிந்து போக்கி விட்டு, வெறுங்கையுடன்  ஆயுதமின்றி வரும் (வருபவன்) வீரன் மார்பின் மீது,  மறைந்திருந்து பகைவனால் எறியப் பெற்ற வேல் ஒன்று பாய்ந்தது. சற்றும் கலங்காத வீரன் அதனைப் பிடுங்கிக் கொண்டு நகைத்தான்" என்கிறார் வள்ளுவர். 

வேலைப்பறித்துக் கையிற் பற்றிக்கொண்டு, வேல் எறிந்த வீரன் தன்முன் இல்லாமை கண்டு, "மறைந்திருந்து தாக்கும் இழிமக்களும் இவ்வுலகில் உள்ளார்களே?" என எண்ணிப் புண்பட்ட மனத்தோடு நகைத்திருப்பானோ அவ் வீரன்? எனக்கென்னவோ, "இராமன் மறைந்திருந்து எய்த அம்பு, மாவீரன் வாலியின் மார்பைத் துளைத்தபோது, இராமனின் அம்பைப் பிடுங்கி, மாவீரன் வாலி நகைத்த செயலை" நினைந்து வள்ளுவனார் இக்குறளை  இயற்றியிருப்பாரோ  என்றே தோன்றியது.   

“மெய் வேல் பறியா நகும்” என்ற நான்கு சொற்களுக்குள், இத்துணை சிந்தனை ஓட்டங்களையும் நம்முள் எழுப்புகின்ற வள்ளுவரது புலமையும், திறமையும் எண்ண எண்ண வியப்படைக்கிறேன்.

பழங்காலத்துத் தமிழ் மக்களில் ஆண்இ பெண் ஆகிய இருபாலரிடத்துங் காணப்பெற்ற சிறந்த வீரச் செயல்களைப் புறநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. எனினும் வள்ளுவரது குறள் அதனை இன்னும் தெளிவாக்கிக் காட்டுகிறது.

மோசமான விளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் பண்டைக் காலத்தில் சில அறம் சார்ந்த  வரையறை சான்றாண்மைகளோடு, போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. போர் தொடங்குவதற்கு முன்னர்ப் போரைப் பற்றி அறிவித்து, கொல்லக்கூடாத உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடப்பட்டது. இது போரின் அறத்தாறு எனக் குறிப்பிடப்படுகிறது.

“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்இ
பெண்டிரும் பிணியுடையீரும்இ பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்இ
எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை”

என்று நெட்டிமையார் பாடிய புறநானூற்றுப் பாட்டினால் அக்காலப் போர்களில் எவ்வாறு 'அறப்போர்' என்ற சான்றாண்மைக்  கருத்து செயல் வடிவம் பெற்றது, எவரையெல்லாம் கொல்லக்கூடாது என்றுக் கருதினார்கள் எனத் தெளிவாக விளக்குகிறது.

தமிழர் முயலைக் கொன்று வெற்றிபெறுவதைவிட, யானையை எய்து தோல்வியடைவதையே பெருமையாகக் கருதும் கொள்கை கொண்டவர்.  தம்மின் வலிமைகுறைந்த எவரையும் தமிழர் தாக்குவதில்லை. மெலியோர் தம்மைத் தாக்க முன்வந்தபோதும் வலியோர் அவர்களைத் தாக்காது, அவர்களை நோக்கி, “போர் எண்ணங்கொண்டு என்முன் நில்லாதே.  நின்றால் மடிந்து மண்ணிற் புதையுண்டு நடுகல்லாக நிற்பாய்” என வழிகூறி அனுப்பிடுவர். அவரது அறம் அத்தகையது.

தம்மோடு ஒத்த அல்லது உயர்ந்த வலிமையுடையவரோடு மட்டுமே போரிடுவர். அப்போதுங்கூடப் பகைவரது வலிமை குறைந்துவிட்டால் மேலும் தாக்காமல் "இன்று போய் நாளை வா" என்று அவர்களை அனுப்பி வைப்பர். அவரது போராண்மை அத்தகையது. வாலியின் மேல் மறைந்திருந்து வாளி(அம்பு)விட்ட இழிசெயலைச் சமன்செய்யும் பொருட்டு,  இந்தச் சான்றாண்மையை இராமன் மேல் ஏற்றி, கவிச்சக்கரவர்த்தி  கம்பன் படைத்த பாடல்

'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய்இ போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

ஏன் கோசல நாடுடை வள்ளல் என்கிறார் கம்பர்? அயோத்தி பரதனுக்கும், மிதிலை சனகருக்கும், வெல்லப்போகும் இலங்கை வீடணுக்கும் ஈந்த இராமபிரானுக்கு, தாய் கோசலையின் நாடு ஒன்றே உள்ளது என்று குறிப்பால் சிறப்பிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி .   

என்னதான் கம்பனின் கவிதையை இரசித்தாலும், இன்றுவரைஇ வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்ற இழிசெயலை  மறக்காத தமிழர்கள் உள்ளங்களை, இராமனால் வெல்லவே முடியவில்லை. அதுதான் தமிழரின் தனித்துவம்!

தமிழரின் சான்றாண்மை குறித்த இத்துணை சிந்தனைகளும் ஐயா சுப. சோமசுந்தரனார் படைத்த கட்டுரைக்கே சமர்ப்பணம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறப்பான தலைப்பை எடுத்துக் கொண்டு அதற்கு திருக்குறளிலும் புறநானுற்றிலும் சான்றுகளை எடுத்து வைத்தமை பாராட்டுக்குரியது.......சுப.சோமசுந்தரம்.......மேலும் அதற்கு இசைவாக பேராசிரியரின் கருத்துக்களும் மெருகூட்டுகின்றன.......இவைகள் சங்ககாலச் சான்றாண்மைகள்........!

என் அறிவுக்கு எட்டியவரை மேலும் சில சான்றாண்மைகள்......!

--- இன்று பிணவறைக்கே சென்று அனாதைப் பிணங்களை வாங்கி வந்து நல்லடக்கம் செய்பவர்களும் சான்றோர்களே......!

--- தலைவனின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு உடலில் குண்டுடன் சென்று எதிரிப் படையணியை நிர்மூலமாக்குபவர்களும் சான்றோர்களே......!

--- எதிர்கட்சித் தலைவரை தனது கட்சி சார்ந்தவன் தரக்குறைவாகப் பேசும்பொழுது ஒலிவாங்கியைப் பிடுங்கி "அவர் எப்படிபட்டவர் என்று தெரியுமா உனக்கு, அவரைப் பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு என்று சாடியவரும் ஒரு சான்றோரே ......!

 

என்னதான் கம்பனின் கவிதையை இரசித்தாலும், இன்றுவரைஇ வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்ற இழிசெயலை  மறக்காத தமிழர்கள் உள்ளங்களை, இராமனால் வெல்லவே முடியவில்லை. அதுதான் தமிழரின் தனித்துவம்!

--- இங்கு வாலி ஒரு சிறந்த சிவபக்தன்.....ஆனால் அவர் தான் சாகாமல் வாழ வேண்டும் என்பதற்காக கடுந்தவம் செய்து பெற்ற வரம் அப்படி.....ஆனால் பிறப்பெடுக்கும் ஒவ்வொன்றும் இறந்துதான் தீரவேண்டும் இதுதான் நியதி...... விஷ்ணு காக்கும் கடவுள்.......அவர் சில கடமைகளை முன்னிட்டு பூமியில் இராமனாக அவதரிக்கின்றார்........நெல் விளையவேண்டும் என்றால் களைகள் அகற்றப்பட வேண்டும்......!

--- முனிவர்களின் யாகத்துக்கு இடையூறு செய்யும் அரக்கி/அரக்கர்களை அழித்தல்.....!

---அகலிகை சாபவிமோசனம்.....!

---அன்னை சபரிக்கு முக்தியளித்தல்......!

--- ஐயன் ஜடாயுவுக்கு பிதுர்கடன் செய்தல்......!

--- மன்னன் வாலிக்கு மோட்சமளித்தல் ........!

--- இராவண கும்பகர்ணனை மீண்டும் தனது வைகுண்டத்துக்கு அழைத்தல்....... இன்னபிற  அவற்றுள் அடங்கும்......!

வாலியை நேரில் நின்று வரம் கொடுத்த சிவனாலும் கொல்ல முடியாது......அங்குதான் தனது தெய்வத் தன்மையை மறைத்துக் கொண்டு இராமன் மனிதனாக வருகிறார்......மறைந்திருந்து தனது கடமையை செய்து முடிக்கிறார்.......!

(இதற்கு முன் இரணியன் கேட்காத வரத்தையா பெரிசா வாலி கேட்டு விட்டார்.....அவருக்கே நரசிம்மமாக வந்து வாசலில் வைத்து தனது மடியில் கிடத்தி முக்தியளித்த தெய்வம்......யாருக்கு இப்பேறு கிடைக்கும்......இனி அடுத்த யுகத்தில் மனிதருக்குள் தெய்வமாய்  கண்ணனாக  நான் வந்து ஏராளமான கபட காரியங்கள் எல்லாம் செய்யப் போகிறேன் என்பதற்கு முன்னோடியாகவும் வாலி வாதத்தைப் பார்க்கலாம்).

(தெய்வத்தை விடப் பெரியது வலிமையானது தவமும் வரமுமாகும்).  

இவற்றுள் தவறுகள் இருப்பின் பெருமதிப்புக்குரிய நீங்கள் இருவரும்  பெரியவர்கள் பொறுத்தருள வேண்டும்........!  🙏 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2023 at 23:16, சுப.சோமசுந்தரம் said:


"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
           (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு)

மு.வரதராசனார் போன்ற வெகுசில உரையாசிரியர் பெருமக்களே 'நற்பண்பு நிறைந்தவன்' என்று மேற்கூறிய குறளில் வரும் சான்றோனைக் குறிக்கின்றனர். பரிமேலழகர் காலமானாலும் தற்காலமானாலும், 'சான்றோர்' என்பது நூலுடையாரை (நூலறிவுடையாரை) மட்டும் குறிக்காமல், கற்றலும் கற்றவழி நிற்றலும் உடையாரைக் குறிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெள்ளிதின் விளங்கி நிற்பது.
             

"நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென்  யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே"
                      (புறநானூறு 278)

எனும் புறநானூற்றுப் பாடலில் செருகளத்தில் புறமுதுகிட்டான் தன் மகன் எனத் தவறான செய்தி கேட்டு வெகுண்டெழுந்த தாய் களத்திற்கே சென்று அவன் மார்பில் புண்பட்டு வீரமரணம் எய்தியதைக் கண்டதும் அவனை ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தாள் என்று வருகிறது. இதுபோலவே

"மீன் உண் கொக்கின் தூவியன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே"
                           (புறநானூறு 277)

எனும் பாடலில் களிற்றியானையைக் கொன்று தன் மகன் இறந்துபட்டான் எனக் கேட்டதும் அவள் பெற்ற உவகை அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்வினும் பெரிது என அறிவிக்கப் பெறுகிறது. மேற்கூறிய இரு புறநானூற்றுப் பாடல்களிலும் ஈன்ற ஞான்றினும் எய்திய உவகை, மகன் போர்க்களத்தில் வீரனாய் நின்றமைக்கே ! அறிவுக் களத்தில் சார்புடையோன் அறிஞனாகவும், போர்க்களத்தில் சால்புடையோன் அப்பொருகளத்தின் அறம் அறிந்தொழுகும் வீரனாகவும் நிற்பதுதானே இயல்பு ! எனவே அவை அறமும் போர் அறமும் சான்றாண்மையின்பாற் கொளல் தகும். முன்னோர் மொழி பொன்னே போல் போற்றிய வள்ளுவன், ஈன்ற பொழுதினும் உவகை தந்த சான்றோனைக் குறித்தது இவ்விரு பொருள் பற்றி மட்டுமல்லாமல், 'தகைசால் பண்புடையோன்' என்று அனைத்து அறங்களையும் உள்ளடக்கியது போலும். அங்ஙனம் கொள்வதே புறநானூறு தோன்றிய சங்க காலத்தும் வள்ளுவம் தோன்றிய சங்க மருவிய காலத்தும் பொருந்தி வருவது. சான்றோர் சிலரும் அவ்வாறு கொண்டது இக்கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பது.
        நிறைவாக இக்கருத்தை வலியுறுத்த அன்னையரில் ஒருவரையே அழைக்கலாமே !

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே 
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே 
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் 
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
                        ‌(புறநானூறு 312)

எனும் பாடலில் பெண்பாற் புலவரான பொன்முடியார் தாமே தாய்மையின் குறியீடு ஆகிறார்; உருவகம் ஆகிறார். இங்கு சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்னும் இடத்தில் வீரனாய் ஆக்குதல் தந்தையின் கடமை என்றே பொருள்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தந்தையரில் சாமானியர் அனைவரும் அறிவுக் களத்தில் முன்னின்று இருக்க வாய்ப்பில்லை. ஆனால் காதலும் வீரமும் முன்னின்ற சமூகத்தில் ஆணுக்கான முதன்மைத் தகுதியாய் வீரமே கொள்ளப்பட்டதால், தந்தையர் வீரராய்ப் போற்றப்பட்டு அங்ஙனமே மகனை உருவாக்குவர் எனக் கொள்வதே இயல்பு. எனினும் சங்கப் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் தன்மையன எனும் நோக்கில் வீரம், கல்வி மற்றும் உயர்பண்புகள் அனைத்தையும் இப்பாடல் குறிப்பதாய்க் கொள்வது தற்காலத்திற்கான சிறப்பு. "வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே" என்றது வீரம் பற்றியதாகவே இருப்பினும், அவனுக்கான களத்தை அமைத்துத் தருதல் இச்சமூகத்தின் கடமை என்றும், "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்றது வினைமுடித்து வருதல் மகனின் கடமை என்றும் உருவகிப்பது அறிவுலகில் வழக்கம்தானே ! அதுபோல் வீரமாய் முன்னின்ற 'சான்றாண்மை' இன்று பரந்து பட்டது எனலாமே !

இங்கொரு காலத்தில் சான்றோர் நிறைந்திருந்தனர்.
நன்றி ஐயா, தமிழை எளிதாக புரிய வைப்பதற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.